பிரசவம் என்ற சொல் கோபுவுக்குப் பயங்கரக் கிளுகிளுப்பாக இருந்துச்சு போல. இந்த அறையிலா, இந்த அறையிலான்னு நாலைஞ்சுமுறை கேட்டுட்டான். முகத்தில் ஒரு கள்ளச் சிரிப்பு.....
அது ஒண்ணுமில்லை...... இங்கே டனேடின் என்ற ஊரில் இருந்து ஒரு 15 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு கோட்டை இருக்குன்னு வேடிக்கைப் பார்க்கப் போனோம். இங்கே நம்மூர் கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சாவகாசமாக் காரை ஓட்டிக்கிட்டுப் போனால் டனேடின் ஒரு அஞ்சு அஞ்சரை மணி நேரத்தில் வந்துரும். கோபுவின் குடும்பம் வசிக்கும் ஊர் அது. இந்த கோபு எப்படி 'என்னை'ப் பிடிச்சான்னு இன்னொருநாள் சொல்றேன்.
போன அன்னிக்கு இரவு உள்ளூரைச் சுத்திப் பார்த்துட்டு, மறுநாள் வேற எங்கே போகலாமுன்னு தேடுனப்பக் கிடைச்சது கோட்டை விவரம். கோட்டைவிட்டுறக் கூடாதுன்னு கிளம்பிப் போனோம்.....
மலைப்பாதையா இருக்கேன்னு பார்த்தால் தரைமட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் கட்டிவச்சுருக்கு. 35 ஏக்கர் நிலத்தில் நடுவுலே கோட்டை. சுத்திவர அட்டகாசமான தோட்டம். மேலே மாடியில் இருந்து பார்த்தால் ஹைய்யோ......
கடல், துறைமுகம் காடுன்னு கலந்துகட்டிக் கிடக்கு.
குற்றவாளிகளைப் பிடிச்சு ஆஸ்தராலியாவுக்குக் கொண்டுவந்து விட்டுட்டுப் போனது பிரிட்டிஷ் அரசு. நினைவிருக்குல்லே? அதுக்கப்புறம் ரொம்ப வருசங்களுக்குப் பிறகு ஸ்காட்லாந்துலே இருந்து முதன்முதலா (குற்றவாளிகளா இல்லாமல்) ஆஸ்தராலியாவுக்குக் குடிபெயர்ந்த குடும்பங்களில் ஒண்ணுதான் லார்னாக் குடும்பம். அந்தக் குடும்பங்களுக்குள்ளேயே கல்யாண சம்பந்தமும் அப்ப நடந்துருக்கு.
ஜானோட மகன் வில்லியம் பிறந்தது சிட்னிக்கு வடக்கே ஒரு ஊரில். எப்ப? சமீபத்துலேதான்....1833லே. குடும்பத்தொழில் தங்கம் தோண்டுதல். தங்கச்சுரங்கம் எப்பவுமே நல்ல பிஸினெஸ்தான் இல்லே? கூடவே நியூ சவுத் வேல்ஸ் பேங்குலே வேலை.
26 வயசுலே கல்யாணம். நல்ல பணக்கார வீட்டுப்பொண்ணு எலிஸா. ஃப்ரான்ஸ்லே இருந்து வந்த குடும்பம். வரதட்சணையா 85 ஆயிரம் பவுண்ட் கிடைச்சதாம். நூத்தியம்பது வருசத்துக்கு முன்னாலே கிடைச்ச இந்தக் காசுக்கு இப்ப மதிப்பு என்னவா இருக்கும்? என்னாலே கணக்கெல்லாம் போட முடியாது........ நெறய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய இருக்கும் அம்புட்டுதான்.
அந்தக் காலக்கட்டத்தில்தான் இங்கே நியூஸியிக்கு வெள்ளைக்காரர்கள் வந்து துண்டு போட்டது. இங்கேயும் ஒட்டாகோ பகுதியில் தங்கம் இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க. தோண்டவும் ஆரம்பிச்சாங்க. தங்கமுன்னதும் பணம் கொழிக்காதா என்ன?
ஒட்டாகோ பேங்க்''ன்னு ஒன்னு வந்துச்சு. அதுக்குத் தலைவரா இங்கே வந்து சேர்ந்தார் வில்லியம். ஆளுக்கு வயசு 33. இங்கே நியூஸியில் ஆள், கூட்டம் இருந்தாத்தானே? ஜிலோன்னு கிடக்கு நாடு. இங்கே ஒரு வீடு கட்டிக்கலாமுன்னு நினைச்ச வில்லியம் இந்த இடத்தை(1000 ஏக்கர்) வாங்கி(??) வீடு( வீடா இது? கோட்டை மாதிரி ஒரு வீடு)கட்ட ஆரம்பிச்சது 1871லே.
அஸ்திவாரம் போட்டுக் கட்டிடம் எழும்ப 3 வருசமும், அதுக்குப்பிறகு உள்வேலைகள் நடக்கப் 12 வருசமும் ஆச்சாம். 200 ஆட்கள் விடாமல் வேலை செஞ்சுருக்காங்க. பளிங்கு வேலைக்கு இத்தாலியில் இருந்து பளிங்கும் அதைக் கையாள ஆட்களும். இப்படி வெனிஸ் நகரில் இருந்து கண்ணாடி, இங்கிலாந்தில் இருந்து தரையில் & சுவத்தில் பதிக்கும் டைல்ஸ், மரவேலைகளுக்காக மரங்கள் உலகின் பல பகுதிகளில் இருந்து வந்துருக்கு கப்பல்கள் மூலம்.
அந்தக் காலத்துலே கப்பல் போக்குவரத்து மெதுவாத்தானே..... அதான் மாளிகை நிர்மாணம் ஆடிஅசைஞ்சு முடிய நாளெடுத்துருக்கு. மொத்தம் நாப்பதாயிரம் சதுர அடிகள். அடுக்களை, தோட்டம், சுத்தம் செய்யன்னு வீட்டுவேலைக்கே 46 பேர் வேலையாட்கள்.
இவருக்கு 6 பிள்ளைகள். பெரிய மகளுக்கு 21 வயசு ஆனதுக்கு பார்ட்டி கொடுக்கன்னே ஒரு பால்ரூம் கட்டினார். 3000 சதுர அடிக்கு ஒரு ஹால்.
அந்தப் பொண்ணு அதிர்ஷ்டம் பாருங்க....... விழா நடந்தபிறகு கொஞ்ச நாளிலே(சில வருசங்கள்) 'டைஃபாயிடு ஜுரம்' வந்து செத்துப்போச்சு(-:
கோட்டைப்பணி முழுசும் முடியறதுக்குள்ளேயே வீட்டம்மா ஸ்ட்ரோக் வந்து இறந்துட்டாங்க. சாகற வயசா அது? வெறும் 38. த்சு...த்சு...த்சு...த்சு...
அப்ப அந்த நேரத்துலே புருசனும் சரி, பெரிய புள்ளைகளும் சரி நாட்டுலேயே இல்லை. கடைசி ரெண்டும்தான் தாயோடு இருந்துருக்கு. அதுலே ஒண்ணு கைக்குழந்தை. த்சு...த்சு...த்சு...த்சு...த்சு...
இந்தக் காலக்கட்டத்துலே இவர் பார்லிமெண்ட் அங்கத்தினராத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டனேடின் தொகுதிக்கான எம்.பி.
மனைவி இறந்ததும், மனைவியின் தங்கச்சி(சித்தியின் பொண்ணு)யைக் கல்யாணம் செஞ்சுக்க நினைச்சார். மாற்றாந்தாயாக நினைக்காமப் பசங்களை
வளர்ப்பான்னு இருக்கலாம். அப்ப இந்த மாதிரி இறந்துபோன மனைவியின் தங்கையைக் கல்யாணம் செஞ்சுக்கறது சட்டப்படிக் குற்றம். இவர்தான் பார்லிமெண்ட் அங்கமாச்சே. அந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துட்டார்.
தனிப்பட்ட அந்த பில் பாஸாகிருச்சு.
கல்யாணம் முடிச்சுட்டார். அந்தம்மாவும் பாவம் அஞ்சே வருசத்தில் மண்டையைப் போட்டுட்டாங்க(-:
ரெண்டு மரணமும் இயற்கை மரணம்தான். சூழ்ச்சி ஏதும் இல்லை. அவர் கொடுத்துவச்சது அவ்வளோதான்.......
அதுக்குப்பிறகு மூணாங்கல்யாணம் கட்டுனார். இப்ப அவர் சுரங்கப் பிரிவுகளுக்கான மந்திரி வேற. எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு.
இவருக்கு நல்ல தொலைநோக்குப் பார்வை. நாட்டுக்குப் பல நல்ல காரியங்கள் செஞ்சார். கப்பல்களில் குளிர்சாதன வசதி செஞ்சது இதுலே முக்கியமான ஒண்ணு. இதனால் இங்கே இருந்து இறைச்சி, பாற்கட்டி எல்லாம் கெடாம ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆச்சு. நாட்டுக்கு வருமானம் கொட்டுச்சு.
வீ(கோ)ட்டை விட்டுட்டுப் பல நாட்கள் பாராளுமன்ற வேலைகளிலே முழுகிப் போயிட்டவருக்கு, அங்கே அவர் குடி முழுக ஆரம்பிச்சது ரொம்பக் காலதாமதமாத்தான் தெரிஞ்சிருக்கு. அங்கே அவரது இளமனைவிக்கும், மூத்த மகனுக்கும் எதோ கசபிசா........ ( யூகிச்சுக்குங்க. இதுக்கெல்லாமா விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்க முடியும்?) நாட்டைப் பார்த்துக்கறேன்னு இப்படிக் கோட்டை விட்டுட்டார் பாருங்க.......
தாங்க முடியலை மனுசனுக்கு..... பாராளுமன்றக் கட்டிடத்தில் அவர் அறையைப் பூட்டிக்கிட்டுத் துப்பாக்கியால் தன்னை முடிச்சுக்கிட்டார். (அடப் பாவமே)
இவர் சாவுக்குப்பிறகுக் கோட்டையை வித்துட்டாங்க. பல கைகள் மாறி இப்ப 1967 லே ஒரு குடும்பம் வாங்கி இதைப் பார்வையாளர்களுக்குத் திறந்து விட்டுருக்கு. இவுங்க வாங்குனப்ப உள்ளே காலியாத்தான் இருந்துச்சாம். பார்த்துப்பார்த்துச் செஞ்ச சாமான்களும் அங்கே இங்கேன்னு போயிருக்கு. இவுங்களும் விடாம அதையெல்லாம் திரும்ப ஒவ்வொண்ணா வாங்கி அதோட ஒரிஜனல் நிலைக்குக் கொண்டுவந்துட்டாங்க.
முதல் & ரெண்டாம் உலகப்போர்களில் படைவீரர்கள் சும்மாக்கிடந்த கோட்டையில் வந்து தங்கி இருந்தாங்களாம். ஒரு கட்டத்தில் அந்த அழகான பால்ரூம் டான்ஸ் ஹால் முழுக்க ஆடுகளை அடைச்சு வச்சுருந்தாங்களாம்.
காலம்..........
இப்ப இது உள்ளே போய்ப் பார்க்க ஒரு கட்டணம் வசூலிக்கிறாங்க.
பராமரிப்புச் செலவுக்குப் பணம் வேணுமே.
நம்மூர் அரண்மனைகளுக்கு நேர்ந்த கதிபோல இங்கே ப்ரைவேட் ஹோட்டல் மாதிரி வந்து தங்கிக்கவும் வசதி செஞ்சுருக்கு. தங்குமிடம் (பழைய)குதிரை லாயம்.
குதிரைன்னதும் இன்னொண்ணு ஞாபகம் வருது. இங்கத்து மெயின் ஹாலில் இருக்கும் சரவிளக்கு அந்தக் காலத்துலேயே பயோகேஸ் மூலம் எரிஞ்சதாம்.
எப்படி?
ஆங்........ அதான் குதிரை சாணம் குவியுதே. அதுக்கு ஒரு தனிக்கிடங்குக் கட்டி அதன்மூலம் கேஸ் எடுத்து, ஒரு ஆளை வேலைக்கு வச்சு பெடல்மூலம் பம்ப் செய்வாங்களாம்.
இப்ப என்ன திடீர்ன்னு இந்த கோட்டையைப் பத்தி?
விஷயம் இருக்கே....சொல்றேன் அடுத்த பகுதியில்.