Thursday, July 28, 2005

ரம்யாவின் மகளே!!!!

இன்று உங்களுக்கு ஆறாவது பிறந்த நாள் என்று ஒரு 'பட்சி' சொன்னது!!!!
தேடித் தேடிப் பார்த்தும் உங்கள் தாயின் மின்னஞ்சல் கிடைக்கவில்லை.
அதனால் உங்களுக்காகவே ஒரு தனிப் பதிவு!!!நூறாண்டு காலம் வாழ்க!
நோய் நொடியில்லாமல் வளர்க!

சிங்கையில் நடந்த வலைப்பதிவாளர் 'மகாநாட்டில்'
உங்களைச் சந்தித்த நினைவு!

இதனுடன் வருவது
எங்கள் அனைவரின் அன்பும் ஆசியும்!

நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,
துளசி.


Wednesday, July 27, 2005

திருவிழா!!!!

ஊரெல்லாம் திருவிழா. எங்கே பார்த்தாலும் 'ஜல் ஜல் ஜல்'. வயசு வித்தியாசமில்லாம குழந்தை முதல் கிழவன்/கிழவி
எல்லோரும் பங்கெடுத்துக்கறாங்க. வருசாவருசம் நடக்குறதுதான்னாலும், நமக்கு அதிர்ஷ்டம் இருந்தாத்தான் கலந்துக்க
முடியும். எனக்கு ஒரு ஏழெட்டு வருசமா இதுலே கலந்துக்க முடியாமப் போச்சு. இந்த வருசம் என் பேரு குலுக்கல்லே
வந்துருச்சு. ரொம்ப நாளுக்குப்பிறகு வந்ததாலே, வர்றப்பவே முழு வீச்சுதான். வேகம் தாங்கமுடியாம 'தொபுக்கடீர்'னு
விழுந்தேன்.


இப்ப நடக்குறது பனிக்காலம். திருவிழாவுக்குப் பேரு 'ஃப்ளூ'! ஜோதிகா சலங்கையைக் கட்டிக்கிட்டு 'லகலகலகலக'ன்னு
குரலும் எழுப்பிக்கிட்டு, என் தொண்டைக்குள்ளே வந்து நின்னுக்கிட்டு ஒரே ஆட்டம். இருமி இருமி நெஞ்செல்லாம்
வலி. நீலகிரித்தைலம், ஜண்டு பாம், டைகர் பாம், அமிர்தாஞ்சனம்னு இந்திய ஸ்டைலில் ஆரம்பிச்சு, சுடாஃபெட்,
பெனெட்ரில், ஸ்ட்ரெப்சில்ன்னு வேற வேற ஐட்டம் வந்துக்கிட்டே இருக்கு. ''எத்தைத் தின்னாப் பித்தம் தெளியுமு'ன்னு
ஒண்ணுவிடாம உள்ளே தள்ளறதை உள்ளேயும், வெளியே பூசுறதை வெளியேயுமா லயம் தப்பாம நடக்குது. அது பாட்டுக்கு அது,
இதுபாட்டுக்கு இது.

இந்தமாதிரி சமயத்துலே ரொம்ப வேலை செய்யமுடியாம படுக்கையிலே ஓய்வு எடுக்கணுமாமே? ஆஹா, எடுத்தாப் போச்சு!
துணைக்குன்னு கூடவே வர்றது என்னான்னு பார்த்தா, அது சினிமாதான். புத்தகம் படிக்கலாம்தான். ஆனா தலைவலி,
கண்ணுலே இருந்து தண்ணி வடியுது. தூக்கமும் வரலை. அப்படியும் நம்ம தமிழ்ச் சங்கத்துலே நடத்தற தமிழ்ப்
பள்ளிக்காக வரவழைச்சதுலே இருந்து சிலதைத் தூக்கிக்கிட்டு வந்தேன். ஈஸி ரீடிங். பரமார்த்தகுரு கதைகள்,
தெனாலிராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள்.

ச்சின்னப் புள்ளையா இருக்கறப்ப படிச்சுட்டு, சிரியோ சிரின்னு சிரிச்சதை நினைச்சுக்கிட்டேன். தளர்ந்த மனசுக்குத் தெம்பு
வரட்டுமுன்னு படிக்க ஆரம்பிச்சேன். பரமார்த்தகுரு முடிச்சேன். சிரிப்பு வரலை. தெனாலிராமன? அதுவும்தான். ஊஹூம்.
சிரிப்பெங்கே ? காணமே! பத்தாக்குறைக்கு தெனாலிராமன் மேலே கோபமா வந்துச்சு. இரக்கமே இல்லாத, சுயநலவாதி.
பூனை, குதிரை யெல்லாம் 'பட்டினி போட்டு வளர்த்தான்'னு படிச்சப்போ எரிச்சல்தான் வந்துச்சு. அடப்பாவி. தெனாலிராமன் பாம்பு கடிச்சுத்தான்
செத்திருக்கான். இது எனக்குப் புது நியூஸ்.

புக் ஷெல்ஃப் வேணாம். சினிமா ஷெல்ஃப் போதுமுன்னு அந்தப் பக்கம் படையெடுத்தேன். பன்னெண்டு வருஷக் கலெக்ஷன்.
ஒவ்வொண்ணும் ஒவ்வொருகாலத்துக்கு பிடிச்சதா இருந்துருக்கு. அதைப் பத்திக்கூடத் தனியா ஒரு பதிவே போடலாம். போடணும்.
'சபாஷ்' கிடைச்சது. மத்தியானம் ஓய்வா அதைப் பார்த்து முடிச்சேன். பார்த்திபனோட நடிப்பு நல்லாத்தான் இருந்தது.
ரஞ்சித் முகமே வில்லன் முகமோ?

இப்ப வந்த படங்கள் எல்லாமே பார்த்துட்டதாலே, ராத்திரி ஒரு பழையபடம் பார்க்கலாமுன்னு எங்க இவர் போய்
அவர் பங்குக்கு ஒரு படம் தேடியெடுத்துக்கிட்டு வந்தார். 'ஹவுஸ்ஃபுல்'. இதுவும் பார்த்திபனோடதுதான். பரவாயில்லேன்னு
பார்த்தேன். நல்ல அருமையான நடிப்பு. பாட்டு, ஃபைட்டுன்னு ஒண்ணுமே இல்லே. கவனிச்சுப் பார்த்தப்ப நாலு
பாட்டுக்கும் மூணு ஃபைட்டுக்கும் இடம் இருக்கே. எங்கெங்கே பாட்டைப் போட்டிருக்கலாம், எங்கெங்கே சண்டைன்னு
நினைச்சுப் பார்த்தா பொருத்தமாத்தான் வருது. அட! இப்படிக் கோட்டை விட்டுட்டாங்களே!

இப்பத்தான் இந்தப் படத்தைச் சரியாப் பாக்கறேன் போல, சுவலட்சுமிக்கு ஜோடி யார் தெரியுமா? நம்ம 'அந்நியன்'.
வடிவேலுவோட 'காமெடி'யும் நல்லாத்தான் இருக்கு. இது நேத்துக் கணக்கு.

இன்னைக்கு? மலையாளப் படம்தான். பிஜுமேனோன், சம்யுக்தா வர்மா நடிச்சது. 'மதுர நொம்பரக் காற்று'

சொல்லமறந்துட்டேனே, எங்க ஊருலே நிஜமாவே இப்ப 'ஆர்ட் ஃபெஸ்டிவல்' நடக்குதுங்க. அடுத்தவாரம் ஒரு பரதநாட்டிய
நிகழ்ச்சிகூட இருக்கு. ஆடுபவர் வெல்லிங்டன் என்ற ஊருலே இருந்துவரார். அவர் பேரு 'விவேக் கின்ரா' அங்கே பரத
நாட்டியப் பள்ளி நடத்திக்கிட்டு இருக்கார். இதுவரைக்கும் அஞ்சு முறை( இந்த 18 வருசத்துலே) இங்கே எங்க ஊருக்கு வந்து
நிகழ்ச்சி நடத்தி இருக்கார். இவர் கலாக்ஷேத்ராவோட மாணவர். நல்லவேளை இப்பவே இந்த ஃப்ளூ வந்துட்டது. அடுத்தவாரம்
ஃப்ரெஷ்ஷா இந்த நிகழ்ச்சிக்குப் போகலாம்.

கொசுறுச் செய்தி: இவர் 'அமலா' வோட க்ளாஸ்மேட்!Wednesday, July 20, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 18

வீடு மாறணுமா வேண்டாமான்னு யோசிச்சு யோசிச்சு மண்டை காஞ்சதுதான் மிச்சம். நிக்கியோட
'எபிசோட்' நினைவிருக்குல்லே? வீடு மாறிட்டுப் பசங்க காணாமப் போயிருச்சுன்னா? ஐய்யய்யோ,
என்னாலே முடியாது. அதுவும் இங்கிலீஷ் கூடத் தெரியாதே. தமிழ்ப் பூனைங்களாச்சே.


வேற வீடு மாறாம இருக்கறதே ஒரு 'க்ரைம்'போலத்தான் இங்கே ஆளுங்க கேக்கறது. 'இன்னும் அதே
வீட்டுலெயா இருக்கீங்க?' ஆமாம். இருந்தா என்ன தப்பு? நல்ல வீடுதானே?எல்லாத்துக்கும்
வசதியாத்தானே இருக்கு. பசங்களுக்குப் பழகுன இடம். அதுலேயும் கப்பு பிறந்ததுலேயிருந்து இங்கெ
இருக்கு. இப்ப வீடு மாறுனா பயந்துறாதா?

இப்ப இங்கேயும் முந்தி மாதிரி இல்லெ. இந்த அஞ்சாறு வருசமா புதுசா வீடுங்க நிறைய வர ஆரம்பிச்சிருச்சு.
ஜனத்தொகை கூடுதில்லையா? நகரமும் விரிஞ்சுக்கிட்டே போகுது. ஆப்பிள் தோட்டங்க இப்ப புது சப்டிவிஷன்.
புது வீடா இருந்தா அவ்வளவா குளுராது. நம்ம இஷ்டப்படியும் கட்டிக்கலாம் அது இதுன்னு சொல்லி என்
மனசைக் கரைச்சுட்டாரு இவரு.

வீடும் கட்ட ஆரம்பிசாச்சு. எனக்கோ மனசுலே ஒரே 'திக்திக்' வீடு மாறினா என்னென்ன ஏற்பாடு
பூனைங்களுக்குச் செய்யணுமுன்னு 'ஷான்'கிட்டே கேட்டேன். 'வீட்டுக்குள்ளேயே ஒரு மாசம் போல
வச்சிருங்க. பழகிடும். 'கீப் யுவர் ஃபிங்கர்ஸ் க்ராஸ்டு' ம்க்கூம் விரல்லே சுளுக்குதான் புடிச்சுக்கும்.

லைப்ரரிக்குப் படையெடுத்து இது சம்பந்தமான புத்தகங்களா வாரிக்கிட்டு வந்தேன்.அக்கம் பக்கம்
தெரிஞ்சவுங்க, சமீபத்துலே வீடு மாறுனவுங்க இவுங்ககிட்டேயெல்லாம் 'பேட்டி' எடுத்தேன்.நம்ம தோழி
ஒருத்தரோட பொண்ணு அப்பத்தான் கடைசிவருசம் வெட்டினரி சயன்ஸ் படிச்சுக்கிட்டு இருந்தங்க. இன்னும் ரெண்டே
வாரம்தான் இருந்தது தேர்வுக்கு. ரொம்ப ஸ்மார்ட் பொண்ணு. அதுகிட்டேயும் தொண தொணன்னு ஆயிரம்
கேள்விங்க கேட்டுக்கிட்டே இருந்தேன். அதுக்கும் பரீட்சைக்கு'ரிவிஷன்' செஞ்சாப்புலே ஆயிருக்கும்:-)

புது வீடும் ரொம்பதூரமில்லை. இங்கெருந்து 2 கிலோ மீட்டர்தான். ஆனா மெயின் ரோடு இல்லை. எப்பவும்
அமைதியா இருக்கு அந்தத் தெரு. நம்ம வீட்டுக்கு ரெண்டுபக்கமும் இருக்கற வீடுங்களிலே ரெண்டுரெண்டு
பூனைங்க இருக்குதுங்க. எதிர்வீட்டுலே மூணு. வலதுகைப் பக்கம் இருக்கற வீட்டுலே ரெண்டு பூனைங்க
மட்டுமில்லே , ஒரு நாயும் இருக்கு. சாயந்திரமாப் பாத்தா அநேகமா எல்லார் வீட்டு முன்னாலெயும்
பூனைங்க குந்திக்கிட்டு இருக்குதுங்க. ஏதோ கிராமத்துலே இருக்கறமாதிரி இருக்கு இங்கே.

கட்டுமானப் பணியை அவசரப்படுத்தாம இருந்தேன். எவ்வளவு நாள் தள்ளிப் போகுதோ அவ்வளவு நல்லது.
ஒரு வழியா அந்த நாள் வந்தெ வந்துருச்சு. சாமான்களை எடுத்து வண்டியிலே ஏத்தறதை வேடிக்கைப்
பார்த்துக்கிட்டே குறுக்கும் நெடுக்குமா வந்துக்கிட்டு இருக்கு ஜி.கே. கப்புதான் வீரனாச்சே, தோட்டத்துலே
ஒளிஞ்சுக்கிட்டு இருக்கான்.

மொதல்லே நாம அங்கே போய் செட்டில் செஞ்சுட்டப்புறம் இதுங்களைக் கூட்டிட்டுப் போகலாமுன்னு
ஏற்பாடு. ஒரு ரெண்டு வாரத்துக்கு இங்கேயே இருக்கட்டும்.வந்துவந்து பார்த்துக்கலாம்.

படுக்கை அறை ஃபர்னிச்சர், விரிப்பு இது எதையும் மாத்தக்கூடாது. பழைய வாசனை அப்படியே இருக்கணும்.
அப்பத்தான் இதுங்க பயப்படாம இருக்கும். மகள் நல்ல மேட்சிங் படுக்கை விரிப்புங்களை அன்பளிப்பாத்
தந்தாள். ஆனா அதுக்கு பொருத்தமான நேரம் இப்ப இல்லே.

தினமும் ஏழெட்டு முறை அங்கே ஓடுவேன். காலியான வீட்டுலே பயந்த பார்வையோடு கப்பு அதோட
படுக்கையிலே படுத்திருக்கும். ஜி.கே எதையும் கண்டுக்காம இருக்கும். அதுக்கும் பழைய துள்ளல்
கிடையாது. சுகமில்லாத பூனையாயிருச்சு. சர்க்கரை வியாதி. கண்டு பிடிச்சு ஒரு வருசமாகுது. மொடாக்
குடியனாட்டம் தண்ணி குடிக்கறதைப் பாத்துட்டு ஷான் கிட்டே கொண்டு போனேன்.சர்க்கரை வியாதி
உறுதியாயிருச்சு. இன்சுலின் போதுமான அளவு சுரக்காததாலே சாப்புடறதெல்லாம் ரத்தத்துலே சேராதாம்.
அடுத்த 'எண்டு'லே சீக்கிரமா வெளிவந்துரும். உடம்புலே சக்தி இருக்காதாம். ரொம்பப் பசிக்குமாம்.
அகோரப் பசி. எப்பவும் சோர்வு வேற. தினமும் ஊசி போடறீங்களா? எப்படின்னு உங்களுக்கு 'ட்ரெயினிங்'
கொடுக்கறோமுன்னு கேட்டார். அதெல்லாம் முடியாது. மருந்து மாத்திரை கொடுக்கறேன்னு சொல்லிட்டேன்.

ஜி.கே. மருந்து சாப்புடறதுலே ச்செல்லம். இஞ்செக்ஷன் சிருஞ்சி போல இருக்கறதுலே வர்ற மருந்தை பின்னாலே
தள்ளுனா அப்படியே வந்து நக்கிடும். ரெண்டுவேளை மருந்து. கப்புவுக்கு மருந்து கொடுக்கறதுக்குள்ளே நம்மளை
ஒரு வழி பண்ணிடும். ச்சின்ன மாத்திரைதான். அதை சாப்பாட்டுலே ஒளிச்சு வச்சாலும் கரெக்ட்டா அதை விட்டுட்டு
சாப்புடும். நினைச்சுக்கிட்டா அந்த வீட்டுக்கு ஓடிருவேன். நேரங்காலமெல்லாம் கிடையாது. எப்படி இருக்குதுங்களோன்னு
மனசுலே சதா எண்ண ஓட்டம்.

ஒரு வாரமே ஏதோ ஒரு யுகம் ஆனாப்புலே இருந்துச்சு. 'கேட் லிட்டர்' வாங்கிவந்து ஒரு பெரிய அட்டைப் பெட்டியை
வெட்டி 'ட் ரே' செஞ்சு அதுலே நிரப்பியாச்சு. வீட்டுலே எல்லாருக்கும் 'இன்ஸ்ட்ரெக்ஷன்' கொடுத்தாச்சு. யாரும் ஜன்னலையோ,
கதவையோ திறந்து வைக்கக்கூடாது. வாசக் கதவுக்கு கவனம் வேணும். ஃபோயர் கதவை மூடுனபிறகுதான் வாசக்கதவைத்
திறக்கவேணும் இத்யாதி இத்யாதி........

மொதல்லே கப்புவைக் கொண்டுவந்துரலாம். அவன் இடம் பழகட்டும். ஜி.கே. அப்புறம். அவன் பிரச்சனை இல்லாதவன்.
அங்கே போய் பிடிச்சுக் கூண்டுலே வைக்கறதுக்கு ஒரு போராட்டம். அதுலே ஜெயிச்சுட்டோம். கொண்டு வர்ற வழியெல்லாம்
'ஐய்யோ, அம்மா'ன்னு வழக்கம் போல கத்திக்கிட்டு வர்றான். வீட்டுக்குள்ளே கொண்டுவந்து கூண்டைத்
திறந்தாச்சு. இப்படியும் அப்படியுமா பாய்ஞ்சு ஓடறான். ஏதாவது கதவு திறந்திருக்கான்னு பாக்கறான்.
ஊஹூம். மூச்! அன்னைக்கு ராத்திரி பூராவும் அட்டகாசம். யாருமே சரியாத் தூங்க முடியலை. வேற வழி இல்லேன்னதும்
கொஞ்சம் அடங்கிட்டான். 'லிட்டர் ட் ரே'யையும் உபயோகிச்சிருக்கான். பேஷ் பேஷ். நல்ல அறிவு இருக்கு. இந்த அட்டாச்சுடு
பாத்ரூம் சர்வீஸ் எல்லாம் கப்புவுக்குத்தான். ஜி.கே வெளியே, கொல்லைப்புறம்தான் போகணும்.

மறுநாள் காலையிலே போய் ஜி.கே.வைக் கொண்டு வந்தோம். இவன் வேற மாதிரி. எல்லாமே 'டோண்ட் கேர்'தான்.
சாப்பாடு கொடுத்தாப் போதும். பழைய வீட்டுலே இருந்த அதே வழக்கத்தை மாத்தாம அடுக்களையிலே
நட்ட நடுவிலே படுத்துக்கிட்டான். நாந்தான் அவனைச் சுத்தி சுத்திவந்து வேலை செய்யணும். என்னைக்குக் கால் தடுமாறி
விழப்போறேனோ?

கப்புவே ஒரு அறையைத் தேர்ந்தெடுத்துக் கட்டிலின் கீழே இருக்க ஆரம்பிச்சான். ஜி.கே.வும் ஏதோ போட்டி போடறது போல
இன்னொரு அறையைப் புடிச்சு வச்சுக்கிட்டான். இப்ப இந்த அறைங்களுக்குப் பேரே கப்பு ரூம், ஜிக்கு ரூம்னு ஆகிருச்சு.

மூணுவாரம் ஆனது.ஒரு நாள் கப்புவை மெதுவாத் தோட்டத்துக்குக் கொண்டு போனேன். தோட்டம் இன்னும் போட ஆரம்பிக்கலை.
ரெண்டு நிமிஷம் இருந்துட்டு உடனே பயந்து வீட்டுக்குள்ளே ஓடிவந்துட்டான். இன்னும் ரெண்டு வாரம் போனது. இப்ப 'கேட் டோரை'த்
திறந்து வச்சோம். வரப்போகப் பழகிட்டான். ஆனாலும் ஒரு நாளுக்கு ஒரு புத்தின்னு இருந்தான்/இருக்கான்.

அக்கம் பக்கத்து வீட்டு வேலியோரம் போய்ப் பதுங்கி இருப்பதும், ராத்திரி இருட்டுனபிறகு சாப்பிட வர்றதுமா இருக்கான். இந்த அஞ்சு
மாசமும் இதே போராட்டம். அங்கே பழைய வீட்டுலே அவனுக்குச் செடி, புதர்கள் எல்லாம் பதுங்குற இடமா இருந்துச்சுல்லே. இங்கே இன்னும்
அதெல்லாம் இல்லையே. இப்ப சமீபத்துலே மூணுவாரமா, பகலிலும் சாப்பாட்டுக்கு மட்டும் வர்றதும், சாப்பிட்டு முடிச்சவுடனே ஓடுறதுமா
இருக்கான். நாங்கெல்லாம் ச்சின்னப் புள்ளைங்களா இருந்தப்ப இப்படித்தான் அக்கம்பக்கத்துலே விளையாட்டோ விளையாட்டுன்னு
இருப்போம். வீட்டுலே இருந்து சாப்பாட்டுக்குக் கூப்பிட ஆளு வந்து சொன்னதும், இதோ போனேன்,இதோ வந்தேன்னு தின்னு முடிச்சுக்
கைகழுவுனவுடனே அந்த ஈரம்கூட காஞ்சிருக்காது அப்படியே ஓடுவோம் விளையாட. அந்த ஞாபகம் வருது.

ஆனா நான் பயந்து செத்தமாதிரி, காணாமப் போகலை. 'தேங்க் காட்'

எங்களுக்கும் வயசாக்கிட்டு வருதில்லையா. இப்படியே ஓட்டுறதும் இனிமேப்பட்டுக் கஷ்டம்தானே?
இனிமே நம்ம வாழ்க்கையிலே புதுசா மிருகங்களுக்கு இடம் இல்லை. இப்ப இருக்குற ரெண்டும் இருந்துட்டுப் போகட்டும்.
கப்புவுக்கு இப்பவயசு 15 வருசம் 8 மாசம். ஜி.கே.வுக்கு 12 வயசாச்சு. நம்மகிட்டே வந்தே வருசம் நாலாச்சே. பூனையோட ஒரு வயசு மனுஷனோட
6 வயசாம். கணக்குப் போட்டுக்குங்க. கப்பு 94, ஜி.கே 72. சீனியர் சிட்டிசன்ங்க. கடவுளோட கணக்கு
என்னன்னு தெரியாது.

ஆனா ஒண்ணு சொல்றேன். வளர்ப்பு மிருகங்களை வச்சுக்கறது ஒரு பெரிய கமிட்மெண்ட். சிலபேர்
மீன்களைத் தொட்டியிலே வளர்ப்பாங்க. இதுங்களை 'வாக்' கொண்டு போகவேணாமே தவிர இதுவும்
வேலைதான். ஆனா பூனை, நாய் போல அவ்வளவு வேலை இல்லை. மகள் ஆசைப் பட்டாள்ன்னு சில வருசங்களுக்கு
முன்னே ஒரு மீன் தொட்டியும் வாங்கி மீன்கள் வளர்த்தோம்.ஆனா அடிக்கடி மீன் செத்துரும். கொஞ்ச நாள் பார்த்துட்டு
எல்லாம் போனதும், தொட்டியை இன்னொரு நண்பருக்குக் கொடுத்துட்டோம். அங்கே அவர் மீன் வாங்கிப் போட்டு
நல்லாத்தான் இருந்துக்கிட்டு இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ராசி போல. நமக்குப் பூனை.

எனக்கென்னமோ ஃபேவரிட் அனிமல்ன்னு பார்த்தா அது நாய்தான்! போன வாரம் ஒருநாள் வெளியே
போனப்ப ஒரு முதியோர் விடுதியைத் தாண்டிப் போக வேண்டியிருந்துச்சு. இப்ப நடக்கறது குளுர் காலமுன்னாலும்
அன்னைக்குக் கொஞ்சம் வெய்யில் வந்துச்சு. அதை வீணாக்க மனசில்லாம அங்கே இருக்கற தாத்தா
பாட்டிங்க வெளியே 'வாக்' போய்க்கிட்டு இருந்தாங்க. கூடவே அவுங்க வளக்கற நாய்ங்களும் குளிருக்கு
அடக்கமா, பாந்தமாச் சட்டைபோட்டுக்கிட்டுக் கூடப் போகுதுங்க. 'ஹை, நாய்ங்கெல்லாம் சொக்காப் போட்டுக்கிட்டுப்
போகுதுங்க'ன்ன சொன்னதுக்கு எங்க இவர் சிரிச்சார். ' ஆமாம் நாய்ங்கெல்லாம் சொக்காதான்
போட்டுக்கிட்டுப் போகுது'ன்னு சொல்லிட்டு தன்னுடைய சட்டையைக் காமிச்சார்.

இனி ஒரே முடிவுதான். 'நோ மோர் நியூ பெட்ஸ்'

கொஞ்சம் இருங்க. பக்கத்து வீட்டுலே இருந்து நம்ம வேலி ஓரமா ஒரு ச்சின்ன நாய்க்குட்டியோட
சத்தம் கேக்குது. குரலைக் கேட்டா ஒரு அஞ்சு வாரக் குட்டியாத்தான் இருக்கவேணும். எதுக்கும்போய்
ஒரு 'ஹாய்' சொல்லிட்டு என்ன ப்ரீடு, என்ன கலர்னு பார்த்துட்டு வரணும். அவுங்க வீட்டுலே ஏற்கெனவே ஒரு வயசான
நாய் இருக்கே, இது என்ன புதுசா? எப்ப வாங்குனாங்களாம்?முடிவுரை:

தொடர் எழுதுனா அதுக்கு ஒரு முடிவுரை எழுதணும்ன்றது சம்பிரதாயமாச்சே, அதனாலே. இதுவரை
பொறுமையாப் படிச்ச ஜனங்களுக்கும், பின்னூட்டங்கள் மூலமா ஊக்கம் கொடுத்த மகா ஜனங்களுக்கும்
நன்றி. இதுதான் கடைசிப் பகுதியான்னு எனக்கே தெரியாது. ஒருவேளை கட்டக் கடைசியா எப்பவாவது
எழுதுவேனோ? எதா இருந்தாலும் இப்போதைக்கு இது கடைசி.

அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.

என்றும் அன்புடன்,
துளசி கோபால்.

Monday, July 18, 2005

மருந்தும் விருந்தும் மூணுநாள்!

பத்மாவின் பதிவைப் பார்த்தவுடன் அவர்களுக்குப் பதிலாக எழுதியது நீண்டுவிட்டதால் தனிப் பதிவாகப் போடுகின்றேன்.


இந்த ஊருக்கு வந்த ஆறுமாதத்தில் என் மகளுக்கு அஞ்சு வயசானது. இங்கே அது பள்ளியில் கட்டாயம் சேர்க்க வேண்டிய வயசானதால்
பள்ளியில் சேர்த்தும் விட்டோம். அப்போது அங்கெ இவளைப் போலவே அஞ்சுவயதான தன் மூத்தமகளைச் சேர்க்க
வந்த பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணுக்கு அப்போதுதான் விவாகரத்து நடந்திருந்தது. என்னிடம் தன்
வாழ்க்கையைச் சொல்லி அழுவார். அப்போது தன் சிறியமகளைக் காப்பகத்தில் விட்டுவிட்டு வேலைக்குப் போக முயல்வதாகவும்,
பெரிய பெண்ணை மட்டும் பள்ளி முடிந்தபின் ( இங்கெல்லாம் பள்ளி பகல் 3 க்கே முடிந்துவிடும்) மாலை ஐந்தரைவரை யாராவது
பார்த்துக் கொண்டால் தனக்கு நல்லது என்றும் அதற்குண்டான பணத்தையும் தருவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.
யாரும் கிடைக்கவில்லை. அப்போது இங்கே இந்த 'ஆஃப்டர் ஸ்கூல் ப்ரோக்ராம்' ஒன்றும் அறிமுகமாக இல்லை. இது நடந்தது 1988-ல்.

பாவம் என்று நினைத்தும், நம் மகள் தனியாகத்தானே விளையாடவேண்டியுள்ளது, கூடவே இன்னொரு குழந்தையும்
விளையாடட்டும் என்றும் நினைத்து நானே பார்த்துக் கொள்வதாகச் சொன்னேன். ஆனால் காசு வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொன்னேன்.
எனக்கென்னவோ அடுத்தவரிடம் இருந்து காசு வாங்குவது கொஞ்சம் அருவருப்பாக இருந்தது.

தினமும் பகல் பள்ளி முடிந்தவுடன் என் மகளையும் அந்தப் பொண்ணையும் வீட்டுக்குக் கூட்டிவந்து, பால், பிஸ்கெட், கேக் என்று
தின்னக் கொடுத்துவிட்டு விளையாடச் சொல்வேன். அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்வேன். அந்தப் பெண்ணும் என் பெண்ணைவிட
நன்றாக கொடுத்ததையெல்லாம் சாப்பிட்டுவிட்டு, டாய்லெட் போய் விட்டு சமர்த்தாக இருக்கும். எல்லாம் அந்த அம்மாவின் கார் கேட்டில் வரும்
வரைதான். காரைப் பார்த்ததும் சத்தமாக 'ஓ'வென்று அழுதுகொண்டே, வாசல் கதவைத் திறந்துகொண்டு ஓடும். முதல் நாள் அழுகை சத்தம்
கேட்டவுடன் நான் பயந்துவிட்டேன். என் மகள் தான் அடித்துவிட்டாளோ என்றுகூட நினைத்துவிட்டேன். என் மகளும் என்னை போலவே
பிரமித்து நின்றிருந்தாள்.

மறுநாளும் இதே கதை. என் மகளிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது, தெரியாது. திடீரென்று அழுகிறாள் என்று
சொன்னாள். கவனித்துப் பார்த்தால் என் மகள் முகத்திலும் பயம் அப்பட்டமாய்த் தெரிந்தது. மூன்றாவது நாளும் இதே. நான் கூடவே இருந்து
பார்த்துக் கொண்டே இருந்தேன். கார் சத்தம் கேட்டவுடன் அழுகை. இதனால் என் மகளுக்குச் சொல்லத்தெரியாத ஒரு வேதனை முகத்தில்.
சரி. இது லாயக்குப் படாது. என் குழந்தையின் மனத்தில் அநாவசியமாக துக்கம் ஏற்படவேண்டிய அவசியமில்லை என்று தீர்மானித்துவிட்டேன்.

அந்தப் பெண்மணியிடம் விவரத்தைச் சொல்லி, இனிமேல் நான் பார்த்துக் கொள்ளமுடியாத நிலை என்று விளக்கினேன். அவர்களும் புரிந்து
கொண்டார்கள் போலிருக்கிறது. நல்லவேளை, நான் காசுக்காகப் பார்த்துக் கொண்டிருந்தால்...... அப்பப்பா இது தேவையா எனக்கு?

பாவம் அந்தக் குழந்தையும். தகப்பனைப் பிரிந்து இருப்பதால் வந்த மன அழுத்தமோ என்னவோ?

மருந்தும் விருந்தும் மட்டுமில்லை மூணுநாள்! இதுவும் கூடத்தான்!!!!


Sunday, July 17, 2005

ஒண்ணூம் புரியலை!

இன்னிக்கு தினகரன் லே ஒரு செய்தி. விநாயகமூர்த்தி எம்.எல். ஏ., நாலு மணிநேர
உண்ணாவிரதம் இருந்தாராம்.நம்ம நாட்டுலே எத்தனையோ ஏழைங்களுக்கு 24 மணிநேர உண்ணாவிரதம் எல்லாம் தண்ணிபட்ட
பாடாச்சே!

நானும் இன்னுக்கு கடைசியாச் சாப்பிட்டு இப்ப 5 மணி நேரமாச்சு. இனிமே ஆக்கணும். அதுக்கும்
ஒரு ம்ணி நேரமாவது ஆகிரும். அப்ப 6 மணி நேரம்'உண்ணாவிரதம்'தானே?

ஒண்ணூம் புரியலையேப்பா?

Saturday, July 16, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 17

வீடுன்னா யாராவது விருந்தாளிங்க, ச்சும்மா விஸிட் செய்யறவங்கன்னு வராம இருப்பாங்களா?
யாரு வந்தாலும் முதல்லே மூக்கை நீட்டிக்கிட்டு நடுவுலே வந்து உக்காந்துக்கணும். வர்றவங்களும்
'அட, அழகா இருக்கே. நாங்க மொதல்லே நாய்ன்னு நினைச்சோம்'னு சொல்வாங்க. நாங்களும்
கெளரவமா, 'இதோட பேரு கோபால கிருஷ்ணன்'னு சொல்வோம். கூடவே சுருக்கமா 'ஜிகே'ன்னு
கூப்புடுவோமுன்னும் சொல்வோம்.


இவன் எங்க இவர் கோபாலோட செல்லம். பழைய 007 படங்களிலே வில்லன் புசுபுசுன்னு வைர நெக்லஸ்
போட்ட வெள்ளைப்பூனையை வச்சுக்கிட்டிருந்தது யாருக்காவது ஞாபகம் இருக்கா? அதே அதே அதே.
என்ன, இவன் கருப்பு. விருந்தாளிங்க முன்னாலே இவனைத் தூக்கி மடியிலே வச்சுக்கிட்டுத்
தடவிக் கொடுத்துக்கிட்டே பேசிக்கிட்டிருக்கும் இவரைப் பார்த்தா எனக்கு 007 வில்லன் ஞாபகம்
வந்துரும். சிரிப்பை அடக்கிக்கிட்டே நைஸா அவுங்களுக்கு காஃபி, டீ கொண்டுவர்ற சாக்குலே
உள்ளெ போயிருவேன்.

இவனும் பசியிலே வயிறு காஞ்சுக்கிட்டு வந்தவந்தான். ஒரு ச்சின்ன நாய் சைஸுலே இருந்தான்.
கண்ணுலே 'பசி' தெரியுது. பார்த்துக்கிட்டுச் சும்மா இருக்க முடியுமா? இவர் வர்றதுக்குள்ளே
சாப்பாடு போட்டு அனுப்பிரணுமுன்னு ஒரு டின்னைத் திறந்து போட்டா, ஆவலா லபக் லபக்குன்னு
விழுங்கறான். பாவம், எத்தனை நாள் பசியோ? முழுசும் தீர்த்துட்டு இன்னும் தட்டை நக்கிக்கிட்டே இருக்கான்.
அதுக்குள்ளே இவர் வந்துட்டாரு. துரத்தறமாதிரி கையைத் தூக்கிக்கிட்டே இவர் வந்ததும் பயந்து ஓடிருமுன்னு
நினைச்சேன். ஆனா.....ஏதோ ரொம்ப நாளாப் பழகின மாதிரி இவர் கால்கிட்டேபோய் நின்னான். இவருக்கு
என்ன ஆச்சோ... ஒண்ணும் சொல்லாம வீட்டுக்குள்ளே போயிட்டார். இவனும் கூடவே போயி இவர் பக்கத்திலே
நிக்கறான். நல்ல நீளமான ரோமம். மெதுவா அவனைத் தடவிக் கொடுத்தாரா, அடுத்த விநாடி 'டக்'ன்னு
அவர் மடிமேலே ஏறி உக்காந்துக்கிட்டு இருக்கான். இதுவரைக்கும் நம்ம வீட்டுக்கு வந்த/இருந்த பூனைகளிலே
எதுவுமே இவர் மடிமேலே உக்காந்ததே இல்லை. நம்ம கப்புவுமே ஒரு அஞ்சு நொடி தடவிக்குமே தவிர, இவர்
தூக்கப்போனா ஓடிரும். மடிமேல உக்கார்ற பிஸினஸ் எல்லாம் கிடையாது.

ரொம்பப் பெருமிதமான முகத்தோட கேக்கறார்,'இவன் எங்கிருந்து வந்தான்?'ன்னு. யாருக்குத் தெரியும்?
உடம்புல்லாம் பெரிய பெரிய கட்டியாக் கறுப்பாத் தொங்குது.அதுலே இவர் கை பட்டவுடனே கொஞ்சம்
முறைச்சுப் பாத்துட்டுக் கையைத் தட்டி விட்டான்.என்னவா இருக்கும்? யாரோடது? இவ்வளவு
அழகாவும், சிநேகமாவும் இருக்கற இவனை விட்டுட்டுப் போக யாருக்கு மனசு வந்தது? ஒண்ணுமே புரியலை.
எதுக்கும் கொஞ்ச நாள் பாக்கலாம்.அதுவரை கராஜ் லே இருந்துக்கட்டுமுன்னு இருந்தேன்.

ஆனா.. இவனோட ஐடியாவே வேறா இருந்துச்சு. கராஜ்லே கொண்டுபோய்விட்டாலும், இவரோட கார்
மேலே ஏறிப் படுத்துக்குவான். மகளொடதையும் என்னோடதையும் சட்டையே செய்ய மாட்டான். காலையிலே
பாக்கறப்ப இவர் வண்டிமேலே பூனைப் பாதம் பாதமா கால்தடம் அழகாப் பதிஞ்சிருக்கும். விண்ட்ஷீல்ட் லேயும் கூட.
கிருஷ்ண ஜெயந்திக்குக் பாதம் பாதமாக் கோலம் போடுவோமே, அப்படி. இதாலதான் கிருஷ்ணன்னு பேரு வச்சேன்.
அப்புறம் இவன் கோபாலோட ச்செல்லமாயிட்டதாலே கோபாலகிருஷ்ணனாயிட்டான்.

ஒரு வாரம் ஆச்சு, எங்கேயும் போற அடையாளம் இல்லே. கப்புவோட 'கேட் டோர்' இருக்கறதைக் கண்டு
பிடிச்சு ரொம்ப உரிமையோட அதுக்குள்ளே வர்றதும் போறதுமா இருக்கான்.

நம் வழக்கப்படி 'ஷான்'கிட்டே கொண்டு போனோம். இந்த முறை இவரும் வந்தார். எனக்கு ஒரே ஆச்சரியம்.
என்ன ஆச்சு இவருக்கு? இதெல்லாம் எப்பவுமே என் டிபார்ட்மெண்ட் வேலையாச்சே.

'பெர்ஷியன் லாங் ஹேர்டு கேட். ரொம்ப நல்ல ப்ரீடு. வயசு அநேகமா எட்டு இருக்கும். இவன் ஒரு
ஆண். இவனை ஏற்கெனவே ஃபிக்ஸ் செஞ்சிருக்காங்க' ஷான் சொல்லச் சொல்ல நான் 'ஆ'ன்னு வாயைத்
திறந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.

'ஆண்' பூனையா? ஆணுக்குரிய 'அடையாளம்' இல்லாம இருக்கானே?( நம்ம வீட்டுலே எல்லோருமே
ஏண்டா தான்.ஆணானாலும் பொண்ணானாலும் சரி. 'ஹீ ஈஸ் அ ஷீ. பட் வீ கால் ஹெர் ஹீ')

'எங்கெருந்து வாங்குனீங்க?'ன்னு கேட்டார். வாங்கெல்லாம் இல்லை. வழக்கமா வர்றது போல
வந்துச்சுன்னு சொன்னேன். " உங்களைப் பத்தி பூனைகள் உலகத்துலே நியூஸ் பரவிடுச்சு போல.
அதான் கரெக்ட்டா உங்க வீட்டுக்கு வந்து சேர்ந்துடறாங்க'ன்னு சொல்லிச் சிரிக்கிறார்.
'ஏன் சிரிக்க மாட்டீங்க? உங்களுக்கு வருமானம் ஆச்சே'ன்னு சொல்ல வாய்வரைக்கும் வந்துச்சு.
ஆனா கேக்கலை.

உடம்புலே இருக்கறது கட்டி இல்லையாம். நீள ரோமம் அங்கங்கே ச்சிக்குப் பிடிச்சுச் சுருண்டு
கட்டி கட்டி இருக்காம். இமயமலையிலே இருக்கற 'ஜடா முடி சாமியார்' போலெ ஆயிருச்சு.

ராமாயணத்துலே வாசிச்சது நினைவு வந்துச்சு.'ராமனும், லக்ஷ்மணனும் காட்டுக்குப் போனாங்கல்லே,
அப்ப ஆலமரத்துலே இருந்து வர்ற பால், பிசினு எடுத்துத் தங்கள் முடியிலே தடவி சுருட்டிவிட்டுச்
சடைமுடியா செஞ்சுக்கிட்டாங்களாம். அப்புறம் இப்ப இந்த நாட்டுலே 'க்ரீன் பார்ட்டி'யைச் சேர்ந்த
பாராளுமன்ற உறுப்பினர் ஒருத்தர் இருக்கார். அவரோட பேர் 'நந்தோர்'. நீளமான முடியை இப்படித்தான்
சடைசடையா உருட்டிவிட்டுக்கிட்டு இருப்பார். அதென்ன 'ஸ்டைலோ'ன்னு இருக்கும்,அவரைப் பாக்கறப்பெல்லாம்
'இமயமலை சாமியார்' மனசுலெ வந்துருவார்.

'ஆமா, பூனைங்க ரொம்ப சுத்தமான மிருகங்களாச்சே. எப்பவும் தன்னை நக்கி நக்கி க்ளீன் செஞ்சுக்குமே'ன்னு
கேட்டேன்.

'இவன் சோம்பேறி'ன்னு சொல்லிட்டு சிரிக்கிறார் இந்த ஷான்.தோலோட சேர்த்து இழுக்கறதாலே
தொட்டாலெ வலிக்குமாம்.

'பசி வந்தாப் பத்தும் பறந்திருமுன்னு ஒரு பழஞ்சொல் இருக்கே. கும்பி காயறப்ப அலங்காரம் செஞ்சுக்க
முடியுமா? நியாயம்தானே?'ன்னு நினைச்சுக்கிட்டு, இப்ப என்ன செய்யணுமுன்னு கேட்டேன்.


'பெட் க்ரூம்' சர்வீஸும் இருக்காம். ஆனா அது பொதுவா நாய்ங்களுக்குத்தானாம். பூனை பிறாண்டிருமில்லே.
ஆனா நாங்களே, 'மயக்க மருந்து கொடுத்துட்டு நல்லா க்ளீன் செஞ்சு க்ரூம் பண்ணிவிடறோம். அதுக்குத்
தனி 'சார்ஜு'ன்னார். அதானே பார்த்தேன். இப்படிப் போகுதா விஷயம்?

எவ்வளவு ஆகும்ன்னு கேட்டேன்.எழுவது டாலராம்.

'நானே பத்து டாலருக்கு இருக்கற கடையாத்தான் தேடிப் போய் முடி வெட்டிக்கறேன்'ன்னு எங்க இவர்
சொன்னார். இவனுக்கு ஏழு மடங்கா?

இன்னிக்கு இங்கேயே விட்டுட்டுப் போங்க. நாளைக்குக் காலையிலே வந்து கூட்டிக்கிட்டுப் போகலாமுன்னு
சொன்னதாலே அங்கேயே விட்டுட்டு வந்தோம்.

மறுநாள் ஃபோன் போட்டுக் கேட்டப்ப, வேலை முடிஞ்சது. இன்னும் மயக்கம் தெளியலே. தெளிஞ்சவுடனே
உங்களுக்கு ஃபோன் போடறோமுன்னு பதில் வந்துச்சு.
இவர் பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர்றப்ப அப்படியே அங்கேயும் போனாராம். எதிர்வரிசைதானே?
அதேதான் சொன்னாங்களாம். மயக்கம் தெளியுது. ஆனா நிக்கறதுக்குக் கால் 'ஸ்டெடி'யா இல்லே. இன்னும்
கொஞ்ச நேரம் ஆகட்டும். வெட் வந்து செக் செஞ்சவுடனே வீட்டுக்குப் ஃபோன் போடறேன்'

அன்னைக்குப் பகல் மூணுமணிக்கு ஃபோன் வந்துச்சு. போய்க் கூட்டிட்டு வந்தேன். இவனா அவன்?
ரொம்ப புசுபுசுன்னு ரோமத்தோட பளிச்சுன்னு அழகா இருக்கான். உடம்பு பட்டுப் போல இருக்கு.
மயக்கத்துலே இருந்தப்பவே 'டெண்டல் செக்கப்'பும் செஞ்சாங்களாம். எல்லாம் நல்லா ஆரோக்கியமா
இருக்காம்.

தினமும் சாயந்திரம் இவர் வேலையை விட்டு வந்தவுடனே கால்கிட்டேயே சுத்திக்கிட்டு இருப்பான்.
கீழே உக்காந்தவுடனே மடியிலேஏறிக்கணும். இதுவே ஒரு பழக்கமா ஆயிருச்சு. நம்ம கப்புவுக்கு
இதெல்லாம் சுத்தமாப் பிடிக்கலே. இவனைப் பாக்குற பார்வையிலேயே ஒரு வெறுப்பு தெரியும்.
'ச்சீ போ'ன்னுட்டு எங்க ரூமுலே போய் உக்காந்துக்கும்.

ஆனா இந்த கோபாலகிருஷ்ணனும்( இனிமேப்பட்டு ஜிகே) லேசுப்பட்டதில்லை. கப்புவைப்
பின் தொடர்ந்துக்கிட்டே இருக்கும். ரெண்டுபேருக்கும் வெவ்வேறு இடத்துலேதான் சாப்பாடு வைப்போம்.
ஆனாலும் எங்கெங்கே கப்புவோட தட்டு இருக்குன்னு தேடிப் போய் அதையும் ஓசைப்படாமத் தின்னுட்டு
வந்துரும். பாவம் கப்பு.

ரெண்டு ரெண்டுதட்டுலே இருந்து முழுங்கறதை ஜீரணிக்கறதுக்காக, நம்ம தோட்டத்துலே, ஓடிப் போய் மரத்துலே
சரசரன்னு ஏறரதும், வேகமா 'ட் ரைவ் வே'லே ஓடி வாசப்பக்கம் இருக்கற செர்ரி மரத்துலே கிடுகிடுன்னு உச்சிவரை
ஏறி அங்கே இருந்து தொப்புன்னு குதிக்கரதுமா இருக்கும். அதுவும் இவர் பார்த்துக்கிட்டு நிக்கறாருன்னு தெரிஞ்சா
அவ்வªவுதான். ஒரே 'ஷோயிங் ஆஃப்'

கப்புவுக்கு உடனே கெட்ட பேர் வாங்கிவைக்கும்.'பார். எவ்வளவு நல்லா ஓடி விளையாடுறான்? உன் கப்பு
( இப்ப கப்பு என் கப்புவாயிப்போச்சு)பாரு, எப்பவும் படுக்கையிலே ஏறி உக்காந்துகிட்டு இருக்கு. வீட்டுக்கு
யாராவது வந்தாக்கூட ஓடிப்போய் ஒளிஞ்சுக்கிறது. பயந்தாங்கொள்ளீ. சாப்பாடு சாப்புடவும் ரொம்ப
ஃபஸ் பண்ணிக்கும். ச்சூஸி. '

அதுக்கென்ன செய்யறது? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதம். இது எங்கெங்கியோ அலைஞ்சு திரிஞ்சதாலே
கஷ்டம் புரிஞ்சது. 'சோறு கிடைக்கற இடம் சொர்க்கம்'ன்னு இருக்கு. கப்பு அப்படியா? பிறந்ததுலே
இருந்து உயர்தரமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டது. 'காந்தானி' அதுமட்டுமா?
இவனைவிட மூத்ததாச்சே. பெருந்தன்மையா(!) இருக்கு.

சிலசமயத்துலே அசந்து தூங்கற கப்புவுக்குப் பக்கத்துலே ஒரு ரெண்டு இஞ்சு இடம் விட்டு ஜிகேயும்
பூனைமாதிரி படுத்துக்கிட்டு இருக்கும். கப்புவுக்கு வயசாகிக்கிட்டு இருக்கறதாலே மோப்ப சக்தியும்
குறைஞ்சுக்கிட்டு வருதுபோலெ. திடுக்குன்னு முழிச்சுக்கிச்சுன்னா, இவனைப் பாத்து 'துப்பிட்டு' ஓடிரும்.

எலியும் பூனையுமா இருக்கறது சொல்வாங்களே அதே போல பூனையும் பூனையுமா இருக்காங்க ரெண்டுபேரும்.
எலின்னதும் ஞாபகத்துக்கு வருது, இந்த ஜிகே எப்பவும் ஏதாவது எலியைப் பிடிச்சிக்கிட்டு வீட்டுக்குள்ளெ கொண்டு வந்துரும்.
அதைக் கொல்லவும் கொல்லாது. எலியை வாயிலே இருந்து கீழே வீசிட்டு அதுமுன்னாலேயே உக்காந்திருக்கும்.
கொலைகாரன் முன்னாலே இருக்கறதாலே பயந்து நடுங்கற எலியை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நகர விடாது.
நகர ஆரம்பிச்சா, வாலைப் பிடிச்சு இழுத்து வைக்கும். எமனைப் பாத்த பயத்துலேயே அது செத்துப் போகும்.
ஒரே சித்திரவதைதான். போன ஜென்மத்துலே இவந்தான் 'ஹிட்லர்'போல.

ஏண்டா, இந்தப் பாவத்தைக் கொட்டிக்கிறே?


இன்னும் வரும்.


Thursday, July 14, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 16

முடிவு எடுக்கணுமாம். என்னன்னு எடுக்கறது? மிருகங்கறதாலே சுலபமா சரின்னு சொல்லிரலாமா?
இதுவே மனுஷனா இருந்தா? யோசிச்சுச் சொல்லச் சொன்னாங்க. இதுலே யோசிக்க என்ன இருக்கு?
'சட்'னு முடிவு எடுத்துட்டேன்.சொல்லமுடியாதுதான் எவ்வளவு நாள் இப்படியேன்னு. பணம் செலவாகுமாம்.அதுவும் சரிதான். ஆனா அதுக்காக
என்னாலே கொடுமை செய்ய முடியாது.எல்லாம் கடவுள் விட்ட வழி. இருக்கும்வரை இருக்கட்டும்.

மொதல்லே வாராவாரம் வந்துக்கிட்டிருந்த 'சுகக்கேடு' கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சுடுச்சு. நாலைஞ்சு
நாளுக்கொருதடவை 'வெட்'கிட்டே கொண்டு போகவேண்டியிருந்தது. மருந்து கொடுத்து ஒரு ஊசியும்
போடுவாங்க. சிலநாள் ஒண்ணுமே சாப்புடறதில்லை. ஓடு உடனே 'வெட்'டுக்கு.

உடம்பு இளைக்க ஆரம்பிச்சு, அப்படியே துரும்பாப் போச்சு. இந்த நோயோடு போராடுற மனுஷங்க
நிலையும் இப்படித்தானே இருக்கும்? அதுலேயும் ச்சின்னப் பசங்களை நினைச்சா மனசுக்கு ரொம்பவே
வேதனையாப் போயிரும். ஒரு தப்பும் செய்யாத பிஞ்சுங்க...

எல்லாத்துக்கும் ஒரு முடிவு வருமில்லே, அப்படியே வரவும் செஞ்சது. மூணுநாளா சாப்பாடு செல்லலை.
ஷானும் சொல்லிட்டார், 'இனியும் தள்ளிப் போடறது நல்லதில்லை. அது வேதனையிலே துடிக்குது'ன்னு.
மனசைக் கல்லாக்கிக்கிட்டு தலையை ஆட்டுனேன். 'இன்னிக்கு ஒருநாள் வீட்டுலே வச்சுக்கறேன்'னு
சொன்னேன். அன்னைக்கு ராத்திரி ஒரு மணிவரை நானும், எங்க இவரும் 'ஷிவா'கூடவே இருந்தோம்.
எங்க இவரு, பூனை நாய் வேணாமுன்னு கத்துவாரே தவிர, மனசுக்குள்ளே ரொம்ப இரக்க சுபாவம்.
இல்லேன்னா இத்தனை மிருகங்களை வளர்த்திருக்க முடியுமா?
நாம ச்சும்மா இருந்தாக்கூட, வாசல்லே ஒரு 'ஹெட்ஜ்ஹாக்'கைப் பார்த்தா, 'அவன் வந்துருக்கான், எதாவது
சாப்பாடு போட்டுவுடு'ன்னு சொல்வார். மறுநாள் காலையிலே வேலைக்குப் போறதுக்கு முந்தி, 'ஷிவா'வைக் கொஞ்ச
நேரம் தூக்கி வச்சுக்கிட்டே உக்காந்திருந்தார்.

அன்னைக்கு 'ஷிவா'வைச் சாமியறையிலே கொண்டுபோய் வச்சேன். அப்படியே உக்காந்து இருந்தது ஒரு அஞ்சு நிமிஷம்.
'சாமியைக் கும்பிட்டுக்கோ. அடுத்த ஜென்மம் நல்லதா இருக்கும்'னு சொன்னேன்.

ஷான் சொன்னார்,'நீங்க விட்டுட்டுப் போறதா இருந்தா போங்க. நான் ஊசியைப் போட்டுடுவேன்'ன்னு.
கடைசிநிமிஷம் அதை அநாதையா விட்டுட்டுப் போக முடியாம நெஞ்சு அடைச்சமாதிரி இருந்துச்சு.
'இல்லே, நானும் கூடவே இருக்கேன்'ன்னு சொன்னேன். நல்லா இருந்தவரைக்கும் கொஞ்சிட்டு, கஷ்டம்
வந்தா அப்படியே விட்டுட்டு ஓடிரணுமா?

ஊசியைத் தயார் செஞ்சு கொண்டுவந்தாங்க. அடிக்கடி ஊசி போட்டுக்கிட்டுப் பழகிட்டதாலே
'ஷிவா' தானே முன்கையை நீட்டுச்சு. ஊசிக்காக அதோட முன்கையிலே ரோமத்தை ஏற்கெனவே
ஒரு இடத்துலே நீக்கியிருந்தாங்க.

'உயிர் போறப்ப வலிக்குமா?'ன்னு கேட்டேன். 'வலியே இருக்காது. தூக்கம் வந்துரும்,அப்படியே தூங்கிடும்.
அவ்வளவுதான்'ன்னு ஷான் சொன்னார்.

ஆச்சு. ஏழு மாசம் கஷ்டப்பட்ட ஆத்மாவுக்கு இன்னைக்கு விடுதலை. கையை நீட்டிக்கிட்டு என்னையே
பார்த்துக்கிட்டு இருந்துச்சு. அந்தப் பார்வை......

என்னாலே அழுகையை அடக்கவே முடியலை. தலையைத் தடவிக்கிட்டே இருந்தேன்.அப்படியே
மெதுவாக் கண்ணை மூடிக்கிச்சு. அஞ்சுநிமிஷம் கூட இல்லே, உடம்புலே சூடு கொஞ்சம் கொஞ்சமாக்
குறைஞ்சுக்கிட்டே வந்து 'ஜில்'ன்னு ஆயிருச்சு. பரிசோதிச்சுப் பார்த்த ஷான், 'முடிஞ்சிருச்சு'ன்னு
சொல்லிட்டு அறைக்கதவை மூடிக்கிட்டு வெளியே போயிட்டார். அழுதுமுடிச்சு ஆசுவாசப் படுத்திக்க
அரைமணிநேரத்துக்கு மேலே ஆயிருச்சு. மெதுவாக் கதவைத் தட்டிட்டு ஷான் உள்ளே வந்து எனக்கு
ஆறுதல் சொல்லிட்டு, 'டிஸ்போஸல்' எப்படி? நாங்களே அனுப்பவா?'ன்னு கேட்டார். என்ன செய்வீங்கன்னு
கேட்டதுக்கு, அப்படியே சிடிக்கவுன்சில் 'டம்ப்'க்குப் போயிரும். இல்லேன்னா, இப்ப புதுசா 'பெட் செமென்ட்ரி'
ஆரம்பிச்சிருக்காங்க. அங்கேயே புதைக்கலாம்'னார். கிரிமேஷன் கூடச் செய்யறாங்களாம்.

'கிரிமேஷன் செஞ்சுருங்க'ன்னு சொன்னேன். 'அஸ்தி வேணுமானாலும் கிடைக்கும். ச்சின்ன 'அர்ன்'லே
போட்டுத்தராங்க,ன்னார். நான் வேணாமுன்னு சொல்லிட்டேன்.
'இன்னும் கொஞ்சநேரம் கூடஇருக்கணுமுன்னாலும் இருங்க'ன்னுட்டு சொன்னார். சவச்சடங்குக்கு
உண்டானக் காசைக் கொடுத்துட்டு, காலிக் கூடையை எடுத்துக்கிட்டுக் கனத்தமனசோட வீட்டுக்கு
வந்தேன்.

வழக்கமில்லாத வழக்கமா 'கப்பு' ஓடிவந்து கூடையை மோந்து பார்த்துச்சு. கப்புவைக் கட்டிப்புடிச்சுக்கிட்டு
இன்னும் ஒரு பாட்டம் அழுது தீர்த்தேன். பகல் சாப்பாட்டுக்கு வந்த எங்க இவர்,'அழுதானா'ன்னு கேட்டார்.
மகளும் 'யூனி'லேருந்து வந்தவுடனே ரொம்ப ஆறுதலாப் பேசுனா. மெச்சூரான பேச்சு. 'இட் இஸ் ஒக்கே மாம்.
ஃப்ரீ ஃப்ரம் த பெய்ன்'.... ச்சின்னப் பொண்ணுக்கு இதெல்லாம் தெரியுதேன்னு எனக்குஆச்சரியமாவும்
இருந்துச்சு. மறுநாள் 'ஷிவா'வோட 'டெத் சர்ட்டிஃபிகேட், க்ரிமேஷன் ரிப்போர்ட் ' ரெண்டையும்
க்ரெமெடோரியத்திலிருந்து ஒருத்தர் கொண்டுவந்து வீட்டுலே கொடுத்துட்டு ஆறுதலா கொஞ்சம்
பேசிட்டுப் போனார். நம்ம ஷானும் ஒரு இரங்கல் அட்டை தபாலில் அனுப்பினார். அதுலே நம்ம 'வெட்
க்ளினிக் ஸ்டாஃப்' எல்லோரும் கையெழுத்துப் போட்டிருந்தாங்க.

எனக்குத்தான் நினைக்க நினைக்க துக்கம் பொத்துக்கிட்டு வந்துச்சு. இப்பக்கூட இதை எழுதறப்ப
'ஷிவாவோட கடைசிப் பார்வை' அப்படியே கண்ணுமுன்னாலே வருது. இப்பவும் கொஞ்சம் அழுது முடிச்சிட்டுத்தான்
மறுபடி எழுதறேன்.

'மயான வைராக்கியம்'னு சொல்வாங்கல்லெ. அதுபோல 'இனி ஒரு மிருகமும் வேணாம்'னு இருந்துச்சு.
எண்ணி ரெண்டே நாள். சொன்னா நம்ம மாட்டீங்க. நம்ம'கராஜ்'லே ஒரு வெள்ளைப் பூனை படுத்திருக்கு.
'பசிக்குது போல இருக்கு. என்னப் பாத்துட்டு' மியாவ்'ன்னு கூப்புடுது' விவரம் சொன்னது மகள்.

கொஞ்சம் சாப்பாடு வச்சோம். ஆவலாத் தின்னுச்சு. கழுத்துலே பட்டையும் அதுலே ஒரு 'நேம்டேக்'ம்
தொங்குது. யாரோ சொந்தக்காரங்க இருக்காங்க. தொடப் போனவுடனே பின்வாங்குச்சு. பயம் தெளியட்டுமுன்னு
இருந்தோம். தினம் சாயந்திரம் ஏழுமணிக்குப் பக்கம் ஆஜராகிக்கிட்டு இருந்துச்சு. கைக்குமட்டும்
கிடைக்கலே. மகள் சொன்னா,தான் நேம்டேகைப் படிச்சுச் சொல்றதாக.

நாலஞ்சுநாள் மகளே சாப்பாட்டை வச்சிக்கிட்டு இருந்தாள். அதுவும் மெதுவா அவளைப் பழகிருச்சு.
அதோட காலர்லே இருக்கற விவரமும் கிடைச்சிருச்சு. பேரு 'நிக்கி' ஃபோன் நம்பரும் இருந்துச்சு.

அதுக்குப் ஃபோன் போட்டேன். விவரம் சொன்னதும் இப்பவே வரோம்னு சொன்னாங்க. இப்ப சாப்டுட்டுப்
போயிருச்சு. நாளைக்கு ஏழுமணிக்குத்தான் வரும். வீட்டுலேயே இருங்க. வந்தவுடனே ஃபோன் போடறேன்னு
சொல்லிவச்சேன். மூணாவது தெருதான்.
நிக்கி, நிக்கின்னு பேரைச் சொல்லிக் கூப்புட்டவுடனே கொஞ்சம் பயம் போயிருச்சு போலெ.
இதுக்குள்ளெ நம்ம லாண்டரிவரைக்கும் வரப் பழக்கியிருந்தா மகள். அன்னைக்கு வந்தவுடனே சாப்பாட்டுத்
தட்டைக் காமிச்சுக்கிட்டே லாண்டரிவரை கொண்டுவந்துட்டுக் கதவை மூடிவச்சுட்டோம். ஃபோன்
செஞ்சவுடனே வந்துட்டாங்க, ஒரு ஆளும், ஒரு பொம்பிளையும். 'ட்ரைவ் வே' லே வர்றப்பவே,'நிக்கி
நிக்கி'ன்னு கத்திக்கிட்டே வராங்க. நிக்கியும் சத்தம் கேட்டுட்டு இப்படியும் அப்படியுமா பரபரன்னு
பாக்குது.

'லாண்டரிக் கதவை மெதுவாத் திறங்க.உள்ளெ இருக்கு'ன்னு சொன்னேன். என்னமாதிரி ஒரு
ரீயூனியன்... 'நிக்கி,யூ மங்க்கி'ன்னு அந்தம்மா கூவ, நிக்கி அப்படியே 'ஜம்ப்'செஞ்சு அந்தம்மா
கிட்டே தாவுச்சு!!!! கட்டிப் புடிச்சுக்கிட்டு அந்தம்மா அழுவுது. வீடு மாத்திக்கிட்டு இங்கே
வந்தவுங்களாம். புது இடத்துலே வந்து பூனை காணாமப் போயிருச்சாம். பத்துநாளாச்சாம்.
தேடிக்கிட்டே இருந்தாங்களாம். நிக்கியை மாரோட சேர்த்து அணைச்சுக்கிட்டே விவரம்
சொன்னாங்க. ஒரு நூறுமுறை 'தேங்ஸ் தேங்ஸ்'னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

கூட வந்தவர் கையோடு கொண்டுவந்துருந்த ஒரு 'கேட் ஃபுட் டின்'னை எங்கிட்டே கொடுக்கவந்தார்.
வேணாம்.நம்ம வீட்டுலே ஏராளமா ஸ்டாக் வச்சிருக்கோம். பரவாயில்லேன்னு சொல்லிட்டேன்.
எப்படியோ குடும்பத்தோட சேர்ந்துடுச்சுன்னு சந்தோஷமா இருந்துச்சு.

'கப்பு, இனிமே நீமட்டும்தாண்டா நம்ம வீட்டுலே'ன்னு உறுதிமொழியெல்லாம் கொடுத்துட்டோம்.

ஆனா, நாமொன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்குமாமே?


இன்னும் வரும்.

Wednesday, July 13, 2005

அந்நியர்!!!!

நேத்து வச்ச சாப்பாடு அப்படியே இருக்கு. என்ன ஆச்சு இதுங்களுக்கு?
ஏன் சாப்புடவே இல்லை?

" ஏண்டா பசங்களா, பசியில்லையா? இல்லே , இந்த சாப்பாடு பிடிக்கலையா?"

" எங்களுக்கு பசி இருக்கு. ஆனாலும் சாப்புடமாட்டோம்"


" அதான், ஏன்னு கேக்கறேனில்லே"

" எங்களுக்கு உன்மேலே கோவம்!"

" ஏண்டா? நான் என்ன செஞ்சேன்?"

" எங்களைக் கேவலப்படுத்திட்டே"

'ஓ'வென்று அழுதுகொண்டே இருக்குதுகள்.

"சரி.சரி. அழுகையை நிறுத்துங்க. நான் எப்ப உங்களைக் கேவலப்படுத்தினேன்?"

" நேத்து மனித மிருகம்னு எழுதுனயே."

" அதுக்கு?"

"அப்படி எங்க மிருகவர்க்கத்தைக் கேவலமா எழுதுனதை ஆட்சேபிக்கிறோம். நாங்க என்ன
'மனிதனை'ப்போல தரக்குறைவான வார்த்தைகளை எப்பவாவது பேசியிருக்கோமா? கிட்டத்தட்ட உன் வாழ்க்கை
முழுசும் ஏதாவது ஒரு மிருகத்தோடதானே இருந்திருக்கே. ஒருநாள், வேணாம் ஒரேஒருதடவை ஒரு சொல்,
குறைஞ்சபட்சம் ச்சீன்னு சொல்லியிருப்போமா?"

விசும்பல் தொடருகிறது.

" என்னடா செய்யறது. யாரோ ஒரு கழிசடை அசிங்கமா பின்னூட்டம் போட்டுடுச்சு. ஏற்கெனவே பலபேரோட பதிவு
களிலே வேலையைக் காமிச்சுக்கிட்டு இருந்துச்சு. பொழுது போகலை போல இருக்கு. ரெண்டு மாசத்துக்கு முந்திகூட
நம்ம பதிவுலே ஒண்ணு போட்டது. என்ன இழவுடா இதுன்னு நினைச்சுக்கிட்டு அதை அழிச்சேன். அதுக்கப்புறம்
ஏதோ பேய், பிசாசு அதோட உடம்புலே பூந்துடுச்சோ என்னவோ, தன்னைமிஞ்ச ஆளில்லைன்னு அநேகமா எல்லோரோட
பதிவுகளிலேயும் போய் ஆட ஆரம்பிச்சுடுச்சு."

" ஸ்டாப், ஸ்டாப். இப்ப எதுக்கு பேய் பிசாசுகளை வம்புக்கு இழுக்கறே?"

" தப்புதான். அதுசரி, நான் மிருகமுன்னு எழுதுனது உங்களுக்கு எப்படித்தெரியும்? "

" நீதான் எப்பவும் டொக் டொக்குன்னு எதாவது தட்டிக்கிட்டே இருக்கியே, கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துக்கிட்டு.
மனுஷன்களுக்கு அந்நியன் இருக்கறாப்பல எங்களுக்கும் அந்நியர்னு ஒரு ஸைபர் தலைவர் இருக்கார். மிருகங்களான
எங்களுக்குத்தான் பொட்டி தட்டத் தெரியாதே தவிர, அந்நியருக்கு இதெல்லாம் தண்ணிபட்ட பாடு. அவர்தான் எங்ககிட்டே
இதைப் பத்திச் சொன்னது. 'ஏ மிருகங்களா, உங்களுக்கு எவ்வளவு கேவலம் நடந்து போச்சு பாத்தீங்களா? கம்ப்யூட்டர்னு
சொல்றதைக் கண்ணுலே பாத்தது மட்டும்தான் நீங்க. உங்களுக்கெல்லாம் அதுலெ டொக் டொக்குன்னு தட்டச்சு செய்யற
தெல்லாம் தெரியாது. ஒருத்தன் தட்டச்சு செய்யறதுமட்டுமில்லாம அசிங்க அசிங்கமாவும் ஆபாசமாவும் தட்டச்சு
செஞ்சு அனுப்பிவிட்டுக்கிட்டு இருக்கான். உங்களுக்குக் கோபம் வந்தா வள் னு மேலே பாஞ்சுடுவீங்க. போரடிச்சா,
ஒரு மூலையிலே படுத்துத் தூங்கிருவீங்க.

ஆனா கெட்ட 'மனிதன்' மட்டும் மூளையை உபயோகிச்சு யார்யாரை எப்படி நாஸ்தி செய்யலாமுன்னு திட்டம் போட்டு
இருக்கற கொஞ்ச நஞ்ச அறிவையும் பாழாக்கிக்கிடுவான். நல்லவேளையா உங்களிலே ஒருத்தர் பேரை போட்டுக்காம
மனிதன்ற பேருலேயே அசிங்கம் பண்ணிக்கிட்டு, அதே பேருலே ப்லொக் ம் பதிஞ்சு வச்சிருக்கான்.

அன்னானிமஸ் பின்னூட்டம் வேணாமுன்னு பலரும் தூக்கிட்டதாலே ப்லொக்கர் ஆகிகிட்டான் போல. மனிதன்
செய்யற கெடுதல்களை மனுஷராலே நிறுத்தமுடியாம அவஸ்தைப் படறதை நான் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.
நீங்க போய் உங்க எஜமானியம்மாகிட்டே சொல்லுங்க. அவுங்க சரின்னு சொன்னா இதை நிறுத்த நான் வழி காமிக்கறேன்'னு
போய்ச் சொல்லுங்கன்னார்."

" கேக்கவே சந்தோஷமா இருக்குடா. அப்படி என்னதான் செய்வாராம் உங்க அந்நியர்?"

"நாங்க போய்க் கேட்டுட்டு வர்றோம்"

இதுங்க போனபிறகு நான் இதைப் பத்தி யோசிச்சுக்கிட்டு இருந்தேன். உனக்கு எப்படி மிருகபாஷை தெரியுமுன்னு
கேக்கறீங்கதானே? அதுங்க சொன்னமாதிரி ஏறக்குறைய மிருகங்களோடவேதான் இத்தனை வயசுவரைக்கும் இருந்துக்கிட்டிருக்கேன்.
எப்பவும் அதுங்ககூடப் பேசிப்பேசி அப்படியே கத்துக்கிட்டதுதான். இவ்வளவு எதுக்கு? அதுங்களுக்கேக்கூட தமிழ்
நல்லாத்தெரியும். எல்லாம் ஒருத்தர்கிட்டே இருந்து ஒருத்தர் கத்துக்கறதுதானே? கொஞ்சம் இருங்க, அதுங்க வருது.
முகத்துலே சிரிப்பாணியா இருக்கு!

" வாங்கடா. என்ன சொன்னார் தலைவர்?"

" மயிலே மயிலே இறகு போடு. திருடனாப் பாத்துத் திருந்தணும் இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தா ஒண்ணூம்
நடக்காதாம். எச்சி துப்பறது, காரை நிறுத்தாமப்போறது, சரியான சுத்தபத்தமான சாப்பாடு தராம ஏமாத்தறது இதெல்லாம்
மனுச உலகத் தப்புங்களாம். சைபர் உலகத்துலே தப்போட அளவுகோலுங்க வேறயாம். மனசாலே, தட்டச்சாலே அசிங்க அசிங்கமா
அழுக்குக் காமெண்ட்ஸ் போடறது மகாப் பெரிய பாவமாம். அதனாலே கழுமரம் ஏத்தறதுதான் சரியானதாம். அப்பத்தான் உயிர் உடனே
போகாதாம். செஞ்சதையெல்லாம் சிந்திச்சுப் பார்க்க நிறைய நேரம் இருக்குமாம்."

" அடப் பாவமே"

"பாவம் புண்ணியமெல்லாம் பாக்கக்கூடாதாம். பெண்குலத்தையே இழிவு செஞ்சவங்களாம் இவுங்க. ஒரு ஆணைத்
திட்டணுமுன்னாலும் அவசியமில்லாம அவுங்க வீட்டுலே இருக்கற மற்ற பெண்களையெல்லாம் கேவலப்படுத்துனவங்களாம்.
இன்னும் சொல்லப்போனா இதுவே குறைஞ்சபட்சத் தண்டனைதானாம்"

" என்னவோ போ. இந்தக் கழிசடையையும் ஒரு பெண்ஜென்மம்தானே பெத்துப் போட்டிருக்கும்?"

" ஆமாம். அது 'மனிதனு'க்குப் புரியலைபோல! என்ன மனுஷங்களோ? சரி, பேச்சை வளர்க்காம சீக்கிரமா
சாப்பாடு போடு. நேத்திருந்து சாப்புடாம பசி உயிர் போகுது"
Tuesday, July 12, 2005

பவர் ஆஃப் வுமன்!!!

இணையத்துலே ரெமோ, அந்நியன் & ரூல்ஸ் பத்தியெல்லாம் பல இடங்களிலே விவாதம் ச்சுடச்சுட நடந்துக்கிட்டு
இருக்கற இந்த சமயத்துலே யாருக்கும் தெரியாம வந்த ஒண்ணைப் பத்திச் சொல்லப்போறேன்!!!


ஜெயதேவின்னு ஒரு சினிமா இயக்குனர் இருக்கறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்தானே? இந்தப் படமும்
அவுங்க இயக்குனதுதான். கதை, திரைக்கதை, இயக்கம் எல்லாம் அவுங்கதானாம்.

ஆத்மான்னு ஒரு பாடகர் இருக்கார். பாட்டு மட்டுமில்லை, ஓவியம், சிற்பம்னு பல கலைகளிலும் வெளுத்து
வாங்கறார்.

ஷ்யாம்னு ஒருத்தர் இந்தியாவுக்குப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு, மனைவியைக் கூட்டிக்கிட்டு வர்றார்.

மனைவி ஜோதிக்குப் பாடறதுலே விருப்பம் இருக்கு. ஆத்மா, ஷ்யாமோட குடும்ப (பெரியப்பாவோட நண்பர்)
நண்பர். அவரோட சேர்ந்து ஜோதி பாடறாங்க. பாடட்டும்.

ஷ்யாம் நல்லவனில்லைன்ற விஷயம் ஜோதிக்குத் தெரியவருது.அப்புறம்...

என்ன? சண்டைதான். ஜோதியைக் கொடுமைப்படுத்தறான். ஆத்மாவுக்கும் ஜோதிக்கும் தகாத உறவு இருக்கறதாச்
சொல்லி ஒரே டார்ச்சர். கடைசியிலே ஜோதியைக் கொன்னும் போட்டுடறான்.

ஜோதியோட வாழ்க்கையைக் கதையா எழுதறாரு ஆத்மா. புத்தகத்தோட பேரு 'மரணசாசனம்'. பெண் விடுதலையைப்
பத்தி அதிலே வலியுறுத்தறார்.

அதை எதிர்த்து எல்லா மதக்காரங்களும் வழக்குப் போடுறாங்க. இப்படிப் போகுது கதை.

நடிகர் லிஸ்டைப் பாப்போம்.

ஆத்மா - பாடகர் ஹரிஹரன் (முதல்முறையா நடிகராகியிருக்கார்)

ஷ்யாம்- ரியாஸ்கான்( குஷ்புவைக் கல்யாணம் செய்யறதைக் காமிக்கறப்பவே கெட்ட புருஷனா இருப்பான்னு
மனசுக்குள்ளே தோணுச்சு)

ஜோதி- குஷ்பு நடிப்பு பரவாயில்லை. ஆனா ஏகத்துக்கும் குண்டடிச்சு இருக்காங்க. அவுங்களுக்கு டப்பிங் யாரோ?
ஒட்டாதமாதிரி இருந்தது.

பெரியப்பா- லக்ஷ்மிரத்தன். இவர் வழக்கமா எல்லாப் படங்களிலும் பெரும்பணக்கார அப்பாவா வருவார். இதுலேயும்தான்
ஆனா, மொதமுறையா அடி உதை எல்லாம் வாங்கி செத்தும் போறார்.

படம் முழுக்க தி.க. பிரச்சார நெடி.பெண் விடுதலை பற்றிய பெரியாரோட கொள்கைகளைச் சொல்லியிருக்காங்க.
ஆத்மாவும் கறுப்பு உடை போட்டுக்கிட்டு புத்தகம் எழுதறார்.( மனசுக்குள்ளே வீரமணி வந்து போனார்)

படம் முழுக்க டொராண்ட்டோலே எடுத்திருக்காங்க. சி.என். டவர் நிறைய இடத்துலே வருது. நயாக்கரா அருவியும்
சில இடங்களிலே வருது. (கட்டாயம் கனடாவுக்கு ஒரு விசிட் அடிச்சுரணும். ரொம்பநாள் ஆசை.)

இசை வித்யாசாகர். ஹரிஹரனோட பாட்டுங்க நல்லா இருக்குதான், ஆனா மேற்கத்திய இசை கலந்து ஃப்யூஷன்
ம்யூஸிக் ஆகறதாலே மனசுலே நிக்கலை.

இந்திய ஜனத்தொகையிலே பாதிக்குப் பெண்கள் இருக்கறதாலெ 50சதமானம் இட ஒதுக்கீடு வேணுமுன்னு ஆத்மா
சொல்றாரு. எனக்கு இது ரொம்பவே பிடிச்சுருக்கு.( நான் எப்பவும் மனசுலே நினைச்சுக்கிட்டு இருந்ததுதான்!)

ச்சும்மா ஒருதடவை பார்க்கலாம்.

பி.கு:

நிஜமாவே ஒரு 'அந்நியன்' இருந்தாத் தேவலைன்னு இருக்கு. மனித ரூபத்துலே இருக்கற மிருகங்களைக் கொல்றதுக்கு!!!
Sunday, July 10, 2005

ரெயின்போ வாரியர்!!!!!

இன்னைக்கு இருவது வருசமாச்சு, இது நடந்து!! ஜூலை 10, 1985!!

'ரெயின்போ வாரியர்'ன்னு ஒரு கப்பல். இது 'க்ரீன்பீஸ் (Greenpeace )' இயக்கத்தைச் சேர்ந்தது!!
பஸிஃபிக் கடல் பகுதிகளில், குறிப்பாக 'தாஹித்தி'யில் ஃபிரான்ஸ் அரசாங்கம்
'அணு சம்பந்தமான சோதனை' செய்யறதை எதிர்த்து அதைத் தடுக்கவும் அதை
எதிர்க்கவும் காவல் காப்பதற்காகவும் இந்தக் கப்பல் 'ரோந்து'வந்து கொண்டிருந்த
காலம்.


ஆக்லாந்து நகரில்( நியூஸிலாந்து) துறைமுகத்தில்(Matauri Bay) நிறுத்திவைக்கப்பட்டிருந்த
இந்த 'ரெயின்போ வாரியர்' குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது.

யாரால்?

அப்போதைய ஃப்ரான்ஸ் அதிபரின் ரகசிய ஆணைக்குட்பட்டு செயல்பட்ட இரண்டு ஃப்ரான்ஸ் நாட்டு
(French secret agents) ஆசாமிகளால்!!!!

கடலிலே 30 மீட்டருக்கு அடியில் ஜலசமாதியில் இருக்கும் அந்தக் கப்பலைச் சுற்றிலும் பலவித அபூர்வ
கடல்வாழ் உயிரினங்கள் இருப்பதாகவும், பலவித நிறமுள்ள பவழக்கூட்டங்களாலும் இது பூக்களால்
அலங்கரிக்கப்பட்டது போலவும் இருக்கின்றதாம்!!!! தற்போது இதுவும் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக
ஆகிவருகின்றது!!!

இதன் படங்களைப் பார்க்க:

http://www.greenpeace.gen.nz/gallery/Rainbow-Warrior

தற்போது இன்னொரு புது ரெயின்போ வாரியர் (RAINBOW WARRIOR II ) உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
இன்று இரவு அந்த ஜலசமாதியில் மலர்வளையம் வைத்து நினைவுநாள் கொண்டாடப்படும்!!!

(On July 10, three divers, including Peter Willcox - skipper of the Rainbow Warrior on the
night she was bombed - will take a wreath and an underwater memorial down to the wreck)

நியூஸிலாந்து நாட்டின் முக்கிய கொள்கைகளில் ஒன்று அணுசக்தி/ஆணுஆயுத எதிர்ப்பு(nuclear free policies.)

இந்தக் கொள்கையை அனைவரும் ஆதரித்தால் உலகத்திற்கு நல்லதுதானே?Saturday, July 09, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 15

ஆஃப்ரிக்கன் சஃபாரி!!!! டிஸ்கவரி சானல்!!! வரிக்குதிரை ஓடிக்கிட்டு இருக்கு! பின்னாலே இருந்து
நாம பாக்கறப்ப அதோட வாலும் பிருஷ்டபாகமும் கறுப்பு வெள்ளைக்கோடுங்களா அழகா இருக்கு!!!நடுவிலே வாலு இங்கும் அங்குமா ஆடுது!! ஹை!!!!!


இப்பக் கொஞ்சநாளா நம்ம 'ட் ரைவ் வே'லே கார் நுழையறப்ப, அதிலும் ராத்திரியிலே காரோட
ஹெட்லைட் வெளிச்சத்துலே ஆஃப்ரிக்கா போகாமலேயே சீன் காட்டிக்கிட்டு இருக்கு ஒண்ணு!
மிடில் ஏஜ்!!! பேரு 'ஷிவா'!!! இதுவரைக்கும் நம்ம பூனைங்களிலே ரொம்ப உயர்வான அறிவும்,நாகரீகமும்
நிறைஞ்சது இது மட்டும்தான்!!!!

பின்கதவு வழியா வீட்டுக்குள்ளெ வர ஆரம்பிச்ச முதல் நாள்!பூனைங்களுக்கே உரிய 'மூக்கை நீட்டும்
சுபாவத்தோடக் கதவு திறந்திருந்த 'ஹால்வே'யை எட்டிப் பார்த்தப்ப நான் சொன்னது,' ஷிவா, அங்கே போகக்கூடாது!
அது வேற யாரோடயோ(!) வீடு'!!! உடனே தலையை உள்ளெ இழுத்துக்கிட்டது, ஒரு நாளும் அங்கே
போகவேயில்லை!!!! கதவு திறந்திருந்தாலும் அந்தப் பக்கம் ஒரு பார்வையை வீசிட்டு எங்க 'லிவிங் ஏரியா'
விலே இருக்கற சோஃபாவுலே ஏறி, பெரிய மனுஷத்தோரணையிலே உக்காந்துக்கும்!!!! நாங்க எல்லோரும்
அந்த யாரோடயோ வீட்டுக்கு( அங்கேதானே நம்ம படுக்கை அறைங்கெல்லாம் இருக்கு)போறதும் வாரதுமாக
இருப்போம்.கப்பு, எப்பவுமே ரைட் ராயலா எல்லா இடத்துக்கும் போகும்!!! இதுங்களை
யெல்லாம் அவ்வளவாப் பொருட்படுத்தாது. ஷிவா வந்து ஏறக்குறைய ஒரு வருஷம் ஆச்சு! திடீர்னு
ஒரு நாள் தள்ளாடி வந்து தரையிலேயே சுருண்டு படுத்துக்கிச்சு. தொட்டுப் பாத்தா நல்ல காய்ச்சல்!

'வெட்'கிட்டே தூக்கிட்டு ஓடுனேன். நம்ம வெட்னரி டாக்டரைப் பத்தி இதுவரை ஒண்ணும் சொல்லலேல்லெ?
அசப்புலே, இல்லையில்லை,அச்சுஅசலா 'ஷான் கானரி'!!! ( இங்கே நியூஸி வந்தப்பின்னேதான் இப்படிச் சொல்றது. இந்தியாவுலே
இருந்தவரைக்கும் 'சீன் கானரி'ன்னுதான் சொல்லிக்கிட்டு இருந்தோம்.அப்ப எல்லா 'ஜேம்ஸ் பாண்ட்' படங்களையும்
விடாமப் பாத்திடுவோம்) 'ஜேம்ஸ் பாண்ட்'லே வந்த மாதிரி இல்லே. இப்ப இருக்கற முதுமையான'ஷான்'!
அவர்கிட்டே இதையும் ஒருநாள் பேச்சுவாக்குலே சொன்னேன். அப்பத்தான் சொல்றாரு, இவரும்
'ஸ்காட்டிஷ்'ஆளுதானாம்!!! நமக்கும் இந்த க்ளினிக்குக்கும் நல்ல 'அண்டட்ஸ்டாண்டிங்' இருக்குது!
விஷயம் என்னன்னா, வருசத்துக்கு ரெண்டுமுறை கப்புவுக்கு 'கடுதாசி' போடுவாங்க,வழக்கமான
'செக்கப்'தேதி எப்பன்னு! நாம ஒரு ' அப்பாயிண்ட்மெண்ட்' எடுத்துக்கணும். இவனுக்கு எப்படித்தான்
தெரியுமோ, கரெக்ட்டா அன்னிக்கு மட்டும் ஆளே கண்ணுலே அகப்படாது!!!நானோ ஒரு அப்பாயிண்ட்மெண்ட்
வாங்கி வச்சுக்கிட்டு ஆளைக்காணாமத் தவிச்சுக்கிட்டு இருப்பேன். எட்டரை மணிவரை பார்த்துட்டு,
ஃபோன் போட்டு வேற ஒரு நாளுக்கு, 'நேரம்' வாங்குவேன். அப்பவும் இதே கதைதான். சாதாரணமாப்
பேசுறப்பகூட 'வெட்'னு சொன்னாப் புரியுதுன்னுட்டு, சாயந்திரம்'அங்கே' போகணுமுன்னு வீட்டிலே
சொல்லிக்கிட்டு இருப்பேன். ராத்திரி ஒம்போது மணிக்கு க்ளினிக் மூடிருவாங்க. கப்பு 'டாண்'னு
வீட்டுக்குள்ளே கம்பீரமா நடந்து வரும்!!!

இந்தத்தகராறு வேணாமுன்னு, ஒரு நாள் 'வெட்'கிட்டே இதைப் பத்திப் பேசுனேன். அவரும் சொல்லிட்டார்,
'இனிமே நீங்க 'அப்பாயிண்ட்மெண்ட்' எடுக்கவேணாம். லெட்டர் வந்த பிறகு பிடிக்கமுடியறன்னைக்கு
பிடிச்சுக்கிட்டு நேரே கொண்டு வந்துருங்க. கொஞ்சம் வெயிட் செஞ்சீங்கன்னா செக்கப் முடிச்சுரலாம்'!!!
இதுவரைக்கும் இப்படித்தான் நடந்துக்கிட்டு இருக்கு!!!!

நம்ம 'ஷான்,ஷிவா'வுக்கு ஊசி போட்டு மருந்தும் கொடுத்தார். ரெண்டு நாளுலே குணம் தெரிஞ்சது. அடுத்த
வாரம் மறுபடிக் காய்ச்சல். இதேபோல நாலைஞ்சு வாரம் குணமாகறதும், காய்ச்சலுமா மாறிமாறி வந்துக்கிட்டு
இருந்துச்சு! 'ஷிவா'வைப் பொறுத்தவரை 'க்ளினிக்' கொண்டுபோறது ஒரு பிரச்சனையே இல்லை! எட்டுமணிக்கு
'அப்பாயிண்ட்மெண்ட்'ன்னா 7.55க்குத் தூக்கிக் கூடையிலே வச்சுக்கிட்டு ரோடைக் க்ராஸ் செஞ்சு
போயிரலாம்!!!! பட்டு!!!! தங்கம்!!!!

'ஷானு'க்கே ஒரு சந்தேகம் வந்துருச்சு போல. ரத்தப் பரிசோதனை செய்யணுமுன்னு சொல்லி ரெண்டு
வெவ்வேற'லேப்'புக்கு ரத்தத்தை அனுப்பினார்! ஒரு வாரத்துலே ரிஸல்ட் வந்துருச்சு!! ஹெச் ஐவி பாஸிட்டிவ்!!!!

இன்னும் வரும்!!!!!Wednesday, July 06, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 14

ரொம்பவே வயசானதா, அழுக்கு உடம்போட( ஒருவேளை அதோட கலரே அதுதானோ என்னவோ?)
ஒண்ணு வந்து வாசலிலே நிக்குது. Hedgehog க்கு வைக்கற சாப்பாட்டை ஒரு கை பாக்குது!!
இந்த 'ஹெட்ஜ்ஹாக்'ன்றது ஒரு பெருச்சாளி சைஸுலே இருக்கும். உடம்பெல்லாம் முள்ளம்பன்றி போல
இருக்கும். அசப்புலே பார்த்தா நம்ம ஊர்லே தேங்காய் நார் இருக்கும்லே ,அதுலே அப்படியே ஒரு
பெருச்சாளிக்குச் சட்டை தைச்சுப் போட்டதுபோல!


இது எங்கெருந்து வருது? இதுங்கெல்லாம் வேலிக்குப் பக்கத்துலே இருக்குற செடிப்புதர்கள்லே
பகல் முழுக்க ஒளிஞ்சு இருக்கும். இருட்டுனபிறகு, சாப்பாடு தேடி வரும். புழு, பூச்சி, நத்தை இப்படி
யெல்லாம்தான் சாப்பாடு!! ஆனா பாலும், ப்ரெட்டும் வச்சா ரொம்ப நல்லா சாப்பிடும்னு ஒரு புத்தகத்துலே
வாசிச்சேன். அதும்படி அப்பப்ப ஒரு ரொட்டித்துண்டைப் பிச்சு, பாலிலே போட்டு வச்சோம்னா நல்லா
சாப்பிடும். ஆனா ஆளுங்க போனா ஒடிப் போயிரும். அதாலே தட்டை வெளியிலே வச்சுட்டு, கதவைச்
சாத்திட்டு ஒளிஞ்சிருந்து ஜன்னல் வழியாப் பாப்போம். இப்படி ஒரு நாள் பாத்தப்பதான் இந்த 'அழுக்குக்கேஸ்'
மெதுவா வந்து அந்தப் பாலை நக்கிக்குடிக்குது!!

பாவமா இருக்கேன்னு, கொஞ்சம் கப்புவோட சாப்பாட்டையும் வச்சேன். அதையும் ஆவலோட தின்னது!
அதுக்கு அப்பவே சொல்லியாச்சு, 'வா, சாப்பிடு. ஆனா வீட்டுக்குள்ளே வர்ற வேலையெல்லாம் வச்சுக்காதே!'
புரிஞ்சதோ என்னவோ, தினம் ராத்திரி மட்டும் வந்துக்கிட்டு இருந்தது!! 'கஞ்சி வரதப்பான்னா எங்கே
வருதப்பான்னு கேட்டானாம்னு சொல்றமாதிரி அதும் பார்வை இருந்துச்சு. அதாலே அதுக்கு 'வரதன்'னு
பேர் வச்சு, சுருக்கமா வரதுன்னு கூப்பிட ஆரம்பிச்சோம்.

ஒரு நாள் மகள் கேக்கறா, 'ஏம்மா, வரதன் ற பேரு நம்ம தாத்தா பேருதானே?'ன்னு!!! ஆஆஆஆ....
ஆமாம். வரதாச்சாரின்றது நம்ம மாமாவோட முழுப்பேர். ஆனா எல்லோரும் 'ச்சாரி மாமா'ன்னே
சொல்லிக்கிட்டு இருந்ததாலே அவரோட பேரின் முதல் பாதி மறந்தே போச்சு!!! அடக் கடவுளே.....
இப்ப என்ன செய்யறது? ஒரே பேருலே எத்தனை ஆளுங்க இருக்காங்க! ஃபோன் புக்கைப் பாருங்க!!!
ஸ்ரீநிவாசனும், வெங்கடராமனும் பக்கம் பக்கமா இல்லை? அதாலெ இப்படியே விட்டுரலாம்!!!!

ரெண்டுமாசம் வரைக்கும் வந்துக்கிட்டிருந்த வரது ஒருநாள் வரவேயில்லை. எதுக்கும் இருக்கட்டுமுன்னு
கொஞ்சம் சாப்பாடை வெளியில் வச்சுட்டு வந்தேன். இப்ப என்னன்னா அந்த பூனைச் சாப்பாட்டை, இந்த
ஹெட்ஜ்ஹாக் கூட்டம் வந்து சாப்பிடுது!!!!! இப்படியே நாள் போச்சு! வரது வரலை!!!! வரவேயில்லை!!!!
இந்த ஹெட்ஜ்ஹாக்குங்க குளிர் வந்தவுடனே தூங்கப் போயிரும். அப்புறம் வசந்த காலம் வந்தாத்தான்
முழிக்கும்!!! ஹைபர்னேட் செய்யற வகை!!!!

கப்புவுக்கும், இந்த ஹெட்ஜ்ஹாக்குங்க மேலே ஒரு பிரியம் வந்துருச்சு போல. அதுங்க தட்டைச் சுத்தியும், சிலது தட்டு
மேலெ ஏறியும் நிக்குறதைப் பாத்துக்கிட்டே தூரமா உக்காந்திருக்கும்!!!! அதை 'ஃபிக்ஸ்' செஞ்சாச்சு!
ஆபரேஷனுக்கு ஆன செலவுலே பாதியை மட்டுமே நாங்க கட்டுனோம். மீதியை அந்த 'கேட் ப்ரொட்டக்ஷன் லீக்'
கொடுத்துச்சு. 'நல்ல ரெஸ்பான்ஸிபிள் ஓனர்'னு நமக்கு இந்தச் சலுகை!!!!!

கப்பு ஒரு இயற்கை உபாசகி!! தோட்டத்துலே பூச்செடிக்குப் பக்கத்துலே போய், பூக்களை மோந்து
பாத்துக்கிட்டு, அப்படியே அதும்வாசத்திலே சொக்கிப் போனாப்புலெ கண்ணெல்லாம் அரைவாசி
மூடிக்கிட்டு உக்காந்து இருக்கும்!!! அப்பப்ப எதாவது ஒரு குருவியைப் பிடிச்சுக்கிட்டு வீட்டுக்குள்ளே
கொண்டுவந்து எனக்குக் கொடுக்கும். பயந்து நடுங்கிக்கிட்டு போராடற பறவையைச் சமாதானப்படுத்தி
வெளியே கொண்டுபோய் விடுறது எனக்கொரு வேலை!!! அதேபோலத்தான் எப்பயாவது ஒரு எலிக்குட்டியை
கொண்டுவரும்!! எதையும் கொல்லாது!!! அஹிம்சாப் பூனை!!!! மனமெல்லாம் அன்பு மட்டுமே நிறைஞ்சது!!!

நமக்கு எங்கேயாவது சில நாள் அக்கம்பக்கம் இருக்கற ஊருங்களுக்குப் போய்வரணுமுன்னா, கப்புவை
'கேட்டரி'யிலே விட்டுட்டுப் போவோம். அங்கேயும் பலவித நிபந்தனைகள் இருக்கு. முதலாவதா,
நம்ம பூனைக்கு தடுப்பூசி போட்டிருக்கணும். குறைஞ்சது ஒரு மாசத்துக்கு முன்னே போட்டிருக்கணும்.
இங்கெல்லாம் பூனை, நாய்க்கு ஒரு ரெக்கார்ட் புக் நம்ம வெட்னரி க்ளினிக்லே கொடுப்பாங்க.
ஒவ்வொருமுறை அங்கே கொண்டு போறப்பவும் அதை இந்த புத்தகத்துலே பதிஞ்சுருவாங்க. அப்புறம்
அதுக்கு வேற ஏதாவது நோய்நொடிக்கு சிகிச்சை செஞ்சிருந்தாலும் அது அந்த புத்தகத்திலே பதிஞ்சிருக்கும்.
அந்தப் புத்தகத்தைக் காட்டுனாத்தான், 'கேட்டரி'யிலேயே சேர்ப்பாங்க.

ஒரு நாலைஞ்சுதடவை இப்படி விட்டுட்டுப் போயிருக்கோம். எல்லாம் மூணு, நாலு நாளுங்கதான்!!
ஆனா ஒவ்வொருதடவையும், திருப்பி எடுக்கப் போறப்ப ஒரே கம்ப்ளெயிண்டுதான். 'சாப்பிடவே இல்லை'!!!
முகமெல்லாம் வாடி இருக்கும். பாவம். அதனாலே எங்கே போனாலும் காலையிலே போய் ராத்திரிக்குத்
திரும்பிடறமாதிரி வச்சுக்கிட்டோம். அப்படியே எப்பவும் இருக்க முடியுமா?

ஊர்லே அண்ணன் மகளுக்குக் கல்யாணம். கட்டாயம் போகணும்!!! ஒரே நாளுலே இந்தியாவுக்குப் போயிட்டு
வந்துரமுடியுமா? ஊருக்குப் போயே நாலுவருஷம் நாலுமாசம் ஆகுது. அக்கம்பக்கம் விசாரிச்சப்ப,
ஒரு நல்ல 'கேட் மோட்டல்' இருக்குதுன்னு சொன்னாங்க. அங்கே ஒரு நாள் போய்ப் பார்த்தோம்.

ஊருக்கு வெளியிலே இருக்கு அந்த இடம். பெரிய தோட்டத்துக்குள்ளே ஒரு தனி வீடு!!!! சின்னச்
சின்னதா நிறைய அறைகள் இருந்துச்சு. ஒவ்வொரு ரூமுக்கும் ஒரு பின்வாசல் வேற. அங்கே ஒரு ச்சின்னத்தோட்டம்.
தோட்டம் பூராவும் வலைக்கம்பி போட்டுப் பாதுகாப்பா இருக்கு! அந்த அறையிலே குளிருக்கு இதமா
ஹீட்டர் பொருத்தியிருக்கு. நம்ம பூனையோட படுக்கை, விளையாட்டுச் சாமான் எல்லாம் கொண்டுபோய்
கொடுத்துட்டா, அதையெல்லாம் அந்த அறையிலே போட்டுவச்சு, அதுக்குப் பிரிவுத்துயர் ஓரளவு வராமப்
பாத்துப்பாங்களாம்!!!!

இது இல்லாம, ஒரு ஹாலிலே ஒரு பெரிய கட்டிலும், மெத்தையும் போட்டு வச்சிருந்தாங்க. நிறையப் பூனைங்க
அதுலே ஏறி விளையாடிக்கிட்டும் படுத்துத் தூங்கிக்கிட்டும் இருந்ததுங்க. ஓரளவு 'சோஷியலைஸ்' செய்யக்கூடிய
பூனைங்களை இப்படி வச்சுப்பாங்களாம். அதுங்களும் வீட்டுலே இருக்கறதைபோலவே உணருமாம்!!!!
நல்ல இடம்தான். கொஞ்சம் செலவு கூடியது. ஆனாலும் பரவாயில்லை!!!! ஏழு வாரத்துக்கு அங்கே
ரூம் போட்டாச்சு!!!! ஊருக்குப் போகறதுக்கு மொத நாள் கொண்டுபோயும் விட்டாச்சு!!

மறுநாள் கிளம்பறதுக்கு முன்னே ஒரு ஃபோன் போட்டு விசாரிச்சேன். 'தொந்திரவு ஒண்ணுமில்லை.
அமைதியா இருக்கு'ன்னு சொன்னாங்க. ஒரு மனத்திருப்தியோடு கிளம்பிப் போனோம். நாலுவாரம்
மட்டுமே எங்க இவர் லீவு எடுத்திருந்தார். அதனாலே அவர் மட்டும் ஊரிலிருந்து கிளம்பிட்டார். நாங்க
இன்னும் மூணுவாரம் இருந்துட்டு வர்றதா ஏற்பாடு.

ரெண்டு நாள் கழிச்சு, இவர் தான் நல்லபடியாகப் போய்ச் சேர்ந்த விவரத்தைச் சொல்றதுக்கு ஃபோன்
போட்டவர் சொல்றார், 'கப்புவைக் கூட்டிக்கிட்டு வந்துட்டேன்'!!!

என்ன விவரமுன்னு கேட்டா, இவர் வந்தவுடனே கேட்டரிக்குப் ஃபோன் போட்டு, கப்புவோட சுகத்தை
விசாரிச்சாராம்! 'நல்லாதான் இருக்கு. ஆனா சாப்பாடு மட்டும் சரியாச் சாப்புடறதே இல்லை'ன்னு
சொன்னாங்களாம். அப்ப இவர் ,'இப்ப வந்து நான் திரும்ப எடுத்துக்கலாமா?'ன்னு கேட்டதுக்கு,
'எடுக்கலாம். ஆனா மூணு வாரக் காசை திருப்பித்தரமாட்டோம்'னு சொன்னாங்களாம். இவர்
பரவாயில்லைன்னு சொல்லிட்டு அங்கே போனாராம். கப்பு ரொம்ப இளைச்சு, ச்சின்னப் பூனைக்குட்டி
மாதிரி இருந்துச்சாம். உடனே வீட்டுக்குக் கொண்டு வந்துட்டாராம். 'இப்பக் கொஞ்சம் பரவாயில்லை.
மூஞ்சு தெளிஞ்சிருக்கு. கொஞ்சம் நல்லாத்தான் சாப்பிடறான்'னு சொன்னார்.

நம்ம பூனைங்க, நாய்ங்களை பொண்ணாயிருந்தாலும் நாங்க எப்பவும் 'ன்'போட்டுத்தான் சொல்றது!
இப்படிச் சாப்புடாம சத்தியாகிரகம் பண்ணறதை என்ன செய்ய? அப்பத்தான் இங்கே 'கேட் டோர்'
வைக்கறது அறிமுகமாகியிருந்தது. அதனாலே ஒரு ஆளைக்கூப்பிட்டு, கண்ணாடிக் கதவுலே ஒரு 'கேட்
டோர்' வைக்கச் சொன்னோம். இது உண்மைக்குமே நல்ல உபயோகமா இருந்தது! பூனைக்கு எப்ப
வேணுமோ அப்ப வெளியே போக வர ரொம்ப செளகரியம்!!!! நம்ம நண்பர்கள் யாராவது, நாம இல்லாதப்ப
நாளைக்கு ரெண்டுமுறை வந்து சாப்பாடும், த்ண்ணீரும் வச்சிட்டுப் போயிட்டாங்கன்னா, பூனை
சாப்புட்டுக்கும்!! பூனைங்களுக்குப் பழகுன இடம்தான் முக்கியமாம். அதுங்க நாயைப் போல எஜமானனை
ஸ்நேகிக்காதாம். இடத்தைத்தான் ஸ்நேகிக்குமாம்!!! இப்படியெல்லாம் சில புத்தகங்களில் எழுதுனதைப்
படிச்சிருக்கேன்!!! இந்தப் ப்ளான் நல்லா வொர்க் அவுட் ஆச்சு!!!!

இந்தக் 'கேட் டோர்'லே ஒரு கஷ்டமும் இருந்துச்சு. நம்ம பூனையல்லாத வேற பூனைங்களும் வீட்டுக்குள்ளே
வந்து, இருக்கறதை ஒரு பிடி பிடிச்சுட்டுப் போக ஆரம்பிச்சதுங்க!!!! ஒரு சின்னப் பிரவுன் நிறப்
பூனைக்குட்டி எப்பப்பார்த்தாலும் ரொம்ப உரிமையோடு வந்து சாப்பிடறது மட்டுமில்லாம, நம்மப் படுக்கை
அறைக்குள்ளும் வந்து கட்டிலில் ஒய்யாரமாத் தூங்க ஆரம்பிச்சது! தினமும் அதைத் துரத்தறதே எங்களுக்கு
வேலையாப் போச்சு! சத்தமே இல்லாமப் 'பூனை' மாதிரி வீட்டுக்குள்ளெ வந்துரும்!!!!

நம்ம வீடு 'யுனிவர்சிட்டி'க்குப் பக்கம் என்றதாலே வருஷ மார்ச் முதல் நவம்பர்வரை மாணவர்கள் கூட்டம்
அதிகம் இருக்கும். இதுலே பலர் நண்பர்களுடன் சேர்ந்து வீடு வாடகைக்கு எடுத்துக்கிட்டு இருப்பாங்க.
பரீட்சை முடிஞ்சு லீவு ஆரம்பிச்சா, கூட்டைக் கலைச்சு விட்டமாதிரி எல்லோரும் போயிருவாங்க. இதுலே
பலர் பூனை, நாய் வளர்க்கறவங்கா இருப்பாங்க. நாய் வச்சிருக்கவங்க அவுங்க போகும்போது நாயைக்
கூட்டிட்டுப் போயிருவாங்க. இந்தப் பூனைக்கேஸ்ங்கதான் கொஞ்சம் 'டோண்ட் கேர்' ஆளுங்க! பல
சமயம் அப்படியே விட்டுட்டுப் போயிடுவாங்க. அதுங்கதான் அக்கம்பக்கத்து வீடுகளிலே போய் தெண்டுறது!!!

இதனாலேயே பல பூனைங்களை நாம பாத்துக்க வேண்டியதாயிடும்!!!! பொறுப்பில்லாத ஜனங்கள்!!!! இதுவரை
வந்த பூனைங்களைக் கணக்கெடுத்தா ஏராளமாப் போயிரும், இந்தத்தொடரும் முடிவில்லாமத் தொடர்ந்துடும்!!
அதனாலே நம்ம வீட்டுக்குள்ளே வந்து , வாழ்க்கையிலே பங்கு வச்சதுங்களைமட்டும் சொல்வேன்!

இன்னும் வரும்!!!!!Monday, July 04, 2005

USA-ல் உள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு!!!

அமெரிக்காவாழ் வலைப்பதிவாளர்களுக்கு,

சுதந்திரதின 'விடுமுறை'க்கு வாழ்த்துக்கள்!!!!!
Friday, July 01, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 13

சுத்தமுன்னா சுத்தம்! அப்படியொரு சுத்தம்!!! மனுசங்க ஆஸ்பத்திரியைவிட அட்டகாசமா இருக்கு!!!
அங்கெயிருக்கற வசதியான நாற்காலிகளிலெ, நாற்கால் ஜீவன்களொடு உக்காந்திருக்கற ஆளுங்ககிட்டே
முகத்தில் அப்படி ஒரு பெருமிதம்!!!! அந்த ஜோதியிலே நாங்களும் அப்படியே ஐக்கியமாயிட்டோம்!!!!வலைபெட்டிக்குள்ளே நம்ம 'ஆளு' இருக்கார், அப்பப்ப தீனமா ஒரு குரல் கொடுத்துக்கிட்டு!!!
நாய்ங்களோட வந்திருக்கறவங்க மட்டும், (ஸ்டைலா ஒரு 'லீஷ்' போட்டது!) கூடையில்லாம இருக்கறாங்க!
நாய்ங்க வேற இந்தப் பூனைக்கூடைங்களைக் கட்டாயம் மோந்து பாக்கவேண்டிய நிர்பந்தந்துலே
இருக்கறமாதிரி, ச்சும்மாச்சும்மா பூனைக்கூடைகிட்டே வர்றதும், பூனைங்க எல்லாம் தீனமாக் குரல்
கொடுக்கறதும், நாயோட 'அம்மாங்க' ஹை ஜாக்கி, ஜிம்மி( எதாவது ஒரு பேரு போட்டுக்குங்க.. ஆனா
பேரு மட்டும் வெள்ளைக்காரப் பேரா இருக்கட்டும்!!)ன்னு அதுங்களை அடக்குறமாதிரி 'பாவ்லா' காட்டறதுமா
இருந்துச்சு! சுவத்துலே இருக்கற அலமாரிகள்லே விதவிதமான பிஸ்கெட், சாப்பாடு, இன்னும் நான்
'சூப்பர் மார்கெட்'லே பார்த்த அத்தனைவகை விளையாட்டுச் சாமான்களும் அலங்காரமா இருக்கு.
ப்ராண்ட் பேருங்கதான் வேற, ஆனா பாக்குறதுக்கு அதேதான்!!! விலையும் 'தீ பிடிச்ச' விலை!!!!

நம்ம கப்பு ஆரோக்கியமா இருக்கான்னு செக் செஞ்சுக்கறதுக்கும், தடுப்பூசி போட்டுக்கவும் வந்திருந்தோம்.
வெட்னரி டாக்டரைப் பார்த்தோம். 'பிரிட்டிஷ் ஷார்ட் ஹேர்டு டொமெஸ்டிக் கேட்'ன்ற ஜாதியாம் நம்ம
கப்பு! பயந்த பார்வையோட ஒரு ச்சின்ன நடுக்கமும் இருந்துச்சு! அப்பப்ப அழுகை வேற!!!
பரிசோதனை முடிஞ்சு, வீட்டுக்குக் கொண்டுவந்து கூண்டைத் திறந்ததும் விட்டுச்சு சவாரி!!!
ஒரே ஓட்டம்!

நம்ம வீட்டுக்கு எதிர்வரிசையிலே ரெண்டு வீடுதள்ளிதான் இருக்கு இந்த வெட் க்ளினிக். ரோடை
குறுக்காலெ கடந்தா ஆச்சு. ஆனா, கூடையிலே பிடிச்சுப் போடறதுமுதல், திரும்ப வர்றதுவரைக்கும்
'அய்யோ, அம்மா'ன்னு விடாம அழுதுக்கிட்டு இருக்கறதாலே கார்லேதான் கொண்டு போவோம்!!!!
இல்லேன்னா, ரோடெல்லாம் கூப்பாடு போட்டுக்கிட்டு, போறவர்றவங்கெல்லாம் நம்மையே
பாக்கறமாதிரி ஒரு பிரமை நமக்கு உண்டாக்கிரும்!!!

நம்ம கப்பு ஒரு 'கிட்டன் நாப்பர்' ஆயிடுச்சு! ஒருநாள் மழையான மழை. கப்புவைக் காணாம். கூப்பிட்டுக்
கூப்பிட்டுப் பார்த்தாச்சு! அப்ப எங்கோ கிணத்துக்குள்ளெ இருந்து கேக்குற மாதிரி ஹீனமா ஒரு 'மியாவ்'
சத்தம் கேட்டது! தோட்டத்துலே தேடிக்கிட்டே போறேன். ஒரு புதருக்குள்ளே இருந்து சத்தம் வருது.
உள்ளே பார்த்தா..... கப்பு பதுங்கிப் படுத்திருக்கு! மெதுவாத் தூக்குனா, கூடவே வெள்ளையா ஒரு பொட்டலம்
வருது. அய்யய்யோ... அது பொட்டலமில்லே! ஒரு பூனைக்குட்டி!!! பிறந்து ஒருநாளோ ரெண்டுநாளொதான்
ஆகியிருக்கும்போலெ!!! துவண்டு கிடக்குது பாவம்!!!! அக்கம்பக்கத்து வீடுங்களிலே விசாரிச்சாச்சு.
யாரோடதும் இல்லையாம்! எங்கே இருந்து வந்துச்சுன்னு தெரியலை!!!! வாயிலே சொட்டுப் பாலைவிட்டாக்
குடிக்கக்கூடத் தெம்பில்லாம இருக்கு! அப்புறம், நம்ம நண்பர் ஒருத்தர் வீட்டுலே பூனை, குட்டி போட்ட
விவரம் ஞாபகம் வந்து அவுங்க வீட்டுலே கொண்டுபோய்க் கொடுத்தோம்,எப்படியாவது அந்தப் பூனை
இதுக்கும் பாலூட்டிக் காப்பாத்திடும் என்ற நம்பிக்கையில்!! ஹூம்.. அதும் விதி முடிஞ்சது....

இப்ப நம்ம கப்புவுக்கு ஏறக்குறைய ஒரு வயசு! ஒருநாள் திடீர்னு பார்த்தா, வயிறு கொஞ்சம் பெருசா
இருக்கு! அட! புள்ளைத்தாய்ச்சி!! ஈராக் போர் ஆரம்பிச்ச நாள்!!! எங்கே பாத்தாலும் 'சதாம் ஹுசேன்'
பேச்சுதான்! அன்னைக்குக் கப்புவுக்கு 'குழந்தை' பொறந்துச்சு! சொன்னா நம்ப மாட்டீங்க!!! ஒரே
ஒரு குட்டி!!!! அதுக்கு 'சதாம்'னே பேரு வச்சாச்சு. அடுத்தவாரம் 'வெட்' கிட்டே கொண்டுபோனப்பதான் அது
பொண்ணுன்ற விவரம் தெரியுது:-) உடனே பேரை மாத்தணுமா இல்லையா? இனிமே அது 'மணி' !!

மகளோட பள்ளிக்கூடம், பாலே க்ளாஸ், பியானோ ட்யூஷன்னு எங்கெ போனாலும் மணியைத் தூக்கிக்கிட்டுப்
போவேன். அதுபாட்டுக்கு முன் சீட்டுலே படுத்துக்கிட்டு இருக்கும்! அங்கெ வர்ற புள்ளைங்களும் நம்மளைப்
பார்த்ததுமே ஒடிவரும்,'மணி'யைக் கொஞ்ச!!!!! மணி படு அழகு!!!!

கப்பு ஒரு கண்டிப்பான 'அம்மா'!!! அப்பப்ப 'மணி'க்கு ஒரு ச்சின்ன அடி வைக்கும்! என்னடா, இது 'ஃபிஸிகல்
அப்யூஸ்'ன்னு கிண்டல் செய்வோம்! இங்கே நம்ம புள்ளைங்களைக்கூட நாம் ஒரு அடி அடிச்சுடக்கூடாது!
அரசாங்கம் நம்மை 'உள்ளே'தூக்கிப் போட்டுரும்!!! சரி, சும்மா வாய்வார்த்தையா திட்டலாமுன்னாலும் முடியாது.
அது 'வெர்பல் அப்யூஸ்'ஸாம்!!!! கப்பு, கொடுத்துவச்சது. அதுக்கு இந்தக் கண்டிஷன் எல்லாம் இல்லை!

மணி , பொண்ணுன்னு தெரிஞ்சது முதல் எங்க வீட்டுலே இவரோட புலம்பல் அதிகமாயிடுச்சு!! 'கொஞ்ச நாள்லெ
அது பெருசாயிரும். இதுங்க ரெண்டும் மாறிமாறிக் குட்டி போட்டா, பக்கத்து வீட்டு ஃபியோனாவோட
கதிதான் உனக்கும்'னு சொல்லி ஒரே ரகளை!!!! 'இப்ப இது ச்சின்னதா இருக்கறதாலே யாராவது
வளர்க்கக் கொண்டு போயிடுவாங்க. பெரிய பூனை ஆச்சுன்னா யாருக்கும் வேணாம். அதனாலே இப்பவே
இதை 'ஆர்.எஸ்.பி.சி.ஏ' கொடுத்துரணும்'

நான் எவ்வளவோ போராடிப் பார்த்தாச்சு. ஊஹூம், கேக்கற ஆளா? 'நான் கப்புவையும், மணியையும்கொண்டு
போய் விடத்தான் போறேன்'னு ஒரு நாள் நிஜமாவே கிளம்பிட்டாரு. கப்புவைப் பிடிக்கப்போனா அது ஓடிப்போய்
ஒளிஞ்சுக்கிச்சு! மணி பாவம்தானே? எப்பவும் என்கூடக் கார்லே வந்துக்கிட்டு இருந்ததுதானே?
அது பேசாம இருந்துச்சு. இவர் ஆங்காரமாக் கொண்டுபோயிட்டாரு!!

இவர் வீட்டுக்கு வந்ததும், நானும் மகளும் மூஞ்சைத் தூக்கிக்கிட்டு இருந்தோம். இப்ப எங்க புலம்பல்
ஆரம்பிச்சுடுச்சு!!! அன்னைக்கெல்லாம் விடாம அழுகையும், ஆங்காரமுமாப் போச்சு! கப்புவைக் காணோம்!

மறுநாள் காலையிலே கப்பு உள்ளெ வந்து, மணியைத் தேடுது!!!! ச்சின்னதா அழுது! சத்தமாக் கூப்புடுது!!!
எனக்குப் பாக்க சகிக்கலை! இவருக்கும்தான்!!! அப்புறம் மெதுவாச் சொல்றாரு, 'நீ ஃபோன் போட்டுக்
கேளு. திருப்பித் தருவாங்களா'ன்னு!! உடனே ஃபோன் போட்டேன். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க. நேத்தே
இவர், விட்டுட்டு இப்படி வந்ததும்,உடனே பூனை வாங்க ஒரு குடும்பம் வந்தாங்களாம். மணியோட
அழகைப் பார்த்துட்டு உடனே கொண்டு போயிட்டாங்களாம்!! ஒரு மணி நேரம்கூட இல்லையாம்!!!
மணி ஒரு நல்ல வீட்டுக்குப் போயிருச்சு'ன்னு சொன்னாங்க!

கப்புவை சமாதானம் செய்யறது பெரிய பாடாப் போச்சு!! ஒரு மாசம் ஆனதும், இனி கப்புவை இப்படியே
விட்டா மறுபடி குடும்பம் பெருகி, பழையபடி போர்க்களம் போகவேண்டியிருக்குமேன்னு கவலை வந்துச்சு!
இங்கே 'கேட்ஸ் ப்ரொட்டெக்ஷன் லீக்'னு ஒரு அமைப்பு இருக்கு. அவுங்ககிட்டே என்ன செய்யலாமுன்னு
ஒரு யோசனை கேட்டேன். அவுங்க சொன்னாங்க 'ஃபிக்ஸ்' செஞ்சுரலாமுன்னு!!!!!

இன்னும் வரும்!!!!!