Monday, September 26, 2016

தனுஷ்கோடி யாத்திரை! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 89)

கடல் அரிப்பைத் தடுக்கன்னு சாலையின் ரெண்டு பக்கமும் கற்களை  கயிற்று வலையில் போட்டுக் கட்டி, சுவர் போட்டுவுட்டுருக்காங்க. சவுக்குமரங்கள் வேற அங்கங்கே....  கோதண்டராமர் கோவிலில் இருந்து சுமார் 6 கிமீ பயணத்தில் முகுந்தராயர் சத்திரம் என்னும் ஊர்.   ஊரை நெருங்கும்போதே   பயணிகள் வருகையை எதிர்பார்த்து  வரிசையா நிக்கும் டூரிஸ்ட் வேன்கள்.  மினி பஸ் போலதான் இருக்கு. பஸ் ஸ்டாண்டு போல இருக்கும் இடத்தில் மரப்பலகையால் கட்டுன ஒரு கண்காணிப்புக் கோபுரம்!  ஓலைக்கூரையுடன் பயணிகளுக்கான கடைகள்!இங்கிருந்து தனுஷ்கோடி அழிவுகளைப் பார்க்க  ஒரு அஞ்சு கிமீ தூரம் போகணும். எந்த வண்டி கிளம்புதுன்னு சொல்ல ஒரு ஒழுங்கு முறையும் இல்லை.  தனுஷ்கோடிக்குப்போக புத்தம் புது ரோடு தயாராகி நிக்குது  ஒருபக்கம். இன்னும் திறப்பு விழா நடக்கலை :-(  இன்னும் நாலைஞ்சு நாளில் திறந்துருவாங்கன்னு சேதி கொண்டு வந்தார் நம்ம சீனிவாசன்.
புயல் அழிச்சுப்போட்டுப் போனபின், அம்பது வருசம் கழிச்சுத்தான் சாலையே போட ஆரம்பிச்சுருக்காங்க. இதோ பதினைஞ்சு மாசத்தில் அரிச்சல் முனை வரை சாலை ரெடி. இப்ப என்ன பிரச்சனைன்னா.........

அம்பது வருசம் சும்மாக் கிடந்துச்சுன்னு  சொன்னேன் பாருங்க....  அதுலே முதல் இருவது வருசம் கழிச்சு, தனுஷ்கோடி போய்ப்  பார்க்க ஆசைப்பட்ட பயணிகளை ஜீப்புலேயும் வேன்லேயும் கொண்டுபோய் காமிச்சுருக்காங்க.  புதுசா ஒரு தொழில். இது அப்படியே பிக்கப் ஆகிப்போச்சு. அப்புறம் கடந்த முப்பது வருஷமா  ஓஹோன்னு நடந்துக்கிட்டு இருக்கும் தொழிலுக்கு  ஏகப்பட்ட  டுரிஸ்ட் வேன்களை, தண்ணியிலேயும் போவேன், தரையிலேயும் போவேன் என்ற கணக்கா எஞ்சினை மாத்தி அமைச்சுருக்காங்க.

ஒரு வேனுக்குப் பதினைஞ்சு பேருன்னு கணக்கு. ஒரு இருவது இல்லை இருவத்தி அஞ்சு நிமிசப் பயணம்.  அங்கெ போய்  ஒரு அரைமணி நேரம் சுத்திப்பார்க்க   நம்மை   விடுவாங்க. அப்புறம் திரும்பி  இருவது  இல்லை இருவத்தி யஞ்சு நிமிசத்துலே இங்கே கொண்டு வந்து இறக்கிருவாங்க.  ஆகமொத்தம் ஒன்னரை மணி நேரம். ஆளுக்குக்  கட்டணம் இருநூறு ரூபாய். பதினைஞ்சு பேர்  சேர்ந்தாத்தான் வண்டியை எடுப்பாங்கன்றதால்  நாமுமே மற்ற   பனிரெண்டு பேரைத் தேடவேண்டி இருக்கு :-)

எத்தனை பேர், எத்தனை பேருன்னு  கேக்கறவங்ககிட்டேயெல்லாம் மூணு மூணுன்ன்னு  சொல்லிக்கிட்டு இருந்தோம். வண்டி விசாரிக்கப்போன சீனிவாசன்,  அவர் வரலைன்னுட்டார். இப்போ ரெண்டு ரெண்டுன்னு சொல்லிக்கிட்டு இங்கேயும் அங்கேயுமா போய்க்கிட்டு இருந்தோம்.
நிறைய கூரை போட்ட இடங்கள். ஒரு குடிசையில் ஏகப்பட்ட மக்கள்ஸ். எதோ மீட்டிங் நடக்குதோன்னு  பார்த்தால்   அதே அதே!  டூரிஸ்ட் வேன் சொந்தக்காரர்களும் ட்ரைவர்களுமா கூட்டங்கூடிக் காரசாரமாப் பேசிக்கிட்டு இருக்காங்க. புது ரோடு தொறந்துட்டால்.........   எங்க பொழைப்பு என்னாறதுன்னு அவுங்க கவலை. முன்னூறு குடும்பம் முப்பது வருசமா இந்தத் தொழிலில் இருக்கு. இப்போ  ரோடு வந்துட்டால் எங்களுக்கு தொழிலே இல்லாமப் போயிடாதா?  ஆமாம். உண்மைதான். அதுக்காக  எவ்ளோநாள் விட்டு வைக்கிறது?  அழிஞ்சு போன ஊரைத் திருப்பிக் கட்டி எடுக்கணுமுன்னா ரோடு தானே முதலில் போட்டாகணும்.

முந்தியெல்லாம்  எம்பதுலே ஆரம்பிச்சு,  போகப்போக  நூத்தியம்பது ரூ வரை வாங்கிக்கிட்டு இருந்தவங்க.... இன்னும் ஒரு வாரத்துலே ரோடு திறக்கப் போறாங்கன்னதும் இருநூறா ரேட்டை ஏத்திக்கிட்டே...  போராடறாங்க. சீக்கிரமா சம்பாதிச்சுக்கணும்.  காற்றுள்ளபோதே.............
ஒருவழியா எங்களுக்கு  வண்டி ஆப்ட்டது. காலைத் தூக்கி வச்சு ஏறமுடியாதபடி அம்மாம் உயரத்துலே படி!  கஷ்டப்பட்டு ஏறினேன்.  கடலுக்குள்ளே தண்ணிலே போகனும், அதான் இப்படின்னார் சகபயணி.  கோபிச்செட்டிப்பாளையம் பக்கத்துலே ஒரு  சின்ன ஊராம்.
சொந்தக்காரங்க, ஊர் சனங்கன்னு ஒரு கூட்டமாக் கிளம்பி வந்துருக்காங்க.
ரெண்டே நிமிட்டுலே  நாங்கெல்லாம் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்.  ஒரே சிரிப்பும்  கும்மாளமுமா பயணிக்கிறோம். இதுலே நம்மிடம் 'என்னை எடுங்க என்னை எடுங்க'ன்னு  நேயர் விருப்பம். எடுத்த படத்தைக் காமிச்சதும் இன்னும் பயங்கர சிரிப்பும் கும்மாளமும் :-)


மணலில் போக ஆரம்பிச்ச வேன்  அந்தாண்டை போய்   தண்ணியில் இறங்குச்சு. ரொம்பத் தண்ணீர் இல்லை.  கரையோரமாத்தான் வண்டி போகுது.  கொஞ்சம் பயணிகளுக்கு த்ரில்லா  இருக்கட்டுமேன்னு ஒரு மாதிரி  சாய்ச்சு ஓட்டறார் ட்ரைவர்.
கொஞ்ச  தூரத்துலே  புது ரோடு தெரியுது. அங்கே சிலர் வேலை செய்துக்கிட்டு இருந்தாங்க.  வளைச்சு வளைச்சு ஓட்டறார் ஓட்டுனர்.  ஒவ்வொருமுறை லேசா சாயும்போதும் வண்டிக்குள் கிளுகிளுப்பு :-)
இருபத்தி மூணு நிமிட்லே  ஒரு இடத்துலே வண்டியை நிறுத்தியவர் அரை மணி நேரத்துக்குள்ளே வந்துருங்க. இல்லேன்னா  என்னால் காத்திருக்க முடியாதுன்னு  எச்சரிக்கை விட்டார்.  வந்த வண்டி அடையாளம் தெரியணுமேன்னு க்ளிக்கிக்கிட்டேன் :-)  சீனியப்பா.....
அங்கே ஒரு கோவில் இருக்குன்னு  கையைக் காமிச்சதும் எல்லோரும் அங்கே போனோம். சாதாரண தகரக்கூரையின் கீழ் சிவன். எதிரில் ஒரு நந்தி.  சின்னதா ஒரு தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதுலே ஒரு மிதக்கும் கல்!    இந்த வகைக் கல்லால்தான் ராமர் பாலம் கட்டப்பட்டுருக்காம்.  நமக்கு முன் வந்த  வண்டிப் பயணிகள்  கூட்டம் கோவிலில் இருந்தது. கல்லையெல்லாம் தூக்கிப் பார்த்தாங்க :-)


பூசாரி ஐயா துன்னூறு கொடுத்தார்.  இந்தாண்டை இன்னொரு கோவில்!  அம்மன் கோவில் அடையாளமா வாசலில் ஒரு சூலம். சூலத்தினடியில் நாகப்ரதிஷ்டை. போய்க் கும்பிட்டுக்கிட்டு தனுஷ்கோடியைப் பார்க்கக்  கிளம்புனோம்.
என்னென்ன இருக்குன்னு போஸ்டர் போட்டுருக்காங்க.  பார்க்கும்போதே  பாவமாத்தான் இருக்கு :-(  இயற்கை சீற்றத்துக்கு முன் மனுசன் தூசு இல்லையோ!   எங்க ஊரு நிலநடுக்கத்தில் பாதி அழிஞ்சு போனப்ப பட்ட துயரம் எல்லாம் மனசுக்குள் வந்து போச்சு.


இந்த இடம் வாழ்வதற்குத் தகுதி இல்லைன்னு  இங்கே இருந்த 660   மீனவர் குடும்பங்களை வேற இடத்தில் கொண்டு போய் குடியமர்த்திருச்சு அப்போதைய அரசு.   வேற தொழில் தெரியாத காரணம் ஒரு பக்கம்,  பிறந்து வளர்ந்து வாழ்ந்துக்கிட்டு இருந்த இடத்தின் பாசம் ஒருபக்கமுன்னு தவிச்சுட்டு,  அநேகமா எல்லோருமே இங்கேயே திரும்பி வந்து, குடிசை போட்டுக்கிட்டு வாழறாங்க. ஊரே கடல் உப்புத்தண்ணீரால்  முழுகிப்போனதால்  நிலமெல்லாம் பாழாகி உப்பரிச்சுக் கிடக்கு. காய்கறியை எல்லாம் கனவுலேதான் பார்க்க முடியும்.  வியாபாரத்துக்குப் பிடிக்கிற மீன்களில் கொஞ்சம் எடுத்து தினசரி குழம்பு வச்சுக்குவாங்க.குடிசைகளுக்கு உள்ளேயே மணலைத் தோண்டி எடுத்தால் ஊத்துலே நல்ல தண்ணீர் கிடைக்கும். அதைத்தான் பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. மற்ற சாமான்களுக்கு ராமேஸ்வரம் போகணும். 25 கிமீ தூரம்.
நான் சொல்லிக்கிட்டு இருந்தேன்ல....   44 வருசத்துக்கு முந்தி ஒருக்கா ராமேஸ்வரம் வந்தோமுன்னு  அப்ப  அவ்வளவாக் கூட்டம் இல்லாத  ஊர்தான். குடிசை வீட்டுக்குள்ளே ச்சும்மா ஒரு ரெண்டடி தோண்டுனா குடிக்கிற தண்ணி கிடைச்சுரும். அப்படித் தோண்டுன குழியில்  அடி உடைஞ்ச மண்பானையின் கழுத்து பாகத்தைத் திருகி வச்சுருந்தாங்க ஒரு குடிசையில்,  மண் சரிஞ்சு குழியை மூடாமல் இருக்க.  மேலே மட்டும் ஒரு தட்டுப்போட்டு மூடிட்டா அதுவே பார்க்க ஒரு மண்பானை கணக்கா இருக்குமுன்னு சொன்னது நினைவுக்கு வருது. 

ஆமாம்....  நம்ம சிங்காரச்சென்னையில் ஒருகாலத்துலே தில்லக்கேணி மெரினா பீச்சுலே  ஒரு அம்மா  மொளகாய் பஜ்ஜி செஞ்சு விக்க ஆரம்பிச்சப்ப,  இன்னொருத்தர் பக்கத்துலேயே  மணலில் பெரிய குழியாத் தோண்டி நல்ல தண்ணீர் ஒரு க்ளாஸ் பத்து பைஸான்னு வித்த கதை யாருக்காவது  நினைவு இருக்கோ?  தண்ணி பாட்டில் வியாபாரம் எல்லாம் அப்போ இல்லையாக்கும்!

ஒரு காலத்துலே  நல்ல துறைமுகம் உள்ள ஊரா இருந்த  தனுஷ்கோடி கொஞ்சம் எல்லா வசதிகளும் நிறைஞ்ச இடமாத்தான் இருந்துருக்கு.  மெட்ராஸில் இருந்து  சிலோன் போக ஒரு ரயில் இருந்துச்சு. போட் மெயில் னு பேர். அது எக்மோரில் இருந்து புறப்பட்டு கடைசியில் தனுஷ்கோடி ஸ்டேஷனுக்கு  வந்து நிக்கும். பக்கத்துலெயே இருக்கும் துறைமுகத்தில் காத்துக்கிடக்கும் கப்பலில் ஏறி தலைமன்னாருக்கு போகலாம். வெறும் முப்பது கிமீ கடல் பயணம்தான் சிலோனுக்குப் போக.

ஒரே நாளில் இப்படிப் புயல்வந்து எல்லாமே அழிஞ்சு போகுமுன்னு யார் நினைச்சா?
ப்ச்....

ரயில் ஸ்டேஷன், போஸ்ட் ஆஃபீஸ், சர்ச், கோவில், லைட் ஹௌஸ், பள்ளிக்கூடம்,  ஆஸ்பத்திரின்னு எல்லாமே போனது போனதுதான்.  கட்டடங்களின் மிச்சம் மீதிகள்தான் இப்ப நம்ம கண்ணுக்கு முன்னே :-(
இப்ப ஒரு பத்து வருசமா  ஒரு பள்ளிக்கூடம் நடக்குது. எட்டாப்புவரை வகுப்புகள்.  மூணு டீச்சர்களும், ஒரு  சத்துணவு  சமைக்கிறவரும் இருக்காங்க. 75 புள்ளைகள் படிக்கிறாங்க.  வந்து போக சரியான  ரோடு இல்லாததால்....  டூரிஸ்ட் வேன்களில்தான்  வந்து போறாங்களாம். உள்ளுர் பள்ளிக்கூட டீச்சர்கள் என்றதால் வேன் ட்ரைவர்கள் அவ்வளவாக் கணக்கா இருக்கறதில்லைன்னு  கேள்வி.   வேன் கிடைக்காதப்ப, நடந்தே வந்துட்டுப் போறாங்களாம்....  நல்லவேளையா புது ரோடு  இவுங்களுக்கு உதவியா இருக்கும்.
நல்ல அகலமான ரோடுதான். 40 அடி ரோடு.   ரெண்டு பக்கமும் ரெண்டரை மீட்டர் இடம் விட்டு, நடுவிலே  ஏழு மீட்டர்  அகலத்துக்கு தார் ரோடு. நாங்களும் ரோடுலே நின்னு படம் எடுத்துக்கிட்டோம்:-)
 நீச்சல் காளி    ஷி செல் மார்ட்ன்னு ஒரு கடை.  கடை நடத்தும் வாலிபரின் தாத்தா பெயர் நீச்சல் காளி!  புயல் அடிச்ச சமயம் தனியாளா நின்னு பலபேரைக் காப்பாத்துன வீரர்!  அந்தக் காலத்துலே நீச்சல் போட்டின்னா,  இங்கே தனுஷ்கோடியில் இருந்து கிளம்பி தலை மன்னார் வரை முப்பது கிமீ போயிட்டுத் திரும்புனாதான் வெற்றியாளர்.  எல்லோரும் இப்படிப்போய் வந்துறமுடியுமா?  இவர்  வந்துருக்கார். அதான் நீச்சல்  காளின்ற பெயர் வந்துருக்கு!  தொன்னூறு வயசுவரை வாழ்ந்து இப்போ 2010 இல்தான் சாமிகிட்டே போயிட்டார்.

 

 முத்துச்சிப்பியில் முத்து எப்படி ஒட்டிப் பிடிச்சுருக்குமுன்னு அங்கெ பார்த்தேன்.  சங்கு, சிப்பிகளோடு பவழம், அது இதுன்னு மாலைகள்  விக்கறார்.  எங்க நாட்டுலே  இதெல்லாம் (கடற்பொருட்கள்)  கொண்டு வர தடா என்பதால்  பாலீஷ்  செய்யாத க்றிஸ்டல் ஜெபமாலை ஒன்னு வாங்கிக்கிட்டேன்.  இதெல்லாம் இங்கத்து சமாச்சாரம் இல்லைதான்.  நினைவுப்பொருளா இருக்கட்டுமேன்னு.....

ஒரு சிவன் கோவிலில் பெரிய லிங்கமும் அழகான நந்தியும் புள்ளையாருமா இருக்காங்க.

இதுக்குள்ளே நம்ம அரைமணி முடிஞ்சு போச்சுன்னு நம்மவர் அவசரப்படுத்தினதால் இங்கிருக்கும் ஒரே நல்லதண்ணிக் கிணறைக் க்ளிக்கிட்டு வண்டிக்கு வந்துட்டோம்.
திரும்பி ஒரே  கும்மாளமான பயணம்.  இருபது நிமிட் ஆச்சு, முகுந்தராயர்சத்திரம் வந்து சேர.  கோவை நண்பர்களுக்கு  பைபை சொல்லிட்டுக் கிளம்பி நேரா ராமேஸ்வரத்துக்கு வந்து சேர்ந்தாச்சு.  மணி இப்பதான் பதினொன்னரை ஆகப்போகுது.


இன்னும் கொஞ்சம் ஊர் சுத்தலாமா? :-)

தொடரும்..........  :-)


Saturday, September 24, 2016

பொறந்தநாள்... இன்று பிறந்தநாள்......

பனிரெண்டு வருசம் ஓடியே போச்சு. நல்லா எழுதினேனா....  நிறைவா எழுதினேனான்னு  நீங்கதான் சொல்லணும். ஆனால்....  நிறைய எழுதி இருக்கேன் என்றுதான் தோணுது :-)
முக்கால்வாசியும்   நீண்ண்ண்ட பதிவுகளாத்தான் இருக்கு.  தொடங்குனா நிறுத்த முடியாத  கஷ்டம் ஒன்னு இருக்கே :-)
இந்த நாளோடு இன்னும் ஒரு நாளையும் முடிச்சுப்போட்டுதான் வச்சுருக்கேன்.  நம்ம கோபாலின் பிறந்தநாளும் இன்றுதான்!

துளசிதளத்தின்  பிறந்தநாளையும், நம்மவரின் பிறந்த நாளையும் கொண்டாடும்போது   நம்ம  பாரதியாரின் அப்பாவாகக் கொஞ்சநாள் 'இருந்த' பாரதிமணி ஐயாவின் பிறந்தநாளையும் இப்பக் கூடவே சேர்த்துக்கிடறது வழக்கமாப் போயிருக்கு:-)

முப்பெரும்விழா!

வழக்கம்போல்    தங்கள் அனைவரது அன்பையும் வாழ்த்துகளையும் வேண்டி இங்கே மூவர் அணி நிற்பது உங்கள் மனக்கண்களுக்குத் தெரியுதுதானே?