Wednesday, March 11, 2015

சாமிக்கும் 'அந்த' மூன்று நாட்கள் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 29)

திருப்புலியூர் மாயபிரானைக் கும்பிட்ட கையோடு கோவில் வெளிமண்டபத்தில்  இருந்த ஒருவரிடம், 'பகவதி அம்பலம் எவிடெயாணு'ன்னு விசாரிச்சதும்,  'ரெயில்வே ஸ்டேஷனடுத்து'ன்னவர், நாம் தங்கி இருக்குமிடத்தைக் கேட்டார். மார்கெட் ரோடு பகவத் கார்டன் என்றதும், அங்கிருந்து கோவில் ரொம்பப் பக்கம்தான்.  சீக்கிரமாப் போகணுமுன்னா ஒரு  ஓட்டோ எடுத்தோன்னார். நமக்கும் புது இடம் என்பதால் தடுமாற்றம் இருக்கு. இருட்ட ஆரம்பிச்சது வேற .....

வந்தவழியே  திரும்பிப்போயிடலாமுன்னு  சீனிவாசன் சொன்னதால் நாங்க பகவத் கார்டன் வந்து வண்டியை நிறுத்திட்டு,   ஒரு ஆட்டோ ரிக்‌ஷா பிடிச்சு நாங்க மூணு பேருமா   மஹாதேவர் கோவிலுக்குப்  போனோம். 20 ரூ ஆச்சு. கோவிலுக்குப் பக்கத்தில் கொண்டு வந்து விட்டார் ஆட்டோக்காரர்.  திரும்பி வரும்போது ஆட்டோ ஸ்டாண்டு போகணுமுன்னு சொல்லி அந்த ஸ்டாண்டையும் வரும்வழியில் காமிச்சார்.

செங்கண்ணூர் மஹாதேவர் க்ஷேத்ரம். சபரிமல எடத்தாவளம் , செங்கண்ணூர் தேவஸ்வம் என்ற  போர்டு. சபரிமலைக்குப்போகும் பக்தர்கள் அனைவருமே பயணத்தினிடையில் இங்கு வந்து, மஹாதேவரையும் பகவதியையும் தரிசனம்  செஞ்சுட்டுத்தான் போவாங்களாம்.

பாரதப்போரில்  அசுவத்தாமா (என்ற யானை) இறந்துவிட்டது உண்மைன்னு, பொய் சொன்ன தருமர்,  இங்கே வந்து  மஹாதேவரையும் பகவதியையும் வழிபட்டு தன் பாவத்தை மன்னிக்கும்படி  வேண்டினாராம்.

ஆதிகாலத்தில் இங்கே இடைவிடாது யாகங்கள் நடந்தபடி இருக்குமாம். யாகப்புகை எப்போதும் சூழ்ந்திருக்கும்  சிவந்த குன்று என்பதால் செங்குன்று ஊர்ன்னு சொல்லப்போய் கடைசியில் செங்கண்ணூரென்று மருவியதுன்னு  சொல்லக்கேள்வி.

யாரும் ஒன்னும் சொல்லாமலே  ஷர்ட்டை ரெண்டு பேரும் கழட்டித் தோளில் போட்டுக்கிட்டாங்க. அப்பதான் கவனிச்ச நான், 'எப்போ வேஷ்டியில் இருந்து பேண்ட்ஸுக்கு மாறினீங்க'ன்னு கோபாலைக் கேட்டால்.... ட்ரவுசரை அவுக்காமல் அதுக்குமேலேதான் வேட்டியைக் கட்டிக்கிட்டேன் என்றார்:-)))

தங்கம்போல் மின்னும் உலோகத்தகடு போர்த்திய கொடிமரம் நெடுநெடுன்னு நிக்குது.  அதைப் பார்த்தாப்போல ஒரு நந்தி இருக்கார்.  பெரிய  கேரள அரண்மனை டிஸைனில் கோவில்.  மூணுமாடிக்கட்டிடம். ஓடுகள் வேய்ஞ்சுருக்கு. பெரிய பெரிய தூண்களோடுள்ள முன்மண்டபம் கடந்து உள்ளே போறோம். உள்பிரகாரத்துக்கு நடுவில் வட்டமாக இருக்கும் கருவறை.  கூரைக்  கூம்பின் உச்சியில் செம்புத்தகடு போர்த்தி இருக்காங்க(ளாம்)


இங்கேயும்  கருவறை முன்னே திண்ணை மண்டபம்.  அஞ்சு படிகள் ஏறி கருவறைக்குள்ளே போகணும்.  இப்பப் பார்த்துட்டு வந்த  திருப்புலியூர் ஸ்டைல்தான். சிவலிங்கத்துக்கு மேல்  தங்கத்தால் ஆன  கவசம்.  அதில் சிவனும் சக்தியுமா அர்த்தநாரீஸ்வரக் கோலம்.  இப்ப மல்லிகை சீஸனோ என்னவோ......முழுசுமே மறைக்கிறாப்போல் பூச்சரங்கள்.

சந்தியா பூஜை எல்லாம் முடிஞ்சு போயிருச்சு. மாலை ஆறரை முதல் ஏழுவரை தீபாராதனை. இப்ப மணி ஏழு அஞ்சு.  பக்தர்கள் வந்து கருவறை முன் நின்னு கும்பிட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்காங்க.

தினமும் அதிகாலை மூணு அம்பதுக்குத் திருப்பள்ளி எழுச்சி. அப்புறம் அபிஷேகம்,  உஷத்காலப்பூஜை, ஹோமம், கலச பூஜை, உச்சிகால  பூஜைன்னு வரிசையா நடந்து பதினொன்னரைக்கு  நடையை சாத்திடறாங்க. அப்புறம்  மாலை அஞ்சு மணிக்குத் திறந்து ஏழுக்கு தீபாராதனை, ஏழரைக்கு அர்த்தஜாமம், எட்டுமணிக்கு  ஸ்ரீபலின்னு நடை அடைச்சுடறாங்க.

 நாமும் வணங்கிவிட்டு, கருவறை சுத்தறோம். சரியா சிவன் சந்நிதிக்குப் பின்பக்கம்  இன்னொரு கருவறை வாசல். முன்னால் சின்னதா ஒரு திண்ணை மண்டபம்.

என்னன்னு எட்டிப்பார்த்தால்  செங்கண்ணூர் பகவதி! முழுக்க முழுக்க மல்லிச்சரங்களால் ஆன அலங்காரம்! மூலவரே பஞ்சலோகச் சிலைதான்.  ஆதிகாலத்துச் சிலை  தீவிபத்தில் போயிருச்சுன்னு சொன்னாங்க.

  திண்ணை மண்டபம் தாண்டி  சின்னதா ஒரு கொடிமரம்.  முன் மண்டபம் போல இன்னும்  ஒன்னு. என்னடான்னு பார்த்தால் பகவதிக்குத் தனி வாசல் ! சிவன் கிழக்கு பார்த்து இருக்கார். பகவதி மேற்கு பார்த்து !  இங்கே  நாம்  இந்த ரெண்டு வாசல் வழியாகவும் வரலாம். போகலாம். மேற்கு வாசலுக்கு  வெளியே வந்து பார்த்துட்டு அங்கிருந்து உள்ளே ஒரு க்ளிக்.

பகலில் வந்து பார்த்திருக்கணும். இப்போ நமக்கு வழிவாசல் இறம்புறம் ஒன்னும் சரியாத்தெரியலை. எடுத்த சில படங்களும் முக்காலிருட்டில்  சரியா வரலை. பொதுவா எனக்கு கோவில் போன்ற இடங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஃப்ளாஷ் பயன்படுத்த விருப்பமில்லை.

இந்த செங்கண்ணுர் பகவதி க்ஷேத்ரம் ஒரு சக்திபீடக் கோவில்.
புருஷன் மனைவி சண்டையில் மனைவியின் தீக்குளிப்பு  படிச்சிருக்கீங்க தானே?  இல்லைன்னா  இங்கே பார்க்கலாம்:-)


குடும்பச் சண்டையில் மனைவி தீக்குளிப்பு



மாமனார் வீட்டுக்கு வந்து ஆடித்தீர்த்தது

அம்பத்தியோரு துண்டுகளா வெட்டப்பட்ட சதியின் உடல் பாகங்கள்  விழுந்த இடங்களைத்தான் சக்தி  பீடம் என்று சொல்றாங்க. சதியின்  அடிவயிற்றுக்குக் கீழே உள்ள அரைப்பகுதி விழுந்த இடம்  இது என்று கோவில் சொல்லுது.. அஸ்ஸாமில் இருக்கும் காமாக்யா கோவிலையும்  இப்படி இதே பாகம் விழுந்த இடமுன்னுதான் சொல்றாங்க.  உடலைத் துண்டாக்கி எறியப்பட்ட போது இடுப்பின் கீழுள்ள அரைப்பகுதி  இங்கேயும் அஸ்ஸாமிலுமா  அரை அரையா விழுந்துச்சுன்னு வச்சுக்கலாம்.

இந்தக்கோவிலில்  ஒரு சிறப்புத்திருவிழா நடக்குது. த்ரிப்பூத்தராட்டு  என்ற பெயர் இந்த விழாவுக்கு. பகவதி வீட்டுவிலக்காகறாங்கன்னு  நடக்கும் விழா. தினமும் காலை அபிஷேகத்தின் போது  முதல்நாள்  சாமிக்கு உடுத்தி இருந்த புடவையைக் களையும்போது அதில் இருந்த ஒரு கறையைக் கண்ட மேல்சாந்தி (அர்ச்சகர்)  புடவையை , கோவிலுக்குப் பொறுப்பான பாரம்பரிய (தரவாடு) மடமான  வங்கிப்புழாவில் இருக்கும் மூத்த பெண்களிடம்  கொண்டுபோய்க் காட்டியிருக்கார். அவர்கள் இது வீட்டு விலக்கான தீட்டுஅடையாளம் என்றதும். அம்மன் சிலையை  அங்கிருந்து எடுத்து இன்னொரு அறையில் வச்சு, மூத்த பெண்கள் வெளியில் காவலுக்கு இருக்க ஏற்பாடு செஞ்சுருக்காங்க.  மூணுநாள் இப்படி வேறொரு அறையில் தங்கிய  அம்மனை  நாலாம் நாள்  அருகில் உள்ள  ஆற்றுக்குக் கொண்டுபோய் நீராட்டி ( ஆராட்டு) அலங்கரிச்சு யானை மேல் ஏற்றி ஊர்வலமாகக் கோவிலுக்குக் கொண்டு வந்து அம்மனின் சொந்த இடத்தில்  கருவறையில் மீண்டும் வைக்கிறாங்க.   இளம் கன்னியர் பூப்பெய்ததும் நடக்கும் விழா போலத்தான்.  அம்மன்   மீண்டும் கோவிலுக்குள் வரும் சமயம்,  சிவன் வாசலில் நின்று வரவேற்று, பிரகாரங்களில் இருவரும் ஊர்வலமாகப்போய் பின்னே தனிசந்நிதிகளுக்குப்போயிருவாங்களாம்.

இந்தியாவில் வேறெங்கும் இப்படி ஒரு விழா நடப்பதே இல்லையாம். ஐ மீன் சாமிக்கு.  சாமிக்கு அதிலும் பஞ்சலோக விக்ரஹத்துக்கு இப்படியெல்லாம் நடக்குமான்னு  கேள்வி கேட்கக் கிளம்பாம  இருந்தால்  நல்லது. கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான். இதையும் நம்பிட்டுப் போறதால் நமக்கென்ன நஷ்டம்?

மனிதன் தனக்குள்ள எல்லாமும் சாமிக்கும் இருக்கும் என்று  நம்பறான். அதனால்தானே  சாமியை மனிதரூபமாகச் செஞ்சு  நகை நட்டு, பட்டு, பீதாம்பரமுன்னு போட்டு அலங்கரிக்கிறோம். அன்பே கடவுள் என்றிருக்கும்போது சாமிக்குக் கோபம் வருமா என்ன?  ஆனால் நமக்குக் கோபம் வருதே. அதனால் சாமிக்குக் கோபம் என்கிறோம்.  சாமிக்குத்தம்  அதனால்தான் கஷ்டம் ஏற்படுதுன்னு  சொல்றோம்.  அசுரனை வதைத்த நாள்,  போருக்குப்போய் சம்ஹாரம் செய்தது,   ஜென்ம நக்ஷத்திரம் (பிறந்தநாள்) திருக்கல்யாண உற்சவங்கள்,  இப்படி எல்லாம்  நடத்தும்போது, இதையும் நடத்தினால் தப்பே இல்லை.

கொண்டாட்டங்கள் எது என்றாலும் ஊர்மக்கள், சொந்தபந்தம் எல்லாம் சேர்ந்து கூடிக்களித்து, ஆக்கித் தின்னு மகிழ்ச்சியா இருப்பதற்குத்தானே வழி செய்யுது.
ஆதிகாலத்தில்(!) மாதா மாதம் நடந்துக்கிட்டு இருந்த விழா இப்போ சில வருசங்களா வருசத்துக்கு மூணு, இல்லை நாலுமுறைன்னு நடக்குதாம்.  மே பி பகவதி  இஸ் கோயிங் இன்டு மெனொபாஸ்.  வருங்காலத்தில்  இந்த விழா நின்னு போனால்கூட வியப்பில்லை.   மக்கள் சிந்தனைகள் மாறிவர்றதுக்கு ஏற்பதான் கோவில்களும், சாமிகளும் இல்லையா?

இந்த சமயம் என் மனசில் ஒரு பழைய பாட்டு வந்து போச்சு. அச்சனும் பப்பயும் என்ற மலையாளப் படம் (1972) யேசுதாஸ் பாடியது. வயலார் எழுதிய அருமையான பொருள் அடங்கியது.

மனுஷ்யன் மதங்களை ச்ருஷ்டிச்சு
மதங்கள் தெய்வங்களை ச்ருஷ்டிச்சு
மனுஷ்யனும் மதங்களும் தெய்வங்களும் கூடி
மண்ணு பங்கு வச்சு, மனசு பங்குவச்சு....


உண்மைதான், இல்லை!!!!!


 இங்கே பகவதிக்கு வளை இடல் என்றொரு உற்சவமும் நடக்குது.  கோவிலின் வலைப்பக்கம் பார்த்தால்  சில படங்கள் கிடைச்சது.  அதை  சுட்டுக்கிட்டேன்.  எண்டே பகவதி... ரக்ஷிக்கணே!



இன்னொரு கதையும் இந்த பகவதிக்கு இருக்கு. இந்த பகவதிதான் சிலப்பதிகாரத்துக் கண்ணகி என்பவர்களும் உண்டு. மதுரை மாநகரை தீக்கிரையாக்கிட்டு அங்கிருந்து விடுவிடுன்னு நடந்து  இங்கே வந்து இந்தச் செங்குன்றுமேல் ஒரு மரத்தடியில்  நின்னு தவம் செய்தாள். அப்பதான் கோவலன், இந்திரனுடைய  புஷ்பக விமானத்தில் வந்து அவளை தேவலோகம் கொண்டு சென்றான் என்று ஒரு கதை. இதே கதையை கொடுங்கல்லூர் பகவதிக்கும் சொல்றாங்க.



பகலில் வந்துருந்தால் கோவிலை இன்னும் நல்லாப் பார்த்திருக்கலாமேன்னு மனசுஅடிச்சுக்கிச்சுதான்......

ஆட்டோ ஸ்டேண்டுக்கு வந்து ஒரு வண்டி எடுத்துக்கிட்டு  மூணு பேரும் கிளம்பினோம். அப்போ ஆட்டோக்காரரிடம், நல்ல வெஜிடேரியன் ஹோட்டல் இருக்கான்னு விசாரிச்சதில்  நம்மை நேரா ஆர்யாஸ்க்குக் கொண்டு விட்டார். லோக்கல் லேங்குவேஜ் தெரிஞ்சிருப்பதால் பயணம் ரொம்பவே சுலபமாத்தான் இருக்கு.

நம்ம திருநெல்வேலி ஆர்யாஸ் தானாம். கல்லாவில் இருந்த தின்னேலிக்காரர்  சொன்னார். எங்களுக்கு  ஸ்பெஷல் தோசை. நல்லாவே இருந்துச்சு.

 நூற்றியெட்டு திவ்ய தேசக்கோவில்களில்  சேரநாட்டுலே  பதிமூணு இருக்கு.  இதுலே ரெண்டு கோவில்களை (திருவனந்தபுரம்,திருவட்டாறு) முந்தையப் பயணங்களில் தரிசனம் செஞ்சுட்டதால்  மீதி இருக்கும் பதினொரு கோவில்களை இந்தப் பயணத்தில் தரிசிக்கத்தான் வந்துருக்கோம். இதில் செங்கண்ணூரைச் சுத்தியே அஞ்சு கோவில்கள் இருக்கு. மறுநாள்  என்ன பார்க்கலாமுன்னு  கொண்டு போயிருந்த  விவரங்களை கோபால் ஒரு பக்கம் பார்க்க, நான் இந்தமுறை மறக்காமல் கையோடு கொண்டு போயிருந்த  '108 வைஷ்ணவ திருத்தல மகிமை' (நர்மதா வெளியீடு) புத்தகத்தையும் எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.


கண்டிப்பா ஆண்கள் வேஷ்டி கட்டணும் என்று இருந்தால் சீனிவாசன்  உள்ளே வரமுடியாதேன்னு  அவரிடம் வேஷ்டி கொண்டு வந்தீங்களான்னு கேட்டால்.... இல்லையாம்.  லுங்கி வச்சுருக்காராம். பக்கத்துலே இருந்த துணிக்கடைக்குள் நுழைஞ்சு  ஒரு வேஷ்டி வாங்கிக்கொடுத்தோம்.அப்ப கடைக்காரர்  ராமேந்திரனுடன் இத்திரி ஸம்பாஷணம்.

ரொம்ப ஆர்வமா விவரம் சொன்னாங்க, அவருடன்  பேசிக்கிட்டு இருந்த நண்பர்கள் இருவரும்கூட.

செங்கண்ணூர் கோவில்களில் என்னென்ன பார்த்தீங்கன்னு  கேட்டாங்க. த்ருப்புலியூர்  மாத்ரம் என்றேன்.  பஞ்சபாண்டவர்கள்  இங்கே வந்துருந்தபோது ஆளுக்கொரு கோவில் கட்டுனாங்க. நீங்க பார்த்தது பீமன் கட்டியது. மற்ற நாலண்ணம் என்னென்னன்னு  சொல்லிட்டு, குந்தி கூட ஒரு கோவில் கட்டி இருக்காங்கன்னு புதுத்தகவல் ஒன்னும் சொன்னாங்க. எங்கேன்னு கேட்டதுக்கு மூணுபேருமா, தலையைச் சொறிஞ்சு யோசிச்சுக்கிட்டே நின்னாங்க:-)

ஆதித்யபுரம் சூரியன் கோவிலைச் சொல்றாங்க  போல. இது குந்தி,  கர்ணனுக்காகக் கட்டியதுன்னு   ரொம்ப காலத்துக்கு முன் எங்கோ வாசிச்ச நினைவு. போகமுடியுமான்னு தெரியலை. பார்க்கலாம்.

இன்னொரு ஆட்டோ பிடிச்சு மூவரும் பகவத் கார்டன்ஸ் வந்தோம். மூணே நிமிசத்தில் கொண்டு வந்து விட்டுட்டார். பேசாம நடந்தே வந்திருக்கலாமோ!  ஆனால்  இருட்டில் வழி?

நாளைக்குக் காலையில் ஆறுமணிக்குக் கிளம்பி கோவிலுக்குப்போய் வந்துட்டு  ப்ரேக்ஃபாஸ்ட்க்கு ஆர்யாஸுக்குப் போகலாம், கேட்டோ!

தொடரும்...........:-)



18 comments:

said...

சாமிக்கும் 'அந்த' மூன்று நாட்கள் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 29)= கொண்டாட்டங்கள் எது என்றாலும் ஊர்மக்கள், சொந்தபந்தம் எல்லாம் சேர்ந்து கூடிக்களித்து, ஆக்கித் தின்னு மகிழ்ச்சியா இருப்பதற்குத்தானே வழி செய்யுது.
ஆதிகாலத்தில்(!) மாதா மாதம் நடந்துக்கிட்டு இருந்த விழா இப்போ சில வருசங்களா வருசத்துக்கு மூணு, இல்லை நாலுமுறைன்னு நடக்குதாம். மே பி பகவதி இஸ் கோயிங் இன்டு மெனொபாஸ். வருங்காலத்தில் இந்த விழா நின்னு போனால்கூட வியப்பில்லை. மக்கள் சிந்தனைகள் மாறிவர்றதுக்கு ஏற்பதான் கோவில்களும், சாமிகளும் இல்லையா?= துளசி தளம் - நம்மையும் கேரள கோவிலுக்கு கூட்டிச் செல்கிறார் Tulsi Gopal மேடம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம்.

said...

இரு முறை இந்த கோவிலுக்கு சென்றுள்ளேன் அம்மா...

சொன்ன தகவல் புதிது...!

said...

அருமையான கோவில் சுவாரசியமான தகவல்கல்..//த்ரிப்பூத்தராட்டு // பற்றிய தகவல் நான் இதுவரை அறிந்திருக்கவில்லை.. அருமை.
நன்றி பகிர்வுக்கு.

said...

மனிதன்தானே கடவுளைப் படைத்தான். மனிதருக்கு இருக்கும் எல்லா அனுபவங்களையும் கடவுளுக்கும் கொடுக்கிறான். எல்லாவற்றிலும் நம்பிக்கை காணும் மக்களைப் பற்றி என்னசொல்வது தெரியவில்லை.

said...

சிறப்பானதோர் கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி டீச்சர். உங்கள் மூலம் நானும் சில கோவில்களை தரிசித்தேன். நன்றி.

said...

மனிதனால் கடவுளை முழுமையா உணர முடியாது. மனிதப் புலன்களுகுக்கும் அறிவுக்கும் உட்பட்டுதான் உணர முடியும். அதுக்கும் மேல உணர்ந்தவர்கள் அதற்கு மேல் மனிதராக இருப்பதில்லை.

பேண்ட்டுக்கு மேலையே வேட்டி கட்டிக்கிறதுதான் வசதி. இன்னும் வேட்டி மட்டுந்தான் கட்டனும்னு விதி வெச்சிருந்தா இந்த மாதிரி மீறல்கள் தவறில்லை. காலத்துக்குத் தக்க கோயில்ல சட்டை பேண்டோடு வர அனுமதிக்கனும்.

இத்தனை கோயில்கள் பாக்க அருள் கொடுத்த இறைவன் இன்னும் பல கோயில்கள் பாக்க அருளட்டும்.

எனக்கும் இந்த இடங்களைப் பாக்க ஆசையாத்தான் இருக்கு. பாப்போம் எப்போ கொடுத்து வெச்சிருக்குன்னு.

said...

விவரங்கள் அறிந்தோம் . பகிர்ந்தமைக்கு நன்றி !!

said...

பகவதி கோவில் மகிமைகள் அற்புதம். அதை நீங்கள் சொல்லி
இருப்பதும் அருமை. கூடவே வந்த திருப்தி. நன்றிங்கோவ்.

said...

வாங்க ரத்னவேல்.

வருகைக்கும் உங்கள் பக்கத்தில் பகிர்ந்தமைக்கும் நன்றி.

கூடுதல் வாசகர்கள் கிடைச்சால் வேணாமுன்னு இருக்குமா:-))))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

எங்களுக்கு இதுவே முதல்முறை. பகலில் பார்க்க வேண்டிய கோவில் இது!

தகவல் எனக்கும் புதிதே!

said...

வாங்க ரமா ரவி.

நன்றீஸ்ப்பா.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

தன்னைப்போல்தான் பிறரும் என்று உணராதவர் கூட தம்மைப்போல்தான் இறைவனும் என்று நம்புவது உண்மைதான்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நானும் உங்கள் பதிவுகளின் மூலம் நிறைய இடங்களையும் கோவில்களையும் ரசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.

நன்றி.

said...

வாங்க ஜிரா.

பேண்ட்ஸ்க்கு மேல் வேட்டி எப்படியோ அப்படியே ஸால்வார் கமீஸ்க்கு மேல் செட் முண்டு. வசதியாத்தான் இருக்கு.

புடவையைக்கூட ஆபாசமாக் கட்ட முடியும், கட்டிக்கிறாங்க என்பதை கோவில் பொறுப்பாளர்கள் உணர்ந்தமாதிரி தெரியலையே:(

கடவுளைப்பொறுத்தமட்டில்,

கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
என்பதே சரி.

அது ஒரு உணர்வு.

எனக்கு இந்தவயசில் வாய்ச்சது, உங்களுக்கு இன்னும் சீக்கிரமாக வாய்க்க அவன் அருளட்டும்! ததாஸ்த்து.

said...

வாங்க சசி கலா.

ஒரு முழு வாழ்நாள் போதாது, இந்தியக் கோவில்களை முழுசுமா தரிசனம் செய்ய என்பதே உண்மை.

கிடைச்சவரை திருப்தியா இருக்கக் கற்றுக்கொண்டுவிட்டேன்.

said...

வாங்க வல்லி.

கூடவே நீங்க வரும் தைரியம்தானே எனக்கும்!

said...

புதிதாக ஒரு கோவிலும் பல தகவல்களையும் தெரிந்து கொண்டேன்..

தோசை கண்களை கவர்கிறது. ஆர்யாஸ் கோவையிலும் இருக்கு. திருவனந்தபுரம் போயிருந்த போது ஆர்யாஸில் தான் வெள்ளை சாதமே சாப்பிட்டேன்....:)

said...

Always bring a dhoti (veshti) when you go to Kerala. It is an indirect way of promoting local cullture. Tamilnadu should follow it.