பொதுவா க்றிஸ்மஸ் தினத்துக்கு முந்தின ராத்ரி, நம்மூர் கதீட்ரலுக்குப் போய் வர்றதுண்டு. கேரல் சர்வீஸ் நடக்கும்போது தெரிஞ்ச பாட்டுகள் எல்லாம் வரும்போது ரொம்பவே ரசிப்பேன். கூடவே பாடுவதும் உண்டு. எல்லாம் கூட்டத்துலே கோவிந்தாதான் ! நிலநடுக்கத்தில் எங்கூர் கதீட்ரல் இடிஞ்சு விழுந்ததில் இருந்து ராத்ரி சர்வீஸ் போறதெல்லாம் முடிஞ்சே போச்சு. ஆச்சு 12 வருஷம்.... இன்னும் திரும்பக் கட்டும் வேலைன்னு ஒன்னு நடக்கறமாதிரி தெரியலை. ப்ச்....
மேலே படம்: இடிவதற்கு முன்......
அதென்னவோ சொல்லிவச்சதுபோல் அந்த நிலநடுக்கத்தில் உள்ளூர் சர்ச்சுகள் ஒன்னு ரெண்டைத்தவிர எல்லாமே ஒரு விததில் பாதிக்கப்பட்டுருந்தன. நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலும் தான் போச்சு. கட்டடம் கொஞ்சம் இடிஞ்சாலும், சாமி சிலைகள் (பளிங்கு ) உடைஞ்சு தூளானது ரொம்பவே வருத்தம். அதனால் ஒரு நாலைஞ்சு வருஷத்துக்கு சர்ச்சு ரிப்பேர்களே போய்க்கிட்டு இருந்துச்சு. நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலைத் திரும்பப்புதுசாக் கட்ட ஆறு வருஷமாச்சு. ஊரில் பாதி இப்படி ஒரேடியா இடிஞ்சு போச்சுன்னா.... இன்ஷூரன்ஸ்காரங்களும் என்னதான் செய்வாங்க.
எங்கூர் நிலநடுக்கம் எப்படின்னு இங்கே இந்தச் சுட்டியில் பாருங்க.
http://thulasidhalam.blogspot.com/2011/08/blog-post_31.html
சின்னச் சின்ன பழுதுகளை ஓரளவு சரிபார்த்து வச்சுத்தான் ஒரு அஞ்சாறு வருஷமா க்றிஸ்மஸ் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. யார் எக்கேடு கெட்டால் என்னன்னு..... மால்காரர்கள் மட்டும் பண்டிகைக்கு ரெண்டு மாசம் இருக்கும்போதே மால்களை அலங்கரிச்சுருவாங்க. ஷாப்பிங் போகும் சனத்துக்குப் பண்டிகை வருதுன்னு காமிச்சுக்கிட்டே இருந்தால்தானே யாவாரம் ஜரூரா நடக்கும், இல்லையோ !
நமக்கு இந்தப் பண்டிகை இல்லைன்னாலும் க்றிஸ்மஸ் பண்டிகை தினம், நம்ம பேட்டையில் இருக்கும் சர்ச்சுகளுக்கும், இடிஞ்சதுக்குப் பதிலாக் கட்டியிருக்கும் காட்போர்டு கதீட்ரலுக்கும் போறதுண்டு. இந்த வருஷம்... பண்டிகை நாளில் வேறொரு ஏற்பாடு இருக்கேன்னு முதல்நாள்ளே சர்ச் விஸிட் கிளம்பினோம்.
நம்ம தெருவுக்குப் பக்கத்துத் தெருவிலே இருக்கும் சர்ச்க்குப்போறோம். கத்தோலிக்கப்பிரிவினருக்கானது. கொஞ்சம் மாடர்னா கட்டி இருப்பாங்க. 1965 லேதான் சின்னதா இருந்த பழைய கட்டடத்தை இடிச்சுட்டு, இதைக் கட்டியிருக்காங்க. சார்லஸ் தாமஸ் என்ற ஆர்க்கிடெக்ட் இதை டிஸைன் செஞ்சு கட்டியிருக்கார்.
எப்படி இந்தமாதிரி டிஸைன்னு அவரே பிஷப்புக்கு விவரிச்சும் சொல்லியிருக்கார். நடுவில் தூண்களே இல்லாத அமைப்பு. யேசு நாதர், பிரசங்கம் செய்யும்போது எப்படி எல்லோரையும் பார்த்தபடி நின்னாரோ..... அதே போல் இங்கே ஆல்டரில், பாதிரியார் நின்னு பூஜை நடத்தும்போது எல்லோரையும் அவர் பார்க்கும்படியான இருக்கைகள் அமைப்பு. நாலு பக்கச் சுவர்களும் Matthew, Mark, Luke and John என்னும் நால்வரையும் குறிப்பிடுது. வெளியே சரிவான வளைந்த கண்ணாடிக் கூரை, அதில் மேலேறிப் போறாப்லே பார்வையை ஓட்டினால் அங்கே ஒரு சிலுவை ! அதையொட்டி ரெண்டு கைகள் வானத்துலே இருந்து பூமிக்கு இறங்கி வருதுன்னு நினைக்கவைக்கும் பக்கவாட்டு சுவர். மொத்தமா இதைப் பார்த்தால் மூணு சுவர் ஒன்னா இணைஞ்சுருக்கும். அது பிதா, சுதன் பரிசுத்த ஆவி.......
கட்டுன வீட்டுக்குப் பழுது சொல்ல வெள்ளையருக்கு மட்டும் தெரியாதா என்ன ? அதான் விளக்கிட்டாரு! கொஞ்சம் சுவாரஸியமான அமைப்புதான் ! இந்த டிஸைனுக்கு அவார்ட் எல்லாம் கொடுத்துருக்கு நியூஸி ஆர்க்கிடெக்ட் அசோஸியேஷன். நியூஸி போஸ்டல் டிபார்ட்மென்ட், சர்ச்சின் கூரைமேல் இருக்கும் சிலுவை படத்தை ஸ்டாம்ப்பா வெளியிட்டு கௌரவிச்சுருக்காங்க.
நமக்கு ஏகாந்த தரிசனம் ! பண்டிகைக்காக அலங்கரிச்சு வச்ச லில்லிப்பூக்களின் வாசனை அப்படியே ஆளைத்தூக்குது ! ரெண்டு பக்கமும் சின்னதா ரெண்டு சந்நிதிகள். அம்மை, அப்பனோடு யேசு நிற்கிறார்.
நேடிவிட்டி ஸீன் செட்டிங் வழக்கம்போல். குழந்தைக்கான இடம் காலி.
இந்த ஊருக்கு வந்த புதுசுலே ஒரு சமயம் காலி இடத்தைப் பார்த்துட்டு, அப்போ அங்கிருந்த பாதிரியாரிடம் குழந்தை எங்கேன்னு கேட்டேன். அதுக்கு அவர் ராத்ரி 12 மணிக்குத்தான் குழந்தை பிறக்குதுன்னார் !
அம்மை & அப்பன் சந்நிதிகளில் மெழுகுத்திரி ஏற்றி வைக்கும் அமைப்பும் டீலைட் கேண்டில்களும் வச்சுருக்காங்க. நமக்கு விருப்பமுன்னா விளக்கு ஏத்திவச்சுட்டு வரலாம். ஆச்சு ! ஒரு பத்து நிமிட் போல இருந்து சாமியைக் கும்பிட்டுக் கிளம்பினோம்.
அடுத்துப்போனது கார்ட்போர்டு சர்ச். நகர மையத்துலே இருந்த கதீட்ரல்தான் இப்போ இல்லையே..... அதுக்குப் பதிலா ஜப்பான்கார கட்டட நிபுணர், கார்ட்போர்டு உருளைகளை வச்சேக் கட்டிக்கொடுத்த அட்டைக்கோவில். இதுக்கே அஞ்சு மில்லியன் னு ஆரம்பிச்சு ஏழு மில்லியன் டாலர்கள் செலவாச்சு. இந்தச் சர்ச் Anglican பிரிவினருக்கானது.
அட்டைக் கோவிலுக்கு அஞ்சு மில்லியனா!!!!!! விவரம் கீழே சுட்டியில்
https://thulasidhalam.blogspot.com/2012/05/blog-post_17.html
க்றிஸ்துவ மதத்தில் எக்கச்சக்கப்பிரிவும், அவற்றுக்கான சர்ச்சுகளுமா இருக்கு. முக்கியமானதா ஒரு இருபத்தியஞ்சைக் குறிப்பிட்டுச் சொல்றாங்க. நாம் வந்த புதுசுலே, க்றிஸ்துவமதப் பிரசாரம் செய்ய ரெண்டு லேடீஸ் நம்ம வீட்டுக்கு வருவாங்க. நம்ம கலாச்சாரத்தின்படி, வீடு தேடி வந்தவங்களை உள்ளே கூப்பிட்டு உக்காரவச்சுப் பேசுவதுண்டு. சில சந்திப்புகளுக்குப்பின், 'நீங்க ஏன் இத்தனை பிரிவா, இத்தனை சாமிகளைக் கும்பிடறீங்க ? அதுவும் கல்லு, மரம் இப்படி இருக்கும் சிலைகளை'ன்னு மெதுவா ஆரம்பிச்சாங்க. அப்பதான் என் மரமண்டைக்குப் புரிஞ்சது.... இவுங்க மதம் மாறவைக்கும் ஆட்கள்னு.....
"நாங்க பலவிதமான பெயருள்ள சாமிகளைக் கும்பிடறோம். அதனால் பலபிரிவுகள் இருக்கு. ஆனால் ஒரே சாமியைக் கும்பிடும் உங்களுக்கு இத்தனை விதமான பிரிவுகள் எதுக்கு ? "
அப்புறம் ரெண்டு வாரம் அவுங்க வரலை. மூணாவது வாரம் வந்தப்ப, வாசலிலேயே பார்த்து, சமையல் செஞ்சுக்கிட்டு இருக்கேன். இப்போ பேச நேரமில்லைன்னு சொல்லியனுப்பினேன். அப்புறம் அவுங்க வரவே இல்லை:-)
இப்ப இருக்கும் வீட்டுக்கு வந்த பின், ஒரு பெண்ணும் ஆணுமா ஒரு ஜோடி வந்து காலிங் பெல்லை அடிச்சுக் கூப்பிடுவாங்க. நான்கூட என்னமோ ஏதோன்னு பார்த்தால் க்றிஸ்துவைப் பத்தித் தெரியுமா ? அவரைப்பத்திச் சொல்ல வந்துருக்கோம்பாங்க. தெரியாது.... நான் வேற மதம் னு சொல்லி அனுப்பிருவேன். இப்பக் கொஞ்ச நாளா அவுங்க யாரையும் பார்க்கவே இல்லை. வீடுவீடாப்போறதை நிறுத்திட்டாங்க போல ! நல்லது !
அட்டைக்கோவிலிலும் இப்போ நமக்கு ஏகாந்த சேவைதான். நாங்க வெளியே வரும் நேரம் ஒரு சின்னக்கூட்டம் வந்தது. எங்க ஊர் டூரிஸ்ட் அட்ராக்ஷனில் இதுவும் ஒன்னு ! இங்கேயும் நேட்டிவிட்டி ஸீன்செட் ரெடியா இருக்கு!
இந்தவகை சர்ச்சுகளில் நம்ம கருடாழ்வார் இருப்பார். Eagle lectern னு பெயர். இடிஞ்சுபோன சர்ச்சில் இருந்து கொண்டுவந்து இங்கே வச்சுருக்காங்க. முகப்பில் இருக்கும் கண்ணாடி முக்கோண டிஸைனில் இருக்கும் கண்ணாடிகள் கூட இடிஞ்ச சர்ச்சின் ரோஸ் விண்டோ கண்ணாடிகள்தான் !
அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வர்ற வழியில் நம்ம பேட்டையின் இன்னொரு சர்ச், கதவு திறந்துருக்கறதைப் பார்த்தேன். இந்த முப்பத்தினாலு வருஷ நியூஸி வாழ்க்கையில் முதல்முறையாத் திறந்துருக்கும் கதவைப் பார்த்ததும் அங்கே போயாச்சு.
எங்க ஊரின் முதல் சர்ச் என்ற பெயர் உண்மையிலேயே இதுக்குத்தான். 1858இல் கட்டியிருக்காங்க. ஊர் நிர்மாணத்தின்போது நடுவில் ஒரு திடலும், சுத்தி நாலு பக்கங்களிலும் மரங்கள் அடர்ந்த ரோடுமாத்தான் நாலு அவென்யூக்கள் அமைச்சாங்க. அந்தத் திடலில்தான் கதீட்ரல், ஆறு வருஷத்துக்கப்புறம் 1864இல் கட்டுனாங்க.அங்கெ இருந்து சரியாஅஞ்சு மைல்தூரத்தில் இந்தச் சர்ச்சும், சர்ச்சைச் சுத்தி இடுகாடுமா கட்டிவிட்டாச்சு. ஊருக்கு ஒதுக்குப்புறமாத்தானே புதைக்கணும்? உண்மையில் சர்ச் கட்ட ஆரம்பிக்குமுன்பே..... ஒருத்தரைக் குழியில் வச்சாச்சு.
இப்போ ஊர் வளர்ந்து இது ஊருக்குள்ளேயே இருக்கு. இந்த இடத்துக்கு சர்ச் கார்னர்னுதான் பெயரே ! நம்ம பேட்டை ! இங்கே இருந்து மூணு ரோடுகள் பிரியும். மேற்கு, வடக்கு, தெற்குன்னு ! இந்தச் சர்ச்சு வளாகத்தைத்தொட்டு ரோடுகள் பிரியும் இடத்தில் King Edward VIII நியூஸிக்கு வருகை தந்தப்ப நட்டு வச்ச செடி, பெரிய மரமா வளர்ந்து நிக்குது !
2011 ஆம் ஆண்டு இங்கே வந்த நிலநடுக்கத்தால் ஏராளமான சர்ச்சுகள் இடிஞ்சு விழுந்துருச்சுன்னு சொன்னேனில்லையா.... அதுலே இதுவும் ஒன்னு ! திருப்பிக் கட்டலாமுன்னு நினைச்சப்ப.... நிதி அளவு குறைவு. காப்பீடு பண்ணவங்க, அப்போ இருந்த நிலை அனுசரிச்சுக் கொஞ்சமாத்தான் பண்ணியிருந்தாங்க போல. வருஷாவருஷம் ப்ரீமியம் வேற கட்டவேணுமே.... காசில்லாத நிலையில் திரும்பக் கட்டி எழுப்புவது கஷ்டம்தான். ஆனால் எங்க ஊர் ஹிஸ்டாரிக் சொஸைட்டியும், நகரசபையும் இதற்கு உதவி செஞ்சுருக்கலாம். செய்யலைன்னு கேள்வி. பொதுமக்கள் கிட்டே நன்கொடை கேட்டுக்கிட்டே இருந்தாங்க, ஒரு ஏழெட்டு வருஷமா.....
அப்புறம் ஒரு வழியா போதிய நிதி கிடைச்சது. சர்ச்சின் வளாகத்தில் கொஞ்சம் இடத்தை குழந்தைகள் பள்ளி நடத்த வித்துட்டாங்க. மூணு மாசக்குழந்தைகள் முதல் அஞ்சு வயசுவரை சேர்த்துக்கறாங்க.
அதுக்கு முன்னாலேயே..... சர்ச்சையொட்டியே இருந்த கல்லறைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினால்தான் வேலையே நடக்கும் என்பதால்..... போனவர்களின் வாரிசைத் தேடும் படலம் ஒரு பக்கம் நடந்துக்கிட்டே இருந்தது. ரொம்ப ஆரம்பகாலக் கட்டத்துக் கல்லறைகள் அவை. 150 வருஷம் கடந்து வாரிசுகளைத் தேடினால் கிடைப்பாங்களா ? அவுங்க அனுமதி இல்லாமல் கல்லறைகளை அகற்ற முடியாதே. ஒரேடியா அகற்றாமல் சின்னதா பலகைக் கல்வெட்டுகள் தயாரிச்சு வளாகத்தின் ஒரு பக்கம் வரிசையா வைக்கப்போறதாத்தான் சர்ச் நிர்வாகி ஒருவர் சொன்னார். இந்த வளாகத்தில் இருக்கும் சர்ச் ஹாலில் பூச்செடிகள், வருஷாந்திர ஸேல் என்று வந்தப்ப அவரை சந்திக்க நேர்ந்து அவரிடம் இருந்து கிடைச்ச விவரங்கள்தான் இந்தப் பதிவில் பெரும்பாலும். அன்னாருக்கு நன்றி.
திருப்பிக் கட்டும் போது.... இடதுபக்கமும் வலதுபக்கமும் கண்ணாடிச்சுவர்கள் வச்ச ஒரு சின்ன ஹால் போல் சேர்த்துக் கட்டிட்டாங்க. நம்ம பேட்டை என்பதால் போகும் போதும் வரும்போதும் வேலை நடப்பதைப் பார்த்துக்கிட்டே போவோம். அங்கே என்ன வரப்போதுன்னு யோசனைதான். காஃபி ஷாப்னு சொன்னாங்க. சர்ச் மீட்டிங் நடக்கும்போதும் பயன்படுத்திக்கலாம்.
வேலை முடிஞ்சு ஓப்பன் டேன்னு நாள் குறிச்சாங்க. நாங்களும் மறுநாள் போய்ப் பார்க்கலாமுன்னு இருந்தோம். 'புண்ணியாத்மா கோவிட்', தெற்குத்தீவுக்கு வந்துருச்சுன்னு லாக்டௌன் ராத்ரி 12 முதல் ஆரம்பிச்சது. ஓப்பன் டே கேன்ஸல். வீடடங்கினோம். அப்புறம் லாக்டௌன் முடிஞ்சு நியூஸி பார்டர் திறந்த பிறகும் அங்கே போக வாய்க்கவே இல்லை.
திறந்திருந்த கதவு வழியா உள்ளே பாய்ஞ்சேன். தொட்டிலில் ஒரு குழந்தை அம்போன்னு கிடக்கு. த்சொ த்சொ..... சர்ச் ஒன்னும் பிரமாதமா இல்லை, இதைப்போல பல சர்ச்சுகளை உள்நாட்டிலும் வெளிநாட்டுப்பயணங்களிலும் பார்த்திருக்கோம் என்றாலும், நம்ம பேட்டை சர்ச் இல்லையோ !
நேட்டிவிடி ஸீனுக்காக அலங்கரிச்சுருக்காங்க. ராத்ரி 12க்குப் பொறக்கவேண்டிய புள்ளையை யாரோ அங்கே வச்சுட்டுப்போயிருக்காங்க. போகட்டும்..... இந்த வருஷம் குழந்தை தரிசனம் நமக்குக் கிடையாதுன்னு இருந்தப்போ..... குழந்தை காட்சி கொடுத்துருச்சு ! இங்கேயும் நமக்கு ஏகாந்த தரிசனமுன்னு தனியாச் சொல்லவேணாம்தானே!!!
அட்டகாசமான ஒரு பைப் ஆர்கன் இருக்கு ! ஒருநாள் அதை வாசிக்கும் சமயம் வந்து கேட்கணும் ! Stained glass window , Baptismal Font னு பழங்காலப்பொருட்கள் அழகு ! உடைஞ்சு போன கண்ணாடி ஓவியங்களைத் திரும்ப அதே மாதிரி ஒரு கன்ணாடிக் கம்பெனி செஞ்சு கொடுத்துருக்காங்க.
அன்றைக்கு சனிக்கிழமை என்பதால் சாயங்காலமா நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்குப் போய் ஆரத்தி தரிசனம் பார்த்துட்டு வந்தோம்.
அபூர்வமா அன்றைக்கு ஸ்வாமிஜி ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்துருந்தார். விசேஷ நிகழ்ச்சியா பஜனையும் பிரசங்கமும் நடந்தது. இஸ்கான் அங்கங்களுடன் நாமும் கலந்து கொண்டோம் !
க்ருஷ் & க்றிஸ்!