Friday, November 29, 2013

ச்சே..... இது ராசி இல்லாத புடவை..........

எப்படாப் பொழுது விடியுமுன்னு காத்திருந்து  ப்ரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து  ரஜ்ஜுவுக்கு 'ஹேப்பி தீபாவளி' சொல்லிட்டு அதுக்கான சாப்பாட்டைக் கொடுத்தேன். காலையில் கண்ணைத் திறக்கும்போதே 'திங்கத்தா திங்கத்தா' உயிரை எடுத்துருவான்.  நாம் எழுந்திருக்கும் அடையாளம் இல்லைன்னா, கட்டிலைச் சுற்றிச் சுற்றிவந்து  பரபரன்னு ச்த்தம் வர்றமாதிரி கார்பெட்டை  நகங்களால் பிச்சு எடுப்பான். அதென்னவோ இப்படிஒரு சுபாவம்.

குளிச்சு முடிச்சு சாமி விளக்கேத்தி எம்பெருமாளுக்கும் தாயாருக்கும், இன்னபிற பரிவாரங்களுக்கும் 'ஹேப்பி தீபாவளி'  சொல்லிட்டு காஃபி நைவேத்யம் செஞ்சேன்.  காலை ப்ரேக்ஃபாஸ்ட்  முடிச்சு ரெடியானபோது மகள்  வந்துட்டாள்.  அவளுக்கும்  தீபாவளி வாழ்த்து சொன்னேன். அப்பா உடம்பு சுகமாகி வீட்டுக்கு வந்ததும் ஒரு நாள் தீபாவளி  கொண்டாடணும்.

மருத்துவமனை வாசலில் இறக்கிவிட்டுட்டு  மகள் போய்விட்டாள்.  உள்ளே இருக்கும் சாப்பலில்  ஒரு நிமிசம் போய் உக்கார்ந்து , 'என்னடா பெருமாளே  இப்படி பண்டிகை கொண்டாட விடமாட்டேங்குறயே........  அதுவரை  ஆபத்துலே இருந்து காப்பாத்துனதுக்கு முதல்நன்றி சொல்லணும். சொல்லிக்கறேன்.  ஆனாலும் இன்னும் கொஞ்சம்  கருணை காட்டு'ன்னு  விண்ணப்பம் போட்டுட்டு,  மாடியில் இருக்கும் ஐஸியூவுக்குப் போனேன்.

கதவுக்கு வெளியே இருக்கும் தொலைபேசியை எடுத்தால் உள்ளே இருந்து 'எஸ்' குரல் கேட்கும். நோயாளியின் பெயரைச் சொன்னதும் நோயாளியைக் கவனிக்கும் நர்ஸ் வந்து நம்மை உள்ளே கூட்டிப் போவாங்க.  கதவைத் திறந்த நர்ஸம்மா,  கோபால் கண்ணைத் திறந்துட்டார்.  மயக்கம் எல்லாம் போச்சு. டாக்டர்ஸ் பார்த்துக்கிட்டு இருக்காங்க என்றார்.  ஐஸியூ முழுக்க முழுக்க பெண் நர்ஸ்கள்தான்.  அதிலும் எல்லோரும் நல்ல ஸ்மார்ட்.  கவனம் சிதறாமல் கொடுத்த பொறுப்பை சமாளிக்கும் குணம் பெண்களுக்கு இயல்பா இருக்குதானே!


நேற்று இரவு  அறுவை சிகிச்சை நடத்திய ஸர்ஜன், நோயாளியின் நிலை எபடி இருக்குன்னு பரிசோதிச்சுட்டு  மேற்கொண்டு என்ன செய்யணுமுன்னு  சொல்லிக்கிட்டு இருந்தார். நான் போனதும்  யார் என்ற அறிமுகம் செய்து கை குலுக்கியவர்,  சரியான நேரத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தீங்க. இன்னும் அரைமணி தாமதாப் போயிருந்தா  burst டாகி இருக்கும் . அப்படி ஆயிருந்தால்  அது மேஜர் ஜாப். குடலையெல்லாம் வெளியே எடுத்துக் கழுவி அடுக்க வேண்டி இருக்கும்.  ஜஸ்ட் ஆன் டைம் என்றார்.  இவர் எப்படி தமிழ் சினிமா பார்த்துருப்பார்? டயலாக் சரியாச் சொல்றாரே:-))))))))))

கல் ரொம்பப் பெருசு தானாம். லேபுக்கு அனுப்பி இருக்குன்னார்.  (பெரிய கல்லுன்னா பெண்டண்ட் செஞ்சுக்க சரியா இருக்கும்,இல்லே!)  ஊஹூம்....ச்சுப்.

எப்ப சரியாவேன்னு  கோபால் கேக்க, ஆல்ரெடி சரியாயாச்சு.  நீங்க எது வேணுமுன்னாலும் செய்யலாம் என்றார்.  வேறு வார்டுக்கு மாத்தப்போறேன்.  இன்னும் கொஞ்ச நேரத்துலே அங்கே போய் ஓய்வெடுங்கன்னார்.  காலையிலேயே வாயில் இருந்த ட்யூபை  அகற்றி இருந்தாங்க.  ப்ரேக்ஃபாஸ்டும் கொடுத்தாங்களாம்.   தயிரும், வாழைப்பழமும்.

டாக்டரின் உத்தரவை  'ஸாரா ' வார்டுக்குச் சொல்லி அங்கே படுக்கையைத் தயார் செய்யச் சொன்னாங்க நர்ஸ். அதுக்குள்ளே  ஆர்டர்லி  இன்னொரு கட்டிலை உருட்டிக்கொண்டு வந்து நம்ம அறையில்  வச்சார்.  சுவரிலிருந்த கருவிகளில்  கொடுத்திருந்த இணைப்புகளையெல்லாம்  இந்தக் கட்டில் இருந்த மெஷீனில் இணைச்சு, கோபாலையும் இந்தக் கட்டிலுக்கு மாத்தினாங்க.

எங்களுக்கு இப்பதான் ஒரு வார்த்தை பேசக்கிடைச்சது. 'ஹேப்பி தீபாவளி'ன்னு வாழ்த்தியவுடன், முகத்தில் ஒரு திகைப்பு.  போன தீபாவளிக்கு இதே ஐஸியூவில் தவம் கிடந்தோம். அப்போ மகளுக்கு  ரொம்பவே உடல்நலமில்லை.  உயிர் பிழைப்பது உத்திரவாதமில்லைன்னு சொல்லிட்டாங்க. நாலுநாள் அல்லும்பகலும்  ஐஸியூ. அந்த நாலு நாளும் நரகவேதனைதான். ;ஷீ இஸ் இன் குட் ஹேண்ட்ஸ்.  முதல்தரமான கவனிப்பு' .பயப்படாதேன்னு மருத்துவர் தோழிதான் அப்ப(வும்)சொன்னாங்க.

கோபாலின்  அறுபதுக்கு  சென்னை போனபோது  முகூர்த்தத்துக்கு  ஒன்னும் மாலை வரவேற்பு ஒன்னுமா ரெண்டு புடவை வாங்கினோம். வரவேற்புக்கு வாங்குனதை என்னமோ அன்னிக்குக் கட்ட  மனம் இல்லைன்னு  பழைய புடவை ஒன்னையே கட்டிக்கிட்டேன்.  இந்தப் புதுப்புடவை அதோட நாளுக்காகக் காத்திருந்தது.  போன தீபாவளிக்குக் கட்டிக்கலாமுன்னு நினைச்சேன். தீபாவளியன்னிக்கு  மருத்துவமனை வாசமாப் போனதால்....  இந்த வருசம் கட்டிக்கலாமுன்னு நினைச்சேன்.  ஆனால் இந்த வருசமும்  அதே மருத்துவமனை, அதே ஐஸியூ.  போதுண்டா  சாமி.

நாங்க பேசிக்கிட்டு இருந்த சமயம், இவர் படுத்திருந்த ஐஸியூ படுக்கை அடுத்த நோயாளிக்குத் தயாராகுது.  க்ருமி நாசினி போட்டு கட்டில் கால், சக்கரம் உட்பட தேயோதேயுன்னு தேய்ச்சாங்க. படுக்கை விரிப்புகளை மாத்தினபோதுதான் தெரியுது  அஞ்சு விரிப்புகள் ஒன்னுமேலே ஒன்னாக!  எல்லாத்தையும் எடுத்துட்டு புது செட் இன்னும் அஞ்சு  விரிச்சாங்க. தலையணை உறைகளும் டபுள் டபுளா இருக்கு. மாத்து அதையும்!  சுவரில் இருக்கும் கருவிகளின் ட்யூப்கள், ஒயர்கள் இப்படி ஒன்னு விடாம கிருமிநாசினி தொட்டு பயாங்கரமா துடைச்சாங்க. இவ்ளோவேலை இந்தப் படுக்கைக்கு இருக்குன்னு நமக்கே அப்போதான் தெரியுது!

சுமார் ஒருமணி நேரமாச்சு. அதுக்குள்ளே தரை சுத்தம்செய்யும் பணியாளர் வந்தாங்க. இந்திய முகம் இருக்கேன்னு விசாரிச்சேன். நேபாளியாம்.  நேபாளிகளை பார்த்துருக்கீங்களான்னு (அபத்தமா) ஒரு கேள்வி.  ஏன்? நிறையமுறை மணிஷா கொய்ராலாவைப்  பார்த்திருக்கேன்  என்றதும் ஒரே சிரிப்பு.  வந்து மூணு வருசமாகுதாம்.  இங்க  எந்த வேலையும் கீழ்த்தரமானதில்லை. சம்பளமும் குறைஞ்சபட்சம் மணிக்கு  16  டாலர் கிடைச்சுரும். சமோவன்களும், ஃபிஜியர்களும் ஃபிஜி இந்தியர்கள் உட்பட க்ளீனிங் வேலையில்  ஏராளமானவர்கள் இருக்காங்க. எட்டுமணி நேர வேலை.  சீருடை எல்லாம்போட்டுக்கிட்டு பளிச்ன்னு இருக்காங்க.

ஸாராவில்  இடம் ரெடின்னு ஆர்டர்லி வந்து படுக்கையைத் தள்ளிக்கிட்டுப் போனார்.  நோயாளியின் ஃபைல் கூடவே வருது. நர்ஸம்மா கூட்டிப்போய் அந்த வார்டு  நார்ஸம்மாவிடம் இவரை  ஒப்படைச்சாங்க.

இது Surgical Assessment & Review Area வார்டு. இங்கே ஒரு இருவது நோயாளிகளுக்கு  இடம் உண்டு. ஒரு பெரிய அறையில்  திரைச்சீலைகளால்  சுவர் வச்சுப் பிரிச்சிருக்காங்க. நடுவில் நடைபாதை விட்டு வலமும் இடமும் மும்மூணு படுக்கைகள். கோபாலுக்கு  ஜன்னலோரமா இடம்!  ஆஹா....வ்யூன்னு எட்டிப்பார்த்தால்  இன்னொரு கட்டிடம்  மலைபோல் நிக்குது:(  இந்த வார்டில் பூக்களுக்கு  அனுமதி இல்லை.   மேலும் இங்கே   ஆண் பெண்களுக்கான தனித்தனி வார்டு ஏற்பாடுகள் கிடையாது.  குழந்தைகளுக்கு மட்டுமே தனி வார்டு. மற்றவைகள் எல்லோருக்கும் பொதுவே!

SARA  நர்ஸ் வந்து அறிமுகம் செஞ்சுக்கிட்டு  பல்ஸ், பிபி, டெம்பரேச்சர்ன்னு  பலதையும்  செக் செஞ்சாங்க. பகல் ஒருமணி ஆகி இருந்துச்சு. இன்னிக்கு இங்கே சாப்பாடு  கொஞ்சம் லேட்டாம். மகளும் வந்துட்டாள்.  பகல் சாப்பாடும் வந்துச்சு. யுவர் வெஜிடேரியன் மீல். எஞ்சாய்!  மேஷ் பொட்டேட்டோ, பாயில்ட் வெஜ்ஜீஸ்,  பேக்டு பம்ப்க்கின்,  மஷ்ரூம் ஸூப்,  கஸ்டர்ட் ஸ்கொயர், பனானா!

இங்கே ஆஸ்பத்திரிகளில்  சாப்பாட்டு மெனு நாமே தெரிஞ்செடுக்கலாம். ஒவ்வொருத்தருக்கும் தனியா மூணு கோர்ஸ் உணவு.  ஸூப், மெயின்ஸ், டிஸ்ஸர்ட்,  கூடவே எக்ஸ்ட்ரா  ஃப்ரூட்  இப்படி மெனு கார்டை நம்மிடம் கொடுக்கும்போது நாமே அதில் செலக்ட் செஞ்சு டிக் செய்யலாம். உணவின் அளவு கூட நாம் சொல்லலாம். ஸ்மால்.மீடியம், லார்ஜ். இதனால் சாப்பாடு வீணாவதைத் தடுக்கலாம்.

ஒருவேளை உணவு  கொண்டு வரும்போதே அடுத்த வேளைக்கான மெனு கொடுத்துருவாங்க. இதில்லாம  நாலு வேளை  காஃபி, டீ, மைலோ இப்படி. இடைப்பட்ட நேரத்தில் கூடுதல் காஃபி டீ வேணுமுன்னா  ஒவ்வொரு  வார்டுக்கும்  நாமே இவைகளைத் தயாரிச்சுக்கும் வசதிகள் உண்டு.  ரெண்டு மூணு வகையான பால் சின்ன ஃப்ரிட்ஜில் இருக்கும்.  ZIP Water heaters  கொதிக்கும் வெந்நீரோடு  24 மணி நேரமும் தயார் நிலையில்  ஒரு கப்போர்டில் காபித்தூள், டீ பேக்ஸ்,சக்கரை எல்லாம் இருக்கும். தெர்மாக்கோல் டம்ப்ளர்களும் அடுக்கி வச்ச்சுருக்கும்.  இது போதாதா?யதேஷ்டம்!

பகல் ஒன்னுமுதல்மூணு மணி வரை ரெஸ்ட்டிங் டைம்  என்பதால் விளக்குகளையெல்லாம் அணைச்சு செயற்கை இருள்  ஏற்படுத்தினாங்க. நாங்களும் கோபால் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டுமுன்னு   கிளம்பி  வீட்டுக்கு வந்தோம்.

தீபாவளி விருந்து  தாய்க்கும் மகளுக்கும். நேத்து செஞ்ச சமையல் அப்படியே இருந்ததை  ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சுடவச்சுச்  சாப்பிட்டோம்.






Wednesday, November 27, 2013

ஊருக்கெல்லாம் ஒன்னே ஒன்னு!

நம்ம நம்பள்கியின் பின்னூட்டம் பார்த்ததும்  நம்மூர் ஆஸ்பத்திரியைப் பற்றி(யும்) கொஞ்சம் விஸ்தரிக்கலாமேன்னுதான் தோணுது. 1850 வருசம். இங்கிலாந்தில் இருந்து நாலு கப்பல்களில் மக்கள்ஸ் புது நாட்டுக்குப் புலம்பெயர்ந்து வர்றாங்க. நாலு கப்பலுக்கும் சேர்த்து மொத்த பயணிகள் எண்ணிக்கை 753.

இங்கே லேண்ட் ஆஃபீஸில் பதிவு செஞ்சுக்கறாங்க. வரப்போகும் நகரத்தில் கால் ஏக்கரும், நகருக்கு வெளியில் விவசாயம்/பண்ணைகளுக்கு 20 ஏக்கர் நிலமும் ஒவ்வொருத்தருக்கும் அலாட் ஆகுது. நகர வடிவமைப்பு உருவாக்கி   நட்டநடுவில் ஒரு தேவாலயமும் அதைச் சுற்றி  நாலு பக்கமும் அவ்வஞ்சு தெருக்களும் இதையெல்லாம் சுத்தி நாலு பக்கமும் பார்டர் போட்டது போல் மரங்கள் வரிசையாக நட்ட அவென்யூகளுமா இருக்கணுமுன்னு முடிவாச்சு.   அவென்யூக்களுக்கு உள்புறம்தான் நகரம். இதுக்கு ஒரு ஆயிரம் ஏக்கர் ஒதுக்கினாங்க.   ஆளில்லாத காலியிடத்துலே   எல்லாமே  நம்ம இடம்தான்.  ஆத்துலே போறதை அள்ளிக் குடிக்கிற மாதிரி.........   யாரைக் கேக்கணும்?  நகருக்குள் நாலு சதுக்கங்கள் வேற அங்கொன்னு இங்கொன்னுன்னு. இதுலே தேவாலயத்துக்கு  மேற்கே  அஞ்சு தெருதாண்டி வரும் அவென்யூவுக்கு  வெளியிலே ஒரு பெரிய தோட்டம் திட்டத்தில் இருக்கு. அதுக்கு ஒரு எழுபத்தினாலு ஏக்கர்!

தென்கோடிக்குப்போக சாலை போட்டப்ப இந்த  தோட்டத்தின் குறுக்காலே  அதைப் போடும்படி ஆச்சு.இல்லைன்னா மேற்குப் பகுதி கடக்க சுத்த வேண்டியதாப் போயிரும் பாருங்க.  நார்த் ஹேக்ளி பார்க், சௌத்  ஹேக்ளி பார்க்ன்னு  ரெண்டாப் பிரிஞ்சதுஅப்போதான்.


மக்கள்ஸ் வீடுகட்டி, பண்ணைகள் வச்சு நிம்மதியான வாழ்க்கையை ஆரம்பிச்சதும் நோய்நொடிகள் வர ஆரம்பிச்சது. அதுவும் குளிர்காலங்களில் அதிகம். ஊருக்கு ஒரு மருத்துவ மனை வேணும் என்ற நினைப்பில்  1861 வது ஆண்டு திட்டம்போட்டு, 1862இல் புதுசா மருத்துவமனைக்  கட்டிடங்கள் ரெண்டு  பெரிய Barn மாதிரி  ரெண்டடுக்கு வந்துச்சு. செலவு  £1,500. புது சாலை போட்டாங்க பாருங்க  அந்தஓரத்தில்.  அவ்ளோதான், 'அது என்னமா தோட்டத்தில் கட்டிடம் கட்டப்போச்சு'ன்னு மக்கள்ஸ் கொஞ்சம்பேர்  "Hands off Hagley" குமுறிட்டாங்க.  Provincial  Government  ஆட்சி செய்யும் காலக்கட்டம்.

அப்ப மிஞ்சிப்போனா நகரின் மக்கள்தொகை ஒரு பதினைஞ்சாயிரம் இருக்கலாம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு  கொஞ்சநாளில்  இதை எடுத்துருவோமுன்னு  சொல்லி  இந்தா அந்தான்னு 1917 இல் தான்  அதை  இடிச்சாங்க. அதுக்குள்ளே  கொழும்புத் தெருவில்  பெண்களுக்கான பேறுகால மருத்துவமனை  ஒன்னு தனியாக் கட்டினாங்க.  ஹேக்ளியை ஒட்டுன மாதிரி  புது மருத்துவமனை ஒன்னும்  உருவாச்சு.


அப்போ நர்ஸ்களின் சீருடைகள், ஆஸ்பத்திரி அறைகள்  , மருத்துவப் பயன்பாட்டுக் கருவிகள் எல்லாம் எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சுக்கும் விதமா  இப்போதைய ஃபோயரில்  ஒரு பொம்மைக்கொலு இருக்கு.

ஆஸ்பத்திரிக்கு முன்னால் ஒரு அரைக் கிலோமீட்டரில்  அதே ஹேக்ளி பார்க்கிலொரு ஹெலிபேட் அமைப்பு இருக்கு.  மலை ஏற்றம், காடுகளுக்குள்ளே போய்  சுத்தி வர்றது போன்ற செயல்களால்  ஆபத்தில் மாட்டிக்கிட்டவங்களை  மருத்துவமனைக்குச் சீக்கிரமாக் கொண்டுவர  ஹெலிக்காப்டர் தேவையாத்தானே இருக்கு.

இப்போது இருக்கும் 550 படுக்கை வசதி போதலையேன்னு  நானூறு மில்லியன் செலவில்  புதுக் கட்டிடம் 450 படுக்கை வசதிகளோடு கட்டஒரு திட்டம் இருக்கு. மொட்டை மாடியில் ஹெலிபேட் வசதிகளோடு  வருதாம்.  2009 வது ஆண்டு ஆரம்பிச்சு  அடுத்த வருசம் முடியவேண்டியது. நிலநடுக்கம் காரணம் வேலையில் கொஞ்சம் தொய்வு. நகரை மீண்டும் நிர்மாணிக்கும் வேலையும் சேர்ந்துருச்சு பாருங்க.

இங்கே  தனியார் மருத்துவமனைகள் கிடையாது.  இப்போ ஒரு இருபது வருசமாகத்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ்  கம்பெனி ஒரு  ஹாஸ்பிட்டல் கட்டி இருக்கு. இங்கே  ஏற்கெனவே முடிவு செய்த அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடக்கும். இந்தக் கம்பெனியில்  அங்கத்தினராக உள்ளவர்களுக்கு மட்டும்  இந்த ஆர்கனைஸ்ட் ஸர்ஜரி. பொது மருத்துவமனை டாக்டர்கள் தான்  இங்கேயும்  வந்து அறுவை சிகிச்சை செய்வார்கள்.

மத்தபடி கேண்டர்பரி ஹெல்த் போர்டு நடத்தும் மருத்துவமனைகள் தான் ஊருக்கே!. இதுலே அஞ்சு மருத்துவமனைகள் அடங்கும். இப்போ  நாம்  பார்க்கும் பொது மருத்துவமனை,  ரெண்டாவதாக முதியோர்களுக்கான  சிறப்பு மருத்துவமனை,  மூணாவதாக, ஸர்ஜரி நடந்தவுடன்  ஆஃப்டர் கேர் என்ற வகையிலும்,  உடல்நலக்குறைவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு, கஷ்டமில்லாமல்  தங்கள் அன்றாட வேலைகளைச் செய்து கொள்ள ஆக்குபேஷனல் தெரபி  கொடுப்பது, இடுப்பு, முழங்கால்  ரீப்ளேஸ்மெண்ட் செஞ்சுக்கிட்டவங்களுக்கு  அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பயிற்சின்னு சேவைகள். ஒவ்வொரு ஆஸ்பத்திரியா மாறி,இப்போ இங்கே தான் நம்ம தோழி வேலை செய்யறாங்க. இந்தக் கட்டிடமும் நிலநடுக்கத்தில் ஆப்டுக்கிட்டது.  பாதிக்கப்பட்ட பகுதிகளை இடிச்சுட்டு  நானூறு படுக்கை வசதிகளுடன் தனித்தனி  அறைகளும், அட்டாச்ட் பாத்ரூமோடும் கட்டஆரம்பிச்சு இருக்காங்க.

நாலாவது  மருத்துவமனை  மனநலம் குறைந்தவர்களுக்கு.  பயங்கர செக்யூரிட்டி உள்ள இடம்.  இந்த ரெண்டாவது, மூன்றாவது நாலாவது  மருத்துமனைகள் நகரின் வெவ்வேறு பகுதிகளில் அமைச்சுருக்காங்க.

அஞ்சாவது  மட்டும் பொது மருத்துவமனையின் பக்கத்துலேயே புதுக் கட்டிடம் கட்டிக்கிட்டு வந்துருக்கு பெண்களுக்கானது. நம்ம பொது மருத்துமனை அஞ்சு நட்சத்திர ஹொட்டேல் போல என்றால் இந்த  பெண்கள் பேறுகால மருத்துவமனை ஸெவன் ஸ்டார் ஸ்பெஷல்!  பளபளன்னு  ஜொலிக்குது. இங்கே பேறுகாலத்துக்கு  முற்றிலும்  இலவசம்தான்.  தனித்தனி அறைகளும் அட்டாச்ட் பாத்ரூமுமாய்  சூப்பர் போங்க.

எங்க ஜில்லா முழுசுக்குமான  சுத்துவர பதினெட்டு பட்டிக்குமான  மருத்துவ வசதிகள் இந்த ஹெல்த் போர்டால் கொடுக்கப்படுது. அஞ்சரை லட்சம் மக்கள் பயனடைவர்.  இதுலே எங்க நகர மக்கள் தொகை மூணரை லட்சம் முழுசுக்கும்  பொதுமருத்துவமனையே கதி. ஆனா.... சும்மா சொல்லக்கூடாது......   அருமையான கேஃபே, புக்‌ஷாப், ஸலூன், போஸ்ட் ஆஃபீஸ், பேங்க், கிஃப்ட் ஷாப், ஃபார்மஸின்னு தரைத்தளத்தில் வச்சுருக்காங்க. ப்ளவர் பொக்கே கடையும் உண்டு. வார்டுகளில் ஒரு அறையில் இருக்கும் ஃப்ளவர் வாஸை நாம் பயன்படுத்திக்கலாம். ஒரு சில வார்டுகளில்  மட்டும் பூக்களுக்கு அனுமதி இல்லை.

ஒரு Chapel  தரைதளத்தில் உண்டு. நல்ல இருக்கைகள்போட்டு வச்சுருக்காங்க. ஆல்டர்  மாதிரி ஒரு மேஜை. அதில் பூக்கள் மட்டும். யார் யாருக்கு என்ன சாமியோ அதை மனதில் நினைச்சு சாமி கும்பிட்டுக்கலாம்.

ஒரு நோயாளி மருத்துவமனையில் தங்கும்போது அவருக்கான ஒரு நாள் செலவு 700 டாலர்கள். மக்களின் நலத்துக்கு அரசே பொறுப்பு என்பதால் நாம் பணம் ஒன்னும் கட்டவேண்டியதில்லை. மிகப்பெரிய செல்வந்தரோ, இல்லை ஒன்றுமில்லாத (??!!) ஏழையோ என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை.  அனைவருக்கும் ஒரேமாதிரி மருத்துவ சேவை. சமத்துவம்!

சகல சிகிச்சைகளும் அறுவை, எம் ஆர் ஐ உட்பட அனைத்தும் இலவசமே. ஆனால் இந்த  வசதிகள் எல்லாம் சும்மா வரலை. மக்கள் வரிப்பணம் சரியான முறையில் செலவழிக்கப்படுது என்பதே உண்மை. இங்கே வரிகள் அதிகம்தான்.  பெரிய உத்தியோகம் என்றால் சம்பளத்தில் பாதி வரிகள். 35 % வருமானவரி, அப்புறம் நாம் வாங்கும்சாமான்களுக்கு 15% சேவை வரி. பத்து  பைசா முட்டாயாக இருந்தாலும் அதுலே வரி இன்க்ளூடட்:(

என்னதான் குறைஞ்ச சம்பளமென்றாலுமே  அதற்கேற்ற வரிகள்  கட்ட வேணும்.  யாரும் வரி கொடுக்காமல்  ஏமாற்ற முடியாது.  வரிகள் பிடித்தம் போகத்தான் சம்பளமே கைக்கு வரும்.  நாம் தப்பித்தவறி கொஞ்சம் காசு சேர்த்து பேங்கில் போட்டாலும் அதில் வரும் வட்டிப்பணத்தில் 20% வரியா எடுத்துருவாங்க. இவ்ளோ ஏன்.... அரசு  கொடுக்கும் வெல்ஃபேர்  பெனிஃபெட்டில் கூட வரியைப் பிடிச்சுக்குவாங்க. அவன் (அரசு)கொடுக்கும் காசுக்கு வரிபோட்டுஅதையும் அவனே கட்டிருவான்:-)))))

நம்மூர்  ஆஸ்பத்திரி எமெர்ஜன்ஸி  பகுதி, அஸ்ட்ராலாசியாவிலேயே மிகப் பெரியது. இங்கேயே 55 படுக்கை வசதிகள் உண்டு. பெரும்பாலும் நோயாளிகளை எட்டுமணி நேரத்தில் இங்கிருந்து அனுப்பிருவாங்க. ஆபத்தில் இல்லாதவர்களை வீட்டுக்கும் மற்றவர்களை  வேறு வார்டுகளுக்கும் அனுப்புவதுதான்.  24 மணி நேரமும் பயங்கரபிஸியான இடம் இது. வீக் எண்டுகள் என்றால் சொல்லவே வேணாம்......  ரக்பி விளையாடி முகத்தை ஒடைச்சுக்கிட்டு வர்றவங்கதான் அதிகம். நாட்டின் மதம் ஸ்போர்ட்ஸ் என்றால் அதுக்கேத்த  மதக்கலவரம், கேஷுவல்டி  இருக்காதா?





Monday, November 25, 2013

கிவ் ஹிம் அ ஹக். ........... ஆல் ஈஸ் வெல்!

பயந்து போன நான் அவசர சிகிச்சைப் பகுதியில்  நடுவில் தீவு போலக் கவுண்ட்டர்கள் போட்டுக்கிட்டுக் கணினியும் கையுமா இருந்த பணியாளர்களிடம் கேட்டேன். நமக்குத்தான் ஸர்நேம் தகராறு இருக்கே. அதனால் NHI  நம்பரைச் சொல்லிக்கேட்டேன்.  வேற ஒரு அறையில் இருக்காருன்னு சொல்லி அடையாளம் சொன்னாங்க.  ஆஸ்பத்திரியில் நம்ம  நம்பரைச் சொன்னதும் முழு ஜாதகமும் கணினியில் வந்துருது.

சொன்ன இடத்துக்கு ஓடினேன். பெரியதொரு  ஹாலில் திரைச்சீலை தடுப்புகள் போட்டு அறைகளாகப் பிரிச்சுருக்காங்க. சுற்றுச்சுவர்கள் முழுசும் ஏராளமான ஒயர்களோடு  பலவித உபகரணங்கள்.  சட்னு பார்க்க சினிமாக்களில் காண்பிக்கும் ஆபரேஷன் தியேட்டர் போல இருக்கு. ஆக்ஸிஜன் சிலிண்டர்ன்னு ஒன்னு தனியா இல்லாம, விமானங்களில்  நம்ம தலைக்கு மேலே ஆக்ஸிஜன் மாஸ்க் இருக்குன்னு  திரையிலோ அல்லது  எதாவது ஒரு விமானப் பணிப்பெண்ணோ காமிப்பாங்க பாருங்க அதைப்போல!

மூச்சுத் திணறினால் சட்னு  இழுத்து  மாட்டிக்கலாம். எனக்கே அங்கே மூச்சுத் திணறுவதுபோலத்தான் இருந்துச்சு. எல்லாம் பயம்தான்.....  அதுக்குள்ளே மகள் வந்து வெளியில்  எமர்ஜென்ஸி வரவேற்பறையில் இருப்பதாக டெக்ஸ்ட் அனுப்பினாள்.நான் வெளியே போய் அவளைக் கூட்டிக்கிட்டு திரும்ப கோபாலின் அறைக்கு வந்தேன். மகளைப் பார்த்ததும்  கோபாலின் கண்ணில் கண்ணீர் வழிய ஆரம்பிச்சது.  'ஒன்னும் ஆகாது தைரியமா  இருங்க'ன்னு நானும் கண்ணில் நீர் வழியச் சொன்னேன்.  சட்டென்று டிஷ்யூக்களை உருவிக் கையில் திணிக்கிறாள் மகள். தாகமா இருக்குன்றார் கோபால்.   கால் கப் குடிதண்ணீர் கொண்டுவந்து கொடுத்தேன். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கே!

எக்ஸ்ரே பிரிவுக்குக் கொண்டு போனாங்களாம்.  டாக்டர்கள் ரெண்டு மூணு பேராக வருவதும்  தங்களுக்குள் மீட்டிங் போடுவதுமாக நேரம் போகுது. கொஞ்ச நேரத்தில் படுக்கையை உருட்டிக்கிட்டே  ஸ்கேன் செய்யும் பிரிவுக்குக்கொண்டு போயிட்டாங்க.  கூட வர்றதா இருந்தால் வாங்க. இல்லைன்னா இங்கியே வெயிட் செய்யுங்கன்னு சொன்னாங்க. இப்பத் திரும்பி வந்துருவோமென்றதால் நானும்  மகளுமாக  'அப்பாவின் அட்டகாசங்களைப் பற்றிப் பேசி' எங்கள் கவலையை மறக்கப் பார்த்தோம்.

'எப்படி அதுக்குள்ளே வந்தே? திரும்பி ஆஃபீஸ் போகலையா'ன்னு மகளிடம் கேட்டதுக்கு, இது ஃபேமிலி எமர்ஜென்ஸி இல்லையா....... அதான் திரும்ப வரவேண்டியதில்லைன்னு  ஹெச் ஓ டி சொல்லிட்டாங்கன்னாள். இவள் இப்போது போன மாசம் முதல் புது வேலையில் சேர்ந்திருக்காள்.  முதல் மூன்று மாசம் ப்ரோபேஷனரி பீரியட்.

ஒரு முக்கால்மணி நேரத்தில் எல்லோரும் திரும்பினாங்க. பித்தப்பையில் குழறுபடி!  இயல்புக்கு மாறா பெருசா வீங்கி இருக்கு.  பித்தப்பையில்  உருவாகும் கல் ஒன்னு பெருசா இருப்பதோடு பித்தப்பையின் வாசலுக்கு வந்து  அடைச்சு நின்னுருக்கு. உடனே  அறுவை சிகிச்சை செய்தே ஆகணும்னு சொன்னாங்க.

கோபாலைத் திருப்பிக் கொண்டுவந்தவுடன், தாகமா இருக்குன்னார். கால் கப் தண்ணீர் கொடுக்கும்போதே, இனி தண்ணீர்  குடிக்க வேண்டாமுன்னு சொல்லி  ட்ரிப் ஏத்திட்டு போனாங்க.  அதுலே இன்னொரு சின்ன பாக்கெட்டையும் இணைச்சு, அது  சொட்டி முடிஞ்சதும் கூப்பிடுங்கன்னு மகளிடம் ஒருபொறுப்பும் கொடுத்தாங்க. திரை அறைக்குள் நாங்க மூணு பேர். சுற்றிலும்  மானிட்டர்கள்   என்னென்னவோ காமிச்சுக்கிட்டு இருக்கு.

அறுவை  சிகிச்சை முறைகளை விளக்கி  எதாவது  Gகட்பட் (ஹிந்தி)  ஆச்சுன்னா நாங்க ஜவாப்தாரி இல்லைன்ற வழக்கமான படிவத்தில் கையெழுத்தெல்லாம் ஆச்சு. மகள் பார்க்கிங் மீட்டரில் காசு போடப் போனாள். எந்தொரு சல்யம்!  அதிகபட்சமா ரெண்டு மணி நேரம்தான் வண்டி நிறுத்தமுடியும் என்பது அபத்தமா இருந்துச்சு. இருக்கற கஷ்டத்துலே ஒவ்வொரு ரெண்டு மணியையும் ஞாபகம் வச்சுக்க முடியுமா?  அட்லீஸ்ட் லாங் டைம் பார்க்கிங்  மீட்டர் வைக்கப்டாதா? என்னவோ போங்க.

மகளை அனுப்பிட்டு இவர் பக்கம் திரும்பினால்  உதடுகள் துடிக்க நடுங்கிக்கிட்டு இருக்கார். ரொம்பக் குளிருதுன்னதும்,  நர்ஸப்பனிடம் இன்னொரு கம்பளி வாங்கி வரலாமுன்னு 'தீவு'க்குப் போனால்....   என்னன்னு கேட்டவரிடம், குளிரால்  உடம்பு  நடுங்குது. இன்னொரு ப்ளாங்கெட் என்று சொல்லி வாய் மூடுமுன் பாய்ஞ்சு வந்த நர்ஸப்பர்  ஏற்கெனவே போத்தி இருந்த போர்வையை சட்னு உருவி எடுத்துட்டார்.

ஜன்னி வந்தது போல் உடம்பு உதறுச்சுன்னு  கேள்விப்பட்டதை நேரில் பார்க்கிறேன். பயப்படாதீங்க. டெம்ப்ரேச்சர் இறங்கும் சமயம் இப்படித்தான் இருக்கும். கொஞ்ச நேரத்தில் சரியாகும் என்று சொல்றார். ஆஸ்பத்திரிக்காரர்களுக்கு தினம்  ஆயிரம் கேஸ். எல்லாம் பார்த்துப் பழக்கப்பட்டவங்க. நாம் அப்படியா?  கண்கொண்டு பார்க்க முடியலை. கோராமையா இருக்கு.  பாதங்களைப் பரபரன்னு தேய்ச்சு சூடு பண்ணிக்கிட்டு  இருக்கேன். பெருமாளே! ஏண்டா  இப்படிப் படுத்தறே.....   மனதுக்குள் ஓலம்:(

ஒன் பாத்ரூம் போகணுமுன்னு  'நோயாளி'  சொன்னதும்  கூப்பிடு மணியை அழுத்த 'மேல் நர்ஸ்' வந்து  ஆவன செய்ய தயாரானார். ஆனால் நம்மாளு, நான் நடந்து பாத்ரூம்வரை போறேனேன்னதும் ஸலைன் பையை இடது கையில் தூக்கிப்பிடிச்சுக்கிட்டு  போகலாம் என்றார்.  ஸ்டேண்ட் இல்லையான்னு கேட்டேன். ஏகப்பட்ட ஆக்ஸிடெண்ட்  ஸ்டேண்டால் ஆகிப்போச்சுன்னு   அவைகளை அப்புறப்படுத்திட்டாங்களாம். திரும்ப அறைக்கு வந்தப்ப,  ஸலைன் பைக்குள் ரத்தம் கலந்துருந்துச்சு. எல்லாம் பேக் ஃப்ளோதான்:(

உறக்கமும் விழிப்புமா இருக்கார் கோபால். மற்ற பிரிவுகளைச் சேர்ந்த டாக்டர்கள்,  ஐ யூஸிப் பிரிவு, மயக்கமருந்து கொடுக்கும் மருத்துவர்,  அறுவை சிகிச்சை நிபுணர் என்று  சின்னச் சின்னக் குழுவா வாறதும் போறதுமா இருந்தாங்க
' எவ்ளோ நேரமாச்சு ஒன்னுமே குடிக்கலையே'ன்னு பரிவாப்பேசி காஃபி கொண்டு வந்து எங்களுக்குக் கொடுத்துட்டு போனாங்க ஒரு தன்னார்வலர்(ஸெயிண்ட் ஜான்ஸ்)

தூக்கிப்போட்டுக்கிட்டு இருந்த உடம்பு மெதுவா   சமநிலைக்கு வந்து கண்களை மூடி உறங்க(?) ஆரம்பிச்சார். நான்  அறையை விட்டு வெளியே   காரிடோருக்கு வந்து  தோழிக்கு  ஃபோன் செஞ்சேன். விவரம் சொன்னதும்  அங்கே  உனக்கு சாப்பாடு கொண்டு வர்றதுக்குத்தான் அவசரமா சமைச்சுக்கிட்டு இருக்கேன். பத்துப் பதினைஞ்சு நிமிசத்துலே வரேன்னாங்க.

அதேபோல் வந்தாங்க ரசம் சாதத்துடன்.சோறு இறங்கும் நிலையிலா நான் இருக்கேன்? மகளும் திரும்பி வந்துருந்தாள்.  இன்னொரு டாக்டர் குழு வந்தது.   கொஞ்சம்  ஆபத்தான நிலைதான்.  முதலில் கீ ஹோல் (Laparoscopy)  முறையில்  முயற்சி செய்வோம். பித்தப்பை  அழுத்தம் தாங்காது வெடிச்சுட்டால்   ரொம்பக் கஷ்டம்.  சரிவருமான்னு பார்த்துட்டு முடியலைன்னா அந்தப்பகுதியில்  அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டி இருக்கும் என்று விளக்கினாங்க.  தோழியைப் பரிச்சயமுள்ளவர்களா  இருந்தாங்க, இவுங்கெல்லாம். (தோழி மருத்துவர்)
இன்ஃபெக்‌ஷன் கூடுதலாகிப்போனதால்  சிறுநீரகம், நுரையீரல் எல்லாம் பழுதாகி இருக்காம்:(

ஏழே முக்கால் மணியாகி இருந்துச்சு. தியேட்டருக்குக் கொண்டு போக ஆள் வந்தாச்சு. ' கமான்.   கிவ் ஹிம் அ ஹக் அன்ட்  ஸே குட்பை'  என்றார் நர்ஸப்பர்.  பழைய பஞ்சாங்கத்துக்கு  இதெல்லாம் டூ மச் இல்லையோ?   கையை ஆட்டி விடை கொடுத்தோம்.

பத்தரை மணிக்கு ஐ யூ ஸிக்கு கொண்டு வந்துருவோம். அங்கே வந்து பார்க்கலாமென்றார். அதுவரை  நோயாளியின் உறவினர்களுக்கான அறை  ஒன்று தியேட்டர் பக்கம் இருக்கு. அங்கே  காத்திருக்கும் நேரத்தில் பயன்படுத்திக்க, காஃபி டீ  தயாரிச்சுக்கும் வசதிகள்,  டிவி, பத்திரிகைகள்  நல்லவசதியான சோஃபாசெட் எல்லாமிருக்கு.

. இன்னொரு முறை காசு போடக் கிளம்புன மகளிடம்,  நீ வீட்டுக்குப்போய் ஜூபிட்டர் & ஸூஸ் Jupitor & Zeus  (பூனைகள்) க்கு சாப்பாடு போட்டுட்டு, அப்படியே 'அம்மா' வீட்டுக்குப் போய்  நீயும் சாப்பிட்டுவிட்டு  நம்ம ராஜலக்ஷ்மிக்கும்  சாப்பாடு கொடுத்துரு.  இங்கெ நிலமை என்னன்னு அப்பப்ப  டெக்ஸ்ட் அனுப்பறேன்னு சொல்லி அவளை அனுப்பி வச்சுட்டு  உள்ளே வந்தால்...........சும்மா எதுக்கு தேவுடு காக்கணும்? வீட்டுக்கே போயிட்டு வரலாமுன்னு தோழி சொன்னாங்க.  தயங்கினேன். பத்தரைக்கு நாமெல்லாருமே வரலாம். உன்னுடைய ஆரோக்கியமும் முக்கியம். சும்மா ஏன் இங்கே அடைஞ்சு கிடப்பானேன்? நியாயம்தான்.

கிளம்பி தோழி வீட்டுக்குப்போனோம். சாப்பிட  உட்கார்ந்த போதுதான்  சோறு ஆக்கலைன்னு  தெரியுது. பதற்றத்தில்  ரைஸ் குக்கரில் அர்சி வைக்க மறந்து போயிருக்காங்க.   அரைமணியில் சோறு ரெடியானதும்  சாப்பிட்டோம்.
மகளிடமிருந்து  'எங்கே இருக்கே?' ன்னு டெக்ஸ்ட். பத்தரைக்கு  ஆஸ்பத்திரிக்கு வந்துருவேன். நீயும் கிளம்பி வான்னேன். தோழியும் அவர் கணவரும் நானுமாக் கிளம்பி நம்ம வீட்டுக்கு வந்து  ராஜலக்ஷ்மி என்ற ரஜ்ஜுவுக்கு  சாப்பாடு கொடுத்துட்டு மருத்துவமனைக்குப்போய்ச் சேர்ந்தோம்.

இரவு ஒன்பது மணிக்கு விஸிட்டிங் டைம் முடிஞ்சுரும். குழந்தைகள் வார்டுக்கும், ஐஸியூ வுக்கும்  குடும்ப நபர்களுக்கு  24 மணி நேரமும் அனுமதி உண்டு.  வழக்கமான கலகலப்பெல்லாம் ஓய்ஞ்சு, வரவேற்பு ஜிலோன்னு இருக்கு. செக்யூரிட்டி  ஆட்கள் மட்டும் இருக்காங்க.  நாம் போய் விவரம் சொன்னதும்   வார்டு நர்ஸிடம் விசாரிச்சு,  விஸிட்டர் என்ற  பேட்ஜ் நம்ம சட்டையில் ஒட்டிட்டு உள்ளே போக விடறாங்க.
அப்பதான் ஐஸியூவுக்குக்கொண்டு வந்துருக்காங்க.  வழியெங்கும் நிறைச்சு வச்சுருக்கும்  ஸ்டெரிஜெல்லைக் கையில்  பூசிக்கிட்டு உள்ளே  போகணும்.  ஏகப்பட்ட மெஷீன்களுக்கிடையில் மயக்கத்தில் இருக்கார்.  மூச்சு விட ஆக்ஸிஜன் மாஸ்க் போட்டுருக்காங்க.  இங்கே பனிரெண்டு  படுக்கைகள்தான்.  ஆனால்  ஒவ்வொரு நோயாளிக்கும்  ஒவ்வொரு நர்ஸ் என்ற வகையில் ஒன் டு ஒன். நோயாளியின் கால் பக்கம் மேஜை நாற்காலி போட்டு உக்கார்ந்துருக்காங்க.

நல்ல வேளையாக, நம்ம தோழிக்குப் பரிச்சயமான நர்ஸ்.  ப்ரைவஸி ஆக்ட் நியூஸியில் தீவிரம் என்றபடியால்  குடும்பம் இல்லாத மற்றவர்களுக்கு  நோயாளியின் நிலை, விவரம் கொடுக்க மாட்டாங்க.  ஆனால் நான் விவரம் கேட்கும்போது பக்கத்தில்  நிக்கறவங்க காதில் விழுமா இல்லையா:-)

நல்லவேளையா  கீ ஹோல் சர்ஜரிதானாம்.   பயப்படவேணாமுன்னு சொன்னாங்க. அதுக்குள்ளே மகளும் வந்து சேர்ந்தாள். அப்பாவின்  கிடப்பைப் பார்த்ததும்  முகத்திலொரு நெகிழ்ச்சி !

காலை எட்டு மணிக்கு  டாக்டர் வரும் நேரம். அவரிடம் பேசணும்  என்றதால்  மகள் காலையில் என்னை இங்கே கொண்டு வந்து விடுவதாகச் சொன்னாள்.
ஆபத்தான கட்டம்  தாண்டியாச்சு.  ஆல் ஈஸ் வெல்!

தொடரும்............






Thursday, November 14, 2013

நாச்சியாரின் இழப்பு.

பதிவுலக நட்புகளுக்கு,

நம்முடைய 'பதிவர்   நாச்சியார்' வல்லி சிம்ஹனின் அருமைக்கணவர் திரு நரசிம்ஹன் நேற்றிரவு  இறைவனடி சேர்ந்தார்.

என்ன செய்வது என்ற மனக்கலக்கத்துடன் இருக்கும் வல்லிக்கு(ரேவதிக்கு) பதிவுலகின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.

ப்ச்...............  என்னப்பா இப்படி ஆகிப்போச்சு:((((




Tuesday, November 12, 2013

கொஞ்சநாள்......சும்மா இரு! (????)

கொதிக்கும் உடம்போடு வீட்டுக்குள் நுழைஞ்சவர் விடுவிடுன்னு நேரா உள்ளே போய் படுத்துட்டார். தொட்டுப் பார்த்தால் நல்ல ஜுரம். கொஞ்ச நேரம் தூங்கட்டும் என்று விட்டுட்டு நான் போய்க் கொஞ்சம் கஞ்சி வைக்க அடுப்பைப் பத்த வச்சேன்.

சீன தேசம் போனவர் இப்படி  ஜுரம் பிடிச்சு வந்துட்டாரேன்னு கலக்கம். மூணு நாள் முன்னால்தான்  எங்கூரில் இருந்து ஆக்லாந்து போய் அங்கிருந்து ஏர் நியூஸிலேண்ட்  விமானத்தில்  ஷாங்காய் போயிருந்தார்.  இது ஒரு நீண்ட நெடும்பயணம்தான். நடுராத்திரி நேர ஃப்ளைட் என்பதால் தூங்கிக்கிட்டேப் போய்ச் சேரலாம். பனிரெண்டரை மணி நேரம் பறந்தபின்  சீன நேரம் காலை எட்டரைக்கு ஹொட்டேல் அறைக்குப் போனவுடன் குளிச்சு ரெடியாகி பத்து மணிக்கு ஃபேக்டரிக்குப் போயிட்டார்.  அதுவும் கிட்டத்தட்ட ஒரு மணி நேர கார் பயணம். தொழிற்சாலைகள் எல்லாம் எப்பவும் நகருக்கு வெளியில்தானே!

ஆரம்பகட்ட  வேலைகளை முடிக்கவே மணி மூணரைக்கும் மேல். பகல் சாப்பாடு இன்னும் நடக்கலைன்னு வயிறு ஒரு பக்கம் கூவ ஆரம்பிச்சு ரொம்ப நேரமாயிருக்கு. சின்ன ஊர் என்பதால் சாப்பிடும்  இடங்கள் ஒன்னும் சரியில்லை.அப்போதைக்கு கூச்சலை அடக்க ஒரு இடத்தில் சாண்ட்விச் வாங்கி சாப்பிட்டு இருக்காங்க இந்தக்குழுவினர்.  ட்டூனா சேண்ட்விச்சாம்.

நம்ம புள்ளி மறுநாள் விடிகாலையில் வயித்து வலியோடு எந்திரிக்கிறார். என்னை ஃபோனில் கூப்பிட்டு வலியைச் சொன்னதும் ஹொட்டேல் டாக்டரைப் பார்க்கச் சொன்னேன். நம்ம அதிர்ஷ்டம் பெரிய ஹோட்டேலா இருந்தும் டாக்டர் இல்லை(யாம்)  பக்கத்தில் ஒரு மருத்துவமனை இருக்குன்னு வரவேற்பில் சொன்னதும் அங்கே போயிருக்கார். இண்டர்நேஷனல் பிரிவு ஒன்னு தனியா அங்கே இருக்காம்.

இன்றைக்குக் காலை எட்டுமணிக்கு இவரை வேறொரு ஃபேக்டரிக்குக் கூட்டிப்போக வண்டி வரும். ரெண்டரை மணி  நேரப் பயணம் அங்கே போய்ச்சேர. நமக்கு வயித்து வலி என்பதால் மற்றவர்களைப் போகச் சொல்லிட்டு இவர் மருத்துமனைக்குப் போயிருக்கார். ஃபுட் பாய்ஸனிங் என்று பழியை ட்டூனாவின் மேல் போட்ட  டாக்டர்  சிங்கையில் உள்ள இன்னொரு டாக்டரிடம்   கலந்து பேசிட்டு  ஆண்ட்டிபயாடிக் கொடுத்து ஒரு பாட்டில் ஸலைனும் ஏத்தியிருக்கார். கூடவே ஆயிரம் டாலர்கள் சார்ஜ்.

வயித்துவலி என்பது  உண்மையா வலது பக்க மார்புக்கூட்டின் கீழே பிச்சுப்பிடுங்கும் வலி. சீனாவிலிருந்து எனக்கு ஃபோனில் வலி விவரம் சொல்லி பயணத் திட்டத்தை கேன்ஸல் செஞ்சு  அன்றே அங்கிருந்து கிளம்பலாமுன்னா, சீன மருத்துவர் பயணம் செய்யும் நிலையில்  உடல் இல்லைன்னு சொல்லிட்டார்:(  அப்படியும் மறுநாளாவது அங்கிருந்து  புறப்பட்டே ஆகணுமுன்னு  டிக்கெட்டை  மாத்திட்டார் நம்மவர்.


என்னுடைய நெருங்கிய தோழி இங்கே நியூஸியில் நம்மூரில்  மருத்துவர். அவருக்குத் தகவல் சொன்னதும், வலப்பக்க வலி என்றால் உடனே கவனிக்கணும். ஜூரம் எவ்ளோ இருக்குன்னு கேட்டுச் சொல்லுங்கன்னார். டிக்கெட்டை மாற்றியெடுத்த விவரமும், சனிக்கிழமைக்கு பதிலாக வெள்ளியே வருகிறார் என்றும்  தகவல் தந்தேன்.  சீனத்தில் வியாழன்  பகல் ரெண்டேகாலுக்கு ஃப்ளைட். விமானம் ஏற வந்தவரைக் காய்ச்சல் காரணம்  பயணம் செய்ய அனுமதிக்கலை. நாம்  அந்த வழியில் நடந்து வரும்போதே நம் உடல் வெப்பநிலையை ஸ்கேன் செஞ்சு அளக்கும் கருவிகள் அங்கே வச்சுருக்காங்க. சிங்கையிலும் பார்த்திருக்கேன்.

உடனடியாக ஊர் திரும்பியே ஆகணுமுன்னு இவர் பிடிவாதமாக் கேட்டு விமானத்துக்குள்ளே  வந்துட்டார்.  ரெண்டு நாளா கொலைபட்டினி. வெறும் தயிர் மட்டும் கொஞ்சம் சாப்பிட்டுருக்கார். சீனதேசத்து ஹொட்டேலிலும் கஞ்சி செஞ்சு கொடுத்தாங்களாம். அவுங்க நல்லா இருக்கணும்.

பனிரெண்டு மணி நேர ஃப்ளைட். எப்பவும்  கிழக்கு நோக்கிய பயணம் என்றாலே டெயில் விண்ட் காரணம் கொஞ்சம் சீக்கிரமா  வந்துருவோம். காலை ஏழுமணிக்கு ஆக்லாந்து வந்ததும் எனக்குத் தகவல் சொல்லிட்டு,  லோக்கல் ஏர்ப்போர்ட்  வந்து, ஒன்பது மணி ஃப்ளைட் பிடிச்சு நம்மூருக்கு வந்துட்டார்.   வாசலில் டாக்ஸி  வந்து நின்னப்பச் சரியா பதினோரு மணி.
தோழி இடைக்கிடை  ஃபோன் செஞ்சு நிலவரத்தைக் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. பதினொன்னரைக்குக்  கூப்பிட்டாங்க 'வந்தாச்சா?'   வந்து ஜுரத்தோடு படுத்துத் தூங்கறார்.


எவ்ளோ ஜுரம் இருக்குன்னு பார்த்தியா?  இல்லை. இதோ பார்க்கிறேன். 39.5.  உடனே ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிப்போங்க. குடும்ப டாக்டர் வேணாம். நேரடியா மருத்துவ மனைக்கே போயிருங்கன்னதும் 'ஆம்புலன்ஸைக் கூப்பிடவா'ன்னேன். " வேணாம்.  கணவரை  அனுப்பறேன்.அவர் உங்களை ஆஸ்பத்திரியில் கொண்டு விடுவார்.  அவருக்கு ஒரு நைட் ட்ரெஸ் மட்டும் கையோடு எடுத்துக்குங்க"

நண்பர் (தோழியின் கணவர்)  வந்தவுடன் கிளம்பிப் போனோம். உடம்பின் நடுக்கம் தாங்கமுடியாமல் பெரிய ஜாக்கெட் ஒன்றை போட்டுக்கிட்டார் நம்ம கோபால்.

மெயின் ரோடில் இப்பெல்லாம் பயங்கர  ட்ராஃபிக்:(  நிலநடுக்கம் வந்தபின் கிழக்குப்பகுதி மக்களும், வியாபார நிறுவனங்களும் நம்ம மேற்குப் பகுதிக்கு இடம் பெயர்ந்ததால்  எங்க ஏரியா எப்போதும் ஒரே கஜகஜன்னு கிடக்கு!

நம்ம வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் ஆறே கிமீ தூரம்தான். முந்தியெல்லாம் அஞ்சாறு நிமிசத்துலே போயிருவோம். இப்ப அதுவும் இன்னிக்கு இருவது நிமிசத்துக்கு மேலாச்சு. எமெர்ஜென்ஸியில் இறக்கிவிட்டுட்டு, பார்க்பண்ணிட்டு வரேன்னு சொன்ன நண்பரை வேண்டாம்.நீங்க ஆஃபீஸ்போங்க. நான்  எதாவது தேவைன்னா ஃபோன்  செய்யறேன். இல்லேன்னா 'டெக்ஸ்ட்'பண்ணிடறேன்னு ஜம்பமாச் சொன்னேன்.

அவசர சிகிச்சையில் கொஞ்சம்பேர் காத்திருக்காங்க. முதலில் ஒரு கவுண்ட்டரில்  இருக்கும் நர்ஸ்களிடம் பிரச்சனை என்னென்னு சொல்லிட்டு அடுத்த கவுண்ட்டரில் நம்ம பெயரை ரெஜிஸ்ட்டர் பண்ணிக்கணும்.  'ஜுரத்தோடு ஓவர்சீஸ்லே இருந்து திரும்பி இருக்கார்' சொன்னேன். பக்கத்து கவுண்டரில் நம்ம ஸர் நேம் சொன்னதும் நம்ம ஜாதகம் முழுசும் கணினியில் காமிச்சது.  தற்போதைய விலாசமும் தொலை பேசி, அலைபேசி எண்களை சரிபார்த்தபின்  இருக்கைகளில் காத்திருக்கச் சொன்னார்கள். நாலெட்டு நடந்து உட்காருமுன்  நம்மைத்தேடி ஓடிவந்த மருத்துவமனைப் பணியாளர்  நம்மை உள்ளே கொண்டு போயிட்டார். ஓவர்சீஸில் இருந்து  ஜுரத்தோடு  வந்தால்  போச்சு. அதுவும் சீனத்திலிருந்து வந்துருக்கார்.  பறவை, பன்றின்னு எத்தனையோ காய்ச்சல் இருக்கு. நம்மால் அவை  கம்யூனிட்டிக்குள் பரவிவிட்டால்............   ஐயோ:(  Threat to the communityன்னு  நம்மை ஐஸொலேட்  பண்ணிருவாங்க. 

ஆஸ்பத்ரி ட்ரெஸ் போட்டுக்கச்சொல்லி  கவுனைக் கையில் கொடுத்ததும்  எனக்கு 'தலைகால்' புரியலை. தனி அறை ஒன்றில் படுக்கவைத்து பரிசோதனைகள், கேள்விகள்  எல்லாம் ஆரம்பிச்சது.  நான் ஒரு பக்கம் இருக்கையில் உக்கார்ந்து  கவனித்துக்கொண்டு இருந்தேன். ஏழெட்டு ஒயர்களுடன்  மார்புப்பகுதியை  மானிட்டரில் இணைச்சுட்டு, நாடித்துடிப்பைக் கவனிக்க  வலது கை பெருவிரலுக்கு தொப்பியும் போட்டாச்சு. ஐவி  ட்ரிப்ஸ் போட ஊசியும் குழாயும் குத்தி வச்சுட்டாங்க. ரொம்ப தெரிஞ்சமாதிரி மாறும் பச்சை எண்களைப் பார்த்துக் கிட்டு  இருந்தேன்.

ரெண்டு மூணு மருத்துவர்கள்,  மேல் அண்ட் ஃபீமேல் நர்ஸுகள் இப்படி மாறி மாறிவந்து மீட்டிங் போட்டுட்டு அப்பப்ப என் பக்கம் திரும்பி நோ ஒர்ரீஸ். ஹி வில் பி ஆல்ரைட்ன்னு சொல்லிட்டுப் போனார்கள்.  இதுக்கிடையில் எனக்கு காஃபி டீ எதாவது வேணுமான்னு செயிண்ட் ஜான்ஸ் ஊழியர்களின் உபசரிப்பு வேற.

இப்படியே ஒரு மணி நேரம் ஓடிப்போனது. படுக்கையுடன் கட்டிலை உருட்டிக்கிட்டே எமெர்ஜன்ஸி  ஏரியாவின் இன்னொரு  பகுதியில் இருந்த  அறைக்குக் கொண்டு போனாங்க. 'மேல்நர்ஸ்' ஒரு நாற்காலியைத் தூக்கிவந்து போட்டு இதில் உக்காந்துக்குங்கன்னு உபசரிச்சார்.

எனக்கு வேற ஒரு பிரச்சனை.  இப்ப ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக மருந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்.  சாப்பாட்டுக்கு அரை மணி முன் மருந்து உள்ளே போகணும்.  அரைமணிக்குப் பின்  சோறெங்கேன்னு வயிறுசண்டை போட்டுரும். இன்னிக்கு  மருத்துவமனைக்கு  வருமுன் மருந்தை விழுங்கிட்டு, கையோடு லஞ்ச் கொண்டு வந்திருந்தேன்.  இவரோ அப்பப்ப,  போய் சாப்பிடுன்னு  சொல்லிக்கிட்டே இருக்கார்.  கொஞ்சம்நேரம் ஆகட்டும். வெளியே போய் சாப்பிடறேன்னு சமாளிச்சுக்கிட்டே இருந்தேன்.

பகல் ரெண்டரை ஆகி இருந்தது. இவரும் கண்ணை மூடி  உறங்க ஆரம்பிச்சார். நான் பூந்தோட்டம் உள்ள நதிக்கரைக்குப் போனேன்.  போனவருசம் இதே சமயம் மகளுக்கு உடல்நலமில்லாமல் மருத்துவமனையில்  அதிக நாட்கள் இருந்தாள். அப்போ தினமும் வந்து போனதில் (எங்கே போறது? காலையில் வந்தால் நாள் முச்சூடும் இங்கேதான் இருப்பேன்)  எதெது எங்கெங்கேன்னு  ஏறக்குறைய எல்லா இடங்களும் அத்துபடி.  

லஞ்சை முடிச்சுட்டு (அரிசி உப்புமா!)  அலைபேசியை எடுத்து மகளுக்கு டெக்ஸ்ட் ஒன்னு கொடுக்க ஆரம்பிச்சேன்.  இது ஒரு பெரிய விஷயமான்னு  நினைப்பீங்க. எனக்கு இது ஏதோ மலையைப் புரட்டும் சமாச்சாரம். வளர்ந்து விட்ட டெக்னாலஜிகளில்  இந்த செல்ஃபோன்  மட்டும் மூளைக்குள் நுழையமாட்டேங்குது. ஒவ்வொருமுறை டெக்ஸ்ட் (எஸ் எம் எஸ்) அனுப்பறதுக்குள்ளே தலையால் தண்ணி குடிச்சது போல்தான்:(  இந்த  அழகுலே  இது எனக்கு புது ஃபோன் வேற. மகள் புதுசு வாங்குனதும் பழசு எனக்கு வந்துரும்.  ஒரு அவசரம், ஆபத்துக்குன்னுதான் செல்ஃபோன் வச்சுருக்கேனே தவிர அதோடு குடித்தனம் பண்ணுவதற்கில்லையாக்கும் கேட்டோ!

தட்டித்தடுமாறி 'அப்பா   எமெர்ஜென்ஸியில்'  சேதி அனுப்பிட்டேன். இதுக்கே காமணி ஆச்சுப்பா:(  திரும்ப அவசர சிகிச்சைக்குள் போய்  உள்ளே இருக்கும் நோயாளியைப் பார்க்கணும்.நான்  நோயாளியின் மனைவி'என்றதும்  ஒரு பட்டனை அமுக்கி  என்னை உள்ளே அனுமதிச்சாங்க. நேரா இவர் இருந்த அறைக்குப் போனால்........... ஆளைக் காணோம். அறை காலி!

தொடரும்........

PINகுறிப்பு: விஸ்தரிப்புக்கு  மன்னிக்கணும். இது கோபாலின் சேமிப்புக்கு:-)





Friday, November 01, 2013

ஹைய்யோ!!! என்னப்பா... இது? இவ்ளோ கூட்டமா!!!

Pyrotechnic மூலம்  அரங்கில் பட்டாஸ் கொளுத்தினாங்க.  முதலில் இங்கேயும் தாஜ்மஹல்தான்:-) குளிரில் போய் நிக்காமல் உக்கார்ந்த இடத்தில் இருந்தே பார்ப்பதும் நல்லாத்தான் இருக்கு.  இப்ப இங்கே புதுசா ஆரம்பிச்சுப் பரவும் சமாச்சாரம் இது. பொதுவா  பெரிய நாடகங்கள், இசை நிகழ்ச்சின்னு  குறைந்த பட்சம் இருநூறு டாலர் டிக்கெட் காட்சிகளில் நடக்கும் சமாச்சாரம் இப்போ பொது மேடைகளுக்கு வந்துருக்கு!  (1984-ல் மைக்கேல் ஜாக்ஸன் அவருடைய ஷோ ஒன்னில் இந்த Pyrotechnic பயன்படுத்தினாராம்.





இந்த டெக்னிக் கற்றுக்கொள்ள ரெண்டு நாள்  பயிற்சி வகுப்பு இங்கே எங்கூரில் நடத்தறாங்க. $ 2150 தான்  கோர்ஸ் சார்ஜ்.  வருசத்துலே ரெண்டே முறை ரெவ்வெண்டு நாட்கள் வகுப்பு.

'கணேஷ் வந்தனா'வுடன் நிகழ்ச்சி ஆரம்பிச்சது.  அப்புறம் வழக்கமான  பாலிவுட் டான்ஸ்கள்.  பாங்ரா நடனங்கள், குஜராத்தி கர்பா, கேரளாவின் திருவாதிரைக் களி, மராத்தி லாவணி நடனம், நாடன் பாட்டு ஃப்ரம் கேரளா, 100 years of Indian Cinema ன்னு   தொடர்ந்து வந்த நிகழ்ச்சியில்  இடைக்கிடை  பட்டாஸ் டிஸ்ப்ளே.

காம்பியரிங்  ஸ்டைலுன்னு ஒன்னு  சமீபத்துலே தொடங்கி இருக்கே அதை அனுசரித்து   ரெண்டு பேர் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தறோமுன்னு  மேடைக்கு வந்து பார்வையாளர்களை  அறுத்துத் தள்ளிட்டாங்க.  நம்ம ஊர் பரதநாட்டிய பள்ளி ஒரு ஐட்டம் செஞ்சாங்க. அதை ஏற்கெனவே ப்ரோக்ராம் புத்தகத்தில்  'தில்லான். டமில்  ஃபோக் டான்ஸ்'ன்னு போட்டு வச்சுருக்காங்க. மேடையில் அறிவிச்சது,    'இண்டியன்   ஃபோக் டான்ஸ் ஃப்ரம் த லேண்ட் ஆஃப் ரஜினி'   பாவம் அந்த டீச்சர்:(  லால்குடி ஜயராமன் அவர்களின் தில்லானா பட்ட பாடு!

நிகழ்ச்சிக்குப்பிறகு அவரைப் பார்த்தபோது ,  பரத நாட்டியத்தைப்போய் இப்படி இண்டியன் ஃபோக் டான்ஸ்ன்னு சொல்லிட்டாங்களேன்னா........   ஐயோ இண்டியான்னா சொன்னாங்க. நான்  ஸ்ரீலங்கன் ஆச்சேன்னாங்க. போதுண்டா சாமின்னு இருந்தது எனக்கு.  அப்படியே நடனம் நல்லா இருந்ததான்னு கேட்டவரிடம், அடுத்த முறை ஒரு சேஞ்சுக்கு பாலமுரளியின் தில்லானா ஆடுங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.


ஒடிஸா குழு முகமூடி நடனம் என்று ரெண்டு  ஐட்டம் ஆடுனாங்க. ஆடுமுன் அதற்கான விளக்கம் ஒன்னும்கொடுக்கலை.  Trinetra Chhau Dance Centre இண்டியன் கவுன்ஸில் ஃபார் ஆர்ட் அண்ட் கல்ச்சர் ரிலேஷன்ஸ்  வகையில் இப்போ  நியூஸியில்  முக்கிய நகர தீபாவளியில் ஆடி மகிழ்விக்க வந்துருக்காங்க.  நாம்  எடுத்த படங்களும் சரியா வரலை:(



இந்தவகை நடனங்களை சண்டிகர் வாழ்க்கையில் சிலமுறை பார்த்திருக்கிறேன்.  காவடி போல பெரிய அளவில் உள்ளமுகமூடிகளை வச்சு ஆடுவாங்க.  இதற்கான இசையும் அட்டகாசமாக ஒரு கிராமியத்தனத்துடன் இருக்கும்.   பெரிய முரசு போன்ற ட்ரம், சின்ன கெட்டில் ட்ரம்ஸ், ரெட்டை நாயனம் போல ஒரு வகை ஷனாய்ன்னு ...... ஒருவேளை வெளிநாடுகளுக்கு  அவற்றையெல்லாம் கொண்டு வர சிக்கலிருந்ததோ என்னவோ!

மேலே உள்ள படம் சண்டிகரில் எடுத்தது.

மொத்தம் முப்பத்தி மூணு ஐட்டங்களில்   முதல் ரெண்டு மூணு முடிஞ்சதும் மேயரும்,  மற்ற சில கவுன்ஸிலர்களும்,  ஓசைப்படாமல் எழுந்து போயிட்டாங்க.  ஒவ்வொரு  மூணாவது  நிகழ்ச்சியும் பாங்ராவா இருக்கும்படி 'பார்த்து' அமைச்சிருந்தாங்க போல.  பாங்ரான்னு அறிவிச்ச அடுத்த விநாடியே  அரங்கத்தில்   அங்கங்கே இருக்கும் அத்தனை பஞ்சாபிகளும் வேலை மெனெக்கெட  இறங்கிப்போய்  மேடைக்கு முன்னே இருக்கும் இடத்தில் குவிஞ்சு நின்னு  கூடவே ஆடுறாங்க.  சோம்பல் என்பதே இல்லை. இருட்டானாலும்  டோண்ட் கேர். ஆடியே ஆகணும். எதோ ரிச்சுவல் மாதிரி  ஒவ்வொரு முறையும் வந்து ஆடிட்டு இருக்கைக்குத் திரும்பியது ,  ஒற்றுமையைக் காமிக்குதோ?

பாலிவுட் டான்ஸ் என்ற பெயரில்  எல்லா நடனக்குழுவும் தனித்தனியா வந்து லுங்கி டான்ஸ் ஆடிட்டுப் போனாங்க. சலிப்பா இருந்துச்சு.  போதாக்குறைக்கு   பேஷன் ஷோ  என்ற பெயரில்  அங்கங்கே கேப் ஃபில்லர் போல நாலைஞ்சு முறை. ஆனாலும் ஃபிஜி இண்டியன்ஸ் நடத்திய ஜல்ஸா அளவுக்கு இது மனதைக் கவரவில்லை:(















 மராத்தி லாவணி மொத்தத்தில் சூப்பர்!  பூனா வாழ்க்கை நினைவுக்கு வந்தது!
நம்மூரில்முதல்முறையா ஆடி இருக்காங்க. வெல் டன்!

ஒன்னு சொல்லணும், இந்த வருச  இண்டியன் க்ளப் செயற்குழு அட்டகாசமா  எல்லா ஏற்பாடுகளையும்  பண்ணி இருந்தாங்க.  உழைப்பு நல்லாத் தெரிஞ்சது.  ஒடிஸா குழுவைத் தவிர்த்து ஆடியவர்கள் அனைவரும் தொழில்முறை ஆட்டக்காரர்கள் அல்ல.  ஆறுமாசம்  வீக் எண்டுகள் தவறாமல் பயிற்சி எடுத்துருக்காங்க.  ரெண்டு கேரளா க்ளப்பும் தனித்தனி கடைகளும் ஐட்டங்களுமா ஜமாய்ச்சாங்க.





மக்கள் வருகை  இருபதாயிரமுன்னு  மைக்கிலே சொன்னதை நாம் பொருட்படுத்த  வேண்டாம். அவ்ளோ கூட்டம் இங்கே ஏது?   நாம் ரெண்டால் வகுத்துக்கலாம். பிரச்சனை இல்லை:-)   அந்தப் பத்தாயிரத்தை  மீண்டும்  ரெண்டால் வகுத்தால் நம்மாட்கள்.  இவ்ளோ இந்தியர்களை ஒருசேரப் பார்ப்பது இதுவே முதல் முறை!  நிறையப் புது முகங்கள்.  பஞ்சாப், ஆந்திரா, கேரளா என்னும் வரிசையில் இருக்கலாம்.

எட்டரை மணியாகுதே. எதாவது சாப்பிடலாமுன்னு  அடுத்த பகுதிக்குப்போனால் நம்ம தோசைக் கடையில்தான்  வரிசை கட்டி நின்னு வாங்குது சனம்.  வேறெதாவது  சாப்பிடலாம்னு பார்த்தால் பாவ்பாஜி இருக்கு. பேல்பூரி, பானி பூரி எல்லாம் காலி.  கேரளா க்ளப் ஜஸ்ட்டின் , நம்மைப் பார்த்ததும் கையோடு இழுத்துக்கொண்டு போய் கடையில் விட்டார். தோசை, சட்டினி சாம்பார், ஆளுக்கொரு  மேங்கோ லஸ்ஸி.  சாப்பிட்டு முடிச்சுக் காசு கொடுத்தால்..... யாருமே வாங்கிக்க மாட்டேங்கறாங்க. ஒரே குடும்பத்துலே காசு எதுக்குன்னு பதில் வருது!

ஓசிச் சாப்பாட்டுடன் தீபாவளி ரெண்டு இனிதே முடிந்தது.

நாளையும் மற்ற நாளும் ப்ரைவேட் தீபாவளி.  நாலு  இடத்தில் கொண்டாடணும்.  நாளை பகல் நம்ம வீட்டில், மாலை இன்னொரு தோழி வீட்டில் பூஜை. ஞாயிறு இன்னொரு தோழி வீட்டில் பாட்லக் லஞ்சு. அன்று மாலை கோவிலில் இப்படி.

 இவ்ளோ பிஸியா இருந்தாலும்  இருட்டுனதும்  கொஞ்சம் கம்பி மத்தாப்பு (போன வருச ஸ்டாக்)  கொளுத்தணும்.டே லைட் ஸேவிங்ஸ் இருக்கு. இருட்ட எப்படியும் பத்தாகிரும்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்து(க்)கள்.

PINகுறிப்பு : ஒரு வாரம் தீபாவளி விடுமுறை விட்டுறலாமா?  விரலுக்கு ஓய்வு வேணுமாம்:-)