Monday, October 30, 2006

பிருந்தாவனத்தைத் தேடி......... (A t d - பகுதி 5)
நம்ம ஹொட்டல் கட்டிடம் இருக்கும் பேஸ்மெண்ட் முழுசுமே சாப்பாடே சாப்பாடு. அதுலேயே நடந்து பிட்(Pitt) தெருவுக்குப் போயிறலாம். மறுபடி அடுத்தபக்கம் சிட்டி மாலுக்குள்ளேயே நடந்தா அடுத்த தெருவான Castlereaghக்குப் போயிரலாம். அப்படிவெளியே போறதுக்கு முன்னாலே இதே கட்டிடத்துலே ஒரு முக்கியமான கடை இருக்கு. 'பெட்ஸ் பேரடைஸ்' ஜிகேவை விட்டுட்டுப் போயிருக்கோமே, அவனுக்கு எதாவது பொம்மை வாங்கலாமுன்னு அதுக்குள்ளெ நுழைஞ்சால்,அங்கே இருக்கற பொம்மைகள் எல்லாம் ஏற்கெனவே அவன்கிட்டே இருக்கு. புதுசா ஒண்ணுமேயா வரலை?அப்பத்தான் அங்கே விற்பனைக்கு வச்சுருக்கற பெட்ஸ் கூண்டு கண்ணுலே பட்டுச்சு. Smoky Grey Persian.நம்மஜிகேவின் குழந்தை உருவம் அங்கே. ரெண்டு பேர் இருக்காங்க. ஒரே ஆட்டம், குதிப்பு, விளையாட்டு. ஜென்மமேசாபல்யம் அடைஞ்சதுபோல இருக்கு. ஜிகே நல்லா வளர்ந்த பிறகுதான், ஒரு 7 வயசா இருக்கும்போது நம்ம கிட்டே வந்து சேர்ந்தான். குழந்தையா இருக்கும்போது எப்படி இருந்துருப்பான்னு அப்பப்ப நினைச்சுப் பார்ப்பேன். இப்ப,தரிசனம்ஆச்சு.


திரும்ப அறைக்கு வந்து கொஞ்ச நேரம் தமிழ்மணம். அஞ்சே முக்காலுக்கு இவர் வந்தாச்சு. ஆறு மணி டிவி செய்திகொஞ்ச நேரம். இங்கே நியூஸியிலே ஆஸி செய்திகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் உண்டு. அங்கத்துப் பிரதமர் தும்முனாக்கூடப் போட்டுருவாங்க. ஆனா அங்கே? எங்களைச் சட்டை செய்யலை(-: அவுங்களைப் பொறுத்தவரைநாங்க இல்லவே இல்லை. இது எப்படி இருக்கு?


நியூஸிக்கும் ஆஸிக்கும் இருக்கும் ஒப்பந்தப்படி, ரெண்டு நாட்டுக் குடிமக்களும் விஸா இல்லாம இங்கேயும் அங்கேயுமாப் போய்வரலாம். வசிக்கலாம். வீடு, நிலம் புலம் சொத்து வாங்கலாம். வொர்க் பர்மிட் இல்லாம வேலை செய்யலாம்.இங்கே இருந்து அங்கெ போன முதியோர்களுக்கு சூப்பர்( Superannuation)கூடக் க்கிடைக்கும். பத்து லட்சம்கிவிக்கள் அங்கே ஆஸியில் வசிக்கிறாங்க. அவுங்க டாலர் நம்மதை விட ஸ்ட்ராங். வேலை வாய்ப்பும் நிறைய இருக்கு.பெரிய நாடாச்சே. சம்பளமும் இங்கெ கிடைக்கிறதை விடவும் கூடுதல். அதனாலே படிச்சு முடிச்சதும் நைஸா பலர் அங்கே போய் வேலைக்குச் சேர்ந்துடறாங்க. புலம் பெயர்ந்து வர்ற நம்ம மக்களூம், இங்கே 3 வருசம் இருந்து குடி உரிமைவாங்கிக்கிட்டு அங்கெ போயிடறாங்க. நியூஸி ஒரு ஸ்டெப்பிங் ஸ்டோன் போல ஆயிருச்சு. இப்ப இங்கே நியூஸிஅரசாங்கம் 5 வருசம் கழிச்சுக் குடி உரிமைன்னு மாத்தி இருக்கு.


ராச்சாப்பாட்டுக்கு எங்கேயாவது போகணுமே, அது இந்தியனா இருக்கட்டுமுன்னு ரெஸ்ட்டாரண்டை மஞ்சப்பக்கத்துலே தேடுனோம். குஜராத்லே இருந்து இங்கே வந்து ஹொட்டல் மேனேஜ்மெண்ட் படிச்சுட்டு, கொஞ்சநாள் பயிற்சி எடுக்கணுமுல்லையா அதுக்காக வேலை செஞ்சுக்கிட்டு இருக்கற இளைஞர் ஒருத்தர் 'விருந்தாவன்' லெ சாப்பாடு நல்லா இருக்குமுன்னு சொன்னார். அவரே டாக்ஸி பிடிச்சுக் கொடுத்து பஞ்சாபி ட்ரைவருக்கு இடத்தையும் ஹிந்தியிலேசொன்னார்,'ஹாரீஸ் ரோட்மே பவர்ஹவுஸ் ம்யூஸியம்கோ யே பாஜூ மே ஹை'


ஹாரீஸ் ரோடுக்குப் போகாம இன்னொரு தெருவுலே காரைத் திருப்புனார் சர்தார்ஜி. இன்னொரு இடத்துலெ இதைவிட சாப்பாடுநல்லா இருக்குமாம்.


" சச் ஹை க்யா? "


" ஹாங்ஜி!"


" பர்வா நஹி. ஆஜ் ஹம்லோக் வ்ருந்தாவன் ஜாயேகா"


மறுபடி ஹாரீஸ் ரோடு பக்கம் வண்டியைத் திருப்புனார். குடும்பத்தோட இங்கெ வந்து ஏழு வருசம் ஆச்சாம். நல்லபடியா வாழ்க்கை ஓடுதாம். இன்னிக்கு இங்கே குருத்வாராவுலெ விசேஷமாம். இவரோட ரெண்டு பசங்களும் அங்கெயே ஒரு வாரமாத் தங்கி உதவி செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம். இங்கே நாலு குருத்வாரா இருக்காமே. நிறைய பஞ்சாபிகள் இருக்காங்களோ?

"ஹாஞ்ஜி:-)))"


பவர் ஹவுஸ் ம்யூஜியம்(!) வந்தாச்சு. வ்ருந்தாவனைக் காணொம்!யே பாஜுலேயும் இல்லை, வோ பாஜுலேயும் இல்லை. இன்னும் ரெண்டு தெரு தள்ளிப் போறோம்.


"வோ லட்கா யெ பாஜுமே போலா ந:"


அந்தப் பையன் சொன்னப்ப 'ஹாங் ஹாங்'ன்னு தலை ஆட்டுனவர்தான் இவர். அங்கே இருந்த ஒரு மலேசியன் சாப்பாட்டுக்கடையில் விசாரிச்சா, 'வந்த வழியே திரும்பிப்போங்க, மூணு ட்ராஃபிக் லைட்டைத் தாண்டி வந்துட்டீங்க'


ஓசைப்படாம வண்டியைத் திருப்புனார். வண்டியிலே ஓடிக்கிட்டு இருந்த மீட்டரையும் நிறுத்திட்டார்.


ஏன்னு கேட்டா, அவர் தப்பாப் புரிஞ்சுக்கிட்டாராம். இப்படியும் சிலர்! மூணாவது சிக்னலைக் கடந்தப்ப, எங்க இவரோடக் கழுக்குக் கண்ணுலே வ்ருந்தாவன் மாட்டிக்கிச்சு. துளசியைக் கண்டு பிடிச்சவருக்கு வ்ருந்தாவன் மாட்டாதா என்ன? :-))))


ஆனா, எங்க இவருக்கு ஒரு சந்தேகம். அது என்ன பிருந்தாவனம் இல்லையா? பிருந்தாவனம் நமக்கு. ஹிந்தியிலே ப வரும் இடத்துலே வ தான் சொல்றாங்க. அப்ப 'பாரத்'க்கு 'வாரத்'துன்னா சொல்றோம்?


குதிரைக்கு குர்ரமுன்னா ஆனைக்கு அர்ரமா? :-))))


ஒரு பழைய கடை. என்னவோ ஒரு அலங்காரம். அங்கங்கே யானைகள் படங்களும், மயில் இறகும்.


கூட்டம் அறவே இல்லை. ஆர்டர் கொடுத்தாச்சு. இங்கே எங்கூர்லே மெயின்ஸ் ஆர்டர் செஞ்சா அதுகூடவே சோறுவந்துரும். இங்கே சோறுக்கும் தனிக் காசாம். போயிட்டுப் போட்டும். நான் ரொம்ப நல்லா மிருதுவா இருந்துச்சு.பாலக்& தால்தான் ஒரு வாசனை(-: மெதுவாக் கூப்புட்டு ஓதினேன். எடுத்துக்கிட்டு போயிட்டார். மட்டர் பனீர் தரட்டுமா? வேணாம்ப்பா.நீயே வச்சுக்கோ. ஆனா 'ஆன் ட்ரெய்' நல்லாவே இருந்துச்சு. அதென்னங்க எல்லா இந்தியன் ரெஸ்டாரண்டிலேயும் 'ஸ்டாட்டர்' மட்டுமே அருமையா இருக்கு? ஒருவேளை, அதுலெயே பசி அடங்கிர்றதாலே மெயின்ஸைக் கவனிக்கமாட்டொமுன்ற என்னமோ? பேசாம சர்தார்ஜி சொன்ன இடத்துக்கேப் போயிருக்கலாம்.


அடுத்த மேசைக்கு நாலுபேர் வந்தாங்க. ரெண்டு இந்தியன் பாய்ஸ் & ரெண்டு வெள்ளைக்காரப் பொண்ணுங்க.பையனுங்க முகத்துலே லிட்டர் லிட்டராய் வழியுது. அதுலே ஒரு பையனுக்குப் பொறந்தநாள். பொண்ணு கொடுத்த பரிசை நாணிக்கோணி வாங்கிப் பிரிச்சார். போட்டோ ப்ரேம். அதுலே ப்ரெண்ட்ஸ்னு போட்டுருக்கு. மகர 'ஜோதி'பையன் முகத்துலே!


'வீடு'திரும்புறப்ப அங்கே இருந்த அட்ரஸ் கார்டு ரெண்டு எடுத்துக்கிட்டு வந்தோம். Concierge Desk லே இருந்த இந்திய இளைஞர் ஹரிஷ், சாப்பாடு நல்லா இருந்தான்னு விசாரிச்சார். அவர்கிட்டே ரெஸ்ட்டாரண்டுக் கார்டைக் கொடுத்து, 'இனிமேப்பட்டு அட்ரஸ் கரெக்ட்டா சொல்லுங்க'ன்னேன்:-)


வாழ்க்கையை நாம் எப்படி நினைக்கிறோம்ங்றதைப் பத்தி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கு. முதல்நாள் டாக்ஸிக்காரர், 'ஊரு ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லே, பசங்க கெட்டுருவாங்க'ன்னு சொன்னார். இப்ப இவர் வாழ்க்கை நல்லாவே இருக்கு. பசங்க நல்லாப் படிக்கிறாங்கன்னு சொல்றார். மனம்போலத்தான் வாழ்க்கை அமையுது.இல்லீங்களா? இல்லே, புலம் பெயர்ந்து வர்றப்ப, நாட்டைப் பத்தின முன்முடிவுகளோடு வந்துட்டு அதெ கண்ணோட்டத்துலேயே எல்லாத்தையும் பாக்கறமா?


கொஞ்சநேரம் சிட்னி(??) யில் இருக்கும் அக்காவோட தொலை பேசினேன். வீட்டுக்கு வரலைன்னு கத்திக்கிட்டுஇருந்தாங்க. இப்ப ஏப்ரல் மாசம்தான் இங்கே வந்து என்னோடு ஒரு வாரம் தங்கிட்டுப் போனாங்க. அதனாலேஅவுங்களுக்கு நேரம் ஒதுக்கலை. தமிழ்மணம் மேய்ச்சலுக்குப் பிறகு தூக்கமே தூக்கம்.


மறுநாள் பொழுது விடிஞ்சது, பொற்கோழி கூவுச்சு.


தொடரும்.................


பின் குறிப்பு: பதிவுக்கும், படங்களுக்கும் சம்பந்தமே இல்லைன்னு நினைக்கிறீங்களா?


நம்ம ராகவனுக்காக இங்கே நம்ம சிட்னி சிங்காரவேலனின் படங்கள்.
என்னங்க ராகவன், நல்லா இருக்கா?

Saturday, October 28, 2006

ராணியம்மா (A t d - பகுதி 4)

பட்டம் சூட்டுனப்ப வெறும் 19 வயசுதானாம் மகாராணி விக்டோரியாவுக்கு. இளமை, செல்வம், எல்லாம் சேர்ந்து இருந்த காலம். நல்லா 'நிகுநிகு'ன்னு இருந்துருக்காங்க. இவுங்களுடைய முடிசூட்டுவிழா சமயம், அப்ப இருந்த கோலத்தை அப்படியே சிலையா செஞ்சு இந்த குவீன் விக்டோரியா பில்டிங்லே வச்சுருக்காங்க. கட்டிடம் பழைய கால ஸ்டைலில் அட்டகாசமா இருக்கு. எங்கே பார்த்தாலும் ஸ்டெய்ன் களாஸ் பெயிண்டிங். ஒரு 200 வருசமாயிருக்குமோ இதை கட்டி? ஆஸிக்கு வெள்ளைக்காரங்க வந்து இப்ப 219 வருஷம் ஆச்சே. விசாலமான நீண்ட ஹால்கள். மாடிப்படிகள். ரெண்டு பக்கமும் ஏராளமான அறைகள். ஒவ்வொரு அறையுமே ஒவ்வொரு கடைகளா இருக்கு.


இந்தக் கட்டிட விவரம் கொஞ்சம் பார்க்கலாமே! சரியாச் சொன்னா, முந்தி சிட்னி மார்கெட் இருந்த இடத்துலேதான் இந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கு. 108 வயசுதானாம் இதுக்கு. கட்டி முடிச்ச வருஷம் 1898. அப்ப இங்கே recession காலம். ரொம்ப நெருக்கடியான நிலமை. காசு டைட். நிறைய திறமை உள்ள கட்டிடக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உண்டாக்கித் தரலாம்ன்னு அரசாங்கம் இந்தக் கட்டிடத்தை விமரிசையாக் கட்டணுமுன்னு தீர்மானிச்சது. ச்சும்மா சொல்லக்கூடாது, நல்லா இழைச்சு இழைச்சுக் கட்டுன கட்டடம். ரெண்டு தெருவை அடைச்சு பிரமாண்டமாக் கட்டுனாங்க. முன் வாசல் பார்க் தெரு. பின் வாசல் மார்கெட் தெரு. வலது பக்கம் , இடது பக்கம் வெவ்வேற தெருக்கள். அந்தக் காலத்துலே இது உள்ளெ டெய்லர் கடைகூட இருந்துச்சாம். அப்புறம் பியானோ ட்யூன் செய்யறவங்க, கைரேகை பார்க்கறவங்க, குறி சொல்றவங்கன்னு பலதரப்பட்ட வியாபாரம் நடந்துருக்கு அங்கே.


1959லே இந்தக் கட்டிடத்தை இடிச்சுட்டு அங்கெ வேற கட்டிடம் கட்டலாமுன்னு ஒரு திட்டம் போட்டாங்களாம். நல்ல காலம்!அப்படி ஏதும் நடக்கலை. அதுக்கப்புறம் ஒரு புனரமைப்பு நடந்துருக்கு. ஏற்கெனவே அங்கே தரையில் இருந்த டைல்ஸ் எல்லாத்தையும் கவனமாப் பிரிச்செடுத்து திரும்ப பழைய அழகு கெடாம சீர் செஞ்சுருக்காங்க. 19ஆம் நூற்றாண்டு மாடிப்படிகள் இன்னும் அங்கே இருந்தாலும், காலத்தின் தேவைக்கு எஸ்கலேட்டர்கள் அங்கங்கே போட்டு வச்சுருக்காங்க.கண்ணை உறுத்தாமப் பழமையும் புதுமையும் ஒண்ணாக் கை கோர்த்து நிக்குது. ஒரு மலேசியன் கம்பெனிதான் இந்த புனர்ஜென்மம் கொடுத்தது:-)


ஏற்கெனவே சொன்ன ராணியம்மாவின் சிலை, அப்படியே சிம்மாசனத்தில் உக்கார்ந்த கோலத்தில் சுழலும் கண்ணாடிப்பெட்டிக்குள்ளே. முடி சூட்டப்பட்ட கிரீடம், செங்கோல்,இன்னும் வெவ்வேறு கிரீட வகையறாக்கள் எல்லாம் அச்சு அசலாய்! என்னதான் உதவியாளர்கள் இருந்தாலும் 19 வயசுப் பொண்ணுக்கு இவ்வளொ பெரிய ராஜாங்க பாரம்ன்றதுகுருவி தலையில் பனங்காய் வச்ச மாதிரிதான் இருந்துருக்கும்,இல்லே? பாவம், எட்டு மாசக் குழந்தையாஇருந்தப்பவேத் தன்னுடைய தகப்பனை இழந்துட்டாங்களாம். இங்கே எங்க ஊர்லேயும் ஒரு விக்டோரியா சதுக்கம்இருக்கு, கூடவே ஒரு சிலையும். நல்ல குண்டு உடம்புள்ள 66 வயசு மகாராணி.இப்ப இருக்கற ராணி எலிஸபெத், இங்கே சிட்னி மக்களுக்கு ஒரு லெட்டர் போட்டுருக்காராம். அதை 2085 வது வருசம்தான் அப்ப இருக்கப்போற மேயர் படிக்கணுமுன்னு சொல்லிட்டாங்களாம். அப்படி என்னாதான் எழுதி இருப்பாங்க? அதையும் இங்கேதான் பாதுகாப்பா வச்சுருக்காங்களாம். அங்கங்கே பழைய வரலாறுகள், பழைய படங்கள்ன்னு நாள் முழுசும்சுத்திப் பார்க்கும்படியான விசேஷம் இந்தக் கட்டிடத்துலே இருக்கு.
இங்கே ஒரு பேனாக் கடை இருக்குங்க. கடையோட கதவின் கைப்பிடியே ஒரு பேனா போல இருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்சது.ஆயிரம் டாலருக்கெல்லாம் இந்தக் கடையிலே பேனா இருக்கே....... இதை யாராவது வாங்குவாங்களான்னு எப்பவும்நினைச்சுக்குவேன். நமக்கெல்லாம்தான் இப்ப கையிலே பேனா புடிச்சு எழுதற வழக்கம் அறவே போயிருச்சே.(-:இங்கே மத்தியில் வட்டமா உள்ள உசந்த கூரையில் ஒரு மணிக்கூண்டு தொங்குது. இது எனக்கு ரொம்பவே பிடிச்ச கடிகாரம். ஒரு கோட்டை போன்ற சதுர அமைப்பு. அதுலே ரெண்டு பக்கம் கண்ணாடி கூண்டு. உள்ளெ பழைய பிரிட்டனின்சரித்திரக்காட்சிகள் . ஆறு பொண்டாட்டிக்காரரான எட்டாவது ஹென்றி, துரோகின்னு குற்றம் சாட்டி, தலையைத் துண்டிக்கப்பட்ட முதலாம் சார்லஸ் , எட்மண்ட் அயர்ன்சைட், ஹெரால்ட் ஹேர்புட் இவுங்க இங்கிலாந்து அரசர்களானது,வைக்கிங்குகளோடு நடந்த போர்ன்னு சில. 1, 2, 3, 4,ன்னு ஒவ்வொரு முழு மணியாகறப்பவும் மணிக்கூண்டுலே மணியடிச்சு முடிச்சதும், இந்தக் கோட்டையில் ஒரு ஷோ நடக்குது. இதுலே சார்லஸ் தலையை வெட்டுனதுதான் கடைசி சீன். குப்புறப்படுத்து இருக்கறார் சார்லஸ் .முகமூடி போட்டுக்கிட்டு இருக்கற ஒருத்தர் ஒரு கோடாலியை உயர்த்தி ஒரே போடு. தலை துண்டாகிக் கீழே விழும்! எப்பவும் ஒரு ஏழெட்டுப்பேராவது ஒவ்வொரு முழு மணிக்கும் அங்கெ நின்னு வேடிக்கை பார்க்கறதுதான். நானும்முழு மணியாற சமயம் அந்த ஏரியாவுலே இருந்தா விடாமப் போய் பார்த்துருவேன். நல்ல தலை வெட்டினான் தம்பி!


இது பிரிட்டிஷ் சரித்திரமுன்னா அடுத்த பகுதியிலே இன்னொரு கடிகாரத்தைத் தொங்கவிட்டு ஆஸ்த்ராலியன் சரித்திரம் சொல்றாங்க. இதுவும் ஒலிம்பிக்ஸ் கால உபயம் போல இருக்கு. இங்கத்துப் பழங்குடிகள்இருந்த காட்சி,வெள்ளையர்கள் கப்பலில் வந்தது, பழங்குடிகளின் பிள்ளைகளைப் பெற்றொர்களிடமிருந்து பிரிச்சுக்கிட்டுப் போனது, முதுகுத்தோல் உரியும் அளவுக்கு சாட்டையடி கொடுத்தது இத்தியாதிகள். ஒரு அடி உயரத்துலே ஒரு அபாரிஜன்( இங்கத்துப் பழங்குடி) கையிலே ஒரு நீண்ட கழி வச்சுக்கிட்டு இந்தப் படங்களையெல்லாம் வட்டமாச் சுத்திவர்றது மாதிரி ஒரு அமைப்பு. அந்தந்தப் படங்கள் கிட்டே வரும்போது அந்தப் படத்துக்கு பளிச்சுன்னு விளக்கு வரும். விளக்கேற்றியவ(ன்)ர்:-)


இந்த அபாரிஜன்கள் பார்க்கறதுக்கு நம்ம ஊர் மலைவாழ் மக்கள் இருளர்கள் இருக்கறாங்களெ, அவுங்க மாதிரியேஅச்சு அசலா இருக்காங்க. உலகம் இப்ப இருக்கறது மாதிரி கண்டங்கள் பிரியாம மொத்தமா இருந்தப்ப இந்தப் பகுதிஇந்தியாவோடு ஒட்டி இருந்துச்சாம். இவுங்க உடம்பெல்லாம் சாம்பல் பூசிப்பாங்க. இதுவும் விபூதி பூசற மாதிரின்னு எங்கியோ படிச்சேன். நம்ம சங்கராச்சாரியார் ( பெரியவர்) இருந்தார் இல்லையா, அவர் கூட இவுங்களைப் பத்தி இப்படிச்சொன்னாராம். இங்கே ஒரு சாவ்னீர் விக்கும் கடையில் வாசலில் ஒரு சின்ன சிற்பம் வச்சிருக்காங்க. அபாரிஜன்கள் சிலர் பாறைமேலே உக்காந்துக்கிட்டு வெள்ளையான ஒரு கலவையை விரலால் தொட்டு புள்ளிப்புள்ளியா அலங்கரிச்சுக்கறது.ஒருத்தருக்கு இன்னொருத்தர் விலா எலும்புகளில் பொட்டு வச்சுக்கிட்டு இருப்பார். இன்னொருத்தர் அவரோட நண்பருக்குக்குக் கண்ணுக்கடியில் வெள்ளை பூசுவார். எதோ கண்ணை நோண்டுற மாதிரி இருக்கும். எனக்குப் பிடிச்ச சிற்பம். எதுக்கெடுத்தாலும்பிடிச்சிருக்குன்னு சொல்றாளே..... மண்டை சரியில்லையோன்னு நினைச்சுக்காதீங்க. எனக்கு எல்லாமே பிடிச்சுத்தான் இருக்கு,அதுக்கென்ன இப்ப?சிட்னியிலே 960 (சபர்ப்) பகுதிகள் இருக்காம். இன்னும் ஒரு 40 இருந்தா ரவுண்டா ஆயிரம் ஆயிருக்காது? கூடியசீக்கிரம் வந்துரும். அதான் சிட்டி வளர்ந்துக்கிட்டே போகுதே! இங்கே ஜனத்தொகை அம்பது லட்சம். அடேயப்பா...எங்க நியூஸியின் மொத்த ஜனமே 41 லட்சம்தான். ஒரு நகரம்= ஒரு நாடு( நாட்டுக்கும் குறைவு!) வேலை வாய்ப்புகள்நிறைய இருக்கு. எங்கே பார்த்தாலும் கடை கண்ணிகளில் கூட 'வேலை காலி இருக்கு, உள்ளெ வந்து விசாரிச்சுட்டுப்போ'ன்னுபோர்டு தொங்குது. அதுவும் கிறிஸ்மஸ் சீஸன் வேறவருதே!இன்னிக்குத் திங்கக்கிழமை. காலையில் 8 மணிக்கெல்லாம் கிளம்பி எங்க இவர் வேலைக்குப் போயிட்டார். இனி என் ராஜ்ஜியம். நம்ம தோழி ஒருத்தர் ஒம்போதரைக்குள்ளெ வரேன்னு சொல்லி இருந்தாங்க. 25 வருசப்பழக்கம். ஃபிஜியில்இருந்த காலம் முதல் நண்பர்கள். அங்கே 'கூ' வந்த பிறகு மக்கள்ஸ் புலம் பெயர்ந்தது இங்கே நியூஸிக்கும் ஆஸிக்கும்தான்.அப்ப இந்த அரசாங்கங்கள் இரக்கத்தோடு நடந்துக்கிட்டது உண்மைக்குமே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.


தோழி ஒரு டீச்சர். இங்கே வந்த பிறகு பகுதி நேர வேலை கிடைச்சுச்சாம். கணவர் டாக்டர். இங்கே அரசாங்கம் நடத்தும் தேர்வு எழுதி, ஜெயிச்சாத்தான் மருத்துவர் தொழில் செய்ய முடியும். ச்சின்னவயசு ஆட்களுக்குப் பரவாயில்லை.ஓரளவு நடுத்தர வயசுலெ படிப்பு, பரிட்சைன்னா கொஞ்சம் கஷ்டம்தானே? அதுலேயும் மூணே மூணுமுறை தான் தேர்வு எழுத விடுவாங்க. மூணாவது முறையும் 'கோட்' அடிச்சா அவ்வளவுதான் அம்பேல். காலத்துக்கும் மருத்துவரா வேலை செய்ய முடியாது. சிலருக்கு ரெண்டு முறை தோற்றுப்போயிட்டாவே ஒருவித பயம் வந்துரும். மூணாவது முறை தேர்வு எழுத மாட்டாங்க.வேற லைன்லே வேலை தேடிக்கிட்டுப் போறவங்களும் உண்டு. போனமுறை போனப்ப, நம்ம டாக்ஸி ட்ரைவர் இப்படித்தான்ஆனவர். பாக்கிஸ்த்தான்காரர். நம்ம தோஸ்து நிதானமா ஒவ்வொரு பரிட்சையும் பாஸ் பண்ணிட்டார். வேலையும் கிடைச்சது. கான்பெரா, பிரிஸ்பேன், டார்வின்னு பல இடங்களிலே தூக்கிப் போட்டாங்களாம். குடும்பத்தை இங்கேயே விட்டுட்டு அவர்மட்டும் தனியாப்போய் பொங்கித் தின்னுக்கிட்டு வேலை பார்த்துருக்கார். இப்ப மூத்த மகளுக்குக் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பேரன் பேத்தியும் ஆச்சு. ஒரு மகன் இருக்கார்.


சில பல தடங்கல்களாலே அவுங்களாலே சொன்ன நேரத்துக்கு வர முடியலை. அதுக்கென்ன? கொஞ்சம் இப்படி அப்படித்தான் இருக்கும். நான் பாட்டுக்கு தமிழ்மணத்துலே மூழ்கி இருந்தேன். பத்தே முக்காலுக்கு வந்துட்டாங்கன்னு லாபியிலே இருந்து கூப்புட்டாங்க. போய்ப் பார்த்தா டாக்டரும் வந்துருக்கார்.அஞ்சு வருசமாச்சு, அவரைப் பார்த்து. தலையெல்லாம் 'கொல்'ன்னு நரை. பையனும் வந்தான். அழகான வாலிபன். 29 வயசாகப் போகுது. கால் நூற்றாண்டு கழிச்சு அவனைப் பார்க்கறேன். அக்கவுண்டண்ட்டு வேலை. ஆனா அவனுக்கு 'ஹாலிவுட்' போகணுமுன்னு ஒரு தீவிர வெறி! நடிப்புக்குன்னு மாலை நேர வகுப்புலேவேற சேர்ந்து படிச்சானாம். மூணு மாசத்துக்கு முன்னாலே LA போய், பலரைக் கண்டுக்கிட்டுவந்திருக்கானாம். இப்ப விசாவுக்கு வெயிட்டிங்.'வந்ததும் போயிருவேன்.' எதையாவது சாதிச்சாத்தான் கல்யாணமுன்னுசொல்லிக்கிட்டு இருக்கானாம். பரத நாட்டியம் கத்துக்கிட்டு அரங்கேற்றம் கூட பண்ணியிருக்கான்.


அடட... இந்தச் சான்ஸை விட்டுறக்கூடாதுன்னு நானும்,'உனக்கு நடிக்க வாய்ப்பு வந்துட்டா....உன் அம்மா ரோல் செய்யவேற யாரையும் தேடாதே. நான் இருக்கேன்'னு ஆறுதல் சொல்லி வச்சேன். யாரு கண்டா....? என்னை திடீர்ன்னு இங்கிலிபீஸ் படத்துலே பார்த்தா ஆச்சரியப்படாதீங்க:-))))


டாக்டரும், இப்ப வாரம் ரெண்டு நாள் மட்டும் ஒரு க்ளினிக்கில் வேலை செய்யறாராம். செமி ரிட்டயர்டு! வெளியே போய்ஊரைச் சுத்திக்கிட்டே பழங்கதைகள் பேசுனோம். நம்ம ஹொட்டலுக்கு தொட்டடுத்து 'பிட்'தெரு. சிட்டிமால் செண்டர்பாயிண்ட் டவர் எல்லாம் அங்கேதான். அங்கே ஒரு ஓபல் ம்யூசியம் இருக்கு. அதைக் கொஞ்ச நேரம் பார்த்தோம்.ஓபல் எப்படி வெட்டி எடுக்கறாங்கன்னு அருமையான டிஸ்ப்ளே வச்சுருக்காங்க. ஓபல் விற்பனைக்கும் இருக்கு.'ஓபல் வாங்க, வீட்டை வித்துட்டா'ன்ற பழி வராம,ஒரு கெத்தா விலையை மட்டும் பார்த்துக்கிட்டேன். அந்தக் கடையே ஒரு நிலத்தடியிலேதான் இருக்கு. எங்கே வயசானவுங்க படியிலெ இறங்க முடியாதோன்னு ஒரு 'சேர் லிஃப்ட்'கூட வச்சிருந்தாங்க.அதுலே போகணுமுன்னு எனக்கு ஒரு அல்ப ஆசை:-) ஆனா.............


வந்த நண்பர்களும் 'சிட்னியிலே இருக்கோம்'ங்கற பேரே தவிர, சிட்டிக்குள்ளே வர்றதே இல்லையாம்.போன முறை எங்களைப் பார்க்க டாக்டர் மட்டும் வந்தார். அதுக்கப்புறம் இப்பத்தானாம். இவுங்களுக்காகவே இனிமே நாம் அடிக்கடி வரணும்போல இருக்கு:-)))) அடுத்த விஸிட் Myer கடை. எலக்ட்ரானிக் பகுதி. பையனுக்கு என்னவோ அடாப்டர் வாங்கணுமாம். லேட்டஸ்ட் மாடல் மானிட்டர்கள் எக்கச்சக்கமா குவிஞ்சிருக்கு. இதுலே சில மாடல்கள் இன்னும் நியூஸிக்கு வரலை. ம்யூஸிக் கம்போஸ் செஞ்சுக்கவும், ம்யூஸிக் கீபோர்டு இணைச்சு ஒரு வகை. அட்டகாசம்.32 இஞ்சு ஃப்ளாட் ஸ்க்ரீன். வெரி ஸ்லிம், வெரி நைஸ்.


அங்கே இருந்து வெளியே வந்து அதே தெருவிலேயே நடந்து போய்க்கிட்டு இருந்தோம். சாப்புட ஒரு இடம் தேடல்தான்.போய்ச் சேர்ந்த இடம் படகுத்துறை. ஃபெர்ரி வார்ஃப். அக்கம்பக்கம் இடங்களுக்கு அங்கிருந்து படகுகள் போகுது. கண்ணுக்குமுன்னாலே சிட்னியின் லேண்ட் மார்க் சிட்னி ப்ரிட்ஜ். வலப்பக்கமா ஓபெரா ஹவுஸ். படகுத்துறையிலே கட்டடங்களைகண்டமேனிக்கும் கட்டி, இப்ப ஓபெரா ஹவுஸின் வ்யூ முக்காலே மூணு வீசம் மறைஞ்சிருக்கு. எல்லாம் சமீபத்துலே கட்டுனதாம்.
நம்ம நாட்டுலெ வெள்ளையா இருந்த தாஜ்மஹால் கட்டிடம், மதுரா ரிபைனரீ புகையாலே சாம்பக்கலரா ஆயிக்கிட்டு வர்றதைக் கவனிச்சீங்களா? இங்கே வெள்ளையா ஒரு காலத்துலெ இருந்த ஓபெரா ஹவுஸ், இப்ப என்னவோ லேசாமஞ்சள் படிஞ்சு தந்தக் கலருலே இருக்கு( இதுக்குத்தான் நல்லா பல் விளக்கணுங்கறது? ) எதனாலெ? கொஞ்சம் கவனிங்கப்பா............ ரெண்டு க்ளிக் க்ளிக்கிக்கிட்டு சாப்பாட்டுக்கடை தோதா இல்லாம, திரும்ப வந்தவழியிலேயெ நடந்து 'ஆஸ்தராலியா ஸ்கொயர்' . அங்கே இருந்த ஃபுட் கோர்ட்லெ இந்திய சாப்பாடு வாங்கித் தின்னுட்டு ( சொல்லிக்கறமாதிரி இல்லே அந்தச் சாப்பாடு. ஓசியிலே கிடைச்சதுக்குப் பழுது சொல்லலாமா? மூச்:-) வீட்டுக்கு வரலைன்னு ஒரே புலம்பல் வேற )அடுத்த பக்கம் இருக்குற ஜார்ஜ் தெரு வழியா புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தோம். பையன் பார்க்கிங்லே இருந்து காரை எடுத்துவரப் போனான். நாலு மணி ஆயிருச்சுன்னா ட்ராஃபிக் கூடுதல். ஒரு மணி நேரக் கார் பயணம்அவுங்க வீட்டுக்கு. ஹொட்டல் வாசலில் தலைக்கு மேலே 'மோனோ ரயில்' ரெண்டு நிமிஷத்து ஒரு தடவை,'டடக்,டடக்'ன்னு போய்க்கிட்டே இருக்கு. ('சரி..... ஞாபகம் இருக்கு, வரேன். இப்பக் கொஞ்சம் தடக்காமப்போ')


பத்து நிமிசத்துலே வரேன்னு போனவன் அவ்ளொதான். அக்கம்பக்கம் போகலாமுன்னா..... அதுக்குள்ளே அவன் வந்துட்டா? இதுவேற ஒன்வே தெரு. விட்டுட்டா மறுபடி ஊரைச் சுத்திக்கிட்டுல்லே வரணும். தெருவை அடைச்சுக்கிட்டு மூணு லைன்லேட்ராஃபிக் நெரிசல். என்ன கலர் வண்டி?ன்னு கேட்டதுக்கு மரூன் கலர். வர்ற வண்டிகளிலே எது ரொம்பவே அழுக்கா இருக்கோ அதுதான் அவுங்க வண்டியாம். ஏன்??????? சிட்னியிலே தண்ணிக் கஷ்டமாம்ப்பா. வாரம் ரெண்டுநாள் மட்டும் தோட்டத்துக்குத் தண்ணி ஊத்தலாமாம். அப்பக் காரு கழுவுறது? மழை வரும்போது வண்டியை வெளியிலே நிப்பாட்டிக்கணுமாம். உள்ளூர் நிலவரமெல்லாம் இப்படித்தான் வெளியே வருது இல்லெ?


ரொம்ப வறட்சி, காடு பத்திக்கிட்டு எரியறது, புயல் மழைன்னு ஆஸ்தராலியாவிலே அங்கங்கே வெவ்வேற நிலமை.அம்மாம் பெரிய கண்டம் ஒரே நாடா இருக்கறது அவுங்களோட பெரிய பலம்.சில முக்கிய நகரங்களைத் தவிர மத்த இடங்களிலே கூட்டமே கிடையாது. இன்னிக்கு, இந்த நிமிஷக் கணக்குக்கு 20 689 878. ரெண்டே முக்கால் கோடிகூட கிடையாது.


நாப்பது நிமிசக் காத்திருப்பு( நல்லவேளை, காலுலே இருந்து வேர் விடலை). லேசான தூறல், ச்சில்லுன்னு ஒரு காத்து.சனிக்கிழமை மட்டும் 35 இருந்த சூடு என்னைப் பார்த்துட்டு மறுநாளே மரியாதையா 17 ஆயிருந்தது. நியூஸி வெதரைக் கொண்டுவந்துட்டேன்னு கொஞ்சம் 'பாராட்டு' வாங்குனேன்:-)))


நாலடிக்க அஞ்சு நிமிஷம். ஒடிப்போய் நம்ம 'தலை கொடுத்தானை'ப் பார்த்துட்டு இன்னொரு ரவுண்டு வந்தா, ஒரு பாட்டில் தண்ணி 99 சதம். அதே ப்ராண்ட், அதே அளவு. 'தண்ணியில் உல்வொர்த் அடிக்கும் கொள்ளை'ன்னு ஒரு பதிவு போட்டுற வேண்டியதுதான்.


தொடரும்............

Thursday, October 26, 2006

கோவிந்தா கோவிந்தா ஒஸ்தானுரா கோவிந்தா (A t d - பகுதி 3)
நேர வித்தியாசம் இருக்குதே, இது இந்தப் பாழும் உடம்புக்குப் புரியுதா? எங்க டைம் ஏழு மணிக்கு 'டாண்'னுமுழிப்பு வந்துருச்சு. அங்கத்து நேரம் காலை 4 மணி. ஏறக்குறைய 33 மணி நேரமாத் தமிழ்மணம் வேற பார்க்கலை. தலையெல்லாம் என்னவோ செய்யுது. இந்த 'கோல்ட் டர்க்கி'யைப் பத்தி பயந்துதான், கோபால் மடிக்கணினியைத் தூக்கிட்டு வந்ததும் இல்லாம அங்கே ஹொட்டல்லே ப்ராட்பேண்ட்க்கும் ஏற்பாடு செஞ்சிருந்தார். ஒரு நாளைக்கு25 $. முடிஞ்சவரை மேஞ்சுரலாமுன்னு தமிழ்மணம், ஜிமெயில், இன்னும் வெவ்வேற இடங்களிலே இருந்த தபால்பெட்டிங்கன்னு நோட்டம் விட்டுட்டு, தின கரன்/மலர்களைப் பார்த்துட்டு, பதில் போடவேண்டிய கடிதங்களுக்கு பதில் அனுப்பினேன்.


சிட்னியிலே இருக்கும் நம்ம பழைய நண்பர்களுக்கு தொலை பேசி, சந்திக்க நேரம் ஒதுக்கிட்டு,மற்ற வேலைகளையெல்லாம் முடிச்சுக்கிட்டு டவுன்ஹால் ஸ்டேஷனை நோக்கிப் போனோம். எலிவளை மாதிரி சுரங்கப்பாதைகள் பல திக்கிலும்போகுது. இதுக்கு முந்தி வந்த பயணங்களில் இத்தனை எண்ணிக்கை பார்த்த ஞாபகம் இல்லை.குவீன் விக்டோரியா பில்டிங்( இது என்னோட ஃபேவரிட் கட்டிடம். விவரமா அப்புறம் சொல்றேன்) மட்டும் அப்படிக்கு அப்படியே இருக்குமா? கவனிச்சுப் பார்த்தா, அங்கேயும் முந்தி இருந்த கடைகள் எல்லாம் கைமாறி இருக்கு. ச்சீனர்கள் கடைகளைப் புடிச்சுக்கிட்டாங்க போல. எல்லா காபி ஷாப்களிலும் அவுங்கதான் இருக்காங்க. அந்த 'இதாலியன் நகைக்கடை'யைத் தேடித்தேடிப் பார்த்தாச்சு. ஊஹூம்..........


அந்தக் கடையிலே என்ன விசேஷமுன்னா, அழகழகான க்ரீடம் டிசைன்களில் மோதிரம் செஞ்சு வித்துக்கிட்டு இருந்தாங்க. எல்லாம்ஹேண்ட் மேடு. கையாலே பண்ணிட்டாங்களாம். அப்பெல்லாம் விலை படியலை. இந்த தடவையாவது துணிஞ்சுறலாமுன்னு ஒரு எண்ணம் இருந்துச்சு. நம்ம காசு அவுங்களுக்குக் கொடுத்து வைக்கலை. போட்டும்.


இப்ப ரெண்டு வருசத்துக்கு முந்தி இங்கே ஒலிம்பிக்ஸ் 2000 நடந்துச்சுல்லையா? அப்ப அதுக்காக நிறைய மேம்பாடுகள் செஞ்சுருக்காங்க. ரோடுகள் எல்லாம் இன்னும் அகலமா ஆயிருச்சு. ஏராளமான சுரங்கப்பாதைகள், புதிய கட்டிடங்கள்,சாப்புடற இடங்கள்ன்னு தாளிச்சு விட்டுருக்காங்க. இத்தனை ( food court)ஃபுட் கோர்ட்ங்களைப் பார்த்த நினைவே இல்லை.எல்லா நாட்டுச் சாப்பாடும் கிடைக்குது. ஒவ்வொரு சாப்புடற இடத்திலும் குறைஞ்சது ஒரு இந்தியன் சாப்பாட்டுக்கடை. அங்கே வாங்குறவங்க எல்லாம் மத்த நாட்டுக்காரங்க. அதானே.......... வீட்டுலேதான் இந்தியச் சாப்பாடு. அதை வெளியிலும் திங்கணுமா? :-))))


சுரங்கம் முழுசும் கடைகண்ணிகள் வேற, ஜேஜேன்னு இருக்கு. டவுன்ஹால் ஸ்டேஷனை ஒட்டி 'வுல்வொர்த்' சூப்பர்மார்கெட்டின் ஒரு பகுதி. இதுவும் மூணு அடுக்கா இருக்கு. அதுலே ஏறிப்போனா அப்படியே தெருப்பக்கம் போயிறலாம்.இதே சூப்பர் மார்கெட் நம்ம ஊர்லேயும் இருக்கே, அதனாலே பார்த்ததும் பாசம் பொத்துக்கிட்டு வந்துருச்சு. உள்ளெ நுழைஞ்சோம். வாழைப்பழம் கெட்ட கேடு 16 டாலராம் கிலோ. நெஞ்சு அப்படியே 'கப்'னு அடைச்சுக்கிச்சு. ஓடிப்போய் ஒரு தண்ணி பாட்டிலை எடுத்துக்கிட்டோம். இங்கே நம்மூர்லே கிலோ $2.65க்குப் போட்டுருக்கறதையே,'கொள்ளை அடிக்கிறாங்க'ன்னுசொல்ற எனக்கு எப்படி இருந்துருக்கும்? எல்லாப் பழங்களுமே விலை ஏறிக்கிடக்கு. இத்தனைக்கும் நம்ம காசைவிடஇவுங்க காசு ஸ்ட்ராங் வேற. பிளேன்லே படிச்ச மேகஸின்லே 'சாக்லேட் ஃப்ரூட் (Black Sapote)ன்னு ஒரு விதம்இங்கெ ஆஸியிலே மட்டுமே கிடைக்குதுன்னு அளந்து விட்டுருந்தாங்க. அது என்னன்னு கண்டு பிடிக்கணுமுன்னு பழக்கடைகளைப் பார்த்ததும் பாய்ஞ்சுக்கிட்டு இருந்தேன் ஒரு பக்கம்.( கடைசி வரையில் கண்டு பிடிக்க முடியலைன்றது வேற விஷயம்)


தண்ணி( குடிக்கிற)யுமே அங்கே 1.69$. ச்சின்ன பாட்டில்தான். வாட்டர் பால்ஸ் க்கு டிக்கெட் எடுத்துக்கிட்டோம்.ஞாயித்துக்கிழமையாச்சா, டிக்கட் கவுண்ட்டர்கூட ஆளில்லாம மூடிக்கிடக்கு. எல்லாம் தானியங்கி மெஷின்கள்தான்.ஒரு மணி நேரப் பயணம். அங்கே வெளியே வந்தா நம்ம கஸ்தூரிப் பெண்ணின் கணவர் ( இனிமேப்பட்டு க.பெ.க)காத்திருந்தார்.காருக்குக் கூட்டிக்கிட்டுப் போனார். அங்கெ க.பெ & ஸ்ரேயா. ஒரு அஞ்சு நிமிஷ ட்ரைவ். மெயின் ரோடிலே இருந்து இடது பக்கம் பிரியும் ஒரு சாலை. முகப்புலெயெ அம்புக்குறி போட்டு 'ஹிண்டு டெம்பிள். ஹெலன்ஸ்பர்க்'னு ஒரு போர்டு.கோயிலுக்குள்ளெ வந்துட்டோம். ச்சின்னதா மதிள் சுவர். ரிஷபம், யாழின்னு காங்க்ரீட் சிலைகள் மதில்மேல் ( பூனைகளாய்) உக்காந்துருக்கு. சிவா விஷ்ணு கோயில். ஆரம்பத்துலே இங்கே பெருமாள் கோயில் மட்டுமே இருந்துச்சு. ஒவ்வொருமுறையும் பார்க்க நினைச்சு, இந்தப் பக்கம் வரவே முடியாமத் தள்ளிப்போய்க்கிட்டு இருந்த கோயில். இப்ப ஒருசிவன் கோயிலையும் இதை ஒட்டிக் கட்டிட்டாங்க. சந்திரமெளலீஸ்வரர், புள்ளையார், முருகன், நவகிரகங்கள் எல்லாம்உண்டு. வலப்புறம் சுவர் முழுசும் பல்வேறு கணபதிகள். இடப்புறம் முழுவதும் பல்வேறு முருகன்கள். ஒரு பக்கமா அர்ச்சனைக்குப் பழத்தட்டுக்கள் &அர்ச்சனைச் சீட்டுக்கள் விற்பனை. இந்தக் கோயிலில் படம் எடுக்க அனுமதி இல்லைன்னு ஒரு போர்டு இருந்ததை நாலைஞ்சு படம் எடுத்தபிறகுதான் கவனிச்சார் நம்ம போட்டோகிராபர்.


இடது புறம் இருக்கற சுவரிலே ஒரு வாசல். அதுலே நுழைஞ்சால் பெருமாள் கோயிலின் வெளிப்பிரகாரம். ஒஸ்தானுரான்னு சொல்லிக்கிட்டு வாசலில் நுழைஞ்சால், அங்கெ ஒரு மேஜை மேலே இருந்த ஆரஞ்சு கீழே குதிச்சு,உருண்டு ஓடிவருது என்கிட்டே! ( சாட்சிகள் இருக்கு, க.பெ & ஸ்)


ரெண்டு கோயில்களுமே ஒட்டிக்கிட்டு இருந்தாலும் மூலவர்கள் மட்டும் ஆளுக்கு ஒரு பக்கமா பார்க்கறாங்களோ?கிழக்கும் மேற்குமா.......... சரி. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்பேச இது செளகரியமா இருக்குன்னு வச்சுக்க வேண்டியதுதான். சாமிக்கு எல்லாத் திசையும் ஒண்ணுதானே?


நின்ற திருக்கோலம். அவருக்கு வலது பக்கம் மகா லக்ஷ்மி, இடது பக்கம் ஸ்ரீ ஆண்டாள். தனித்தனி சந்நிதிகள்.இங்கேயும் கற்பூரம் தடை செஞ்சுருக்காங்களாம். நல்ல விஷயம்தான். புகை பிடிக்காம இருக்கும். விஷ்ணு அலங்காரப்பிரியனாச்சே, குறை ஒன்றும் இல்லாமல் ஜொலிச்சுக்கிட்டு இருக்கார். இந்தியாவில் இருந்த வந்த பட்டர். அர்ச்சனையை விஷ்ணு சகஸ்ரநாமமா செஞ்சுறவான்னு கேட்டார்? ஆஹா..... கரும்பு தின்னக் கூலியா?


அர்ச்சனைச் சீட்டு வாங்க இந்தப் பக்கம் ஓடுனார் கோபால், அந்தப் பக்கம் ஓடுறார் பட்டர்! பூப்பறிக்கப் போனாராம்.


எனக்குப் பக்கத்துலெ இருந்த ஒரு மேடை(ஜை)யில் எரிஞ்சுக்கிட்டு இருந்த திருவிளக்கைக் கவனிச்சேன். குழந்தைகளுக்கு பால், மருந்து புகட்டும் சங்கு. அதுலே நெய் ஊத்தித் திரி போட்டு விளக்கு. அந்தச் சங்கை ஒரு நீண்ட கைப்பிடியில் இணைச்சிருக்கு. முதல்முறையா இப்பத்தான் பார்க்கறென். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.


கருவறையிலே அமைதியான ச்சின்ன விளக்குலே பெருமாள். தயா சிந்து பார்த்ததும் 'டக்'ன்னு நம்ம கண்ணபிரான் நினைவு. நம்ம தருமி சொன்னதுபோல இது என்ன 'கெமிஸ்ட்டிரி'யோ தெரியலை? நேத்தும் முருகனைப் பார்த்ததும் நம்ம சைவச் செம்மல் ( அப்படித்தானே பட்டம் கொடுத்துருக்கு?)ராகவனை நினைச்சுக்கிட்டேன். இப்ப எல்லாம் பயணமுன்னு இல்லை, எப்பவுமே எதையாவது பார்த்தால் அது சம்பந்தப்பட்ட வலைஞர் நினைவு வர்றதைத் தடுக்கமுடியலை. அது இருக்கட்டும், வடை, பூனை, யானை இதையெல்லாம் பார்த்தால் என் நினைப்பு உங்களுக்கு வரணுமே!வருதா?


ஆற அமர 35 நிமிஷ அர்ச்சனை. கையிலே புத்தகம் வச்சுக்கிட்டு ஒரு வரியும் விடாமப் படிச்சு கிட்டே அர்ச்சனை.ஒரே ஒரு பகுதியை விட்டுட்டார், ஸ்ரீராம ராம ராமேதி, ரமே ராமெ மனோரமே............ மனசுக்குள்ளெ ஒரு ச்சின்னத் துடிப்புஎனக்கு. அடுத்ததா திருவிளக்கால் தீபாரதனை செய்யும்போது விட்டதைச் சொல்லிட்டார். அப்பாடா... திருப்தியாச்சு.தீர்த்தம் (கமகமன்னு பச்சைக்கற்பூரம் மணக்க), சடாரி, பிரசாதம் எல்லாம் ஆச்சு. கிடைச்சது மஞ்சள் பூ. ஆஹா...ப்ரெண்ட்ஷிப் டே! அங்கெ ஒரு பக்கம் நம்ம திருப்பதி உண்டியல் ஸ்டைலில் ஒரு உண்டி. அதைத் தாண்டி இருந்த பெரிய ஹாலில் தசாவதார சிற்பங்கள். நம்ம (ஆஞ்ச) நேயடு பவ்யமா இருக்கார் ஸ்ரீராம லக்ஷ்மணர்கள் & சீதா பிராட்டியார்பக்கத்துலே! இன்னொரு வரிசையில் பனிரெண்டு ஆழ்வார்கள். இந்தப் பக்கம் ஒரு தனி சந்நிதியில் சுதர்ஸன். இன்னொரு பக்கம் கருடன். ஸ்ரீவேணுகோபாலன், உலகளந்தப் பெருமாள், ஹயக்ரீவர்னு இன்னொரு வரிசை. அழகான, அட்டகாசமான, அருமையான சிற்பங்கள். ஹய்யோ............. பேசாம இங்கேயே வந்துறலாமா?


கோயிலில் கூட்டமே இல்லை. ஒரே ஒரு மனவா(டு)ளு ஜோடிதான் பிரகாரத்தைச் சுத்தி வந்துக்கிட்டு இருக்காங்க.அப்ப செருப்பு விடற இடத்துலே எக்கச்சக்கமா இருந்துச்சே, நாம பார்த்தமே ...........


வெளியே வந்தவுடன் விடை கிடைச்சது. கேண்டீன்லே இருக்கு மொத்த ஜனமும். சனி, ஞாயித்துக்கிழமைகளில் மட்டும் இந்தக் கேண்டீன் திறக்கறாங்களாம். தோசை, இட்டிலி, வடை, பரோட்டான்னு அமர்க்களம். மெனு போர்டுலே ஒரே ஒரு அயிட்டத்தை மட்டும் பேப்பர் ஒட்டி மறைச்சிருந்தாங்க. அது என்னவா இருக்குமுன்னு ஒரே மண்டைக்குடைச்சல். நல்ல வேளை , அது தக்காளி சாதமாம். போட்டும். யாருக்கு வேணும்? :-)


ஒரு வெட்டு வெட்டினோம். கூடவே ஆளுக்கொரு டீ. கையிலே கொண்டு போறதுக்கு மிக்ஸர் பொதி வேற வாங்கிட்டார்,நம்ம க.பெ.க. மொதல் நாள் க.பெ. வீட்டுலெ அதிரசத்துக்கு மாவு இடிச்சு ஆற வச்சிருந்தாங்க.காலையிலெ அதையும் நமக்காக அவசர அவசரமாச் செஞ்சு கொண்டு வந்துருந்தாங்க. ஜமாய் ராணி ஜமாய். என் காட்டுலே மழையோ மழை.


திரும்பி வரும் வழியிலே ஒரு இடத்துலே ஸ்கை டைவிங். கொஞ்சம் உயரமான இடத்துலெ இருந்து மனுஷங்க ரெக்கை கட்டிக்கிட்டுக் குதிச்சுப் பறந்து போறாங்க. கீழே விழுந்துட்டா? அட... நீங்க வேற!. விழுந்தாத் தண்ணியிலே வுழணும், கடல்தானே கீழே இருக்கு. வேடிக்கைப் பார்த்துட்டு சலோன்னு 'வெண்ட்வொர்த் வில்' பக்கம் கூட்டிக்கிட்டுப் போனார் நம்ம க.பெ.க. எல்லாம் தமிழ்க்கடைகள். நாங்க கா.மா.க.கொ.பா. மாதிரி:-)))) ஃப்ரீஸர் பகுதியைக்கூட விடாம ஆராய்ஞ்சு விடவேண்டிய பெருமூச்சுக்களை விட்டுட்டு, சினிமாப் பகுதிக்குப் போனோம். நேத்தே கோபால் இவரோடு கூடப்போய் ஒரு டிவிடி ( கமல்ஹாஸனின் டாப் 50 பாடல்கள்) வாங்கியாந்திருந்தார்.


தமிழ்ப்படங்கள் புது ரிலீஸ் எல்லாமே இருக்கு. எல்லா டிவிடியிலும் ரெவ்வெண்டு படங்கள் வேற. நமக்குத் தமிழ்ப்படங்கள் வீடியோ கிளப்புக்காக வந்துருதே. அதனாலெ வேற எதாவது மலையாளம், ஹிந்தி இருக்கான்னு ஒரு தேடல்.'லாஹே ரஹோ முன்னாபாய்'( இது கூடவெ தேரே மேரே ஸ்வப்னே) கிடைச்சது. மணிச்சித்திரத்தாழ் & நரசிம்ஹம் அடுத்தது. பார்த்த படங்கள்தான். ஆனா...'ஒரு முறை வந்து பார்த்தாயா?'வுக்காக வாங்குனேன். விலையும் கொள்ளை மலிவு.(கடைக்காரருக்குச் சொல்லிறாதீங்க. நமக்குள்ளே இருக்கட்டும். அஞ்சு டாலர்தான் ஒரு டிவிடி வித் ரெண்டு படம்)


அங்கே இருந்து நேரா நம்ம ஸ்ரேயா வீடு. உங்களுக்கெல்லாம் இன்னொரு ரகசியம் சொல்லவா? இவுங்க வீணை வச்சிருக்காங்க.'வச்சிருக்காங்கன்னா? வாசிப்பாங்களா? தெரியுமா? 'ன்னு கேக்கறீங்கதானெ? இப்பத்தான் கத்துக்கிட்டு இருக்காங்களாம்.ஒவ்வொரு விஜயதசமிக்கும் வகுப்புத் தொடங்கி ஒரு மாசத்துலே அம்பேல். ஆனாலும் விடாம அவுங்களைத் தொல்லை செஞ்சு ரெண்டு பாட்டு(???) வாசிக்க வச்சுட்டோமுல்லெ! ரெண்டுதான் தெரியுங்கறது வேற விஷயம்:-))))


ச்சும்மா கலாட்டா செய்யறேனே தவிர, ஸ்ரேயாவுக்கு எங்கேங்க நேரம் இருக்கு? பாவம். வார முழுசும் ஏறக்குறைய ஒரு மணிநேரம் பயணிச்சு வேலைக்கு போகணும். திரும்பி வர இன்னும் ஒரு மணி. வார இறுதியிலே வீட்டு வேலைகள்,கோயிலில் இளைஞர் அணியில் சேவை. இதுலே, வலை பதியறது எல்லாம் வேலை நேரமோ? ( கேட்டுக்கலை!!!)


பாட்(டை)டுக் கேட்டதுக்காக ஜாங்கிரி, சோன்பப்டி( ஹல்திராம்) டீ எல்லாம் கொடுத்தாங்க. ஓசைப்படாமத் தின்னுட்டு 'மழை' வீட்டுலே இருந்து கிளம்புனா, வெளியிலே உண்மையான மழை!


க.பெ.க. ரயிலடியிலே கொண்டு வந்து விட்டார். நாங்களும் ரயிலைப் புடிச்சு ராத்திரி பத்தரைக்கு வந்து சேர்ந்தோம்.


ராத்திரி சாப்பாடு அதிரசமும், மிக்ஸரும், ஆப்பிளும்தான். கொஞ்ச நேரம் தமிழ்மணம், மெயில்கள் இத்தியாதி:-)))) ( கொடுக்கற காசுக்கு 'ப்ராட் பேண்டை' பயன் படுத்தணுமா இல்லையா? )முதல் படத்தில்: இடது பக்கம் பெருமாள் & வலதுபக்கம் சிவன் கோயில்கள்.


தொடரும்...........

தொடரும்...........

Tuesday, October 24, 2006

வடைப்பதிவாளர் மாநாடு (A t d - பகுதி 2)

கோயிலுக்கு வெளிப்புறம் சனி பகவானுக்கு எள் விளக்கு ஏத்தறதுக்காக ஒரு இடம். உள்ளெ அதுக்குண்டான சாமக்கிரியைகள் விற்பனை. கருப்புத்துணியில் எள்ளைச் சின்னமூட்டையாக் கட்டி எள் எண்ணெயில் முழுக்காட்டி அகல்விளக்கில் வச்சு வரிசையா நிக்குது. வெளியே மூணு மேஜைகள் போட்டு ஒரு போர்டு வச்சுருந்தாங்க.வயதானவர்களுக்கு மட்டும். சாப்பாட்டு வரிசை. ஓ நமக்காத்தான் இருக்குன்னு சந்தோஷமா அதைப் பார்த்தேன். நம்ம பார்வையின் 'பொருள்' அங்கே ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருந்தவருக்குப் புரிஞ்சு போச்சு. இந்த வரிசை, வயது போனவங்களுக்காகன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னார். பாவம், மனிதர். கண்ணுலே போட்டுருக்கற பவர் லென்ஸ் வேலை செய்யலைபோல இருக்கு. இல்லாட்டி, நம் 'இளமைத் தோற்றம்' தந்த மாயையோ?கோயிலுக்குப் பின்புறம் ஒரு பெரிய ஹால். கோயிலைக் கட்டிக்கிட்டு இருக்கும்போது அங்கேதான் முதலில் விக்கிரகங்களை வச்சுப் பூஜை நடத்திக்கிட்டு இருந்தாங்களாம். இப்ப அது சாப்பாட்டுக்கூடமாவும், திருமணம், வளைக்காப்புன்னு விசேஷ நிகழ்ச்சி நடக்கும் இடமாவும் பயன்படுதாம். அங்கே ஒரு மேடை அமைப்பும் இருக்கு. ஹாலின் வெளிப்புறத்தில் சாப்பாட்டு வரிசை, நம்மைப்போன்ற இளைஞர்களுக்கு! பெரிய பெரிய பாத்திரங்களில், சோறு, பருப்பு, காய்க் கூட்டு,ஸாலட், பொரியல் அப்பளம், ஊறுகாய், பச்சடி,பாயாசம்ன்னு அமர்க்களம். நாங்க ஒரு பத்துபேர் அதையெல்லாம் வாங்கிக்கிட்டு,ஹாலில் போய் உக்கார்ந்தோம். அட,அது எப்படி பத்து வலைப்பதிவாளர்கள்? மாநாடுன்னாவே பிரியாணிப் பொட்டலம்கொடுத்துக் கூட்டம் சேர்க்கணுமுன்னு ஒரு நியதி இருக்கே. அதையொட்டி வலை மாநாட்டுக்கும் ஒரு அஃபிஷியல்போட்டோக்காரர், பல(சில)பார்வையாளர்கள்னு ஒரு கூட்டம் (தானாவே) சேர்ந்துபோச்சு:-) இது போதாதுன்னா,கோயிலுக்குவந்த 300 பேரையும்கூட நம்ம கணக்குலே சேர்த்துக்கலாம். பிரச்சனையில்லை.அறுசுவை உணவோடு மாநாடு ஆ.....ரம்பம். வழக்கமான முதல் கேள்வி. " சிட்னிக்கு வருவது இதுதான் முதல் முறையா?"

" ஆமாம். எழுத்தாளராக( அட எல்லாம் தமக்குத்தாமாய் கொடுத்துக்குற பட்ட(ய)ம் தான்) ஆனபிறகுஇதுதான் முதல் முறை( அப்படிப்போடு அருவாளை!!!!)"

அறிமுகங்கள் ஆச்சு. நெல்லிக்குப்பம் என்ற ஊரைச் சேர்ந்தவர் நம்ம டீக்கடைக்காரர். "டீயிலே கொஞ்சம் சக்கரையைத் தூக்கலாப் போடுப்பா. அதான் அந்த ஊர்லே சக்கரை ஆலை இருக்குல்லே"

நம்ம கனக்ஸ் (ஆன்மீகமா எழுதறார்) அமைதியான தோற்றம். இலங்கைப் பூர்வீகம்.

கானா பிரபாவைப் பத்திச் சொல்லவே வேணாம். ரேடியோக்காரர். அன்னிக்கும் ராத்திரி ரேடியோவில் அவர் நிகழ்த்தும் நிகழ்ச்சி இருக்காம். அலை வரிசையைக் கேக்க மறந்துட்டேன். அப்புறம் தெரியவந்தது, அது கட்டணம் கட்டுனாத்தான் கிடைக்கிற சேவையாம். (சேட்டிலைட் ரேடியோன்னு சொல்றாங்களெ அதுவோ?)அதை விடுங்க. ஆனா நம்மையெல்லாம் உப்பங்கழியிலே படகு வீட்டுலேக் கூட்டிக்கிட்டுப் போய் மீன் பொரிச்சுக் கொடுத்தது நினைவிருக்குல்லே? ( அய்யய்யோ..... வாட் டூ யூ மீன்? கோயிலே உக்கார்ந்துக்கிட்டு மீனைப் பத்திப் பேச்சா?அபச்சாரம்.)


கஸ்தூரிப்பெண். வலை பதிய ஆரம்பிக்கப் புனைப்பெயர் தேடுனப்ப 'சட்'ன்னு ஒண்ணும் மனசுக்குள்ளே தோணலையாம். 'அம்மா'பேரையே வச்சுக்கலாமுன்னு 'கஸ்தூரி' பெண் ஆயிட்டாங்க.


அடுத்து மழைன்ற பதிவின் ஸ்ரேயா. ( எல்லாம் விவரமாத்தான் தொடங்கி இருக்காங்க. உக்காந்து யோசிச்சிருப்பாங்க போல)இவுங்களுதும் பூனைப் பெயர்தான். வலைபதியும் பெண்கள் சொந்தப் பெயரில்தான் பதியுறாங்கன்ற என் நினைப்பில் மண்ணள்ளிப் போட்ட ரெண்டு பேர் இதோ என் கண்ணு முன்னாலே. சிட்னி ச்சைனா டவுன்லே நல்ல பாய்கள் கிடைக்குதாமே.நம்ம ஸ்ரேயாகிட்டே சொல்லித்தான் ஒரு கண்டெயினர் பாய்கள் அனுப்பச் சொல்லணும். ஏற்கெனவே நம்ம வீட்டில்இருந்த பாய்கள் எல்லாம் (அவுங்க பதிவைப் படிச்சுட்டு பிறாண்டுனதில்) கிழிஞ்சு போச்சு:-))))


பார்வையாளர்கள் விவரமும் சொல்லிறட்டா?


துளசியின் மறுபாதியும், எழுத்தாளரின் கூடப் பயணம் செய்யும் போட்டோக்காரருமான கோபால். அப்பப்ப வேண்டாத ஆங்கிளில் இருட்டிருட்டாப் படம் புடிச்சுருவார். 'கொஞ்சம் அழகாத் தெரியறமாதிரி படம் எடுங்கோ'ன்னு சொல்லி அலுத்துப்போச்சு:-)


கஸ்தூரிப்பெண்ணின் மறுபாதி. சேவை செய்வதற்கே அவதாரம் எடுத்தவர். பதிவாளர்கள் சேவையே பிறவிப்பயன். ஒருமுகச்சுழிப்பு? ஊஹூம்.......... எள்ளுன்னா எண்ணெய்.


கஸ்தூரிப்பெண்ணின் மாமனார் & மாமியார்.( ஏம்மா.... கஸ்தூரிப்பெண்ணே, இப்படியும் ஒரு பழிவாங்குதல் முறைஇருக்கா?:-))) தெரியாமப்போச்சே!)
கஸ்தூரிப்பெண்ணின் மகள். வருங்கால வலைப்பதிவாளர்? இருக்கலாம். இப்பவே ஏகப்பட்ட பாஷை தெரிஞ்சிருக்கு,தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தின்னு. பதின்ம வயசு.( நம்ம மீட்டிங்குக்கு டீனேஜ்க்காரங்களும் வராங்கப்பா!!)


நம்ம சந்திப்புக்கு இன்னொருத்தரும் ஆர்வமா வந்து சேர்ந்துக்கிட்டார். அவர்தான் மிஸ்டர் சூர்யா. 15 டிகிரியிலே இருந்து போன எங்களை வரவேற்க வந்துட்டார் 35 டிகிரியிலே. சூடு கனகனன்னு உள்ளே தகிக்க ஆரம்பிக்குது.


பேசுனோம், பேசுனோம் பேசிக்கிட்டே இருந்தோம். மணி மூணரைக்கு பக்கம் ஆச்சு. ஒரு 'உண்மை'(???)யைத் தெரிஞ்சுக்கிட்டு( அந்த 'உண்மை' அப்புறம் )அங்கிருந்து எல்லாரும் கிளம்பிக் கஸ்தூரிப்பெண்ணின் வீட்டுக்குப் போனோம். மாநாட்டின் மிச்சம் மீதிகள்( அட......டிஸ்கஷன்கள்) நிறைய இருக்கே. கிளம்பறதுக்கு முன்னாலே கோயில் அடுக்களையையும், மெனு போர்டு( இது இல்லாமலா?ஆனா திருவிழாக் களேபரத்துலே இன்னிக்குண்டான மெனுவை எழுத மறந்துட்டாங்க போல), அடுக்களை உதவிக்கு வந்த தன்னார்வலர்களையும் சந்திச்சு சில படங்களைக் க்ளிக்கினேன். கோயிலே இருந்து வீடு ஒரு அஞ்சு நிமிஷ ட்ரைவ்தான், கூடுதல் ட்ராஃபிக் இல்லேன்னா.


அழகான வீடு. அமைதியான இடம். வசதியா உக்கார்ந்தாச்சு. குளுமையான இடம். உண்ட மயக்கம் பார்வையாளர்களை இழுக்குது.நாங்க வலைஞர்கள், முழுமூச்சோட வலைப்பதிவுகளைப் பத்தின கலந்து உரையாடல். நீங்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டுப் போகும்வகையில் பேச்சு. ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி நாங்க யாருமே யோசிக்கவும் இல்லை பேசவும் இல்லை. (அதுவே எனக்கு இதை இப்ப எழுதும்போதுதான் ஞாபகம் வருது)


ச்சும்மா வெட்டிப்பேச்சா இல்லாம(!!!) இருக்கணுமேன்ற 'கவலை'யிலே பதிவுகளில் படங்கள் போடறதைப் பத்தியும்,அவைகளை எப்படி பிரச்சனையில்லாமப் பதியறதுன்றதைப் பத்தியும் கூடப் பேசுனோம். எப்படி பதிவுகளில் வரிகளுக்கிடையில் படத்தைக் கொண்டு வர்றதுன்றது என் இப்போதையத் தலையாய பிரச்சனை. ப்ளொக் ஸ்பாட்லே படத்தை ஏத்திட்டு,அதை அப்படியே இழுத்துக்கிட்டு வந்து எங்கே விருப்பமோ அந்த வரிகள் கீழே விட்டுருங்கன்னு பிரபா சொன்னார். ஊருக்குப் போனதும் செஞ்சு பார்க்கணும்னு இருந்தேன்.( அது வெற்றிதான். போன பதிவுலேயே இழுத்தாந்துட்டேனே, பார்க்கலையா? )


அடுத்து காஃபியா டீயான்ற இன்னொரு விவாதம். 'மசாலா ச்சாய்'னு முடிவாச்சு. டீயுடன் கூடவே வர்ற தட்டுகளில் கமகமன்னு மணம் வீசும் மசால் வடை, உளுந்து வடை. & வெங்காய வடைகளின் பரேடு, மெகா சைஸில். எல்லாம் நம்ம க.பெ.ணின் மறுபாதியின் சேவைதான். இங்கே ஒரு விஷயம் இருக்கு. சிட்னி நகர மையத்துலே இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றுவரைக்கும் நகரம் பரந்து கிடக்கு. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நாட்டு மக்கள்ன்னு பிரிச்சுக்கிட்டாங்க போல, க்ரீக், வியட்நாம், ச்சீனர்கள்,தமிழர்கள், பஞ்சாபிகள், ஃபிஜி இந்தியர்கள்ன்னு. அந்தந்த வட்டாரத்து மக்களுக்குத் தகுந்தாப்புலே கடை கண்ணி இன்னும் மத்த விஷயங்கள்.
கஸ்தூரிப்பெண் வசிக்கும் வட்டாரத்துலெ எல்லாம் நம்ம தமிழ்க்காரர்கள்தான்னு சொல்லணுமா என்ன? இடியாப்பம் மொதக்கொண்டு பரோட்டா வரையிலே எல்லாம் ரெடி மேடு. தினமும் வேலைக்குப் போயிட்டு ரயிலடியிலே இருந்து வீட்டுக்கு வர்ற வழியெல்லாம் எண்ணெயிலே முறுமுறுன்னு வெந்துக்கிட்டு இருக்கும் வடைகளின், பஜ்ஜிகளின் வாசமோ வாசமாம். தினம் என்ன வேண்டி இருக்கு? இன்னிக்கே வாங்கவே போறதில்லைன்னு ஒரு வைராக்கியத்தோட அதைக் கடந்து வரணுமுன்னு ஒரு நினைப்போட விறுவிறுன்னு நடந்து வருவாங்களாம். மனசு மட்டும் வீட்டுக்கு,காலு மட்டும் ( எண்ணெய்க்)கடாய்க்குன்னு போய் கடை வாசலில் நிக்குமாம். சரி. இன்னிக்குத் தொலையட்டும். நாளைமுதல்.................. மாட்டேன், சத்தியமடித் தங்கம்.... கதைதான். நாலு வடைகளோட வீட்டுக்கு வந்து ஒரு டீ போட்டுக் குடிச்சால் ஆச்சு அன்னிக்குக் காந்தாயம். கூப்புடு தூரம்தான் வீட்டுக்கும் கடைக்கும். நாலு மசால் வடை பார்ஸேல்ல்ல்ல்ல்ல்,வடை ஆஜர் ஹோ.


மணி அஞ்சரை ஆச்சு. பொட் டீக்கடைக்காரரும், கனக்ஸ் & கானா பிரபாவும் கிளம்பிப் போனாங்க. இவுங்க மூணுபேரைப் பத்துன ஒரு உண்மை: (ஜவ்வரிப்) பாயாசம் பிடிக்காது. அடுத்து வந்தது 'பெண் வலைப்பதிவாளர்களின் சிறப்பு நிகழ்ச்சி. அப்படியே வீட்டுப் பெரியவர்களையும் (போனாப் போகுதுன்னு) சேர்த்துக்கிட்டோம்.க.பெ.ணின் மாமனார் & மாமியார் போடியைச் சேர்ந்தவர்கள்னு சொல்லி இருக்காங்க. என்னோட கதையும் அதேதான்.எங்க மாமியாரைத் தெரியுமான்னு அவுங்ககிட்டே கேட்டேன். ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. க.பெ.ணின் மாமனாரும், என் மாமியாரும் கஸின்ஸ்! பெரியம்மா பொண்ணும், சின்னம்மா பையனுமாம்! போச்சுரா........


பழைய போட்டோக்கள் அடங்கிய பெட்டி வெளியே வந்துச்சு. க.பெ.வின் கல்யாணத்துலே என் சிறிய மச்சினர்தான் மாப்பிள்ளைத் தோழன். தேவுடா.......... அப்ப, நான் இந்த பிப்ரவரி மாசம் போடியில் ஒரு கல்யாணத்துக்குப் போனேனே,அதுக்கு க.பெ.ணின் மா& மா வந்திருந்தாங்களா? ஆமாம்ங்கறாங்க. என்னைப் பார்த்தீங்களா? திரும்ப ஆமாம். முதல்முறையா நூத்துக்கணக்கான உறவுகளைச் சந்திச்சதில் எனக்குத்தான் இவுங்களைப் பார்த்த ஞாபகம் இல்லை. க.பெ.சொன்னாங்க, 'ஆமாங்க்கா. உங்களைப் பார்த்துட்டு வந்து என்ன சொன்னாங்க தெரியுமா? 'சேட்டுப் பொம்பளை' மாதிரிஇருக்கீங்கன்னு!' ( அதான் விழுந்துட்டான்!!!!) ஐய்யோ........ இது பாராட்டா இல்லே வேறயா?


வெளியே திண்ணை(?)யில் உக்காந்து அரட்டை. இப்ப நானும் ஸ்ரேயாவும் மட்டும். உள்ளெ இருந்து அழைப்பு.போய்ப் பார்த்தால் அடுப்பில் பணியாரம் வெந்துக்கிட்டு இருக்கு. ரெண்டுவகை தொட்டுக்கறதுக்கு. சட்னி & ஒரு வகை இனிப்புஸிரப். ஸ்ரேயா இப்ப எல்லா வீக் எண்டும் இங்கே வந்துடறாங்களாம். 'ச்சும்மா வந்துட்டுப் போகாம, சந்தர்ப்பம் கிடைச்சதுன்னு தமிழ்நாட்டுச் சமையல் கத்துக்குங்கோ'ன்னு சொன்னேன். அப்புறம் கற்ற வித்தையைக் காமிக்க,இங்கே நம்ம வீட்டுக்கு வந்து தங்கி ஒரு வாரம் ஆக்கிப் போடலாமுல்லே:-))


ராத்திரி ஒம்போது மணி ரயிலைப் பிடிச்சு டவுன் ஹாலில் இறங்கி, குவீன் விக்டோரியா பில்டிங் சுரங்கவழியாஅறைக்கு வந்து சேர்ந்தப்ப மணி பத்தைத் தாண்டி இருந்துச்சு. நாளைக்கு நம்ம வெங்கடேசனைப் பார்க்கப் போறதாத் திட்டம் போட்டாச்சு. காலையிலே 10.50 ரயிலப் புடிச்சு 'வாட்டர் ஃபால்ஸ்' லே இறங்கணும். கைவசம் இருப்பது 12 மணி நேரம். குட் நைட்.


ஆங்...... சொல்ல மறந்துட்டேனே...க.பெ. வீட்டுலே நம்ம வீடு போலவே எங்கெங்கும் யானைஸ் & புள்ளையார்ஸ்.எனக்கு வச்சுக் கொடுத்ததும் ஒரு யானைதான். அருமை. கசங்காமத் தூக்கிக்கிட்டு வந்தேன்.


தொடரும்......

Friday, October 20, 2006

ஜனதா வண்டியும் சிங்கார வேலனும் (A t d - பகுதி 1)
A t d = Across the ditch


ஆங்கிலம் - தமிழ் அகராதியைப் பார்த்தப்ப 'டிச்'சுக்குச் சாக்கடை, கால்வாய்ன்னு போட்டுருந்துச்சு.அய்யே...... சாக்கடைன்னா நல்லவா இருக்கு? சமுத்திரமுன்னு வச்சுக்கலாம்.இல்லே? இங்கே லோகல் ஸ்லாங்லே பக்கத்தூரு ஆஸ்தராலியாவை இப்படித்தான் 'அக்ராஸ் த டிச்'ன்னு சொல்றாங்க.நாமும் ஊரோடு ஒத்து வாழ வேணாமோ? அதான் இப்படி:-)


போட்டும், நம் வருகையை அங்கே கொண்டாடவேணுமுல்லையா? முன்னதாகவே பலான பலான நாளிலே, பலான பலான ஆள் அங்கே வருதுன்னு நம்ம ஆஸி வாழ் தமிழ்மண மக்களுக்குத் தகவல் தெரிவிச்சேன். (அதானே, ஓசைப்படாமப் போய் வர்றதுக்கு நான் பைத்தியமா என்ன?)


சிட்னி சிங்காரவேலன் சந்நிதி( பெயர் உதவி ஷ்ரேயா)யில் நம் தமிழ் ம(ன)ணங்கள் ஒன்றோடொன்று கலந்து உறவாடணுமுன்னு ஒரு பிரார்த்தனை வேற பாக்கி இருந்துச்சு. மின்னஞ்சல் மூலம் நேரம், நாள் எல்லாம் குறிச்சாச்சு.புரட்டாசி மாசம், கடைசிச் சனிக்கிழமை, உச்சிகால பூஜை நேரம்.சுபயோக சுப முகூர்த்தம்.


சனிக்கிழமை பொழுது விடிஞ்சுச்சு நியூஸியிலே. காலையிலே அஞ்சரைக்கே ஏர்ப்போட்டுலே ஆஜர். அந்த நேரத்துலே கூட்டமோ நெரியுது. எல்லாம் ஜெட் ஸ்டார் உபயம். மலிவு விலை டிக்கெட். மலிவு விலையிலே எதெது அடக்கமுன்னு அப்புறம் சொல்றேனே!


திங்கக்கிழமை பள்ளிக்கூடம் திறக்குது. ரெண்டு வாரம் விடுமுறைக்கு வந்த ஆஸிக்கூட்டம் புள்ளையும்,குட்டிகளுமாத் திரும்பிப்போறாங்க. மலிவுப் பயணம்ன்றதாலே இப்படிக் கூட்டமாம். வழக்கமா ப்ளேன்லே கொடுக்கற 'உபசரிப்புகள்' ஏதும் இருக்காதுன்னு தெரிஞ்சதாலே வீட்டுலே இருந்து கொண்டு போன 'வெண் பொங்கலை' செக் இன் பண்ணதுமே தின்னுட்டு ஒரு கப்புச்சீனோவை உள்ளெ ஊத்திக்கிட்டோம். கையிருப்பு கொஞ்சம் வெஜிடபுள் சமோசாக்கள். அது அப்புறம்.


வண்டிக்குள் போக அழைப்பு வந்துருச்சு. உள்ளெ அச்சு அசல் பஸ் வண்டிதான். இதுவும் ஏர்பஸ் தானாம்:-) நசுங்கலான இருக்கைகள். கஷ்டப்பட்டு உள்ளெ திணிஞ்சுக்கிட்டோம். புள்ளையாரை வேண்டிக்கிட்டு விக்கினம்இல்லாமப்போய்ச் சேரணுமுன்னு மனசுலே கும்பிட்டுக்கிட்டு, நம்ம முன்னாலே இருக்கற வலைப்பையிலேபடிக்க எதாச்சும் இருக்கான்னு பார்த்தா............ அட! நம்மாளு இருக்கார்.
வண்டி கிளம்புச்சு, சொல்லிவச்சாப்புலேகுழந்தைங்க அழுகையை ஆரம்பிச்சதுங்க. சத்தமான சத்தம். அக்கம்பக்கத்துலே பார்த்தா, கொஞ்சம் பெரியபசங்க திங்கக்கிழமை பள்ளிக்கூடத்துலே கொடுக்க வேண்டிய பாடங்களை அடிச்சுப் புடிச்சு எழுதிக்கிட்டு இருக்காங்க.ரெண்டு வாரம் குஜாலாப் போயிருச்சு. லாஸ்ட் மினிட் அர்ஜெண்ட்?


நம்மூர்லே பிருந்தாவன் எக்ஸ்ப்ரெஸ்லே பயணம் போயிருக்கீங்கதானே? அதையே ப்ளேனா மாத்திட்டாங்கப்பா!மலிவு டிக்கெட்டாமே. குடிக்கத் தண்ணி வேணுமுன்னாலும் 3 $ காசு. மெனு லிஸ்ட்டைப் பார்த்தேன். காபி, சாயாதண்ணி, ஜூஸ் எல்லாமே ஒரே விலை.( எதைக் குடிச்சா என்ன?) அப்புறம் லாலி ஒரு சின்னப் பொதி. அதுக்கும்இதே காசு. அடப்பாவிங்களா? படத்தை வேற போட்டுருக்கான். பசங்க ச்சும்மா இருக்குமா? லாலி அமோக விற்பனை!


மெனுவிலே அடுத்ததாக நூடுல்ஸ் சூப்! கப்புலே நூடுல்ஸைப் போட்டு ஆளுங்க முன்னாலே வச்சுட்டு அதுலே கொதிக்கிற தண்ணியை ஊத்துதுங்க. சூடு ஆறும்போது நூடுல்ஸ் வெந்துருமாம்! படம் எதாச்சும் பார்க்கணுமா? அதுக்கும் 10 $வாடகை கொடுத்தா ஒரு ச்சின்ன டிவிடி ப்ளேயர் சீட்டுக்கு வருது. ஒரு படம் தருவாங்களாம். ஒரே வித்தியாசம் என்னன்னா நம்ம ரயிலிலே காபி, டீ, வடைன்னு கூவிக்கிட்டு வருவாங்க. இங்கே அந்தக் கூவல் இல்லை! கிஃப்ட் ஷாப் இருக்கு. அதை இன்னும் கொஞ்ச நேரத்துலே மூடிடப் போறொமுன்னு ஒரு பயமுறுத்தல் வேற.


நம்ம மக்கள்ஸ் கில்லாடிங்கப்பா. எல்லாரும் கையிலேயே கட்டுச்சோறு மூட்டையும் கொண்டு வந்துருந்தாங்க.ஒவ்வொண்ணாத் தின்னு முடிக்க முடிக்க அந்தக் குப்பையை வாங்கறதுக்கு விமானப் பணி நபர்கள் ஸீட் ஸீட்டாநின்னு நின்னு போறதும் வாறதுமா இருந்தாங்க.


சமோஸாப் பொதியை திறந்தவுடன் பக்கத்துலே ஆள் வந்துருச்சு, பேப்பர் நாப்கினை வாங்க. அட..... தின்ன விடுங்கப்பா. வியாபாரம் நடக்கற ஜரூரைப் பார்த்தா பேசாம நம்ம சமோசாவை ரெண்டு டாலர்னு வச்சு வித்துருக்கலாம். ஹூம்...அடுத்தமுறை இதுலே வர்றதா இருந்தா சமோசா கொண்டு வந்து டிக்கட் காசைத் தேத்திறணும்:-)


காலையிலே 6.50க்கு ஏறுனோம், 7.10க்கு இறங்குனோம். நமக்கும் அவுங்களுக்கும் இப்போ 3 மணி நேர வித்தியாசம் இருக்கு. இறங்கும்போது ஏர்பிரிட்ஜ் கிடையாது. எங்கியோ ஒரு மூலையிலே வண்டியை நிறுத்திட்டு படி வழியா இறங்கி, பஸ்( நிஜமான பஸ்) லே ஏத்தி ஏர்ப் போர்ட்லே கொண்டு வந்து கொட்டுனாங்க. பயணத்துலே ஒவ்வொரு நிமிஷத்துலேயும் ' நீங்கள் அனுபவிப்பது மலிவு விலை டிக்கெட். சகாயக் கட்டணம்'னு உணர்த்திக்கிட்டே இருந்தாங்க.


இமிக்ரேஷன் லைன், லைனா அது? ஒரு ஒழுங்கே இல்லாம இங்கே அங்கேன்னு நடுநடுவிலே ஆளுங்க வந்து சேர்ந்துக்கற மாதிரிஇருக்கு. ஒரே கூட்டம். நமக்குத்தான் 4 பேருக்கு மேலே இருந்தாலே கூட்டமாச்சே. இங்கே என்னன்னா நிஜமான கூட்டம். ஒரு வழியா வெளியே வந்து டாக்ஸி பிடிச்சு தங்கற இடத்துக்குப் போனோம். டாக்ஸியிலே நாட்டு/வீட்டு நிலவரத்தைச்சொல்லிக்கிட்டு வந்தார் பங்களாதேசி ட்ரைவர். தன்னுடைய தகப்பன் சொன்ன பெண்ணைக் கட்டிக்காமப் போயிட்டமேன்னு ரொம்பவே வருத்தப்பட்டார். பொண்ணு இங்கத்துப் பொண்ணான்னு கேட்டேன். இல்லையாம் . ஊர்லேதான் பொண்ணு எடுத்தாராம். ஊர்லேதான் கல்யாணம் ஆச்சாம். ஆனாலும் அது அப்பன் சொன்ன பொண்ணு இல்லையாம்! ( வேறயார் சொல்லி இருப்பாங்க?)ரெண்டு புள்ளைங்க இருக்காம், ஆறும் நாலுமா. கலாச்சாரம்(???) சரியில்லைன்னு ஊருக்குப் போயிரலாமுன்னு நினைச்சா, வீட்டம்மா வரமாட்டேங்குதாம். ஹூம்... அப்பன் சொன்ன பொண்ணை.................


சனிக்கிழமை காலையிலே எட்டரை மணிக்கே பப் வாசல்லே இளைஞர், இளைஞி கூட்டம். அதைவேறக் காமிச்சுப் புலம்பிக்கிட்டே வந்தார். நம்ம ரிலிஜனுக்கெல்லாம் சரிப்படாதுன்னார். நீங்க என்ன ரிலிஜன்னு கேட்டேன். முஸ்லீம்னுசொன்னார். இப்ப நோம்பு காலமாச்சே, நோம்பு உண்டான்னு கேட்டேன். ஆமான்னு சொன்னார். தீபாவளி, ரம்ஜான் எல்லாம் எப்பவுமே ஒரு நாலு நாள் வித்தியாசத்துலேதானெ வருது? இறங்குறப்ப அவருக்கு ரம்ஜான் வாழ்த்துக்களைச் சொல்லிக்கிட்டேன்.


அறைக்குப்போய் குளிச்சு உடை மாத்தி, கொஞ்சம் டிபன் காஃபி முடிச்சுக்கிட்டு குவீன் விக்டோரியா பில்டிங்லேஇருக்கற என்னோட ஃபேவரிட் கடிகாரத்தை ஒரு நோட்டம் விட்டுட்டு, டவுன் ஹால் ஸ்டேஷனுக்குள்ளெ நுழைஞ்சு டிக்கெட் வாங்கிக்கிட்டு ப்ளாட்பாரத்துக்குப் போனோம். என்னவோ அமெரிக்கா ஞாபகம் வந்துக்கிட்டே இருந்துச்சு.


'மழை'யுடன் போட்டத் திட்டப்படி 10.50 ரயிலைப் பிடிச்சு 'பரமட்டா ஸ்டேஷன்'லே இறங்கியாச்சு. வெளியே வந்தாநம்ம மழையும், கஸ்தூரிப்பெண்ணும், அவுங்க மறுபாதியும் நமக்காக வெயிட்டிங். வரவேற்பு, அறிமுகம் எல்லாம் ஆச்சு.அங்கே இருந்து ஒரு பத்து நிமிஷ ட்ரைவ். இதோ சிட்னி சிங்காரவேல(ர்)ன் கோயில். வெளியே இன்னொரு ச்சின்னக் கூட்டம்.இருந்த மூணு ஆட்களில் கானாபிரபாவை அடையாளம் தெரிஞ்சுக்கிட்டேன். மத்தவங்க பொட் டீக்கடைக்காரர், பக்திப்பூக்கள்,மினி நூலகம் எல்லாம் வச்சுருக்கற கனக்ஸ் ஸ்ரீதரன்.


கோயிலுக்குள்ளெ நுழைஞ்சோம். கிட்டத்தட்ட 300 பேருக்கு மேல் இருப்பாங்க. டிசைன் டிசைனாப் புடவைகள். நம்ம புள்ளையாருக்குப் பூஜை நடந்துக்கிட்டு இருக்கு. பார்த்தீங்களா எப்படி'டாண்'னு 'யானை' முகத்தோன் டைமுக்குப் போயிட்டேன்!


புள்ளையார், சிவலிங்கம், சிங்காரவேலன்ன்னு வரிசையாப் பூஜைகள் நடந்துச்சு. ஒவ்வொரு சந்நிதியிலும் பூஜை நடக்கும்போது கூட்டம் முழுசும் அங்கே. எல்லாம் இந்தப்பூஜை முறைக்கு பழக்கப்பட்ட மக்கள்ஸ். அங்கங்கே மொத்தக்கூட்டமும் அலை அலையாய் இடம் பெயர்ந்து போனாங்க. கோயில் அருமையா இருக்கு. ஒரு பிரமாண்டமான ஹால். எல்லா சந்நிதிகளும் பக்கம்பக்கமா. ஹாலின் வலது பக்கம் உற்சவ மூர்த்திகள்.ஐம்பொன் விக்கிரகங்கள். பளபளான்னு ஜொலிப்பு. அவுங்களுக்கு முன்னாலே ஒரு சின்னப் படையல். படையலின் மத்தியில் தட்டு நிறைய 'வடை'கள்.


பரவாயில்லை. வலைப்பதிவர் சந்திப்புலே போண்டாவுக்கு மட்டுமா அனுமதி?


தொடரும்............


அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.

Thursday, October 19, 2006

எவ்ரிடே மனிதர்கள் -20 இந்திரா காந்தி

இந்திரா காந்திக்கு ஆஸ்த்துமா. இன்னிக்குக் கொஞ்சம் இழுப்பு கூடுதலாவெ இருக்காம். அடடா.... சரி, போய்ப் பார்த்துட்டு வரலாமுன்னு போனேன். பக்கத்து வீடுதானே?


ரொம்பக் குறுகலான மாடிப்படி. ஏந்தான் இப்படிக் கட்டி இருக்காங்களோ? இருட்டு வேற.தடுமாறிகிட்டே ஏறுனேன். மேல் படிகிட்டே நெருங்கும்போதே 'ஹ்ஙே ஹ்ஙே'ன்னு சத்தம்.பதறிக்கிட்டு உள்ளெ ஓடுனேன். என்னப் பார்த்ததும் 'சட்'னு கட்டிலிலே இருந்து எழுந்தாங்க.


குண்டுமில்லாம ஒல்லியாவும் இல்லாம நடுவாந்தரமான உடம்பு. தோளைத் தொடும் சுருட்டை முடி கம்பிகம்பியா பரந்துருக்கு. அதுவும் வலியிலெ படுத்துப் புரண்டதுலே இன்னும் 'பம்'னு ஆகியிருக்கு.


"வெறும் ஸ்வாசமுட்டல் தன்னே....பேடிக்கண்டா.... பதிவா.........."


அடக்கடவுளே! இப்படி இழுக்குது. ஆனா " ச்சும்மா மூச்சுத்திணறல்தான்.
பயப்படாதே.வழக்கமா வர்றதுதான்" ன்னு சொல்றாங்களே.
ம்......... அதுலேயும் உண்மை இருக்கு போல. "ஆஸ்த்துமாக் காரனுக்கு அழிவில்லே'ன்னு ஒரு பழமொழிஇருக்குல்லே? அதான் எல்லாரும் வேலைக்கு, பள்ளிக்கூடத்துக்குன்னு கிளம்பிப் போயிட்டாங்க.
வீட்டை சுத்திப் பார்வையை ஓட்டுனேன். பெரூசா ஒரு அறை. ஹால்ன்னே சொல்லலாம். அதுலெயேஒரு பக்கம் மேஜை ஒண்ணு போட்டு கேஸ் அடுப்பு உக்கார்ந்துருக்கு. அதுக்கு அந்தண்டைப் பக்கம் இருக்குற மோரியிலெ பாத்திரங்களா இறைஞ்சு கிடக்கு. இந்தப் பக்கம் ரெண்டு கட்டிலுங்க தலையும் தலையும் ஒட்டுறமாதிரி கிடக்கு. பின் பகுதியிலே இன்னுமொரு மாடிப்படி. ச்சும்மா பாக்கறதுக்கு ஏணிமாதிரி இருக்கு. மேலே இருந்து பளிச்சுன்னு சூரியன் அடிக்குது.


என் கண்ணு போற போக்கைப் பார்த்துட்டு, மேலே ஒரு கட்டில் போட்டுருக்கு. ஷெரீபோட இடம்ன்னுசொன்னாங்க. அட! வெளியே இருந்து பார்க்கும்போது நம்ம வீட்டுக் கூரை உயரம்தான் இருக்கு இந்த வீட்டுக்கும். இங்கே மட்டும் எப்படி மேலெ ரூம்? ஏறிப்போய்ப் பாருங்கன்னு சொல்லி வாய்மூடுறதுக்கு முன்னே அந்த ஏணியிலே கடகடன்னு ஏறிட்டேன். பத்துப்படி இருந்தாலெ ஜாஸ்த்தி. மேலே உயரம் ரொம்பக் குறைஞ்ச இடம். 'அடிமைப்பெண் எம்ஜிஆர்' மாதிரிதான் நிக்கணும், நடக்கணும். அங்கெ இருந்தஒரு மரச்சட்டம் போட்ட, வெள்ளை நாடாவுலே பின்னி இருந்த கட்டிலும், பக்கத்துலெ இருந்த ஸ்டூலும் எதோ பொம்மை வீட்டுக்குள்ளெ பார்க்கறது போலத்தான் தெரிஞ்சது. மேல் படிக்கட்டுலேயே நின்னுபார்த்துட்டு இறங்கிட்டேன்.


பாத்திரம் தேச்சுக் கொடுக்கவான்னு கேட்டேன். 'அதெல்லாம் வேணாம். அடுத்த வீட்டுலெ வேலை செய்யும் பொண்ணை கொஞ்சம் இங்கே வரச்சொன்னேன்னு சொல்லிருங்க, நீங்க கீழே போகும்போது' ன்னுட்டாங்க.


நாலு புள்ளைங்க. மூத்தது ரெண்டும் ஆண், கடைசி ரெண்டும் பொண்ணு. பெரியவனுக்கு 12 வயசு. அவந்தான் அந்த 'மச்சு'லெ இருக்கறவன். ரெண்டாவது பையன் பயங்கர வாலாம். சமாளிக்க முடியலைன்னு அம்மா வீட்டுலெ விட்டுருக்காங்க. உள்ளூர்தான். பொண்ணுங்க ரெண்டும் ஏழும், அஞ்சும் வயசுலே.


வசதியான குடும்பத்துப் பொண்ணுதான். ஆனா வீட்டுக்கு மூத்தது. அடுத்தடுத்து தம்பி, தங்கைன்னு ஆறுபேர்.அதனாலெ படிக்க வைக்கலை. வீட்டுலே மத்த புள்ளைங்களைப் பார்த்துக்கணுமே. போலியோ வந்து ஒரு கால் கொஞ்சம் வளைஞ்சு ச்சூம்பி இருக்கும். புடவையில் ஒண்ணும் தெரியாதுதான். ஆனா நடக்கறப்ப லேசா விந்தி விந்தி.........


கல்யாணம் கட்டுனதும் சொந்தத்துலெதான். அப்பாவோட சொந்தம். அதுனாலெயே அவுங்க அம்மாவுக்கு அவ்வளவா மருமகனோடு பிரியம் இல்லையாம். மருமகனுக்கு சீர் செனத்தியாத் 'தான்' நடத்திக்கிட்டு இருந்த ஓட்டல்களில்ஒண்ணைக் கொடுத்தாரு மாமனார். அதை அவர் வச்சுப் படைக்கலை. எல்லாம் போச்சு. கொஞ்ச நாள் இப்படி அப்படியா இருந்து இன்னொருக்கா செலவு பண்ணி அதையே நல்லா சீராக்கிக் கொடுத்தார். அதுவும் போச்சு. வியாபாரமுன்னா கவனம் வேணுமுல்லே? இப்ப இன்னொரு ஓட்டலிலே மேனேஜரா( அப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்கார்) இருக்கார்.
அங்கே ஓட்டலுக்கு அன்னன்னிக்கு வேண்டிய சாமான்களை இவரே போய் மார்கெட்லே பார்த்து நல்லதா வாங்குவார். பத்து மணிக்குத்தான் கிளம்புவார். அவரோட சைக்கிள் நம்ம வீட்டு மாடிப்படி வளைவிலெதான் நிக்கும்.சிலநாள் நம்ம இ.கா( இந்திரா காந்தி)யும் அவர் கூடவே போவாங்க. வீட்டு சாமானெல்லாம் வாங்கிக்கிட்டு ஒரு ஆட்டோவுலே வந்துருவாங்க.


அருமையா சமைப்பாங்க. என்னைப்போல ஒரு கறி, ஒரு குழம்புன்ற கதையே இல்லை. அஞ்சாறுவகைதான். பக்கத்து வீடாச்சா.... அவுங்க பால்கனி வெரந்தாவும், நம்மதும் ஒட்டுனாப்போல இருக்கும். ச்சின்னக்கிண்ணத்துலே வச்சுக் கையை நீட்டுனாப் போதும். நானும் விசேஷ நாளுன்னா இப்படித் தான் பலகாரங்களைஅனுப்புவேன். சம்பிரதாயம் பார்த்துக்கிட்டு அங்கே கொண்டு கொடுக்கற வேலையெல்லாம் ஆவாது. போனா...நாலஞ்சு குடும்பங்களைத் தாண்டிப் போகணும். ஒருத்தருக்குக் கொடுத்து ஒருத்தருக்குக் கொடுக்கலைன்னா நல்லா இருக்காதுல்லையா? அதான் இந்த 'ரகசிய உடன்படிக்கை':-)))


வீட்டுக்காரர் சரியா இல்லையேன்னு உள்ளூக்குள்ளே கவலை. வீட்டுச்செலவுக்கு முக்காவாசி அம்மா வீட்டுலே இருந்து வர்ற உதவிதான். பிள்ளைங்க நாலு ஆயிருச்சே, எப்படி வளர்க்கப் போறொம், பெருசாக ஆக செலவு கூடுமேன்னு. இதுலே அப்பப்ப இப்படி ஆஸ்த்துமா அட்டாக். தானே ஓய்வெடுத்துக்கிட்டு சரியாயிருவாங்க. சீக்கு பழகிப்போனதாலெ யாரும் கண்டுக்கறதில்லை. படுத்துக்கோன்னு சொல்லிட்டு அவுங்கவுங்க வேலையைப் பார்க்கப் போயிருவாங்க. தம்பிங்களுக்குக் கல்யாணம் பேசிக்கிட்டு இருக்காங்க. பொண்டாட்டிங்க வந்தா இப்பக் கிடைக்கிற உதவிக்கு பங்கம் வருமோன்னு ஒரு உறுத்தல். என்கிட்டே மட்டும் கவலைகளைப் பகிர்ந்துக்குவாங்க.


உடம்பு நல்லா இருந்தா ஆளைக் கையிலே பிடிக்கமுடியாது. கலகலன்னு பேசுவாங்க. மத்யானமா நம்ம வீட்டுக்கு வந்து மாடிப்படியிலே உக்காருவாங்க. வர்றப்பயே 'நியூஸ்' கொண்டு வருவாங்க. எல்லாம் 'தாஜா கபர்'தான்! பக்கத்துலே இருந்து பார்த்தமாதிரி சம்பவங்களை விவரிப்பாங்க. எல்லாம் அவுங்க புருஷன், அங்கே சிட்டிக்குள்ளே நடந்ததாக(???)சொன்ன கதைகள்!!!!! சொல்ற கதையிலே(??) முக்காவாசியை தாராளமாத் தள்ளுபடி செஞ்சுறலாம்.கீழே வீட்டுக் குடித்தனக்காரர்கள் எல்லாம் இந்த 'சபை'யில் வந்து கூடுனாலும் ஒரு மாதிரி நமுட்டுச் சிரிப்போடு ( முகத்தை ஒரு பக்கம் மறைவாத் திருப்பிக்கிட்டுத்தான்) கதை கேப்பாங்க.


நம்ம பங்குக்கு ச்சும்மா இருக்க முடியுமா? நம்ம வீட்டுலே தினமும் வாங்குற பேப்பர்லே (த டைம்ஸ் ஆஃப் இண்டியா)வந்த நியூஸை எடுத்து விடுவேன். அதெல்லாம்தான் முந்தியே தெரியுமேன்னு ஒரே அடி அடிச்சு விடுவாங்க நம்ம இ.கா.:-))


மக்கள்ஸ் ஏன் இவுங்க பேச்சை, விருப்பம் இல்லாட்டியும் பொறுமையாக் கேக்கறாங்களா? ஒண்ணாவது டைம் பாஸ். ரெண்டாவது அரிசியிலே கல் பொறுக்கிக்கிட்டு, காய்கறி நறுக்கிக்கிட்டு, பச்சைப்பட்டாணி உறிச்சுக்கிட்டுக் கை வேலையில் இருக்கும்போது களைப்புத் தெரியாம இருக்க ரேடியோ (டிவி பரவலாவராத காலம்)மாதிரி ஒரு பொழுது போக்கு. எல்லாத்தையும் விட முக்கியமானது இவுங்கதான் நாங்க இருந்த வீட்டுக்குச் சொந்தக்காரரோட மகள்.


நாங்க ஊரைவிட்டுப் போயி எட்டு வருசம் கழிச்சு, ஒரு விடுமுறையிலே அந்த ஊருக்குப் போயிருந்தொம். நம்ம மக்கள்ஸ் எப்படி இருக்காங்கன்னு பார்க்க அங்கே போனோம். பசங்க பெரியவங்களா இருந்தாங்க. ச்சின்னப்பொண்ணு ரொம்பவே அழகு. பெரியவளும் நல்லாவே இருந்தாள். மூத்த பையன் காலேஜ்லே படிக்கிறானாம். இந்த வருசம் கடைசியாம்.
நாலு வீடு தள்ளி நமக்குத் தெரிஞ்ச இன்னொரு பொண்ணு துணிங்க தச்சுக் கொடுக்குது. எக்கச்சக்க பிஸினெஸ்ஸாம். அதனாலெஅந்தப் பொண்ணு வெட்டிக் கொடுக்கற துணிகளை இவுங்க 'அவுட் ஒர்க்கர்'ரா தச்சுத் தராங்களாம். கையிலே நாலுகாசு தாராளமாப் புழங்குதாம். வீட்டுலெ கலர் டிவி முழங்கிக்கிட்டே இருக்கு. அதுலே ஒரு கண்ணும், மெஷின்லேஒரு கண்ணுமா நேரம் போயிருதாம். முந்தி மாதிரி மாடிப்படி சபை எல்லாம் கூடுறது இல்லையாம். யாருக்கு நேரம் இருக்கு? இப்பதான் 24 மணி நேரம் டிவி வந்துருச்சேன்னாங்க இ.கா.


இந்த தொலைக்காட்சி வந்ததுலெ இப்படி அயல்பக்கத்து ஜனங்களோட நட்பா இருந்து பேசற பழக்கம் கூடப்போயிருச்சு பார்த்தீங்களா? இது நல்லதா இல்லெ கெட்டதா?


'எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரி'யா இருக்காங்களேன்னு, இவுங்களுக்கு இந்திரா காந்தின்னு பேர் வச்சதுகூட நாந்தான்.


அடுத்த வாரம்: ராமன்


நன்றி: தமிழோவியம்

Friday, October 13, 2006

பூப்பூக்கும் ஓசை????


மக்கள்ஸ்,


டீச்சர் வகுப்பை விட்டு வெளியே ஒரு சின்ன வேலையாப் போகும்போது எதாவது ஒருபாடத்தைப் படிக்கும்படி சொல்லிட்டுப் போவாங்க.


எங்க டீச்சர் எப்பவும் ரெண்டு மூணு கணக்கைக் கொடுத்துட்டு செஞ்சு வைக்கணுமுன்னு சொல்லிட்டு ஒரு பத்து நிமிஷம் எஸ்கேப்.

இதெல்லாம் அந்தக் காலப் பள்ளிக்கூடங்களில்.

இப்ப?

இந்தப் படத்திலிருக்கும் பூ என்ன பூன்னு கண்டு பிடிச்சு வையுங்க.நான் ஒரு அஞ்சு..........க்கு வெளியே எட்டிப் பார்த்துட்டு வந்துடறேன்.

இன்னிக்கு தாவரயியல் வகுப்பா இருந்துட்டுப் போகட்டுமே:-)

Tuesday, October 10, 2006

எவ்ரிடே மனிதர்கள் -19 மீனாட்சியம்மா

"அங்கோட்டா இங்கோட்டா?"

" அங்கோட்டுதன்னே"

கையிலே இருந்த ஒரு ச்சின்னப்பையிலே இருந்து எடுத்த ரூபாய் நோட்டுக்களை எடுத்துஅந்த மேஜையில் வச்சாங்க மீனாட்சியம்மா. இருநூறு ரூபாய். கையோடு கொண்டு வந்திருந்த பாஸ்புக்லே பதிஞ்சதும், ரெண்டு நிமிஷம் அங்கே இருந்த இன்னொருத்தர், (மேனேஜரா இருக்கணும்)கூடப் பேசிட்டுக் கிளம்பினாங்க. முதல்லே அந்தக் கட்டிடத்தை ஒரு வீடுன்னுதான் நினைச்சேன். உள்ளே போனபிறகுதான் தெரிஞ்சது அது ஒரு பேங்க்ன்னு.
ஊரும் ச்சின்ன ஊர்தானே. அதுக்கேத்த மாதிரி ஆடம்பரம், ஆர்ப்பாட்டம், அலங்காரம்னு எதுவும் இல்லாத ஒரு பேங்க். நான் இந்த ஊருக்கு வந்தபிறகு பார்த்த முதல் பேங்க்.


வீட்டைச் சுத்தி இருந்த பரம்பில் தெங்கும், கமுகுமா இருந்துச்சு. அஞ்சாறு பலாவும், ரெண்டு மாவும் கூட இருந்தது. மாசம் ஒருக்கா ஒருத்தர் வந்து தேங்காய் பறிச்சுப் போட்டுட்டுப் போவார். ஏழெட்டு மாசத்துக்கு ஒருதடவை அடைக்கான் எடுக்கவும் ஒரு ஆள் வரும். அந்தத் தேங்காய்கள் எல்லாம் அப்படியே வீட்டுஉள் முற்றத்துலே கிடக்கும். அதுலே இருந்துதான் சமையலுக்குத் தேங்காய்கள் எடுத்துக்குவோம். தேங்காய் வாங்கிக்கற வியாபாரிகள் எப்பவாவது வந்து விலை பேசி எடுத்துக்கிட்டுப் போவாங்க. அப்பவும் ஒரு ஆள் வந்து அந்தத் தேங்காய்களை உரிச்சுக் கொடுப்பார். அந்த மட்டைகளை எல்லாம் காய வச்சுருவாங்க. அது பாட்டுக்கு அங்கே காய்ஞ்சுகிட்டே இருக்கும். தேவையானப்ப அடுப்பு எரிக்க நாலைஞ்சா வீட்டுக்குள்ளெ வரும்.


எல்லாமெ ஒரு ஒழுங்கில் நடந்துகிட்டு இருந்துச்சு அந்த வீட்டுலே. மீனாட்சி அம்மாவோட கணவர் இறந்து போயே 18 வருஷமாச்சாம். கடைசிப் பையனுக்கு 1 வயசாம் அப்ப. அவனுக்கும் மூத்ததா ஆறு பேர். அஞ்சு பொண்கள். ரெண்டுஆண்கள்னு குடும்பம். மூணு பொண்களுக்குக் கல்யாணம் ஆகி இருந்துச்சு. மூத்த பெண் ரொம்ப சாது. டீச்சரா இருந்தாங்க. அடுத்தவங்க ஒரு யூனியன் லீடரைக் கட்டி இருந்தாங்க. அவுங்களும் ஒரு பேக்டரியிலே வேலை. கம்யூனிஸ்ட்டு பார்ட்டியிலே நேதாவு. மூணாவது பெண், அம்மா வீட்டுக்குப் பக்கத்து நிலத்துலே வீட்டைக் கட்டிக்கிட்டு இருந்தாங்க. அவுங்க புருஷன் மிலிட்டரியிலே இருந்து ரிட்டயர் ஆனவர். மணிமணியா ரெண்டு பிள்ளைங்க.


நாலாவது பெண் மெட்ராஸ்லே நர்ஸ் வேலை பார்க்குது. கடைசிப்பெண் நர்ஸ் வேலைக்குப் படிச்சுக்கிட்டு இருக்கு.பெரிய மகனும் ஒரு பாக்டரியிலெ வேலை செய்யறார். கடைசிப் பையன்தான் சரியாப் படிக்காம, வேலை வெட்டி இல்லாம ஊரைச் சுத்திக்கிட்டு இருந்தான். தகப்பன் இல்லாத புள்ளைன்னு செல்லம்.


பிள்ளைங்க கொடுக்கற காசுலே வீட்டுச் செலவுக்குக் கொஞ்சம் எடுத்துக்கிட்டு மத்த காசெல்லாம் தவறாம சேமிப்புக்குப்போயிரும். அதே போல தேங்காய், பாக்கு வித்த காசும் வந்த உடனே பேங்குக்குத்தான். எப்பவும் காசு 'அங்கோட்டு'த்தான், 'இங்கோட்டு' நான் பார்க்கவே இல்லை. இன்னும் ரெண்டு பொண்கள் கல்யாணத்து இருக்கே.


வெடவெடன்னு ரொம்ப ஒல்லியான உடம்பு. தலையில் பஞ்சாய் நரை. நடக்க சோம்பலே கிடையாது. காலையில் இருட்டு வெளுக்கு முன்னே எந்திரிச்சு அடுப்பைப் பத்த வச்சிருவாங்க. மொதல்லே ஒரு கட்டஞ் சாயா. கிளை அடுப்பு அது. ஒண்ணுலே ஜீரகவெள்ளம் எப்பவும் தயாரா இருக்கும். அதுக்கப்புறம் எப்ப தோணுதோ அப்பெல்லாம் ஒரு கட்டன் காபி. ஒரு அடுப்புலே கல்சட்டியிலே பருப்பை வேகப்போட்டுருவாங்க. அதுபாட்டுக்கு வெந்துக்கிட்டுக் கிடக்கும்.


மேல் அடுக்களையில் ( சமையலறையை ரெண்டு பாகமாப் பிரிக்கறது இதுதான்) ஒரு சாப்பாட்டு மேஜை. அதுலே அன்னிக்கு வந்த தினசரி மலையாள மனோரமா. கண்ணாடியைப் போட்டுக்கிட்டு ஒரு வார்த்தை விடாமப் படிப்பாங்க.நானும் மலையாளம் படிக்கக் கத்துக்கிட்டது அப்பதான். நம்ம க, ம, ன, இதெல்லாம் பார்க்க கிட்டத்தட்ட ஒண்ணுபோல இருக்குல்லே, அதை வச்சே எழுத்துக்கூட்டிப் படிக்கிறதுதான். புரியலைன்னா அம்மாகிட்டே கேட்டுக்கலாம். என்னுடைய மலையாள டீச்சர் அம்மாதான். அருமையா இங்கிலீஷ் பேசுவாங்க. சமஸ்கிரதம் படிச்சு அர்த்தமெல்லாம் சொல்லுவாங்க.
சாப்பாட்டுலே ரொம்ப நியமம். ராத்திரி சாப்பாடு அறவே கிடையாது. ஏழரைமணிக்கு ஒரு கட்டங்காப்பி. அந்தக் கப்புலேயே ஒரு கைப்பிடி அவல் போட்டுருவாங்க. காபியிலே ஊறவச்ச அவல்!!! அதோட ராச்சாப்பாடு ஓவர். ராத்திரி எட்டு மணிக்கு ரேடியோ நாடகம் கட்டாயம் கேப்பாங்க. அந்தக் காலத்துலேதான் டிவியே வரலையே. அம்மாவோடு சேர்ந்து நாங்களும் ரேடியோ நாடகத்துக்கு அடிமையாயிட்டோம்( வேற வழி? பொழுது போக்குன்னு வேற எதுக்கும்தான் நம்மகிட்டெ ஐவேஜ் இல்லையே) எட்டரைக்கு நாடகம் முடிஞ்சதும், நாங்க மேலே நம்ம போர்ஷனுக்கு வந்து சாப்பாடு. ஒம்போது மணிக்கு ஐலண்டு எக்ஸ்ப்ரெஸ் நம்ம வீட்டைக் கடந்து போகும். ரயிலைப் பார்த்துட்டுத்தான் தூக்கம்.


இந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்தது நம்ம அதிர்ஷ்டமுன்னுதான் சொல்லணும். எங்க இவர் வீடு தேடிக்கிட்டு இருந்தப்ப,அவரோட கம்பெனியிலெ ஒருத்தர் இங்கே கூட்டிக்கிட்டு வந்தாராம். மாடியிலே ஒரு பெரிய ஹால், அதுக்குப் பக்கத்துலே ஒரு ச்சின்ன நீளமான அறை. ஹாலைச் சுத்தி மூணு பக்கமும் விஸ்தாரமான வெராண்டா. மொத்த மாடியும் நமக்குத்தான். வாடகை 90 ரூபாய்ன்னு சொன்னாங்களாம். சரின்னு சம்மதிச்சுட்டார், நானும் ஊர்லே இருந்து வந்துக்கிட்டுஇருக்கேனே. மறுநாள் ரெயிலை விட்டு இறங்கியதும் நேரா இங்கே வந்தோம். தங்க ஒரு இடம் உடனெ வேணுங்கறநிர்ப்பந்தம் நமக்கு. தங்கிட்டோம். நானும் அந்த விட்டுப் பொண்ணா மாறிட்டேன். ஒரு மாசம் ஓடியே போச்சு.


அட்வான்ஸ்ன்னு ஒண்ணும் தரலை. மாசம் முடிஞ்சதும் 90 ரூபாயைக் கொண்டு போய் அம்மாகிட்டெ கொடுத்தோம்.அதுலே 50 ரூபாயை எடுத்துக்கிட்டு பாக்கியை எங்கிட்டே கொடுத்துட்டாங்க. திகைச்சுப் போயிட்டோம். 'பரவாயில்லை.50 ரூபாயே போதும். நாந்தான் வர்ற ஆளுங்க எப்படி இருப்பாங்களோன்னு பயந்துக்கிட்டு 90 ரூபான்னு சொல்லி
வச்சேன்.இதுதான் முதல்முறையா மாடி ஹாலை வாடகைக்கு விட்டது. வாடகை ஜாஸ்தின்னா, ஆளுங்க வேணாமுன்னு போயிருவாங்கல்லே'ன்னு சொன்னாங்க. இப்படி ஒரு வீட்டு உடமஸ்த்தர்.


பலாப்பழ சீஸன்லே ரெண்டு நாளைக்கு ஒரு பழமுன்னு வெட்டித் திங்கறதுதான். மத்தியானம் பகல் சாப்பாட்டுக்கப்புறம் இதுதான் வேலை. பலாக் கொட்டைகளும் அங்கே ஒரு மூலையில் குவிஞ்சு கிடக்கும். மாங்காய், பலாக்கொட்டை,பருப்பு சேர்த்து ஒரு மொளகோஷ்யம் வைப்பாங்க. ஒரு அம்பது ரூபாயை வாடகையாக் கொடுத்துட்டு, ஏதோ அந்தவீட்டுப்பொண் போல ரொம்ப உரிமையா எல்லாத்தையும் ஆண்டுக்கிட்டு இருந்தேன்.
ரெண்டு மாசத்துக்கொருதரம், குருவாயூர் கோயிலுக்குப் போய்வர்ற பழக்கம் இருந்துச்சு. நாங்களும் கூடவே ஒட்டிக்குவோம். அந்த வருஷம் வந்த வருஷப்பிறப்புக்கு எங்களுக்கு விசேஷக் கைநீட்டமும், கனி காணலும் கிடைச்சது. விடிகாலை நாலு மணிக்கு எழுப்பி, கண்ணை இறுக்கமூடிக்கிட்டு,இருட்டுலே தடவித்தடவிப் படிஇறங்கிப்போய் சாமி அலங்காரத்தைப் பார்த்தது இத்தனை வருஷத்துக்கப்புறமும் மனசுலே பச்சக்குன்னு பதிஞ்சுகிடக்கு.


அந்த ஊரைவிட்டு நாங்க வந்தபிறகு, நாலு வருசம் கழிச்சு ஒரு விடுமுறைக்குப் போனப்ப மீனாட்சியம்மாவைப் போய்ப் பார்த்தோம். கடைசி ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் முடிச்சுட்டாங்களாம். வீட்டுக்குப் புது மருமகளும்வந்தாச்சு. அம்மாவுக்கு இனிமேல் கொஞ்சம் ஓய்வுதான். கடைசிப் பையனும் எங்கியோ வேலை செஞ்சுக்கிட்டு இருக்கானாம்.


மாறாத அதே அன்போடு பேசுனாங்க. இன்னும் மெலிஞ்சு இருந்தாங்க. நடை மட்டும் மாறவே இல்லை. குடும்பத்தைகட்டிக் காப்பாத்துன நிறைவு முகத்துலே தெரிஞ்சதோன்னு எனக்கு ஒரு தோணல்.


'சேமிப்புன்றது எவ்வளோ முக்கியம்'ன்றதை நான் மீனாட்சியம்மாகிட்டேதான் படிச்சுக்கிட்டேன்.


அடுத்த வாரம்: இந்திரா காந்தி


நன்றி: தமிழோவியம்

Friday, October 06, 2006

ரெடிமேட் பகுதி 16


நம்ம வீட்டுக்குப் பக்கத்துலே ஒரு நீச்சல்குளம் இருக்கு. அங்கெ ச்சின்னப்பிள்ளைகளுக்கு நீச்சல் சொல்லித்தராங்கன்னு கேள்விப்பட்டு அங்கே வகுப்புலே சேர்த்தோம். வாரம் மூணு நாள். 30 நிமிஷ வகுப்பு. நாலுமாசம்இருக்கே. எதாவது செஞ்சு நாளைப் போக்கணுமா இல்லியா?


அங்கே பிள்ளைகளுக்குன்னே ஆழம் குறைஞ்ச ச்சின்ன குளம் இருக்கு. தண்ணியும் சுடுதண்ணி. சொல்லித்தர்றவர் பேர் ஜாஃப்ரி. ஆன்னா ஊன்னா 'ஸ்டேண்ட் ஸ்டில்'ன்னு கத்திக்கிட்டு இருப்பார். எட்டு பிள்ளைங்க அந்த வகுப்புலே.ஒரு புள்ளைக்குச் சொல்லித் தர்றப்ப மத்தபிள்ளைங்க கரையைப் பிடிச்சுக்கிட்டு 'ஸ்டேண்ட் ஸ்டில்'. மூணு நிமிஷம்தான்வரும் ஒவ்வொரு பிள்ளைக்கும். அடப்பாவி. இதுக்கா இவ்வளொ காசு?


நீச்சல் உடுப்பு சீக்கிரம் பாழாயிரும். தண்ணியிலே குளோரின், இன்னும் மத்த கெமிக்கல்ஸ் இருக்குல்லே. ஆறுவாரத்துமேலே தாங்காது. குழந்தை சைஸ்ன்றதாலே விலை மலிவாம். 25 டாலர். தலைக்குத் தொப்பி, கண்ணுக்குக் கண்ணாடின்னுஅது இன்னொரு செலவு. எல்லாத்துக்கும் கணக்குப் பார்க்க முடியுமா? கிண்டர்கார்டன் ஸ்கூலுக்குப் போனப்பதினம் டாக்ஸி, பொம்மை, தீனின்னு முப்பது நாப்பது டாலர் செலவாச்சுல்லையா? அதுக்கு இது எவ்வளவோ மேல்.


செப்டம்பர் முதல் வாரம் வருது மகளொட பிறந்த நாள். எந்த ஏரியா பள்ளின்னு தேர்ந்தெடுத்து அங்கே பதிவு செஞ்சுக்கிட்டோம். ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் ஏரியா எல்லை இருக்கு. அதுக்குள்ளெ நாம் வசிக்கணும். இந்த விவரமெல்லாம் இவர்கூட வேலை செய்யறவங்ககிட்டே இருந்து தெரிஞ்சுக்கிட்டு, மொதல்லே பள்ளிக்கூடத்தைத் தெரிவு செஞ்சோம். ரேஸியல் ஏற்றத்தாழ்வு இல்லாத ஏரியா நமக்கு முக்கியம். என்னதான் சொன்னாலும் நாம்வேறு இன மக்கள்தானே. நமக்கு எப்படி மத்த இனத்தைப் பார்த்தா உள்ளே பயமோ அதே பயம் அவுங்களுக்கும் நம்மைப் பார்த்தா இருக்கும்தானே? இப்பன்னா நிறைய மத்த இனங்கள் இங்கே வந்துட்டாங்க. நான் சொல்லிக்கிட்டுவர்றது 19 வருசத்துக்கு முந்தி. தமிழ்நாட்டுலெ இருந்து வந்த முதல் குடும்பம் நம்மதுதான்னா பாருங்க.


இங்கே யூனிவர்சிட்டிக்கு எப்பவும் மத்த நாடுகளிலே இருந்து படிக்கறதுக்கு மாணவர்களும், விசிட்டிங் ப்ரொபஸர்களும் வந்துக்கிட்டும் போய்க்கிட்டும் இருக்கறதாலெ, அந்த ஏரியாவுலெ இருக்கற பள்ளிக்கூடத்துலேதான் அவுங்க பிள்ளைகளும் ஆறுமாசம், மூணுமாசம்னு வரப் போக இருக்காங்க. அங்கே படிக்கிற மத்த குழந்தைகளுக்கும் வேற்றுநாட்டு பிள்ளைகளைப் பார்க்கறது பழகிப்போன விஷயம். அதாலேதான் இந்தப் பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்தோம். வீடு மாத்திக்கணுமுன்னு முடிவு செஞ்சப்ப, பள்ளிக்கூடத்துலே இருந்து ஒரு அஞ்சு நிமிஷ நடையிலே ஒரு வீடு விலைக்கு வந்துச்சு. அதையே வாங்கிட்டோம். வீடு மெயின் ரோடுலே இருக்கு. ஆஹான்னு மகிழ்ந்து போயிட்டேன். நம்மூர்லே மெயின் ரோடுலெ வீடுன்னாமதிப்பு நிறையவாச்சே.வடக்குப் பார்த்த வீடுவேற. இன்னும் சந்தோஷமாயிருச்சு. பூ மத்தியரேகைக்கு கீழே தெக்கே இருக்கற இடங்களுக்கு சாஸ்த்திர சம்பிரதாயங்கள் 'உல்ட்டா'வா இருக்குமோ? நம்மூரில் 'தெற்கே இருந்துவரும் தென்றல்' இங்கே அப்படியே 'வாடை'யாயிருது!


மகள் பிறந்தநாள் பள்ளிக்கூட 'செகண்ட் டெர்ம் ஹாலிடேஸ்'லே வருது. அதனாலே பள்ளிக்கூடம், லீவுக்கு மூடறதுக்கு ஒரு வாரம் இருக்கறப்பயே கொண்டு வந்து சேர்த்துருங்கன்னு சொல்லிட்டாங்க. நாங்களும் ஆகஸ்ட் முதல்வாரம் வீடு மாறி வந்துட்டோம். அப்பத்தான் இவரோட கம்பெனியில் கூட வேலை செய்யறவங்க சொல்றாங்க,'என்னத்துக்கு மெயின் ரோடுலே வீடு வாங்கினே? இங்கே மெயின் ரோடு வீட்டுக்கு மதிப்பு இல்லை. வீட்டை, திரும்ப விக்கும்போது கஷ்டம்'னு.


அடக் கடவுளே. இதையெல்லாம் அப்ப நமக்கு விளக்கமாச் சொல்லக்கூட யாரும் இல்லாமப் போயிட்டாங்களே(-:


இப்போ என்ன செய்யறது? ச்சின்னப் பொருளா, வேணாமுன்னா தூக்கி வீச?


அதுக்கப்புறம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. அவுங்களும் 'ஏன் மெயின் ரோடுலே வீடு வாங்கிட்டே? கார் பஸ் போற சத்தம் தொல்லை இல்லையா?'னு கேப்பாங்க. நானும் ' எங்க ஊர்லே நிறைய சத்தத்துக்குப் பழகி இருக்கோம். வீட்டிலே இருந்து பார்த்தா எப்பவும் கார் நடமாட்டம்(???) தெரியறது எனக்குப் பிடிச்சிருக்கு'ன்னு சொல்வேன். எங்க இவர்வேற அடிக்கடி வெளிநாட்டுக்குப் போயிருவார். தனியா பிள்ளையோட இருக்கறப்ப, வேறமனுஷங்களையும் பார்க்க முடியாமப் போயிட்டா எனக்கு பயம் வந்துரும். வீட்டுக்குப் பக்கத்துலே ஒரு 500 மீட்டர் தூரத்துலெ ஒரு சூப்பர் மார்கெட்டும், ஷாப்பிங் செண்ட்டரும் இருக்கு. நல்ல வசதியான ஏரியா. போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு நம்ம வீட்டுக் காம்பவுண்டு சுவரை ஒட்டி பஸ் ஸ்டாப்.


தெருவுக்கும் வீட்டுக்கும் 35 அடி இடைவெளி இருக்கு. வீட்டுக்குள்ளெ வந்துட்டோமுன்னா உண்மைக்கும் ஒரு சத்தமும் கேக்காது. கண்ணாடிவழியாப் பார்க்கும்போது போக்குவரத்து மட்டும் ஓசைப்படாம போகும். தெருவைப் பார்த்தபடி இருக்கற ஒரு சன் ரூமிலே மெஷினைப் போட்டாச்சு. வெய்யில் உறைக்கலேன்னாலும்,சூரிய வெளிச்சம் மூணு பக்கத்துலேயும் வரும்.


செப்டம்பர் வந்துருச்சுன்னா குளிர்காலம் ( இவுங்களுக்கு)முடிஞ்சு போச்சாம். ஸ்ப்ரிங் வந்துருச்சாம் துள்ளிக்கிட்டு! அதுனாலே சம்மர் யூனிஃபாரம் போடணுமாம். அதுக்கு என்ன மாதிரி இருக்கணுமுன்னு பள்ளிக்கூடத்துலேயே கேட்டு, அவுங்ககிட்டேயே துணியோட பேட்டர்ன் பேப்பர் கட்டிங் வாங்கிவந்தேன். அதைப் படிச்சா தலையும் புரியலை,வாலும்( காலும்) புரியலை. ட்ரெஸ் மேக்கிங் டெர்ம்ஸ் 'செல்வேஜ் அது இதுன்னு என்னென்னமோ இருக்கு. யாரு கண்டா அதெல்லாம்? என்ன துணின்னு மட்டும் பார்த்துக்கிட்டு கடையிலே துணி வாங்கிவந்து எனக்குத் 'தெரிஞ்சமாதிரி' தச்சுட்டேன். உண்மைக்கும் சொன்னா நம்ம தச்சதுதான் தாராளமா குழந்தை ஓடி ஆடி விளையாட நல்லா இருக்கு.அவுங்க கொடுத்த பேட்டர்ன் தச்சா மாடு விரட்டுனா ஓட முடியாது. இங்கே மாடு தெருவிலே மேயாதுன்றது வேற கதை.


ஒரு நாள் வேற எதோ வேலையா ஒரு ஷாப்பிங் செண்டருக்குப் போனப்ப அகஸ்மாத்தா ஒரு விஷயம் கண்ணுலே பட்டது. தைய்யல் வகுப்புகள் நடத்தறாங்களாம். உள்ளேபோய் என்ன ஏதுன்னு விசாரிச்சேன். அதிர்ஷடம் நம்ம பக்கத்துலே நிக்குது. நீச்சல் உடை, மாலைநேர உடுப்பு, உள்ளாடைகள், காஷுவல் ட்ரெஸ்ன்னு பலவிதம். ஒவ்வொண்ணுக்கும் ஒரு தனி வகுப்பு.பகலிலே வகுப்புக்குப் போக நேரம் இல்லைன்னாலும் பரவாயில்லை. மாலைநேர வகுப்பு அங்கெ இருக்கு.


மொத்தம் நாலே மணி நேரம்தான். ரெண்டேரெண்டு நாள். சாயந்திரம் ஏழரை முதல் ஒம்போதரை வரை. 'நீச்சல் உடை' மாலை நேர வகுப்புக்கு வரேன்னு சொன்னேன். அட! என் வாழ்க்கையிலேயே நான் செஞ்ச ஒரு நல்ல காரியம். மகளோட நீச்சல் வகுப்பு தொடர்ந்துக்கிட்டு இருந்துச்சு.


பள்ளிக்கூடத்துக்குப் போகும் நாளும் வந்துச்சு. அங்கேபோய் ப்ரின்ஸியைப் பார்த்துப் பேசினோம். இன்னும்ஒரு டெர்ம்தான் வருஷமுடிவுக்கு இருக்கறதாலே 'நியூ எண்ட்ரெண்ட்ஸ்' னு ஒரு வகுப்புலே மகளைப் போடுவாங்களாம். புதுவருசம் பிறந்து பள்ளிக்கூடம் திறந்த பிறகு 'ஜே ஒன்' ஜூனியர் வகுப்புக்கு மாத்துவாங்களாம். அவுங்களே எங்களை வகுப்பறைக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அஸிஸ்டண்ட் ப்ரின்ஸிதான் அந்த வகுப்புக்குடீச்சர். அவுங்களைப் பரிச்சயப்படுத்தினாங்க. இதுவரை அந்த வகுப்புலே 23 பிள்ளைங்க இருக்காங்க. மகள் 24வது.பேசி முடிச்சுட்டு, மகளை வகுப்புக்குள்ளே கொண்டு போனாங்க. நானும் கூடவே போனேன். அங்கே இருந்த மத்தபிள்ளைகளிலே ஒரு முகம் எனக்கு ரொம்பப் பழகின முகம்.
யார் தெரியுமா?


சாக்ஷாத் நம்ம ஜோஷுவாதான்.


படம்: முதல் நாள் பள்ளி.

Wednesday, October 04, 2006

நான் பெற்ற இன்பம்.

கண்ணபிரானோட திருமலை பிரம்மோத்ஸவம் படிச்சுக்கிட்டே ஒரு புறம்நவராத்திரி விழாவையும் கொண்டாடிக்கிட்டே இருந்தேன். திடீர்னு ஒருநாள்அகஸ்மாத்தாப் பார்த்தப்ப ஒரு ஒளி வீட்டுக்குள்ளே.


இந்த வீட்டுலே இது ரெண்டாவது நவராத்திரி. போனவருசம் இதுபோல ஒண்ணு வரவே இல்லை.


மறுநாளும் அதெ சமயத்துக்குக் காத்திருந்தேன். ஒண்ணும் இல்லை. இப்படியே அடுத்து வந்த சில நாட்களும்........ ஊஹூம்


ஏமாத்தமா இருந்துச்சு. வீட்டுக்குள்ளெ போனா அங்கே பெருமாளோட படத்துலே கால் பக்கம் இன்னொரு ஜொலிப்பு.


டிஜிட்டல் கேமெரா வந்தப்பிறகு எல்லாம் ரொம்ப வசதியாப் போச்சு இல்லை?


எப்பவும் க்ளிக் க்ளிக்தான்:-))))


ரொம்ப சாதாரண நிகழ்வுதான்னு அறிவு சொன்னாலும் மனசு அதைக் கேட்டாத்தானே?


கிடைச்ச திருப்தியையும், சந்தோஷத்தையும் உங்களோடு பகிர்ந்துக்கலாமுன்னு இந்தப் பதிவு.

Tuesday, October 03, 2006

லேடீஸ் டே அவுட்.ரொம்ப நாளா எங்கேயும் போகாத ஒரு உணர்வு. (கொலுவுக்குப் போய் வந்தது கணக்கில் சேர்த்தி இல்லை)


தோழியுடன் ஒரு ஊர்சுற்றல் முடிவாச்சு. பத்துமணிக்கு வந்துடறேன்னு சொல்லிஇருந்தாங்க.


சீக்கிரமா 'எட்டு மணிக்கெல்லாம் எழுந்து' , கோபாலகிருஷ்ணனுக்குப் 'பணிவிடைகள்' செஞ்சு, குளிச்சு, சாமி கும்பிட்டுட்டு அகஸ்மாத்தா ஜன்னலுக்கு வெளியெ பார்வையை ஓட்டுனாஒரு தெரிஞ்ச உருவம், தெருவிலெ நடைபாதையில். அப்ப யாரோ ஒரு அம்மா நம்ம வீட்டைக் கடந்துபோறாங்க. உருவம் பின் தொடந்து போறதைப் பார்த்ததும் வெளியே பாய்ஞ்சு போனென்.


'Ollie' ன்னு குரல் கொடுத்ததும் ஆலிவர் திரும்பிப் பார்த்தான். அந்த அம்மாவும் தன்னை யாரோ தொடர்ந்து வாராங்கன்னு தெரிஞ்சதும் குனிஞ்சு பார்த்துட்டு என்னை நோக்கி வந்தாங்க, கூடவேஆலிவரும். கிட்டே வந்தவுடன் என்னை நோக்கித் தாவினான் ஆலிவர். குறும்புக்காரன், என் முகத்தை ஒரே நக்கு! யக்.


அடுத்தவீட்டு வேலியோரம் நின்னு, 'ஜொனத்தன், காதரீன்'ன்னு தர்மக் கூச்சல் போட்டேன். ஊஹூம்.ஒரு அனக்கமும் இல்லை. வேறவழி இல்லாம அங்கே அவுங்க வீட்டுலெ கொண்டு விடலாமுன்னா காலிலெ செருப்பும் இல்லை. ஆலிவரோடு உள்ளெ வந்தேன் செருப்பைத் தேடி. கோபாலகிருஷ்ணனைப் பார்த்ததும் ஆலிவருக்கு பயங்கர சந்தோஷம். பாவம் இந்த ஆலிவர். எப்பவும் யாரைப் பார்த்தாலுமொருதுள்ளல், சந்தோஷம். ச்சின்னக் குழந்தைதானே? கோபால கிருஷ்ணனோ வயசானவன். அதிலும் நான் யாரையாவது தூக்கினாலோ, கொஞ்சினாலோ அவனுக்கு நெஞ்சே வெடிச்சிரும். அப்படி ஒரு ஆதிக்கம்.வெறி.


ஒருவழியா ஆலிவரைத் தூக்கிக்கிட்டு அவுங்க வீட்டுக்குப்போனா ஜொனத்தன் ஸ்கேட்போர்டு வச்சுக்கிட்டு அவுங்கவீட்டு 'டெக்'கை ஹதம் பண்னிக்கிட்டு இருக்கான். சரிதான், அப்ப என் கத்தல் கேட்டுருக்க ச்சான்ஸே இல்லை. என் கையிலே ஆலிவரைப் பார்த்ததும் ஒரு oops. அவ்ளோதான். ஆலியும் பெரிய ஆள். ஒண்ணும்தெரியாதமாதிரி கையிலே இருந்து குதிச்சு, என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காம அலட்டலா வீட்டுக்குள்ளே ஓடுது.


இது மூணாவது தடவை. எங்கே மஃப்பின் கதை ஆயிருமோன்னு எனக்கு உள்ளுக்குள்ளே ஒரு திக் திக்.தோழியும் வந்தாங்க. கொலு பார்த்துட்டுக் கொஞ்ச நேரம் அதைப் பத்திப் பேசுனோம். அவுங்க மலேசியாக்காரங்க.அவுங்க ச்சின்னப்புள்ளையா இருந்தப்ப , அங்கே மலேசியாவில் அவுங்க அம்மாவின் தோழிகள் வீட்டுக்கொலுவுக்குப் போனது, ஒம்போது நாளும் வகைவகையாச் சாப்புட்டது எல்லாம் கேட்டுட்டு, பிரசாதம் கொடுத்தேன்.இவுங்க கிறிஸ்துவர்கள்ன்னாலும் என்னைமாதிரி எண்ணம் இருக்கறவங்க, எல்லா மதமும் சம்மதமுன்னு.


நம்ம 'கலப்பையை' எப்படிப் புடிச்சு உழுவணுமுன்னு கொஞ்ச நேரம் வகுப்பு எடுத்தேன். கவனமாக் கேட்டுக்கிட்டாங்க. இவுங்க என்னோட தமிழ்வகுப்பு மாணவிதான் ஒரு காலத்துலே. இப்பக் கணினியிலே தமிழ் வகுப்பு.இதுக்குள்ளெ மணி 11 ஆயிருச்சு. கிளம்புனோம். பகல் சாப்பாடு அவுங்க வகையில். வீட்டுலெயே எதாவது செஞ்சுக்கலாமுன்னா கேட்டாத்தானே? அவுங்க வாங்கித் தர்ற டர்ன் வேற ரொம்ப நாளாத் தள்ளிப் போயிக்கிட்டு இருக்குன்னும், இன்னிக்கு அவுங்க வகைதான்னும் நிச்சயமா சொல்லிட்டாங்க. அதானே? நினைவிருந்தாச் சரி:-)


இங்கெ ஒரு ச்சைனீஸ் வெஜிடேரியன் சாப்பாட்டுக்கடை இருக்கு. நாங்க இதுவரை போனதே இல்லை. இத்தனைக்கும் அந்த ஓனர் நம்ம வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர். அங்கே எல்லாமெ 100% வெஜிதான்னு அடிச்சுச் சொன்னாங்க.மொதல்லே எங்கே போகலாமுன்னு கேட்டாங்களா.... உங்க இஷ்டம் எங்கேன்னாலும் சரின்னுட்டேன். வாங்கித்தரும் புண்ணியவதிக்கு
ச்சாய்ஸ் தரலாம்தானே? :-)


வெஸ்ட் ஃபீல்டு மால். போய் சேர்ந்தோம். கூட்டமே இல்லை. என்னடா ஆச்சரியமா இருக்கே! பதினொன்னரைதானே ஆகுது. பசங்க தூங்கி எந்திரிக்க வேணாமா? இப்ப 2 வாரம் ஸ்கூல் ஹாலிடேஸ் ஆச்சே. செண்ட்டர் கோர்ட்டுக்குப் போனா பயங்கரக் கூட்டம். எல்லாம் நண்டும் சிண்டுமாப் பிள்ளைங்க. பிள்ளைங்களைக் கூட்டி வந்த பெரியவுங்க. தாற்காலிகமா ஒரு மேடை போட்டு அங்கே 'பாப் டான்ஸ்' னு போர்டு போட்டு வச்சுருக்கு. மூணு பசங்க, 14 வயசு இருக்கும் தலைகீழா ஏதோ சிரசாசனம் பண்ணுறமாதிரி நின்னு(???) கிட்டு ஆடுதுங்க.


மாலுக்கு வந்தே ரொம்ப நாளாச்சுன்னு நினைச்சுக்கிட்டே ஒரு மால் வாக். அப்புறம் 'ப்ரிஸ்கோஸ்' நல்ல ஸேல்ன்னு தோழி ஞாபகப்படுத்துனாங்க.அங்கெயும் எட்டிப் பார்த்தோம். 29.95க்கு வித்த ஒரு செட்(4) ஷாம்பெய்ன் க்ளாஸ் 4 $க்குக் கிடைச்சது. நல்ல லாங் ஸ்டெம்மும், வளைவில்லாத நேரான டம்ளரும். அதுக்குள்ளெ மிதக்கும்பூக்கள் போட்டு வச்சா அழகா இருக்கும். வாங்கியாச்சு. நான் இல்லைங்க. தோழி தான். என்னமோ எனக்கு வரவர எதுவும் வாங்கிக்கணுமுன்னே தோணலை இப்போதைக்கு:-)


இன்னொரு சுத்து வந்துட்டு நகைக்கடையில் விளம்பரம் பார்த்துட்டு நுழைஞ்சோம். கால் கெரட் வைரம் பதிச்ச 599$ விலையுள்ள பெண்டண்ட் இன்னிக்கு நமக்காக 399$ தானாம். நினைச்ச மாதிரியே பொடிக் கற்கள். ( ச்சும்மா) நல்லா இருக்குன்னு கடைக்காரப் பொண்ணுகிட்டே சொல்லிட்டு, 'ஒரே கல் அதே 'கால் கெரட்'லே இதே விலைக்கு இருக்கா?' ன்னு சிரிச்சுக்கிட்டேக் கேட்டதும் அந்தப் பொண்ணுக்கும் சிரிப்பு தொத்திக்கிச்சு.


வந்தது வந்தோம், சூப்பர் மார்கெட்டுக்குள்ளெ நுழையாமப்போனா மால் வந்த பலன் கிடைக்காதுன்னு அங்கே தலையை நீட்டுனோம். இண்டர்நேஷனல் ரோஸ்ட் காபி ஸேல்லே இருக்கு. லிமிட் 4. சரி. நாலுன்னா நாலு. ஆளுக்கு நாலு. நம்மபூனைக்குத்தான் சாப்பாடு வாங்கணும். ஆனா கூலர்லே இருந்து வெளியே எடுத்துட்டு ரொம்ப நேரம் ஊர்சுத்திக்கிட்டு இருக்க முடியாதேன்னேன்.


அப்பத்தான் தோழி சொல்றாங்க, கார்லெ ஒரு கூல் பின் வச்சுருக்கேன். ஃப்ரோசன் சாமான்கள் வாங்குனாலும் பயமில்லை.நாலைஞ்சு மணி நேரம் தாங்குமுன்னு. அட இது ஒரு நல்ல ஐடியாவா இருக்கே. பிக்னிக் போறதுக்கு மட்டுமுன்னுவாங்கி இருக்கும் கூல் பேக்கை இனி 'டிக்கி'யில் போட்டு வச்சுறணும். வாழ்க தோழியின் கூல் பேக்!
மலேசியாவுலே கிடைக்கும் ச்சின்னச்சின்ன வாழைப்பழம் இங்கே ஒரு கடையில் வந்திருக்காம். அங்கெ போனா,அது தீர்ந்து போச்சு. லேடீஃபிங்கர் பனானாவாம். ரெண்டு நாளிலெ கிடைக்குமாம். அங்கே பக்கத்துலே ஒரு செருப்புக்கடைக்கு அடுத்த விஸிட். எல்லா ஊர் செருப்பும் இருக்கு, ச்சீனத் தயாரிப்பு. நெக்லேஸ் வச்ச செருப்பும் பார்த்தேன். பாதத்துக்கு மேலெ அந்த நெக்லேஸ் உக்காருது. கல்யாணப்பொண்ணு அலங்காரத்துலே கை வளைக்கும் மோதிரத்துக்கும் நடுவுலே அலங்காரம் இருக்கும் பாருங்க அதெ போல காலுக்கு. புதுசுபுதுசா கண்டு புடிச்சாத்தானே ஜனங்கள் வாங்கும்? அறிமுக விலையாம், அரை விலை. அதுவே 100 டாலர். காசை விடுங்க, பென்ஸில் ஹீல்.இங்கே இருக்கற குளிருக்கு இதை யாரும் வாங்குவாங்களான்றது சந்தேகம்தான். மூணு மாசம் கழிச்சுப் போய்ப் பார்க்கணும். 20 டாலருக்கு வரும்! செருப்பு நெக்லேஸ்!


இந்த ஏரியாவுக்குப் போனா, என்னுடைய ஃபேவரைட் கடைக்குப் போகாம வரவே மாட்டேன். அங்கெ இதுவரை எதுவும் வாங்குனதும் இல்லை. வாங்கவும் மாட்டேன். ஆனா போயே ஆகணும். நம்மளைப் பத்தித் தெரிஞ்ச தோழியெ கேட்டுட்டாங்க, 'அங்கே போக வேணாமா?ன்னு! போகணும். போனோம். 'அனிமேட்ஸ்' பெட் ஷாப். வழக்கமான குருவிக்கூண்டு, மீன் தொட்டி, நாய், பூனைக்கான வீடுங்கன்னு பலதரப்பட்ட சாமான்கள். அடுத்த பகுதியிலே விற்பனைக்கு இருக்கும் நாய்க்குட்டிகளும், பூனைக்குட்டிகளும். ஒவ்வொரு கூண்டுலேயும் உள்ளே இருக்கறவங்களோட ஜாதகம் ஒட்டி வச்சுருக்கும். இன்னிக்கு என்னமோ பல கூண்டுகள் காலியா இருந்துச்சு. நாலே நாலு பூனைக்குட்டிகள்.அஞ்சு நாய்க்குட்டிகள். நாய்கள் ஒரே தூக்கம். பூனைங்கதான் அட்டகாசம் செஞ்சுக்கிட்டு ஒண்ணோட ஒண்ணு விளையாட்டு.ரொம்பக் க்யூட். கண்ணெல்லாம் பீங்கான் தட்டுலெ உருளும் திராட்சை( வசன உதவி மாமாவின் நண்பர்)போல!


சாப்பாட்டுக் கடைக்குப் போய்ச் சேர்ந்தோம். சைனீஸ் புத்தமதக்காரர் நடத்தும் கடை. ரெஸ்டாரண்ட்ன்னு பெரிய பேர் சொல்லிக்க முடியாது. சிக்கனமான அலங்காரம். ச்சின்னச் சின்ன மேசைகள். 30 பேர்களுக்கு இருக்கை வசதி.
அகலமான புன்னகையோடு, மெனு கார்டை எடுத்துக்கிட்டுக் கடை முதலாளி கம் தொழிலாளி வந்தார். ஆரம்பக் குசல பிரசனம் முடிஞ்சது. அசைவ உணவுப் பெயர்களா இருக்கு பட்டியல் முழுசும். ஐய்யய்யோ..... இங்கே வந்துட்டமேன்னு முழிச்சேன். தோழியும் சொன்னாங்க, இல்லே இது மரக்கறி சாப்பாடுக்கடைதான். ஆனா பேர் ஏன் இப்படி இருக்குன்னுதெரியலைன்னு.
கடைக்காரர் வந்தார் இன்னொரு பெரிய 'காது டு காது' வரை இருக்கும் புன்னகையோடு. வெங்காயம், வெள்ளைப்பூண்டுன்னு ஒண்ணும் இல்லாத சுத்தமான சைவ சாப்பாடுதானாம். எல்லா அயிட்டங்களும் சோயா, டோஃபூ, பீன் கர்ட் இப்படிசாமான்களால் செஞ்சதுதானாம். ஆனா............ அதொட ஷேப் & சைஸ்கள் அச்சு அசலா பார்க்க நான்வெஜ் மாதிரியே இருக்குமாம். பயப்படாம சாப்புடுங்கன்னு உத்திரவாதம் கொடுத்தார். அப்பவும் நான் முழிச்ச முழி சரியே இல்லை.


காரஞ்சாரமா ஒரு கறியும், கொஞ்சம் மைல்டா இன்னொரு கறியும் சாதமும் ஒருவழியா ஆர்டர் செய்தோம். நாங்களாஒண்ணும் செய்யலை. இது இன்னிக்கு ஷெப்'ஸ் ஸ்பெஷல்.


ஸுக்கினியைத் தோலோடு வட்டவட்டமா வெட்டுனாப்புலே இருந்த ஒரு பதார்த்தம். இன்னொண்ணு ஒரு வித இண்டியன்கறி. உருளைக்கிழங்கை நாலாய் வெட்டுனமாதிரி பெரியபெரிய துண்டா கொஞ்சம் குழம்போடு இருந்துச்சு. அதுலேயே நீராவியில் வச்செடுத்த பக்ச்சோய் கீரை.
ரெண்டுலேயும் நல்லா கார்ன் ஸ்டார்ச் அடிச்சு விட்டு 'கூயி'யா இருந்துச்சு. இண்டியன் கறி(???) யில் ச்சும்மா மொளகாப்பொடியைத் தூவிக் கொண்டு வந்ததுபோல ஒரே நெடி. குடிக்கத் தண்ணீர் தரட்டான்னு கேட்டார். அவருக்கும்நெடி அடிச்சுருக்குமுல்லே? தண்ணி இலவசமாம். த்தோடா............
சாப்பாட்டைப் பார்க்கப் பார்க்க நம்ம ஹரிஹரனோட பதிவு வேற மனசுக்குள்ளே வட்டம் போடுது. அதைப் பத்திச் சொன்னேன். அப்புறம் புத்த மதத்துலே இருக்கற மூணு பிரிவுகளைப் பத்தி தோழி சொன்னாங்க. அங்கெ ச்சீன புத்தமதக்காரர்கள் கண்டிப்பான சைவமாம். எனக்குத் தெரிஞ்ச சில புத்தமதக்காரகள் அசைவம் சாப்புடறவங்கதான். இங்கே எங்க ஊர்லே ஒரு புத்தர் கோயில் கட்டிக்கிட்டு இருக்காங்க. நல்லா பெரூசா கட்டுறாங்க. இவ்வளவு புட்டிஸ்ட்டாஇங்கே இருக்காங்க? கிட்டத்தட்ட 10 ஆயிரம் இந்துக்கள் இருந்தும் ஒரு கோயில் வர வழி இல்லை...... . அதுக்கான முயற்சியை ஆரம்பிச்சுப் பார்த்தோம். நம்ம மக்கள்ஸ் மொத மீட்டிங்லேயே கையைக் கழுவிட்டாங்க. நாங்கெல்லாம் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலுக்குத்தான் போய்க்கிட்டு இருக்கோம். சரி, புத்தர் கோயில் கட்டி முடிக்கட்டும். அங்கெயும் போய்க் கும்பிட்டா ஆச்சு. அவரும் ஒரு அவதாரம்தானே?


சாப்புட்டோமுன்னு பேர் பண்ணிட்டு வெளியே வந்தோம். இந்த அழகுலே எங்களுக்கு ஃபோர்க் & நைஃப் வேணுமா,இல்லே சாப் ஸ்டிக் வேணுமான்னு வேற கேட்டார். அடுத்து எங்கே போகலாமுன்னு தோழி கேட்டாங்க. வீடுன்னேன்.


வீட்டுக்கு வந்து கமகமன்னு ஒரு மசாலா டீ போட்டுக் குடிச்சப் பிறகுதான் செத்த நாக்குக்கு உயிர் வந்துச்சு.


பாவம், தோழிக்கே முகம் ஒரு மாதிரியாப் போச்சு. பேசாம தெரிஞ்ச மாதிரி இந்தியன் உணவகத்துக்கு, இவ்வளவு எதுக்கு? மாலில் இருக்கற ஃபுட் கோர்ட்டுலேயே சாப்புட்டு இருக்கலாம். அங்கேயும் 'ஷாமியானா'ன்னு ஒரு இந்திய சாப்பாட்டுக்கடை இருக்கு.


"ச்சும்மா ஒருக்காப் போய்ப் பார்க்கலாமுன்னுதான் இங்கே போனது. இன்னொரு நாள் வேற எங்கியாவது போய் சாப்புடலாமு"ன்னு சொல்லிட்டு, "அதுவும் என் கணக்கு"ன்னு அவசர அவசரமா சொல்லி முடிச்ச தோழியைப் பார்த்தா பாவமாவும் சிரிப்பாவும் இருந்துச்சு.


'லேடிஸ் நைட், லேடீஸ் ஒன்லி' ன்னு இங்கே பார்களில் எல்லாம் ஒரு ஸ்பெஷல் இருக்கு. அதுக்கெல்லாம் போக தைரியம் இல்லாததாலெயும் , நம்ம கிடக்கிற கிடப்புக்கும் இந்த 'லேடீஸ் டே' போதும்.


ஒரு உண்மை என்னன்னா, பொம்பளைங்களைத் தனியாக் கடைக்கு அனுப்புனா மொத்தக் காசையும் முடிச்சுருவாங்கன்னு சொல்றதெல்லாம் பொய். மறுபாதியோட போனாதான் 'வாங்கறது' மஜா. ஒவ்வொண்ணா வாங்க வாங்க, மறுபாதி'இதெல்லாம் என்னத்துக்கு அனாவசியமா?'ன்னு பல்லைக் கடிக்கிறதும், 'உங்களுக்கு ஒண்ணும் தெரியாது, ச்சும்மா இருங்க'ன்னுசொல்லி வாதம் செஞ்சும் வாங்குறது தாங்க ஷாப்பிங் சந்தோஷம்.