Monday, July 31, 2006

Toy Library
தமிழ் ஆன் லைன் அகராதியைப் ( புரட்டி?) பார்த்துக்கிட்டு இருந்தேன். லைப்ரரி'க்கு என்னபோட்டுருக்குன்னு பார்க்கத்தான். நூலகம் ,நூல் நிலையம். சரியான வார்த்தைகள்தான்.ஆனா நான் போன இடமும் ஒரு நூலகம்தான். ஆனா பொம்மைகளுக்கான நூலகம்.


என்னதான் நல்ல விலை உயர்ந்த பொம்மைகளும் விளையாட்டுச் சாமான்களும் புள்ளைங்களுக்கு வாங்கிக் கொடுத்தாலும், எண்ணி ரெண்டே வாரத்துலே பசங்களோட டேஸ்ட் மாறிடுது. ஒரு மூலையிலேதூக்கிப் போட்டுட்டு வேற எதாவது புதுசா வந்துருக்கான்னு பார்க்குதுங்க. அதுலேயும் அவுங்களோடகூட்டாளிங்க, சிநேகிதங்க வச்சுருக்கறதுதான் ரொம்ப நல்ல விளையாட்டுப் பொருள்ன்னு நினைச்சுக்கிட்டுஅதுக்கு 'அடி' போடுதுங்க. 'சரி. உனக்குதான் வேணாங்கறியே, வேற யாருக்காவது கொடுக்கலாமு' ன்னாப்போச்சு. 'ஓ இதுதான் எனக்கு ரொம்ப ஃபேவரைட்'ன்னு பதில். இன்னொரு குழந்தை ( சொந்தக்காரக் குழந்தையாவேஇருந்தாலும்) அதைத் தொட்டாப் போச்சு.


இந்தப் பசங்களோட சைக்காலஜியைப் புரிஞ்சுக்கவே முடியலையேப்பா. எப்பப் பார்த்தாலும் பொம்மைகள்,ஆட்டசாமான்கள் வாங்கிக்கிட்டே இருக்க முடியுமா? சரி. நாம் ச்சின்னப்புள்ளையா இருந்தப்பத்தான் அவ்வளவு வசதியும் இல்லை, இவ்வளவு விதங்களும் இல்லை. இதுகளாவது அனுபவிக்கட்டும்'னுதான் பல பெற்றோர்களும் வாங்கிக் குவிச்சுடறோம். இப்பப் பார்த்தா வீடு பூராவும் இந்த அடைசல்கள்.


இந்த சமயத்துலே ஒரு ச்சின்னக் கொசுவர்த்தி:-))))


என்னோட ஒரு தோழி(?) இருக்காங்க. அவுங்க புள்ளைங்களுக்கும், என் மகளுக்கும் ஏறக்குறைய ஒரு வயசு.நம்ம வீட்டுலே 'வராதுவந்த மாமணி'ன்னு எந்தப் பொம்மையைக் கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துருவோம்.இதுலே என் பங்குதான் நிறைய. 'இந்த வயசு போனா வருமா? குழந்தைக் காலம்ன்னு சொல்றது எவ்வளோ இனியது.கவலைகள் எதுவும் இல்லாம, பெத்தவங்க மேலே முழு நம்பிக்கையும் வச்சிருக்கும் பருவம். நம்மளை மட்டுமே நம்பி இருக்கும் ஜீவன்'ன்னு டயலாகெல்லாம் விட்டு, உடனே வாங்கிக் கொடுத்துருவேன்.


தோழி....ஊஹூம். அவ்வளவு சீக்கிரம் இளகிறமாட்டாங்க. கடைகளுக்கு நாங்க பிள்ளைகளோடு போனால்......அந்தப் பிள்ளைங்க, அங்கே இருக்கற ஒவ்வொரு பொம்மையையும் எடுத்து ஆசையோடு தடவிப் பாக்கும். அவுங்க அம்மாகிட்டே கேக்கவும் செய்யும். அதுக்கு அவுங்க அம்மா சொல்றதைக் கேக்கணுமே, " நீ பெரியவனாகி சம்பாரிப்பே பாரு. அப்ப வாங்கிக்கோ'!!!!!!


ஏங்க, இவன் பெரியவனாகி சம்பாரிக்கிறப்ப , இந்தப் பொம்மையைத்தான் வாங்குவானாம்மா?ன்னு நான் மனசுக்குள்ளெ நினைச்சுக்குவேன். இதுக்காக, 'ஆஹா.... நான் பாரு. என் புள்ளைக்குக் கேட்டதும் வாங்கித் தர்றேன்னு பெருமை அடிச்சுக்கலை. ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி, தனி ரகம் இல்லையா? அவுங்கவுங்க கருத்து, எண்ணம் வேறயா இருக்கக்கூடாதா?


அப்பப் பார்த்து நம்ம மகள் கேக்கறதை உடனே நான் வாங்குனா அந்தப் புள்ளைங்க ஏங்கிப் போகுமேன்னு, 'இன்னொரு கடையிலே விலை விசாரிச்சுக்கிட்டு வாங்கலாம். இப்ப அம்மா காசு கொண்டு வரலை. வீட்டுக்குப்போய் காசு எடுத்துக்கிட்டு வரலாம்'னு எதாவது சொல்லிச் சமாளிச்சுட்டு, வீட்டுக்கு வந்துட்டு, அப்புறம் போய் வாங்குவேன். அதான் பெரிய ஷாப்பிங் செண்ட்டர் நம்ம வீட்டுக்கு முன்னாலேயே இருக்கே. மூணு நிமிஷ நடைதானே?


நம்ம புத்தக லைப்ரரி இருந்த இடத்தை இப்பப் பொம்மை லைப்ரரிக்குக் கொடுத்துட்டோம். பக்கத்துலேயே பெரூசா சிட்டிக் கவுன்ஸிலோட லைப்ரரி வந்துட்டதாலே நாங்க, எங்க லைப்ரரியை மூடவேண்டியதாப் போச்சு.
எங்களுக்குப் புத்தகம் வாங்கிக்க ஒரு புண்ணியவான் கொடுத்த காசுலே கொஞ்சூண்டு பாக்கி வச்சிருந்தோம்.அது ஒரு ட்ரஸ்ட். இப்ப லைப்ரரி இல்லாததாலே அந்த ட்ரஸ்ட்டைக் கலைக்க வேண்டியதாப் போச்சு. அந்தக்காசை எதாவது குழந்தைகள் சம்பந்தப்பட்ட தர்ம நிறுவனங்களுக்குக் கொடுத்தறலாமுன்னு முடிவு செஞ்சோம்.


ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து விஷயத்தைச் சொன்னதும் அவுங்களும் சந்தோஷப்பட்டாங்க. அவுங்களுக்கு முறைப்படி அந்த பாக்கிக் காசு கொடுக்கற நிகழ்ச்சி, நம்ம பழைய கட்டிடத்துலேயே வச்சிக்கிட்டோம். பொம்மைக்காரங்களும் இதை அங்கே வச்சுக்கணுமுன்னு வற்புறுத்திச் சொன்னதுமில்லாம, அவுங்களும் நமக்கு நன்றி தெரிவிக்க இதை ஒரு சந்தர்ப்பமா எடுத்துக்கிட்டு ஒரு ச்சின்ன supper பார்ட்டியா ஏற்பாடு செஞ்சுட்டாங்க.


ட்ரஸ்ட் மெம்பர் என்ற வகையில் அங்கே போகும்படி ஆச்சு. இப்பத்தான் மொதமுறையா ஒரு பொம்மை லைப்ரரிக்குள்ளெ காலடி எடுத்து வச்சிருக்கேன். அருமையான வகைவகையான பொம்மைகள். விளையாட்டுச் சாமான்கள். வாடகைக்கு எடுக்கலாம். ரெண்டு வாரம் வச்சுக்கலாமாம்( அதுபோதுமே பசங்களுக்கு) ஒரு டாலர் முதல் 5 டாலர் வரை சாமான்களுக்குத் தகுந்தாப்போலே வாடகை.


47 குடும்பங்கள் பதிஞ்சுருக்காங்களாம். வருஷத்துக்கு 30 டாலர் ஒரு குடும்பத்துக்கு மெம்பர் ஷிப் கட்டணம். எந்த அடிப்படையில் பொம்மைகளை வாங்கறாங்கன்னு கேட்டேன். கல்வி சம்பந்தம், பொழுது போக்கு, அவுட்டோர் கேம்ஸ்ன்னு பலவகைகளில் தேர்ந்தெடுக்கறாங்களாம். பிள்ளைகள் அவுங்களுக்கு ஆசைப்பட்ட பொருட்கள் இங்கே இல்லைன்னா அதுக்காக வேண்டுகோள் விட்டாப் போதுமாம். அதை வாங்க பெருமுயற்சி எடுத்துக்குவாங்களாம். அட! பரவாயில்லையே!


இதையெல்லாம் வாங்கறதுக்குக் காசு வேணாமா? இங்கே பல வியாபார நிறுவனங்கள் கொஞ்சம் பண உதவியும் செய்யறாங்களாம்.
எத்தனை பிள்ளைங்க இதைப் பயன்படுத்தறாங்கன்னு கேட்டேன். நூத்துக்கு ஒண்ணு கம்மி,99.


எவ்வளோ நல்ல கான்ஸெப்ட்ன்னு நினைச்சேன். பசங்களுக்குப் புதுப்புது விளையாட்டுச் சாமான்கள். பெத்தவங்களுக்கும் சுமையா இல்லாமச் சுலபமா இருக்கு. மொத்தக் காசையும் போட்டு வாங்கிக் குவிக்க வேணாம். அங்கே இருந்த பல பொருட்களைப் பார்த்தால் நாமும்கூட குழந்தைக் காலத்துக்குப் போக ஆசையா இருக்கு. அங்கே இருந்த ஒரு 'பொம்மை வீடு'எனக்கு ரொம்பப் பிடிச்சது.


இப்ப இந்தக் குழுவுக்கு 'ச்சேர் பெர்சன்'னா இருக்கற 'லின்' னிடம் பொம்மைகள் அடுக்குன ஒரு அலமாரி கிட்டே நின்னு பேசிக்கிட்டு இருந்தேன். பேச்சு சுவாரஸியத்துலே அங்கே இருந்த பிக்னிக் கூடையில் இருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து 'வேணுமா'ன்னு கேட்டாங்க. 'நான் ஆப்பிள் எடுத்துக்கறேன், நீங்க பனானா சாப்புடுங்க'ன்னு சீரியஸ்ஸாச் சொன்னதும் சிரிச்சுட்டாங்க.

இங்கத்துக் குழந்தைகள் கொடுத்து வச்சவுங்கதான்.

Saturday, July 29, 2006

எனக்கு வயசு 150.

இன்னிக்கு பர்த்டே கொண்டாட்டம். ஒரு வாரமா கட்டாயம் வாங்க,வாங்கன்னு கூப்புட்டுக்கிட்டு இருந்தாங்க. ரெண்டு நாளா டிவியிலேயும் வந்து அழைச்சாங்க. காலையிலே 11 மணி முதல் சாயந்திரம் 6 வரை கொண்டாட்டமே கொண்டாட்டம். போகாம இருக்க முடியுமா?


நாங்க போய்ச் சேரும்போதே கேக் வெட்டி முடிச்சுப் பத்து நிமிஷம் ஆயிருச்சு. கார் பார்க்கிங்தான் கஷ்டமாப்போச்சு. 'ஹொய்ங் ஹொய்ங்'ன்னு வளைஞ்சு வளைஞ்சு ஒவ்வொரு மாடியாப்போய் கடைசியிலே பத்தாவது மாடியில்தான் இடம் கிடைச்சது.


பிறந்தநாள் எங்க ஊருக்குத்தாங்க. விக்டோரியா மகாராணிதான் அந்தக் காலத்துலே வெள்ளையர்கள் குடியேறிய காலனிகளில் முக்கிய நகரமுன்னு நினைக்கிற ஊர்களுக்கு நகர அந்தஸ்து வழங்குவாங்களாம். அப்படி அந்தஸ்த்து வாங்கி இன்னியோட 150 வருசமாச்சு நியூஸியில் கிறைஸ்ட்சர்ச் நகரத்துக்கு.


150 மீட்டர் நீளம் கேக் செஞ்சு வெட்டியிருக்காங்க. உள்ளெ நுழைஞ்சதும் ஆளுங்களுக்கு கேக். ஏனோதானோன்னு செய்யாம அருமையா ருசி. நிறைய வால்நட்ஸ் போட்டு ஒயிட் சாக்கலேட் ஐஸிங் செஞ்ச ஃப்ரூட் கேக்.


ஒரு பக்கம் குச்சிக்காலுலே உயரமா நடக்கற பசங்க. மேடையிலே கார்டன் சிட்டி பேண்ட் பாடிக்கிட்டு இருக்கு.ச்சின்ன புள்ளைங்களுக்கு லைன் ஸ்கிப்பிங், பஞ்சி ஜம்ப், க்ளவுன்கள், நதியில் படகு ஓட்டும் பண்ட்டர்ஸ், மவோரிகள் போல முகத்தில் பச்சை குத்தி இருக்கும் இளசுகள் இப்படி வினோதங்கள் ஏராளம்.


இதுலே கொண்டாட்டத்துக்காக ஃபேன்ஸி ட்ரெஸ் போட்டி அறிவிச்சிருந்தாங்க. அதுக்காக இன்னும் பல விதமா உடை உடுத்துன ஆட்கள்ன்னு ரொம்ப கலகலன்னு இருந்துச்சு. எங்க ஊர் கதீட்ரல் உள்ளெ வழக்கமா போட்டோ எடுக்கணுமுன்னா கேமெராவுக்கு ஒரு சார்ஜ் 4$ அடைக்கணும். இன்னிக்கு விசேஷம் பாருங்க, அதனால் எல்லாம் இலவசம்.

இலவசமுன்னா இது மட்டுமா, நெஸ்காஃபிக் காரங்க இலவசமா காபி தந்துக்கிட்டு இருந்தாங்க. வரிசை ரொம்ப நீளமா இருந்துச்சு. ஏன் இருக்காது? கிட்டத்தட்ட ஒரு லட்சம்பேர் அங்கெ கூடி இருந்தோமே! ஊரின் மொத்த ஜனத்தில் மூணில் ஒரு பங்கு! "வரிசையில் நிக்கவேணாமா? அப்ப இந்தா புடி. ஆறு கப் காபிக்குத் தேவையானமூணு விதங்களிலே காப்பிபொடி. வூட்டுலே போய் போட்டுக் குடிச்சுக்கோ"ன்னு சொல்லிக்கிட்டு காப்பித்தூள் எடுத்துக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க ஒரு பக்கத்துலே! வாங்கியாரலைன்னா மனசுக்கு நல்லாவா இருக்கும்? ரெண்டு பொதி நமக்கு.


ஸ்டார்பக்லே வேற, இலவசக் காஃபி நடந்துக்கிட்டு இருக்கு. மக்கள்ஸ் குஷியோட உலாத்தறாங்க. எங்கூர்லே 'ச்சலிஸ்'ன்னு ஒரு அலங்காரம் வச்சிருக்காங்க. நீங்க சில தமிழ் சினிமாவுலேகூடப் பார்த்திருக்கலாம். ஸ்டீல் அலங்காரம். அதுபோல ஒண்ணு செஞ்சு தலை அலங்காரமா வச்சுக்கிட்டு இருந்த ஒரு பெல்லி டான்ஸர்தான் கூட்டத்தை ஒட்டு மொத்தமா தன் பக்கம் இழுத்துக்கிட்டு இருந்தாங்க. அவுங்களொட நானும் நின்னு ஒரு படம் எடுத்துக்கிட்டேன்.


ஒயின் பாட்டில் கார்க்குகளாலேயே ஒரு சட்டை செஞ்சு போட்டுக்கிட்டு, திராட்சைப் பழங்களால் ஒரு அலங்காரம்.நியூஸி லேம்ப் உல்(lamb wool) அலங்காரமுன்னு நிஜமான ஒரு ஆட்டுக்குட்டி, இன்னும் விதவிதமான தலை/தொப்பிஅலங்காரமுன்னு அசல் திருவிழாக் கோலாகலம். பத்தாயிரம்பேரை ஒருமிச்சுப் பார்த்தா புண்ணியமாமே. இப்ப அதுபோல பத்து மடங்கு புண்ணியம் சம்பாரிச்சுக்கிட்டுப் படங்கள் எடுத்துக்கிட்டு இப்பத்தான் வீடுவந்து சேர்ந்தோம்.


படங்கள் இங்கே.


ச்சும்மா சொல்லக்கூடாது அழகான நகரம்தான். இன்னிக்குன்னு பார்த்து சூரியனும் கொஞ்சம் கருணை காமிச்சார்.பத்து டிகிரிதான். ஆனாலும் அவர் வந்ததே பெருசு.


ஹேப்பி பர்த்டே கிறைஸ்ட்சர்ச்.

எவ்ரிடே மனிதர்கள் 11 பானு அண்ணி

"சர்ஃப் .........கடையிலே இப்ப சேல் போட்டுருக்கு. போய் வாங்கிட்டு வரேன்."


" ----- கடையை விட ------ கடையிலே பார், இன்னும் கம்மி. "


எவ்வளவு கம்மின்னு பார்த்தா ஒரு செண்ட். ஆனா ஒரு செண்ட்ன்னா ஒரு செண்ட். எதுக்காக அனாவசியமா,அவசியமான பொருளுக்கு கூடுதல் விலை கொடுக்கணும்?


இதுதான் பாயிண்ட். என்னவோ ஒரு பழமொழி சொல்வாங்க பாருங்க, பென்ஸ்லே கணக்கா இருந்தாலே பவுண்டா சேர்க்கலாமுன்னு( ஏங்க .. பழமொழி சரிதானா? இல்லே நானே எதாவது உடான்ஸ் விட்டுட்டேனா?)

தினப்படி வேலைகளே இங்கே முழி பிதுங்கிரும். இதுலே வீட்டுக்கு வர்ற ஜங்க் விளம்பரங்களைப் பார்க்கறது மட்டுமில்லாம, எங்கெங்கே என்னென்ன பொருட்கள் மலிவா இருக்குன்னு பார்த்து, அவசியமானதைத் தான்மட்டும் வாங்கிக்காம நமக்கும் ஞாபகப்படுத்துவாங்க நம்ம பானு அண்ணி.


நாங்க அண்ணின்னு சொல்றமே தவிர, இவுங்க வேற மாநிலத்து ஆளுங்கதான். அவுங்க பாஷை வேற, நம்மது வேற. அதனாலே என்ன? அன்பா இருக்கவும், கரிசனம் காட்டவும் பாஷை ரொம்ப முக்கியமா ?


காலையிலே 5 மணிக்கு எழுந்தாங்கன்னா, வீட்டுவேலை நெட்டி முறிச்சிரும். ஒரு நிமிஷம் ச்சும்மா இருந்து நான் பார்த்ததே இல்லை. மச்சினர், அவர் மனைவி, ரெண்டு பிள்ளைங்க. இவுங்களுக்கு ரெண்டு பையனுங்க. மாமியார்னு பெரிய கூட்டுக் குடும்பம்.


வீடு இருக்கறது கடை வீதியில். மாடியில் வீடு. கீழே கடை. அப்படி ஒண்ணும் பெரிய கடை, வியாபாரமுன்னு சொல்ல முடியாதுதான். ஆனாலும், அந்தக் கடையில் வியாபாரம் பார்த்தேக் குடும்பத்தை மேலே கொண்டுவந்துட்டாங்க. அண்ணனுக்கு ( பானு அண்ணின்னா, அவுங்க வூட்டுக்காரர் நமக்கு அண்ணன் இல்லையா?) மூத்தவர் ஒருத்தர் இருக்கார். அவரைப் படிக்க வச்சதே நம்ம அண்ணந்தாங்க. நல்லாப்படிக்கிறவர், படிக்கட்டுமுன்னு தையல்கடை, துணிக்கடைன்னு வச்சு உழைச்சிருக்கார். இவரோட தம்பிக்கும் படிப்பு ஏறலை. கடை, வீடுன்னு ஒரே சமயம் கவனிக்க முடியாம அண்ணியைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டார்.


அண்ணியோட குடும்பம் ரொம்பப் பணங்காசு உள்ளதுதான். ஆனா வரதட்சிணைப் பழக்கம் எல்லாம் இல்லை. தான் பணக்கார வீட்டுப் பொண்ணாச்சே, இங்கே எப்படின்னு இல்லாம அண்ணி வந்து குடும்பத்தைச் சேர்த்து அணைச்சு இவ்வளோ தூரம் கொண்டு வந்துட்டாங்க. இப்ப மூத்தவர் எஞ்சிநீயர் படிப்பு முடிச்சு, நல்ல இடத்துலே கல்யாணம் கட்டி ரெண்டு பிள்ளைகளோடு சுகமா வேற ஊர்லே இருக்கார். நல்ல வேலை.கைநிறையச் சம்பாதிக்கிறார்.


கடைசித்தம்பி, இப்பவும் கீழே இருக்கற கடையைப் பார்த்துக்கறார். அவரோட பிள்ளங்க இன்னும் மூணு,நாலு வயசுங்கறதாலெ பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கலை. அவரோட மனைவியும், பிள்ளைகளும் கடையிலேயே இருப்பாங்க. ரெண்டு ஆளுக்கு மேலே மூணாவது ஒரு கஸ்ட்டமர் வந்துட்டாப் போதும், உடனே மேல்வீட்டுலே இருக்கற அண்ணிக்குப் ஃபோன் போட்டுருவாங்க.அண்ணியும், செய்யற வேலையை அப்படியே விட்டுட்டுக் கீழே போய் கடையிலே நிப்பாங்க. இப்படி மேலேயும் கீழேயுமா நாளுக்கு பத்திருவது தடவை ஓடிக்கிட்டே எல்லா வேலையையும் நறுவிசாச் செஞ்சுருவாங்க.


மாமியார்க்குத் தேவையான மருந்து மாத்திரை வாங்கி வைக்கறது, அவுங்களுக்கு சாமி கும்பிடக் கூடமாட உதவின்னு இருக்கறது மட்டுமில்லாம, கல்யாணமாகி இத்தனை வருசமாகியும் அவுங்களைக் கேக்காம எதையும் செய்ய மாட்டாங்க.வருசத்துக்குப் போடற ஊறுகாய்க்குக்கூட 'உப்பு இவ்வளவு போதுமாம்மா?'ன்னு கேப்பாங்கன்னா பாருங்களேன்.


எந்த நேரம் போங்க, நீட்டா உடுத்தி இருப்பாங்க. சத்தமாப் பேசக்கூட மாட்டாங்க. நாங்க எல்லாருமா உக்காந்து சாப்புடறப்போ, பறிமாறிக் கொடுக்கறதும், கூட்டமா எல்லாரும் இருந்தாலும் சத்தமே வெளிவராம அண்ணன்கூடப் பேசறதும், அதுக்கு அவர் பதில் சொல்றதும் இன்னைக்கு நினைச்சாலும் எனக்கு அதிசயம்தான். நம்ம வீட்டுலே 'கரடியாக் கத்துனாலும் காதுலெ விழாது'.


சனிக்கிழமையானா, காலையிலே மார்கெட் கிளம்பிப் போய் வாரத்துக்கு வேண்டிய காய்கறிகளை வாங்கி வருவாங்க.எல்லாத்துக்கும் நடராஜா சர்வீஸ்தான். நாங்க போனபிறகு, எங்க வசதிக்காக மார்கெட் போற நேரம் கொஞ்சம் பிந்திப் போச்சு.இப்படி ஒரு வாரம், ரெண்டு வாரம் இல்லை, நாங்க அங்கே இருந்த 6 வருசமும் விடாம உதவியா இருந்தாங்க எங்களுக்கு.


எண்ணிப்பார்த்து 14 வகைக் காய்கள் வாங்குவாங்க. நாளுக்கு ரெண்டு வகை. ஒவ்வொண்ணுக்கும் ஒரு குறிப்பிட்ட கடை.பழம் வாங்கறதும் இப்படித்தான். எல்லாருக்கும் டாலருக்கு ஆறு ஆப்பிள்ன்னா வழக்கமா வாங்கறதாலே இவுங்களுக்கு மட்டும் ஏழு கொடுப்பார் கடைக்காரர். ஒரு நாளைக்கு ஒண்ணு வீதம் ஏழு நாளைக்கு ஏழு. தினமும் காலையிலே சாமி கும்பிடும் போது சாமி பிரசாதம் இதுதான். அழகா ஸ்லைஸ் செஞ்சு சாமி முன்னாலே இருக்கும். நாங்கெல்லாம்ஆளுக்கொண்ணு எடுத்தாலும் எல்லாருக்கும் சரியா வந்துரும். சாமிக்கும் கணக்குன்னா கணக்குதான்.அவுங்க வீட்டுலே எல்லாரும் ரெண்டு நேரமும் சப்பாத்திதான் தின்னாலும், தினம் சோறும் சமைப்பாங்க. என்ன... ஒருசாஸ்த்திரத்துக்குச் சமைச்சதுபோல இருக்கும். அத்தனை பேர் இருக்கற வீட்டுலெ அரைக் கப் அரிசி. நல்ல பாசுமதிஅரிசிச்சோறு. பொறுமையா அடுப்பிலே வச்சு சோறு பொங்கி வடிப்பாங்க. அதுவே பாதிக்கும்மேலே மீந்துரும். நாங்கஅங்கே சாப்புடற நாளுதான் எல்லாத்தையும் தீர்த்துருவோம். மீந்த சோறை ஒரு தட்டுலே பரத்தி, அதுக்கு ஒரு சல்லடை மூடி போட்டு வெயில்லே வச்சு கலகலன்னு காய வச்சிருவாங்க. ஒரு நாலைஞ்சு நாளைக்கு ஒருதடவை, இதுவரைக்கும் காயவச்சதையெல்லாம் சேர்த்து எண்ணையிலே பொரிச்சு எடுப்பாங்க. அதுமேலே கொஞ்சம் மிளகுதூள், உப்புத் தூவிட்டாங்கன்னா அட்டகாசமான பொரி. இதே நானா இருந்தா ஒரு அரைக்கரண்டி சோத்துக்கு இவ்வளவும் செய்யணுமான்னு யோசிப்பேன்.


நான் சொல்றதையெல்லாம் கேட்டுட்டு அண்ணி ரொம்பக் கருமின்னு நினைச்சுறாதீங்க. எல்லாம் ஒரு சிஸ்டமேடிக்கா செய்யணும். அனாவசியமா எதையும் வேஸ்ட் செய்யக்கூடாதுன்றதுதான் முக்கியமாக் கவனிப்பாங்க. வருசத்துக்கு ஒரு தடவைபூண்டுச் செடிகளை நட்டு அது முளைச்சு வரும்போது அந்தத் தாள்களை வச்சு ஒரு கறி செய்வாங்க. அதே போல மாசம் ஒருதடவை வீட்டுலே விருந்து. ரெண்டு மூணு வாரத்துக்கொருமுறை அக்கம்பக்கம் பிக்னிக் போய் வர்றது.இதுக்கெல்லாம் கொஞ்சமும் அசறாம வகைவகையாச் சாப்பாடு செஞ்சு கொண்டு வருவாங்க. நவராத்திரி, தீபாவளி சமயங்களிலே தினம் விருந்து, பூஜைன்னு அமர்க்களம்தான்.


அண்ணன், இப்ப முயற்சி எடுத்து ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுக் கம்பெனிக்கு முதலாளியா ஆயிட்டார். பெரிய பங்களா வாங்கி இடம் பெயர்ந்தாச்சு. வருமானம் கொட்டுது. மகன்கள் பெரியவங்களாயி, மருமகள்கள், பேரன் பேத்தி எடுத்தாச்சு. ஆனாலும் அன்னிக்கு இருந்த மாதிரியேக் கொஞ்சம்கூட மாற்றமில்லாம அண்ணி இருக்காங்க.வயசான பிறகு வர்ற நோய்நொடிகள் அப்பப்பத் தலை காட்டுனாலும் சுறுசுறுப்பு, கணக்குப் பார்த்துக் குடும்பம்நடத்தறது, மாமியார்க்கு பணிவிடைன்னு ஒண்ணும் குறையில்லாம செஞ்சுக்கிட்டு இருக்காங்க.


நான் பலவிஷயங்களை அவுங்ககிட்டே இருந்து கத்துக்கிட்டேன். நேரம் தவறாமை, கணக்காக் காசு செலவு செய்யறது,முக்கியமா, 5, 10, செண்ட்டுதானேன்னு தேவையில்லாம காசை வீணாக்காம இருக்கறது, சுறுசுறுப்பு, பெரியவங்களுக்கு மரியாதைன்னு நிறைய.


இவ்வளவு அளக்கறனே, என்கிட்டே இருந்து அவுங்க எதாவது கத்துக்கிட்டாங்களான்னு யோசிச்சுப் பார்த்தா.......ஆங்.... அண்ணந்தான் ஒண்ணே ஒண்ணு கத்துக்கிட்டார். அது காஃபி குடிக்கிற பழக்கம். என்கிட்டே... நல்ல பழக்கம்? இனிமேத்தான் தேடிப் பார்க்கணும்.


ரெண்டு வருசத்துக்கு முன்னாலெ அண்ணனும், அண்ணியும் இங்கே நம்ம ஊருக்கு வந்து நம்மோட ஒரு வாரம் தங்கிட்டுப் போனாங்க.நானும் தேடித்துருவிப் பார்க்கறேன், எதாவது மாற்றம் இருக்கான்னு..... ஊஹூம்.... தலை மட்டும் நரைச்சிருக்கு.அவ்வளவுதான். வந்த இடத்துலெயும் அக்கடான்னு இருக்காம, பரபரன்னு சப்பாத்தியை செஞ்சு அடுக்கறாங்க.


அண்ணி ஒரு நிறைகுடம். என்னைக்கும் தளும்பாது
.------------

அடுத்தவாரம்: ராஜகோபால்
------------------


நன்றி: தமிழோவியம

Thursday, July 27, 2006

நியூஸிலாந்து பகுதி 53

அல்பமா இருக்காம எதையுமே பெருசாச் செய்யணும். பிரமாண்டமான திட்டங்களைப் போட்டு நாட்டை முன்னுக்குக் கொண்டு வரணுமுன்னு சொல்லிக்கிட்டு ஒரு பிரதமர் வந்தார். இவர் பேர் ஸர். ராபர்ட் முல்டூன்.1975லே நேஷனல் கட்சி சார்புலே வந்தவர். இதுக்கு முன்னாலே இருந்தவங்க செஞ்ச மாதிரியே இவரும்'கடன் வாங்கிக் கல்யாணம்' ஃபார்முலா வச்சிருந்தார். பெரிய பவர் ஸ்டேஷன்களைக் கட்டுனா, அதன்மூலம் எல்லா முன்னேற்றமும் வந்துரும்னு நம்புனவர் இந்தத் திட்டங்களுக்கு 'திங் பிக் ( Think Big)'ன்னு பேர்.


1979லே பெட்ரோலுக்குக் கடுமையான விலை உயர்வு. வீக் எண்டுலே பெட்ரோல் பங்கை மூடிருவாங்க. வாரத்துலே சில நாட்களை கார் இல்லாத நாள் ன்னு வச்சாங்க. அன்னைக்குக் கார் எதுவும் ஓடக்கூடாது. அப்படியும் சமாளிக்கமுடியலை. பெட்ரோல் தட்டுப்பாடு மற்ற வியாபாரங்களைப் பாதிச்சது. அமெரிக்கா, ஜப்பான் இங்கே இருக்கறபெரிய மோட்டார் கம்பெனிகளோடு பேசி, மெதனாலை பெட்ரோல் கூட கலந்து(Methanol blending) பயன்படுத்தலாமுன்னு யோசனைஇருந்துச்சு. இங்கயோ அளவுலே ரொம்பச் சின்ன தேசம். மார்க்கெட்டும் ச்சின்னது. அதனாலெ அவுங்க யாரும் அவ்வளவாநம்மளைக் கண்டுக்கலை. நாமளெ இதைச் செஞ்சுக்கலாமுன்னா, கார் எஞ்சின்களைக் கொஞ்சம் மாற்றி அமைக்கணும்.அதுக்கெல்லாம் இங்கே வழி இல்லை.


பத்து பில்லியன் டாலர் கடன் வாங்கி பவர் ஸ்டேஷன் கட்டுனாங்க. மந்திரிசபையிலே இவருக்கு ஏற்கெனவே நல்ல அனுபவம் இருந்துச்சு. 1964 முதல் 1967 வரை அப்ப இருந்த நிதி மந்திரிக்கு அண்டர் செக்கரட்டரியாஇருந்தார். அதுக்கப்புறம் 1967 முதல் 1972 வரை நிதி மந்தியாவும் இருந்துருக்கார். இதோ இப்ப பிரதம மந்திரி மட்டுமில்லை, இவரே நிதி அமைச்சரும் கூட!


ஆனா இந்த அனுபவங்களை வச்சுக்கிட்டும், இவராலெ, இவர் போட்ட திட்டங்களாலே பெரிய நன்மை ஒண்ணும் வந்துறலை. 'கடன் வாங்கிக் கல்யாணம்' ன்னா இப்பக் 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'ன்னு ஆயிருச்சு.கடைகண்ணிகளில் விலை உயர்வு கூடிப்போச்சு. பணவீக்கம். 1982 லே 20% பண வீக்கமாம்!ஒண்ணும் கட்டுப்படி ஆகலை. அப்பப் பார்த்து ஃபால்க்லாந்து போரில் பிரிட்டன் ஈடுபட்டு இருந்துச்சு. இவரும் அவுங்களை ஆதரிச்சுக்கிட்டு நின்னார். 1975 லே இருந்து தொடர்ந்து மூணு முறை பிரதமரா இருந்தவர், மக்கள் நம்ம திட்டங்களுக்கு ஆதரவு ரொம்பக் கொடுக்கறாங்கன்ற நம்பிக்கையிலே குறிப்பிட்ட காலம் முடியறதுக்கு முன்னேயே 1984 பொதுத் தேர்தலை வைச்சார்.


விலைவாசி உயர்வாலே திணறிக்கிட்டு இருந்த மக்கள் இவரைத் தூக்கிக் கடாசத் தயங்கலை. லேபர் கட்சி ஜெயிச்சது. டேவிட் லாங்கெ புதுப் பிரதமரா ஆனார். இவரைப் பத்தின மேலதிகத் தகவல்கள் இங்கே இருக்கு.நிதி மந்திரியா வந்தவர் ரோஜர் டக்ளஸ். பெரிய மாற்றங்கள் வந்த நேரம் இதுதான். இவரோட திட்டங்கள் Rogernomics ன்னு கொண்டாடப்பட்டுச்சு. நாட்டோட பொருளாதாரம் மேலே போகக் காரணமா இருந்தவர் இவர்தான்.


மொதவேலையா, கடைகண்ணிகளுக்கு வேலை நேரத்தை மாத்துனாங்க. இதுக்கு முன்னாலே கடைகள் திறந்திருக்கற நேரம் இப்படி இருந்துச்சு. வார நாட்களிலே திங்கள் முதல் வெள்ளிவரை காலையில் 9 முதல் மாலை 5.30வரை.இதுலே ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு நாள் 'லேட் நைட் ஷாப்பிங்'ன்னு சாயந்திரம் 9 வரை திறந்திருக்கும். சனிக்கிழமையானா பகல் 1 மணிக்கு மூடிருவாங்க. ஊரே 'ஜிலோ'ன்னு கிடக்கும். மறுநாள் ஞாயித்துக்கிழமை பூராஇதே 'ஜிலோ'தான். திங்கக்கிழமைக் காலையிலேதான் மறுபடி கடைகள் திறக்கும். அங்கங்கே தெரு முக்குலே இருக்கற கடைகளுக்கு மட்டும் விதி விலக்கு. அவுங்க வேலைநேரம் வேற. மத்த கடைகள் இல்லாததாலே வார இறுதின்னா இந்தக் கடைகளிலே வியாபாரம் கூடும். வியாபாரம் மட்டுமா? விலையும் கூடும். எல்லாம் அவுங்க இஷ்டம்!


இங்கே ஒரு விஷயம் சொல்லணும். இந்த தெருமுக்குக் கடைகள் வச்சிருந்ததெல்லாம் யாருங்கறீங்க? 100க்கு 99 கடைகள் இந்தியர்கள்தான். வேலை நேரத்தைப் பத்திக் கவலைப்படாம உழைக்கக்கூடிய ஆட்கள் நம்மாட்கள்தான்.இவுங்க எல்லாரும் இடி அமீன் கொடுமைக்கு ஆளாகி 1972 லே உகாண்டாவுலே இருந்து பிரிட்டனுக்கு அடைக்கலமாப் போனவங்க. உகாண்டா முந்தி பிரிட்டிஷ் காலனியா இருந்தப்ப, இந்தியர்கள் அங்கே போய் வியாபாரம் நடத்திக்கிட்டு இருந்தாங்க பாருங்க. அவுங்களொட வம்சாவளியினர் தான், பிரிட்டனுக்குப் புகலிடம் தேடிப் போனாங்க.


இங்கே நியூஸியிலும் குடியேற்ற உரிமை பிரிட்டிஷ்காரங்களுக்கு மட்டுமே இருந்த காலக்கட்டம். அப்ப எப்படிஇந்தியர்கள் வந்திருக்க முடியும்? அதான் அவுங்க புகலிடம் போயிட்டுப் பிரிட்டிஷ் பாஸ்ப்போர்ட் வாங்கியிருந்தாங்களே.இந்தியர்கள்தான்னு சொன்னாலும் இவுங்க எல்லாரும் ஒரே ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தாங்க.அது எந்த மாநிலம்? குஜராத்.


எல்லா பெரிய ஊர்களிலும் பரந்து நிரவி இருந்தாங்க இவுங்க. அங்கங்கே 'இண்டியன் அசோஸியேஷன்'ன்னு ஆரம்பிச்சும் வச்சிருந்தாங்க. இதைப் பத்தி அப்புறம் விரிவாச் சொல்றேன். இப்ப எங்கே விட்டேன்?.....

...ம்ம்ம்.தெருமுக்குக் கடைங்க & புது அரசாங்கம்.


புது அரசாங்கம் வந்தவுடனே, சனிக்கிழமைக் கடைகண்ணி நேரத்தை அதிகப்படுத்துனாங்க. விருப்பம் இருந்தாஞாயித்துக்கிழமைகூட கடையைத் திறந்துக்குங்கன்னும் சொன்னாங்க. வியாபார நிறுவனங்களுக்குக் கொண்டாட்டமாப் போச்சு. வார இறுதிகள் பூரா ஜேஜேன்னு வியாபாரம்,மக்களும் ஓய்வா ஷாப்பிங் போறதுன்னு ஆரம்பிச்சு, இப்பபல சூப்பர் மார்கெட்டுகள் அளவுலே மட்டும் பெருசா இல்லாம, 24 மணி நேரமும் திறந்து இருக்குன்னா பாருங்க.


இந்த மாற்றங்களாலே அதிக அடி பட்டதும் இந்த தெருமுக்குக் கடைங்கதான். அரைவிலை, முக்கால் விலைக்குச் சாமான்கள் கிடைக்கறப்ப யாரு இங்கே போவாங்க?


அடுத்த மாற்றம் என்னென்னா.....ரெயில்வே, ஏர்லைன்ஸ், டெலிஃபோன்ன்னு இருந்த சேவைகளையெல்லாம் தனியாருக்கு வித்தாங்க. வனப்பகுதிகளையும் தனியார்களுக்கு வித்தாங்க. வெளிநாட்டுக் கம்பெனிகள் போட்டி போட்டுக்கிட்டு வாங்குனாங்க. சேவையின் தரம் உயர்ந்துச்சு. ஆனா........


இதுவரை அரசாங்கச் சிப்பந்திகளா அங்கே வேலை பார்த்துக்கிட்டு இருந்தவங்களிலே பலருக்கும் வேலை போச்சு.அரசாங்கம் ஒவ்வொண்ணையும் விக்கற வேகத்தை பார்த்து, 'நம்மளை எல்லாம் எப்ப, யாருகிட்டே விக்கப் போறாங்களோ?'ன்னு ஜனங்க பயப்படும்படியா ஆச்சு:-)))))))
1987லே அண்டைநாடான ஃபிஜியிலே ராணுவம் அரசாங்கத்தைக் கைப்பற்றி எடுத்துச்சு. அங்கே இருந்த 51%இந்திய வம்சாவளியினர் ரொம்ப பயந்துட்டாங்க. ரெண்டாம் தர குடிமக்களா இருக்கவேண்டி இருக்குமேன்ற கவலையாலே பிரிட்டன் சம்பந்தப்பட்ட நாடுகளுக்குக் குடிமாற நினைச்சாங்க. ஏன்னா ஃபிஜித்தீவுகள் சுதந்திர நாடுன்னாலும், அப்ப பிரிட்டனின் மேற்பார்வையிலேதான் இருந்துச்சு.


ஃபிஜி இந்தியர்கள் கானடா, இங்கிலாந்து, ஆஸ்தராலியா, நியூஸிலாந்துன்னு பல நாடுகளுக்கும் போனாங்க.இங்கே நியூஸி அரசாங்கமும் வியாபார நிமித்தம் வர்றதா இருந்தா 250,000 டாலர்கள் கொண்டு வாங்க.உங்களுக்கு பிஸினெஸ் மைக்ரேஷன் தகுதியிலே நிரந்தரமாத் தங்கலாமுன்னு சொல்லுச்சு.


இதை மக்கள் எப்படிப் பயன்படுத்துனாங்கன்னு அடுத்த வகுப்புலே சொல்றேன்.

Monday, July 24, 2006

அம்மா என்றால் அன்பு ?

எங்கியோ தூரத்துலே குழந்தை அழும் சத்தம். முழிச்சிருக்கேனா தூங்கறேனான்னு தெரியாத ஒரு அவஸ்தை. குழந்தையா இருக்காது. புரண்டு படுக்கறப்ப இன்னும் கொஞ்சம் சத்தம் கூடுனாப்புலெ இருக்கு. நம்ம குழந்தையா இருக்குமோ? இருக்கச் சான்ஸ் இல்லை.ம்ம்ம்ம்........ ஐய்யோ ...நம்ம வீட்டுக்குள்ளே இருந்துதான் கேக்குது. குழந்தை முழிச்சுக்கிச்சுப் போல இருக்கே.


படுக்கையை விட்டு எந்திரிக்கவே முடியலை. கஷ்டப்பட்டு எழுந்து நின்னா...... காலெல்லாம் பின்னுது.ஒரு அடி எடுத்து வைக்கவும் முடியலை. அழுகைச் சத்தம் பலமாக் கேக்குது. கண்ணைத் திறந்தா ஒரே எரிச்சல். அரைக்கண்ணுலே பார்க்கறேன். இவர் நல்லா தூங்கிக்கிட்டு இருக்கார். பாவம். பகலெல்லாம் வேலைக்குப் போயிட்டு வந்து தூங்கற மனுஷனைப் பார்த்தாலும் பாவமாத்தான் இருக்கு.


விளக்குப் போட்டால் எங்கே தூக்கம் கலைஞ்சிருமோன்னுட்டு இருட்டுலேயே தடவித்தடவி குழந்தை இருக்கற அறைக்குப் போறேன். நல்ல வேளை, தெருவிளக்கு ஜன்னல்வழியா அந்த அறைக்குள்ளே வருது. கட்டிலில் இருக்கற குழந்தை இன்னும் சத்தமா அழறான். விளக்கைப் போடாட்டி, சீக்கிரம் அமைதியாயிருவான்னு நினைச்சேன்.


" ஏண்டா.... அதுக்குள்ளே முழிச்சுக்கிட்டு இப்படி அழறே? பசியா? ம்ம்ம்ம்ம்ம்ம்ம் " இருக்காதே.பால் கொடுத்து இன்னும் ரெண்டு மணி நேரம் கூட ஆவலையே.... மெதுவாக் குழந்தையைத் தூக்குனேன்.ஈரம் பண்ணி இருக்கான். அங்கேயே ஒரு ஓரமாக் கட்டிலில் உக்கார்ந்து, தெருவிளக்கு வெளிச்சத்துலேயே நாப்கினை மாத்துனேன். மடியிலே போட்டுக் கொஞ்சம் நேரம் ஆட்டுனா அப்படியே தூங்கிருவான்.


குழந்தையைத் தட்டிக் கொடுக்கறேன். 'ஷ்...ஷ்...ஷ்... அழாதேடா.... அம்மா இங்கதான் இருக்கேன். உன் மேலே அம்மாவுக்குப் பிரியம் ஜாஸ்தி. ம்ம்ம்ம்ம்.... தூங்கு... தூங்கு....... 'ஐய்யோ கண்ணெல்லாம் இப்படித் தீ மாதிரிஎரியுதே.... தூக்கம் தூக்கமா வருதுடா அம்மாவுக்கு.... நீ தூங்கு செல்லம்......


குழந்தையோட அழுகை நிக்கவே இல்லை. எதுக்குத்தான் இப்படி கத்துதுன்னு தெரியலை. சத்தம் என் மண்டைக்குள்ளெ குடைஞ்சு ஏறுது. ஏய்... இப்ப நீ எதுக்குடா அழறே....? என்ன கேடு காலம்? அதெல்லாம் பால் குடிச்சாச்சு. இல்லே...


இருட்டுக்குள்ளெ அழற குழந்தையைத் தூக்கி வச்சுக்கிட்டு உலாத்தறேன். இதுதான் இனிமே வாழ்க்கையா? தினம்தினம் இதே கதையாப் போச்சே...... எனக்கு மட்டும் ஏன் இப்படி? இந்தக் குழந்தை எதுக்கு இப்படிவீறிட்டு அழுகுது? ஐய்யோ.....


" ஏய்... உனக்குப் பசியாடா? இப்பத்தானே முழுங்குனே.... சனியனே.... தூங்கப் போறியா இல்லையா? கோவத்தைக் கிளப்பாதே.... தூங்கித்தொலையேன்..... எனக்குத் தூக்கம் தூக்கமா வருது. தூங்கு தூங்கு.....எதுக்கு இப்படி என் குரல் கடுமையா ஆயிக்கிட்டே போகுது? சாந்தமாப் பேசுனா குழந்தை தூங்கிருவான்....ம்ம்ம்ம்....உனக்கு இப்ப என்ன வேணும்? தூங்கு... தூங்கு....இப்பக் குழந்தை விக்கி விக்கி அழுது. சனியன்,ராத்திரியெல்லாம் இதுகூட ஒரே போர். இப்படின்னு தெரிஞ்சிருந்தா.... குழந்தை பெத்துக்கிட்டு இருக்க மாட்டேன்.


ச்சீ... தூங்கு. நடுச்சாமத்துலே எதுக்கு இப்படிக்கத்தறே .... ஊரையே தூக்கிட்டுப் போறமாதிரி.... வாயை மூடறயா இல்லையா...... குழந்தையோட ரெண்டு தோளையும் புடிச்சுக்கிட்டு உலுக்கு உலுக்குன்னு உலுக்கறேன். நிறுத்து அழுகையை நிறுத்து ...... கோபம் கண்ணை மட்டுமென்ன மனசையும் மறைக்குது. பிசாசு... தூங்காமஇப்படி உயிரை வாங்குது..... 'தட்' என்ன சத்தம்?


ஐய்யோ.... நான் என்ன செஞ்சுருக்கேன்? கட்டிலிலே குழந்தையைவீசி எறிஞ்சுருக்கேன். ஒரு நொடி சத்தமே இல்லை. சைலண்ட்டா இருக்கு. குழந்தையைத் தொட்டுப் பாக்கறேன்.ஆடாம அப்படியே கிடக்குறான். தூக்கறேன்... தலை சரியுது. ஆஆஆஆஆஆஆஆஆஆஅ இப்ப சத்தம் போட்டுக்கூவி அழறது யாரு? நாந்தான்....... ஐய்யோ பிள்ளையை என்ன செஞ்சுட்டேன்........அம்மான்னா அன்பா இருக்க வேணாமா?


என் கண்ணுலே ஆறாப் பெருகுது கண்ணீர். படிச்சுக்கிட்டு இருந்த புத்தகம் கை நழுவி விழுந்துச்சு. திரும்பிப் பார்த்த இவர், 'என்னத்தைப் படிச்சுட்டு இப்படி அழறே?'ன்றார்.


பழைய புத்தகக் கடையிலே போய் துருவித்துருவிப் பொருக்கறப் பழக்கம் எப்ப ஓயுமோ தெரியலை. '100 நியூஸிஅனுபவங்கள்'. ஒரு சமயம் ஆயிரக்கணக்கான அனுபவங்கள் 'ஹ்யூமன் டெவெலப்மெண்ட் கோர்ஸ்'க்காக சேகரிச்சதாம். அப்ப அதுலே கலந்துக்கிட்ட ஆளுங்க எழுதிக் குவிச்சிருக்காங்க. அதுலே இருந்து ஒரு நூறு அனுபவங்களைப் புத்தகமாப் போட்டுருக்காங்க. 21 வருசப் பழசு இந்தப் புத்தகம். அப்பெல்லாம் இந்த 'ப்ளொக்' இல்லையே(-: இருந்திருந்தா....?அவுங்கவுங்க பதிவுகளாப் போட்டுருப்பாங்க இல்லையா?


பெரிய பெரிய எழுத்தாளர்கள்ன்னு சொல்றவங்க எழுதற புத்தகங்களைப் படிக்க எனக்கு எப்பவுமே ஆர்வம் கிடையாது.அதுலெயும் நிறையப் பேர் புகழ்ந்தாங்கன்னா.... எனக்கு அந்தப் புத்தகம் மேலெ இருக்கற கொஞ்சநஞ்சப் பிடிப்பும் விட்டுப் போயிரும். நான் தேடித்தேடி எடுத்துப் படிக்கிறதுகள் எல்லாம் அவ்வளவா 'வெளிச்சம் பார்க்காத' புத்தகங்கள்தான்.சாதாரண ஜனங்கள் எழுதுனது.


போஸ்ட்நேடல் டிப்ரஷன் இவ்வளவு கடுமையானதா? வீசி எறிஞ்ச குழந்தையையே மனசு சுத்திச்சுத்தி வந்துச்சு.'ஓ மை காட்' அப்ப இந்தப் பசங்களுக்கும் முடிவு இப்படித்தான் வந்துச்சோ?


போனமாசம், இங்கே ரெட்டைப் பிள்ளைங்க ரெண்டு பேர் இறந்துட்டாங்க. வயசு? வெறும் மூணே மாசம். மண்டையிலே பலமான அடியாம். அடிபட்டு அஞ்சுநாள் கழிச்சுத்தான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க. ஒரு குழந்தைக்குத் தொடை எலும்புகூட உடைஞ்சிருந்துச்சாம். கடவுளே...... நினைச்சுப் பார்க்க முடியலை.


இன்னும் யாரையும் கைது செய்யலை. அந்தக்குடும்பம் வாயைத் திறக்கவே இல்லையாம். இன்னும் இன்வெஸ்டிகேஷன் நடந்துக்கிட்டு இருக்கு. நேத்துதான்..... குழந்தைகளோட பெரியம்மாங்க ரெண்டு பேர் டிவியிலே சில விஷயங்களைச் சொன்னாங்க. தினமும் டிவியிலே இந்தக் கொலையைப் பத்துன செய்திகள் வந்துக்கிட்டே இருக்கு. முடிச்சுகள் மெல்ல மெல்ல ஒவ்வொண்ணா அவுந்துக்கிட்டு இருக்கு.

இங்கே பாருங்க.


ஒருவேளை ஏழ்மை நிலை காரணம் இப்படி அலட்சியமா இருந்துட்டாங்களொன்னு நினைச்சேன். டிவியிலேஅதையும் சொல்லிட்டாங்க. வாரம் ரெண்டாயிரம் டாலர்கள் அரசாங்க உதவி கிடைக்குதாம் இந்தக் குடும்பத்துக்கு.எல்லாம் நம்மோட வரிப் பணம்தான். டிவியிலே சொன்னதுதான்.


இங்கே சாதாரண வேலை செய்யற ஒரு ஆளுக்குச் சம்பளம் எவ்வளவு தெரியுமா? மணிக்குப் பத்து டாலர்.வாரம் 40 மணி நேர வேலை. அப்ப வாரம் 400. அதுலே வரியாகப் பிடிச்சுக்கறது 80. கைக்குக் கிடைக்கும்காசு 320 டாலர்கள். இது உடல் உழைப்பு செய்யறவனுக்கு.


இப்பக் கணக்குப் போட்டுப் பாருங்க, ஒரு வேலையும் செய்யாம அரசாங்க உதவிப்பணம் வாங்கிச் செலவு செஞ்சுக்கிட்டு இருந்துட்டு, பிள்ளைகளை என்ன செஞ்சிருக்காங்கன்னு.


மனசே சரியில்லைங்க. மனுஷங்க ஏங்க இப்படி....?

Saturday, July 22, 2006

எவ்ரிடே மனிதர்கள் -10 ரெட்டி

வேற வீடு பார்க்கணும்...

சரிசரி. ரெட்டி கிட்டே கேக்கலாம்

பண்ணைக்குப் போய் ஆடு வெட்டிக்கிட்டு வரலாமா?

சரிசரி. ரெட்டி கிட்டே கேக்கலாம்

ஃப்ரீஸர் வேலை செய்யலையேங்க.....

சரிசரி. ரெட்டி கிட்டே கேக்கலாம்

ஒரு கார் கொஞ்சம் மலிவா வாங்கணுமே....

சரிசரி. ரெட்டி கிட்டே கேக்கலாம்

இப்படி ஆன்னா ஊன்னா எல்லாத்துக்கும் ரெட்டிகிட்டேதான் கேட்டுக்கிட்டு இருந்தாங்க, கேட்டுக்கிட்டு இருந்தோம்.

தாடி, மீசைன்னு முரட்டுத்தனமான தோற்றம். சாலிட்டா இருப்பார். சுருட்டை முடி. அதுலே எப்பவும் ஒரு தொப்பி.அழகான ரெண்டு பெண் குழந்தைகள். அதுலே ஒன்னு அம்மாவைப்போல. அம்மா வேறு இனம். அப்பா இந்தியர்.ச்சின்னப்பொண்ணு இந்தியச்
சாயல். நான் முதல்முதல்லே சந்திச்சப்ப எட்டும், ஆறும் வயசு. மனைவி இங்கே நர்ஸ் வேலை செய்யறாங்க. இவர்? ஸ்டூடண்ட்! வக்கீலுக்குப் படிக்கிறார். படிக்கிறார் படிக்கிறார் படிச்சுக்கிட்டே இருக்கிறார்.


இங்கே ஸ்டூடண்ட் விசாவுலே வர்றவங்க கல்யாணம் ஆனவங்களா இருந்தா மனைவி, குழந்தையைக் கொண்டுவரலாமுன்னு இருக்கு. அதைப் பயன்படுத்தித்தான் நர்ஸா இருந்த மனைவியையும், குழந்தைகளையும் கொண்டு வந்திருந்தார்.


அப்ப ( அப்பன்னா ஒரு 20 வருசத்துக்கு முந்தி) நிறைய இந்திய மாணவர்களுக்கு பிஜி அரசாங்கம் ஸ்காலர்ஷிப் கொடுத்து இங்கே படிக்க அனுப்பிக்கிட்டு இருந்துச்சு. அப்படி வந்த ச்சின்னவயசுப் பையன்களுக்கு இவர்தான்'குரு'. குடும்பஸ்தர். தனியா இருக்கற 17, 18 வயசுப்பசங்க தங்கள் குடும்பத்தைப் பிரிஞ்சு இருக்கற சோகத்தை இவர் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் இருக்கறதுலே ஓரளவு மறந்துருவாங்க. எதோ பெரியப்பா சித்தப்பா, அண்ணன் வீட்டுக்கு வந்தமாதிரி ஒரு உணர்வுதான்.


நாங்க இங்கே வர்றதுக்கு முன்னாலே எங்க இவர் மட்டும் தனியா ஒருதடவை இங்கத்து நிலமையைக் கண்டுக்கிட்டுப் போகலாமுன்னு வந்திருந்தார். அப்ப தற்செயலா 'மேற்படிக் கூட்டத்து' மாணவர் சிலரை ஒரு கடையிலே சந்திச்சாராம்.நாந்தான் பலசரக்கு சாமான் லிஸ்டைக் கொடுத்து, அதெல்லாம் கிடைக்குதான்னு பார்த்துட்டு வரச் சொல்லி இருந்தேனே.நமக்கு வேண்டியது ஒண்ணுமே இல்லேன்னா, வந்துட்டு வெறுங்காசை வச்சுக்கிட்டு என்ன செய்ய?


இந்த மாணவர்கள் இவரை நேரா 'குரு'கிட்டேக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. இவர் திரும்பி வந்தவுடன், ரெட்டியைப் பத்திச் சொன்னதைக் கேட்டவுடன் எனக்குப் பலாப்பழம் ஞாபகம் வந்தது. பார்க்கக் கடினம். ஆனால் நல்ல சிநேகமான மனசு.அப்புறம் நேரில் சந்திச்சது ஏர்ப்போர்ட்டில் வச்சு. நாங்கள் வந்து இறங்கறோம், வரவேற்கக் காத்திருந்தது ஒரு ஏழெட்டுப் பேர் கொண்ட மாணவர் கூட்டம். நடுநாயகமா நம்ம ரெட்டி. 'டக்'னு தெரிஞ்சு போச்சு இவர்தான் அவர்ன்னு!


இந்த ஆன்னா ஊன்னா கூட்டத்துலே ஐக்கியம் ஆயிட்டோம். நமக்கும் ரெட்டி இல்லைன்னா ஒரு வேலையும் நடக்காதுன்னு ஆயிருச்சு. நம்முடைய வெல் விஷர்.' நல்ல கார்'தான். வாங்கிரலா'முன்னு சொன்னா அதுக்கு அப்பீலே இல்லை.இப்படித்தான் எனக்கு ஒரு கார் வாங்க உதவி செஞ்சார். அதோடு நான் பட்ட பாடு.... அப்பப்பா.... தனியா ஒரு புத்தகமேபோட்டுறலாம்:-))))


அவருக்கு எல்லாப் பொருட்களைப் பத்தியும் விவரமாத் தெரிஞ்சிருக்குமுன்னு, நாங்க கண்ணை மூடிக்கிட்டு அவரை நம்பிக்கிட்டு இருந்தோம்.


ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்கத்துலே இருக்கற பண்ணைகளிலே போய் காய்கறிகள் வாங்கிவருவோம். அப்பெல்லாம் சனிக்கிழமை அரைநாள் மட்டுமே கடைகண்ணிகள். பகல் ஒரு மணிக்கப்புறம் தெருவே 'ஜிலோ'ன்னு இருக்கும்.மறுநாளும் இப்படியே அதே 'ஜிலோ'. 44 மணிநேரம் போயித் திங்கள் வந்தால்தான் கடைத்திறப்பு. பண்ணையிலே இருந்து வர்ற வழியிலே அப்படியே ரெட்டி வீட்டுக்கும் ஒரு விஸிட். அப்புறம் இதுவே வாலாயமாப் போச்சு.


எப்பப் போனாலும் வாயில் சிகெரெட்டோட டிவி முன்னாலே தனியா உக்கார்ந்து இருப்பார். சிலநாள் சமையல் நடந்துக்கிட்டு இருக்கும். குழம்பு வாசனை தெருவரைக்கும் மணக்கும். என்ன மசாலா போடறாங்கன்னு நினைப்பேன்.


பெரியமகள், நம்மைப் பார்த்ததும் டீ போட்டுக்கிட்டு வந்து வைக்கும். வெள்ளைக்கார டீ. சக்கரை தனியா, பால் தனியா, டீ டிகாஷன் தனியான்னு. இங்கெல்லாம் டீ போடறதா இருந்தா வெள்ளைக்கார நண்பர்கள் வந்தா நம்ம வீட்டுலேயும் இப்படித்தான். ஆனா நம்மாட்கள் வந்தா 'ஹிந்துஸ்த்தானீ ச்சாயா'!!!


கேக்கறதும் இப்படித்தான், "கோரா( வெள்ளைக்காரர்) டீயா? ஹிந்துஸ்த்தானி டீயா? ":-))))


பெரியமகள் சத்தமாப் பேசி நாங்க கேட்டதே இல்லை. ரொம்ப பயந்த சுபாவம். அப்பாகிட்டே பேசுதான்னே தெரியாது.


வீட்டுப் பின்பக்கம் எல்லாம் வாஷிங் மெஷின்கள் கிடக்கும். ட்ரைவேயில் எப்போதும் ரெண்டு மூணு கார்கள்.ரிப்பேர் செஞ்சு விக்கறாராம். இதுலேயே கிடந்தால் எப்பப் படிப்பாராம்? படிக்கிற லட்சணமொண்ணும் தெரியலை.
நாள் போகப்போக அங்கே எதோ சரியில்லைன்ற உணர்வு வந்துக்கிட்டு இருந்துச்சு. அம்மா எங்கே என்று கேட்டால்வேலைக்குப் போயிருப்பதாக பதில் வரும். வார இறுதியில் வேலைக்குப் போனால் சம்பளம் கொஞ்சம் கூடுதலா வருமே!


ஒருநாள் திடீர்ன்னு வீட்டை விக்கப்போறதாச் சொன்னார். வித்துட்டு? ஒரு டெய்ரி வாங்கப் போறாராம். அதுகூடவே வீடும் இருக்கும். கடையைப் பார்த்துக்கிட்டா வருமானம் வருமே! வீட்டுக்கு வீடும் ஆச்சு.


இபெல்லாம் வாரம் ஒருதடவை ரெட்டியோட கடைக்கு விஸிட். தேவை இல்லைன்னாலும், ஒரு பிஸ்கெட் பாக்கெட்டாவது வாங்குவோம். பிஸினெஸ் நடக்கட்டுமேன்னு.


ஒரு மூணுமாசம் இப்படியே போச்சு. என்னவோ வேலைகளில் ரெண்டு மூணுவாரம் தொடர்ந்து எங்களால் போக முடியலை. ஆனா நியூஸ் வந்துருச்சு.


ரெட்டி இந்தக் கடையை வித்துட்டார். ஓ அப்படியா? இப்ப என்ன செய்யப் போறாராம்?


ஒருநாள் அவரோட மனைவியைத் தற்செயலா ஒரு சூப்பர் மார்கெட்டில் சந்திச்சேன். எப்படி இருக்காங்க,இப்ப என்ன செய்யறாருன்னு கேட்டப்ப வந்த பதில் 'யாருக்குத் தெரியும்? அவர் எங்களையெல்லாம் விட்டுட்டு ஆஸ்தராலியா போயிட்டார்'


"ஓஓஓஓ... அப்ப நீங்க எப்ப அங்கே மாறப்போறீங்க? "


"நாங்க இங்கே தான் இருப்போம்"


"அப்ப அவர் அங்கே தனியா இருக்காரா? படிக்கப்போயிருக்காரா, இல்லே வேலை எதாவது....."


" இன்னொரு பொம்பளையோட நாட்டை விட்டுப் போயிட்டார். அவுங்களுக்கு 3 பிள்ளைங்கஇருக்காங்க. குடும்பத்தோட ஜாலியாத்தான் இருப்பார்"


"நிஜமா? ரெட்டியா அப்படிச் செஞ்சார்? "


" ஆமாம். எல்லாத்தையும் வித்துட்டு எங்களுக்கு ஒண்ணுமே கொடுக்காம போயிட்டார்"


எங்களுக்கும் தெரியும், இதுவரை வீட்டுச் செலவு, வீடு வாங்கிய செலவுன்னு எல்லாத்துக்கும் அவரோட மனைவியோட பேங்க் பேலன்ஸ்தான் உதவியா இருந்துச்சு.


இதையே வேற யாராவது சொல்லி இருந்தா நம்பி இருக்க மாட்டோம். சொன்னது அவரோட மனைவின்றதாலே நம்பும்படியா ஆச்சு. கொஞ்ச நாளைக்கு அப்புறம் இந்த மாணவர் கூட்டத்துலே சிலரைச் சந்திச்சோம். நடந்ததுஉண்மையா? அவருக்குச் 'சின்னவீடு' இருந்ததா? ன்னு கேட்டால் பசங்க சிரிக்கிறானுங்க. எல்லாம் ஏற்கெனவேதெரியுமாம். குருவாச்சேன்னு வாயைத் திறக்காமல் இருந்தாங்களாம்.


அடப்பாவிங்களா? முதல்லேயே அவர் மனைவிகிட்டேயாவது சொல்லி இருந்தால் அவுங்க முழிச்சுக்கிட்டு இருந்திருப்பாங்க. இல்லையா?


மெளனமாகத் தலைகுனிஞ்சுக்கிட்டு இருந்தாங்க பசங்க.


எப்படிங்க...........எப்படி இதெல்லாம்?


ரொம்ப நல்லவங்கன்னு நாம் நம்பி இருக்கறவங்க இப்படிச் செஞ்சுட்டுப் போயிட்டதுலே எங்களுக்கெல்லாம் பயங்கர ஷாக்.


எங்களுக்கே இப்படின்னா, அவரோட மனைவி, குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்? இத்தனைக்கும், அந்தம்மா அவுங்களோட மொத்த சேவிங்ஸ், இதுக்கு முந்தி அவுங்க நாட்டுலே அரசாங்க வேலையில் இருந்தப்ப கிடைச்ச பிராவிடண்ட் ஃபண்ட் அது இதுன்னு எல்லாத்தையும் இங்கே மாத்திக் கொண்டு வந்திருந்தாங்க. எல்லாத்தையும்தான் இவர்கிட்டே இழந்துட்டு நிக்கிறாங்களே.


அப்ப 18 வருஷத் தாம்பத்தியத்துக்கு அர்த்தமே இல்லையா? கணவனை எதுவரை நம்பலாமுன்றதுக்கும் கணக்கு இருக்கா என்ன?


போனவாரம், அவர் மனைவி(???) வீட்டுக்கு வந்திருந்தாங்க. பிள்ளைகள் இப்போ படிச்சு முடிச்சுட்டு வேலை செய்யறாங்களாம், அதே ஆஸ்தராலியாவில். ரெண்டு பேருமே கல்யாணம் செஞ்சுக்கப் பயப்படறாங்களாம்.


'அப்பா மாதிரி ஆயிட்டா?'


என்ன மாதிரி பயத்தை பசங்க மனசுலே விதைச்சுட்டார் பாருங்க.


உலகத்துலே எல்லாருமேவா இப்படி இருப்பாங்க. லட்சத்துலே ஒண்ணுன்னு சொல்லலாமா?


'போன கஷ்டம் போச்சு. இனி எல்லாம் சுபம்'னு பொண்ணுங்க கிட்டே சொல்லுங்கன்னு சொல்லி அனுப்புனேன்.


மனோ தைரியம்தானே வாழ்க்கை. இல்லீங்களா?
----------


அடுத்தவாரம் : பானு அண்ணி
------------


நன்றி: தமிழோவியம்

Friday, July 21, 2006

மதுரையில் கோமா

இதுவரைக்கும் மதுரையிலே 4 கோமா வுழுந்துருச்சு. ஆனா இதுக்கெல்லாம் காரணம் யாருன்னு 24 மணிநேர காமெடி நிகழ்ச்சி நடத்துற கேபிள் டிவி பசங்க கண்டு பிடிச்சிட்டாங்க.


இப்படி விழுந்தவங்க எல்லாம் யாராம்? கந்துவட்டி, மீட்டர் வட்டின்னு வட்டிக்கு விட்டு ஏழைகளைக் கசக்கிப் பிழிஞ்ச ஆளுங்கதான்.


விவசாயிகளுடைய கடன் தொல்லை, எப்படி எலிக்கறி வரைக் கொண்டு போச்சுன்னு சொல்றாங்க.


கேபிள் டிவிங்க எப்படி மக்களை வளைச்சுப் போட்டுருக்கு, இந்த நிகழ்ச்சி நடத்துறவங்க எப்படி ஷூட் செய்யறாங்க, மெகா சீரியல்கள் எடுக்கப்படும் விதம்னு பல காட்சிகள் உண்மையைச் சொல்லுது.


செல்லால் வரும் தொல்லகள் வேற சொல்லபடுது. அதென்னங்க ஆளாளுக்கு நாலு செல்லு?


பாட்டுங்க படு நீளம். நல்ல கருத்துக்கள் உள்ள பாட்டுக்கள்தான், இல்லேன்னு சொல்லலை.ஆனால்..... நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமா வரும்போது கொஞ்சம் சலிப்பாத்தான் இருக்கு.


கொஞ்சம் பிரச்சார நெடிவேற அடிக்குது.

நம்ம என்.எஸ்.கிருஷ்ணன் இருந்தாரே, அவரோட பேரனும், சுருளிராஜனோட பேரனும் நடிச்சிருக்கறதா(???)அட்டையிலே இருக்கு. என்.எஸ்.கே. பேரன் தெரியுது. ஆனா சு.ரா.பே. யாருன்னு தெரியலை( க்கும்...ரொம்ப முக்கியம்)நாகரீகக்கோமாளி கேபிள் டிவியிலே 4 பசங்க வேலை செய்யறாங்க அதுலெ யாராவேணா இருந்துட்டுப் போட்டும்.

அப்படியே அந்தக் கவர் அட்டையை உத்துப் பார்த்தா நமக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தர்கூட படத்துலே நடிக்கிறாங்கன்னு புரிஞ்சது. அந்தப் புள்ளி 'பரவை'தான்! படம் பூராவும் மதுரையிலே எடுத்திருக்காங்க.


நல்ல படம். கருத்து இருக்கு. ஆனா ஓடுமான்னு கேட்டா 'ம்ம்ஹூஊஊஊஊஊம்'ன்னுதான் சொல்லணும்.நாலு ஃபைட், 4 பாட்டு (அதுவும் எதோ ஒரு '......லாந்து'லேயோ, லெபனான்லேயோ இருக்கணும்) கனவுசீன்னு சொல்லிக்கிட்டுப் படு கவர்ச்சியா( முக்காவாசி அவுத்துப் போட்டுட்டு) இருக்கணும்,நாயகி 'மாடர்ன் ட்ரெஸ்'தான் போட்டுக்கணும் இந்த ஃபார்முலா ஒண்ணுமே இல்லாம இருந்தா...... .....? படம் பூரா புடவைதான்.ச்சீச்சீ........தலை அலங்காரமாவது நல்லா இருக்கா? அதுவும் வெறும் ஒத்தைச் சடைதான்.

கதாநாயகனை அடிச்சுப் போட்டா, அந்த ஆளு திருப்பிக் கையை ஓங்காம, அடி வாங்கிக்கிட்டு மயங்கி விழறார்.இப்ப நீங்களே சொல்லுங்க, இந்த மாதிரிப் படம் ஓடுமா ஓடாதா?


படத்தோட பேர் 'நாகரீகக் கோமாளி'

இயக்கம், இசை எல்லாம் யாருன்னு கேக்கப்போறவங்களுக்காக........

கதை, திரைக்கதை, வசனம், இசை இயக்கம் ராம்ஜி S. பாலன்

Wednesday, July 19, 2006

நியூஸிலாந்து பகுதி 52

மராய் MARAE


நான் முந்தியே சொன்ன மாதிரி 'மராய்'ங்கறது ஒரு மீட்டிங் ப்ளேஸ். இது மவோரிகளுக்கு மட்டுமில்லாமல் மற்ற இனமக்களும் இவுங்களைச் சந்திக்கறதுக்கு இருக்கற இடமுன்னு வேணா வச்சுக்கலாம்.


இவுங்களோட கலாச்சாரத்தைப் புரிஞ்சுக்கறதுக்கு இப்படி ஒரு இடத்துக்குப் போனா, நமக்கே ஒருதெளிவு பிறக்கும். மவோரிகளும் இதைப் புரிஞ்சுக்கிட்டு, வெளியாட்களை வரவேற்கறதுக்கு ரொம்ப ஆர்வம் காட்டுறாங்க.
எந்த இடத்துக்கும் போறதுக்கு முன்னாலே அங்கெ இருக்கற நிலமை, அங்கே அனுஷ்டிக்க வேண்டிய முறைகள், நியமம் எல்லாம் ஓரளவாவது தெரிஞ்சுக்கிட்டுப் போறதுதான் நல்லது. தேவையில்லாமவர்ற கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கலாம் இல்லையா?


அங்கேபோய் ஒண்ணுகிடக்க ஒண்ணு சொல்லி, நம்மாலேதான் வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியாதே(-:எதுக்கு வம்பு?


மவோரிகளைப் பொறுத்தமட்டில் மராய் ஒரு புனிதமான இடம். இங்கே அவுங்களோட முன்னோர்கள் இன்னும் அரூபமாக இருப்பதா நம்புறாங்க. இங்கேதான் அவுங்களுக்கு ஏகப்பட்ட நிம்மதியும், சொந்த வீட்டுலே இருக்கற நினைப்பும் வருதுன்னு பல மவோரிகள் சொல்றாங்க. என்னதான் வெளி நாட்டுலே இருந்தாலும், ஊருக்கு வரும்போது இந்திய மண்ணைத் தொட்டதும் நம்மை அறியாமலேயே மனசுக்குள்ளே ஒரு பெருமிதம் நமக்கு வருது பாருங்க அதே உணர்வு.


என்ன விசேஷமா இருந்தாலும் சரி, பிறந்த நாள், கல்யாணம், ச்சும்மா பழைய சொந்தங்களையெல்லாம் கூட்டிவச்சுப்பேசறதுன்னு எதுக்கெடுத்தாலும் இந்த இடம் அவுங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை, தன்னுணர்வைத் தருமாம்.அவுங்க தெய்வங்களைக் கும்பிடறதுக்கு, அவுங்க இனத்துலெ இறந்தவங்க உடலை வச்சு துக்கம் அனுஷ்டிக்க,இல்லேன்னா செத்துப்போன சொந்தங்களை நினைச்சு அழன்னு எதுக்கும் இவுங்களுக்கு இருக்கற இடம்தான் இது.


இங்கே போய் ஒரு நாள் தங்கி வரலாமுன்னு முடிவு பண்ணி அங்கே போனோமுன்னு வையுங்க. என்னென்ன நடக்கும்?


முதலில் ஒரு குழு நம்மை அங்கே வரவேற்பாங்க. குழுன்னு சொன்னதும் மராய்க்கு ஒரு தலைவர் இருப்பாருன்னு நினைப்போம். அதுதான் இல்லை. ஏன்னா இது அவுங்க இடம். எல்லாருக்குமே இதுலே பங்கு. தலைமையா இருந்து அதிகாரம் செஞ்சுக்கிட்டு இருக்காம எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்யறதுலே எல்லாருக்கும் பங்கு.


நீங்க அங்கே இருக்கும்போது இன்னொரு விஸிட்டர் வந்தாங்கன்னா, நீங்களும் வரவேற்புக் குழுவிலே இருப்பீங்க.


குழந்தைகள் ஒரே ஒரு இடத்தை விட்டுட்டு எல்லா இடங்களிலும் போய் விளையடலாம், பார்க்கலாம். அந்த ஒரு இடம் என்னன்னா விஸிட்டர்களை வரவேற்கும் முற்றம். இந்த மராயில் அந்த சமயத்தில் இருக்கும் பெரியவர்கள் அனைவரும் ஒருஅப்பா அம்மா ஸ்தானத்துலெ இருந்து எல்லாப் பிள்ளைகளையும் கவனிக்கணும்.


பதின்மவயதுப் பிள்ளைகள் பெரியவங்களுக்கு உதவியா இருக்கணும். சப்பாடு பரிமாற, சாப்பாட்டு மேசையை ஒழுங்குபடுத்த, பாத்திரங்களைச் சுத்தம் செய்ய, வேண்டிவந்தால் சமையலில் உதவின்னு எல்லாம் செய்யத் தயாரா இருக்கணும்.


பெரியவர்கள் அடுக்களைப் பொறுப்பு. முக்கியமா தீ அடுப்பில் வேலை, ஹாங்கி தயாரிப்பு. பொதுவா மத்த சுத்தபத்தம்,ஒழுங்கு எல்லாம் கவனிக்கணும்.


இவுங்க இல்லாம வயசான பெரியவங்களும் இருப்பாங்க.( நம்ம தாத்தா பாட்டிங்க போல) இவுங்களுக்கு பழையகதைகள், பழக்க வழக்கங்கள் எல்லாம் அத்துப்படி. விருந்தினர்களை வரவேற்கறதுலே முன்னாலே நிக்கறவங்க இவுங்கதான்.


நாம் போய் முற்றத்துலே நிக்கிறோம். அவுங்க எதிரில் நிக்கிறாங்க. முதலில் நாம் நம்மை அறிமுகப்படுத்திக்கணும்.கை குலுக்கலோ, இல்லை லேசான அணைப்போ ( கட்டிப்புடி வைத்தியம்?) இல்லேன்னா மவோரிகள் முறைப்படிமூக்கோட மூக்கு உரசலோ நடக்கும். நாம் கொண்டு போகும் அன்பளிப்பைக் கொடுக்கணும். இப்பெல்லாம் இது காசு பணமாவே இருக்கு. நாமும் ஒரு குழுவாப் போனோமுன்னா எல்லாருடைய காசையும் சேர்த்து ஒரே சமயத்துலே கொடுக்கணும்.


உள்ளே நுழையும் போது பேச்சு கூடாது. அமைதி. சில மராய்களில் ஆண்களும், சில இடங்களில் பெண்களும் முதலில் காலடி வச்சு உள்ளே போகணும். இது ஒவ்வொரு மராய்களிலும் ஒவ்வொரு மாதிரி. ஆணா, பெண்ணான்னு அவுங்களெ சொல்லுவாங்க.தாத்தாவோ இல்லை பாட்டியோ நம்மளைக் கூட்டிக்கிட்டு உள்ளே போவாங்க.


உள்ளெ போனவுடன், டெ கரங்கா (Te Karanga - The call of Welcome), இதுலே பங்கெடுக்கறவங்க எல்லாருமே பெண்கள்தான். "ஹாரே மாய் ஹாரே மாய் ஹாரே மாய்" . நம்ம கூட வர்ற பாட்டியோ தாத்தாவோ இப்ப இதுக்கு இசப்பாட்டா பதில் சொல்லிருவாங்க.


இப்ப டெ பொஃபிரி( Te Powhiri). இதுவும் வரவேற்புதான். இதுலே அங்கே இருக்கற சகல ஜனங்களும் பங்கெடுப்பாங்க.இதெல்லாம் சாதாரண சமயங்களில் நடக்கும். ஆனால் இதே மரணம் சம்பந்தப்பட்டச் சடங்கு, இறந்தவர்கள் உடல்பார்வைக்கு வச்சுச் செய்யற சடங்கா இருந்தா எல்லார் கையிலேயும் மரத்தின் ஒரு சின்னக்கிளை இருக்கும். இந்தச் செடிகள் துக்கத்தை அறிவிக்கும் அடையாளம்.


பொதுவா மராய்க்குள்ளே வந்துட்டோமுன்னா, முன்னோர்களை நினைச்சு மெளனமா கொஞ்ச நேரம் நிக்கணும்.அதுக்கப்புறம் எல்லாரையும் உக்காரச் சொல்வாங்க. இங்கேயும் வயசுக்குத்தான் முதல் மரியாதை. சின்னவயசு ஆட்கள் தரையில்தான் உக்காரணும்.


சிறப்புப் பேச்சாளர்களா இருக்கறவங்க ச்சின்னதா ஒரு சொற்பொழிவு நடத்துனதுக்கு அப்புறம் விஸிட்டர்கள் சார்புலே ஒருத்தர் நன்றி சொல்லி ஒரு பேச்சுன்னு நடக்கும். கடைசியாப் பேசுனவங்க, நாம் கொடுத்த அன்பளிப்பைத் தரையிலே வைப்பாங்க. மராய் சார்பில் மற்றொருத்தர் அதை அங்கீகரிச்சு எடுத்து வைப்பாங்க, கூடவே ஒரு நன்றி சொல்லும் சிற்றுரை.

ஆச்சு. மறுபடி கை குலுக்கல், மூக்கு உரசுதல் எல்லாம் மீண்டும் ஒருக்கா. இப்ப நாமும் நம்மோட மவோரி மொழி அறிவை எடுத்து விடலாம். இதுக்குள்ளே நாமும் ரெண்டு வார்த்தைகள் படிச்சிருப்போமே.டெனா கோஇ, கிஆ ஓரா ( Tena Koe, Kia Ora)


உள்ளெ அழகான பெரிய ஹால்.மரச்சிற்ப வேலைகள் பிரமாதமாக இருக்கும். சரிவான கூரைகளிலே அழகழகான பாய்கள். பின்னல் வேலைகள் . நடுவிலே இருக்கும் பெரிய தூண் சிற்பவேலையால் ஜொலிக்கும். இது மேற்கூரையைத் தாங்கிப் பிடிச்சிருக்கும். இவுங்களுக்கு வானமே பிதா, பூமியே மாதா என்றதால் ரெண்டையும் இணைக்கும் பாலம்தான் இந்தப் பெரிய தூண்( Pou Tokomanawa)


சாப்பாட்டு ஹாலிலும் உணவு பறிமாறுனதும், மராய் குழுவில் ஒரு மூத்தவர் கடவுளுக்கு நன்றி சொல்வார்.அப்புறம் சாப்பிடலாம். ஆனால் மறந்து போயும் அடுக்களையிலோ, வேற எங்கெயோ, மேஜை மேலே மட்டும்உக்காந்திராதீங்க. இது ரொம்பவும் மரியாதை கெட்ட செயலாக்கும். உணவு வைக்கிற மேசைக்குத் தனி மரியாதை கொடுக்கணும்.


சாப்பாடு ஆச்சுன்னா கொஞ்சநேரம் எல்லாரும் பேசிக்கிட்டு இருந்துட்டுப் படுக்கப் போகணும் இல்லையா? அங்கேயும் சில நியமங்கள் இருக்கு. இந்த ஹாலுக்குப் பேர் டெ ஃபாரெ மொஇ. விசிட்டர்களும், மராய் ஆட்களும் தனித்தனிப் பகுதி.நடுவிலே இருக்கும் கதவுக்கு வலது பக்கம் நாமளும், இடது பக்கம் மராய் ஆட்களும். ரெண்டு பகுதியிலும் கதவுக்குப் பக்கம் இருக்கற படுக்கைகள் முதியவர்களுக்கும், முக்கிய புள்ளிகளுக்கும்.


வரிசையாப் படுக்கைகள். ஒவ்வொருத்தருக்கும் ஒரு தலையணை. நம் பைகள், குளிர்கோட் எல்லாம் படுக்கையின் கால் பக்கத்தில்வைக்கணும்.
முக்கியமாக் கவனிக்க வேண்டியது. படுக்கைமேலே ஏறி யாரும் குதிச்சு விளையாடக் கூடாது.படுத்திருக்கறவங்களை தாண்டித்தாண்டிப் போகக்கூடாது. அடுத்தவங்களுக்கு இடம் விடாம கையைக் காலைப் பரப்பிக்கிட்டு எல்லா இடத்தையும் புடிச்சுக்கக்கூடாது.தலைகாணிமேலே உக்காரக்கூடாது. தலை வைக்கும் இடம் பவித்திரம். அப்படி உக்கார்ந்தா அது ஒரு கெட்ட பழக்கம்.தலையணை தலைக்கு மட்டும்.( இது என்னங்க, இப்படியெல்லாம் எங்க பாட்டி சொல்லிக்கேட்டுருக்கேனே! ஹால்லேவரிசையாப் போட்டுருக்கற படுக்கைகள் மீது நடக்கக்கூடாது.அந்தப் படுக்கையிலே படுக்கறவங்களுக்கு உடம்பெல்லாம் வலிக்கும். அதே போல நோ தலைகாணி ஃபைட்)


குறட்டை விடும் பழக்கம் இருந்தா? என்ன செய்யலாம்? அடடடா.... கவலையே படாதீங்க. தாராளமா நல்லாக் குறட்டை விட்டுத் தூங்கலாம்.


காலையில் எழுந்ததும் முதல் வேலையா படுக்கைகளை ஒழுங்கா சரிப்படுத்திப் போர்வையெல்லாம் நீட்டா மடிச்சு வைக்கணும்.அன்னிக்குக் கிளம்பறீங்கன்னா, பைகளையெல்லாம் ஏறக்கட்டணும்.


சில மாராய்களில் காலையிலும் மாலையிலும் பிரார்த்தனைகள் நடக்கும். கிளம்பறதுக்கு முன்னாலேயும் எல்லாரும் கூடிஇருந்து உங்களுக்கு ஆசீர்வாதம் செஞ்சு வழி அனுப்புவாங்க. வரவேற்புக்கு இருக்கற முக்கியம் வழி அனுப்புறதுக்கும் இருக்கும்.


இதெல்லாம் சாதாரண விஸிட்டுக்கு. இதுவே வேற ஒரு துக்ககரமான சமயமுன்னா?


இதுக்குப் பேர் ட்டாங்கி ( Tangi)


இந்த ட்டாங்கின்னு சொல்றது Tangihanga வோட சுருக்கம்.


ஒருவர் இறந்துட்டார்ன்னா, அவரோட உடலைப் புதைக்கறதுக்கு முன்னாலே செய்யறது. பொதுவா வெள்ளைக்கார நாடுகளிலே இறந்துபோனவுங்க உடலை அடக்கம் செய்யறவரைக்கும் 'அண்டர்டேக்கர்'னு சொல்ற 'ப்யூனரல் டைரக்ட்டர்'கள்உடலைக் காபந்து செஞ்சு வைச்சிருப்பாங்க. மவோரிகள் பழக்கத்துலே இப்படி உடலைத் தனியா விட்டு வைக்கிற பழக்கம் இல்லை.
அதனாலே இவுங்க, உடலை மராய்க்குக் கொண்டுவந்து வைப்பாங்க. அடக்கம் நடக்கும்வரைக்கும் அங்கே குடும்பத்தினரும் நண்பர்களும் இறந்தவர்களோடு இருப்பாங்க. இறந்தவர்கள் உடலை, டுபபாகு ( Tupapaku)ன்னு சொல்றாங்க.சவப்பெட்டியைத் திறந்து வச்சு, உடலைத் தொட்டு அழும் வழக்கம் உண்டு. இப்படிச் செய்யறதாலே இவுங்களொடதுக்கத்தை ஆத்திக்கமுடியுதாம். தொலைதூரத்துலே வசித்தாலும், சாவு சமாச்சாரம் கேட்டா உடனே கிளம்பி வந்துருவாங்க.சவ அடக்கம் முடியும்வரை மூணு நாலுநாள் கூடவே இருக்கறதும் உண்டு.


வந்தவங்க, சொந்தக்காரங்க, இன்னும் நெருங்கிய சொந்தம் எல்லாமே டெ பொஃபிரியிலே பங்கெடுப்பாங்க. ஸ்பீச் கொடுக்கும்போது, இறந்த உடலைப் பார்த்து அவுங்ககிட்டே நேரில் பேசறதும் உண்டு. சவ அடக்கம் ஆறதுவரை உயிர் அங்கேயே உடலுக்குப் பக்கத்துலேயே இருக்குமாம்.( நாம்கூட இதை நம்பறோம் இல்லையா?)


சில ஊர்களில் மாராய்களுக்குப் பக்கத்துலேயே இடுகாடு இருக்கும். இதுக்கு உருபா( Urupa) ன்னு சொல்றாங்க.அங்கே போய் சவ அடக்கம் ஆனதும் அங்கேயே கேட்டுக்கு வெளியே பாத்திரத்துலே நிரப்பி வச்சிருக்கும் தண்ணியிலே கை கழுவிக்கணும். இடுகாடுன்றது ரொம்ப புனிதமான இடம். நம்ம ஊர்லேயும் சவ அடக்கம் முடிஞ்சதும் திரும்பி வர்ற வழியிலே ஆத்தங்கரையிலே முழுக்குப் போட்டுட்டு வர்றது ஒரு வழக்கமா இருக்குல்லையா?


நிறைய விஷயங்களிலே கவனிச்சுப்பார்த்தா, நம்ம இந்தியப் பழக்கங்களுக்கும், மவோரிகள் பழக்கங்களுக்கும்லேசுபாசா ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்யுது.

Sunday, July 16, 2006

நேற்று....

பயங்கரவாதத்துக்கு உதவுகிறது பாகிஸ்தான்: மன்மோகன் சிங்

இலங்கை மோதல் : 17 பேர் பலி

வெளிநாட்டுஊழியருக்கான தீர்வை உயர்கிறது

சில்லறை வர்த்தக்த் துறையை மேம்படுத்தும் கல்வி உபகாரச் சம்பளத்திட்டம்

காரில் கத்தி பழகும் தளபதி

சமயச் செய்திகள்

நொடித்துப்போனவர்களின் எண்ணிக்கை உயர்வு

காசி மாபெரும் தமிழ்-ஆங்கில புத்தகக் கண்காட்சி

தமிழ்மொழிப்பாடக் கருத்தரங்கு

தமிழ் பயிற்சித்தாள்

வலுவான ஆய்வு ஆராய்ச்சித்துறை தேவை

புருணை சுல்தானின் 60வது பிறந்தநாள் விழா

மாணவர் புதிர்ப்போட்டி இறுதிச் சுற்று

சிங்கப்பூர்-தென் கொரியா கடற்துறை காவல் பயிற்சி ( படம்)

ஹாங்காங் தலைமை நிர்வாகி சிங்கப்பூர் வருகை

தங்கள் தனித்துவத்தை உணரவேண்டும்

ஐந்து ஆண்டுகளாக $40 மி. நன்கொடைகள் தேக்கம்

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்

டிக் சென்னி மீது சி.ஐ.ஏ முன்னாள் அதிகாரி வழக்கு

ரகசிய ஆவணங்களை மலேசியா வெளியிட்டது

வட கொரியாவுக்கு எதிராக தீர்மானம்: விட்டுக் கொடுக்க ஜப்பான் விருப்பம்

அதிபர் புஷ் சுவைத்து சாப்பிட்ட உணவு

மின்னலுக்கு சீனாவில் 82 பேர் பலி

கன்னியாகுமரியில் மீண்டும் கடல் சீற்றம்

மாமனாரின் காதைக் கடித்து துப்பிய மருமகள்

பெட்ரோல், டீசல் உயர்வை மாநில அரசு தடுக்கலாம்: விஜயகாந்த்

ஈரோட்டில் மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு பள்ளி செல்லும் பிள்ளைகள் ( படம்)


'ஓசி' பயணம்: ரூபாய் 2 லட்சம் அபராதம் வசூல்


குழந்தைகள் முட்டையை எப்படி சாப்பிட வேண்டும் என ஆசிரியர்கள் பாடம் நடத்தினர் ( படம்)


தொடக்கநிலை 6-க்கான தமிழ்ப் பயிற்சிதாளின் பதில்கள்

உங்கள் அதிர்ஷ்டம்

சிங்கப்பூர் தமிழர் சங்கம்- குண்டலிணி யோகா மையம் நடத்தும் காயகல்ப பயிற்சி( மருந்து அல்ல)


கிராமங்களில் மருத்துவர்கள் 1 ஆண்டு கட்டாயப் பணி மத்திய அமைச்சர் அன்புமணி தகவல்


"ஸ்ரீநகர் குண்டுவெடிப்பு: தீவிரவாதிகள் தலைவனுக்கு வலைவீச்சு"


நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு: கேரள நீர்ப்பாசன அமைச்சர் உறுதி


பீகாரில் மழை, வெள்ளம்: 2 லட்சம் பேர் பாதிப்பு


மிஸ் போபால் அழகிப் போட்டி ( படம்)


துப்பாக்கி தோட்டாக்களுடன் போலிசார் கைது


பெண்கள் மீது கற்பழிப்பு வழக்கு தொடர முடியாது உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு


திருப்பதிக்கு வந்துள்ள மறைமுக ஆபத்துகள் தகவல்கள் ஊர்ஜிதம்

Mayhem in Mumbai

Morgue watchman's long wait

On way to make delivery,18-year-old boy loses both legs

As 15- hour ordeal ends, the pain begins

Sachin keeps veil on his plan to heal Mumbai's blast wounds

victims in hospital ( 2 pictures)

தொலைக்காட்சி ( நிகழ்ச்சி விவரங்கள்)

திரை விமர்சனம்:" இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி"

"வீராசாமி" திரைக்காக டி.ராஜேந்தருடன், மும்தாஜ்.( படம்)

திரை துணுக்குகள்

இன்னொரு பரமக்குடி

நாணயச் செலாவணி

தங்கம் 7.93 கிராம் S $ 277.00 1 கிராம் S $ 35.00

மின் மினி Classified

தீவிர பாதுகாப்புடன் தொடரும் பயணம்

முட்டைகளை வீசியவர் கைது

30 மணி நேரம் பணிபுரிந்த மருத்துவர்கள்

கோவா ரூ. 1 கோடி உதவி

கலவரம் வெடிக்கும் ஆபத்து: முஸ்லீம் தலைவர்கள்

பா.ஜ.க. பிரசாரம்

காலை நேரப் பரபரப்பில் மும்பைவாசிகள் ரயிலில் ( படம்)


மனநேய அமைப்பு உணவு வழங்கும் ( படம்)


ஆமாம், இதெல்லாம் என்ன? அட, ஒண்ணுமில்லீங்க. நேத்து சிங்கை தமிழ் முரசு( Vioce of the Community) சனி 15 7 2006 (50 காசு) பத்திரிக்கையில் வந்த தலைப்புச் செய்திகள்.

எல்லாம் நான் பெற்ற இன்பம் இவ் வலையகமும் பெறட்டும் என்ற நல்லெண்ணம்தான்.


செய்தித்தாள் உபயம்: கோபால்

Saturday, July 15, 2006

எவ்ரிடே மனிதர்கள் 9 -தாமஸ்

புது இடமா இருக்கறதாலே தூக்கம் சரியா வரலை. புரண்டு படுக்கறப்ப எங்கியோ யாரோ பாடற சத்தம்.


கண்ணை அகலமாத் திறந்து பார்க்கறேன். மசமசன்னு லேசா வெளிச்சம்.இருள் இன்னும் சரியா பிரியலை.எழுந்து வந்து ஜன்னல் பக்கம் நின்னேன். கீழே வீட்டோட திறந்த முற்றம் தெரியுது.


தலைப்பாவோட ஒரு உருவம், பாத்திரங்களையெல்லாம் 'பரட்பரட்'டுன்னு தேய்க்குது. அப்பப்ப பாட்டுவேற.ஓஹோ.... அப்ப பாட்டுச்சத்தம் இங்கே இருந்துதான் வருதா?


இன்னும் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்க்கறேன். ரெண்டு வாளி நிறையத் தண்ணீர் வச்சுக்கிட்டுத் தேய்ச்ச பாத்திரங்களை அழகாக் கழுவிக்கிட்டே ' எல்லாம் ஏசுவே, எனெக்கெல்லாம் ஏசுவே'ன்னு விட்டு விட்டுப் பாட்டு வருது.
எல்லாப் பாத்திரங்களையும் ஒரு வாளிக்குள்ளெ அடுக்கி எடுத்துக்கிட்டு உக்கார்ந்த இடத்துலே இருந்து எழுந்தப்பத்தான் கவனிச்சேன், மடிச்சுக் கட்டி இருந்த வேட்டியை.


உள்ளே போனவர், கையில் ஒரு துணி மூட்டையும், இன்னொரு வாளியுமா வர்றார். திரும்ப அதே பாட்டு. கை மட்டும் விறுவிறுன்னு துணிகளை அலசிப்பிழியுது. இடைக்கிடையில் கைப்பம்பில் தண்ணீர் அடிச்சுக்கறார்.
அதுக்கப்புறம், குடங்களை வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு வந்து தண்ணீர் அடிச்சு நிறைக்கறதுக்கும், பளீர்ன்னு பொழுது விடியவும் சரியா இருக்கு.


கீழே இறங்கிவந்தால், சித்தி அடுக்களையில் காஃபிக்குப் பால் காய்ச்சிக்கிட்டு இருக்காங்க. 'அந்த ஆள்' யாருன்னு விசாரிச்சேன்.


குடித்தனக்காரராம். பேர் தாமஸ். வந்து ஏழெட்டு மாசமாகுதாம். தெக்கே (திருநெல்வேலியோ, தூத்துக்குடியோ எங்கேன்னு சரியாத்தெரியலையாம்) இருந்து வந்துருக்காங்களாம். ஒரு குழந்தை இருக்காம். கவர்மெண்ட் உத்தியோகம்தானாம்.


'அதென்ன சித்தி இவ்வளோ காலையிலே குழாயடியிலே உருட்டிக்கிட்டு இருக்காரு'ன்னு கேட்டேன். 'ஐய்யோ அதையேன் கேக்கறே? குடித்தனம் வந்த மறுநாளிலிருந்து இதே கதைதான். நாலு நாலரைக்கெல்லாம் எழுந்துக்கறார். மொதல்லே நானும் சொல்லிப் பார்த்தேன். இப்போ அட்லீஸ்ட் சத்தம்கித்தம் அதிகமாப் போடாமத்தான் வேலை செய்றார். எங்களுக்கும் பழகிப் போச்சு'ன்னாங்க.


சித்தி வீடு கொஞ்சம் பழைய காலத்து வீடு. வாசலுக்கு ரெண்டு பக்கமும் பெரிய திண்ணைகள். பெரிய ஒத்தைக் கதவு.உள்ளே நுழைஞ்சவுடன் ஆளோடி. அங்கே தரையிலேயே இடது பக்கமா ஒரு குழி இருக்கும். அது அந்தக் காலத்துலே நெல் குத்தவாம்.அதும் பக்கத்துலே ஒரு பெரிய உரல் நிக்கும். நானும் நினைப்பேன், நடந்து வரும்போது நம்ம காலு 'மளுக்'னு அந்தக் குழியிலே போகப்போகுதுன்னு. ஆனா இதுவரைக்கும் அப்படி நடந்ததெ இல்லையாம்! அப்புறம் கதவு இல்லாத வாசல்.அதுலே இறங்குனா இடது பக்கம் ஒரு முற்றம். வலது பக்கம் ஒரு ஹால் . முற்றத்தைச் சுத்தி உள் வெராந்தா. நாலு மூலையிலும் அறைகள். இதுலே முன்பக்க அறைகளில் இருக்கும் ஜன்னல், திண்ணையைப் பார்த்த மாதிரி இருக்கும். பின்கட்டில் 2 குளியலறை இன்னும் மத்ததுகள் இருந்துச்சு.


இடதுபக்கம் இருந்த அறைகள் ரெண்டையும் வாடகைக்கு விட்டிருந்தாங்க சித்தி. நான் விவரமெல்லாம் சேகரிச்சுக்கிட்டே காஃபியைக் குடிக்க ஆரம்பிச்சிருந்தேன். அப்ப நம்ம தாமஸ் ஒரு வாளி நிறைய ஆவி பறக்கும் தண்ணீரோடு பின்னாலே இருக்கும் பாத்ரூமுக்குப் போனார். அதை அங்கே வச்சுட்டுத் திரும்ப வந்தவுடன் அவுங்க போர்ஷனிலே இருந்து ஒருபெண் மாத்து உடைகளைக் கையில் எடுத்துக்கிட்டுப் போய் குளிச்சுட்டு வந்தாங்க.


தாமஸ் வீட்டு அடுக்களை ( தட்டி அடிச்சு மறைச்சுருந்த வெராந்தாதான்)யிலே இருந்து பாத்திரங்கள் உருட்டுற சத்தம் கேட்டுக்கிட்டு இருந்துச்சு. அடுத்ததா பக்கெட் சுடுதண்ணியிலே ,இவரே முற்றத்தில் வச்சுக் குழந்தையைக் குளிப்பாட்டுனார். இப்படி பரபரன்னு இவரே ஓடியாடிக்கிட்டு இருந்தார்.


சித்தி வீட்டு ஹாலில் சுவர்க்கடிகாரம் 'டாண்'னு ஒம்போது மணி அடிக்கும்போது வெள்ளையும் சள்ளையுமா டிப்டாப்பாஉடுத்திக்கிட்டு, கையில் ஒரு சின்னப் பையில் டிஃபன் பாக்ஸோடு மனைவி, குழந்தை பின் தொடர வெளியே வந்தார்.குழந்தைக்கு 'டாடா' காமிச்சுட்டுப் படி இறங்கினார்.


அந்தம்மா உள்ளே வந்துட்டாங்க. வாசல் திண்ணையிலே உக்கார்ந்திருந்த என்னப் பார்த்து சிநேகமா ஒரு சிரிப்பு. அது போதாதா?


அப்புறம் அவுங்க கிட்டே பேசலாமுன்னா அவுங்க போர்ஷன் கதவுதான் சாத்தி இருக்கே. மத்தியானம் மறுபடித் திண்ணையிலே உக்கார்ந்து தெருவை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தப்ப அவுங்க ஜன்னல் திறந்து இருந்துச்சு.அதுலே இருந்து ரெண்டு பிஞ்சுக் கைகள் வெளியே நீட்டி இருக்கு. ஹை... பாப்பா. இந்தத் திண்ணையிலே இருந்துஅந்தத் திண்ணைக்கு நான் ஒரே தாவு. குழந்தை ஜன்னல் கம்பியைப் புடிச்சுக்கிட்டு நிக்குது. அம்மா, விளையாட்டு(??)காமிக்கிறாங்க.


என்னப் பத்திக் கேட்டாங்க. இப்படி ஒரு வாரம் சித்தி வீட்டுக்கு விஸிட் வந்துருக்கற கதையை எடுத்து விட்டேன்.சின்னதா சிநேகம் ஆச்சு. நம்ம தாமஸ் இருக்கார் பாருங்க. அவருக்கு அம்மா சின்ன வயசுலேயே இறந்துட்டாங்களாம்.அதுலே இருந்து அவரும் அவரோட அப்பாவும்தான் எல்லா வீட்டு வேலைகளையும் செய்வாங்களாம். அதுக்கப்புறம் இவர் படிச்சு, வேலை கிடைச்சு வந்தபிறகும் கூட இவரே சமையல் செஞ்சு சாப்புட்டுக்கிட்டு இருந்தாராம்.கல்யாணம் ஆகி ரெண்டரை வருசம்தான் ஆகுதாம். கல்யாணத்துக்கப்புறமும் இவர்தான் எல்லா வேலையும் செய்யறாராம். இந்தம்மாவை ஒரு வேலையும் செய்ய விடுறதில்லையாம். சமையல் மொதக்கொண்டு எல்லாம் இவரே.இந்தக்காவும்(அக்கா? இப்ப சிநேகிதியாச்சே!) எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்களாம். ஆனா தன் சமையல்தான் தனக்குப் பிடிக்குதுன்னு சொல்லிட்டாராம். எல்லாவேலையும் தன் கையாலேதான் செய்யணுமாம்.


கல்யாணம் ஆன புதுசுலே ஒண்ணும் செய்யாமச் சும்மா உக்கார்ந்து இருக்கறது இந்தக்காவுக்குப் பைத்தியம் பிடிக்கறமாதிரி இருக்குமாம்.


இப்ப?


அதான் குழந்தை இருக்கே. அதுகூட விளையாடிக்கிட்டு, அதுக்குப் பால், சோறுன்னு ஊட்டிக்கிட்டு நேரம் போயிருதாம்.


சாயங்காலம், இவர் ஆஃபீஸுலே இருந்து திரும்பவந்தவுடன் ராத்திரி சமையல் அது இதுன்னு வீட்டுவேலைகளை எல்லாம் நறுவிசாச் செஞ்சுருவாராம்.


இவரை எப்படி மாத்தறதுன்னே தெரியலைன்னு சொல்லி கண் கலங்குனாங்க. இதுவரை யார் கிட்டேயும் இதைப் பத்திப் பேசுனதே இல்லையாம். 'ரொம்ப நாளா மனசுலே வச்சு மறுகுனதை இப்படிப் பட்டுன்னு உங்கிட்டே சொல்லிட்டேனே'ன்னு சொல்லி அழுதாங்க. நானும் இன்னும் ரெண்டு நாளுலே அங்கிருந்து கிளம்பறவ தானே?


வேலை ஒண்ணும் செய்யாம 'ஜாலி'யா இருக்கறதுக்குப் போய் இந்தக்கா ஏன் இப்படிச் சடைச்சுக்குதுன்னு அப்ப எனக்குப் புரியலை.

இப்ப நினைச்சுப் பார்த்தா ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமான கவலைகள்!


ஆனா, 'எல்லாம் ஏசுவே' பாட்டை எப்பக் கேட்டாலும், எல்.ஆர். ஈஸ்வரி ஞாபகம் வருதோ இல்லையோ,நம்ம தாமஸ் ஞாபகம் உடனே வந்துரும்.


அடுத்தவாரம்: ரெட்டி
-----------


நன்றி: தமிழோவியம்

Friday, July 14, 2006

திட்டம் 1 பகுதி 1

வரவர எதுக்குத்தான் திட்டம் போடணுங்கற விவஸ்தையே இல்லாமப் போச்சு.இப்படித்தான் நான் மொதல்லெ நினைச்சேன், எங்க இவர் சொன்னதைக் கேட்டு.


உண்மையைச் சொல்லணுமுன்னா, முந்தியெல்லாம் நானே எல்லாத்துக்கும் திட்டம் போட்டு, பக்காவா ப்ளான் பண்ணிதான் எதையும் செய்வேன். ஒரு 50 பேருக்குச் சமையலை 'அசால்ட்டா' பண்ணனுமுன்னா ஒரு திட்டம் இருந்தாப் போதும், தனியாளாவே சமாளிச்சுரலாமுன்னு இருந்த ஆள்.


அதே போல எழுதிவச்சுக்கிட்டுச் செஞ்சும் இருக்கேன். என்ன ஒரு நாலு நாள் வேலை.

எங்க இவருக்கு ஆஃபீஸ்லே திட்டம் போட்டுப் போட்டு பழகிருச்சுபோல. இப்ப இப்படிச் சொல்றார்.

மொத்தம் மூணு திட்டம் போட்டுக்கணுமாம்.

முதல் திட்டம், 'வேலையிலே இருந்து ஓய்வு எடுத்துக்கிட்டா என்ன செய்யலாம்?'ங்கறது.

இது என்ன பெரிய கஷ்டம். வேற ஊருக்குப் போயிறலாம். இதைவிடக் குளிர் இல்லாம இருக்கறஇடம் எத்தனை இருக்கு. இது ஒரு கஷ்டமா?

இப்ப இருக்கற ஓட்டம் இல்லாம நிம்மதியா ரெண்டு வேளை வாக்கிங் போனமா, எளிமையான சாப்பாடா ஆக்கித் தின்னமா, அக்கம் பக்கம் கோயில்,குளமுன்னு இருந்தா அதையும் போய்ப் பார்த்தமான்னு நிம்மதியா இருக்கலாம்.


இதெல்லாம் சரிதான். வேலை இல்லைன்றதாலே மாசச் சம்பளமும் வராதுல்லே. அப்ப வருமானத்துக்கு வழி என்ன?

யோசிக்கணும். மொதல்லே எவ்வளவு வேணுங்கறது ஒரு பாயிண்ட்.

குறைக்கக்கூடிய செலவினம், கையேவைக்கமுடியாத செலவினம் எதுஎதுன்னு பார்க்கலாம்.

செலவு செய்தே தீரவேண்டிய கட்டாயங்கள்:

இருப்பிடம்- வீட்டு வாடகை. சரி, இவ்வளவுநாள் குப்பை கொட்டுனதுலே சொந்த வீடு அடிச்சுப்புடிச்சு வாங்கியாச்சுன்னுவச்சுக்குவோம். ஆனால் அதுக்கும் நகரசபைக்கு மாசாமாசம் வரி கட்டணும் இல்லையா.

மின்சாரம், கேஸ் ( குளிர் காலத்துலே கூடுதல் செலவு இருக்கு. வெய்யில் இருக்கற ஊரா இருந்தாலும் கதை இதேதான்ஃபேன், ஏ.சின்னு இருக்குமே)

கார் பெட்ரோல், 6 மாசத்து ஒருதடவை ஃபிட்னெஸ் வாங்குறது, வருஷா வருஷம் ரெஜிஸ்ட்ரேஷன் செலவு.

தொலைபேசி மாசக்கட்டணம். இப்ப இண்ட்டர்நெட் தொடர்பு. இல்லேன்னா எப்படி ப்ளொக் எழுதறதாம்? :-))))


இன்ஷூரன்ஸ். இதுதான் முக்கியமானதுகூட. வீட்டுக்கு, வீட்டுப் பொருட்களுக்கு, காருக்கு, ஹெல்த் ( ஆஸ்பத்திரிச் செலவைச் சமாளிக்கணுமே. வயசாகுதுல்லே? எப்ப என்ன வருமுன்னு யார் கண்டா? )

இன்னும் இந்தப் பகுதியிலே வேற என்ன வருதுன்னு கொஞ்சம் யோசிக்கணும்.


உடை:

இப்ப வேலைக்குப் போகாததாலே அஃபீஷியல் உடைகள் தேவைப்படாது. கேஷூவல் உடைகளே போதும்.இதுலே வேணுமுன்னா கொஞ்சம் செலவைக் குறைக்கலாம்.


உணவு:


இது எப்பவும் போலதான். வெளியே போய் சாப்புடறதை வேணாக் குறைச்சுக்கலாம். இண்டியன் ரெஸ்ட்டாரண்டுக்குன்னு ஒரு செட் மெனு வச்சுக்கிட்டு க்ரீம், முந்திரி அரைச்சுவிட்டுன்னு கொலஸ்ட்ரால் சமாச்சாரமா இருக்கறதைத் தின்னாம விட்டா என்ன குடி முழுகப்போகுது?

உணவுலே இன்னொரு முக்கியமான பிரிவு இருக்கு. இதை மட்டும் 'குரை'க்க முடியாது. அது நம்ம வீட்டுச்செல்லங்களுக்கு வாங்கற மியாவ், வள்வள் சாப்பாட்டு டின்கள். ( இவுங்களுக்கு வருசம் ஒருமுறை செக்கப்,ஊசி போடறது இதுக்கெல்லாம் தனிக் கணக்கு. நம்மளை மாதிரிதானே இதுகளும். வயசாச்சுன்னா மருந்துச் செலவுகொஞ்சம் கூடுதல்தான். அதுக்குன்னு விட்டுறலாமா? விட்டுறத்தான் முடியுமா?)


மத்த வீட்டுச் சாமான்கள் எல்லாம் இந்தப் பலசரக்கு பில்லுலயே சேர்த்துரலாம். சரியா?


இப்பச் சொல்லப்போறது இன்னொரு தனிக் கணக்கு:அதான் ஊருக்குப் போய் வர்றது. சொந்தக் காசுலேதான் போய்வரணும். போறேன்னு அப்படியே கையை வீசிக்கிட்டுப் போயிறமுடியுமா? உறவுகளுக்கு வாங்கிட்டுப் போறது. ஊர்லேயெ இப்ப எல்லாமே கிடைக்குது. விலையும் மலிவு. ஆனாலும்கொஞ்சமாவது கொண்டு போகலைன்னா மரியாதை இல்லையே!

வருசாவருசம் இல்லைன்னாலும் ஒரு ஆபத்து அவசரமுன்னாப் போய்த்தானெ ஆகணும்?

உறவுகள் வீட்டு விசேஷத்துக்குப் போகமுடியலைன்னாலும், ரொம்ப நெருங்கிய சொந்தமுன்னா காசா அனுப்பிஒரு அட்டெண்டன்ஸ் கொடுக்கணும்.

இதெல்லாம் நாம எந்த நிலையில் இருந்தாலும் வேலை/ஓய்வு செய்யவேண்டியது.


கொஞ்சம் அப்படி ஓரமா உக்காந்து பேப்பரும் பேனாவும் எடுத்துக்கிட்டுக் கணக்குப் போட்டு வையுங்க. அப்படியே இதுக்கான வருமானம் எங்கே எப்படி வரப்போகுதுன்னும் பார்த்து வையுங்க.


இந்த முதல் திட்டம்தான் கொஞ்சம் பெருசு. மத்தது ரெண்டும் சின்ன அளவுதான். அதை அப்புறம் பார்க்கலாம்.
-------------------
இந்த 'திட்டம்' பதிவுகளுக்கான ஆலோசனைகளை நண்பர்கள் அவர்களொட 'பாய்ண்ட் ஆஃப் வியூ'லே சொல்லுங்க.சொல்வீங்கதானே?

வித்யா

நம்ம லிவிங்ஸ்மைல் வித்யாதாங்க. இந்த வாரம் அவள் விகடன் கவர் ஸ்டோரியில்
மின்னுறாங்க பாருங்க.

வாழ்த்து(க்)கள் வித்யா.

நல்லா இருங்க.

Thursday, July 13, 2006

என் காதலே

பட விமரிசனம்தான். சி. டி.யைக் கையிலே எடுத்தப்பயே மனசு 'திக் திக்'னு இருந்துச்சு.தமிழ்ப்படமா? இல்லே எதாவது டப்பிங் சமாச்சாரமா? திக்திக் திக்திக் திக்திக்.....


அட்டையிலே யார் படம் இருக்கு? நாஸரைத் தவிர வேற யாரையுமே தெரியாது.ம்ம்ம்ம்ம் அப்படியும் சொல்லமுடியாது, இதோ செந்தில், இளவரசு, ஜனகராஜ், பாண்டு...அடடே ஆரத்தி கூட இருக்காங்களே.


'துணிஞ்சவளுக்குத் துக்கம் இல்லை'ன்ற மன உறுதியோட படத்தைப் போட்டேன்.


தமிழ்ப்படம்தான். அந்த வரைக்கும் ஒரு நிம்மதி.


தாயில்லாக் குழந்தையான நாயகனைத் தனியாளாக வளர்க்கும் அப்பா நாஸர்.மகன் காதல் வசப்பட்டதும், எங்கே தனக்கும் மகனுக்கும் இடையில் இருக்கற பாசத்துக்கு பங்கம் வந்துருமோன்னு துடிக்கிற தகப்பனோட கதை.


முடிவு? நானே சொன்னா எப்படி. நீங்களும் பாருங்க.ஆனா.... ஒண்ணுமட்டும் சொல்லிக்கறென்.முடிவு.... சுபம்!


நாயகன் புதுமுகம்- ரவி கணேஷ்


நாயகி புதுமுகம் - விகாஷினி


இயக்கம் -நவீன் கார்த்திக் ( வித்தியாசமான ஸ்பெல்லிங். சோதிடம்/ வாஸ்து?)


இசை புதுமுகம் - மெல்வின்( எல்லாரும் கேக்கறாங்களேன்னு பேரைக் கவனிச்சுப் பார்த்தேன்)


ஆர்த்தி- டபுள் ஆக்ட் கொடுக்குதூ...


பாட்டெல்லாம் நல்லா இருக்கான்னு கேக்காதீங்க. ஓட்டிட்டேன்:-)ஆனா எல்லா டூயட்டும் மலேசியாவுலே ஆடிட்டாங்க.( அதானே, நன்றின்னு ஒரு அரை டஜன் பேர் போட்டாங்களே)


கடைசிக் காட்சிக்கு, ஜஸ்ட் முந்தின காட்சி நல்லா இருக்கு.

இந்தவாரம் கலாய்த்தல் வாரமுன்னு சொன்னாங்க.


சரித்திரம் போரடிக்குதுன்னு சொல்ற அன்பு மாணவர்களுக்காக, இந்த வாரத்தை திரைப்பட வாரமா மாத்தி இருக்கு,ஒரு சேஞ்சுக்கு:-)))

Wednesday, July 12, 2006

சாயுங்காலம்/சாயங்காலம்


ச்சும்மா ஒரு பரிசோதனைதான்.

வஜ்ரா ஷங்கர் சொன்னதுபோல செஞ்சு பார்த்தேன்.

Tuesday, July 11, 2006

நகையைத் தொலைச்சேன்

இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும்? எத்தனைபேர் இதைப் பாராட்டிச் சொல்லி இருக்காங்க.அப்படி இருந்தும் அதைப் போற்றிப் பத்திரமா வச்சுக்கத் தெரியலை பாருங்க.


எந்த வயசுலே இருந்து இதை அணிய ஆரம்பிச்சேன்? ம்ம்ம்ம்ம்ம்


அம்மா 'போன'பிறகு பாட்டி வீட்டுலே கொஞ்ச நாள் இருந்தேன் பாருங்க, அப்ப நம்ம பாட்டிதான்ரொம்ப வற்புறுத்தி இந்த நகையைப் போட்டுக்க சொன்னாங்க. எப்பவும் கழட்டவே கூடாதாம். ஆனாலும் அப்பப்பக் கழட்டிருவேன். அப்படியெல்லாம் சொன்ன பேச்சைக் கேக்கறவளா நான்?


ம்ம்ம்ம்ம் அப்புறம்?


கல்யாணம் ஆச்சு பாருங்க. அப்ப இருந்து கவனமா எப்பவும் போட்டுக்கிட்டு இருந்தது மட்டுமில்லை,எங்க இவருக்கும் ஒண்ணு போட்டுவிட்டேன். அப்படியும் நானாவது சிலசமயம் போட்டுக்காம விடறதுதான்.பாவம், எங்க இவர் எல்லா நேரமும் போட்டுக்கிட்டு இருக்கார். இல்லேன்னா 32 வருசம் குப்பை கொட்டி இருக்க முடியுமா? இதோட முக்கியத்துவம் என்னன்னு வயசாக ஆகத்தான் புரியுது.


மகள் பிறந்த பிறகு இப்போ ஒரு 22 வருசமா, நான் இதை ஒருநாளும் கழட்டுனதே இல்லை.


அப்படி இருக்க, நேத்து............? ம்ம்ம்ம்ம்


வெளியே எங்கேயும் போகலை. வீட்டுக்குள்ளேயேதான் இருந்தேன். கூடவே இருந்தது ஒரு கணத்துலேக் காணாமப் போச்சே!


சரியா எந்த வினாடி அதைத் தொலைச்சேன்றது நல்லாவே ஞாபகம் இருக்கு.


ஊஞ்சலில் உக்காந்த அஞ்சாவது நிமிஷம். அணிஞ்சிருந்த நகை மெதுவா கழல ஆரம்பிச்சது.அமுக்கிப் பிடிக்க முயற்சி செஞ்சேன். ஆனாலும் ம்ஹூஊஊஊஊம். போனது போனதுதான்.


த்யானும், சதாவும், ஷகீலாவும் கூட இருந்தாங்க. இந்திரஜித்.... அவரும் அங்கேதான் இருந்தார்.


எப்படிங்க........? எப்படிங்கறேன்.......?


கன்னடப் படங்கள் இப்படியா?


இதையும் தமிழ்ப்படுத்தி, நம்மையும் 'படுத்தி' இருக்காங்களே(-:

இந்த அழகுலே 'இங்கிலீஷ் ஸப்டைட்டில் வேற.

மறந்துபோயும் பார்த்துறாதீங்க 'மோனாலிசா'

அதுக்காக ஒண்ணுமேவா நல்லா இல்லை?

இருக்கே. ஹாஸ்பிட்டல்ன்னு ஒரு பில்டிங் காமிக்கறாங்க. அது அட்டகாசமா இருக்கே!


அப்பக் காணாமப்போன நகை?


'பொறுமை என்னும் நகை' தான். வேறென்ன?

Monday, July 10, 2006

அப்பாடா.... இனி உங்க பாடு.

கொஞ்ச நாளைக்கு முன்னாலே இங்கெ இந்தியன் ஹைகமிஷனர் விவகாரம்எழுதுனது யாருக்காவது நினைவு இருக்குதுங்களா? அதுக்கு இது ஃபாலோ அப். முந்தி எழுதுனது இங்கே இருக்கு.


அவரும் எப்படியாவது இங்கேயே இருக்கணுமுன்னு தலையாலெ தண்ணி குடிச்சுப்பார்த்தாருங்க. இந்திய அரசாங்கம் அவரோட, அவர் குடும்பத்தோட, அவரோட சொந்த வேலைக்குக் கொண்டுவந்தவரோட பாஸ்போர்ட்டுகளை யெல்லாம் ரத்து செஞ்சுருச்சு.


அவரோட மனைவி வேற ஒரு தனிப் பாஸ்போர்ட்டுலே இங்கே வசிக்க உரிமை கேட்டு விண்ணப்பம் கொடுத்துருந்தாங்க.


நம்ம நியூஸி இமிக்ரேஷன் சர்வீஸ், 'இங்கே இருக்கற
விதிமுறைகளுக்குப் புறம்பா நாங்க ஒண்ணும் செய்யமுடியாது. உங்க அரசாங்கம் உங்களைத் திரும்ப வரச்சொன்னா நீங்க போய்த்தான் ஆகணும். இல்லேன்னா 'ஓவர்ஸ்டே' செய்யறவங்களை இங்கே இருந்து எப்படி அப்புறப்படுத்தறமோ அதே போல உங்களையும் போலீஸ் உதவியோடு வெளியேற்ற வேண்டி இருக்கும்'னு சொல்லிருச்சு.


'உங்களுக்கு இங்கே வந்து குடியேறணுமுன்னா, உங்க நாட்டுலே இருந்து, எல்லாருக்கும் உள்ள விதிகள்படி மனு கொடுங்க. தகுதி இருந்தா ஒருவேளை உங்களுக்கு குடியுரிமை கிடைக்கலாமு'ன்னு நியூஸி குடியேற்ற இலாக்கா மந்திரி சொல்லிட்டார்.


ஆனாலும் இங்கே குடியுரிமை முறைகளிலே எதாவது ஓட்டையிருந்தா அதைப் பிடிச்சுக்கிட்டு அதுமூலமா இங்கேயே இருந்துருவாங்களோன்னு இங்கே இருக்கற இந்திய சமூகம் பயந்துக்கிட்டே இருந்துச்சாம்.


அங்கேயும் இந்திய அரசாங்க வெளியுறவுத் துறை இவரைக் கட்டாயமா வரச்சொல்லி மீண்டும் மீண்டும் வற்புறுத்தி, பாஸ்போர்ட் இல்லாம இந்தியா வந்து சேர, இவருக்கும் இவரைச் சேர்ந்தவங்களுக்கும் ஒரு எமர்ஜென்ஸி ட்ராவல் டாக்குமெண்ட் சர்ட்டிஃபிகேட் ( ஒரு குறிப்பிட்ட செக்டர்க்குள்ளெ மட்டும் செல்லுபடியாகும்)அனுப்பி வச்சிருக்கு.


வேற வழி இல்லாம கடைசியிலே போனமாசம் 17க்கு இங்கிருந்து கிளம்பிட்டார். ஏர்ப்போர்ட்டுலே வச்சுப் பத்திரிக்கை நிருபர்கள்கிட்டே,' இங்கே இந்தியன் ஹை கமிஷன்லே ஒரே ஊழல். அதைக் கண்டு பிடிச்சுட்டேன். அதனாலேதான் எனக்கு இப்படிக் கஷ்டம் வந்துருச்சு. எல்லாரும் எனக்கு எதிரா செயல் பட்டாங்க... ....இந்தியாவுலேயும் நான் இதையெல்லாம் சொல்லப்போறென். வெளியுறவு இலாகாவைச் சும்மா விடமாட்டேன்.அவுங்க மேலே மானநஷ்ட வழக்குப் போடுவேன்' இன்னும் என்னென்னமோ சொல்லிட்டுப் போயிருக்கார்.


அங்கே 18ந்தேதி காலை வந்து சேர்ந்துட்டாரு.

இனி உங்க பாடு.

Sunday, July 09, 2006

மனசுலே பட்டது.

பயந்துறாதீங்க. இது ஒரு சினிமா விமரிசனம். இந்தப் பேருலே எப்ப சினிமா வந்துச்சுன்னுகேக்கறீங்களா? வந்திருக்காதுன்னு நினைக்கறேன். ஒருவேளை வந்துச்சோ?


படத்தோட பேர் 'கை வந்த கலை'

ரொம்பச் சிக்கல் இல்லாத கதை.


நாயகன் பம்பரம் விடறான். எதுக்கு? அவுங்க அப்பாவுக்கு உதவியா இருக்க.
பம்பரக்குறி சொல்றவர் மகன்தான் நாயகன். குறி கேக்க வர்றவங்களுக்கு எவ்வளோ நேரம் ஒதுக்கணும்? அங்கேதான் பம்பரம் வருது. அது சுத்த ஆரம்பிச்சு நிக்கறவரைக்கும்தான் அவுங்களுக்கு ஜோசியம் சொல்லப்படும். நல்ல டைமர்!


அதெ விடுங்க. வழக்கம்போல ஒரு பொண்ணை நாயகன் காதலிக்க, அந்தப் பொண்ணு வழக்கம்போலநாயகனுடைய அத்தை மகளா இருக்கு. வழக்கம்போல அத்தைக்கும், அத்தையோட அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை இல்லை.


காரணம்?


வழக்கம்போல காதல்தான்.


வழக்கத்தில் இல்லாதவிதமா, அக்கிரஹாரத்துப் பையனைக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு அங்கெயே மாமியாப் போயிட்டாங்க அத்தை.
அத்தையோட புருஷனை எங்கியோ பார்த்தாமாதிரி இருக்கேன்னு யோசிச்சேன். அட. நம்ம பாண்டியன்.அதாங்க அரிவாளாலே பென்சில் சீவுன பாண்டியன். மொகம் பொதுபொதுன்னு கிடக்கு. அம்பி நல்லாசமைக்கிறார். வாழைப்பழ தோசைகூட செய்யறாருன்னா பாருங்க.


அத்தைக்குப் போலீஸ் வேலை. சீதாவுக்கு போலீஸ் யூனிஃபார்ம் பொருத்தமாத்தான் இருக்கு.


இந்த ச்சார் செள பீஸ்(420) அப்பாகூட இருக்க வேணாமுன்னு சொல்லித் தாத்தா, சின்னமகன்கிட்டேநாயகனை( அவர் பேரனை) அனுப்பறார்.


சின்ன மகன்,'பாக்ஸ் ஆஃபீஸ்' தொழில் செய்யறார். அருமையான தொழில். எல்லாருக்கும் ஒருநாள் இல்லேன்னா ஒருநாள் எப்பவும் தேவைப்படும் பொருளை வாடகைக்குக் கொடுக்கும் தொழில். (எனக்கும் சில சந்தேகம் இருந்தது இந்த பாக்ஸைப் பத்தி. ஆனா தெளிவாப் புரிஞ்சு போச்சு இப்ப)
இந்தத் தொழிலை, கஸ்டமர்களொட தேவைக்கு ஏத்தபடி விரிவாக்கி நல்லபடியா நடத்துறார், நாயகன் தன்னோட'மூளை'யை உபயோகிச்சு.
நாயகனோட சித்தப்பா, பேசும்சக்தி இல்லாத பொண்ணைக் கல்யாணம் செஞ்சு அவர்வகையிலே சமூக சேவை செய்யறார்.பேசும் சக்தி இல்லாத சித்தியும் அவுங்க வகையிலே சமூக சேவை செய்யறாங்க.


கடைசியில் குடும்பம் பூரா சமாதானமாகி இளசுகளுக்குக் கல்யாணம் செஞ்சுவைக்க சம்மதம் தெரிவிக்கறாங்க.


இந்தக் கல்யாணம் நடந்ததா?........................ வெள்ளித்திரையில் காண்க.


முக்கிய நடிகர்கள்:


சித்தப்பா- பாண்டியராஜன்.


நாயகன் - ப்ரீத் ( பாண்டியராஜனின் மகன்)


நாயகி - ஸ்ருதி ( முந்தி குழந்தை நட்சத்திரமா வந்துருக்காங்களாம்)


420 அப்பா - மணிவண்ணன்


தாத்தா- வினுச்சக்ரவர்த்தி.


இப்பச் சொல்றேன் என் மனசுலே என்ன பட்டதுன்னு.


பழைய நடிகர்கள் வாரிசுகளைக் களம் இறக்கறாங்க. செய்யட்டும். இப்பத்தான் பாக்கியராஜ், மகளைப் படத்தில் பார்த்தோம்.அந்தக் கதையும் நல்லா இருக்குன்னாலும், ஓட்டைங்க நிறைய இருக்கு. அதைப் பத்தி இன்னொரு சமயம்.....


இந்தப் படத்துலே எந்தத் தொழில் செஞ்சாலும் நேர்மையாச் செய்யணும்னு ஒரு மெசேஜ் இருக்கு.நாயகன் நல்லா துறுதுறுன்னு இருக்கார். முகத்துலே நல்ல லட்சணம். நடிப்பும் நல்லாவே இருக்கு.படத்தோட ஆரம்பத்துலேயே முறைப்படி சண்டை கத்துக்கிறார் ஒரு வாத்தியார்கிட்டே. அதனாலே சண்டைக்காட்சிகளில் பாய்ஞ்சுபாய்ஞ்சு அடிக்கறப்ப வித்தியாசமாத் தெரியலை.( தேவை இல்லாம புதுப்பேட்டைப் படத்தோட காட்சிகள் மனசுலே வந்து போகுது. அந்தப் படத்துக்கு இது எவ்வளவோ மேல்)


ஒரு ட்விஸ்ட்டும் இல்லாத சீதாசாதா( ஹிந்தி)வான கதை. பெரிய எதிர்பார்ப்பு கிடையாது.


ஜனகராஜ், ரேவதி, வெண்ணிற ஆடை மூர்த்தின்னு பலர் தலைகாமிச்சுட்டுப் போனாங்க.

எனக்குப் பிடிச்ச காட்சி.


ஒரு நிமிஷம் மட்டுமே வரும் பாம்பு டான்ஸ். என்னமா ஆடுது அந்தச் சின்னப் பொண்ணு. சூப்பர்.


லொகேஷன் அருமையா இருக்குங்க. ஆறு, பக்கத்துலேயே அழகான மண்டபம். கொஞ்ச தூரத்துலே தெரியும் ஆத்துப்பாலம்ன்னு அட்டகாசம். எந்த ஊரோ?


நல்ல படம்தான். பார்க்கலாம் ஒருதடவை.

Saturday, July 08, 2006

எவ்ரி டே மனிதர்கள் -8 ஸ்டீவன்

வழக்கத்தைவிட பத்து நிமிஷம் முன்னாடியே வேலைக்குக் கிளம்பிட்டேன். இன்னிக்குஸ்டீவன் வர்றதா முன்னேற்பாடு இருந்துச்சு.


நான் போய்ச் சேர்ந்தப்பவே லிஸியும், ஸ்டீவனும் எனக்காகக் காத்திருந்தாங்க. அவசரஅவசரமாச் சாவியைத்தேடி எடுத்துக் கதவைத் திறந்தேன். உள்ளெ வந்த லிஸி,முறைப்படி ஸ்டீவனை அறிமுகப்படுத்தி வச்சாங்க. நான் நீட்டுன கையைக் குலுக்கும்போதே அதுலே ஒரு சிநேகபாவம் தெரிஞ்சது.


வயசு 17 ஆச்சாம். இங்கே இதே பகுதியிலே இருக்கற உயர்நிலைப் பள்ளியிலே விசேஷத் தேவை இருக்கற பிரிவில் 'படிக்கிற' பையன். Children with Special needs.


நான் வேலை செய்யற இடம் ஒரு லைப்ரரி. குழந்தைகளுக்கான விசேஷ வாசகசாலை. இங்கே 16 வயசுவரை மட்டுமே அங்கத்தினரா இருக்க முடியும். இங்கே அக்கம்பக்கம் வசிக்கும் பிள்ளைகளுக்காகவே இது நடக்குது. பிள்ளைங்க மேலே அளவற்ற அன்பு வச்சுருந்த ஒரு செல்வந்தர் கொடுத்த நன்கொடை. ஆரம்பிச்சது 1954இல். இந்த சேவையை எத்தனையோ தடங்கல்கள் வந்தாலும் நிறுத்தக்கூடாதுன்னு,தன்னார்வத்தொண்டு உணர்வு இருக்கும் பெண்களாலேயே இது நடந்துக்கிட்டு இருக்கு. நானும் 11 வருஷமா இங்கே வேலை செய்யறேன். நிர்வாகக்குழுவிலேயும் பங்கெடுத்துக்கிட்டு இருந்தேன்.


ஒரு நாள், எங்க சேர் பெர்ஸன், எங்கிட்டே 'இதுபோல பக்கத்துலே இருக்கற பள்ளிக்கூடத்துலெ இருந்து ஒருவிண்ணப்பம் வந்திருக்கு. விசேஷத்தேவைப் பிரிவுலே இருக்கற பிள்ளைங்களுக்கு அங்கே இது கடைசி வருசமாம்.அவுங்களுக்கு எதாவது வேலை செய்யப் படிப்பிக்கணும். எதுலே ஆர்வம் இருக்குன்றதைப் பொறுத்து அவுங்களுக்கு வேலை ஏற்பாடு செய்ய இது உதவியா இருக்குமாம். நம்ம லைப்ரரியிலே ஒரு பையனுக்கு பயிற்சி கொடுக்கறீங்களான்னு கேட்டாங்க. என்ன சொல்லட்டும்?' னு கேட்டாங்க.


'இது ஒரு புது முயற்சியா இருக்கே, ஏன் இதுக்கு உதவி செய்யக்கூடாதுன்னு நினைச்சு சரி'ன்னு சொல்லிட்டேன்.


அதுக்கப்புறம்தான் லிஸி என்னை ஃபோன்லே கூப்புட்டு நேரம், நாள் எல்லாம் கேட்டுக்கிட்டாங்க. அங்கே மொத்தம்14 பிள்ளைங்க இருக்காங்களாம். அவுங்களை இது மாதிரி பயிற்சி கொடுக்கற இடத்துக்குக் கொண்டு போய்க் கொண்டுவர்றதுக்கு சில ஒருங்கிணைப்பாளர்கள் இருக்காங்க. அதுலெ ஒருத்தர்தான் நம்ம லிஸி.தட்டுத்தடுமாறி, சக்கரநாற்காலியிலே இருந்து எழுந்த ஸ்டீவனைப் பார்த்தால் ஒரு 10 வயசுக்கு மேலே மதிப்பிட முடியாது. ச்சின்ன உருவம். நல்லா சம்மர் கிராப் தலை, கழுத்து ஒரு பக்கமா சாஞ்சு மாதிரி இருந்துச்சு. நிறையவெடிப்பு இருந்த உதடுகள். அப்பப்ப மூக்கைமூக்கை உறிஞ்சி ஒரு இழுப்பு. ச்சின்னக் காதுகள்,ச்சின்னக் கண்கள். ஆனா கண்ணுலெ மட்டும் நல்ல பளிச். பேசவேண்டியதையெல்லாம் அந்தக் கண்ணே பேசிரும். இதை நான் என்கூடவேலை செய்யும் தோழியிடம் சொன்னப்ப, அவுங்க என்னை விநோதமாப் பார்த்தாங்க. தலையை ஆட்டிக்கிட்டே 'கண்ணுலே ஜீவனே இல்லையே'ன்னு சொன்னாங்க. பார்வைகள் வேறுவேறு இல்லையா?சரி. எனக்கு ஒரு அஸிஸ்டெண்ட் கிடைச்சாச்சு. புத்தகம் பிடிக்குமான்னு கேட்டேன். ரொம்பப் பிடிக்குமாம். வேற என்னென்ன பிடிக்குமுன்னு கேட்டதுக்கு நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் பிடிக்குமாம். வெறும் படங்கள் மட்டும் போட்டுருக்கற புத்தகங்களிலே நாய், பூனை இருக்கறதை மட்டும் எடுத்துத் தனியா வைக்க முடியுமான்னு கேட்டதும் முகத்துலே பயங்கர சந்தோஷம்.


மரத்துலே பெட்டிகள் ( மூடியில்லாமல்) செஞ்சு, ஒவ்வொண்ணுக்கும் கார், பஸ், ரயில், தீயணைக்கும் வண்டின்னு பலவிதமா அதை அலங்கரிச்சுப் பெயிண்ட் செஞ்சு வச்சுருப்போம். அதுலேதான் ரொம்பச் சின்னப்புள்ளைகளுக்கான புத்தகங்கள் போட்டு வைப்போம். அலமாரின்னா புள்ளைங்களுக்கு எட்டாதுல்லையா?அங்கே போய் உக்காந்துக்கிட்டு, ஒவ்வொண்ணா எடுத்துப் பார்த்து குட்டி மிருகங்கள் இருக்கற புத்தகத்தையெல்லாம் தனியா எடுத்து ஒரு சின்ன மலை போல குவிச்சு வச்சுட்டு ஒவ்வொரு படங்களாப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்த ஸ்டீவன், திடீர்னு எந்திருச்சு கை கொள்ளாத அளவு புத்தகங்களைத் தூக்கி எடுக்க முயற்சி செஞ்சு எல்லாத்தையும் கீழே போட்டு முழிச்சது இப்பவும் ஞாபகம் வருது.


கொஞ்சம் கொஞ்சமா புத்தகங்களை அடுக்கறதுக்கும், அந்த அலமாரிகளைத் துடைச்சு வைக்கவும், எழுத்துக்கூட்டி சில சொற்களைப் படிக்கவுமா நாட்கள் பறந்துச்சு. என்ன வேலைக்குப் போகணுமுன்னு ஆசைன்னு ஒரு நாள்கேட்டேன். அதேதான் நாய், பூனைகள் கூடவே இருக்கணுமாம். RSPCA வில் வேலைன்னா நல்லா இருக்கும்.அங்கே பூனைக்குட்டிகள் எப்பவும் இருக்குமே!


இல்லேன்னா எங்கியாவது பண்ணைகளில்கூட வேலை செய்யலாம்.அங்கேயும் கோழிக்குஞ்சுகள், பன்றிக்குட்டிகள், பூனைகள்ன்னு நிறைய இருக்குமே. இதைச் சொன்னதும் முகம் பூவாய் மலர்ந்துருச்சு.


ஒரு நாள் திடீர்னு ஸ்டீவனுக்கு நம்பர்கள் மேலே பிரியம் வந்தது. ஒரு ச்ச்சின்ன நோட்டுப்புத்தகத்தைக் கையில்வச்சுக்கிட்டு குனிஞ்ச தலை நிமிறாம என்னவோ எழுதுறதைப் பார்த்ததும் என்ன நடக்குதுன்னு கிட்டேப்போய்ப் பார்த்தேன். புத்தகங்களுக்கு ஒரு சீரியல் நம்பர் போட்டு வச்சுருப்போம். அந்த நம்பர்களையெல்லாம் ஒவ்வொரு புத்தகமாப் பார்த்து விறுவிறுன்னு எழுதுது கை. எதுக்கு இந்த நம்பர்கள்ன்னு கேட்டதுக்கும், பதில் அதே சிரிப்புதான். கூடவே ஒரு மூக்குறிஞ்சல்.


"ஐ லைக் நம்பர்ஸ்." பேச்சு மட்டும் எப்பவும் ஒரு குழறலோடுதான். ஆனா, எனக்குப் புரியுமே!


நம்பரோட அருமை புரிஞ்சதோ, இல்லையோ? எப்பவுமே நம்பருன்னே ஆயிருச்சு. எழுதுன நம்பர்களையே திருப்பித்திருப்பி எழுதிக்கிட்டேஏஏஏஏஏ இருக்கணுமாமே!


வருசக்கடைசியும் வந்துச்சு. பள்ளிக்கூடங்கள் எல்லாம் அடைக்கும் காலம். கோடை விடுமுறை. அந்த வாரம் கடைசி வாரமாம். அன்னிக்கு லைப்ரரிக்கு வந்த ஸ்டீவனோட முகம் நல்லாவே இல்லை. கண்ணெல்லாம் கலங்கி இருந்துச்சு. லிஸியும் சொன்னாங்க, 'இனிமே ஸ்டீவன் பள்ளிக்கூடத்துக்கு வரமுடியாது. கடைசிவருசம்,கடைசி நாள். ஒரு புதுப் பரிசோதனையாத்தான் ரெகுலர் பள்ளிக்கூடத்துலே இவுங்களுக்கு ஒரு தனிப்பிரிவு வச்சுப் பார்த்தோம். இதுவரை எல்லாம் நல்லாவே நடந்துச்சு'ன்னு. 'ஸ்டீவனுக்கு உங்களை ரொம்பப் பிடிக்குமாம்'னுலிஸி சொன்னாங்க. எனக்கோ ஒரே ஷாக். அதெப்படி என்னப் பிடிச்சுப்போச்சு?


லிஸிக்கும் அதுதான் கடைசி நாளாம். பகுதி நேர வேலையாத்தான் இதைச் செஞ்சாங்களாம். அடுத்தவருஷம் அவுங்களும் படிக்கப் போறதாலே இனி இந்த வேலைக்கு வரமுடியாதாம்.

ஸ்டீவன் குடும்பமும் வடக்கே போகப்போறாங்களாம். அங்கே ஒரு சின்னப் பண்ணையை வாங்கறாங்களாம்.இனிமேல் ஸ்டீவன் பூனைக்குட்டிகளுக்கும், கோழிக்குஞ்சுகளுக்கும், நாய்க்குட்டிகளுக்கும் உற்ற தோழனா இருப்பான்.


எங்க லைப்ரரியில் இனிமேல் தேவையில்லை என்று எடுத்து வைக்கப்பட்ட புத்தகங்களில் ஒரு பூனைப் படங்கள் உள்ள புத்தகத்தை ஸ்டீவனுக்குப் பரிசாக் கொடுத்தேன். ஒரு நிமிஷம் மலர்ந்தது முகம். அடுத்த நொடி வாயெல்லாம் கோணிக்கிட்டு ஒரே அழுகை.


பை பை ஸ்டீவன் என்று சொல்லறப்ப கையை விடாமப் புடிச்சுக்கிட்டே இருந்தது எனக்கும் கஷ்டமாத்தான் இருந்துச்சு.


ஸ்டீவனுக்கு 'டவுன் சிண்ட்ரோம்'.


--------
அடுத்தவாரம்: தாமஸ்

நன்றி: தமிழோவியம்


இந்தப் பதிவை நம் சகவலைஞர் ஒருவரின் மகனுக்கு சமர்ப்பிகின்றேன்.

Friday, July 07, 2006

நியூஸிலாந்து பகுதி 51

மவோரி இன மக்களை இனியும் வதைக்கிறது ஞாயமில்லை உணர்ந்த அரசு மவோரி கவுன்சில் ஒண்ணு 1961 ல் நிறுவுச்சு.நியூஸிலாந்து மக்களும், எங்கியோ இருக்கற பிரிட்டனை விட, இப்போ பஸிபிக் பிரதேசத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒண்ணுதான் நம்ம நாடுன்னு உறுதியா இருந்தாங்க.


அக்கம்பக்கத்து நாடுகளான மேற்கு சமோவா, டோங்காவிலே இருந்தெல்லாம் ஆளுங்க வந்து குடியேற ஆரம்பிச்சாங்க.தொலைக்காட்சியும் வந்துச்சு. ஆம்பிளைங்க செய்யற அதே வேலையைச் செய்யற பொம்பிளைங்களுக்கு எல்லாநாட்டுலேயும் அப்ப சம்பளம் கொறைச்சலாத்தான் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. அதை மாத்தி ஒரு வேலைக்குஒரு சம்பளம். அது ஆணா இருந்தாலும் சரி, பெண்ணா இருந்தாலும் சரின்னு சட்டம் வந்துச்சு. குறைஞ்சபட்சக் கூலிஇவ்வளவு...ன்னு நிர்ணயம் செஞ்சதும் அப்பதான்.


ஆனா இங்கே மறுபடி ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தணும். உலகத்துலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய முதல்நாடுன்ற பெருமை நியூஸிக்குத்தான். இதேபோல வயதான முதியவர்களுக்கு முதல்முதலா ஓய்வு ஊதியம் கொடுக்க ஆரம்பிச்ச நாடும் இதுதான்.


கவர்னர் ஜெனரல் பதவி, நாட்டோட தலைமை நீதிபதி ன்னு பெரிய பதவிகளில் பெண்கள் இருந்ததும் இந்த நாட்டுலேதான்.பெண்களுக்குச் சம உரிமை தந்து ஆண், பெண் இருவருமே சமம் என்ற நிலையைக் கொண்டுவந்ததும் இங்கேதான்.


இதுவரை இங்கிலாந்து போலவே இருந்த பவுண்ட், ஷில்லிங், பென்ஸ் எல்லாம் மாறி புதுசா டாலர், செண்ட்ன்னு காசை மாத்துனாங்க.


1970களில் கம்போடியா, வியட்நாம், லாவோஸ் இங்கெல்லாம் இருந்து அகதிகள் போக இடமில்லாம தவிச்சப்ப, இங்கத்து அரசாங்கமும் பலருக்கு இடம் கொடுத்துச்சு. 1973லே கச்சா எண்ணெய் விலை உலக மார்கெட்டுலே பயங்கரமா ஏறிடுச்சு. அதன் பலனா இங்கே வேலை இல்லாத நிலை.

நிறையப்பேர் அண்டைநாடான ஆஸ்தராலியாவுக்குப்வேலை தேடிப் போனாங்க.


வியட்நாம் வார் நடந்துக்கிட்டு இருந்துச்சு. இதெல்லாம் நியூஸி மக்களுக்கு, குறிப்பா இளவயதுக்காரங்களுக்குப் பிடிக்கலை.


இங்கே இப்படி இருக்கும்போது, உலகத்தோட அடுத்த பாதியிலே அணுகுண்டு, அணுசக்தின்னு ஒரே பேச்சு.பிரான்ஸ்,இங்கிலாந்து எல்லாம் அவுங்கவுங்க செய்யற அணு ஆயுதப் பரிசோதனைகளை , இங்கே பசிபிக் கடலோட தென் பகுதியிலே வந்து வெடிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. 'என்னாத்துக்கு இங்கே வந்து பரிசோதனை செய்றீங்க'ன்னு இங்கத்து மக்கள் கேட்டதுக்கு, ப்ரான்ஸ் சொல்லுச்சாம், 'அது ஒண்ணும் ஆபத்தானது இல்லை'ன்னு.


'ம்ம்ம்ம்ம்... அப்படியா? அப்ப உங்க ஊர்லே பாரிஸ் நகரத்துக்குப் பக்கத்துலேயே பரிசோதிச்சுக்க வேண்டியதுதானே?'


1973 லே முருரோஆ Mururoa லே ப்ரெஞ்சுக்காரர்கள் பரிசோதனை செய்யறாங்கன்னு கேள்விப்பட்டு, அப்ப இருந்த நியூஸிப் பிரதமர் நார்மன் கிர்க், ரெண்டு கடற்படைக் கப்பலை அனுப்பி என்ன நடக்குதுன்னு பார்க்கச் சொன்னார்.மக்கள் இந்த அணு ஆயுதத்துக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிச்சாங்க.


Whina Cooper ன்ற 80 வயசு மவோரிப் பெண்மணி, 'போனதெல்லாம் போட்டும், இனிமேலாவது மவோரி மக்களுக்கு பழையஅந்தஸ்த்தை மீட்டுக் கொடுக்கணுமு'ன்னு ஒரு குழுவை அமைச்சாங்க. Te Roopu o te Matakite ( The Peoplewith a Vision)ன்னு பேர். மவோரி நிலங்களை எடுத்துக்கிட்டதை எதிர்த்து ஒரு பேரணி நடத்துனாங்க.அரசாங்கம் இந்த முறை அவுங்க குறைகளை கவனமாக் கேட்டுச்சு. வைட்டாங்கி ஒப்பந்தம் சரியா எழுதப்படலை.மவோரிகளை ஏமாத்திட்டாங்கன்னு இருந்த மவோரி மக்களுக்கு ஆதரவா, 'சரி. ரொம்ப அழுவாதீங்க. ஒரு ட்ரிப்யூனல்போட்டுறலாம். நில உரிமை, மீன் பிடிக்கற உரிமை, உங்க மொழி, சம்பிரதாயமான மற்ற பழக்க வழக்கங்கள் இதெல்லாம்தீர விசாரிச்சு, பரிசீலனை செய்யறோமு' ன்னு சொல்லுச்சு.அப்படி உருவானதுதான் இந்த வைட்டாங்கி ட்ரிப்யூனல் 1975லே.


பிள்ளைகளுக்கு மவோரி மொழியைச் சொல்லித் தர்றதுக்காக 'கொஹங்கா ரிஓ' ( Kohanga Rio - Language Nest) என்றஅமைப்பு உருவாச்சு.

பள்ளிக்கூடங்களிலே ச்சின்னச்சின்ன மவோரி வார்த்தைகள், ஒண்ணுலே இருந்து பத்துவரை மவோரியிலே சொல்றதுன்னு ஆரம்பம் ஆச்சு.


1979லே இன்னும் பல மவோரிகள் சேர்ந்து புதுசா ஒரு மவோரிக் கட்சியையும் உருவாக்குனாங்க. முக்கியமான ஊர்களிலே உள்ளூர் மவோரிகளுக்காக மராய் கட்டுனாங்க. வெளிநாட்டுச் சுற்றுலா ஆளுங்களுக்கு நம்ம கலாச்சாரத்தைக் காமிக்கிற ஒரு இடமாத்தான் இருக்கட்டுமே. நிறைய இளவயசு மவோரிகளுக்கே தங்களுடைய மூதாதையர்களோட பழக்கவழக்கங்கள் எல்லாம் புரிபடாம இருந்துச்சு.


மராய்ன்னு சொல்லுறது மவோரிகளுக்கு ஒரு முக்கியமான இடம். இதுவும் ஃபாரெனூயி போல ஒருவிதமான மீட்டிங் ப்ளேஸ்தான். ஆனா இந்த ஃபாரெனூயி இப்பெல்லாம் இல்லாமப் போயிருச்சு. அந்தக் காலத்துலே அதாவது இங்கே மவோரிகள் மட்டுமே வாழ்ந்திருந்த காலக்கட்டத்துலே ஒவ்வொரு குழுவுக்கும் அவுங்க கூடிப்பேசற இடமா, சுருக்கமாச்சொன்னா அவுங்களோட கம்யூனிட்டி ஹாலா இருந்ததுதான் இந்த ஃபாரெனூயி .


அதுக்கப்புறம் இங்கே வெள்ளைக்காரர்கள் வந்து குடியேறி, இந்த மக்களோட இரண்டறக் கலந்து(!) அந்த மவோரி இன மக்களும் இவுங்க மதத்தையும், நாகரீகத்தையும் பின்பற்றத் தொடங்கினவுடனே ஃபாரெனூயி மறைஞ்சேபோச்சு. ஆனா, கொஞ்சநாள் ஆனபிறகு அதாவது புது சொந்தம் எல்லாம் கொஞ்சம் பழசானபிறகு இந்த மவோரி இன மக்கள்,அடடா, நம்ம குழந்தைகளுக்கு எங்கே இந்தக் கலாச்சாரத்தைப் பற்றிய விவரம் இல்லாமல் அடியோடு மறைஞ்சிருமோன்ற விசாரத்துலே உருவானதுதான் இந்த மராய்.


'நம்ம கலாச்சாரத்தை இப்ப விட்டோமுன்னா அப்புறம் மெதுமெதுவா நம்ம இனமே அழிஞ்சுரும். அதைக் காப்பாத்தறது இனி உங்க பொறுப்பு.' அந்தப்புள்ளைங்களைக் கூட்டிவச்சு விளக்குனாங்க.இதைக் கட்டுறதுக்கும், உள்ளே நுழையறதுக்கும், இங்கே தங்கறதுக்கும் பலவிதமான விதி முறைகள் இருக்கு.அதையெல்லாம் கட்டாயமாக் கடைப்பிடிக்கணுமுன்னும் சொல்லி வச்சாங்க.


அடுத்த வகுப்புலே மராய் விவரங்களைப் பார்க்கலாம்.

Wednesday, July 05, 2006

நியூஸிலாந்து பகுதி 50


தமக்குத் தாமே திட்டம்.. ஏன் இங்கே இப்படி உடம்பு சரியில்லாம மக்கள் அவதிப்படறாங்க? கிராமம் இருக்கறஇடம் சரியில்லே. ரொம்ப ஈரம் தேங்குது. குளிர் காலம் வந்தாக் கேக்கவே வேணாம். ஈரம் இல்லாத நல்ல காய்ஞ்ச பூமிக்கு நம்ம கிராமத்தை மாத்திக்கணுமுன்னு இளவரசி பூஆ தீர்மானிச்சாங்க. எது நல்ல இடம்? இதுக்கு முன்னாலே இருந்த அரசருக்கு ஒரு வீடு கட்டுனாங்களே, அங்கேயே போயிரலாமுன்னு கிளம்புனாங்க. புதுசா அங்கே ஒரு பெரிய வீடுகட்டி அதுலேயே மக்களொடு இருக்கலாமுன்னு முடிவு செஞ்சாச்சு. மக்களுக்காக ஒரு இடம்.

ஆரோக்கியமானவாழ்க்கைமுறை. இதுக்கும் ஒரு பேர் இருந்துச்சு. மராய் ' டுராங்காவேவே மராய்'


வைக்காட்டோலே இருந்த மற்ற மவோரிக் குழுக்களுக்கும், பூரா நியூஸிலாந்து நாட்டுக்கும் முதல் மராய். ஆயிரம் வருசத்துக்கு முன்னாலே இங்கே வந்த முதல் மவோரிங்க குழு கம்யூனிட்டி ஹால் மாதிரி ஒரு இடம் உண்டாக்கிஅதுலேயே ராத்தங்கல் செஞ்சாங்களே, அதே மாதிரிதான் இதுவும். வழிவழியா மராய்க் கதைகளாக் கேட்டிருந்தது இப்ப நிஜமாவே உண்டாச்சு.


ஆனா, பண்டையக்காலம் போல இல்லாம, வெள்ளைக்கார நாகரீகத்துலே இருந்து பல நல்ல அம்சங்களை எடுத்துக்கிட்டாங்க.கழிவுநீர் வெளியேத்தற காவாய், நல்ல தண்ணீர் கிடைக்கறதுக்குக் குழாய் எல்லாம் வச்சு நவீன வசதிகளோடுள்ளமராய். இளவரசி, தன்னோட குடிமக்களையெல்லாம் கூப்புட்டு மவோரிகளுடைய வாழ்க்கை முறை, அந்தக் காலத்துக்கதைகள், பாட்டுக்கள், சரித்திர முக்கியத்துவம், பாரம்பரியம் இதெல்லாம் எடுத்துச் சொல்லி மக்களை ஊக்கப்படுத்தினாங்க.அப்பத்தான் நிறைய மவோரிகளுக்கு அவுங்க பின்புலம் எவ்வளவு மதிப்பு வாய்ந்ததா இருந்ததுன்னு புரிஞ்சதாம்.


மரத்துலே செதுக்கும் மவோரி சிற்பவேலைகள், மவோரிகளுடை நீளமான படகுகள் கட்டறவிதம் இதுக்கெல்லாம்கூட மறுவாழ்வு வந்துச்சு. இதோட விடாம, மவோரிப் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்குக் கட்டாயம் அனுப்பிப் படிக்கவைக்கணும், உடம்பு சரி இல்லாதப்ப டாக்டர்கிட்டே கொண்டு போய் காமிக்கணும்னு நல்ல கருத்தெல்லாம் சொல்லி தம் மக்களை நல்லபடி வழி நடத்துனாங்க. (இப்படி ஒரு தலைமை ஒவ்வொரு இனத்துக்கும் நாட்டுக்கும் கிடைச்சதுன்னா உலகமே எப்படி சொர்க்கமா மாறி இருக்கும்?)


அப்பெல்லாம் மவோரி இனத்துலே அப்பா,அம்மாத்தான் பொண்ணு பார்த்தோ, மாப்பிள்ளை பார்த்தோ அவுங்க புள்ளைங்களுக்குக் கல்யாணம் நடத்துவாங்களாம். பெற்றோர் ஏற்பாடு செய்யும் அரேஞ்சுடு மேரேஜ். இதுக்குப்பேர் டமாவ்(Taumau). தலைவருக்கு உதவிக்கு ஆள் தேவைப்படும் போது குழுவே துணையைத் தேர்ந்தெடுக்குமாம்.நம்ம இளவரசிக்கு 38 வயசானப்ப, அவுங்களைவிட வயசுலே ரொம்ப இளைவரைக் கல்யாணம் செஞ்சு வச்சாங்களாம்.மாப்பிள்ளையைக் கூப்புடறது டுமோகை Tumokai. இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? Worker/helper


சுயமுன்னேற்றம் கண்டு மக்கள் வாழ்க்கையிலே ஜெயிக்க ஆரம்பிச்சதும், அரசாங்கம் மெதுவா முன்வந்து உதவிக்கரம் நீட்டுச்சு. 1920, 1930களிலே மவோரிகளுக்கு குடி இருப்பும் கட்டிக் கொடுக்க ஆரம்பிச்சது. அவுங்க பிள்ளைங்க உயர்நிலைப்பள்ளிவரைக்கும் போக ஆரம்பிச்சாங்க. வசதிகளை முன்வச்சு மவோரிகள் கிராமத்தை விட்டு மெதுவா நகர்ப்புறங்களுக்கு மாற ஆரம்பிச்சதும் இப்பத்தான்.


1940-ல் எட்டு உயர்நிலைப்பள்ளிக்கூடம் மவோரிகளுக்காகவே வெவ்வேற டவுன்களிலே கட்டிக் கொடுத்தாங்க.விவசாயம் செய்ய விருப்பம் இருந்த மவோரிகளுக்கு அரசு கடனுதவியும் ஏற்பாடு செஞ்சது. மவோரிகளோடு சண்டைபோட்டு அநியாயமா பிடுங்குன நிலங்களில் கொஞ்சத்தைத் திருப்பியும் தந்தது அரசு.


மொதமொதல்லே 1769லே கேப்டன் குக் இங்கே வந்தப்ப மவோரிகள் ஜனத்தொகை ஒரு லட்சம் இருந்துச்சாம். சண்டை,சச்சரவு, நோய்ன்னு ஜனங்க பல வழியிலேயும் மடிய ஆரம்பிச்சு 1901லே பாதிக்கும் கீழே போயிருந்தது ஜனம். வெறும் 45,500 பேர்தான். அடுத்த 35 வருசத்துலே இவுங்க ஜனத்தொகை 82,000 ஆச்சு.


இதுக்கிடையிலே இன்னொரு உலக மகா யுத்தம் வந்துச்சு.
ரெண்டாம் உலக மகா யுத்தத்துலேயும் கலந்துக்கிட்டு விளாசி இருக்காங்க. ஆனாலும் முதல் போர்லே ஆனஅளவுக்கு உயிர்ச்சேதாரம் இல்லாம திரும்புனாங்க.


மத்த உலகநாடுகளிலே நடக்கற மாதிரிதான் இங்கேயும் ஏற்றமும் இறக்கமுமாதான் இருந்துச்சு. இதுக்குள்ளெ மின்சாரம் பரவலாக் கிடைச்சதாலே பண்ணை வேலைகள், தொழிற்சாலைகள்னு சிறப்பா வேலைகள் செய்ய முடிஞ்சது.அரசாங்கம் பெரிய அணைகள் கட்டி மின்சார உற்பத்தி செய்ய ஆரம்பிச்சது.


1950களிலே வாழ்க்கைத்தரம் ரொம்ப உயர்ந்து நவநாகரீக வசதிகளோடு மக்கள் இருந்தாங்க. பண்னை வேலைகளுக்கு மெஷின்கள் வந்துருச்சு. குதிரைகளையெல்லாம் ஓரங்கட்டினாங்க. ஆனா, அதுகளை அப்படியே விட்டுறாம சவாரிசெய்ய, ரேஸ் குதிரைப் பண்ணைன்னு ஆரம்பிச்சாங்க. குதிரைப் பந்தயமும் விருப்பமாயிருச்சு.பந்தயக்குதிரைகளை வளர்த்து அண்டை நாடான ஆஸ்தராலியா வரைக் கொண்டுபோய் பந்தயத்துலே கலந்துக்கறாங்க.


படிப்பு முக்கியமுன்னு உணர்ந்து பல்கலைக் கழகங்கள் நல்லபடியா செயல்பட்டுச்சு.

படம்: இளவரசி பு ஆ

Tuesday, July 04, 2006

ஆறப் போட்டுட்ட ஆறு.

இந்த ஆறு வெள்ளாட்டுக்கு என்னையும் சேர்த்துக்கிட்டாங்க பலர். (அதாவது ஒன்றுக்குமேற்பட்டவர்கள்ன்னா 'பலர்'தானே? அந்தக் கணக்குலே)
எழுதிறலாமுன்னு நினைச்சுக்கிட்டே ரொம்பத்தான் ஆறப்போட்டுட்டேன். இன்னும் விட்டேன்னா இந்த வெள்ளாட்டு 'பத்தாக' வர வாய்ப்புக் கொடுத்ததாப் போயிரும்.


எந்த ஆறைச் சொல்றது? எந்த ஆறை விடறது? இந்தக் குழப்பமே இன்னும் தீர்ந்தபாடில்லை.

பார்க்கவிரும்பும் ஆறு இடங்கள் வெளிநாட்டில்:


கங்கோத்தரி, கங்கை ஆறு...

தலைக்காவிரி

வள்ளுவர் சிலை கன்னியாகுமரி

ஜெய்ப்பூர் அரண்மனைகள்

ராஜஸ்த்தான் பாலைவனங்கள்கோயில்கள்: வெளிநாட்டில்:


துவாரகை

கங்கைகொண்ட சோழபுரம்

உடுப்பி கிருஷ்ணன்

தர்மஸ்த்தலா

அம்ரித்ஸர் தங்கக்கோயில்

சந்திக்க விரும்பும் ஆறு எழுத்தாளர்கள்.( ஆமாம், சந்திச்சா என்ன பேசறது?)

சுஜாதா

கி.ராஜநாராயணன்

இரா. முருகன்

ஷங்கரநாராயணன்

ஜோதிர்லதா கிரிஜா

சந்திக்க விரும்பும் வலைப்பதிவாளர்கள்:

ஒருவர் (????) நீங்கலாக அனைவரையும் சந்திக்கத்தான் ஆசை.சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம்.

உங்ககிட்டே எதாவது இதுவரை சொல்லாம விட்டுருந்தாத்தானே அதையெல்லாம் புதுசா இங்கே சேர்க்க?

கேக்கறீங்களோ இல்லையோ எல்லாத்தையும் ஒப்பிச்சாச்சு. அப்படியும் தேடித்துருவிப் பார்த்ததுலே கிடைச்சதுதான் இந்த மேலே இருக்கற விவரங்கள்.


ச்சும்மா 'ஆறு'ன்னு ஆறு பதிவுக்காக இருக்கே தவிர, அங்கங்கே 5 இல்லேன்னா 4 தான் இருக்கும்.பாக்கி விட்டது இன்னும் மனசுலே வரலை.


சம்பிரதாயமா நானும் ஆறு பேரைக் கூப்புடணுமா?


இதுவரை 'ஆறு'லே கலந்துக்காதவங்க 'ஆரு'வேணா வரலாம். இதுக்குப்போய் 'யாரு'ம் வெத்தலைபாக்கு வச்சு அழைக்கணுமா என்ன? எல்லாம் இன்ஃபார்மல்:-)

Monday, July 03, 2006

நியூஸிலாந்து பகுதி 49


'வந்து குடியேறிய நாடுதான் இது'ன்ற எண்ணம் மறைஞ்சு, 'இதுதான் நம்ம நாடு'ன்ற தேசப்பற்று பரவ ஆரம்பிச்சது.இவ்வளவு அழகுள்ள நாடுன்ற பெருமிதமும் மக்கள் மனசுலே வந்துச்சு. 1890லே அண்டைநாடான ஆஸ்தராலியா( அப்ப ஆறு காலனிகளா இருந்துச்சு), இதையும் சேர்த்து ஏழு காலனிகள் இருக்கற புது நாடா பிரகடனம் செய்யலாமுன்னு கேட்டப்ப, நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்தவங்க நிறையப்பேர் இதுக்குச் சம்மதம் தெரிவிக்கலை. தனி நாடாத்தான் இருக்கணுமுன்னு விருப்பம் தெரிவிச்சாங்களாம். 1901லே ஆஸ்தராலியன் காமன்வெல்த் உருவானப்ப அதுலே நியூஸி இல்லை. ( ஒருவேளை இந்த ஆஸிகளுக்கும், நியூஸிகளுக்கும் தனித்தனி ஜோக் உண்டாக்கி ஒருத்தருக்கொருத்தர் பரிகசிச்சிக்கிறது அப்ப இருந்துதான் உண்டாச்சோ என்னவோ?)


1901 லே இங்கே இருந்து சரக்கு ஏத்திக்கிட்டு போன கப்பல்களிலே பறக்க விட்டுருந்த கொடியோட டிஸைனையே நாட்டுக் கொடியாக ஏத்துக்கிட்டாங்க. எல்லாப் பள்ளிக்கூடங்களுக்கும் இந்தக் கொடியை அனுப்பி வச்சது அரசாங்கம்.ஆழ்ந்த நீலக்கலர்லே ஒரு மூலையில் பிரிட்டிஷ் கொடியின் படமும், சதர்ன் க்ராஸ் என்ற நாலு நட்சத்திரமும் அச்சடிச்ச கொடி.


தாமஸ் ப்ரேக்கன் என்றவர் 1875லே எழுதுன 'காட் ஆஃப் நேஷன்ஸ் அட் தை ஃபீட்' என்ற பாட்டை பல பள்ளிக்கூடங்களிலும் பாடிக்கிட்டு இருந்தாங்களாம். அதையே தேசீய கீதமா ஆக்குனாங்க 1940 வருசம்.


தென்னாப்பிரிக்காலே அந்தக் காலக்கட்டத்துலே நடந்த Boer War லே பிரிட்டிஷ் படைகளுக்கு ஒத்தாசையா ஆஸ்தராலியா,நியூஸிலாந்து, கானடா இங்கிருந்து படைவீரர்கள் போனாங்க. ஆனாலும் இங்கே இருந்து போன குதிரைப்படைதான் முதல் காலனிப் படையாம். 70 வீரர்கள் போயிருக்காங்க. அதுலே ரெண்டுபேர் கொல்லப்பட்டாங்க. அவுங்க சண்டைசெய்த இடத்துக்கு 'நியூஸிலாண்ட் ஹில்'னு பேர் ஏற்பட்டது.


நியூஸியிலே இருந்து போன படைவீரர்கள், தைரியத்துலே பிரிட்டிஷ் வீரர்களுக்குச் சளைத்தவங்க இல்லையாம். அதனாலே இவுங்களையெல்லாம் 'மவொரிலேண்டர்ஸ், ரப் ரைடர்ஸ்'ன்னு கூப்புட்டாங்காளாம்.
அதுக்கப்புறம் நடந்த முதலாம் உலக மகா யுத்தத்திலே கலந்துக்கவும் இங்கிருந்து படைகள் போச்சு. கல்லிப்போலி என்ற இடத்துலே நடந்த சண்டையிலே ஆஸ்தராலியா, நியூஸி வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இறந்துபோன வீரர்கள் நினைவுநாளா ஆன்ஸாக் டே Anzac Day ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் 25 அனுஷ்டிக்கறாங்க.


போர் முடிஞ்சு திரும்ப வந்த ராணுவ வீரர்களுக்கு மறுபடி வாழ்க்கையிலே செட்டில் ஆகறதுக்கு அரசாங்கம் உதவிசெஞ்சது. பலர் பண்ணைகள் வாங்கிக்கிட்டுப் போனாங்க. ஏற்றுமதியாகுற பண்ணைப் பொருட்கள் விலை திடீர்னு உலக மார்கெட்லே குறைஞ்சதாலெ பலருக்குப் பண்ணை வேலைகளிலே தாக்குப் பிடிக்க முடியலை.


சினிமாவும் நுழைஞ்சது. எல்லாம் ஊமைப் படங்கள்.


1922லே முதல் ரேடியோ ஒலிபரப்பு. வீடுகளிலெ ரேடியோ வச்சிருந்தா அவுங்க மதிப்பே உயர்ந்துருமாம்.


இதே காலக் கட்டத்துலேதான் மோட்டார்கார்கள் இங்கே வந்துச்சு. லைட், பெட்ரோல் எஞ்சினுக்குள்ளே போறதுக்கு பம்ப் இப்படி இருந்தாலும், டயர் ஒண்ணும் சரி இல்லையாம். அதனலே எப்பவும் ரெண்டு டயர்கள் கூடுதலாவச்சுக்கிட்டே இருக்கும்படி ஆச்சாம். ரோடுங்களும் கார் போற நிலையிலே இல்லையே. புதுசா ரோடுங்க போட்டே ஆகணும்.


வண்டிகளுக்குப் பெட்ரோல் அடிக்க பெட்ரோல் பங்க் எல்லாம் கிடையாதாம். பலசரக்குக் கடைகளிலே நாலு கேலன் டின்னுகளிலே பெட்ரோல் விப்பாங்களாம். அதை வாங்கி வண்டிகளுக்கு ஊத்திக்கணும். பனிகாலத்துலே டயர் வழுக்காம இருக்க சங்கிலி மாட்டிக்கணும். ஒரு 50 கிலோ மீட்டர் போக நாலு மணி நேரம் ஆகுமாம்.


அப்பவே பெட்ரோல் வரின்னு ஒண்ணு ஏற்பாடு செஞ்சு, அதுலே வந்த வருமானத்தை வச்சு நல்ல ரோடு போட்டு இருக்காங்க.


1926 லே போதுமான வருமானம் இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு அரசாங்கம் 'இன்கம் சப்போர்ட்'ன்னு வாரம் இவ்வளவுன்னு காசு கொடுத்து உதவுச்சு. அதுவும் இங்கத்துக் குடிமக்களுக்கு மட்டும். விதேசிகள், கெட்டவங்க,கல்யாணம் கட்டிக்காம குழந்தை பெத்து வச்சுருக்கறவங்கன்னு ஒரு லிஸ்ட் போட்டு வச்சு, அவுங்களுக்குக் கையைவிரிச்சது. அப்ப திருமண பந்தத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் இருந்துருக்கு.


1929லே இன்னொரு இறக்கம் வந்துச்சு. 6000 பேருக்கு வேலை இல்லாமப் போச்சு. எல்லாரும் கஷ்டப்பட்டுக்கிட்டு எப்படியாவது சமாளிக்கலாமுன்னு பார்த்தா, ஏற்றுமதிக்குச் சரியான விலை கிடைக்காம நிலமை இன்னும் மோசமாப் போச்சு. ஒரே வருசத்துலே வேலை இல்லாத ஆட்களொட எண்ணிக்கை இன்னும் உயர்ந்து 11000 ஆயிருச்சு.


அரசாங்கத்துக்குக் கவலையாப் போச்சு. உள்ளூர் ஆட்சி நடத்தற கவுன்சில், இன்னும் பெரிய வியாபார நிறுவனங்கள் எல்லாரையும் கலந்து ஆலோசிச்சு புது வேலைவாய்ப்புகள் பெருக ஒரு திட்டம் போட்டுச்சு.


இதுதான் ஸ்க்கீம் 5. அஞ்சாம் திட்டம். அந்தந்த நகரசபைகள் உள்ளூர் ஆம்புளைகளையும், பசங்களையும் வச்சு ஊரையும், தெருக்களையும் சுத்தம் செய்யறது. புது ரோடுகள், தெருவுகளிலே ரெண்டு பக்கமும் மரம் நடறது, கழிவுநீர் கால்வாய் வெட்டுறது, நகர சபைக்குச் சொந்தமான பார்க், பூந்தோட்டம் இங்கெல்லாம் களைகளைப் பிடுங்கி,ஒழுங்குபடுத்திப் பராமரிக்கிறதுன்னு வேலைகளைக் கொடுத்துச்சு.


சுற்றுலாப்போற இடங்களுக்கும் வசதிகள், அருமையான ரோடுகள் எல்லாம் உருவாச்சு. இது இல்லாம ஆயிரக்கணக்கான பைன் மரங்களை குன்றுச் சரிவுகள், சமவெளிகள்னு எல்லா இடத்திலும் நட்டு வச்சாங்க.

பள்ளிக்கூடங்களுக்கும்விளையாட்டு மைதானமெல்லாம் சீர் செய்யறதுக்கும் இந்த திட்டம் 5 உதவி செஞ்சது. வேலை கொடுக்கணுமுன்றதுமுக்கிய நோக்கமா இருந்ததாலே, மெஷின்களை உபயோகிக்கலை. 'மண்வெட்டியிலே கொத்திக் கிளறி'ன்னு மெதுவா வேலைகள் நடந்துச்சு. எவ்வளோ நாள் இழுக்குதோ அவ்வளோ நாள் வேலை இருக்குமே! சம்பளம் என்னவோ கம்மிதான்.ஆனா, பசி பட்டினியிலே இருந்துக் காப்பாத்திக்க முடிஞ்சது.


இந்தக் கஷ்ட நிலமை 1935வரை நீடிச்சது. சரியான துணிமணிகள், வீடுகள், காலணிகள் இல்லாம ரொம்பக் கஷ்டம் தானாம்.வாடகை கொடுக்கமுடியாத நிலை வந்தப்ப ஒரு வீட்டை மொத்தவாடகை பேசிக்கிட்டு, ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு குடும்பம் வசிச்சது.( இந்த நிலமை பூனா, பாம்பேயிலே இருந்தது ஞாபகம் வருது) வெளியே ஷெட் போட்டுக்கிட்டு ஜனங்க இருந்தாங்க. இதாலே சுகாதாரம் வேற பாதிக்கப்பட்டுச்சு. மாவு வர்ற சாக்கையெல்லாம் பிரிச்சு, அதையே துணிகளாத் தச்சுப் போட்டுக்கிட்டாங்களாம். ஷூ தேஞ்சுபோனா, உள்ளே கார்ட்போர்டு அட்டைகளை வெட்டி வச்சுக்கறதாம்.இந்தக் குளுருக்கு எப்படித்தான் தாக்குப் பிடிச்சதோ?

Saturday, July 01, 2006

எவ்ரிடே மனிதர்கள் : 7 நைனம்மா

"அதோ அந்தப் பார்க் பெஞ்சுலே உக்காந்துக்கிட்டு, பையிலே இருக்கற காய்களையெல்லாம்எடுத்து முன்னாலே வச்சுக்கிட்டு, இது நாலணா, இது எட்டணான்னு ஒவ்வொண்ணுக்கும் விலையை வாய்விட்டுச் சொல்லி நல்லா மனசுக்குள்ளே பதிய வச்சுக்கிட்டு இருக்கறது யாரு?"


அஞ்சு நிமிஷம் இந்தக் கணக்கெல்லாம் போட்டுட்டு, கையிலே இருக்கற ச்சில்லறையை எண்ணி அதுலே கொஞ்சத்தை எடுத்து, இடுப்புலே நல்லா முடிஞ்சுக்கிட்டு, காயை எல்லாம் வாரிப் பையிலே போட்டுக்கிட்டு மெதுவா எழுந்து நடையைக் கட்டுறாங்க.


"அட... யாரு இப்படி எல்லாம் செய்யறதுன்னு கேக்கறேன்லே?"


"வேற யாரு. நைனம்மாதான்."


"யாரோட நைனம்மா? உங்க நைனாவோட அம்மாவா?"


"இல்லைப்பா. அவுங்க வீட்டுலே புள்ளைங்க எல்லாரும் நைனாம்மான்னு கூப்புடுதுங்க இல்லெ. அதைப் பார்த்துப்பார்த்து இப்ப எல்லோரும் அவுங்களை அப்படித்தான் கூப்புடறொம்."


"ஓஹோ..அப்படியா."


"ஆமாம். நீ பார்க்குன்னு சொன்னியே எந்தப் பார்க்? மொதல்லே அங்கே ஏது பார்க்?"


"பஞ்சாயத்து அங்கே பூங்கா வைக்கப்போறொமுன்னு சொல்லி இடம் ஒதுக்கி வச்சுருக்கறது நிஜமாவே உனக்குத் தெரியாதா? மரம்கிரம் வர்றதுக்கு முன்னாலேயே நாலு காங்க்ரீட் பெஞ்சுங்களைக் கொண்டுவந்து நாலு பக்கமும் போட்டு வச்சுட்டாங்கல்லெ. அதைத்தான் சொல்றேன்."


"என்னாத்துக்கு அந்தப் பெரியம்மா, அதாம்ப்பா, நைனாம்மா தினம் இப்படிச் செய்யுது?"

"அது ஒண்ணுமில்லை. நைனம்மாவோட மருமக டீச்சரா இருக்குது. காலையிலேயே சமையலை முடிச்சுக்கிட்டுப் பசங்களுக்கும், தனக்குமா டிபன் பாக்ஸ்லே சோறு எடுத்துக்கிட்டுப் போகணும்.சமையலுக்கு ஒரு ஆள் வச்சிருக்காங்கதான். ஆனா காலையிலே காயெல்லாம் வாங்குனாத்தான் ஃப்ரெஷா இருக்குமாம். அதுக்குக் காய் வாங்கற டூட்டியை நைனம்மா தானே எடுத்துக்கிச்சு."


"வயசாச்சுலே. ராத்தூக்கம் அவ்வளவா இல்லை. பொழுது விடியுதான்னு கொட்டக்கொட்ட முழிச்சுக்கிட்டு இருக்கும். பலபலன்னு பொழுது விடியறப்பயே எழுந்து, குளிச்சுட்டு, நெத்தியிலே தாயாராட்டம் ஒ ருநாமத்தைப் போட்டுக்கும்."


"அது நாமம் இல்லை. திருஷ்ணமுன்னு சொல்வாங்க."


"சரி.. ஏதோ ஒண்ணு. சாமியைக் கும்புட்டுக்கும். அதுக்குள்ளெ மருமக எழுந்து வந்துருமாம். அன்னிக்கு என்ன சமையல், என்னென்ன வாங்கணுமுன்னு கேட்டுக்கிட்டு, பையைத் தூக்கிக்கிட்டு கிளம்பிரும்.நல்லா வெடவெடன்னு ஒல்லியா இருக்குல்லே, வேகம்வேகமா நடந்து போறதைப் பாக்கணுமே."


"ரயிலடிக்கு பக்கத்துலே கூடைக்காரங்க வந்து கடை பரத்தறதுக்குள்ளே இந்தம்மா ஆஜராயிரும். முக்காவாசிநாளு இவுங்கதான் போணி பண்ணறது. அதுனாலே கொஞ்சம் இப்படி அப்படிக் குறைச்சுக் கொடுக்கறதுதான்.அதுக்கப்புறம் தான் இருக்கு வேடிக்கை. பார்க்கைத் தாண்டித்தானே போகணும். அப்பக் கொஞ்ச நேரம் அங்கேஉக்காந்துக்கும்."


"பாவம். வயசாச்சுல்லே. ரெஸ்ட் எடுத்துக்கிட்டுப் போகும்போல. இதுலே என்ன வேடிக்கை?"


"ம்ம்.. நாலணாவுக்கு வாங்குன காயை அஞ்சணா, ஆறணாவுக்கு வாங்குனதை எட்டணான்னு இதுவேஒரு கணக்குப் போட்டுக்கிட்டு, அதிகப்படி வர்ற ச்சில்லறையை எடுத்துத் தனியா வச்சுக்கும். வூட்டுக்குப்போனதும், மருமககிட்டே, இது அஞ்சணா, இது எட்டணான்னு எல்லாத்துக்கும் ஒரு கணக்கைச் சொல்லிட்டு,இந்தாம்மா நீ கொடுத்ததுலே பாக்கின்னு மீதிக்காசைக் கொடுக்கும். அந்த மருமகளும், காலையிலே அரக்கப்பரக்க வேலையை முடிக்கற அவசரத்துலே இருப்பாங்க. கணக்கெல்லாம் வேணாம் அத்தை. யாரு கேட்டா?நீங்க காயை இப்படிக் கொடுங்க. நான் நறுக்கிக் கொடுத்துட்டு மத்தவேலையைப் பாக்கறென்னு சொல்லும்."


"இந்தம்மா, அதையெல்லாம் காதுலேயே போட்டுக்காது. சொல்ற கணக்கை ஒருதரத்துக்கு ரெண்டுதரமாச் சொல்லிட்டுத்தான் நகரும். தினம் இதே கதைதான்."


"ஆமாம். இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? "


"அங்கே சமையலுக்கு இருக்கறது எங்க பக்கத்து வீட்டு செல்லமாக்கா தானே. அது சொல்றதுதான்."


"இது என்னாப்பா , என்னத்துக்கு இந்தம்மா இப்படி காசு அடிக்குது? விசித்திரமா இருக்கே."


"இதுக்கே விசித்திரமுன்னா, இனி நாஞ்சொல்லப் போறதுக்கு என்ன சொல்வியோ?"


"சொல்லு, சொல்லு."


"சமையல் முடிஞ்சதும், ச்சின்னச்சின்ன கிண்ணம் கொண்டுவந்து, கொழம்பு, ரசம், காய், கூட்டு எல்லாம் ஒரு ஆளுக்கு வேணுங்கற அளவு எடுத்துத் தனியா அடுக்களை அலமாரியிலே வச்சிருமாம்."


"ஒருவேளை, ஆச்சாரமா இருக்கறவங்களோ என்னமோ?"


"அதெல்லாம் இல்லையாம். இப்படி எடுத்து வச்சிட்டு, கொஞ்சம் தண்ணி எடுத்து, குழம்பு, ரசத்துலே கலந்து வச்சுருவாங்களாம்."


" அய்யய்யோ"


"டீச்சரும், புள்ளைங்களும் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு ஸ்கூலுக்குச் சீக்கிரம் போயிருவாங்களாம்.மகனுக்கு கொஞ்சம் லேட்டாத்தான் போகணுமாம். மகன் சாப்புட வர்றப்ப, எடுத்து வச்சிருக்கறதைக் கொண்டுவந்து தானே பறிமாறுமாம்."


"அடக் கடவுளே.... அப்ப எடுத்து வச்சது, தான் சாப்புடறதுக்கு இல்லையா?"


"ம்ஹூம்..... தண்ணியைக் கலந்து வச்சுருச்சே, அந்தக் குழம்பைதான் தான் ஊத்தித் தின்னுமாம்.சில்லரைக் காசுங்களையெல்லாம் அப்பப்ப நோட்டா மாத்திச் சுருட்டி இடுப்புலேயே எந்நாளும் வச்சுக்குமாம்."


"நைனம்மாவுக்கு எத்தனை பசங்களாம்?"


"ஒரு பொண்ணு, ஒரு பையன். அவ்ளோதான். நல்லா செல்வாக்கா இருந்தவங்களாம். பொண்ணை வேற ஊர்லே கட்டிக் கொடுத்துருக்கு. இந்தப் பையந்தான் கொஞ்சம் தாம்தூம்னு செலவழிக்கற ஆளாம். ஷோக்கும் ஜாஸ்தியாம்.நிறைய நகைநட்டை பையன் தலையெடுத்துதான் அழிச்சுட்டாராம். பாட்டியம்மாவுக்கு எப்பவாவது தலைவலின்னு நம்ம செல்லமாக்கா தலையை அமுக்கிப் புடிச்சுவிடுமாம். அப்பப் பார்த்துருக்காம் உச்சி மண்டையிலே ஒரு ச்சின்னக்குழி இருக்குமாம். அந்தக் காலத்துலே உச்சிபில்லை எப்பவும் வச்சுப் பழகி இப்படி ஆயிருச்சாம்."இதெல்லாம் நடந்து ரொம்ப நாளைக்கப்புறம் இவுங்க மறுபடி சந்திக்கறாங்க. மறுபடி பேச்சு நைனம்மாவைப் பத்தி வருது."ஏம்ப்பா, இப்பெல்லாம் அந்த நைனம்மாவைக் காணொமே? என்ன ஆச்சு? எதாவது உடம்பு சரியில்லாமக்கிடக்கறாங்களா, என்ன?"


"இல்லைப்பா. கொஞ்ச நாளைக்கு முன்னாலே பையனுக்கும், அம்மாவுக்கும் பலத்த சண்டையாம். பொண்ணு வீட்டுக்குப் போறேன்னு கிளம்பிப் போயிருச்சாம்."


"அடடா... அப்பக் காயெல்லாம் யாரு வாங்கியாறாங்க?"


"டீச்சரம்மாவே ஸ்கூலு முடிஞ்சு போகச்சொல்ல வாங்கிட்டுப் போயிடறாங்களாம்."


இன்னும் சிலமாதங்களுக்குப் பின்."என்னப்பா, டீச்சரு வூட்டுலே எதாவது விசேஷமா? வாசல்லே பந்தல் போட்டுக் கூட்டமா இருக்கு."


"நம்ம நைனம்மா தவறிடுச்சாம்ப்பா. அதுக்கு கருமம் பண்ணிக்கிட்டு இருக்காங்க."


"அடடடா....எப்பவாம்? எங்கே, பொண்ணு வூட்டுலேயா?"


"இல்லைப்பா. பொண்ணு வூட்டுக்கே போகலையாமே. ரொம்ப நாள் கழிச்சு, சொந்தக்கார் வீட்டு விசேசத்துலே அக்காவைப் பார்த்தப்ப அம்மா எப்படி இருக்கு? ன்னு கேட்டுருக்கார். அப்பத்தான் தெரிஞ்சதாம் அம்மா அங்கே போகவே இல்லைன்னு."


"அப்புறம்?"


"இந்தம்மா கோச்சுக்கிட்டு, திருப்பதியிலே போய் அங்கேயெ தங்கிருச்சாம்,சத்திரத்துலே அங்கெ இங்கேன்னு.அப்புறம் இவரோட நண்பர் ஒருத்தர் பார்த்துட்டுவந்து சொன்னாராம். மருமக கிளம்பிப் போயிருக்கு. அங்கேபோய் கேட்டப்ப, 'மூணுநாளைக்கு முன்னாலே இங்கே இருந்த ஒரு பாட்டியம்மா செத்துப்போச்சு. யார் என்னன்னு விவரம் இல்லை. நாங்களே தர்மக் கொள்ளி போட்டுட்டோம். அந்தம்மா இடுப்புலே மூணாயிரத்துச் சொச்சம் ரூபாநோட்டு சுருட்டி வச்சிருந்தது. இதான் அந்தப் பாட்டியம்மாவோட மாத்துப் பொடவை, கழுத்துலே போட்டுருந்த துளசி மாலைன்னு காமிச்சிருக்காங்க. போனது மாமியாருன்னு உறுதி ஆகிப்போச்சு.


அந்தக் காசை கோயில் உண்டியிலெ போடச் சொல்லிட்டு, அந்தப் பொடவையை மட்டும் வாங்கிக்கிட்டு டீச்சர் வந்துட்டாங்க. அதான் இன்னிக்குக் கருமாந்திரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க."


"த்சு த்சு த்சு...... பாவம்ப்பா"


( கொஞ்சம் நடையை மாத்திப் பார்த்தேன். சம்பவம் என்னவோ உண்மைதான்.)

---------

அடுத்தவாரம்: ஸ்டீவன்-
----------


நன்றி: தமிழோவியம்