Friday, November 30, 2018

ஹிந்து தர்மம், ஒரு மதமா?

முந்தாநேத்து   மாலை நம்ம  ஊரில் ஹிந்து ஸ்வயம்சேவக் ஸிம்போஸியம் நடந்தது.  'வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் இந்த கருத்தரங்குக்கு வருகை தர்றாங்க. நீங்க அவசியம் கலந்துகொள்ளணுமு'ன்னு அழைப்பு வந்தது.

மேலும் அன்றைக்குப் பகல் சாப்பாடு, விருந்தினருடன் சேர்ந்து சாப்பிடணுமுன்னு இன்னுமொரு கூடுதல் அழைப்பும்.  நம்ம இந்தியன் கம்யூனிட்டியில் முக்கியஸ்தர்களாக இருக்கும் நபர்களை அழைச்சுருந்தாங்க. (என்ன இருந்தாலும் நாம்தான், ஊரின் பழம்பெருச்சாளிகளாச்சே !)  பனிரெண்டரைக்கு லஞ்ச்.  புதுசாத் திறந்திருக்கும்  உணவகத்தில் (பிக்கானிர்வாலா) ஏற்பாடு. போயிட்டு வந்தோம்.


டாக்டர் மன்மோகன் வைத்யா, ஆர் எஸ் எஸ், புதுதில்லி,  திரு சௌமித்ரா கோகலே, ஹெச் எஸ் எஸ்,  யூ எஸ் ஏ வந்துருந்தாங்க. அஸ்ட்ராலியாவில் சிலபல நகரங்களில் கருத்தரங்கு நடத்திட்டு இப்போ நியூஸி  வந்துருக்காங்க.

அன்றைக்கு மாலை நடக்கும் கருத்தரங்கு சமாச்சாரம் 'Moving forward together with one voice'
நம்ம நியூஸியில் Hindu Swayamsevak Sangh New Zealand,  2007 இல் ஆக்லாந்து நகரில் ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருக்கு.  எங்க ஊருக்கு இப்ப இந்த வருஷம்தான் கிளை ஆரம்பிச்சுருக்காங்க. அதுலேதான் புள்ளையார் பண்ணும் வொர்க்‌ஷாப் போயிட்டு வந்து இங்கே போஸ்டும் போட்டேன். நினைவிருக்கோ?
மாலை ஆறுக்குக் கருத்தரங்கு நடக்கும் ஹாலுக்குப்போய்ச் சேர்ந்தோம். உள்ளூர் ஆக்டிவ் மெம்பர் திரு ஆன்ட்டனி, எல்லோரையும் வரவேற்றுப்பேசினதும், நியூஸி ஹெச் எஸ் எஸ் தலைவர் ஹனுமந்தராவ் (ஆக்லாந்துலே இருக்கார்) இங்கத்துப் பரிபாடிகள் எப்படி எங்கே நடக்குதுன்னு சொன்னார்.  எட்டு கிளைகள் இதுவரை நியூஸியின் நகரங்களில் ஆரம்பிச்சுருக்காமே!

அப்புறம்  நம்ம சௌமித்ரா கோகலே,  வெளிநாட்டு ஹிந்துக்கள், மொழி, மாநிலம் இப்படியெல்லாம் பிரிச்சுப் பார்த்து பேதப்படுத்திக்காமல் ஒற்றுமையா இருந்து அடுத்துவரும் தலைமுறைகளுக்கு நம்முடைய கலை, கலாச்சாரம், கடவுள் பக்தி இதையெல்லாம்  கடத்தி விடுவதன் முக்கியம் பற்றிச் சொன்னார்.
கடைசியாகப் பேசிய மன்மோகன் ஜி, சுய ஒழுக்கம், கட்டுப்பாடு இதெல்லாமும் இளைய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம், இளைஞர்கள், தங்கள் மதம் பற்றிய  அறிவை வளர்த்துக்கணும், ஹிந்துவாக இருப்பதில் ஒரு பெருமிதம் கொள்ளவேணும் என்றதோடு  இந்தியாவில் அஞ்சு வருஷத்துக்கொருமுறை ஹிந்து சம்மேளனம் நடக்குதுன்னும் சொன்னார். 1995 இல்  200 அங்கத்தினர்களுடன் ஆரம்பம்.  இப்போ கடந்த 2015 இல் நாப்பத்தியஞ்சு நாடுகளில் இருந்து  அறுபத்தி ஆறாயிரம் நபர்கள் கலந்துகொண்டார்களாம்!  ஹா....


'வசுந்தரா  பரிவார் ஹமாரா'ன்ற  சங்கப்பாடலை, தோழி வீணா ஜோஷி பாடுனாங்க.

பெரிய கூட்டமுன்னு சொல்ல முடியாது. ஒரு அறுபது பேர்தான்.  மக்கள் கேள்விகள் கேட்கத் தலைவர்கள் பதில் சொன்னாங்க.

அப்புறம்?  டின்னரும் அங்கேயே!  சப்பாத்தி, ஸாலட், ஜீரா ரைஸ், ஆலுமட்டர் கறி, தட்கா தால், ரவா கேஸரி....  தாராளம்!




மாசத்தின் இரண்டாம், நாலாம் ஞாயிறன்று  ஒன்றுகூடி நம் இளைய தலைமுறைக்கு நம்ம கலை, கலாச்சாரம், பாடல்கள், விளையாட்டு, கதை சொல்லல் இப்படி  நடத்துறதை நாம்  ஊக்குவிக்கணும்.

உண்மையிலேயே.... ஹிந்து என்றொரு மதமே ஆரம்பத்தில் இல்லை. வெள்ளைக்காரன் வச்ச பெயர்தான் இது.  ஹிந்து என்பது மதம் இல்லை. இது ஒரு வாழ்க்கை முறை.  சனாதனதர்மம் விதித்த வழியில் நடத்தும் வாழ்க்கை. ஹிந்து தர்மம் என்று கூட இனி சொல்லிக்கலாம்.


இந்த வாழ்க்கை முறையைப் பார்த்து அதில் ஈடுபட்டு ஹிந்துமதக் கடவுளர்களை வழிபடும் மற்ற நாட்டினரும் உண்டு. 

பொதுவா சஹிப்புத்தன்மை அதிகம் உள்ள  மதம்  என்பதால் எல்லாவிதமான கொடுமைகளும் மற்ற மதத்தினரால்  ஹிந்துக்களுக்கே நடக்குதுன்றது உங்களுக்கே புரியும்.  காய்ச்சமரம்தான் கல்லடி படும், இல்லே?

நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்றங்களும்....  பாரபட்சமில்லாத ஆட்சியை வழங்க வேண்டிய  அரசும் கூட  ஹிந்து மதத்தைத் தவிர  மற்ற மத விவகாரங்களில் தலையிடுவதில்லை..... இளிச்சவாயர்கள், ஏமாத்த எளிதானவர்கள் என்ற  காரணம் ஒன்னு போதாதா?

சமீபகாலமாக இந்த மதமாற்றம், நாத்திகம் பேசும் கும்பல்கள் (இதிலும் ஹிந்து மதக் கடவுளர்கள் மட்டுமே இல்லாமல் ஒழிஞ்சுட்டாங்க. மற்ற மதத் தெய்வங்களுக்கு ஆபத்து ஒன்னும் இல்லை) எல்லாம் அதிக அளவில் இந்தியாவில் பெருகி, ஹிந்துக்கள் சிறுபான்மையராகும் அளவுக்குக் கொண்டு போயிருப்பதில் மனம் கசந்து கிடக்கும்  எனக்கு இந்த ஹெச் எஸ் எஸ்  தேவையானதொன்றாகத்தான் தெரியுது!

இப்படி எழுதினதாலே  மற்ற மதத்தை இழிவு படுத்தலை. அவரவருக்கு அவரவர் மதம் உயர்வு. அதுக்காக மற்ற மதங்களைத் தாழ்வாக நினைக்க வேண்டிய  அவசியம்  இல்லை.  கடைசிப்புள்ளிவரை யோசிச்சுப்பார்த்தால்  மனிதர் யாவரும் ஓரினமே!  அனைவரும் மனித தர்மத்தைக் கடைப்பிடிப்போம்.


Wednesday, November 28, 2018

கொடுப்பினை......... !!!!! (பயணத்தொடர், பகுதி 39 )

அடுத்து வந்த சில நாட்களில்  பதிவுலக நண்பர்கள் சந்திப்புதான் முக்கியம். நண்பர் அருள்நம்பியும் அவர் மனைவியும் ஸ்வீட் & காரத்தோடு நம்மை லோட்டஸில் வந்து சந்திச்சாங்க. பேச்சு சுவாரஸியத்தில் படங்கள் எடுக்கவே மறந்துட்டேன் என்பதே உண்மை. கடைசியில்  ஒரு செல்ஃபியும், சில படங்களுமா.....   குடும்பம் இருப்பதால் படங்களை இங்கே போடலை.  குறைஞ்சபட்சம் நம்மவரும் அருள்நம்பியும் இருக்கறமாதிரி ஒரு க்ளிக் எடுத்துருக்கலாம்.....ப்ச்.... விட்டுப்போச்சு.

அடடா.....  ஆள் யாருன்னு தெரியலையேன்னு உங்களுக்குத் தோணாமல் இருக்க.... :-)
மேலே படம்: ஃபைல் ஃபோட்டோ

அன்றைக்கு மாலை நாத்தனார் வீட்டுக்குப் போனோம். ஓலாவில் போகும்போது பிரச்சனை ஒன்னும் இல்லை. திரும்பி வர்றதுக்குப் புக் பண்ணிட்டுக் காத்திருக்கோம் வீட்டு வாசலில். ஒன்னையும் காணோம்.  எங்கே இருக்கீங்கன்னு கூப்பிட்டுக் கேட்டால்,  வாசலில் நிக்கிறேன்னார். எந்த வாசலில்?    தெருமுழுக்க  இருட்டு வேற !  கொஞ்சம் வண்டியின் லைட்டைப்போடுங்கன்னு சொன்னதுக்கு, விளக்கைப் போட்டார். வண்டி தெருவின் இன்னொரு கோடியில் நிக்குது!   'அந்த வீடில்லை. இந்தப் பக்கம் வரணுமு'ன்னு சொன்னதுக்கு, ஒன்னுமே சொல்லாம வண்டியைக்  கிளப்பிக்கிட்டுப் போயே போயிட்டார்.  ஓலாவால் ஏற்பட்ட சில கசப்பு அனுபவங்களில் இதுவும் ஒன்னு.

இதெல்லாம் நடந்ததுக்கு  கேன்ஸல் பண்ணோமுன்னு முப்பது ரூ பிடிச்சுக்குவாங்களாம். அடராமா.....  தங்கை ஃபோனில்தான் எல்லாம்....

அப்புறம் நாத்தனாருக்குத் தெரிஞ்ச  இன்னொரு ஆட்டோ சர்வீஸைக் கூப்பிட்டு, மச்சினர் வீட்டுக்குப் போயிட்டோம்.  தங்கை (மைத்துனர் மனைவி) எங்களுடன் கூடவே இருந்ததால்  அங்கே போய் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுப் போக ஒரு திட்டம்.
தங்கை வீட்டின் புதுவரவு என்னோட ஃப்ரண்ட் ஆனது சுவாரஸ்யம்.  அவள் பெயர் ஜின்னா :-)என்னைப் பார்த்தால் அவளுக்கும் பிடிச்சுப்போச்சு. தலைப்பூவை ஒன்னு விடாமல் தின்னு பார்க்கணுமாம்!

அங்கிருந்து லோட்டஸ் திரும்பி வர திரும்பவும் ஓலா கூப்பிட்டது நம்மவர் செல்லில் இருந்து என்பதால் அதில் ஒன்னும் பிரச்சனை இல்லை. நம்ம சீனிவாசன் இல்லாமல் போன கஷ்டம் தினமுமே  இருந்துக்கிட்டு இருக்கு.

மறுநாள்  நம்மவருக்கு, ரங்கநாதன் தெருவை தரிசனம் பண்ணி வைக்கலாமேன்னு தோணுச்சு.  முதலில் பெயரைச் சொன்னதும் நடுங்கிட்டார்.  மகள் கேட்ட சில பொருட்கள் அங்கேதான் கிடைக்குமுன்னு ஒரு கொக்கி போட்டு இழுத்துக்கிட்டுப் போனேன்.

தி.நகர் ஏரியாவுக்குள் சுத்தணுமுன்னா ஆட்டோ தான் சரி. பொதுவா  லோட்டஸ் வாசலுக்கு அந்தாண்டை ரெண்டுமூணு ஆட்டோஸ் எப்பவும்  காத்து நிற்கும். அதுவும் அந்தாண்டை திரும்பி நின்னுதான். ஆனாலும்  நாம் யாராவது லோட்டஸ் வாசலுக்கு வந்து  நின்னால் போதும், சர்னு வட்டம்போட்டு நம்மாண்டை கொண்டுவந்து நிறுத்திடுவாங்க. எப்படிப் பார்க்கறாங்க?  ரியர் வியூ மிர்ரர்?

இதுலே பாருங்க...  ஒரு கஸ்டமரை அவுங்களே தத்து எடுத்துப்பாங்க போல.....  ஒரு குறிப்பிட்ட ஆட்டோக்காரர்தான் எங்களுக்குக் கிடைச்சுக்கிட்டே இருந்தார், வேற வண்டிகள் இருந்தாலும் கூட! வாடிக்கையா அவுங்க வண்டியிலே போகும் வாடிக்கையாளர்கள்!

சென்னை வழக்கப்படி (அதான் மீட்டரே போடமாட்டாங்களே!) வண்டியில் ஏறுமுன் எவ்வளவு ன்னு கேட்டுக்கணும். 'நீங்க ஏறுங்க ஸார்'னு பதில் வரும். அப்புறம் ஒரு சிரிப்பு. (ஆப்ட்டான்.... ஒருவன்? )  'இல்லே சொல்லுங்க..... பாண்டி பஸார், ரத்னா ஸ்டோர்ஸ், கீதா கஃபே'  இப்படி ஒரு இடம் சொன்னதும் அம்பதுன்னுவார்.  அஞ்சு நிமிஷ ரைடு.

ரங்கநாதன் தெருன்னதும், சுத்திக்கிட்டுப்போகணும்மா..... எழுவது கொடுங்கன்னுட்டு, சென்னை ஸில்க்காண்டயே நிறுத்திட்டு எதுத்தமாதிரி கை நீட்டிக் காமிச்சு அதோ  ரங்கநாதன் தெருன்னு நம்மை இறக்கி விடுவதுதான் நடக்கும்.  எதிர்வாடைக்குப் போறதுக்குள்ளே நாம் டான்ஸ் கத்துக்குவோம். பாலத்துக்கடியில் போகணும்.





அன்றைக்கென்னமோ அவ்வளவாக் கூட்டமில்லை. தரை தெரிஞ்சதே!

ச்சும்மா ஒரு வேடிக்கை. கடைகளின் முகங்கள் மாறி இருக்கு! மெயின் ரோடுக் கடைகள் மாதிரி முன்னலங்காரம்!
எழுபதுகளின் ஆரம்பத்தில் இருந்த ரங்கநாதன் தெருவை நினைச்சுப் பார்த்தது மனசு.   போகட்டும்.... காலத்தின் வளர்ச்சி.....  மக்கள் தொகை இப்ப  ரெண்டரை மடங்கு அதிகம்....
ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ், கேட்ட பெயர்னு அதுக்குள்ளே நுழைஞ்சோம். போட்டுப் பார்க்கலாமுன்னா, எள் கையிலே இல்லே..... ஆடித் தள்ளுபடியாம்.  குழந்தைகளும் குட்டிகளுமாப் பெரிய பெரிய கும்பல்கள் தரையில்  கொத்துக்கொத்தா உக்கார்ந்துருக்காங்க. அவுங்க குடும்ப நபர்கள்  தள்ளுபடிக்குவியல்களில் இருந்து துணிகளை உருவிக்கொண்டுவந்து அவுங்கவுங்க கும்பலுக்கு நடுவே குவிச்சுக்கிட்டு இருக்காங்க. கும்பலில் இருந்த பெரியவர்கள்,  துணிகளை எடுத்துப் பிள்ளைகள் உடம்புலே வச்சுப் பார்த்து அது யாருக்குன்னு அலாட் பண்ணறாங்க!  அட!  இது நல்லா இருக்கே!

குழந்தைகளுக்கான ஆடைகள் பிரிவுக்குப் போனோம். ஜன்னுவுக்கு ஒரு கலம்காரி கிடைச்சது. அப்புறம் மாடிக்குப்போய் புடவைத் தலைப்புக்கு வைக்கும்  குஞ்சங்கள் இத்யாதி..... மகள் கேட்ட சில சமாச்சாரங்களும்....
நம்ம முயற்சி எடுத்து நடக்கெல்லாம் வேணாம். கூட்டம் நம்மைத் தள்ளிக்கிட்டே கொண்டுபோகுது. அந்தந்த  இடத்தில் நாம்  சட்னு வெளியே  வந்துடணும்.
ஆயிரம்தலைகளைப் பார்த்தால் புண்ணியமாம்!   அளவில்லாமல் கிடைச்சது.

சரவணனுக்கும் ஜெயச்சந்திரனுக்கும்தான் போட்டி போல!  கோல்ட் வார் :-)
சாயங்காலம் ஒரு நாலரைவாக்கில் கிளம்பி நம்ம அநந்தபதுமனை தரிசிக்கப் போறோம்.   மூலவருக்கு எதிரே இருக்கும்  மேடையில் போய் உக்கார்ந்து மனம் குளிரப் பார்த்துட்டு, பிரகாரம் வலம் வந்தால் தங்கத்தேர் அலங்கரிச்சுக்கிட்டு ஜொலிக்குது!  ஆஹா....   இருந்து பார்த்துட்டே போகணும். ஆனால்  இங்கே சாயரக்ஷை பூஜை முடிஞ்சாட்டுதான் தங்கத்தேர் என்பதால் எப்படியும் ஏழுமணி ஆகிரும்.  பொடிநடையில் க்ராண்ட் ஸ்வீட்ஸ் போய் ஒரு காஃபி குடிச்சுட்டு வரலாமுன்னு போனோம்.
காம்பவுண்டுக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே.... 'துளசிதளம். துளசி கோபால்'னு  அசரீரி !  யார் சொல்றாங்கன்னு திரும்பிப்பார்த்தால் ...  அழகான யுவதி!  நெடுநாள் வாசகியாம்!  பின்னூட்டுனதே இல்லையாம்.... போச்சுடா...... அதான் தெரியாமப் போயிருக்கு!

அமெரிகா, லீவு, அப்பா அம்மாவைப் பார்க்க, குழந்தைகள் அம்மாகூட வீட்டுலே,ஜெட்லாக், அப்பா கூட  க்ராண்ட் ஸ்வீட்ஸ் கடை.   தந்திமொழியில் தகவல் பரிமாற்றம்.
கட்டிப்புடி வைத்தியம் ஆச்சு :-)

மனசு பூரிச்சுப்போனது உண்மை. நாலு எழுத்துக்குள்ள சக்தி இவ்வளவா?  ஆஹா..... பஜ்ஜி காஃபி முடிச்சுட்டுத் திரும்பக் கோவில்.
தேர் ரெடியா நிக்குது.  சாயரக்ஷை பூஜையும்  முடியும் நேரம்.  ச்சும்மாச் சொல்லக்கூடாது.....  மின்னும் தங்கமும், உள்ளே  ஜொலிக்கும் பெருமாளும் தாயார்களுமா  .....  காணக் கண் கோடி வேணும்! இன்றைக்குன்னு அமைஞ்சது பாருங்க..... பெருமாளே....
நாதஸ்வரம், தவில்  முழங்க மூணு சுத்து. ஒவ்வொருமுறை மூலவருக்கு முன் வரும்போதும்,   அஞ்சு நிமிட் நின்னு தீபஆரத்தி!!


வெளியே வந்து நவகிரஹ சந்நிதி சுத்திட்டு வழக்கமா உக்காரும் பெஞ்சு வரிசைக்குப்போனால்....  அந்தாண்டைக் கோடியில் இருக்கும் சிவன் சந்நிதிக்கு அம்பு போட்ட அறிவிப்பு!  புதுசா எழுதிப்போட்டுருக்காங்களேன்னு கண்ணை ஓட்டினால்.... சிவனுக்கு ஒரு புது முகப்பு, தோரணவாசல்!  அட! மண்டபம்....




இதுநாள் வரை பெயர் ஒன்னுமில்லாமல் சிவனேன்னு இருந்தவருக்கு இப்போ புதுப்பெயர்!  அருமை! ஆமா....  அரசமரத்தடி,  புள்ளையோட  பெர்மனன்ட் அட்ரஸ் இல்லையோ?
கும்பிட்டு வலம் வந்தோம்.  மரமும், சந்நிதியும், துளசியும் அப்படிக்கப்படியே!  வாசல்தான் புதுசு.  எப்போன்னு குருக்களிடம் கேட்டேன். ஒரு மாசமாச்சாம்!

திரும்ப லோட்டஸ்.

தொடரும்............ :-)


Tuesday, November 27, 2018

சென்னைக்குன்னே சில..... !!!!! (பயணத்தொடர், பகுதி 38 )

நியூஸியில் இருந்து கிளம்பும்போதே....  சென்னைக்குன்னு சில வேலைகளை ஒதுக்கி வச்சுக்கறதுதான். முக்கியமா நகைநட்டு ரிப்பேர்!  நம்ம  வகை நகைகள் எதாவது பழுதானால்  இங்கே  செஞ்சு வாங்கிக்கறது மஹா கஷ்டம்.  ஹைகேரட்டாமே!  துக்கினியூண்டு பத்த வச்சுக் கொடுக்கவே  அம்பதறுபது டாலர்  வாங்கிருவாங்க.
தங்கமாளிகைக் கடை நம்மை நல்லா ஏமாத்திய அனுபவத்தால் அந்தப் பக்கம் காலடி எடுத்து வைப்பதில்லைன்னு சபதம் போட்டுருக்கேன்.  தி நகர் மங்கேஷ் தெருவில் இருக்கும் சீனிவாச ஆச்சாரி கடைதான் இப்ப  ஒரு பத்து வருஷமா நமக்கு ஆகி வந்துருக்கு!
அப்புறம்  தையல் கடை!  எனக்கே தைக்கத் தெரியும் என்றாலும்,  இங்கே ஒரு நூல்கண்டு வாங்கும் விலையில்  கொஞ்சம் கூடப்போட்டால் ஊரில் தைச்சே வாங்கிட்டு வந்துடலாம்னு ஒரு கணக்கு.
அப்புறம்  உறவினர், நண்பர்கள் வீட்டு விஸிட்,  'நம்மவரு'க்குப் பேண்ட்ஸ் தைச்சு வாங்கறது, கோவில்களுக்குப் போய்வர்றது,  நண்பர்கள் நம்மை சந்திக்க வர்றதுன்னு  எதாவது ஒன்னு இருந்துக்கிட்டே இருக்கும்.  கடைகண்ணிகளுக்குப்போய்  புதுசா என்ன வந்துருக்குன்னு 'பார்க்கிறது' சொல்ல விட்டுப்போச்சோ :-)

பெரிய பாத்திரங்கள், கடாய்கள் இதுக்கெல்லாம் 'மூடிகள் மட்டும்' வாங்கிக்கணுமுன்னு இங்கிருக்கும் பாத்திரங்களின் அளவை எடுத்துக்கிட்டுப்போனோம்.  ஏழு மாடி  சரவணா ஸ்டோர்ஸ்!

28 செமீ தட்டு வேணும். அதே நம்பரில் கிடைச்சது. எதுக்கும் இருக்கட்டுமுன்னு  அதிலிருந்து கீழ்நோக்கி இன்னும் மூணும் வாங்கியாச்சு. நாலு தட்டு வாங்கிட்டேன்னு 'ஆரம்பம்' ஆச்சு கச்சேரி.  அச்சச்சோ....   இதுவே ஒரு கிலோ வருமோ..... அப்ப இனி இருபத்தியொன்பது, இருக்கு. 

கல்யாணத்துக்கு என்னென்ன கொடுக்கணுமுன்னு சீர்வரிசைகளை அடுக்கிக் கொலு வச்சுருந்தாங்க. மறந்துட்டேன்னு 'சம்பந்திகளிடம்' சொல்ல முடியாது!  இதுலே பித்தளைப் பாத்திர ஸெட், எவர்ஸில்வர் பாத்திர ஸெட்ன்னு ரெண்டு வகைகள் வேற! சும்மாச் சொல்லக்கூடாது.... அந்த பித்தளைப் பாத்திர ஸெட் அழகு!  யார் தேய்ச்சு மினுக்குவாங்க? மாமியாரா இருக்குமோ?

சாயங்காலமாக் கிளம்பி ம்யூஸிக் அகடெமி போறோம். நம்ம எம் எல் வி இருந்தாங்கன்னா.... இன்றைக்கு அவுங்களுக்கு தொன்னூறு !  குரு வந்தனமாக, நம்ம சுதா ரகுநாதன் அவர்கள் ஏற்பாடு செஞ்சுருக்கும் விழா! புது தபால்தலையும் வெளியிடறாங்க. என் உ.பி சகோ தான் கட்டாயம் மறக்காம வந்துரணுமுன்னு கட்டளை போட்டுருந்தார். அவுங்க இலாகாதான் தபால்தலை வெளியீடு!

முக்கிய புள்ளிகள் வரும் விழா என்பதால்  ரொம்ப கெடுபிடி இருக்குமோன்னு பயந்துதான் போனேன். அங்கே  எல்லாம் வழக்கம் போல்.....
நாலுமணிக்கு விழா ஆரம்பம்.  சரியான நேரத்துக்கு ஆரம்பிச்சுட்டாங்க. தெரிந்த பெயர்கள், தெரிந்த முகங்கள், பிரபலங்கள் என்று  மேடையில் வந்து பாடிட்டுப்போறாங்க. நம்ம ஜயந்தி ஸ்ரீதரன்  பாடிய  'அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி ' ரொம்பவே அருமை!
அடுத்துப் பாடுன சின்னக்குட்டிப் பையரை முதல்முதலாக் கேக்கறேன். ராஹுல் வெல்லால்!  சரணு சித்தி விநாயகா,  சந்த்ரசூட சிவசங்கர பாலகா,  பாரோ க்ருஷ்ணைய்யா  இந்த மூணு பாடல்களையும் கேட்டப்ப அப்படியே மனம் உருகி மெய்மறந்துபோனது உண்மை!  என்னமா பாடுறான் பாரேன்னு   மனசு கூத்தாடுது!   குழந்தை நல்லா இருக்கணும்!
திருச்சூர் ராமச்சந்திரன், சாருமதி ராமச்சந்திரன் பாட்டுகளுக்குப்பின் நம்ம கன்யாகுமாரி!  நம்ம எம் எல் வி அம்மாவின் இசைக்குழுவில் ரொம்பநாளாக் கூடவே இருந்தவங்க!   ஒன்பது வருசங்களுக்கு முன்னே  சென்னையில் டிசம்பர் ம்யூஸிக் சீஸனில் ஒரு விழாவில் எம் எல் வி அம்மாபற்றி டாகுமென்ட்ரி படம் (தூர்தர்ஷன் எடுத்ததாம்) காமிச்சாங்க.  அப்ப அதைப்பற்றி நம்ம துளசிதளத்துலே எழுதுனதுக்கு நம்ம அமைதிச்சாரல்,  'எம்.எல்.வி அம்மா அண்டார்டிகாவுக்கே போய் கச்சேரி செஞ்சாலும் கன்னியாகுமரி அம்மாதான் வயலின்' அப்படின்னு பின்னூட்டினாங்க. அது உண்மைதான்!
அந்த நிகழ்ச்சியில் க்ளிக்கினது இது!  யார் யாருன்னு தெரியுதோ?  :-)
கோவிந்தா ஹரி கோவிந்தான்னு .... நம்ம கன்யாகுமாரி.....
விழா ஏற்பாட்டாளர் பயங்கர பிஸி !!




'The Maiden of Spring'  என்ற தலைப்பில் ஒரு குறும்படம்!  எம் எல் வி அம்மாவைப் பற்றிப் பிரபலங்கள்  கூறியவை!
இதுக்குப்பின் ஒரு இடைவேளை.  ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கிய ஸ்வீட் காரம்  ஃபில்டர் காஃபி!

திரும்ப  உள்ளே போறோம். இப்போதான்  முக்கிய புள்ளிகளின் வருகையும், முக்கிய நிகழ்ச்சியும்!
இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களையும்,  தொலைத்தொடர்பு & ரயில்வே அமைச்சர் திரு மனோஜ் ஸின்ஹா அவர்களையும்  வரவேற்க மேடை தயாராக இருக்கு!

மாண்புமிகு அமைச்சர்கள், குத்துவிளக்கை ஏற்றி வைத்து விழாவைத் தொடக்கிவைத்தார்கள். அப்போ பின்னணியில் என்ன பாட்டு தெரியுமோ?  துளசி ஸ்பெஷல்! 'தூமணி மாடத்து....'  வாவ்!  தேன்குடிச்ச  துளசியை நீங்க அப்போ பார்த்துருக்கணும்....  :-)

விழா அமைப்பாளர் நம்ம சுதா ரகுநாதன், எல்லோரையும் வரவேற்றுப் பேசுனாங்க. அவுங்களோட சமுதாயா ஃபவுன்டேஷன் செய்யும் சேவைகளைப் பற்றியும் கொஞ்சம் விளக்கிச் சொன்னாங்க. அப்புறம் முக்கியப்புள்ளிகளுக்கு பொன்னாடை, நினைவுப்பரிசுகள் வழங்குதல் எல்லாம் ஆச்சு. 



பரிசு வழங்குனதைவிட அதை ரொம்பவே பணிவா வாங்கிய முறை எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.  எவ்ளோ பெரிய பதவியில் இருக்காங்க. ஒரு பந்தா, ஒரு அலட்டல் இப்படி  எதாவது காமிக்கப்டாதோ? ஊஹூம்..... நம்ம பாரதி கண்ட புதுமைப்பெண். நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும்!
பாதுகாப்புத்துறையில் முதல் பெண் தலைவர் என்ற சேதி தெரிஞ்சுருந்தாலும், இவுங்களை நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை! உண்மையைச் சொன்னா.... இவுங்களுக்காகவே இந்த விழாவுக்குப் போனேன்னும் சொல்லலாம்.
அடுத்து இவுங்க பேச ஆரம்பிச்சதும்...... ஹைய்யோ!  அரசியல் கலக்காத அருமையான பேச்சு.  ரொம்ப இயல்பா.... பாட்டுக்கும் இவுங்களுக்கும் உள்ள சம்பந்தம் பற்றிப்பேசுனதைக் கேட்டப்ப, எதோ பக்கத்துவீட்டுப் பெண்மணின்னு தோணுச்சு எனக்கு!  இவ்ளோ எளிமையா!!!!!  வாவ்!!!!

இப்ப நான்  திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களின் விசிறி !

அவுங்க அன்றைக்குப் பேசுனதின் லிங்க் இது. விருப்பம் இருந்தால் கேளுங்களேன்!
அப்புறம்  தமிழகத்தின் போஸ்ட் மாஸ்டர் ஜெனெரல், எம் எல் வி அம்மாவின் தபால்தலை வெளியிட்டார்.


 நினைவுப்புத்தகம் வெளியீடும் ஆச்சு.  ஹாலுக்கு வெளியே  இவைகளை விற்பனைக்கும் வச்சுருந்தாங்கன்னு 'நம்மவர்' போய் வாங்கி வந்தார்!
நம்ம உ பி சகோவும் ரொம்பவே பிஸியா மேடைக்கு வந்து போய்க்கிட்டு  இருந்தாரா, அவரையும் க்ளிக்கி, அப்புறம் அவருக்கே அனுப்பினேன்:-)


நன்கொடை வழங்குதல்



விழா நிகழ்ச்சியின் கடைசிப் பகுதியா, நம்ம சுதா ரகுநாதன் பாட,  ரமா  வைத்தியநாதன் ( ந்ருத்திய சூடாமணி 2017) அவர்களின் நடனம்.  எம் எல் வி அம்மா இசை அமைத்த புரந்தரதாஸரின் பாடல்!

எதோ போன ஜென்மத்தில் கொஞ்சூண்டு புண்ணியம் செஞ்சுருக்கோம் போல !  மனநிறைவுடன்  லோட்டஸ் போய்ச் சேர்ந்தோம்.

தொடரும்...:-)