Friday, January 15, 2016

பொங்கல் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது!

லீவு லெட்டர்.  பொங்கல்  விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது!

கொஞ்சம்  வேலை நெருக்கடியாப் போயிருச்சு. அதனால்  நம்ம லக்ஸுக்கு மட்டும் புது உடை தைச்சேன்.  ஒருவழியா நேத்து இரவு  உடை அலங்காரம் முடிஞ்சது.  இன்றைக்குப் பொங்கல் பண்டிகைக்கு வழக்கம்போல்  ஊர் உலகத்துக்கு முந்திக்கிட்டு பொங்கல்கள் பொங்கியாச்.




சின்னதா ஒரு சேஞ்ச். பாயஸத்துக்குப் பதில்  பாஸுந்தி.

நம்மோடு  திருநாளைக் கொண்டாட நண்பர் வந்துருந்தார் . நம்ம பெருமாளுக்கும் தாயாருக்கும் ஸ்ரீஸூக்தம் சொல்லி முடிச்சு தீபாராதனை ஆச்சு.  அப்புறம் சாப்பாடு. சக்கரைப்பொங்கல், வெண் பொங்கல்,  மெதுவடை, சட்னி, சாம்பார், பாஸுந்தி, மாம்பழம், வெள்ளரிக்காய், ஆப்ரிகாட், ப்ளம்ஸ் வகைகளுடன்  உணவு!



விசேஷம் என்னன்னா, சாம்பாரில் போட்ட காய்கறிகள்     கத்தரி, பீன்ஸ், தக்காளி, வெங்காயம் எல்லாம் நம்ம வீட்டுத் தோட்டத்தில் இருந்து.   ஸாலட்டுக்கான வெள்ளரிக்காயும், சட்னியில் சேர்த்த கொத்தமல்லி, பச்சை மிளகாய்கள் எல்லாம் கூட நம்ம தோட்டத்து விளைச்சல்கள்.  கூடுதல் ருசின்னு நாங்களே சொல்லிச் சொல்லி மகிழ்ந்து போனோம்:-)




சூரியனும் போனால் போகட்டுமுன்னு  நாலுமணிக்கு வந்து எட்டிப் பார்த்தான்.  



 எல்லோரும் மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடுங்க.
நமக்கு ஒரு பயணம் வாய்ச்சுருக்கு.  பெருமாள் கூப்ட்ருக்கார்.  சிங்காரச்சென்னை எப்படி இருக்குன்னு  ஒரு பார்வை பார்த்துட்டுத் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளுக்குப் போறோம்.

அர்ரியர்ஸ் வச்சருக்கும் மாணவக் கண்மணிகள்  விடுமுறை காலத்தில் அதையெல்லாம் முடிச்சுருவாங்கன்னு  நினைக்கிறேன் :-)

அடுத்த மாதம் வரை  மகிழ்ச்சியாக  விடுமுறையைக்  கொண்டாடுங்கள்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாளுக்கான வாழ்த்து(க்)கள்.


Wednesday, January 13, 2016

கற்றதும் பெற்றதும், காலியிடமிருந்து!

சொல்லிக்கிற மாதிரி கோடை இல்லை இந்த வருசம். முதல் பாதி முடியப்போகுது இன்னும் ரெண்டு நாளில். அடுத்த பாதியாவது  உண்மையான கோடையாக இருக்க வேணும். 22 டிகிரியும் கண்ணால் பார்க்கும்படியான சூரியனும் கிடைச்சால்கூடப்  போதும்.

இன்னைக்குக் கூடப் பாருங்க காலையில் நல்ல குளிர். கூடவே  சில்லுன்னு  ஒரு காற்று.  வெறும் பத்து டிகிரி.  பனிரெண்டரைக்கு எட்டிப் பார்க்கிறான் சூரியன்.  ஒன்னும் உறைக்கவே இல்லை. கொஞ்சம் நம்ம தோட்டத்து இன்றைய மலர்களை உங்க கண்ணில் காமிக்கலாமுன்னா எங்கே...........ப்ச்.  குளிர்காற்றுலே போய் நின்னா  தலைவலி வந்துருதே :-(



அதுக்காக விட முடியாதுன்னு  இந்த சீஸனுக்குப் பூத்து என்னை   மகிழ்வித்த மலர்கள் உங்களை மகிழ்விக்கப்போகுது இப்போ :-)





தாமரையும், ரோஜாக்களுமா ஒரு பக்கம் இருந்தாலும்,  நடைப்பயிற்சிக்குப் போனப்ப, தெருவோரத்தில் இருந்து பொறுக்கி வந்த விதைகளை நட்டு வச்ச அதுலே  பூத்த அந்திமந்தாரை மலர்ந்ததும் கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டது  உண்மை. அதிலும் இது பிங்க். ஏற்கெனவே நம்மூட்டில் இருக்கும் மஞ்சள் பூ பூக்கும் அந்திமந்தாரைச் செடிகளுக்கான விதைகளும்,  ஒரு முறை  நண்பர் மனைவி குழந்தை  பெத்தபோது, (அது இருக்கும் ஒரு  பதினெட்டு வருசத்துக்கு முந்தி) அவுங்களையும் பேபியையும் பார்க்க  மகளிர் மருத்துவமனைக்குப்போன சமயம்,  கீழே விழுந்துகிடந்த விதைகளைப் பொறுக்கி வந்து நட்டதுதான்.


போன வருசம் வாங்கி வச்ச  Arum Lily  (Cala lily) செடிகளையே காணோம். நம்மவர்தான்  அங்கே அது  இருந்த இடத்தில் ஒன்னுமே இல்லைன்னு  பீன்ஸ் விதைகளைப் போட்டு வச்சு  அது முளைச்சுக் காய்க்கத் தொடங்கி இருக்கு.  லில்லிக்கு சமாதி கட்டிட்டார்னு  புலம்பிக்கிட்டே இருந்தேன். முந்தாநாள் பார்த்தால்...  பீன்ஸ் கூட்டத்துக்குள்ளில் இருந்து எட்டிப் பார்க்குதொரு லில்லி!

இந்த லில்லி வகைகளில்  வெள்ளை நிறப்பூக்கள் உள்ள செடி  முந்தி வச்சுருந்தேன். அதிலிருந்து இப்படி ஒன்னு வந்துச்சு.  விதைகளோ என்னவோன்னு  பொறுத்துப் பார்க்கலாமுன்னு  நினைச்சுக்கிட்டு இருந்தேன்.  ஆனால் ' யாரோ'  அதை  என்னவோன்னு நம்மைக் கேட்காமலேயே பிடுங்கி வீசிட்டாங்க :-(


அடுக்களை ஜன்னலில் இருக்கும் காக்டஸ், சின்னப்புள்ளை 'அம்மா என்னைத் தூக்கிக்கோ'ன்னு கை  நீட்டுதே!




சமையலுக்கு எடுத்த சக்கரைவள்ளிக் கிழங்கில் ஒரு சின்னத்துண்டு வெட்டி அதே அடுக்களை ஜன்னலில் வச்சிருந்தேன். அடியிலொரு  பாட்டிலில் தண்ணி ரொப்பி. அதுவும் முளைச்சு வந்துச்சுன்னு தோட்டத்தில் நட்டு வச்சுருக்கேன் இப்போ.



தோட்டத்தில் பூசணி  வளர்ந்து பூ விட்டுருக்கு. இன்னும் ஒன்னரை மாசத்துக்குள்ளே காய்ச்சால் உண்டு.

தக்காளிவகையில் ஒன்னு இந்த  ரோவல்லா டொமாட்டோ.  செர்ரி டொமாட்டொ போல சின்னது. ஆனால்  இத்தாலியன் வகை(யாம்)


வெண்டையில் மொட்டு வந்துருக்கு.  பரிசோதனைக்காக நட்டுவச்ச மஞ்சள்  லேசா தலையைக் காமிக்குது.  இந்தப் பொங்கலுக்கு  மஞ்சக்கொத்து இல்லைதான். ஆனால் மஞ்சள் செடிக்கு உயிர் இருக்கே!

 வெள்ளரிக்காய்  ஏகப்பட்டது.  தினமும் ஃப்ரெஷ் ஸாலட்!
கொய்யாச்செடியில்  பிஞ்சுகள் ஏராளம்!







இப்படி சந்தோஷமாக இருக்கும் நேரம் காலியைப் பற்றியும் சொல்ல வேண்டி இருக்கே!

செடிகளை நட்ட ரெண்டாம் மாசம் குட்டியாப் பூ விட்டதைக்  கொண்டாடி பதிவெல்லாம் போட்டு கௌரவப்படுத்தினால்.....


அப்பப்ப  படம் எடுக்க வாகாய்  பூக்கள் வெளியே காட்சி கொடுக்கட்டுமேன்னு  வச்சது தப்பாப் போச்சு.


திறந்திடு சிஸேம்னு வச்சதால், ஒரு செடிக்கு ஒரு பூ என்று இருக்கவேண்டியது   கிளைகள் விட்டு  பக்கவாட்டில் எல்லாம் பூக்களா மாறி,  அதுவும் கருத்துப்போய் எல்லாம் கோவிந்தா, கோவிந்தா!!!!


பொத்தி வளர்க்கணுமாம்!  நேரடி வெயில் கூடவே கூடாதாம்.  வலையில்  கிடைச்ச  விவரங்கள்.  உபதேசம் எங்கிருந்தெல்லாம் கிடைக்குது பாருங்க.

PINகுறிப்பு:   வாசக  நண்பர்கள் அனைவருக்கும்  மனம் நிறைந்த இனிய  போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகளை சொல்வதில்  மகிழ்ச்சி அடைகின்றது உங்கள் துளசிதளம்!

ஜல்லிக்கட்டு உண்டா இல்லையா?


Monday, January 11, 2016

எழுத்தாளரை இப்படியும் கௌரவிக்கலாம்!

அதிலும்  இவுங்க ஒரு குழந்தை எழுத்தாளர். குழந்தைகளுக்கு  எழுதணுமுன்னாத் தனித் திறமை வேணும் இல்லையா?  இதுவரை எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கை 160.   இதுலே சுமார் 100 புத்தகங்கள் பிக்ச்சர் புக் வகைகள்.  இதுபோக உள்ளூர் தினசரிகளில் எழுதுனவை ஏராளம்.  முதல் 'கதை' வெளியிட்டபோது அவுங்க வயசு வெறும்  ஏழு!

இவுங்க பெயர் மார்கரெட் மாஹி.  பிறந்து வளர்ந்தது நியூஸியின் வடக்குத் தீவுன்னாலும்  தன்னுடைய இருபத்தியொன்பது வயசுமுதல்  தெற்குத்தீவுக்கு  வந்துட்டாங்க. அதுவும் எங்க ஊரான க்றைஸ்ட்சர்ச்சில்!   47 வருசம் நம்மூரில்!

ஏழு வயசுலே ஆரம்பிச்ச எழுத்து,   நின்னுபோனது எழுபத்தி ஆறாவது வயசிலே :-(


பொதுவா இங்கே நூலகங்களில் குழந்தைகளுக்கான பிரிவு  கொஞ்சம் பெருசாத்தான் இருக்கும்.  விளையாட்டு, கதை சொல்லல் இப்படி அப்பப்ப நடக்கும். குழந்தைக்கான கதைகளை எழுதும் எழுத்தாளர்கள் நேரில் வந்து கதை சொல்வாங்க. நானும் மகள் சின்னவளா இருந்தபோது இப்படிப்போய் கதைகளைக் கேட்டுருக்கேன்.(அப்பா அம்மா கூட்டிட்டுப் போகணுமுல்லே!)
எழுத்தாளர்கள் அவுங்க எழுதுன புத்தகத்தில் சில கதைகளை வாசிச்சுக்காட்டி விளக்குவாங்க.

நம்ம மார்கரெட் மாஹியிடம் ஒரு விசேஷ குணம் என்னன்னா....  குழந்தைகளுக்குப் பிடிச்ச முறையில் தானும் ஒரு குழந்தையாகவே மாறி அவர்களுடைய உலகத்துக்குள் போயிருவாங்க.  இதுக்குன்னே  ஒரு வானவில் விக் ஒன்னு வச்சுருக்காங்க. கூடவே ஒரு ஸ்கார்ஃப் நிறைய குத்திவச்ச பேட்ஜ்கள். அதைப் போட்டுக்கிட்டுக் கதை சொல்ல / படிக்க,  வந்துட்டால் குழந்தைகளுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. பசங்களுக்கு பேட்ஜ் பார்த்தாலே  சந்தோஷம்  வந்துரும்.  இதெல்லாம் அவுங்களுக்குக் கிடைக்கும் ஊக்கப்பரிசுகளாச்சே!

கீழே படம் மகளோட  பேட்ஜ் கலெக்‌ஷன்ஸ்.
நான் ஒரு குழந்தைகளுக்கான நூலகத்தில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தப்ப,  ஒருமுறை  மார்கரெட் மாஹியைக்கதை சொல்லக் கூப்பிட்டு இருந்தோம். பள்ளி விடுமுறை காலங்களில் குழந்தைகளுக்கு வாசிப்பில் ஆர்வத்தைத் தூண்டும் விதமா இப்படியெல்லாம் செய்வது இங்கே வழக்கம்.

ரொம்ப சிம்பிள் லேடி. தன்னுடைய செல்லத்தோடு வந்து  நூலகத்தையொட்டி இருந்த  சூப்பர்மார்கெட் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்துனாங்க. அதிர்ஷ்டவசமா  பக்கத்துப் பார்க்கிங்கில் நான் வண்டியை நிறுத்திட்டு, இறங்கிக்கிட்டு இருந்தேன்.  எங்க நூலகத்துக்குன்னு பார்க்கிங் ஸ்பேஸ் கிடையாது. எப்பவும் சூப்பர் மார்கெட்  பார்க்கிங்கைப் பயன்படுத்திக்க அனுமதி கொடுத்துருக்காங்க.  அவுங்களை அங்கேயே வரவேற்று, செல்லத்தைத் தடவிக்கொடுத்து, வண்டியிலேயே விட்டுட்டுவர இருந்தவங்களிடம், அவனைக் கூட்டிப்போகலாமுன்னு சொல்லி மூணுபேருமா நூலகத்துக்குள் போனோம்.  அன்றைக்கு என் ட்யூட்டி.  சாவியைப் போட்டுத் திறந்ததும் வெளியே காத்திருந்த குழந்தைகள்  ஓடி வந்தாங்க. எல்லோருடைய அன்பும் நேராச் செல்லத்துக்குதான் போச்சு:-)


தலையில் வானவில் விக்கைப் போட்டுக்கிட்டு சின்ன  நாற்காலியில்  அவுங்க உட்கார்ந்ததும்தான், பிள்ளைகளுக்கு  கதை ஞாபகம் வந்துச்சு.  எல்லோருமா  கீழே கார்பெட்டில் கூட்டமா உட்காந்து  கதைகளைக் கேட்டோம்.  அப்போ எனக்குக் கேமெரா மோஹம் அவ்வளவா இல்லை. பதிவராகாத காலம் அது :-( மேலும் டிஜிட்டல் கேமெரா இல்லை என்பதால் ஃப்ல்ம் ரோல் போட்டு அளவாத்தான் படம் எடுப்பது வழக்கம். எடுத்த நாலைஞ்சு படங்கள் ஆல்பத்தில் இருக்கு. ஒருநாள் உக்கார்ந்து  தேடணும். கிடைச்சால் ஸ்கேன் செஞ்சு போடறேன்.   

நம்மூர்லே நிலநடுக்கம் வந்து நகர மையத்தை அழிச்சுட்டுப்போனபிறகு, இப்போ புது நகரம் நிர்மாணிக்கிறோமில்லையா!  அதுலே குழந்தைகளுக்காக கொஞ்சம் இடம் ஒதுக்கலாமுன்னு  ஃப்யூச்சர்  க்றைஸ்ட்சர்ச் திட்டம் போட்டு,  புது நகர வரைபடங்களை  ஊர்மக்களுக்குக் காமிச்சு அதுக்கான விவாதங்கள் எல்லாம் நடந்து முடிஞ்சது.  இங்கே நம்மைக் கேக்காமல் எதையும் முடிவு செஞ்சுறமாட்டாங்க. இதைப் பற்றி எழுதுனது இங்கே.

விருப்பம் இருந்தால் வாசிக்கலாம்:-)  

மான்செஸ்டர் தெருவுக்கும் மெட்ராஸ் தெருவுக்கும் இடையில் ஒரு முழு ப்ளாக் இடத்தை  இடிஞ்ச கட்டிடங்களோடு வாங்குனாங்க. இதுலே வடக்குப் பக்கம் பார்டர் போட்டாப்லே எங்கூர் ஏவான் நதி ஓடுது.  தெற்குலே போறது  ஆர்மா  (Armagh) தெரு. நல்ல பெரிய இடம்தான். இதுக்கே 19.6 மில்லியன் டாலர்.  அரையும் குறையுமா நிலநடுக்கம் இடிச்சு விட்டுட்டுப்போன கட்டிடங்களை அப்புறப்படுத்தி நிலத்தை சமன் செய்ய இன்னும் ஒரு 1.3 மில்லியன் டாலர் செலவு.

விளையாட்டு  மைதானத்துக்கு வேண்டிய  பொருட்கள், வடிவமைப்பு இன்னபிற சமாச்சாரங்களுக்கான  செலவு விவரங்கள் இன்னும் வெளியிடலை. இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு.  இன்னும் பல விளையாட்டு சாதனங்கள் ஜெர்மனியில் இருந்து வரவேண்டி இருக்காம்.  பத்து மீட்டர் கோபுரங்கள், அதனிடையில்  அசைந்தாடும் பாலங்கள் இப்படி.... அது முடியட்டுமுன்னு பார்த்தால் நம்ம கோடைகாலம் முடிஞ்சு, பள்ளிக்கூடங்கள் திறந்துருவாங்க. அதனால் பிள்ளைகளுக்குப் பொழுது போகக் கட்டிய  விளையாட்டுத் திடலை  முக்கிய வேலைகளை முடிச்சவுடனே திறந்துட்டாங்க.

அதுக்கான நல்ல நாள் டிசம்பர் 22 தேதியா இருந்துச்சு. மைதானத்துக்கு மார்கரெட் மாஹி  ஃபாமிலி ப்ளே க்ரௌண்ட் என்ற பெயர் சூட்டியாச்சு.  குழந்தை எழுத்தாளருக்கு  இதைவிடப் பெரிய கௌரவம் கொடுக்க இயலாது. அவுங்க பெயருக்குக் குழந்தை உலகில் நீங்காத இடம் கொடுத்தாச்சு!

  பகலிலும் இரவிலும் விளையாட ஏற்ற வசதிகள். நல்ல பளீர் விளக்குகள் போட்டு வச்சுருக்காங்க. வருசம் முழுசும் திறந்தேதான் இருக்கும்.  குழந்தைகள் மட்டுமில்லாமல் மொத்தக் குடும்பமும் அனுபவிக்கும் வகையில் இருக்கு.

கடந்த ரெண்டு வாரங்களா, நமக்குக் கொஞ்சம்  வீட்டு வேலைகள்   இருந்ததால்  போய்ப் பார்க்க நேரமில்லை.  கோடை காலத்தை விட்டால்  அப்புறம் வீட்டுவேலைகள் செய்ய உடம்பு வணங்காது. முக்கியமா கோபால் ஆஃபீஸ்   க்றிஸ்மஸ் லீவு விட்டுருக்கும் நாட்களைக் கோட்டை விடமுடியாது கேட்டோ:-)  முந்தநாள் சனிக்கிழமைதான்   பகல் சாப்பாட்டுக்குப் பின் கிளம்பிப் போனோம்.

திடலில் ஏகப்பட்டக் கூட்டம்.   பின்பக்கக் கார் பார்க்கிங் ஃபுல். ஆண்டி எப்ப சாவான்? மடம் எப்போ காலியாகுமுன்னு இருக்கு சனம். ஒரு இடம் நமக்கு ஆப்ட்டது.

திடலில் நுழைஞ்சதுமே காலுக்கு மெத்தை! பிவிசி சிப்ஸ் கலந்து தயாரிச்ச தரையாம்!  கோபால் சொன்னார். கீழே விழுந்தாலும் அடிபடாது.  சில இடங்களில்  மரச்சிப்ஸ் ( bark) போட்டு வச்சுருக்காங்க. கொஞ்சம் புல்தரை, கொஞ்சம் மணல் வெளி, வெட் லேண்டுன்னு தண்ணீர் பீரிட்டு வரும் காங்க்ரீட் தரைகள், நீர்விளையாட்டுன்னு  கொஞ்சம்,  நாலு மீட்டர் அகலமுள்ள சறுக்கு மரம்(!), சின்னப்பிள்ளைகளுக்குத் தனியா ஒரு சின்னச் சறுக்கு மரம்,  வளைக்குள் தவழ்ந்து  வெளியே வரும்  விளையாட்டு,  குன்றுகள் மேலே ஏறி இறங்குதல்,  ஊஞ்சல்கள்,  ஃப்ளை ஃபாக்ஸ்கள்,  தலை சுத்தி விழுந்துருவோமோன்னு நாம் நினைக்கும் சுத்துகள், இதுலே தனித்தனி வகை சுத்தல்ஸ் ஒரு பக்கம் என்றால்  இன்னொரு பக்கத்தில் ஒரு பெரிய  கூட்டமே உக்கார்ந்து சுத்தும் பெரிய அளவு  பம்பரம் ஒன்னு:-)  சிலந்தி வலைன்னு  கயிறுகள்  கட்டி விட்டுருக்காங்க. அதைப்பிடிச்சுப் போகுது  சின்னப்பசங்ககூட்டம். அந்தக் கயிறுகளை  பலமா இணைச்சுப் பிடிப்பிச்சு இருக்காங்க. சட்னு அறுந்து போக வாய்ப்பே இல்லை.

குட்டிப்பசங்களுக்கு ஏத்தாப்போல சின்னச்சின்ன ட்ராம்போலின்கள்.

 அங்கங்கே உக்கார்ந்து ஓய்வெடுக்க, வேடிக்கை பார்க்கன்னு குட்டிச்சுவர்கள்:-)  தாகத்துக்குத் தண்ணீர் குடிக்க ஊற்றுகள்.  
காஃபி, டீ பானங்களுக்கு ஒரு பொட்டிக் கடை.  ஐஸ் க்ரீம் ஸ்டால் ஒன்னு. சின்னாளவு ஸ்நாக்ஸ் தயாரிச்சு விற்கும் கடை ஒன்னு.
சைக்கிள் ஸ்டேண்டு. சின்னதுதான். ஒரு பத்து சைக்கிள்ஸ் வைக்க முடியும். அது போதும்தான்.  99% காரில்தானே வர்றாங்க.


முக்கியமா சொல்ல வேண்டியது  கழிப்பறைகள். படு நீட்!  எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துச் செஞ்சுருக்காங்க.  உண்மையிலேயே பாராட்டத்தான் வேணும்!

மவோரி இனம் முதல்முதலில்  இடம் பெயர்ந்து நியூஸி வந்து சேர்ந்த 'கதை' களை 130 மீட்டர் நீள  வளைந்து போகும் நடைபாதைகளில் பொறிச்சு வச்சுருக்காங்க.  கதைகள் மவோரி மொழியில் இருக்கு!

 திடலின் முகப்பில் வரவேற்பா ஒரு  கோலம்!  இது மவோரி டிஸைன்.



அங்கங்கே புல்வெளிகள்,  திடலின் ஒரு  பக்கம் அமைதியாக  ஓடும் உள்ளூர் நதி, கரையையொட்டி வரிசைகட்டி நிற்கும் மரங்கள்னு  ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரே இடத்தில் ! அவரவர் ரசனைக்கேத்தபடி ரசிக்கலாம் :-)

கோடைகாலம்(!) என்பதால் நீர்விளையாட்டுக்கு ரொம்பவே மவுசு:-)
விளையாடும் பிள்ளைகளின் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே  வேணாம்.  முகம் முழுசும் சிரிப்பு! பெற்றோர்களுக்கோ அதை விட மகிழ்ச்சி! ஆனால்  பிள்ளைகளை அங்கிருந்து கிளப்பக் கொஞ்சம் பாடுபடத்தான் வேணும்!  யாரும் போதுமுன்னு நகர்ற மாதிரி தெரியலை :-)

உங்களுக்கான விளையாட்டு மைதானத்தில் என்னென்னமாதிரி விளையாட்டு சாதனங்கள் வேணுமுன்னு  கேட்டாங்கதான்.  கேள்விக்குப் பதில் சொன்னது ஒரு ஆறாயிரம் பிள்ளைகள். அந்த கருத்துகளைக் கேட்டுத்தான் வடிவமைச்சு இருக்காங்க. நான் சொல்லலே... கேக்காமச் செய்ய மாட்டாங்கன்னு :-)

இதுக்கான செலவு கொஞ்சம் அதிகமுன்னு தோன்றினாலும்  எல்லாம் நல்ல செலவு என்பதால் நமக்கும் மகிழ்ச்சியே!  இதைப்போல  கம்யூனிட்டிக்கும், குழந்தைகளுக்கும்  செய்யும் செலவில்  கணக்குப் பார்க்க மாட்டேன்.  இதெல்லாம் நான் ஏற்கெனவே புலம்பிய தண்டச்செலவில் சேராது கேட்டோ :-)

சின்னதா மூணு  வீடியோ க்ளிப்ஸ் போட்டு வச்சுருக்கேன் ஃபேஸ்புக்கில்.  கூடவே ஒரு ஆல்பமும்.  நேரம் கிடைக்கும்போது பாருங்கள். அங்கே போகமுடியலைன்னா இங்கேயே கூடப் பார்க்கலாம்.




  ஆல்பம் இங்கே:-)


வீடியோக்கள்  இங்கே.

1. 


2

குழந்தை எழுத்தாளருக்கு இப்படி ஒரு நினைவுச்சின்னம் ரொம்பவே பொருத்தம்தான், இல்லையோ?