Thursday, February 24, 2005

அட்ரஸ் புக்கைத் தொலைச்ச அக்கா!!!

மக்களே, இப்படியும் ஒரு ஜென்மம் இருக்குதான்னு ஆச்சரியமா இருக்குமே!

இந்த வீட்டுக்கு மாறிவந்தப்ப 'வேற ஃபோன் கம்பெனி மாத்திக்கலாம், அவுங்கதான் கவர்ச்சியா(!)
விளம்பரம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. நல்ல ஹை ஸ்பீடு இன்டர்னெட் கனெக்ஷன் கிடைக்கும்னு
வேற சொல்றாங்க. முந்தி இருந்தது போல ரெண்டு ஃபோன் லைன் கூட வேணாமாம். ஒரே சமயம்
நெட் லே மேய்ஞ்சிக்கிட்டு இருந்தாலும், ஃபோன் லைன் வழக்கம்போல வேலை செய்யுமாம்'ன்னு
இவர் சொன்னதும் சரின்னு ( முதல்முறையா தர்க்கம் ஒண்ணும் செய்யாம!) தலையை ஆட்டிட்டேன்.



போதாக்குறைக்கு, 'நெட்வொர்க் கேபிள் போட்டு வச்சிருக்கு. அதனாலே இனிமே கொஞ்சநேரம் லைனை எனக்கு
விடறயான்னு கேக்க மாட்டேன்'னு சொன்னாரா, சந்தோஷமாயிருச்சு! இவரும் நேத்துப் பழைய ஃபோன் கம்பெனிக்கு
சேதியைச் சொல்லிட்டாராம்!

ஆனா இதெல்லாம் ஒரே நிமிஷத்துலே நடந்துருமுன்னு எனக்கென்ன தெரியும்? நான் நமக்குத் தெரிஞ்ச உறவினர்,
நண்பர்கள், கூட வேலை செய்யறவங்கன்னு பலருடைய அட்ரஸையும் பழைய மெயில் பாக்ஸ்லே வச்சிருந்தேன்.

இன்னைக்கு மொத வேலையா, (காஃபிகூட குடிக்காம) அட்ரஸ் புக்கை காப்பி எடுத்து வச்சுக்கலாமுன்னு ஓடிவந்தா,
அந்தத் தபால் பெட்டி, என்னை நீ யாருன்னு கேக்குது! இந்த அநியாயத்தைக் கேக்க ஆளில்லாமப் போச்சே!

எனக்கும் புது ஈ மெயில் அட்ரஸ் வந்துருச்சு.

tulsigopal@xtra.co.nz

இனிமே நீங்க இந்த அட்ரஸுலே எனக்கு மெயில் அனுப்புங்க! சரியா?



உதவிக் கரம் நீட்டுங்க ப்ளீஸ்!!!

காசு வேணாங்க!!!! இது ஒரு வேண்டுகோள்!!! உங்களுக்கெல்லாம்....

நம்ம தமிழ்ச் சங்கத்துலே சின்னப்புள்ளைங்களுக்காக ஒரு தமிழ்ப் பள்ளி ஆரம்பிச்சு வருசம் 10 ஆச்சுது.


எல்லா வெளிநாடுகளிலும் இருக்கற வழக்கப்படி வாரம் ஒரு நாள்( ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் உள்ளூர்
பாடசாலையில் ஒரு வகுப்பை வாடகைக்கு எடுத்திருக்கோம்!) பள்ளிக்கூடம் நடக்குது.

இப்ப தேவை என்னன்னா, பிள்ளைங்களுக்காக கதைப் புஸ்தகங்கள் வாங்கக் கொஞ்சம் காசு வச்சிருக்கோம்.
என்னென்ன புத்தகங்கள், எங்கெங்கே வாங்கலாம்ன்னு ஒரு தெளிவும் இல்லே!

தமிழ் மொழியிலே பல, இங்கிலீஷ்லே சில( நம்ம கதைங்களை ஆங்கிலத்துலே சொல்றது)வேணும்!

சுண்டைக்காய் கால்பணம், சுமை கூலி முக்காப் பணமுன்னு சொல்றதுபோல தபால் செலவு புத்தகங்களின்
மதிப்பைப் போல பலமடங்கு ஆகிடுது!

நல்ல தரமான, விலையிலும் சகாயமான சிறுவர்/சிறுமிக்கான புத்தகங்கள் கிடைக்கிற விவரம் தருவீங்களா?
நம்ம பத்ரியின்,'கிழக்குப் பதிப்பகம்' எதாவது இந்தமாதிரி வெளியிட்டிருக்காங்களா?

பத்ரி மற்றும் நண்பர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!

Tuesday, February 22, 2005

ரெடிமேட் !!!!! பகுதி 4

மாலா மராத்தி மாயீத் நாஹி! இப்படிச் சொல்லிக்கிட்டே மஹாராஷ்டிரா மாநிலத்தில் பூனா வந்து சேர்ந்தாச்சு! இப்ப அதுக்குப் பேரு புணே!
பம்பாய் மும்பை ஆனமாதிரி, பூனா இப்ப புணே! வெள்ளைக்காரன் வச்ச பேருங்களை எத்தனை நாள்தான் சொல்லிக்கிட்டு இருக்கறது?



அங்கே வந்தப்ப ஹிந்தி எல்லாம் தெரியாது. நமக்குத் தெரிஞ்ச் ஹிந்தியெல்லாம் அப்ப யஹாங், வஹாங், நஹி, மாலும், அச்சா இவ்வளவேதான்!
அங்க வந்து பட்ட பாட்டையெல்லாம் ஏற்கெனவே மரத்தடியிலே ' என் செல்ல( செல்வ)ங்கள்ன்னு எழுதிக்கிட்டு வர்ற தொடர்லே ஒரு பாட்டம்
புலம்பியாச்சு! அதனாலே அங்க புலம்பாம விட்டதை மட்டும் இங்கே சொல்றேன். சரியா?

நமக்குத் தெரிஞ்ச ஒரு நண்பரோட சொந்தக்காரர் அங்கே நேவியிலே இருக்கார். உதவி வேணும்ன்னா அவுங்களைக் கேளுங்கன்னு நண்பர்
அவுங்க அட்ரஸைக் கொடுத்தார். 'ஆஹா'ன்னு வாங்கி வச்சுக்கிட்டோம்!

வந்து ரெண்டே நாளுலே தெரிஞ்சுபோச்சு, வீடு கிடைக்கறது குதிரை கொம்பைவிடவும் கஷ்டம்ன்னு! நண்பர் கொடுத்த ஃபோன் நம்பரில்
நேவிக்காரவுங்களைக் கூப்பிட்டோம். உடனே வந்து பாக்கச் சொன்னாங்க. பஸ் பிடிச்சு அங்கே இங்கேன்னு தேடி அவுங்க வீட்டுக்குப்
போனோம். வீடா அது? அரண்மனைங்க அது!ஹப்பாடான்னு ஆகிப் போச்சு!

அப்புறம்தான் தெரியுது அவர் கடற்படையிலே நல்ல பெரிய உத்தியோகஸ்தர்ன்னு! வெள்ளைக்காரங்க காலத்துலே கட்டுன கட்டடம். கருங்கல்!
ப்ரமாண்டமான புல்வெளியோடு தோட்டம்! பேசாம கிரிக்கெட் கிரவுண்டா ஆக்கிறலாம்! உள்ளே போனா பெரிய ஹாலும், அதுக்குப் பக்கத்துலே
இன்னோரு பெரிய ஹாலுமா இருக்கு. ரெண்டாவதா இருக்கற ஹால்தான் 'டைனிங் ரூம்!'

ஒரு பழைய படத்துலே ( பெயர் ஞாபகம் இல்லே) நாகேஷ் தன்னுடைய தாத்தா காலத்து வீட்டை வர்ணிச்சது நினைவுக்கு வந்துச்சு!
'டைனிங்டேபிளின் ஒரு பக்கத்துலெ இருந்து, கொஞ்சம் உப்புன்னு சொன்னா, அடுத்த பக்கத்துலே இருந்து சைக்கிளிலே வந்துதான்
தரணும். அவ்வளவு பெரிய மேஜை'ன்னு வசனம் வரும். அந்த அளவுலே இங்கேயும் ஒரு மேஜை!

கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தப்ப, அவுங்க சொன்னாங்க, 'நீங்க பேசாம இங்கே எங்க கூடவே தங்கிடுங்க'

எனக்கு மனசுக்குள்ளே பயமா இருந்துச்சு! ரொம்பப் பெரிய இடம்(!) நாமோ ரொம்ப சாதாரணமான ஆளுங்க. ஆனா வீடு என்னவோ
கிடைக்கற லட்சணம் இல்லே! இவரு என்னைப் பார்த்துக்கிட்டே சரின்னு தலையை ஆட்டிட்டாரு!

மறுநாளே ஓட்டல் அறையைக் காலி செஞ்சுட்டு இங்கே வந்துட்டோம். ரெண்டு சூட்கேஸும், ஒரு மரப்பெட்டியும்! இவ்வளவுதான் நம்ம
சொத்து, சுகம்! எங்களுக்கு ஒரு பெரிய அறை ஒதுக்குனாங்க!அதுலேயே ஒரு அட்டாச்சுடு பாத் ரூம். உள்ளே பாத் டப் கூட இருக்கு!
இதெல்லாம் முந்தி சினிமாலே பார்த்ததோட சரி! இப்பத்தான் மொதல்முறையா நேரிலே !

அந்த அரண்மனையிலே( அப்படித்தான் நினைச்சேன்)14 ரூம்கள்! மூணு கிச்சன், அப்புறம் கேம்ஸ் ரூம், அங்கங்கே ஹால்
(எத்தனைன்னு எண்ணலே) சர்வண்ட் க்வாட்டர்ஸ் மட்டுமே 8!

அதுலே ஒரு மாலி. தோட்டக்காரர்! அவரே புல்வெளி பராமரிப்பு, செடிகொடிகளைவெட்டி ஒழுங்குபண்ணறதுன்னு எல்லாம் கவனிச்சுப்பார்.
ஒரு ஆளு கார் துடைக்கறது, வெளிப்பக்கம் சுத்தம் செய்யறதுன்னு. சில பெண்கள் வீட்டுக்குள்ளே சமையல், துணி துவைக்கறது, பெருக்கறதுன்னு!

அங்கே வீடு கிடைக்காத காரணத்தாலேயே, இலவசமா இந்த சர்வண்ட் க்வாட்டர்ஸ்லே தங்கிக்கிட்டு எல்லா வேலையும் செஞ்சு கொடுத்துருவாங்களாம்!
சம்பளம்ன்னு பெருசா ஒண்ணும் இல்லே. கொஞ்சமா ஏதோ கொடுத்தாப் போதுமாம்! அதுவும் சில ஆளுங்களுக்கு மட்டும்!

எனக்குன்னு ஒரு வேலைக்கு ஆளை நியமிச்சுட்டாங்க! அந்தம்மா பேரு 'ஷாரதா பாய்' அங்கெல்லாம் மராத்திக்காரங்க பேருலே 'பாய்'ன்ற
விகுதி இருக்கும். நம்ம 'ஜக்கு பாய்' மாதிரின்னு வச்சுக்குங்களேன்! அப்புறம் பொதுவாவே வீட்டு வேலைக்கு உதவி செய்யரவங்களை
'பாய் ( Bai)'ன்னே சொல்வாங்க.இன்னும் வேலைக்கு ஆள் வரலைன்றதையே, 'அபிதக் யே பாயி நை ஆயா'ன்னு சொல்வாங்க.

காலையிலே நம்ம 'ஷாரதாபாய்' வந்தாங்க. 'நமஸ்தே மேம்ஸாப்' அப்டின்னதும் நானும் 'நமஸ்தே'ன்னு சொன்னேன்.அதைக் கேட்டதும்
அவுங்களுக்கு ஒரே ஆச்சரியம்! எல்லாப் பெரிய ஆளுங்க வீட்டுலேயும் எஜமானி அம்மாவை, வேலைக்கு உதவறவங்க 'மேம்ஸாப்'ன்னு
சொல்றதுதான் வழக்கம்! அதுவும் இந்த மாதிரி ஆளுங்க வேலைக்கு வந்தவுடன் 'குட் மார்னிங்' சொல்றமாதிரி, சலாம், நமஸ்தே இப்படி
ஒண்ணு சொல்வாங்க. அப்ப அந்த எஜமானிங்க, அதை கம்பீரமா அங்கீகரிக்கிற விதம் ச்சும்மா தலையை ஆட்டறதுதான்!

இந்தப் பழக்கத்தை முறிச்ச மாதிரி, நான் நமஸ்தேன்னு திருப்பிச் சொன்னதும் அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும் போல.
அந்த விவரம் உடனே பின்னாடி 'சர்வண்ட்ஸ் க்வாட்டர்ஸ்லே' பரவிடுச்சு! நமக்கோ அப்ப ஹிந்தி நஹி மாலும். அதனாலெ எப்படி, என்ன
வேலை செய்யணும் ஹிந்தியிலே சொல்றதுக்காக, நேவிக்காரவுங்க கிட்டேயே,எனக்கு வேண்டிய 3 கட்டளைகள் எப்படிச் சொல்லணும்ன்னு
கேட்டுத் தமிழிலெ எழுதி வச்சுக்கிட்டேன்.

பாத்திரம் தேய்க்கணும், ரூமை, பெருக்கி, ஈரத்துணியாலே துடைக்கணும். துணிகளைத் துவைக்கணும். நாங்க ரெண்டு பேர்தானே, வேற
என்ன வேலை பெருசா இருக்கப்போகுது?

'ஷாரதாபாய், பர்த்தன் சாஃப் கரோ!'

'ஷாரதாபாய், அபி ஜாடு லகாவ், போச்சோ !'

'ஷாரதாபாய், கப்டா தோவ்!'

அந்தம்மா வந்தவுடனே, மேஜையின் இழுப்பறையிலே வச்சிருக்கற காகிதத்தைப் பார்த்து, முதல் 'கமாண்ட்' சொல்வேன்! அந்த வேலையை
முடிச்சவுடன் அடுத்தது. எல்லாம் அப்பப்ப பார்த்துப் பார்த்துதான்! மூணும் முடிஞ்சாச்சுன்னா, 'அச்சா, ஜாவ்' னு சொல்லிடுவேன். அன்னைக்குக்
காந்தாயம் முடிஞ்சது! அந்தம்மா வேற ஏதாவது சொன்னாங்கன்னா போச்! ஒண்ணும் புரியாது. அப்ப மதிப்பா சொல்றது,' ஹிந்தி மாலும் நஹி!'


எங்க இவருக்கு ஃபேக்டரி போகறதுக்கு அங்கேயிருந்து ரொம்பவே தூரம். மூணு பஸ் மாறிப் போகணும்! அங்கெயோ குளிரான குளிர் வேற!
அப்பல்லாம் இவர் வெண்குழல் வத்தி( நானும் தமிழ்ப் பேரு சொல்லிட்டேன்! வழலைக் கட்டி மாதிரி!)பிடிப்பாரு! அதாங்க சிகெரெட்!
காலையிலே ஏழரைக்கு வேலையிலே இருக்கணும். போன புதுசில்லையா? அதாலெ சரியான நேரத்துக்குப் போயிரணுமே! காலையிலே
5 மணிக்கு எந்திருச்சு, அஞ்சேமுக்கால் பஸ் பிடிச்சிடுவாரு.அப்படியே இன்னும் ரெண்டு பஸ் மாறி ஏழரைக்கு முன்னாலெ போயிருவாராம்!
சாயந்திரம் அதே போல 3 பஸ்! வீடு வரவே கிட்டத்தட்ட 6 மணி ஆயிரும்.பஸ்ஸுக்காக காத்திருக்கற நேரத்திலே எல்லாம் சிகெரெட் துணை!

எனக்குக் காலையிலே இவர் கிளம்பிப் போயிட்டா, சாயந்திரம் 6 வரை ஃப்ரீ டைம்! ஏராளமான நேரம்! என்னன்னு நேரம் போக்கறது?

நம்ம நேவி கமாண்டரும்( அதாங்க அவர் உத்தியோகம்) காலையிலே ஏழரைக்குக் கிளம்பிப் போயிடுவார்.அவுங்களுக்கு ரெண்டு பசங்க.
பெரிய பையன் (12 வயசாம்) ஊட்டிலே கான்வெண்ட்லே படிக்கறானாம். சின்னது 8 வயசுப்பொண்ணு. இங்கேயே படிக்குது.அதுவும்
சென்ட் ரல் ஸ்கூல் போல ஒண்ணு! அந்தப் பொண்ணைப் பள்ளிகூடத்துக்குக் கொண்டுபோய் கொண்டு வர்றதுக்குத் தனியா ஒரு ஆள்.
அவரே காரை ஓட்டிட்டுப் போய் வருவார். அப்படியே நமக்கு வேணுங்கற காய்கறிகளையும் ஃப்ரெஷா மார்க்கெட்டிலே இருந்து வாங்கி வந்துருவார்!

கமாண்டரோட மனைவிக்கு எங்களை ரொம்பவும் பிடிச்சுப் போச்சு! தனியா அத்தாம்பெரிய வீட்டுலே இருந்தவங்களுக்கு நான் துணையா
வந்துட்டேன்னு சொன்னாங்க. நானும் அக்கான்னுதான் அவுங்களைக் கூப்பிட்டேன்.

பாதுகாப்புப் பிரிவுலே இருக்கறவங்களோட வாழ்க்கைமுறையை, அப்போ கிட்ட இருந்து பாக்கற வாய்ப்பு எனக்கு! அதுவும் எல்லாம் ரொம்ப
மேல்தட்டு உத்தியோகஸ்தர்கள்! எல்லாவேலைக்கும் ஆள், அம்புன்னு இருக்கறதாலே 'ஸோ கால்டு சொஸைட்டி லேடீஸ்'க்கு எப்பவும்
காஃபி மார்னிங், சோஷியல் சர்வீஸ், ஃபோன்லே பலமணிநேரம் 'காஸிப்' இப்படி தினம் ஏதாவது ஒண்ணு! என்னையும் அவுங்க ஜோதியிலே
கலந்துக்க வச்சிட்டாங்க. நானும் உள்மனசுலே ஒரு ச்சின்ன பயத்தோடு (எச்சரிக்கை!) இதுலே சேர்ந்துக்கிட்டேன்.

ஆனா சும்மாச் சொல்லக்கூடாது, பலவிதமான மனுஷங்களோட பழகுற வாய்ப்பு மட்டுமில்லாம, பல கைவேலைகளையும் கத்துக்கிடவும்
நல்ல ச்சான்ஸ் கிடைச்சது! எல்லார்கிட்டேயும், அவுங்க 'கஸின்'னு சொல்லிட்டாங்க. பூனாவுலே 'சதர்ன் கமாண்ட்ஸ்' தலைமை அலுவலகம்
வேற இருக்கே. முப்படைக்கும் அங்கே ப்ரதானப்பட்ட ஆஃபீஸ்கள் இருக்கறதாலே, அப்பப்ப இந்த மேல்தட்டு லேடீஸ் சேர்ந்துக்கிட்டு,
'ஃபண்ட் ரைஸிங் ஈவண்ட்ஸ்' ஏதாவது செஞ்சுக்கிட்டே இருப்பாங்க! 'ஸாப்'புங்கெல்லாம் ஆஃபீஸ்லே, 'மேம்ஸாப்'புங்கெல்லாம் இப்படி
சேவை செய்யறதுலேன்னு நேரம் போகுது!

அலங்கார மெழுகுவர்த்தி செய்யறது, பத்திக் டிஸைன் வரையறது, பூக்கள் அலங்காரம், வாழ்த்து அட்டைகள் பெயிண்ட் செய்யறதுன்னு சவுத் இண்டியன்
ஸ்நாக்ஸ் செஞ்சு காட்டறதுன்னு ஏகப்பட்ட விஷயம்! நான் சுமாரா ஓவியம் வரைவேன். அதை நல்லா டெவலப் செஞ்சுக்கவும் முடிஞ்சது!
அந்த ஊருலே 'ஹேண்ட்மேட் ஆர்ட் பேப்பர்' தயாரிச்சு விக்கறாங்க. அதை வாங்கி அருமையான பூக்கள், ஸீனரின்னு வரைஞ்சு நிறைய
கிரீட்டிங் கார்ட்ஸ் செஞ்சு விற்பனைக்கு விட்டோம். இதுலே இன்னோரு விஷயம் என்னன்னா எல்லோரும் இங்கிலீஷ்லேதான் பேசிக்குவாங்க.
நமக்கு ஹிந்தி தெரியாட்டியும் பரவாயில்லேன்னு இருந்துச்சு! அப்பப்ப சில ஹிந்தி வார்த்தைகள் கலந்த இங்கிலீஷ்!

சரி, விஷயத்துக்கு வரேன். நம்ம ஷாரதா பாய் மாதிரி வீட்டு வேலை செய்யற மராத்திக்காரங்க ஒருவிதமான கைத்தறித் துணியிலே
ப்ளவுஸ் போடுவாங்க. நல்ல பச்சை, நீலம், மெரூன் போல அழுத்தமான கலருலே 'காண்ட்ராஸ்ட் கலரு'லே பெரிய பார்டரோட இருக்கும்!
நம்ம ஊர் பட்டுப் புடவை காம்பினேஷன் போல! கைக்கும், முதுகுக்கும் அந்த பார்டர் வரும்! பார்க்க அட்டகாசமா இருக்கும். ஆனா
நவநாகரீக மங்கையர் அதை வாங்கிக்க மாட்டாங்க! அவுங்கெல்லாம் டூ பை டூதான்! இது கிராமத்து ஆளுங்க டிஸைனாம்!

எனக்கோ அதைப் பார்த்தது முதல் அதும்மேலேயே ஒரு கண்ணு! போதாக்குறைக்கு, இடது மூக்குலே ஒரு வளையம் ( மூக்குத்திக்குப்
பதிலா)போட்டுக்கறாங்க, மார்கெட்லே நான் பார்த்த சின்னவயசு பொண்ணுங்க! அதுவுமே கிராமத்து ஆளுங்க ஸ்டைலாம்!

எங்க இவர் சொல்லிட்டார், இந்த வளையம், கிளையம் எல்லாம் சரிப்படாதுன்னு! (நோ பாடி பியர்ஸிங்!)போனாப் போட்டும். ப்ளவுஸ்
மட்டுமாவது தைச்சுக்கலாமேன்னு தேடிப் பிடிச்சு, பச்சைக்கலருலே. அரக்கு பார்டர் போட்டு துணி வாங்கி, தைக்கக் கொடுத்தேன்.
இந்தத்துணிங்க, பட்டும் நூலும் கலந்து நெய்யறதாலே ஒரு பளபளப்பாவேற இருக்கும்! தைச்சுவந்த ப்ளவுஸைப் போட்டுக்கிட்டு ஒரு மிதப்போட
இங்கே அங்கென்னு சுத்திக்கிட்டு இருந்தேன். சொஸைட்டி லேடீஸ்ங்ககூட அதைப் பாராட்டினாங்க!

மறுநாள் துவைச்ச துணிக் கும்பலிலே அந்த ப்ளவுஸைத் தேடி எடுத்தேன், அயர்ன் பண்ணி வச்சுட்டா, அடுத்தநாள் போட்டுக்கலாமேன்னு.
கையிலே எடுத்துப் பார்த்தவுடனே 'திக்'ன்னு ஆயிருச்சு! கலர் ஒண்ணும் போகலே, நல்லாவே இருக்கு. ஆனா, அது என்னுடைய
அளவிலே இல்லாம ஒரு அஞ்சு வயசுப் புள்ளைக்குத் தைச்ச மாதிரி இருக்கு!

அப்பத்தான், ஷாரதாபாய் சொல்றாங்க,'துணியை நனைச்சுட்டுல்லே தைக்கணும். ரொம்பச் சுருங்கிடுற ரகமாச்சே. டெய்லர்கிட்டே
சொல்லலையா?'

நாம என்னத்தைக் கண்டோம்? அந்த டெய்லர் இதைப் பார்த்துச் சொல்லியிருக்கவேணாமா?

ஐய்யோ, எவ்வளவு அருமையான ப்ளவுஸ், ஒரு ஹிந்தி படத்துலே ரேகா கூட இதே டிசைன் போட்டிருந்தாங்களே!


இன்னும் வரும்!



Saturday, February 19, 2005

மனுஷ வாழ்க்கை!!!!!

கடவுள் ஒரு நாள் கழுதையைப் படைச்சாராம்!

அப்ப அதுகிட்டே அவர் சொன்னாராம்,"உன் பெயர் கழுதை!
நீ , தினமும் பொழுது விடியறதுலே இருந்து, பொழுது போற வரைக்கும் வரை சோர்வில்லாம உழைக்கணும்.
உன் முதுகில கனமான சாமான்களை ஏத்திக்கொண்டு போக நீ உதவியாக இருக்கணும்.
உனக்கு உணவு புல்! புத்திசாலித்தனம் உனக்கு விதிக்கப்படலை. நீ 50 வருஷம் உயிரோடு இருப்பே!



அதுக்கு அந்தக் கழுதை சொல்லுச்சாம்,' நான் கழுதையாக இருப்பேன். ஆனால் 50 வருஷம் ரொம்ப ஜாஸ்தி. எனக்கு ஒரு 20
வருஷ ஆயுள் போதும்!'


சரி. அப்படியே ஆகட்டும்!'ன்னு கடவுள் சொல்லிட்டாராம்.

அப்புறமா ஒரு நாயைப் படைச்சாராம்!

" உன் பேரு நாய். நீ மனுஷனுக்கு நல்ல தோஸ்தா இருப்பே! அவன்/அவள் கொடுக்கற மிச்சம் மீதியைத்தான் தின்னுவே. அவுங்க வீட்டையெல்லாம்
நல்லா காவல் காப்பே! 30 வருசம் உனக்கு ஆயுசு!"

அதுக்கு நாய்,'30 ரொம்பக் கூடிப்போச்சு! எனக்கு ஒரு 15 போதும். ஆமா, மனுஷன்னா என்ன? 'ன்னு கேட்டுச்சாம்!

சாமி சொன்னாராம், '15 வருசமே போட்டுக்கறென். மனுஷனை இனிமேப்பட்டுத்தான் படைக்கணும்'

அடுத்து குரங்கு.

வழமை போல,'நீ குரங்கு. கிளைக்குக் கிளை தாவிகிட்டே இருப்பே. எல்லோருக்கும் வேடிக்கை காட்டி, சந்தோஷப்படுத்துவே! உனக்கு
ஆயுள் 20! அப்படின்னு சொன்னப்ப, குரங்கு சொல்லுச்சாம்,' சொல்றதெல்லாம் சரிதான்! ஆனா ஆயுசு மட்டும் 10 போதும்'

சாமி 'ஓக்கே'ன்னுட்டு மனுஷனைப் படைச்சாராம்!

மனுஷங்கிட்டே சொன்னாராம், 'நீ மனுஷன். உனக்கு ரொம்ப புத்தி கொடுத்திருக்கேன். எல்லா மிருகங்களையும் நீ அடக்கி டுவே! இந்த
பூமியை உன் ஆட்சிக்குக் கொண்டு வந்துருவே! உனக்கு ஆயுள் 20 வருஷம்!'

மனுஷந்தான் புத்திசாலியாச்சே! யோசிச்சானாம். அப்புறம் சொன்னானாம்,'நான் மனுஷனா இருக்கேன். அது ஒண்ணும் பிரச்சனையில்லே!
ஆனா இவ்வளவு புத்தியை வச்சுக்கிட்டு வெறும் 20 வருஷம்ன்னா ரொம்பக் கொஞ்சமா இருக்கு'

கடவுள் இதுவரைக்கும் நடந்ததைச் சொன்னாராம். 'அவுங்கெல்லாம் ஆயுள் கொடுத்தா வேணாம்ன்னு சொல்லிட்டாங்க. அந்த பாக்கிதான் இப்ப
என்கிட்டே இருக்கு. என்ன செய்யலாம்?'ன்னு மனுசன்கிட்டேயே யோசனை கேட்டாராம்.

மனுசன் சொன்னானாம், 'கழுதையோட 30, நாயோட 15, குரங்கோட 10 இதெல்லாம் நானே எடுத்துக்கறேன்'

கடவுள், அப்படியே ஆகட்டும்'ன்னு சொல்லிட்டு போயிட்டாராம்!

அப்ப இருந்து, மனுஷன், மனுஷனா மொதல் 20 வருஷம் வாழ்ந்துட்டு,அதுக்கப்புறம் கல்யாணம் கட்டி, குடும்பத்தைக் காப்பாத்துறது, பிள்ளைங்களைப்
படிக்கவைக்கறது அப்படி எல்லா குடும்ப பாரங்களையும் முதுகுலே சுமந்துகிட்டு 30 வருசம் இருக்கானாம். அப்புறம் பசங்கெல்லாம் பெருசானதும்,
வீட்டைப் பார்த்துக்கிட்டு, என்ன கொடுத்தாலும் சாப்புட்டுக்கிட்டு நாயாட்டம் 15 வருசம் இருந்துட்டு, கிழவனா ஆனபிறகு, புள்ளைங்களோட வீட்டுக்கு,
இங்கே இந்தப் புள்ளைகூட கொஞ்ச நாள், அந்தப்புள்ளைகூட கொஞ்சநாளுன்னு மாறி மாறி தாவிகிட்டு, அங்கங்க பேரப்புள்ளைங்களுக்கு
வேடிக்கைக் காட்டிக்கிட்டு இருக்கானாம்!


இன்னைக்குக் காலையிலே ஒரு நண்பர் மின்னஞ்சலிலே இதை அனுப்பி வச்சார். படிச்சதும் நல்லா இருக்கேன்னு தோணுச்சு. கொஞ்சம்
நம்ம கைச்சரக்கையும் சேர்த்து உங்களுக்கு இந்தப் பதிவைப் போட்டேன். உங்களிலே பலருக்கு இது மொதவே தெரிஞ்சிருக்கலாம்.
தெரியாதவங்களும் இருப்பாங்களே, என்னை மாதிரி!




Friday, February 18, 2005

ரெடிமேட் பகுதி 3

கேரளத்திலேக்கு ஒரு ச்சாட்டம்! அதல பாதாளத்துக்கு வெட்டு! பின்பக்கம் முதுகுலே! தைக்கறது அதே சேட்டன்மார் டெயிலர்கள்தான்!
மெட்ராசுக்கு ஸ்டைல் வேற!


இங்கே நம்ம தமிழ் நாட்டுலே, எல்லாத்துக்கும் ஆம்பிளைங்க ஒரு வியாக்யானம் சொல்லிடுவாங்கல்ல! இதுலே கொஞ்சம்(!) வயசான
பொம்பிளைங்களும் சேர்ந்துக்கிடுவாங்களே! இதுகூடாது, அது சரியில்லேன்னு ஆயிரம் குத்தம் சொல்வாங்க. ஊர்வாய்க்குப் பயந்துக்கிட்டு
அடக்கி வாசிக்கணும்! அப்படியும் கொஞ்சம் சுமாரா கழுத்து வைக்கச் சொல்றதுதான்! 'என்னா, இந்த அலட்டு அலட்டிக்கிட்டுப் போறாங்க'ன்னு
ஜனங்க சொல்றதைக் கேட்டும் கேக்காதமாதிரிப் போயிருவோம்!

ஆனா அங்கெ போனப்பத்தான் தெரியுது நம்ம ஜாக்கெட்டெல்லாம் எப்படிக் கழுத்தை இறுக்கிக்கிட்டு இருக்குன்னு! மூச்சுவிடவே(!)முடியாம
சிரமப்படறோமோன்னு அவுங்களுக்கு ஒரே கவலை! அவுங்களுக்கென்ன ஈஸியாச் சொல்லிருவாங்க! எப்பவும் தலைக்குக் குளிச்சு ஈரம் காயாத
முடியை அப்படியே விரிச்சுப் போட்டுக்கிட்டு இருக்காங்க. முடின்னா அது முடி! அநேகமா எல்லாருக்குமே கருகருன்னு நீளமாவும் அடர்த்தியாவும்
ஆளை அடிக்குது! முதுகையே மறைச்சுடற முடி! ஆழமா வெட்டுனா என்ன? அகலமா வெட்டுனா என்ன? முதுகே வெட்டாம, ராஜஸ்த்தான்
பொம்பிளைங்க மாதிரி 'நாடா' முடிஞ்சாத்தான் என்ன?

நமக்கு? தலையை விரிச்சுப் போட்டாக் குடும்பத்துக்கு ஆவாது(!) பின்னிக்கணும்.அதுவும் தலைக்கு எண்ணெய்தடவி, பின்னிக்கணும்!
எண்ணெய் தடவாம இருந்தாலும், அடர்த்தியா இருக்கரமாதிரி ஒரு பம்மாத்துவேலை காட்டலாம்! ஏழ்மையையும், எண்ணெய் இல்லாத
முடியையும் சம்பந்தப்படுத்திட்டாங்களேப்பா! காசில்லாதவனை வர்ணிக்கறதே, எண்ணெய் காணாத தலைன்னு! இதெல்லாம் அப்போ!

எப்போவா? முப்பது கொல்லம் முன்னே! நாங்க அங்கே இருந்தப்ப, நம்ம நண்பர்கள் கூட்டம் கேரளச் சுற்றுலான்னு வந்தாங்க.
கோயில் கோயிலாப் போறதுதான் அப்பெல்லாம் சுற்றுலா! குருவாயூர் கோயிலைப் பார்த்துட்டு, அப்படியே நமக்கும் ஒரு விஸிட்
தரலாம்ன்னு வந்தாங்களா, அவுங்க நம்ம வீடு வந்து சேரும்போதே ராத்திரி பத்தாயிருச்சு! நாங்கெல்லாம் பழைய கதைகளைப் பேசிக்கிட்டே
சாப்பிட்டு தூங்கவே ராத்திரி மணி ரெண்டாயிருச்சு!

நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிங்களாச்சே, சரியாக் கவனிக்கணுமேன்னு நான் கவலையோட, காலையிலே சீக்கிரமா எழுந்து
அரக்கப் பரக்க வேலையை ஆரம்பிச்சுட்டு, எல்லோருக்கும் காஃபி தயாரிச்சு வச்சிட்டு அவுங்களை எழுப்பலாம்ன்னு போனா,
எல்லோரும் தூங்கிக்கிட்டு இருக்காங்க.சரி, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும். அப்புறம் எழுப்பலாம்ன்னு நினைச்சு தலையைத்
திருப்புனா, ஜன்னலுக்குப் பக்கத்திலே படுத்திருக்கறவர் முழிச்சுக்கிட்டே ஜன்னல் வழியா வெளியே கண்ணை நட்டுக்கிட்டு இருக்கார்!

அந்த வீட்டுலே பெரிய பெரிய ஜன்னலுங்க.தரையைத் தொடுறமாதிரி கதவு சைஸிலே இருக்கும்! நான் அறைக்குள்ளே வந்ததுகூடத்
தெரியாமல் என்னத்தைப் பாக்கறார்?

மெட்ராஸ் ஆளாச்சே! காஞ்ச ஊருலே இருந்து வந்தவராச்சே! இங்கேயோ எல்லாம் பச்சைப் பசேர்ன்னு இருக்கு. இயற்கைக் காட்சிகளை
ரசிக்கிறார்ன்னு நினைச்சுக்கிட்டே, அப்படி என்னதான் இருக்கு அங்கேன்னு நானும் எட்டிப் பார்த்தேன்!

அப்பத்தானே விஷயம் விளங்குது! கண்ணுக்குக் 'குளுமையான காட்சி'யைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கார்!

பக்கத்துப் பரம்புலே வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க. அதுக்குண்டான ஆத்து மணல் நம்ம ஜன்னலுக்கு அடுத்தாப்புலே கொட்டிவச்சிருக்கு.
நானும் அதை 'பீச்'சாக் கற்பனை செஞ்சுக்கிட்டு சாயங்காலம் கொஞ்ச நேரம் அங்கே உக்காந்துக்கிட்டு இருப்பேன். நல்லா 'ஜில்'லுன்னு
குளுமையா இருக்கும்!

சித்தாளு வேலை செய்யற பொன்னம்மாச் சேச்சி, சிமெண்டுக்கலவைக்காக மணலை வாரி எடுத்துக்கிட்டுப் போறதும் வாரதுமா இருக்காங்க!
சும்மாச் சொல்லக்கூடாது, சேச்சிக்கு நல்ல வண்ணமும் பொக்கமும் உண்டு கேட்டோ! வேலை செய்யறப்ப மேலே வெறும் ப்ளவுஸ் மட்டும்
போட்டுக்கிட்டு இருப்பாங்க. தாவணிக்கு ஒரு தோர்த்து. வேலை செய்யற இடத்துக்கு நடந்து வர்றப்ப அது தாவணி! வேலை ஆரம்பிச்சா
அதுதான் ச்சும்மாடு! ஜஸ்ட் லுங்கி, நல்ல பூப்போட்ட லுங்கி! வெளுத்த முண்டும் உடுக்கமாட்டாங்க. அது அம்பலம் போகும்போழ் மாத்ரம்!
ப்ளவுஸ், நான் மொதல்லே சொன்னமாதிரி, படு பயங்கர கட்டிங்கோட, ஒரு சுருக்கமும் இல்லாம உடம்போட சரியாப் பொருந்தியிருக்கும்,
அளவெடுத்துத் தைச்சமாதிரி!

வண்ணம், பொக்கம்ன்னு சொன்னதும் இன்னோரு விஷயமும் நினைவுக்கு வருது. ஒரு நாள், நாங்க வீட்டுலே இல்லாதப்ப யாரோ
ஒரு ஜோடி எங்களைத் தேடிக்கிட்டு வந்திருக்காங்க. நாங்க வீட்டுலே இல்லைன்னதும் திரும்பிப் போயிட்டாங்க. நாங்க திரும்ப வந்தவுடனே
வீட்டுச் சொந்தக்காரர் ( பக்கத்து வீடுதான்!)பையன் ஓடிவந்து, யாரோ வந்து போன தகவலைச் சொன்னான். அவனுக்கு எட்டு வயசுதான்.

நம்மைத்தேடி அத்தி பூத்தமாதிரி ஆளுங்க வந்தப்ப, யாரு வந்துட்டுப் போனாங்கன்னு தெரியலைன்னா தலை வெடிச்சுடாதா?

"எந்தா பேருன்னு பறஞ்ஞு?"

"பேர் ஒண்ணும் பறஞ்ஞில்லா"

" காணான் எங்ஙனே?"

"காணான் கொள்ளாவுண்ண ஸ்த்ரீதன்னே!"

" வண்ணம் உுண்டாயிருந்நோ?"

" ஆவஸ்யத்தினு!"

" பொக்கமொ?"

" ஆவஸ்யத்தினு!"

யாருடைய அவசியத்துக்கான உயரமும், உடம்பும் ? எட்டு வயசுப் பையன் பேசறதைப் பார்த்தீங்களா? ஆனா, விகல்பமில்லாத
ஜனங்கன்னு புரிஞ்சது! ச்சின்ன ஊராச்சே!

'என்னண்ணே, முழிச்சுக்கிட்டீங்களா? காஃபி கொண்டுவரவா?' ஒண்ணும் தெரிஞ்சுக்காத பாவத்தில் 'அப்பாவியா' நான் கேட்டேன்.
அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. 'அடிப்பாவி.. நல்ல நேரத்துலே வந்தயே'ன்னு மனசுலே என்னைத் திட்டறார்!

அப்புறம் மத்தவங்கெல்லாம் எழுந்தாங்க. எல்லாருக்கும் ஒரே சந்தோஷம்! பலாப் பழத்துலே ஈ மொய்க்கிறமாதிரி அவுங்க கண்ணெல்லாம்
சேச்சி மேலேயே இருக்கு!

நானும் அவுங்க கவனத்தைத் திருப்புறதுக்கு வேற என்னென்னவோ பேசிப்பார்க்கறேன். ஊஹூம்.... நடக்கற வழியாத் தெரியலை!
அதுலே பாருங்க, இந்த சமூகத்திலே உயர்ந்த பிரிவு ( ஜாதி/பொருளாதாரம்)என்று சொல்லிக்கிறவங்கல்லாம் இந்த மேல்முண்டு உடுத்தறாங்க.
அடித்தட்டு ஜனங்களும், வசதி குறைந்தவங்களும், உடல் உழைப்பையே பிரதானமாகக் கொண்டவுங்களும்தான் இப்படி வெறும் முண்டு மட்டும்
உடுத்தறது. அவுங்களும் ஒரு தோர்த்தை தோளிலே போட்டுக்கறதுதான்! அப்புறம் இன்னொண்ணு, அவுங்க சமுதாயம் இதைத் தவறான
கண்ணோட்டத்துலே பார்க்கறதுமில்லை. இதெல்லாம் பதிவாயி சீலப்பட்டதாணு. கள்ளமில்லாம இருக்காங்கன்னு நான் நினைப்பேன்!

நாங்க தினமும், வெளியே இத்திரி நடக்கான் போகும். அங்கெல்லாம், யாராவது வீட்டுப் படியை விட்டு இறங்கினாவே, எதிர்லே பார்க்கறவங்க
'எவிடேக்கா?'ன்னு ( நமக்கோ அது அபசகுனம். போறப்பயே இப்படிக் கேட்டா, போற காரியம் விளங்குனமாதிரிதான்!)ஒரு கேள்வியை
வீசுவாங்க. யாருவேணா அப்படிக் கேக்கலாம், சின்னச் சின்ன நண்டும் சிண்டும்கூடக் கேக்கும்! அதுக்குப் பதிலையும் பெருசா
எதிர்பார்க்கறதில்லை. 'வெறுதே நடக்கான்'ன்னு சொன்னாலும் போதும். எனக்கும் இப்படிச் சொல்லிச் சொல்லி போரடிச்சுப்போச்சு!
பதிலை மாத்தலாம்னு, ஒருநா இப்படிச் சொன்னேன்'இத்திரி மீன் மேடிக்கான்!'

அதுவே ஒரு தொடர்கேள்விக்கு ஆரம்பம்ன்னு எனக்கு எப்படித் தெரியும்? 'ஐயோ, நிங்கள் பட்டமாரல்லே, மீன் கழிக்கோ?'
நாங்க அப்பல்லாம் சுத்த சைவம்! ( இதுகூட எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு!)

'ஏய், வெறுதே தமாசைக்குப் பறஞ்சதாணு'ன்னு சொல்லித் தப்பிக்கவேண்டியதாப் போச்சு!

நம்ம ஆளுங்க நினைச்சுக்கறது வேற மாதிரி! ஏன், நாங்களே இங்கே வர்றதுக்கு தயாரானப்ப, நம்ம ஆளுங்க சிலர் சொன்னது என்னன்னா,
'நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். மலையாளியோ கொலையாளியோன்னு ஒரு பழஞ்சொல் இருக்கு!' ரைமிங் பார்த்தீங்களா?

இதே போல அவுங்களுக்கும் நம்மைப் பத்தி ஒரு அபிப்ராயம் இருக்காதா? திருவனந்தபுரம், நாகர் கோயில் பக்கம் இருக்கற மலையாளிகள்
தமிழ் நாட்டு ஜனங்களை 'பாண்டி'ன்னு சொல்றாங்க( நம்ம காதுக்குக் கேக்காமத்தான்!) பழங்காலத்துலே பாண்டிய நாட்டு ஆட்களை இப்படிக்
குறிப்பிட்டிருப்பாங்க போல, இப்ப அதுவே எல்லாத் தமிழ்க்காரர்களுக்கும் ஆகிப்போச்சு! ஆனா நாங்க இருந்த திருச்சூர், எர்ணாகுளம் பகுதியிலே
'தமிழன்மார்'ன்னு சொல்றாங்க! ஆனா பாண்டின்றதைவிட இது கொஞ்சம் பரவாயில்லைன்னு எனக்கு ஒரு தோணல்!

எல்லா நாடுகளிலும் பேசற பாஷைதான் வேறயே தவிர மனுஷ இனம் ஒண்ணுதானே!

அதெல்லாம் இருக்கட்டும், அந்த பயங்கர ஃபேஷன்லே நான் ப்ளவுஸ் தைச்சுக்கிட்டேனான்னுதானே கேக்க வர்ரீங்க?

அந்த சோகக் கதையை ஏன் கேக்கறிங்க? அங்கே இருந்த ஒன்னரை வருஷத்திலே ஒரு ப்ளவுஸ் கூட தைச்சுக்கலே தெரியுமா?
கல்யாணம்ன்ற வலையிலே சிக்கினதும் வாழ்க்கையே மாறிடுச்சு! முந்தியெல்லாம், தேவையோ இல்லையோ பொழுதன்னிக்கும்
துணி எடுக்கறதும், புதுசுபுதுசா அப்பப்ப வர்ற ஃபேஷனை ஒட்டி, விதவிதமாத் தைச்சுப் போட்டுக்கறதுமா இருந்ததுக்கு இப்ப ஒரேடியா
லீவு விட்டாச்சு!

இவருக்கு வர்ற ஸ்டைஃபண்ட், 'திவசேன செலவுகள் முடங்காதே கழியான் மாத்ரமே மதியாயிருந்நு'! அதுகொண்டு, புதுசு எடுக்கறதுன்றது
ஒரு ஆடம்பரம்ன்ற ஞானம்(!) வந்துடுச்சு! அதான் ஏற்கெனவே கண்டமானம் வாங்கிக் குவிச்சிருக்கே! அதையெல்லாமே போட்டுப் பழசாக்கவே
அஞ்சாறு வருஷம் செல்லுமே! ( இப்படியெல்லாம் சொல்லி, என்னைத் துணிக்கடைப் பக்கமே அண்டவிடாம கவனமாப் பார்த்துக்கிட்டாரு
எங்க இவரு!)

இன்னும் வரும்!


Sunday, February 13, 2005

லீவு லெட்டர்!!!!

தம்பிங்களே, தங்கைகளே!!

எல்லோரும் எப்படி இருக்கீங்க? வீக் எண்ட் ஆச்சே, எல்லோரும் 'குஜாலா'த்தான் இருப்பீங்கன்னு
நம்பிக்கிட்டு இருக்கேன்.



இங்கே இந்த அக்கா வீடு மாறிக்கிட்டு இருக்கேன். ஒரே வீட்டுலே பதினேழு வருஷம் இருந்து, வேர் விட்டு
இருக்கேன். அதுவும் சல்லி வேர் இல்லை, ஆணி வேர்!!!!

அதைப் பிடுங்கி வேற இடத்துலே வைக்கறது எவ்வளவு கஷ்டம்ன்னு இப்பத்தான் புரியுது! நல்ல வேளை
அந்த வீடு இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம்தான்!

நாங்க பூனாவிலே இருக்கறப்ப 6 மாசத்துக்கு ஒருதடவை வீடு மாறிடுவோம்! ச்சும்மா ஒரு 2 மணி நேரம்
போதும் மூட்டையைக் கட்ட! அப்படிப்பட்ட வீடு மாத்தற 'எக்ஸ்பெர்ட்'இப்ப பேய் முழி முழிச்சுக்கிட்டு,
எதை எடுக்கறது, எதை விடுறதுன்னு தெரியாம ராவணன் போல 'கலங்கி' நிக்கறேன்!

'ரூத்லெஸ்'ஸாக இரு!' இது மறுபாதியின் கட்டளை! ஐய்யோ, செத்தேன்!

இந்த வேலை ஒரு மாசமாவே மெல்ல நடந்துக்கிட்டு இருந்தது. ஆனா எல்லாத்துக்கும் ஒரு நேரம் வந்துருமில்லே.
இப்ப, இன்னைக்குத்தான் முடிச்சே ஆகணும்ன்ற நிலமை!

'இதெல்லாம் ச்சும்மா ஒரு பேச்சுக்குத்தான். அப்பத்தானே நீ ஜரூரா வேலையை ஆரம்பிப்பே' இப்படியெல்லாம்
சொல்லி என் மனசாட்சி அது ஓரமா உக்காந்து உசுப்பிவிட்டுகிட்டு இருக்கு!( சரி, புலம்பாதேன்னு தலையிலே
குட்டு வைக்குது பாருங்க! யாரா? சரியாப் போச்சு, மனசாட்சிதான்!)

அங்கே போய் ஒரு விதமா 'செட்டில் 'ஆன கையோடு வந்துடறேன். அதுவரை ( என்ன, ஒரு வாரம் ஆகுமா?)
லீவு தரும்படி தாழ்மையுடன்(!) கேட்டுக் கொ(ல்)ள்கின்றேன்!

Thursday, February 10, 2005

கொசுறு.....!!!!

கிட்டத்தட்டரெண்டு வருஷமாச்சு, தமிழ்ப் பத்திரிக்கைகளை அச்சில் பார்த்து! இப்பத்தான் எல்லாமே
இணையம் வழின்னு ஆகிடுச்சே! (அதுக்கும் வைச்சாச்சு ஆப்பு! இந்தமாசம் 15 முதல் ஆ.வி.க்கு
காசு வேணுமாம்!)மங்கையர் மட்டும் அப்பப்ப இங்கேயே ஓஸிலே கிடைச்சிருது!



எங்க இவரு, சில நாட்களுக்கு முன்னால், சிங்கப்பூர் வழியா இங்கே வந்தப்ப, நம்ம சிரங்கூன் ரோடிலே
ஒரு புத்தகக் கடையிலே ஏதாவது வாரப்பத்திரிக்கை வாங்கலாம்ன்னு பார்த்தாராம். அந்தக் கடைக்காரர் இவர்
கிட்டே பேச்சுக் கொடுத்திருக்கார். இவரோட கண்ணு புத்தகக் குவியலிலே மேயறதைப் பார்த்தவுடனே அவருக்குத்
தெரிஞ்சிபோச்சு, புள்ளி எந்த வகைன்னு! ( அவரும் எத்தனை பேரைப் பார்த்திருப்பார், இந்த வியாபாரத்திலே!)

'உங்களுக்குப் போன வாரம் புத்தகம் வேணுமின்னா, இதெல்லாம் தரேன். ச்சும்மா ஒரு அஞ்சு வெள்ளி கொடுங்க'ன்னு
சொன்னாராம். ரெண்டுவருசமாப் புத்தகத்தை அச்சுலே பார்க்காத ஆளுக்கு போன வாரத்துக்கும் போன வருசத்துக்கும்
என்ன பெருசா வித்தியாசம் வந்துடப்போவுது?

எனக்கும் படிக்கறதுக்காவுமேன்னு இவர் சரின்னு சொல்லிட்டாராம். மொத்தம் 13 புத்தகம்(கள்).ஆனா அதுலே எல்லாமெ
போனவாரமில்லை. இந்த வார வெளியீடும் இருக்கு!

குமுதம், ஆ.வி, குங்குமம் எல்லாம் மும்மூணு! இந்தியா டுடே தமிழ்( மீனா, கமல், விகரம்,சிம்ரன் படம்போட்ட அட்டை!)
ரெண்டு ஜூனியர் விகடன், அப்புறம் 'ஐ லவ் யூ'விகடன் ஒண்ணு. இலவச இணைப்பா ரெண்டு இளமை விகடன்,
ரெண்டுமினி குமுதம்! ( ஆமா, தமிழ்ப் புத்தகங்களுக்குத் தமிழிலேதான் பேர் வைக்கணும், இந்த மினி, ஜூனியர், ஐ லவ் யூ
இப்படி ஆங்கிலச் சொற்கள் வரக்கூடாதுன்னு இதுவரைக்கும் எந்த அரசியல் வாதியும் சொல்லலையா?)

இன்னும் அதையெல்லாம் படிக்கலே. ச்சும்மா ஒரு பார்வை பார்த்ததுலே சில விஷயம் கண்ணுலே பட்டது.

அச்சுப் பதிவோட தரம் முந்தி இருந்ததைவிட உயர்ந்திருக்கு! எல்லா புத்தகமும் ரொம்பவே 'கலர்ஃபுல்'லா இருக்கு!

உள்ளே விஷயம்ன்னு பார்த்தா.... ஊஹூம். சொல்றதுக்கு ஒண்ணுமேயில்லை! முக்காவாசி சினிமாக்காரங்களைப் பத்தி!
கால்வாசி அரசியல்வாதிங்க! அதிலும் இந்தியா டுடே சுத்தம்! முழுக்க முழுக்க சினிமாச் செய்திகள். 15 ஆண்டு நிறைவு
சிறப்பிதழாம்!

படங்கள், ஃபோட்டோன்னு கவர்ச்சி(!)யா இருக்கணுமேன்னு ரொம்ப சிரத்தையா பொண்ணுங்க படங்களைத் தேடிப் போட்டிருக்காங்க!
இது ஒரு போட்டியோ? ஏன்னா, இதுலே எல்லா பத்திரிக்கையும் ஒரே மாதிரி! ( எரியுற கொள்ளிலே எந்தக் கொள்ளி நல்லக் கொள்ளி?)

ஆனா விளம்பரங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கு! அதுலேயும் நகைக் கடை விளம்பரங்கள் எல்லாமே ஒரே'பளிச்'!
எனக்கென்னமோ நம்ம 'மீனாக்ஸ்'ஞாபகம் வந்தது!

ஒரு பத்திரிக்கையா வந்த காலம் போய், அதையே பல கிளைகளாகப் பெருக்கி வச்சிருக்காங்க! ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை!

( நல்லாப் பணம் பண்ணத் தெரிஞ்சுக்கிட்டாங்க!)

போதாததுக்கு, இலவச இணைப்பு என்ற பேருலே, பத்து பன்னெண்டு பக்கம் அதே சினிமாக்காரங்களைப் பத்தி செய்தி!
அடங்க மாட்டாங்க போல! போதுண்டா சாமி!

நல்ல கொசுறு போங்க!





Tuesday, February 08, 2005

ஞாபகம் வருதே!!!

காசி அவர்களின் 'வாழைப்பழ கிண்ணக்கேக்' படிச்சவுடனே, ஒரு பெரிய கொசுவர்த்திச் சுருளை
ஏத்தி வச்சது போல, 'மஃப்பின் நினைவலைகள்' சுழன்றுசுழன்று வருது!

ரெண்டுவரி பின்னூட்டம் கொடுக்கலாம்ன்னு ஆரம்பிச்சா, எங்கே ரெண்டுவரியோட முடியுது?
அதான் தனிப்பதிவாவே போட்டுறலாம்ன்னு........

நாங்கள் இந்த நாட்டுக்கு வந்த புதிதில், இங்குள்ள ஒரு நண்பர்
'சில்ட்ரன்ஸ் ஆக்டிவிட்டி க்ரூப்' என்று ஒன்று தொடங்கலாமா என்று யோசனை சொன்னார்.
நாங்களும் இன்னும் சில குடும்பங்களுமாக சேர்ந்து கொண்டோம். வாரம் ஒரு முறை கூடுவோம்.
அவ்வப்போது ஒவ்வொருவரும் ஏதாவது சமைத்துக் கொண்டுபோய் அங்கே பகிர்ந்து உண்போம்!

குடும்பமாக வார இறுதிகளில் அடுத்துள்ள இடங்களுக்கு கேம்ப் போவது, குதிரை ஏற்றம் எப்படி என்று
ஒருநாள் 'ரைடிங் ஸ்கூல்' போய்வந்தது, ஜக்கிளர் ஒருவரை அழைத்துவந்து ஜக்ளிங் செய்வது எப்படி என்று
அறிந்து கொண்டது, ஈஸ்டர் முட்டைகள் செய்வது, நதிகள் அடித்துக் கொண்டுவரும் மரங்களை எடுத்து
'ட்ரிஃப்ட் வுட்' அலங்காரங்கள் செய்வது, தோல் பொருட்கள் செய்து அதுல் 'சீல்' வைப்பது என்று
பலதும் கற்றுக் கொண்டோம்!டி.வி ஸ்டேஷன், ரேடியோ ஸ்டேஷன் என்றெல்லாம் போய் பார்த்தோம்.

அந்த வருடம் புதுமையான முறையில் தீபாவளிப் பண்டிகையையும் கொண்டாடினோம். எங்கள் குழுவினருக்கு
தீபாவளி கொண்டாடும் முறை, ஏன் கொண்டாடுகிறோம் என்ற விளக்கம் ( கதை)எல்லாம் சொல்லி
இங்குள்ள 'நேட்டிவ் புஷ்'( புதர்) செடியான 'ஃப்ளாக்ஸ்' ( பாக்கறதுக்கு நம்ம தென்னை ஓலை போல இருக்கும்) ஓலை
எடுத்து அதை முடைந்து, சின்னச் சின்ன அலங்காரத் தெப்பம்போல செய்து, அதில் மெழுகுவத்திகளை ஏற்றி வைத்து,
அவைகளை இங்குள்ள 'ஏவான்' நதியில் மிதக்க விட்டோம். அப்புறம் நான் செய்து கொண்டு போயிருந்த
தீபாவளிப் பலகாரங்களையெல்லாம் ஒரு கை பார்த்துவிட்டு, பட்டாஸ் வகைகளையும் கொளுத்தினோம்!

இருட்டில், நதி நீரில் இந்த விளக்குகள் ஆடி அசைந்து போனதை, அந்தச் சாலை வழியே போய்க் கொண்டிருந்த பலரும்
தங்கள் கார்களை நிறுத்திவிட்டு வந்து பார்த்து மகிழ்ந்து விவரம் தெரிந்து கொண்டு, கொஞ்சம் இனிப்பையும் தின்றுவிட்டுப்
போனார்கள்.

மறுநாள் இங்குள்ள தினசரியில் இது படங்களுடன், செய்தியாகவும் வந்தது!

பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளிக்குப் போகும்வரை இந்தக் குழு இயங்கிவந்தது! மொத்தம் 8 வருடங்கள்! இந்த எட்டு
வருடங்களிலும் தீபாவளிப் பண்டிகையை விட்டுவிடாமல் கொண்டாடினோம்!

இப்போதும் நல்ல நட்பு அந்தக் குடும்பத்தினருடன் நீடிக்கிறது!

எங்கள் பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்த பள்ளி, யூனிவர்சிடிக்கு அடுத்த கட்டிடம் என்பதால்,
யூனிக்கு கொஞ்ச நாளைக்காக வரும் வெளிநாட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் அவர்கள் பிள்ளைகளை
இந்தப் பள்ளியில் சேர்த்துவிடுவார்கள்.

அந்தப் பெற்றோர்களும், புது இடத்தில் அவர்கள் பிள்ளைகளுக்கு பொழுது போக்காக இருக்கட்டுமே என்று
எங்கள் குழுவில் சேர்ந்துகொள்வார்கள். எங்களுக்கும் நல்லதாய் போயிற்று! எங்கள் பிள்ளைகளுக்கும்
அவர்கள் நாட்டையும் அவர்கள் கலாச்சாரத்தையும் பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பல்லவா!

ஒரு சமயம், ஒரு அமெரிக்கர் எங்கள் குழுவில் சேர்ந்தார். ஒருநாள் 'pot luck'=ல் அவர்கள்
மஃப்பின் கொண்டு வந்திருந்தனர். எனக்கோ அதையெல்லாம் செய்யத் தெரியாதது மட்டுமல்ல, அதன்
பெயரும் கூடத் தெரிந்திருக்கவில்லை! செய்முறை சொல்லுங்கள் என்று கேட்டேன். அந்தப் பெண்மணிக்கு
ஒரே ஆச்சரியம்! 'யூ டோண்ட் நோ ஹவ் டு மேக் மஃப்பின்ஸ்! ரியலி?' என்று பலமுறை கேட்டுவிட்டார்கள்.

எனக்கென்னடா என்றால், 'மஃப்பின் செய்யத் தெரியாது என்பதை நம்பவில்லையே' என்ற குறை!

எப்போதும் நான் கொண்டு போகும் உணவை அவர்கள் எல்லோரும் ரசித்துச் சாப்பிடுவதுடன் செய்முறை
கேட்டுத் துளைத்துவிடுவார்கள். இப்போது என் முறை!

மறு நாளே லைப்ரரிக்குப் போய் மஃப்பின் செய்முறைகள் உள்ள புத்தகங்களாக வாரிக் கொண்டுவந்தேன்!

அப்புறம் ஒரு 'மஃப்பின் ட்ரே' வாங்கி ஒரு முறை செய்தும் பார்த்தேன். இப்போது நான் மஃப்பின் எக்ஸ்பெர்ட்!

எனக்குத்தான் எதையும் என் சொந்தக் கைவரிசையைக் காட்டாமல் சமைக்கத் தெரியாதே! வித விதமான பொருட்களை
சேர்த்து, நிலக்கடலை, பாதாம், ப்ளூ பெர்ரி, மாம்பழம், வால்நட்ஸ், இன்னும் கண்ணில் படும் எல்லா ரக நட்ஸ்,
கண்ணில் படும் பழவகைகள் என்று அட்டகாசம் செய்து கொண்டிருக்கின்றேன்!



Sunday, February 06, 2005

ரெடிமேட்!!! (பகுதி 2)

காலம் யாருக்காகவாவது நிக்குதா? அதோட ஓட்டத்துலே அடிச்சுகிட்டு நாங்க மெட்ராஸ்க்கு, (அப்ப இந்தப் பேருதான் ) வந்து சேர்ந்தோம்!


கெங்குரெட்டி ரோடுலே ஒரு மலையாள டெய்லர். ப்ளவுஸ் தைக்கறதுக்கு அளவு ரவிக்கையோட போய் நிப்போம்! யாராருன்னு கேக்க
மாட்டீங்களா? எல்லாம் எங்க ஹாஸ்டல் தோழிங்களோடதான்!


அப்பெல்லாம், துணிக்கடைக்குப் போறதுன்னா ஒரு 'பட்டாளமா'த்தான் போவோம்! யாருக்குத் துணையாப் போறமோ, அவுங்க எதும்
எடுக்கலைன்னாலும், துணைக்குப் போறவுங்க ஏதாவது அள்ளிக்கிட்டு வராம இருந்ததா 'சரித்திரம்' இல்லை!

" என்ன, நாளைக்கே வேணும்ன்னு சொல்வீங்களே!" (நம்மைப் பத்திக் கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கற டெய்லர்! பாராட்டணும்!!)

" இல்லை, அது வந்து.... இன்னைக்கு சாயந்திரம் ஒரு பார்ட்டிக்குப் போகணும்!"

" இன்னைக்கேவா?"

" பயந்துறாதீங்க! எல்லாம் வேணாம், இந்த ஒரு....கலர் மட்டும் தைச்சுக் கொடுத்துட்டாப் போதும். மத்ததுக்கு அவசரம் இல்லே.
மெதுவா நாளான்னைக்கு கொடுத்தாப் போதும்" ரொம்ப பெருந்தனமையான பதில்!

" ஏங்க, பார்ட்டிக்குப் போறவுங்க ரெண்டு நாளைக்கு முன்னாலேயே தைக்கக் கொடுத்து இருக்கலாம்தானே?"

" அது வந்துங்க, இப்பத்தான் புடவைக்கு மேட்ச்சிங்கா ப்ளவுஸ் துணி கிடைச்சது!"

" சரி. முடிஞ்சா தைச்சு வைக்கறேன்" ( இந்த பிகுதானே வேணாங்கறது!)

" நீங்க நல்லாத் தைக்கறதாலேதானே உங்க கடையைத் தேடி வர்றோம். ஜஸ்ட் ஒரு ப்ளவுஸ்தானே! சாயந்திரம் ஒரு அஞ்சு மணிக்கு
வந்து வாங்கிக்கறோம்"

அது என்னவோ தெரியலை, புதுப் புடவை வாங்கினவுடனே கட்டிடணும்! எல்லாம் ரிஷிப் பிண்டங்க! ராத் தங்க மாட்டோம்!

கடையிலே இருந்து திரும்புனவுடனே கட்டிப் பாத்துரணும். கட்டிக்கிட்டு, ஹாஸ்டல் மாடிப்படி கிட்டே இருக்கற ஒரு பெரிய ஆளுயரக்
கண்ணாடிக்கு முன்னே ஒரு பத்து நிமிஷம் நின்னு ஆராயணும்! அப்புறம்தான் டெய்லர் கடைக்கு ஓடறது எல்லாம்!

இந்த இடத்துலே ஒண்ணு சொல்லணும்! எங்க விடுதியிலே 'குல்சார்'ன்னு ஒரு பொண்ணு இருந்தாங்க. தினமும் காலையிலே, கையிலே
ஒரு ப்ளவுஸை எடுத்துக்கிட்டு, ரூம் ரூமா வருவாங்க. எதுக்கு? அந்த ரவிக்கைக்கு மேட்சா புடவை யாருகிட்டயாவது இருக்கான்னு
கேக்கறதுக்கு!

சரி, தொலையட்டும்ன்னு யாராவது கொடுத்தாங்கன்னா, உடனே அதுக்கு 'அக்ஸெஸரீஸ்' வேட்டை ( தேட்டை)யை ஆரம்பிச்சுடுவாங்க!
வளையல், ஸ்டிக்கர் பொட்டு ( அவுங்க பொட்டெல்லாம் கூட வச்சிக்குவாங்க) நகப்பாலீஷ்ன்னு மனம் சோர்ந்திராம தேடிக் கண்டுபிடிச்சுருவாங்க!
அவுங்க ஒரு அதிர்ஷ்டக்காரிதான்! எப்படியாவது கிடைச்சிரும்! இந்த 'ஓஸி' பிஸினெஸ் எங்களுக்கெல்லாம் எரிச்சலா இருந்தாலும், அவுங்க
கெஞ்சிக் கெஞ்சிக் கேக்கறப்ப திட்டிக்கிட்டே கொடுப்போம்.

இவுங்க கதை இப்படின்னா, ஒரு டீச்சர் எங்க பக்கத்து ரூமிலே இருந்தாங்க. அவுங்க வேற வகை! தினமும் ராத்திரி, ஒரு ஒம்பதரை மணிக்கு
வருவாங்க, 'யாராவது ப்ரெட் வச்சிருக்கீங்களா?'ன்னுட்டு! ஹாஸ்டல் சாப்பாடு நல்லா இருக்காதுன்றதாலே எதிர்பாராம வரும் 'பசிப்பிணி'யைப்
போக்கிக்க அவசரத்தேவையா ப்ரெட் வாங்கி வச்சிக்கிற பழக்கம் ஒரு சம்பிரதாயமா இருந்துச்சு!

பசின்னு கேக்கறப்ப, வச்சிக்கிட்டே இல்லைன்னு சொல்ல முடியமாட்டேங்குதே! சரின்னு கொடுப்போம். அதுக்கப்புறம் வர்ற கேள்விதான்
இன்னும் எரிச்சலை கிளப்பி விட்டுரும்! 'எந்தக் கடையிலே வாங்கினது? சி.வி.கே பேக்கரி ப்ரெட் தானே?'

த்தோடா.... வாங்கறது ஓசி. இதுலே இந்தக் கேள்வி வேற! இவுங்க அங்கேதான் பஸ்ஸை விட்டு இறங்குவாங்க! அப்பவே வாங்க்கிட்டு
வரலாமில்லே!

நாளைக்கு திருப்பிக் கொடுத்துடறேன்(!)ன்னுட்டு ரெண்டு ஸ்லைஸ் வாங்கிகிட்டுப் போவாங்க! அந்த 'நாளை' மட்டும் எப்பவும் வந்ததே இல்லை!

இது வாரத்துலே மூணு நாலு நாள் நடக்குற விஷயம்! மத்த நாளுங்களிலே அவுங்களே ப்ரெட் வாங்கிக்கிட்டு வந்துருவாங்க போல!
இல்லேன்னா, அந்த நாட்களிலே ஹாஸ்டலோட வேற 'விங்'க்கு போயிருவாங்க போல!

தினமும் பொழுது விடிஞ்சவுடனே ஆரம்பிச்சுரும், பேஸ்ட், சோப், தலைக்கு எண்ணெய்ன்னு! ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்துகிட்டே இருப்பாங்க!

இதெல்லாம் வாங்க எப்படி மறக்கும்ன்னு எனக்கு புரியறதில்லை! சரி, சொல்லிக்கிட்டு இருக்கற ட்ராக் மாறி எங்கியோ போயிட்டேன்!

சாயந்திரம் சரியான டைமுக்குப் போய் நின்னுருவோம். இன்னும் தைச்சு முடிச்சிருக்க மாட்டாரு. கொஞ்ச நேரம் இருங்க. ஹூக் தைக்கணும்ன்னு
சொல்லி, 'காஜா' ( இப்ப சக்திக்கு இதன் அர்த்தம் புரிஞ்சிருக்கும்!)எடுக்கற பையனை( குழந்தைத் தொழிலாளி!) விரட்டுவார்!

அடிச்சுப் புடிச்சு வாங்கிக்கிட்டு வருவோம். வந்தவுடனே அதைப் போட்டுப் பாக்கணுமா, இல்லையா? அப்படியே அதுக்குண்டான புடவையையும்
கட்டிக்கணும் இல்லையா? இவ்வளவும் செஞ்சுக்கிட்டு சும்மா ரூம்லேயே அடைஞ்சிருக்க முடியுமா?

பார்ட்டிக்குப் போகலையான்னு கேக்கறீங்களா? பார்ட்டியாவது மண்ணாவது? யார் நமக்கு பார்ட்டி வச்சு அழைக்கறது?

அப்ப பார்ட்டின்னு சொன்னது?

அதெல்லாம் ச்சும்மானாச்சுக்கும்....எல்லாம் ஒரு காரணம் சொல்லணுமில்லே! ஆனாப் பாருங்க, இதை 'பொய்' சொன்ன கணக்கா
எடுத்துக்கறதில்லை! எல்லாம் வயசு... அந்த வயசுலே இதெல்லாம் ஒரு பொய்யா?

எல்லோருமாக் கிளம்பி, மவுண்ட் ரோடு வரைக்கும் வந்துட்டு, காஸினோ தியேட்டருக்கு முன்னாலெ ஒரு கடையிலே 'லஸ்ஸி' குடிச்சிட்டு
அப்படியே பொடி நடையா புதுப்பேட்டை வழியா விடுதிக்கு வந்து சேருவோம்!

இன்னும் வரும்!





Saturday, February 05, 2005

'வைட்டாங்கி ஒப்பந்தம்!!!!'

இது நடந்தது 1840லே! கணக்குப் போட்டுப் பாருங்க எத்தனை வருசம் ஆச்சுன்னு?

17-ஆம் நூற்றாண்டுகளிலே 'ஏபிள் டாஸ்மென்' என்றவர் இந்த நியூஸிலாந்தைக் கண்டுபிடிச்சார்.

அதுக்கு அப்புறம் 18-ஆம் நூற்றாண்டிலே நம்ம கேப்டன் குக் இங்கே வந்திருக்கார். அவரும் வீனஸ்
கிரகம் அப்ப பூமிக்கு அருகிலே வர்றதாலெ அதைப் பாக்கறதுக்குன்னு வந்தவராம்!( போன வருஷம்
கூட நாலு கிரகங்கள் பூமிக்குக் கிட்டே வந்ததுன்னு சொன்னாங்களே! அதே மாதிரி ரொம்ப காலத்துக்கு
முன்னே வந்தப்ப!)


அதுக்கு அப்புறமா இங்கிலாந்திலே இருந்து வெள்ளைக்காரர்கள் கொஞ்சம் கொஞ்சமா இங்கே வர ஆரம்பிச்சாங்க!

இதெல்லாம் நடக்கறதுக்கு ரொம்ப காலம் முன்பே (சுமார் 1000 வருஷங்களுக்கு முன்னே) பஸிபிக் கடலில் இருக்கற
தீவுகளில் இருந்து ஜனங்க ஒரு சின்னக் குழுவா இங்கெ வந்து சேர்ந்திருந்தாங்க! இப்படியே பல குழுவுங்க வந்துட்டாங்க.

அவுங்க அங்கங்கே இடம்பிடிச்சு குடியேறி இருந்தாலும், ஒரு குழுவுக்கும் இன்னோரு குழுவுக்கும் அப்பப்ப சண்டை வந்துக்கிட்டு
இருந்துச்சாம்! (ஒரு பேட்டை ஆளுங்க அடுத்த பேட்டையிலே போய் சண்டை போடறதைக் காமிக்கற தமிழ் சினிமாங்க மாதிரி?)

வெள்ளைக்காரங்க வந்தபிறகு அவுங்ககூடவும் சண்டைன்னு ஆரம்பிச்சு அப்புறம் சமாதானமாயிட்டாங்களாம். வெள்ளைத்தோலைப்
பார்த்து மவொரி இனத்துக்கும், முகமெல்லாம் பச்சைக் குத்திக்கிட்டு இருக்கும் ப்ரவுண் தோலைப் பார்த்து வெள்ளைக்காரங்களுக்கும்
பயமா இருந்திருக்கும் போல!

இந்த 'மவொரி'ன்ற வார்த்தைக்கே 'லோகல் ஆளுங்க'ன்னு அர்த்தம்!

அந்த சமயம் இங்கிலாந்தை அரசாண்டுக்கிட்டு இருந்தது விக்டோரியா மகாராணி! இந்த சண்டைங்களைத் தீர்த்துக்கிட்டு
சமாதானமாயிரலாம்ன்னு அப்ப இந்த மவொரிங்களோட ஒரு ஒப்பந்தம் போட்டாங்க.

'சண்டை ஒத்து நைனா, சமாதானங்கா போதே மஞ்சிதி'

இதுலெயும் பாருங்க, சில மவொரி க்ரூப்புங்களுக்கு இது பிடிக்கலே. ஆனா அந்த ஜனங்களோட தலைவனா இருக்கறவங்களுக்குக்
கட்டுபட்டு இருக்கணுமே!

நமக்குள்ளே எதுக்கு சண்டை? நாங்க இங்கே ஒரு சிவில் அரசாங்கம் உருவாக்குவோம். உங்க சொத்துங்க, உங்க கலாச்சாரம், பழக்க வழக்கம்
இதுக்கெல்லாம் இங்கே குடியேறி வந்த/வரப்போற ப்ரிட்டிஷ் ப்ரஜைகளாலே ஒரு கஷ்டமும் வராது! உங்களுக்கு நாங்க பாதுகாப்பா இருப்போம்.
ப்ரிட்டிஷ் குடிமக்களுக்கு இருக்கற எல்லாவித உரிமைகளும் உங்களுக்கு இருக்கு!

இங்கே இருக்கற வனாந்தரங்கள், கடலிலெ மீன் பிடிக்கற உரிமை எல்லாம் உங்களுக்கே! எங்களாலே ஒரு தொந்திரவும் இருக்காது. உங்களுக்கு
விருப்பப்பட்டா(!) உங்க நிலபுலன்களை எங்களுக்கு விக்கலாம். நீங்களா உரிமை கொடுத்தா நாங்களும் கொஞ்சம் மீன் புடிச்சுக்குவோம்!

(நம்ம அரசியல்வாதிங்க கொடுக்கற வாக்குறுதிங்க ஞாபகம் வருதா?)

இப்படியெல்லாம் சொல்லி, ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டாங்க! இது நடந்தது ஒரு ஃபிப்ரவரி மாசம் ஆறாம் தேதி!

இந்த நாளுக்கு இங்கெ அரசாங்க விடுமுறை உண்டு! மவொரிங்களோட கம்யூனிட்டி பில்டிங் பேரு 'மராய்' இங்கே அவுங்களும்
வருசாவருசம் இந்த நாளைக் கொண்டாடுவாங்க(!) அதுக்கு இங்கேயுள்ள மகாராணியின் பிரதிநிதியான 'கவர்னர் ஜெனரலும்'
அரசாங்கத்தின் பிரதிநிதியாக பிரதம மந்திரியும், எதிர்க்கட்சித் தலைவரும் வேற வேற ஊருங்களிலே இருக்கற 'மராய்'ங்களுக்கு விஜயம்
செய்வாங்க!

சில வருசத்துக்கு முன்னெ, இப்ப இருக்கற பிரதமரை, உள்ளே வரக்கூடாதுன்னு சொல்லி,தள்ளிவிட்ட சம்பவங்களும் நடந்திருக்கு!

போனவருசம், அவுங்களையே வரவேற்ற சம்பவமும் நடந்திருக்கு. இதோ நாளைக்கு மறுபடி 'வைட்டாங்கி தினம்!' என்னென்ன
கலாட்டான்னு தொலைக்காட்சியிலே சாயந்திரமா காமிப்பாங்க! இப்ப எங்க பிரதமரும் ஒரு 'அம்மா'தான்! எதிர்கட்சித்தலைவர் ஒரு
'அய்யா!'

அப்பப்ப, மவொரிங்க அவுங்களுக்கு இன்னும் உரிமைகள் வேணும். இந்த வைட்டாங்கி ஒப்பந்தத்தைச் சரியா நிறைவேத்தலைன்னு குரல்
கொடுத்துக்கிட்டே இருப்பாங்க!

இப்ப சமீப காலமா இங்கெ இருக்கற கடற்கரை முழுசும் எங்களுக்கே சொந்தம்ன்னு ஆரம்பிச்சிருக்காங்க! இதுவரைக்கும் ஏராளமான
நிலங்களை அந்த க்ரூப், வெள்ளைக்காரங்களுக்கு வித்தாச்சு! அந்தக் காசெல்லாம் அவுங்க குடும்பங்களுக்குப் பகிர்ந்து கொடுத்தும், அதுலெ
வேற வேற கம்பெனிகள் ஆரம்பிக்கறதுமா இருக்காங்க. ஆனா ஒண்ணும் சரியா நடக்கறதில்லை!

இப்பல்லாம் 100 சதமானம் மவொரி ரத்தம் உள்ளஆளுங்களே இல்லையாம். எல்லாம் கலந்துகட்டியாச்சு! ஆனாலும் 'பத்தாங்காலிலே
பங்காளி'ன்னு சொல்றதுபோல பத்துத் தலைமுறைக்கு முன்னே ஒரு தாத்தாவோ பாட்டியோ மவொரி இனம்ன்னு காமிச்சாலே போதும்.
அவுங்களுக்கு, இன்னும் இல்லாத உரிமைகளையெல்லாம் கேக்கற அளவு உரிமை கிடைச்சிருது!

எங்க வீட்டிலே இவரும் சொல்றார்,'நீ அசப்புலே மவொரி மாதிரிதான்இருக்கே! என்ன, பொட்டு வைக்காமலும், காதுலெ கழுத்திலெ கிடக்கற
நகைகளையும் கழட்டிட்டா நீ அசல் மவொரிதான்'

ஹாரே மாய் ஹாரே மாய் ( வெல்கம்ன்னு மவொரி பாஷையிலே சொல்றேன்!)





Friday, February 04, 2005

இன்னும் சில கைகள் வேணுமே!!

பத்தினிப்பெண்கள் அதிகம் உள்ள நாடு கனடான்னு ஒருத்தர் போன மாசம் மங்கையர் மலரில் திருவாய்
மலர்ந்திருக்கிறார்.(இப்பத்தான் படிச்சேன்)



எப்படிக் கண்டுபிடிச்சாராம்? வாநிலை அறிக்கை வாசிக்கும் பெண்மணி, 'இந்த நாளில், இந்த நேரத்தில்
மழை பெய்யும்'ன்னா பெஞ்சிருதாம்! ( என்ன சொல்ல வராங்க?)

இந்தமாதிரி அபத்தங்களையெல்லாம் போடற பத்திரிக்கை(அ)தர்மத்தைச் சொல்லணும். தலையிலே அடிச்சுக்க
ரெண்டு கைகள் பத்தாது! இன்னும் ரெண்டு மூணு இருந்தாத் தேவலை!!

இதைப் படிச்சவுடனே எரிச்சலா வந்தது. அதான் உங்ககிட்டே சொல்லிட்டேன். இனி உங்க பாடு!

Thursday, February 03, 2005

எங்க ஊருக்கு அக்கா பெங்களூரு !!!!

இங்கே வழக்கமா நாம சந்திக்கிற ஆளுங்க கேக்கற கேள்வி இது! இந்த 'வீக் எண்ட்' என்ன செய்யப்போறீங்க?

நமக்கோ ஆயிரத்தெட்டு வேலை கிடக்கு! எதைச் சொல்ல? எதை விட? அதனாலே மையமா ஒரு சிரிப்பு எடுத்துவிட்டுட்டு
இன்னும் முடிவு செய்யலைன்னு சொல்வோம்!


அவுங்க கேட்டதுக்குப் பதில் மரியாதை நாம செய்ய வேணாமா? அவுங்க கேட்ட கேள்வியையே நாமும் திருப்பிக் கேப்போம்!

இப்படி பதில் வரும்,'தோட்ட வேலை செய்யணும்! ரொம்ப வீடு(!) வளர்ந்து போச்சு! இது இங்கிலீஷ் வீடுங்க!' weed.

அப்பத்தான் நம்ம வீட்டுத் தோட்டம் இருக்கற நிலமை மனக்கண்ணுலே அப்படியே 'ஸ்லோ மோஷன்'லே ஓடும்! நம்ம வீட்டுலே
வீடான வீடுங்க! இன்னும் சொல்லப்போனா 'வீட்ஸ் கார்டன்'ன்னும் வச்சுக்கலாம்!

இந்த ஊருக்கு வந்த புதுசுலே வீட்டுத்தோட்டத்தைப் பராமரிக்க(!) என்னென்ன செய்யணும்ன்னுகூடத் தெரியாது! வீட்டை நமக்கு
வித்தவுங்க சொன்னாங்க 'நான் அடுத்த வாரம் ஒருநா வந்து என்ன செய்யணுமுன்னு சொல்லித்தாரேன்'

வீட்டை விக்கறதுக்குப் போட்டிருந்ததாலே உள்ளும் புறமும் படு சுத்தமா இருந்துச்சு! அடுத்த வாரம் வந்தாலும் இப்படி 'நீட்'டாகத் தானே
இருக்கப்போகுது. அதனாலெ ரெண்டு வாரம் கழிச்சு வரீங்களான்னு கேட்டேன். பக்கத்து வீட்டுக்காரங்க அவுங்களுக்கு நெருங்கிய
தோழியாம்.அதனாலெ 'அடிக்கடி வருவேன். அப்ப உங்களையும் வந்து பார்த்துட்டுப் போறேன்'னும் சொன்னாங்க!
சொன்னபடியே வந்துக்கிட்டும் இருந்தாங்க! வர்றப்பல்லாம் 'ஹோம் பேக்டு குக்கீஸ்' கொண்டுவருவாங்க! அவுங்களுக்கு என் மக வயசிலே
( 4 வயசு) ஒரு பையன் இருந்தான். அவன் பிறந்ததிலிருந்து இந்த வீட்டிலேயே வளர்ந்ததால் அவனுக்கு இது ரொம்பவே பழக்கப்பட்ட வீடாச்சே!
அவுங்கம்மா, பக்கத்து வீட்டுக்குள்ளெ வண்டியை நிறுத்துனவுடனே இங்கே ஓடிவந்துருவான்! வந்து? ஒவ்வொரு மரமா ஏறிக்கிட்டு இருப்பான்!
என் பொண்ணும் அவன் செய்யற சேஷ்டைகளையெல்லாம் 'ஆ'ன்னு பாத்துக்கிட்டு இருக்கும்!

ரெண்டு வாரத்துலே பச்சைப் பசேர்ன்னு செடிங்க வந்துருச்சு! சிலதுலே அழகான குட்டிக் குட்டிப் பூக்கள்! அந்தம்மா வந்தாங்க.நான் பதுசா
அவுங்ககூட தோட்டத்துக்குப் போனேன். 'இன்னைக்கு நான் வீடு எடுக்கறதைப் பாருங்க. அது ரொம்ப சுலபம். அடுத்த வாரம் நீங்களே
செஞ்சுருவீங்க'ன்னு சொல்லிட்டு வேலையை ஆரம்பிச்சாங்க!

இந்தப் பர்ப்பிள் கலர் பூ அழகா இருக்குதுன்னு நான் சொல்லிக்கிட்டு இருக்கறப்பவே அந்தச் செடியைக் கொத்தோட பிடுங்கிப் போட்டாங்க!
நான் பதறிக்கிட்டே ஏன்னு கேட்கறேன். அது ரொம்ப மோசமான வீடாம்! கொஞ்சம் விட்டா 'திபுதிபு'ன்னு வளர்ந்துடுமாம்! நான்
'க்யூட், க்யூட்'ன்னு சொல்லிக்கிட்டிருந்த அத்தனையுமே வீடாம்! அதுக்கப்புறம் நான் வாயை திறக்கலை!

அப்புறமா, லைப்ரரிக்குப் போய் செடி கொடி சம்பந்தப்பட்ட புத்தகங்களா வாரிக்கிட்டு வந்தேன்! இங்கே லிமிட் கிடையாது. இலவச சேவைதான்!
இப்ப நானே கொஞ்சம் தேறிட்டேன்.

எங்க வீட்டுலே இவர் 'கார்டனிங்' செய்யறேன்னு போனா, பின்னாலேயே நான் ஓடுவேன். கண்ணுக்குத் தெரிஞ்ச நல்ல செடிகளையே
வீடுன்னு எடுத்துப் போட்டுருவார்.நாந்தான் 'லபோ திபோ'ன்னு அடிச்சுக்குவேன். 'இப்ப என்னன்றே? தெரியாம எடுத்துட்டேன். மறுபடி
அது வந்துரும்! '( எப்படி?)


செடிங்களுக்கு உரம் வாங்குறாரோ இல்லையோ, 'ரவுண்ட் அப்'ன்னு இருக்கற 'வீட் கில்லர்' தவறாம வாங்கிவந்து ஆன்னா ஊன்னா
தெளிச்சிடுவார். அது 'புல்லுக்கும் அங்கே பொசியுமாம்...'ன்னு சொல்றதுக்கு நேர் எதிரா, நல்ல செடிகளுக்கும் பொசிஞ்சிடும்!

எங்க ஊர்தான் இந்த நாட்டின் 'தோட்ட நகரம்!' எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேர்ன்னு இருக்கும்( நம்ம வீட்டைத்தவிர)அதான், தமிழ்
சினிமாக்களிலே பார்த்திருப்பீங்களே! இங்கே இந்தத் தோட்ட நகர் பெயரைக் கட்டிக் காப்பாத்த 'சிடி கவுன்சில்' படாத பாடு படும்!
வீடுங்க கட்டறப்ப, இருக்கற நிலத்துலே 40% தான் கட்டணும். மீதி? தோட்டம்தான்! ஒண்ணும் இல்லேன்னா 'புல்'லாவது போடணும்!
தோட்டவேலை செய்ய முடியாம நான் 'ஃபுல்' போட்டாத்தான் உண்டு!

உலகத்துலெ இருக்கற மற்ற நாடுகளில் இருக்கும் தோட்ட நகரங்களுக்கும், எங்க ஊருக்கும் அக்கா தங்கை உறவுப்பாலம் கட்டி வச்சிருக்காங்க!
சியாட்டில், அடிலெய்ட், கிறைஸ்ட்சர்ச்( இங்கிலாந்து)கன்சு( Gansu, China), குராஷிகி,சொங்ப-கு( Songpa-Gu,Korea)இப்படின்னு பல நகரங்களோட நாங்க அக்கா தங்கையாக்
கொஞ்சிக்குலாவிக்கிட்டு இருக்கோம். இப்ப நம்ம பெங்களுர் தோட்டநகரம் எப்படி எப்படியெல்லாம் இருக்குன்னு பார்க்கவும், அதை உறவு
ஆக்கிக்கவும் எங்க ஊர் சிடி கவுன்சிலர்ங்க சிலர் போயிட்டு வந்திருக்காங்க! எங்க ஊரோட சரித்திரம் வெறும் 164 வருசம்தான் என்றபடியால்
பெங்களுர் எங்களுக்கு அக்கா!

இதையெல்லாம் படிச்சிட்டு, நான் தோட்ட வேலைக்கே எதிரின்னு நினைச்சுக்காதீங்க! எனக்கும் தோட்டவேலைகளிலே சில பகுதி பிடிக்கும்.
என்னன்னு கேக்கறீங்களா?

பூக்களை வெட்டிக் கொண்டுவந்து பூச்சாடியிலே அலங்காரமா அடுக்கறது!

ப்ளம் சீஸன் தொடங்குனதுமே போகவர மரத்துலே இருந்து ஃப்ரெஷ்ஷா பறிச்சுத் தின்னுறது!

பேரிக்காய் (pears) சீசன்லே அப்பப்ப நிறையப் பறிச்சு நண்பர்கள் வீட்டுக்குஅனுப்பறது!

'இன்டோர் ப்ளாண்டு'ங்களை மாய்ஞ்சு மாய்ஞ்சு பாத்துக்கறது!( போனவாரம் 'வாழைக் கன்று' கிடைச்சது! வாங்கிட்டு வந்திருக்கேன்)

பக்கத்து வீட்டு எலுமிச்சைச் செடியிலே இருந்து அப்பப்ப எலுமிச்சம்பழம் கொண்டுவந்து சாதம் கிளறுறது!( அவுங்க எப்பவேணுமின்னாலும்
எடுத்துக்கச் சொல்லியிருக்காங்க!)

நம்ம வீட்டு ஃபென்ஸுக்கு வந்து கிளையை நீட்டிக்கிட்டுக் காய்க்கிற அடுத்த வீட்டு ஆப்பிள், ஆப்ரிகாட் பழங்களை ஒரு கை பாக்குறது!

இப்படி சில! இது போதாதா?


Tuesday, February 01, 2005

புக் ஷெல்ஃப்!!!

இப்ப நாங்க வீடு மாத்தற வேலையிலே ரொம்ப மும்முரமா இருக்கோம். ஒவ்வொரு இடமா ஒழிச்சுக்கிட்டு
இருக்கறப்ப எனக்கே எனக்குன்னு இருக்கற புத்தக அலமாரிக்கு வந்தேன். இது ரொம்பச் சின்னதுதான்.
நான் வச்சுக்கிட்டு இருக்கற பத்துப் புத்தகத்துக்கு இதுவே தாராளம்!



இத்தனை வருஷமா, அதாவது போன வருஷம் வரைக்கும் ஆ.வி., குமுதம்ன்னுதான் 'இலக்கியம்' படிச்சுக்கிட்டு
வந்தோம். இணையத்தொடர்பு ஒரு ஒம்பது வருஷமா இருந்தாலும், அதுலெ தமிழ் மொழியிலே படிக்கலாம்ன்னு
தெரியாது! அப்புறம் ஒரு மூணு, நாலு வருசத்துக்கு முந்திதான், தினமணி, தினகரன், தினமலர், ஆறாம்திணை
இப்படி வாசிப்பு அனுபவமும் ஆனந்தமுமாக கிடைக்க ஆரம்பிச்சது!

போன வருஷம் ஏதோ ஒண்ணைத் தேடப்போக நான் மரத்தடியிலே போய் நின்னதும், அப்புறம் நடந்ததுமெல்லாம்
அப்பப்ப வேற வேற சமயங்களிலே பதிவாப் போட்டேன்.

மரத்தடியிலே 'புத்தகங்களை'ப் பற்றி அடிக்கடி சுரேஷ் எழுதுவார். இப்ப தமிழ்மணம் வந்தபிறகு, சென்னைப் புத்தகக்
கண்காட்சி விவரங்கள் எல்லாம் விவரமாக தெரிஞ்சுக்க முடிஞ்சது! பத்ரியும் ஒரு வீடியோ எடுத்து அதையும் பதிவுலே
போட்டார். எல்லாம் நல்ல விஷயம்!

இங்கே வெள்ளைக்கார நாடுகளிலே 'புத்தகக் கடை'களிலே வேற விதமான அனுபவம்! ரகம் ரகமா புத்தக அடுக்குங்க
வச்சிருக்காங்கல்லே, அதுலே ஏதாவது புத்தகத்தை எடுத்துப்படிக்க தடையேதும் இல்லை! நிறையப்பேரு, அங்கியே நின்னுகிட்டு
படிச்சுக்கிட்டேஏஏஏஏஏஏஏஏஏ இருப்பாங்க! கடைக்காரங்க யாரும் அதைக் கண்டுக்கவும் மாட்டாங்க! ( அதான் விக்கற புத்தகத்துக்கு
யானைவிலை வச்சிருக்காங்களே!)

புத்தகம் வெளிவந்தவுடனே அலங்காரமா அடுக்கி யானை விலைக்குப் போட்டிருப்பாங்கல்லே, அதுவே கொஞ்சநாளிலே குதிரைவிலைக்கு
25% கழிவுன்னு வந்துரும்! இப்படியே கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதைதான்! திடீர்னு பார்த்தா 'ஸ்டாக் டேக்கிங்'னு சொல்லிக்கிட்டு
அடிமாட்டு விலைக்கு வந்துரும். அதுலெயே இவுங்களுக்கு 50% லாபம் இருக்கும்ன்னு நான் நினைச்சுக்குவேன்.

ஒருவாரம் இப்படி 'ஸ்டாக் டேக்கிங்'சேல் போட்டுட்டு,அதுக்கு அடுத்த வாரமே, 10 டாலர் கொடுத்துட்டு ஒரு ப்ளாஸ்டிக் பை நிறைய
எந்தப் புத்தகம் வேணுமுன்னாலும் எடுத்துக்கலாம்ன்னு விப்பாங்க! ச்சும்மா 10 டாலர்தானேன்னுட்டு நிறையப் பேரு பூந்துவிளையாடிடுவாங்க!
இதுலே நாங்களும் சேர்த்திதான்! தலகாணி தலகாணியா தடிமனான புத்தகங்களும் இதுலே இருக்கும். எல்லாப் புத்தகங்களையும் ஒரு பார்வை
பார்த்துட்டு, அவுங்கவுங்களுக்கு வேண்டியதை அள்ளிக்கிட்டு போகவேண்டியதுதான்!

ப்ளாஸ்டிக் பை சுமாரான, பெரிய அளவிலேதான் இருக்கும்! அது கிழியக் கிழியப் புத்தகங்களை அடைச்சுக்கிட்டு, ஆளுங்க ஒரு சந்தோஷப்
புன்னகையோட போறதைப் பார்க்கணுமே! பலசமயம் அந்தக் கனம் தாங்காம பையோட காதுகூட அறுந்துடும்! அப்ப இருக்கவே இருக்கு
சூப்பர்மார்கெட் ட்ராலி!

அதையெல்லாம் வீட்டுக்குக் கொண்டுவந்துட்டு, படிச்சுக் கிழிச்சப்புறம் அவைகளை 'டிஸ்போஸ்' செய்யறது இன்னோரு தலைவலி!
இங்கே இருக்கற 'சால்வேஷன் ஆர்மி , ரெட் க்ராஸ், ஆப்பர்ச்சூனிட்டி ஷாப்'ன்னு இருக்கற இடங்களிலே கொண்டுபோய்க் கொடுத்தோம்ன்னா
சந்தோஷமா எடுத்துக்குவாங்க! இப்பப் பாருங்க நமக்கும் சந்தோஷம், அவுங்களுக்கும் சந்தோஷம்!

அப்பப்ப இப்படிக் கொண்டுபோய் கொடுக்கற சமயம் நான் கண்டிஷனா சொல்லிருவேன்,'என் புத்தக அலமாரியிலே யாரும் கை வைக்கக்
கூடாது!' இங்க்லீஷ் புத்தகம் கிடைச்சுரும். தமிழ்ப் புத்தகம் இங்கே கிடைக்கவே கிடைக்காதுல்லே. அதுக்குத்தான்!

அதான் இப்ப வீடு மாறும் சமயத்திலும் என் புத்தகங்களையெல்லாம் எடுத்து அடுக்கி வைக்கறப்ப, என்னென்ன இருக்குன்ற விவரத்தை
உங்களுக்கும் சொல்லலாம்ன்னு தோணிடுச்சு!

இதோ அந்தப் பட்டியல். யாரும் அடிக்க வந்துறாதீங்க, இதெல்லாம் ஒரு கணக்குலே சேர்த்தியான்னு!

முதல்லே பக்தியா ஆரம்பிக்கறேன். அப்புறம் போகப் போக.....

தெய்வத்தின் குரல் --- பாகம் 1, 2, 3, 6 ( நாலும் அஞ்சும் அப்ப கிடைக்கலை)

அர்த்தமுள்ள இந்து மதம்---- பாகம் 1 ( மற்றதெல்லாம் வாங்கலை)

ராமாயணம் ( ராஜாஜி)

மகா பாரதம் ( ராஜாஜி)

சிவனருட் செல்வர் ( கிருபானந்த வாரியார்)

பக்தி வயல் ( பெளராணிகர்)

இதோட பக்தி செக்ஷன் ஓவர்


பாரதியார் கவிதைகள்

திருக்குறள் விளக்கங்களுடன் (தமிழ்)

திருக்குறள் விளக்கங்களுடன் ஆங்கிலத்தில்

தமிழ்ப் பழமொழிகள் ---- கி.வா.ஜ தொகுத்தது, ஒரு பெரிய தலைகாணி சைஸில் இருக்குது!

மலரும் உள்ளம் ---- அழ.வள்ளியப்பா ( 2 தொகுதிகள்)


நாவல்

அலை ஓசை ( ஓசியிலே கிடைச்சது! அவுங்களாதான் கொடுத்தாங்க. வைச்சுக்கச் சொல்லி!)

இரும்புக் குதிரைகள் --- பாலகுமாரன்

பாலங்கள் ---------சிவசங்கரி

Misc

சமைத்துப் பார் (மூன்று பாகங்கள்) -- மீனாட்சி அம்மாள்

கார்ட்டூன் ---மதன்

மாமியார் கதைகள் ---பானுமதி ராமகிருஷ்ணா

விக்கிரமாதித்தன் கதைகள்

ஸ்ரீ தியாகராஜர் கீர்த்தனைகள் --தமிழ் விளக்க உரையுடன்

இதெல்லாம் மூணு, நாலு வருஷத்துக்கு ஒருமுறை ஊருக்குப் போகும்போது 'வானதி'யிலே வாங்கியவை. அப்புறம் ஒரு தடவை
மணிமேகலை பிரசுரம் போனப்ப வாங்கிய, செலவில்லாத வைத்தியம், வீட்டுக் குறிப்புகள். அழகாக இருப்பது எப்படி? இப்படி
அது இதுன்னு ஒரு பத்துப் பதினைஞ்சு புத்தகங்கள்.

இப்பத்தான் ஞாபகம் வருது. போனமுறை, பாலகுமாரனோட புத்தகம் ஒண்ணு (பேரு மறந்து போச்சு) வாங்கிவந்தேன். கூட்டமா ஏதோ
கோயில்ன்னு வரும். கடைசியிலே அந்த சாமியாரு 'கபால மோட்சம்'அடைஞ்சிடுவாரு! பெண்கள் வழி சமுதாயம்ன்னு வரும்!
'பிச்சை எடுக்குதாம் பெருமாளு. அதைப் பிடுங்குச்சாம் அனுமாரு'ன்ற கதையா அதை இரவல் வாங்கிபோனவங்க திருப்பித்தரலை!
இருக்கற நாலைஞ்சு குடும்பத்துலே யாருன்னு போய்க் கேட்கமுடியும்?

இதை வச்சுக்கிட்டே இந்த 23 வருஷத்தை ஓட்டினதை நினைச்சா.... ஆஹான்னு இருக்கு!