Friday, March 01, 2019

கேட்டதும் கொடுப்பவரே..... !!!!!(பயணத்தொடர், பகுதி 73 )

இந்த முறையும் ராயாஸில்   கார்னர் ரூம்ஸ்  கிடைக்கலை. அங்கே  அறையில் இருந்தே  மஹாமகக்குளம் தெரியும். போகட்டும்.   அவ்ளோ பெரிய  ரெண்டு அறைகள்  ஸ்யூட்  நமக்கு இப்போ வேணுமா?  ரெண்டு வரிசை அறைகளுக்கும் நடுவில் போகும் காரிடாரின்   கடைசிக்குப் போய்ப் பார்த்தால் போதும்னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டேன்.
கும்மோணம் ஸ்பெஷல் என்னன்னா.....  தெரியாமத் தடுக்கி விழுந்துட்டோமுன்னு வையுங்க....    நாம் விழுந்த இடம் ஒரு கோவிலாகத்தான் இருக்கும்!  கோவில்களின் நகரம்.
முதல்லே நாம் போகவேண்டியது நம்ம சக்ரபாணி கோவிலுக்குத்தான்.   சக்ரத்தாழ்வாருக்கு நம்ம மனப்பூர்வமான நன்றியைச் சொல்லிக் கும்பிட்டு வரணும்.கூடவே ஒரு விண்ணப்பமும் வைக்கணும்.
இந்தக் கோவிலின் மூலவர்  இவரே!  இவரோட ஸ்பெஷல் என்னன்னா..... நல்ல எண்ணத்தோடு நாம்   வேண்டிக்கிட்டதை நிறைவேத்தி வைப்பார். மற்ற வகைகள் உண்டுன்னாலும்   முக்கியமானது  கல்யாண சமாச்சாரங்கள். 

மகள்  கல்யாணப் பேச்சையே எடுக்கலைன்ற குறை எனக்கு.  எப்போ கல்யாணம் பண்ணிக்கிற ஐடியான்னு கேக்கும்போதெல்லாம்  இன்னும் அதைப் பற்றி யோசிக்கலைன்னுடுவாள்.

எனக்கென்னவோ.... 'நம்மவர்' வேலையில் இருந்து ரிட்டையர் ஆகுமுன் கல்யாணத்தை நடத்திட்டால் தேவலைன்னு தோணுச்சு.

 உயிர்த்தோழி ஒருவரிடம்  புலம்பிய சமயம் சக்ரத்தாழ்வாருக்கு  வேண்டிக்கலாமுன்னு சொன்னாங்க.  நாங்கள் அந்த சமயம்  போகப்போறப் பயணத்தில்   கும்பகோணம் போகலாமுன்னு இருந்தோம்.  ஆஹா  ஒரே கல்லில் ரெண்டு மாம்பழமுன்னு மகிழ்ச்சி.

 கோவிலுக்குப் போன சமயம்,  சக்கரைப்பொங்கல் வழிபாடு செய்யணுமுன்னு  கோவில் ஆஃபீஸில்  கேட்டப்ப, மடப்பள்ளியில் கோபுன்னு ஒருத்தர்  இருப்பார்.  அவரிடம் சொல்லிருங்கன்னு நம்மை அனுப்பினாங்க. அதுக்குள்ளே அவரே ஏதோ வேலையா அந்தப் பக்கம் வர, இதோ இவர்தான் இவராண்டை சொல்லிருங்கோன்னாங்க.

அதுக்குப்பின் கோபுவிடம்  சக்கரைப்பொங்கல் செய்ய  அதுக்குண்டான காசைக் கொடுத்தோம்.  மறுநாள் காலையில் எட்டு மணிக்கு முன்னால் வரச் சொன்னார் அவர்.  காலை பூஜை முடிஞ்சதும்  ஸ்வாமிக்கு நைவேத்யம் பண்ணி நாம் யாருக்காக  இந்த வழிபாடு செய்யறோமோ  அவுங்க பெயர், நக்ஷத்திரம் மற்ற விவரங்கள் எல்லாம்   சக்ரத்தாழ்வாருக்குச் சொல்லி ஒரு அர்ச்சனை செய்தபின், பக்தர்களுக்கு  விளம்பிடலாமாம்.   இந்த விவரம் எல்லாம் நமக்கு அப்போ சரிவரத் தெரியாததால்,  மறுநாள் காலையில்  கும்மோணத்தில் இருந்து கிளம்பும் விதத்தில் பயணத்திட்டம் போட்டுருந்தோம்.

அதனால், காலையில் வர இயலாதேன்னு  மறுநாள் அர்ச்சனைக்கு வேண்டிய பொருட்களையும்,  மாலையையும் வாங்கிக்கச் சொல்லி  கோபுவிடமே ஏற்பாடும் செஞ்சுட்டோம்.  பெயர் விவரங்களையும் எழுதிக் கொடுத்தாச்சு. சக்ரத்தாழ்வாரும்  வேண்டுதலை அங்கீகரிச்சுட்டார். அடுத்த  ரெண்டாம் மாசம்   கல்யாணம் பண்ணிக்கலாமான்னு  இருக்கேன்னாள்  மகள்.  என்ன ஏதுன்னு விவரம் எல்லாம் கேட்டதும் எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி!

இங்கெல்லாம்  நம்ம நாட்டைப் போல் இரு வீட்டினரும் கூடி கல்யாண நாள்  நிச்சயிக்கும் பழக்கம் கிடையாது. பையனுக்குப் பொண்ணைப் பிடிச்சுப்போச்சுன்னா.... ஒரு மோதிரம் வாங்கியாந்து, அந்தப் பெண்ணிடம் 'என்னைக் கல்யாணம் பண்ணிக்குவாயா?'ன்னு  கேக்கறதும், அவளுக்குப் பிடிச்சதுன்னா சரின்னோ, பிடிக்கலைன்னா இல்லைன்னோ சொல்லுவதும்தான். பிடிச்சதோ..... சட்னு மோதிரத்தைப் பெண் விரலில் போட்டுட்டால் ஆச்சு.  தே ஆர் எங்கேஜ்டு நௌ.  ரெண்டு செட் தாய் தகப்பனுகளுக்கும் சமாச்சாரம் தெரியப்படுத்துவாங்க. ஆனா இதுக்கெல்லாம் முன்னே....   ஒரு பையனும் பொண்ணும்  அவுங்க காதலிக்கும் நபரை ஒரு நாள் அவுங்கவுங்க அப்பா அம்மாவுக்கு அறிமுகப்படுத்தறேன்னு வீட்டுக்குக் கூட்டிவந்து  வீட்டில் உள்ள எல்லோரோடும் பேசிப் பழகிட்டுப் போவாங்க.  இது ஒருவிதத்தில் தாய்தகப்பன் பார்த்து அப்ரூவ் செய்யறமாதிரிதான்.  நமக்கும்  அந்த நபர்களைப் பத்தி ஒரு ஐடியாவும் கிடைக்குமே!  எல்லாம் சரியான சம்பந்தமுன்னா  அடிக்கடி இப்படி வந்து போறதும் உண்டு.  அப்புறம் தான்  அந்த  ப்ரப்போஸல் சமாச்சாரம் :-)  

உனக்கு நான் எனக்கு நீன்னு  முடிவு செஞ்சுக்கிட்ட பிறகு கல்யாணத்தை எப்படி எங்கே வச்சுக்கலாமுன்னு  பொண்ணு மாப்பிள்ளையுமாவே சேர்ந்து பேசி முடிவு பண்ணி அதுக்குண்டான செலவுக்குப் பணம் சேர்த்துக்குவாங்க. இப்படிப்போகுது.... எனக்குத் தெரிஞ்சவரை இங்கத்துக் கல்யாணங்கள் !

நாம்தான்  ரெண்டுகட்டானா இருக்கோமே.  'எங்கேஜ்டு 'விவரம் தெரிஞ்சதும், நம்ம வகையில் ஒரு எங்கேஜ்மென்ட் பார்ட்டி கொடுத்தோம்.  உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும்  சொல்லியாச்:-)

 மகளிடம்  கல்யாணத்தைச் சீக்கிரமா வச்சுக்கச் சொன்னோம். அதுக்குமே  குறைஞ்சது  ஒரு வருஷம் வேணுமாமே.....   இண்டியன் டச்  வேணுமுன்னு மகள் சொன்னது ரொம்பவே பிடிச்சுருந்துச்சு எனக்கு!  கல்யாண உடுப்பு வாங்கவும், உறவினர்களை நேரில் அழைக்கவும்,  வேண்டுதலை நிறைவேற்றிய ஸ்ரீசக்கரராஜாவுக்கு  நன்றி சொல்லும் முகமாகவும்  அடுத்து ஒரு இந்தியப்பயணம் முடிவாச்சு.

மகள் கல்யாண நிகழ்வின் பதிவும் போட்டுருந்தேன்.  ஒரு எட்டு  எட்டிப்பார்க்கலாம் :-)


அப்பதான் ஒருநாள்  நெருங்கிய தோழியின் கூடப் பேசும்போது மகளுக்கு வரன் தட்டிப்போய்க்கிட்டு  இருந்தது பற்றி வருத்தப்பட்டாங்க. நோ ஒர்ரீஸ். நமக்கு வேண்டப்பட்டவரிடம் சொல்லிட்டால் போதும். அவர் பார்த்துக்குவார்னு ஆறுதல் சொல்லிட்டு நம்ம சக்ரத்தாழ்வார்  விஷயத்தையும்  காதில் போட்டுட்டு, நான்  வேண்டி வர்றேன்னதும் அவுங்க மகளின்  ஜாதகப்பெயர் மற்ற விவரம் எல்லாம்  கொடுத்தாங்க.  தோழி மகள் நமக்கும் மகள்தானே?
மகள் கல்யாணம் நிச்சயம் ஆன  மகிழ்ச்சியில்    நன்றி சொல்லக் கோவிலுக்குப் போனோம். இந்த முறை இன்னொரு விண்ணப்பத்தோடு!  இந்த முறையும் நம்ம கோபுதான் மடப்பள்ளி இன்சார்ஜ்.  மூணு நாள் தங்கும் பயணத்திட்டத்துடன் போனதால், மறுநாள் காலை எட்டரைக்குக் கோவிலில் ஆஜரானோம்.  முதலில் நன்றி நவிலல். அப்புறம்  புது வேண்டுதல். ரெண்டு அர்ச்சனைகளும் ஆச்சு.  இந்த முறையும் சக்ரத்தாழ்வார்  வேண்டுதலை அங்கீகரிச்சுட்டார். அடுத்த  மூணாம் மாசம்  வரன் கிடைச்சு  நிச்சயமும் ஆகிருச்சு.  எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி!

மேலே படங்கள் முதல் இரண்டு முறைகளில் எடுத்தவை :-)

இதுக்கிடையில் நம்ம பதிவில் சக்ரராஜாவின் பெருமையைச் சொல்லப்போக, வாசக நண்பர் ஒருவரும்  தனிமடலில் கொஞ்சம் விவரம் எல்லாம் கேட்டுக்கிட்டார். அவரும்  வேண்டி வந்ததாகச் சொன்னார்.  கோபுதான் இப்போ இல்லையாம். வேறொருத்தர் இருக்கார்னும்  சொன்னார்.
கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான்.  உளன் எனில் உளன், இலன் எனில் இலன்  !!!  உண்டென்றால் உண்டு, இல்லையென்றால் இல்லை!   உண்டு என்ற நம்பிக்கையோடு நாம் ஓரடி எடுத்துவச்சால், அவர் நம்மை நோக்கிப் பத்தடி எடுத்து வைப்பாராம்!   நம்பிக்கைதானே வாழ்க்கையும் கூட!
இந்த  முறை  இங்கே வந்ததும் நன்றி சொல்லிக்கவும் இன்னொரு புது வேண்டுதல் வைக்கவும்தான். இது மூணாம் முறை.  இனி எல்லாத்துக்கும் இவராண்டை சொல்லிட்டால் போதுமுன்னு  தோணிப்போச்சு.
கோவில் வாசலில்  அர்ச்சனைக்கான பொருட்களை வாங்கிக்கிட்டு உள்ளே போறோம். 




முதலில் நேராப்போனது மடப்பள்ளிக்குத்தான்.  இப்போ  அங்கே  இன்சார்ஜா இருப்பவரிடம் பேச ஆரம்பிச்சதும், 'முதலில்  அர்ச்சனை பண்ணிட்டு வந்துருங்கோ.  சந்நிதி மூடப்போறா'ன்னார். மேலே ஓடினோம்.  உத்தராயண வாசல் வழியா உள்ளே போறோம்.  நம்மதுதான் கடைசி அர்ச்சனை. முடிஞ்சதும்  திரை போட்டாச்சு!

நாந்தான் ஏற்கெனவே சொல்லி இருக்கேனே... பெரும்பாலும்  கோவிலுக்கு வெறுங்கையாத்தான் போவேன். பயணத்தில் தேங்காய் இத்யாதிகள்  வேணாமுன்னுதான்.  அவைகளைத் தின்னவும் முடியாமல், தூக்கிப்போடவும் முடியாமல்  காரில் வச்சு, பலநாள்  பயணம் முடியும்போது பூசணம் பிடிச்சுக் கிடக்கும். அதான் முக்கிய காரணம்.  இன்னொரு காரணம்..... சாமிக்கு என் மனசைப் பூரணமாக் கொடுக்கறேன். அதைவிட அவருக்கு வேறொன்னும் வேண்டாம், இல்லையோ?  ஆனால் இங்கே மட்டும் இவரை எப்பவும் அர்ச்சனைக் கூடையோடுதான்.......... எனக்கு  இவர் ஸ்பெஷலாக்கும், கேட்டோ!!
பொதுவாப் பெருமாள் கோவில்களில் சக்ரத்தாழ்வார் சந்நிதி இருக்குன்னாலும், தனிப்பட்ட கோவில் இது மட்டும்தான்னு   சொல்றாங்க.
சக்கரராஜா... சூரியன், பிரம்மன், மார்க்கண்டேயர், அகிர்புதன்ய மகிரிஷி, அக்னிபகவான் ஆகியோருக்கு   நேரில்  தோன்றி தரிசனம் கொடுத்துருக்கார். முகத்தில் வேற  முக்கண்!  அதனால்  இவர்களுரிய செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி , குங்குமம் ஆகிய பொருட்களை கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்யறாங்க.  உலகில் வேறெங்கும் இப்படி இல்லையாம்.
கீழே இறங்கி மடப்பள்ளிக்குப் போறோம். தேசிகர் னு பெயர் சொன்ன  நினைவு.  அவரிடம் மறுநாள் சக்கரைப்பொங்கல் ஏற்பாட்டுக்குச் சொன்னதும்,   சாயங்காலம்  வச்சுக்கலாம். அப்போதான் கோவிலில் கூட்டம் வரும்னார். நல்லதுதானே......  பிரஸாதம் நிறையப்பேருக்குக் கிடைக்கட்டுமே!


மேலே திரை போட்டதும், இங்கே இன்றைக்கான வேண்டுதல் பிரஸாத விநியோகம் நடக்கும். இப்பவும்தான்.  நமக்கும் பிரஸாதங்கள் கிடைச்சது. சக்கரைப்பொங்கல், ததியன்னம்,  சுண்டல்.....  ஆஹா.....


வெளியே  வரும்போது ஆஞ்சி சந்நிதியில் கும்பிட்டோம். வளாகத்தின் முகப்பில் சக்ரதீர்த்தம்   விளக்கொளியில் மின்னறது!
மறுநாள் மாலை  வரும்போது நமக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்றது அப்போ நமக்குத் தெரியாது!

..

தொடரும்........:-)


11 comments:

said...

சரியான நேரத்தில் சரியான தகவலுக்கு நன்றி! மகாமகக் குளத்தில் எப்போ வேணும்னாலும் குளிக்கலாமா? கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட் தாண்டிப் போனதே கிடையாது!

said...

வாங்க கலை.

எல்லா நாட்களுமே குளிக்கலாம். தண்ணீர் ரொம்பக் குறைவாக இருக்கும். அப்புறம் வெறும் நாலே கிமீ தூரத்தில் தாராசுரம் என்னும் பொக்கிஷம் இருக்கு!! விட்டுடாதீங்க....

said...

கடைத்தெரு ஆஞ்சநேயர், வராஹர் கோவில், ராஜகோபாலஸ்வாமி கோவில் (தசாவதாரம்) இதெல்லாம் தரிசனம் பண்ணினீங்களா?

said...

இந்த இடுகைல பல விஷயங்கள் ஏற்கனவே எழுதியிருந்தீங்களே....

said...

வெகுசிறப்பு அருமை நன்றி

said...

ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயில் மகத்தானது....

இனிய தரிசனம்.. வாழ்க நலம்...

said...

இன்னும் பலமுறை கும்பகோணத்துக்கு வர வேண்டிக்கலையா நீங்கள் தான் மூண்ரு எட்டுவைத்தாயிறே இனி அடிக்கடி விஜயம் ப்ராப்தி ரஸ்து

said...

கும்பகோணத்தில் அனைத்துக் கோயில்களுக்கும் பல முறை சென்ற போதிலும் இக்கோயில் எங்களைப் பொறுத்தவரை வித்தியாசமானது. எங்கள் அத்தைக்கு (தந்தையின் தங்கை) பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாமல் சக்கரராஜாவைச் சுற்றிவாருங்கள் என யாரோ சொல்ல, அவரும் சுற்றிவர குழந்தை பிறந்தது. (1970களின் இறுதியில்)அப்போது நாங்களும் அடிக்கடி அத்தையுடன் சென்றுள்ளோம். அவ்வகையில் மனதிற்கு சற்று நெருக்கமானது இக்கோயில்.

said...

கோபுவுடைய நம்பர் கிடைக்குமா?

said...

அடுத்த கோயில் திறக்க நேரம் இருக்கு, என்ன பண்ணலாம் என்று யோசித்த போது டிரைவர் ரெகமெண்டஷன்-ல் தாராசுரம் பார்த்தாச்சு - போன தடவை வந்த போது! நான் மட்டும்தான் கோயில் உள்ளே- சன்னதி எதுவும் திறந்திருக்கவில்லை. ஆனால் பிரகாரத்தில் இருக்கும் துர்கை, வாழ் நாளில் மறக்க முடியாத அளவு தத்ரூபம். ரொம்ப நேரம் அங்கேயே!

said...

நம்பினால்தான் வாழ்க்கையே. கடவுளும் அப்படியே. உங்க மனசுல இருந்த குறையை நிறையாக்கி வெச்ச சக்ரத்தாழ்வாருக்கு நன்றி.

எதுவுமே செய்ய முடியாத போது எங்க போறதுன்னு போக்கிடம் இல்லாத போது போய் நிக்கிறது கடவுள் கிட்டதானே.

தயிர்சாத பிரசாதம் பாக்கவே குளுகுளுன்னு இருக்கு.