Monday, March 30, 2015

ஓ மரியா ஓ மரியா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 34)

செங்கண்ணூரில் இருந்து புலிக்குன்னு போகிறோம்.   என்ன விசேஷமாம்? புலிகள் வசிக்கும் குன்றா? ஆமாமாம்..... புலிகளை வச்சுக் காப்பாத்திட்டாலும்....    அங்கேதான் இன்றைக்கு ராத்தங்கல். முதலில் நம்ம திட்டத்தின்படி  ஆலப்புழாவில் படகு வீட்டில் ஒருநாள் என்று நினைத்திருந்ததை, மாத்திக்கும்படி ஆச்சு. ஏற்கெனவே எங்கேயுமே ஹொட்டேல் ஒன்னும் நியூஸியில் இருந்து புக் பண்ணிக்காமத்தான் இந்தப்பயணம் தொடங்கியது.

ஒவ்வொரு இடத்திலும் இரவு தங்கும்போது அடுத்த நாளுக்கான இடத்தை வலையில் தேடி செல்லில் கூப்பிட்டு புக் பண்ணிக்கிட்டே போறோம். அதன்படி பார்த்தால் படகு வீட்டுக்குப்போனால் அங்கேயே ஒருநாள் முழுக்கத் தண்ணீரில் இருக்கணும்தான். ஹொட்டேல் அறைபோல  நினைச்சபோது அக்கம்பக்கம் போய் கோவில்கள் பார்த்தெல்லாம் திரும்ப முடியாது.   'ரிலாக்ஸா உக்கார இப்போ நேரமில்லை.  பின்னே ஒருக்கில் ஆகட்டே'
ன்னு  ஹொட்டேல்களைத் தேடுனப்ப  கண்ணில் பட்டது மரியா!

வலையில் படங்களைக் காமிச்சார் கோபால். காதலில் விழுந்தேன்:-)

செங்கண்ணூரில் இருந்து வெறும் 32 கிமீ தூரம்தான்.  பகவத் கார்டனில்  இருந்து வண்டியைக் கிளப்பி மெயின் ரோடு வர்றோம். எதிரில்  கட்சி ஊர்வலம் ஒன்னு வருது.  ஆர் டி ஓ. ஆஃபீஸ் பிக்கெட்டிங், சி பி ஐ நடத்துதாம்.  நேதாவு சதாசிவன் எம் எல் ஏ  ஆரம்பிச்சு வைக்கிறார். அதானே... வந்து முழுசா ஒருநாளாச்சு. இதுவரை  கம்யூனிஸ்ட் பார்ட்டி  ஊர்வலம் கண்ணில் படலையே! கேரளாவில் முந்தியெல்லாம்  கொடிபிடிச்சுக்கிட்டுக் கட்சி ஊர்வலம் போகும்போது  ஒத்தையாளா வரிசையில் கடந்து போவாங்க. அனுமன் வால் போல் நீளமாப் போய்க்கிட்டு இருக்கும். இப்ப மக்கள் தொகை கூடிப்போச்சு. மேலும் கொஞ்சம் பெரிய ஊராவும் இருக்கே.

காலையில் நாம் திருவல்லா வரை போனோம் பாருங்க  அதே ரோடுதான். ப்றாவடியைத் தாண்டும்போதுதான்  இது மனஸிலாச்சு. அங்கேயும் ஒரு  கட்சி ஊர்வலம் ஆரம்பிக்க மக்கள் கூடிக்கிட்டு இருக்காங்க. இது எதுக்குன்னு தெரியலை. சில காவிக்கொடிகளும் செங்கொடிகளுமா இருக்கு.


திருவல்லா ஜங்ஷன்  கடக்கும் இடத்தில் கட்சி மீட்டிங் நடக்குது. பி எஸ் என் எல் கட்டிடத்துக்கு முன்னாலே!  நல்ல கூட்டம். மைக் பிடிச்சவர் ஆவேசமா வெல்லு விளிக்கிறார்.  22  நிமிசப் பயணத்துலே மூணு இடங்களில்  போராட்டம்.  ஆஃபீஸ்களில் வேலை நடந்த மாதிரிதான்:(


திருவல்லா- செங்கணாஞ்சேரி ரோடு. நாம் அதுவரை போகவேண்டியதில்லை. பெருந்துருத்தி கடந்து பெருந்நா என்ற இடத்தில் வந்து சேரும் ஆலப்புழை செங்கணாஞ்சேரி ஹைவேயில் (ஸ்ட்டேட் ஹைவே 11) லெஃப்ட் எடுத்துக்கணும்.  கூகுள் மேப் பார்த்து , சீனிவாசனுக்கு வழிசொல்லிக்கிட்டே வர்றார் கோபால்.

ஹைவே இடதுபக்கம் திரும்பியதும் கொஞ்சதூரத்தில்   எனக்கிடதுபக்கம் பெரிய ஆறு போல் அகலமா  இருக்கு. அடுத்த கரையில் வீடுகள். இங்கிருந்து அங்கு போக  உயர்த்திக் கட்டிய பாலங்கள்!  ஏன் இவ்ளோ உயரத்தில் பாலங்கள்? அடியிலே படகு (வீடு) போகணுமே!  ஏஸி கனால் (Aleppey Canal) என்ற இதுதான் கீழைநாட்டு வெனிஸ்! காயல்! The backwaters of Kerala.    ஆலப்புழையில்  படகுவீட்டில் தங்கினோமானால் இங்கெல்லாம்தான் கொண்டு வருவார்கள்.


இக்கரையில்  ஹைவே பயணிகளுக்காக  எல்லா மரங்களிலும் காய்க்காமல் தொங்கும்  இளநீர்க்குலைகள்:-)  நமக்கும் தாகசாந்தி ஆச்சு.  புளிக்குன்னு போர்டு பார்த்ததும் ஆஹா... இது புலி இல்லை. புளின்னு புரிஞ்சது.  இதுவரை சரியான வழிதான். இனி போகும் வழி விபரத்துக்கு, உடனே மரியாவுக்கு  செல்லடிச்சால் எங்கே இருக்கீங்கன்னு கேட்டாங்க. இப்ப  குருசடிகிட்டே  வந்தாச்சுன்னேன்.  ரொம்ப நல்லது. அதே இடம்தான். ரைட் எடுத்துக்கிட்டு நேரே வாங்க. ஒரு டெட் எண்ட் வரும். அங்கே இடது பக்கம் திரும்பிருங்கன்னு பதில்.


இந்தக் குருசடி என்பது என்னன்னா.... நம்மூர் சாலைகளில்  கிராமதேவதை, மாரியம்மன் , புள்ளையார்ன்னு  அங்கங்கே தெருவோரக் கோவில்கள் இருக்கும் பாருங்க. அதைப்போலத்தான்.  கொஞ்சம் பெருசா நவீனமாக் கட்டி அதன்மேல் யேசு, சிலுவை , மாதா  இப்படி சிலைகளை  வச்சுருப்பாங்க. இங்கே சிலுவையும்  இருக்கு, உள்ளே சிலைகளும்  இருக்கு. குரிசு = சிலுவை. குரிசடி  என்றுதான் சரியாச் சொல்லணும். ஆனா பேச்சு வழக்கில் குருசடி ஆகிப்போச்சு.

 ஆக்ஞை அனுசரிச்சு வலதுபக்கம் திரும்பிப்போறோம்.  குட்ட நாடு பகுதி இது.  அறுவடை முடிஞ்சு நீர் தேங்கி நிற்கும் நிலங்கள்,  அதுலே புழு பூச்சி, சின்ன மீன்கள் பிடிச்சுத்தின்னு பசியாற இறங்கி இருக்கும் நாரைகள், அழகழகான பங்களாக்கள், எங்கே பார்த்தாலும் பசுமையும் அதில் தெங்குகளுமா.....  ஜோரா இருக்கு! கிட்டத்த மூணு கிமீ தூரம் இந்த தெவிட்டாத அழகு!இந்தத் தெரு போய் முடியும் இடத்தில் தண்ணீர்!  ஆறு பெருக்கெடுத்து ஓடுது. இடது பக்கம் திரும்பணுமேன்னு பார்த்தால்  எங்கே பார்த்தாலும் தண்ணீர்தான்.  எதிர்க்கரையில் இருந்து மக்கள் இங்கே வர படகு சர்வீஸ் வேற!  ஆட்களை இறக்க, ஆட்களை  ஏத்த கம்பி ஏணியைப் படகுக்கும்  கரைக்கும் பாலமா வச்சுருக்காங்க.

படகுலே வந்திறங்கும் மக்களை ஏத்திக்கிட்டுப்போக பஸ்  நிக்குது.
அங்கிருந்த ஆட்களிடம் மரியான்னதும் இடத்துன்னு தண்ணியிலே  கை காமிக்கறாங்க. இது என்னடா நமக்கு வந்த சோதனைன்னு  ஒருவேளை  பின்பக்கத்து வழி இருக்குமோன்னு  போன வழியிலே கொஞ்சூண்டு திரும்பி வந்து  பார்த்தால்  வழி ஒன்னும் இல்லை. அங்கே  பஸ்ஸுக்குப் பக்கம் நின்னவரிடம் கேட்டால்   '100 மீட்டர் இடத்துவசம்' என்றார்.

திரும்பிப்போய்  தண்ணீரைப் பார்த்து நிக்கும்போது , மரியாவில் இருந்து கூப்பிட்டு  என்ன ஆச்சுன்னாங்க.  வெறும் தண்ணீரா இருக்கு.  எப்படி வரன்னால்.... தண்ணீரிலேயே வாங்கன்னு பதில். போச்சுரா.... ஒருவேளை படகில் போகணுமோ?

அதுக்குள்ளே ஒரு  மோட்டர்சைக்கிள்காரர் இடதுபக்கம் தண்ணீரிலேயே  வண்டியை ஓட்டிக்கிட்டுப்போறார். 'ஙே'ன்னு பார்க்கிறோம்.  தெய்வம் வழி காட்டுவதைப்போல் ஒரு கார் இடத்துவசம் திரும்புச்சு.  கவனிச்சுப் பார்த்தால்.... காம்பவுண்டு சுவரை ஒட்டியே  கார் போகுது.  ஓஹோ... தண்ணியிலேயே  ஓட்டிப்போகணும் போல!  பெருமாளே காப்பாத்துன்னு நாமும் அந்தக் காரை பின் தொடர்ந்தோம்.  இடது பக்கம் இருக்கும் பெரிய பங்களாவுக்குள்ளே முன்னாலே போன கார் நுழைஞ்சது.  சின்னதா ஒருமேடு நமக்கு முன்னால். அதுலே ஏறி இறங்கினதும்  இடத்துவசம் நாம் தேடி வந்த மரியா!

உள்ளே போய் வண்டியை நிறுத்திட்டு இறங்கிபோனோம்.  ரெமா நமக்காகக் காத்திருந்தாங்க.

நமக்கான அறையைக் காமிச்சதும் அங்கே பெட்டிகளைக் கொண்டு வந்து வச்சார்  பணியாளர். இடத்தைச் சுத்திப் பார்க்க நினைக்கும்போது மகளிடமிருந்து ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ், கூப்பிடச் சொல்லி.  உடனே  கூப்பிட்டோம்.  போனில் ஒரே அழுகை. என்ன ஏதுன்னு விசாரிக்கிறோம். விக்கிவிக்கி வரும் அழுகையைத்தவிர வேறொன்னுமில்லை:(  நான் ரொம்பவே பயந்து போயிட்டேன். கோபால்  திகைச்சு நிக்கிறார்!

இன்றைக்கு கொஞ்ச நேரம் அழவிட்டுட்டு,(அப்பதான்   அவள் மனசுக்கு ஆறுதல் கிடைக்கும்)   என்ன ஆச்சுன்னு கேட்டேன். செத்துப்போயிட்டான்னு சொல்லி திரும்பவும் அழ ஆரம்பிச்சாள். ப்ச்.... எனக்கே அழுகை வந்து இந்தப் பக்கத்தில் இருந்து நான் அழறேன்:(

நாங்க நியூஸியிலிருந்து கிளம்பறதுக்கு மூணு நாளைக்கு முன்னால் அவளுடைய கடவுளரில் ஒன்னு காணாமப்போயிருச்சு.  அக்கம்பக்கம் போயிருக்கும் திரும்பி வந்துருமுன்னு சொன்னேன். அப்புறமும் காணோம் என்றதும் கொஞ்சம் கவலையாத்தான் இருந்துச்சு. எதுக்கும் RSPCA க்கு ஃபோன் செஞ்சு கேட்ருக்காள்.  யார் வீட்டுக்காவது போயிருந்தால் அவுங்க ரிப்போர்ட் செஞ்சுருப்பாங்கதானே?

இதுலே  என்னன்னா  Zeus  ரொம்பவே ஃப்ரண்டிலியானவன். நல்லா கம்பீரமாகவும் இருப்பான். அவன் வகை அப்படி. தெருவிலே போகும் யாராவது  'கேட்நாப்' பண்ணிருப்பாங்களோன்னும் ஒரு எண்ணம் எனக்குள். அவளும் அவன் படம் ,விவரம் எல்லாம் ப்ரிண்ட்  எடுத்து அக்கம்பக்கம்  அவுங்க பேட்டையில் எல்லா வீட்டு மெயில்பாக்ஸிலும்போட்டுட்டு வந்துருக்காள்.

நாங்கள் பயணத்திலும் தினமும்  அவளிடம் பேசும்போது கிடைச்சானான்னு கேட்டுக்கிட்டே இருந்தோம். இல்லை இல்லை என்பதே பதில். நானும் ஒவ்வொரு கோவிலிலும்  தரிசனம் செய்யும்போது இவனுக்காகவும் வேண்டிக்கிட்டே இருந்தேன்.


அவன் எதோ வண்டியில் அடிபட்டு, நாலாவது வீட்டுத் தோட்டத்தில் புதருக்குள் கிடந்துருக்கான்.  எத்தனை நாள் இருந்தானோ யாருக்குத் தெரியும்?  இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அந்த வீட்டுவாசி வந்து , ' ப்ளையர் பார்த்தேன்.  உங்க பூனை காணாமப் போயிருச்சா' ன்னு கேட்டுருக்கார்.  ஆமான்னதும், எங்க தோட்டத்தில் ஒரு புதருக்குள்ளே ஒரு பூனை இருக்கு. வந்து பாருங்கன்னதும் இவள் ஓடி இருக்காள்.  அது நம்ம பையன்தான். கழுத்துலே காலர் இருக்குல்லே!

உடனே வீட்டுக்கு ஓடி வந்து நமக்கு டெக்ஸ்ட் செஞ்சுருக்காள்.  பூனை எங்கேன்னால்.... அங்கேதான் இருக்காம். 'ஒரு அட்டைப்பொட்டி கொண்டு போய் எடுத்துக்கிட்டு  வா'ன்னேன்.  ஐயோன்னு மீண்டும் அழுதாள். ப்ச்.....

அவனை என்ன செய்யணுமுன்னு கேட்டதுக்கு,  'பெட் க்ரெமேஷன்  சர்வீஸுக்கு போன் பண்ணி வரச்சொல்லு. அவுங்க  வந்து கொண்டு போய்  எரிச்சு சாம்பல் தருவாங்க. வாங்கி வை. நாம் திரும்பி வந்ததும் மேற்கொண்டு யோசிக்கலாம்' என்றேன். நம்ம பசங்க  அஸ்தியை கங்கையில் கரைச்சது நினைவுக்கு வந்து ஒரு பாட்டம் அழுது ஓய்ஞ்சேன்.

மனசே சரியில்லை. என்னடா பெருமாளே இப்படிப் பண்ணிட்டே?

 அடிபட்டவன் பேசாம நம்ம வீட்டுக்கே வந்துருந்தால் அவனை நம்ம வெட்னரி க்ளினிக் கொண்டுபோய் காப்பாத்தி இருக்கலாமுல்லெ?  பாவம்....குழந்தை. இப்படி ஒரு முடிவு வந்துச்சே:(

தொடரும்..........:-(
Friday, March 27, 2015

வயசு பத்தாச்சு இந்த வீட்டுக்கு ! (ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் : பகுதி 3 )

ஆச்சு இப்போ மார்ச் மாசம் 27 தேதி. எங்க கோடை காலம் முடிஞ்சும்  இப்போ  27 நாளாகிப்போச்சு. அடுத்த கோடை வரும்வரை  ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒவ்வொரு கோடை காலத்துக்கும் (டிசம்பர்  1 முதல் ஃபிப்ரவரி கடைசி வரை)  அந்த வருசத்துக் கடமைகளில் என்னென்ன  செய்ஞ்சுக்கணுமுன்னு ஒரு பட்டியல் போட்டு வச்சுக்கறது  ஒரு  வழக்கம். பெரும்பாலும் பெயிண்ட் வேலைகள் தான். பெயிண்ட் கடைக்காரர்களும் சம்மர்  ஸ்பெஷலுன்னு  இதைத்தான் டிவியிலும் பத்திரிகையிலும்,  ரேடியோவிலுமா கூவிக்கூவி விப்பாங்க.  தாய் தகப்பன்  வண்ணம் பூசும் வேலையில் பிஸின்னா.... பசங்களுக்குப் போரடிக்காம இருக்க பரமபதம்  விளையாடலாமாம். கடையின் உபயம்:-)


அதென்ன வருசா வருசம் பெயிண்டிங்கன்னா.... அப்படித்தான். மொத்த வீட்டுக்கும் ஒரே சமயம் பெயிண்ட் அடிச்சுக்க முடியாது.  வேலைக்கு ஆளா இருக்கு?  எல்லா வேலையும், ஹார்பிக் பயன் படுத்துமிடம்  உட்பட நாம்தானே செய்யணும்!  ஒவ்வொரு சம்மருக்கும்  ஒவ்வொரு பகுதியா  வேலையை முடிக்கணும். மொத்தம் முடியறதுக்குள்ளே  முதலில் ஆரம்பிச்ச இடத்துக்கு  பெயிண்ட் அடிக்கும் நாள் வந்திருக்கும்.

எங்க நண்பர் ஒருவர் ( போலீஸில் பெரிய வேலையில் இருக்கார்)  வீட்டில்  பெயிண்ட் அடிக்கப் போட்டு வச்ச சாரம் (scaffolding) வீட்டைச் சுற்றியே வெவ்வேற பகுதிகளில் எப்போதுமே நிரந்தரமா இருக்குது. அவுங்கவீடு  ரொம்பபெரிய மாளிகை என்றாலுமே வெளியே மரச்சட்டங்களால் ஆனது.  wooden  cladding வுட்டன் க்ளாடிங்.  நல்லவேளையா  வெள்ளை நிறக் கட்டிடம் என்பதால்  பார்த்தவுடன் அவ்வளவா  பழைய புதிய பெயிண்டிங் வித்தியாசம் தெரியாது. அவருக்கு ஓய்வு கிடைக்கணும். அப்போ கொஞ்சமாவது வெயிலும் இருக்கணும்.பெயிண்ட் அடிக்கக் கிளம்பிருவார்.

எங்க பழைய வீட்டை வாங்குனதும்,  கோடை  வந்தவுடன் முதலில்  செய்ய ஆரம்பிச்சது  வீட்டுக்குள் ஸிட்டிங் & லிவிங் ரூம் நிறத்தை மாற்றும் வேலைதான்.  பழைய ஓனரின் மனைவிக்கு என்ன ஆச்சோ.... அவுங்க  கடும் பச்சை நிறம் (ஆலிவ் கலர்) அடிச்சு வச்சுருந்தாங்க. அதை  ஹானஸ்ட் என்ற ஒரு வகை  இள ரோஜா வண்ணத்துக்கு மாத்தினோம். வாழ்க்கையில் முதல்முறையா பெயிண்ட் ப்ரஷைக் கையில் எடுத்தோம்.

பச்சையை மாத்த மூணு கோட்டிங் அடிக்க வேண்டியதாப் போச்சு. நமக்கோ ஒருஅனுபவமும் இல்லை பாருங்க.... அதனால் சரியா வரலைன்னதும், ரோலர் பிரஷ் மேலே பழியைப் போட்டுருவார் கோபால். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்  ஒரு ஹார்ட் வேர் கடை இருந்துச்சு. நான் ஓடிப்போய்  வேறொரு செட் பிரஷ்களை வாங்கியாருவேன்.  இப்படியே  வாங்கி வாங்கி பெயிண்டுக்கு செலவான காசைவிட பிரஷ்களுக்கும் ரோலர்களுக்கும் தான் அதிக செலவு:-)

(நான் கொஞ்சம் பெயிண்டிங்  செஞ்ச காலம் உண்டு. அது கலை!  ஆரம்பகால பூனா வாழ்க்கையில்  வாழ்த்து அட்டைகளைச் செய்யக் கத்துக்கிட்டேன். அங்கே ஒரு இடத்தில் கிடைக்கும் ஹேண்ட்மேட் பேப்பரில் படங்கள் வரைஞ்சு  உள்ளே வெள்ளைக் காகிதம் வச்சு வாழ்த்து அட்டைகள் தயாரிச்சு,  டிஃபென்ஸ் டாட்டூ நடக்கும்போது  ஸ்டால் போட்டு விற்கும் மகளிர் அணிக்கு நன்கொடையாக க் கொடுத்துருவோம்.  ஆர்மி, நேவி, ஆஃபீஸர்ஸ் மனைவிகளின் மகளிர் அணி இது:-)

நான் எப்படி அந்தக் கூட்டத்துலே போனேன்?  அப்ப நாங்கள் பூனா போன புதுசு.  வீடு கிடைப்பது  மகா கஷ்டம் அங்கே.  எங்கள் நண்பரின் உறவினரான  நேவி கமாண்டரின்  பிரமாண்ட மாளிகையில்  ஒரு மூணு மாசம் தங்கி இருந்தோம். கமாண்டரின் மனைவியும் நல்லா நட்பாக பழகுவாங்க.  பகல் முழுசும் நாங்க ச்சும்மா இருந்த காலங்கள்.  வீட்டுவேலைகளுக்குத்தான் ஏகப்பட்ட பணியாட்கள் இருந்தாங்களே!  லேடீஸ் க்ளப்,  சாரிட்டி ஒர்க் இப்படி எதாவது செய்வதுதான் முழுநேரப்பொழுது போக்கு! ஹை சொசைட்டி லேடீஸ் பாருங்க!

ஆனா ஒன்னு சொல்லணும், அந்த மூணு மாசங்களில்  மெழுகுவத்தி தயாரித்தல், பதீக் டிசைன் போட்டு  வண்ணம் சேர்ப்பது, பெயிண்டிங்,  வாயால் உபச்சார மொழிகள் பேசுதல்,  ரொம்ப  தாழ்மையாக இருப்பது போல் காட்டிக்கிட்டு ,'ஏய் உன்னைவிட நான் உசத்தியாக்கும்' என்று சொல்லாமல் சொல்லிக்கும் மேட்டுக்குடிப் பேச்சு, அதுக்கான பார்வை, உடல்மொழின்னு  நிறையத்தான் கத்துக்கிட்டேன்:-) நல்ல வேளையா வேற இடம் கிடைச்சு சாதாரண நிலைக்கு நான் திரும்பிட்டேன். இல்லைன்னா நம்ம கோபாலுக்கு ரொம்பவே கஷ்ட ஜீவனமா ஆகி இருக்கும்:-))))

வரைய ஆரம்பிச்ச புதுசில் வரைஞ்சவைகள்  எங்கியோ பரணில் போட்ட பெட்டிகளில் இருக்கணும். ஒருநாள் தேடிப்பார்க்கணும். ரெண்டு படங்கள் மட்டும் ஆப்ட்டது. இங்கே போட்டுருக்கேன். ஆரம்ப நிலை என்பதால் கொஞ்சம் க்ரேஸ் மார்க் போட்டுவிட்ருங்க:-)


எங்கியோ போயிட்டேன்....சரி. இப்போ வீட்டுக்குப் பெயிண்ட் அடிப்பதைப் பார்க்கலாம். புது வீடுன்னா முதல் அஞ்சு வருசத்துக்குப்பின்  பெயிண்ட் அடிக்கத்தான் வேணும். அப்படி பார்த்துப் பார்த்து வீட்டை மெயின்டெய்ன் செய்வதால்தான்  அம்பது அறுவது வருஷப்பழைய வீடுகள் கூட  எதோ சமீபத்துலே கட்டுனதைப்போல் இருக்கு, இங்கெல்லாம்.

நம்ம சென்னை வாழ்க்கையில்  பெஸண்ட் நகர் வீட்டுக்கு முதல் முதலில் வீடு பார்க்கப்போனபோது  கட்டிடத்தின் பக்கவாட்டு சுவரின் வெளிப்புறம் ஒரே பச்சை நிறத்தில் பாசி பிடிச்சு அழுக்காக் கிடந்துச்சு.  என்னன்னு விசாரிச்சதில்  ஓவர்ஹெட் டேங் தண்ணீர் ரொம்பி வழிஞ்ச  அடையாளமுன்னு சொன்னாங்க.  வீட்டு முன்புறமும் கூட ரொம்ப சுமார்தான். கடைசியில் பார்த்தால் அந்த வீடு கட்டியே ரெண்டரை வருசம்தான் ஆச்சாம்!   கடற்கரை, உப்புக் காத்து இப்படி பல காரணங்களும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

நம்ம வீட்டுக்கும்  அஞ்சு வருசம் ஆனதும் பெயிண்ட் அடிக்கணும்.  அரசாங்கமே உள்ளேயும் வெளியேயுமா மொத்த வீட்டுக்கும் பெயிண்ட் இலவசமா அடிச்சுக் கொடுத்துருச்சு. எப்படி? அதான் நிலநடுக்கத்தில் டேமேஜ் ஆனவைகளை எர்த் க்வேக்கமிஷன் ரிப்பேர் செஞ்சு கொடுக்குதே. நம்ம வீட்டுக்கு பெருசா ஒன்னும் ஆகலை .கட்டுமானவேலைகளில் பழுது ஒன்னும் ஆகலை. வெளிப்பூச்சுகளிலும், உள்ளே  ஜிப் பூச்சு வேலைகளிலும்  கொஞ்சம்  காஸ்மெடிக் டேமேஜ்தான்.  அதைப் பழுதுபார்த்து  மொத்த வீட்டுக்கும்  பெயிண்டிங் வேலை முடிச்சுக் கொடுத்ததால் நமக்கு வேலை மிச்சம்.

ஆனாலும் வீட்டைச் சரி செஞ்சாங்களே தவிர  முன்வாசல் ஸ்டாம்ப்டு காங்க்ரீட்டையும் சுத்தப்படுத்திக் கொடுத்துருக்கலாமுல்லெ:-)

ஆகக்கூடி, இந்த சுத்தப்படுத்தும்வேலை,  ஃபென்ஸுக்குப் பெயிண்ட் அடிக்கும் வேலை, முன்வாசல் கதவுக்கு எண்ணெய் பூசும் வேலையெல்லாம் நம்ம மெத்தனத்தாலே  சும்மாவே கிடந்தது. இனியும் தள்ளிப்போடக்கூடாதுன்னு இந்த சம்மர் ப்ராஜெக்ட்டாக் குறிச்சு வச்சுக்கிட்டோம்.

நம்ம வீட்டுத் தொழிலாளியும், சித்தாளுமா வேலையை  ஆரம்பிச்சு ஒவ்வொன்னா முடிச்சோம்.


 வாட்டர் ப்ளாஸ்டர் ஒன்னு வாங்கினதும் காங்க்ரீட் வேலை முடிஞ்சது. இங்கே தண்ணீர் கஷ்டம் இல்லை. தண்ணீருக்கும் மீட்டர் கிடையாது.  தண்ணீர் இருப்பு குறைஞ்சால் சிட்டிக் கவுன்ஸில் சிக்கனமா இருக்கச் சொல்லும். வீட்டு கதவிலக்கம் அனுசரிச்சு , வாரம் எந்தெந்த நாள்  செடிக்குத் தண்ணீர் விடலாம் என்று சொல்வாங்க. நாங்களும் சொன்னபேச்சைக் கேட்போம்.

Before 

After
அழுக்கு போனதும்  தரை பளிச்:-)

ஸ்ப்ரே கன் ஒன்னு வாங்கினதால் ஃபென்ஸ்க்கு பெயிண்ட் அடிப்பது  கஷ்டமில்லை. ஆனா  கைவிரல்கள்தான் மரத்துப்போச்சுன்னார்.  ஓடிப்போய்  மேங்கோ மில்க் ஷேக்  செஞ்சு கொடுத்தேன். கருவேப்பிலை மரத்தை(!) பெரிய தொட்டிக்கு மாத்தணுமுன்னு  வாங்கி வந்த நீலத்தொட்டிக்கு  பச்சை வண்ணம் அடிச்சு பசுமைப் புரட்சி(யும்) செஞ்சுட்டோம்லெ!


 Before
After


கட்டக்கடைசியா ஒரு வேலை பாக்கி இருந்தது. வாசக்கதவுக்கு  எண்ணெய் பூசுவது.  மரக்கதவு.  தேவதாரு மரம். இதுக்குன்னு கிடைக்கும் எண்ணெயைக் கதவு முழுசுக்கும் பெயிண்ட் ப்ரஷால் பூசணும். அதுக்கு முன் நல்லா அழுக்கைத் துடைச்சுட்டு, ஸ்டீல் வுல்  வச்சு லேசா தேய்ச்சு பழைய பிசுக்கை எடுக்கணும்.    பிசுக்குன்னு  பிசுக்கா இருக்காது. ஷுகர் ஸோப் போட்டும் கழுவலாம். மரத்தில் ஊறிப்போன எண்ணெய்ச் சுவடுகள்.

எண்ணெய்க்கு  ஆர்டர் கொடுத்துட்டு வந்த மூணாம்நாள் தயாரா இருக்குன்னு கூப்பிட்டுச் சொன்னாங்க. இவுங்க கடையில் 'கஷ்டமர்  மெம்பர்ஷிப்' எடுத்துக்கிட்டா  நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்குமாம்.  சரின்னு எழுதிக்கொடுத்தோம். கார்டு வரும்வரை ஒரு தாற்காலிக  அட்டை கொடுத்தாங்க.  அதுலே  இப்போ வாங்கும் எண்ணெய்க்கும் 20% கழிவு  தரேன்னு சொன்னது சூப்பர்!  ஒரு மாசம் கழிச்சு  கார்டு வந்துருச்சு என் பெயரில்:-)
தெரு வாசல் கதவுகள் ரெண்டு இருக்கு.  வேலை முடிஞ்சதும் மாவிலை தோரணம் ஒன்னு கட்டி விட்டோம்.  இந்த வீடு கட்டி, குடிவந்து  பத்து வருசம் ஆகுது.  கிரகப்பிரவேசமுன்னு ஒன்னும் அப்போ செஞ்சுக்கலை. வெறும் பால் காய்ச்சுனதோடு சரி. அதனால் இன்றைக்கு விசேஷமா எதாவது செய்யணுமுன்னு  நினைச்சதுலே.....  பெருமாளுக்கு நன்றி சொல்லிட்டு, ஒலகக்கோப்பை ஓப்பனிங் ஸெரிமனிக்குப் போய் கொண்டாடிட்டு வந்தாச்சு:-)

இனி அடுத்த கோடையில் என்ன வேலைன்னு  கோடை ஆரம்பிச்சதும் பார்க்கலாம். அதுவரை  கோபாலுக்குக் கொஞ்சம் ஒய்வு கொடுக்க முடிவு.
ஆனா ஒன்னு , அததுக்கான  கருவிகளை வாங்கிக் கொடுத்துட்டதால்    அவ்வளவாக்  கஷ்டப்படாம வேலைகளை சுலபமாச் செஞ்சு முடிச்சுட்டார் கோபால்:-)))

வேலைக் களைப்புத் தெரியாமல் இருக்க அப்பப்ப, ரோஸ்மில்க், ஃபலூடா, மேங்கோ, ராஸ்பெர்ரி  மில்க்‌ஷேக் வகைகள் செஞ்சு உபசரிப்பது இந்தச் சித்தாளின் வேலையாக்கும், கேட்டோ!

 கைவசம் தொழில் இருக்கு. பிழைச்சுக்கலாம்!PIN குறிப்பு: தொழிலாளியின் பலவகைத்தொழில்களின் படம் பதிவில் அங்கங்கே!  

தோட்டத்தொழிலாளி படங்கள் பின்னொரு நாளில் வரும்Wednesday, March 25, 2015

ஆரன்முளான்னு கேட்டால் உங்களுக்கு என்ன தோணும்? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 33)

எனக்குச் சட்னு தோணியது ஓணசமயத்து அவிடே நடக்குன்ன  வள்ளம்களி. ஸ்நேக் போட் ரேஸ்ன்னு சொல்வாங்க.பாம்பு போல நீளமான படகுலே ரெண்டு பக்கமும் துடுப்புப்போடும் ஆட்கள் வரிசையா உக்காந்து துடுப்பு வலிக்க,  அவுங்களை உற்சாகப்படுத்தும்  பாட்டுக்காரர்கள்  பாட, பகுதி பகுதியா ஒவ்வொன்னுக்கும் ஒரு  டீம் லீடர் போல  நின்னு  'ஆகட்டும், இன்னும் வேகமா துடுப்பைப் போடுங்க'ன்னு  படகில்  நடுவில் இருக்கும் மேடையில்  நிற்கும் ஒரு எட்டாளுன்னு  அட்டகாசம்தான் போங்க.

இந்தப் படகுகளுக்குப் பள்ளியோடம் என்ற பெயர்.  ஒவ்வொரு படகிலும் ஸ்ரீ மஹாவிஷ்ணு  இருக்கிறார்னு ஒரு ஐதீகம். அதனால்  போட்டின்னதும் ஒருத்தரோடு ஒருத்தர் போட்டி போட்டுக்கிட்டு வருவாங்கன்னு நினைக்கப்டாது.  வஞ்சிப்பாட்டு என்றொரு  ஸ்டைலில் இருக்கும் பாட்டுப் பாடிக்கிட்டே கருடன் முகப்பு இருக்கும் பெருமாளின் படகுக்குத் துணையா வரும் பாம்புப் படகுகள்தான் இவை.   39  பகுதிகளில் இருந்து வருபவை.
படகின் நீளம் 103 அடி! துடுப்பு வலிக்கும் ஆட்கள்  64  பேர்னு  கோலாகலம்தான்.

 கடைசியில் இவுங்க கோவிலுக்குப் பின்னால் இருக்கும் கடவுக்கு வந்து சேர்வாங்க.  'உத்திரட்டாதி  வள்ளம்களி'ன்னு இதுக்குப்பெயர்!  சரியாச் சொன்னால் இது ஓணம் பண்டிகை முடிஞ்சு நாலாம் நாள் உத்திரட்டாதி நட்சத்திர தினத்தில் நடக்கும். இதெல்லாம் நம்ப  பம்பாநதியில்தானாக்கும், கேட்டோ!

இந்த 64 பேர் என்ற எண்  அறுபத்திநான்கு கலைகளையும், பாம்பின் தலைப்பகுதியில் நிற்கும்  நாலு மேஸ்திரிகள்  நான்கு வேதங்களையும், மேடையில்  நிற்கும் எட்டு ஆட்கள் அஷ்டதிக் பாலகர்களையும் குறிக்குதுன்னும் ஒரு ஐதீகமுண்டு.  இந்த படகு  தயாரிக்க ஆகும் செலவு ஒரு 16 லக்ஷம்  ரூபாய் !  குறைஞ்சது ரெண்டு வருசமாகுமாம் ஒரு பாம்புப் படகு தயாரிக்க.

படகுக்கும் கோவிலுக்கும் ஏன் இவ்வளவு முக்கியமாம்?   இங்கே பிரதிஷ்டை செய்ய மூலவரைக் கொண்டு வந்தப்ப, ஒரு காட்டு வழியில்  வெகுதூரம் வரவேணுமேன்னு  காட்டில் இருக்கும்  மூங்கில்களில்  ஆறு மூங்கில்களை வெட்டி அதை இணைச்சுக்கட்டிய தெப்பத்தில்   சாமியை வச்சுப் பம்பா நதியில்  ஓடம் போல ஓட்டிக்கிட்டு, இங்கே   கொண்டு வந்தாங்களாம்.   ஆரண்முளா.  (ஆறு மூங்கில்கள், ஆரண்யத்தில் இருக்கும் மூங்கில்கள்  ) இவ்ளோ கஷ்டப்பட்டது யாருன்னால்....எல்லாம் நம்ம அர்ஜுனன்தான். வில்லாளி!

பாரதப்போர் முடிஞ்சாட்டு  பல ஆண்டுகள் ஆட்சி செஞ்ச பாண்டவர்கள் , பேரன் பரீக்ஷித்துக்குப் பட்டம் கட்டுனபிறகு  மன நிம்மதி வேண்டி  யாத்திரை வந்தாங்கன்னு  ஆரம்பத்திலே சொன்னேன் பாருங்க அப்ப ஒவ்வொருத்தரும் ஒரு கோவிலாக் கட்டி எழுப்பி இருக்காங்க.

கர்ணன்,  தங்கள் அனைவருக்கும் மூத்த சகோதரன் என்ற விவரம் அறியாமல்,  போர்க்களத்தில், அவன்  பூமியில் அழுந்தியிருந்த தேர்ச்சக்கரத்தை  வெளியே இழுக்கும்  சமயத்தில் , வஞ்சகமா அவனைக் கொன்னுட்டோமேன்னு  அர்ஜுனனுக்கு மனதில்  ஓயாத குற்ற உணர்ச்சி. நினைச்சு நினைச்சு வெம்பிக்கிட்டு இருக்கான்.  'இதுதான் சமயம், அவனைக்கொன்னுடு'ன்னு சொன்ன  கிருஷ்ணன் பேச்சைக் கேட்டோமேன்னு வேற குமுறல்.
கிருஷ்ணனை தியானிச்சு, இப்படி என்னை பாவம் பண்ணவச்சுட்டீரேன்னு புலம்பும் சமயம், பெருமாளே  பார்த்தசாரதி உருவத்தில்  தரிசனம் கொடுத்துருக்கார்.  ஆனால் கையில்  வெறும் சாட்டை மட்டுமில்லாமல், வலது கையில் சக்கரமும் வச்சுருக்கார்!

 பீஷ்மர் மேல் அம்பு எய்ய விருப்பம் இல்லாமல்  அர்ஜுனன் தயங்குனது பொறுக்காமல் ' இப்ப நீ அவரைக் கொல்லத் தயங்கினால் நான் போய் கொல்லப்போறேன்'னு  அங்கே கீழே விழுந்திருந்த தேர்ச்சக்கரத்தைத்  தூக்கி வீசப்போறார்.  அப்போ அர்ஜுனன்,  'போர்க்களத்தில் ஆயுதம் ஏந்தமாட்டேன்னு வாக்கு கொடுத்தது மறந்து போச்சா'ன்னு கேட்டு அதைத் தடுத்து நிறுத்தினான்.

  அதுக்குப்பிறகுதான் பீஷ்மர் மேல் அம்பெய்தது.  பீஷ்மர் அம்புப் படுக்கையில்  இருந்தது.  அதன் பிறகுதான் அதுவரை போரில் பங்கெடுக்காமல் ஒதுங்கி இருந்த கர்ணன்  படைத்தலைமை ஏற்று பாரதப்போரில்  கலந்து கொண்டதுன்னு  பாரதக்கதை போய்க்கிட்டே இருக்கும். பாரதமுன்னு  ஒரு வார்த்தை சொன்னாலே எப்படி நீண்டு போய்க்கிட்டே இருக்கு பாருங்க:-)

 ஆர்யாஸில் எனக்கு  இட்லி, கோபாலுக்குப் பூரின்னு கிடைச்சது. சீனிவாசன் தோசை, பொங்கல் னு  வாங்கிக்கிட்டார். காஃபி   எப்படி இருக்குமோன்னு பயந்து, நாங்க டீ வாங்கிக்கிட்டோம். அறைக்குப்போய் சாமான்களை ஒதுக்கி ரெடியா வச்சுட்டு,  கீழே ரிஸப்ஷனில்  இருந்த  நந்தகோபாலிடம் (அப்படித்தான் நினைக்கிறேன்) எதுக்கும் இருக்கட்டுமுன்னு  ஆரண்முளா கோவிலுக்கு வழி கேட்டுக்கிட்டோம்.   ஒரு பத்து கிலோமீட்டர்தான்  தூரம் என்றார்.  இப்போ மணி ஒன்பதரைதான். இஷ்டம்போல் சமயம் உண்டு என்றார்:-)  கிளம்பிய இருவது நிமிசத்தில் கோவிலுக்கு வந்துட்டோம்.  சபரிமலைக்கு இதே ரோடில்தான் போகணுமாம்.திருவாறன் விளை என்பது புராணப்பெயரா இருந்தாலும் இப்ப இந்த  இடத்துக்கு ஆரன்முளா என்ற பெயரே நிலைச்சுருச்சு.

கொஞ்சம் உயரத்தில் இருக்கு கோவில். எத்தனை படிகள் என்று  (என் வழக்கம்போல்)  எண்ணிப்பார்த்தேன். பதினெட்டு!  அந்தப் பதினெட்டுக்குப் பதிலா இந்தப் பதினெட்டு அய்க்கோட்டே!

படிகள் கடந்து கோவிலுக்குள் நுழையறோம். ரெண்டு பக்கமும் பிரமாண்டமான திண்ணைகளும் நடுவில்  விசாலமான  இடைநாழியுமா இருக்கு. ஒரு திண்ணையில் நிறைய சாமி படங்களுடம்,  வாமன அவதாரமோ என்று நான் நினைச்ச ஒரு  சிலையும். தாழங்குடை பிடிச்ச அந்தணர்.
இன்னொரு திண்ணையின் சுவரில்.....  ஆஹா....எல்லாம் நம்மாட்கள்!!!


கஜ சாம்ராட்  திருவாரன்முளா பார்த்தசாரதி,  கஜ ராஜன் திருவாரன்முளா ரகுநாதன்  கஜ கேசரி  திருவாரன்முளா மோஹனன்!  பெரிய படங்கள்.  தும்பிக்கை தரையில் மடங்கிக் கிடக்கு. அவ்ளோ நீளம். இப்ப இவுங்க யாருமே இங்கே  பகவான் சேவையில் இல்லை. சாமிக்கிட்டேயே போயிட்டாங்க.
இப்ப இருப்பவரைக் காணோம். வெளியே போயிருக்கலாம்.முன்மண்டபம் ரொம்பவே பெருசு. அடுத்து  ரெண்டு பக்கமும் பெரிய தீபஸ்தம்பம், நடுவில்  வெயிலுக்கு ஷாமியானா போட்டு வச்சுருக்காங்க. அங்கங்கே வயசான பெரியவர்கள் பலர்.


தங்கக்கொடிமரம்  தகதக. கொடிமரத்தின் அடிப்பாகத்தில் சுற்றிலும்  அழகழகான  சாமி விக்கிரஹங்கள்!  தீபஸ்தம்பங்களின் உச்சியில் கைகூப்பிய கருடர்!
துலாபாரம் கொடுப்பது இங்கே விசேஷமாம். தராசுக்குப்பக்கத்தில் நிற்கும்  இன்னொரு சின்ன தீபஸ்தம்பத்திலும் வித்தியாசமான கருடர்.  மூக்கு..... அப்பப்பா...சூப்பர். காலத்தில் மூத்தது!   இதே போல் ஒன்னு கிடைக்குமான்னு கடைகளில் தேடிப் பார்த்தேன்.ஊஹூம்.:(

கேமராவை மரியாதையாகப்  கைப்பைக்குள் வச்சுட்டு  வெளிப்பிரகாரம் கடந்து கருவறைக்குப்போறோம். மூலவர் பார்த்தஸாரதி, நின்ற கோலத்தில் சாதிக்கிறார். கிழக்குப் பார்த்த சின்ன உருவம்தான்.  தங்கக்கவசம் போர்த்திக்கிட்டு இருந்தார். கையில் சக்கரம் இருக்கான்னு பார்த்தேன். இருக்கு! ப்ரயோகச் சக்கரம்!  இப்ப நினைச்சால் புறப்பட்டுப்போகும் வகையில்:-)

ப்ரம்மாவுக்கும்  வேதவ்யாஸருக்கும்  இங்கே தரிசனம் கொடுத்துருக்காராம்.
மூலவருக்குத்  திருக்குறளப்பன் என்ற பெயரும் உண்டு. ஓஹோ....அதான் வாமன ரூபச் சிலை திண்ணையில் இருக்கோ! வாமனரூபம்  காணவேண்டும் என்ற ப்ரம்மாவுக்காக  வாமனராக காட்சி கொடுத்ததாகவும் சொல்றாங்க.

சரியாகத்தான் இருக்கும்.  வாமனராக இருந்து  உருவம்பெருக்கி உலகளந்தான் ஆகி சத்யலோகமும் தாண்டி  பாதம் போயிருக்கும்போதுதானே ப்ரம்மாவும் பாத தரிசனம் செஞ்சுருப்பார்.

தாயார் பெயர் பத்மாஸனி நாச்சியார். பரசுராமருக்கும் தனியா  சந்நிதி இருக்கு.
பெரிய கோவில்தான். வெளிப்ரகாரம் சுற்றி வடக்குவாசல் வந்தால்  அந்தாண்டை பம்பா நதி.  நதிக்கரைக்குப்போக  57 படிகள் இறங்கணும்.

கோவில் உள்பிரகாரச்சுவர்களில்  ம்யூரல் வகை ஓவியங்கள் ஏராளம். எல்லாம்  பதினெட்டாம் நூற்றாண்டில் வரைந்தவையாம்!

சபரிமலை ஐயப்பஸ்வாமியின் திருவாபரணங்கள் எல்லாம் இங்கேதான்  பத்திரமா வச்சுருக்காங்க. மகரவிளக்கு சமயம் நகைப்பெட்டியையும்  ஐயப்பனுக்கு  உடுத்திக்கொள்ள தங்க அங்கியும் இங்கே இருந்துதான் செண்டைமேளதாளத்தோடு ஊர்வலமா எடுத்துக்கிட்டுப்போறாங்க. அதானால் ஐயப்ப சாமி பக்தர்களுக்கு இது ரொம்பவே வேண்டப்பட்ட க்ஷேத்திரம்!

1973 இல் மன்னர் சித்திரைத்திருநாள் அவர்களின் காணிக்கை இந்த தங்க அங்கி.

இந்த ஆரண்முளா பார்த்தஸாரதி கோவிலில் இருந்து சபரி மலைக்கு  75  கிமீதான் தூரம். ரெண்டுமணி நேரத்தில்  போயிடலாம்.  பதினெட்டாம் படி ஏறிப் போகணுமுன்னால்தான் நியமங்கள் அதிகம். ஒவ்வொரு மலையாள மாசத்திலும் முதல்  அஞ்சு நாட்கள் மட்டுமே நடை திறந்து வைப்பதால் டிமாண்ட் அதிகம். ச்சும்மா அதுவரை போய் பார்த்திருக்கலாமோன்னு  இப்பத் தோணுது.

நம்மாழ்வார் இங்கே வந்து  பெருமாளை தரிசனம் செஞ்சு  பத்துப்பாசுரங்கள் பாடி மங்களசாஸனம் செஞ்சுருக்கார்.  நூற்றியெட்டு திவ்யதேசக் கோவில்களில் இதுவும் ஒன்று.

அதிகாலை நாலரை முதல் பனிரெண்டரை வரையும்  மாலை ஐந்து முதல் எட்டு வரையும் கோவில் திறந்திருக்கும். நின்னு நிதானமாக்  கும்பிட்டு வரலாம்.

இங்கே நடக்கும் சில திருவிழாக்கள் வேறெங்கும் நான் கேள்விப்படாதவையாத்தான் இருக்கு. அதுலே ஒன்னு 'வல்லிய சத்யா' பெரிய விருந்துன்னு சொல்றதைவிட பிரமாண்டமான விருந்துன்னு சொல்லலாம்.  வள்ளம் களி முடிஞ்சதும்,  படகில் வந்த அந்த  39 பகுதிமக்களுக்கும்,  திருவிழாவுக்குக் கூடி இருக்கும் மற்றவர்களுக்கும் கோவில் ஒரு விருந்து சமைச்சுப்போடுது.  போனமுறை நாப்பாதாயிரம் மக்கள் விருந்துலே கலந்துக்கிட்டாங்களாம்!

இன்னுமொரு ஸ்பெஷல்,  இங்கே நடக்கும் காண்டவ வனம் தகனம் . கோவிலுக்குமுன்னால்  காடு போல்  தோற்றம் தரும் வகையில் (ஒரு  அடையாளமாத்தானாக்கும், கேட்டோ!) மரக்கிளைகளைகள் செடிகள் எல்லாம் நட்டு(!)  அதுக்குத் தீமூட்டி எரிச்சு  மகாபாரத சம்பவத்தை  நினைவூட்டும் திருவிழா.

தனுர் மாசத்திலே நடக்குது. இது நம்ம மார்கழி மாசம்தான். குளிருக்கு இதமா இருக்கும்:-)

கோவிலில் இருந்து வெளிவரும் சமயம் திண்ணையில் இருந்த ஒரு முதியவரிடம்,  கோவிலில் ஏகப்பட்ட முதியோர்,  மண்டபங்களில் அங்கங்கே  இருப்பதின் காரணம் என்னன்னு கேட்டேன். இங்கே  வேறெந்தக் கோவிலிலும் இப்படி ஒன்னு இதுவரை பார்க்கலை!  கோவில் நடத்தும் முதியோர் இல்லத்து மக்களாம். சாப்பாடு அங்கே மூணு வேளையும்  கிடைக்குதாம். சும்மா அங்கே போரடிச்சுக் கிடக்காம இப்படிக் கோவிலில் வந்து இருக்காங்களாம்.   இதர செலவுகளுக்கு  கொஞ்சம் காசு இங்கே வரும் பக்தர்களால் கிடைக்குது என்பதே காரணம் என்றார்.


மலைநாட்டு திவ்யதேசங்கள் பட்டியல் ஒன்னு போட்டு வச்சுருக்காங்க.


மீண்டும் பதினெட்டுப்படிகள்  இறங்கி  வந்தால் படிகளின் ஓரத்தில் சிலர்  இருந்து சட்னு கையை நீட்டுனாங்க. அவுங்க தமிழர்கள் என்று பேச்சில் தெரிஞ்சது:(

இதுவரை பார்த்த கோவில்கள் போல் இல்லாமல் இங்கே நிறைய கோவில்கடைகள் தெருமுழுசும்.  ஆரன்முளா கண்ணாடி என்பது இங்கே ரொம்ப ப்ரசித்தம். பஞ்சலோகத்தில் செஞ்சது. போலிகள் இதிலுமிருக்கு என்பதால்  இந்தக் கடைகளில் வாங்க யோசனையா இருக்கு.  நல்லதாக வாங்கணுமுன்னா அதுக்கான கடைகளைத் தேடிப்போகணும்.  நமக்கு எப்பதான் நேரமிருக்கு? ஹூம்...

திருவாறன் விளை பார்த்தஸாரதி கோவில் சுற்றி, தரிசனம் செஞ்சு கிளம்ப இருபதே நிமிசம்தான் ஆகி இருக்கு.  பார்த்தஸாரதின்னதும்  நம்ம தில்லக்கேணி, முறுக்கு மீசையும் விரித்த கண்களுமா, ஆஜானுபாகுவா  ஏழடி உசரத்தில் நிகுநிகுன்னு நிற்பவன்  'டான்'ன்னு நினைவுக்கு வந்துட்டான்:-)

இந்த பஞ்சபாண்டவர்கள் கட்டிய அஞ்சு கோவில்களும்  இதே செங்கண்ணுர் பகுதிலே இருக்கு பாருங்க, இதை இங்குள்ளவர்கள் அஞ்சம்பலம் என்று சொல்றாங்க.

சரியான திட்டம்போட்டால் ஒரு அரை நாளிலே இந்த அஞ்சு கோவில்களையும்  தரிசிக்கலாம். கோவில் நேரங்கள்  காலை நாலு முதல் பனிரெண்டரைன்னு நினைவில் வச்சுக்கணும்.  இதுலே நாலு கோவில்கள்  செங்கண்ணூருக்கு வடக்குப் பக்கம்தான்.  காலையில் ஏழுமணிக்குக் கிளம்பினாலும் அவைகளை ஒரு மூணு மணி நேரத்தில் பார்த்துடலாம். அதன்பின்  இந்த  ஆரண்முளாக் கோவிலுக்கு  வரலாம்.  இது ஒன்னுதான் பகல் பனிரெண்டரை வரை திறந்துருக்கு.

நம்மூர்க் கோவில்கள் போல  கோபுரங்கள், மண்டபத்தூண் சிற்பங்கள் இப்படி ஒன்னும் இல்லாமல் ரொம்பவே சிம்பிளா, ப்ளெய்னா இருக்கு எல்லாமே! சாமிகளின் சிலைகளும் கூட  அதிகபட்சம்  மூணடி வரை இருக்கும் சின்ன உருவங்களே!  ( திருவனந்தபுரம்  பதுமனுக்குத்தான் ஒரு   உசரக்குறைவான அகலக்கோபுரம். பதுமனும் 18 அடி நீளமானவன்! ) ஆடம்பரம் இல்லாமல் அமைதி தவழும் இடங்களாக் கோவில்கள் இருப்பது அபூர்வம்தான் இந்தக் காலங்களில்.


மனத்திருப்தியுடன்  செங்கண்ணூர் திரும்பி  ஹொட்டேலுக்கு வந்து அறையைக் காலி செஞ்சுட்டுக் கிளம்பிட்டோம்.

தொடரும்...........:-)

PIN குறிப்பு:  இதென்ன இந்தப்பதிவில்  நிறைய இடங்களில்  18, பதினெட்டுன்னே வந்துருக்கு!