உள்ளூரைச் சுத்தி சுத்தி வந்தாலும் நாட்டை விட்டு வெளியே போகவிடாமல் புண்ணியம் கட்டிக்கிட்டது இந்தக் கொரோனாதான்.
கால்களை மட்டுமா? மனசையும் முடக்கிப் போட்டுருச்சேப்பா....
மேலே படம் : 2021 பொறந்த போது :-)
போனவருஷத்துக்குக் கடைசிப்பதிவு டிசம்பர் ஒன்பதுலே...... அதுக்குப்பின் கப்சுப். அந்தத் தொடரையே எழுத ஆரம்பிச்சு, முடிக்கும்வரை என்னமோ ஏனோதானோன்னுதான் ஆச்சு. ப்ச்.....
இதுக்கிடையில் கஷ்டம் வந்தால் ஒத்தையா வராது என்ற வாக்குப்படி இன்னொரு பெரிய கஷ்டத்தை இழுத்துக்கிட்டு வந்துச்சு.
புது லேப்டாப் வாங்கினதைப்பத்திச் சொல்லி இருந்தேனோ ? பழசும் எட்டரை வருஷமா ஒழைச்சு, ஒழைச்சு ஓடாப் போயிருச்சேன்னுதான்..... ரொம்ப ஸ்லோ.... எதுன்னாலும் வட்டம் போட ஆரம்பிச்சா நிறுத்தவே நிறுத்தாது....
புதுசும் அஞ்சு மாசம் அயராது உழைச்சுட்டு, நம்மைப் பழி வாங்கிருச்சு. ஒரு நாள் தூங்க வச்சுட்டு வீட்டு வேலைகளை முடிச்சுட்டு வந்து எழுப்பினால்.... ஆட்டோ ரிப்பேர் பண்ணிட்டேன். திரும்ப ஆரம்பின்னது..... ரீ ஸ்டார்ட்..... செஞ்சால் திரும்பத்திரும்பக் கீறல் விழுந்த ரெக்கார்ட் போல ' ரீ ஸ்டார்ட் ரீ ஸ்டார்ட்....'
நானோ ஒரு ககைநா. 'நம்மவரிடம்' உதவி கேட்டேன். அவரும் என்னென்னமோ செஞ்சு பார்த்துட்டு, நாம் லேப்டாப் வாங்கின இடத்து ஹெல்ப் லைனில் கேட்க, அவுங்க சொன்னதையெல்லாம் செஞ்சுட்டுப் பார்த்தால் ரீ ஸ்டார்ட் ஆகிருச்சு. ஆனால்.........
என் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டாப்ல...... இதுலே வச்சுருந்த படங்கள். டாக்குமென்ட் ஃபைல்கள்னு ஒன்னுவிடாமல் கபளீகரம் செஞ்சுருந்தது.
போச்சு.... எல்லாம் போச்சு..... இந்த அஞ்சு மாசத்துப் படங்கள் எல்லாம் காலி. புள்ளையார் சதுர்த்தி, ஸ்ரீகிருஷ்ணாஷ்டமி, நவராத்ரி, தீபாவளி, நம்மூர் கோவில்கள், சத்சங்கத்துப் பூஜைகள் இப்படி எல்லாமே போச்..........
ஏன் எல்லாத்தையும் அப்பப்ப எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவில் போட்டுவைக்கலைன்னு அதுக்கும் சேர்த்து அழுது தொலைச்சேன்.
மனசை திசை திருப்ப.... க்றிஸ்மஸ் அலங்காரத்தையாவது செஞ்சு முடிக்கலாமுன்னு வழக்கமான இடத்தை விட்டுட்டு, ( வீட்டுக்குள்தான் ) ஃபோயரில் ஆரம்பிச்சேன். போனவருஷ அலங்காரச்சாமான்களை எங்கே வச்சோமுன்னு பார்த்தால்... நினைவுக்கே வரலை..... கணினி என் ஞாபகசக்தியையும் தீர்த்துக்கட்டிருச்சு போல... 'எங்கெ வச்சேன் எங்கெ வச்சேன்'னு தலைக்குள் பூரான் ஓடிக்கிட்டே இருந்துச்சு.... கராஜ்ஜில் குடியிருந்தேன்..... நான் தேடப்போகும்போதெல்லாம் 'நம்மவர்' அங்கெல்லாம் பார்த்தாச்சும்மா.... இல்லைன்னு வேற சொல்லிக்கிட்டு இருந்தாரா.... நம்பித் தொலைச்சேன்.
கைக்குக் கிடைத்தவைகளை வச்சு எதாவது செய்யலாமேன்னு கார்ட்டன் பாக்ஸ் ஒன்னு எடுத்து வீடு 'கட்டினேன்' :-)
அப்புறம் எதுக்கும் இன்னொருக்கா நானே தேடிப்பார்க்கிறேன்னு ஒவ்வொரு அட்டைப்பொட்டிகளாப் பார்க்க, தேடிய மூலிகை கைகளில் கிடைச்சது..... அப்ப இதைத்தவிர எல்லா இடங்களிலும் பார்த்துருக்கார்..... நறநற........ இத்தனைக்கும் இது கண் முன்னாலேதான் உக்கார்ந்துருந்தது.....
சான்ட்டா, அவருடைய உதவியாளர்கள் எல்லாம் கிடைச்சதும், க்றிஸ்மஸ் குடிலுக்குப் பதிலா சாண்ட்டா வீடு ஆச்சு! துரை வந்து பார்த்துட்டு ஓக்கே பண்ணார் :-)
துளசிதளத்தில்தான் பதிவுகள் வெளிவரலையே தவிர..... ஃபேஸ்புக்கில் அன்றாடம் எதாவது நாலுவரியும் படங்களுமாகத்தான் இருந்தேன். இருத்தலின் அடையாளம் !
க்றிஸ்மஸ் அலங்காரங்கள் எப்பவும் புது வருஷம் வரை இருக்கும் என்பதால் ஜனவரி ரெண்டாம் தேதி, அலங்காரத்தை அப்படியே பெரிய அட்டைப்பெட்டிகளில் பத்திரமா எடுத்து வச்சுட்டுப் பெட்டிகளின் வெளிப்புறத்தில் XMAS என்று கொட்டை எழுத்துகளில் குறிப்பிட்டு எடுத்து வச்சாச். அடுத்த வருஷம் தேடி அலையக்கூடாது.
அப்பதான் மனசுலே திடீர்னு தோணுச்சு. வருஷா வருஷம் ' ஊரோடு ஒட்டி வாழ் ' னு க்றிஸ்மஸ் அலங்காரம் பண்ணுறோமே.... முக்கியமான நம்ம பண்டிகை ஒன்னு புது வருஷம் முடிஞ்சகையோடு வருதே... அதுக்கு ஒரு வருஷமாவது அலங்காரம் செஞ்சுருக்கோமா? இந்த வருஷம் செஞ்சு பார்க்கலாம். திரையும் விளக்கும் அப்படியே இருக்கட்டும். கீழே புல்தரை ? அதுவும் இருக்கட்டும் !
என்னென்ன காட்சிப்படுத்தலாமுன்னு யோசிச்சப்ப பொங்கப்பானை, களத்து மேடு வைக்கலாமுன்னு நினைச்சேன். நம்ம ரஜ்ஜு வந்து எட்டிப் பார்த்ததும் அவனுக்கும் களத்துமேட்டுலே ஒரு வீடு கட்டுனால் ஆச்சு. இப்பெல்லாம் வீடு கட்டறதுலே எக்ஸ்பர்ட் ஆகிக்கிட்டு வரேனே :-) எடு... இன்னொரு அட்டைப்பொட்டி !
கிராமத்து வீடு என்பதால் ரெண்டு பக்கமும் திண்ணைகள் வேணும். ஒருமாதிரி வீட்டைக் கட்டிட்டுப் பார்த்தால் மாடிப்பகுதி மச்சு சரியா வரலை. அடுத்தநாளே மாடி ரூமை இடிச்சுட்டேன் :-) இப்ப வெறும் மொட்டை மாடி. ரூஃப் கார்டன் போட்டால் ஆச்சு.
கடைசியில் பார்த்தால் வீட்டை ஆக்ரமிச்சது ரஜ்ஜுவின் உறவினர் கூட்டமே ! இருக்கட்டும். இதுவும் நல்லாத்தானே இருக்கு !
இப்பப் பொங்கல்பானை வேணுமே..... நம்ம வீட்டில் பானை டிஸைனில் ஒன்னுமே இல்லை...... ஐடியா கிடைக்குமான்னு யூ ட்யூபை மேய்ஞ்சதில் ஒன்னு ஆப்டது. அதைக் கொஞ்சம் மாத்தி யோசிச்சு டெவலப் செஞ்சுக்கலாம். செஞ்சேன்.....
எப்படி ? இப்படி :-) எல்லாம் உள்ளதைக்கொண்டுதான்....
அடுப்பு வேணுமே..... அதுவும் ஆச்சு. தீயோ ? நோ ஒர்ரீஸ்..... நின்னு நிதானமா எரியும் தீ :-)
புத்தம் புதுசாக் 'கறந்தபால்' கறந்தபடி கிடைச்சது :-) ஆஹா... யதேஷ்டம் !
பொங்கலுக்குக் கரும்பு..... போனவருஷக் கரும்பே தின்னாம அப்படியே இருக்கே..... இன்னொரு கரும்பு வாங்கினால் மூணு கரும்புகளுக்கிடையில் பானை வைக்கலாம். கரும்பையும் தயாரிச்சேன் :-) பெயின்டும் ப்ரஷும் எதுக்கு இருக்காம் ? கரும்புத்தோகைக்குத்தான் கொஞ்சம் யோசிக்கணும்.....
ஆ..... ஆப்டுடுச்சு...... சோளமிருக்க.....
களத்துமேடுன்னா சாமி வேணாமோ ? அய்யனார் (மாடன்) வந்தார். ஆஜானுபாகுவா அமைக்கணும்னு சிக்ஸ் பேக் கூட வச்சேன். ஆனால் கையிருப்பில் இருந்த Air Drying Clay 500 gm pack இல் செலவழிஞ்சது போக மிஞ்சி இருந்த கொஞ்சூண்டு களிமண்ணில் செஞ்சவர் 'நம்ம ஜெமோ எழுதிய மாடன் மோட்சத்தில்' வரும் க்ஷீணிச்சுப்போய மாடனாட்டம் இருந்தார். பாவம் ......... கடாவெட்டுப் பல வருஷங்களா இல்லையே !
சேவல், நாய், வண்டிகட்டி வந்து பார்வையிடும் பண்ணையார், வைக்கோலை மேயும் மாடுகள்னு ஒருமாதிரி களத்து மேடு அமைப்பு சரியா வந்தது. வைக்கோல் ? வீட்டு அறுவடையில் கிடைச்ச பூண்டுத்தாள்கள்.
கடவுள் இருக்காண்டி துளசின்னு...... வேறொரு இடத்தில் இருந்து உண்மையான வைக்கோல் கிடைச்சதுதான் இன்ப அதிர்ச்சி. நம்ம மகள், மாமியார் வீட்டுக்கு விஸிட் போனப்ப, அங்கத்துப் பூனையின் படம் அனுப்பினாள். அதுபாட்டுக்கு வைக்கப்போர் (!) மேலே படுத்துத் தூங்குது! ஆஹா..... இவுங்களுக்கு ஏது வைக்கோல் ? தோட்ட வேலைக்கு வாங்கியிருக்காங்க. அநேகமா ஸ்ட்ராபெர்ரி பாத்திகளுக்கு வாங்கி இருக்கலாம். ரொம்பப்பெரிய தோட்டம் வச்சுருக்காங்க.
'சம்பந்தியம்மாவிடம் கேட்டுக் கைப்பிடி வைக்கோல் வாங்கிவா'ன்னு சேதி அனுப்பினேன். வந்தது ஒரு பை நிறைய ! நமக்கு வேண்டியது ஒரு கால் கைப்பிடி. இவ்ளோ வச்சுக்கிட்டு என்ன செய்ய ? எடுத்துப் பத்திரப்படுத்தி இருக்கேன். எதாவது தேவை வராமலா போகும் ?
பொங்கப்பானை சரியா அமையலையேன்ற சோகத்தோடு, ஃபிஜி இண்டியன் கடைக்குக் கொஞ்சம் சாமான்கள் வாங்கிக்கப் போனால்.... அங்கே சாமிச் சமாச்சாரங்கள் இருக்கும் ஷெல்ஃபில் முழிச்சுக்கிட்டு உக்கார்ந்துருக்கு ஒரே ஒரு சொம்பு. பானையாகவும் நினைச்சுக்கும்படியான அமைப்பு ! நம்ம ஃபேவரிட்டான ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ! 'கடவுள் இருக்கான்ப்பா ! பானை இருக்கும் இடத்தைக் காமிச்சுக்கொடுத்துட்டான் துல்ஸி..... '
விலை கொஞ்சம் அதிகமோன்ற நினைப்போட, கடைக்காரரிடம் ஒன்னும் சொல்லாமக் காமிச்சால்.... சட்னு மூணு டாலர் குறைச்சுக்கச் சொன்னார் !
நியாயமான ஆசைகள் நிறைவேறும் என்று சொல்லும் கனவுதான் எப்பவும் வருது.... அது உண்மைதான் போல.... அப்ப நிறைவேறாத ஆசைகள், நியாயமில்லாதவைகளா இருக்குமோ ? இருக்கும் இருக்கும். 'அவன்' கணக்கு யாருக்குத் தெரியுது, சொல்லுங்க?
என்னாண்டை ஒரு பழக்கம் இருக்கு. நல்லதா கெட்டதான்னு தெரியலை.... ஏதாவது பொருள் வாங்கிட்டால்..... சரின்னு இருந்துடமாட்டேன். மற்ற கடைகளில் அது இருக்கா ? என்ன விலை? அதிகமா விலை கொடுத்துட்டோமோ? இப்படி ட்ரிப்பிள் செக் பண்ணிக்குவேன். உண்மையில் பொருள் வாங்கறதுக்கு முன்னேதானே தீர விசாரிக்கணும் ? இப்படி உள்ட்டாவா இருந்தால் ? இடும்பின்னா இப்படித்தான். எல்லோருக்கும் ஒரு வழின்னா இந்த இடும்பிக்குத் தனிவழி இல்லையோ ?
(இந்த பழக்கம் இப்போ மகளுக்கும் தொற்றி இருக்கு! )
இன்னும் சில இந்தியன் கடைகளில் பார்த்துட்டு, இந்தவகைப் பானை வேறெங்குமே இல்லைன்னதும்தான் மனசுக்கு நிம்மதியாச்சு , கேட்டோ !
சொந்த சூரியனுக்குக் கொஞ்சம் மெனெக்கெடவேண்டியதாப் போச்சு :-) கொஞ்சம் ஜ்வலிப்பு வேணாமோ ? கல்லுவச்ச சூரியனைக் கண்டதுண்டோ ? ஞான் கண்டு :-)
தெருவிளக்கு, மாவிலை தோரணம், கரும்புச் சோலைன்னு இன்னும் கொஞ்சம் அலங்காரங்கள் மேலோட்டமாச் செஞ்சதும் நம்ம பொங்கல் டிஸ்ப்ளே ரெடி !
எப்படி வந்துருக்குன்னு பார்த்துட்டுச் சொல்லுங்க:-)
ஒவ்வொரு ஸ்டேஜிலும் தொரை வந்து பார்த்துட்டு அப்ரூவ் செஞ்சார் :-)
இந்த மாசக் கடைசிவரை அலங்காரம் அப்படியே இருக்கட்டும் !
இதுக்கிடையில் மாட்டுப்பொங்கலன்னிக்கு நம்மூர் புள்ளையார் கோவில் சத்சங்கத்தில் பொங்கல் விழா! ஏற்கெனவே அலங்கரிச்சு வச்சுருந்த அமைப்பில், பெரிய மனுஷியா, அடுப்பைப் பத்தவச்சு 'உண்மையான பாலை' ஊத்திப் பொங்க வச்சது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் :-)
நமக்குத்தான் எந்த விழான்னாலும் பலமுறை கொண்டாடித்தானே பழக்கம். பொங்கலும் ஜனவரி 30க்குத்தான் கடைசி விழா ! CITA ( Christchurch Indian Tamils Association ) கொண்டாட்டம்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளுடன், எங்கள் அன்பும் ஆசிகளும் !
நல்லா இருங்க !