Wednesday, August 31, 2011

அழிவில் இருந்து மீண்டு(ம்) உயிர்த்தெழுகின்றோம் Christchurch Earthquake 1

அது ஒரு சனிக்கிழமையாக இருந்தது. 2010 செப்டம்பர் மாதம் நாலாம் தேதி. மகளின் பிறந்த நாள். நியூஸியில் பொழுதுவிடியட்டுமுன்னு காத்திருந்து 'தொலை'பேசினோம் பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொன்னவுடன் நன்றி. கொஞ்சநேரத்துக்கு முன்னே நிலநடுக்கம் ஏற்பட்டது என்றாள். 7.1 அளவுன்னதும் ஆடிப்போயிட்டோம். இத்தனைக்கும் இது நம்மூரில் இருந்து நாப்பது கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டது.

அதிகாலை 4.35 மணி என்பதால் மக்கள் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்துருப்பாங்க. தெருக்களில் கார்களின் நடமாட்டம் இல்லாததால் பாதிப்பு ஒன்னுமில்லை(யாம்) விடாமல் 40 விநாடிகளுக்கு பூமி ஆடி இருக்கு. என்ன ஆச்சோன்னு வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்த ஒருவர் மேலே அவர் வீட்டு புகைபோக்கி இடிஞ்சு விழுந்து கையில் அடி. இதே போல் இன்னொரு நபருக்கு எங்கிருந்தோ பாய்ஞ்சு வந்து விழுந்த கண்ணாடிச் சில்லால் காயம். ஒரு நபர் மாரடைப்புலே இறந்தார். எமனும் எர்த்க்வேக்கும் ஒரே நேரத்துலே கிளம்பி வந்துருந்தாங்க.

நிறைய இடங்களில் கம்பங்களும் லைன்களும் பழுதாகிப்போனதால் மின்சாரம் இல்லாமல் போச்சு. நல்லவேளை இந்தமட்டோடு போச்சேன்னு எல்லோருக்கும் கொஞ்சம் நிம்மதி. ஆனாலும் அவசரநிலை அறிவிச்சது அரசு. ராணுவம் உதவிக்கு வந்து தேவையானவைகளைச் செஞ்சது.

அப்பப்ப லேசா ஆஃப்டர்ஷாக்ஸ் வர்றதும் போறதுமா இருந்த நிலையில் மக்கள் ஏறத்தாழ இதை மறந்தே போயிட்டாங்க.

அஞ்சரை மாசம் கடந்துபோனதும் ஒரு செவ்வாய்க் கிழமை பகல் 12.51. கிறைஸ்ட்சர்ச் ஹரே க்ருஷ்ணா கோவிலில் பகல் நேர பூஜை பாதி வழியில். ஊதுபத்தி, தீபம், மலர், கைகுட்டை, விசிறின்னு ஒவ்வொன்னா சேவை காண்பிச்சு ஆரத்தி எடுக்கும் சமயம். இடது கையால் வெங்கலமணியை ஆட்டிக்கிட்டே வலது கையின் மயிலிறகு விசிறியால் சைதன்ய மஹாப்பிரபு, நித்யானந்த மஹாப்பிரபு தெய்வச்சிலைகளுக்கு விசிறிக்கிட்டு இருக்கார் பண்டிட் சிவானந்த தாஸர். லேசா ரெண்டு சிலைகளும் முன்னும்பின்னுமா ஆடுது. என்னவோ ஏதோன்னு கையில் இருந்த மணியையும் விசிறியையும் விசிறிப்போட்டுட்டுச் சிலைகளின் இடுப்புகளை ரெண்டு கைகளாலும் அணைச்சுப் பிடிக்கிறார். அடுத்த நொடி மூணுபேருமா பளிங்குத்தரையில் விழுந்து கிடக்கறாங்க.

தலையைத் திருப்பமுடியாமல் அப்படி ஒரு வலி. சிரமப்பட்டு கண்ணை ஓட்டுனா கடவுளர்களின் உடைந்த பாதங்களும் கைகளும் கண்ணுலே தென்படுது. இந்தப்பக்கம் பார்த்தால் தலையும் உடலுமா...... அட ராமான்னு எழுந்திருக்க முயலும்போது தலைக்கு மேலே விர்ன்னு பறந்து போய் விழுது மூலவர் நிற்கும் ஸ்வாமி மண்டபம். தடதடன்னு சாமியாட்டம்!
முன்பு
பின்பு

( இது ,சம்பவம் பற்றி அவர் எழுதி வச்சுருந்த பதிவில் இருந்து )தோழியின் பாட்டனாருடைய இறுதிச்சடங்குக்குப் போயிட்டு மகள் நகருக்குத் திரும்பி வந்துக்கிட்டு இருக்காள். சீராக ஓடிக்கிட்டு இருந்த வண்டி ஒரு குலுக்கலோடு நின்னு மறுபடி கிளம்பி இருக்கு. எஞ்சின்லே கோளாறா இருக்கலாம். செக் பண்ணனும் நல்லவேளையா அந்த கிராமத்துச் சாலையில் வேற வண்டிகள் ஒன்னுமே வரலை.

சிங்கப்பூர் பார்க் ராயல் ஹொட்டேலில் நாம் தங்கி இருந்த அறைக்கு எழுத்தாளர் தோழி ஜெயந்தி சங்கர் என்னைச் சந்திக்க வந்துருக்காங்க. இன்னிக்கு லேடீஸ் டே அவுட் எங்களுக்கு. கோபால் அவருடைய ஆஃபீஸ் வேலை விஷயமா நியூஸியில் இருந்து சிங்கை வழியாப் பயணம் செய்யும் மேலதிகாரியை சந்திக்கக் கிளம்பிக்கிட்டு இருக்கார். முதல்நாள் விமானத்தில் கிளம்பி வந்தவர். இங்கே சில வேலைகளை முடிச்சுட்டு தாய்லாந்து போறார். அவருக்கு அடுத்த விமானம் பிடிக்க நாலைஞ்சு மணி நேரம் இருக்கு. இடைப்பட்ட நேரத்தில் ஒரு முக்கிய மீட்டிங்.

தற்செயலா டிவியை ஆன் செஞ்ச கோபால்...... 'ஐயோ கிறைஸ்ட்சர்ச்சில் எர்த் க்வேக்'ன்றார். கட்டிடங்கள் இடிஞ்சு கிடக்கும் படங்களைக் காமிச்சுக்கிட்டு இருக்காங்க. என்னவோ ஏதோன்னு பதறி அடிச்சுக்கிட்டு மகளை அலைபேசியில் கூப்பிட்டால் தொடர்பு கிடைக்கலை. தரை வழியில் கூப்பிட்டாலும் தொடர்பு இல்லை. மற்ற நண்பர்கள் யாருக்காவது தொலைபேசி விவரம் கேட்கலாமுன்னா....மனக்கலவரத்தில் யாருடைய தொலைபேசி எண்களுமே நினைவில் இல்லை. சுத்தம்:(

நகரின் முக்கிய தேவாலயம் இடிஞ்சு விழுந்துருக்கு.

விடாம திரும்பத்திரும்ப எண்களை அமுக்கி கடைசியில் ஒருவழியா மகளைப் பிடிச்சோம். 6.3 அளவில் வந்துருக்கு. பாதிப்பு விவரம் ஒன்னும் சொல்லலை. ஆனால் நகரின் பல இடங்களில் மின்சாரம் தண்ணி ரெண்டும் இல்லை. அவசர நிலை அறிவிச்சு இருக்காங்க. டிவி வரலை. ரேடியோவில்தான் செய்தி வருது. நிலமை மோசமாத்தான் இருக்கு எல்லோரும் வேடிக்கை பார்க்கன்னு கிளம்பிவராம அவுங்கவுங்க வீட்டில் பத்திரமா இருங்க. குழாய்த்தண்ணீரை அப்படியே குடிக்காமல் நல்லாக் காய்ச்சிக்குடிங்கன்னு சொல்றாங்க என்றாள். கோபாலும் மனக்கலக்கத்தோடே மீட்டிங் கிளம்பிப்போனார்.

நிலநடுக்கம் வந்து நின்ன சில விநாடிகளில் இடிஞ்சு விழுந்த கட்டிடங்களின் சிமெண்டும் காங்க்ரீட்டும் புகையாக் கிளம்புது.
ஜெயந்தி சங்கர் ஆறுதல்களாச் சொல்லி என்னைத் தேற்றிக்கிட்டே இருந்தாங்க.. கொஞ்சம் மனபாரத்தை குறைக்க வெளியே போகலாமுன்னு நானும் ஜெயந்தியுமா கிளம்பி கிருஷ்ணன் கோவிலுக்குப் போனோம்.

மீட்டிங் முடிஞ்சு திரும்பிவந்த கோபால், அவருடைய மேலதிகாரி பயணத்தைத் தொடராமல் திரும்பி நியூஸி போறாருன்னு விவரம் சொன்னார். அவரையும் இந்த நிலநடுக்க சேதி நடுங்க வச்சுருக்கு. சம்பவம் நடந்தப்ப அவரும் பறந்துக்கிட்டு இருந்தாரே. அவருடைய மனைவியுடன் பேசினாராம். எல்லாம் கதிகலங்கி இருக்காங்க. ரெண்டுச் சின்னக்குழந்தைகள் வேற அவருக்கு. ஏராளமான ஆஃப்டர்ஷாக்ஸ் வர்றதாயும் மக்கள் ஊரைவிட்டுக் கிளம்பிப் போய்க்கிட்டு இருக்காங்கன்னும் சேதி. அவருடைய மனைவியும் காரில் குழந்தைகளை அள்ளிப்போட்டுக்கிட்டு தாய்வீடு இருக்கும் வெலிங்டன் நகருக்குக் கிளம்பிட்டாங்களாம். விமான நிலையம் பூராவும் பயங்கரக் கூட்டம் எப்படியாவது ஊரைவிட்டு எங்கியாவது போக பயணச்சீட்டுக்கு சனம் அல்லாடுதாம்.

இதையெல்லாம் கேட்டதும் மகளுக்கு மீண்டும் தொலைபேசி கிளம்பி சிங்கைக்கு வந்துரு. இந்தியாவில் கொஞ்ச நாள் இருந்துட்டு அப்புறம் பார்க்கலாமுன்னா......... வர்ற ஆபத்து எங்கிருந்தாலும்தான் வரும். அதுக்காக ஊரைவிட்டுப்போறதான்னு கேக்கறாள். உண்மைதானே?
என்ன ஒரு தெளிவு பாருங்க இளைய தலைமுறைக்கு! வீட்டுக்கு எதாவது ஆகி இருக்கான்னா...... அப்படி ஒன்னும் தெரியலை. இன்னும் வெளியே போய் வீட்டைச் சுத்திப் பார்க்கலைன்னு பதில் வருது. சாலைகள் எல்லாம் உடைஞ்சும் கிழிஞ்சும் கிடக்காம்.
மறுநாள் ஹொட்டேல் லாபியில் தெரிஞ்ச முகங்களைப் பார்த்தோம். கிறைஸ்ட்சர்ச் குடும்பம். அந்த குடும்பத்தலைவியின் தாயும் கூட இருந்தாங்க. தகப்பன் இறந்துட்டாராம். அவருடைய இறுதிக்கடன்களைச் செய்ய அஸ்தியுடன் இந்தியாவுக்குப் போய்க்கிட்டு இருக்காங்க. அவுங்க ஊரைவிட்டுக் கிளம்புன ஒன்னரை மணி நேரத்தில் நிலநடுக்கம் நடந்த சேதியை பைலட் அறிவிச்சாராம். பிள்ளைகளை விட்டுட்டு வந்தோமேன்னு..... பதைச்சல். விமானம் தரை இறங்குனதும் தொலைபேசி இருக்காங்க. அவுங்களும் தெரிஞ்சவங்க வீட்டுக்குப் போயிட்டோம். இங்கே கொஞ்சம் பழுது ஆனமாதிரிதான் இருக்குன்னாங்களாம். கவலை படிந்த முகங்கள் மனசை என்னவோ செஞ்சது நிஜம்.

நாங்களும் ரெண்டு நாளில் கிளம்பி சண்டிகர் போயிட்டோம். கெட்ட சேதிகளா வந்துக்கிட்டு இருக்கு. இங்கே நியூஸிக்கு இங்கிலீஷ் படிக்கன்னு சிலபல நாடுகளில் இருந்து மாணவர்கள் வர்றது வழக்கம். நிறைய ஆங்கிலப்பள்ளிகள் இருக்கு. இதுலே ஒன்னு நகரின் மையத்தில் ( Central business district) சி டி வி பில்டிங் ( Canterbury Television Building) என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் 6 மாடிக் கட்டிடத்துலே இருக்கு. இந்தக் கட்டிடம் பூராவும் இடிஞ்சு தரைமட்டமா ஆகிக்கிடக்கு. இதுக்குப் பக்கத்துலே இருந்த Pyne Gould Corporation என்ற இன்னொரு அஞ்சு நிலைக் கட்டிடமும் தரைமட்டம். அந்தப்பகுதியில் இருந்த பலகட்டிடங்களுக்கும் இதே கதி என்றாலும் நிறையப்பேர் உள்ளே இருந்த கட்டிடங்கள்தான் இப்போ சொன்ன ரெண்டும்.
இந்த நிலநடுக்கத்தில் ஏறக்கொறைய 200 பேர் மரணம் அடைஞ்சுருப்பாங்கன்னு ஊகங்கள் வர ஆரம்பிச்சது. ஆங்கிலப்பள்ளியில் மட்டும் ஆசிரியர்களும், இருவது நாட்டைச்சேர்ந்த மாணவர்களுமா 64 பேர் உயிரிழந்தாங்க.

இந்தப் பேருந்துகளில் பயணிச்சவர்களில் எட்டுப்பேர் உயிரிழந்துருக்காங்க.

தொடரும்.........................:(

Monday, August 29, 2011

1 2 3 4 வீ டோண்ட் வாண்ட் அ லிக்கர் ஸ்டோர்........

"ஹென்றிக்கு என்ன சொல்லணும்?"

"நோஓஓஓ "

"நிறைய இருப்பது என்ன?"

"குடி குடி குடி."

"1 2 3 4"

"வீ டோண்ட் வாண்ட் அ லிக்கர் ஸ்டோர்........"

இப்படி ஸ்லோகன்களை முழங்கிக்கிட்டு சாலையில் நடந்து போகும் கூட்டத்தில் ஒருத்தியாப் போய்க்கிட்டு இருக்கேன். நாலு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்ற எங்கூர் கணக்கில் இது பிரமாண்டமான கூட்டமா இருக்கு. ஏறக்கொறைய 200 பேர்! சரியா பகல் பனிரெண்டே முக்காலுக்கு ஊர்வலம் ஆரம்பிக்கும். கட்டாயம் வந்து இந்த இடத்துலே பகல் பன்னிரெண்டுலே இருந்து கூடலாம். உங்க எதிர்ப்பைக் காமிக்க உங்களுக்கு விருப்பமான ஸ்லோகன்களை அட்டையில் எழுதிக்கொண்டு வந்து கலந்துக்குங்கன்னு ஒரு வாரம் முன்பே நோட்டீஸ் நம்ம தபால்பொட்டிக்கு வந்துருச்சு. என்ன ஏதுன்னு நோட்டீஸைக் கவனிச்சால்....... இது நம்ம பேட்டை விவகாரம்!
நம்மூட்டாண்டை ஒரு பெட்ரோல் ஸ்டேஷன் இருந்துச்சு நான் ஊரைவிட்டுப் போகும்போது. அதுக்கு நேரெதிரே இருக்கும் தெருவுலேதான் திரும்புனா நம்ம வீடு . ஊர்திரும்பினதும் பார்த்தால்..... பங்க் மூடிக்கிடக்கு. யாவாரம் நொடிச்சுப்போச்சுன்னு நினைச்சேன். அந்த இடத்துலே வேற எதாவது நல்ல கடைகண்ணி வருமுன்னு பார்த்தால் ஹென்றி அவரோட யாவாரத்தை விரிவுபடுத்தி இங்கே 'குடி' கடை வைக்கப்போறாராம்.

இந்த ஹென்றி எப்படி இந்த குடி பிஸினெஸ்ஸுலே இறங்கினாராம்? அவரோட நாய்தான் இதுக்குக் காரணமாம். அதனால் அவருக்குக் கொடுக்கவேண்டிய தர்ம அடிகளை நாய்க்குக் கொடுக்கலாமுன்னு யாரும் நினைக்காதீங்கப்பா........ அதுவே பாவம் வாயில்லா ஜீவன். ஒரு நாள் அது ரொம்ப போரடிச்சுப்போய் ஹென்றியோட செருப்பைக் கடிச்சுக் கிழிச்சுச்சின்னச்சின்னத் துண்டுகளா ஆக்கிக்கிட்டு இருக்கும்போது ஹென்றி வேலையில் இருந்து வீடு திரும்பி இருக்கார். அடடா..... நாய் இப்படிக் கால் செருப்பைக் கடிச்சுக் கடாசி இருக்கேன்னு உக்காந்து யோசிச்சுக்கிட்டே தானே காய்ச்சிவடிச்சச் சொந்த சரக்கைக் குடிக்கும்போது ஐடியா க்ளிக் ஆச்சு.

பேசாம வேலைக்குப் போகும்போது நாயைக்கூடக் கூட்டிக்கிட்டுப் போகலாமே! ஆனால் எல்லா இடத்திலும் நாய்களுக்கு அனுமதி இல்லையே. சொந்தத் தொழிலா இருந்தாப் பிரச்சனை இல்லை பாருங்க. அதனால் இப்போ செய்யற வேலையை விட்டுட்டு இன்னும் கொஞ்சம் சரக்கைக் காய்ச்சி வடிச்சு விக்கலாமா..........கடையில்வாங்குறதை விட இது நல்லா 'ருசி' (?) யா இருக்கே. கடைக்காரன் கொள்ளை லாபத்துக்கு விக்கும்போது நாம் கொஞ்சம் சல்லீசா வித்தால் சரக்கு விலை போகாதா என்ன?

அப்படி ஆரம்பிச்சதுதான் இன்னிக்கு ஏகப்பட்ட கிளைகளோடு ரம்ரம்முன்னு நடக்குது. ஆரம்பிச்சப்ப ஹென்றிக்கு வயசு இருபது சொச்சம்.! வியாபாரத்துக்குப்பெயர் வைக்கவும் ரொம்ப மெனெக்கெடலை .
Henry's Beer, Wine and Spirits தெற்குத்தீவில் மட்டும் 17 கடைகள். சும்மாக்கிடக்கும் இடத்துலே பதினெட்டாவதைத் தொடங்க லைசன்ஸ் கேட்டு நம்ம சிட்டிக் கவுன்ஸிலுக்கு விண்ணப்பிச்சதும் அவருக்கு அனுமதி கொடுத்துட்டாங்க. எல்லோரும் நகரில் நடந்த நிலநடுக்கத்தால் ஆடிப்போய் இருந்துருப்பாங்க போல!

ஹென்றி எத்தனை கடை வேணா திறந்துக்கட்டும் ஆனால் அது எங்க பேட்டைக்குள் இருக்கக்கூடாதுன்றதுதான் இப்போ பிரச்சனை. இங்கே நியூஸியில் குடிக்க அனுமதி கிடைக்கும் வயசு இருவதா இருந்தது ஒரு காலத்தில். அதை 1999 வது வருசம் பதினெட்டாக் குறைச்சாங்க ( என்ன கேடுகாலமோ!) அதைத் தொடர்ந்து குடியால் ஏற்படும் குறறங்கள் விபத்துக்கள் எல்லாம் கொஞ்சம்கொஞ்சமா வளர்ந்து இப்போ விஸ்வரூபம் எடுக்கும் நிலையில் இருக்கு. முந்திமாதிரியே இருவதாக்கணுமுன்னு ஒரு பிரிவு மக்கள் போராட்டம் ஆரம்பிச்சுருக்காங்க.

பதினெட்டுகள் என்ன சொல்றாங்கன்னா....... நியூஸி சட்டத்தின்படி 18 வயசாச்சுன்னா, அப்பா அம்மாகிட்டே கேக்காமலேயே கல்யாணம் செஞ்சுக்கலாம்., குழந்தை பெத்துக்கலாம், உலகம் சுத்தத் தனியாக் கிளம்பிப் போலாம், படிக்க, இல்லை தொழில் தொடங்கன்னு கடன் வாங்கலாம், பேங்க் லோன் எடுத்து வீடுகூட வாங்கிக்கலாம், ராணுவத்தில் போய் சேர்ந்துக்கலாம், வீடியோக் கடைகளில் போய் பலான டிவிடி கூட வாங்கிப் பார்க்கலாம், சூப்பர்மார்கெட்டுலே போய் ஒரு பாக்கெட் சிகெரெட் கூட வாங்கலாம். ஆனால் கல்யாணம் பண்ணிக்கிட்ட சந்தோஷத்தையோ இல்லை புதுசா வீடு வாங்கிக்கிட்ட சந்தோஷத்தையோ கொண்டாட ஒரு க்ளாஸ் பியரோ, ஷாம்பெய்னோகூட குடிக்க வயசு அனுமதிக்கலைன்னு சொல்றது எப்படி வெளிவேஷம் பாருங்க

தொலைங்கன்னு பதினெட்டு வயசுலே 'எல்லாம் ஓப்பன் ஸிஸமே' பண்ணிடுச்சு அரசு. இப்ப என்னன்னா..... நல்லா குடிச்சுட்டு அக்கம்பக்கம் குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் பூமாலையைப் பிச்சுப்போடும் குரங்குகளாட்டம் ஆடுதுங்க. குடிபோதையில் வண்டி ஓட்டிப்போய் அடுத்தவனுக்கு ஆபத்து உண்டாக்குதுங்கன்னு ஏகப்பட்ட புகார்கள். அதிலும் நம்ம பேட்டையில்தான் இங்கத்து பல்கலைக்கழகம் வேற இருக்கு. ஒவ்வொரு டெர்ம் கடைசி நாளாச்சுன்னா கழகக்கண்மணிகளால் கலகம் கூடிப்போகுது.

பொறுத்துப்பொறுத்துப் பார்த்த குடி இருப்புப்பகுதிகள் தங்களுக்குள் ஒரு அசோஸியேஷன் உருவாகிக்கிட்டு விடாமல் புகார் கொடுத்து காவல்துறையோடு மல்லுக் கட்டி சில பல இடங்களில் குடிக்கத் தடை வாங்கி இருக்காங்க. ஆனாலும் இந்தப்பகுதிகளில் எட்டு குடிக்கடைகள் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. இந்த அழகுலே புதுசா இன்னொண்ணு தொடங்கிக்க ஹென்றிக்கு அனுமதி கொடுத்ததை வாபஸ் வாங்கணுமுன்னு ஒரு போராட்டம்.
போன சனிக்கிழமை பேட்டைவாசிகளின் எதிர்ப்பைக் காமிக்க நாள் ஒதுக்கியாச்சு. இதுக்கு மக்கள் கூடும் இடம் நம்ம வீட்டுலே இருந்து ஒரு ரெண்டு கிலோமீட்டர் இருக்கும். நானும் பனிரெண்டரைக்குக் கிளம்பிப் பொடிநடையா அந்த இடத்துக்குப் போய்க்கிட்டே இருக்கேன். ஊர்வலம் எப்படியும் நம்ம தெருமுன்னால்தான் வரப்போகுது. அதனால் பாதியில் இணைஞ்சுக்க்லாமே! ஒன்னேகால் கிலோமீட்டரில் ஊர்வலத்தை எதிர்கொண்டேன். கூடச்சேர்ந்து சாலை ஓரமா நடைபாதையில் வந்து பெட்ரோல் பங்கு முன்னால் கூடி இன்னும் கொஞ்சம் கூவி விளிச்சுக் கோஷம் போட்டோம். பெரிய க்ரூப் ஃபோட்டோ வேற! டிவிக்காரங்க வேற படம் எடுத்துக்கிட்டே எங்ககூடவே வர்றாங்க.
இதான் அந்த பெட்ரோல் பங்க். இடதுபுறக் கட்டிடம் கிண்டர் கேர்


பெட்ரோல் பங்குக்கு எதிர்ப்பக்கம் கிண்டர் கேர் என்ற பெயரில் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்னு இருக்கு. தெற்குத்தீவின் மேற்குப்பகுதியில் இருந்து நகருக்கு வரும் முக்கிய சாலை இது. நூல்புடிச்சாப்புலே இதுலே போனால் நகரின் நடுசெண்டருக்குப் போயிருவோம். வலதுபக்கம் இருக்கும் தெருவில் நுழைஞ்சால் ஒரு 400 மீட்டரில் ஆரம்பப்பள்ளிக்கூடம். எந்த வகையில் பார்த்தாலும் குடிக்கடைக்கான சரியான இடமா இது இருக்க வாய்ப்பே இல்லை.

ஊர்வலம் மறுபடி கிளம்பி அந்த ஆரம்பப்பள்ளி ஹாலுக்குள் நுழைஞ்சது. கட்சி வேறுபாடில்லாம முக்கிய கட்சிகளின் பாராளுமன்ற அங்கங்களும் வந்து காத்திருந்தாங்க. ஆதரவு கொடுக்கறாங்களாம் அரசியல் வியாதிகள். இன்னும் மூணு மாசத்துலே தேர்தல் வருதே! இவ்வளவு பெரிய கூட்டத்தை மிஸ் பண்ண தைரியம் வருமா? வரப்போகும் தேர்தலில் இந்தப்பேட்டைப் பகுதியில் போட்டி இடப்போகும் வேட்பாளர்களும் வந்துருந்தாங்க. மக்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு! நழுவவிடப் பைத்தியமாப் புடிச்சுருக்கு:-)
நேஷனல், லேபர், க்ரீன் கட்சி வேட்பாளர்கள் எல்லோருமே முதல்முறையா தேர்தலுக்கு நிற்கும் இளைய தலைமுறை. ஆர்வமும் ஆவலும் கொப்பளிககும் புதுமுகங்கள். எதோ பார்ட்டிக்கு வந்தாப்புலே எல்லோரும் எல்லோருடனும் கலந்து பேசிக்கிட்டே இருந்தாங்க. உன் கட்சி என் கட்சி என்ற விரோத மனப்பான்மை ஒன்னும் இல்லையாக்கும் கேட்டோ!
ரொம்பப்பழைய முகமா இப்பத்து பார்லிமெண்ட் அங்கம் ஜிம் ஆண்டெர்டன் வந்துருந்தார். ஸ்பீச் கொடுக்க ஆரம்பிச்சாங்க. புதுமுகங்கள் உட்பட எல்லோரும் ஒரு சில நிமிசங்கள் மட்டுமே எடுத்துக்கிட்டு போராட வந்திருக்கும் எங்கள் தைரியத்தையும் ஒற்றுமையையும் பாராட்டிக் கொஞ்சம் ஐஸ் வச்சாங்க. கடைசியா ஜிம் பேசுனார்.

நல்ல பழுத்த அரசியல்வியாதியின் பண்பட்ட பேச்சு. எல்லோரையும் அப்படியே கட்டிப்போடும்வகையில் நிதானமான அழுத்தமான, தேர்ந்தெடுத்த சொற்கள். நம்ம விஜயகாந்த் போல புள்ளி விவரங்களை அடுக்கடுக்கா எடுத்து வீசுனார். இவர் 27 ஆம் வயசுலே அரசியலுக்கு வந்தவர். 46 வருசம் வெவ்வேற பதவிகள் வெவ்வேற கட்சிகள் இப்படி இந்தக் குட்டையில் ஊறிக்கிடக்கார்.

குடிப்பது பிரச்சனை இல்லை. ஆனால் எப்படி எவ்ளோ குடிக்கிறாங்கன்றதுதான் பிரச்சனையாம். நாப்பது லட்சம் ஜனத்தொகை இருக்கும் நாட்டுலே மொடாக்குடியர்கள் 750,000 பேர்கள்ன்னு கணக்கெடுப்பு சொல்லுது.( வெளங்கிரும் போங்க!) குடிபோதையில் நடக்கும் குற்றங்கள் முக்கியமா குடும்பத்தினரையும் சமூகத்தையும் வதைக்கும் கொடுமைகள் உட்பட ஒரு நாளைக்கு 1350 புகார்கள் பதிவாகுது.

குடிக்கம்பெனிகள் லாபத்தை மட்டும் மனசுலே வச்சுக்கிட்டு ஏகப்பட்ட விளம்பரங்களுக்காகச் செலவிடும் தொகை ஒரு நாளைக்கு 300,000 டாலர்கள். சின்ன நாட்டுக்கு இதெல்லாம் கூடுதல் இல்லையோ? இளவயதுக்காரர்கள் அளவுக்கு மீறிக்குடிச்சுட்டுக் கொஞ்சம் கொஞ்சமா சமூகவிரோதிகள் ஆகிக்கிட்டு வருவதைத் தடுக்கணும். குடிக்கடைகள் வைக்க கண்டப்படி அனுமதி கொடுத்துறக்கூடாது. அரசு ஒரு பக்கம் கவனிச்சுக்கிட்டே இருந்தாலும் மக்கள் என்னமாவது நடக்கட்டுமுன்னு விட்டேத்தியா இல்லாம இப்படிப்போராடத் துணிஞ்சது மகிழ்ச்சியா இருக்குன்னார். 73 வயசுப் பழம்பெரும் அரசியல்வாதியின் பேச்சில் அரைமணி நேரம் போனதே தெரியலை!
அனைத்துக் கட்சிகளின் புது முகங்கள் எல்லோரையும் கவனிச்சுப் பார்த்து பொறுப்பானவர்களைத் தேர்தலில் தேர்ந்தெடுங்கன்னு எங்களுக்கு மெஸேஜ் கொடுத்துட்டு அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுக்கப் போவதாகச் சொன்னார். ஒன்பது வருசங்களுக்கு முன்னே இவர் ஆரம்பிச்ச ப்ராக்ரஸிவ் கட்சி(Progressive Party) ஒரே ஒரு இடம் கடந்துபோன தேர்தல்களில் ( ஒன்னே ஒன்னு கன்னே கன்னுன்னு கருவேப்பிலைக் கொத்து மாதிரி ) ஜெயிச்சுருக்கு இப்ப இவரும் 'ஓய்வெடுக்கப் போயிட்டால்' கட்சி என்ன ஆகுமோ தெரியலை!

சொன்னதை மெய்ப்பிக்கும் முகமா ஜிம்மின் தொகுதியில் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் அரசியலில் இருந்து விலகும் சேதியைச் சொல்லி இதுவரை ஆதரவு அளித்ததுக்கு மனமார்ந்த நன்றியையும் சொல்லி வீட்டு விலாசத்துக்குத் தனிப்பட்ட மடல்கள் அனுப்பி இருக்கார். நமக்கும் ரெண்டு கடிதங்கள் வந்து சேர்ந்தன.

டியர் துள்சி, (கணினி யுகத்துலே இதெல்லாம் எவ்ளோ சுலபமா ஆகி இருக்கு பாருங்க.) 27 வருசமா உங்க பேட்டைக்கான பார்லிமெண்ட் அங்கமா என்னை சேவை செய்ய அனுமதிச்சதுக்கு நன்றி. வரப்போற தேர்தலில் நான் நிக்கப்போறதில்லை. எனக்குப் போடப் போகும் வாக்கை லேபர் கட்சி வேட்பாளருக்குப் போட்டுருங்க. ரொம்ப திறமைசாலியான வேட்பாளர் மீகன் வுட்ஸ் உங்களுக்குக் கிடைச்சுருக்காங்க!

டிஸ்கி: இந்த கடிதம் அனுப்பு ஆன மொத்த செலவும் எங்க கட்சி நிதியின் பொறுப்பு. அரசாங்கக் காசை இதுக்காக செலவு செய்யவில்லை.

வெற்றி ஹென்றிக்கா இல்லை எங்களுக்கான்னு முடிவு வந்ததும் சொல்றேன். எழுத்தாளருக்குச் சமூகப்பொறுப்பு இல்லைன்னு யாரும் இனி சொல்லப்பிடாது, ஆமாம்!Thursday, August 25, 2011

இலவசக்கொத்தனார் இடம் கொடுத்தாராம்!!!!

சஞ்சய் கடைக்குப் பொரி வாங்கப் போனேன். அப்படியே நாம் மீண்டு(ம்) இங்கே வந்துட்ட விவரத்தையும் சொல்லணும். சஞ்சய்தான் ஸ்வாமி நாராயண் சத்சங்கத்துலே இருக்கும் முக்கிய 'புள்ளி'களில் ஒருவர்.

' அடடே! எப்போ வந்தீங்க? கோவில் வந்தாச்சு தெரியுமா?'ன்னார்! எங்கே எப்போன்னு விவரம் கேட்டுக்கிட்டு அன்றைக்கு அங்கே நடக்கப்போகும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி பூஜைக்குப் போனோம்.

பள்ளிக்கூட ஹால்களில் நடந்துக்கிட்டு இருந்த ஸ்வாமி நாராயண் சத்சங்கம், யுவக் சமாஜ், மஹிளா சமாஜ் எல்லாம் இனிமேப்பட்டுக் கோவிலில் நடக்குமாம். ரொம்ப நல்லதாப் போச்சு. அடுத்தவாரம் எங்கே நடக்கப்போகுது என்ற தடுமாற்றம் இல்லை பாருங்க.

இந்த BAPS ஸ்வாமிநாராயண் ஸன்ஸ்த்தா (சங்கம்)வின் 'தலை'புராணத்தைக் கேட்டுக்கிட்டே வாங்களேன் கோவில்போய்ச் சேரும்வரை!

1907 வது வருசம் மக்கள் சமுதாயத்துக்கு ஆன்மீக உணர்ச்சி, அனுபவங்கள், இறைநம்பிக்கைகள் கலைகலாச்சாரம், இளையதலைமுறைக்கு வழிகாட்டுதல் இப்படி நல்ல சமாச்சாரங்கள் பெருகவேணுமேன்னு உலகளாவிய இந்த அமைப்பு ஆரம்பிச்சாங்க.

பால் பாலிகா மண்டல் ( 5 முதல் 13 வயதுவரையான சிறுவர் சிறுமியருக்கு.

கிஷோர் கிஷோரி மண்டல் பதின்மவயதினருக்கு ( இதில் 14 முதல் 23 வயதினர்)

யுவக் யுவதி மண்டல் இளைஞர்களுக்கானது ( 24 முதல் 30 வரை வயது வரம்பு)

சத்சங் மண்டல் மற்ற அனைத்து வயதினருக்கும்.

இந்த முறையில்தான் இந்த கோவில்களும் இதைச்சார்ந்த சங்கங்களும் மக்களுடன் கலந்து இருக்கு.

இப்போது இதன் தலைவரா இருக்கும் ப்ரமுக் ஸ்வாமி மஹராஜ் இந்த அமைப்பின் அஞ்சாம் பீடமா இருக்கார். வயசு 90 ன்னு சொன்னா நம்பறது கஷ்டம்தான். நியமங்களை விடாமல் அனுசரிப்பதால் உண்டாகும் உடல்வலிமை, மனவலிமை ஒன்னு சேர்ந்து பார்த்தவுடன் நம்ம மனசுலே ஒரு மரியாதையும் அன்பு தோன்றும்வண்ணம் இருக்கார். எளிமையானவர். வீண் பந்தா கிடையாது. சுத்திவர ஆள் அம்பு படை ஒன்னும் இல்லாம இருக்கார். சிரிக்கும் கண்கள். தேஜஸ் தேஜஸ்ன்னு சொல்றாங்களே...அது இதுதான் போல!

தன்னுடைய 19 ஆம் வயசுலே சந்நியாஸி ஆகி இருக்கார். கிராமம் கிராமமாப்போய் மக்களுக்கு நல்ல உதவிகள், உபதேசங்கள் எல்லாம் செஞ்சு ஆன்மீகத்தை வளர்த்துருக்கார். இதுவரை 15,500 இந்திய கிராமங்களுக்கும் அம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் எதாவதொரு வகையில் சேவை செஞ்சுருக்கார். தன் அம்பதாவது வயசுலே தலைமை பீடம் அஞ்சாவது குரு.
இப்ப உலகெங்கும் பலநாடுகளில் கட்டப்பட்டிருக்கும் ஸ்வாமிநாராயண் கோவிலுக்கு காரணகர்த்தா இவர்தான். இதுவரை 800 கோவில்கள் சின்னதும் பெருசும் பிரமாண்டமானதுமா கட்டிக்கிட்டே போறாங்க. ஸ்வாமிஜியும் இடைவிடாது பலபாகங்களுக்கும் பயணம் போய் ஊக்குவிச்சுக்கிட்டே இருக்கார், இவரைப் பின்பற்றி சந்நியாஸிகளா இருக்கறவங்க இன்றையக் கணக்குக்கு 800 பேர். இவுங்க எல்லோருடைய உழைப்பாலும்தான் புதுக் கோவில்கள் உருவாகிக்கிட்டே போகுது! நியூஸி ஆக்லாந்தில்கூட ஒரு பெரிய கோவிலும் கல்ச்சுரல் செண்டரும் கட்டி ஒரு ஏழெட்டு வருசமாகப்போகுது.

எங்கூருக்கு (கிறைஸ்ட்சர்ச்) சில சந்நியாசிகள் முதல்முதலா வந்தது 1994 இல். உள்ளூர்க்காரர் ஒருவர் வீட்டில் வந்து தங்கியதும் அவர்களைச் சந்திக்கவந்த சிலருடன் சேர்ந்து இந்த சத்சங்கம் ஆரம்பிச்சது. இந்த சங்கம் அப்படியே வளர்ந்து மக்களின் ஆன்மீகத்தேவைகளை நடத்தி வைக்கும் வகையில் வாரக்கூட்டங்கள் மாதக்கூட்டங்கள் , பண்டிகைகால சிறப்பு வழிபாடுகள் எல்லாம் நடத்திக்கிட்டே படிப்படியா உயர்ந்து இன்னிக்குக் கோவில் கட்டும்வரைக்கும் வந்து நிக்குது.

'
இவுங்க சொல்ற ஏரியாவில் எதாவது வீட்டை வாங்கிக் கோவிலா மாத்தி இருப்பாங்களோன்னு ஒரு சம்சயம். அங்கே விலாசம் தேடிப்பிடிச்சுப் போனால் ஒரு ஹால்!

பூர்வஜென்மப் பெயர் கான்கார்டு லாட்ஜ். இலவசக்கொத்தனார்கள் லட்ஜ்களைக் கட்டிப்போட்டுச் சந்திக்கும் இடம். மஸோனிக் லாட்ஜ்ன்னு இலவசக்கொத்தனார்கள் கூடிப்பேசும் இடங்கள் எங்கூரில் 15 இருக்கு. பரம ரகசியமா நடக்கும் இந்தக்கூட்டங்கள் என்று பதிவர் நானானி ஒரு சமயம் சொல்லி இருக்கார்:-) இந்தப் பதினைஞ்சில் ஒன்னு இப்போ கோவிலா மாறிப்போச்சு.
ஏற்கெனவே இருந்த ஹாலில் வெளிப்புறம் மாறுதல்கள் ஒன்னும் செய்யாம அப்படியே வச்சுருக்காங்க. குடியிருப்புப் பகுதியா இருப்பதால் சிட்டிக் கவுன்ஸில் தனிப்பட்டுத் தெரியாமல் இருக்க கோபுரத்துக்கோ இல்லை மற்ற அலங்காரத்துக்கு (இப்போதைக்கு ) அனுமதிக்கலை போல! இந்த ஹால் கல்யாணங்களுக்கும் மற்ற குடும்ப விழாக்களுக்கும் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு விடப்பட்ட காரணத்தால் இந்தியக்கோவில் வச்சுக்க அந்த ஏரியாவில் எதிர்ப்பு ஏதும் இல்லாமல் சுமுகமா முடிஞ்சுருக்கு டீல்:-) எந்த விழாவா இருந்தாலும் இரவு 9 இல்லை 9.30க்கு முடிச்சுக்கணும். பத்து மணிக்குப்பிறகு 'மூச்' விடக்கூடாதுன்றது இங்கத்து சட்டம்.

ஹாலோடு இடம் வாங்கியதும் எப்படி அமைக்கபோறாங்கன்னு நம் மக்களுக்கு விளக்கி வரைபடம் எல்லாம் பக்காவாக் கொடுத்து அதுலே சதுர மீட்டருக்கு $ 1001 டொனேஷன் நிர்ணயம் செஞ்சு நம் மக்களிடம் வசூலிச்சாங்களாம். இதெல்லாம் கடந்த ஒன்னரை வருசமா நடந்த விஷயங்கள்.
முன்புற ஃபோயரில் ஒரு பக்கம் புக் ஸ்டால், இடது பக்கம் காலணிகள் வைக்க மர அடுக்குகள் வச்சுருக்காங்க. வலப்பக்கம் சின்ன காரிடோர் வச்சு அதைக் கடந்ததால் ஓய்வறைகள்.
வாசல்கதவுக்கு நேரா இருக்கும் கண்ணாடி வச்ச ரெட்டைக் கதவு திறந்து உள்ளெ போனால் பெரிய ஹால். வலப்புறத்தில் சுவத்துக்குப் பக்கமா ஒன்னரை மீட்டர் இடம் விட்டு ஒரு நீள மேடை. அதன்மேல் சின்னதா ஆறு அலங்காரத்தூண்கள். தூண்களுக்கிடையே உள்ள இடைவெளியில் அஞ்சு மாடங்கள். அங்கேதான் கடவுளர்களின் சிலைகள் வரப்போகுது. இன்னிக்குக் காலையில்தான் தூண்களுக்குத் தங்க வண்ணம் அடிச்சாங்க(ளாம்)
ராமர் சீதை, ஆஞ்சநேயர் ஒரு மாடம். ராதாகிருஷ்ணா இன்னொரு மாடம், சிவன் பார்வதி புள்ளையார் இன்னொன்னில், பகவான் ஸ்வாமிநாராயணனும் அக்ஷர்ப்ரம்மா என்ற குணாதிதானந்த் ஸ்வாமிகள் நடுமாடம், இன்னும் நாலு குருஜிக்களின் படங்கள் ஒரு மாடமுன்னு ஒரு கணக்கு.
பெரிய ஹாலின் குறுக்கே 'லக்ஷ்மண ரேகா' போல ஒரு சின்னக் கயிறு தடுப்பு. சாமி மேடைக்கு முன்பக்கம் ஆண்களுக்கும் அந்த கயிற்றுக்குப் பின்னால் பெண்களுக்கும் இடங்கள். இந்த ஸ்வாமிநாராயண் கோவில் நியமங்களில் எனக்குப் பிடிக்காத விஷயம் இது ஒன்னுதான். அதிலும் தகப்பன்கள் முன்புறம் உக்கார்ந்துருக்க, அதைப்பார்த்தச் சின்னப்பிஞ்சுப் பெண்குழந்தைகள் கயிற்றைத் தாண்டி அங்கே ஓடுவதும், என்னமோ உலகமே அழிஞ்சுரும் என்பது போல யாராவது மூத்த பெண்மணிகள் ஓடிப்போய் அதுகளைப் பத்திக் கொண்டு வருவதுமா இடைவிடாத ஒரு விளையாட்டு தனியா நடந்துக்கிட்டே இருக்கு. இதுலே அம்மாக்களோடு ஒட்டிப்பிடிச்சிருக்கும் ஆண்குழந்தைகளை யாரும் முன்பக்கம் துரத்துவதில்லை!

சந்நியாசிகள் இருக்குமிடம் பெண்வாடையே கூடாதுன்னு அந்தக் காலத்துலே இருந்துருக்கும். அதை இப்போதும் கண்டிப்பாக் கடைப்பிடிக்கணுமா? சரி. அவுங்க ரூல்ஸ் அப்படின்னாலும் ..... ஒரு ஏழெட்டு...வேணாம் அஞ்சு வயசுவரை குழந்தைகளுக்குள் பேதமில்லாம வச்சால் என்ன ஆகும்?
ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு ஒரு பக்கம் சின்னதா ஒரு தொட்டில் போட்டு அதில் கிருஷ்ணவிக்கிரகம் ஒன்னு. பொறந்த குழந்தையா இல்லாம நின்னுக்கிட்டு அருள் பாலித்தார்.

ஹாலைக் கடந்தால் இன்னொரு ஹால்/ இது டைனிங் ஏரியா. பக்கத்துலே அட்டகாசமான நவீன அடுக்களை! டைனிங் ஏரியாவிலும் முதுகோடு முதுகு வர்றதுபோல நாற்காலிகளைக் கொண்டு ஆணுக்கும் பொண்ணுக்குமா பாகம் பிரிச்சு வச்சுருக்காங்க. பிரசாத விநியோகம்கூட ஆண்கள் பகுதிக்கு ஆண்கள். பெண்கள் பகுதிக்குப் பெண்கள்!
பஜனைப்பாடல்கள், ஸ்ரீ ப்ரமுக் ஸ்வாமி மஹராஜ் அவர்களின் பிரசங்கம், குடி, சிகெரெட் பழக்கத்தை விட்டொழிக்கும் நீதிபோதனை நாடகம் (யுவக் சமாஜ் மாணவர்களின் நடிப்பில்) ஸ்வாமிநாராயண் கோவில்கள் ஒன்றில் நடக்கும் பூஜையும் மாணவர் விழாவும் காண்பிக்கும் ஒரு பத்து நிமிச வீடியோன்னு நிகழ்ச்சிகள். கோவில் நிதிக்காகவும், குழந்தைகளுக்கு குரு நீல்கண்ட் வாழ்க்கைச் சரிதம் கதையாக விளக்கிச் சொல்லவும் அனிமேஷன் வகையில் தயாரிச்சுக்கிட்டு இருக்கும் படத்துக்கான முதல் பகுதி இன்னிக்கு வெளியீடுன்னு சொல்லி அதுக்குண்டான ட்ரெய்லர் அஞ்சு நிமிசம் காமிச்சாங்க. பக்தர்களுக்கு பத்து டாலர் விலையில் முதல்பகுதி கிடைக்கும்படி ஏற்பாடு. ட்ரெய்லர் அட்டகாசமா இருந்துச்சு. கடைசியில் ஆரத்தி எடுத்து முடிச்சதும் பிரசாதம் !

கச்சிதமா எட்டுமணிக்கு எல்லாம் முடிஞ்சது. குழந்தைகளுக்கான ஆக்ட்டிவிட்டி ரூம், ம்யூஸிக் ரூம், லைப்ரரின்னு அருமையாத் திட்டம் போட்டுருக்காங்க. கோவில் என்று ஆனதும் நித்தியப்படி பூஜை செய்ய பூஜாரி வேணுமேன்னு பூஜாரிக்கு ஒரு குவாட்டர்ஸ் இணைப்பாக அமைச்சுருக்காங்க.

நம்ம வீடுகளில் விசேஷ பூஜை செய்யணுமுன்னா பண்டிட்டுக்கு அலைய வேணாம். கோவில் பண்டிட் அம்பத்தியொன்னு கட்டினால் வந்து நடத்திக் கொடுப்பாராம்., தினம் சாமிக்கு சாப்பாடு நைவேத்தியம் செய்யும்போது ஒரு நாள் நம்ம வகையில் இருக்கட்டுமேன்னால் பதினொரு டாலர் கட்டலாம். இப்படியெல்லாம் ஃபண்ட் ரெய்ஸிங் ப்ளான்ஸ். நல்லாவே ஒர்க்கவுட் ஆகுமுன்னு நினைக்கிறேன். செலவும் நிறைய இருக்கே.

சாமி சிலைகள் அநேகமா வரும் ஃபிப்ரவரி/மார்ச்சில் வந்து சேரலாம். இந்தியாவில் தயாரிப்பு வேலை நடக்குது இப்போ.

எப்படியோ ஊருக்கு ஒரு கோவில் வந்துருச்சு! கோவில் உள்ள ஊரில்தான் குடியிருக்கோமாக்கும் கேட்டோ! :))))Tuesday, August 23, 2011

பேரென்னங்க பேரு? பொல்லாத பேரு!!!

பெயரில் அப்படி என்னதான் இருக்கு? சில சமயங்களில் பெயர் வைக்க என்ன பாடுபடவேண்டி இருக்கு பாருங்க. முதல்லே மனசுக்கு விருப்பமான பெயர்களை எழுதிவச்சுக்கிட்டு ஆணா பொண்ணான்னு ஒரு விவரம் கிடைச்சவுடன்'' அதுலே இருக்கும் ஆண் இல்லேன்னா பெண் பெயர்களை வடிகட்டி அதுலே இருந்து ஒரு அழகான பெயரை செலக்ட் பண்ணறதுக்குள்ளே போதும்போதுமுன்னு ஆயிருதாம்.

கவனிச்சுப்பார்த்தா..... ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள்ளே பொறந்தவங்களுக்கு அப்போ பேஷனா இருக்கும் பெயர் வாய்ச்சுருது. சுமன், ஷோபனா, சந்தியா ன்னு ஒரு குழந்தைகள் வரிசை ஒன்னு இருக்கும். இதில்லாம அந்தந்தக் காலகட்டங்களில் இருந்த சினிமாக்காரர்களின் பெயரில் இன்னொரு வரிசை நிக்கும்.

ஃபிஜி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் புதுசுபுதுசாப் பேர் வைப்பதில் 'பேர்' போனவர்கள். நம் தோழி ஒருத்தர் ஜென்ம நட்சத்திரத்துக்கும் பொருத்தமா இருக்கணும்,பேரும் புதுமையா இருக்கணுமுன்னு மண்டையைக் குடைந்து யோசிச்சு மகனுக்கு ஹேமல் என்று பெயர் வச்சாங்க. நல்லவேளை கேமல் என்று வைக்கலைன்னு மனசுக்குள்ளே(!) நினைச்சுக்கிட்டேன்.

இப்போ எங்கூருலே ரெஜிஸ்தர் பண்ண 29462 பெயர்களில் 421 மேக்ஸ், 380 Bபெல்லா. அடுத்தவரிசைகளில் மோலி, ஜாக், சார்லி, பாப்பி, டோபி, ரூபி, லூஸின்னு இடம் பிடிச்சுருக்கு. அந்த நிமிசத்துக்குத் தோணும் பெயரைச் சட்னு வச்சுட்டா எப்படி?

ஒரு சிலர் மட்டும் நல்லா யோசிச்சு அவுங்களுக்குப் பிடிச்ச விஷயத்தின் பெயரைப் பசங்களுக்கு வச்சுடறாங்க. ஒரு தோழி தன் பசங்களுக்கு வின்னி, ரூபர்ட் ன்னு கார்ட்டூன் கேரக்டர் பெயர்களும், இன்னொரு தோழி அவுங்களுக்கு விருப்பமான கதைகள் வரிசையை வெளியிடும் மில்ஸ் அண்ட் பூன்ஸ் நினைவா ஒருத்தனுக்கு மில்ஸ் இன்னொருத்தனுக்கு பூன்ஸ்ன்னு பெயர் சூட்டிட்டாங்க.

'குடி'யாசை உள்ளவர்கள் வைக்கும் பெயர்கள் டக்கீலா, ஸ்காட்ச், ஜேக் டேனியல்ஸ், ஜிம் பீம், Smirnoff இப்படி இருக்கு. LOTR பிரியர்கள் ஃப்ரோடோ, கேண்டால்ஃப் ( frodo, Gandalf) பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் ப்ரேமிகள், ஜாக் ஸ்பேரோ இன்னும் ஹாரி பாட்டர் மக்கள் அதுலே வரும் 'பாத்திரங்கள்' னு வரிசைகள் வளர்ந்துக்கிட்டே போகும்போது............

உள்ளூர்க்காரர் ஒருத்தர் 'ஷெர்லாக் போன்ஸ்'ன்னு பையனுக்குப் பெயர் வச்சு அவனோட அறைக்கு 221B ( Baker Street) ன்னும் போர்டு எழுதி மாட்டி இருக்கார். யூகிச்சு இருப்பீங்களே...இவர் யாருடைய ரசிகன்னு!

கணினி லவ்வர்ஸ் சிலர் மெகாபைட், பிக்ஸல், கிகா என்று பெயர்கள் வச்சுடறாங்க.

இந்த வகையில் கோபாலகிருஷ்ணன் இந்த ஊருக்கே ஒருத்தனா இருந்தேன். எல்லோருக்குமா இந்த 'அதிர்ஷடம்' வாய்ச்சுருது:-))))))


PIN குறிப்பு: படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
Sunday, August 21, 2011

கண்ணன் வந்த நேரம்!

ஊருலகம் முழுசும் கூப்பிட்ட வீட்டுக்கெல்லாம் ஓடவேண்டிய தினமாம். 'சட் புட்டுன்னு எதையாவது செஞ்சு தா'ன்னான். ஆஹா.... நோ ஒர்ரீஸ்ன்னு தெரிஞ்சமாதிரி ஒரு அவல், தயிர்சாதம், முறுக்கு, அப்பம் நாலும் செஞ்சு அஞ்சாவதாக் கொஞ்சம் பழங்களும் கொடுத்தேன்.

கொடுத்ததுக்கு சாட்சி?

இந்தப்படம்தான், வேறென்ன?

எல்லாம் க்ருஷ்ணார்ப்பணம்!

அனைவருக்கும் கண்ணன் பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

PIN குறிப்பு: எங்கூர் ஹரேக்ருஷ்ணா கோவில் நிலநடுக்கத்தால் இடிஞ்சு விழுந்துருச்சு. ஆனால் புதுசா ஸ்வாமி நாராயண் கோவில் ஒன்னு முளைச்சுருக்காம் ஜூலை 26 இல் ( ஆஹா.... என்ன ஒரு ஒத்துமை பாருங்களேன் நாமும் அன்னிக்குத்தான் இங்கே மீண்டும் காலடி எடுத்து வச்சோம்!) அது போகட்டும்.....புதுசாக் கோவிலாக் கட்டி இருக்காங்களா, இல்லை ......வீடு ஒன்னு எடுத்துக் கோவிலாக்கி இருக்காங்களா என்ற முழுவிவரம் கிடைக்கலை. ஆனால் இன்னிக்கு மாலை அஞ்சுக்கு அங்கே ஜென்மாஷ்டமி பூஜைக்கு அழைப்பு வந்துருக்கு. போயிட்டு வந்து சொல்றேன் மீதிக்கதையை!

எல்லாம் க்ருஷ்ணார்ப்' 'பணம்'!!!!

Thursday, August 18, 2011

கரும்புள்ளி குத்திட்டேன் ராஜ் விலாஸுக்கு!........... (ராஜஸ்தான் பயணத்தொடர் 41. நிறைவுப்பகுதி)

கிட்டத்தட்ட 553 கி.மீ பயணம் காத்திருக்கு. வெள்ளெனக் கிளம்பினா நிதானமாப் போகலாமுன்னு ஏழு மணிக்கு பிகானீரை விடலாமுன்னு ஒரு திட்டம். அஞ்சு மணிக்கு எழுப்பச் சொல்லிட்டுத் தூங்கி எழுந்து பார்த்தால் குளியலறையில் வெந்நீரைக் காணோம். 24 மணி நேரமும் சுடுதண்ணி சப்ளை இருக்குன்னு ஜம்பமாப் போட்டு விளம்பரம் பண்ணிய இடம் இது. கொஞ்ச நேரம் வெந்நீர்க்குழாயைத் திறந்து வச்சா சுடுதண்ணி வந்துருமேன்னு திறந்துவச்சுட்டு காமணி நேரமா தண்ணிர் வீணாப் போய்க்கிட்டு இருக்கு. தண்ணீர்க்கஷ்டமான இந்த ஊர்களில் இப்படிக் குழாயைத் திறந்து போடறமேன்னு மனசாட்சி ஒரு பக்கம் குத்தோ குத்துன்னு........

ஹவுஸ் கீப்பிங் பிரிவுக்குப் போன் போட்டால் எடுக்க நாதி இல்லை. வரவேற்புலே கூப்பிட்டா குழாயைத் திறந்து வையுங்க கொஞ்ச நேரத்துலே தண்ணி வருமுன்னு சொல்றாங்க. இருவது நிமிஷமா தண்ணி பாழாப்போய்க்கிட்டு இருக்கேய்யான்னால்....... சோம்பல் முறிக்கும் குரலில் இன்னும் பாய்லர் போடும் ஆள் வரலைன்றார். எப்பதான் வருவாருன்னா.....வந்துருக்கணும். ஆனா வரலை. எப்படியும் ஆறு மணிக்குள்ளே வந்துருவார்.

அடப்பாவிகளா..... ஒரு மணி நேரத் தூக்கம் போச்சே:( நேத்து சாயந்திரம் ஒரு பெரிய டூர் க்ரூப் வந்து இறங்கி இருக்கு. அத்தனை பேரும் குளிச்சு ஏழுமணிக்கு எப்படி ரெடியாகப்போறாங்களோ? ஊர்க்கவலைப்பட எனக்குச் சொல்லியே தரவேணாம்:-)

கடைசியில் வெந்நீர் வந்தப்ப மணி ஆறரை. சூப்பர் ஃபாஸ்ட்டா குளிச்சு ரெடியாகி டைனிங் ஹால் போனால் டூர் குரூப் மொத்தமும் அங்கேதான். 'முட்டை போடற ஆள்' வரலை, சப்பாத்தி செய்யும் ஆள் வரலைன்னு அங்கேயும் ஏகப்பட்ட குழறுபடி. நமக்கு அதெல்லாம்தான் தேவை இல்லையேன்னு ரொட்டித் துண்டையும் சாயாவையும் முழுங்கிட்டு செக்கவுட் செஞ்சு வண்டியைக் கிளப்பும்போது ஏழு நாப்பது. இனிமே இந்த ராஜ் விலாசுக்கு வரவே கூடாதுன்னு கரும்புள்ளி வச்சேன்.
ராஜ்விலாஸ் பேலஸ் காரிடோர் முழுசும் தலைப்பாகைகள்தான். விதவிதமான தலைப்பாகை, அதை எந்தூர்க்காரவுஹ அணிஞ்சுக்குவாங்கன்னு விளக்கத்தோடு படங்களா மாட்டி வச்சுருக்காங்க. கிளம்பும் அவசரத்தில் நடந்துக்கிட்டே க்ளிக் செஞ்சுக்கிட்டேன். அப்பப்பா........ என்ன ஒரு கடமை உணர்ச்சி!
ஊர் எல்லையை விட்டு வெளிவந்துட்டோம். பொட்டல் மணல்காட்டு நடுவிலே தார் சாலை மலைப்பாம்பா நீண்டு கிடக்கு. அங்கங்கே ஒரு சில முள்ளு மரங்கள். இன்னொரு வண்டியையோ, மனுசரையோ பார்ப்பது அபூர்வமா எப்பவோ ஒன்னு. சின்னச்சின்ன ஊர்களைக் கடந்து போய்க்கிட்டே இருக்கோம். நாலைஞ்சு மண்ணு வீடுகள் அடுத்தடுத்து இருந்தால் அது ஒரு ஊர். ஒன்னரை மணி நேரம் கழிச்சு ஒரு டீக்கடை கண்ணுலே பட்டது. பத்துப்பனிரெண்டு சார்ப்பாய்கள் போட்டு வச்சுருக்காங்க. இந்த மாதிரி ஒன்னைத்தான் நான் சண்டிகரில் தேடிக்கிட்டு இருந்தேன். கிடைக்கவே இல்லை:(
ஊர் வருது போல..... பானைகள் சாலை ஓரமா விற்பனைக்கு வச்சுருக்கு. நல்ல வெள்ளைக்களிமண் பானைகள்! இன்னும் ஒரு முக்கால்மணி போனபிறகு ஹனுமன்கட் என்ற ஊரை சமீபிக்கிறோம். ஸீனரி மாறியதுபோல் மரங்கள் அங்கங்கே கொஞ்சம் நிறையவே இருந்தாலும் எல்லாம் அதே முள்ளு மரங்கள்தான்.

தேசிய நெடுஞ்சாலை பதினைஞ்சில் பயணிச்சுக்கிட்டு இருந்த வண்டி சூரத்கட்(ஹிந்தியில் இருக்கும் இந்த 'கட்' எல்லாம் ஆங்கிலத்தில் எழுதும்போது 'கர்' ஆகிடுது. சண்டிகர் கூட சண்டிகட் தான் ) என்ற ஊரில் கிளை பிரிஞ்சு MDR 103 என்ற சாலையில் போய் ஹனுமன்கட் என்ற ஊர் வழியாப் போகுது. இந்த ஊர் ஹனுமன்கட் கொஞ்சம் பெரிய(!) ஊர்தான். மண் வீடுகளுக்கு நடுவே சுண்ணாம்பு அடிச்சக் கல்வீடுகளும் இருக்கு.

சின்ன ஊரோ பெரிய ஊரோ, ஒரு நாலு கடைகள் மட்டுமே இருந்தால்கூட அதுலே குறைஞ்சது ரெண்டுகடை ஏர்டெல், ஏர்செல், டாடாஇண்டிகாம்னு இடம்பிடிச்சு உக்காந்துருக்கு. பத்து பைசா காலுக்கு கொழிச்சுக்கிட்டு இருக்காங்க. (ஹூம்..... நியூசியிலே 89 செண்ட் நிமிசத்துக்கு)
சங்கரியாவைத் தாண்டி கொஞ்ச தூரத்தில் ராஜஸ்தான் எல்லை முடிஞ்சு பஞ்சாப் ஆரம்பிச்சுருது., கூடவே பசுமையும் வளமும். வழியெங்கும் திராக்ஷை, ஆரஞ்சுப்பழத் தோட்டங்கள், தண்ணீர் நிறைஞ்சு ஓடும் கால்வாய்கள் எல்லாம் கண்ணுக்குக் குளிர்ச்சி. மண்டி எல்லாம் கடந்து பதிண்டா போய்ச் சேரும்போது பகல் சரியா ஒரு மணி.
ஃபௌஜி சௌக் கடந்து போகும்போது பெயர்க்காரணத்துக்கு ஒரு சிலை சவுக்கத்தின் நடுவில். அண்டைநாட்டு எல்லை அருகிலே(யே) இருப்பதால் ராணுவ ஏற்பாடுகள் அதிக அளவில். கண்டோன்மெண்ட் ஏரியாவைப் பத்திச் சொல்லவே வேணாம்!
இந்த பதிண்டா ( Bathimda) நகர் உண்மைக்குமே ரொம்ப பழமையான இடம். கிறிஸ்து பிறப்புக்கு நாப்பதாயிரம் வருசங்களுக்கு முன்பே மக்கள் குடியேறிய இடமாம். சரித்திரமுன்னு பார்த்தால் பதிமூணாம் நூற்றாண்டில் தில்லியை ஆண்ட ரஸியா சுல்தானாவை சிறைப்பிடிச்சு வச்சுருந்த கோட்டைகூட இங்கேதான் இருக்கு. ராணி,வீரப்பெண்மணி. பல போரில் நேரிடையாவே கலந்து சண்டை போட்டுருக்காங்க. (இந்த ரஸியா சுல்தானாவைப் பற்றி ஒரு ஹிந்திப்படம்கூட வந்துச்சே....நம்மூர் ஹேமமாலினி நடிச்சது. யாருக்காவது நினைவிருக்கா? )
இந்த ஊர்லே ரெண்டு தெர்மல் ப்ளாண்ட்ஸ் கூட வச்சு மின்சார உற்பத்தி நடக்குது. இந்த ரெண்டு அணு உலைகளுக்குமே, குரு நானக் தேவ், குரு ஹர்கோபிந்த்ன்னு சீக்கிய குருமார்களின் பெயர்களை வச்சுருக்காங்க. உரத்தொழிற்சாலை ஒன்னு இங்கத்து வளத்துக்கு ரொம்பவே உதவுது போல! வரும்வழியெல்லாம் அறுவடை முடிச்சுக் கட்டுக்கட்டாகப்போட்டு வச்சுருக்கும் பொன்னிறமான கோதுமை வயல்களும் அறுவடைக்குத் தயாராத் தலைகுனிஞ்சு நிற்கும் கதிர்களுமா வளமோ வளம்.

கோட்டையைப் பார்க்க நேரமில்லைன்ற 'ஆசுவாசத்தோடு' பகல் சாப்பாட்டை ஹைவேயில் இருக்கும் ஒரு ரெஸ்ட்டாரண்டில் முடிச்சுக்கிட்டு பாக்கி இருக்கும் 230 கி.மீ பயணத்தைத் தொடங்கினோம். ரெண்டரை மணி நேரத்தில் பாட்டியாலா.
நீர் இன்றி அமையாது உலகு!


சின்ன ஓய்வுக்கு (ட்ரைவர் பிரதீபுக்குத்தான்) வண்டியை நிறுத்தி ரெண்டு பேரை சாத்துக்குடி ஜூஸ் குடிக்க வச்சுட்டு ( நானில்லைப்பா.... அதான் பயணத்துலே வயித்தை இறுக்கக் கட்டிக்குவேனே!) இன்னொரு சரித்திரப்புகழ் வாய்ந்த நகரான பாட்டியாலாவை, (67 கி.மீதானே?) இன்னொரு சமயம் பார்த்துக்கலாம் என்ற எண்ணத்துடன், வீட்டுக்கு வந்தவுடனே ஆக்கித்தின்னத் தேவையான சில காய்கறிகளை மட்டும் வாங்கிக்கிட்டு ஒன்னரை மணி நேரத்தில் சண்டிகர் எல்லையைத் தொட்டோம். வீட்டுக்கு வர இன்னொரு கால் மணி.
பலவருசமா மனசுலே போட்டுவச்சுருந்த ராஜஸ்தான் பயணம் இனிதே முடிஞ்சது. மாநிலம் முழுக்கச் சுற்றிப்பார்க்கலைன்னாலும் முக்கியமான இடங்களைப் பார்த்தோம் என்ற திருப்தி.

பதிவின்கூடவே உறுதுணையாப் பயணிச்ச அன்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

பயணம் உள்ளத்துக்கு நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!!!!