Monday, September 30, 2013

வாரம் ஒரு முறை ரீசார்ஜ் செஞ்சால்தான் வாழ்க்கை (சிங்கைப்பயணம் 4)

சாப்பாடு ஆனதும் அப்படியே  திரும்பி   Chander ரோடு பக்கம் போனால்  வெஸ்ட்டர்ன் யூனியன் வாசலில் பெரிய வரிசை நிக்குது.  ஊருக்குப் பணம் அனுப்பக் காத்திருக்கும் மக்கள்ஸ். இன்னிக்கு ஞாயித்துக்கிழமை பாருங்க. தொழிலாளர்களுக்கு லீவுநாள்.  மதியம் முதலே இந்த ஏரியாவுக்கு வரத் தொடங்கிருவாங்க. பணம் அனுப்பிட்டு, மற்ற நண்பர்களுடன் கலந்து பேசி மகிழ்ந்து இங்கேயே ராச்சாப்பாட்டையும் முடிச்சுக்கிட்டு  அடுத்த ஒரு வாரத்துக்கு வேண்டிய மனோ பலத்தையும், மகிழ்ச்சியையும் சுமந்துக்கிட்டுப் போவாங்க. சுருக்கமாச் சொன்னா ,  மனசுக்கு ரீசார்ஜ் ஏத்திக்கறது!

மகிழ்ந்துன்னு சொல்றேனே தவிரக் கவலை படிந்த முகங்களே கண்ணில் பட்டன என்பதே உண்மை. எனக்குத்தான் கண்ணில் கோளாறோன்னு கூடஒரு சமயம் நினைச்சேன்.  கடின உழைப்பினால் மெலிந்துபோன உடல்கள்...ப்ச்.....:(


ஆஹா....அதான்  அறையை விட்டுக்கிளம்புமுன்  ஜன்னலில்  பார்த்தபோது, பார்க் பகுதி புல்வெளியிலும் மரநிழலிலும் அங்கங்கே  சின்ன முடிச்சுகளா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்களோ!

முந்தி  ஒரு  இருபத்தியெட்டு வருசங்களுக்கு முன்  வீரமாகாளியம்மன் கோவில் வாசல் மட்டுமே  தமிழகத்தொழிலாளி மக்கள் கூடுமிடமா இருந்துச்சு. நானும் அப்ப  அவங்களோடு கோவில் வாசலில் உக்கார்ந்து கதை பேசி இருக்கேன். மிஞ்சிப்போனா ஒரு முப்பது நாப்பது ஆட்கள் இருப்பாங்க.

 இப்ப?ஆயிரக்கணக்கானவர்கள்!  இத்தனை பேரின் உழைப்பால் சிங்கை ஜொலிச்சுக்கிட்டு இருக்கு!


இந்தத் தெருவிலேயும் ஏராளமான உணவகங்கள் இருக்கு.  தூரக்கே மூணு வடக்கிந்திய வகை கோபுரங்கள் . என்ன கோவிலா  இருக்கும்? இந்தப்பக்கமெல்லாம் வந்ததே இல்லையேன்னு காலை வீசிப்போட்டோம்.லக்ஷ்மிநாராயண் மந்திர். உள்ளே போனோம்.  நல்லபெரிய ஹால்.  நல்ல கூட்டம். குழந்தையும் குட்டிகளுமா  ஜேஜேன்னு  இருக்கு. ஒரு பக்கம் மேடையில் நாலு சின்ன சந்நிதிகள்.
ராதா கிருஷ்ணர், ராமர் சீதை லக்ஷ்மணன், லக்ஷ்மி நாராயணர் எல்லாம்  ஜிலுஜிலுன்னு  வடக்கத்திய  துணிமணிகளோடு  யூனிஃபாம் போட்டுக்கிட்டு இருக்காங்க.நல்ல அழகான முகங்கள்.

மேடையைச் சுற்றி இருக்கும் இடைவெளியில் வலம் வர இடம் விட்டுருக்காங்க.   நந்தி இருக்காரேன்னு சிவலிங்கம் தேடினால்  எல்லோரும் வெண்பளிங்கி இருக்க இவர் மட்டும் கரும்பளிங்கில்!


சிம்மவாஹினி, சரஸ்வதி, லக்ஷ்மி  மூவரும் தனிச்சந்நிதியில். சஞ்சீவி மலையுடன் நம்ம நேயுடு/!இந்தப் பக்கம் புள்ளையார். பக்கத்தில்  நிறைய முகங்களோடு ஒரு சாமி.  பண்டிட்டிடம் விவரம் கேட்டால்... 'வோ......  ஆப்லோக் கா  முர்கா ஹை. ஆர்மோகம்' என்றார். அட...  ஆமாம்...ஆறுமுகம்!
 மேடைச் சந்நிதியை மூடிட்டு, ஒருபக்கமா உக்கார்ந்து பக்தர்களுக்கு  பூ, சிந்தூர் கொடுத்து ஆசிகள் வழங்கிக்கிட்டு இருக்கார் பண்டிட். முக்கியமா, சின்னப்பசங்களைக் கூப்பிட்டு  பிரசாதம் கொடுத்தார்.

நாங்களும் குங்குமம் வாங்கிக்கிட்டு வெளியே வந்தோம். கோவில் ஹால் முழுசும்  வடக்கர்கள்  கூட்டம். தமிழ்முகம் நாங்க மூணுபேர்மட்டுமே!


கீழ்தளத்தில்கோவில்.  மாடியில் குடியிருப்புகளோ என்னவோ?  தனியார் கட்டிடமாத் தெரிஞ்சது. நாலே எட்டில்   குடை கேன்டீன் தமிழ்நாடு ஸ்பெஷல் என்ற இடம்.  உள்ளே வெவ்வேற உணவுக்கடைகள் இருக்கு போல. வெளியே இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. மக்கள் வெள்ளம்.

'ஒரு வாரத்துக்குரிய பிஸினெஸ் இன்னிக்கு ஒரே நாளிலே நடந்துரும் போல'ன்னார் கோபால்.  உண்மைதான்!

 இதுக்கு எதிரிலும் ஒரு ஹெரிட்டேஜ் பில்டிங் இருக்கு. 1900 வது ஆண்டு கட்டப்பட்டது.  அப்போ கட்டப்பட்ட சைனீஸ் வில்லா ஸ்டைல் வீடுகளில் எஞ்சி இருப்பது  இது ஒன்னுதான்..   அந்த நாளில்  ஒரு சீன வியாபாரி தன் மனைவிக்குக் கட்டிய வீடாம். எட்டு அறைகள். Residence of Tan Teng Niah. தமிழன் பேட்டையில் தைரியமா இடம்புடிச்ச சீனர்!

இப்போ   உலகத்தில் உள்ள எல்லா கலர்களிலும் பெயிண்ட் அடிச்சு அழகுபடுத்தி(??? !!!)  வியாபார நிறுவனம் ஒன்னுக்கு லீஸ்லே விட்டுருக்காங்க.  இந்த ஏரியாவில்  ஏழெட்டு மாமரங்கள் நிழல் கொடுக்குது.  பூவும் பிஞ்சுமா பார்க்கவே அருமை!

அப்படியே செராங்கூன் சாலைக்குள் புகுந்து நம்ம அறையை நோக்கிப் போறோம். காரைக்குடியில் இளநீர் குடிக்க ஒரு ஸ்டாப் போட்டோம். முந்தி இங்கே சிங்கையில் கிடைக்கும் தாய்லாந்து இளநியைக் காணோம்.  இப்ப மலேசியாவில் இருந்து வருதாம்.  பார்க்க பெருசே தவிர ருசி அதைப்போல் இல்லை:(


திடீர்னு , 'கணேஷ், கணேஷ்'ன்னு கோபால் உரக்கக் குரல் கொடுக்கறார். புள்ளையார் வர்றாராக்குமுன்னு   எட்டிப் பார்த்தால்  அட! நம்ம கணேஷ்!  குடும்பத்தோடு எதிர்சாரியில் நடந்து போய்க்கிட்டு இருந்தவர்,  சட்னு தன் பெயரை உரக்க யாரோ கூப்பிடுறதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்துட்டு  சாலையைக் கடந்து இந்தப்பக்கம் ஓடி வந்தார்.


நியூஸியில் இருந்தவர்.  இவர் இல்லாம நம்ம வீட்டுலே  எந்த விசேஷமும் நடக்காது.  எல்லாத்துக்கும் புள்ளையார் முதலில் வேணாமோ?   அஞ்சு வருசங்களுக்கு முந்தி இந்தியாவுக்குத் திரும்பிப்  போனவர்  அங்கே வேலையில் சேர்ந்து  சென்னையில் ஒரு அழகான வீட்டையும் கட்டிட்டார். அந்த க்ரஹப்ரவேசத்து சமயம் நாங்க இந்தியாவுக்குப் போயிருந்தாலும்  அந்த குறிப்பிட்ட நாள்   போடியில் மாமியார் வீட்டுக்கு விஜயம்.    அன்றைக்கு இரவுதான்  சென்னைக்குத் திரும்பி வர்றோம்.  மறுநாள்தான் புது வீட்டைப்போய்ப் பார்க்க முடிஞ்சது. சென்னை வெயிலுக்குப் பிள்ளைகள் எல்லாம் கருத்துப்போய் கிடந்தாங்க.

கோபாலின் மணிவிழாவுக்கு அவுங்க வந்தப்ப, சிங்கையில் வேலை கிடைச்சுருக்குன்னும்,  முதலில் அவர் மட்டும் போவதாகவும் சொல்லி இருந்தார்.  பிள்ளைகளுக்கு அந்த வருசப்படிப்பு முடிக்கணுமே.  இங்கே சிங்கையில் கல்வி ஆண்டு,  ஜனவரி -டிசம்பர் என்பதால்   ஏப்ரலில் இங்கேயே  கொண்டு வந்து சேர்த்துட்டாராம்.  எந்தப்பள்ளிக்கூடமுன்னு விசாரிச்சால், எனக்குத் தெரிஞ்சதுதான். நம்ம சித்ரா அங்கேதான் டீச்சர்.  சித்ரா டீச்சரைத் தெரியுமான்னு அவர்களை வர்ணித்தால் ரொம்ப நல்லாத் தெரியும், என் வகுப்பு டீச்சர்தான் என்றது சின்னது.   ஆஹா..... உலகம் எப்படிச் சுருங்கிருச்சு பாருங்க! எல்லோரையும் எல்லோருக்கும் தெரியுது:-)))))

மறுநாள் பகலுணவு எங்களோடு சாப்பிடச் சொல்லி அழைச்சோம்.  எங்க எல்லோருக்கும் தெரிஞ்ச இன்னொரு தோழி மறுநாள் வர்றாங்க. அவுங்களும்  நியூஸியில் இருந்துட்டுப் போனவங்கதான். கணேஷுக்கு வேலை இருப்பதால்  அவர் மனைவியும் பிள்ளைகளும் வரேன்னாங்க.
திரும்ப அறைக்குப்போய் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம். மூணரைக்குக் கிளம்பிட்டாங்க. அன்றைக்கு மாலை பதிவர் சந்திப்பு இருக்குன்றதை நினைவு படுத்தினேன். முடிஞ்சால் அங்கே வந்து கலந்துக்கறேன்னு சொன்னாங்க.

சிங்கை சைனீஸ் கார்டன் கார்டன் போகணுமுன்னு ஒவ்வொரு முறையும் நினைப்பேன். ஆனால்  ஒவ்வொரு முறையும் எதோ குறுக்கீடு வந்துரும். இன்றைக்கு ஒரு எட்டுப்போயிட்டு வரலாமுன்னா....  அந்த இடம் முந்தி போல இல்லை. பாழடைஞ்சு போச்சு. விஸிட்டர்ஸ் யாரும் போவதில்லை. அதுவுமில்லாமல்  எம் ஆர் டி யில் போனாலும் இறங்கி நிறைய நடக்கணுமுன்னு  நண்பர் சொன்னதால்  இந்தமுறையும் போகலை:(   நடைக்குப் பயந்த என்னை நடக்க வைக்கணுமுன்னு 'அவன்' முடிவு செஞ்சுட்டான்.

கிடைக்காது என்பது கிடைக்கவே கிடைக்காது போல! போயிட்டுப்போகுது போன்னு  இருக்கலாம்.

சாண்ட்ஸ் ஹொட்டேல் பக்கத்துலே கார்டன் வேலையெல்லாம்  முடிஞ்சுருச்சாம். அதையும் கையோடு பார்த்துக்கணுமுன்னு முடிவு செஞ்சோம்.  லிட்டில் இண்டியா ஸ்டேஷனுக்குப்போய்  ரயில்  எடுத்தோம்.


  போற வழியில் ஒரு கடையில்  பத்துமலையான் சிரிச்சுக்கிட்டு 'அங்கே பார' என்றான். சுண்டைக்காய், முருங்கக்கீரை, சின்ன பாவக்காய் , மாங்காயெல்லாம் விற்பனைக்கு வச்சுருக்காங்க. ஆஹா ஆஹான்னு பார்க்க ஃப்ரெஷா வேற இருக்கு.

வீட்டுலே சமைச்சுச் சாப்பிடும் நிலையில் உள்ள சிங்கைவாசிகள் நிறைய புண்ணியம் பண்ணி இருக்காங்க!

Friday, September 27, 2013

Krish and Chris (சிங்கைப்பயணம் 3)


நிதானம் ப்ரதானமுன்னு  இன்னிக்கு  எல்லாமே கொஞ்சம் தாமதம். நம்ம அறை  எதிர்த்த வரிசையில் இருந்துருந்தால் கோபுரதரிசனமாவது கிடைச்சிருக்கும். இப்ப ரேஸ்கோர்ஸ் சாலைக்கு எதிர்பக்க மைதானம்தான்  முதல்காட்சி.  இதுதான் அந்த ஃபேர்ரர் பார்க் போல!  போகட்டும் அட்லீஸ்ட் பச்சை. கண்களுக்கு  இதம்.கோவிலுக்குள்  நுழையும் முன்  இடப்பக்கம்  செரங்கூன் சாலையில் இருந்து பிரியும் சாலைக்கு பெருமாள் ரோடுன்னு  பெயர்!   மணி ஒன்பதரை ஆகி இருந்துச்சு. கோவிலுக்குள்ளே நல்லகூட்டம். யாக குண்டத்தில் தீயும் புகையுமா இருக்க  ஒரு பத்துப்பதினைஞ்சு பேர் ஜோடிகளா மாலையும் கழுத்துமா இருக்காங்க.  கம்யூனிட்டிக் கல்யாணமோ ன்னால்.... இல்லையாம். அன்றைக்கு யாகத்துக்கு  டிக்கெட் வாங்குனவங்களாம். ஒரு மாசத்துக்கு முன்னேயே பதிவு செஞ்சுக்கணுமாம். கடைசி நேரத்தில் போனா.....   நோ டிக்கெட்.  ஹௌஸ் ஃபுல் ஆகிருது!  ஒரு மேடையில்  அலங்கரிக்கப்பட்ட  வெள்ளிக் கும்பம்!

கோவிலுக்கு வருமானம் வரட்டுமே! பக்கத்துலே இருந்த ஹாலை இடிச்சுட்டு புதுக் கட்டிடம் எழுப்பிக்கிட்டு இருக்காங்க. செலவு நிறைய இருக்குல்லையா?  வரவர மக்கள்ஸ்க்கு பக்தி கூடிக்கிட்டே வருதுன்னு  புரிஞ்சுக்க முடியுது.  யாக குண்டம் ரெண்டுவிதமா இருக்கு போல. அன்னிக்கொருநாள் பார்த்தது அழகா வட்டமா இருந்தது. இன்னிக்கு  சதுரமான ஒன்னு.

சாமி ப்ரீதிக்கு  வட்டம். ஆசாமி  ப்ரீதிக்கு சதுரம். இருக்குமோ என்னவோ?

ஆனால் யாகசாலைன்னு ஒன்னு தனியா இல்லை. நல்லவேளைன்னு நினைக்கணும். இல்லேன்னா அந்த  அறை கரிபிடிச்சுக் கிடக்கும்!
மொத்த கூட்டமும் யாக குண்டத்தைச் சுற்றி இருப்பதால் கோவிலில் மற்ற சந்நிதிகளெல்லாம்   அமைதியாக் கிடக்கு.  சாமிகள் மட்டும் தேமேன்னு இருக்காங்க மூலவர் உட்பட! நாங்களும் ஆற அமர ஒவ்வொரு சந்நிதியாப்போய் கும்பிட்டோம். மூலவருக்கு முன் மண்டபத்தில் உற்சவர் அலங்காரத்தோடு  எங்கோ வெளியில் புறப்படத் தயாரா இருக்கார். (ஓ...அதனா   குடைகூட  விரிச்சு வச்சு ரெடியா இருப்பது? வழக்கமான பெருமாள் குடை இல்லை. கொஞ்சம் சின்னதுதான்! ) பக்கத்தில் இன்னொரு  செட் உற்சவர்கள்   திருமஞ்சனம் செஞ்சுக்க ரெடியா நிக்கறாங்க.  எதிர்ப்பக்கம் பெரிய திருவடி  கூப்பின கைகளும் மலர்மாலைகளுமா விநயத்தோடு.நம்ம இடம் இன்னிக்கு நமக்கில்லை என்பதால்  நாங்க ஆஞ்சநேயடு சந்நிதிக்குப்போய் மண்டபத்தின் ஓரமா உக்கார்ந்து   ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்க ஆரம்பிச்சோம்.  யாகக் குழுவினரின்  பதின்மவயதுப் பிள்ளைகள்  நம்ம ஆஞ்சி மண்டப ஓரத்தில் இடம்பிடிச்சு செல்லும் கையுமா  பிஸியா இருக்காங்க.  திடீர்னு  பக்தர் ஒருத்தர் வந்து ஆஞ்சி வடை விநியோகம் செஞ்சார்.


நம்ம வாசிப்பு முடிஞ்சதும்  நாளைக்கும் வரேண்டான்னு சொல்லிட்டு  நேரா முஸ்தாஃபா கடைக்குப் போனோம். 24 மணி நேரமும் திறந்து இருப்பதால்  கொஞ்சம் மேனேஜபிள் கூட்டமா இருக்கு.  கோபாலுக்கு ஷர்ட்ஸ் வாங்கிக்கணுமாம்.  இவர் துணிகளை செலெக்ட் செய்வதைப் பார்த்தால் எனக்கு கண்ணீர் வரும். அதுவும் ரத்தக் கண்ணீர்.  அழுதுவடியும்  கலரில்  ஒரே மாதிரி ரொம்பச் சின்ன வித்தியாசங்களோடு  எடுத்திருப்பார்.  கையில் உள்ள   கலரும், டிஸைன்ஸ்  எல்லாம்  ஆயிரம் முறை நான் துணிகளை வாஷிங் மெஷீன்லேபோடும்போது பார்த்திருப்பேன்.  இதே மாதிரி ஏற்கெனவே இருக்கேன்னா......  அதுலே  கொஞ்சம் பெரிய கோடு. இது நல்ல ஃபைன் கோடு பாரும்பார்.  ஆமாம் அது 0.005  மிமீ  என்றால் இப்போ கையில் உள்ளது  0.004 ஆக இருக்கும். இதுலே ஒவ்வொன்னா போட்டுப் பார்த்து  சரியா இருக்கான்னு நம்ம அபிப்ராயம் வேற கேட்பார்.  ஒரே அழுக்கு க்ரே, நீலம், வெள்ளையில் அழுக்குக்கோடு, நீலக்கோடு  இவைகளைப் பார்த்துப்பார்த்து என்  ஓட்டைக் கண்களே பூத்துருமுன்னா பாருங்க.  பிஸினெஸ் ஷர்ட்ஸ்தான் இப்படின்னா, கேஷுவலா போட்டுக்க நல்ல பளிச்சுன்னு வாங்கிக்கப்டாதோ?  இல்லையே:( அதுக்கும் இப்படி அழுதுவடியும் கலர்ஸ்தான்! ஆனா சின்னதாக் கட்டம் போட்டுருக்கும்:-) இவ்ளோ ஏன்? இப்பக்கூட இப்படி  லைட் நீலத்துலே ஒரு கோடுதான் போட்டுக்கிட்டு இருக்கார்:-)


ஆம்பளைகளுக்குக் கொஞ்சம் கலர் ப்ளைண்ட்னஸ் உண்டு என்பதால்  முகத்தில் எந்த உணர்வும் வராமலிருக்க நான் பாடுபடுவேன். 'நோக்கக் குழையும் கணவர் '  என்று வேற தாடி சொல்லிவச்சுருக்காரே!

ஷர்ட்ஸ் செ(ல)க்‌ஷனில் நேரம் போனதே தெரியலை(யாம்)  செல்லில் கால் வருது  தோழி வந்து ஹொட்டேல் லாபியில் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு!  இன்னிக்கு இன்னொரு எழுத்தாளர் தோழி வர்றாங்க . ஷர்ட்ஸ் எங்கே போகப்போகுது?அப்புறம் பார்த்துக்கலாமுன்னு அப்படியே கிளம்பி அரக்கப்பரக்க ஓடுனோம்.

சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். 23 வருசமா  சிங்கை வாசம்.  வருசத்துக்கு குறைஞ்சது மூணு புத்தகம் வெளியீடு. எல்லா உள்ளூர் வெளியூர் பத்திரிகைகளிலும்  கதை கட்டுரைன்னு விடாம எழுதறாங்க. இவுங்களைப் பற்றியும் இவுங்க எழுத்துக்களைப்பற்றியும் எழுதப்போனா சுமார் 10 இடுகை கேரண்டீ.  இவுங்களும் நம்ம மரத்தடி காலத்துத் தோழிதான். இவ்ளோ பெரிய எழுத்தாளர் என்ற தலைக்கனம் சிறிதும் இல்லாதவர்.அதனாலென்ன? எனக்கு அந்தத் தலைகனம் இருக்கே...... இம்மாம் பெரிய ஆள் என் தோழின்னு:-)))

மேலே அறைக்குப்போய்  ( கடந்த எட்டு மாசத்தில் விட்டுப்போன) அரட்டையைத் தொடர்ந்தோம்.   சிங்கை(யின் ஒரே) தமிழ் தினசரியில் இப்போ வேலை செய்யறாங்க.  புது வேலை கிடைச்சதைக் கொண்டாட இன்னிக்கு விருந்து கொடுக்கறாங்க நமக்கு!

ஒரே மாதிரி சாப்பாடு வேணாமேன்னு  ரேஸ் கோர்ஸ் சாலைக்குப்போனோம். ஹொட்டேல் பின் தெருதான்.  ஒரு சர்ச் கண்ணில் பட்டது.  ஃபூச்சௌ என்ற பெயரைப் பார்த்ததும் நம்ம பூச்ச (பூனை, மலையாளம்)  நினைவுக்கு வந்துட்டான்.  உள்ளெ போனோம்.  நல்ல  அழகா  அம்சமா இருக்கு. கீழ்தளத்தில் ஹால்.  மேல்மாடியில்  வழிபாட்டுக்கான ஆல்ட்டர்  &  இருக்கை அமைப்புகள்.

1890களில் தென் சீனா  ஃபூச்சௌ வட்டத்திலிருந்து  இந்தப்பகுதிக்கு வந்து குடியேறிய  மக்களில்  மெத்தடிஸ்ட் சர்ச் மக்கள் பலர் இருந்துருக்காங்க.  பெரும்பாலோருக்கு  கைவண்டி இழுப்பது,  கூலி வேலை , முடி திருத்துவது போன்ற தொழில்களே. தங்களுக்குள் ஒன்னு சேர்ந்து சாமி கும்பிட்டுக்க ஒரு திருச்சபை வேணுமுன்னு  அவுங்க ஆரம்பிச்சதுதான் இது. மதபோதகர் ஆண்ட்ரீ சென் உதவியால்  1897 இல் திருச்சபை ஆரம்பிச்சு, மேற்படி அங்கத்தினர்களுக்கு  எழுதப்படிக்க,பாட்டுப் பாடன்னு சொல்லிக் கொடுத்துருக்காங்க. நல்லதொரு சமூக சேவை.

ஒரு நாப்பது வருசம்போல வாடகைக் கட்டடத்தில் சர்ச் நடந்துக்கிட்டு இருந்துருக்கு. இங்கே அங்கேன்னு மூணுமுறை வெவ்வேற இடமுன்னு மாத்தி இருக்காங்க.ஒரு கட்டத்தில்  சொந்தமா ஒரு இடம் இருக்கணுமேன்னு  நிதி சேகரிச்சு இந்த ரேஸ்கோர்ஸ் ரோடிலே இப்போ நாம் பார்த்துக்கிட்டு இருக்கும் கட்டிடத்தை 1937 இல் வாங்கிட்டாங்க. சர்ச் இங்கே நல்லா நடக்குது. உலகப்போர் நடந்தப்ப இதன்மேல் குண்டு விழுந்து  முன்பக்கம் இடிஞ்சு போச்சு:(  கஷ்டப்பட்டு மீண்டும் முன் இருந்த மாதிரியே எடுத்துக் கட்டிட்டாங்க.  இப்ப இந்த சர்ச்,  சிங்கையின் பாரம்பரியக் கட்டிடத்தில் ஒன்னா இருக்கு!  ரொம்ப நல்ல பராமரிப்பு. படு நீட்.


இருக்கைகளின்  முதுகில் சர்ச்சில் பாடும் பாட்டுகள்  உள்ள புத்தகமும், பைபிளும்   வச்சுருக்காங்க.  எடுத்து வாசிச்சுச் சாமி கும்பிட்டதும் திருப்பி வச்சுட்டு போனால் ஆச்சு.  கையை வீசிக்கிட்டுக் கோவிலுக்குப்போகலாம்:-)


நாங்கள் உள்ளே போய் சுத்திப் பார்த்தபோது வேற யாரும் அங்கே இல்லை.  கொஞ்சம் படங்களை க்ளிக்கிட்டு,ரெண்டு நிமிசம் உக்கார்ந்து  சாமி கும்பிட்டுட்டு வந்தேன். ஞாயிறுகளில்  மலை ஏழு மணிக்கு தமிழ் மொழியில்  பூஜை செய்யப்படுமாம்!

படங்கள் அப்போ & இப்போ!

ஸ்பைஸ்  ஜங்ஷன் என்று ஒரு ரெஸ்ட்டாரண்ட் கண்ணில் பட்டது. கேரள யானைகளின்  முகபடாம் பார்த்ததும் சட்னு உள்ளே நுழைஞ்சோம். தமிழ்மொழி விழா, டேஸ்ட் ஆஃப் ஹெரிடேஜ்.  புட்டும் கடலைக்கறியும்  என்று படம்  போட்டுருக்கு.

ஓக்கே..... இன்னு அதுதன்னே அய்க்கோட்டே!  மெனு பார்த்தால் எல்லாம் கேரளா ஸ்டைல்களே! ஆப்பம், அவியல், கப்ப புழுங்கியது, புட்டு, கடலைக்கறின்னு வாங்கினோம்.  பரவாயில்லாம  சுமாரா இருந்துச்சு.


தொடரும்..............:-)

Wednesday, September 25, 2013

அதென்ன கெமிஸ்ட்ரியோ!!! (சிங்கைப்பயணம் 2)

பதிவர், எழுத்தாளர் என்பதையெல்லாம் கடந்து ஏதோ ஒன்னு  நட்புகளை பிணைக்கும்  அதிசயம்தான்  கடந்த பத்துவருசமா நடந்துக்கிட்டு இருக்கு.  சிலநண்பர்கள் குடும்ப நண்பர்களா ஆகிப்போனதும் ஒரு  விசேஷம்தான் இல்லையோ?  முதலிரண்டு முறை  ஊரைச் சுற்றிப்பார்க்கும் ஆவல் அதிகமா இருந்தது போல  இப்போ இல்லை.  ஷாப்பிங் ஷாப்பிங்ன்னு அலைஞ்ச காலமும் போயிருச்சு. உலகம் முழுசும் எல்லாமே சீனத் தயாரிப்பு. அப்புறம் எங்கே வாங்கினால் என்ன? சிங்கையில்   மலிவாக் கிடைக்குதேன்னு  பார்த்தால் தரமும் குறைவாகத்தான் இருக்கு:(

சிங்கைச்சீனுவுக்கு முன்னுரிமை,  அப்புறம் நண்பர்கள் சந்திப்பு.வேறொன்னும் அவ்வளவு முக்கியமாத் தோணறதில்லை இந்த சிங்கப்பூரில்.  அடிக்கடி வந்து போவதால்  வேற்றூரென்ற எண்ணம்கூட வர்றதில்லை.

மரத்தடி காலத்து நண்பர்களுடனும், இணைய நண்பர்களுடனும்  சேர்ந்து இண்டர்நேஷனல்  சந்திப்பு ஒன்னை ஆரம்பிச்சு வச்சது துளசிதளம் என்று சொன்னால் நம்புவீங்களா?


இங்கே பாருங்க.  அட!  பயணக் கட்டுரையை வெறும்  பத்தே பகுதியில் முடிச்சுட்டேனே!!!!! அதுவும் ஒன்பதுநாள்  ஒரே ஊரில்  இருந்துருக்கோம்! சபாஷ்!


தோழி வந்தாச்சு.  சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷ். நாம் எப்போ சிங்கை போனாலும் அவுங்க வீட்டுலே ஒரு ஃபுல் கட்டு கட்டிட்டுத்தான் வருவோம்.  எழுத்து நம்மை இணைக்குதுன்னு பார்த்தால்  நம்ம கோபால் கூட நேரம் கிடைச்சால் அங்கே போய் ஒரு கட்டு கட்டாமல் வர்றதில்லையாக்கும்!  சித்ராவின்  கணவர் ரமேஷ் எங்கேன்னதுக்கு  'தென்னாப்பிரிக்காவில்  ரமேஷ்'னு சொன்னாங்க. (சினிமாவையும் தமிழனையும் பிரிக்கவே முடியாது!)  ராஜுதான் போகலை. ரமேஷாவது  போய்வரட்டுமே!  இவரும் மரத்தடி எழுத்தாளரே.  ஆனால் ரொம்பநாளா  ஒன்னும் எழுதலை:( அவுங்க மகனுக்கு  போன டிசம்பரில் கல்யாணம்.  போக ரெடியா நின்னவளை குடும்பக்காரணம் ஒன்னு இழுத்துப்பிடிச்சது ஒரு சோகக் கதை:(


என்னதான் வீடியோவில் கல்யாணத்தைப் பார்த்துட்டாலும் மருமகளை நேரில் காண்பது இதுதான் முதல்முறை எனக்கு. தோழியின் கூடவே  (மாமியார் மெச்சிய) மருமகளும் வந்துருந்தாங்க. சின்னதா ஒரு பரிசுப்பொருள் வாங்கி வச்சுருந்தோம்.  கொஞ்சநேரம் விட்டுப்போன  (எட்டுமாசக்) கதைகளையெல்லாம் பேசி முடிச்சு(?) சாப்பிடக் கிளம்பினோம்.

இன்னிக்கு இப்போ முன்னுரிமை மருமகளுக்கே!

கைலாச பர்வதம் போகலாமான்னாங்க.  அட! தாண்டிக் குதிச்சால் ஆச்சு:-)

நாம் தங்கி இருக்கும் ஹொட்டெலின் ஒரு பகுதிதான் இது.  என்ன ஒன்னு ரெண்டு கட்டிடத்துக்கும் நடுவிலே ஒரு லேன் போகுது.  அங்கேயும் மாடியில் தங்குவதற்கான அறைகள் உண்டு.  கைலாசத்தின் அடுத்த வாசல் செரங்கூன் சாலையில். நம்ம காளியம்மன்  கைலாசமலைக்குப் பக்கத்து வூடு!  படு பொருத்தமா அமைஞ்சு போச்சு பாருங்க:-)

முல்சந்தானி சகோதரர்கள்  சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்கள்.  1940லே கராச்சியில் பானி பூரி வித்துக்கிட்டு இருந்தாங்க.  பிஸினஸ் நல்லாப் போய்க்கிட்டு இருக்கு. 1947 இல் பாகிஸ்தான் பிரிவினை ஆனதும்  இந்துக்களுக்கு  நடக்கும்கொடுமை தாங்காமல் ஊரை (நாட்டை)விட்டே ஓடிவரவேண்டிய நிலைமை. கலவரம் நடக்கும் காலத்தில் என்னத்தைன்னு மூட்டை கட்டிக்கிட்டுக் கிளம்பறது? திகைச்சுப்போனவங்க..... விலைமதிப்பு வாய்ந்தபொருட்களை அம்போன்னு விட்டுட்டு,  கையிலே தொழில் இருக்கு. எப்படியும் பிழைச்சுக்கலாமேன்னு பானி பூரி, ரக்டா செய்யும் பாத்திரங்களைச் சுமந்துக்கிட்டு  பார்டர் தாண்டி வந்து  பம்பாய்க்குப் போய்ச் சேர்ந்தாங்க.

முதலில் தெருவோரக்கடையா  இருந்து, பின்னே கைலாஷ் பர்பத்  (வடக்கருக்கு 'வ' வராதுல்லெ!) என்ற சின்னக்கடை  கொலாபா மார்கெட்டாண்டை ஆரம்பிச்சது 1952 இல். வியாபாரம் சூடு பிடிச்சது. படிச்சவன், படிக்காதவன், ஏழை பணக்காரன்,  குமரன் குமரி, கிழவன் கிழவின்னு  எல்லோரையும் ருசிக்கு அடிமையாக்கிட்டாங்க. பானி பூரி ஸ்பெஷலிஸ்ட் என்றாலும்  பஞ்சாபி, சிந்தி உணவு வகைகளும் தயாரிச்சதும் நல்ல பேர் கிடைச்சுப் போச்சு.

அதுக்குப்பிறகு  இந்தியாவிலேயே முக்கிய நகரங்களில்  கிளைகள் திறந்து அமோகமா இருக்காங்க. சிங்கை ஒரு குட்டி இந்தியாவா ஆனதும்  எப்படி நம்ம சரவணபவன், அடையார் ஆனந்தபவன், சங்கீதா எல்லாம்  இங்கே  இடம்பிடிச்சதோ  அதே வகையில் கைலாசமலை  இங்கே சிங்கையிலும் கிளை நீட்டி இருக்கு. வந்த கொஞ்சநாளிலேயே நல்ல பெயரும் புகழும்.  இந்திய ருசி & சிங்கைத் தரத்தில் சர்வீஸ். பின்னே கேட்பானேன்?

கைலாசமலையில் அமர்ந்து ஒரு சாட்


உணவு ஆர்டர் செய்யும் பொறுப்பும் மருமகளுக்கே!  சாட் ஸ்பெஷாலிட்டியா இருக்கு என்பதால்  சாட் ப்ளேட்டர், பட்டூரா ப்ளேட்டர் (எல்லாத்திலும் நவ்வாலு வகை)  சனாக் கறி, குல்ஃபி ஃபலூடா, மலாய் குல்ஃபி, ரசகுல்லா, ஆப்பிள் புதினா ஜூஸ்,  லஸ்ஸி, மசாலா டீ ன்னு   உள்ளெ தள்ளினோம்.  சும்மாச் சொல்லக்கூடாது ,நல்ல ருசிதான். ரெஸ்ட்டாரண்டும்  நல்லா சுத்தமா இருக்கு.  என்ன ஒன்னு சர்வீஸ் சார்ஜ்ன்னு ஒரு பத்து சதமானமும், ஜி எஸ் டின்னு இன்னும் ஒரு ஏழு சதமானமும் வாங்கிடறாங்க.

சித்ராவைவிட அவுங்க அம்மா எனக்கு ரொம்ப நெருங்கியவங்களா ஆகிப் பலவருசங்களாச்சு.  'சந்திக்க வரலாமா'ன்னு ஃபோன் போட்டால், 'இது என்ன கேள்வி? இது உன் வீடு எப்ப வேணுமுன்னாலும் வரலாம். சட்னு கிளம்பி  வா'ன்னு வாய்நிறையச் சொல்லும் அன்புக்கு நான் அடிமை.

பேச்சு வாக்கில் ஊரிலே அம்மா அப்பா எப்படி இருக்காங்கன்னு கேட்டால்,  இங்கே சிங்கைக்கு வந்துருக்காங்கன்னு இன்ப அதிர்ச்சி கொடுத்தாங்க சித்ரா.  "அடடா.... ஏன் கூடக்கூட்டிக்கிட்டு வரலை?"

தம்பி வீட்டில் இருக்காங்கன்னதும்  ரொம்பக்கிட்டக்கத்தானேன்னு பேசிக்கிட்டே  பொடி நடையில் அங்கே போனோம். சர்ப்பரைஸா இருக்குமோன்னு  நினைப்பு. 'கவலையே படாதே. எல்லாவிவரமும் அம்மாவுக்குச் சொல்லியாச்சு'ன்றாங்க.

கேட்டைக் கடந்ததும் பெரிய நீச்சல்குளம் உள்ள அருமையான அடுக்கு மாடி வீடு.  ஒரு சமயம் பெய்த பெருமழையில் மொத்த சிங்கப்பூரும்  வெள்ளத்தில் மிதக்க, காம்பவுண்டுக்குள்ளே வந்த  வாடகைக்கார், நேரா போய் நின்னது(!) நீச்சல்குளத்துக்குள்ளே!  தரை தெரியாமல் தண்ணின்னா பாவம் புது  ட்ரைவருக்கு குளம் விவகாரம் எப்படித் தெரியும்? இப்படியாக உள்ளூர் பத்திரிகை மூலம் வீட்டின் புகழ் பரவிருச்சு:-)

தம்பி வீட்டின் உள் அலங்காரம் படு பிரமாதம். இருக்காதா பின்னே?  யானையாரும் பூனையாரும்  இருக்காங்களே!

 அப்ப விஜய் டிவியின் அவார்ட் ஃபங்க்‌ஷன் நடக்குது. சினிமா அண்ட் டிவி உலகில் யாரு இருக்கான்னுகூட தெரியாத எனக்கு, சித்ரா அப்பா முதல் முழுக்குடும்பமும்  திரையில் வரும் அனைவரின் ஜாதகத்தைப் புட்டுப்புட்டு வச்சாங்க!  எம்பத்தினாலு வயசுக்கு  அப் டு டேட், இல்லையில்லை  செகண்ட்  தெரிஞ்சு வச்சுக்கும்  விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சது:-)  ரிட்டயர்டு லைஃப் மஜாவாப் போகுதுன்னு  கிண்டல் செஞ்சேன்:-)   ரெண்டு மணி நேரம் செம அரட்டை:-)))) இன்னுமொரு மாசம் இருந்துட்டுக் கிளம்பறாங்களாம்.


நாங்க கிளம்பினபோது, ஒரு ஷிர்டி சாய்பாபா படமும் ஒரு மாம்பழமும் சாமி ப்ரஸாதம் கிடைச்சதுன்னு  கொடுத்தார்  சித்ரா அப்பா.  நிறைய கோவில்கள் , பூஜைகள், கச்சேரிகள் என்று  பொழுது நல்லாப் போகுதாம்.   நாம் அங்கே போன பாதையிலேயே பொடிநடையில்  செராங்கூன் சாலைக்குப் போயிட்டோம். ராமகிருஷ்ணா மிஷன் கட்டிடத்தைக் கோபாலுக்குக் காண்பிக்கலாமுன்னு நோரீஸ் தெருவுக்குள் நுழைஞ்சு ,  தேடிக்கிட்டுப் போறேன். காணோம்.  அப்பதான் உறைக்குது தப்பான தெருவில் நுழைஞ்சுட்டேன் என்பது. ஆனால்  அட்டகாசமான ஒரு  கட்டிடத்திலே சர்ச் ஒன்னு இருப்பதைக் கவனிச்சேன்.

இன்னும் கொஞ்சம்  தூரம் போய் காய்கறிக்கடைகளில் புதுசா வந்து இறங்கி விற்பனைக்குத் தயாரா இருக்கும் காய்கறிகளைக்  கண்ணால் பார்த்து, பெருமூச்சு விட்டு, க்ளிக்கிட்டு  நடந்தால் ஒரு கடையில் நாவல்பழங்கள்! ஹைய்யோ!  எவ்ளோ நாளாச்சு!  கொஞ்சம் ஒரு அரைக்கிலோ  வாங்கினோம்.அப்புறம் ஜோதி 'புஸ்ப'க்கடையில் வழக்கமா ஒரு சுத்து. விலையெல்லாம் தாறுமாறாய் ஏறிக்கிடக்கு! நம்ம வீட்டுக்கு வழக்கமா வாங்கும் ஊதுவத்தி  எட்டு டாலர் சமாச்சாரம் இப்போ பதினெட்டு டாலர்!  பொம்மைகளும் பூஜை சாமான்களும்  வழக்கம் போல் கொள்ளை அழகு.
சும்மாவே ஆடுவேன்.  சலங்கை கட்டிக்கிட்டால்.............:-))))


இன்னொரு கடையில்  'பொம்மைக்கொலு' பார்த்துட்டுக் கிளம்பும் சமயம்   நம்மை மாலை எட்டுக்குச் சந்திக்க வர்றதாச் சொன்ன  கோவி.கண்ணன்  குடும்பம்,  ' வரலை'ன்னு  செல்லில் கூப்பிட்டுச் சொன்னார்.  மறுநாள்  பார்க்கலாமுன்னு  முடிவாச்சு. நாங்களும்  பஃபெல்லோ தெருவில் இருந்த இன்னொரு கடையில் ஊதுபத்தி விசாரிக்கப்போனால் அங்கேயும் பதினெட்டே! இதென்னடா  ஊதுவத்திக்கு  வந்த வாழ்வுன்னு  ஒரு பேக்கெட் மட்டும் வாங்கிக்கிட்டு  அருகில் இருக்கும் கோமளவிலாஸில்  அஞ்சு இட்லிகளை பார்ஸல் வாங்கிக்கிட்டு அறைக்குப் போயிட்டோம்.  சூடு ஆறுவதற்குள்  சாப்பிட்டும் ஆச்சு.

அப்ப  நம்ம கோவியார்  செல்லில் கூப்பிட்டு  அவரும் குழலியுமா நம்மைச் சந்திக்க வந்துக்கிட்டு இருக்கோமுன்னு  சொன்னார்.  அஞ்சு நிமிசத்துலே கீழே லாபியில் இருக்கோமுன்னு  செய்தி. நாங்க பரபரப்பா கீழே போனால் அங்கே மொத்தக் குடும்பமும் ! நமக்கோ  இன்ப அதிர்ச்சி.

குழந்தைகளுக்குப் பசியா இருக்குமேன்னு  உடனே  சாப்பிடப் போனோம்.   இப்போ முன்னுரிமை குழந்தைகளுக்கு. நம்ம  செங்கதிர்  இன்னும்  சின்னக்குழந்தை என்பதால்  அக்கா சொன்னபடி  சிங்கை ஸ்டைல் உணவு கிடைக்கும் ரெஸ்ட்டாரண்டுக்குள் போனோம்.

நமக்குத்தான் இன்னொரு வயிறு இல்லை:( கம்பெனி கொடுக்கன்னு  ஒரு ஸ்வீட் மட்டும் வாங்கிக்கிட்டேன். பேச்சு எங்கள் மூச்சாக இருந்துச்சு. இடைக்கிடை ஒரு வாய் உணவு.

'ப்ளொக் இனி அவ்ளோதான். அதன் மவுசு குறைஞ்சுக்கிட்டு வருது'ன்னுகுழலி சொன்னதும்  கோபால் ஆடிப்போயிட்டார்! நாலு வரி எழுதும்  ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு ட்ராஃபிக் நிறையன்னதும், கவலையோடு 'இப்ப என்னம்மா செய்யப்போறே?' ன்னு கேள்வி வேற!!!

'இனி என்றால் இன்றோடுன்னு  பொருள் இல்லை.  அததுக்கு  ஆயுள் உள்ளவரை  வண்டி ஓடத்தான் செய்யும்' என்று நான் ஆசுவாசப்படுத்தினேன்:-)

மணி பத்தரைக்கு மேல் ஆச்சு. குழந்தைகளுக்கு தூக்க டைம்ன்னு  நினைச்சால். அழகான கண்களை இன்னும் அழகாத் திறந்து  தூக்கம்ன்னா என்னன்னு  கேட்கும் பார்வையை   என் மீது வீசறார் செங்கதிர்.

மறுநாளைக்கான  பதிவர் மாநாடு 'வழக்கமான இடத்தில்' மாலை அஞ்சு மணிக்குன்னு  சொல்லிட்டுக் கிளம்பினார் கோவியார்.  நம்ம குழலிக்கு  மறுநாள் வரமுடியாமல்  முக்கிய வேலை ஒன்னு இருப்பதால் இன்றைக்கே  நம்மைச் சந்திக்க வந்தாராம்.   ஹௌ நைஸ்!!!! ஹௌ நைஸ்!!

இப்போ தலைப்பு சரியா வருதா? :-)

தொடரும்......:-)