Monday, January 29, 2007

தமிழ் அப்படியொண்ணும் அழிஞ்சுறாது.
கண்முன்னே பிரமாண்டமான கூடாரம்.. அலங்கார நுழைவு வாயில்.உள்ளெ நுழைய 'கட்டணம்'ன்னுகூடத் தெரியாம அப்புறம் அங்கே ரொம்பப் பக்கத்துலே போய்த் தெரிஞ்சுக்கிட்டோம்.


நுழைஞ்சதும் ....ஹா......... மக்கள் வெள்ளம்.
'தமிழ் அப்படி ஒண்ணும் அழிஞ்சுறாது. இவ்வளவு கூட்டம் தமிழ்ப் புத்தக ஆர்வத்துலே இங்கே வந்துருக்குமுன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை' திருவாய் மலர்ந்தார் கோபால்.
இந்தப் பயணத்துலே இதுவரை என் வாழ்க்கையில் 'முதல்' அனுபவமா சிலநிகழ்ச்சிகளை அனுபவித்தேன். அதுலே ஒண்ணுதான் இந்தப் புத்தகக் கண்காட்சி.


30வது கண்காட்சின்னு போட்டுருந்தாங்க. அப்பச் சரிதான்.... நாங்க தான் தமிழ்நாட்டை விட்டே வருசம் 32 ஆச்சுங்களே. 'எப்படாத் தொலைவா?'ன்னு பார்த்துருந்து ஆரம்பிச்சுட்டாங்களோ?


ரெண்டு பக்கமும் அடுத்தடுத்து ஸ்டால்கள். அகலமான நடைபாதை. ஆனாலும் நீந்திப் போகவேண்டி இருந்துச்சு.வரிசை முடிவில் அடுத்தப் பகுதிக்குப் போகும் வழி. பாம்புபோல ஊர்ந்து ஒவ்வொரு பகுதியாப் பார்த்துக்கிட்டு வந்தோம். இவ்வளவு பதிப்பாளர்கள் இருக்கறாங்களான்னு வாய் பொளந்து நின்னேன்.
இதுவரை எனக்குத் தெரிஞ்ச பதிப்பகம்ன்னு சொன்னா அது 'வானதி'தான். ச்சென்னைக்குப் போகும்போது சமயம் கிடைத்தால் சில புத்தகங்களை அங்கே நேரில் போய் வாங்கி வர்றதுண்டு. அதுக்கப்புறம் 'மணிமேகலை'.தபால்மூலம் ரெண்டு தடவை வாங்கி இருக்கேன்,பூனாவில் இருந்தப்ப. படிச்ச காலத்துலே 'லிஃப்கோ'ன்னு ஒண்ணு.


இப்ப ரெண்டு வருஷமாத்தான் சந்தியா, உயிர்மை, கிழக்குன்னு சிலதைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. ஆனா இங்கே 460பதிப்பாளர்கள்ன்னும், அவுங்க விவரங்கள் அடங்கிய கேட்லாக் 50 ரூபாய்க்கு விற்பனைக்கு இருக்குன்னும் ஒலிபெருக்கியிலே சொல்லிக்கிட்டு இருந்தாங்க. பேசாம அதை வாங்கி வந்துருக்கலாம்.......... ஹூம்.. அப்பத் தோணலை(-:


ஆன்மீகப் புத்தகங்கள் பிரிவுலேதான் கூட்டம் அதிகமோன்னு இருந்துச்சு. வயசு வித்தியாசம் இல்லாம கலந்துகட்டி இருந்தாங்க மக்கள்.


'வித்லோகா' போயிருந்தப்ப மேசையிலே 'கூகுள்'னு ஒரு புத்தகம். நம்ம பாலபாரதி 'மைலாப்பூர் திருவிழா'வுலே ஸ்டால் போடறோமுன்னு சொன்னார். மயிலை திருவிழாவா? அறுபத்து மூவரோ? இதையும் முதல்முறையாப் பார்க்கப்போறேனே,சரி அங்கேயே வாங்கிக்கலாம்னுதான் இருந்தேன். வாங்கணும்னு நினைச்சுக்கிட்டே அதை விட்டுட்டு 'இரா.மு.வின் மூன்றுவிரல்' வாங்கினேன். குமுதத்தில் ஒரு பத்து பாகம் படிக்கக் கிடைச்சது, இனி மீதியைப் படிக்கணும். ஒருநாள் காலையில் 'பய பக்தி'யா நம்ம 'கப்பு & கபாலி' யைப் பார்த்துட்டு பாலா சொன்ன குளத்தங்கரைக்குப் போனேன். ஒரு நீள வரிசையில் காலி ஸ்டால்கள். அக்கம்பக்கத்துலே விசாரிச்சா........... சாயுங்காலம் 6 மணிக்குத்தான் திருவிழா நடக்குமாம்.தேதியைச் சொன்ன பாலா நேரத்தைச் சொல்லலியே....... நறநறஅப்படியும் விடாம மறுநாள் மாலை மைலாப்பூர் குளம். முதல் கடையிலே பருப்புப் பொடி, பாவக்காய் வத்தல்ன்னு இருந்துச்சு. அடுத்து வந்த ஸ்டால்களில் கிழக்குப் பதிப்பகம் மட்டும் இருந்ததாக ஞாபகம். அங்கேயும் 'கூகுள்' கண் முன்னாலே பளிச். ஆனா அதை விட்டுட்டு 'சுப்ரமணிய ராஜு' மட்டும் வாங்கினேன். அதான் 30வது புத்தகக் கண்காட்சிக்குப் போறேனே, அங்கே இன்னும் கொஞ்சம் வாங்கிக்கலாம். டெல்லி போற சமயம் வாசிக்க இது ஒண்ணு போதும். நான் இந்தப் பக்கம் புத்தகம் மேயும்போது, எங்க இவர் அடுத்த பக்கம். கையில் 'யோகா ஃபார் ஹெல்த்' ( ஆமாம். தினமும் செஞ்சு படிக்கலைன்னா இருக்கு..........)


போகிப் பண்டிகை! எதையும் கொளுத்தாமல் சம்பிரதாயமா 'போளி' சாப்பிட்டுக் கொண்டாட்டம். இதோ கிளம்பிட்டேன் புத்தகத் திருவிழாவுக்கு. இந்தப் பதிவின் தலைப்பு சொல்லப்பட்டது அப்பதான்.


இதுவரை கேள்விப்படாத பதிப்பகங்கள். மூணு நாலு இஸ்லாம் மத சம்பந்தப்பட்ட ஸ்டால்களும் இருந்துச்சு. அநேகமா எல்லாத்துலேயும் கூட்டம். சில இடத்துலேபோய் , புத்தகங்களைப் புரட்டி, கொஞ்சமாப் படிச்சுப் பார்த்தேன். துளசின்னு கூடஒரு நாவல். எழுதுனவர் மகரிஷி. மேலோட்டமா பார்த்துக்கிட்டே போறோம்.


கணினியிலே தமிழ் எழுதன்னு சில மென்பொருட்கள் கிடைக்குதுன்னு கோபால் போய் பார்த்துட்டு வந்தார். நமக்குத்தான் கலப்பை இருக்கேன்னு மெத்தனமா இருந்தேன். வாங்கிக்கோ,வாங்கிக்கோன்னு சொல்லிக்கிட்டே இருக்கார். அப்படியெல்லாம் பேச்சைக் கேட்டுருவேனா?


தெரிஞ்ச முகம் எதாவது தென்படுமான்னு ஒரு நப்பாசை வேற. அதுக்குள்ளே இவர் ஒரு சி.டி வாங்கிவந்தார். 500 புத்தகம் அதுக்குள்ளே பதிஞ்சிருக்காம். கதை, கட்டுரை, ஸ்போர்ட்ஸ், ஹெல்த்ன்னு கலந்துகட்டி இருக்காம். வெறும் 100 ரூபாய். CCC டிஜிடல் லைப்ரரி.


இதோ ஒரு இடத்தில் 'இண்டியன் மேப்ஸ்'ன்னு போட்டுருக்கே. வெளிநாடுகளில் இருக்கும் ஸ்ட்ரீட் மேப்ஸ் போல இந்தியாவில் கிடைக்காதான்னு இருந்தப்ப, நம்ம பாலராஜன்கீதா வீட்டில் ஒரு ஸ்ட்ரீட் கைடு பார்த்தோம். இது....இதுதான் நான் தேடிக்கிட்டு இருந்தது. ஹிக்கின்பாதம்ஸ்லே கிடைக்குமுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப இந்த ஸ்டாலில் கேட்டுப் பார்க்கலாமுன்னு கேட்டா......... நம்ம அதிர்ஷ்டம். ஆ....... கிடைச்சுடுத்து:-))) அதையும் கூடவே இன்னொண்ணும்'த வொர்ல்ட் ( பொலிட்டிகல் & கைடு மேப்) வாங்கினோம்.


வேற ஒரு ஸ்டாலில் 'ஃபெவிசால் பர்னிச்சர் டிஸைன்ஸ்' அடுக்களை, ட்ராயிங் ரூம், பெட் ரூம், குழந்தைகள்ரூம், டைனிங் ரூம், ன்னு இது எல்லாத்துக்கும் அலங்கரிக்கிற ஃபர்னிச்சர்களை தனித்தனிப் புத்தகமாப் போட்டுருக்காங்க.ஒவ்வொரு டிஸைனும் அட்டகாசமா இருந்தது. நம்ம தச்சருக்குக் (நியூஸியில் உள்ள ஹாங்காங் சீனர்) காமிச்சு,செஞ்சுதர முடியுமான்னு கேக்கணும். அதுக்காக wall units design வாங்குனேன். தச்சுவேலைன்னதும் இன்னொரு விஷயமும் இங்கே சொல்லிடறேனே. ச்சென்னையில் அண்ணனின் புது வீட்டுச் சமையலறை இன்னும் மற்ற அறைகளின்மரவேலைகள் அமர்க்களமா இருக்கு. அதுலேயும் அடுக்களை....... பிரமாதம். நம்ம பாத்திர பண்டங்களுக்கேத்தபடி என்னமாச் செஞ்சுருக்காங்கன்னு அப்படியே வாய்பிளந்து நின்னுட்டேன்.வெளிநாடுகளில் அடுக்களைக்குன்னு எக்கச்சக்கமா அழுதாலும் இந்த அமைப்பும், வசதியும் வரலை. தட்டுகள், பாத்திரங்கள்னு அடுக்க சரியான அமைப்புகளா இருந்துச்சு.நியூஜெர்ஸியில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த அண்ணன் மகளும், நானும் விட்ட பெருமூச்சுகளுக்கு..............இதோ கிழக்குப் பதிப்பகம். கூட்டம் இருக்குதான். அதுக்காக? நாங்களும் முண்டியடிச்சு உள்ளே போனோம். அள்ள அள்ளப்பணம் அமோகமாப் போகுதாமே! அதுலே பாகம் 2 மட்டும் கோபால் வாங்குனார். பங்கு மார்க்கெட் பித்துப் பிடிச்சிருக்கு.கூகுள் இருக்கான்னு பார்த்தா.......... இல்லை. நம்ம பத்ரியும், பா.ராவும் படு பிஸியா இருக்காங்க. ஒரு அரைமணி நேரம்,இல்லேன்னா 40 நிமிஷம் இருக்க முடியுமுன்னா புத்தகங்களைக் கொண்டு வர ஆள் அனுப்பிறலாமுன்னு பத்ரி சொன்னார். இருந்தாப் போச்சு. பா.ராவுக்கு ஒரு வணக்கம் போட்டாச்சு. போன வருஷம் நம்ம கிருபாஷங்கர் நிச்சயத்தன்னிக்குப் பார்த்ததைக் கவனம் வச்சிருந்தார். 'என்னங்க,டாலர்லே கொழிக்கறீங்க போல இருக்கே?'ன்னு கேட்டு வச்சேன். அவரும்ஒரு புத்தகம்தான் வந்துருக்குன்னு சொல்லிச் சிரிச்சார். எனக்குக் கொஞ்சம் தி.ஜா.ரவும், லா.ச.ராவும் வாங்கிக்கணுமுன்னுஆசை. எங்கே கிடைக்கும்முன்னு தெரியலைன்னதுக்கு வானதியில் பார்க்கச் சொன்னார். அதான் 40 நிமிஷம் இருக்கேன்னுவானதி போனோம். நடந்துநடந்து கால்கள் பின்னத் தொடங்கிருச்சு. அங்கேயே வெளியே இருந்த ஒரு நாற்காலியில் இடம் பிடிச்சேன்.


சாண்டில்யனின் கடல்புறா, மன்னன் மகள், ஜலதீபம், யவனராணி & இன்னபிற நாவல்கள் இன்னமும் பிச்சுக்கிட்டுப் போகறதைக் கவனிச்சேன். ஜனனி,கங்கா, கழுகு, சிந்தா நதி வாங்கினேன். அதுக்குள்ளெ இவர் அங்கேயும் இங்கேயுமாப்போய், ஜே.கே.வின் புத்தகங்கள் ஒரு செட் ( கைக்கடக்கமா ச்சின்னதா இருந்துச்சு. மொத்தம் 9) வாங்கிக்கிட்டார்.மேலாக இருந்ததின் தலைப்பு What is a problem. சரியாப் போச்சு, என்னைத்தான் சொல்றாரோ?

அதுலே இருந்தமற்றவைகளின் தலைப்புகள் இதோ.
On knowing oneself
What is relationship?
The ending of sorrow
The problem of fear
Is there such a thing as security
To live without conflict
Learning about pleasure
What is a problem
On being open to the unknown
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது!


இன்னும் கொஞ்ச நேரம் சுத்திட்டு இருந்தோம். சந்தியா பதிப்பகம். ஜெயந்தி சங்கரின் புத்தகம் இருக்கான்னு கேட்டேன். என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! எல்லாம் வித்துப்போச்சாம். அட!நக்கீரன் ஸ்டாலில் கலை நயத்தோடு அலங்காரத் தூண் எல்லாம் வச்சுருந்தாங்க. திரும்பக் கிழக்குக்கு வந்தோம். நம்ம பாலபாரதி இருந்தார். 'தமிழ்நதி வந்துருக்காங்க. குறும்படம் பார்த்துக்கிட்டு இருக்காங்க'ன்ற சேதி சொன்னார்.


இஸ்லாமிய அன்பர்கள் சிலர், தொழுகை நேரம் வந்துருச்சுன்னு ஒரு காலி இடத்தில் தொழுதுக்கிட்டு இருந்தாங்க. ஓசைப்படாம கொஞ்ச நேரம் உக்கார்ந்திருந்தோம். நேரம் போய்க்கிட்டு இருக்கு. கூகுள் கொண்டு வரப்போனவர் இன்னும் வந்து சேரலை. இன்னொருத்தரை சந்திக்க வரேன்னு சொன்ன நேரம் கடந்துக்கிட்டு இருந்தது. வயசானவங்களைக் காக்க வைக்கிறது நல்லா இருக்காதுன்னு கிளம்பிட்டோம். ரெண்டு இடத்துலே கண் முன்னாலெ இருந்ததை விட்டுட்டு, இப்ப அதுக்குன்னு காத்திருக்க வேண்டியதாப் போச்சு. கண்ணாமூச்சி...ம்....எல்லாம் கூகுளின் நேரம். இனிமே எதாவது வாங்கிக்கணுமுன்னா கண் பார்த்தவுடனே வாங்கிக்கணும். இதுவும் ஒரு படிப்பினைதான்.


வெளியே வந்தப்ப, சுரா அரங்கத்தில் என்னவோ நிகழ்ச்சி. அடுக்கு மொழியில் ஒருத்தர் பேசிக்கிட்டு இருந்தார். யாருன்னு பக்கத்துலே விசாரிச்சேன். அவருக்கும் பேரு தெரியாதாம். ஆனா பேசறவர் லியோனியின் பட்டிமன்றத்துலே பேசறவராம். அதுக்குள்ளே கோபால் காதுப்பக்கம் சொல்றார், 'மேடையில் பாரு, சத்தியராஜ்'. பேச்சாளர் அப்பத்தான் கலைஞருக்கும், பெரியார் சத்திய ராஜுக்கும், மற்ற எல்லோருக்கும் நன்றி சொல்லிப் பேச்சை முடிச்சார். அரங்கம் நிறைஞ்சுஇருந்துச்சு.

கார் நிறுத்தம் வந்தப்ப, அங்கே ஒரு கூட்டம். என்னமோ ஏதோன்னு பதறிப் போய்ப் பார்த்தோம். கிறிஸ்துவமத அன்பர்கள் பிரசங்கம். சாட்சி சொல்றவங்க சொல்லலாமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.


எப்படியோ வாழ்நாளில் குறைஞ்சது ஒரு புத்தக் கண்காட்சியாவது பார்த்தோம் என்ற திருப்தியுடன் கிளம்புனோம். இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமாத் தமிழ்ப் புத்தகங்கள் சேர்ந்துக்கிட்டு இருக்கு நம்ம வீட்டுலே. அதுவே கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கு.
மக்களிடையே படிக்கும் பழக்கம் பரவலா இருக்குன்னாலும், நிறைய நல்ல புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும்போது முதல் பதிப்புக்கும் ரெண்டாம் பதிப்புக்கும் ஏழெட்டு வருஷம் இடைவெளி இருக்கு. வெறும் ஆயிரம் புத்தகம் மட்டுமே ஒவ்வொரு பதிப்புக்கும்ன்னு இருக்கும் நிலையில் இந்த இடைவெளி இன்னும் குறைச்சலா இருக்கணுமா இல்லையா? மக்கள் காசு கொடுத்து வாங்காமயே படிக்கிறாங்களா என்ன? நம்மத்தமிழ்நாட்டு மக்கள் தொகை ஆறு கோடியே இருபத்துநாலு லட்சமுன்னு புத்தகக் கண்காட்சியிலே இருந்த 'Census of India' ஸ்டால் சொல்லுச்சேங்க. ஒண்ணும் புரியலை.


கண்காட்சி இல்லாம வெவ்வேற இடத்துலே ஒரு சில புத்தகங்கள் வாங்கினேன். பாண்டி பஜார் ப்ளாட்ஃபாரக் கடையில்'சுந்தரகாண்டம்'
மயிலை கிரி ட்ரேடிங்லே அமைதி உன் பிறப்புரிமை-சத்குரு, 108 வைஷ்ணவ திருத்தல மகிமை, பெரிய எழுத்து விஷ்ணு சகஸ்ரநாமம், சில திரைப்படங்கள்.
தி.நகர் 'கிராஸ்வேர்ட்ஸ்'லே புத்தகங்களை வேடிக்கைப் பார்த்துட்டு சில பழைய ( அரதப் பழசு!) திரைப்படங்கள்.பேரைக் கேட்டாலே நடுங்கிடுவீங்க.
சுருதிலயாவில் எனக்கொரு வீணை, அப்புறம் 'உங்கள் அபிமான திரைப்படப் பாடல்கள் நொடேஷன்ஸ்1,2,3,'ன்னு மூணு புத்தகம்.


இந்தப் பயணத்தில் எனக்கு சில நண்பர்கள் அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகங்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தாச்சு.
விவரம்:

தொல்காப்பியப் பூங்கா. நம்ம சிஜி கொடுத்தார். என் தமிழைப் பொறுக்க முடியாமல் இலக்கணமா எழுதச் சொல்லிக்கேக்காமல் கேக்கறாரோ? :-)

மணிக்கொடி (1&2) ஜோதிர்லதா கிரிஜா கொடுத்தாங்க.

வாழ்ந்து பார்க்கலாம் வா

பின் சீட்

நியாயங்கள் பொதுவானவை - இவை மூன்றும் நம்ம சிங்கை ஜெயந்தி சங்கர்.


வலை பதிய ஆரம்பிச்சதுலே இருந்து நண்பர்கள் வட்டம் பெருகிப் போச்சு. அருமையான பல எழுத்தாளர்களின் நட்பு கிடைச்சதுக்கு இணையத்துக்குத்தான் நன்றி சொல்லணும்.


தமிழுக்கு என்றுமே அழிவில்லை.Thursday, January 25, 2007

தில்லி ச்சலோ
லேசான பனிமூட்டத்துக்கிடையே தில்லி விமானம் தரையைத் தொட்டது.அப்பாடா..... என்ன ஒரு ஆசுவாசம். பின் ஸீட்டுத் தொணதொணப்புலே இருந்துஎப்படியாவது தப்பிச்சு ஓடிரணும்.......


அமெரிக்கா ரிட்டர்ன் அன்பர், அமெரிக்கக் கனவு காணும் தோழரைக் 'கப்'ன்னுபிடிச்சுவச்சு, கனவுகளை விதைச்சு வெள்ளாமை அள்ளிக்கிட்டு இருந்தார். கண்கள்விரிய அந்த அப்பாவி(!) நண்பரும் கேட்டது கேட்டபடி. வாய் மட்டும் கொஞ்சம் பிளந்தமாதிரி இருந்துச்சு. வழக்கமாச் சரியாக் கேக்காத என் காதுகளுக்கு அன்னிக்குன்னு கெட்ட நேரம்.என் பக்கத்துலே இருந்த கோபாலுக்குக் கழுத்துலே இருந்து ரத்தம் கொட்டறமாதிரி தோணுச்சு.'போதும்டா... கொஞ்சம் நிறுத்தேன்'ன்ற மாதிரி ஒரு ஹீனப் பார்வையை அனுப்புனார். அன்பர் அதையெல்லாம் கவனிக்கற மூடுலே இல்லை. தன்னுடைய கருத்துக்களை ஆணித்தரமாச் சொல்லணுமுன்னு( இல்லாட்டா கனவுக்காரர் தூங்கிருவார்னு பயம் போல இருக்கு) அடிச்சுப் பேசிக்கிட்டே இருந்தார். என் இருக்கை முதுகுக்குப் பின்னால் இருக்கும் அவரோட சாப்பாட்டு ட்ரேயை, ஒருவேளை இந்த மாதிரி அடிச்சே உடைச்சிரலாமுன்னு அவருக்கு அப்படி ஒரு வெறி.


"சிகாகோவுலே ரன்வேயிலே ப்ளேன்கள் 20 நிமிஷம் வரிசையில் காத்துக்கிடக்கும். இந்த ஜெட் ஏர்வேஸ் ப்ளேன்......இதெல்லாம் இங்கேதான் பிரமாதம். அங்கே வந்து பார்க்கணும்....."


இத்தியாதிகள்.................


எனக்கும் காதுலே இருந்து ரத்தம் துளித்துளியாச் சொட்ட ஆரம்பிச்சது........... லேசாத் திரும்பிப் பார்த்தேன். என் பார்வையைச் சந்திச்ச உணர்வு கூட இல்லாமல் 'மகிமை'யில் அளப்பு.


அவருக்கு பயந்து, அடுத்த பஸ்ஸில் கட்டடம் வந்தோம். அய்யகோ........ இதோ நம்முன்னாலே அதே 'கட்டம் போட்டச் சட்டை'

'என்னாலே இதுக்குமேலே ஒரு வினாடிகூட முடியாது. தலை தொங்கிரும். பெட்டியை அப்புறமா எடுக்கலாம். அந்த ஆள் மொதல்லே வெளியே போகணும். பெட்டி கிடைக்கலைன்னாலும் பீடை போச்சு'ன்னு இவர் எதிர்ப்புறமா ஓடறார்:-)


தூணுக்குப் பின்னே இருந்து ஒளிஞ்சு பார்த்தேன். ஹைய்யா.........விடுதலை.


ஹோட்டலுக்கு ஒரு முப்பத்தைஞ்சு நிமிஷக் கார்ப்பயணம். அறை அமர்க்களமா இருந்துச்சு. ஐய்யோ...... இதென்ன ஒரு 'ஸீ த்ரூ விண்டோ' படுக்கைஅறைக்கும் பாத்ரூமுக்கும் இடையிலே! கஷ்டகாலம்டா........... நல்லவேளை ஒரு 'புல் டெளன்' கர்ட்டன் இருக்கு! பிழைச்சோம்.


பஃபே ப்ரேக்ஃபாஸ்ட். கல் இட்டிலி, குட்டி ஊத்தப்பம், சாம்பார், சட்னின்னு தென்னிந்திய உணவுகூட இருக்குன்னு படாப் பெருமையோட வச்சிருந்தாங்க. தோசை வேணுமுன்னா செஞ்சு தருவாங்களாம்.ப்ரைடு ரைஸ், ச்சிக்கன் கறி, பிட்ஸா, நூடுல்ஸ் வகைகள், ப்ரெட் அண்ட் பேஸ்ட்ட்ரீஸ்ன்னு ஏராளம்.ஆனா எதுவுமே வாயில் வைக்க வழங்கலை. ( இங்கே சரவணபவன் இருக்காமே. முதல்லே அதைக்கண்டுபிடிக்கணும்)


எட்டுமணிக்கு இவர் ஆஃபீஸுக்குக் கிளம்புறார். இனி என் ராஜாங்கம். இந்த முறையாவது மொதல்லே லக்ஷ்மிநாராயணன் கோயில் போகலாம்னு புறப்பட்டேன். இதுக்கு முந்தி இந்த ஊருக்கு வந்தது 94-ல். தெரியாத்தனமா ஜூனில். பொன் வறுவலா வறுபட்டுத் திரும்புனோம். அப்போ ஊர்சுத்திப் பார்க்கக் கிளம்புனவுடன்,முதல்லே கோயில்ன்னு முடிவு செஞ்சு, 'பிர்லா மந்திர் போங்க'ன்னு பஞ்சாபி டாக்ஸி ஓட்டுனரிடம் சொன்னதும், சரின்னு தலையை ஆட்டிட்டு அவர் கொண்டுபோய் விட்ட இடம் ஹுமாயூன் டோம்ப்.


பிர்லாவால் கட்டப்பட்ட லக்ஷ்மிநாராயணன் கோவில் இந்த பன்னிரெண்டரை வருஷத்தில் அப்படியேதான் இருந்துச்சு. ஆனா ஏகப்பட்ட கெடுபிடிகள். செல்பேசி, கேமரா எல்லாத்தையும் வாங்கி வச்சுக்கிட்டாங்க. அப்புறம் எலெக்ட்ரானிக் கேட். பரவாயில்லை. எப்போ குண்டு( என்னைச் சொல்லலை) எந்த ரூபத்தில் வருமுன்னு அவுங்க பயம் அவுங்களுக்கு. அதுக்கப்புறம் 'உடல்தடவல்'தான் கொஞ்சம் அசிங்கமா, சொல்லப்போனா ஆபாசமா உணர்ந்தேன்.


கோயிலுக்குள்ளில் மாற்றமே இல்லாததால் படம் எடுக்க முடியாதது ஒரு குறையாத் தெரியலை. அதான் போனமுறை நிறைய எடுத்தாச்சே. வெளியே வந்ததும்தான் கவனிச்சேன், தொட்டடுத்து ஒரு புத்தர் கோயில். ச்சின்னக் கோயில்தான். பக்கத்துக் கோயிலின் ஆரவாரம் ஏதும் பாதிக்காத நிலை. படு அமைதி. உள்ளெ யாரும் இல்லை,புத்தரைத்தவிர. ஏகாந்த சேவை!


அடுத்து கரோல்பாக். அஜ்மல்கான் ரோடின் அழுக்கு சந்துகளில் அலைஞ்சேன். பகல் பன்னிரெண்டு மணிக்குச் சாவகாசமாகக் கடை திறக்கும் சோம்பல், கடைவாசலில் ச்சும்மா ஒரு கால் வாளித் தண்ணியை ஊத்தி நானும் வாசலைக் கழுவினேன்ன்னு பாவ்லா காமிக்கும் கடைப்பையன்கள், கண்ணும் கருத்துமா தங்கக் கம்பியில் கிறிஸ்ட்டல் மணிகளைக் கோர்த்து முடுக்கும் இளைஞன் ( பெயர் காலா), இன்னொரு சந்தில் ஸ்டூல் மேலே அடுக்கி வச்ச அழுக்கு நிற டப்பாக்கள். அதுக்குப் பக்கத்தில் ஒரு செம்புப் பாத்திரத்தில் துப்பட்டாத் துணிகளுக்குச் சாயம் போடும் ஆள், எல்லாம் பார்க்க ஒண்ணுபோலவே இருக்கும் நிறமே தெரியாத டப்பாக்களிலே இருந்து டக்னு ஒரு சிட்டிகை அழுக்குப்பொடி எடுத்துத் தூவறார். மாயாஜாலம்போல அழகான கலர் வருது.


தலை இடிச்சுக்காம குனிஞ்சு ஒரு கடைக்குள்ளெ நுழைஞ்சு பார்த்தால் ஆக்ஸிடைஸ்டு செஞ்ச அசல் தங்க, வைர நகைகள். 'அப்பா வரும்வரை கடையைப் பார்த்துக்குவேன், அதுவும் இந்த மாசம் கடைசி வரைதான். அடுத்தமாசம் 'கிங்ஃபிஷர்'லேவேலைக்குச் சேரப்போறேன்'னு சொன்ன இஞ்சிநீயரிங் முடிச்ச சேட்டுப் பையன், என்னைப் பார்த்ததும் ஒரு பாலாஜி பெண்டண்ட்டைக் காமிச்சார். வைரமா இழைச்சிருந்தது. விலையும் அதிகமில்லை, வெறும் ரெண்டரை லட்சம்தான்:-) தினமும் லகரங்களில் வியாபாரம் நடக்கும் ச்சின்னக் கடைகள் இருக்கும் சந்துக்கு 'டயமண்ட் தெரு'ன்னு பெயர்.


அங்கே இருந்து திரும்பி வர்ற வழியில் விண்ணையும் மண்ணையும் தொடற அளவுலே ஒரு ஹனுமான் சிலை.இன்னும் செஞ்சு முடியலை. 'நான் தில்லி வந்த நாளாப் பார்க்கறேன். இன்னும் கட்டி முடியலை'ன்னு சொன்னகார் ஓட்டுனரைக் கேட்டேன், 'வந்து எத்தனை நாளாச்சு?' இது பத்தாவது வருஷமாம்!


பிரிட்டிஷ்காரர்களின் ஸ்பெஷாலிட்டியான 'ரவுண்ட் அபெளட்'கள் நகரமெல்லாம் சிதறிக்கிடக்கு. தெருக்களில் போக்குவரத்துக்கு லேன்கள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டுக்காமல் வரும் கார்கள், ஆட்டோக்கள். பின் பக்கமோ, இல்லை பக்க வாட்டிலோ அடிபடாத கார் வச்சிருக்கறவங்களுக்கு ஒரு பரிசுகூட கொடுக்கலாம். ட்ராஃபிக் லைட் பச்சையா மாறக்கூடாதுன்ற ஏக்கத்தோடு, கார் ஜன்னலைத் தட்டி பிச்சை கேட்கும் பெண்கள், கைக்குழந்தையோடு நிதானமா குறுக்கே நடமாடுறாங்க.


ஜன்பத் ஏரியாவில் ஒரு சுத்து. ராஜ்பாத் வந்தேன். இண்டியா கேட், மசமசன்னு பனிப்புகையில். இப்பெல்லாம் அங்கே காரை நிறுத்தவே கூடாதாம். அப்படி ஒரு கெடுபிடி. குடியரசு தின விழாவுக்குத் தயாராகும் அவசரம். பச்சைக் கலர்ஸ்டீல் ஃப்ரேம்கள் வச்சு கேலரி இருக்கைகள் அடுக்கடுக்காக் காத்திருக்கு. டிக்கெட் விற்பனையும் தொடங்கிருச்சு.


நார்த் விங், சவுத் விங், குடியரசுத் தலைவர் நம்ம கலாம் மாளிகை, பார்லிமெண்ட் கட்டிடம்னு சுத்திவந்தப்ப, இதுதான் சோனியா காந்தியின்'வீடு'ன்னு சொன்னார் ட்ரைவர். பிரதமர் பங்களாவைக் கடந்து போனேன். படு சுத்தமாப் பளிச்சுன்னு இருக்கும் தெருக்கள். இன்னொரு சாலையில் ரெண்டு பக்கமும் அடர்த்தியான நாவல் மரங்கள். உள்ளூர் மரங்களை நட்டு, நகரத்தைப் பசுமையா வச்சுக்குங்கன்னு சொல்லும் மாநகராட்சி விளம்பரங்கள் ஒரு பத்துப் பதினைஞ்சு மரங்களோட பட்டியலைப் பேனரில் பதிச்சு வச்சுருக்கு. அதுலே இந்த மரமும் இருக்கு.


ஒருநாள் ராஜ் பாத்தில் குதிரைவீரர்களின் அணிவகுப்பு. போனாப் போகட்டுமுன்னு அஞ்சு நிமிஷம் நின்னு பார்க்க அனுமதி கிடைச்சது. அடுத்தபக்கம் சிகப்பு உடை அணிஞ்ச ஒரு குழுவினர் பேண்ட் வாத்தியங்களோடு. மூணுமாசமா தினமும் வெவ்வேற குழுக்களின் அணிவகுப்பு ஒத்திகையாம். நாடு முழுக்க நேரடி ஒளிப்பதிவாகும் விழாவுக்கு கவனம் எடுத்துச் செய்யறதுதானே முறையும்கூட. இல்லையா?


ஆச்சு, நாளைக்கு இன்னேரம் விழா தொடங்கி நடந்துக்கிட்டு இருக்கும். 56 ( சரியா?)வது குடியரசு தினம் அமோகமாநடக்கட்டும். இங்கே தொலைக்காட்சியில் ஒரு பத்து வினாடியாவது( அதானே, இது என்ன இங்கிலாந்துலேயா நடக்குது? நாள் கணக்காத் திரும்பத் திரும்பக் காமிக்க) காட்டுவாங்கன்ற நம்பிக்கை இருக்கு. பார்க்கலாம்.


அனைத்து நண்பர்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்து(க்)கள்.


இன்னொரு சமயம் ஆறுதலா, தில்லியைப் பத்திக் கொஞ்சம் உங்ககிட்டே சொல்லிக்கணும். நிறைய விஷயம் இருக்கு.


Monday, January 22, 2007

அம்மா வந்தாள்


முந்தாநாளு கொஞ்சம் அலட்சியமா ச்சின்னப் புதருக்குள்ளே உக்காந்து வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். மேலேயும் கம்பி வலை போட்ட தோட்டம். நினைச்சாலும் எகிறிப்போக முடியாது. ச்சும்மாத் தோட்டத்துக்குப் போகவும் இங்கே ஒவ்வொருத்தருக்கும் ஒரு குறிப்பிட்ட நேரமாம். மிஸ் லுலு மட்டும் ( என்னோட பக்கத்து ரூம்) நான் வெளியேபோனதைப் பார்த்துட்டுக் கொஞ்சம் சவுண்டு விட்டுக்கிட்டு இருந்துச்சு.


திடீர்னு பரிச்சயமான குரல்கள். ஜேன் மட்டும் 'என்னை'க் கூப்புட்டுக்கிட்டே வந்தாங்க. 'இதோ இந்தப் புதர்தான் இவனோட ஃபேவரிட் ப்ளேஸ்'
குனிஞ்சு பார்த்துக்கிட்டு இருந்தது.... அட...அம்மா!!!!! கூடவே அப்பாவும் இருக்கார்.ஹா....... வந்தாச்சா? இத்தனை நாள் சட்டை பண்ணாம விட்டுட்டுப் போயிட்டு இப்ப வந்துகுரலில் தேனைத் தடவிக்கிட்டுக் கூப்பிடும் அம்மா........".ஜிகே... ஜிகே.... வாடா ச்செல்லம்."


மெதுவா வெளியே வந்த என்னை, அப்பாதான் சடார்னு குனிஞ்சு வாரி எடுத்துக்கிட்டார்.என்னதான் இருந்தாலும் நான் அப்பாச் செல்லம், இல்லையா?

நல்லா வெயிட் போட்டுருக்கான்னு சொன்னார். அங்கே மட்டும் என்ன வாழுதாம்? தொப்பை கொஞ்சம் பெருசாத்தான் இருக்கு.


கணக்கை செட்டில் செஞ்சுட்டு என்னை வீட்டுக்குக் கூட்டிப் போனாங்க. கார்லே ஏறும்வரை எல்லாரும் எனக்கு பைபை... டாட்டா எல்லாம் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. வர்றவழி பூராவும் வழக்கத்துக்கு மாறா அப்பப்ப பேசிக்கிட்டே வந்தேன். எல்லாம் மிஸ் லுலுகிட்டே கத்துக்கிட்டதுதான். பக்கத்து ரூமுக்கு வந்து ஒரு வாரம்தான் ஆச்சுன்னாலும், அவ பயங்கர வாயாடி. 'எனக்குப் பேச இப்ப மூடு இல்லை'ன்னு சொல்லிக்கிட்டேதான் இருந்தேன். இப்பப் பார்த்தா என்னை அறியாம அவ பழக்கம் எனக்கும் ஒட்டிக்கிச்சு. ஹூம்...ஆளு நல்லா 'நிகுநிகு'ன்னுத்தான்இருக்கா. அம்மாக்கூட, அவகிட்டே ரெண்டு வார்த்தை பேசிட்டுத்தான் வந்தாங்க.


வீட்டுக்கு வந்து, எல்லாம் எப்படி இருக்குன்னு ஒரு சுத்து வந்தேன். அட இது என்ன என் தட்டு வெளியே இருக்கு.அதுலே சாப்பாடு கொஞ்சம்போல ஒட்டிக்கிட்டு இருக்கு. நானோ இப்பத்தான் வீட்டுக்குள்ளே வரேன்,அப்ப யாரு வந்துபோயிருப்பா? எனக்கு இருக்கற 17 மில்லியன் மோப்ப நரம்பாலே,யார் வந்தாங்கன்னு 'டக்'னு புரிஞ்சுபோச்சு. இந்த Boonyப் பையன் வந்துருக்கான். அம்மாவை மொறைச்சேன்.


"போனாப்போகட்டும்டா..... நான் வந்து இறங்குனவுடன் அடுக்களைப் பக்கமா வந்து நின்னு ஒரே அழுகை இந்த பூனி.கதறலைத் தாங்கமுடியாம உன் சாப்பாட்டைக் கொஞ்சம் கொடுத்தேன்"


"ஆமாமாம்.... வீட்டு ஆளை விட்டுட்டு, ரோட்டுலே போறதுக்கு சேவை பண்ணறதுதான் இப்ப ரொம்ப முக்கியம். மனுசப்பசங்க என்னவோ பழமொழி வேற சொல்லிக்குவாங்க, ஊரார் புள்ளை, தன்புள்ளைன்னு.."


எதோ ஒரு வாரம் பத்துநாளுன்னு நினைச்சா, இப்படி ஒரேடியா 6 வாரம் காணாமப்போன இந்த அம்மாவை என்ன செய்யலாம்? ஆனா..பார்த்தாப் பாவமாவும் இருக்கு. லொக்கு லொக்குன்னு ஓயாம இருமல் வேற. தோட்டத்துலே செடிகள் கொஞ்சம் காஞ்சு நிக்குதுன்னு புலம்பல்வேற. அதான் பளிச்சுன்னு ஒரு தாமரை பூத்துருக்குல்லே, இன்னும் என்ன வேணுமாம்?


இனிப்பாத்தான் பேசறா, ஆனா நம்ப முடியாது. எதுக்கும் கூடவே ஒட்டிக்கிட்டு இருக்கறதுதான் நல்லது. பெட்டிகளைத் திறந்து கடை பரப்பிக்கிட்டு இருக்காங்க ரெண்டு பேரும். இந்தவாட்டிக் கொஞ்சம் புத்தகங்கள் கூடுதலா இருக்கே.என்னவோ திருவிழாவாம்.... அங்கே புடிச்சுக்கிட்டு வந்ததாம். இன்னும் என்னென்ன இருக்குன்னு கவனிச்சுப் பார்க்கணும்.


இப்பப் பார்த்து, இந்த 'பூனி', கொல்லைப்புறமா வீட்டுக்குள்ளெ வரப்பாக்குது. இருங்க, அதைக் கொஞ்சம் ஓட ஓட விரட்டிட்டு வரேன். சுதந்திரமா கையைக் காலை நீட்டி இப்படி ஓடியாடியே நாப்பது நாளுக்கு மேலே ஆயிருச்சு.
பயந்தாங்குளி....ஃபென்ஸ் மேலே ஏறிட்டான். எனக்கு மட்டும் தெரியாதா? டாய்...............