Wednesday, September 18, 2013

வடையை விடுவதாக இல்லை! (மலேசியப் பயணம் 18)


"என்ன இந்தப்பக்கம் திரும்பாம நேராப்போறே?"   அட...யார்றா நம்மைக் கூப்பிடறான்னு பார்த்தால்... வடைமலை! கூடாரத்துக்குள்ளே சின்னமலைகளா எகப்பட்ட ஐட்டம். இப்பதானே  சாப்பாடு முடிஞ்சது. வயித்துலே இடம் இல்லையேன்னு  இருந்தாலும்,  இன்றே இந்தப் பக்கம் வருவது கடைசி என்றபடியால் கிட்டே போனேன்.

நமக்கு வேண்டிவற்றை  இடுக்கியால் எடுத்துச் சின்னக் கூடையில் போட்டு நீட்டினால் அவற்றை  எண்ணிப் பார்த்து பாய்ண்ட்  ஆறால் பெருக்கினால் வடை ..  ஸாரி விடை வரும். மசால் வடை, மெதுவடை, வாழைக்காய் பஜ்ஜி,  வெள்ளையில் ஒன்னும்  கருப்பில் ஒன்னுமா ரெண்டு போண்டாக்கள். மூணு ரிங்கிட் ஆச்சு.  மாலை டீ டைமுக்குக் கட்டாயம் தின்னுடணும்.

வடைக்காரம்மா சரோஜினி,  இங்கே நல்லமுறையில் தயார் செய்யும் பண்டங்களுக்கு ரசிகர் பட்டாளமே இருக்குன்னார். அதுவும் லஞ்சு டைமில் பார்த்தால் கூட்டம்  அதிகம் என்றார். ஆமாம். அம்முது!  நேத்து கவனிச்சேன்னு சொன்னேன்.

அறைக்கு வர ரெயில் ஏறினால், 'வடை' யும்  பயணம் பண்ணுது சீனப்பெண்மணியின்  கையிலே!

டுன் சம்பந்தன் ரெயில் நிலையம் வருமுன் கந்தசாமி தெரியறான்னு  கண் நட்டேன்.  மேல்தளத்தை எட்டிப்பார்க்கும் குட்டிக்குட்டி விமானங்கள்!

சாலைகள் எல்லாம் ரொம்ப நீட்டா இருக்கு!


மசூதிகளும் சீனக்கோவில்களும் பொலீஸ் தலைமையகம்  எல்லாம் கைக்கெட்டும் தூரம்:-)


ரெயில் கண்ணாடி வழியா தெரியும் காட்சிகளைக் கிளிக்கிட்டே வந்தேன்.

என்ன ஒரு பசுமை! நகரத்துக்குள்ளே  இத்தனை  புல்வெளிகளா!!!!   சூப்பர்!

தனக்கு வேண்டிய எல்லாம்(!) மலேசியாவில் மலிவு என்ற எண்ணம் கோபாலுக்கு! மணி ரெண்டுதான் ஆகுது.  இங்கே பக்கத்துலே ஒரு கடையில் ஸூட்கேஸ் ஒன்னு பார்த்தேன். அதை வாங்கிக்கலாமுன்னு  சொன்னார்.  நமக்கும் எதாவது தேறாதான்னு தலையை ஆட்டினேன்.பெவிலியனுக்குப் பக்கத்து பில்டிங்.

பைப்ரியர் ஒரு  ஸூட் கேஸ் வாங்கிக்கிட்டார்.  கிச்சன் கேட்ஜெட்ஸ் பிரிவில்  புது வகையா ஒன்னும் இல்லை:(  ஒரு கத்தியைத் தேடிக்கிட்டே இருக்கேன். கண்ணில் ஆப்டலை:(

அறைக்குத் திரும்பி  வடைகளைத் தின்னு  ஒரு சாதா (!) டீ போட்டுக் குடிச்சோம்.

நாலரைக்குத் தம்பி வந்தார் எங்களைக் கூட்டிப்போக.  சொந்தமா லா ஃபர்ம் வச்சு நடத்துறார். அக்காவின் தோழிகள் அனைவரையும்  தன் கூடப் பிறந்த அக்கான்னே  நினைச்சுப் பழகும் தங்கத்தம்பி.

இவருடைய வீடு இருக்கும் பகுதிக்கு(Taman Yarl) டமன்  யார்ல்/ யாழ் என்று பெயர்.   அரசு , முந்தி  நகரத்தை விரிவாக்கும்போது , குடி இருப்புகளுக்காக  நிலங்களைச் சரிப்படுத்திக் கொடுத்து விற்ற சமயம் இலங்கைத் தமிழர்களுக்கு  அதிலும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்குன்னு ஒதுக்கிய பகுதி இது. யாழ்பாணத்துக்காரரா இருந்தால்தான்  வீடு கட்ட நிலமே  கிடைக்குமாம்.

அப்ப எப்படி இவருக்கு இங்கே இடம் கிடைச்சது? மனைவி யாழ்பாணத்துக்காரர். ஆஹா.... ஜப்பனைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்  டிஸைன் செய்துக் கட்டித் தந்துருக்கார்.  இன்னும் மூணு வீடு கட்டும்விதமா  (எனக்கு ரொம்பப்பிடிச்ச  )பெரிய புல்வெளி வீட்டு முன்முற்றத்தில்.

இப்போ நிலைமை மாறிப்போச்சு. இந்தப் பகுதியில் ஏராளமான வீடுகள் விற்பனைக்கு  வருது. யார் வேண்டுகானாலும் வாங்கலாம்.

என் நியூஸித் தோழியின் தம்பிதான் இவர்.  பத்து வருசங்களுக்கு முன் தோழியுடன் (இந்தியா வரும் வழியில்) இங்கே வந்திருக்கேன். அப்பவே மொத்த குடும்பமும் நம்மை ஸ்வீகாரம் செஞ்சாச்சு. அதன் பிறகு அவர்கள் குடும்பத்தில் யார் நியூஸிக்கு (தோழி வீட்டுக்கு) வந்தாலும் நம்ம வீட்டுக்கு வராமல் போகவே மாட்டாங்க. வேற்றுமனிதர்கள் என்றில்லாமல் அன்பை உணர்ந்த தருணம் அவைகள் எனக்கு.

தம்பி மகள்  கே எல்லில் ஒரு ஃபேஷன் மாகஸீன் எடிட்டர்.  திருமணம் ஆகி எம்பதுநாள் ஆகி இருந்தது.  தம்பதிகள் இருவருமே  வழக்கறிஞர்கள். அந்தக் கல்யாணத்துக்குப் போகணுமுன்னு ஏற்பாடு செஞ்சு கடைசி நிமிசத்தில்  போகமுடியாமல் போச்சு எனக்கு:(

தம்பியின் மற்ற அக்காக்கள் (உடன்பிறந்த  & உடன் பிறவாத) அனைவரும் நம்மை எதிர்பார்த்து வீட்டில் கூடி இருக்காங்க.  சரியா சொன்னது சொன்னபடி நாலரைக்கு வந்து நம்மை வீட்டுக்குக் கூட்டிப்போனார் தம்பி. போன கொஞ்ச நேரத்தில் எனக்கு ஃபோன்கால். நியூஸியில் இருந்து  தோழி கூப்பிட்டு சரியான நேரத்தில் பிக்கப் செய்தாரான்னு கேக்கறாங்க:-)  இன்னொரு தோழி அங்கே நம்மை சந்திக்க வருவதாக  இருந்தவர்  கொஞ்சம் உடல்நிலை சரியில்லைன்னு சொன்னதால் நான் பரவாயில்லை நெக்ஸ்ட் டைமுன்னு சொல்லி இருந்தேன்.  நியூஸித்தோழிக்கு விவரம்  சொன்ன அடுத்த  கால்மணியில் , உடல்நிலை சரியில்லாதவர் வந்து சேர்ந்தார்!  (பரவாயில்லையே!)  நியூஸியிலிருந்து மிரட்டல் வந்ததாம்:-)


புதுமணமக்கள் வரவை எதிர்பார்த்துக்கிட்டே நொறுக்குத் தீனிகளை உள்ளே தள்ளிக்கிட்டு இருந்தோம்.  அங்கேயும் எனக்காக வடைவகைகள் காத்திருந்தன.  ஆனால்.... வேகவைச்ச கச்சான் (நிலக்கடலை)  பொடியாக அரிஞ்ச வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், உப்பு சேர்த்த ஆரோக்கிய நொறுக்கு எனக்குப் பிடிச்சிருந்தது.

தம்பியின் தந்தை, ப்ரிட்டிஷார் ஆண்ட காலத்தில் மலேயா ரெயில்வேஸில் வேலை செய்ய தூத்துக்குடிப் பக்கமிருந்து (வீரபாண்டிப் பட்டினம்)  வந்தவர். அப்புறம்  கல்யாணம் கட்ட நாட்டுக்குத் திரும்பிப்போய்  கொல்லத்தில் பெண் எடுத்தாராம்.  உலகப்போர் சமயம் அரிசி உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்ட 'கதை'களையெல்லாம் பெரியக்கா சொல்ல நான் 'ஆ' என்று கேட்டுக்கிட்டு இருந்தேன்.

சின்னக்குழந்தைகளுக்காக  கொஞ்சம் அரிசியை ரயிலில் கொண்டு வந்து  அவுட்டரில் வண்டி நிற்கும்போது கீழிறங்கி  பையை ஒளிச்சு  வச்சுருவாராம்.வேலை முடிஞ்சு வரும்போது  புதரில் இருந்து எடுத்துவருவாராம்.  இவரை ஒரு நாள் கையும் களவுமாப் பிடிச்சுச் சிறையில் அடைச்சுருக்காங்க. நாலுநாளுக்குப்பிறகு   குழந்தைகள் நிலையைப் புரிஞ்ச அரசு விடுதலை செஞ்சுருச்சாம். ஒருவேளை அப்போ முடிவெடுத்துருப்பார் போல.... குடும்பத்தில் வக்கீல்கள் வேணுமுன்னு!  இப்போ மூணு வக்கீலன்மார்.

பத்துமலை ஏறிப்போனேன்னவுடன்,  272 படிகளுமான்னு அவுங்க எல்லோருக்கும் வியப்பு.  நம்ம முட்டிவலி உலகப்பிரசித்தமா ஆயிருந்துச்சு போல!

எங்க யார் கழுத்திலும் துளித் தங்கமில்லை.  உங்களுக்கும் தெரிஞ்சுருச்சான்னாங்க. அதான் டெக்ஸியில் உபதேசம் கிடைச்சுருதேன்னேன்.  உண்மைதான் என்று சொன்ன குரல்களில்  வருத்தம் இருந்துச்சு.  அம்மச்சியிடம் விலாசம் கேட்பது போல் சின்னச் சீட்டைக் காமிச்சுருக்காங்க. அவுங்க ஜன்னல்கிட்டே போய்  எட்டிப்பார்த்துச் சீட்டை படிக்கும்போது  சடார்னு  கழுத்துச் சங்கிலியை அறுத்துக்கிட்டு ஓடின சமாச்சாரம் என் காதுவரை வந்திருந்ததே!  இத்தனைக்கும் ஜன்னலில் க்ரில் போட்டு வச்சுருந்தாலும்  கை நீட்டி பறிப்பது நொடிகளில்  நடந்து போச்சு!

அப்பதான்  இன்னொரு டெக்ஸிக்காரர் சொன்னது நினைவுக்கு வந்துச்சு எனக்கு.  நடைபாதையில் ரெண்டு இந்தியப்பயணிகள் (சுற்றுலா வந்தவர்கள்)  கட்டிடங்களையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி நடந்து போய்க்கிட்டு இருக்காங்க.  ரெண்டு பேரும் சினிமாவில் வரும் வில்லன்களைப்போல  கொஞ்சம் பெரிய உருவம் வேற! அப்போ மோட்டர்சைக்கிளில்  ரெண்டு பேர் பக்கத்துலே நடைபாதை ஓரமா வந்துருக்காங்க. பின்னாடி உக்கார்ந்திருந்தவர் சடார்னு இறங்கி  நடந்துபோய்க்கிட்டு இருந்த  (வில்லன்) ஒருவரின்  கையைப்பிடிச்சு, அதிலிருந்த கனத்த(வில்லன்மாரின் ப்ரத்தியேக சைஸ்)  ப்ரேஸ்லெட்டை  மெட்டல் கட்டரால்  வெட்டி  எடுத்துக்கிட்டு  திரும்பிப்போய்  பில்லியனில் உக்கார்ந்து போயிட்டாராம்.  எல்லாம்  ஒரு ரெண்டு மூணு விநாடி சமாச்சாரமாம்.  டெக்ஸிக்காரர் சொல்லிக்கிட்டே என் கையைப் பார்த்த ஞாபகம்.  நான் சட்னு துப்பட்டாவால் கைகளை மறைத்தேன்.  பதிவு எழுத கை வேண்டித்தானே இருக்கு:-)

தமிழ்நாடு & கேரளா சமையல்தான் எப்பவும்.  என்ன ஒன்னு  மூத்த அக்காமாரைத் தவிர வேற யாருக்கும் தமிழோ மலையாளமோ பேசத் தெரியாது.  வீட்டின் முதல் கல்யாணம் கொண்டாட மூணு நாலு மாச  விடுமுறையில் வந்த  சொந்தங்கள் எல்லாரும் கூடி வீடே கலகலப்பா இருக்கு.  வர்ற வாரம் எல்லோரும் ஒவ்வொருத்தரா திரும்பிப் போறாங்க. நாம் வேற இங்கே வந்து தங்காமல் ஹொட்டேலில் ரூம் போட்டுட்டோமுன்னு  கொஞ்சம்  மனவருத்தம் .

வேலைக்குப்போயிருந்த  குடும்ப அங்கத்தினர் எல்லோரும் ஒவ்வொருத்தரா வந்து சேர்ந்தார்கள். அரட்டையடிச்சுக்கிட்டு இருந்த கூட்டமப்படியே டைனிங் ஹாலுக்குக் குடி பெயர்ந்துச்சு:-)

அவியல் ,தோரன் , காளன், சாம்பார், ரசம் , கோழி வறுவல், மீன் குழம்புன்னு  டைனிங் டேபிள்  நிறைச்சுப் பண்டங்கள்.  தம்பி குடும்பம் கிறிஸ்துவர்கள். தம்பி மனைவி மட்டும் ஹிந்து.  இப்போ தம்பிக்கு மருமகனா வந்துள்ள புது மாப்பிள்ளை ஹிந்து இப்படி மதங்கள் வேறாகவும்  மனிதர்கள் ஒன்றாகவும் இருக்கோம்.

கிளம்பும் சமயம்,  உடல்நிலை சரி இல்லைன்னு சொல்லி  கடைசியில் வந்து சேந்த தோழி என் காதருகே மெள்ளக் கேட்டாங்க...."இப்பவும் கலெக்‌ஷன் இருக்கா?"

"இருக்கு."

"அப்படியா! உங்களுக்கு ஒரு யானை கொண்டாந்துருக்கேன்."

ஆஹா ஆஹா..... இவர் ஆஃப்ரிகன் எலிஃபெண்ட் வகை.    தோழி வேலை செய்வது ஒரு ஆஃப்ரிக நாட்டு எம்பஸியில்.

எல்லோருக்கும் பைபை சொல்லிட்டு, தம்பியிடம் டெக்ஸி ஸ்டாண்டில் விட்டால் போதுமுன்னு  சொன்னோம்.  பக்கத்துலேதான் இருக்குன்னு சொல்லி எங்களை வண்டியில் ஏத்திக்கிட்டவர் கொண்டு போய் விட்டது ஹொட்டேல் வாசலில்:-)

ஒரு நிமிச நடையில் இருக்கும் ஏ டி எம்மில் இருந்து கொஞ்சம் ரிங்கிட்ஸ்  எடுத்தோம்.  நகைத்திருடு ஒருபக்கமுன்னா, எங்கியாவது நம்ம கடனட்டையையோ, டெபிட் கார்டையோ பயன்படுத்தினால்  அந்த எண்களை வச்சு நம்ம கணக்கில் இருக்கும் மொத்த காசையும் வழிச்சு எடுக்கும் வித்தை பல இடங்களில் நடக்குது.  நம்ம கோபால் அடிக்கடி ஜோஹூர் பாரு போய் வருவார். அங்கே இவுங்களுக்கு ஒரு ஃபேக்டரி  இருக்கு.  அங்கே முதலிரண்டு முறை என்னமோ  (என்னமோ என்ன எல்லாம் சினிமாதான்)  வாங்கப்போய் கடனட்டையைப் பயன்படுத்தி இருக்கார். உடனே நம பேங்கில் இருந்து  மலேசியாவில் பயன்படுத்தியதால்  அட்டையை முடக்கி  வச்சுருக்காங்கன்னு தகவல் வந்துச்சு.  அப்புறம்  அதைக் கேன்ஸல் செஞ்சுட்டு புது அட்டை வேற எண்ணில் கொடுத்தாங்க.

பேசாம அட்டை அனுப்பும்போதே  எந்தெந்த நாடுகளில் பாதுகாப்பில்லைன்னு  ஒரு வரி சொல்லப்டாதோ?

இதனால் மலேசியாவில் எங்குமே க்ரெடிட் கார்ட் பயன்படுத்தலை.  அதுக்கு பதிலா அரசாங்க வங்கியின் ஏடிஎம்மில் நம்ம டெபிட் கார்டைப்போட்டு பணம் எடுத்துக்கிட்டோம்.  தினம் அறையைவிட்டுக் கிளம்பி முதல் வேலையா கொஞ்சம் காசு எடுத்துகிட்டு மத்த வேலையைப் பார்ப்பது இந்த நாலு நாளில் பழக்கமா இருந்துச்சு.  நாளைக்கு விமானநிலையம் போக டெக்ஸி சார்ஜ் வேணுமேன்னுதான்  இப்பக் கொஞ்சம் ரிங்கிட்ஸ் எடுத்தோம்.

ஓ இட் வாஸ் அ லாங் டே!   கொஞ்சம் பொட்டிகட்டி வச்சுட்டு, நல்லா ஓய்வெடுக்கணும். கே எல்லை விட்டு நாளைக்குக் கிளம்பறோம்.  குட்நைட்:-)

தொடரும்............:-)
21 comments:

said...

படங்கள் அருமை...


எங்கும் வில்லன்கள்...!

said...

சுவையான பதிவு.

said...

தோழிக்குடும்பத்தினரின் அழகான நிறைவான உபசரிப்பு பிரமாதம். கடனட்டை விஷயத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய பகிர்வு பலருக்கும் பயனுள்ளதாய் இருக்கும். நன்றி டீச்சர்.
ஆமாம், ஆப்ரிக்க யானை எங்கே?

said...

//எங்கியாவது நம்ம கடனட்டையையோ, டெபிட் கார்டையோ பயன்படுத்தினால் அந்த எண்களை வச்சு நம்ம கணக்கில் இருக்கும் மொத்த காசையும் வழிச்சு எடுக்கும் வித்தை பல இடங்களில் நடக்குது.//

பணமா, காசா கொண்டு போனாப் பாதுகாப்பில்லைன்னுதான் கார்டுகளை உபயோகப்படுத்தறோம். அதுலயும் கோல்மால் செய்யறவங்களை என்னன்னு சொல்றது :-(

வடை ஜூப்பரு..

said...

மலேஷியப் படங்கள் அத்தனையும் பிரமாதமாக வந்திருக்கின்றன. உங்கள் தோழியின் குடும்பம் சூப்பர் குடும்பம்.
கேரள உணவு வகைகளையே மேஜையிலும் பார்க்க முடிந்தது:)

இத்தனை வில்லத்தனமான திருடர்களா.
தங்கத்தின் யாரும் ஆசை வைக்க மாட்டார்கள்;)

said...

அம்மச்சியிடம் விலாசம் கேட்பது போல் சின்னச் சீட்டைக் காமிச்சுருக்காங்க. அவுங்க ஜன்னல்கிட்டே போய் எட்டிப்பார்த்துச் சீட்டை படிக்கும்போது சடார்னு கழுத்துச் சங்கிலியை அறுத்துக்கிட்டு ஓடின சமாச்சாரம் என் காதுவரை வந்திருந்ததே! //

எங்கள் ஊரிலும் இப்படித்தான் திருட்டு நடக்கிறது. வீட்டு வாசலில் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கொண்டு இருக்கும் அம்மாவிடம், காலையில் குளத்தில் குளிக்க போகிறவர்களிடம் என்று நடக்கிறது.

மலேஷியப்பய்ண கட்டுரை மிக பயனுள்ளதாக இருக்கும்.
படங்கள் மிக அருமை.

நட்புக்கள் விருந்தோம்பல் பாராட்டப்பட வேண்டியது.

said...

//டுன் சம்பந்தன் ரெயில் நிலையம் வருமுன் கந்தசாமி தெரியறாரான்னு கண் நட்டேன்.//

நான் கோயமுத்தூர்ல இருக்கேன். என்னைப்போயி மலேசியாவில தேடினா எப்படி?

said...

Vadai kadai super...teacher kalil chakaram irukoo?

said...

எத்தனை வகை வடை!
விருந்து சாப்பாடு பிரமாதம்!
போனவாரம் சென்னையிலிருந்து திரும்பி வந்தபோது அடைமழை. ஸ்டேஷனில் இறங்கி ஆட்டோ கிடைக்குமா என்று தலையை நீட்டி நீட்டி பார்த்தபோது ஒரு போலீஸ்காரர் வந்து 'கழுத்தை மூடுங்கம்மா! ஒரு நொடில உங்கள செயினை அறுத்துகிட்டு ஓடிடுவாங்க...நீங்க எங்க கிட்ட வந்து கூச்சல் போடுவீங்க..!' என்று மிரட்டி விட்டுப் போனார்!
எல்லாவிடத்திலும் திருடர்கள்!

said...

வடை அவ்வளவு சாதாரணமா? ஆனாப்பட்ட அனுமாரே வடைமாலை போட்டு ஒவ்வொன்னா பிச்சுப்பிச்சு திங்குறாரு. நம்மள்ளாம் எந்த மூலைக்கு.

அதுலயும் கூட கெட்டிச் சட்டினி இருந்துட்டா போதுமே. அனுமாருக்கு சட்டினியெல்லாம் தேவைப்படாதோ?!

மலேசியா மாதிரி நாடுகள்ளயும் சங்கிலித் திருட்டு இருக்குன்னு தெரிஞ்சு அதிர்ச்சி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க வேல்.

ஆஹா....... வடைக் குவியல்களின் சுவைக்குக் கேக்கணுமா?

முதல்வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.

said...

வாங்க கீதமஞ்சரி.

மற்ற யானைகளைப் பார்த்ததும் ஓடிப்போய் அந்தக் கூட்டத்தில் கலந்துருச்சு அந்த ஆஃப்ரிக யானை.

நாளைக்குப் பிடிச்சாந்து படம் எடுத்துடலாம்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுன்னு பின்னே எப்படி தெரிஞ்சுக்குவோம்?

அதான்நாம் அட்டைக்குள் பாயாம தப்பிச்சுக்கணும் என்பது:-)

அந்த ஏரியாவே வடை வாசனையால் கமகமக்குது.

said...

வாங்க வல்லி.

தங்கத்து மேலே ஆசை இன்னும் அதிகமாத்தான் ஆகுதுன்னு தினசரிகள் சொல்லுதேப்பா.

போட்டிகளில் பரிசு கூட ஒரு கிலோ தங்கம் என்று சொல்றாங்களே!!!!

தாலி செண்டிமெண்ட் இல்லைன்னா நிம்மதியா ஊர் சுத்திப் பார்க்கலாம்.

இதுலே ஜோக் என்னன்னா, தமிழர்கள் மலாய்க் காரர்களையும், மலாய்க் காரர்கள் தமிழரையும் திருடன்னு சொல்றாங்க. இந்தப்போட்டியில் சீனர் சுலபமாத் தப்பிடறாங்க.

நாட்டின் முக்கிய தொழில்நிறுவனங்கள்,வியாபாரங்கள் எல்லாம் சீனர்கள் கையில்!

said...

வாங்க கோமதி அரசு.

உழைக்காமல் வந்த காசு உடம்பிலே ஒட்டாதுன்னு சொல்வாங்க.

ஆனா....இப்ப நல்லா ஒட்டுது போல.

மனிசனின் பேராசைக்கு அளவில்லாமப் போகுது:(

பணம் பிரதானம் என்று இருந்தால் குற்றங்கள் மலியத்தான் செய்யும்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

உங்க பயணத்துலே கந்தசாமியைக் கண்டுக்கிட்டீங்க தானே?

கடவுள் கந்தசாமியைத்தான் அங்கே தேடினேன்:-)

said...

வாங்க சிந்து.

காலில் சக்கரம் இருக்கான்னு தெரியலை. ஆனால் ஒரு மச்சம் உண்டு:-)

ஒரு காலில் மட்டும் இருப்பதால் இன்னும் பல இடங்களைப் பார்க்கலை:(

said...

வாங்க ரஞ்ஜனி.

எல்லா இடத்திலும் 'ஈஸி மணி' திட்டம் இருக்கே!!!!

said...

வாங்க ஜி ரா.

அண்டை நாடான சிங்கையில் சங்கிலித் திருடு ஒன்னும் இல்லை பாருங்க.

எங்கூருக்கு வாங்க. தங்கக்கவசம் போட்டுக்கிட்டுப்போனால் கூட திரும்பிப் பார்க்க யாரும் இல்லை:(

said...

Taman Yarl அட! நம்மஊரு :)))
புல்வெளியுடன் வீடு பார்க்கவே பசுமையாக இருக்கிறது.

அன்புள்ளங்களுடன் விருந்து. நாங்களும் சுவைத்தோம்.