Monday, June 07, 2021

47

சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே.....  இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் ! 

ஆனால் ஒன்னு... சண்டைக்கு 'மூலவர்' நம்மவரேதான் ! ஆரம்பிச்சு வச்சுட்டு சாதுவா இருந்துப்பார்.....  ஏறின சாமி  இறங்கும்வரை நான் ஒரே சாமி ஆட்டம்தான்....   A small WAR Zone ஆகிரும் வீடு :-)

இப்பெல்லாம் சொந்தவிழா ஒரு நாள் கொண்டாட்டமா அடங்கறதில்லை.... போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு எங்க மாட்சிமைதாங்கிய மஹாராணியம்மாவின் பொறந்தநாள் அந்த வாரம் வந்துடறதால்....  Queen's Birthday Long Weekend  என்று மூணுநாட்கள் லீவு.  அந்த மூன்று நாட்களும் நமக்கானதே !
காலையில் வீட்டுப்பெருமாளுக்குப் பழப்படையல் ! 

இந்த முறை உண்மையான கொண்டாட்டத் தேதிக்கு ரெண்டு நிகழ்ச்சி. மதியம் சாப்பாடு கேரளா விருந்து.  நார்த் மீட்ஸ் சௌத் என்று  உள்ளூர் பிகானிர்வாலா ரெஸ்ட்டாரண்டில் கேரளாதாலி ஸ்பெஷல்.
 
காளன், ஓலன், எரிசேரி, தோரன், சாம்பார், ரஸம், குருமா ( அவியலுக்கு பதிலாக !) தயிர்பச்சடி, மொளகோஷ்யம், பப்படம், இஞ்சிப்புளி, அச்சார், மட்டரிச்சோறு, பாயஸம் கூடாதே  கேரளாப் பரோட்டா, ஆப்பம்  ...........  தட்டைப்பார்த்தவுடன்  மனசும் வயிறும் நிறைஞ்சே போச்சு!
ரெஸ்ட்டாரண்ட் ஓனர், நம்ம நண்பர் என்பதால் கூடுதல் கவனிப்பும் !
சாயங்காலம், கோவிலுக்குப் போய் வந்தோம். வழக்கமாப்போகும் சனிக்கிழமையாகவும் அமைஞ்சு போச்சு. பெருமாளும், கோவில் பண்டிட்டும், பக்தர்களுமா வாழ்த்தினாங்க. கோவில்வகையில் மாலைகளும் பூக்களுமாக ப்ரஸாதம் !


மறுநாள் ஞாயிறு மாலை பூஜைக்குப்பிறகு வழங்கும் கோவில் மஹாப்ரஸாதத்திற்கு நம்ம வகையில் ஏற்பாடு செஞ்சுருந்தோம். மகளும் மருமகனும் வந்து கலந்துக்கிட்டாங்க. கோவில் நிர்வாகி, நம்ம விசேஷத்தை அறிவிச்சதில், குழுமி இருந்த மக்களின் வாழ்த்துகளும் கிடைச்சது!
இன்று மூன்றாவது நாள், ரெண்டு வாரங்களுக்கு முன்னே இங்கே புதுசாகத் திறந்திருக்கும் பஞ்சாபி பஃபே ரெஸ்ட்டாரண்டுக்குக் குடும்பத்துடன்  போறோம்.
நம்ம ரஜ்ஜுதான், நம்மகூட எங்குமே வெளியில் வர்றதில்லை.... பாவம் பிள்ள ! கொரோனா காலத்தில் வீடடங்கி இருப்பது உத்தமம்னு தெரியுது பாருங்களேன் !

அன்பளிப்பாகக் கிடைத்தவை, 'நம்மவரிடமிருந்து'  ஐராவதம் ! 
 மகளின் சார்பில்  2022க்கான ஒரு காலண்டர் !  அலாஸ்காவிலிருந்து நமக்காக வடிவமைச்சுத் தபாலில்  வந்தது !  சிறப்பான படங்கள். எல்லாம் நம்ம ரஜ்ஜுவும், அவனைப்போலவே உள்ள  ஏழுபேரும் (!)  சிலபல நண்பர்களும் !

ரொம்பவும் மகிழ்ச்சியான மணநாள் விழாவாக அமைஞ்சதில் பரம திருப்தி ! 
ஃபேஸ்புக்கில் விழாவைப்பற்றிச் சொன்னதால்....  நண்பர்களின் வாழ்த்துகள் மலைபோலக் குவிந்தன !

இந்த மூன்று நாட்களும்,  வழக்கத்திற்கு மாறாக இருந்தேன், பல்லைக் கடிச்சுக்கிட்டு !!!!

நாளை முதல் ஆரம்பிக்கலாம்... நம்ம நாளுக்கு மூணு  சண்டையை !