இந்த இடத்தை ஒரு ஊராக ஆரம்பிச்சு வச்சவர் ஒரு ஃப்ரெஞ்சுக்காரர்தான். அந்தக் காலத்தில் திமிங்கில வேட்டையாட வந்த Jean François Langlois இடம் அட்டகாசமா இருப்பதைப் பார்த்துட்டு இங்கே 'நம் மக்கள்' வந்து குடியேறலாமுன்னு ஃப்ரான்ஸ் அரசுக்குச் சேதி அனுப்பியிருக்கார். இப்ப மாதிரி இமெயிலா, இல்லை வாட்ஸப்பா ? கப்பல் மூலம் சேதி அங்கே போய் கொஞ்சம் பேர் கிளம்பிவர்றதுக்குள்ளே ஏற்கெனவே வந்து காலுகுத்திய ப்ரிட்டிஷ் செட்டிலர்ஸ் மவொரிகளுடன் வைட்டாங்கி ஒப்பந்தம் ( ஃபிப்ரவரி 6, 1840 வருஷம் )போட்டுக்கிட்டாங்க.
உண்மையில் ரெண்டு கூட்டத்துக்கும் ஒருவரையொருவர் தெரியாது. 50 மைலுக்கு அந்தாண்டை இருக்கும் சமாச்சாரம் எப்படித் தெரியுமாம், அந்தக் காலத்தில் ? நடுவிலே மலை வரிசை இருக்குல்லே ! அப்படியா ? உளவுத்துறைன்னு ஒன்னு இல்லையா என்ன ?
ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடற்படைக் கப்பலில் ( HMS Britomart under the command of Owen Stanley )வந்து சேர்ந்த ஓவன் ஸ்டேன்லி, இங்கே யூனியன் ஜாக் கொடியைப் பறக்கவிட்டு, இது ப்ரிட்டிஷ் பகுதின்னுட்டார்.
ஃப்ரான்ஸில் இருந்து செட்டிலாக வந்தவங்க ஆகஸ்ட் 17 ஆம் தேதிதான் வந்து இறங்கினாங்க. அதுக்குள்ளே இடம் கைமாறிப்போயிருச்சே! ஜஸ்ட் ஒரே ஒரு வாரத்துலே மிஸ்ஸுடு....
இவ்ளோ தூரம் கப்பலில் வந்த ஃப்ரான்ஸ் மக்கள் வேற வழி இல்லாம இந்த அக்கரோவாவில் செட்டில் ஆகிட்டாங்க. அங்கங்கே வீடுகளும் தெருக்களுமா ஆகிப்போச்சு. எல்லாத் தெருக்களுக்கும் ஃப்ரெஞ்ச் பெயர்தான். இந்த ரூ அந்த ரூன்னு.... ஃப்ரெஞ்சுக் காலனின்னு அவுங்களே சொல்லிக்கவேண்டியதுதான்.
ரொம்பப்பெரிய ஊருன்னு இப்பவும் சொல்லமுடியாது. இப்ப ஒரு தொள்ளாயிரம் பேர் வசிப்பாங்கன்னு நினைக்கிறேன். 2018 சென்ஸஸ்படி 756 பேர்தான். ஆனால் பயணிகள் கூட்டம் அதிகம் ! இப்பக் கோவிட் காரணம், நாட்டின் எல்லைகள் மூடி இருப்பதால் டவுனே ஜிலோன்னுதான் கிடக்கு :-(
வார்ஃப்க்குப் போய்ச் சேர்ந்தோம். கருப்புப்பூனை ரெடியா இருக்கு. நாம் முந்தி ஒரு சமயம் இதுலே போயிருக்கோம். ஆனால் இப்போ இதில் போகப்போறதில்லை. பெரிய கட்டமரன் வகை இது ! இப்போ இன்னும் டிஸைனை மாத்தி ரொம்பவே நவீனமா இருக்கு! இது ஒன்னேமுக்காலுக்குக் கிளம்பிரும். இந்த வகை டூரை 1985 லே யே ஆரம்பிச்சு வச்சது கருப்புப்பூனைதான், கேட்டோ !
நம்ம படகு Coast up Close, வார்ஃபின் இடதுபக்கம் நிக்குது !
ரொம்பச் சின்னதா இருக்கேன்னு ..... படகின் ஒரு பக்கம் உக்கார்ந்திருந்தவரிடம் இதுதானான்னு விசாரிச்சுக்கிட்டோம். அவர்தான் ஸ்கிப்பர். டோனி ன்னு பெயர். கம்பித்தடுப்பைத் திறந்தவுடன், ராமா ராமான்னு ராமனைத் துணைக்குக் கூப்பிட்டுக்கிட்டே கம்பிப்படிகளில் கீழே இறங்கிப் படகுக்குள் போனேன்.
டோனிதான் ஓனர் & ஆபரேட்டர். இவர் ரொம்ப வருஷம் இந்த ஏரியாவில் க்ரேஃபிஷ் பிஸினஸில் இருந்துருக்கார். இப்போ ஒரு பத்துவருஷமாத்தான் இந்த அட்வெஞ்சர் டூர் பிஸினஸ். ஏற்கெனவே மீன்பிடிப் படகாக இருந்த இதை வாங்கி, ஒரு வருஷமா வேண்டிய மாற்றங்கள் எல்லாம் செஞ்சுருக்கார். படகின் வயசு அம்பத்தியேழு ! ஆனால் பளிச்ன்னு இருக்கு! வயசே தெரியலை :-)
மூணு அடுக்குகள். பேஸ்மென்டுலே இருக்கை வசதிகள், கழிப்பறை எல்லாம் இருக்கு. இப்போ நான் நிக்கற இடத்தில் ரெண்டு தடுப்பாப் பிரிச்சு முன்னால் ரெண்டு பக்கமும் இருக்கைகள். உள்ளே ஒரு பத்துப்பேர் உக்காரும் வகையில் சுத்திவர இருக்கை பெஞ்சுகளும், நடுவிலே ஒரு பெரிய மேஜையும். மொட்டை மாடியில் பத்துப்பேர் உக்காரும் வசதி. முப்பதுபேர் வரை போகலாமாம்! (க்க்கும்.... முப்பது வந்துட்டாலும்........ )
அடுத்த ரெண்டாவது நிமிட், இன்னொரு தம்பதி வந்து சேர்ந்தாங்க. அப்புறம் அஞ்சாவது நிமிட் இன்னொரு ஜோடி. இன்றைக்கு புக்கிங் இவ்ளோதானாம் ! எல்லாம் சீனியர் சிட்டிஸன்ஸ். முதியோர்ப்படகுன்னு..... ரெண்டு மணிக்குக் கிளம்ப வேண்டியது பத்து நிமிட் முன்னாலேயே கிளப்பிட்டார் நம்ம டோனி. சொல்ல மறந்துட்டேனே... நம்ம படகின் பெயர் Wairiri . மவொரிப்பெயர். இங்லிஷில் ஆங்ரி வாட்டர்ஸ் !!! (யம்மாடீ..... கோபம் அதிகமோ ! )
எங்க கோடை ( ! ) காலத்தில் (நவம்பர் - மார்ச் ) நாளுக்கு ரெண்டு ட்ரிப், மற்ற மாதங்களில் தினம் ஒரு ட்ரிப்ன்னு ஓட்டறாராம். ஒரு பயணம் ரெண்டரை மணி நேரம் !
மதியம் போகும் பயணங்களில் ஸ்க்ரஃபி கூட வருவதுண்டாம். ரொம்ப ஃப்ரெண்ட்லி. உங்களுக்குப் பிடிக்கும்னு மகளின் பரிந்துரை காரணம்தான் இந்தப் படகைத் தேர்வு செஞ்சோம். இப்பப் பார்த்தால் அதைக் காணோம்! என்னன்னு விசாரிச்சேன். கூட்டம் ரொம்பவே குறைவுன்றதால் வரலையாம். நம் சகபயணிகளுக்கு இந்த ஸ்க்ரஃபி விவரம் தெரியாததால் 'ஙே'ன்னு முழிச்சாங்க. விடமுடியுமா ? மகளின் பயணத்தில் எடுத்த படத்தைக் காட்டினேன் :-) ஆஹா..... கப்புநாய் !
நாங்க நாலுபேர் பெரிய அறையிலும், கடைசியா வந்த ஜோடி முன்னறையிலுமா இருந்தோம். படகு சீராகப்போக ஆரம்பிச்சதும் நம்மவர் , வெளியே படகின் முன்பக்கத்துக்குப் போயிட்டார். ஒரு ஒன்னரை அடி அகல நடைபாதை இருக்கு. நானும் போய்ச் சேர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் மற்ற நால்வரும் இங்கே ! அப்புறம் டோனியும் வந்துட்டார். ஆட்டோ பைலட் மாதிரி படகு தானா ஓடிக்கிட்டு இருக்கு ! எனக்குக் கொஞ்சம் ஷாக் ஆனது உண்மை. ஆனால் அப்பப்ப ஒரு அஞ்சு நிமிட்டுக்கொருக்காப் போய்ப் போய் பார்த்துக்கிட்டுத் திரும்ப எங்களோடு வந்து விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தார். இவரேதான் நம்ம கைடும் கூட !
நல்ல வெயிலும் லேசான குளிர்காற்றுமா அருமைதான். சுத்திவர மலைகள் அரண்போல இருக்க நாங்க போய்க்கிட்டே இருக்கோம். அதோ கொஞ்ச தூரத்துலே ரெண்டு பக்க மலைகளுக்கிடையில் இருக்கும் இடைவெளி கொஞ்சம் கொஞ்சமா விரிவடைஞ்சுக்கிட்டே போகுது..... இதைத் தாண்டினால் நாம் ஓப்பன் ஓஷனில் இருப்போம். அங்கங்கே வெவ்வேற படகுகளும், வாட்டர் ஸ்கூட்டர்களும், மரைன் டிபார்ட்மென்ட் படகும் போய்க்கிட்டு இருக்குன்னாலும் நல்ல இடைவெளி உண்டு.
கடற்பறவைகளுக்குப் பஞ்சமே இல்லை..... சின்னச் சின்ன வீடியோ க்ளிப்புகளும் படங்களுமா என் நேரம் ஓடிக்கிட்டு இருக்கு !
படகுத்துறையில் இருந்து கிளம்பிய முக்கால் மணி நேரத்தில் திறந்தவெளிக்குள் வந்துருந்தோம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீரைத்தவிர வேறொன்னுமே இல்லை. அப்பதான் சில வருஷங்களுக்கு முன்னால் தாரணி என்ற பாய்மரக்கப்பலில் இந்தியக் கடற்படைப் பெண்கள் ஆறுபேர் , 165 நாட்களில் தனியாக உலகம் சுத்தியது நினைவுக்கு வந்துச்சு. அப்போ நமக்கும் அவுங்களை சந்திக்க ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சதுன்னு சொல்லி இருந்தேனோ ? மொத்தம் நாலே நாலு ஸ்டாப். அதுலே நியூஸியும் ஒன்னு !
வெளியே வந்தவுடன் வலப்பக்கம் திரும்பினார் டோனி. கடலுக்குள் இருந்து எழுந்து நிக்கறது போல இருக்கும் மலைத்தொடர். உண்மையில் இது எரிஞ்சு அணைஞ்சுபோன எரிமலைகளின் மிச்சம். Extinct volcanic crater.
ஒரு மலையை வெட்டிப் பார்த்தால் எப்படி இருக்கும் உள்ளே ? இதோ இப்படித்தான்.... அதுவும் எரிமலை பாருங்க....
பெரிய அளவில் இருப்பதைத்தவிர ச்சின்னச் சின்னத் தீவுகள் போல அங்கங்கே.... கீழே இருக்கும் மலைகளின் முகடுகள் ! இதில் ஒன்னு, கடற்பறவைகளுக்கான பப்ளிக் டாய்லெட் ! சொல்லி வச்சாப்போல எல்லோரும் இங்கே வந்து 'போயிட்டு' வெள்ளையடிச்சு வச்சுருக்குதுகள்.
ஒரு பெரிய கற்பாறைக்குவியல் (! ) அசப்புலே பார்த்தால் நம்ம ரஜ்ஜு மாதிரியே தெரிஞ்சது எனக்கு ! பூனை நிமிர்ந்து உக்கார்ந்துருக்கோ !
ஒரு யானை கூட தண்ணீர் குடிச்சுக்கிட்டு இருக்கு ! நான் எடுத்த படத்தைவிட மகளின் படம் ரொம்ப நல்லா இருக்குன்னு இரவல் வாங்கிக்கிட்டேன்.
PC: My daughter.
கடலில் போய்க்கிட்டே இருக்கும்போது ரெண்டு பந்துகள் மிதக்கும் இடத்தில் படகை நிறுத்தினார் டோனி. அதுலே கட்டி இருக்கும் கயிறை, ஒரு தொரட்டிக்குச்சியால் எடுத்துட்டுக் கயிறை நாம் கிணத்தில் தண்ணீர் இழுக்கறதைப்போல இழுக்க ஆரம்பிச்சாரா..... என்னவோ வரப்போகுதுன்னு பார்த்தால் ஒரு கம்பிக்கூண்டு வருது !
உள்ளே சின்னதும் பெருசுமா ரெண்டு க்ரேஃபிஷ், பிங்க் கலரில் ஒரு சின்ன நண்டு. டோனி, கூண்டுக்குள் கைவிட்டு அந்த சின்ன க்ரேஃபிஷ்ஷையும் நண்டையும் எடுத்துத் திரும்பக் கடலில் போட்டார். குழந்தைப்புள்ளைகளைப் பிடிப்பது குற்றம் இங்கே, மீன் பிடிக்கும்போதும் ஒரு குறிப்பிட்ட நீளம் இல்லாதவைகளைக் கடலில் / ஆற்றில் திருப்பிப் போட்டுடணும். பெரிய க்ரேஃபிஷ் (இதுக்குத் தமிழில் என்ன பெயர் ? ) எடுத்துப் பார்த்தால் அது ரெண்டா உடைஞ்சுருக்கு. உள்ளே ஒன்னுமே இல்லை. வெறும் ஓடு ! 'எனக்கு முன்னாலேயே யாரோ முழுங்கிட்டுப் போயிட்டாங்களே 'ன்னு சொல்லி அதையும் கடலில் வீசிட்டுக் கூண்டைத் திரும்பத் தண்ணீருக்குள் இறக்கினார் டோனி. க்ரேபிஷ் பிஸினஸ் அனுபவத்தையும் ருசியையும் விட முடியலை போல !
இந்த நேரம் பார்த்து நம்ம செல்ஃபோன் பவர் இல்லாமல் மண்டையைப் போட்டது..... என்னதான் படகு நின்னுருந்தாலும், தடக்கு தடக்குன்னு ஆட்டம் மட்டும் நிக்கலை. தண்ணீருக்குக் கனம் கூடுதலோ ? அடர்த்தியான திரவம்னு தோணுச்சு. ( உப்புக் கரைசலா இருக்கும், இல்லே ? )
மெள்ள படகின் உள்ளே போய் பவர்பேங்க் எடுத்துக்கிட்டு வந்து செல்லை உயிர்ப்பித்தேன்.
கொஞ்சதூரம் போனவுடன் இன்னொரு ரெண்டு மிதக்கும் பந்துகளை மேலே இழுத்து இன்னொரு கூண்டு மேலே வந்தது. அதில் கொழுத்த ரெண்டு பெரிய க்ரேஃபிஷ் ! ஆஹான்னு அவைகளை வெளியே எடுத்து வச்சதும் கூண்டு திரும்பத் தண்ணீருக்கடியில் போச்சு. இந்த வகை மீன் பிடிப்புக்கு, கூண்டுக்குள்ளே 'இரை' ஒன்னும் வைக்க வேண்டாமாம் ! ராத்ரி டின்னருக்கு ஆச்சுன்னு கையில் தூக்கிப்போய் படகுக்குள்ளே இருக்கும் பொட்டிக்குள் போட்டுட்டு வந்தார். இந்தவகை மீன்களை உயிரோடு கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் கொல்வது நியூஸியில் சட்டப்படி குற்றம்.
சின்னச்சின்ன குகைகள் மலைகளுக்கடியில்...... பெருசாவும் நாலைஞ்சு இருக்கு. எரிமலையின் குறுக்குவெட்டோ ? திறப்பு பெருசா இருப்பதில் நம்ம படகு உள்ளே போய் கொஞ்சம் நின்னுச்சு. எல்லோரும் க்ளிக் க்ளிக் க்ளிக்தான்.
இந்தக் குகையின் வாசல் மட்டும் இன்னும் சின்னதாக் குறுகி இருந்தால் நாம் இடாலி பயணத்தில் பார்த்த காப்ரித் தீவு Blue Grotto (Grotta Azzurra )மாதிரி இருந்துருக்கும். குட்டிப்படகில் அப்படியே படுத்தாவாக்கில் உள்ளே போகணும். இருட்டுக்குள்ளே போய் கண்ணைத் தொறந்தால் நீலநிறமும் ஜொலிப்புமா அது ஒரு சொல்லமுடியாத அழகு !
குகைக்குள்ளிருந்து வெளியே வந்து இன்னும் கொஞ்சதூரம் போனதும் மலைச்சரிவில் அங்கங்கே ஸீலயன்ஸ்கள் சோம்பலா படுத்து, வெயிலுக்கு உடம்பைக் காமிச்சுக்கிட்டு இருக்குதுகள். சின்னக்குட்டிகள் மட்டும் தண்ணீருக்குள்ளே போறதும் வாரதுமா ஒரு விளையாட்டு. கீழே பாறைகள் நீட்டிக்கிட்டு இருக்குமுன்னு ரொம்பக் கிட்டக்கப் போக முடியலை.
இன்னும் கொஞ்சநேரம் கடலுக்குள்ளே போய் சுத்திட்டுப் படகைத் திருப்பினார் டோனி. எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமே நாம் படகுத்துறைக்குப் போக !
பாய்மரக் கப்பல்கள் குகையாண்டை போய் நிக்குதுகள் ! இங்கே இப்படிப் பயணிகளைக் கொண்டுபோய் சுத்திக்காமிக்கும் பிஸினஸ் இப்போ ரொம்பவே பெருகிப்போயிருக்கு ! போதாததுக்கு 'ஸ்விம் வித் டால்ஃபின்ஸ்' வேற !
இந்தப் பகுதிகளுக்குன்னு மட்டுமே குட்டிக்கோழி சைஸில் இருக்கும் மஞ்சக்கண்ணு பெங்குவின்கள், ஹெக்டர் டால்ஃபின்ஸ்கள் உண்டு. எல்லாம் நம்ம அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே காட்சி கொடுக்கும்:-)
நமக்கு முந்தி ஒரு காலத்தில் இருந்த அதிர்ஷ்டம் இப்போ குறைஞ்சு போச்சுன்னு நினைச்சுக்கிட்டேன். பெங்குவின்ஸ் கண்ணுலே படலை. டால்ஃபின்கள் மட்டும் அங்கங்கே ....Bப்ளக் Bப்ளக்ன்னு தலையைக் காமிக்கிறதும் தண்ணீருக்குள்ளே பாயறதுமா..... ஒரு படம் கூட நல்லதா எடுக்க முடியலை. மகள் எடுத்தவைகளைப் பதிவில் சேர்த்துருக்கேன்.
கொஞ்சநேரம் உள்ளே போய் உக்காரலாமான்னு நினைக்கும்போதே..... டேஷ் வர்றதுமாதிரி ஒரு உணர்வு. போட்ட ரெண்டு மாத்திரையின் வேலைநேரம் முடிஞ்சது போல ! சட்னு உள்ளே போய் இன்னொரு மாத்திரையை வாயில் போட்டேன். லேசா மயக்கம் வர்றாப்லெ.....
அப்பப்பார்த்து.... அதோ அங்கே டால்ஃபின்னு சொல்லிப் படகின் வேகத்தைக் குறைச்சார் டோனி. எட்டிப்பார்க்கவும் முடியலை.... போயிட்டுப்போகுது.... நாம் பார்க்காத டால்ஃபினா ? 'நம்மவர்' எழுந்துபோய் க்ளிக்கிட்டு வந்தார்.
பத்து நிமிட்டில் அடங்கிருச்சு...... லைட் ஹவுஸ் கண்ணில் பட்டது..... படகுத்துறை வந்துருச்சுன்னு ஒரு ஆசுவாஸம்:-)
ஸ்க்ரஃபி வந்துருக்குன்னு தகவல் சொன்னார் டோனி:-)
இறங்குன ஸ்டைல் நினைவுக்கு வர, எப்படிடா ஏறப்போறோமுன்னு அடுத்த கவலை. இந்த மனசு இருக்கு பாருங்க..... ச்சும்மா இருக்காதே.... அதுக்கு எதாவது கவலையைத் தின்னக் கொடுத்துக்கிட்டே இருக்கணும்.
வார்ஃபின் இடதுபக்கம் போய்ப் படகை நிறுத்தி, மரப்படிகள் ஓரமா படகை இழுத்துக் கட்டினார் டோனி ! அப்பாடா..... படிகளில் ஏறிப்போயிடலாம். கம்பி பிடிச்சு ஏறும் சர்கஸ் வித்தை இல்லை :-)
டோனி வீட்டம்மா, ஸ்கரஃபி, அவனோட அம்மா ஃபேம் காட்சி கொடுத்தாங்க.
படகுத்துறையில் இருக்கும் கடைகளை மூடிக்கிட்டு இருக்காங்க. இயற்கையா சுத்திவர மலையும், பெரிய ப்ரமாண்டமான வட்ட நீச்சல்குளம் போலக் கடலும் அமைஞ்சதும், டால்ஃபின்கள் கூட்டமா வந்து இடம்பிடிச்சுருக்கு. மனுஷன் இதையே வச்சு யாவாரம் ஆரம்பிச்சுக் காசு பண்ணறான் பாருங்க ! என்ன இருந்தாலும் மனுஷனுக்கு இருக்கும் சாமர்த்தியம் வேற உயிர்களுக்கு இல்லை....
படகுத்துறைக்குப் பக்கமே சுத்தமான கழிப்பறைகள் இருப்பது வசதி ! போனமுறை நவநாகரிக டாய்லெட்ஸ் இருந்துச்சு... அதைக் காணோம்.....
இந்த பீச் ரோடுதான் மெயின் ஷாப்பிங் ஏரியா என்பதால் அங்கே போய் காஃபி குடிச்சுட்டுக் கிளம்பலாம். கார்பார்க் வரை நடக்க வேணாம். பீச் ரோடில் வேடிக்கை பார்த்துக்கிட்டே இரு. நான் போய் வண்டியைக் கொண்டுவரேன்னு 'நம்மவர்' போனார்.
மணி அஞ்சாகப்போகுது.... இந்த டவுனில் அஞ்சானா ஆட்டம் க்ளோஸ். கடைகளையெல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு இருக்காங்க. ரெஸ்ட்டாரண்டுகள் மட்டுமே எட்டுவரை திறந்துருக்கும். கிவியாட்கள் சாயங்காலம் அஞ்சரைக்கே ராச்சாப்பாடு முடிச்சுக்குவாங்க. அஞ்சரை முதல் ஆறரை வரை..... க்ரூஸ் கப்பல்கள் எல்லாம் வந்து போகும் இடம், இப்பக் கொரோனாவால் காத்து வாங்குது..... பிஸினஸ் ரொம்பவே டல்...... ப்ச்....
மேலே படம்.... போனபயணத்தில் எடுத்தது.
நமக்கு எப்பவும் எட்டரை மணிக்குத்தான் டின்னர். காஃபிக் கடையைத் தேடுனா .... எங்கே ? ஐஸ்க்ரீம் கடைதான் ஒரு தாய் ரெஸ்ட்டாரண்டில் இருக்கு. ஆளுக்கொரு ஸ்கூப் ஐஸ் க்ரீம் வாங்கி, கடலுக்கு முன்னால் உக்கார்ந்து முழுங்கிட்டுக் கிளம்பிட்டோம்.
ஹில்டாப்பில் ரெண்டு மினிட் ஒரு ஸ்டாப். அதுக்கப்புறம் நம்மூர் எல்லையில் இருக்கும் ஆஞ்சி கோவிலில் அடுத்த ஸ்டாப். இது ஒரு ஃபிஜி இந்தியர் வீட்டு வளாகத்தில் இருக்கும் 'கோவில்'. கதவு சும்மா மூடி இருக்கும். நாம் உள்ளே போய் கும்பிட்டுக்கலாம். சொந்தச் செலவில் ஆஞ்சியை ராஜஸ்தானில் இருந்து வரவழைச்சு ப்ரதிஷ்டை பண்ணி இருக்கார்.
நாமும் கும்பிட்டு முடிச்சு வீட்டுக்கு வந்து சேரும்போது ஆறே முக்கால் !
அந்த டேஷ் மருந்து வேலையைக் காமிக்குது. ஒரே தூக்கம் தூக்கமா வருது. கண்ணைத் திறக்கவே முடியலை. ரெண்டு நாள் தூங்கி எழுந்தேன். அப்பதான் 'நம்மவர்' சொல்றார்.... 'இப்படித்தான் இருக்குமுன்னு போட்டுருக்கான். அதான் நான் எடுத்துக்கலைன்னு......'
நல்லவேளை..... :-) :-)