Friday, October 30, 2009

சேனை ரோஸ்ட்

ரொம்பப் பெருசா இருக்கும் சேனைகள் மூணு,நாலு இருந்தாலும் சாப்பிடும் சமயம் தொட்டுக்க இழுபறியாகிருமாம். அதனால் மெனுவில் சேனைன்னு இருக்கும் நாளில் கூடுதலா இன்னொரு காய் செஞ்சே தீரவேண்டிய நிர்ப்பந்தம். கூட்டுக் குடும்பம். கல்லைத் தின்னாலும் ஜீரணிச்சுப்போகும்விதம் ஓடியாடி விளையாடும் பிள்ளைகள் எக்கச்சக்கம்.

அரைவீசைச் சேனைக்கிழங்கைச் சித்தி அருவாமணையில் தோல்சீவி நறுக்கும்போதெல்லாம், பாட்டி ஒரு கொசுவத்தியை ஏத்திருவாங்க.


கல்யாண வீட்டுச் சமையல் மாதிரிதான் தினப்படிச் சமையலே. குடும்பம் தவிர்த்துக் கடையில், கம்பெனியில் வேலை செய்யறவங்களும் பகல் சாப்பாடுக்கு வருவாங்களாம். வீட்டுப் பெண்களுக்கெல்லாம் அடுப்படியில் ஆக்கிப்போட்டே ஆயுசு தீர்ந்துரும் காலம். பிரமாண்டமான வாணலியில் சேனை ரோஸ்ட் வறுபட வறுபடப் பிள்ளைகள் கூட்டம் பலாப் பழத்தில் ஈ மொய்ச்ச்சதுபோல் அங்கயே வட்டம் போடும். ஒரு ஈடு எடுத்துத் தாம்பாளத்தில் வச்ச நிமிஷமே காலி.

பாட்டிச் சொல்லச் சொல்ல, எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காத கதைகள். அதே சமயம் சித்தி செய்யும் சமையலை ஓரக் கண்ணால் பார்த்துக்குவேன். இதுக்கு மட்டும் உதவிக்கு என்னைக் கூப்பிடமாட்டாங்க. 'கையெல்லாம் சொறியும். நல்லா எண்ணை தடவிக்கிட்டு அரியணும். கை வழுக்கி அருவாமணையில் வெட்டிக்கப்போறே'ன்னு சொல்லிருவாங்க. நானும் நம்ம உதவிக்குப் போகும் 'பாவ்லா' பலிச்சிருச்சுன்னு இருப்பேன்.

முதலில் சேனைக்கிழங்கை நல்லா தோலெல்லாம் சீவி எடுத்துக் கழுவிட்டு அரை இஞ்சு கனத்தில் ஸ்லைஸ் போட்டுக்குவாங்க. இப்ப வேணுமுன்னா நீங்க ஒரு செ.மீ. கனத்தில் வெட்டிக்குங்க, யார் வேணாமுன்னா?


இனி இது மூணு ஸ்டேஜ் குக்கிங்.

ஒரு அகலமானப் பாத்திரத்தில் அஞ்சாறு டம்ப்ளர் தண்ணீர் ஊத்திக் கொதிக்க விட்டு அதில் இந்தச் சேனை ஸ்லைஸ்களைப் போட்டு வேகவிடணும். ஒரு கத்தி, இல்லை பேம்பூ ஸ்டிக்கால் அழுத்தமாக் குத்துனாச் சட்னு இறங்கணும். அப்போ அந்தத் தண்ணீரை வடிச்சுடணும்.

இதுக்குள்ளே கொஞ்சம் புளித்தண்ணீரில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் எல்லாம் சேர்த்துக் கெட்டியானக் குழம்புப் பதத்த்தில் கரைச்சு வச்சுக்கணும். இந்தக் கரைசலை மறுபடி அந்தச் சேனைத் துண்டுகளில் சேர்த்து அடுப்பில் வச்சு வேகவிடணும். தீ இளந்தீ. இல்லேன்னா அடிப்பிடிச்சிரும். எல்லாத் துண்டுகளிலும் மசாலா நல்லாப் பரவி இருக்கணும். துண்டுகள் உடைஞ்சு போகாம லேசாத் திருப்பிவிடணும். தண்ணியெல்லாம் சுண்டிப்போகணும். கரைசலை ரொம்பத் தண்ணியாக் கரைச்சுடாதீங்க. கொஞ்சம் திக்கா இருந்தால் இதெல்லாம் அஞ்சே நிமிசத்தில் ஆகிரும்.

இப்பக் கடைசிக் கட்டத்துக்கு வந்துட்டோம். வாணலியில் கொஞ்சம் எண்ணை ஊத்தி அதுலே நாலைஞ்சு துண்டுகளாப் போட்டுச் சிவக்க வறுத்து எடுத்தால் ஆச்சு. ரொம்ப எண்ணெய் வேணாமுன்னா அடிபாகம் தட்டையா இருக்கும் ஃப்ரைபேன் வச்சு அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு இடம் கொள்ளும் அளவுக்கு இந்த ஸ்லைஸ்களைப் பரப்பிக் கொஞ்சம் கொஞ்சமா ஸ்பூனால் எண்ணெய் எடுத்துச் சுத்திவர ஊத்தித் திருப்பிப்போட்டு வறுத்து எடுக்கலாம். கவனிக்க வேண்டியது அடுப்புலே தீ மிதமா இருக்கணும். ஒரேடியா 'ஸிம்'லே வச்சால் நாள் பூராவும் அடுப்படியிலேயே நிக்கணும்!

சென்னை வாசத்தில் சேனைக்கிழங்கைத் தரிசித்ததும் பாட்டி நினைவு. சின்னதா ஒரு துண்டம் வாங்கி வந்தேன். 450 கிராமாம். தோலெல்லாம் சீவுனதும் 350 கிராம் வரலாம்.

இதுக்குச் சேர்த்துக்கிட்ட மசாலாப் பொருட்களின் அளவுகள்:

ஒரு தேக்கரண்டி மிளகாய்ப்பொடி (ஆச்சி மிளகாய்த்தூள்)

ரெண்டு தேக்கரண்டி மல்லித்தூள் (எவரெஸ்ட் மல்லித்தூள்)

கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி (ஆச்சி ப்ராண்டு)

கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் ( வன்தேவி ஹிங்கு)

ஒரு தேக்கரண்டி உப்பு (டாடா)

புளிக் கரைசல் மூணு மேசைக் கரண்டி (இது என்ன பிராண்டுன்னு கேக்காதீங்க:-) தாய்லாந்துப் புளி)

சாம்பாருக்குக் கரைச்ச புளியில் கொஞ்சம் எடுத்துக்கிட்டேன். சாம்பார் ரசம் வைக்காத நாளுன்னா...நீங்க ஒரு கமர்கட் அளவு புளி எடுத்துக் கரைச்சுங்க.

எண்ணெய் எந்தமாதிரி வாணலியோ அதுக்குத் தேவையான அளவு.
பாட்டி சொன்னதென்னவோ நிசம். வறுத்து வச்சவுடன் உப்புப் பார்க்கட்டுமான்னு கேட்டு நீண்ட கை ஒன்னு, தின்னு பார்த்துட்டு பகல் உணவு நேரம் வருமுன்பே போகவர ரெண்டு மூணு துண்டுகளை உள்ளே தள்ளினதுக்கு நான் மட்டுமே சாட்சி:-)

முதலில் ரெண்டு பேருக்கு இவ்வளவான்னு ஒரு தோணல். இருக்கட்டும் பிரச்சனை இல்லை. அதிகமுன்னா 'டாஸ்மாக்' கொண்டுபோனா நிமிஷமா வித்துறாதா என்ன?


பின் குறிப்பு: ரொம்ப நாளாச் சமைக்கவே இல்லையான்னு நீங்கெல்லாம் நினைச்சுடக்கூடாது பாருங்க. அதுக்குத்தான் இந்தச் சமையல் குறிப்பு;-)))))))

Monday, October 26, 2009

பதினாயிரம் கோவில்கள் = ?

தீபாவளிக் கொண்டாட்டத்தில் நாலாம் நாளா, இன்னிக்குக் கோவர்தன பூஜை. நம்மூர்லே(?) இருந்துருந்தால், நம்ம 'ஹரே க்ருஷ்ணா'வில் கன்னுக்குட்டிகளுடன் கொண்டாடி இருப்போம். அது இங்கேயும் வாய்ச்சது.
கலைமகள் (குடி இருக்கும்) கோவிலுக்குப் போனோம். பேய் மழையில் இருந்து தன் மக்களைக் காப்பாற்றக் குன்றைக் குடையாகப் பிடித்தான். இப்போக் கலி காலமாம். எதிர்பாராத நிகழ்வுகளில் அவனே நேரில் வரமுடியாதாம். சம்பவம் நடப்பது நடந்து முடிஞ்சாலும் பின்விளைவுகளிலாவது உதவிக்கு யாராவது வந்தால் நல்லா இருக்குமே.... அப்படி வந்த உதவிகளில் இதுவும் ஒன்னு.

"அக்கா, ஊருக்கு வரும்போது கட்டாயம் வந்து பாருங்க"ன்னு பலமுறை அழைச்சாலும் வாய்க்கும்போதுதானே வாய்க்கும். நியூஸித் தோழி ஒருத்தர் விடுமுறைக்கு வந்துருக்காங்க. சேர்ந்தே போகலாமுன்னு கிளம்பினோம். தோழியின் கூட அவுங்களோட ரெண்டு அக்காக்களும் தம்பியுமா நாலுபேர்.

கிழக்குக் கடற்கரைச்சாலையில் இன்னைக்கும் பயணம். மகாபலிபுரத்தைக் கடந்து கல்ப்பாக்கம் அணுபுரமும் தாண்டி புதுப்பட்டினம். மெயின் ரோடில் எங்களுக்காகக் காத்திருந்து, வழிகாட்டிக் கூட்டிப்போனார் சந்தோஷ். கிழக்கு நோக்கிக் கொஞ்சம் உள்ளே போகவேண்டி இருக்கு. சுத்திவர சுநாமிக் குடியிருப்பு. நடுவில் அட்டகாசமா கம்பீரமா நிக்குது இந்தப் பள்ளிக்கூடம். வர்ற நவம்பர் வந்தால் ரெண்டு வயசு இந்தக் கட்டிடத்துக்கு.

வாசலில் மழலையர் நின்னு வரவேற்பு. அழகானக் கோழிக்கொண்டைப் பூக்களைக் கொடுத்துச்சுங்க. பள்ளித் தலைமை ஆசிரியர் நம்ம நளினி, முதலில் பாலர் வகுப்புக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.

முப்பத்தியெட்டுப் பிஞ்சுகள். பள்ளிக்கூடத்துக்கு வந்ததும் செய்யும் முதல் வேலை பல் தேய்ச்சுக்கரதுதான். சின்னதா ஒரு பல் தேய்க்கும் ப்ரஷ், சீப்பு, குட்டியா ஒரு டவல் எல்லாம் அடங்கிய பெட்டி ஒன்னு ஒவ்வொரு குழந்தையின் பேரோடு தனித்தனியா இருக்கு. மாண்டிஸோரி முறையில் கல்வி. ரெண்டு பகுதியா பிரிச்சு ரெண்டு அறைகளில் . ஒரு வகுப்பு விளையாட்டாகவே பொம்மை, கட்டைகள், புதிர்களில் பாடம் கத்துக்கும்போது இன்னொரு பிரிவு படம் வரைதல், வண்ணம் தீட்டுதல்னு மனசுக்குத் தோணியதைச் சின்னக் கைகளால் செஞ்சுக்கிட்டு இருக்கு.

ப்ரி கே. ஜிக்கு அடுத்துள்ள வகுப்பு கே ஜி. அங்கே எண்ணும் எழுத்தும் முக்கியம். ரெண்டு பிரிவாப் பிரிச்சு வட்டமா உக்காரவச்சு ரெண்டு ஆசிரியைகள் சொல்லிக் கொடுக்கறாங்க. எல்லாம் கண் வழியேதான். நாலு பேனாவை வச்சுக்கிட்டு எத்தனைன்னு கேட்டதும் அப்படியே எண்ணிச் சொல்லுதுங்க. அதுலே ஒரு பேனாவை எடுத்துட்டால்? மறுபடி யோசிச்சு எண்ணனும்.
இன்னொரு வட்டம், எழுத்தின் உச்சரிப்பு. எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு அந்த டீச்சரை. நான் பார்த்தப்ப ' h' என்ற எழுத்தைக் காட்டி, நெஞ்சில் கை வச்சு 'ஹ' ஹ'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இது ஏ, இது பி ன்னு சொல்லிக்கிட்டு இருக்காம அந்தந்த எழுத்தைக் காட்டி அதை எப்படி உச்சரிக்கணுமுன்னு ..... எந்த ஒரு அட்டையைக் காமிச்சாலும் குழந்தைகள் கவனிச்சுப் பார்த்துச் சரியா உச்சரிக்குதுங்க.

இந்த ரெண்டு வகுப்பிலும் காலணி போட்டு உள்ளே வர அனுமதி இல்லை. காரணம்? குழந்தைகள் தரையிலே உக்காருவதுதான்! யு கே ஜியில் ஆரம்பிச்சு எல்லா வகுப்பறைகளிலும் கணினி ஒன்னு வச்சுருக்காங்க.
டீச்சர் போட்டக் கணக்கைச் சீக்கிரமா முடிச்சுக் கொடுத்த மாணவி, கணினியில் கூட்டல் கணக்குப் போட்டுப் பார்த்துக்கிட்டு இருந்தாள். சரியான விடையைத் தட்டுனதும் 'யூ ஆர் கரெக்ட்' ன்னு கணினி, தட்டிக்கொடுக்குது:-)

பள்ளிக்கூடத்துக்கான சகல புத்தகங்களும் வகுப்பறைகளில் பயன்படுத்தும் சி.டி.களும், (இன்னும் பாட்டு, கதை, கணக்கு, ஸ்பெல்லிங், இப்படி எல்லாத்துக்குமே சி.டி.கள் ) 'COMPUGEN' என்ற கம்ப்யூட்டர் கம்பெனி ஒன்னு தயாரிச்சு விக்குதாம் அங்கே இருந்து வாங்கி இருக்காங்க.
பள்ளிக்கூடத்துலே நாலாப்பு வரை மட்டும்தான் இப்போ. சுநாமி சம்பவத்துக்குப் பின் இங்கே பார்வையிட வந்த ஹோப் பவுண்டேஷன் கவனிச்சது..... பெரியவங்க எல்லாம் அவுங்கவுங்க வேலைகளில் மூழ்கி இருக்க இந்தப் பிள்ளைகள் மட்டும் செய்வதறியாது இங்கேயும் அங்கேயும் ஓடிப் பொழுதை வெத்தாக் கழிச்சுக்கிட்டு இருந்ததைத்தான்.
நாலாப்புக் குழந்தைகளில் முக்கால்வாசிப்பேர் 'சம்பவத்தில்' பெற்றோரைப் பறி கொடுத்தவர்கள். ஆனால் ஒன்னு..... யாருமே அநாதைகளாத் திரியலையாம். இந்த மீன்பிடிக் கிராமத்து மக்கள் தங்கள் பிள்ளைகளோடு பிள்ளைகளா இவர்களை ஏத்துக்கிட்டாங்க. சொந்தக்காரர் இருந்தால் அவர்களும்.

ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்து, அந்தப் பிள்ளைகளை வச்சுத் தொடங்குன பள்ளிக்கூடம், இன்னிக்குப் பக்காவானக் கட்டிடத்தில் நிக்குது. வெளிச்சமான வகுப்பறைகளுடன் அருமையான, காற்றோட்டமான கட்டிடம். இந்த நவம்பர் வந்தால் ரெண்டு வருசமாகப்போகுது. பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒரு செடி நட்டுப் பராமரிக்கிறாங்க. வாழை மரங்கள் கூட இருக்கு. பள்ளிக்கூடத்துக்குன்னே ஒரு நாய் கூட இருக்கார்:-))))
தனியா ஒரு அறையில் பத்துப்பதினைஞ்சு கணினிகள் வச்சுருக்காங்க. அங்கேயும் பிள்ளைகள் கணினியைப் பயன்படுத்தக் கத்துக்குதுங்க.
மகேஸ்வரி இவுங்கதான்.

ஆசிரியைகள் அன்போடு சொல்லித் தர்றாங்க. சிலர் தன்னார்வத் தொண்டர்கள். சிலருக்குச் சம்பளம் உண்டு. ( அப்படி ஒன்னும் ரொம்ப இருக்கச் சான்ஸ் இல்லை) மஹேஸ்வரின்னு ஒரு பள்ளிக்கூட ஊழியர். இவுங்க இல்லைன்னா....அவ்ளோதானாம்! அப்படி ஒரு கவனம்.

நம்ம நளினியின் கணவர் சந்தோஷ், பள்ளிக்கூடச் செலவுகளுக்காகும் தொகையைத் திரட்டுவதில் எந்நேரமும் ஓடியாடிக்கிட்டு இருக்கார். இந்தப் பள்ளிக்கூடத்துக்கு அரசாங்க உதவி ஒன்னும் கிடைக்கறதில்லையாம். சுநாமி சம்பவத்துக்குப் பின் ஒரு வருசம் மட்டுமே ஏதோ கொஞ்சம் உதவி செஞ்சதுதானாம். இவுங்க ரெண்டு பேரும்தான் முந்தி ஹோப் ஹோமைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க

நம்ம ஹோப் பவுண்டேஷன் பிள்ளைகள் எல்லாம் தாம்பரத்தில் இருக்காங்கன்னு சொல்லி இருக்கேன் முந்தி. இப்போ போன வருசக் கடைசியில் ஹோப் ஹோம் கட்டக் கொஞ்சம் நிலம் வாங்கி ( மேல்மருவத்துர் பக்கம். சென்னைக்கு அருகில்னு சொல்வாங்க:-) அங்கே ஒரு கட்டிடம் கட்டத் துவங்கி இந்த வருசம் 2009 ஆகஸ்ட் முதல் அங்கே இடம் மாறிட்டாங்க.

இப்போ அங்கேயும் இங்கேயுமுன்னு செலவைச் சமாளிக்க முடியலை. அதனால் பள்ளிக்கூடத்துக்கு நீங்களே முடிஞ்சவரையில் கொஞ்சம் நிதி நிலையைப் பார்த்துக்குங்க என்ற அளவில் வந்துருக்கு. போனவருசம் வரை இலவசக் கல்வியா இருந்ததாம். இப்போ மாசம் அம்பது ரூபாய் கொடுக்கச் சொல்லிப் பெற்றோர்களைக் கேக்கறாங்க.

அம்பதுன்றது கணக்குப் பார்த்தால் ஒன்னும் இல்லைதான். ஆனால் ஒரு சிலர் மட்டுமே கொடுக்கறாங்க. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இப்போதும் கல்வி இலவசம்தான். மற்றவர்களிடம் எப்படி விளக்குவதுன்ற கவலை தலைமை ஆசிரியைக்கு......."என்ன செய்யலாம்க்கா? நீங்க ஐடியா தாங்கக்கா"

இதுக்கிடையில் இவுங்க சொன்ன ஒரு தகவல், பிள்ளைகள் படிப்பு விவரமாப் பேசப் பெற்றோர்களைப் பள்ளிக்கூடத்துக்கு வரச்சொல்லி அனுப்புனா, எப்பவுமே தாய்மார்கள் மட்டுமே வருவாங்களாம். தகப்பன்கள் மறந்தும் இங்கே ஒதுங்குவதில்லை! அவுங்களுக்குத்தான் டாஸ்மாக் இருக்கே(-:

நம்முடைய மேலான ஆலோசனைகளை இப்போச் சொல்லலைன்னா வேற எப்போச் சொல்ல முடியும்?

"ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைஞ்ச ஒரு சங்கம் அமைச்சு அதில் சில தாய்மார்களையும் அங்கத்தினராச் சேர்த்துக்குங்க. கொஞ்சம் படிச்ச அம்மாக்கள் கட்டாயம் இருப்பாங்க இந்த மீனவர் கிராமத்தில். அவுங்ககிட்டேப் பள்ளிக்கூட வரவு செலவை விவாதிச்சு, என்ன செய்யலாம் ஏது செய்யலாமுன்னு ஆலோசனை கேக்கணும். அவுங்க போய் மற்ற தாய்களிடம் எடுத்துச் சொன்னால் கொஞ்சம் புரிஞ்சுக்குவாங்க. வாரம் பத்து பதினைஞ்சு ரூபாய்ன்னுகூட கொடுக்கலாம். புள்ளைங்க படிச்சு நல்லா ஆகணும் என்ற ஆசை தாய்களுக்கு அதிகம்."

ஹோப் நடத்தும் பள்ளி என்றதால் வெளிநாட்டுலே இருந்து ஏராளமா நிதி உதவி வருதுன்னு பலர் நினைச்சுக்கிட்டு இருப்பாங்க. பல நிறுவனங்களுக்கு இப்படி நிதி வருதுன்றது வேற விஷயம். ஆனா இதைப் பொறுத்தவரை ஹெச் ஐ வி பாஸிடிவ் இருக்கும் பிள்ளைகளுக்கு மருந்துச் செலவு கூடுதல். அதுலே சுணக்கம் பண்ண முடியாது. இதில்லாமல் உணவு உடைன்னு செலவு வந்துக்கிட்டுத்தானே இருக்கு?

பிள்ளைகள் நம்மைப் பார்த்தவுடன் காகிதத்தில் பொம்மை, படங்கள்ன்னு வரைஞ்சு கொண்டுவந்து நீட்டறாங்க. நாம் செய்யவேண்டியதெல்லாம் கொஞ்சம் அன்பை அவர்களுக்குக் கொடுப்பதுதான். கூடவே இந்தப் பள்ளிக்குக் கொஞ்சம் பொருளுதவி செய்ய முடிஞ்சால் ரொம்ப நல்லது.
பள்ளிக்கூடத்துலே புதுசா கழிவறைகள் கட்டிவச்சுருக்காங்க. சுநாமி வீடுகளிலும் சின்னதா ஒரு இடம் கழிப்பறைக்குன்னு வச்சுருந்தாலும் அநேகமா எல்லோருமே அந்த இடத்தையும் புழங்க வச்சுக்கிட்டு, வழக்கம்போல் கடற்கரைகளிலேயே எல்லாத்தையும் முடிச்சுக்கறாங்களாம். அவுங்களைத் திருத்தும் ஆயுதமா இப்பப் பிள்ளைகள்தான் இருக்கு. பிள்ளைகளுக்குக் கழிப்பிடத்தைப் பயன்படுத்தச் சொல்லிக் கொடுத்ததும், அவர்கள் போய் பெற்றோர்களிடம், 'வெளியிடங்களில் போக முடியாது. கழிப்பிடத்துலேதான் போவேன் போகணுமுன்னு' வற்புறுத்துவதால் கொஞ்சம் இந்தப் பழக்கங்கள் மாற ஆரம்பிச்சுருக்குன்னு தகவல் கிடைச்சது.

பள்ளிக்கூடத்தில் தரமான கல்வி கிடைக்குதுன்றதால் இப்போ மீனவர் கிராமம் தவிர வெளியே அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அவங்க பிள்ளைகளை இங்கே சேர்க்க விருப்பப்பட்டுக் கேக்கறாங்களாம். மீனவர் குடியிருப்பு மக்களுக்குப் போகச் சில இடங்கள் இருந்தால் அவர்களையும் சேர்த்துக்கலாமுன்னு இப்போ எண்ணம் வந்துருக்கு. எப்படி ஆனாலும் ஒரு ஆசிரியருக்கு இருபத்தியஞ்சுக்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை கூடாதுன்ற முடிவும் இருக்கு.

"அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்று முண்டாசு அன்றே சொல்லி வச்சது உண்மைதான்.



நம் பதிவுலக நண்பர்கள் யாராவது அந்தப் பக்கம் போகும்போது, இங்கேயும் ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு வாங்க.. விருப்பம் இருப்பவர்களுக்கு சந்தோஷின் தொலைபேசி எண்ணை அனுப்பி வைக்கிறேன்.

இதெல்லாம் பார்த்து முடிக்கும்போதே ஒன்னேகால் ஆகிருச்சு. பகல் உணவு எங்களுக்காகத் தலமை ஆசிரியர் வீட்டில். புதுப்பட்டினம் என்ற கிராமம். இவுங்க குடி இருக்கும் வீட்டின் ஓனர்தான் கல்பாக்கம் அணு மின்நிலைய இடத்துக்கும் ஒருசமயம் சொந்தக்காரரா இருந்தாராம். ஓனர் வீட்டு மாடியில்தான் நளினியும் சந்தோஷும் தங்கள் மூன்று மக்களுடன் வசிக்கிறாங்க.

அங்கே போய்ச் சேர்ந்தால் எனக்கொரு இன்ப அதிர்ச்சி. சுமதியும் ஜானும் ஓனரின் குழந்தைகள். ஜானுக்கு என்னைப் பார்த்ததும் ரொம்பப் பிடிச்சுருச்சு(எனக்கும்தான்) என் துப்பட்டாவைப் பிடிச்சுக்கிட்டு விடவே இல்லை. பிறந்து 20 நாளே ஆன பிஞ்சு. அம்மா எங்கேன்னு கேட்டேன். பஜார்லே இருக்காளாம்!

சுமதிக்கு ரெண்டரை வயசு. ஒய்யாரம் ஜாஸ்தி. போறதும் வாரதுமா இருந்தாள். வீட்டுக்கார அம்மா, ஒருநாள் வந்து அவுங்களோடு தங்கணுமுன்னு எனக்கு அழைப்பு வச்சுருக்காங்க. போகத்தான் வேணும், ஜானுக்காகவாவது:-))))
லிட்டில் ஜான்

படங்கள் கொஞ்சம் எடுத்ததுலே நம்ம கோவியாருக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்கு. வீட்டு வாசல் நிலை!

ஆல்பம் இங்கே:-)

Wednesday, October 21, 2009

Beech mein kaun hai

அச்சு அசலா அதே மாதிரி அப்படியே...ஆனால் அளவுதான் கொஞ்சம் சின்னது. கேள்விப்பட்டது முதல் ஒருநாளைக்குப் போகலாமுன்னு இருந்தேன். இங்கே தமிழ்நாட்டில் அமாவாசைக்கு முந்தின தினம்தான் தீபாவளின்னு நரகாசுரனை நினைச்சு(?) கொண்டாட்டம் முடிஞ்சுபோகுது. அதுக்காக அப்படியே இந்த அஞ்சுநாள் விழாவை விட்டுறமுடியுதா?

அமாவாசைக்கு ரெண்டு நாள் முன்னாலேயே தொடர் ஆரம்பிச்சுருது. பவுர்ணமி கழிஞ்சு பதிமூணாம்நாள் த்ரயோதசி. இதைத்தான் தனத்ரயோதசின்னு சொல்வாங்க. சுருக்கமாச் செல்லமாச் சொன்னால் தந்தேரஸ்.(எங்கியோ கேட்டமாதிரி இருக்குமே....... சமீபகாலத் திருவிழாவா மாறிக்கிட்டு இருக்கும் அக்ஷயத் திருதியைதான் இது)

ஆஹா............ இப்படி ஒன்னு இருக்கா... நம்மளைக் கவுக்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு ஆம்பளைங்க அழாதீங்க. தீபாவளிச் செலவு அப்படியே அமுக்கிப்புடுமுன்னுதான் உங்களுக்கு அதிகமாக் கஷ்டம் கொடுக்கவேணாமுன்னு அக்ஷயத் திருதியை விழா(??)வை சித்திரை மாசத்துக்குன்னே வச்சுருக்கோம். தீவுளி முடிஞ்சு ஆறுமாசம் ஆகிருமே....நீங்கெல்லாம் பழசை மறந்து மீண்டும் தெம்பா வலம் வரத்தொடங்குவீங்க!

இன்னொன்னையும் சொல்லிக்கறேன். மாசாமாசம் ரெண்டு திருதியை வரும் தெரியுமா? அதையெல்லாம் பெருந்தன்மையா நாங்க விட்டுட்டோம் என்பதையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். நிற்க.....

அஞ்சுநாள் கொண்டாட்டமானத் தீவுளித் தொடரில், முதல் நாள் புதுசா நகைநட்டு, புதுத்துணிகள் எல்லாம் வாங்கும் சம்பிரதாயத்தை முன்னிட்டு கிரி ட்ரேடிங் கம்பெனியில் போய் நூத்தியெம்பத்தியஞ்சு ரூபாய்கள் கொடுத்து அரை இஞ்சு அகல சரிகை(???) போட்ட எட்டுமுழ வேஷ்டி வாங்கியாச்சு.
இந்த (அவசர ஷாப்பிங் )சம்ப்ரதாயமெல்லாம் ஆண்களுக்காகவே நாங்க விட்டுக்கொடுத்துட்டோம்.

ரெண்டாம் நாளான சதுர்த்தசிக்கு எல்லாமே க்ருஷ்ணார்ப்பணம். பிறந்த வீட்டு சீர் வரணுமே. வந்துச்சுப் பதிவர் வீட்டில் இருந்து. நாமெல்லாம் ஒரு குடும்பமுன்னு சொல்லிக்கிட்டே இருக்கேனே....அதற்குரிய பலன்:-)

உடுப்பி கிருஷ்ணரின் படம்,நல்லெண்ணை, மீரா சீயக்காய்ப் பொடி, கங்கா தீர்த்தம்,நெய்விளக்குப் போட மண் அகல், அதுக்குத் திரி, அதுக்குண்டான நெய், அஞ்சு சுத்துச் சீர் முறுக்கு, அதிரசம், மைசூர்பா, லட்டு, பாதுஷா, இனிப்புத் தேன்குழல், மிக்சர், காராசேவு, அட்டையில் எம் எஸ் அம்மாவின் படம் போட்ட திருவிளக்குப் பூஜைக்கான சுலோகங்கள் அச்சிட்ட புத்தகம், காற்றினிலே வரும் கீதம் என்று சாமிப்பாட்டுகள் பாடும் சி.டி, தீபாவளி மருந்துன்னு லேகியம்ன்னுப் பண்டிகைக்கான எல்லாச் சமாச்சாரமும் உள்ளப் பரிசுப் பொதி. (எல்லாமுன்னு சொன்னதால் நகை, புதுத்துணிகள் இருக்குமோன்னு தேடிப் பார்க்கப்பிடாது)

துளித்துளிக் கங்கையைக் குளிக்கும் நீரில் விட்டு கங்காஸ்நானம் செஞ்சு புதுசு உடுத்திப் பூஜை செஞ்சுப் பண்டிகையைக் கொண்டாடிட்டு, மாலையில் பத்மநாபனைச் சேவிச்சுட்டு, அண்ணன் வீட்டுக்குப் போனோம். பாரம்பரிய உடையில் கோபால் பளிச்சுன்னு இருந்தாரா.... என் கண்ணே பட்டுருக்கும்போல. பட்டாஸ் வெடிக்கும்போது பறந்துவந்தத் தீப்பொறிச் சரியா வேட்டிச் சரிகையில் ஒட்டி ஒளிர்ந்து பத்து பைசாப் பொத்தல் ( இப்ப ஏது? ச்சும்மா ரைமுக்காகப் பத்துப் பைசான்னு சொல்றேன்)

மூணாம் நாள் லக்ஷ்மி பூஜை. இதுவரையிலும் பார்க்காத ஒன்னைப் பார்த்துடலாமுன்னு கூகுளிச்சுட்டுக் கோவிலை நோக்கிப் போறோம். உத்தண்டி என்னும் திவ்யஸ்தலத்தில் கடற்கரைக்குச் சமீபமாக் கிழக்கு நோக்கி 'அந்த ஜெகந்நாதனைப் போலவே' இங்கும் இருக்காராம். கிழக்குக் கடற்கரைச்சாலையில் சுங்கச் சாவடியைக் கடந்து கொஞ்ச தூரம் போகணும். 45 ரூபாய் கொடுத்துக் கடந்தபின் வழியில் ஒருவரிடம் விசாரிச்சால்....... இன்னும் கொஞ்ச தூரத்தில் மீன்கடைகள் இருக்கும் அங்கே லெஃப்ட் திரும்புங்கன்னார். திரும்பிக் கிழக்கு நோக்கிய தெருவில் போனால் கோயிலுக்கு வழிகாட்டும் அறிவிப்பு ஒன்னு இருக்கு. 'ரைட்டு'ன்னு போய்ச் சேர்ந்தோம். பூரி ஜெகந்நாதர் ஆலயம்.

அசல்

நகல்


காலணிகள் வைக்க கம்பி ஷெல்ஃப். பக்கத்துலேயே (அபாய) அறிவிப்பு. புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை.

(அதுக்காக விடமுடியுமா? ஆண்டவரிடம் கேட்டேன் ரெண்டு தந்தார். சுலேகா.காமில் உஷா சூர்யமணி என்பவர் அழகான படங்களுடன் எழுதி இருக்கார். அவரைத் தொடர்பு கொள்ள முடியலை. மூணு படங்கள் சுட்டேன். பிரச்சனை என்றால் தூக்கிடலாம். உஷாவுக்கு என் நன்றி.)


அலங்காரக் கல் தூண்

நுழைவாசலுக்கு நேரா கல்லால் ஆன ஸ்தம்பம், அதுக்குப்பின்னே மேலேறும் படிக்கட்டுகள். முதல்லே இடது பக்கம் இருக்கும் சந்நிதிகளைப் பார்த்துக்கலாம். தோட்டத்துக்குள்ளே போகும் சின்னப் பாதை. வலது பக்கம் கனேஷ். அரசமரத்தடி கனேஷ்.(தட்டச்சுப்பிழை இல்லை) அவருக்கு நேரே தோட்டத்தில் ஒரு மரம். மேடை கட்டி வச்சுருக்கு. மேடையில் ஒரு தாவணி போட்ட பெண் முழங்காலை மடிச்சு உக்கார்ந்துருக்காள். அவள் தலையில் ஒரு பூந்தொட்டி. அதுக்குள்ளே நான்!

பார்க்கிங் ஏரியா

துளசி தரிசனம் செஞ்சுட்டு வலப்பக்கம் திரும்பினால் காசி விஸ்வநாதர். அவருக்கு எதிரில் மரத்தடி மேடையில் பார்க்கிங் ஏரியா ஃபார் கடவுள்ஸ். வாகனங்கள் எல்லாம் நின்னு பேசிக்கிட்டு இருக்காங்க.

கோவிலைச் சுத்தி மெத்து மெத்துன்னு அழகான புல்தரை. நல்ல பராமரிப்பு. திரும்பி கனேஷைக் கடந்து முன் முற்றத்துக்கு வந்தோம். கல் ஸ்தம்பம் கொள்ளை அழகு. பராமரிப்பு வேலை நடந்துக்கிட்டு இருக்கு. ஆளுயர அலங்கார மேடையில் ஆமை. முதுகில் மத்தாக மந்தார மலை. அதைச் சுற்றிக் கயிறுபோல் கிடக்கும் வாசுகி. மலையின் உச்சியில் தாமரை. பாற்கடல் கடையும் ஸீன். கூர்மாவதாரம் எடுத்தது அப்போதான்.

'உச்சியில் எதுக்குத் தாமரைப்பூ?' கேள்வியின் நாயகனின் கேள்வி.

அதுலேதான் மஹாலக்ஷ்மி உதிச்சு வந்தாள். பாற்கடலைக் கடையும்போது அமிர்தகலசம் வருமுன்பு வலம்புரிச் சங்கு, காமதேனு, கற்பக விருட்சம் இப்படி அபூர்வமான பொருட்கள் பலவும் (மொத்தம் 14 ன்னு சொல்வாங்க) வந்துச்சு. (பதில் சொல்லத் தெரியாதா நாயகிக்கு?)

நல்ல அகலமான படிகள் ஏறிப்போனோம். அழகான சந்நிதி. உள்ளே சின்னதா மண்டபம். கருவறையில் மூன்று திருஉருவங்கள். முதலில் வெளுத்த நிறத்தில் பலராமன், அடுத்து ரோஜா நிறத்தில் சுபத்திரை, மூன்றாவதாக கருமை நிறக் கண்ணன்.
அதுயார் யார்ன்னு கோபால் கேட்டுக்கிட்டே இருந்தார். ரெண்டு பக்கமும் பலராமன், கிருஷ்ணன் என்று தெரிந்தாலும் நடுவில் சுபத்திரைதானோன்னு ஒரு சின்ன சந்தேகம்.

திரு உருவங்கள் எல்லாம் மரச் சிற்பங்கள்தான். எங்கூர் ஹரே க்ருஷ்ணாவிலும் வச்சுருக்கோம் பூரி ஜாக்கர்நாட். கிறிஸ்மஸ் சமயம் பரேடில் ரதயாத்ராவையும் சேர்த்துக்குவோம்.

தீபாராதனை காமிச்சு நம் நெற்றியில் சந்தனம் தீற்றினார் பண்டிட்.
அவரையே கேட்டால் ஆச்சு.... 'பண்டிட்ஜி, பீச் மே கௌன் ஹை?'

'பல்ராம் ஷுபத்ரா ஔர் க்ருஷ்ணா. உன்கோப் பூரா பரிவார்'.

மண்டபத்தின் கிண்ணக்கூரையில் மதுபாணி வகை ஓவியங்கள். எல்லாமே ஸ்ரீகிருஷ்ணனின் லீலைகள். வெளியே வந்து வெராந்தாவில் நின்னால் கண்ணெதிரே கடல். அடடா....என்ன அழகு! வலது பக்கம் பச்சைப்பசேல் புல்வெளி. இடதுபுறம் அட்டகாசமான ஒரு பங்களா. நீச்சல் குளத்தோடு அமர்க்களமா இருக்கு. அச்சச்சோ..... கோவில் பக்கத்துக் கட்டிடமா? கொஞ்சம் தர்ம சங்கடமா இருக்குமோ?

மேலே கருவறையைச் சுற்றி விஸ்தாரமான வெராண்டா. வலம்வரலாம். மூன்று பக்கச் சுவர்களிலும் வராக அவதார மூர்த்தி, ஹிரண்யனை மடியில் வைத்து வயிற்றைக் கிழிக்கும் நரசிம்ஹன், உலகளந்த பெருமாள் சிலைகள் பதிச்சுருக்கு.

கீழே இறங்கி வந்தோம். கீழ்த்தளத்தில் ஒரு தியான மண்டபம். நாலு புறமும் கண்ணாடிச் சன்னல்கள் உள்ள குட்டி அறை (இது கருவறைக்கு நேர் கீழே அமைஞ்சுருக்கு)மேடையில் கிருஷ்ணரின் திரு உருவம். பூஜைக்கான பொருட்கள் கலசம் என்று நிரம்பி இருக்கு. கதவுக்கு முன் சின்னதா ஒரு கல் குத்துவிளக்கு. அழகோ அழகு. அதன் தண்டில் வாசுகி சுற்றி இருந்தாள். (செதுக்கல்தான்) அங்கே கொஞ்சநேரம் அமர்ந்து தியானிக்க முடிஞ்சது. நல்ல அமைதியான இடம். இங்கேயும் மேல் விதானத்தில் அலங்காரப் படுதா. சுவர்களில் அழகான ஓவியங்கள். ராம லக்ஷ்மணர்கள், ஹனுமான், சீதை அக்னிப்பிரவேசம் செய்வதுன்னு ராமாயணக்காட்சிகள் இருந்துச்சு.

தோட்டத்தின் கோடியில் இடதிலும் வலதிலுமாக ரெண்டு சந்நிதிகள். இடதில் மா விமலா என்று எழுதி வச்சுருக்காங்க. கம்பிக்குப் பின்னால் பெண் உருவத்தில் சாமி. தாயாரா இருக்குமோ? வலது பக்கம் லக்ஷ்மி. இருவருக்கும் வட இந்தியச் சாயலில் முகங்கள். கோயில் முகப்புக்கு வந்து சேர்ந்தோம். விஸ்தாரமான நான்கு புறமும் திறந்த ஒரு மண்டபம். யக்ஞ சாலையாம். கரிப் புகையெல்லாம் இல்லை.பளிச் ன்னு இருக்கு. நமக்கு இடதுபக்க மூலையில் ஒரு சின்ன அறை. எட்டிப்பார்த்தால் நவகிரகங்கள். தலையைத் திருப்பாமல் ஒரே வரிசையில் கிழக்கு பார்த்து உக்கார்ந்துருக்காங்க. புது தினுசா இருக்கு. இதுபோல் இதுவரை பார்த்ததே இல்லை. எப்படி இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்கமாட்டாங்க. அதானே முக்கியம்? :-)

சின்னதா ஒரு தொட்டியில் சில அல்லிச்செடிகள், அழகான செடிகள், புல் தரைகள்னு அம்சமா இருக்கு இந்தக் கோவில். கூட்டம் கிடையாது அஞ்சாறுபேர் மட்டும் இருந்தாங்க.

வெளியே வந்து திரும்பக் கிழக்குக் கடற்கரைச்சாலைக்கு வந்து சேர்ந்தோம். நாப்பத்தியஞ்சு ரூபாய் சுங்கம் கட்டிட்டு அதை நியாயப்படுத்த வேணாமா? இன்னும் கொஞ்சதூரம் (பதினைஞ்சு கிலோமீட்டர் இருக்கும்)போனால் திருவிடந்தை ஆதிவராகன் இருக்கார். கோபால் இதுவரை பார்த்ததே இல்லைன்னு அங்கேயும் போனோம். (இந்தக் கோவிலைப்பற்றி ஏற்கெனவே எழுதியாச்சு) உள்பிரகாரத்தில் நமக்கு வலது புறம் ரங்கநாதர் சந்நிதி. சுவரோரம் பள்ளி கொண்டிருக்கார். ரொம்ப அழகான உற்சவர்.


ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி சமயம், மாலைநேரம் இப்படி எல்லாம் ஒன்னு சேர்ந்துருச்சு. கோவிலில் பயங்கரக்கூட்டம். இத்தனைபேருக்காக் கல்யாணக் கனவு? ஆனால் எல்லார் கழுத்திலும் மாலை இல்லையே.... சிலபேர் கொஞ்சம் வயசானவங்களாவும் இருக்காங்க.

ஒருவேளை......கல்யாணம் கல்யாணமுன்னு அலைஞ்சு, இப்போ இப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைக் கொடுத்துட்டியேன்னு சாமிகிட்டே சண்டைபோட வந்தவங்களாவும் இருக்கலாம்.

வரிசை எங்கே இருந்து ஆரம்பிக்குதுன்னு நான் ஆராயும் சமயம், கோபால் விடுவிடுன்னு கோவிலுக்குள்ளே நுழைஞ்சு போய்க்கிட்டே இருக்கார். பின்னாலேயே துரத்திக்கிட்டு ஓடினால் நாங்க போய் நின்ன இடம் கருவறைக்கு முன்னால். திவ்யமான அலங்காரம். ஆதி வராஹப் பெருமாள், இடது தொடையில் லக்ஷ்மியைத் தாங்கிக்கொண்டிருக்கும் மூலவர். வராஹத்தின் கொம்புப்பல் தங்கமா ஜொலிக்குது.

ஒருவிதக் குற்ற உணர்வோடு தரிசனம் ஆச்சு. இந்தப் பக்கம் நித்யகல்யாணப் பெருமாள் மாப்பிள்ளையா தினம் ஜொலிச்சுக்கிட்டே நிற்கிறார். சட்னு கிளம்பி வெளியில் வந்துட்டோம். 'என்ன இப்படிப் பண்ணிட்டீங்களே'ன்னா.... 'எனெக்கெப்படித் தெரியும்? உன்னைக் கூப்பிட்டுப்போய் தரிசனம் பண்ணிவச்சேனா இல்லையா'ன்றார்! 'ஆனாலும் நீங்க செஞ்சது சரியில்லை'ன்னு குற்றப் பத்திரிக்கை வாசிச்சுக்கிட்டே (எப்போதும்போல்) வீடுவந்தோம்.

சதங்கா கேட்டுக்கிட்டபடி தீபாவளி 2009 சிறப்புப் பதிவுக்கான இடுகை(யாகவும்) இது. இன்னும் ரெண்டு நாள் விழா பாக்கி இருக்கு.

அடுத்த இடுகையில் தொடரும்.

Thursday, October 15, 2009

உடை(ரை)யாடல் (நுணலும் தன் வாயால்.....)

"ஏம்மா எதாவது ஃபோன்கள் வந்துச்சா?"

"வராம? அதுபாட்டுக்கு நிறைய வந்துக்கிட்டுத்தான் இருக்கு."

"என்ன சமாச்சாரம்?"


"எல்லாம் தீவாளிக்குத் துணி எடுத்தாச்சான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க.

"அதுக்கு நீ என்ன சொன்னே?"

"எடுக்கணும். நாளைக்கு நீங்க ஊர்லே இருந்து வந்ததும் போகலாமுன்னு இருக்கேன்னேன்"

"நான் வர்றவரை நீ எதுக்குக் காத்துக்கிட்டு இருக்கணும்? நீயே உன் தோழிகள் யார்கூடவாவது போய் உனக்கு வேணுங்கறதை வாங்கிக்கோ."

"அதெப்படி? கடைக்குக் கூடவே வந்து , நான் வாங்குற அயிட்டத்தைப் பார்த்து இது என்னத்துக்கு? எனக்குப் பிடிக்கலை'' இப்படி எதாவது துஸ்க்குச் சொல்லிக்கிட்டேப் பக்கத்துலே நின்னாத்தானே எனக்கும் ஷாப்பிங் செஞ்சமாதிரி இருக்கும்?"

"அதுக்குத்தானே நான் இருக்கேன்:-)"

"சரி. பார்க்கிறேன். எனக்கும் ஒரு சால்வார்கமீஸுக்குத் துப்பட்டா வேணும்.

ரெண்டு நாள் கழித்து:

"தீபாவளிக்குத் துணி வாங்கியாச்சு. இனி என்னென்ன வாங்கணுமுன்னு ஒரு லிஸ்ட் போட்டுரும்மா "

"என்னது? தீவாளிக்குத் துணி ............வாங்கியாச்சா? எப்போ?"

"அதான் தோழிகூடக் கடைக்குப் போயிருந்தேன்னு சொன்னியேம்மா!"

"ஆமாம். ரெண்டு மூணு சால்வார் கமீஸ் துணிகளும் ரெண்டு புடவையும்தான் வாங்குனேன். நீங்கதான் அதைப் பார்க்கவே இல்லையே(-: "

"நேரம் எங்கே இருந்துச்சு? வந்ததுலே இருந்து ஒரே பிஸி. எங்கே அதையெல்லாம் கொண்டு வா...."

" ரொம்ப சிம்பிளா எடுத்துட்டே போல இருக்கே. என்ன புடவை இது?
நல்லா க்ராண்டா ஒரு பட்டுப்பொடவை வாங்கிக்கிட்டு இருக்கலாமுல்லே?"

"அப்டீங்கறீங்க? இருந்துட்டுப் போகட்டுமே. இது என்னமோ வல்கலம் புடவையாம் சிலுக்குதானாம் ."

"இல்லெம்மா.....இன்னும் இதைவிட நல்லா க்ராண்டா ஒரு பட்டுப்பொடவை வாங்கிக்கிட்டு இருக்கலாமுல்லே?"

" எதுக்கு அதெல்லாம்? "

" முப்பத்தியஞ்சு வருசத்துக்குப் பிறகு தமிழ்நாட்டுலே தீபாவளி கொண்டாடப்போறே. நல்லதாத்தான் வாங்கிக்கயேன். கிளம்பு. நான் கூடவந்து எடுத்துத்தர்றேன் "

" இருங்க. எனக்கு ஒரு துப்பட்டா வாங்கிக்கணும். தேடிக்கிட்டே இருக்கேன். மேட்சிங்காக் கிடைக்கமாட்டேங்குது. இன்னிக்கு அந்த கமீஸைக் கையோடு எடுத்துக்கிட்டு வரப்போறேன். தி.நகர்லே பயங்கரக்கூட்டமாம். நாம வேணுமுன்னா எக்மோராண்டை, அல்சாமாலுக்குப் போகலாம்"

" போகும் வழியிலே அந்தக் காட்டன் இந்தியான்னு ஒரு கடை இருக்குல்லே அங்கே ஒரு அரைக்கைச் சட்டை எடுத்துக்கறேன். முழுக்கை போட முடியல. சென்னை வெய்யில் ஆளைத் தீய்ச்சுருது."

"ஆமாமாம். வாங்கிக்குங்க"

" அஞ்சே நிமிசத்துலே செலக்ஷன் ஆகிருச்சு எனக்கு. இந்த மூணு சட்டையிலே எது நல்லா இருக்கு பாரு."

" மூணையுமே எடுத்துக்குங்க"

" எதுக்கும்மா அனாவசியமா?"

" அது இல்லீங்க. இன்னிக்கு நான் கொஞ்சம் தயாளுவா இருக்கேன். அதான்...

"சட்னு மூணு எடுத்துக்கோன்னு சொல்லிட்டே.... என்ன ஆகப்போகுதோ?"

" அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க. ஜெனரஸா இருந்தாத் தப்பா?"

அல்சா மால்க்குப் போனால் அங்கொரு கடையில் இருக்கும் விற்பனைப்பெண், ' துப்பட்டா இருக்குங்க. ஒரு அஞ்சு நிமிசம் உக்காருங்க. நான் கொடோனுக்குப்போய் எடுத்தாறேன்' .

அசரீரி ஒலிக்குது. "சீக்கிரம் போயிட்டுவா. நீங்க உக்காருங்க"

"நாலுக்கு எட்டு (அடிகள்)லே எங்கே இருந்து குரல் வருது?"

"வீடியோ கேமெரா இருக்குங்க. நான் மேலே மாடியிலே இருக்கேன்."

"போச்சுடா! ட்ரயல் ரூமுலேயும் கேமெரா வச்சுருக்கீங்களா?"

" அதெல்லாம் இல்லெம்மா. இங்கே ட்ரயல் ரூமே இல்லை."

விற்பனைப்பெண் ரெண்டு துப்பட்டாக்களுடன் வேகமாத் திரும்பவந்து, 'இது ரெண்டும் சரியா இருக்கு. எது எடுத்துக்கறீங்க?'

"ஏங்க இது ரெண்டும் மேட்ச்சே ஆகலையே. வேற கலரால்லே இருக்கு."

"அது துணியைச் சிங்கிளாப் போட்டுப் பாருங்க ரொம்பக் கரீட்டா இருக்கும்"

" கொஞ்சம்கூட மேட்சே இல்லை. எனக்கு வேணாம்"

" இல்லேம்மா அது அது மேட்சிங் கலர்தான். நல்லப் பாருங்க" (சொன்னது அசரீரி)

" இவ்வளவு மோசமாவா என் கண்ணுக்குக் கலர் தெரியலை? இது கொஞ்சம்கூட மேட்சிங் இல்லை. வேணாங்க. ரொம்ப தேங்ஸ்."

"இதைவிட மேட்சிங் எப்படீ கிடைக்கும். நல்லாப் பாருங்க. விலைவேணுமுன்னாக் கொறைச்சுத்தாரேன்"

"நீங்க என்ன சொல்றீங்க? இதுவா மேட்சிங் கலர்? ஏங்க.... எப்படி இதுதான்னு சாதிக்கிறாங்க பாருங்க! "

"போகட்டும் விடு. கஸ்டமர்கிட்டே எப்படியாவது வித்துருன்னு முதலாளிகள் சொல்றதுதான்..... வா. வேற இடத்துலே பார்க்கலாம்."

" பக்கத்துலேயே அடுத்த கட்டிடத்துலே தோழி சொன்ன ஒரு கடை இருக்குங்க."


"ஆயியே.... க்யா ச்சாஹியே ஆப்கோ? நயா டிஜைன்ஸ் பஹூத் ஹை ஹமாரா பாஸ் "

" காலி, ஏக் துப்பட்டாச் சாஹியே. மிலேகா?"

"காலி துப்பட்டா நஹி ஹை. யே செட்க்கோ தேக்கியே. ஸப் நயா டிஜைன்ஸ்"

"சிந்தெடிக்வாலா நஹி ச்சாஹியே. குச் காட்டன் ஹை க்யா?"

"பஹூத் பஹூத்.....யே ஸப் காட்டன் ஹை. பூராக்கி பூரா நயா டிஜைன்ஸ்"

"இதெல்லாம் நல்லா மாடர்னா இருக்கேம்மா. இதுலே ரெண்டு மூணு எடுத்துக்கோ....இரு, நான் செலக்ட்பண்ணித் தர்றேன்"

"கட்டாயம் வேணுமான்னு இருக்குங்க....இப்பத்தானே கொஞ்சம் எடுத்தேன் அதையே இன்னும் தைக்கக் கொடுக்கலை."

"எல்லாத்தையும் சேர்த்து ஒன்னாவேக் கொடுத்துறலாம். யே ஸப் பேக் கீஜியே. ஏம்மா...பிடிச்சிருக்குதானே?"

" சரி. உங்க இஷ்டம்"

" இன்னும் துப்பட்டா வாங்கலையேம்மா. வேற கடையைப் பார்க்கலாமா? "

" பரவாயில்லைங்க. இப்போ வீட்டுக்கேப் போகலாம். இன்னொருநாள் துப்பட்டா வாங்குனா ஆச்சு"

(மனசுக்குள், ஒன்னு ரெண்டு.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அஞ்சு(தான்) ஆச்சு இதுவரை.)

வீட்டுக்குத் திரும்பிவரும் வழியில்

"ஒருவழியாத் துணிமணி ஆச்சு. இன்னும் வேறென்ன வாங்கணும்?"

"சரியாப் போச்சு. உங்க ஆசைதான் இன்னும் நிறைவேறலை!"

எனக்கொன்னும் ஆசைன்னு இல்லையேம்மா.. என்னன்னு சொல்லேன்?

"அதாங்க கிராண்டா எனக்கொருப் பட்டுப்புடவை வாங்கித்தரணுமுன்னு சொல்லிக்கிட்டே இருந்தீங்களே அந்த ஆசைதான்!"

" ம்..."

" ஏங்க பட்டுப்பொடவைக்கு நாளைக்கு வேணுமுன்னாப் போகலாமா? அப்படியே கையோட ஒரு துப்பட்டா வாங்கியாறனும்.


"தி நகர் கூட்டம் பார்த்து உங்களுக்குப் பயமா இருக்குமேங்க. பேசாமக் காஞ்சீவரம் போயிறலாமா?"

"பயமா? எனக்கா? .........அப்ப.............துப்பட்டா?"

"அது அப்படியே இருந்துட்டுப் போகட்டும். காரணமே இல்லாமக் கடைக்குப்போனா நல்லாவா இருக்கும்? இரையும் வேணும்தானே? "



அனைவருக்கும் இனிய தீபாவலி(?) க்கான வாழ்த்து(க்)கள்.

Wednesday, October 14, 2009

PITக்குப் பொம்மை

மக்கள்ஸ்,

இந்த மாசப் போட்டிக்கு எதை அனுப்பலாம்?


(வால்நட்) கொட்டைக்குள் இருக்கும் குடும்பமா?


பேஸ்பால் ஆடும் பூனையாரா?
குடும்பத்தைக் கட்டி இழுக்கும் பூனையா ?


கிளியோவா?


'சீனா இந்தியா பெஹன் பெஹன்' பொண்ணா?

என் சாய்ஸ்: அம்மாப்பூனை:-)

Monday, October 12, 2009

ஆடல் காணீரோ.................

ரெண்டு மூணுமுறை எப்படியோ தவறவிட்டுட்டேன். இந்தமுறை 'உன்னைவிட மாட்டேன்'ன்னு முன்பதிவுக்காகத் தொலைபேசிக்கலாமுன்னா..... தொடர்பே கிடைக்கலை. முன்வைத்த 'காலை' பின் வைப்பேனோ? நாரத கான சபாவுக்கு நேரில் ஆஜர். எதானாலும் முன்வரிசை டிக்கெட்தான் எடுக்கப்போறேன். முடிவோட போனால்....கவுண்டரில் ஆளே இல்லை. ஆஃபீஸுக்குப் பாய்ஞ்சேன்.

"தொலை பேசிக் கெட்டுக்கிடக்கா என்ன?"

" இல்லையேம்மா.... முதலில் உங்க 'கால்' உள்ளே போயிட்டு அங்கே இருந்துதான் இங்கே வரும். பொதுவா அங்கே யாரும் இருக்கமாட்டாங்க காலை வேளைகளில்.... இப்போக்கூட ஒருத்தர் கூப்புட்டாரே... என்னிக்கு டிக்கெட் வேணும்? யாரோட ப்ரோக்ராம்?"

"சனிக்கிழமை நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்யணும். நர்த்தகி.........."
('தடக்' பழம் நழுவிப் பாலில் விழுந்தது.)

"அன்னிக்கு ஆல் ஆர் வெல்கம் தாம்மா."

டாக்டர் எஸ் ராமநாதன் அவர்களின் நினைவுக்காக அவர்கள் குடும்பம் நடத்தும் நிகழ்ச்சி(யாம்). எனக்கு இப்போப் பிரச்சனை என்னன்னா.... முதல்வரிசையில் போய் உக்காரணும். யார் தலையும் மறைக்கவே கூடாது! (படமெடுக்க பேஜாராப் போயிருதே)

சீக்கிரமாவேக் கிளம்பிப் போனோம். மீ த ஃபர்ஸ்ட்...அரங்கில் நுழையும் முதல்நபருக்கு ஏதாவது ப்ரைஸ் உண்டா?

டாக்டர் ரகுராமே நமக்கப்புறம்தான் வந்தாரோ? (பெயரை அப்புறம் விசாரிச்சுக்கிட்டேன், அவரிடமே) சரியா ஆறு பத்துக்கு ரகுராம் அவர்கள் மைக்கைப் பிடிச்சு மேடையில் போட்டுருந்த ரெண்டு நாற்காலிகளுக்கானச் சிறப்பு விருந்தினர்களை அழைத்தார். வழக்கமாக அக்டோபர் ரெண்டாம்தேதி நடக்கும் இந்த நினைவுநாள் விழா, தவிர்க்கமுடியாத சிலகாரணங்களால் இன்றைக்கு (மூணாம் தேதி) நடத்தப்படுகிறதுன்னும் சொன்னார். இவரும் ராமநாதன் அவர்களின் மருமகந்தானாம். (அட! அப்ப நம்ம கீதா பென்னட் வந்துருப்பாங்களோன்னு ....) போன வருசம் பாரதி மூவர் என்ற தீம். சுப்ரமண்ய பாரதி, கோபாலகிருஷ்ண பாரதி, சுத்தானந்த பாரதின்னு மூன்று பாரதிகளின் பாடல்களைக் கொண்டே நிகழ்ச்சி நடந்ததாம். இந்த வருஷம் சிவன் மூவர். பாபநாசம் சிவன், நீலகண்டன் சிவன், ராமசாமி சிவன். இவர்களுடைய பாடல்களைக் கொண்ட நாட்டிய நிகழ்ச்சி. (மூவரில் முதல்வர் பெயர்தான் எனக்குத் தெரியும். மற்றவர்களைப் பற்றி? இனிமேல்தான் தெரிஞ்சுக்கணும்) முதலில் பேச வந்தவர் நாரதகான சபா செகரட்டரி திரு கிருஷ்ணசாமி.

ஆயிரத்து முன்னூறுபேருக்கு நிகழ்ச்சிக்கான அழைப்பும் விவரமும் போயிருக்கு. ஆனால்.......வந்திருக்கும் எங்கள் எண்ணிக்கை? துயரம் ததும்பும் குரலில் அவர் இதைச் சொன்னப்பத் திரும்பிப்பார்த்து அரங்கு எவ்வளவு நிரம்பியிருக்குன்னு சோதிக்க எனக்கு மனோதைரியம் வரலை(-:

நல்ல நிகழ்ச்சிகளுக்கு ஏன் மக்கள் வர்றதில்லை? டிசம்பர் ஜனவரி மட்டுமே பாட்டுக்கும் நடனத்துக்கும் சீஸன்னு எப்படித் தோணிப்போச்சு? இங்கே ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யணுமுன்னா, என்னதான் சுருக்கமாச் செஞ்சாலும் ஒரு இருபதினாயிரம் ரூபாய்கள் செலவாகும். இந்தச் செலவை நிகழ்ச்சி நடத்துபவர்களே செஞ்சு, ரசிகர்களுக்கு முற்றிலும் இலவச அனுமதி கொடுத்து வரவேற்கறாங்க.

(இதென்னவோ உண்மைதான். இப்போ இந்த நாலுமாசங்களில் நான் காசு கொடுத்துப் பார்த்த ஒரே நிகழ்ச்சி 'சாக்லேட் கிருஷ்ணா' மட்டுமே. நமக்கு நேரமும் ஆர்வமும் இருந்தால் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை (பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்வுகள்கூட) இலவசமாவே பார்த்தும் கேட்டும் அனுபவிக்க முடியும். இந்தக் கணக்கில் சென்னைவாசிகள் உண்மையிலேயேக் கொடுத்துவைத்தவர்கள்தான். (எனக்கு(ம்) நேரம் சிலசமயம் கொஞ்சம் டைட் என்றாலும், விட்டதைப் பிடிக்க வந்திருக்கேனேன்னு, விடாமப்போறேன்)

இவர் பேசப்பேசப் பேசாம இங்கே ஒரு மெம்பர்ஷிப் வாங்கிக்கலாமான்னு உணர்ச்சிவசப்பட்டதென்னவோ உண்மை.

அடுத்ததாக முக்கிய விருந்தாளி 1987 இல் வாக்கேயக்காரர்கள் அறக்கட்டளை ஆரம்பிச்சதைப் பற்றியும் அங்கே ராகங்கள் ஸ்ருதிகள் பற்றிய விளக்கவுரைகள் (இதுவரை 22 ஸ்ருதிகள் பற்றிய டெமோ நடந்துருக்காம்) மற்றும் இன்னபிற இசை நுணுக்கங்கள் பற்றிய விவாதங்களில் கலந்துகொண்டு மூழ்கிமுத்தெடுக்க இசைக்கலைஞர்களும், முக்கியமாக இசையைக் கற்றுகொள்ளும் வித்தியார்த்திகளும் பங்கேற்கணுமுன்னு தன்னுடைய ஆதங்கத்தைச் சொன்னார். இன்னிக்கு என்னவோ 'க்ரீவன்ஸஸ் டே'யாப் போச்சு!
நர்த்தகிக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவிச்சார். மதுரைக்காரரான நர்த்தகியின் குரு தஞ்சை கிட்டப்பாப்பிள்ளை அவர்களிடம், குருகுலவாசமாகவே இருந்து நடனம் பயின்றவர் இவர். ஆஹா.... மதுரைக்காரருக்கு (திருவிளை) ஆடல் கைவந்த கலை இல்லையோ? கலைமாமணி விருது இவரைத்தேடி வந்தது ரெண்டு வருசம் முன்பு. பலவெளிநாடுகளில் நடனநிகழ்ச்சிகளை வெற்றிகரமாகத் தந்தவர்.
தங்கச் சரிகையும் வெள்ளைப் பட்டுமாப் ' பளிச்'ன்னு வந்து நின்ன நர்த்தகிக்குக் நல்ல களையான முகம். அலங்காரமும் தேவைக்கு அதிகமா இல்லாம நடுத்தரமா இருந்துச்சு. இவர் ஆண்டாள் கொண்டை போட்டுருந்தால் இன்னும் ரொம்ப நல்லா இருந்துருக்குமுன்னு மனசுக்குள்ளே எனக்கு ஒரு தோணல். தோழி சக்தியின் அறிவிப்புகளுடன் நடனம் தொடங்குச்சு. (சிகப்புக் கரையில் சரிகையுடன் சக்தியின் புடவையின் ஓரம் மட்டும் திரையினூடாகத் தெரிஞ்சது.)

சரவண பவ குகனே (மத்யமாவதி ராகம்,ஆதிதாளம்) அபிநயத்தில் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிவந்தத் தீச்சுவாலைகள் குளத்தில் விழுந்து தாமரைப்பூக்களாக ஆச்சு. அப்போது அலர்ந்த ஆறு பூக்களில் ஆறு குழந்தைகள், கார்த்திகைப்பெண்கள் அறுவர் குழந்தைகளை எடுத்து உச்சிமோந்துக் கொஞ்சித் தாலாட்டுகின்றனர். எல்லாம் அந்த மேடையிலேயே நடக்குது. பார்க்கப் பார்க்கப் பரவசம் என்றது இதைத்தான்.
முருகன் சிறுவனா இருந்து ஒளவையிடம் சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமான்னு கேட்டதை நான் 'நேரில்' பார்த்துருக்கேன்னு சொன்னா நம்பணும். கண்களில் மங்கும் பார்வையுடன், பசியால் வாடித் தள்ளாடி நடக்கும் ஔவை, குறும்புக்காரச் சிறுவன், பாட்டிக்குப் பழம்வேணும் என்றதும் கிளையைப் பிடித்து உலுக்கிப் பழங்களைச் 'சரசர'வென விழவைக்கும் லாகவம், பாட்டி, கீழே பொறுக்கிய பழத்தினை மண்ணை ஊதி ஊதித் தின்னும் பாவம் எல்லாம் ஹைய்யோ.... நானும் மரத்தடியில் நிக்கிறேனே!!! கொஞ்சம் விட்டுருந்தால் நானே கீழே பழம் பொறுக்கக் குனிஞ்சுருப்பேன்!! நொடிக்கு நொடி எப்படி அந்த முகபாவம் மாறுதுன்றதே அதிசயமா இருக்கு!

வாவா கலைமா(னே)தே............ தாமரைப்பூவில் அமர்ந்து வீணை மீட்டும் கலைவாணியாக..... அடடா..... பலவருசங்களாப் பயின்ற பரதத்தை, அதன் பண்பட்ட நிலையில் காண எனக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சது பாருங்க. ப்ராக்டீஸ் மேக்ஸ் பெர்ஃபெக்ட்ன்னு சொன்னாலும் தன்னை அந்த நடனக்கலைக்கே அர்ப்பணம் செய்துட்டாங்கன்னுதான் தோணுது.
ஹம்சத்வனி ராகம். அநேகமா நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச ஒரு பாட்டு. என்ன தவம் செய்தனை..................... யசோதா...............'அவனே' வந்து தன் அமுதவாயால் 'அம்மா'ன்னு அருமையாக் கூப்பிட்டுருக்கான். உலகில் யாருக்காவது இப்படிப்பட்ட அனுபவம் கிடைச்சுருக்குமா? அந்தப் பரவச நிலையில் அவள் என்னெல்லாம் உணர்ந்திருப்பாள்? குழந்தை கண்ணனின் குறும்புகள், அக்கம்பக்கத்தார் வந்து இவனைப்பற்றி ஓயாது 'கோள்' சொல்லும்போது(ம்) கோபிப்பதுபோல் காமிச்சுக்கும் தாயின் பெருமை இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.



இடமும் வலமும் பாதங்கள் தூக்கி ஆடும் 'நடராஜனின்' நிலை, நர்த்தகிக்குத் தண்ணீர்பட்ட பாடு போல! தடுமாற்றம் கொஞ்சமும் இல்லாமல் நிறைய நேரம் அசையாமல் நிற்க முடியுதே!

நடனம் முடிஞ்சதும் மேடையைவிட்டுக் கீழே வந்த நர்த்தகியை ரசிகர்களின் சின்னக்கூட்டம் பிடிச்சுவச்சுக்கிட்டது. எனக்கும் ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும் என்றிருந்தது. சொல்லிட்டேன்.
'அற்புதம்'

வீடு திரும்புனதும் இனிய நிகழ்வுகளை அசைபோட்டுக்கிட்டே ஒரு மின்னஞ்சல் அனுப்புனேன். உடனே அன்பாக ஒரு பதிலும் வந்துச்சு. ஒரு நாள் அவுங்க ரெண்டுபேரையும் சந்திச்சு அவுங்க நடத்தும் நடனப்பள்ளியைப் பற்றியும் விசாரிச்சுக்கிட்டு வந்து எழுதலாமுன்னு இருக்கேன். சென்னைவாழ்க்கையை அனுபவிக்காமல் விடறதில்லை என்றதுதான் இப்போதைய கொள்கை:-))))

நிறையப் படங்கள் எடுத்துட்டோம். மனசுக்கு நிறைவா இருந்தவைகளை உங்களுக்காக ஒரு ஆல்பத்தில் போட்டுருக்கேன்.


ஒரு அஞ்சரை நிமிட நடனத்தை' யூ ட்யூபில்' வலையேத்தலாமுன்னு மெனெக்கெட்டதில் அரைநாள் போயிருச்சு. பலன் பூஜ்யம்(-:

Tuesday, October 06, 2009

பட்டுக்குரலும் புள்ளிமான் குட்டியும்

" பட்டுப்பொடவை மாதிரிப் பட்டுக்குரல்"

ஓ எஸ். சொன்னது சரின்னுதான் சொல்லத் தோணுச்சு.' சக்தி மசாலா, கரூர் வைஸ்யா பேங்க்'ன்னு விளம்பரங்களில் எல்லாம் குரல் கொடுத்துருக்காங்களாம். பன்முகங்களில் ஒரு முகம் டிவி சீரியலில் கூடக் காட்சி கொடுத்துருக்கு, அதுவும் பாலச்சந்தரின் மின்பிம்பங்கள் கையளவு மனசு. ஹிந்தியையும் விட்டுவைக்கலை. 'சோட்டி ஸி ஆசா'ன்னு ஒரு சீரியல். ஆறு மொழிகளில் பாடுறாங்களாம். அதெல்லாம் கூட விட்டுறலாம்....... முக்கியமாச் சொல்ல வேண்டியது சுதா ரகுநாதனின் சிஷ்யை. சமஸ்கிரதத்தில் எம்.ஏ. பி.டெக் முடிச்சு ஈஷ்வர் எஞ்சிநீயரிங்லே வேலை. கட்டியங்கூறுனவர் ஓ எஸ் அருண்.
இடம் பாரதீய வித்யாபவன் ஹால். திரை உசந்தது. தீபிகா. 'சிக்'ன்னு சின்னப் பொண்ணு. பக்க வாத்யங்கள் கன்யாகுமாரியின் சீடப்பிள்ளையும் காரைக்குடி மணியின் சீடப்பிள்ளையும். ராஜீவ் வயலின் & மணிகண்டன் மிருதங்கம். எலெட்ரானிக் சுருதிப்பெட்டி முன்னால் வச்சுருந்தாலும் கீதா வரதராஜன் தம்பூரா.
நவராத்ரி கடைசி நாள். பொருத்தமான முதல் பாட்டு ஸ்ரீ சரஸ்வதி நமோஸ்துதே. அப்புறம் சிலபல பாடல்கள். தமிழ்ப்பாட்டு இன்னும் வரலையேன்னுச் சின்னதா ஒரு தவிப்பு. 'என்னை நீ மறவாதே...அங்கயற்கண்ணி' அருமை.

ஜிஎன்பிக்கு இது நூற்றாண்டு விழா. குருபரம்பரையில் கணக்குச் சொல்லணுமுன்னா எம் எல் வி, சுதா, தீபிகா இப்படி வரிசை போகுது.அவர் எத்தனையோ பாடல்கள் இயற்றி இருக்கார். அதுலே ஒன்னு பாடப்போறேன்னு சொல்லி 'ஸ்ரீசரணாம்புஜ' பாடுனாங்க. மங்களம் பாடுமுன் ஒரு அஷ்டபதி. தோழியிடம் சொல்வதுபோல் 'சகி' ன்னு ஆரம்பம். 'ஜெயதேவர் அஷ்டபதி மாதிரின்னா இருக்கு. அர்த்தம் தெரிஞ்சா இன்னும் நன்னா இருக்கும்' நினைவுக்கு வந்து தொலைக்குதே:-)

( ஐயோ என் தமிழ் சினிமாவே)


சென்னையில் யூத் ஃபெஸ்டிவல் (இசை & நடனம்) நடக்குதாம். அதையொட்டி ஆலாபனா ட்ரஸ்ட் நடத்தும் விழா இது. ஏழெட்டுநாட்களா நடந்துக்கிட்டு இருக்கு நாளுக்கு ரெண்டு வீதம். பூதலிங்கம் என்ற பெரியவர் இளைஞர் விழாப் பொறுப்பாளர்களில் ஒரு முக்கியப்புள்ளி.( எங்களுக்கு ரெண்டு சீட் தள்ளி உட்கார்ந்துருந்தார். போறவங்க வாரவுங்க எல்லாம் அவருகிட்டே ரொம்ப பவ்யமா நின்னு பேசுனதைக் கவனிச்சுட்டு, யார் என்னன்னு விவரம் சேகரிச்சேன். இல்லாட்டாதான் தலைக் குடைச்சல் வந்துருமே.... அதுபாருங்க, இளைஞர் அணிக்கு எப்பவுமே இளைஞரேத் தலைவரா இருக்க முடியாது) மணிகண்டா, அருமையா வாசிச்சேப்பா. ராஜீவ், ரொம்ப நல்லா இருந்ததுன்னு, தீபிகா நன்னாப் பாடுனே இப்படிக் கூப்புட்டுச் சொல்லி, ஊக்குவித்துக்கிட்டு இருந்தார். நல்ல ஊக்கம்தான்.

எவ்வளோ பெரிய பாடகர்....பந்தா ஒன்னுமே இல்லாம வளரும் கலைஞர்களைப் புகழ்ந்துதள்ளிக்கிட்டு இருக்கார் நம்ம ஓ.எஸ். அருண். எல்லாம் திரைக்குப்பின்னே! இவர் ஆலாபனா அறக்கட்டளையைச் சேர்ந்தவர். அடுத்த நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன் ஒலி ஒளி எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து, அதைக் கண்ட்ரோல் செய்யும் ஆட்களுடன் சேர்ந்து அமர்ந்து எல்லாத்தையும் ஒருமுறை சோதிச்சுட்டு மைக் பிடிச்சார் அருண்.

ரெண்டு வயசுலே இருந்தே நாட்டியம் கத்துக்க ஆரம்பிச்ச நடனக் கலைஞர் காவ்யலக்ஷ்மி. சுருக்கமாச் சொன்னால் காவ்யா முரளிதரன். நாங்க போனதே இவுங்க பெயரின் பின்பகுதிக்காகத்தான். ரெண்டு வருசமுன்பு நடந்த டிசம்பர் இசைவிழா சீஸனில் ராமாயண நாட்டியம் ஒன்னு மதுரை முரளிதரன் அவர்களின் தயாரிப்பில் பார்த்துட்டு வாயடைஞ்சு போயிருந்தேன். அதெல்லாம் அப்பவே எழுதியாச்சு. விடமுடியுமா? (இங்கே பாருங்க)

முரளிதரனின் மகளாக இருக்கணுமுன்னு அனுமானம். ரொம்பச் சரி. பதிமூணு வயசு இருக்கலாம். முயல் குட்டியும், ஒரு புள்ளிமான் குட்டியும் ஆடுனா எப்படி இருக்கும்? ஹைய்யோ..............துள்ளல், அமெரிக்கை, அழகு, அபிநயம் இப்படி எல்லாமே ஒன்னாச் சேர்ந்து எங்கள் கண்முன்னே ஆடுதேப்பா!!
புஷ்பாஞ்சலியில் ஆரம்பிச்சு, நடனத்துக்கு எடுத்துக்கிட்ட எல்லாப் பாட்டுகளுமேத் தமிழ்ப் பாட்டுகள். ஒவ்வொரு நடனத்துக்கும் முன்னுரையா முரளிதரன் அவர்கள் கொடுத்த விளக்கத்தில் நான் கவனிச்சது அந்த உச்சரிப்பு. துல்லியமா.... சொற்களை எப்படிச் சொல்லணுமோ அப்படி. இப்படி ஒரு திருத்தமான உச்சரிப்பில் தமிழைக் கேட்டே பலவருசங்களாச்சு. இவரும் மதுரைக்காரர்தான்! நட்டுவாங்கமும் இவரேதான். ஹப்பா..... என்ன ஒரு கம்பீரமான குரல்!!!!

பாட்டுகளைப் பாடுன மானஸி ப்ரஸாத் அவர்களைப் பற்றி ஒரே ஒரு சொல்தான் சொல்ல முடியும், அட்டகாசம். எங்கிருந்துதான் இப்படிப் பாடவும் உச்சரிக்கவும் கற்றுக்கொண்டார்களோ? ஏன்னு தெரியலை....என் மனசுலே சடார்னு பட்டது என்னன்னா..... முரளிதரனும் சரி, மானஸியும் சரி. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இல்லை என்பது! (உண்மையா இல்லையான்னு தெரிஞ்சவுங்க வந்து சொல்லுங்கப்பா) டி.எம் எஸ், எம் என் ராஜம் எல்லாம் மனசுக்குள்ளே வந்துட்டுப் போனாங்க.

தமிழ்நாட்டுலே அங்கங்கே பேச்சுகளையும், தெருக்களில் விளம்பரங்கள், தொலைக்காட்சியில் வரும் மக்களின் உச்சரிப்புகள், நிகழ்ச்சிகள் நடக்கும்போது திரையினடியில் ஓடிவரும் விளக்கக் குறிப்புகள் (எ.கா: மகளை பரி கொடுத்தவர்) இப்படிக் கேட்டும் பார்த்தும் தமிள் நல்லாத்தான் வாளுது. வாள்க தமிள்!னு நொந்துபோய் கிடக்கிறேன்(-:

ரசிகப்ரியா, சிவரஞ்சனி, ராகமாலிகா, கதனகுதூகலமுன்னு ராகங்களையும் கண்டசாபு, மிஸ்ரம்ன்னு தாளங்களையும், பதினெட்டு அக்ஷரம், முப்பது அக்ஷரமுன்னு தாளக்கட்டுகள் ஒவ்வொன்னும் விவரிச்சப்ப............ 'ஆ' ன்னு தொறந்த வாயை என்னால் மூட முடியலை.
மகா திரிபுரசுந்தரின்னு ஆரம்பமே வெகுஜோர். கங்கைத்தாயே வணக்கம் னு ஒரு பாட்டும் அதுக்குண்டான அபிநயமும். கார்முகில் வண்ணன் கருநீல வர்ணன் என்ற ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர் பாட்டுக்கு (இதுவரைக் கேட்டதே இல்லை) காளிங்கநர்த்தனமும் அப்படியே நம்மை இழுத்துக் கொண்டுபோய் கங்கைக்கரையிலும் கோகுலத்திலும் விட்டுருச்சு.

வயலினில் சுரேஷ் பாபு, மிருதங்கத்தில் கேசவன், வீணைக்கு வி.எல், நாராயணசுவாமி, தபேலா சந்திரஜித், வாய்ப்பாட்டு மானஸி ப்ரஸாத் இப்படி ரொம்பக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இசைக்குழு.

காவ்யாவுக்கு ஒரு பதிமூணு பதினாலு வயசு இருந்தாலே அதிகம். களங்கமில்லாத தெய்வீக அழகுள்ள முகம், அதில் மாறாத புன்சிரிப்பு, கவனமாகவும் அதேசமயம் இயல்பாகவும் அலட்டல் இல்லாமலும் ஆடும் பாங்கு. எதைச் சொல்ல எதைவிட? கடைசித் தில்லானாவின்போது மூக்கில் இருந்த நத்து கீழே விழுந்துருச்சு. குழந்தை எங்கே காலில் மிதிச்சுருமோன்னு என் கவலை. நல்லவேளை அப்படி ஒன்னும் நடக்கலை ( இதுக்குத்தான் சினிமா ரொம்பப் பார்க்கக்கூடாதுன்றது) அருண் அவர்கள் நடனத்தைப் பாராட்டிப் பூங்கொத்து கொடுத்தவுடன் அதை வாங்குன கையோடு 'சட்'னு குனிஞ்சு மேடையில் விழுந்துருந்த நத்தை எடுத்ததுகூட நடனத்தின் ஒரு பகுதியாத்தான் எனக்குத் தெரிஞ்சது.

இந்த முத்தைப் பெற்றெடுத்து நடனக்கலையில் சிறந்தவரா ஆக்குன நடனமணிகள் முரளிதரன் சித்ரா தம்பதியினருக்கு நம் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்து(க்)களையும் நம்ம துளசிதளத்தின் மூலம் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இந்த அபூர்வ நிகழ்ச்சியைக் காண நமக்கு ஒரு வாய்ப்பும் கொடுத்த ஆலாபனா அறக்கட்டளை அருண் அவர்களுக்கு நம் நன்றி. ( ஓ.எஸ்.ன்னு நீங்க சொல்றது எனக்குக் கேக்குது. மைக் எப்போ என் கைக்கு வந்துச்சுன்னு கேக்கப்பிடாது...ஆமாம்)


பலவெளிநாடுகளிலும் நடன நிகழ்ச்சி கொடுத்துருக்காங்க, நம்ம நியூஸி உட்பட. அங்கே கலைஞர்கள் யார் வந்தாலும் ஆக்லாந்து, வெலிங்டனோடுதான். நம்மூரான கிரைஸ்ட்சர்ச்க்கு அபூர்வமா ஒருத்தர், ரெண்டுபேர் வர்றதோடு சரி(-:

எங்கூர்லே கூட்டமே இல்லையே....... அதுதான் எங்களுக்குப் ப்ளஸும் மைனஸும்.



டிஸ்கி: கலை நிகழ்ச்சிகள், கோவில்கள் பற்றித்தான் அதிகமா எழுதப்போறேன். என்னடா.... ஊர்சுத்தறாளேன்னு நினைச்சுக்காதீங்க. முப்பத்தியஞ்சு வருசமா விட்டதைப் பிடிக்கணுமுல்லே? இல்லேன்னாக் கட்டை வேகாது:-)

Monday, October 05, 2009

லோகமாதா...எழுதவச்சுட்டியே.............

மெய்யாலுந்தாஞ் சொல்றேன்....மேட்டர் அதுவாக் கிடைச்சது. சென்னை வந்ததில் இருந்து ஏதோ காணாததைக் கண்டமாதிரிக் கோவில் கோவிலாப் போறதும் கலைநிகழ்ச்சிகளைப் பாக்கறதும், இடையில் கிடைக்கும் கொஞ்சூண்டு நேரத்தில் ஒன்னும்பாதியுமா ஆக்கிப்போட்டுட்டுப் பதிவு எழுதித் தமிழ்ச்சேவைப் பிழியறதுமாப் போய்க்கிட்டு இருக்கு.


இன்னிக்கு அண்ணன் வீட்டுக்குப் போகலாமுன்னுப் பேசிக்கிட்டு இருந்தோம். எல்லாரும் பகல்தூக்கத்துலே இருப்பாங்களாம்..... நாலுமணிபோலத் தொலைபேசிட்டுக் கிளம்பலாமுன்னு....

எல்லாருக்கும் பாத்ரூமில்தான் புது ஐடியாக்கள் வருமாம். நம்மூட்டு ஆர்க்கிமிடீஸ்....... குளிச்சுட்டுவந்த கையோடு கணேசன் மாமாவைப் பார்த்துட்டு வரலாமுன்னு சொன்னாரா..... ஆஹா...... அதே ஏரியாவில் இருக்கும் பிரபலங்களையும் ஒரு பார்வை பார்த்துட்டு வந்துறலாமே.....

பதிவுலகப் பிரபலத்துக்கு ஒரு 'கால்'. சமீபத்தில் நாலுவருசத்துக்கு முன்னால் போனது.. வழிவேற நினைவில் இல்லை. ரங்கா தியேட்டர் வந்தபிறகு சொல்லுங்கன்னார். சொன்னோம், போனோம் பார்த்தோம், பேசினோம், வந்தோம்.

எம்பத்திநாலு வயசான கணேசன் மாமாவைப் பார்த்தாச்சு. மாமி இன்னும் ஆக்டிவாதான் இருக்காங்க. சினிமாப் பார்க்கறது இப்போ அறவே இல்லையாம். ஒன்லி டிவி சீரியல்ஸ். மாலை ஆறுமுதல் ஸ்டார்ட்:-) அச்சச்சோ இன்னும் அஞ்சு நிமிசம்தான் இருக்கு. எஸ் ஆனோம்!

பார்க்கவேண்டிய முக்கிய புள்ளியைப் பார்க்கக் காரை விரட்டுனோம்.
ஆஞ்சநேயர் கோவில் எங்கேன்னு வழியில் வழி கேட்டதுக்கு, ஆட்டோக்காரர் சொன்னார் ரெண்டாவது லெஃப்ட் நாலாவது ரைட்டு. ஓக்கே...டன். எதிரில் ஒரு தெருமுனையில் 'லக்ஷ்மிநரசிம்ஹர் கோவிலுக்குப் போகும் வழி'ன்னு அறிவிப்பு. அடடே..... போனால் ஆச்சு. ச்சலோ.....

தெருமுடியும் இடத்தில் தேவிகருமாரியம்மன் கோவில் நியான் விளக்கில் பெயர் மினுக்கல். இடதுபக்கம் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மர் கோவில். வீடுபோல இருக்கே அசப்பில்! நாலைஞ்சு படி ஏறியதும் பெஞ்சுலே ஒரு சின்ன அண்டாவச்சுக்கிட்டுக் கோவில் பிரசாதம் விநியோகிக்க ஒருத்தர் தயாரா இருக்கார். கீழே ஒரு பெரிய ஹால். அங்கே ஒன்னுமில்லையேன்னு முழிச்சேன். 'அங்கே'ன்னு பார்வையை அவருக்கு எதிரே இருந்த மாடிப்படிக்கட்டை நோக்கிக் காமிச்சார். மாடியேறினோம்.

ஹைய்யோ.... என்னன்னு சொல்வேன்!

முதலில் ஸ்ரீசுதர்சனர் சந்நிதி. வலம்வரும்போது பின்பக்கச் சன்னலில் அவர் பின்பக்கம் நரசிம்மர்.(சிங்கை நினைவு வந்துச்சு) அடுத்துக் கொஞ்சம் பெருசா இன்னொரு சந்நிதி. கிட்டே போனதும்...............

பிரமாண்டமான நரசிம்ஹமும் மடியில் லக்ஷ்மியும். கருகரு, பளபளன்னு அலங்காரமான அழகுச்சிலை. தங்கக் காதுகள். இடது தொடையில் பட்டுப் பொடவைகட்டிய லக்ஷ்மி. படுக்கறதுக்குத்தான் ஃபோம் பெட் மாதிரி ஆதிசேஷன்ன்னு பார்த்தால் இங்கே உக்காந்துக்கர சோஃபாவும் அதே அஞ்சுதலை ஆதி சேஷன். நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்காதக் காட்சி. எங்கூர் போலவே கூட்டம்.....அதான் நாலே பேர்!

மூணாவதா இன்னொரு சந்நிதி. தன்வந்த்ரி. வலம்வந்து மூலவர் முன் இன்னொருக்கா நின்னோம். சொல்லமுடியாத அழகு. நெவர் எக்ஸ்பெக்டட்......
அவருக்கு நேர் எதிரே பெரிய ஜன்னல். என்னத்தைப் பார்த்துண்டு இருக்கார்? நானும் பார்வையைச் செலுத்தினேன். அழகான கோபுரம்!

ஓ...இது அடுத்ததா இருக்கும் மாரி! அங்கேயும் போகணும்.

இங்கே தரைமுழுசும் பளிச்ன்னு சுத்தம். மாடிஹால் முழுசும் மூணுசந்நிதிகளொடு அம்சமா இருக்கு. பட்டர்களும் நிதானமா ஆரத்தி காமிச்சுத் தீர்த்தம் சடாரி எல்லாம் பவ்யமாக் கொடுத்தார்கள். ஒரு பத்துவயசு பட்டரும் இருக்கார். படி இறங்கிவந்தால் பிரஸாதம் கிடைச்சது. புளியோதரையும் பானகமும். கீழ்த்தளத்தில் ஹாலில் பச்சைமாமலைபோல் மேனி உள்ளவனுக்குப் பச்சை நோட்டால் மாலை சாத்திக் கண்ணாடிப்பெட்டியில் நிக்கவச்சுருக்காங்க. பெருமாளும் தாயாருமாக் கல்வச்ச அலங்காரத்தில் இன்னொரு ஃப்ரேமுக்குள். தங்கமாளிகையில் சிலவருசங்களுக்கு முன்னால் இப்படி ஒன்னு பார்த்தேன். அப்போ வாங்கிக்க முடியலை. இப்போ? இப்பவும்தான் வாங்கிக்க முடியாதுன்னு நினைக்கிறேன். விலைவாசியெல்லாம் தாறுமாறாய் எகிறிக்கிடக்கே......

பெரிய சைஸ். கொண்டுபோறது கஷ்டம் = ச்சீச்சீ....இந்தப் பழம் புளிக்கும்.

பக்கத்துலே பத்தடியில் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில். உள்ளே நுழைஞ்சால் அங்கேயும் பெருமாள்! தீர்த்தம் சடாரி ஆச்சு. பிரசன்ன வெங்கடேசப் பெருமாள். அச்சு அசலா திருப்பதி அலங்காரம். பச்சைக் கல்பதக்கம் மின்ன ஜொலிக்கிறான். நின்ன திருக்கோலம். உற்சவர்களும் கொள்ளை அழகு. அடுத்து இருந்த சந்நிதியில் புள்ளையார். வலம்வரும்போது கால்விரலில் இடிச்சுக்கிட்டேன். கண்ணு தெரியாத கஷ்டம். கருங்கல் சரியாப் பாவாமல் தூக்கியிருக்குமுன்னு கண்டேனா?
(கவனமெல்லாம் எங்கே? பதிவுலே என்ன எழுதலாமுன்னா? புள்ளையார் கோச்சுண்டாரோ? )

அடுத்துள்ள பெரிய சந்நிதியில் கருமாரியம்மன். பெரிய சிலைக்கு முன்னால் வெள்ளி முகமூடியுடன் 'தல' மட்டுமுள்ள தேவி. ஆஹா.... கோபாலுக்கு, வெறும் தலைக்குண்டான கதையைச் சொல்லச் சொல்லும் வாய்ப்புக் கிடைச்சது. எத்தனைமுறை கேட்டாலும் மறந்துருவார். 'திருதிரு'ன்னு முழிக்கும்போது 'திரு'ப்பித் 'திரு'ப்பிச் சொல்லிக்கிட்டே இருக்கணும். டீச்சர் வேலைக்கான முக்கியத்தகுதி பொறுமை.

இந்தக் கோவிலில் துளசி மாடம் காலி. அதன் முன் ஒரு தொட்டியில் நான். எதிரே ஒரு பெரிய செந்தாமரை. அதில் நவகிரகங்கள். ரொம்ப நல்லா இருக்கு. கருமாரிக்கு முன் பெரிய கோபுர வாசலும் கொடிமரமும். இங்கேயும் ஒரு பக்கம் கண்ணாடிப் பொட்டிக்குள் பத்து ரூபாய் மாலையுடன் சாமி.

நாம் கொஞ்சம் முன்னாலே வந்துட்டோம். நாலாவது ரைட்டைக் கோட்டை விட்டுருக்கோமாம். நரசிம்ஹன் கூப்புட்டார். இந்தமுறை மிகச்சரியா லெஃப்ட்& ரைட் போட்டு ஹனுமனை அடைந்தோம். கூட்டமான கூட்டம். ஆனால் பிரச்சனையில்லை. ஆஜானுபாகுவா அவர் நிக்கும் உசரத்துக்கு எங்கே இருந்தாலும் அவர்பார்வையில் நாம் பட்டுருவோம். பட்டா(ச்)சு. கோதண்டராமர் சந்நிதி. கட்டம்போட்டப் புடவையில் தாயார்கள். அடுத்தபக்கம் வேணுகோபாலன். சந்நிதிக்கு முன்னால் கூட்டம். எட்டிப்பார்க்காமல் போகமுடியுதா? துலாபாரம் வச்சுருக்கு! எப்போலே இருந்து இதெல்லாம்?

குழந்தை உக்காரமாட்டேங்கறான். அம்மாக் கழுத்தைப் பிடிச்சுத் தொங்கறான். விளையாட்டுச் சாமானைக் கையில் கொடுத்தாலாவது சித்த உக்காருவானோன்னு தண்ணிபாட்டில் கொடுத்தால் தண்ணி காமிக்கிறான். கடைசியில் காலத்துக்கேத்தமாதிரி, செல்லைக் கொடுத்ததும் 'கப்சுப்.' எல்லாம்தான் இப்போ ரிமோட்டுடன் பிறக்குதுங்களே:-)

சின்ன மூட்டையில் அரிசியாம் அடுத்த பக்கம். புளியோதரைப் பிரசாதம் கிடைச்சது. வாசலில் பிரசாதம் தின்னு முடிச்சத் தொன்னைகள் நிறைந்து வழியும் ரெண்டு ஆளுயரக் குப்பைத் தொட்டி. கோவிலிலே உண்டியலைக் காணோம். கையில் வச்சுருந்த காசை என்ன செய்யறது? வீணாக்குவானேன்னு பூ வாங்கிக்கிட்டேன்.

இவ்வளவுதூரம் வந்ததுக்கு இன்னொரு கோவிலையும் பார்த்துட்டுப் போகலாமுன்னு சொன்னேன். இந்த ஊர்லேதான் தடுக்கி விழுந்தா ஒரு கோவிலுக்கு முன்னாலேதான் விழுவோம். காஞ்சிக்குப் போட்டியாக் கிளம்பி இருக்கோ? ஒரே ஒரு கோவில் ப்ளீஸ்ன்னு ராஜராஜேஸ்வரி. ஒரு காலத்துலே மின்சார ரயிலில் போகும்போது பார்த்துருக்கேன். தூரமாத் தெரியும். போகலாமுன்னு நினைச்சுக்கிட்டே வருசங்கள் முப்பத்திஏழோ எட்டோ ஓடிப்போச்சு.

(இதுதான் அந்த ஆன்மீகப்பூமியில் முதல்முதலா வந்த கோயிலுன்னு நினைவு. அப்புறம் ஆஞ்சநேயர் வந்து ......மக்களைத் தன்வசம் பண்ணிக்கிட்டார்)

வாயிலே இருக்கு வழின்னு 'வி'சாரிச்சுக்கிட்டுப் போய்ச் சேர்ந்தப்ப....உள்ளெ பூஜை நடப்பதற்கு அறிகுறியா மேளச் சத்தம் அல்லோகலப்படுது. கம்பி கேட் எல்லாம் மூடிவச்சுருக்கு. முன்மண்டபத்துலே ஒரு பத்துப்பதினைஞ்சுபேர் உக்கார்ந்துருந்தாங்க. கண்முன்னால் தரையில் நிக்கும் ஒரு அறிவிப்புப் பலகை.

கவனிக்கவும்

உள்ளே தரிசனத்துக்குச் செல்லுமுன் நோட்டீஸைப் படித்துவிட்டுச் செல்லவும்.

எங்கே நோட்டிஸ்? எந்த நோட்டீஸ்? சுத்துமுத்தும் பார்த்தேன், எங்கியாவது நோட்டீஸ் வச்சுருக்காங்களோன்னு. ஊஹூம்......
வாசலில் படிக்கட்டு அருகிலே ரெண்டுபக்கமும் சின்னதாக் குட்டியா ரெண்டு சந்நிதிகள். ஒன்னு பைரவர். இன்னொன்னு...? சரியாக் கவனிக்கலை..அங்கே ஒரு சின்ன ஜன்னல் வழியா அபிஷேகப் பொருட்கள் விற்பனை நடக்குது. நோட்டீஸ் எங்கேன்னு கேட்டால்..... முதலில் உள்ளேன்னார். அங்கே யாராவது விநியோகம் செய்வாங்களான்னதுக்கு தலையை ஆமாம் என்றதுபோலவும் இல்லை என்றதுபோலவும் ஆட்டுனார். நான் அறிவிப்புப் பலகையைக் காமிச்சு 'முதல்லே படிச்சுட்டுப் போன்னு சொல்லுதே. எதைப் படிக்கனும்'னு கேட்டுட்டுத் திரும்பினேன். இங்கே வாம்மா ன்னு கூப்பிட்டு அந்த கவுண்ட்டருக்கு மேலேயும், (நாங்க நின்னுக்கிட்டு இருந்த இடத்தில்) தூணுக்கு மேலேயும் இருக்கே அதான் நோட்டீஸ்ன்னார்.

பரிகார தலம். ஒவ்வொருத்தரும் தனித்தனியா அபிஷேகம் செய்யும் குங்குமம் வாங்கணும். ஒரு குங்குமப் பாக்கெட்டில் ஒருத்தருக்குத்தான் அர்ச்சனை. (ஒரே குடும்பமா இருந்தாலும் தனித்தனியா ஒவ்வொரு பேருக்கும் ஒன்னுன்னு வாங்கிக்கணுமாம். நோ கூட்டு (குடும்பம் )

இன்னொரு சின்ன போர்டில் இப்படி.!
அர்ச்சகர்களிடமும் பணியாளர்களிடமும் விவரம் ஒன்னும் கேக்கக்கூடாது.
போச்சுடா....

ஸ்வாமிப் பாதத்தில் புடவை, நகைகளை வச்சு ஆசீர்வதிச்சு வாங்கிக்கணுமுன்னா அடுத்தமாடியில் இருக்கும் ஸ்வாமிஜியைப் பார்க்கணுமாம். இதுக்கும் ஒரு நோட்டீஸ்:-)

இன்னொரு பெரிய போர்டில் சுவாமிஜி பூஜை செய்யும் நேரம் 8.30 முதல் 9.30. அபிஷேகப் பொருட்கள் கையில் இருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி. மற்றவர்கள் கொடிமரத்தின் அருகே நின்று தரிசிக்கவேண்டும்.

திடீர்னு மேளச்சத்தம் நின்னுச்சு. மண்டபத்தில் நாங்க இருந்த இடத்தில் எதிர்ப்பக்கம் ஒரு சந்நிதி சட்னு திறந்து அரைநிமிஷ நேரத்தில் சரேல்ன்னு மூடப்பட்டது. உள்ளே புள்ளையார். அதுக்கு அஞ்சாறுஅடி தூரத்தில் இன்னொரு சந்நிதி பட்னு திறந்து கால்நிமிஷ ஆரத்தி எடுத்தார்கள். அதுக்குமேலே கட்டி இருந்த மணியை டங்க் டங்க்ன்னு இழுத்து அடிச்சுக்கிட்டு இருந்தார் ஒருத்தர். துர்கான்னு எழுதி இருந்துச்சு .ஓ துர்கையான்னு கண்ணை அங்கே செலுத்துமுன் மேஜிக் ஷோவில் மனுஷனைப் பெட்டியில்போட்டு மறையவைக்க ஒரு கறுப்புத் திரை போடுவாங்க பாருங்க அதேபோல் சரசரன்னு ஒரு கறுப்புத்திரையை இழுத்து மூடிட்டாங்க. மணியை மட்டும் விடாம அடிச்சுக்கிட்டே இருக்காங்க. எனக்கோத் தலை இடி ஆரம்பமாச்சு.
டேவிட் காப்பர்ஃபீல்ட் இங்கே எங்கெ வந்தார்?

அதுக்குள்ளே வலதுபக்கம் ஒரு வரிசையில் மக்கள்ஸ் நின்னுட்டாங்க. கோவிலில் இடதுபக்கம் போய்த்தானே வலம் வருவோம். இங்கே என்னடா இப்படி......

வரிசையில் முன்னால் இருந்தவரிடம் எப்போ வரிசை நகருமுன்னு கேட்டேன். சாமி சாப்புடுதாம். ஆஹா......அந்த நிமிசம்வரை இது பதிவுக்கான மேட்டர்ன்னு நான் நினைக்கவே இல்லை. ஜஸ்ட் ஃப்ரெண்ட்லி விசிட்ன்னு கேமெராகூட எடுத்துக்காமப் போயிருந்தேன் (-:

இந்த மேஜிக் ஷோ நடக்கும் மண்டபத்தில் சுவரில் ஒரு கண்ணாடிச் சட்டம் போட்ட நோட்டிஸ் போர்டு. கோவிலில் விற்பனைக்கு இருக்கும் புத்தகங்கள். நடுவில் ஒரு பித்தளையால் ஆன அம்பாள் சிலை. எல்லாம் விற்பனைக்கு.
இதுக்குமேலே ஒரு பெரிய ஃபோட்டோ. ராஜகோபால். நிறுவனர், ராஜராஜேஸ்வரி ஆஸ்ரமம். இவர்தான் சுவாமிஜியாம்.

பதினைஞ்சு நிமிசக் காத்திருப்பு. கோபால் தோளில், ஷர்ட் துண்டு. ஆம்பளைங்கெல்லாம் மேல்சட்டையை எடுத்துறணுமாம். வரிசை நகர்ந்து முன்னால் போய் இடப்பக்கம் திரும்புனதும் குடலைப் பிடுங்குவதுபோல ஒரு துர்நாற்றம். அங்கே ஒரு கிணறு மூடிவச்சுருக்கு. பக்கத்திலே பாவம்....தன்வந்திரி சந்நிதி. இதுக்கு அவர் எதாவது மருந்து கண்டுபிடிச்சுத் தந்தாத் தேவலை. வாயையும் மூக்கையும் சேர்த்து இழுத்துப் பூட்டிக்கிட்டு ஒரு அவஸ்தையோடு அந்த இடத்தைக் கடந்தால் இடதுபுறம் ஒரு கொடிமரம். அதுக்கு முன்னால் மாடிப்படிகள், பித்தளைக் கவசத்தோடு. படிகளை ரெண்டாய்ப் பிரிச்சு நடுவில் ஒருகம்பித்தடுப்பு. முதல் படியில் ஒரு பெட்டி. உண்டியலோ? இல்லை. அதுக்குமேல் இப்படி எழுதி இருக்கு.


வெளியில் வாங்குன குங்குமம் குடும்பத்துக்குக் கேடு

குங்குமப் பாக்கெட்டை பிறிக்காமல் போடவும்

படிகளின் ரெண்டு பக்கச் சுவர்களில் நாம் பார்க்கும் உயரத்தில் ஒவ்வொருபடிக்கும் சின்னதா ஒரு கண்ணாடிச் சன்னல் மாடம் போல் அமைச்சு ஒவ்வொரு தேவி விக்கிரகமா இருக்கு. அதுக்குக்கீழே ஒரு ஸ்லோகம் விளக்கம்ன்னு எழுதிவச்சுருக்கு. கோவில் பணியாளர்களைத்தானே விவரம் கேக்கப்பிடாது. பக்தர்களைக் கேட்கலாமோன்னோ? கேட்டேன். இந்தப் பக்கம் இருக்கும் அதேதான் எதிர்ப்பக்கமுமாம். உத்துப் பார்த்தேன். ஆமாம். பிரதமையில் ஆரம்பிச்சு ஒவ்வொரு திதிக்கும் ஒன்னு. ஏறும்பகுதியில் சுக்லபக்ஷமும் இறங்கும் பகுதியில் க்ருஷ்ணபக்ஷமுமாக இருக்கு. பௌர்ணமிவரை ஏறி அமாவாசையில் இருந்து இறங்கணுமா?

பக்தர் என்னிடம் பேசிக்கிட்டே கையில் இருந்த குங்குமப் பாக்கெட்டைப் பெட்டியில் அப்படியே பிறிக்காமல் போட்டார்! அதையெல்லாம் எடுத்து ராத்திரி ஸ்வாமிஜி அவுங்க பெயரில் பூஜை செய்வாராம்.

எனக்கென்னமோ டென்பின் பௌலிங் செண்டர் நினைவு. நாம் வீசும் குண்டுப்பந்துகள் எல்லாம் திரும்பவும் நாம் நிக்கும் இடத்துக்கு வந்துருதுல்லே? சின்னதா ஒரு கன்வேயர் பெல்ட் இருக்குமோ பெட்டிக்கும் அபிஷேகப்பொருள் விற்பனைக் கவுண்ட்டருக்கும்? சீச்சீ இருக்காது. என்னதான் 'டெக்னாலஜி ஈஸ் கான் ஃபார் டூ மச்'ன்னு சொன்னாலும்.........

மனசே...அடங்கு .ப்ளீஸ் ப்ளீஸ்

ஆசாமி உள்ளுர் பக்தரா? ரெகுலர் விஸிட்டரா? கோவில் எப்போ கட்டுனது? போன்றவைகளுக்குப் பதில் சொன்னார். ஆமாம். ஆமாம். 38 வருசம்.
இவருக்கே முப்பது வயசுகூட இருக்காது. 28 இருக்கலாம்(கேக்கலை) போகட்டும்...நூறு ரூபாய் எனக்கு லாபம். தலபுராணம் விற்பனைக்கு இருக்கு.

வரிசை நகர்ந்து ஸ்ரீராஜராஜேஸ்வரியைப் பார்த்தோம்.லோகமாதா நிச்சிந்தையா உட்கார்ந்துருக்காள். இடது கையில் கரும்போ? பக்தர் இல்லைன்னார். கணுக்கணுவாத் தெரியுதேன்னேன்.

நமஸ்கரிச்சுட்டு சந்நிதியை வலம்வரமுடியாமல் கம்பித்தடுப்பு. நமக்கு வலதாய் ஒரு ஹால் அதுலே ஒரு அறை. அங்கே அறையின் ஓரமாச் சில விக்கிரங்களைவச்சு ரெண்டுபேர் (காவி உடுத்துனவர்கள்) மந்திரம் சொல்லிப் பூஜை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. மண்டபத்தில் சிலர் கண்களை மூடி நிஷ்டை(??)யில்.

எட்டிப்பார்த்துட்டு அமாவாசையில் இருந்து ஆரம்பிச்சுப் படி இறங்கிப் பிரதமை முடிச்சுக் கொடிமரத்தின் அருகில் நின்னேன். அங்கே இருந்து மேலே தேவியைப் பார்க்கக் கண்ணை ஓட்டினால்......சுத்தம். மறைந்திருந்து நம்மைப் பார்க்கிறாளாக இருக்கும். காலை நீட்டி அந்தப் பக்கம் இருக்கும் வாசல்வழியா வெளியே வந்தோம்.

பதிவர் ஒருவர் இந்தக் கோவிலைப்பற்றி முந்தி ஒருசமயம் எழுதுனது நினைவுக்கு வந்தது.

க்ளோபலாப் போகணுமுன்னு அவள் முடிவு செஞ்சுட்டா...யாராலே நிறுத்த முடியும்? லோகமாதா....... என்னை(யும்) எழுதவச்சுட்டியே.........நல்லா இரும்மா...நல்லா இரு.
படம்: அடையார் அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலில் நவராத்திரி விழாவில் விஷ்ணுதுர்கைக்கு தினம் ஒரு அலங்காரம் செஞ்சாங்க. தசரா தினம் ஸ்பெஷல் ஸ்ரீராஜராஜேஸ்வரி. அந்தப் படத்தை இணைச்சுருக்கேன். அப்படியே அந்தக் கோவில் கொலுப்படங்களும் உங்களுக்காக.



Thursday, October 01, 2009

கோயம்பேடு என்னும் திவ்யதேசத்துக்குப் போனேன்.

நம்ம பொன்ஸ்க்கு கல்யாணம் நடந்துச்சுப் பாருங்க, அப்ப அந்த ஹாலுக்குப் போகும் வழியில் ஒரு கோவில் மதில் சுவத்தைக் கடந்து போனோம். கொஞ்சம் பெரிய கோவிலாகத்தான் இருக்கும்போல. ஏற்கெனவே ரிஸப்ஷனுக்கு லேட். வழிதெரியாம இங்கேயும் அங்கேயுமா அலைஞ்சு, நாலைஞ்சுமுறை மலர்வனத்துக்கிட்டே எங்கேன்னு கேட்டுக்கிட்டேப் போய் சேர்ந்தது தனிக் கதை. வரும்போது பார்க்கலாமுன்னா மறுபடி லேட். இந்நேரம் கோவில் நடை அடைச்சுருப்பாங்க. இந்த முறை கோவில் நமக்கில்லை.

நம்ம கயலும் இந்தக் கோவிலைப் பற்றிக் குறிப்பிட்டு, அங்கே போய்வந்தேன்னு ஒரு பதிவில் எழுதி இருந்தாங்க. சரியா ரெண்டு வாரத்துக்கு முன்னால் இன்னொரு ச்சான்ஸ் கிடைச்சது. தோழி வீட்டுக்குப் போறோம். அங்கேதான் அதே ஏரியாவில்....... வழக்கம்போல் இந்த முறையும் வழிதவறி அங்கே இங்கேன்னு விசாரிச்சு(தோழிக்கு இந்தக் கோவில் தெரியாதாம்)போயிட்டோம்.
ஸ்ரீ குறுங்காலீஸ்வரர் கோவில். அம்பாள் பெயர் தர்மசம்வர்த்தினி. கோவிலுக்கு முன்னால் திருக்குளத்தையொட்டி ஒரு பதினாறுகால் மண்டபம். ஒரு தூணுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா வெளிச்சம் போட்டுக் குட்டியா ஒரு சந்நிதி. தூணில் இருக்கார் சரபேஸ்வரர். எனக்கு இந்தப் பெயரே புதுமையா இருந்துச்சு. அவர் சந்நிதியில் காலடியில் ஒரு பைரவர் நல்ல உறக்கத்தில். மண்டபத்திலும் ஒரு ஏழெட்டுப்பேர் உறக்கம்.
சரபேஸ்வர் & பைரவர்

மனுஷ்யர்கள் சிலர் சந்நிதி முன் உக்காந்து கண்ணைமூடித் தியானத்தில் இருந்தனர். சரபேஸ்வரருக்கு மலர் அலங்காரம். உண்மையில் எப்படி இருப்பார்ன்னு தெரியலை. (அப்புறம் கோவில் மதில் சுவரில் இருந்த படங்களைப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன்)

கோபாவேசமாக இருந்த நரசிம்ஹரைக் கட்டித் தழுவி அவர் கோபத்தைத் தணிக்கிறார் சரபேஸ்வரர். அச்சச்சோ.....வால் வேற இருக்கு! pets இருந்தா BP ஏறாதுன்றது நிஜம்தான்)

மண்டபத்துக்குப் பக்கம் கொட்டாய் போட்டு கல்லை உடைச்சு வேலை நடந்துக்கிட்டு இருக்கு.விசாரிச்சேன். புதுசா ராஜகோபுரம் கட்டப்போறாங்க நம்ம குறுங்காலீஸ்வரருக்கு. அன்னிக்கு மாளய அமாவாசை. மறுநாள் நவராத்ரி ஆரம்பிக்கப்போகுது. தினப்படி நிகழ்ச்சிகளுக்கான அறிவிப்பு பெரிய அளவில்.

பிரதான வாசலுக்கு நேரா அறம் வளர்த்தநாயகியின் சந்நிதி.மணி ஓசை ஒலிக்குதேன்னு அங்கே பாய்ஞ்சோம். சுமாரான கூட்டம். இளைஞர் ஒருவர் ரொம்ப அருமையா அம்மன்மேல் 'பதிகம்'(சரியான பதமா?) பாடிக்கிட்டு இருந்தார். எனெக்கென்னமோ சேந்தன் அமுதன் ஞாபகம் வந்துச்சு.

அசப்புலே பார்த்தால் அசல் கன்யாகுமரி, காந்திமதி போல நம்ம தர்ம சம்வர்த்தினி. பிரமிக்க வைக்கும் அலங்காரம். அவசரமா எங்கியோ புறப்பட்டதுபோல இடது பாதம் கொஞ்சம் முன்னோக்கி இருக்கு. தீபாராதனை முடிஞ்சதும், அர்ச்சகர்கிட்டே உள்ளே ஸ்வாமி லக்ஷ்மியான்னு (அசட்டுத்தனமாக்) கேட்டேன். (கருவறை வாசலுக்கு மேல் கஜலக்ஷ்மி கட் அவுட் இருந்துச்சுப்பா) இல்லையாம். கட் அவுட் யாரோ வரைஞ்சு வச்சுருக்காங்களாம். இருக்கட்டும் சாமிகளுக்குள் பேதம் ஏது?

கருவறையைச் சுற்றி வலம் வந்தோம். ரொம்பப் பழைய கோவிலா இருக்கணும். கட்டிட அமைப்பே கதை சொல்லுது. சுத்திமுடிச்சு இன்னொருக்கா அம்மாவைப் பார்க்கப் பார்வையை உள்ளே செலுத்தித் திரும்பினால், சின்னதா ஒரு பல்லக்கில் வெண்பட்டு உடுத்திப் புறப்படத்தயாராத் தனியா இருக்கார் அன்னை உற்சவமூர்த்தியாக. கிட்டக் குனிஞ்சுப் பார்க்க வாய்ச்சது.

வெளியே வரும்போது நமக்கு வலது பக்கம் நவகிரகங்கள். எட்டிப் பார்த்தால் ஒரு ஆச்சரியம். அடுக்கடுக்கான மேடை. உச்சியில் ஏழு குதிரை பூட்டுன தேரில் சூரியன் தன் தேவிகளுடன். அடுத்த படியில் மற்ற எட்டுப்பேரும். இதுவரை இப்படிப் பார்த்ததே இல்லை. ஆஹா.....

அம்பாளுக்கு இடதுபுறம் அடுத்த சந்நிதியில் நம்ம குறுங்காலீஸ்வரர். லிங்க ரூபத்தில் காட்சியளிக்கிறார். இவரை வலம் வந்தப்பக் கருவறைக்குப் பின்புறமும் பக்கச் சுவர்களிலும் அழகிய திருவுருவங்களாக ஞானேஸ்வர தக்ஷிணாமூர்த்தி, சங்குசக்ரதாரியாக மகாவிஷ்ணு. அவருக்கு நேரெதிரா உள்பிரகாரத்தில் மகாலக்ஷ்மி, பக்கத்துலே அந்த 'நால்வர்', விஷ்ணு துர்கை, ஞான சரஸ்வதி தொட்டடுத்து நாகர்மேடை. பிரகாரசுவற்றில் எல்லாம் சுதர்சன அஷ்டகம்,துர்கா சூக்தம், சிவப்புராணம்(சின்னதா ஒரு பகுதி) ஸங்காஷ்ட நாஸன கணேச ஸ்தோத்திரம் சலவைக்கல்லில் பொறிச்சு வச்சுருக்கு. ரெண்டு நிமிசம் நின்னு படிச்சால் புண்ணியம். தேடிக்கிட்டேன்.

அர்ச்சகரிடம் தலவரலாறு என்னன்னு விசாரிச்சால் வெளியே படம் இருக்குன்னார்! அலுவலக அறைக்குப்போனால் அங்கே யாருமில்லை. அதுக்குள்ளே நாயகி, மேளதாளம் முழங்க வெளிப்பிரகாரத்தைச் சுற்றிவந்து முன்னால் நின்னு பல்லக்குக் குலுங்க ஆடி நமக்கெல்லாம் அருள் செஞ்சாங்க. சேவிச்சுக்கிட்டோம். அப்புறம் அதிகாரியைத் தேடிப்பிடிச்சு கோவில்கதை சொல்லுங்கன்னேன். அவர் இங்கே பொறுப்பேத்து ரெண்டு நாள்தான் ஆச்சாம். 'நான் புதுசு. எனக்குத் தெரியலை. அர்ச்சகர்கிட்டே கேளுங்களேன்'ன்னார். (இந்த விளையாட்டுக்கு நானில்லை. கூகுளாண்டவர்கிட்டே கேட்டுக்கலாமுன்னு இருந்துட்டேன்.) படம் இருக்காமே. அதைப் படம் எடுத்துக்கவான்னு விண்ணப்பிச்சதுக்குச் சரின்னுட்டார். நம்ம காரியம் ஆச்சு:-)

ஸ்வாமிக்கு குசலவபுரீஸ்வரர் என்ற பெயரும் இருக்கு. லவனும் குசனும்(நமக்கெல்லாம் லவகுசான்னதும் சட்னு யாருன்னு புரிஞ்சுருது. தமிழ்சினிமா உபயம். இங்கே மாத்தி யோசின்னு குசலவன்னதும் இரட்டையரில் யார் மூத்தவர்னு மனசுலே ஒரு பிறாண்டல்) வந்து வணங்கிய ஈஸ்வரனாம்.


அரசன் சென்ற ரதம் பூமியில் புதைஞ்சு கிடந்த லிங்கத்தின்மேல் அழுந்தி, லிங்கம் குறுகிவிட்டதாம். அதனால் இவர் குறுங்கால் ஈஸ்வரன் ஆனாராம்.

ஒரு இடத்தில் ரெட்டையர்கள் பூஜிக்கும் படம் வரைஞ்சு இருந்துச்சு. வலப்பக்கம் தனியா ரெண்டு சந்நிதிகள். அண்ணாமலையார், குமாரஸ்தலமுன்னு சுப்ரமணியர். கோயிலில் பசுக்கள், கன்றுகள் இருக்கு. ஆனாலும் வியக்கத்தக்க வகையில் வெளிப்பிரகாரம் நல்லசுத்தமாவே இருக்கு. (அதுவும் இந்த ஏரியாவில்ன்னு சொன்னது கோபால்)

ஸ்ரீ ராமர் அனுப்பிய அஸ்வமேத யாகத்துக்கான குதிரையை, குசனும் லவனும் பிடிச்சு இரும்புவேலிக்குள் அடைச்சு வச்சுட்டாங்களாம். ( கோ= வேந்தன்) கோ அனுப்பிய குதிரைகளை (அயம்= இரும்பு)அயத்தினால் செஞ்ச பேடில் (பேடு = வேலி) அடைச்ச இடமாம் . கோயம்பேடு!

(அயோத்தியில் இருந்து வெளியேற்றப்பட்டக் கர்ப்பிணி சீதையை வால்மீகி முனிவர் தன் ஆசிரமத்துலே வச்சுக் காப்பாத்துனார்னு தெரியும். ஆனால் அவரோட ஆசிரமம் நம்ம பேட்டையிலா இருந்துச்சு? இப்படியெல்லாம் குண்டக்க மண்டக்கன்னுக் கேக்கப்பிடாது. கூத்தாடுன மனசுக்கு ஒரு அடி வச்சேன்)

எது எப்படின்னாலும் கோவில் ரொம்பப் பழசுன்றதை மறுக்க முடியாது. தமிழக அரசு, ராஜகோபுரத் திருப்பணிக்கு 81 லட்சம் கொடுக்குதாம். அப்ப மீதி? மக்கள் கைங்கர்யத்தால் நிறைவேறணும். வாசலில் அறிவிப்பு வச்சுருக்கு. (மன்னர்கள் அளித்த மானியமெல்லாம் ஸ்வாஹா....)

தோழி வீட்டுக்குப் போய்ச்சேர்ந்ததும் கோவில் இருக்கும் விவரம் சொன்னால்........'ஆஆஆஆஆஆ'ன்னு கேக்கறாங்க. கோவில் உள்ள விவரமே நியூஸி மக்கள் சொல்லித்தான் தெரியுதாம்:-)

இன்னொருநாள் அண்ணியிடம் தொலைபேசும்போது
தலைகொள்ளாப் பெருமையுடன் அளந்துக்கிட்டு இருந்தேன்.

"ஆமாம் பக்கத்துலேயே பெருமாள் கோவில் இருக்கே, அங்கே போகலையா?"

"ஙே ........................"