Monday, July 30, 2012

நாட்டாமை...... பேசாம பேரை மாத்தலாமா? ( ப்ரிஸ்பேன் பயணம் 21)

பெயர்ப்பொருத்தம் கொஞ்சம்கூடச் சரி இல்லை! நம்ம பக்கங்களில் அநேகமா வெறும் சிகப்பு நிறத்தில் மட்டுமே இருப்பதால் இந்தப்பெயர் வந்துச்சு போல! இங்கே நியூஸியில் நம்ம வீட்டில் ஒரு பிங்க் நிறமுள்ளது இருக்கு)

 செம்பருத்திச் செடிகளின் வளையம்! பெரிய சைஸ்வேற! என்னென்னமோ கம்பினேஷன்ஸ் வச்சுப்பார்த்துக்கு இயற்கை! தனி நிறம், இல்லைன்னா உள்ளே நடுவில் ஒன்னு வெளிப்புறம் ஒன்னுன்னு ரெண்டு வெவ்வேற நிறங்கள். எதை விட்டுவைக்கன்னு தெரியாம எல்லாத்தையும் க்ளிக்கினேன்.

ஒவ்வொன்னும்  பெருசா  அரைஅடி விட்டத்தில்! ஹைப்ரீடோ?

அந்த சன் டயல் வச்சுருக்கும் மேடையிலும் இந்தப்பூக்களின் வடிவம் ரொம்பப் பொருத்தம்! செடிகள் வந்தவிவரமோ குறிப்புகளோ ஒன்னும் சிக்கலை. அழகை பார்த்து ரசிச்சுக்கோ. உனக்கெதுக்கு செடிமூலமுன்னு சொல்றாங்களோ!!!!

தொடரும்..............:-)

Friday, July 27, 2012

நகருக்குள்ளே(யே)ஒரு காடு (ப்ரிஸ்பேன் பயணம் 20).

ஆச்சரியமான விஷயம், காலெடுத்து உள்ளே வச்சவுடன் சட்ன்னு வந்த ஒரு அமைதி. வெளியுலக இரைச்சல்கள் எல்லாம் எங்கே? ஒருவேளை இதுவரை காதுலே கேட்டுக்கிட்டு இருந்த சத்தங்கள் எல்லாம் மனசுக்குள்ளேயே இருந்துச்சோ? ரெண்டு பக்கங்களிலும் நெடுநெடுன்னு வளர்ந்திருக்கும் மரங்களுக்கிடையில் அகலமான நீண்ட பாதை, பாதை போய்ச் சேருமிடத்தில் ஒரு வட்டக் கட்டிடம். தோட்டத்துக்கான தகவல் நிலையம். கவுண்டரில் ஆளைக் காணோம். ஒருவேளை அவுங்கதான் இப்போ அரைமணி முன்னால் ஆரம்பிச்ச தோட்ட டூர் கைடோ?

 நான் இல்லைன்னா என்ன? நீங்களே உங்களுக்கான கைடா இருக்கலாமேன்னு கொஞ்சம் தோட்ட விவரங்கள் அடங்கிய ப்ரோஷர் வச்சுட்டுப்போயிருக்காங்க. வெறும் 22 பக்கங்கள்தான்!!!!

 இந்த ரொடண்டாவுக்கு வலப்பக்கம் குளம் ஒன்னு. அலங்காரமா தண்ணீரை வாரித் தெளிக்கும் பம்பு, தன் கடமையைச் செஞ்சுக்கிட்டு இருக்கு. தொட்டடுத்தே ஒன்னுக்கொன்னு இணைஞ்சு இருப்பதைப்போலவே இன்னும் சில அலங்காரக்குளங்கள். உள்ளூர் பறவைகள் ஒய்யாரமா தண்ணீருக்குள்ளே போறதும். வாரி இறைக்கும் தண்ணிரில் ஷவர் பாத் எடுக்கறதுமா இருக்கு. வாத்துகள், வாத்தைப் போலவே தண்ணீரில் நீந்தும் சிவந்த மூக்குப்பறவைகள். இதுகளுக்கு வாயில் நுழையாத ஒரு பெயர். கோழித்தலையும் வாத்து ஆக்ட்டுமா இருக்குதுங்க.

 மரங்களும் புதர்களுமா இருக்கும் இடைவெளியில் நடந்து போக ஒரு ஒத்தையடிப் பாதை! பிங்க் நிறப்பூ ஒன்னு கவனத்தை இழுத்துச்சு. பழங்கள் போல கொத்தா அந்தப்பூவுக்கருகில் இருக்கேன்னா.... அந்த மின்னும் பழங்கள்(!)தான் இந்தப்பூக்களின் மொட்டுகள்! ஆஹா..... என்னமால்லெல்லாம் செஞ்சு வச்சுருக்கேடான்னு சாமியைப் பாராட்டத்தோணுச்சு.

 குளக்கரையைச் சுத்தி மரங்கள் பார்டர் போட்டன. எங்கே குளம், காமி பார்க்கலாம்? என்று எட்டிப்பார்க்கும் அடுக்குமாடிக் கட்டிடங்களும் அழகாத்தான் இருக்கு!

 புல்வெளியில் ஒரு உலோகச் சிற்பம்! 1988 உலக எக்ஸ்போ நடந்ததை நினைவுகூறும் சின்னமாம். அது ஆச்சே 24 வருசம். இன்னும் எப்படி புதுக்கருக்கு அழியாம இப்போ போனமாசம் செஞ்சு வச்சது மாதிரி மின்னுது? நல்ல எவர்ஸில்வர் தகடுகள்! ஒவ்வொரு கோணத்திலும் தோட்டத்தின் காட்சிகள் பிரதிபலிப்பது போட்டோ எடுத்து ஒட்டிவச்சது போல தெரியுது!

 பேசாம இந்த ஐபிஸ் பறவையை ஆஸியின் தேசியப்பறவையா ஆக்கிடலாம். ஏகப்பட்டவை அங்கும் இங்குமா ஒரே உலாத்தல் கொஞ்சம் நேரம் நீந்துனவுடன் கால் வலிக்குதுன்னு கரையில் வந்து உக்கார்ந்துக்கும் வாத்துகள். வரிசை:-)






குத்துக்குத்தா அங்கங்கே மூங்கில் புதர்கள். குட்டியா ஒரு நீர்வீழ்ச்சி, பர்ட் ஆஃப் பாரடைஸ் செடிகளில் அழகுப்பூக்கள். பழையகாலத்து கிராமஃபோன் குழல்போல பெரிய பூக்கள் உள்ள மரங்கள்.







உக்காந்து யோசிக்கிறார் போல!








வட்டக்கட்டிடத்தின் பின்புறம் புதுப்பாத்திகள்.குவீன்ஸ்லேண்ட் கரும்புக் காடுகளுக்கும் சக்கரைத் தொழிற்சாலைகளுக்கும் ஆரம்பப்புள்ளி  இங்கிருந்துதான், பார்க்கின் க்யூரேட்டரா இருந்த வால்ட்டர் ஹில் வெவ்வேற நாடுகளில் இருந்து செடிகள் பயிர்வகைகளை வரவழைச்சு அவைகளை நட்டுப் பரிசோதனைகள் செஞ்சு பார்த்துருக்கார் எப்படிப்பட்டவை இங்கே இந்த நாட்டின் இந்தபகுதியின் காலநிலைக்கும் மண்வளத்துக்கும் ஒத்து வருமுன்னு இடைவிடாத சோதனை முயற்சிகள். இப்ப இருப்பதுபோல் ஒரு பூவோ பழமோ நாட்டுக்குள்ளே கொண்டுவரக்கூடாது என்ற கஸ்டம்ஸ் கெடுபிடிகள் எல்லாம் அப்போ ஏது? 

வியாபாரத்துக்கு அங்கங்கே போய் வரும் கப்பல்காரர்களிடம் சொன்னால் ஆச்சு. பார்படோஸ் போய்வந்த கப்பலில் இருந்து  கிடைச்சக் கரும்புத்துண்டுகளை இப்போ இந்த வட்டப்பாத்திகள் இருக்கும் இடத்தில் நட்டுவச்சு அவை வளர்ந்து மூத்தபின் சாறு பிழிஞ்சு அதைக் காய்ச்சிப் பார்த்தால் சர்க்கரை கிடைச்சுருச்சு.

ஜகரண்டா மரம், புளிய மரம், மஹோகனி, மெகடாமியா, பனை வகைகள், மூங்கில் வகைகள் இப்படி எந்த மரவகைகளை எடுத்துக்கிட்டாலும் அவை வால்ட்டர் ஹில்ஸின் கைவண்ணங்களே!  மூங்கில் மட்டுமே 23 வகைகள் இருக்குன்னா பாருங்க!



 அகலமான பாதையின் இருபுறமும் மூங்கில்காடுகள். உக்கார்ந்து அழகை ரசிக்க அங்கங்கே பெஞ்சுகள். இங்கே தோட்டத்துக்குள் நாய்களுக்கும் சைக்கிள்களுக்கும் கூட அனுமதி உண்டு. டாக் வாக் ஆட்கள் அங்கங்கே. ஒன்னு இடத்தை மார்க் பண்ணிட்டுப்போச்சு. பேரு வில்ஸ் (வில்லியம்)  ஹாய் வில்ஸ்!

 வால்டர் ஹில் ஃபவுண்டெய்ன் என்ற போர்டைப் பார்த்துட்டு அங்கே போனால்.... சிங்கம்! இப்படிக் கொசுவத்தி ஏத்திருச்சே........

 ஒரு காலத்துலே வத்தலகுண்டு வாழ்க்கையில் ராஜாஜி மைதானம் என்ற திடல் ஒன்னு நம்ம வீட்டுக்குப்பக்கத்தில் இருந்துச்சு. அதில் ஒரு பக்கம் பெரிய பார்க் ஒன்னு. பஞ்சாயத்து போர்டு ஆஃபீஸ் இருந்த இன்னொரு பக்கம் ஓவல் ஷேப்லே சின்னதா ஒரு நீர்த்தொட்டி. அதுக்குத் தண்ணீர் தொட்டியின் கைப்பிடிச்சுவரின் நடுவில் எழும்பி இருக்கும் தூணில் பதிச்ச சிங்கத்தின் வாயில் இருந்து விழும். நான் அந்தத்தூணில் மேலே இருக்கும் உருளையில் ஏறி உக்கார்ந்துக்கிட்டு சிங்கத்தின் தலையில் காலை வச்சுக்குவேன். அப்ப நான் ஒரு சரியான குரங்கு. ஒரு மரத்தைக் கண்டால் விடமாட்டேன். எல்லா கவுனும் கிழிஞ்சது இப்படித்தான்:-) 


 சில வருசங்களுக்கு முன்னே வத்தலகுண்டு வழியாப்போனபோது இந்தத் திடலைத்தேடி விசாரிச்சால் இப்படி ஒன்னு இல்லவே இல்லைன்னு சொன்னாங்க:( அப்புறம் நம்ம பதிவுலக நண்பர் வத்தலகுண்டுக்காரர் விசாரிச்சு இப்ப அந்தத் திடலின் பேர் மாறிப்போச்சு. பஞ்சாயத்து திடலுன்னு கேக்கணும் என்றார். ராஜாஜி என்ற பெயர் கெட்டதா என்ன? என்னவோ போங்க......:( 


 இந்த சிங்கவாய்த் தண்ணீர் மனசின் ஒரு மூலையிலேயே இருந்துச்சு போல. ஒரு நாள் இங்கே கிறைஸ்ட்சர்ச்சில் கடையில் ஒரு சிங்க பவுண்டெய்ன் பார்த்துட்டு உடனே அதை வாங்கியாச்சு. சுவரில் மாட்டி வைக்கும் டிஸைன். அதுலே முன்பக்கத்துலே சின்னதா ஒரு கிண்ணம் அதுலே தண்ணி ரொப்பிட்டு நீர் ஊற்றுக்கு வச்சுருக்கும் ப்ளக்கை மின்சார இணைப்புக்குக் கொடுக்கணும்.

 சிங்கம் வாயிலே தண்ணி வருது! கன்ஸர்வேட்டரியில் வச்சுருக்கோம். நல்லா இருக்கா? தண்ணீர் தெறிக்குதுன்னு ஒரு பாலிகார்பொனேட் ஷீட் வச்சுருக்கேன். தண்ணீர் விழும் ஓசை கேட்டபடி அங்கே உக்கார்ந்தால் அதுவும் ஒரு தியானம்:-) 

 இந்த பொட்டானிக் ரிஸர்வுக்கு 26 வருசம் உழைச்ச வால்ட்டர் ஹில் பெயரை இந்த நீரூற்றுக்கு வச்சுருக்காங்க. 1867 இல் சேண்ட் ஸ்டோனும் மார்பிள்மா வச்சுக் கட்டுனது. நாலு பக்கமும் சிங்க முகங்கள்.   'ஓ' ன்னு வாய் இருக்கு:-)



 குவீன்ஸ்லேண்டில் முதல்முதல் கட்டிய எனோக்கெரா Enoggera Dam அணையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ப்ரிஸ்பேன் நகருக்குக் குடிதண்ணீர் வர ஆரம்பிச்சதை நினைவூட்டக் கட்டுனது குடிதண்ணீர் நீரூற்று இப்பக் காஞ்சுப்போய்க்கிடக்கு. . அதுலே தண்ணி வந்தால் குடிச்சுப் பார்த்துருப்பேன்.

 சிங்கத்தைக் கடந்தால் ஒரு சன் டயல் அமைப்பைச்சுத்தி  ஹைய்யோ!!!!!

அடுத்த பதிவு அந்தப் பூக்களுக்கே சமர்ப்பணம்:-)


 தொடரும்.............:-)))))

Wednesday, July 25, 2012

ஏம்மா.... தனியா சமாளிச்சுக்குவயா?....... (ப்ரிஸ்பேன் பயணம் 19).

காலையில் இருந்து நூறு முறை கேட்டுட்டார். இதென்ன பிரமாதம்? எனக்கு ஆயிரம் வேலை இருக்குன்னேன்:-)

 இன்றும் நாளையும் கோபாலுக்கு இங்கே ஒரு ட்ரெயினிங் ப்ரோக்ராம். இதே ஹொட்டேலில் வேறொரு ஹாலில். காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடக் கீழே ரெஸ்ட்டாரண்ட் போனப்ப, இந்தப் பயிற்சிக்காக இவரோட கம்பெனியில் இருந்து இன்னும் ரெண்டு பேர் வந்து கலந்துக்கப்போறாங்கன்னு சொல்லி இருந்தவர்களில் ஒருவரைச் சந்தித்தோம். இவர் ஆக்லாந்தில் இருந்து வந்துருக்கார். இன்னொருத்தார் நம்மூர்காரர். பனிப்பொழிவு காரணம் விமானநிலையத்தை மூடிட்டாங்களாம். ஃப்ளைட் இல்லைன்னு தகவல் அனுப்பிட்டார்.

 ஐயோ.... அப்ப மகள் இன்னிக்கு வேலைக்கு எப்படிப் போவாளோன்னு அவளைக் கூப்பிட்டால் இன்னும் சாலைகள் பனியில் மூழ்கி இருப்பதால் போக்குவரத்து கூடாதுன்னு அறிவிப்பு வந்துக்கிட்டு இருக்காம். அடப் பாவமே! பேசாம நம்மகூடவே இருந்துருக்கலாம்...........


 மாலை அஞ்சு மணிக்கு வந்துருவேன்னு சொல்லிட்டு கோபால் கிளம்ப நானும் கொஞ்ச நேரம் வலை மேய்ஞ்சுட்டு மெயில்கள் பார்த்துட்டு ஜூட் விட்டேன். சென்ட்ரல் ரயில் நிலையம் மேம்பாலத்தில் இருந்து தெரிஞ்சது. இதுவரை போகாத தெருவுக்குள் நுழைஞ்சேன். நகரமையத்துலே கட்டங்கட்டமா குறுக்கவும் நெடுக்கவும் போகும் தெருக்களில் காணாமப்போக ச்சான்ஸே இல்லை! க்ரீக் தெரு!

 ஆன் தெரு முனையில் செயிண்ட் ஆன்ட்ரூஸ் யுனைட்டிங் சர்ச்ன்னு ஒன்னு கம்பீரமா நிக்குது. நம்மூர் புள்ளையார் கோவில்கள் போலத்தான் இந்தப் பக்கங்களில் சர்ச்சுகள். முக்குக்கு முக்கு தப்பாது.


ஒரு பூக்கடையில் நுழைஞ்சு, இதே பூச்செடிகள் நம்மூரில் பாதிவிலை என்றதும் மனசுக்குத் திருப்தியா இருந்துச்சு. அடுத்து இருந்த ஒரு ஷாப்பிங் ஆர்கேடுக்குள் போனால் பிக் டபிள்யூ னு ஒரு டிபார்ட்மெர்ண்ட் ஸ்டோர்ஸ். இங்கே கம்பி மத்தாப்பு விற்பனைக்கு இருக்கு! பரவாயில்லையே ஆஸியில் எப்பவும் கிடைக்குதேன்னு கொஞ்சம் பொறாமை! 

எங்க நியூஸியில் வருசத்துலே நவம்பர் ஒன்னு முதல் நவம்பர் அஞ்சு மாலை 6 மணி வரை மட்டுமே பட்டாஸ் விற்பனை. அதுவும் கை ஃபாக்ஸ் புண்ணீயம் கட்டிக்கிட்டார். இவர்தான் இங்கிலாந்தின் நரகாசுரன். இவரைப்பற்றித் தெரிஞ்சுக்க விருப்பம் இருந்தால் இங்கே பாருங்க. நம்ம வீடுதான். தாராளமா வந்து பாருங்க. 
எங்கூர்லே இன்னொரு பெரிய கொடுமை பட்டாஸ் வாங்க 18 வயசு ஆகி இருக்கணும்! No sale of Fireworks if you are under 18. 

 இந்த க்ரீக் தெருவின் குறுக்கா குவீன்தெரு வருது. அந்த மூலையில் மெக் ஆர்தர் ம்யூஸியம் ஒன்னு உண்டு. . இந்த ஜெனரல் டக்ளஸ் மெக் ஆர்தர் , சுப்ரீம் கமாண்டரா ரெண்டாவது உலகப்போரில் பணியாற்றினவர். இறுதி வெற்றிக்குத் திட்டம் போட்டவர் என்ற பெயரும் பெருமையும் அடைஞ்சவர். அவர் நினைவாத்தான் இந்த ம்யூஸியத்துக்குப் பெயர் வச்சுருக்காங்க.



இப்போதைய ஸ்பெஷலா ப்ரிஸ்பேன் அட் வார் (Brisbane at War)காட்சிக்கு வச்சுருக்காங்க நுழைவுக் கட்டணம் வெறும் அஞ்சு டாலர்கள்தான். சனிக்கிழமையும் திறந்திருக்கும் என்பதால் கோபாலோடு வரணுமுன்னு இருந்துட்டேன்.

 நகர நடமாட்டத்தை வேடிக்கை பார்த்தபடி போஸ்ட் ஆஃபீஸ் கட்டிடத்தைக் கடந்து போனேன். இதுவும் பழையகாலக்கட்டிடம்தான். பெரிய தூண்களோடு கம்பீரமா நிக்குது. இந்த கட்டிடம் 1872 செப்டம்பரில் தபால் ஆஃபீஸா இயங்க ஆரம்பிச்சது. குவீன் தெரு மாலில் ரெண்டு வரிசைக் கடைகளுக்கும் இடைப்பட்ட வெளியில் எப்பவும் எதாவது நடந்துக்கிட்டே இருக்கு. இதுதான் இங்கத்து செண்ட்டர் கோர்ட்:-) .

  ஹாலிடே ஸ்பெஷல் டீல் என்று ஹொட்டேல் விளம்பரத்துக்காக படுக்கை ஒன்னு போட்டு வச்சுருக்காங்க. தொட்டடுத்து உள்ளூர் பொலீஸ், சமூகத்துக்கு குறிப்பா இளைய சமூகத்துக்கு சாலை விதிகள், பாதுகாப்பு முறைகள் சொல்லிக்கொடுக்க என்ன சேவையெல்லாம் செய்யறோமுன்னு ட்ராஃபிக் சைன்ஸ் எல்லாம் வச்சு சன்கார்ப் இன்ஷூரன்ஸ் கம்பெனியுடன் சேர்ந்து ஒரு விழிப்புணர்வு கூட்டம் நடத்திக்கிட்டு இருக்காங்க. Rotary Youth Driver Awareness. (RYDA) உள்ளுர் டிவி ஒரு ஆஃபீஸரை பேட்டி எடுக்குது. என்னதான் அதிகாரமுள்ள ஆட்கள் என்றாலும் டிவி கேமெரா முன்னால் நிக்க வச்சு மைக்கை முன்னால் நீட்டுனா ஒரு தயக்கம் வந்துருதுன்னு நெர்வஸா பேட்டிகொடுத்துக்கிட்டு இருந்தவரைப் பார்த்தால் புரிஞ்சது! 

 உண்மைதானே.... நம்ம கல்யாண வீடுகளில் பாருங்க ஜாலியா அரட்டை அடைச்சுக்கிட்டு இருப்போம். வீடியோ கேமெராவின் ஒளிவெள்ளம் நம்ம முகத்தில் விழுந்ததும் சட்னு ஒரு சைலன்ஸ் வந்துரும். முகத்தை எப்படி வச்சுக்கறது, தலைமுடி எல்லாம் கலைஞ்சு பேய் போல இருக்கோமா? பொட்டு நேரா இருக்கான்னு ...... ரொம்ப கான்ஸியஸாப் போயிருது இல்லே?


போற வர்ற கூட்டம் சில நொடிகள் நிற்பதோடுசரி. சட்டை செய்யாம போய்க்கிட்டே இருக்காங்க. டிவியில் வரும்போது பார்த்துக்கலாமுன்னு இருப்பாங்க போல:-) 

மாலின் நடுப்பகுதிக்கு வந்துருந்தேன். ஆண்டீக் நகைக்கடை கண்ணில் பட்டது. அந்த பெண்டண்ட் வித்துப்போச்சான்னு பார்க்கப்போனேன். கண்முழிச்சு சிரிச்சது என்னைப் பார்த்து. இன்றைய விற்பனைப்பெண்கள் புதுசா இருந்தாங்க. அது என்ன விலைக்கு வருமுன்னு கேட்டதுக்கு உள்ளே கொண்டு போன பெண் உடனே திரும்பி வந்து கேஷா இல்லை கார்டான்னு கேட்டாங்க. கேஷ் என்றதும் உள்ளெ போய் வந்தப்ப என் மனக்கணக்கில் இருக்கும் விலைக்கு ஒரு டாலர் மலிவு! டீல் ஓக்கே:-)))))

 கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது என்பது இதுதான்.



 Myer centre கட்டிடத்துக்குள்ளே போய் கடைகளை வேடிக்கை பார்த்தப்ப அங்கேயும் ஒரு ஆண்ட்டீக் கடை கண்ணில் பட்டது. நம்மூரில் காதுலே இருக்கும் குரும்பி எடுக்க குட்டியூண்டு கரண்டி ஒன்னு அந்தக் காலச் சாவிக்கொத்தில் இணைச்சு வச்சுருப்பாங்க யாருக்காவது நினைவிருக்கா? அது போல ஒன்னும் பல்குத்தும் குச்சியும் சேர்த்து 9 காரட் தங்கத்துலே செஞ்சது 550 டாலருக்குப் போட்டுருக்காங்க.


மேலே இருப்பது சுட்ட படம்


 பகல் சாப்பாட்டுக்கு எலிஸபெத் தெருவில் இருக்கும் கோவிந்தாஸ்க்கு போனேன். இந்த செண்டர்க்கு நேரெதிரில்தான் இருக்கு. வெறும் பருப்பு சாதம், தொட்டுக்க ரெண்டு பகோடா வாங்கிக்கிட்டேன். அன்லிமிட்டட் மீல்ஸ் ஆல் யூ கேன் ஈட் என்று 12.90க்குக் கிடைக்குது. அதெல்லாம் தின்ன எனக்கு வயிறு இல்லை. ஆனால் அநேக வெள்ளையர்கள் முக்கியமாக இளைஞர்கள் ஒரு கட்டு கட்டிக்கிட்டிக்கிட்டு இருந்தாங்க. மற்ற உணவுக்கடைகளைவிட இது மலிவு. அதிகமா மசாலா சேர்க்காத இந்த இந்திய உணவு பிடிச்சுப்போச்சு போல!


கடந்த முறைகளில் பார்க்க ஆசைப்பட்டு பார்க்காமல் போன ஒரு இடத்தை நோக்கி நடையைக் கட்டினேன். க்வீன்தெரு மாலில் இருந்து மூணே ப்ளாக். ப்ரிஸ்பேன் பொட்டானிக் கார்டன். நாப்பத்தியொன்பது ஏக்கர் பரப்பில் ப்ரிஸ்பேன் நதியை ஒட்டியே இருக்கு.

 1828 இல் ஸ்தாபிதம்! இந்த இடம் தோட்டம் வைக்கப் பொருத்தமா இருக்குமுன்னு தேர்ந்தெடுத்தவர் அந்தக்கால தாவரஇயல் நிபுணர் சார்லச் ஃப்ரேஸர். இந்த நகரம் உருவாகி அப்போ மூணே வருசம் ஆகி இருந்துச்சு. ஒரு பக்கம் நதி, இன்னொரு பக்கம் பார்லிமெண்ட் கட்டிடமுன்னு அமைஞ்சிருந்துச்சு.

 1855 ஆம் ஆண்டு இந்தப்பெரிய தோட்டத்தின் ஒரு பகுதியை பொட்டானிக் ரிஸர்வ் ஆக்கி இதுக்குப் பொறுப்பாளராக வால்டர் ஹில் என்பவரை நியமிச்சாங்க. இவர் 26 வருசம் (1881வரை) இந்தப்பொறுப்பில் இருந்து பராமரிச்சு இருக்கார். வேறு எங்கிருந்தோ கொண்டு வந்த புதுப்புதுச் செடிகளும் பரிசோதனை முறை வளர்ப்புமா இவர் காலத்தில் இருந்துருக்கு. இப்போ இருக்கும் பல மூத்த மரங்கள் அவர் கைவண்ணம்தானாம்.

 இந்தத் தோட்டத்தை மூடுவதே இல்லை. 24 மணி நேரமும் திறந்தேதான் இருக்கு. உள்ளே நடைபாதைகள் முழுசும் இரவில் மின் விளக்குகளோடு ஜெகஜோதியா ஜொலிப்பதால்.... அந்த நேரங்களில் கூட மனித நடமாட்டம் இங்கே இருக்கு.

 மொத்தத் தோட்டத்தையும் நமக்குச் சுத்திக் காமிக்க நாளுக்கு ரெண்டு முறை காலை 11 மணிக்கும் பகல் 1 மணிக்கும் இலவச கைடட் டூர் உண்டு.. அரைமணி நேரம் லேட்டா வந்துட்டோம். பரவாயில்லை. வாங்க என்னோடு. உள்ளே போய்ப் பார்க்கலாம்

 தொடரும்.....:-)