நேத்து நடந்த சம்பவத்தினால் எனக்கு மனசே ஆறலை. எல்லாம் அந்தக் கைடுகள் விஷயம்தான். யார் எங்கே எப்படின்னு ஒரே குழப்பம். இவர்கிட்டே சொன்னால்..... வேற யாராவது கைடு வேணுமுன்னு வந்துருப்பாங்க. அவுங்களொடு போயிருப்பாங்கன்றார். நெருங்கிய தோழிகளில் ஒருத்தருக்குச் சம்பவத்தை எழுதி அனுப்பிட்டுத்தான் தூங்கப் போனேன். மறுநாள் காலை எட்டேமுக்காலுக்குக் கிளம்பி மதுரா நகருக்குள் போறோம். எங்கியாவது கண்ணில் படமாட்டாரா இந்த ராஜேஷ்ன்னு கண் தேடுனதென்னவோ நிஜம்.
பார்க்கிங் னு போட்ட குறுகலான வாசலில் நுழைஞ்சால்.....சின்னதா ஒரு இடம். நாலைஞ்சு கார்களை நிறுத்தலாம். ப்ரைவேட் பார்க்கிங். நாலைஞ்சு மரமும் கற்குவியலுமா இருக்கு. கற்குவியல்மேல் வச்ச ஒரு சாமியை அணில் கும்பிட்டுக்கிட்டு இருந்துச்சு. நெச அணில்தான்! வண்டியை விட்டுட்டுக் கோவிலை நோக்கிப் போனோம்.
நடுவில் கம்பி கிராதி வச்ச தெரு. வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. ரெண்டு பக்கமும் கடைகள் ரொம்பி வழியுது. சாமி சமாச்சாரம், பால், இனிப்பு வகைகள், அலங்காரப்பொருட்கள், வளையல்கள் இப்படி....
மாடுகளுக்குத்தான் முதல் உரிமை
கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம். அலங்கார நுழைவு வாசலில் இருபுறமும் ஈட்டி பிடிச்சு நிற்கும் காவலர் இருவரின் ரெண்டாளுயரச் சிலை. என்னென்ன கொண்டு வரக்கூடாதுன்னு விஸ்தாரமான அறிவிப்புகள். 'ஸாமான் கர்' ன்னு க்ளோக்ரூம்கள் ரெண்டு மூணு இடத்துலே இருக்கு. கோவிலையொட்டியே இருக்கும் பெரிய கட்டிட வளாகத்தில் பக்தர்கள் கூட்டம். ஈரப் புடவைகளை ஒரு பக்கம் கம்பித்தடுப்பில் கட்டிவிட்டு மறுமுனையைப் பிடிச்சுக்கிட்டுக் காயவைக்கும் பலர், தரையில் கூட்டமா உக்கார்ந்து குடும்பத்தோடு கதை பேசும் பலர்ன்னு அந்த இடமே ரொம்பக் கலர்ஃபுல்லா இருக்கு.
செல்ஃபோன்கள், கேமெரா எல்லாத்தையும் ஒரு பையில் போட்டுக் கொடுத்துட்டு அடுத்த ஸ்டாலில் செருப்புகளை ஒப்படைச்சுட்டுக் கோவில் வாசலுக்குப் போனால் செக்யூரிட்டி பலமா இருக்கு. ஆண்கள் பெண்கள்ன்னு தனித்தனியா எலெக்ட்ரானிக் கேட். பெண்கள் மட்டும் பக்கத்துலே ஒரு அறை போல கட்டியிருக்கும் பகுதிக்குள் போய் வரணும். தொட்டுத்தடவுதலை விஸ்தாரமாச் செய்யறாங்க. தடவுதல் என்பது தழுவுதலா ஆகி இருக்கு. யக்.....அருவருப்பா உணர்ந்தேன்:(
காவல் பெண்டிர் லெஸ்பியனா இருப்பாங்களோன்னு சம்சயம். மற்றவர் படும் அவஸ்தையை அனுபவிப்பதுபோல் அவுங்க முகம் இருந்துச்சு. கோவிலுக்கு வந்துட்டு இப்படியெல்லாம் சொல்லக்கூடாதுதான்....ஆனா..... சொல்ல வைக்கறாங்களே:(
கோவில் பாதுகாப்புன்னு சொன்னாலும் இப்படி ஒரு வன்முறைகளால் நல்லா இருந்த சமூகத்தைக் கெடுத்துவச்ச அந்த ஆரம்ப கர்த்தாக்களை (அவுங்க யாரா இருந்தாலும்)மனம் சபிச்சதென்னவோ உண்மை.
முன்வாசல் கடந்துவளாகத்துக்குள்ளே போனால் இவர் மட்டும் நிக்கறார். ப்ரதீபைக் காணோம். அஞ்சு நிமிசம் ஆச்சு அவர் வந்து சேர்ந்துக்க. வண்டி சாவி அவர் பையில் இருந்துச்சாம். அதைக்கூடக் கொண்டுபோகக் கூடாதுன்னுட்டாங்களாம். அதை நம்ம செல்ஃபோன் பையிலே வச்சுட்டு வந்தாராம். சின்ன பர்ஸ் மட்டும் காசோடு உள்ளே கொண்டு போகலாம்.
நல்ல பெரிய வளாகம். கொஞ்சதூரத்துலே இடதுபக்கத்துலே ஒரு செயற்கைக் குன்று. ஆடுமாடுகள் மேய்ஞ்சுக்கிட்டு இருக்குதுங்க. குன்றுக்குள்ளே போய்ப் பார்க்கலாம். அதுக்கு தனி டிக்கெட்டு. (இப்பப் புரிஞ்சுருக்கும் பர்சை மட்டும் கொண்டுபோக அனுமதிச்ச காரணம்!)
அப்புறமா இங்கே வரலாமுன்னு முதலில் கண்ணன் பிறந்த இடத்தை நோக்கிப் போனோம். போகும் வழியிலே வெட்டவெளியான ஒரு முற்றத்தில் துளசிச்செடிகளும் யாகம் செய்ய யாககுண்டமுமான ஒரு அமைப்பு.
படிகள் ஏறிப்போனால் பக்கச்சுவர்களில் டெர்ரகோட்டா புடைப்புச் சிற்பமா சில. பெரிய ரதம் நிக்குது. தேவகியும் வசுதேவரும் பயந்த முகங்களோடு ஒரு பக்கம். கையில் வீசிப்பிடிச்ச வாளொடு கோபாவேசமா நிக்கும் கம்ஸன் ஒரு பக்கம். இன்னொன்னில் வசுதேவரும் தேவகியும் கைகளில் பூட்டிய விலங்கோடு உக்கார்ந்துருக்காங்க. இன்னொன்னில் ஆண் குழந்தையொன்னை தலைகீழா ஒரு காலைப்பிடிச்சுத் தூக்கிக்கிட்டு நிற்கும் கம்ஸன். அடுத்த கையில் ஓங்கிய வாள். கட்ரா கேஷவ்தேவ் ன்னு பெயராம் இந்தப் பகுதிக்கு.
தங்கையின் எட்டாவது குழந்தையால் மரணம் ன்னு அசரீரி கேட்டதும், புதுமணத் தம்பதிகளை அப்படியே சிறையில் அடைச்சு வச்சுட்டான் கம்ஸன். நான் மட்டும் கம்ஸனா இருந்தால் தனித்தனி அறைகளில் அடைச்சு வச்சுருப்பேன். ஒவ்வொரு குழந்தையாப் பிறக்கப்பிறக்க அதைக் கொலை செஞ்சுக்கிட்டே இருக்கான். எட்டாவது குழந்தை பிறந்ததும் தாய்தகப்பனுக்கு நெஞ்சம் பதறுது. பிறந்தவன் விஷ்ணு. பயப்படாதீங்க. எனக்கு ஒன்னும் ஆகாது. என்னைக்கொண்டுபோய் கோகுலத்தில் யஷோதாவிடம் விட்டுட்டு அங்கே இப்போதான் பிறந்த குழந்தையை இங்கே தூக்கிவந்துருங்கன்னு குழந்தையை மாற்றச் சொல்லி ஐடியா கொடுக்கறார். இந்தச்சிறையில் இருந்து எப்படி அங்கே போவதுன்னு கேட்ட தந்தையிடம் எல்லோரையும் மயங்கிக்கிடக்கச் செஞ்சுட்டேன். சிறைக்கதவு எல்லாம் திறந்து வச்சாச்சு. சீக்கிரம் கிளம்புங்க'ன்னார். பொறந்தவுடன் என்னாப் பேச்சு பேசுது பாருங்களேன்???
வசுதேவர், குழந்தையைக் கூடையில் வச்சுத் தலையில் தாங்கிக் கொண்டு போறார். ஜெயில் கதவுகள் கோட்டைக்கதவுகள் எல்லாம் பாம் ன்னு திறந்துகிடக்கு. ஆனால் மழையான மழை. பேய்மழையில் குழந்தை நனையாமல் வருது. எப்படி? ஆதிசேஷன் குடை பிடிச்சுக்கிட்டு வர்றார் கூடவே. யமுனை நதிக்கரைக்கு வந்துட்டாங்க. வெள்ளம் அடிச்சுக்கிட்டு போகுது. தயங்குன வசுதேவருக்கு யமுனை ரெண்டாகப்பிரிஞ்சு வழிவிடுது.
மறுகரையில் கோகுலம். அங்கே போனால் நந்தகோபர் வீட்டுலேயும் எல்லோரும் மயங்கிக் கிடக்கறாங்க. யஷோதாவின் அருகில் அப்போதான் பிறந்த பெண் குழந்தை ஒன்னு. சட்னு இந்தக் குழந்தையை அங்கே வச்சுட்டு அந்தக் குழந்தையைத் தூக்கிக் கூடையில் வச்சுக்கிட்டுப் போனவழியே திரும்பிடறார் வசுதேவர்.
திரும்ப சிறைக்கு வந்து சேர்ந்ததும் கதவுகள் எல்லாம் முன்னைப் போலவே அடைபட்டது. மயக்கம் தெளிஞ்சு எல்லோரும் விழித்தெழுந்தாங்க. தேவகி வசுதேவர் இருந்த அறையில் குழந்தை அழும் சத்தம். ஆஹா....குழந்தை பிறந்துருச்சுன்னு ஓடிப்போய் ராஜா கம்ஸனிடம் சொன்னாங்க. ஓடோடி வந்தான் குழந்தையைக் கொல்ல.
இங்கே வந்து பார்த்தால் பொண் குழந்தை பிறந்துருக்கு. பையனால்தானே உன் உயிருக்கு ஆபத்து.. இதுதான் பொண்ணாச்சே. விட்டுருன்னு தேவகி கெஞ்சறாள். யாரு கண்டா இதுவே என்னைக் கொன்னாலும் கொன்னுருமுன்னு குழந்தையைத் தூக்கி மேலே வீசி அது கீழே விழும்போது சாவட்டுமுன்னு கத்தியை அதுக்கு நேரே பிடிச்சுக்கிட்டு நிக்கறான் மாமன்.
அதிசயத்திலும் அதிசயமா மேலே போன குழந்தை கீழே வராம, இன்னும் மேலேமேலே போய்க்கிட்டு இருக்கு. எப்படி? இது காளியின் சொரூபம். டேய் முட்டாள். நான் மகாகாளி. உன்னைக் கொல்லப்பிறந்தவன் வேற இடத்தில் இருக்கான்னு சொல்லிட்டு மறைஞ்சு போச்சு அந்தக் குழந்தை. அதுதான் யோகமாயா.
நடுங்கிப்போன கம்ஸன் அந்த ஏரியாவில் இருக்கும் 'புதுக் குழந்தைகளை'யெல்லாம் பிடிச்சுக் கொன்னு இன்னும் தன் பாவத்தை கூடுதலா ஆக்கிக்கிட்டான். இப்படிப்போகுது கதை.......
நேரா ஒரு சந்நிதி, யோகமாயாவுக்கு. வலப்பக்கம் இருந்த சின்ன சந்துபோல ஒரு ஆள் மட்டுமே போகமுடியும் என்ற அளவில் இருந்த வாசலில் நுழைஞ்சால் பெரிய பெரிய கற்களால் கட்டுன கோட்டைப்பகுதி மாதிரி இருக்கு. நமக்கு வலப்பக்கம் பெரிய கதவுகளோடு ஒரு அறை. உள்ளே போனால் நமக்கு நேராக இதே போல் ஒரு வாசல். வலப்பக்கம் ஒரு மேடை. இந்த மேடைதான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இடம். மேடைக்கு நேரெதிரே ஒரு வாசல் இருந்து இப்போ அதை அடைச்சு வச்சுருக்காங்க. சிறைச்சாலைன்னு தமிழ்சினிமா சரித்திரப்படங்களில் பார்த்ததுபோல் பெரியபெரிய ப்ளாக் கற்கள். ஒவ்வொரு கல்லுக்கும் நடுவில் ஒரு வட்டம் இப்படி டிஸைன் இருக்கு. காராக்ரஹம்தான். மேற்கூரை நல்ல உசரமா இருக்கு. மேடையின் மேல் ஒரு சின்ன விக்கிரஹம். கொஞ்சம் பூ. மேடைக்குப்பின் சுவரில் சில படங்கள்.அவ்ளோதான். மேடைக்குப் பக்கத்தில் ஸ்டூல் போட்டு ஒரு பண்டிட் உக்கார்ந்துருக்கார் இந்த இடத்தில்தான் 'யஹிபர் ஸ்ரீகிஷன்கா ஜனம் ஹுவா'ன்னார்.
இதுதான் கருவறை( வெளியே கிடைச்ச படம்)
ஒரு அஞ்சு நிமிசம் மேடைக்கு எதிரா உக்கார்ந்துட்டு வந்தேன். தியானம் செய்ய மனசு ஒருங்கலை. மக்கள் இந்தக் கதவுலே நுழைஞ்சு மேடையைப் பார்த்துட்டுத் தொட்டு வணங்கிட்டு எதிர்க்கதவுலே கடந்து போய்க்கிட்டே இருக்காங்க.
அசப்புலே பார்த்தால் சீக்கியர்கள் கோவிலைப்போல வெங்காயக்கூம்பு, மொத்தம் மூணு கூம்பு. நடுவில் இருக்கும் பெரிய வெங்காயம்தான் கிருஷ்ணருக்கு.(படம் போன பதிவில் இருக்கு)
சரியாச் சொன்னா இந்த வெங்காயக் கூம்புன்றது மசூதிகளுக்கு மட்டுமே. இந்துக் கோவில்களுக்கும் சீக்கிய கோவில்களான குருத்வாராக்களுக்கும் பூண்டு கூம்புன்னு சொல்லணும். பூசணிக்காய் கீற்றுப்போல வரிவரியாய் அசல் பூண்டுப்பற்கள் போல இருக்குன்றதைக் கவனிச்சேன்.
கும்பிட்டு வெளியே வந்து இந்தக் கட்டிடத்தின் கூடவே ஒட்டி வளர்ந்துருக்கும் கட்டிடத்தின் படிகளில் ஏறி இன்னும் மேலே போனால்...... பிரமாண்டமான ஒரு பெரிய ஹால். ஏகப்பட்ட தூண்கள். சதுரவடிவான தூண்கள் எல்லாமே. ஒவ்வொரு தூணிலும் ராமாயண, மகாபாரதக் காட்சிகள். ஒரு புறமா இருக்கும் சந்நிதிமேடையில் பளிங்குச்சிலைகளா கடவுளர்கள். ரொம்ப அழகான முகங்கள். பார்க்கப்பார்க்கக் கண் நிறைஞ்சு போகுது. விஷ்ணுவின் தசாவதாரங்களைக் கோட்டுச்சித்திரமா வரைஞ்சு (எல்லாமே பெரிய சைஸ்) சந்நிதிக்கு வெளிப்புறப் பகுதியில் சுற்றிவர மாட்டி இருக்காங்க. எல்லா ஓவியங்களும் கண்ணாடிக்குப் பின்புறம். நல்லவேலை/வேளை!!!! . நம்மாட்கள் தொட்டுத்தொட்டே சீக்கிரம் பாழ் பண்ணி இருப்பாங்க.!
அங்கங்கே சில சந்நிதிகள். ஆஞ்சநேயர் ஒருத்தர் கம்பீரமா நிக்கறார்.
உட்புறக்கூரை நல்ல உயரம். சர்ச்சுலே இருப்பதுபோல் இருக்கு. விதானங்களில் வண்ணச்சித்திரங்கள். முக்காலும் கண்ணனின் ராசலீலைகளே!
ஹாலின் கடைசியில் இந்தக் கோவில் கட்டியக் கைங்கரியத்தைச் செய்த மூவர் சிலைகள். பிர்லா, டால்மியா, இன்னொரு சாமியார்.
சுற்றிவர இருக்கும் மொட்டைமாடிகள், மாடங்கள், மூலைகள் பூராவும் ஆயுதமேந்திய ராணுவம். கம்ஸன்கூட காவலுக்கு இத்தனை பேரை வச்சுருந்துருப்பானான்றது சந்தேகம். இந்தக் கோவிலைப்பொறுத்தவரை வயசையே நிர்ணயிக்க முடியாது. பலமுறை செத்துச் செத்து மறுஜென்மம் எடுத்துருக்கே. இப்போதைய வயசு இருபத்தியெட்டு.
படி இறங்கிக்கீழே வந்தால் கோவிலுக்குள்ளேயே ஏகப்பட்டக் கோவில்கடைகள். பத்து ரூபாய்க்கெல்லாம் ஒரிஜனல் (?) சாளக்ராம் முட்டைவடிவில் கிடைக்குது. நர்மதை நதியில் எடுத்தவையாம். ரெண்டு கட்டைவிரல் நகங்களுக்கிடையில் வச்சு அது சுத்துவதைக் காமிச்சு இது ஒரிஜனல்ன்னு சாதிக்கிறார் கடைக்காரர். கோவிலைவிட்டு வெளிவருமுன் பத்துரூபாய் டிக்கெட் எடுத்து குன்றினடியில் போய்ப் பார்த்தோம். சின்னச்சின்ன மாடங்களில் சாமிச் சிலைகளும், ஆதிசேஷனுமா இருந்தாங்க.
கோவிலைச்சுத்தி வெளிப்புறம் பரிக்கிரமா போயிருந்தால் தீர்த்தக்குளங்களைப் பார்த்திருக்கலாம். போகலை:(
இந்தக்கோவில் அந்த நூற்றியெட்டில் ஒன்னு.
தொடரும்..................:-)
Monday, November 29, 2010
ஜென்மபூமியில் ஜென்மஸ்தான்.
Posted by துளசி கோபால் at 11/29/2010 05:13:00 PM 16 comments
Labels: அனுபவம் Mathura
Friday, November 26, 2010
அஞ்சாம் கோவிலாம், இந்தக்கோவில்
வாங்க. ஜென்மபூமி கோவிலுக்குப் போகலாம். போய்ச்சேருமுன் தலவரலாற்றைப் பார்க்கலாம். கொஞ்சமாவது ஹோம் ஒர்க் செஞ்சுக்கிட்டுத்தான் சரித்திர டூர் போகணும்,ஆமாம்.
ஸ்ரீகிருஷ்ணரின் மறைவுக்குப்பின் அவர் மகன் ப்ரத்யும்னன், அவருக்குப்பிறகு பேரன் அநிருத்தன், அவருக்கும்பின் கொள்ளுப்பேரன் வஜ்ரநாபன்ன்னு வரிசையா நடந்த ஆட்சியில் இந்த கொள்ளுப்பேரந்தான் கொள்ளுத் தாத்தாவுக்காக அவர் பிறந்த இடத்தில் ஒரு கோவிலை நிர்மாணிச்சார். இதுதான் முதல் கோவில். அப்படி ஒரு ப்ரமாண்டமான கோவிலாக இருந்துச்சாம்.
காலப்போக்கில் அது அழிஞ்சுபோயிருக்குபோல. அதானே துவாபரயுகத்தில் கட்டுனது இன்னுமா உக்கார்ந்துருக்கும்? குப்தர்கள் சாம்ராஜ்ய காலத்தில் சந்திரகுப்த விக்ரமாதித்யர் இடிந்தகோவிலை கிபி 400வது ஆண்டு புதுப்பித்து வழிபாடுகள் நடத்தி இருக்கார். 600 வருஷங்கள் கோவில் ரொம்ப நல்லா கொண்டாடப்பட்டு ஓஹோன்னு இருந்துருக்கு. 1017 இல் முகலாயர்கள் படையெடுப்பு காலத்தில் (Mahmud Ghaznavi) மஹமத் கஸ்நாவி என்றவரால் கோவில் இடிக்கப்பட்டது.
மனிதன் கட்டுன கோவிலாக இது இருக்கமுடியாது. தேவர்கள் கட்டிய கோவிலாக இருக்கணுமுன்னு அந்தக் காலக்கட்டத்தில் Mir Munshi Al Utvi, என்றவர் எழுதிவச்ச குறிப்புகள் சொல்லுது . இதைக்கேள்விப்பட்ட அப்போ இருந்த சுல்தான் மஹமத் வந்து இந்தக் கோவிலைப் பார்த்துட்டு, இது போல ஒரு கோவிலை யாராவது கட்டணுமுன்னு நினைச்சாலே,அது முடியாத காரியம். பத்துகோடி தினார் காசும், சிறப்பா வேலை செய்யும் கட்டிடக் கலைஞர்கள் பலநூறு பேர் சேர்ந்து செய்தாலும் கட்டி முடிக்க இருநூறு வருஷங்கள் ஆகுமுன்னு சொன்னாராம்.
(அடப்பாவி....தெரியுதுல்லே எம்மாம் கஷ்டமுன்னு..... அப்ப எப்படி இடிக்க மனசு வந்துச்சு? )
1150 ஆண்டு மதுராவை ஆண்டுவந்த மகாராஜா விஜயபால் தேவா இந்த இடத்துலே ஒரு கோவில் கட்டி இருக்கார். இது மூணாம்தடவை! அந்தக் காலக்கட்டத்துலேதான் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு இங்கே வந்து கண்ணனை வழிபட்டுக் கொண்டாடி இருக்கார்.
16 ஆம் நூற்றாண்டில் சிக்கந்தர் லோடியால் இந்தக் கோவில் மீண்டும் தரைமட்டமாச்சு:(
ஜஹாங்கீர் ஆட்சிகாலத்தில் மதுராவை ஆண்ட ராஜா வீர்சிங் தேவா 33 லட்சரூபாய் செலவில் 250 அடி கோபுரத்துடன் மீண்டும் கோவிலைக் கட்டி எழுப்பி இருக்கார். இது நாலாவது முறையாக அந்த இடத்துலே கட்டப்பட்ட கோவில். கோபுரத்துக்குத் தங்கக்கவசம் போட்டுருந்தாங்களாம்.
ஷாஜஹான் ஆட்சி நடக்கும்போது (1649) மதுராவுக்கு வந்த ப்ரெஞ்சுக்காரர் Tavernier (இவர்தான் இந்தியாவோடு வியாபாரத் தொடர்பு வச்சுக்க வந்த ஐரோப்பியர்களின் முன்னோடி. விலை உயர்ந்த வைரம் வைடூரியம் பிசினஸ்) இந்தக் கோவிலை வந்து பார்த்துருக்கார், தன் பயணக்குறிப்பில் வியந்து எழுதி இருக்கார்.
இத்தாலி நாட்டுலே இருந்தவந்த இன்னொரு பயணப்பதிவர் மனூச்சி(Manuchi)
ஆக்ரா நகரில் இருந்து பார்த்தாலே இந்தத் தங்கக்கோபுரம் மின்னுவது தெரியும். தீபாவளி சமயத்துலே விளக்குகளால் ஜொலிக்கும் இந்தக் கோபுரத்தைப் பார்த்தேன்'னு எழுதி இருக்கார். ரொம்பநாள் இந்தியாவிலே தங்கி இருந்தாராம். கோவிலுக்குப் பலமுறை போய் வந்ததா எழுதி வச்சுருக்கார்.
அப்போ பொல்யூஷன் இல்லாத காலம். சுத்தமான வெளியில் தொலைதூரக் காட்சிகள் அருமையாத் தெரிஞ்சுதான் இருக்கணும்.
அவுரங்கஸேப் ஆட்சிக்கு வந்ததும் இந்தக் கோவிலின் பெருமையைப் பொறுக்க முடியாமல் அதை (1669 வது வருசம்)இடிச்சுத் தள்ளினார். இங்கே இருந்த பளிங்குக்கற்களையெல்லாம் கொண்டுபோய் கோவில் இருந்த நிலப்பகுதியிலேயே ஒரு Idgah ( இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கூடம்) ஒன்னு கட்டிவிட்டாராம். . இந்த வழிபாட்டுக்கூடத்தின் சுவர்கள் இன்னும் அப்படியே இருக்குன்னு சொன்னாங்க) கோவிலை இடிச்சதும் பக்தர்கள் மனம் நொந்து போயிட்டாங்க. ஆனாலும் அரசனை எதிர்த்து ஒன்னும் செய்ய முடியலை:(
1803 வருசம் மதுரா நகர், ப்ரிட்டிஷ் ஆட்சியின்கீழ் வந்தது. 1815 வது வருசம் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தக் கோவில் இருந்த இடத்தை ஏலத்துக்கு விட்டுச்சு. காசிப் பட்டண ராஜா பட்னிமல் இந்த இடத்தை ஏலத்தில் வாங்கினார். மீண்டும் கோவிலை இங்கே கட்டிடணுமுன்னு அவருக்கு மனதில் இருந்த ஆசை...அவர் வாழ்நாளில் நிறைவேறலை:( ஆனால் இந்த இடம் மட்டும் அவுங்க வாரிசுகளின் பொறுப்பிலேயே இருந்துவந்துச்சு.
மதுராவில் இருந்த இஸ்லாமியர்கள் இந்த இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குப் போட்டாங்க. ராஜா கிருஷ்ணதாஸ் தான் (காசிப்பட்டண ராஜா) உண்மையான உரிமையாளர்ன்னு அலஹாபாத் நீதி மன்றம் தீர்ப்பு சொல்லுச்சு. ரெண்டாம் முறையும் அப்பீல் செஞ்சாங்க. அதிலும் இதே தீர்ப்புதான்.
1944 வது வருசம் நம்ம பண்டிட் மதன்மோகன் மாளவியா அவர்கள் முயற்சியைத் தொடங்குனார். எல்லாத்துக்கும் முதலில் பணம் வேணுமே! அப்போ ஜீவிச்சு இருந்த சேட் ஜுகல் கிஷோர்ஜி பிர்லா உதவிக்கரம் நீட்டினார். வெறும் பதிமூணாயிரம் ரூபாய்க்கு கோவில் இருந்த இடத்தை, ராஜா க்ருஷ்ணதாஸ் அவர்களிடம் இருந்து வாங்குனாங்க. இந்த இடத்துக்கு விலை மதிப்பே இல்லைன்னாலும் கோவில் வரட்டுமே என்ற ஆதங்கத்தில் ஒரு பெயருக்கு இந்தத் தொகையை வாங்கிக்கிட்டு இடத்தை ஒப்படைச்சார் ராஜா. இது நடந்தது ஃபிப்ரவரி 7, 1944.
மதுராவைச்சேர்ந்த மதன்மோகன் சதுர்வேதி கோவிலை மீண்டும் உருவாக்க முழுமுயற்சியோடு பாடுபட்டார். இதுக்கிடையில் தன் கனவு நிறைவேறாமலே மாளவியா காலமாயிட்டார். அவருடைய கடைசி ஆசையும்கூட கோவிலைப் பற்றித் தானாம்.
1951 வது வருசம் ஃபிப்ரவரி 21 ஆம் தேதி பிர்லா அவர்கள் 'ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி ட்ரஸ்ட்'ன்னு ஒரு அமைப்பை உருவாக்கினார். கொஞ்சநாளில் 'ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தான்' என்ற பெயரில் சொஸைட்டியாப் பதிவு செஞ்சாங்க.
இந்த ட்ரஸ்ட்டின் முதல் சேர்மனா பாராளுமன்ற அங்கத்தினர்(லோக் சபா) ஸ்ரீ கணேஷ் வாசுதேவ் மாவலங்கார் பொறுப்பேற்று நடத்துனார். இவருடைய மறைவுக்குப்பின் பாராளுமன்ற அங்கத்தினரும், பீஹாரின் கவர்னருமா இருந்த அனந்தசயனம் ஐயங்கார் சேர்மனா பொறுப்பு ஏற்று கோவில் வேலைகளைக் கவனிச்சுவந்துருக்கார்.
இவருக்குப்பிறகு ஸ்வாமி அகந்தானந்தா சரஸ்வதி, ஷிரோன்மணி பரமஹன்ஸ ஸ்வாமி வாம்தேஜி மஹராஜ்ன்னு பொறுப்புகள் கை மாறி இப்போதைக்கு மஹான் நித்ய கோபால் தாஸ்ஜி மஹராஜ், இந்த சொசைட்டிக்குத் தலைமையா இருக்கார்.
கோவிலைப்பற்றிய கனவுகளுடன் இருந்த டால்மியா குடும்பத்தைச்சேர்ந்த ஜெய்தயாள்ஜி டால்மியா வசம் பொறுப்பை ஒப்படைத்தார் பிர்லா.
முழுமூச்சா இந்த வேலையில் இறங்கினார் ஜெய்தயாள்ஜி டால்மியா. இவுங்க கம்பெனி நல்லா வளர்ந்து சக்கைப்போடு போட்டுக்கிட்டு இருந்துச்சு அப்ப. தாரள மனசோடு செலவளிச்சுக் கோட்டை கொத்தளம் ஸ்டைலில் கோவில், கருவறை, பகவத் பவன் என்னும் முன்புறக் கட்டிடம் எல்லாம் விஸ்தாரமா உருவாக்கத் திட்டம் தயாரானது..
ஸ்வாமி ஸ்ரீ அகந்தானந்த சரஸ்வதி என்ற சாமியார் இந்த ஜென்மபூமி ட்ரஸ்டில் வைஸ் பிரசிடண்ட்டா இருந்தார். அவருடையை வைஸான ஐடியாவா தன்னார்வலர்களைக் கொண்டு 'சிரமதான்' என்ற திட்டத்தில் உடலுழைப்பை தானமாக் கொடுக்க ஆர்வம் மிக்க இளைஞர்கள் முன்வந்து அக்டோபர் 15, 1953 இல் பரபரன்னு வேலையை ஆரம்பிச்சு முதல் காரியமா இடிபாடுகளை அகற்றி, இடிஞ்ச பள்ளங்களைத் தூர்த்துச் சுத்தம் செஞ்சு இடத்தை சமன்படுத்தினாங்க. பலவருசங்களாத் தொடர்ந்து வேலை நடந்துக்கிட்டே இருந்துச்சு. இந்தக் காலக்கட்டத்தில் பாபுலால் பஜாஜ், பூல்சந்த் கண்டேல்வால் பொறுப்பேத்து, இவர்களுடைய மேற்பார்வையில் சேவைகள் தொடர்ந்துச்சு.
ஜெய்தயாள்ஜி டால்மியாவுக்குப்பிறகு அவர் மகர் விஷ்ணுஹரி டால்மியா பொறுப்பேற்றுத் திட்டத்தைத் தொடர்ந்தார். இப்போ அவர்கள் வம்சத்துலே அனுராக்ஜி டால்மியா இந்த ஜென்மஸ்தான் சேவா ட்ரஸ்ட்டுக்கு ஜாய்ண்ட் மேனேஜிங் டைரக்ட்டராப் பொறுப்பேத்து கோவில் நிர்வாகம் நல்லபடியா நடக்க தன் கடமையைச் செஞ்சுக்கிட்டு இருக்கார்.
1982 ஃபிப்ரவரி மாசம் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த ஜெயில் கட்டிடம், ஸ்ரீகிருஷ்ணா ஜென்மஸ்தான் காம்ப்ளெக்ஸ் வேலைகள் எல்லாம் உருவாகி முடிஞ்சது. இன்றையக் கணக்குக்கு 28 வருசம். இந்தக் கோவிலைத்தான் இப்போ பார்க்கப்போறோம். வாங்க...வண்டியை நிறுத்திட்டுக் கோவிலுக்குள்ளே போகலாம்.
PINகுறிப்பு: அந்தக் காலப்படங்கள் ஒன்னும் கிடைக்கலை. அடுத்த பகுதிக்கான படங்கள் சிலதை இங்கே போட்டுருக்கேன். பார்த்து வச்சுக்குங்க:-)
தொடரும்...............:-)
Posted by துளசி கோபால் at 11/26/2010 02:41:00 AM 21 comments
Thursday, November 25, 2010
இழப்பு 29 உயிர்கள் :(
எனக்கு மனசே சரியில்லை. நியூஸியின் தெற்குத்தீவுலே இருக்கும் க்ரேமௌத் என்னும் ஊரின் அருகே இருக்கும் நிலக்கரி சுரங்க விபத்தில் அநியாயமா 29 உயிரிழப்பு நடந்து போச்சு:(
ஆறு நாளைக்கு முன்னே சுரங்கத்தில் வேலைக்கு ஆட்கள் உள்ளே போன கொஞ்ச நேரத்தில் உள்ளே ஏற்பட்ட வாயு அழுத்தத்தால் உட்புறச்சுவர்கள் வெடித்துச்சிதறி வெளியே வரும் வழி முழுசுமாய் அடைபட்டுப்போச்சு. எப்படியாவது எதாவது செஞ்சு ஆட்களை வெளியே கொண்டுவந்துருவாங்கன்னு தினம் தினம் பதைபதைப்போடு காத்துருந்தோம்.
எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாச்சு. நேற்று காலை இன்னொரு முறை ஏற்பட்ட முந்தியதைவிடப் பெரிய second explosion காரணம் இனி அவர்கள் யாரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்துருக்கு அரசு. ரெண்டுமுறை ரோபோக்களை அனுப்பிப் பரிசோதிச்சதில் உள்ளே இருக்கும் காற்று அபாயகரமான நிலை. அதை சுவாசிச்ச மனுஷர் உயிரோடு இருக்கவே முடியாது என்ற அளவுக்கு மாசு நிறைஞ்சதாம்.
விபத்தில் உயிரிழந்த 29 பேரில் மிக இளைய வயதுடைய பதினேழே வயதான பாலகனுக்கு வேலை கிடைச்ச முதல்நாள், அந்த விபத்து நேரிட்ட நாள்.
மற்றவர்களில் மூத்தவர் 62 வயதானவர். இத்தனை சிறிய நாடான நியூஸியில் 29 பேர் ஒரே விபத்தில் உயிரிழந்தது ஒரு கொடுமையான சம்பவம். அரசு இன்று துக்கநாளாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்த துக்கத்தில் பங்கேற்கின்றோம். எல்லா இடங்களிலும் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படும்.
சொந்தங்களை இழந்து தவிக்கும் அந்த 29 குடும்பத்தினருக்கும் நம் அன்பையும் பரிவையும் தரும் இந்நேரத்தில் உயிரிழந்த மக்களுக்குக்காக நம் பிரார்த்தனைகளைச் சமர்ப்பிக்கின்றோம்.
இப்பக்கூட எதாவது அதிசயம் நடந்து ஒரு சிலராவது உயிர்பிழைத்து வெளியே வரமாட்டாங்களான்னு மனசு தவிக்குது.
Posted by துளசி கோபால் at 11/25/2010 02:52:00 AM 13 comments
Labels: பதிவர் வட்டம் new Zealand
Wednesday, November 24, 2010
எங்கிருந்தோ வந்தான்
சந்தின் குறுக்கே இடதுபக்கம் ஒரு நுழைவு வாசல். உள்ளே நுழைஞ்சால் திண்ணைகள் வச்ச வளாகம். நடுவில் ஒரு திறந்தவெளியா முற்றம். கடந்தால் நந்தனின் மாளிகை. முற்றத்தின் இடதுபுறம் சதுரமா ஒரு சேண்ட் பிட். நடுவில் ஒரு ஆரஞ்சு நிற மரத்தண்டு நம் இடுப்பளவு உசரத்தில் நிக்குது, ஒரு பக்கமா தண்ணீர் டேங்க் ஒன்னு குழாய் வச்சது. சுவத்தில் 'நந்தன் யசோதா கஉ ஷாலா' ன்னு எழுதி வச்சுருக்கு. நம்ம பார்வை போன இடத்தைப் பார்த்ததும் பசுக்களை க உ என்றுதான் சொல்லணும். ஆனா அது பேச்சுவழக்கிலே Gகாய்ன்னு ஆகிப்போயிருச்சுன்னார்.
முற்றத்தில் நின்னு முக்கியக் குறிப்புகளைச் சொன்னார் திவ்ய ஷர்மா. 'கருவறை மண்டபத்துக்குள்ளே நாம் நிக்கக்கூடாது. உக்கார்ந்தே சேவிக்கணும். காரணம் இங்கே எல்லா இடத்திலும் கண்ணன் பரிபூரணமா நிரம்பி இருக்கறான்னு ஒரு ஐதீகம். ரெண்டாவதா....... கும்பிட்டும்போது கைகளைத்தட்டி ஆஹா ஆஹான்னு கோஷமிட்டு வணங்கணும். மகிழ்வோடு அவன் முன்னே நிக்கிறோமுன்னு அவனுக்குத் தெரியணும். (டிவி நிகழ்ச்சிகளில் காட்டுவதைப்போல Clap ன்னு எழுதித் தூக்கிப்பிடிச்சால் ஆச்சு!)மூணாவதா.....பிரசாதம் எல்லோருக்கும் கொடுப்பாங்க. அதை பக்தியோடு வாங்கிக்கணும்'. இவை முக்கியமான மூன்று.
கோபாலுடன் திவ்ய ஷர்மா
அப்புறம் சொன்னார் பத்தாயிரம் பசுக்களை இங்கே வளர்க்கறாங்க. எல்லாமே கறவை நின்னுபோனவைகள். அவைகளை வேறெங்கும் அனுப்பாமல் கடைசிவரை வச்சுக் காப்பாத்தறாங்க. இந்த ஊர் மாடுகளை வெளியூருக்கு விற்பதில்லை. இங்கேயே பிறந்து வாழ்ந்து இங்கேயே மடிஞ்சு போகுது.
கோவில் வகையில் ரெண்டாயிரம் விதவைப்பெண்களுக்கு உணவு உடை கொடுத்துத் தங்கவச்சுருக்காங்க. இவுங்களுக்கு உற்றார் உறவினர் யாருமே இல்லை. மரணம்வரை அவுங்களைக் காப்பாற்றும் பொறுப்பு கோவிலுக்கு இருக்கு.
நீங்க பாக்யசாலிகள். இன்னிக்குத்தான் தங்கத்தொட்டில் கடைசிநாள். இந்தக் கோவிலில் வருசத்துக்கு மூணு முறை இப்படித் தொட்டில் வைபவம் நடக்கும். தீபாவளிக்குத் தங்கத்தொட்டில். 51 கிலோ தங்கம். ஹோலிப் பண்டிகை சமயம் வெள்ளித் தொட்டில். கோகுலாஷ்டமி சமயம் வைரமும் முத்தும் பதிச்ச தொட்டில். மற்ற நாட்களில் சாதாரண மரத்தொட்டில் இருக்குமாம்.
முதலில் அந்த மணல் நிறைச்சுருக்கும் இடத்துக்குள்ளே போய். அந்தக் குழாயில் கைகளை அலம்பிக்கிட்டுக் கொஞ்சம் தண்ணீரைத் தலையில் தெளிச்சக்கணுமாம். சொன்னதைச் செஞ்சோம்.
இந்த மணல்தான் கண்ணன் விளையாடிய இடம். ஆஹா....சேண்ட் பிட்ன்னு நினைச்சது கரெக்ட்:-) இந்த மரத்தண்டுதான் கண்ணனை உரலோடு சேர்த்து முடிஞ்சு மரத்தில் கட்டிப்போட்டு வச்ச இடம்.
அதெப்படி? அது ரெட்டை மரமால்லே இருந்துச்சு. கடம்ப மரமோ இல்லை மருதமரமோன்னு நினைப்பு இருக்கே.
அந்த ரெட்டை மரத்தின் அடிப்பகுதிதானாம் இது. காலப்போக்கில் இத்தனூண்டு அடிமரம்தான் 'தண்டா' நிக்குதாம்.
மனசே...அடங்கு. நம்புனால்தான் தெய்வம். மனத்தின் உள்ளே ஒலிக்கும் அசரீரி
ரெண்டு பக்கமும் திண்ணை வச்ச ஒரு வீட்டுக்குள்ளே நுழையறோம். நிலைவாசல் மேலே ஸ்ரீநந்த யஷோதா பவன், ஸ்ரீ பல்ராம், யோகமாயா ஜன்மஸ்தான், கோக்குல் மதுரான்னு ஒரு போர்டு. ரொம்பச்சரி. பலராமன் பிறந்த இடமும் யோகமாயா பிறந்த இடமும் இதுதான்., கண்ணன் வேறொரு இடத்தில் பிறந்து, தந்தை வசுதேவர் தன் தலையில் தூக்கிவந்து இங்கே விட்டுட்டு, யோகமாயயைத் தூக்கிட்டுப்போன கதை உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும்தானே?
தெரியாதவங்க கொஞ்சம் பொறுத்துக்குங்க. ஜன்மபூமி கோவிலுக்குக் கூட்டிப்போகும்போது சொல்றேன்.
வாசலைக் கடந்து உள்ளெ போனால்.....சுத்திவர தாழ்வாரம் ஓடும் பெரிய முற்றம். நாம் நிற்கும் தரையில் வெள்ளைப்பளிங்குக் கற்கள் பாவி இருக்காங்க. எல்லாக் கல்லிலும் அந்தந்தக் கல்லுக்குக் காசு கொடுத்து உபயம் செஞ்சவங்க பெயர்.
இடதுபக்கம் சுவற்றில் சிவன் தவம் செய்யறார். வலப்பக்கம் சுவற்றில் யஷோதா இடுப்பில் குழந்தைக் கண்ணனுடன். நம் முதுகுப்பக்கம் இருக்கும் சுவரில் கோவர்தனமலையைத் தன் விரலால் தாங்கி நிற்கும் கண்ணன்.
வலப்பக்கமாப் போகணும். ஒரு மாடிப்படி தெரியுது. அது நமக்கல்ல. படிக்கு இந்தப் பக்கம் ஒரு வாசல். உள்ளே போனால் நமக்கு நேரெதிரே சுவரில் இன்னொரு ஓவியம். நந்தன், யஷோதா இருக்காங்க. ஒரு பக்கம் சின்ன ஆசனத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தையாய்!
இன்னவரிக்கும் ஊரில் பிறக்கும் புதுக் குழந்தையைத் தூக்கிவந்து இங்கே வச்சுப் பூஜை செய்து எடுத்துப் போவாங்களாம். .அப்படி ஒரு பழக்கம் காலங்காலமாய்த் தொடருதுன்னார் திவ்யஷர்மா.
நமக்கிடது பக்கம் இருக்கும் வாசலுக்குள் நுழைஞ்சோம். கருவறை கூடம். இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை. நுழைஞ்சதும் சட்னு உக்கார்ந்துடணும். அதான் நிக்கக்கூடாதே! சுற்றிக் கண்ணையோட்டினால்..... இது முற்றத்தை அடுத்து இருக்கும் நீளமான ஹால். கடைசியில் சுவரை ஒட்டி ஒரு மேடை. மேடையில் ஒரு பக்கம் நந்தன், மறு பக்கம் யஷோதா. நடுவில் ஏழுதலை நாகம் தலைக்குப் பின் குடை பிடிக்க பலராமனின் திரு உருவச்சிலை. இது மூணும் பெரிய லைஃப் சைஸ் சிலைகள். இவுங்களுக்கு முன்னே கொஞ்சம் சின்ன அளவில் (அரை ஆள்) கண்ணன், யோகமாயா, ரோஹிணி, சிலைகள் அதே மேடையில் இருக்கு.
மேடைக்குக் கீழ்ப்பக்கம் தரையில் ஒரு தொட்டில். ஃப்ரீ ஸ்டேண்டு டிஸைனில் இருக்கு. அதுக்கு முன்னே சின்னதா ஒரு பக்தர்கள் கூட்டம். வலப்பக்க ஓரத்தில் சின்ன ஆசனத்தில் ஒரு பண்டிட் உக்கார்ந்துருக்கார். மெதுவான குரலில் பக்தர்களிடம் என்னமோ சொல்லிக்கிட்டு இருக்கார்.இடப்பக்கம் ஒரு பெரிய வாசல். அவர் சொன்னதைக்கேட்டுமுடிச்ச பக்தர்கள் அவர் அருகில் இருக்கும் ஒரு அண்டாவில் இருந்து எடுத்துக் கொடுத்ததை வாங்கிக்கிட்டு எழுந்து இடப்பக்க வாசலில் வெளியேறுனாங்க.
நம் முறை வரும்வரை நாம் காத்துக்கிட்டு இருக்கோம். வரிசை வரிசையா பக்தர்கள் வெளியேற நாமும் உக்கார்ந்த வாக்கிலேயே நகர்ந்து நகர்ந்து முன்னேறணும்! பிஞ்சுக் குழந்தையா இருந்தப்ப இப்படி அசஞ்சஞ்சு அரக்கியரக்கி நகர்ந்துருப்போம். அதெல்லாம் யாருக்கு நினைவிருக்கு? இப்படி நகரும்போது எனக்கு சிரிப்பா வருது ஒருபக்கம். பரவாயில்லை.அதான் சந்தோஷமாச் சிரிச்சு 'ஆஹா' சொல்லச்சொல்லி இருக்காங்களே! கோபால் சுலபமா நகர்ந்து போறார். எனக்குத்தான் ப்ராப்லம்! ஹைய்யோ ஹைய்யோ:-)))
பல்ராம் இதே மாதிரி ஒரு திருவுருவம் கருவறை மேடையின் நட்டநடுவில் இருக்கு
ஒருவழியா நம் முறை வந்தது. தொட்டிலுக்கு முன்னால் இருக்கும் இடத்தில் ரெண்டு மார்பிள் ஸ்லாப் மிஸ்ஸிங். அங்கே மட்டும் வெறும் மண்தரையா இருக்கு. அதுதான் கண்ணன் மண்ணை உண்ட இடமாம். மண்ணைத் தின்ற வாயைத் திறந்து காமிச்சப்ப அம்மாவுக்கு ஈரேழுலகமும் தெரிஞ்சதுன்னு ஒரு கதை இருக்குல்லே! அந்த 'சம்பவம்' நடந்த இடம்! அந்த மண்தரையில் நம்மை நகர்ந்து உக்காரச் சொன்னார் பண்டிட்.
கோபால் பண்டிட்டுக்கு சமீபம். நம்ம பேரைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்ட பண்டிட் நம்ம பிள்ளைகுட்டி விவரங்களைக் கேட்டார். அப்புறமும் குடும்பநலன், இங்கே இவ்வளவு ரூபாய்கள் செலுத்தினால் அதுக்கு இன்னின்ன பலம், புண்ணியம் வகைகளை விஸ்தாரமா எடுத்துச் சொல்றார். சுவரில் பெரிய பட்டியல் ஒன்னு எழுதிவச்சுருக்காங்க. எனக்கோ...கண்முன்னே இருக்கும் சாமிச்சிலைகளைக் கூர்ந்து பார்த்து மனசில் வச்சுக்கணும். அதுலே கவனம் செலுத்தவிடாமல் பண்டிட் என்னென்னவோ சொல்லிக்கிட்டே இருக்கார். நான் க்ரஹலக்ஷ்மி என்பது (மட்டும்) நல்லாவே காதுலே விழுந்தது:-)
' எவ்வளவு பணம், லிஸ்ட்டுலே எந்த ஐட்டம் கொடுக்கப்போறே?'ன்னு கோபாலைக் கேக்கறார். கோபாலுக்கும் எனக்கும் கொடுக்கப்பிடிக்கும். ஆனா அது நம்ம மனசுலே தோணுன தொகையாவும். நம்ம மனசுலே தோணும் காரணங்களுக்காகவும் இருக்கணும். தானம் என்பது நாமாக விரும்பிக் கொடுப்பதுன்னு ஒரு கொள்கை. நிர்பந்தம் பிடிச்சு, 'தா, தா'ன்னா இவருக்குக் கொஞ்சம் எரிச்சல் வரும்.
கொஞ்சம் டொனேஷன் கொடுக்கலாமுன்னு இருக்கேன்னார். எவ்வளவு எவ்வளவுன்னு அரிக்க ஆரம்பிச்சார் பண்டிட். பாவம் ஒவ்வொரு முறை அவர் அரிக்கும்போதும் நினைச்ச தொகை கொஞ்சம் கொஞ்சமா கீழே போகுதுன்ற விவரம் அவருக்குத் தெரியாதுல்லை!!!!
இவர் ஒரு தொகை சொன்னதும்......ஒரு மாதிரி தலையை ஆட்டிட்டு எங்களை தங்கத்தொட்டில் கண்ணனை ஆட்டிவிடச்சொன்னார். அதுக்குன்னு ஒரு நீளத் தங்கச்சங்கிலி வாசலைக் கடந்து நீண்டு வெளியே வந்துருக்கே!
அப்புறம் பிரசாதமா அண்டாவில் இருந்து காகிதப்பொட்டலம் எடுத்துக் கொடுத்தார்.
இப்போ எழுந்து வர்றதா? இல்லை உக்கார்ந்தே சறுக்கி வாசலுக்குப் போணுமான்னு யோசிக்கிறேன். அதுக்குள்ளே கோபால் எழுந்து நின்னு 'நடந்து' வாசலை நோக்கிப்போனார். நானும் எழுந்து நின்னுட்டேன். மேடையில் இருக்கும் கடவுளர் சிலைகளுக்கு கும்பிடு போட்டுட்டு வெளியே வந்தேன். இந்த வாசல் முற்றத்தின் ஒரு பக்கத்துக்கு நம்மைக் கொண்டுவந்துருது. அங்கே வலப்புறம் கை காமிச்சார் திவ்யஷர்மா. அங்கே ஒருத்தர் தீர்த்தம் தர்றார். தட்டுலே காசு போட்டுட்டுத் தீர்த்தம் (பால்) வாங்கிக்கிட்டோம். இடதுபக்கம் இருந்த கவுண்ட்டரில் கோபால் அந்தத் தொகையைக் கொடுக்கும்போது இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொடுத்தால் ரசீது தருவோமுன்னு சொன்னாங்களாம். ரசீதுக்குன்னு ஒரு மினிமம் அமௌண்டு இருக்காம். இவர் ஒன்னும் சொல்லாமக் கொடுத்துட்டு ரசீதுடன் வந்தார். இப்போ முற்றத்தின் அடுத்த தாழ்வாரம் போறோம். சின்னதா சந்நிதிகள். கம்பி அழிக்குள் பார்க்கலாம்.
இங்கே படம் எடுத்துக்கலாமான்னு திவ்யஷர்மாவைக் கேட்டால் தாராளமா எடுத்துக்கோங்கன்னார். பலராம், வசுதேவர் குழந்தையுள்ள கூடையைத் தலையில் சுமந்து வருவது, நந்தன் யஷோதா கண்ணன், பலராமன். கண்ணன் தன் நண்பர் கூட்டத்தோடு உறியில் இருந்து வெண்ணை திருடும் ஸீன் இப்படி சில.
மாக்கன்சோரி
"கருவறையில் எலிகள் நடமாட்டம் பார்த்தியா? சுத்தமா வைக்கக்கூடாதா?"
" அடடா.... நான் கவனிக்கலையே:( சாமிகள் முகத்தையே உத்துப் பார்த்துக்கிட்டு இருந்தேன். புண்ணியம் உங்களுக்குத்தான். காலடி சேவிக்கணும். நெய்யும் பாலுமா இருக்குமிடத்தில் எலிகள் வருவது சகஜம்தானே? அதுவுமில்லாம சாமி அறையில் எலி மருந்தெல்லாம் வைச்சால் நல்லாவா இருக்கும்? "
மாளிகையை விட்டு வெளியே வந்தோம். வந்தவழியாகத் திரும்பிப் போகும்போது இடப்பக்கம் பிரிந்த ஒரு சந்தருகே வந்ததும், 'தரிசனம் நல்லாக் கிடைச்சதா? உங்களுக்குத் திருப்திதானே? கஷ்டம் ஒன்னும் இல்லையே?'ன்னு திவ்யஷர்மா கேட்ட கேள்விக்கு 'எல்லாம் சரியா இருந்துச்சு'ன்னோம். 'திருப்திதானே?'ன்னார். ஆமாம்னு சொன்னோம். 'நேராப்போங்க. உங்க வண்டி வந்துருமு'ன்னு சொல்லிட்டு, சட்னு அந்த சந்தில் நுழைஞ்சு போயிட்டார்.
நாங்களும் வண்டிக்கு வந்து சேர்ந்தோம். நம்மைக் கூட்டிவந்த ராஜேஷ் ஷர்மாவுக்காகக் காத்திருந்தோம். பத்து நிமிசமாச்சு.யாரும் வரலை. அப்பக் கோபால் சொல்றார், ' நாம் வெளி வரும்போது அங்கே யாரிடமோ ராஜேஷ் பேசிக்கிட்டு நின்னதைப் பார்த்தேன்'. நான் பார்க்கலையேன்னு நம்ம ப்ரதீப்பை (டிரைவர்) அனுப்பிக் கூட்டி வரச்சொன்னோம். அவரும் பத்துப்பதினைஞ்சு நிமிசம் ரெண்டு பேரில் யாராவது ஒருத்தராவது கிடைப்பாரான்னு தேடிப்பார்த்துட்டுக் கிடைக்கலைன்னு திரும்பி வந்துட்டார். எதுக்கும் இருக்கட்டுமுன்னு இன்னும் கொஞ்சநேரம் காத்திருந்தோம்.
இனி காத்திருப்பது வீண்வேலைன்னு நாங்க வந்தவழியே 12 கிமீ திரும்பி வந்து, ஜென்மபூமி கோவிலுக்கு நாளைக் காலை வந்தால் ஆச்சுன்னு அறைக்கே போயிட்டோம்.
அம்பத்தியொன்னு கொடுக்காமப் போயிட்டோமேன்னு எனக்கு மனக்கஷ்டமாப் போயிருச்சு.
ரெண்டு பேரும் எங்கே இருந்து வந்தாங்க? எப்படிச் சட்னு காணாமப்போயிட்டாங்க?
ஒன்னும் புரியலை.
இந்தக்கோவில் அந்த 108 இல் ஒன்னு!
தொடரும்...............................:-)
Posted by துளசி கோபால் at 11/24/2010 12:20:00 AM 30 comments
Labels: அனுபவம் கோகுலம் Gokulam
Monday, November 22, 2010
கூகுள் மேப் தரும் டைரக்ஷனையோ இல்லை பயண நேரத்தையோ நம்பாதீங்க.
148 கிலோ மீட்டர் ரெண்டுமணி பதினோரு நிமிசத்தில் போயிடலாமாம். எப்படி? சாலைகள் நல்ல தரத்திலும் போக்குவரத்து நெரிசல் எதுவுமே இல்லாமல் நாம் மட்டுமே அந்தச் சாலையில் பயணிக்கும் பயணிகளா இருந்தால் மட்டுமே! இந்தியாவில் இதெல்லாம் நடக்குமா? திடுக் திடுக்குன்னு ரோடுலே தடுப்பு வச்சு வேற வழியாப்போன்னு சொல்லும் போலீஸ் வேற!
நமக்கு நாலுமணி நேரம் ஆச்சு. அஞ்சேகாலுக்கு ஹொட்டேலில் செக்கின்பண்ணிப் பத்து நிமிசத்துலே ஃப்ரெஷப் செஞ்சு வரவேற்பில் ஊர் நிலவரம் தெரிஞ்சுக்கப் போனோம். மதுரா நகர். என் பல வருசக் கனவு. இப்போ குளிர்காலம் என்பதால் சீக்கிரம் இருட்ட ஆரம்பிச்சது. ரொம்பப் பக்கத்துலே இருக்கும் கோவில்கள் எவைன்னு கேட்டதுக்கு, கிருஷ்ணரின் ஜென்மபூமி ரெண்டு கிலோமீட்டரில் இருக்கு. அதைப் பார்த்துட்டு வாங்கன்னார் ஷைலேந்தர். ரொம்ப நல்ல அறையா நமக்குன்னு ஒதுக்கிட்டாராம். 'அறை எண் 108 இல் கோபால்ஸ்'. நம்ம ட்ரைவர் ப்ரதீப்பிடம் போகும் வழியையும் விளக்கினார்.
இந்தப் பக்கம் பழங்காலத்தில் வ்ரஜபூமி ன்னு அழைக்கப்பட்டதாம். விருந்தாவன், கோகுலம், கோவர்தன், மதுரா எல்லாம் சேர்ந்த ஒரு நிலப்பரப்பு. கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட பல இடங்கள் இங்கேதான் இருக்கு.
மதுராவுக்கு வடக்கே அம்பது கிலோமீட்டரில் இருக்கும் ஹொடெல் என்ற ஊரில் ஆரம்பிச்சு தெற்கே ருனாகுடா என்ற ஊர்வரை உள்ள இடம். இந்த ருனாகுடாதான் சூர்தாஸ் அவர்கள் பிறந்த ஊர். 15ஆம் நூற்றாண்டு இவருடைய காலம். கண்ணன்மேல் அளவில்லாத பக்தியோடு நிறைய பாடல்களை இயற்றிப் பாடி இருக்கார். ஒரு லட்சம் பாடல்களில் இப்போ கிடைச்சுருப்பது வெறும் எட்டாயிரம்தானாம். புஷ்டி மார்க்கத்தை போதிச்ச ஸ்ரீ வல்லப் ஆச்சார்யா அவர்களைத் தன்னுடைய பதினெட்டாவது வயசில் யமுனை நதிக்கரையில் சந்திச்சுருக்கார். அவர் சொன்னபடிதான் பகவத் லீலான்னு கிருஷ்ணனின் பால்யகாலத்து லீலைகளைப் பாட ஆரம்பிச்சாராம். இவர் பிறவியிலேயே பார்வை இழந்தவர். ஒருவேளை ஞானக்கண்ணால் கண்ணனைப் பார்த்திருக்கலாம்.
லோகத்திலே உள்ள ஏழு முக்தி ஸ்தலங்களில் மதுராவும் ஒன்னு. மற்ற ஆறும் என்ன? அயோத்யா, காசி, மாயாபூர், காஞ்சீபுரம், அவந்திகா & த்வார்க்கா. நமக்கு மூணு டௌன். ஃபோர் டு கோ!
இந்த ஊருக்குப் பெயர்க்காரணம் கதை ஒன்னு இருக்கு. திரேதாயுகத்துலே, அதாங்க ராமர் காலத்துலே இந்தப் பகுதியை ஒரு அரக்கன் ஆண்டுக்கிட்டு இருந்தான். அவன் பெயர் லவணாசுரன். (அப்பெல்லாம் கெட்டவங்களை அரக்கன்ன்னு சொல்லுவாங்க போல. இப்போ அவுங்கெல்லாம், மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரைச் சூட்டிக்கிட்டாங்க) அரக்கனின் குலதர்மம் அனுசரிச்சு நல்லவங்களையும் மகரிஷி, முனிவர்களையும் தொல்லைப் படுத்திக்கிட்டு இருந்தான். எல்லோரும் ராமரிடம் போய் முறையிட்டாங்க. அவர் தன் தம்பி சத்ருகனிடம் ஒரு பாணத்தைக் கொடுத்து அனுப்புனார். அந்த பாணத்தால்தான் மது, கைடபர் என்ற அரக்கர்களை ராமர் அழித்தாராம்.
இந்த லவணாசுரனுடைய தந்தை மது என்றவர். அவர் காலத்துலே நீதிநெறியோடு ஆட்சி செய்து இந்தப் பகுதியை செழிப்பாக்கி நகரங்களை நிர்மாணிச்சு நல்லவரா இருந்துருக்கார். அவருக்கு இப்படி ஒரு அரக்கப் பிள்ளை. சத்ருகன் வந்து அரக்கனுடன் போரிட்டு அவனை வதம் செஞ்சபிறகு, பாழாகிக்கிடந்த நகரை புனரமைச்சுக் கொடுத்து, லவணனின் தந்தை பெயரையே நகரத்துக்கு வச்சுருக்கார். மதுராபுரி.
அவருடைய ஆட்சிக்குப்பின் பலவருசங்கள் கழிச்சு த்வாபரயுகத்தில் போஜராஜ வம்சம் அங்கே ஆட்சி செஞ்சது.
சாக்கடை பெருகி ஓடும் மதுராவின் முக்கியவீதியான கடைத்தெருவில் போய்க்கிட்டு இருக்கோம். வலது பக்கம் திரும்பினால் ஜன்மஸ்தானுக்கு போகலாம். அதுக்குள்ளே 'ஹேய் வண்டியை நிறுத்து'ன்னு சொல்லிக்கிட்டே ஒரு இளைஞர் தாவிக்குதிச்சு வண்டிமுன்னால் நின்றார். அவரை ஒதுக்கிட்டு வண்டி எடுக்க முடியாமல் கார் கண்ணாடியில் பல்லி மாதிரி அப்படியே ஒட்டிக்கிட்டார். என்னவாம்? தரிசனம் பண்ணி வைப்பாராம். வெறும் அம்பத்தியொரு ரூபாய் கொடுத்தால் போதுமாம். 'அதெல்லாம் வேணாம் நாங்க பார்த்துக்குறோம்' ன்னு சொன்ன கோபாலை கண்ணால் மிரட்டினேன். புது இடம். ஒரு கைடு இருந்தா தேவலைதான். இன்னும் கொஞ்சம் விசாரிச்சப்ப மாணவர்ன்னு தெரிஞ்சது. வண்டிக்குள்ளே ஏத்திக்கிட்டோம். ஜென்மபூமி கோவிலையும் கோகுலத்தையும் காட்டறேன். இந்த ஜென்மபூமி ராத்திரி 9 வரை திறந்துருக்கும். கோகுலம் சீக்கிரம் அடைச்சுருவாங்க.முதலில் அங்கே போகலாமான்னார்.
மதுராவில் இருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தூரம் போகணும். போற போக்கில் பலவிஷயங்கள் கிடைச்சது., இளைஞர் பெயர் ராஜேஷ் ஷர்மா. வயசு 20. விருந்தாவனத்தில் (பக்கத்து ஊர்) படிக்கிறார். பூஜை புனஸ்காரங்கள் செய்யத் தேவையான படிப்பு. காலை 6 முதல் பத்துவரை வேதப் பள்ளிக்கூடம். அதுக்குப்பிறகு ரெகுலர் பள்ளிக்கூடத்தில் ப்ளஸ் 2. சாயங்காலங்களில் இப்படி கைடு வேலை.
'உங்களுக்குக் கண்ணன் கதை தெரியுமா?'ன்னு கேட்டதும்.....நான் 'தெரியவே தெரியாது. நீயே சொல்லுப்பா'ன்னேன். "இந்த மதுரா ஒரு பெரிய நகரம்."
(அழுக்கும்புழுக்குமா நரகமாக் கிடக்கே..... தப்பான ஸ்பெல்லிங் சொல்றாரோ?)
"நாம் போகும் கோகுலம் ஒரு சின்ன கிராமம். யமுனை நதிக்கரையில் இருக்கு. இங்கேதான் நந்தகோபர் வசித்தார்."
"அப்போ நந்த்காவ்(ன்)ன்னு ஒரு ஊர் இருக்கே அது?"
"முதல்லே அங்கேதான் இருந்தார். அப்போ ஒரு சமயம் அவருடைய பசுக்கள் யமுனை ஆற்றுலே தண்ணீர் குடிச்சுட்டு மயங்கிச் செத்து விழ ஆரம்பிச்சது."
"ஏனாம்?"
"அந்த நதியில் ஒரு கொடூர விஷமுள்ள நாகம், காளிங்கன்னு பேரு இருந்துச்சு. அதோட விஷ மூச்சுக் காத்தால் தண்ணீரெல்லாம் விஷமாகிப்போச்சு."
"ஐயய்யோ!!!!"
"அதுக்குப்பிறகு அவர் தன்னுடைய ஊர் மக்களோடும் மாடுகளோடும் கிளம்பி இங்கே கோகுலம் வந்துட்டார்."
"எத்தனை மாடுகள் வச்சுருந்தார்? "
"ஒன்பது லட்சத்துப் பதினைஞ்சாயிரம்"
"அம்மாடியோவ்!!!!!!!!!!!"
"இப்போ நீங்க பார்க்கப்போற கோகுலத்தில் பத்தாயிரம் மாடுகள் இருக்கு. ரெண்டாயிரம் விதவைப்பெண்கள் இருக்காங்க."
கொஞ்சநேரத்துக்கு வண்டிக்குள்ளே நிசப்தம். தாங்கமுடியாமல் 'கிருஷ்ணரின் வேறு கதைகளைச் சொல்லுப்பா'ன்னேன்.
"அதான் இன்னும் சில நிமிசங்களில் நேரில் பார்க்கப்போறீங்களே! நீங்க ரொம்பவே அதிர்ஷ்டம் செஞ்சவங்களா இருக்கணும். கோகுலத்தில் தீபாவளி சமயம் சிலநாட்கள் ஸ்ரீக்ருஷ்ணனைத் தங்கத்தொட்டிலில் போட்டு சீராட்டுவாங்க. இன்னிக்குத்தான் கடைசிநாள். நாளைக்கு வந்துருந்தா அதைப் பார்க்கமுடியாது."
கடைத்தெருவின் நெரிசலையும் பஸ் ஸ்டாண்டின் கூட்டத்தையும் கடந்து போறோம். மீனை வண்டிகளில் வச்சு அப்படியே வறுத்து வித்துக்கிட்டு இருக்காங்க. நல்லவேளை நல்லா இருட்டிப்போச்சு. சாலைக்குப்பைகள் கண்ணில் படலை. கண்டோன்மெண்ட் பகுதி மட்டும் பளிச்ன்னு விளக்குகளோடு வாசலில் ரெண்டு பக்கமும் டாங்க் அலங்காரத்தில் இருக்கு. சட்னு இடதுபக்கம் திரும்பும் சாலையில் ராஜேஷ் போகச்சொன்னதும் கொஞ்சதூரத்தில் பாலத்தைக் கடக்கும் சப்தம். யமுனாவாம். இருட்டில் ஒன்னும் தெரியலை பாலத்தின் கைப்பிடி தவிர.
இதுக்கிடையில் ராஜேஷ் ஷர்மாவுக்கு நாலைஞ்சு 'கால்கள்'. சின்னதாப் பேச்சு.
கொஞ்சதூரத்தில் ஒரு தெரு வளைவில் பொட்டிக்கடை அருகே வண்டியை ஓரங்கட்டச் சொன்னபடி செஞ்சோம். நாம் இறங்கும்போதே இன்னொரு இளைஞர் வண்டியை நோக்கி வந்தார்.
இவர் என்னுடைய சகோதரர். இவர்கூடப் போங்க. தரிசனம் செஞ்சுவைப்பார். ஆனால் காசு எதுவும் அவரிடம் கொடுக்காதீங்க. அந்த அம்பத்தியொன்னை அப்புறம் என்னிடம் கொடுக்கலாம். போயிட்டு தரிசனம் முடிச்சுட்டு வாங்க.
புது இளைஞர் பெயர் திவ்ய ஷர்மா. சின்னச் சந்தில் எங்களைக் கூட்டிக்கிட்டுப் போறார். ரெண்டு பக்கமும் இருக்கும் கடைகளில் இருந்து மெலிசா வெளிச்சம் சந்துலே பரவி இருக்கு. எங்கே பார்த்தாலும் அழுக்கு, ப்ளாஸ்டிக் பை, தண்ணீர் பாட்டில். தின்னுபோட்ட தொன்னை................ அடக்கடவுளே:(
தொடரும்......................... :-))))
Posted by துளசி கோபால் at 11/22/2010 04:58:00 AM 18 comments
Labels: அனுபவம் மதுரா Mathura
Friday, November 19, 2010
ஒபாமா வருகையும், ஒரு டும்டும் டும்மும்.
தோழியின் ரெண்டாவது மகருக்குத் திருமணம். முகூர்த்தம் காலை 6 மணிக்கு. மூத்தவருக்கும் போன மார்ச் மாதம் திருமணம் நடந்துச்சு சென்னையில். அதுவும் இப்படிக் காலை 6 மணிக்கு! காலையில் வண்டியை வரச்சொல்லிட்டு ஆறுமணிக்கு ட்ரைவர் வந்து எழுப்புனதும் மணியைப் பார்த்தால் ........ இனி அலறிக் காரியமில்லைன்னு சாயந்திரம் வரவேற்புக்குப் போனோம். இந்த முறை அப்படி ஆகிடக்கூடாதுன்னு ரொம்ப கவனம் எடுத்துக்கிட்டேன்.
அதென்னப்பா எல்லாக் கல்யாணமும் இப்படி விடிஞ்சும் விடியாமலும்? ரெண்டு வீட்டு புரோகிதர்களும் சேர்ந்து பார்த்துக்கொடுத்த முகூர்த்த நேரமாம். நம்ம ட்ரைவருக்கு தில்லி சரியாத் தெரியாதுன்றதால் வேற ஒரு உள்ளூர் வண்டியைக் காலை அஞ்சுமணிக்கு வரச்சொல்லி ஏற்பாடு. காலை நாலு மணிக்கு எழுந்து அரக்கப்பரக்க ரெடியானோம். எழுந்தவுடன் உள்ளூர் கார்க்காரருக்கு செல் அடியுங்கன்னா..... பாவம் அந்தாளு தூங்கட்டும். நாலரைக்கு எழுப்புனால் ஆச்சுன்னார். நாலரை மணிமுதல் நாலைஞ்சுமுறை கூப்பிட்டாலும் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி இருக்காருன்னு சேதி வருது.
அஞ்சு மணியாகியும் ஆள் கிடைக்கலை. மூத்தவர் கல்யாணம் போல தாலிகட்டும் நிகழ்ச்சியை மிஸ் பண்ணப்போறோமுன்னு மெள்ள ஆரம்பிச்சேன். கீழே போய் ஒரு காஃபியைக் குடிச்சுட்டு வரவேற்பில் இருந்தவரிடம் ஒரு டாக்ஸிக்கு சொன்ன மூணாவது நிமிஷம் வண்டி வந்துருச்சு.
கிளம்பி பத்து மீட்டர் போனதும் தடக்னு வண்டி நின்னுபோச்சு. போச்சுடா......டிரைவர் கீழே இறங்கிப்போய் பானெட்டைத் திறந்து கொஞ்சநேரம் தப்லா வாசிச்சார். சின்னக் கனைப்போடு இஞ்சின் ஸ்டார்ட் ஆச்சு. அப்புறம் பத்து மீட்டருக்குப் பத்து மீட்டர் வண்டி நிக்கரதும் தப்லா வாசிப்பு தொடருவதுமா இருக்கு. ஒருவேளை தில்லி கார்ப்பரேஷன் குப்பைவண்டி இப்படி டாக்ஸியா மாறுவேஷம் போட்டு வந்துருக்கோ?
இந்தக் கணக்குலே போனால் அஞ்சாறு வருசம் ஆகிரும் கல்யாணக் கிளப்புக்கு போக! பார்லிமெண்ட் இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவிலே இருக்கும் 'கான்ஸ்டிட்யூஷன் க்ளப் ஆஃப் இண்டியா'வில்தான் கல்யாணம் நடக்குது. இன்னிக்கு ஒபாமா வேற பாராளுமன்றத்தில் பேசப்போறார். அந்தத் தெருப்பக்கமே போகமுடியாமப் போகப்போகுது..........
நாலுமுறை நின்னு தட்டிக்கொடுத்துன்னு ஆனதும் 'குளிர் கூடுதலா இருக்குன்னு இஞ்சின் வேலை செய்யலை'ன்றார் நம்மாள். குளிரா? பதற்றத்தில் எனக்கு வேர்த்துக் கொட்டுது. வண்டிக்கு கேஸ் ப்ராப்லமா? கண்ணில் பட்ட ஒரு பெட்ரோல் பங்குக்குப் போய் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டதும் வண்டி ஓட ஆரம்பிச்சது. "அடப்பாவி , சொட்டு எரிபொருள் இல்லாமலா வண்டியைக் கொண்டுவந்தே?"
அதே கூர்காவ் டோல் கடக்கணும். 55 ரூபாய் கட்டணம். நேத்தி ராத்திரி 20தானே கட்டுனோம்? அதுக்குள்ளே விலைவாசி ஏறிப்போச்சா? கூர்'காவ்'க்கு வர்றதுக்கு இருவது. தில்லிப் 'பட்டணம்' போகணுமுன்னா அம்பத்தியஞ்சு. கிராமத்துக்கு நகரத்துக்கும் உள்ள வேறுபாடு இங்கிருந்தே ஆரம்பிக்குது!
இன்னும் பொழுது விடியலை. ட்ராஃபிக் இல்லை. முக்காமணியாப் போய்க்கிட்டே இருக்கோம்..
அடுத்த பிரச்சனை ஆரம்பமாச்சு. பார்லிமெண்ட் தெரு போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ஏகப்பட்ட போலீஸ் குவிஞ்சுகிடக்கு. ஒபாமா வருகையால் எட்டுமணிக்குப் பிறகு இந்த ஏரியாவில் நுழையத் தடை. அட்ரஸ் சொல்லி வழிகேட்டோம். அதிகாரி காமிச்ச வழியில் போனால் C.P. வருது. போச்சுறா...... கடையெல்லாம் மூடிக்கிடக்கு. இல்லைன்னா கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சுருக்கலாம். போலீஸுக்கு ஏரியா விவரம் தெரியலை:( அப்படி ஒரு GK. ஹூம்.....
இன்னொரு தெருவில் காலை வாக் போய்க்கிட்டு இருந்தவரை நிறுத்திக் கேட்டுட்டு, க்ளப்புக்குப் போய்ச் சேர்ந்தோம். ரிஸர்வ்பேங்க் கட்டிடத்துக்கு நேரா முன்னாலே இருக்கு இது. வாசல் விரிச்சோன்னு கிடக்கு. கண்ணாடி வழியா தென்பட்டார் வேஷ்டி கட்டுன ஒருத்தர். யஹி ஹை ரைட் ப்ளேஸ்.
வாசலில் இருந்த செக்யூரிட்டி ஹால் பக்கம் கை நீட்டினார். உள்ளே போனா யாருமில்லை!!! அட நாம்தான் முதல்லே வந்துருக்கோமா? ஆறு பத்தாச்சேன்னும்போது, இன்னொரு கதவைக் காமிச்சு அங்கேதான் சடங்குகள் நடக்குதுன்னு நம்மைக் கூட்டிப்போனார் ஒருத்தர். வெளியே தோட்டத்தில் பந்தல் போட்டு மணவரை அமைச்சுருக்காங்க. ஹவன் புகை வெளியில் போயிரும். கால்மணிதான் மிஸ்ஸிங். மணிரத்தினம் படம் போல ஒரு செட்டிங்ஸ். முக்கால் இருட்டில் படமெடுத்துத் தள்ளிக்கிட்டு இருக்கேன். நேரமாக ஆகப் பலபலன்னு பொழுது விடியவும் தில்லிக் குரங்குகள் மணவரை உள்ள பந்தலின் மேல் குதிச்சு விளையாட வந்ததுகள். ஆஞ்சநேயரே கல்யாணத்துக்கு சாட்சி!
சுடச்சுட காஃபி, ஸ்நாக்ஸ்ன்னு சுத்திவந்து விளம்பிக்கிட்டு இருந்தாங்க பணியாட்கள்.
அரக்கு பார்டரில் கீதோபதேசம் படம் நெய்த புடவை கண்ணை அப்படியே இழுத்துச்சு. நேத்துதானே அங்கே போயிட்டு வந்துருக்கேன். 'கீதா?' என்றேன். 'கல்யாணி' ன்னாங்க அவுங்க.! அப்படியே பரிச்சயமாகிப் பேசிக்கிட்டு இருந்தோம். ராஜஸ்தானில் ஒரு பள்ளிக்கூடத்துப் ப்ரின்ஸி.
தாலிகட்டும் வைபவம் எல்லாம் நல்லபடி நடந்து முடிஞ்சதும் முதலில் பார்த்த ஹாலில் போய் உக்கார்ந்தோம். கலை நிகழ்ச்சியாப் பாட்டுப் பாடினாங்க சிலர். வட இந்திய ஸ்டைலில் அந்தாக்ஷரி விளையாடலாமுன்னா எனக்குத் தொண்டை சரி இல்லை:-)))))
கல்யாணக்கூட்டத்தில் அநேகருக்கு என்னைத் தெரிஞ்சுருந்தது! எழுத்து மூலமாவா? ஊஹூம்... ஃபோட்டோ மூலமா!!!!!நம்ம கைவண்ணம் அப்படி!
முதல்மகர் கல்யாணத்தில், ரெண்டு ஆண் சம்பந்திகளும் அசப்பில் ஒன்னுபோல இருக்காங்களேன்னு அவுங்களை ஒன்னா நிக்கவச்சு ஒரு படம் எடுத்து 'ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிங்க'ன்னு தோழிக்கு அனுப்புன படத்தை அவுங்க தன் உற்றார் உறவினர் நட்புகளுக்கு சர்குலேட் செஞ்சுருந்தாங்க என்ற ரகசியம் வெளிவந்துச்சு.
அறிமுகப்படலத்தில்....'இவுங்கதான் துளசி. அந்த ஆறு வித்தியாச......'
'அட! இவுங்கதானா? நல்ல ஜோக் நீங்க அனுப்புனது:-))))'
நம்ம தோழி ஒரு பத்திரிகையாளர். அவுங்களுடன் ஜர்னலிஸம் படிச்சக் கல்லூரித் தோழிகள் பலரும் வந்துருந்தாங்க. பத்திரிகையாளரா ஜமாய்ச்சுக்கிட்டு இருக்காங்க. அந்த வகையில் ஒரு மூத்த எழுத்தாளரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அறுபதுகளில் கணையாழி ஆரம்பிச்சு அதை வளர்த்தெடுத்த முக்கியமானவர்களில் ஒருவர். சாந்தா ராமஸ்வாமி. இந்திரா பார்த்தசாரதி, திஜர, அசோகமித்திரன், சுஜாதா இப்படி அவுங்க வட்டம் ரொம்பப்பெருசு! இப்பெல்லாம் எழுதறதில்லை. வெறும் வாசிப்பு மட்டும்தானாம். நம்ம 'சோ' இவுங்க க்ளாஸ்மேட் என்பது ஒரு கொசுறுத்தகவல்.
வெளியே தோட்டத்தில் பத்துமணிக்கு சாப்பாடு தயார். பஃபே சிஸ்டம். அவ்வளவு சீக்கிரமா சாப்பிட முடியாதுன்னாலும்......... கண்ணால் பலவகைகளை சாப்பிட்டேன். நம்ம தோசை இட்டிலி வடையும் ஓக்கே! எல்லாம் 'ஸப் ஸப்ஜி'ன்னு பாவைக்காய், கத்தரிக்காய், குடமிளகாய், வெண்டைக்காய்ன்னு முழுசுமுழுசா பலவகைக் காய்கறிகளை மசாலாவுடன் சமைச்சு அடுக்கி வச்ச விதம் புதுசா இருந்துச்சு. கிளிக்கோ க்ளிக். தோட்டம் பராமரிப்பு நறுவிசா இருக்கு.
பத்தே முக்காலுக்கெல்லாம் கிளம்பிட்டோம். டாக்சி ஸ்டேண்டில் வந்து ஒரு டாக்ஸி பிடிச்சுப் போகும்போது தில்லியின் ரவுண்ட் அபௌட்களில் எல்லாம் அமெரிக்கக் கொடிகளும் இந்தியக் கொடிகளுமாய் 'ஹம் தோனோ பாய் பாய்'னு படபடன்னு பறந்துக்கிட்டே இருந்தன.
ஷாந்தி பாத், சாணக்யபுரி எல்லாம் துடைச்சு வச்சதுபோல் அப்பழுக்கு இல்லாம பளீர்ன்னு சிரிக்குது. ராஜ்பாத் எல்லாம் சோப் போட்டுக் கழுவியே வச்சுருக்காங்க. இதேமாதிரி நகரம் பூராவும் சுத்தமா இருக்கும் காலமும் வராதா? ஒரு ஏக்கம்தான். மத்தபடி அண்ணன் ஒபாமாவுக்கு ஒரு ஃப்ளெக்ஸ் பேனர் உண்டா? ஒரு தோரண வாயில் உண்டா? விமான நிலையத்தில் இருந்து புது சட்டசபைவரை பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகளால் ஆன தோரணம்.உண்டா? வட்டப்பூவுக்குள் சிரிக்கும் 'தலை' உண்டா? இதுக்குத்தான் சென்னைவழியா வரணுங்கறது. அட்டகாசமான வரவேற்பு எங்கே கிடைக்குமுன்னு கவனிக்கத்தெரியலை, என்ன ஸிஐஏவோ? என்னமோ போங்க......
ஒபாமா பேசி முடிச்சுட்டு நிதானமா வரட்டும். நாம் முன்னால் போகலாமுன்னு கூர்காவ் போய்ச் சேர்ந்தோம். இந்த ஹொட்டேலை இப்ப நிர்வகிப்பது நம் நியூஸித் தோழியின் மகர். அவரையும் சந்திச்சுக் கொஞ்சம் குடும்ப விஷயங்களைப்பேசித் தீர்த்து, அரைமணி நேரத்தில் வேஷம் மாறி தெற்கே பயணப்பட்டோம்.
இந்தக் கல்யாணத்துக்காக நம் சென்னைத் தோழிகள் சிலர் குடும்பத்துடன் வருவதா ஒரு திட்டம் இருந்துச்சு. அவுங்களையெல்லாம் அப்படியே அலாக்கா இங்கே சண்டிகருக்குக் கொண்டுவந்து நாலைஞ்சுநாள் ஆட்டம்போடவச்சு அனுப்பலாமேன்னு நினைச்சு கோபாலைப் பிச்சு எடுத்து ஒரு வாரம் லீவு எடுக்க வச்சேன். கடைசியில் பார்த்தால் எல்லாரும் அப்பீட் ஆகிட்டாங்க. கிடைச்ச லீவை விடவேண்டாமேன்னு சின்னதா ஒரு பயணம்.
நாங்க இந்தியாவில் இருக்கும் சமயத்தில் மகர்களின் கல்யாணம் வச்சுக்கறதா தோழிக்கு ஒரு நேர்த்திக்கடன் இருந்துருக்கு:-)))) அதை நிறைவேற்றுன மகிழ்ச்சி அவுங்க முகத்தில்!!!!
மணமக்கள் நல்லா இருக்கணும். ஆசிகளை அள்ளி வழங்குவோம்!
Posted by துளசி கோபால் at 11/19/2010 01:03:00 AM 48 comments
Labels: அனுபவம் டில்லி தில்லி Delhi
Wednesday, November 17, 2010
'அந்த' இடம் இதுதான்!
சட்னு மனசுலே தோணியதைச் சொல்லலாமேன்னு இவரைப் பார்த்தால்.....'ஏம்மா.....குருக்ஷேத்ரத்தில் என்னவோ ஒரு இடம் பார்க்கணுமுன்னு சொன்னியே. அங்கே போயிட்டுப் போகலாமா?'ன்றார்.
மற்ற இடங்கள் பற்றிய விவரங்கள் இங்கே. அப்படியே நூல் பிடிச்சுப்போங்க ஒரு நாலு பதிவுகளுக்கு:-)))))
இந்த முப்பத்து ஆறரை வருசத்தில் ' நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்' நாடகம் பலமுறை அரங்கேறி இருக்கு! (அப்படி ஒரு ட்ரெய்னிங்!!!)
எடு ரைட் டர்ன். ப்ரம்ம ஸரோவர் வேண்டாம், நேரா ஜ்யோதீஸர் தீர்த்தம் போயிடலாமுன்னு எங்கேயும் திரும்பாம ஸ்டேட் ஹைவே 6 இல் நேராப் போறோம். ஒரு பத்துப்பனிரெண்டு கிலோமீட்டர்தான் போகணும். ஆனால் பதினைஞ்சு நிமிசமாப் போறோம்.... தகவல் பலகை ஒன்னும் காணோம். கண்ணில்பட்ட பெட்ரோல் பங்குலே விசாரிச்சால்..... வழியைத் தவறவிட்டுட்டோமாம். ஒன்னரைக்கிலோமீட்டர் வந்தவழியே போய் இடதுபக்கம் திரும்பணுமாம். (சரியாப் பனிரெண்டு கிலோ மீட்டர் தூரம்)
அதே போலத் திரும்பி வரும்போது தகவல் பலகை கண்ணுலே பட்டது. ஏம்ப்பா..... அந்த ரோடிலேயும் ஒன்னு வச்சுருக்கலாமுல்லே? உள்ளே திரும்பி ஒரு 300 மீட்டர் போனால் ஜ்யோதீஸர் வந்துருது. ஆரவாரமே இல்லாத அடக்கமான இடம். கணக்கிலடங்காத எண்ணற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பா வந்துருக்கும் 'கீதை' பிறந்த இடம். முதல் முதலில் 1785லே சார்லஸ் வில்ஸன் என்றவர் ஆங்கிலத்துலே மொழி பெயர்த்துருக்கார். அப்புறம் ஜெர்மன், க்ரீக்ன்னு .....உலக மொழிகளிலும், உள்நாட்டு மொழிகளிலும் எக்கச்சக்கமா போயிருக்கு.
உற்றார் உறவினர், எதிரிகளா ஒரு பக்கம் நிற்கும்போது அவர்களுடன் போர் செய்யப் பார்த்தன் தயங்குன இடம். 'சண்டைன்னு வந்தபிறகு சாக்குபோக்கெல்லாம் சொல்லப்பிடாது. தர்மம் எதுன்னு சொல்றேன் கேட்டுக்கோ'ன்னு அவன் சாரதி ஒன் டு ஒன் பேஸிஸ்ஸா பகவத் கீதையைச் சொல்ல..... ஸைலண்ட்டா கொடியில் நின்ன நேயுடு கவனிச்சுக் கேட்டுருக்கார். ஒரே ஒரு விட்னஸ்! நடந்ததாகச் சொல்லப்பட்டக் காலம் கி.மு. 3137 ! 'எண்ணி'ச் சொன்ன மாதிரி சரியா பதினெட்டு அத்தியாயம். 700 ஸ்லோகம். யுத்தபூமியில் நின்னுகிட்டு இவ்வளவும் சொல்ல நேரம் இருந்துச்சா????? (நிறைய இடைச்செருகல்கள் வந்துருச்சுன்னு சிலர் சொல்றாங்க)
இரும்புக் கம்பிகள் வேலி போட்ட முற்றத்தில் சின்னதா ஒரு பளிங்கு முன்மண்டபம். அஞ்சாறு படிகள் ஏறிப்போனால் ரெண்டு பக்கமும் குடைபோல் விரிஞ்சு நிழல்தரும் ஆலமரங்கள் பக்கத்துக்கு ஒன்னு. கண்ணுக்கு எதிரில் பளிங்குப்படிகள் வச்ச திருக்குளம். ஜ்யோதீஸர் தீர்த்தம். விசாலமான உள் முற்றம். வலதுபக்கம் கட்டிடத்தில் சின்னச்சின்னதா கண்ணாடி போட்டச் சந்நிதிகள். கண்ணாடியில் மேல்புறமா கண் வச்சுப் பார்க்கும் அளவில் சின்னதா அரைவட்டமா வெட்டி(?) வச்சுருக்காங்க. கேமெராக் கண்ணுக்கு அது போதும்தான்.
த்ருதராஷ்ட்ரர் & சஞ்சயன், த்ரோணர் & துரியோதனன் ( முதல்முறையா துரியோதனன் சிலையைப் பார்த்தேன்) சூரியபகவான், கிருஷ்ணன் இருவரையும் வணங்கும் அர்ஜுனன், பீஷ்மரும் பீமனும், அம்புப் படுக்கையில் பீஷ்மர்,அருகிலே அர்ஜுனன், கிருஷ்ணன் & நாரதர்,
கிருஷ்ணனும் அர்ஜுனனும், விஸ்வரூபதரிசனம், வெண்ணெய்த் தாழியுடன் பாலகிருஷ்ணன், ஆஞ்சநேயர் இப்படி இருக்கும் வரிசைகளில் 'சட்'ன்னு ஒரு நடராசர்!
த்ரோணர் & துரியோதன்
பீஷ்மர் & பீமன்
அம்புப்படுக்கை
நடராசர்
முற்றத்தில் இருந்து இன்னும் ஒரு ஆறேழு படிகள் ஏறினால் அஞ்சாயிர வருசப் பழசான சிரஞ்சீவியா நிற்கும் ஆலமரம். ஆலமரத்தைச் சுற்றி பளிங்கு மேடை. இதுதான் கீதை உபதேசம் நடந்த இடம். மரமே சாட்சின்னு போர்டு போட்டு வச்சுருக்காங்க. மேடையில் சின்னதா ஒரு பளிங்குக்கல் மாடம்.
கீதா மேடை
அதுலேயும் கண்ணாடி போட்டு வச்சுருக்கு. உள்ளே ரெண்டு படம், சின்னதா ரெண்டு 'பொம்மை' (க்ருஷ் & அர்ஜ்) பக்கத்துலே ரெண்டு பளிங்குப் பாதங்கள். இடதுபக்கம் பசுமை மாறாத 'நான்' வயசு மரத்தின் வயசாக இருக்க முடியாது. இந்தப் பக்கங்களில் பூஜை சாமான்களோடு மெலிசா ஒரு கயிறு சிகப்பு, வெள்ளை இல்லை ஆரஞ்சு வண்ணங்களில் கொடுக்கறாங்க. அதை அந்த மரத்தின் விழுதில் கட்டிவிட்டுருக்காங்க பக்தர்கள். யாரு தொடங்கிவச்சதோ? நல்லா யானைத் துதிக்கை கனத்துலே இருக்கு. ஒரு நூலோட பருமனை வச்சுப் பார்த்தா.... அங்கே கட்டி இருப்பது ஒரு பத்துகோடி வரும்.
நம்ம மக்கள்ஸ்க்கு பிரார்த்தனைகள், கோரிக்கைகள் எல்லாம் பெருகி வழியுது என்பதற்கு சான்று. (பீலி பெய் சாகாடும் அச்சிறு அப்பண்டம்.......நினைவுக்கு வருதே!!!! மரத்துக்குப் 'பெயின்' இல்லாம இருந்தால் சரி) துளசிக்கு நேரே கீதோபதேசம் சிற்பம் ஒன்னு தனியா ஷெட் மாதிரி உள்ள ஒரு மண்டபத்துலே கண்ணாடிப்பெட்டியில் வச்சுருக்காங்க.பூஜை செய்யவோ, இல்லை தட்சிணை வாங்கிக்கவோ அங்கே யாரும் இல்லை என்பது ஒரு ஆஸ்வாசம். ஒரு உண்டியல் மட்டும் இருக்கு,.
விஸ்வரூபம்
அந்தக் காலத்துலே இங்கே ஏராளமா ஆலமரங்கள் மட்டுமே இருந்துருக்கும்போல. இப்ப கட்டிடம் தரையெல்லாம் போட்ட பிறகும் கூட அங்கங்கே ஆலமரங்கள் நிக்குது. எல்லாம் வயசானதுகள்! பழுத்த இலைகள் விழுந்து குப்பையாகாமல் இருக்க வலை கட்டி விட்டுருக்காங்க. (வெரி குட் ஐடியா)
சாட்சி மரம்
வெவ்வேற காலக்கட்டத்தில் மனசுக்குத் தோணியவிதம் சந்நிதிகளைக் கட்டி இருக்காங்க போல. சரஸ்வதி, கிருஷ்ணர், ஆதிசங்கரர், காளி, விஷ்ணு, துர்கா, ஹனுமான், புள்ளையார், வியாஸர் இப்படி அங்கங்கே முளைச்சு நிற்கும் சந்நிதிகள். எங்கேயும் பூஜை நடந்ததுக்கான அறிகுறிகள் இல்லை:(
வெளியில் வந்து முன்வாசல் முற்றத்தில் இறங்குனா கம்பி வேலிக்கு அப்புறம் கடைகள். எல்லாமே சாமி சம்பந்தமுள்ள புத்தகம்தான். கோவிலைப் பார்த்து உக்கார்ந்துருக்காங்க வியாபாரிகள் எல்லாம். கம்பி வழியா வேடிக்கைப் பார்த்த கோபாலை, மத்ராஸின்னு கண்டு பிடிச்சுட்டார் வயசான கடைக்காரர். இவருக்கோ பெருமை தாங்கலை:-) தமில் மே ஹை? ன்னதும் இதோன்னு மூணு புத்தகம் எடுத்துக் கொடுத்தார்.
குருக்ஷேத்ரத்தின் சரித்திரம், குருக்ஷேத்ரம் ஆல்பம், நான்கு புண்ணியத் தலயாத்திரை. எல்லாமே ஒரு நாப்பது அம்பது வருசப் பழசு. யாரும் பிரிச்சுக்கூடப் பார்க்கலைபோல. பழுப்பேறித் தாள்கள் ஒட்டிக் கிடக்கு. சாணித்தாளில் அச்சடிச்சது. கடைக்காரத் தாத்தாவை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்த கோபால் மூணையும் வாங்கி வண்டியில் போட்டார். கழிச்சுக் கட்டுன மகிழ்ச்சி தாத்தாவின் முகத்தில்.
பனிரெண்டு கிலோமீட்டர் திரும்ப வந்து மெயின் ரோடில் சேர்ந்துக்கிட்டோம். வழியெல்லாம் பயங்கரக்கூட்டம். யாத்ரக்காரருக்கு புத்திமூட்டு. இதுக்கே 25 நிமிசமாச்சு:( இன்னும் ஒரு மணி நேரம் பயணிச்சு ஹவேலியில் மதியச் சாப்பாட்டுக்கு ஒரு ஸ்டாப். இது மாடர்ன் ஹவேலி. 'எல்லாம்' படு நீட். வாசலில் யானை நமக்காக மண்டிபோட்டுக் காத்திருக்கு! சாப்பாடானதும் கிளம்பி தில்லி பார்டர் போய்ச்சேர வெறும் நாப்பது நிமிஷம்தான் ஆச்சு. 'காமன்வெல்த் கேமுக்கு நாங்க தயார்' ன்னு மூணுமாசம் முன்னால் வச்ச விளம்பரங்கள் பார்த்துட்டு......கல்மாடியை நினைச்சுக்கிட்டேன்.
இந்நேரம் ஒபாமா தில்லி வந்து சேர்ந்துட்டார். இதுவரை அடைச்சுவச்ச போக்குவரத்தெல்லாம் பீறிட்டு வெளியே வழியுது. அங்குலம் அங்குலமா நகர்ந்து கூர்காவ் போறோம். கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் டுவீலர்ஸ் எல்லாம் ப்ளாட்ஃபார்மில் ஏறிப்போகுது!
ஒன்னரைமணி நேரமா ஊர்ந்து ஊர்ந்து, சகிக்கமுடியாத ஒரு தருணத்தில் ரிங் ரோடைவிட்டு இடதுபுறம் திரும்பினால்..... தென்னிந்தியர் வசிக்கும் பகுதிபோல இருக்கு. வழக்கமா குப்பை கூளங்கள் இருக்கும் தெருவை முக்கால் பாகம் அடைச்சு நிற்கும் காய்கறி இன்னபிற வண்டிகள், இதுக்கு நடுவில் ரெண்டு தென்னிந்தியக் கோவில்களின் கோபுரங்கள். எந்த ஏரியான்னே தெரியலை(: இன்னும் கொஞ்சம் அங்கே இங்கேன்னு சுத்தி கூர்காவ் சாலையைப் பிடிச்சு ஏர்போர்ட்டைக் கடந்து 20 ரூபாய் டோல் கட்டி, ஹோட்டேலைத் தேடி அறைக்குப் போனப்ப மணி எட்டு.
காலையில் நாலு மணிக்கு எழுப்பச் சொல்லிட்டுப் படுக்கையில் விழுந்தோம்.
தொடரும்..............:-)))
Posted by துளசி கோபால் at 11/17/2010 01:50:00 AM 33 comments