Monday, March 31, 2008

போற போக்கில்.....

காலையில் நாள்காட்டியின் தாளைக் கிழிச்சப்பத்தான், கா(ல்)வருசம் ஓடிப்போச்சேன்னு இருந்துச்சு. இப்பத்தான் வருசம் பொறந்தமாதிரி இருக்கு! அதுக்குள்ளே..... வார நாட்களைவிட வார இறுதிகளுக்கு இறக்கை கட்டி விட்டுருக்கு போல.

வீட்டுக்குப் பக்கம் ஒரு அஞ்சு நிமிட நடையில் இருக்கும் பள்ளியில் வருடாவருடம் நடக்கும் பள்ளிக்கூடச் சந்தை நேத்து. இதைப் பத்திப் போனவருசம் வந்த நியூஸிலாந்து பகுதி 57 பதிவில் எழுதியாச்சு. மறுபடி என்னத்துக்கு அதையேத் திருப்பிச் சொல்லணும்.

விவரம் இங்கே

அதிசயமா இந்த சமயத்தில் எங்க இவர் ஊரில் இருக்காரேன்னு கிளம்பிப்போனோம். எல்லாம் வழக்கம்போல். விசேஷமா இருந்த ஒண்ணைச் சொல்லணுமுன்னா, நம்ம ஊரின் இந்தப் பக்கத்துக்கான காவல்துறையின்
வண்டியைக் காவலர் ஒருவர் கொண்டுவந்து நிறுத்திவச்சுப் பள்ளிப் பிள்ளைகளுக்கு வண்டியின் உட்புற அமைப்புகளைக் காமிச்சு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தார். பொத்தானை அமுக்கியதும் 'ஊய்ங் ஊய்ங்'ன்னு சத்தம் போட்டுக்கிட்டே, வண்டியின் தலையில் ஒளிர்ந்து பாயும் சிகப்பு விளக்குப் பசங்களைக் கவர்ந்துக்கிட்டு இருந்துச்சு. சில பிள்ளைகள் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து ரசித்துப் பார்த்துக் கற்பனை உலகில் பறந்துக்கிட்டு இருந்தாங்க. எதிர்கால காவல்துறை ஊழியர்கள்!!!


இந்த வண்டிக்கு அருகிலே இன்னொரு விளையாட்டு நடந்துக்கிட்டு இருந்துச்சு. வாளியில் இருக்கும் தண்ணீரில் செங்கல் அளவுள்ள ஸ்பாஞ்சை நனைச்சு எதிரில், முகத்துக்கு மட்டுமுன்னு வெட்டப்பட்ட துளையுள்ள ஒரு பலகையின் பின்னே நின்னுக்கிட்டு இருப்பவர்மேல் எறியலாம். ஒரு டாலருக்கு அஞ்சுமுறை எறியலாம். அங்கே ஒரு ஆசிரியர் நிக்கறார். அவரது மாணவர்கூட்டம் காசு கொடுத்து வாத்தியாரை முகத்தில் அடிக்குது. பிடிக்காத ஆசிரியருன்னா இன்னும் கூட்டம் கூடுமோ ? பசங்களுக்கு இன்னும் நம்ம வாத்தியாராச்சேன்னு மனசுலே குறுகுறுப்பு இருக்குமோ என்னவோ....பலருக்கும் குறி தப்பல்தான்:-)


இதுக்குப் பக்கத்துலே, புத்தகங்கள் என்று விளம்பரம் செய்திருந்த அறைக்குப் போனோம். சூப்பர்மார்கெட் கேரி பேக் நிறைச்சுப் புத்தகங்கள் அள்ளிக்கலாம். ரெண்டே டாலர் கொடுத்தாப் போதும். இப்ப நான் கொஞ்சம் மாறியிருக்கேன்னு எனக்கேத் தெரிஞ்சது. முந்தியெல்லாம் அள்ளோ அள்ளோன்னு அள்ளிக்கிட்டு வருவேன்.(அப்புறம் இதுகளை வீட்டைவிட்டு வெளியேத்துறது தனிக்கதை) இப்பக் கொஞ்சம் நல்லதா....அதாவது உண்மையாவே வேணுங்கறது எதுன்னுப் பார்க்கும் 'பக்குவம்' வந்துருக்கு.(அப்படி ஒரு நினைப்பு)


கொஞ்சம் புரட்டிப் பார்த்தவுடன், 'அட!'ன்னு சொல்லவச்சது Geoffrey Moorhouse
எழுதுன India Britannica. 1784 ஆம் வருச இந்திய வரைப்படம், 'சதி' நடந்தகாலக் கட்டங்களில் வரைஞ்ச பெயிண்டிங் (painting of suttee by tilly kettle 1771) ஜாலியன்வாலா பாக் வில்லன் Brigadier General Reginald Dyer, ராணுவச்சீர் உடைகள்(Military uniforms of the British empire overseas) புதுடில்லி நிர்மாணத்தின்போது வைஸ்ராய் மாளிகை ( இப்போது ஜனாதிபதி மாளிகை) எப்படி சரிவுள்ள சாலையின் காரணம், ராஜ்பாத் லே இருந்து பார்க்கும்போது கண்ணுக்குத் தென்படாமல் போனதுக்கான தப்புக்கணக்கு' ன்னு படங்கள் நிறைய இருக்கு. இன்னொரு இடத்துலே 'Annie Besant adopted a young madrassi named Krishnamurti' இந்த வரி கண்ணுக்குச் 'சட்'ன்னு தெரிஞ்சது. முழுசையும் படிச்சுப் பார்க்கணும். பழங்காலப் புத்தகமோன்னு பார்த்தால் இதுதான் முதல் பதிப்பு. 1982லே வெளிவந்துருக்கு. (நாங்க நாட்டைவிட்டுவந்த வருசம்)


கொட்டிக்கிடந்த நாவல்களில் ஒண்ணையும் எடுத்துக்கலை. அப்படி இப்படின்னு அலைஞ்சுட்டு, அறையை விட்டு வெளிவந்தப்பக் கீழ்க்கண்டவைகள் பையில்.

The blue day book

Cambodia -- கானாபிரபா சரியா எழுதராறான்னு செக் பண்ணிக்க:-)

Japanese gardens

Newyork apartments

Practising the power of now

Good House keeping step by step cook book --மகளுக்குப் பயன்படலாம்

Collins colour cookery --- சென்னையில் ஒரு தோழிக்காக ( வீட்டிலேயே பிஸ்கெட்ஸ் செய்யணுமாம் அவுங்களுக்கு)

வெளியில் ஈர ஸ்பாஞ்சு எறிதல் இன்னும் நடந்துக்கிட்டு இருக்கு. அதுலே இப்போ முகம்காட்டி நிக்கறது நம்ம கம்யூனிட்டி கான்ஸ்டபிள்!! நான் பார்த்தவரை நாலைஞ்சு முறை 'பச்சக்'ன்னு தண்ணீரோடு ஸ்பாஞ்சு முகத்தில் அறைஞ்சது.:-)))) அந்த இளைஞருக்குச் சிரிப்போச் சிரிப்பு. ஏனோ நம்மூர் போலீஸ்காரர்களின் அனாவசிய அதிகார மிரட்டல் மனசில் வந்து போனது.

இன்னிக்குக் கெமெரா கொண்டுபோகலை. கோபாலின் செல்லில் எடுத்தது இது.





பச்சை நிறத்தில் ஆறு பிளாஸ்டிக் சாப்பாட்டுத் தட்டுகள்( பெரிய அளவு) கிடைச்சது. குளிர்காலம் நெருங்கியாச்சு. வெளியில் இருக்கும் பூத்தொட்டிகளை (ட்ராப்பிக்கல் ப்ளாண்ட்ஸ்) வீட்டுக்குள் கொண்டு வரணும். இனி இவை, அந்தத் தொட்டிகளுக்கு அடியில் வைக்கும் சாஸர்கள். அதுக்குண்டான கடையில் ஒவ்வொண்ணும் ஆறு டாலர். இப்ப முப்பத்தியஞ்சை மிச்சம் பிடிச்சேன்:-)


மாலை ஏழுமணிக்கு ஸ்வாமிநாராயண் கோவிலில் இருந்து நியூஸிக்கு விஸிட் வந்திருக்கும் இரண்டு சாமியார்களின் பேச்சைக் கேட்கப் போனோம்.


கோபாலை அறிமுகம் செஞ்சுவச்சப்ப, ஒரு சாமியார் அவர்கிட்டே அதிகநேரம் பேசிக்கிட்டு இருந்தார். இவரும் தலையை ஆட்டி ஆட்டி எதோ சொல்லிக்கிட்டு இருந்ததைக் கவனிச்சேன். என்னன்னு அப்புறம் விசாரிச்சால்,
'சென்னையில் தாசப்பிரகாஷ் ஹோட்டல் பக்கத்தில் இப்பப் புதுசா ஒரு ஸ்வாமி நாராயண் கோயில் கட்டி இருக்காங்க'ன்னு தகவல் சொன்னாராம்.


ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இந்தச் சாமியார்கள் எந்தப் பெண்களிடமும் பேசுவதே இல்லை:-))))))

Saturday, March 29, 2008

இது நம்ம ஸ்டைல் Earth Hour 2008

இந்த வருசத்துலே இருந்து நாங்களும் கலந்துக்கறதா முடிவு செஞ்சது போன வருசத்திலே இருந்து. இந்த 'விழா'வை ஆரம்பிச்சது ஆஸ்தராலியாவின் சிட்னி நகரம்.2007 மார்ச் 31 தேதி மாலை ஏழரை முதல் எட்டரைவரைன்னு நடந்துருக்கு. இந்த ஒரு மணி நேரத்திலேயே நகரின் மின்சாரத்தில் 2.1% சேமிக்கப்பட்டதாம்.



இந்த வருசம் இதுக்கான நாள் இன்னிக்குத்தான் . மார்ச் 29, இரவு எட்டுமுதல் ஒன்பது மணிவரை. ஆஸ்தராலியாவுடன் கைகோர்க்க நியூஸி, ஃபிஜி, இந்தியா உள்பட 18 நாடுகள் முன்வந்துருக்கு.



எல்லாத்துலேயும் முந்திக்கும் நாங்கள் இன்னிக்கும் முந்திக்கிட்டோம். ஃபிஜியும், நியூஸியும் ஒரே தீர்க்கரேகையின் பாதையில்ன்னு சொன்னாலும், இப்ப எங்களுக்கு இந்தப் பகல்நேரச் சேமிப்பு இன்னும் முடியாததால் 'வீ த ஃப்ர்ஸ்ட்':-))))


சனிக்கிழமை. கோயிலுக்குப் போய்வரவே ஏழே முக்கால் ஆகிரும். வந்தவுடன் எட்டுமணிக்கு மெழுகுவத்தி வெளிச்சத்தில் ராச்சாப்பாடுன்னு மனசுக்குள்ளே பயங்கரமாத் திட்டம், கேண்டில்லைட் டின்னர் இதுவரை ஜிகே சாப்புட்டதே இல்லையேன்னு .......




கோயிலில் ஆரத்திக்குத் திரை விலகியதும் என்னவொரு இன்ப அதிர்ச்சி. சாமி எல்லாருக்கும் ரோல் மாடலா இருக்கார். மெழுகுவத்திகளால் அலங்காரம். ஜிலுஜிலுன்னு ஜொலிக்கிறார்.



ச்சின்ன டீலைட் கேண்டில்ஸ். வரிசையா தீபாவளிக்கு வைக்கிறாப்போல இருக்கு. எனக்குத்தான் எதையெடுத்தாலும் எண்ணனுமே....... 76 சாமிக்கு. அடுத்த கோடியில் ஒரு ஏழெட்டு ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதாவுக்கு. இன்னிக்குன்னு பார்த்துக் கேமெரா கொண்டுபோகலை(-:


நகரச் சதுக்கத்தில் இதைக் கொண்டாட சிட்டிக்கவுன்ஸில் ஒரு ஏற்பாடு செஞ்சுருக்கு. அங்கே பெரிய திரையில் Eleventh Hour ன்னு ஒரு குறும்படம் காமிக்கிறாங்க. எல்லாரும் மெழுகுத்திரி ஏத்திவச்சுக் கொண்டாடுவாங்க போல. என்ன நடக்குதுன்னு பார்த்துட்டுப் போகலாமுன்னு அந்த வழியா வீட்டுக்கு வந்தோம்.

அங்கே 2000 மக்கள்ஸ் கூடுனாங்கன்னு உள்ளூர் பத்திரிக்கையும் ச்சுடச்சுட ரிப்போர்ட் கொடுத்துருக்கு இங்கே.


சரியா எட்டு மணிக்கு வீடுவந்தாச்சு. எங்க தெரு முழுசும் ஒருத்தர் வீட்டிலேயும் லைட் எரியலை. எங்கூரு ஆளுங்களுக்குச் சொல்லிட்டாப்போதும். கடைப்பிடிச்சுருவோம். தட்டுத்தடுமாறி வீட்டுக்குள்ளே வந்து மெழுகுத்திரி நாங்களும் கொளுத்திட்டுக் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம். இந்த டிவிச்சனியன் சத்தமில்லாம நிம்மதியா இருந்துச்சு.


கோபால் போய் அவருடைய மடிக்கணினி எடுத்துக்கிட்டு வந்தார். எதுக்கு அனாவசியமா எர்த் அவர்லே இப்படின்னா....ரெடிமேடா பதில் வருது, இது பேட்டரியில்தான் வேலை செய்யுதுன்னு.



பதிவுக்குன்னு கொஞ்சம் படங்கள் எடுத்துக்கிட்டேன். ஒரு மணிநேரம்தானே.... ஒம்போது மணிக்குச் சாப்பிட்டா ஆச்சு. மைக்ரோவேவ் வேணுமே சாப்பாட்டைச் சூடாக்க.



தினமும் இரவு எங்கள் (இறந்துபோன ) பூனை அடையாளம் இருக்கும் ஒருத்தன் சரியா 9.15க்கு நம்ம வீட்டுக்குச் சாப்பிட வந்து போய்க்கிட்டு இருக்கான் இப்பக் கொஞ்சநாளா..இனிமே எந்தக் கமிட்மெண்ட்டும் வேணாம்னு இருந்தாலும், எங்க கப்பு போலவே இருக்கறானேன்னு துரத்த மனசு வரலை. எப்படிடா இவனுக்கு நேரம் கண்டுபிடிக்க முடியுதுன்னு நினைப்பேன். வெளியே போட்டிருக்கும் பெஞ்சு மேலே பொறுமையா உட்கார்ந்துருப்பான். 9.13க்குப் பார்த்தாக்கூட வந்துருக்கமாட்டான்.
ஒம்போதேகால் ஆகணும்.



இன்னிக்கு ஒன்பது மணியானதும் வீட்டு முன் அறையில் வச்ச மெழுகுத்திரியை அணைக்கப்போனா, அந்த பெஞ்சுலே உக்கார்ந்துருக்கான் அந்தக் கருப்பன்!


இந்த எர்த் அவர் நிகழ்ச்சியாலே எனக்கு ஒரு உண்மை தெரியவந்துச்சு.


வீட்டில் விளக்கு இல்லைன்னா பூனைக்கு மணி பார்க்கத்தெரியாது.:-)))))))






Friday, March 28, 2008

வலையில் 'குமுதம்' வரலையே......

அவசரப்பதிவுன்னு வச்சுக்கலாம் இதை. ஒரு மூணு வாரமா வழக்கமா வலையில் படிக்கும் குமுதம் இதழைத் திறக்க முடியலை. லாக் இன் செஞ்சதும், இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் வேலை செய்யறதை நிறுத்திருது.

அவ்வளவு ஹாட் நியூஸா அதுலே இருக்கு? எதுக்குப் பொங்குது/மங்குதுன்னு தெரியலையேப்பா. நம் வட்டத்தில் குமுதம் வலையில் படிக்கும் அன்பர்கள் என்ன ஏதுன்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கப்பா.

ஆமாம். அதுலே என்னத்தைப் படிக்க இவ்வளவு மண்டையிடி?

எல்லாம் பழக்க தோஷம்தான். வீட்டுக்குத் தெரியாம அந்தக் காலத்துலே படிப்போம். அவ்வளவு நல்ல பேர் அதுக்கு அப்பவே:-)

25 நயா பைசாதான் செலவு. ஹூம்..அதெல்லாம் பழங்கதை...... இருக்கட்டும் ஒரு பக்கமா.

இப்போதையக் கவலை குமுதம் நம்ம கணினியில் திறக்க முடியலை.

குமுதம்.காம் க்கு மடல் அனுப்பினேன். கிணற்றில் போட்ட கல்:-)

Wednesday, March 26, 2008

பீர்க்கங்காய் ....(வாட் எவர் இட் ஈஸ்)

எச்சரிக்கை: இது ஒரு சமையல் பதிவு:-)


எந்தக் காய்க்கும் இல்லாத ஒருதனிச்சிறப்பு இந்தப் பீர்க்கங்காய்க்கு இருக்கு. தோலையும் விடவேணாம்:-)))) ரெண்டுவகையாக... ஒரே காயில் & ஒரே நாளில்.

பீர்க்கந்தோல் துவையல். பீர்க்கங்காய் கூட்டு, பொரியல் இல்லேன்னா இந்த வாட் எவர் இட் ஈஸ்:-)))


கிடைப்பதே அபூர்வம். அதுலேயும் ரெண்டு காய் (600 கிராம்) வாங்குனாலே ஜாஸ்தி. இப்ப யாரோ செஞ்ச புண்ணியத்தால் பீர்க்கங்காய், பாவக்காய், வெள்ளைப்பூசணி, சுரைக்காய் இங்கே உள்ளூரிலேயே 'ஹாட் ஹவுஸ்'லே பயிர்செஞ்சு ஞாயித்துக்கிழமை சந்தைக்கு வருது. அதுவும் ஒரே ஒரு கடைதான். ஒரு மாசம்வரை மட்டுமே யாவாரம்.



ஒரு பெரிய சுரைக்காயைக் காயவச்சு அதுக்கு பச்சைச் சுரைக்காய் வர்ணமடிச்சுக் கடையில்( கடை என்ன கடை? ட்ரக் பின்னாலேதான் கடையே)
தொங்கவிட்டிருக்கார். அலங்காரமாம். சுரைக்குடுக்கை. நம்மூர்லே இதுதான் நீச்சல் கத்துக்கப் பயன்படும் ' லேர்ன் டு ஸ்விம், ஃப்ளோட்' னு சொன்னதும் கடைக்காரருக்கு ஒரே ஆச்சரியம்:-)



இனி சமையல் குறிப்பைப் பார்க்கலாம். வகுப்பில் நம்ம ரங்குகளுக்கு முன்னுரிமை.:-))))




முழுப் பீர்க்கங்காயைக் கழுவிக்கணும். தோல்சீவும் கருவியால் முதலில் நம்ம கைவிரலில் தட்டுப்படும் ரிட்ஜ் இருக்கு பாருங்க, அதை மெலிசா வரிவரியா (நூல்போல வரும்)சீவி அதைக் குப்பையில் சேர்க்கவும்:-)


அடுத்து தோலைச் சீவணும். கொஞ்சம் சதைப்பற்று வந்துட்டாலும் கவலை இல்லை. முழுசும் சீவி எடுத்து வச்சுக்குங்க. ரெண்டு காய்களுக்குச் சொல்லும் அளவு இவை.



துவையல்: செய்முறை.

துவையலுக்கும் சட்டினிக்கும் என்ன வித்தியாசம்? துவையலுக்குத் தாளிக்க வேணாம். அது இருக்கட்டும்.




தோலோடு கூடிய உடைத்த உளுத்தம் பருப்பு: காலேயரைக்கால் கப்



கொட்டையில்லாத புளி : கமர்கட் அளவு



மிளகாய் வற்றல் : 5 இல்லே 6



பெருங்காயத்தூள் : ஒரு அரை டீஸ்பூன்



பீர்க்கம்தோல்: அந்த 2 காய்களின் தோல் சீவி வச்சது



தேங்காய்த் துருவல்: கால் கப்.



எண்ணெய் : ஒரு டீஸ்பூன்.



உப்பு: ஒரு முக்காலே அரைக்கால் டீஸ்பூன்


வெறும் வாணலியில் உளுத்தம் பருப்பைக் கொஞ்சம் சிவக்க வறுத்துக்கொள்ளவும். அதை ஒரு தட்டில் எடுத்து வச்சுக்கணும்.
ஒரு டீஸ்பூன் எண்ணெய் அதே வாணலியில் சேர்த்து மிளகாய் வத்தல், பெருங்காயத்தை வறுக்கணும். மிளகாய் கருகிடப்போகுது. கவனம் தேவை. பிறகு அதுலேயே பீர்க்கந்தோலைப் போட்டு வதக்கணும். அடுப்புத் தீ 'சிம்'லெ இருக்கட்டும். வதங்குனதும் தேங்காய்த்துருவலைச் சேர்த்து ஒரு கிளறிகிளறிட்டு அடுப்பை அணைச்சுருங்க.



கொஞ்சம் ஆறுனதும் உப்புப் புளியையும் கூடச் சேர்த்து துவையல் ஜார்லே அரைச்சுக்குங்க. கடைசியா வறுத்துவச்ச உ.பருப்பு சேர்ந்து கரகரன்னு அரைச்சு எடுத்துட்டாப் போதும்.


தோலோடு கூடிய உ.ப. இல்லாதவங்க வெறும் வெள்ளை உ.ப. சேர்த்துக்கலாம். தோலுக்கு என்ன மவுஸ்? அது ஒண்ணுமில்லை. ஏதோ தெரியாத்தனமா வாங்கிவச்சது வீட்டிலே கிடக்கு. இப்படியாவது தீர்த்துடலாமுன்னுதான்:-)



கொத்ஸ், வீட்டில் அரைக்கும்போது தேங்காய் வேணாம். மிளகாயை ஒன்னுரெண்டு குறைவாப் போடுங்க கொத்ஸ்.


இது சாண்ட்விச்சுக்கும் நல்லாவே இருக்கு.



அடுத்தது: இந்தப் பதிவின் தலைப்பு.


கூட்டுன்னு சொல்லலாமா இல்லையான்னு தெரியலை. வழக்கமான செய்முறையில் இருந்து மாறுபட்ட சேர்வைகள்.அதான் முன் ஜாக்கிரதை
முனியம்மாவா இருக்கேன்.



பாசிப்பருப்பு: கால் கப்

க. பருப்பு: ரெண்டு டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1 (பொடியா நறுக்குனது)

தக்காளி- 2 (துண்டுகளா நறுக்கி வச்சுக்கணும்)

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்.(நான் போட்டது MTR சாம்பார் மசாலா)

மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள்- கால் டீஸ்பூன்

உப்பு - ஒரு டீஸ்பூன்

கருவேப்பிலை- ஒரு இணுக்கு

சீரகம் - அரை டீஸ்பூன்

எண்ணெய்- 3 டீஸ்பூன்


தோலெடுத்த அந்த ரெண்டு காய்களின் துண்டங்கள். கொஞ்சம் பெருசாவே நறுக்கிக்கலாம். 1 அங்குல அளவு.


சமையல் ஆரம்பிக்குமுன்னே ரெண்டு பருப்பையும் நல்லாக் கழுவிட்டுக் கொஞ்சம் தண்ணீரில் ஊறவிடுங்க. அதுக்கப்புறம் காய்களின் தோல் சீவி, துவையலுக்கு வறுத்து, அரைச்சுன்னு வேலை நடக்கட்டும்.


ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் இந்தப் பருப்புகளைச் சேர்த்து அரைக் கப் தண்ணீரும் ஊத்தி 100% பவரில் 3, 50% பவரில் 8 நிமிஷமும் வையுங்க. அதுபாட்டுக்கு வேகட்டும்.

வாணலியில் எண்ணெய் ஊத்தி அடுப்பில் ஏத்துங்க. சூடானதும் சீரகம் போட்டு வெடிக்க விட்டு, கருவேப்பிலை, வெங்காயம்,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கணும். நல்லா வதங்குனதும், ம.பொடி, சா.பொடியைச்சேர்த்து ஒரு 20 வினாடி புரட்டிட்டு அதில் தக்காளித் துண்டங்களைச்சேர்த்து வதக்குங்க. ஆச்சா..... நல்லா வதங்குனதும் பீர்க்கங்காய்த் துண்டு சேர்க்கணும். தக்காளி சேர்த்தும் தண்ணீர் விட்டுக்கும். பத்தலைன்னா அரைக் கப் தண்ணீர் சேர்த்து உப்பையும் போட்டுக் கிளறி மூடிவைச்சு வேகவிடுங்க. 'சட்'ன்னு நாலைஞ்சு நிமிசத்தில் வெந்துரும். இப்ப வெந்துகிடக்கும் பருப்புக்களைச் சேர்த்து நாலு நிமிஷம் ஒரு கொதி கொதிக்கவிட்டு அடுப்பை அணைச்சுடலாம்.


சப்பாத்திக்கு நல்லா இருக்கும்.


இருக்குன்னு சொல்லி கோபால் சாப்பிட்டார்:-)


பாசிப்பருப்பு நல்லா மசிய வெந்துபோய், க.பருப்பு மட்டும் கண்ணை முழிச்சுக்கிட்டு இருக்கு. தேங்காய் சேர்க்கலை. (கொத்ஸ் கவனிக்க)


சொந்த சாகுபடியில் தோழி வீட்டுச் செர்ரி டொமாட்டோவும் நம் வீட்டு வெங்காயமும்.

செம்பருத்திப் பூவு.....




வீட்டின் புதுவரவு.
இந்தப் பூக்களில் எதாவது விசேஷம் தெரிகிறதா?

Tuesday, March 25, 2008

வடக்கும் தெற்கும், மூணு தலைமுறையும்

பேசாமச் சும்மா கிடக்கலாமுன்னா விடறாங்களா? ரமணி வர்றாரு. கச்சேரி வச்சுருக்காங்கன்னு தூண்டில் போட்டாங்க ஒரு தோழி. என்ன ஏதுன்னு விவரம் அனுப்பச் சொல்லிட்டு வந்தேன். வீட்டுக்கு வந்து பார்த்தா....விவரம் கணினியில் வந்து காத்திருக்கு.


புல்லாங்குழல் கலைஞர், டாக்டர் நடேசன் ரமணி அவர்களின் 75 வது பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி. பரவாயில்லையே....நம்மூர் ஆளுகளுக்கு இதெல்லாம் கூடத் தெரிஞ்சுருக்கே. யாரா இருக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு? 'மூச்' விடாம நடக்குதுன்னு பார்த்தால்....
நம்ம பல்கலைக் கழகத்தின் ம்யூசிக் டிபார்ட்மெண்ட் கொஞ்சம் ஸ்பான்ஸார் செஞ்சுருக்கு. இண்டியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ், ஆஸ்த்ராலியா இண்டியா கவுன்ஸில், ஏஷியா நியூஸி ஃபவுண்டேஷன்னு முழ நீளம் ஸ்பான்ஸாருங்க லிஸ்ட் ப்ரோஷர்லே இருக்கு!
நடராஜ் கல்ச்சுரல் செண்ட்டர் மெல்பேர்ன் ஆஸ்தராலியா சார்பில் ஏற்பாடு செய்த ஸ்பிரிட் ஆஃப் இண்டியாவின் 28வது நிகழ்ச்சி.



வடக்கையும் தெற்கையும் இணைக்கிறாங்களாம் கர்நாட்டிக் & ஹிந்துஸ்தானி இசையின் மூலம்.பலே பேஷ் பேஷ்.



மஞ்சரி கேல்கர் என்ற மராத்தியர் ஹிந்துஸ்தானி பாடறாங்களாம். நிகழ்ச்சி நடப்பது வியாழனா இருக்கேன்னு கொஞ்சம் சடச்சுக்கலாமுன்னா மறுநாள் குட் ஃப்ரைடே. விடுமுறைநாள்.



இவ்வளவுதூரம் வந்திருக்கும் கலைஞர்களை ஆதரிக்கணும் என்றதைவிட இவுங்க நிகழ்ச்சி ஆக்லாந்துலே நடக்கப்போறதில்லைன்றதே திருப்தியா இருந்துச்சு! நல்ல நிகழ்ச்சிகள் கலைஞர்கள் எல்லாம் ஆஸ்தராலியா & நியூஸின்னு ப்ரோக்ராம் போட்டாலும் நியூஸின்னாலே, ஆக்லாந்துன்னு ஆகி இருக்கு. போனமாசம் நம்ம எஸ்.பி.பாலசுப்ரமணியம் வந்துட்டு அங்கே மட்டும் பாடிட்டுப் போயிருக்கார். இதன் காரணமா புகைஞ்சுக்கிட்டு இருந்ததுக்கு இப்பக் கொஞ்சம் ஆறுதல். இந்த நிகழ்ச்சி எங்களுக்கே எங்களுக்கு.( என்ன பொறாமை பாருங்க. அல்பம்) இங்கே டனேடின் என்ற ஊரிலும் நடக்குது. அது பரவாயில்லை. அது நம்மத் தெற்குத்தீவுதான். போனாப் போட்டும்.


ஏழரைக்கு நிகழ்ச்சி ஆரம்பம். எப்படியும் ஒன்பது மணிக்கு முடிஞ்சுரும். வந்து சாப்புட்டுக்கலாமுன்னு ஆர்ட் செண்டருக்கு ஏழுமணிவாக்கில் போய்ச் சேர்ந்தோம். க்ரேட் ஹாலில் நிகழ்ச்சி. இங்கேதான் முந்தி எல்.சுப்ரமணியம் வயலின் கச்சேரிக்குப் போனது. எல்லாம் டெய்லர்டு ப்ரோக்ராம். நேயர் விருப்பச்சீட்டு எல்லாம் அனுப்ப முடியாது. அது நடந்தது ப.ஆ.மு.


உள்ளே ஃபோயரில் மேசைகள் போட்டு டிக்கெட்டு விற்பனை தயார். போணி நாங்கதான். கோபால் தலைக்கு 35 டாலர். எனக்கு 30. பதிவர் என்பதால் சலுகை! ச்சும்மா....... வெட்டி ஆஃபீஸர்களுக்கு 30. :-)



உள்ளே ஹார்மோனியம், தபேலா கூட்டணியில் பாடகியின் மைக் டெஸ்ட்டிங் நடந்துக்கிட்டு இருந்தது. ஆஆஆஆஆ,........ஆஅ....ஆஆ.......அ.ஆஆஅ..........



இன்னும் 10 நிமிஷத்தில் அரங்கத்துக்குள்ளே போகலாமாம். அப்படியே வளாகத்தின் உள்ளே கொஞ்சம் சுத்திக்கிட்டு இருந்தோம்.
இப்பத்தான் இது ஆர்ட் செண்டர். இந்த நகரத்தின் நிர்மாண சமயத்தில் இது இங்கே பல்கலைக்கழகக் கட்டிடமா இருந்துச்சு. எல்லாம் பிரிட்டனின் பாரம்பரியத்தில் கட்டப்பட்டது. எல்லா டிபார்ட்மெண்டும் ஒரே வளாகத்தில். கூட்டம் பெருகி, மாணவர்களின் எண்ணிக்கை ஏறுனதும் வேற இடத்துக்குப் பல்கலைக் கழகம் மாற்றி இருக்காங்க. ( இது பக்கத்தில்தான் நம்ம வீடுன்றது கூடுதல் தகவல்)

அட்டகாசமான வேலைப்பாடுள்ள தூண் வரிசைகள் உள்ள வெராந்தா, புல்வெளி, மாடர்ன் ஸ்கல்ப்ச்சர் ன்னு சிலதை சுட்டுக்கிட்டேன் கெமெராவில்.
புகைப்படபோட்டிக்கு அனுப்பணுமுன்னு இப்பெல்லாம் எங்கே நல்லதா எதைப் பார்த்தாலும் எடுத்து வச்சுக்கறதுதான். அடுத்தடுத்த போட்டிகளில் என்ன தலைப்பு வரப்போகுதுன்னு யாருக்குத் தெரியுது? கற்பனை', நம்ம பிட்' வாத்தியார்களுக்குக் கொடிகட்டிப் பறக்குதே!! தூண்கள்/பில்ல்ர்ஸ்ன்னு தலைப்பு வரணுமேன்னு இருக்கு:)


சில கட்டிடங்களில் குட்டியா சினிமாத் தியேட்டர், கலைநிகழ்ச்சி நடத்துவதற்கான 'சதர்ன் பாலே டான்ஸ் தியேட்டர்', கலைப்பொருள் விற்பனைக்கூடங்கள்ன்னு இருக்கு. ஒரு அருமையான ரெஸ்டாரண்டும் நடக்குது. இதுதவிர சாண்ட்விச், மஃப்பின், கேக் இப்படிச் சிறுதீனி & காஃபி,
ஐஸ்க்ரீம்( எங்க நாடுதான் ஐஸ்கிரீம் முழுங்குவதில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கு)னு விற்கும் கடை, இதுக்குள்ளேயே இந்தக் கட்டிடத்தின் தகவல்& விவரங்கள் வழங்கும் இடம் இருக்கு.

இங்கே ஒரு அப்ஸர்வேட்டரிகூட இருக்குதுங்க. வெள்ளிக்கிழமை இரவுகளில் பொதுமக்கள் உள்ளே போக அனுமதி உண்டு. நம்ம கேண்டர்பரி பல்கலைக்கழக அஸ்ட்ரானமி படிக்கும் மாணவர்கள் இதைக் கவனிச்சுக்கறாங்க. கோல்ட் காயின் எண்ட்ரி நமக்கு. ஒன்னு, ரெண்டு டாலர்கள் இங்கே நியூஸியில் தங்க நிறத்தில் செய்யறாங்க. நாங்களும் சிலமுறை இங்கே போய் சில கோள்களையும், பல நட்சத்திரக் கூட்டங்களையும் பார்த்துருக்கோம்.

புல்வெளிகளில் ஒண்ணை இப்ப சின்னக் குளமா மாத்தி நீலத்தண்ணீரா இருக்கு. அழுத்தமான நீல வர்ணம் அடிச்சுட்டாங்க போல அடித்தரையில். நல்லாவே இருக்கு.

நேரமாச்சுன்னு உள்ளே போய் உட்கார்ந்தோம். இதுலேயும் நாங்கதான் முதல்.
'மீ த ஃப்ர்ஸ்ட்' பின்னூட்டங்கள் போல:-)))) கொஞ்ச நேரத்தில் மக்கள்ஸ் வர ஆரம்பிச்சாங்க. எல்லாம் வெள்ளையர்கள். அதில் 95 % யுனிவர்சிட்டி ஆளுங்க.
இந்திய முகம் ஏதாவது தெரியாதா என்ற நப்பாசை. ஊஹூம்.........




மொஹிந்தர் தில்லான், நட்ராஜ் கல்ச்சுரல் செண்டரின் பிரெஸிடெண்ட் ஒரு அறிமுகம் கொடுத்தார். இவர் டெல்லி யூனியில் ஆங்கிலப்பாட லெக்சரரா இருந்தது, சங்கீதத்துலே (கேட்கறதுலேதான்) ஆர்வம் வந்தது, இப்படி ஒரு கலைநிகழ்ச்சிகளுக்கான ஆரம்பமுன்னு சொன்னார். இவர் மனைவி இங்கிலாந்துக்காரர். பியானோ வாசிக்கப் படிச்சவங்களாம். அவுங்களுக்கும் வேறு நாட்டு இசையில் ஈர்ப்பு இருந்துச்சாம். அதுவும் பண்டிர் ரவிசங்கரின் சிதார் கேட்டப்பிறகு ஆர்வம் அதிகமாயிருச்சாம். அப்பத்தான் இந்த மாதிரி ஒரு எண்ணம்வந்து இந்த நட்ராஜ் கல்ச்சுரல் செண்டர் தொடங்குனதாம். ஒரு ஏழு வருசம் முன்பு இவர் மனைவி இறந்துட்டாங்க. அல்ஸைமீர் வந்து ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்களாம். ஹும்..... மொஹிந்தர் இப்ப ஆஸ்தராலியா மெல்பேர்ன் நகரில் நார்தன் இன்ஸ்டிட்யூட்லே கற்பிக்கிறார்.




ப்ரோஷர்லே ஈ மெயில் விலாசம் இருக்கு. அதுலே என்னைத் தொடர்பு கொண்டீங்கன்னா, உங்களுக்கு அடுத்துவரவிருக்கும் நிகழ்ச்சிகள் விவரத்தையெல்லாம் அப்பப்பத் தெரிவிக்கிறேன்னு சொன்னார். கூடவே இங்கே இந்தியர்கள் குடும்பம் கிடைச்சால் நல்லது. ரெஸ்டாரண்ட் சாப்பாடு போரடிச்சுருதுன்னார்.(சொல்லிட்டு என்னைப் பார்த்தமாதிரி ஒரு தோணல்)
மஞ்சரி, பிஸ்மில்லாகான் அவார்ட் வாங்குனவங்களாம். அவுங்கதான் முதலில் வந்து பாடினாங்க. மொத்தம் நாலு பாட்டு. சிரிச்சமுகமா இருந்தாங்க. என்ன பாட்டு என்றதை ஆங்கிலத்தில் சின்ன விளக்கம் சொன்னாங்க. சிகப்பு & மஜெந்தா டவுள் கலர் ஷேடில் பட்டுப்புடவை.
ஹார்மோனியம் வாசித்தவர்; சுயோக் குண்டல்கர்
தபேலா : உத்பல் தத்தா.
ஆதிதேவோ மாஹாதேவோ ......ராகம் ஸ்ரீ

ரங்க் ல்லாகே மோரா பியா கா பகடி..........கணவனின் தலைப்பாகை இருக்கும் நிரத்தில் தனக்கும் உடை வேணுமுன்னு கேட்கும் இள மனைவி பாடும் பாட்டு.


அத்தரா சுகந்தா ............ உங்க ஊருக்குப் பொருத்தமான பாட்டு. ( எங்க ஊர் நியூஸியின் கார்டன் சிட்டி) காலையில் ஊர் சுற்றிப்பார்க்கப் போனால் எங்கே பார்த்தாலும் தோட்டமும் பூக்களுமா ரொம்ப அழகா இருக்கு. இந்தப் பாட்டு பசந்தா கேதார்னு ரெண்டு ராகம் ரெண்டு மெலடியும் சேர்ந்து வருதாம்.


கடைசியா ஒரு மராட்டி பஜன்.



ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் ரொம்ப (?) பரிச்சயமில்லாத்தால் விளக்கிச் சொல்லத்தெரியலை. நம்ம ஸ்வரங்களுக்குப் பதிலா இதுலே ஆஆஆ தான் இருந்துச்சு. தும்ரி & தாப்பா செமி க்ளாஸிகல் பாட்டுகளாம்.



ஒரு பத்து நிமிஷ இடைவேளை. அப்பத்தான் கவனிச்சேன் ரெண்டு சேச்சிமார் வந்துருக்காங்க. எனக்கு விவரம் அனுப்புன தோழியும் வந்துருக்காங்க. டிக்கெட் வித்துக்கிட்டு இருந்த சீனரிடம் எத்தனை டிக்கெட் வித்தே? எத்தனைபேர் வந்துருக்காங்கன்னு கேட்டேன். 90 டிக்கெட் வித்துப்போச்சாம். 30 பேர் க்ரூப் புக்கிங் செஞ்சு (யூனியில்) வந்தாங்களாம். ஆக மொத்தம் 120 பேர். பரவாயில்லை. நம்மது ராசியான கைதான். போணி செஞ்சது வீண் போகலை.



டாக்டர் ரமணி மெதுநடையில் வந்தார். கூடவே தியாகராஜன்( ரமணி அவர்களின் மகன்), அதுல் ( ரமணி அவர்களின் மகள் வயிற்றுப் பேரன்) ராஜா ராவ் என்றவர் மிருதங்கம். திருச்சி முரளி கடம். எல்லாரும் வேட்டி, ஜிப்பாவில் பளிச்சுன்னு வந்தாங்க.



திருவையாறு தியாகராஜ ஆராதனையில் வாசிச்ச அஞ்சு பாட்டுகளையும் இங்கே இசைக்கப் போவதாக அறிவித்தார். முதல் பாட்டு 'எந்தரோ மகானுபாவலு' இதுமட்டும்தான் எனக்குத் தெரிஞ்சது. ரெண்டாவதுக்கு லதாங்கி ராகத்தில், கண்டசாபு தாளம்னு மட்டும் சொன்னார். அதுக்கப்புறம் மூணு பாட்டுக்கும் என்ன ஏதுன்னு விவரம் ஒண்ணுமே சொல்லலை. நானும் கச்சேரிக்கு (கேட்கப்) போனேன்னு இருந்துச்சு.

இந்த மாதிரி வெளிநாடுகளில் ( உள்நாட்டில் மட்டும் 100% சங்கீதம் தெரிஞ்சவுங்களா கச்சேரிகளுக்குப் போறாங்க?) நிகழ்ச்சி செய்யும்போது, கொஞ்சம் விளக்கம் சொன்னால் தேவலை. என்ன பாட்டு, ராகம், தாளம் சொன்னால் போதும். சொல்ல முடியலைன்னா பேசாம அச்சடிச்சுக் கொடுத்தாலும் போதும்.



வெவ்வேற சைஸுகளில் மும்மூணு குழல் வச்சுருந்தாங்க மூணு பேரும். பெரியவருக்கு வயசானது நல்லாவே தெரிஞ்சது. ரெண்டு இடத்தில் கொஞ்சம் பிசிறு. மூச்சுப்பிடிச்சு ஊதணுமே. இல்லையா? பேரனுக்கு ரெண்டு இடத்தில் 'சின்னதா' ஒரு தடங்கல். அந்த ஃப்ளோ இல்லாமல் இருந்துச்சு. (தப்புக் கண்டுபிடிக்கணுமுன்னா ரெடின்னு திட்டாதீங்க)

இந்தக் குழுவில் பெஸ்ட்ன்னு சொன்னால் மிருதங்கமும் கடமும்தான். ஒரு பத்துப்பதினைஞ்சு நிமிசத்துக்குத் தனி ஆவர்த்தனம், தூள் கிளப்பிருச்சு. கடக்காரர் சட்ன்னு பார்த்தா ஆஃபீஸ் உத்தியோகஸ்தர் மாதிரி இருக்கார். கைக்கு அடக்கமான குட்டியா ஒரு கடம். சட்டையைத் தொறந்துட்டுத் தொப்பையில் எல்லாம் வச்சு வாசிக்கலை:-)))))

நிகழ்ச்சி முடியும்போது பத்தே முக்கால். ரமணி & குழுவுக்கு வணக்கம் சொல்லிட்டு, நல்லா இருந்துச்சுன்னும் சொன்னேன். கடம் & மிருதங்கக்காரர்களை 'அட்டகாசம்'னு பாராட்டினேன். கிடைச்ச சந்தர்ப்பத்தை விட்டுறாம ( வேணுமா இந்தப் பெருமை?)
இந்தக் கூட்டத்தில் நாங்க மட்டுமே தமிழ்க்காரர்கள்னு சொன்னேன்.



ரமணி அவர்களும் உங்களைப் பார்த்தது சந்தோஷம்னு சொன்னார்(எல்லாம் ஒரு சம்பிரதாயம்தான் இல்லே?)



அடுத்த முறை மாண்டலின் ஸ்ரீனிவாஸ் வரப்போறாருன்னு மொஹிந்தர் சொன்னார். வரட்டும்.



மறக்கமுடியாத நிகழ்ச்சி, மனசில் அப்படியே பச்சக்ன்னு ஒட்டிக்கிச்சு, ஒண்டர்ஃபுல் ஈவ்னிங், அப்படி இப்படின்னு அளக்க முடியாது. சுமாராத்தான் இருந்தது. கிடைச்சவரை புண்ணியமுன்னு இருக்கணும்,நாங்கெல்லாம். இம்மாந்தூரம் யார் வருவாங்க? இல்லை?



பதினோரு மணிக்கு வீட்டுக்கு வந்தால்.....கோபாலகிருஷ்ணன் மொறைக்கிறான், எங்கேபோய்த் தொலைஞ்சேன்னு.......



அவனுக்குச் சாப்பாடு, வெளியே மத்தவங்களுக்குச் சாப்பாடுன்னு போட்டுட்டு, நாங்க மோர் சாதம் சாப்புட்டுப் படுத்தோம்..

Thursday, March 20, 2008

KRS-உனக்கு ஆப்பு ஏலோ ரெம்பாவாய்

இப்படி ஓர் மாணவரா?


டீச்சர் ஆப்புரெய்ஸல் பண்ணுங்கன்னு 'தானே' வந்து மாட்டிக்கிட்டார். சொ.செ.சூ:-))) டீச்சரைப்பார்த்து ஓடிஒளியும் மாணவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருத்தரா? இரு, ஆப்பு வைக்கிறேன்னுட்டுக் கண்ணாடியை நல்லாத் தொடைச்சு காதுலே மாட்டிக்கிட்டு உக்கார்ந்தேன்.

அங்கங்கே பதிவைப் படிக்காமலேயே பின்னூட்டம் போடறாங்களாமே..... நெசமாவா? நாமும் அப்படி(யே) செஞ்சுறலாமுன்னா...... இந்த மனசாட்சி வேற
முன்னாலெ வந்து கும்மியடிக்குது. இது வேலைக்காகாதுன்னுட்டு , எங்கெடா அந்த மாதவிப் பந்தல்? எட்றா அதை..... பந்தலைப் பிரிச்சு மேய்ஞ்சுக் கந்தலாக்கிறலாமுன்னு நம்ம ஜிகேகிட்டே சொன்னேன்..... பூனைப் பயபுள்ளே பயங்கரமானவன். 'சட்'னு எடுத்துக் கொfடுத்துட்டான்.

மொத்தம் 102 பதிவுகள். 2005 வது வருசம் ஆரம்பிச்சுருக்கார். அந்த வருசம் பூராவுக்கும் ஒரே ஒரு பதிவு. (வெல்டன்) ஓம் நமோ நாராயணா,ஓம் நமோ வெங்கடேசான்னு சொல்லிக்கிட்டே பிள்ளையார் சுழி போடறார். எப்படி? பிள்ளையார்ன்னு லேபிள் கொடுத்து:-))))

பதினோரு மாச விரதம். ஆளையே காணோம். எந்தக் கைகேயி காட்டுக்கு அனுப்பினாளோ? மக்கள்ஸ் நிம்மதியா இருக்காங்க. ...

மறுபடி புள்ளையார்ன்னு லேபிள், கூடவே படம் ( நல்லாவே இருக்கு) சின்னதா ஒரு நாலைஞ்சுவரிப் பதிவு. கடவுள் வாழ்த்து?ம்ம்ம்ம். இருக்கட்டும்.

ஸ்டார்ட்டிங் ட்ரபுள் முடிஞ்சு வண்டியை எடுத்தாச்சுப்பா. ஒளவையாரையும் புள்ளையாரையும் கொஞ்சிட்டுக் கிளம்புன வண்டி நேராப்போய் நின்னது திருப்பதியில்.

குற்றம் கண்டுபிடிச்சு ஒரு குட்டு வைக்கலாமுன்னு படிச்சா..... எங்கே படிக்கிறது.?? கண்ணுலே குளம் கட்டி நிக்கும்போது என்னன்னு படிக்கிறது?
பொல்லாத மாணவர். டீச்சரை அழவச்ச வெங்காயம்:-)


பிரம்மோத்ஸவப் பதிவுகள் ஒம்போதும் நவரத்தினங்கள். படிக்கறதோட விட்டுறாம பார்த்து மகிழவும்ன்னு அட்டகாசமான படங்கள். ஒவ்வொண்ணும் அப்படியே பார்த்துக்கிட்டே இருக்கச் சொல்லுது. எங்கிருந்து கிடைச்சதோன்னு ஆராயக்கூட மனம் வரலை. பேசாம இதையே காப்பியடிச்சு வச்சுக்கிட்டா ஆச்சு.

சாமி வாங்குன இடிகள் படிச்சுட்டு, என் மனசாட்சி என்னை இடிச்சதை எங்கெபோய் சொல்வேன்?
நாமும்தான் 'திருப்பதிக்குப் போய்வந்தேன் நாராயணா'ன்னு இருக்கோம். இவ்வளோ விஷயம் இருக்கா அங்கே கவனிக்கன்னு எனக்கே(!) வியப்பாச்சு
திருமலைக் கோயிலில் இனிப் பார்த்துவச்சுக்கணுமுன்னு குறிப்பெடுக்க வச்சுட்டாரு கோயில் பதிவுகளில். இப்பெல்லாம் நம்மூட்டுப் பெருமாளுக்கும் ஒரு 'தயாசிந்து' வச்சுவுடறதுதான்:-)

(அதுக்காக கோபாலின் தாடையில் தழும்பைத் தேடவேணாம்)

சாமியைப் பத்தி எழுத இவரைவிட்டா வேற ஆளு இல்லைன்னு நாம் சொல்லணுமாம்? என்ன ஒரு இது பாருங்க. நடைவேற அருமையா வந்து விளுது. அப்புறம் வேற வழி? சொல்லிட்டா ஆச்சு. கோயில்கோயிலாப் போய் நாமெல்லாம் சாமியார் ஆயிட்டா? அப்புறம் ப்ளொக் படிக்க ஆளுக்கு எங்கே போவதுன்னு ஒரு பயம் வந்துருச்சு போல.......

ஒரு பண்டிகை, நல்லநாளை விட்டு வைக்காமத் தீவுளிக் கொண்டாட்டம், கந்தசஷ்டி, பேய்த் திருவிழா, நன்றி சொல்லும்நாள்ன்னு இண்டோ அமெரிக்க நல்லெண்ணத் தூதரா ஆனதுமில்லாம, ச்சும்மா வந்து படிச்சுட்டுப்போற ஆளுகளுக்கு என்னதான் தெரியுமுன்னு பார்க்கப் பரிட்சை வச்சுட்டாருப்பா. எல்லாம் ராமாயணம், மகாபாரதம், திருத்தலங்கள்ன்னு தெரிஞ்ச( தா நாம் எல்லோரும் நினைச்சுக்கிட்டு இருக்கும்) விஷயங்கள்தானாம்.

புதிர் போடறது ஒரு பக்கமுன்னா...... இந்த ஜெயஸ்ரீ? எல்லாத்துலேயும் பத்துக்குப் பத்துன்னு அடிச்சு ஆடறாங்க. டீச்சர்னு பேர் வச்சுக்கிட்டு, துப்பட்டாவைத் தேடிக்கிட்டு இருக்கேன். பின்னே? வெக்கக்கேட்டை மறைக்க முக்காடு வேணாமா?

2006லே வெறும் முப்பத்தியேழு பதிவுதானேன்னு உள்ளே வந்தவளை இப்படிச் சங்கிலி ( ப்ச்.... பொற் சங்கிலிப்பா) போட்டுக் கட்டி வச்சதுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? மத்தவேலைகள் எல்லாம் அப்படியப்படியே நின்னு போச்சு.

முழுக்க நனைஞ்சாச்சு...மிச்சம் மீதிகளையும் பார்த்துட்டே போகலாமுன்னு போனவருசத்துக்குள்ளே போனேன்....................

பெருமாளுக்கே பேதம் இல்லே...அப்புறம் வெறும் ஆளான நமக்கு எதுக்கு சைவம் & வைஷ்ணவ பேதமுன்னு ஒரு உலுக்கு உலுக்கிட்டார். குலுக்குன்னா படிச்சீங்க? :-))))

ஆண்டாளம்மா ஓடி வருது. நாமும்கூடத்தான் ஓடுவோம். கொஞ்சமா நஞ்சமா? நூறு தடா சக்கரைப் பொங்கலாம், வெண்ணெயாம். கொலஸ்ட்ரால் ஏறப்போகுது.........
இதுலே சுயம்பாகமா ஒரு புதினாத் தொவையலாம். மனுசன்......நம்மையெல்லாம் எப்படி ஆலாப் பறக்க வைக்கிறார் பாருங்க. போற போக்குலே ஒரு சினிமா, பொன்னியின் செல்வன், சிலப்பதிகாரம்னு கலந்துகட்டி ஆடிக்கிட்டு இருக்கும் கலக்கல் மாணவர் யாருன்னு தெரிஞ்சதா?

இந்தவருசத்துக்கு சமூகசேவை, கோயிலுக்குப்போனா காசு கொடுத்துச் சாமியைப் பார்க்காதே, உண்டியலில் காசு போடாதேன்னுக்கிட்டே 'மயில்'தூதுகள் வேற ஆரம்பமாயிருக்குபோல. ஆறுமுக சாமிக்கு, தீட்சதர்களுக்குன்னு மடல் வழியா சமாதான(மயில்)ப்புறான்னு இன்னோரு ஓட்டம் ........

கண்ணனைக் கட்டிப்போட்டாங்களாம். அதுக்குப் பழிவாங்கறதுபோல கண்ணபிரான் ரவிசங்கர் நம்மை எழுத்தாலேயே கட்டி வச்சுருக்கார் இங்கே.

நவநாகரிக விஞ்ஞான உலகத்தில் இருக்கற நமக்கு, ஒரேடியா ஆன்மீகம், ஆத்திகமுன்னு எடுத்துச் சொல்லவும் சிலர் வேண்டி இருக்காங்கதானே? ஒரு விசயத்தைத் தெரிஞ்சுக்கிட்டாத்தானே அது இருக்கா இல்லையான்னு ஆராயலாம். சங்க காலத்துத் தமிழில் இல்லாட்டி அங்கங்கே கோவில்களில் இருக்கும் கல்வெட்டுகளில் எழுதி வச்சுருக்கறதைப்போல இருந்தா, படிக்கிறதோ
இல்லைப் புரிஞ்சுக்கிறதோ கஷ்டம்தான். இளைய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்கணுமுன்னா இந்தியக் கல்விமுறை மாதிரி உருப்போட்டுக் கத்துக்கோன்னு விடமுடியாது. காலம் மாறிகிட்டே வருது. விளையாட்டாக் கதை சொல்லிச் சொன்னாத்தான் கொஞ்சமாவது மனசுலே ஏறும்.

இந்தக் கதையின் மூலம் சொல்லி மனதில் ஏத்துறது உண்மைக்கும் புது முறையே இல்லை. பஞ்சதந்திரக் கதைகள் சொல்லிக்கொடுக்காத நீதிகளா?
கதை, பாட்டு. கலாட்டான்னு போனால்தான் படிக்கும்போது மட்டும் இனிக்காம பின்னாலே மனசில் ஊறவச்சுத் திங்கவும் முடியும்.

சாப்பாட்டு நேரம்வேற .....திங்கற எண்ணம் முன் வந்து நிற்குது.

போய்யா.போய் இன்னும் நல்லா ஆடிக்கிட்டும் பாடிக்கிட்டும் சொல்லவர்றதைச் சொல்லு. இருக்குடீ உனக்கு...........

Tuesday, March 18, 2008

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்.......

முன் கதைச் சுருக்கம்(!)


இந்த சனி வர்றதுக்கு நாலைஞ்சு வாரம் முன்னே இருந்தே ஏற்பாடுகள் ஆரம்பிச்சது. 'இது ஒரு ஆன்மீகக்கூட்டம். இங்கே இருக்கும் அனைத்து இந்தியர்களையும் ஒன்று சேர்க்க நினைக்கிறோம், நீங்க கொஞ்சம் உதவணுமு'ன்னு கேட்டுக்கிட்டாங்க. பொதுவா என்கிட்டே ஒரு பழக்கம். என்ன ஏதுன்னு துருவித்துருவிக் கேக்க மாட்டேன்.என்ன உதவின்னு மட்டும் கேட்டுட்டு எங்களால் ஆகக்கூடியதுன்னா செஞ்சு கொடுத்துடறது. முடியலைன்னா முடியலைன்னு சொல்லிடுவோம். பார்க்கலாம், யோசிச்சுச் சொல்றேன் இது எல்லாம் கிடையாது இப்படி உதவி கேட்கும் தருணங்களில்.

உதவி கேட்டவரை எனக்குத் தெரியுமான்னு எனக்குத்தெரியலை. 'தெரிஞ்சவர்தான். முந்தி ரெண்டுமூணு முறை பார்த்திருக்கோம். நீ மறந்திருப்பே'(!)ன்னு கோபால் சொன்னார். கொசுவத்திக்கே மறதியான்னு இருந்தேன். தமிழ்ச்சங்கம், இன்னும் கேரளா அசோஸியேஷனுக்கு எல்லாம் சொல்லியாச்சு.

இவுங்க நிகழ்ச்சியில் சில கலை நிகழ்ச்சிகளும் இருந்தா நல்லதுன்னு இவுங்களுக்கு எண்ணம். அரங்கம் எங்கே வச்சுக்கலாமுன்னு சில ஐடியாவும் கொடுத்தோம். பள்ளிக்கூடத்தில் இருக்கும் ஹாலுன்னா சரியா இருக்கும். மூணு மணி நேர நிகழ்ச்சிகளுக்கு ஒரு அறுபது டாலர் செலவு.
மூணுவாரம் இருக்கும்போது நிகழ்ச்சிக்கான ஹாலை ஏற்பாடு செஞ்சுட்டோமுன்னு தொலைபேசியில் சொன்னார். இங்கே இருக்கும் பெரிய ஹைஸ்கூலில் இருக்கும் அட்டகாசமான ஹால். Aurora centre. 700 பேர் உக்காரலாம். பக்கா தியேட்டர். இங்கத்து ஸ்கூல் ஆஃப் ம்யூசிக்கின் கட்டிடம். வாடகை எக்கச்சக்கம். 450 டாலர்கள்.



எங்க இவர்தான் 'அநியாய வாடகை'ன்னு புலம்பிக்கிட்டு இருந்தார். 'சரி, சும்மா இருங்க. நமக்குத்தான் செலவு செய்ய மனசு வராது.... அல்பம்.
கூந்தல் இருக்கறவ(ன்) அள்ளி முடிஞ்சிக்கிறா(ன்). நம்ம கேரளா பாய்ஸ் நடனத்துக்கும் பொருத்தமான மேடை'ன்னு இருந்தேன். ஆனாலும் அனாவசிய செலவாச்சேன்னுக்கிட்டே இருந்தார். அதுக்கப்புறம் அழைப்பிதழ் கொஞ்சம் கொண்டுவந்து கொடுத்துட்டுப் போனாங்க, நமக்குத் தெரிஞ்சவங்களுக்கெல்லாம் கொடுக்கச் சொல்லி.. நம்ம வீட்டுக்குப் பொதுவா வந்துபோறவுங்க அதிகம். எல்லாருக்கும் கொடுத்தாப் போச்சு.


ராஜ்குமார் என்பவர் வேதம், உபநிஷத் & பைபிள் பத்தியெல்லாம் பேசப் போறாராம். எல்லாம் முடிஞ்சதும் இண்டியன் ரெஃப்ரஷ்மெண்ட் உண்டாம். மாலை 7 முதல் 8.30வரை நடக்குது. நாங்களும் பார்க்கறவங்க கிட்டேயெல்லாம் சொல்லிவச்சோம்.

ஏழடிக்க அஞ்சு நிமிஷம் இருக்கும்போது போய்ச் சேர்ந்தோம். அஞ்சாறுபேர் வெளியிலும் நாலைஞ்சுபேர் அரங்கிலும் இருந்தாங்க. ஆனா பெயர் போட்ட பேட்ஜ்களோடு, நிகழ்ச்சிக்கு வந்தவங்களை வரவேற்கவும், உள்ளெ அரங்கம் வரைக் கூட்டிக்கிட்டுப்போய் உக்கார வைக்கவும் ஏழெட்டுப்பேர்! அந்தத் தெரிஞ்சவரைப் பார்த்ததும் நினைவுக்கு வந்துருச்சு. இன்னும் நமக்குத் தெரிஞ்ச சிலர் அங்கே இங்கே ஓடியலைஞ்சு ஏற்பாடுகளைக் கவனிக்கிறாங்க.


மேடையில் இந்தியக்கொடி. நாங்களும் அரங்கில் நடுநாயகமா உக்கார்ந்தாச்சு. ஆரம்ப ஐட்டமா தெரிஞ்சவரின் மகன் கிடார் வாசிச்சுக்கிட்டே 'மேரா பாப்'னு இங்கிலீஷ் பாட்டு மாதிரி ட்யூன்லே இந்திப்பாட்டு ஒண்ணு பாடினார்.
ஓஓஓஓ...இது எதோ சர்ச் க்ரூப் மீட்டிங் போல இருக்கே........... அடுத்து ஒரு பரதநாட்டியம். இங்கே நடனம் சொல்லிக் கொடுக்கும் தோழிதான் ஆடினார். அடுத்து கேரளா பாய்ஸ் நடனம். DHOOM MACHALE பாட்டுக்கு.
உள்ளூர் பேண்ட் ஒண்ணு வந்து ரெண்டு பாட்டுப் பாடுனாங்க. எங்கே கோரஸ் பாடும்போது மக்கள்ஸ் கூடவே சேர்ந்து பாட முடியாதோன்னு பெரிய திரையில் பாட்டின் வரிகள் வந்துக்கிட்டு இருந்துச்சு.



ராஜ்குமார் மேடைக்கு வந்தார். சென்னையைச் சேர்ந்தவராம். அந்தணர் குடும்பப் பின்னணியில் வாழ்க்கை. எஞ்சிநீயரிங் முடிச்சுட்டு ஸீமென்ஸ்லே வேலைக்குச் சேர்ந்தாராம். அப்புறம் ஜெர்மனி, சைபீரியான்னு சில இடங்களில் வேலை செஞ்சுருக்கார். இனி அவர் பேசியதில் சில.



கிறிஸ்து பிறக்குமுன் BC1650லே (??) வேதங்கள் உருவாச்சு. மனிதன் கடவுளை அடையும் முயற்சியில் இடைவிடாது முயன்றுகொண்டிருந்தான். அங்கே மேலோகத்தில் கடவுள் பரமாத்மா. இங்கே பூலோகத்தில் மனுசன் ஜீவாத்மா. இந்த ரெண்டு ஆத்மாக்களுக்கும் இடையில் தொடர்பே இல்லை. ஆனால் இந்த ஜீவாத்மா எப்படியாவது பரமாத்மாவோட சேரணுமுன்னு என்னென்னவோ முயன்று பார்க்கிறது. இப்போதுதான் ரெண்டுக்கும் கனெக்ஷன் குடுக்க குரு அங்கே தேவையா இருக்கார். கு என்றால் வெளிச்சம். ரு என்றால் இருள்.


வெளிச்சம் வந்தால் இருள் போயிரும். அந்த வெளிச்சம் எங்கே என்றதுதான் என் தேடலா இருந்தது.

வீட்டில், இந்துக் குடும்பத்தில் நான் தினசரி பூஜை, கோவிலுக்குப்போறதுன்னு இருந்தப்பவும் அந்த வெளிச்சம், அதாவது குரு எங்கேன்னு தேடிக்கிட்டே இருந்தேன்.
எனக்கு 1980லே மே மாசம் 25 ஆம் தேதி ராத்திரி 9.30 மணிக்கு என் தேடலுக்குக் கடவுள் விடை சொன்னார். இந்த விடை எங்கே இருந்துச்சுன்னா பைபிளில். அதுலே (எதோ மேத்யூ ,அத்தியாயம் எண், வசனம் எண் எல்லாம் சொன்னார்)
பைபிளில் ஏசு உலகத்திற்கு நான் ஒளியா இருக்கேன்னு சொல்றார். எனக்கு அப்போ 28 வயசு. இப்ப 56 வயசு. என் வாழ்க்கையில் பாதிநாள் யேசுவைத் தெரிஞ்சுக்காமலே இருந்துட்டேன். அடுத்த பாதியில் ஏசுவை முழுசாத் தெரிஞ்சுக்கிட்டேன்.

மனுசங்க ஏன் சாகறாங்க தெரியுமா? பாவம் செய்யறதால். அப்பப் பாவமே செய்யாத ஏசு ஏன் இறந்தார்ன்னு கேட்டால் நமக்காகத்தான் இறந்தார். .....ஆனா அவர் திரும்ப உயிரோடு எழுந்துட்டார்!
உங்களில் யாருக்காவது ஏசுவைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்க விருப்பம் இருந்தால் இங்கே நிற்கும் வாலண்டியர்கள் கிட்டே சொல்லி உங்க பெயரைப் பதிஞ்சுக்குங்க.


அந்த மே மாசம் 25லே இவருக்கு விடை எந்த மாதிரி கிடைச்சதுன்னு தெரிஞ்சுக்கணும். அப்ப என்ன நடந்துச்சுன்னு கேட்டுக்கணும். இவர் பேச்சை முடிக்கட்டும். எப்படி என்ற கேள்விக்கு எனக்கு விடை சொல்லுங்கன்னு கேக்கணுமுன்னு மண்டைக்குள் எண்ணம் ஓடிக்கிட்டு இருக்கு.


அப்புறம் அவர் சொல்லிக்கிட்டு இருந்த எதுவும் என் மனசில் பதியலை. பிறப்புன்னாவே இறப்பும் தொடர்ந்து வந்துருது இல்லையா? பச்சைப்பிஞ்சுங்க எல்லாம் சாகுது. அதுங்களுக்குப் பாவம் செய்யறதுக்குக்கூட இந்த ஆயுள், சான்ஸே கொடுக்கலை. செடிகொடி மரம்கூடச் செத்துப்போகுது. இருந்த இடத்தில் இருந்தே அது என்ன பாவம் செஞ்சிருக்கும்?

பேச்சு முடிஞ்சு ஒரு ஜெபம் செஞ்சார். அவர் சொல்லச் சொல்ல அதை மக்கள்ஸ் திருப்பிச் சொல்லணுமாம். என் பின்னால் இருந்து ரொம்பச் சத்தமா ஒரு குரல் திருப்பிச் சொன்னதைக் கேட்டேன்.


மீட்டிங் முடிஞ்சது. பின்னாலிருந்து கேட்ட குரலுக்கு உரியவர், துளசி, என்னைத் தெரியுதா?ன்னு கேட்டார். தெரியலைன்னு சொன்னேன். அதுக்குள்ளே கோபால் அவர் பெயரைச் சொல்லி, அவர் மீசையை எடுத்துட்டார் அதான் உனக்கு அடையாளம் தெரியலைன்னார். எனக்குச் சிரிப்பு வந்துருச்சு. 'எம்ஜிஆர் படங்களில், கதை நாயகன் வில்லனின் கோட்டைக்குள் வரும்போது ஒரு மச்சம் வச்சுக்கிட்டா, அந்த வில்லனுக்கே (நம்மைத்தவிர) அடையாளம் தெரியாமப் போயிடறது உண்மைதான்போல?'

பார்த்து அஞ்சாறு வருசமாகிப்போச்சு. உங்க மனைவி எப்படி இருக்காங்கன்னு கேட்டேன். ஒருமுறை வரலக்ஷ்மி நோம்புக்குக் கூப்புட்டாங்க. அவுங்க சொன்ன நாளில் போகமுடியாமல் ஒரு அசௌகரியம். அப்ப, 'நீங்க வீக் எண்ட்லே வந்தாலும் சரி. உங்களுக்காகக் கலசத்தை எடுக்காம அப்படியே வச்சுருப்பேன். கட்டாயம் வந்தே ஆகணுமு'ன்னு சொன்னாங்கன்னு போய் வந்தேன். அது அவுங்களுக்கு இங்கே இதய அறுவை சிகிச்சை நடந்து, உடல்நலம் தேறி இருந்த சமயம். இனிமேல் விமானப்பயணம் செய்யவே கூடாதுன்னு மருத்துவர்களின் கண்டிப்பாச் சொல்லிட்டாங்க. இனி என் வாழ்நாள் பூரா இங்கே இதே ஊர்லேதான்னு சொல்லி வருத்தப்பட்டாங்க.
பூஜை முடிஞ்சு ரெண்டுமூணு மாசத்தில் அவுங்களுக்கு ஸ்ட்ரோக் வந்து நடக்கமுடியாமல் பேசமுடியாமல் இன்னும் அதிகக் கஷ்டம். ரெக்கவரி ரொம்ப மெதுவா ஆரம்பிச்சது. அவுங்களை விஸிட் செய்யலாமுன்னா, எப்பப் போன் செஞ்சாலும் யாரும் எடுக்கலை. ஒரு தடவை நம்பர் டிஸ்கனெக்ட்டட்னு டெலிகாம் சொல்லுச்சு. வேற இடத்துக்குப்போயிட்டாங்க போலன்னு அதுக்கப்புறம் தொடர்பில் இல்லை.


இப்ப மனைவிக்குக் கொஞ்சம் பரவாயில்லையாம். கொஞ்சம் நடக்கறாங்களாம்.


அதே வீட்டுலேயா இருக்கீங்கன்னதுக்கு, இல்லே வேற வீடு சர்ச் கொடுத்துருக்கு. அங்கே இருந்து அந்தச் சர்ச்சைக் கவனிச்சுக்கறேன். அப்ப செஞ்சுக்கிட்டு இருந்த வேலை? விட்டுட்டாராம். இப்ப கிறிஸ்டியனா மதம் மாறிட்டாராம்.


ம்,ம்,னு எல்லாத்தையும் கேட்டுக்கிட்டேன். அவர்கூடவே பின்வரிசையில் இருந்த இன்னொருவரும் 'தெரிஞ்சவர் (இவரை நினைவு இருக்கு) என்றதால் குசலம் விசாரித்தேன். அவருக்கும் ஒரு பிரச்சனை இருக்கு. அவர் மனைவிக்கு மனநிலை சரியில்லை. அவுங்களும் மதம் மாறிட்டாங்களாம். இந்த ஆன்மீகக் கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சவர், மற்றும் இவுங்க ரெண்டு பேர்னு எல்லாமே ஆந்திரா மாநில மக்கள். யார் யாருக்கு எங்கே மன ஆறுதல் கிடைக்குதோ அங்கே போறதுலே என்ன தப்பு? இல்லீங்களா?
ஆன்மீகச் சொற்பொழிவாளரைக் கண்டுக்கப்போனேன்.


"வணக்கம். நீங்க தமிழ் பேசுவீங்கதானே?"
"வணக்கம்மா. தமிழ்க்காரந்தானே? பின்னே பேசாம இருப்ப்பேனா?"
"உங்க சொற்பொழிவில் நாலைஞ்சுமுறை மே மாதம் ஒம்போதரை மணியைக் குறிப்பிட்டீங்களே. அப்ப என்னதான் நடந்துச்சு?
'என்னுடைய தேடலுக்கு விடை கிடைச்சதும்மா."
அதான் எப்படிக் கிடைச்சது? யாராவது வந்து சொன்னாங்களா? இல்லே உள்மனசு சொல்லுச்சா? அந்த நேரம் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தீங்க?
பைபிள் படிச்சுக்கிட்டு இருந்தேன். ஏற்கெனவே ஒரு வருசமாப் படிச்சுக்கிட்டுத்தான் இருந்துருக்கேன். ஆனாலும் அன்னிக்கு அப்ப அந்த விடையை, 'நானே வெளிச்சம்' என்று சொன்னதை உணர்ந்தேன்.


தமிழ்ச் சினிமாவில் வர்றதுபோல 'ஜல்'ன்னு ஒரு சத்தமோ, இல்லை 'பளீர்'னு ஒரு மின்னலோ வந்து அதுலே ஜீஸஸ் முகம் தோன்றியதுன்னு சொல்லிருந்தாருன்னா சத்தம் போட்டுச் சிரிச்சிரிப்பேன்.

உணர்வுன்னு சொல்லிட்டார். சிலசமயம் கோவிலிலோ வேற மனசுக்கு இதமான காட்சிகளைப் பார்க்கும் சமயத்திலோ உடம்பில் ஒரு சிலிர்ப்பு வந்து கையில் உள்ள பூனைரோமம் எல்லாம் சிலிர்த்துக் குத்திட்டு நிற்கும் விநாடியில் ஒரு பங்கு நேரம் கிடைக்கும் உணர்வு போலவோ?


"இப்ப நீங்க சொன்னதைப் பத்தி எழுதப்போறேன்"

நீங்க எழுத்தாளரா?

அப்படித்தான்னு(ம்) வச்சுக்கலாம்:-)

என் தங்கைகூட கதையெல்லாம் எழுதுவாங்க. பேர் உஷா ரகுநாதன்.

(கேள்விப்பட்டிருக்கோமா? கல்கியில் எழுதறாங்களோ? எதுக்கும் நம்ம ஜெயந்திகிட்டே கேக்கணும்).

அப்படீங்களா? உங்க மதமாற்றத்தினாலே குடும்பத்துக்கு மனக்கஷ்டம் இல்லையா?

நான் சர்ச்சுக்கெல்லாம் அவ்வளவாப் போறதில்லை. இன்னும் சொன்னா நிறைய சர்ச்சுகளின் நடவடிக்கையெல்லாம் சரியே இல்லை. இன்னும்கூட நான் வெஜிடேரியந்தான். தயிர்சாதம் இல்லேன்னா முடியாது(சிரிப்பு) என்னுடைய எண்ணமெல்லாம் ஜீசஸைப் பற்றிப் படிக்கிறது. அவரைப்பத்தி எல்லாருக்கும் சொல்றது. அதான் மேடையில் சொன்னதும். ஜீசஸைப் பத்தித் தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கறவங்க தங்கள் பெயரை அங்கங்கே இருக்கும் வாலண்டியர்கள் யார்கிட்டேயாவது கொடுத்துட்டுப் போங்க. அவுங்க உங்களைத் தொடர்பு கொள்வாங்க. என் கார்டு இந்தாங்க. உங்களுக்கு எதாவது விளக்கம் வேணுமுன்னா ஒரு இமெயில் அனுப்புங்களேன்.


இன்னும் சிலர் அவரிடம் பேச ஆர்வமா நின்னுக்கிட்டு இருந்ததாலே நான் விடைபெற்றுக்கிட்டேன். கோபாலைத் தேடிக்கிட்டு உள்ளே ஹாலுக்குப் போனா,
அங்கேதான் மொத்தக்கூட்டமும் இருக்கு. அங்கங்கே மேசைகளில் கேக், சிப்ஸ்ன்னு ச்சின்னத்தட்டுகளில் விளம்பி வச்சுருக்காங்க. எல்லாரும் எடுத்துக்கிட்ட பிறகும் ஒரு நூத்தம்பது தட்டுகள் காத்துருக்கு. ஏன் இப்படிப் பரிமாறி வச்சுருக்காங்க? ஆனாலும் எனக்கு ஏத்தமாதிரி ஒண்ணும் இல்லையே........

நாலு மேசையில் மொத்தமா வச்சிருந்தா அவுங்கவுங்க எடுத்துக்கிட்டு இருக்கலாமே? இன்னொரு தோழி என்னைக் கவனிச்சுட்டு, வெஜிடபுள் சமோசா கொண்டுவந்து கொடுத்தாங்க. அதை முழுங்கிட்டு வீட்டுக்கு வந்தோம்.


ராஜ்குமார் கொடுத்த கார்டில் 'Logos Ministries' னு இருந்துச்சு. அதுலே போட்டிருந்த தளத்தில் போய்ப் பார்த்தேன். Thomas & Yvonne Mcclean என்றவர்கள் ஆரம்பிச்சுவச்சுருக்காங்க. சர்ச்சுகளை (வெவ்வேறு பிரிவுகளில் இருந்தாலும் ஒருங்கிணைப்பு செய்து மக்களுக்கு மத்தியில் ஜீசஸ் பற்றிய செய்திகளைப் பரப்புவாங்களாம். முக்கியமா இன்றைய இளைஞர்களுக்கு காஸ்பல் பற்றிய சேதிகளைச் சொல்லிக் கொடுப்பது. இதுவரை 150 பள்ளிக்கூடங்களில் போய் இளைஞர்களுக்கு ஜீசஸைப் பத்திச் சொல்லி இருக்காங்க. இந்த வேலைக்காகவே இவுங்களைக் 'கடவுள்' தேர்ந்தெடுத்துக்கிறார்.

ம்ம்ம்ம்ம்ம்


கடவுள் என்பது மனசுலே தோன்றும் ஒரு உணர்வு. ( குளிரில் உடம்பு சிலிர்க்குதே அது இல்லை) அதை அனுபவிச்சங்களுக்கு விளக்கமா நடந்ததைச் சொல்லத்தெரியாது. 'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' ஒரு சொல் இருக்குல்லையா?

சமீபத்தில் ( ரெண்டு வாரம் முன்பு:-))) ) அப்பாவின் சதாபிஷேகத்துப் போய் வந்த தோழியின் வீட்டுக்கு விசாரிப்புக்கான விஸிட் மறுநாள். இவுங்க இன்னொரு சாமியாரின் பக்தர்கள். நெருங்கிய உறவினர் குடும்பத்தில் நடந்த சம்பவங்களால் எனக்கு இந்த சாமியாரிடம் மனசுக்குள் ஒரு வெறுப்பு. இதை அந்தத் தோழிக்கும் சொல்லியிருக்கேன். இவுங்களும் ஒரு பத்துப்பன்னெண்டு வருசமாத்தான் இந்தச் சாமியாரின் பக்தர்களா ஆனவங்க.

தோழி சொன்னது ஆச்சரியமா இருந்துச்சு. சில்கூர் பாலாஜி அமெரிக்கா போக விசா வாங்கித் தர்றாராம். விசா வேணுமுன்னா சில்கூர் பாலாஜி கோயிலுக்குப்போனாப் போதுமாம். அமெரிக்கன் எம்பஸியை அங்கேயா வச்சுருக்காங்க?சதாபிஷேகம் முடிஞ்சு, இன்னொரு நெருங்கிய குடும்ப நண்பரைப் பார்க்க ஹைதராபாத் போயிருந்தாங்களாம். அங்கே சில்கூர் பாலாஜி கோயிலுக்கு போக நேர்ந்துச்சாம். கூட்டமான கூட்டமாம். 108 சுத்து சுத்திப் பிரார்த்தனை செஞ்சுக்கணுமாம். எல்லாம் சிஸ்டமேடிக்கா கையில் ஒரு அட்டை வச்சுக்கிட்டு இருக்காங்களாம். பாஸ்போர்ட்டா? ஊஹூம்.... கோயிலில் கொடுக்கும் அட்டை. ஒவ்வொரு சுத்து முடிஞ்சதும் அதுலே முத்திரை குத்தித் தராங்களாம். சுத்தும்போதே கோவிந்தா, வெங்கடரமணா , நாராயணா ன்னு அவுங்கவுங்க விரும்பும் பேரில் சத்தமாச் சொல்லிக்கிட்டே மக்கள்ஸ் சுத்தறாங்க. ஒரே சத்தம். நண்பர் சொன்னார், பிரார்த்தனை பலிச்சதும் இன்னும் ஒரு 108 சுத்தணுமாம். (அமெரிக்கன் எம்பஸியைச் சுத்தவிடமாட்டாங்களோ?)


விசா கிடைச்சதும் பறந்துருவாங்களே..அப்புறம் எங்கே சுத்தறது? ஷிகாகோ இல்லை, பிட்ஸ்பர்க் கோயிலைத்தான் சுத்தணும். இல்லை? வலையில் இருக்கான்னு விசா பாலாஜின்னு தேடுனதும் கிடைச்சுருச்சு. வீடியோ க்ளிப் கூட இருக்கு. தோழி சொன்னது நிஜம்தான்..........


ஊருக்குப்போய் வந்தவங்க எதாவது சினிமாப்படங்கள் வாங்கிவரும் வழமையும், அதை ஒருவருக்கொருவர் இரவல் வாங்குறதுமான பழக்கத்தில் அங்கே இருந்து கிளம்பும்போது பூவெல்லாம் கேட்டுப்பார், சேது, தாரே ஜமீன்பர் கிடைச்சது. கூடவே இன்னொரு விசிடியும். ஜக்கி வாசுதேவ். கிராம புத்துணர்வு இயக்கம் பற்றியதாம். கூடவே .....

'அத்தனைக்கும் ஆசைப்படு'ன்னு ஒரு புத்தகம். ஆஹா....நமக்கென்ன ஆசைக்கா பஞ்சம்? கையில் எடுத்துப் புரட்டிப் பார்த்ததும் கண்ணில் பட்டது,'கடவுளுக்கு உண்மையில் எத்தனை முகங்கள்?
வீட்டில் ஒரு முகம், வெளியில் ஒரு முகம்,
இன்னும் நண்பர்களுக்கு, எதிரிகளுக்கு என்று எத்தனை முகங்களை நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்? இதையும்விட அரசியல் வாதிகளுக்கு இன்னும் ஏராளமான முகங்கள் இல்லையா?


சுவாரசியமாகவும், அதேசமயம் உண்மையை எடுத்து முகத்தில் அறைவது போலவும் இருக்கேன்னு அந்தப் புத்த்கத்தையும் இரவல் வாங்கிவந்தேன்.

இவர்களுடைய தளத்தில் நுழைந்து பார்த்தாலும் இங்கே(யும்) வந்து தங்குவதற்கான காட்டேஜ், தியானம், யோகா என்று பலவும், இவர்கள் நடத்தும் கல்வி & மருத்துவக்கூடங்கள்னும் இருக்கு. தளத்தில் உள்ளப் படங்களைப் பார்க்கும்போது 'காட்சிக்கு எளியவர்' என்ற எண்ணம் வருது. ஆனால்........கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீரவிசாரிப்பது மெய் என்று இருக்கே. இது மட்டுமல்லாமல் நானோ ஒரு இடும்பி. சாஸ்திரம், சம்பிரதாயம், நியமம் இதுக்கெல்லாம் 'சட்'ன்னு சம்மதிக்க மாட்டேன். காலையில் நாலுமணிக்கு எழுந்து பூசை செய்யணுமுன்னு சொன்னால் நம்மாலே அதெல்லாம் முடியாது. நாமென்ன மிலிட்டரியிலா இருக்கோம்?


மனுஷனை மனுஷனா மதிக்கணும். எல்லா 'உயிரிடத்தும்' அன்பு காமிக்கணும். கஷ்டத்தில் இருக்கும் ஜீவனுக்கு முடிஞ்சவரை உதவிகள் செய்யணும். ஒண்ணும் பெருசாச் செய்யமுடியலைன்னாலும் அடுத்தவன் மனசை நோகடிக்காமலாவது இருக்கணும். குறைஞ்சபட்சம் கஷ்டம் கொடுக்காமலாவது இருக்கலாம். இதுதான் இப்போதைக்குக் கடவுள்'னு ஒரு நினைப்பு.


சும்மா இருப்பதே சுகம்னு இருக்கலாமான்னு இருக்கேன். தேடல் முடியலை.


மெய்ப்பொருள் காண்பதறிவு!!!!!


இவ்வளவு சிந்திச்சவ சொ.செ.சூ ( நன்றி: வரவனையான்) வச்சுக்கிட்டதை அடுத்தவாரம் ஒரு நாள் சொல்றேன்:-))))


Sunday, March 16, 2008

சந்திப்பும் சட்டினியும்

ஓசைப்படாமல் ஒரு வலைஞர் சந்திப்பு இந்த வெள்ளிக்கிழமை இனிதாக நடந்து முடிஞ்சது.
நியூசியில் நடக்கும் மூன்றாவது மாநாடு என்ற வகையில் அமர்க்களமாக அட்டகாசமாக நடந்துச்சு.( நாலுபேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்க.) 6 பேர் இருந்தோம்:-)


புதன்கிழமைப் பத்து மணியளவில் ச்சின்ன அம்மிணி & கோ, நம்ம மாநகரத்துக்கு வருகை தருவதாகச் சேதி வந்தது முதல் கையும் ஓடலை, காலும் ஓடலை. இங்கே 3 நாட்கள் தங்கல். அதன்பிறகு தென்கோடிக்குச் சுற்றுலா. வடக்குத் தீவில் இருப்பவர்கள் இவர்கள். தொலைபேசி எண்களைத் தெரிவித்துவிட்டு, வந்து சேர்ந்ததும் கூப்பிடச் சொன்னேன்.

புதன்கிழமைக் காலை பத்து மணி முதல் ஜிக்குஜூவை இடுப்பில் இருந்து இறக்கிவிட்டுட்டு, அந்த இடத்தில் கைத்தொலைப்பேசியைத் தூக்கி வச்சுக்கிட்டேன். மணி ஓடிக்கிட்டு இருக்கே தவிர பேச்சு மூச்சில்லை.

மறுநாள் பொழுதுவிடிஞ்சதும், இவுங்க தங்கி இருக்கும் இடத்துக்கு ஒரு ஃபோன் அடிச்சேன். வரவேற்பில் இருந்த சீனப்பெண்ணிடம்( அதெல்லாம் கண்டுபுடிச்சுருவம்லெ) இந்திய ஜோடி ஒண்ணு வந்துக்கே, அந்த ரூமுக்குத் தொடர்பு கொடும்மான்னதும் மறு பக்கம் ஒலித்த ஆண்குரலிடம், சின்ன அம்மிணியைக் கூப்பிடுங்கன்னா, அவர் திருதிருன்னு முழிக்கிறார். அட! அந்தப் பதிவரைக் கூப்புடுங்கன்னதும் இன்னொரு முழி. ஆமாம்...நீங்க வெலிங்டனில் இருந்துதானே வந்துருக்கீங்க?ன்னா...... 'இல்லையே. நான் இந்தோனேஷியாவுலே இருந்து வந்துருக்கேன்'றார். ச்சீன அம்மிணி இப்படிச் செஞ்சுருச்சேன்னு புலம்பிட்டு, மறுபடியும் 'ச்சீன அம்மிணி, ச்சீன அம்மிணி,
கொஞ்சம் சின்ன அம்மிணிக்குத் தொடர்பு கொடு'ன்னு கேட்டு அம்மிணியைப் புடிச்சேன்.

எனக்கு ஃபோன் செய்யணும் இன்னிக்குன்னு நினைச்சுக்கிட்டு இருந்தாங்களாம்! அட!!! இன்னிக்கும் நல்லா ஊர் சுத்திப் பாருங்க. நாளைக்கு (வெள்ளி) இரவுச்சாப்பாடு எங்ககூட வச்சுக்கறீங்களான்னு கேட்டேன். சரின்னாங்க. சமையலில் எதாவது வேண்டாததுன்னு இருக்கான்னேன். (எங்க வீட்டுலே இஞ்சி,
பூண்டு எல்லாம் கொஞ்சம் தாராளமாவே சேர்த்துக்குவோம்) அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையாம். மரக்கறி உணவு மட்டுமாம். நோ ப்ராப்ளம்.

நீங்க தங்கும் இடத்துக்குப் பக்கத்துலே ஒரு ரெண்டு நிமிஷ நடையில் நம்ம கோயில் இருக்குன்னேன். ஆமாமாம். நேத்து அங்கதான் சாப்பிட்டோமுன்னாங்களா...... ஆஹா...... எப்படி 'டக்'னு இதைத் தெரிஞ்சுக்கிட்டாங்கன்னு இருந்துச்சு.

அவுங்க செல் நம்பரை வாங்கிக்கிட்டு, மறுநாள் மாலை 7 மணிக்கு வந்து கூப்புட்டுட்டுப் போறோமுன்னு சொன்னேன். கோபாலும் மெல்பேர்ன் போனவர் அதுக்குள்ளே வந்துருவார்.

ரொம்ப எளிமையான உணவு செஞ்சுவச்சுட்டேன். இட்லி, சாம்பார்(வெள்ளைப்பூசணி) டேஸ்ட்டிச் சட்டினி, சேமியா கேசரி. சாதம் & தயிர்

ஏழடிக்க அஞ்சு நிமிஷம். வந்துக்கிட்டே இருக்கோமுன்னு செல்லிலே கூப்புட்டுச் சொன்னதாலே தயாரா இருந்தாங்க. ச்சின்ன அம்மிணியின் கையில் ஒரு அலங்காரப் பூங்கொத்து. 'எதுக்குங்க இதெல்லாம்? நானா இருந்தா இதையெல்லாம் வாங்கவே மாட்டேன்'னு சொல்லிக்கிட்டே அதை வாங்கிக்கிட்டேன்:-))))

கோயிலைத் தாண்டும்போது, 'இதுதான் கோயில். இங்கேதானே நேத்துச் சாப்புட்டீங்க.?'ன்னா முழிக்கிறாங்க. இங்கே இல்லையாம்....நகரச் சதுக்கத்தில் சின்மயானந்தா மிஷன் கேஃபேயில் (காசு கொடுத்து) சாப்புட்டுருக்காங்க.

வரும்வழியில் நம்ம யூனிவழியா ஒரு சுத்து. 'கார்டன் சிட்டி ஆஃப் நியூஸி' என்ற பேருக்கேத்தமாதிரி ஊரே பூந்தோட்டமா இருக்குன்னு சொன்னாங்க. இருக்காதா பின்னே? எங்க வீட்டுத் தோட்டத்தையும் பார்த்துட்டுச் சொல்லுங்கன்னேன்:-)))

வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் 'எங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்..... ஆம்பல் வாய்கூம்பி' இருந்ததைக் காமிச்சேன். ஐலா வீடு எதுன்னு ஆர்வமாக் கேட்டாங்க. இன்னும் பலதையும் கேட்டு, துளசிதளம் வகுப்புலேக் கவனமா சிரத்தையுடன் படிக்கிறதைச் சொல்லாமச் சொன்னாங்க:-)))

'வீட்டுக்குக் கெஸ்ட் வராங்க. யூ ஷுட் பீ இன் யுவர் பெஸ்ட் பிஹேவியர்'ன்னு சொல்லிவச்சதைப் பசங்க புரிஞ்சுக்கிச்சு போல. ஜிக்குஜூ ஓசைப்படாம ஹால்டேபிளில் ஏறி உக்கார்ந்துருந்தான். அவனைத் தேடுன அம்மிணி, அவன் 'பிறப்பின் ரகசியத்தை'த் தெரிஞ்சுக்கிட்டுத் திறந்த வாயை(இன்னும்) மூடலை:-))))

வீட்டின் உள்புற வேலைப்பாடுகளைப் பார்த்துட்டு, இதையெல்லாம் 'வீடுகட்டுன பதிவில்' நான் படிச்சுருக்கேன்னு சொல்லி ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் அம்மிணியின் 'அவர்'. அட!! அப்ப இது பதிவர்கள் & வாசகர்கள் சந்திப்பா? பேஷ் பேஷ். ரொம்ப நன்னா இருக்கு:-)

யானைகளை எண்ணலாமுன்னு பார்த்தா நடக்காத காரியமா இருக்கேன்னு சொல்லி, மலைச்சுப்போன அம்மிணிக்கு நாம் சமீபத்தில்(!!! உண்மைங்க. ரெண்டு மாசம்தான் இருக்கும்) வாங்குன நாலு யானைகளைக் காமிச்சேன்.

நம்ம வீட்டு 'ஃபோட்டோ பாய்ண்டில்' இருந்து படம் எல்லாம் புடிச்சுக்கிட்டோம்.
அம்மிணிக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சாம் இது. இருக்காதா பின்னே? ஆடிக்கிட்டே இருக்கலாமே......ஊஞ்சலில்.

பதிவுலக மக்களைப் பற்றியெல்லாம் பேசிக்கிட்டே இருந்தோம். அப்பத்தான் புரியுது இந்த மக்கள்ஸ் எப்படி நம்ம நினைவுகளில் கலந்துபோய் நிக்கறாங்கன்னு.

சட்டினி ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அப்படீன்னாச் செய்முறையைப் பதிவாக்கினாப் போச்சு. நம்ம தாளிக்கும் ஓசை சொன்னபடிச் செஞ்சு பார்த்த நெல்லிக்காய் தொக்கு, தயிர் சாதத்துக்கு அட்டகாசமா இருக்காம். சாப்பிட்டு முடிக்கும்போதுதான் சாப்பிடும் ஸீன் ஷூட் பண்ணலைன்னு நினைவுக்கு வந்தது. நாளைக்கு ஒண்ணுமே சாப்புடலைன்னு சொல்லிட்டாங்கன்னா? நாலைஞ்சு படங்கள் ஆச்சு.

அளவா, அழகா அருமையாச் செஞ்சக் கேசரியை எடுத்துப் பரிமாறும்போது அம்பியின் நினைவு. அவர் பேரைச் சொல்லி ரெண்டாவது துண்டம் எடுத்துக்கிட்டோம். பாயஸம் செஞ்சுருந்தேன்னா........ இந்நேரம் 'ஐயா குடி,அம்மா குடி'ன்னு ஆகி இருக்கும்.... எல்லாரும் தப்பிச்சாங்க:-))))

நேரமாகுது, நாளைக்குக் காலையில் 6 மணிக்கு இவுங்க தெற்குத்தீவுச் சுற்றுலாவுக்குக் கிளம்பணும். ஒரு வாரம் சுத்தப்போறாங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கட்டுமுன்னு அவுங்களை விட்டுட்டு வரப்போனோம். வாசக்கதவைத் திறந்தால் அங்கிருக்கும் பெஞ்சில் நம்ம ஜிகே சிங்கம் போல உக்கார்ந்துருக்கார். கீழே தரையில் முள்ளி (நம்மவீட்டு ஹெட்ஜ் ஹாக். பெயர் உபயம் வல்லி) மூக்கை நீட்டிக்கிட்டுச் சாப்பாட்டுத் தட்டைத் தேடுது. 'சாரிடா...கொஞ்சம் லேட்டாகிருச்சு) தல வரலாறில் முள்ளியின் வாழ்க்கையை விவரிச்சாச்சு.

அடுத்த சனிக்கிழமைக் காலை அம்மிணியை மீண்டும் சந்திக்கிறதாச் சொல்லிட்டு வந்தோம். மறுநாள் ச்சின்ன அம்மிணி & கோ வை வரவேற்க
அவுங்க போன இடத்தில் நில அதிர்வுன்னு நியூஸ் வந்துச்சு. நேற்றும் இரண்டுமுறை அதிர்வாம். ச்சின்ன அம்மிணி ச்சும்மா இருக்கறதில்லை போல:-)

இனி அவுங்க பதிவில் சுற்றுலா விவரங்கள் வரும் என் எதிர்பார்க்கலாம்.
பதிவர் விரும்பியதால் அவர்கள் படங்கள் பதிவில் இடம் பெறவில்லை.
அது இருக்கட்டும். இப்ப அடுக்களைக் குறிப்பு இதோ.





டேஸ்ட்டிச் சட்டினி.( இது என் மகள் வச்ச பெயர்)

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு கால் கப்

உளுத்தம் பருப்பு கால் கப்

பச்சை மிளகாய் 4 அல்லது 5

இஞ்சி ரெண்டு இஞ்சு நீளம்.

பூண்டு 4 பல்

தேங்காய் துருவியது முக்கால் கப்

பெருங்காயத்தூள் கால்தேக்கரண்டி

புளி ஒரு 'கம்மர்கட்' அளவு ((எத்தனை நாளைக்குத்தான் எலுமிச்சங்காய்ன்னு சொல்லிக்கிட்டே இருப்பது? ஒரு ச்சேஞ்ச் வேணாம்?)

கொத்துமல்லித் தழை ஒரு கட்டு

(வேரை நறுக்கி வீசிட்டு, ஆ(ரா)ய்ஞ்சு, நீரில் அலசி
வடியவிட்டு வச்சுக்குங்க)

உப்பு 1 தேக்கரண்டி.

எண்ணெய் 1 தேக்கரண்டி

தாளிக்க:

ரெண்டு தேக்கரண்டி எண்ணெய்

கடுகு அரைத்தேக்கரண்டி

கருவேப்பிலை ஒரு இணுக்கு

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊத்தி, கொஞ்சம் சூடானதும் க.பருப்பைப்போட்டு வறுக்கணும். பாதி வறுபட்டதும் உ. பருப்பையும் அதன்கூடவேச் சேர்த்து வறுத்து பொன்நிறமானதும் ( அப்ப ஒரு நல்ல வாசனை வரும்) ப.மியை ரெண்டா உடைச்சுச் சேர்த்து ஒரு வதக்கல். (எதுக்கு ரெண்டா உடைக்கணும்? இல்லேன்னா அது வெடிச்சு திறந்துக்கும்)கூடவே இஞ்சி & பூண்டு சேர்த்து வதக்கிட்டு பெருங்காயம், துருவிய தேங்காய் உப்பு எல்லாம் சேர்த்து ஒரு ரெண்டு நிமிசம் வறுத்து/வதக்கி எடுத்து ஆறவிடுங்க.

நல்லா ஆறுனதும் மிக்ஸியில் சட்னி ஜாரில் போட்டு கொட்டையில்லாத புளியையும் சேர்த்து அரைச்சுக்கணும். உங்களுக்குத் தேவையான சட்னிப் பதத்துக்கு அரைபட்டதும்( நம்ம வீட்டுலேக் கொஞ்சம் கொரகொரன்னு இருந்தாத்தான் பிடிக்கும்) கொத்துமல்லி இலைகளைச்சேர்த்து இலைகள் நன்றாக மசியும்வரை அரைச்செடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கணும்.

அதே வாணலியில் ரெண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊத்திச் சூடாக்கி, கடுகுபோட்டு வெடிச்சதும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி அந்த எண்ணெயை அப்படியே சட்டினியில் ஊத்திக் கிளறிவிடுங்க. டேஸ்ட்டிச் சட்டினி தயார்.

கட்டியா அரைச்சு வச்சதுன்னா பாதியை எடுத்து ஒரு ச்சின்னக் கண்டெயினரில் போட்டு ஃப்ரீஸ் செஞ்சுக்கலாம். மீதியில் உங்க விருப்பத்துக்குத் தண்ணீர் சேர்த்துத் தளர்த்தி கரண்டியில் எடுத்தும் ஊற்றும் பதத்தில் கலக்கிக்கலாம்.

நான் எப்பவும் டெஸிகேட்டட் கோக்கநட் சேர்ப்பதால் நாலைஞ்சு நாளைக்குக் கெடாது.
அழகா நிரவி விடாமல் எடுத்த படம்...( என்ன அவசரமோ?)




Saturday, March 15, 2008

நீங்களும் பார்த்து ரசிக்க:-))))

நண்பர் ஒருத்தர் மின்மடலில் அனுப்பி இருந்தார். அவருக்கு இதைப் பார்த்ததும் என் நினைவு வந்ததில் வியப்பே இல்லை.

நம்ம ஜிகே வுக்குப் போட்டுக் காட்டினால் அவனும் சிரிக்கிறான்.





என்றும் அன்புடன்,
துளசி.

அனுப்பித்தந்த நண்பருக்கு நன்றிகள்.

Wednesday, March 12, 2008

எ(த்)தைத் தின்னால் பித்தம் தெளியும்?

அடாது பெய்த மழையிலும் விடாமப்போய்ச் சேர்ந்த இடம், இசைப்பள்ளியில் இருக்கும் சாப்பல். அன்னை அமிர்தானந்தாமயியின் சீடர் ராமகிருஷ்ணானந்தா (ஜி)வந்து நாலு நல்ல வார்த்தை சொல்லப்போறாராம். அதென்னவோ இப்படி சாமியார்கள் எல்லாம் ஆனந்தத்தைப் பேருலே சேர்த்தே வச்சுக்கறாங்க........


சந்தைப்படுத்துதல் என்ற ஒரு சொல் நினைவுக்கு வந்துச்சு. நுழைஞ்சதும் கண்ணுலே படுறமாதிரி மேசை ரெண்டைப் போட்டு புத்தகங்களின் வரிசை. ஒரு வெள்ளைக்காரப்பாட்டி புத்தகங்களை அடுக்கி வச்சுக்கிட்டு இருந்தாங்க இடதுபக்கம் வரிசைக்கு ஆறுன்னு நாற்காலிகள், மூணு இந்தப் பக்கம் மூணு அந்தப்பக்கம்னு நடுவிலே நடைபாதை வச்சு.
ஒரு முக்காலடி உயரத்துலே மேடை கடைசியில். அதுலே படம் காமிக்க இடது பக்கம் ஒரு வெள்ளித்திரை. வலது பக்கம் மேசை, நாற்காலி, மைக் இத்யாதிகள். முன்புறமா கொஞ்சம் இசைக்கருவிகள். வலதுபக்கம் அம்மாவின் படம், ஊதுவத்தி, விளக்கு, பூமாலைன்னு.அம்மாவின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் சிலர்(ஒருத்தர்தாங்க) வெள்ளை சால்வாரில் குத்துவிளக்கை ஒழுங்கு செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. காலடிக்குத் தனி க்ளோஸ் அப்!!

மாலை 7 முதல் 8.30வரைன்னு (மின்)அழைப்பிதழில் இருந்துச்சு. ஜிக்கருக்குச் சாப்பாடு வீட்டுக்கு வந்தபிறகு கொடுக்கலாமுன்னு இருந்தோம். இந்திய நேரப்படி மக்கள்ஸ் வர ஆரம்பிச்சாங்க. திரையில் அம்மாவின் அயல்நாட்டு & உள்நாட்டு விஜ(ஷ)யங்கள் ஓட ஆரம்பிச்சது. எல்லாம் ஒரு அரைமணிபோல இருக்கும்.
சிஷ்யர் வருகை. குத்துவிளக்கேற்றிட்டுப் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். அம்மாவின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாச் சொல்லிட்டு, கோயில் கோயிலாப் போய்க் கும்புடறது ஆன்மீகம் இல்லை. நம்மை நாமே அறிஞ்சுக்கறதுதான் உண்மையான ஆன்மீகமுன்னு சொன்னார். மேடைப் பேச்சின் வழமையைக் காப்பாத்தும்விதமா ஒரு கதையும் சொன்னார். அநேகமா எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான்.

ஒரு பையன்கிட்டே ஒருத்தர் கேக்கறார், இப்ப உன் காது ரெண்டையும் வெட்டிட்டா என்ன ஆகுமுன்னு. அதுக்கு அந்தப் பையன் சொல்றான், என்னாலே படிக்க முடியாதுன்னு. கேட்டவருக்கு ஒரே குழப்பம். நீ என்ன காதாலேயா படிக்கிறே? அதான் கண்ணு இருக்குல்லேன்னு. அதுக்குப் பையன் சொன்னானாம், காது இல்லேன்னா என் மூக்குக்கண்ணாடியை எப்படி மாட்டிக்குவேன்னு!
எதுக்கும் எதுக்கும் சம்பந்தம் பாருங்க...மனசில் அன்பு இருக்கணும். அதுதான் சாமின்னு சொல்றாருன்னு நினைக்கிறேன்.

அம்மா, ஆஸ்தராலியா வராங்களாம். எங்களுக்குப் பக்கத்து நாடுன்றபடியாலே, நாங்க அம்மாவைப் பார்க்கறதுக்கு அங்கே போகலாமாம். இந்த நல்ல விஷயத்தைச் சொல்லத்தான் இவர் இப்ப இங்கே வந்தாராம். போச்சுரா......
என்னதான் பக்கத்து நாடானாலும், போகவர, அங்கே தங்கன்னு ஒரு ஆளுக்கு ரெண்டாயிரம் டாலர் பழுத்துரும். இதுக்கு அம்மா ஒரு ஆளு இங்கே வந்துட்டுப் போகலாமுல்லே? சரி இருக்கட்டும். அவுங்கவுங்க வசதி எப்படியோ அப்படி.....

இதுக்கு நடுவுலே என் பக்கத்து இருக்கையிலே ஒருத்தர், உக்கார்ந்துக்கிட்டே நல்ல தூக்கம். எழுப்பி விட்டேன். ஹ்ம்....குறட்டை விட்டுட்டேனான்னு கேக்கறார்:-))))

சாமியார் பேச்சை முடிச்சுக்கிட்டு, இப்பக் கொஞ்சம் பஜனைகள் பாடிட்டு, கொஞ்சநேரம் தியானம் செஞ்சுட்டு,அம்மா படத்துக்கு ஆரத்தி எடுத்துட்டா இன்னிக்கு மீட்டிங் ஆச்சு.அதுக்கப்புறம் கேக், காஃபின்னு சிற்றுண்டிகள் ஏற்பாடு இருக்குன்னு சொன்னார்.

எட்டேமுக்காலுக்குப் பஜனைகள் ஆரம்பிச்சது. வழக்கமான சாமிப் பாட்டுகள்தான். எல்லாருக்கும் ஒரு ப்ரிண்டவுட் கொடுத்தாங்க. அதுலே ஒரு இருபது பாட்டுகள் இருந்துச்சு. ஒரு பத்துப்பாட்டு(!) மட்டும் ஒண்ணு, ரெண்டுன்னு அடையாளம் வச்சுருந்தாங்க. சாமி பெயர் வரும் இடத்தில் மட்டும் அமிர்தானந்தான்னு கூடக்கூடச் சேர்த்துக்கிட்டுப் பாடுனாங்க.

மணி ஒம்போதாகப்போகுது. கிளம்பிறலாமுன்னா..... இவர் நடுவுலே எப்படிப் போகன்னு கேக்கறார். அதான் நடைபாதை இருக்கே..... எனெக்கென்ன பயமுன்னா தியானம் செய்யறப்ப ...அப்படியே தூங்கிக் கீழே விழுந்துட்டாருன்னா?

குழந்தைக்குவேற சாப்பாட்டு நேரம். இங்கே போற போக்கைப் பார்த்தா ஒரு பத்தரை மணி ஆகும் போல. விடு ஜூட்.....

ஞாயிறு நல்லபடியா முடிஞ்சது. சனிக்கிழமை இன்னொரு ஆன்மீகக்கூட்டம் இருக்கு. அதுக்கும் போயிட்டுப் பதிவை எழுதலாமுன்னு இருந்தேன். அதுக்குள்ளெ சிவராத்திரி பூஜைக்கு இன்னொரு அழைப்பு.

ஃபிஜி இந்தியர்களின் சத் சங்கம் நடத்தும் பூஜை. இதே நாளில் இன்னும் நாலு இடத்தில் பூஜை வச்சுருக்காங்க. (ஒற்றுமை வெல்க)

ரொம்ப எளிமையான வகையில் வழக்கம்போல், கணேஷ் வந்தனா, வந்திருந்த ஒவ்வொருவரும் எடுக்கும் ஆரத்தி, அப்படியே ஒரு தம்ப்ளரில் தண்ணீர், இன்னொரு தம்ப்ளரில் பால்னு வச்சு, ஒவ்வொருவரும் ஒரு ஸ்பூன் இதுவும் அதுவுமா எடுத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம். இது நடக்கும்போது 'ஓம் நமசிவாய'ன்னு 108 முறை சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஆச்சு, சாந்தி செஞ்சுட்டு, கொண்டுவந்திருந்த பிரசாதங்கள் விநியோகம். அன்னிக்கு வேலைநாளா இருந்தும் ஒரு அறுபது பேருக்குக்கிட்ட வந்திருந்தாங்க.எப்படிக் கணக்குப் போட்டேன்னு கேக்காதீங்க...... ஒரு 23 வகைப் பிரசாதம் கிடைச்சது:-)

எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அந்த(?) வெள்ளைக்காரப்பாட்டி இருந்தாங்க. அண்டைஅயல்வாசிகளைத் தெரிஞ்சு வச்சுக்கணுமுன்னு போன வாரம் செஞ்சிருந்தத் தீர்மானத்தின்படி ( புதுவருசத்தில்தான் தீர்மானம் எடுக்கணுமா என்ன?) பாட்டியைக் குசலம் விசாரிச்சேன்.' ஹரே க்ருஷ்ணா கோயிலில் உங்களைப் பார்த்திருக்கேனே'ன்னு ஆரம்பிச்சு வச்சேன்.

ஆமாமாம். இப்பெல்லாம் அங்கே ரொம்பப் போகறதில்லையாம். இந்துவா மாறிட்டாங்களாம். நாப்பது வருசத்துக்கு முந்தி முதல்முறையா இந்தியா போனாங்களாம். பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ரெண்டரை மாசம் தங்குனாங்களாம். ராமேஸ்வரம் போனப்ப, அங்கே உள்ளூர்க்காரர் ஒருத்தர் பின்வாசல் வழியாக் கோயிலுக்குள் கொண்டுபோயிட்டாராம். கர்ப்பக்கிரகத்துக்கு முன்னாலே போனப்ப, அங்கிருந்த குருக்கள் இன்னும் சிலர், எப்படி வரப்போச்சுன்னும், வெளியே காவலாளி எப்படி 'அன்னியரை' உள்ளே விட்டார்ன்னும் கொஞ்சம் ரகளையாப் போச்சுதாம். உடனே மன்னிப்புக் கேட்டுக்கிட்டு வெளியே வந்துட்டேன்னு சொன்னாங்க.
அதுக்கப்புறம் ஸ்ரீரங்கம் போனப்ப, உள்ளே வரக்கூடாதுன்னு வாசலில் தடுத்தப்ப, இந்தம்மாவுக்கு ரொம்ப துக்கமாக் கண்ணில் கண்ணீர் கட்டிருச்சாம். ஒரு பட்டர் உள்ளே வர அனுமதி இல்லைன்னு பொறுமையாச் சொல்லி, உள்ளே இருந்து பிரசாதங்கள் கொண்டுவந்து கொடுத்தாராம். மதுரை, திருவண்ணாமலைன்னு போயிட்டு அங்கே இருந்து வடக்கே பயணம். ஹரித்துவார், வாரணாசி ரொம்பப் பிடிச்சுப் போச்சாம். அதுதான் 'சமரசம் உலாவும் இடம்' சரிதானே?


எனக்கு இன்னும் கங்கையைப் பார்க்கக் கொடுத்து வைக்கலை. ஏக்கத்தோட பாட்டி சொன்னதையெல்லாம் கேட்டேன். நாம்கூட சர்ச்சுகளுக்குப் போறோம். நம்மை யாரும் உள்ளே வராதேன்னு சொன்னால் எப்படி இருக்கும்? வாட்டிகன்லே கூட உள்ளே போய்ப் பார்க்க முடிஞ்சதே!

இந்த நாற்பது வருசக் காலக்கட்டத்தில் நாலுமுறை இந்தியா போயிட்டு வந்துருக்காங்க. அடுத்தமுறை 'அம்மா'வைப் பார்க்க கேரளா போக ஆசையாம்.

வயசு ஒரு 68 இருக்கும். இன்னும் தேடல் முடியலை........... பாட்டியோட பேர் என்னன்னு கேட்டதுக்கு வந்த பதில் 'சுப்ரியா' !!!

சனிக்கிழமை நடக்கப்போகும் ஆன்மீகக்கூட்டத்தைப் பத்திச் சொல்லி, வாங்கன்னு அழைப்பு கொடுத்துட்டு வந்தோம்.

சனிக்கிழமையும் வந்தது.......

மீதி அடுத்த பகுதியில் தொடரும்........

அஞ்சா(தீர்)தே......., அடுத்தபகுதிதான் கடைசி:-)))))



Tuesday, March 11, 2008

குண்டுச் சட்டிக்குள்ளேக் குதிரை ஓட்டினா.....

இவை இரண்டும் போட்டிக்கு!!!!!!!

மிச்சம்மீதிகள் உங்கள் பார்வைக்கு.:-))))












குண்டுச் சட்டிக்குள்ளேக் குதிரை ஓட்டினால்....

இப்படித்தான் ஆகுமோ? மார்ச் மாத 'பிட்'க்குத் தலைப்பைப் பார்த்ததும், ஃபூன்னு ஊதித் தள்ளிறலாமுன்னு ஒரு எண்ணம். நம்ம வீட்டுக்கே 'ஹவுஸ் ஆஃப் ரிஃப்ளெக்ஷன்'னு ஒரு பேர் ஏற்கெனவே வச்சுருக்கு. கண்ணாடிகள் நிறைய இருக்கு பாருங்க.....







எந்த ஒரு பகுதியில்(மூணு இடம் தவிர) இருந்தாலும் வெறுங்கண்ணுக்குத் தெரியாததை, மனக்கண்ணால் பார்த்துக்கறமாதிரி காட்சிகள் இருக்கும். இப்பக்கூட நான் கிழக்குப் பார்த்து உக்கார்ந்துருக்கேன். மேற்கே தெருவில் ஓடும் வண்டிகளும், முன்வாசக்கதவும் எல்லாம் அப்படியே தெரியும். சாப்பாட்டு மேசையில் இருந்து, வீட்டுக்குப் பின்னால் கிழக்கே இருக்கும் துணி உலர்த்தும் கம்பம், அடுத்த வீட்டு கராஜ் இப்படி எல்லாம் வடக்கே தெரியும்.




ரங்கமணிகிட்டே ஒரு வேலையை ஒப்படைச்சுட்டு, நான் வேற அறையிலே இருந்தாலும், இங்கே அவர் செய்கிற (தப்பு)அழகு கண்ணுலே பட்டுரும், குறை சொல்ல ஏதுவா:-))))




நம் 'திறமை'யைக் காட்ட மிகச்சரியான வேளைன்னு கேமராவைக் கையில் எடுத்தாச்சு. முந்திய 'குருமார்கள்' சொன்னதுக்கிணங்க, தேதி ஆப்ஷனைத் தூக்கினேன். க்ளிக் க்ளிக் க்ளிக்....... அந்தோ....... பரிதாபம்.




கேமெராவுக்கு ஏன் இப்படிக் கண்ணு கலங்குது? ஏம்மா...யாராவது அடிச்சாங்களா?




ஊஊஊம்ம்ம்ம்ம்ம்........(விக்கிவிக்கி அழுவுதுப்பா)




எல்லாம் இந்த டபுள் க்ளேஸிங் வேலை. இந்த அழகில் டிண்ட்டட் வேற. கேக்கணுமா?





வெறுங்கண்ணில் நல்லாவே தெரிவது எல்லாம் கேமெராக் கண்ணுலே ஒரே கலங்கல்........




இதுக்காகப் போட்டியில் கலந்துக்காம இருக்க முடியுமா? வெற்றி தோல்வியைச் சமமாப் பாவிக்கிறேன்னு பின்னே எப்படிக் காமிக்கிறது?




'மூளை'யைப் பயன்படுத்தி எடுத்தவைகளை எங்கியாவது போடணும்தானே?




'பளிச்'களுக்கு முன்னால் 'இருட்'னு சிலபடங்களைப் போட்டிருக்கேன்.




'கலக்கல், கலக்கிட்டீங்க' ன்னு நீங்க பாராட்டுறது இப்பவே கேக்குது:-)))))))