Monday, September 29, 2008

வாங்க வாங்க. இந்த வருசத்துக்கான கொலு வச்சாச்சு.

எல்லாரும் ஒன்பது இரவுகள் கொண்டாடும் நிலையில் வழக்கமாப் பத்து இரவுகள் கொண்டாடும் வீட்டில் இந்த வருஷம் பனிரெண்டு இரவுகளாம். விஜயதசமிப் பூஜை இந்த முறை விஜயதுவாதசிப் பூஜையாக மாறுகின்றது.

கொலுப் படிக்கட்டு வைக்க இந்த முறை கூடுதலா ரெண்டு கைகள். மகள் வீட்டில் இருந்து இங்கே வந்த ரெண்டு மர ஷெல்ஃப்களைப் பார்த்ததும் ஐடியா மனசுக்குள்ளே வந்துருச்சு. கொலுவுக்கான வழக்கமான இடம் பத்தாது,ஆனா அங்கே இருக்கும் சோஃபாவை நகர்த்துனா(??) அலங்கரிச்சுடலாம். எல்லாம் அளந்து பார்த்துருவொம்லெ.

அப்படியே நடுங்கிட்டார் கோபால். இந்த சோஃபாவை என்னாலே நகர்த்த முடியாது. தெரியும்....எனக்கு நல்லாவே தெரியும். 'வெஜிடேரியன் பலமில்லை':-) அன்னிக்கு(போனவாரம்) 'யாங்' வந்துருந்தப்பவே உதவிக்கு வச்சுக்கிட்டு இதையெல்லாம் செஞ்சுருக்கலாம். சொல்லவும் செஞ்சேன். அடுத்தவாரம்தானே..... நான் எல்லாத்தையும் செட் பண்ணித்தரேன்னு வாக்குறுதி.

இப்ப 'செகண்ட் பெஸ்ட்' என்னன்னு பார்த்தால் ஷோகேஸ் அருகில் இருக்கும் இடம் ஓரளவு சரியாகும். ஏற்கெனவே இருக்கும் அலங்காரப் பொருட்களுடன் கொஞ்சம் கூட்டமாத் தெரியும். இதுக்கெல்லாம் கவலைப்பட்டால் ஆகுமா?

இந்த முறை வீடியோ காஸெட்டுகளுக்கு வேலை இல்லையா? ஊஹூம்....அதெப்படி? அது இல்லாம வேலை நடக்காது. இந்த ஷெல்ஃப் மூணு படிகள்தான். நமக்கோ குறைஞ்சது அஞ்சு வேணும். ஆகி வந்த நம்பர். வீடியோ காஸெட்கள் வச்சு உயரம் சரிபார்த்தாச்சு. ஐடியா நல்லாவே லட்டாட்டம் ஒர்க்கவுட் ஆகுதே. பக்கத்துலே ஷோகேஸ் கண்ணாடிக்கதவு இருக்கு. காஸெட் நழுவுனா ஆபத்தாச்சே! 'கவலையை விடு. பக்காவாப் பொதிஞ்சு தரேன்'னு உக்காந்தார். எவ்வேழு காஸெட்கள். அதுக்கேத்த அளவில் தபால்பெட்டிக்கு வந்துசேரும் உள்ளூர் ஓசிப் பேப்பர். சரியாவருதான்னு பக்கத்துலேயே இருந்து கவனிக்க ஒருத்தரை நியமிச்சேன்:-)

கீதாவேற இன்னிக்கு கொலு இல்லைன்னு எழுதி இருந்தாங்க வேறொரு குழுமத்தில். நம்ம கேலண்டர் சொல்லுது நவராத்திரி ஆரம்பம்ன்னு. சந்தேகமே வேணாமுன்னு அம்மாவாசைக்கு முன்னேயே முந்திரிக்கொட்டையாட்டம் கொலுப்படி அடுக்குன அன்னிக்கே ஒரு பொம்மையை சாஸ்த்திரத்துக்குன்னு எடுத்து வச்சுட்டொம்லெ.பலகை பக்கவாட்டில் தெரியாமல் மறைக்கவும் ஒரு யானை வேலைப்பாடு செஞ்ச சுவரலங்காரத்துணி கிடைச்சது.


இந்தவருசம் கொலுவுக்கான தீம் வழக்கம்போல் யானை & பூனை.
யானைமுகத்தோனும் கலந்துகட்டி அடிச்சு ஆடறார்.அஞ்சு படிக்கட்டில் முதல் படி:

மரப்பாச்சியில் ஆவாஹனம் செஞ்ச விஷ்ணு & லக்ஷ்மி.இரண்டாம் படி : பிள்ளையார்ஸ் & தேவதைகள்
மூன்றாம் படி: யானைகள்

நாலாவது

நாலாம் படி : யானைகள்
அஞ்சாம் படி: பூனைகள். எகிப்தின் பூனைச்சாமிகள்.
தரையில்: குழந்தைகளுக்கான புத்தகங்கள்( மார்ஸிபானில் செஞ்சது)
பக்கவாட்டில் யானைகள் வரிசை.பண்டிக்கைக்கு அநேகமாச் சுண்டல் செய்யும் உத்தேசம் இப்போதைக்கில்லை. பழங்களே போதுமுன்னு சாமி சொல்லிட்டார். சரியா வந்துருக்காம். இன்ஸ்பெக்ஷன் முடிஞ்சது.
பொம்மைகள் அடுக்குனது ரொம்பக் களைப்பான வேலையாம்! சாமிக்குப் பின்னால் போய் ஒரு குட்டித்தூக்கம்.

நீங்க வந்தீங்கன்னா சுண்டல் ஐடியாவை மறுபரிசீலனை செய்வதாக உத்தேசம்.

கொலு ஆரம்பமாயிருச்சு. ஸ்டார்ட் ம்யூஜிக்......

எல்லாரையும் அன்புடன் அழைக்கிறேன். கொலுவுக்கு வாங்க.

அனைவருக்கும் பண்டிகை & விழாக்கால வாழ்த்து(க்)கள்.
நண்பர்களின் விருப்பத்தை நிறைவேத்தணுமே......சுண்டல் ( இன்னிக்குள்ளது) படம் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆமாம். இது ப்ளாக் ஐ பீன்ஸ் சுண்டல்தான். குளோஸப்புலே பார்த்தால் பெயர்ப்பொருத்தம் சூப்பரா இருக்கு. கண்ணும் அதைச் சுற்றி இருக்கும் இமைகளும் அட்டகாசம் இல்லே!!!!!!

ஆரம்பிச்சுட்டாங்கையா....ஆரம்பிச்சுட்டாங்க.

நியூஸியில் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் இதுதான். பகல்நேர சேமிப்பு. என்னத்தை சேமிச்சு........ எங்கேன்னு சேர்த்துவச்சு......


ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனுசனையும் கடிச்சுக்கிட்டே வந்து இப்ப வருசத்துக்கு 27 வாரம் (பாதி வருசத்துக்கும் மேலே) சேமிப்பாம்.
கடிகாரத்தையெல்லாம் ஒரு மணி நேரம் முன்னோக்கி வச்சுரணும். இப்ப உண்மையில் ஏழு மணியா?.... அப்ப இனிமேல் எட்டு.

யோவ்...... கடிகாரத்தை திருப்பிட்டா எல்லாம் அப்படியே மந்திரம் போட்டாப்புலே மாறிருமா? காலையில் காப்பித்தண்ணிக்குப் பரவாயில்லே... குடிச்சுவச்சுருவோம். மத்தபடி காலை உணவு வழக்கத்தைவிட ஒரு மணி முன்னாலே திங்கணுமுன்னா....... அதுக்கு வயிறு ரெடியா இருக்கவேணாமா? தொலையட்டும், ரெண்டு ஸ்லைஸ்க்குப் பதிலா ஒரு ரொட்டித் துண்டு. பகல் சாப்பாட்டுலேதான் இருக்கு........... 11 மணிக்குப் ஃபுல்கட்டு கட்ட முடியுமா?


பெரியவங்களை விடுங்க. நமக்கு ஏதோ (???)புரியுது (!!!) அளவைப் பாதியாக் குரை(!!வள்வள்ன்னு)ச்சுக்கிட்டுத் தின்னோமுன்னு பெயர் பண்ணிறலாம். புள்ளைங்க? இதுகளை நல்ல நாளிலேயே காலையில் பள்ளிக்கூடத்துக்கு எழுப்பறது கஷ்டம். இப்ப ஒரு மணி நேரம் முன்னாலே எழுப்புனா எப்படி? தூக்கச்சடவோடுத் தூங்கிக்கிட்டே ரொட்டியை முழுங்கிட்டுப் பள்ளீக்கூடம் போய் அங்கேயும் 'க்ரம்பி'யா உக்காந்து பாடம் படிச்சுட்டு 12 மணிக்கு (பழைய 11 மணிக்கே) பகலுணவுன்னா எப்படி?


மூணுமணிக்கு விடும் பள்ளிக்கூடம் வீட்டு வீட்டுக்கு வரும்போது உண்மை மணி ரெண்டு. இங்கே மாலை ஏழரைமணிக்குப் புள்ளைங்க படுக்கை போடும் நேரம். அப்போ உண்மையில் ஆறரை. தூக்கம் என்ன ஸ்விட்ச் போட்டவுடன் வரும் சமாச்சாரமா?

அரசாங்கம் பண்ணும் அக்கிரமஅட்டகாசத்தில் மனுசனின் உடம்புக் கடிகாரம்( பாடி க்ளாக்) தறிகெட்டு ஓடுது. இப்படி அப்படின்னு மாத்தி மாத்திவச்சா அதுக்குத் தகுந்தபடி ஆட அதுக்கு என்ன பைத்தியமா? கொஞ்சம் கொஞ்சமாப் பழகிக்கும் உடம்புக்கு இன்னொரு அதிர்ச்சி இந்த சேமிப்பு முடிஞ்சதும் வரும். அப்ப ஒருமணிநேரம் தாமதமா எல்லாம்.....
விக்கிரமாதித்தன் இங்கெல்லாம் வந்து கடாறு நாடாறு ஆறாறுன்னு சொல்லிக் கொடுத்திருப்பானோ?.... என்னதான் சொல்லுங்க வெள்ளைக்குக் கொஞ்சம் புத்திமட்டுதான்........ என்ன ஏதுன்னு தீர ஆராயாமல் 'இட்ஸ் க்ரேட்'ன்னு ஆரம்பிச்சுருவாங்க.

சட்டம் போட்டு மாத்திவச்ச புண்ணியவான்கள், கடைசிநாள் பார்லிமெண்ட் கூட்டம் முடிச்சு லீவு விட்டுக்கிட்டாங்க. கடைசிநாளுன்னு பாராளுமன்றத்தில் செஞ்ச கூக்குரல்கள் எல்லாம் பள்ளிக்கூடத்துப்பசங்கள் கெட்டதுபோங்க. இனி நவம்பர் எட்டுக்கு வரும் தேர்தல் முடிஞ்சுதான் எல்லாம். அதுவரை அவிழ்த்துவிட்ட.......கள்.

இவுங்க எப்படித்தான் எனர்ஜியை சேமிப்பாங்கன்னு புரியலையே...... விவசாயிகளுக்கும், பண்ணை ஆட்களுக்கும் நல்லது(??) செய்றோமுன்னுதான் இதை ஆரம்பிச்சாங்களாம். இப்பப் பண்ணை ஆட்களே இருட்டுலே போய்ப் பால் கறக்க முடியலை. கொஞ்சம் தாமதமானாலும் பால் வண்டிகள் வந்து காத்துக்கிட்டு இருக்கு. அது வரும்போது கறந்தபால் ரெடியா இருக்கணுமுன்னுதான் ஒப்பந்தம். பேஜாரா இருக்குன்னு சொல்றாங்க.


பாவம் மாடுகள்! அதுகளையும் தூங்கவிடாம வழக்கத்துக்கு ஒரு மணிநேரமுன்னமே பாலைக் கொடு பாலைக்கொடுன்னு பிடுங்குனா அதுகள்தான் என்ன செய்யும்? அதோட பாடி க்ளாக்கையும் முறுக்குனா எப்படி?


வழக்கமா ஆறுமணிக்கு எழுந்திருக்கும் குடும்பங்களில் இப்ப அஞ்சு மணிக்கே எழவேண்டி இருக்கு. இருட்டுலே தடவித்தடவி வீட்டுவேலை செய்ய முடியுமா? விளக்கைப் போட்டுக்கத்தானே வேணும். இன்னும் குளிர்விடாமத் துரத்துவதால் ஹீட்டர்களையும் ஓடவிடணும். எல்லாருக்கும் ஆன் பண்ணத்தான் தெரியும். ஆஃப் பண்ணத் தோணாது..... பத்துமணி ஆகும்போது பார்த்தால் குளியலறை ஹீட்டர்கள் ஜெகஜ்ஜோதியா ....... இந்த அழகுலே 'அந்த சேமிப்பு' எங்கே இருக்கு?


மாலை ஆறுமணி செய்தியை அஞ்சுமணிக்கேப் பார்த்து, பெரியவங்களுக்கானப் பத்துமணிப் படுக்கைக்கு ஒம்பது மணிக்கே போய்...... ஐயோ......இப்படிப் புலம்பவச்சுட்டாங்களே வருசாவருசம்..........

வடகோளத்தில் டே லைட் சேவிங் இப்ப அநேகமா முடிஞ்சுருக்குமுன்னு நினைக்கிறேன். அந்தப் பகுதியில் இருக்கும் பதிவுலக அன்பர்கள் இதன் பலாபலன்களைக் கொஞ்சம் சொல்லுங்கப்பா. உண்மையில் இதனால் ஏதாவது பயன் உண்டா? குளிர்காலம் முடிஞ்சதும் இயற்கையாவே காலையில் கொஞ்சம் சீக்கிரம் விழிப்பு வருவது உண்டுதான். அப்பச் சீக்கிரம் எழுந்துக்கும் மக்கள் அந்த நேரத்தை உடற்பயிற்க்கோ, நடைப்பயிற்சி, தோட்டவேலை இப்படி எதுக்காவதுத் தாமாய்ப் பயன்படுத்திக்குவோம்தானே...... ஒன்னுமே செய்யலைன்னாலும் கொஞ்சம் ரிலாக்ஸா வேலைக்கோ, வெளியிலோ, பள்ளிக்கூடத்துக்கோக் கிளம்பலாம். யாரையும் அவுங்கவுங்க விருப்பத்துக்குச் செயல்படவிடாம அரசாங்கம் செய்யும் அராஜகத்துக்கு ஒரு முடிவு கட்டணுமுன்னு (என்னைத்தவிர) யாருக்கும் தோணலையே.....

இப்போதைக்குப் புலம்பலை ஒதுக்கிவச்சுட்டுக் கொலு வேலையைப் பார்க்கப்போறேன். ராகு காலம்கூட ஒரு மணி நேரம் பிந்தி வருது! எல்லோருக்கும் ஏழரை ஒன்போதுன்னா எங்களுக்கு எட்டரை பத்து.

Friday, September 26, 2008

அண்ணன் Vs அக்கா நடுவிலே 'நான்' (மரத்தடி நினைவுகள்)

முன் குறிப்பு:

இது உண்மையில் ஒரு உப்புமாப் பதிவு. எனக்குமட்டும் உப்புமா கிண்டித்தரும் ஆசை இருக்காதா? ஹூம்.....


அண்ணன் Vs அக்கா நடுவிலே 'நான்'

எங்களுக்கு இடமாற்றம் வழக்கம்போல வந்தது. இந்தமுறை மேலூர். அதாங்க நம்ம 'பசுநேசன்' ஊரு. மாற்றம் எப்பவும் கல்வி ஆண்டு முடிவிலதான் வரும் . நாங்களும் அப்படியே அந்த ஊர் பள்ளிக்கூடங்களுக்குப் போய் சேர்ந்துடுவோம்.'அட்மிஷன்' கஷ்டமெல்லாம் இல்லை. எல்லாம் 'போர்டு ஸ்கூல்'தானே.

அங்கே, ஆஸ்பத்திரி இருந்த இடம் 'அக்ரஹாரம்'னு சொன்னா நம்பமுடியுதா? ஆனால் அதுதான் உண்மை. வழக்கம்போல ஆஸ்பத்திரிக்கு நேரெதிரே ஆரம்பப்பள்ளி. மத்த ஊருகளிலே ஒரு 5 நிமிஷம் நடையிலே
இருக்கறது, இங்கே அநியாயத்துக்குப் பக்கம். ரொம்ப அகலம் இல்லாத தெரு. ஒரு பத்து எட்டு( சின்னக் காலு ஆச்சுங்களே)லே ஸ்கூல் கேட். கேட் ன்னு சொன்னாலும் அது ஒரு சாதாரண வீட்டுக் கதவு மாதிரிதான்
இருக்கும். அதை மூடவே மாட்டாங்க. கட்டடமும் ஒரு வீடு மாதிரிதான் இருக்கும். ஸ்கூல் நடத்துவதற்காக சில வீடுகளையே ஸ்கூலா மாத்திட்டாங்க. மாடி ஏறிப் போனா, தெருவைப் பாத்துருக்கும் சாய்வான கூரைஇருக்கற இடம்தான் என் வகுப்பு. அங்கேயிருந்து பார்த்தா, நேரா, நம்ம வீடும், ஆஸ்பத்திரியும், பின்னாலே இருக்கற புழக்கடையும்கூடத் தெரியும். மாடியாச்சுங்களே.

வீடுங்க எப்படி ஸ்கூல் ஆச்சோ, அதேபோல ஒரேமாதிரி ரெண்டு வீடுங்க சேர்ந்ததுதான் ஆஸ்பத்திரி. பாருங்க! அந்தக்காலத்துலேயே 'ட்யூப்ளெக்ஸ்' கட்டடம்!. அதுலே ஒண்ணு நமக்கு வீடு, இன்னொண்ணு
ஆஸ்பத்திரி.ரெண்டு கட்டடத்துக்கும் சேர்ந்து முன்னாலே கம்பி அழி போட்ட ஒரு நீஈஈஈஈஈஈஈஈள வெராந்தா.
ஏன்னா அங்கே குரங்குங்க தொந்திரவு ஜாஸ்தி. புழக்கடைக் கதவை எப்பவும் சாத்திவைக்கணும்.சிலசமயம் குரங்கு வீட்டுக்குள்ளே வந்திரும். நாங்கெல்லாம் கூச்சல்போட்டு விரட்டுவோம். ஒருதடவை, குரங்கு சுடு சோத்துக்குள்ளே கையை விட்டுடுச்சு. ரொம்ப கத்துச்சு. தோட்டக்காரன், தூரமா நின்னுகிட்டு, ஒரு கம்பாலே கையை வெளியே தள்ளி எடுத்துவிட்டான்.பாவம், கத்திகிட்டே ஓடுச்சு.

தெருவிலே, நம்ம பக்கம் மட்டும், பூவரச மரங்கள். அதுவே காம்பெளண்ட் சுவர்மாதிரி வரிசையா நிறைய இருந்துச்சு. அந்த பூவரச மொட்டுங்களை, பம்பரமாட்டம் தரையிலே சுத்தி விளையாடுவோம்.
அந்த மரங்கள் பூக்கற சமயம், என்னோட வகுப்பிலே இருந்து பாத்தா ரொம்ப நல்லா இருக்கும். நல்ல இள மஞ்சள் நிறம்! அக்ரஹாரத்துலேயே இருந்ததாலே 'அவாளை'ப் போல பேசவும் தன்னாலே வந்துடுத்து! க்ளாஸ் நடக்கறச்சே
தூத்தம்( தீர்த்தம்) குடிக்கறதுக்குக்கூட நம்மாத்துக்குதான் போவேன். 'எதிராம்' இல்லையோ!

இப்படியே நாள் போயிண்டிருந்தால் வாழ்க்கையிலே ஏதாவது சுவாரஸ்யம் இருக்குமா?

திடீரென்று, அம்மாவுக்கு மாற்றல் வந்தது.அப்போ 'பிப்ரவரி'மாசம். ஏப்ரல் மாதம்வரை அங்கேயே இருப்பதற்கு, தலைமை அலுவலகத்தில் எவ்வளவோ கேட்டுக்கொண்டாலும் அனுமதி கிடைக்கவில்லை. அவர்களுக்கு என்ன நிர்பந்தமோ? ஒரே ஆறுதல் என்னன்னா, நாங்கள் மீண்டும் 'வத்தலகுண்டு'க்கே போறோம்.

எங்கள் வீட்டில் எப்போதும் யாராவது தூரத்து உறவினர்கள், வீட்டு நிர்வாகத்துக்கு உதவியாக இருப்பாங்க. ஆனால்அந்த சமயம் யாருமே இல்லை.அப்போது பெரியக்காவுக்குக் கல்யாணம் ஆகி, முதல் குழந்தையும் பிறந்திருந்தது. ஒரு மாசத்துக்கு முன்புதான், மாமா வந்து பிரசவத்துக்கு என்று வந்திருந்த அக்காவையும்,மூன்று மாதமேயான குழந்தையையும்
கூட்டிட்டுப் போனார். நாங்க இப்ப நாலேபேருதான் வீட்டுலே. நானு, அம்மா, சின்னக்கா அப்புறம் அண்ணன்.

சின்ன அக்காவுக்கும், அண்ணனுக்கும் ஒண்ணரை வயசுதான் வித்தியாசம். அக்காதான் பெரியவுங்க. ஆனா படிப்புலே அக்கா, அண்ணனை விடவும் ஒரு 'ஸ்டேண்டர்ட்' கம்மி. அது ஏன்னா, அக்கா, எங்க சித்தப்பா வீட்டுலேயே வளர்க்கப்
பட்டாங்களாம். அப்ப ஆரம்பப் பள்ளியிலே அவுங்க படிச்சது தெலுங்கு மொழியிலே. அப்பல்லாம் 'சிங்காரச் சென்னைக்கு மெட்ராஸ், பட்டணம் என்ற பேருங்க இருந்ததாம். ஆந்திரா, தமிழ்நாடு என்ற வேற்றுமையெல்லாம் இல்லாமலிருந்ததாம்.


நாங்களும் வீட்டுலே தெலுங்குதான் பேசிகிட்டிருந்தோம். அம்மாவுக்கு, மதுரை ஜில்லாவிலே வேலை கிடைத்ததும், புது இடமா இருந்ததாலே, பிள்ளைங்களைக் கொஞ்சநாள் சொந்தக்காரங்ககூட விட்டுட்டுப் போனாங்களாம். நல்ல வேளை!
நான் அப்ப பிறக்கலே!

அப்புறமா, அம்மா வேலையிலே நல்லபடியா 'செட்டில்' ஆனபிறகு, பிள்ளைங்களைக் கூட்டிகிட்டாங்களாம். தெலுங்கு
படிச்ச பொண்ணை, திடீருன்னு தமிழ் படிக்க சேர்த்ததாலே கொஞ்சம் கஷ்டமாய் போச்சு. அதனாலே சின்ன வகுப்புலே சேரும்படியாச்சு.

ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டேன் பாருங்க. அக்காவும் அண்ணனும் பேசிக்க மாட்டாங்க! அண்ணனுக்கு விவரம் தெரியாத வயசுலே அக்கா, சித்தப்பா வீட்டுலே இருந்தாங்களா, அப்புறம் அம்மா கிட்ட திரும்பி வந்தப்ப,
அண்ணன் நினைச்சாராம், அது யாரோ, எங்கிருந்தோ வந்ததுன்னு. அதுவுமில்லாம, சித்தப்பா வீட்டுலே அக்காவை,ரொம்பச் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருந்தாங்களாம். பிடிவாதம் கூடுதலாம். (நாங்க மட்டும்
குறைச்சலா என்ன?)அண்ணனும் அக்காவும் எப்பப்பாத்தாலும், எல்லாத்துக்கும் சண்டை போட்டுட்டே இருப்பாங்களாம். ஒரு நாள் அம்மாவுக்குத்தாங்க முடியாமப் போய், கோவத்துலே இப்படி சொல்லிட்டாங்களாம்," மானம் ரோஷம் இருந்தால் ஒருத்தருக்கொருத்தர் பேசக் கூடாது".

பேச்சு வார்த்தையில்லாததாலே சண்டை நின்னுபோச்சு. வீட்டுலே சத்தம் இல்லை! ஆனா, ஒரே வீட்டுலே இருந்துகிட்டே விரோதிங்கமாதிரி இருந்தாங்க! மழை வந்துச்சுன்னு வையுங்க, வெளியிலே காயற துணிங்களை எடுக்கணும்னா,
மறந்துங்கூட ஒருத்தர் மத்தவுங்க துணிங்களை எடுக்க மாட்டாங்க! கவனமா அங்கேயே விட்டுட்டு வந்துடுவாங்க! வருஷம் போய்கிட்டிருந்திச்சு. இதுக்குள்ளே, நானும் பிறந்து, வளர்ந்து, ஸ்கூல் போய்கிட்டிருந்தேன்.

அம்மா, கட்டாயமா வத்தலகுண்டு போயே தீரணும். எங்க படிப்பு அந்த வருஷம் பாக்கி இருக்கு. "ரெண்டே ரெண்டு மாசம்தானே. நாங்க பாத்துக்குறோம்" னு அங்கேயிருந்த, கம்பெளண்டரும், நர்சம்மாவும் சொன்னதாலே, அம்மா எங்க
மூணு பேருக்கும் ஒரு வீடு பாத்து, குடித்தனத்துக்கு ஏற்பாடு செஞ்சிட்டு, வத்தலகுண்டு போயிட்டாங்க. எல்லாம் என் நேரம்!!!

அந்த வீடு, ரெண்டுதெரு தள்ளி இருந்துச்சு. அக்ரஹாரம் தெரு கிழக்கு மேற்கா இருந்துச்சு. மேற்காலே போனா, கொஞ்ச தூரத்துலெ கடைவீதி வந்துரும். கிழக்காலே போனா, அது போய் ஒரு குறுக்காபோற தெருவுலே சேரும்.அந்தத் தெருவுக்கு அந்தப்பக்கம் ஆறு ஓடும்.இந்த ஆத்துலேதான், காலையிலே எல்லா மாமி, மாமாங்களும் குளிச்சிட்டு, அங்கே ஒரு அரச மரத்தடி மேடையிலே இருக்கற புள்ளையாருக்கும் ஒரு குடம் தண்ணி ஊத்திக் கும்பிட்டுட்டு போவாங்க. நாங்க தினமும் அந்த மேடையில ஏறி விளையாடுவோம். அங்கிருந்து சோத்துக்கைப் பக்கம் நடந்தா குறுக்கே இன்னொரு பெரிய ரோடு.
இந்தப்பக்கம் ஆத்துக்குமேலே ஒரு பாலம். அடுத்தபக்கம் வரிசையா கடைங்க. அதுலே ஒரு ஹோட்டல் கூட இருக்கு.

நாம எந்தப்பக்கமும் திரும்பாம நேரா அந்த ரோடுக்கு குறுக்காலே நடக்கணும். இது ஆத்தை ஒட்டியே போற தெருவாச்சே. அங்க மூணு வீடு தள்ளி, ஒரு 'கேட்'டு வரும். அதுக்குள்ளே ஒரு அஞ்சாறு வீடுங்க இருந்துச்சு. அங்கதான், நர்சம்மா வீடு. அவுங்க வீட்டுக்கு எதிர்லே, ஒரு வீடு தள்ளி இருந்துச்சு எங்களுக்குப் பார்த்த வீடு. எங்கவீட்டுக்கும், நான் சொன்ன ஹோட்டலுக்கும் இடையிலே ஒரே சுவர்தான்.எப்பவும் ஒரே சத்தமா இருந்துச்சு. இந்தபக்கம் நாங்க. அடுத்த பக்கம்
ஹோட்டலோட அடுக்களை.அங்கே யாராவது, தோசை சாப்புட வந்தாங்கன்னா, ' ஒரு ஸ்பெஷல்'னு உரக்க ஒரு குரல் வரும். அதுக்கு ஐஞ்சு வினாடிக்குள்ளே 'சொய்ங்'னு ஒரு சத்தம். தோசை ஊத்தறதுதான். எங்களுக்கு இது ரொம்ப தமாசா இருந்துச்சு. அங்க ஒரு தோசைன்னா, நாங்க இங்க 'சொய்ங்னு கத்துவோம். அம்மாவுக்கு அந்த இடம், சத்தம் எல்லாம் பிடிக்கலே, ஆனா எங்க பாதுகாப்புக்கு பிரச்சனையில்லைன்னு இருந்தாங்க.

எங்களுக்கு நிறைய காசும் குடுத்துட்டு போனாங்க.எங்களுக்கெல்லாம் ராத்திரி சாப்பாட்டுக்கு நர்சம்மா வீட்டுலே ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அங்கேயே போய் சாப்பிட்டுக்குவோம். காலையிலேயும், அந்த ஹோட்டல்லே, இட்லி, தோசைன்னு வாங்கிடுவோம். மத்தியான சாப்பாடுதான் தகறாரா இருந்திச்சு. நர்சம்மா வீட்டுலே, மத்தியானதுக்கு ஆக்க மாட்டாங்க. பழய சோறுதான் சாப்புடுவாங்க. எனக்குப் பரவாயில்லே, ஸ்கூல்லுக்கு கிட்டே என்கிறதாலே, பகலுக்கு ஹோட்டலிலேயே ஏதாவது வாங்கலாம்.கையிலேயும் காசு நடமாட்டம் இருந்துச்சு. தனியா விட்டுட்டுப் போறோமேன்னு அம்மா, என்கிட்டே
நிறைய காசு தந்திருந்தாங்க! அக்கா, அண்ணன் ரெண்டுபேரு படிக்கிறது மேல்நிலைப்பள்ளியாச்சா, அது கொஞ்ச தூரத்துலே இருந்தது. அங்கே அக்கம் பக்கத்துலே கடைகள், ஹோட்டல் ஏதும் கிடையாது. அதனாலே அக்கா ஒரு வழி கண்டு பிடிச்சாங்க. அவுங்களே ஏதாவது வீட்டுலேயிருந்து எடுத்துட்டு போனா நல்லதுன்னு. அக்கம் பக்கத்துலே கேட்டு, 'உப்புமா' செய்யறதுக்கு கத்துகிட்டாங்க. தினம் காலையில் உப்புமா செய்வாங்க. எங்க ரெண்டுபேருக்கு மட்டும்.

அண்ணன் இது நல்ல ' ஐடியா' ஆச்சேன்னு 'காப்பி'அடிச்சுட்டார். அவரும் தினமும் காலையில் உப்புமா செய்வாரு. எங்க ரெண்டுபேருக்கு மட்டும். அதுக்கு வேண்டிய சாமான்களை நர்சம்மா வாங்கிட்டு வந்தாங்க.பாத்திரம்னு ஒரு இரும்பு
வாணலியும் கரண்டியும் அவுங்க வீட்டிலிருந்தே குடுத்தாங்க. ஆரம்பிச்சிடுச்சு போட்டி!

யார் மொதல்லே எழுந்திருக்காங்களோ அவுங்க அடுப்பைப் பிடிச்சிக்குவாங்க! அவுங்க வேலை முடியறவரைக்கும் அடுத்த ஆள் காத்திருக்கணும்! இதுனாலே காலையில் சீக்கிரம் எழுந்துப்பாங்க. ரெண்டுபேரும் தூங்க மாட்டாங்க போல!
அக்கா பொதுவாவே சீக்கிரம் எழற ஆளு. அவுங்க உப்புமா செஞ்சிட்ட வாணலியைக் கழுவி வச்சிருவாங்க. அப்புறம் அண்ணன். அண்ணன் மொதல்ல அடுப்பைப் பிடிச்சிட்டார்னா,அவ்வளதான். உப்புமா செஞ்சிட்டு,'டிபன் பாக்ஸ்'லே எடுத்து வச்சிட்டு, வாணலியைக் கழுவாமலேயே போட்டுடுவாரு. அப்புறம் அடுப்பையும் நல்லாத் தண்ணி தெளிச்சு, ஒரு நெருப்புக் கங்கில்லாமல் அணைச்சிருவாரு. நாந்தான், பக்கத்து வீட்டுலேபோய் காஞ்ச சாம்பலும், நெருப்பும் வாங்கிட்டு வரணும், வற வற''ன்னு இருக்கற வாணலியையும் தேய்க்கணும் அக்காவுக்காக. எனக்காக ரெண்டுபேரு வச்சிருக்
கறதையும் தின்னணும். அக்காது நல்லா இருக்கும். அண்ணன் செஞ்சது ரொம்ப சுமார். ஆனா சொல்ல முடியாது.

சமையல் முடிஞ்சதும் இன்னொரு கொடுமை ஆரம்பிக்கும். முதல்ல சமையலை முடிச்சவுங்க '·ப்ரீ'யா இருப்பாங்கல்ல! அவுங்க எனக்கு தலைவாரி பின்னிவிடுவாங்க! அண்ணனுக்கு பின்னவே வராது. அக்கா நல்லா பின்னுவாங்க.அக்கா நல்லாப் பின்னுனதை அண்ணன் அவுத்துட்டு, அவரு பின்னிவிடுவாரு.கண்ணாடிலே பாக்கறப்ப அசிங்கமா இருக்கும். அண்ணன்
அசிங்கமா பின்னுனதை அக்கா அவுத்துட்டு அழகாப் பின்னுவாங்க. ஸ்கூல் போற நேரம் வர்ற வரைக்கும், இவுங்ககிட்டே மாட்டிகிட்டு அழுதுகிட்டிருப்பேன். அப்புறம் ஸ்கூலுக்குப் போறப்ப அப்படியே ஆஸ்பத்திரிக்குப் போய், அங்க இருக்கற ஆயா கிட்டே தலை பின்னிகிட்டுப் போவேன்


அந்த வாரக்கடைசிலே ஒரு நாள் அம்மா வந்தாங்க. நான், ஆரம்பிச்ச அழுகையை நிறுத்தவேயில்லை. அவுங்க ரெண்டுபேருக்கும் நல்லா திட்டு கிடைச்சது. அப்புறம் கூட அவுங்க இந்தக் கொடுமையை விடலே. ஆச்சு ஒரு
அஞ்சு வாரம். அண்ணனுக்கு எல்லா பரிட்சையும் முடிஞ்சது. அம்மாவோட உத்தரவுப்படி, மறுநாளே அவரு 'வத்தலகுண்டு'க்கு கிளம்பிட்டார். அப்பாடான்னு இருந்தது எனக்கு. அடுத்த ஒரு வாரத்திலே அக்காவுக்கும் பரிட்சை முடிஞ்சது. சின்ன ஸ்கூல்தான் எப்பவுமே கடைசியா மூடுவாங்க. எனக்காக அக்கா இங்கேயே இருந்தாங்க. என்னோட பரிட்சையும் முடிஞ்சு, லீவு விட்டுட்டாங்க.மறுநாள் அம்மா வந்தாங்க எங்களைக் கூட்டிட்டுப் போகறதுக்கு. வீட்டைக் காலி செய்யறப்ப என் ·ப்ரெண்டு லலிதா வந்து, அவளோட விலாசம்
எழுதுன காகிதத்தைக் குடுத்தா. அதைக் கையிலேயே வச்சிருந்தேன். அப்புறம் கிளம்பற அவசரத்துலே மூட்டையிலிருந்த ஒரு டப்பாவிலே போட்டுட்டேன்.

வத்தலகுண்டு வந்து சேர்ந்த பிறகு, அஞ்சாருநாளைக்குப் பிறகு, 'அட்ரஸை'தேடிக்கிட்டிருந்தேன். எந்த 'டின்'னுன்னு தெரியலே. அப்புறம், வெல்லம் போட்டுவச்சிருந்த டப்பாவிலிருந்து,(திருடித்தின்னக் கையை விட்டப்ப)ஒரு காகிதம் கிடைச்சது. அதுதான்......ஆனா, எழுத்தெல்லாம் ஈரவெல்லத்துலே காணாமப் போயிருந்துச்சு.


அம்மா, ஏதோ கோவத்துலே ரெண்டுபேரையும் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாலும், அவுங்களுக்கு இதே ஒரு கவலையாவும் ஆகிப்போச்சு. ரெண்டு பேருக்கும் என்ன இப்படி ஒரு பிடிவாதம் ? இந்தப் பிடிவாதம் மறையவே
யில்லை. சின்ன அக்காவுக்கு, பிரசவத்துலே ஏற்பட்ட சிக்கல்லே
அவுங்க உயிரை இழக்கும்படி நேரிட்டது.கடைசிவரை அவுங்க பேசிக்கவேயில்லை!


நன்றி: மரத்தடி 28 ஆகஸ்ட் 2004
===================================

Thursday, September 25, 2008

என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்.....

முந்தாநாள் ஊரைச் சுற்றியதுன்னா, இன்னிக்கு?

இது நம்ம புழக்கடைத் தோட்டத்தில் சுத்திச் சுத்தி எடுத்ததுதான்.திகட்டத் திகட்டப் பூக்கள்.
Arum Lily


Polyanthus . இதில்தான் எத்தனை வகை!!!!!


Saxifrage
RhododendronHyacinth

மொட்டுவிட்டிருக்கும் bogainvillaSnowballsபெயர் தெரியாப் பூக்கள்.


செப்டம்பர் ஒன்னுதான் இங்கே வசந்தகாலம் ஆரம்பமாகுதுன்னு இந்தச் செம்பருத்திக்குக்கூடத் தெரிஞ்சுருக்கு பாருங்களேன்!!!


ஐலா வீட்டு மரம்
எல்லாத்துக்கும் சிகரம் வச்சதுபோல் நம்மவீட்டுக் கருப்பு ரோஜா:-)


அன்பாக வாழ்த்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் இந்தப் பூக்கள் சமர்ப்பணம்.

நன்றி நன்றி நன்றி.

Tuesday, September 23, 2008

நாலில் இருந்து ஐந்துக்கு ஒரு நகர்வு

இன்றோடு நாலு வருசம் முடிஞ்சு அஞ்சாவது வருசம் ஆரம்பம் ஆச்சு. நிறைய எழுதுனேன்னு தெரியுது....ஆனால்.......... நிறைவா எழுதுனேனா?
பயனுள்ளதா இருந்துச்சா? வகுப்பு மாணவர்கள் எதாவது நல்லதைக் கத்துக்க முடிஞ்சதா? இல்லை, தூங்க வச்சேனா?

சொற்களைக் கொண்டு ஆடும் சித்து விளையாட்டு இன்னும் கைவசமாகலை. ஒவ்வொருத்தர் எழுதறதைப் படிக்கும்போது....ஹைய்யோ....
நாமும் எழுதறோமேன்னு இருக்கு.....

புள்ளிவிவரம் பார்க்காம இருக்க முடியாது என்பதால் இதுவரை எழுதுன பதிவுகள் இங்கே துளசிதளத்தில் 765.

கவுண்ட்டரின் சத்தியப்பிரமாணப்படி வந்து போனவங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துச் சொச்சம். நெசமா இருக்குமான்னு எனக்கு ஒரு சந்தேகம்தான். ஆனாலும் 208 வாரத்துக்குன்னு கணக்கெடுத்தால் இருக்க வாய்ப்பு உண்டு. ஆறுமாசத்துக்கும் மேலா 185597ன்னு நின்னா நின்ன இடத்தில். ஆனால் வாராவாரம் 800க்கும் 1100க்கும் இடையில் எதாவது நம்பர் 'கவுண்ட்டர்' அனுப்பும் தகவலில் இருக்கும். லாக் அளவை 500க்கு மாத்திக் கொடுத்துருக்காங்க. அது நிறைஞ்சு வழியுதேன்னு விண்ணப்பம் போட்டேன். அம்புட்டுதான். கை நீட்டாதே.... இனி கிடையாதுன்னு அருள்வாக்கு.

அதெப்படி செப்டம்பர் 24, 2004 சரியான தேதியை நினைவு வச்சுருக்கேன்னு கேப்பீங்க...... எனக்கும் மறதி வந்துறக்கூடாதுன்னுதான் ஆரம்பிக்கும்போதே மறுபாதியின் பொறந்தநாளொடு இதைக் கோர்த்துவிட்டுருக்கேன். ஆகக்கூடி இன்னிக்கு ரெண்டு பொறந்தநாட்கள் நமக்கு:-))))))

தனியாப் பூக்கள் வாங்கிப் பரிசும் பாராட்டுமாக் கொடுக்கணுமா? இருக்கவே இருக்கு 'நம்மாத்துப் பூக்கள்' னு அதுகளையே நாளைக்கு இங்கே போட்டால் ஆச்சு.

என்னுடைய அட்டகாசங்களையெல்லாம் சகித்துக்கொண்டு அன்பும் ஆதரவுமா இருக்கும் 'பின்னூட்டப் பிரேமன்' கோபாலுக்கு இனிய பொறந்தநாள் வாழ்த்து(க்)களை இங்கே சொல்லிக்கறேன்.

துளசிதளத்தின் ஆதரவாளர்களான சகபதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நட்புவட்டம் பெருசா வளர்ந்து இருக்கு. தொடர்ந்து அன்பைப் பொழியவேணுமுன்னு வேண்டுகின்றேன்.
என்றும் அன்புடன்,
துளசி.

Monday, September 22, 2008

உண்மையைச் சொல்லு..... காலண்டர் வச்சுருக்கேதானே?....

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைன்னு புளுகாதே. அதெப்படிச் சொல்லி வச்சமாதிரி ஒரே நாளில் இப்படிப் பூத்துக்குலுங்க முடியுது? இல்லேன்னா ரகசியமொழி உங்களுக்குள்ளே இருக்கா?

செர்ரீப் பூக்கள்

வசந்தம் வந்துச்சுன்னு உள்ளூர் நாள்காட்டியில் சொன்னாலும் உடம்புக்கு இன்னும் குளிர் விட்ட பாட்டைக் காணோம். ஆகஸ்ட் மாசம் கடைசிநாட்களில் 'கொல்'ன்னு 'டாஃபோடில்'கள் பூத்து நிக்குதுங்க. வெள்ளை நிறம் இருக்குன்னாலும் மஞ்சள் கூட்டம்தான் கூடுதல். நம்ம ஊர் வேற தோட்ட நகரம் என்ற அந்தஸ்தோட இருக்கே. அந்தப் பெருமையைக் காப்பாத்திக்கணுமுன்னா மரஞ்செடிகளும் ஒத்துழைக்க வேணுமே.டாஃபோடில்வருசாவருசம் மறக்காமக் கவனம் வச்சு ஒரே மாதிரி ஒரே நாளில் உலகத்து அழகையெல்லாம் கொண்டுவந்து கொட்டிட்டுப்போகும் சூட்சமம் என்ன?நம்ம வீட்டுக்கு எதிர்வரிசையில் நிற்கும் மக்னோலியா மரம்.கிட்டேபோய்ப் பார்த்தால்ரொம்பக் கிட்டேயா?


நாலாவது வீட்டு வாசலில் இன்னொரு மக்னோலியா


இந்தப் பூவுக்கு என்ன பெயர் ? கடற்கரைமணலில், கல்லிடுக்குகளில் வேர்பிடிச்சு நிற்கும் செடியே.... காட்டுப்பூவே நீ யார்?கொஞ்சம் பக்கத்தில் வரவா?
ஹைய்யோ........
குன்றின் சரிவெல்லாம்.....கொண்டாட்டம்தானோ?

Friday, September 19, 2008

" என்னைத் தாலாட்ட வருவானா?"

தூக்கம் வராதவங்கதான் தூக்கத்தைப் பற்றிப் புலம்பிக்கீட்டிருப்பாங்க. ஒரு காலத்துலே, கல்லூரிவிடுதியிலே என் அறைத்தோழி சொல்வாள் " தூக்கம்தான் மனுஷ வாழ்க்கையிலே மிகவும் இன்பமானபகுதி, அதைக் கெடுக்காதே' என்று சொல்லிவிட்டு, நாங்கள் தரும் காப்பியைக் கண்களை மூடியபடியே குடித்துவிட்டு, மறுபடியும் தூங்கிவிடுவாள். ஒரு மாதிரி கலரில் இருக்கும் வென்னீரைத்தான், எங்க விடுதியிலே காப்பின்னு
சொல்லிகிட்டிருந்தாங்க. தவிர, விடுதியின் சமையலறையில் என்ன நடக்குதுன்னு அந்த வயதில் யாருக்கு அக்கறை இருந்திருக்கும் ?

இப்ப, இந்தவயசிலே, தூக்கம் வராம ராத்திரி முழுசும் புரள்றப்பதானே தூக்கத்தின் அருமை தெரியுது.
ஆனா ஜனங்களைத் தூங்க வைக்கறதிலே கில்லாடின்னா 'மொரிட்ஷியோ'வைத்தான் சொல்லணும்.

1999-லே, நாங்க, குடும்பத்துடன் ( குடும்பம்னா அளவான குடும்பம், நான், என் கணவர் அப்புறம்
என் 16 வயது மகள்) ஐரோப்பாவைச் சுற்றிப்பார்க்கும் ஆவலில் ஒரு சுற்றுப் பயணம் போனோம்.
'காஸ்மொஸ்' என்னும் நிறுவனத்தின் 19 நாட்கள் சுற்றுலா. அவர்கள் பலவிதமான வகைகள் வைத்திருக்கின்றனர்.
ஆனால், நம்முடைய 'ஐவேஜ்'க்குக் கிடைத்தது இந்த 19 நாள்தான்.

முதல் நாள், லண்டனில் ஒரு ஹோட்டலில் இருந்து ஒரு சாதாரண 'பஸ்'ஸில் 'டோவர்' வரை வந்து,
அங்கிருந்து ஒரு கப்பல்/·பெர்ரி மூலம் ·ப்ரான்ஸ் நாட்டுக்கு வந்தோம். எங்கள் குழுவிலே
மொத்தம் 35 பேர். ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னென்னா, அதுலே 21 பேர் இந்தியர்கள். அதுவும்
பல ஊர்களில்இருந்து வந்திருந்தோம். என்னவோ தெரியலே, யாரும், மற்ற யாரோடும் பேசாம அவுங்கவுங்க குடும்பத்தினருடன் மட்டும் பேசிக்கிட்டிருந்தாங்க.

ஃப்ரான்ஸ்-லே, வழக்கம்போல பாஸ்போர்ட், மற்ற எல்லாவிதமான பரிசோதனைகளும்
முடிஞ்சது. வெளியே வந்து பார்த்தா, ஒரு அட்டகாசமான 'சொகுஸ¤ பஸ்' எங்களுக்காக காத்திருந்தது.
லண்டனிலிருந்து எங்களோடு வந்திருந்த வழிகாட்டி, எங்களையெல்லாம், மற்றொரு வழிகாட்டிகிட்டே
ஒப்படைச்சிட்டுப் போயிட்டார். பஸ் புறப்பட்டுச்சு.நாங்கெல்லாம் வழியெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டே
'பெல்ஜியம்' நாட்டில், 'ப்ரஸல்ஸ்' வந்து சேர்ந்தோம். இந்த ஒரு நாட்டில்தான்,'ஹைவே'
முழுவதும் மின்சாரக் கம்பங்களில் விளக்கும் போட்டிருக்காங்க. அது எரியவும் செய்யுது.

மறுநாள் காலை ஏழரை மணிக்குள் எல்லோரும் தயாராகணும். இந்த மாதிரி சுற்றுலாக்களில்
தினமும், காலை உணவு நாம் தங்கியுள்ள ஹோட்டலிலேயே கிடைக்கும். தினமும்,'ப்ரேக்·பாஸ்ட்,
சில இடங்களில் டின்னெர்' என்று நம்முடைய மொத்த சுற்றுலா பயணத்திற்கும் சேர்த்துத்தான், நாம்
கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். காலை 7 மணிக்குமுன் நம் அறை வாசலில், நம் பெட்டிகளை
வச்சிடணும். அப்புறம் காலை உணவு. அது முடிந்ததும் நேரா 'பஸ்' தான்.

'டைனிங் ரூம்' போய்ப் பார்த்தால், அமர்க்களமான 'ப்ரேக்·பாஸ்ட், எங்களுடைய '·பேவரிட்'டான
'க்ரசாண்ட்' கூட இருக்கு. ஹையாஆஆஆஆஆ...'க்ரசாண்ட்' இது முதல் நாள். அப்புறம் சில நாட்களில்
அது 'ஐயோ..ஓஓஓஓஓஓஓஓஓஓஓ..'க்ரசாண்ட்'ஆகிவிட்டது. நொந்து நூடுல்ஸ் ஆன கதைதான்.

இந்த 19 நாட்களில் 7 நாடுகளைச் சுற்றினோம். ஆனா சொல்லிவச்ச மாதிரி எல்லா இடத்திலும்
ஒரே மாதிரியான காலை உணவு. ஹூம்....ஒரு நாள் இட்டிலி, ஒரு நாள் தோசை, ஒரு நாள்
பூரின்னு கிடைச்சிருக்கக்கூடாதான்னு மனசு ஏங்கிடுச்சு. எப்படியும் சென்னை வழியாதானே
நியூஸிலாந்து திரும்பப் போறோம். அப்பப் பாத்துக்கலாம்னு இருந்தோம். சொன்னா நம்பமாட்டீங்க!
திரும்பி வந்தவுடன், 2 வருஷத்துக்கு 'சூப்பர் மார்கெட்'லே 'க்ரசாண்ட்' இருந்த பக்கம் திரும்பிக்கூடப்
பார்க்கலே!

பாத்தீங்களா ? சொல்ல வந்த சமாச்சாரத்தை வீட்டுட்டு எங்கியோ போய்கிட்டு இருக்கேன்.அது போகட்டும்.
தினமும்' பஸ்' லே ஏறுன அஞ்சாவது நிமிஷம் எல்லோருக்கும்,(எல்லோருக்கும்னா சின்ன பசங்கள் உட்பட
எல்லோருக்கும்) கண்ணு ஒட்டிக்கும். இமைகளைப் பிசினு
போட்டு ஒட்டினமாதிரி, திறக்கவே முடியாதபடி. கண்டிப்பா வேடிக்கைப் பார்த்துகிட்டு போகணும்னு
நினைக்கறவங்கதான் இந்த அஞ்சு நிமிஷம் தாக்குப்பிடிக்கிறவுங்க. மத்தவுங்க? ரெண்டாவது நிமிஷமே
காலி.முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுட்டேன் பாருங்க! நம்ம பஸ் ட்ரைவர் தான் ' மொரிட்ஷியோ'.
அலுங்காமக் குலுங்காம வண்டி ஓட்டறதுலே மன்னன்.
நம்ம கோபால் & மொரீட்ஷியோஎல்லோரும் தூங்கிகிட்டே போவோமா, அப்ப ஏதாவது நம்மளைமாதிரி சுற்றுலா ஆளுங்க பார்க்க வேண்டிய
இடம் வருதுன்னு வச்சிகுங்க,உடனே 'மைக்'லே கரகரன்னு ஒரு சத்தம் லேசா காதுலே விழும்.' வேக்கி,
வேக்கி, வேக்கி'ன்னு, நம்ம கைடு வுடற சவுண்டு. ரொம்பக் கஷ்டத்தோட கண்ணைத்திறப்போம். அவரு,
நாங்க பார்க்கபோற இடத்தைப் பற்றி ஒரு விளக்கம் சொல்வார். பஸ் நிக்கும். எல்லோரும் ஒரு உற்சாகத்தோட
கீழே குதிச்சு இறங்குவோம். தூக்கம் ? 'போயே போச்', 'போயிந்தி', 'இட்ஸ் கான்'
டூர் கைடு பென்னி.

திரும்பி பஸ்ஸ¤க்குள்ள வரவேண்டியதுதான். மந்திரம் போட்ட மாதிரி, கண்ணு மேலே சொருகிடும். இதே
கதைதான் 18 நாளும். ஒரு வித்தியாசமும் இல்லை. நம்ம கைடுக்கே ஒரு தடவ வெறுத்துப் போச்சுன்னு
நினைக்கிறேன். இத்தாலியில், ஒரு பாதையில் நிறைய 'டன்னல்'வரும். அது மொத்தம் எத்தனைன்னு
சொன்னா ஒரு பரிசு தரேன்னு சொன்னார். நானும் ரொம்பக் கஷ்டப்பட்டு, எண்ணக்¢கிட்டே வந்தேன்.
இருவது, இருவத்தொன்னு, இருவத்திரண்டு...... யாருக்கு வேணும் அந்தப் பரிசு ? அப்புறம் 'முழிச்சிக்கிட்ட
பிறகு. கைடே சொன்னாரு அறுவத்தொம்பதுன்னு. அப்பாடா...நல்லவேளை தூங்கிட்டோம்.

கடைசி நாள், எங்களையெல்லாம் 'யூரோ டன்னல்' கிட்டே கொண்டுவந்து விட்டப்ப, ஐயோ, இனி தூங்கறதுக்குத்
தாலாட்ட 'மொரிட்ஷியோ' இல்லையேன்றதுதான் ஒரே வருத்தமா இருந்தது.

அப்பனே, 'மொரிட்ஷியோ' இப்ப எங்க ஐயா இருக்கே? தூக்கம் வராம பொரளறேனே! வந்து தாலாட்டக்
கூடாதா?


நன்றி : மரத்தடி 2004

Wednesday, September 17, 2008

சென்னை, தமிழ்நாட்டிலேயா இருக்கு?

மூச்சுக்கு முன்னூறுதரம், தமிழ்நாடு, தமிழ்ன்னு முழங்கற ஊரில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் தமிழுக்குச் சான்ஸே இல்லையாமே.....

சமீபத்தில் கோபால் சென்னை வழியா ஓமான் போயிருந்தார். சிலமணி நேரமுன்னாலும் ராத்திரி எப்படியும் ஒரு தங்கல் சென்னையில். அதிகாலையில் ஆறுமணிக்கு மறுபடியும் செக்கின் செஞ்சுட்டு, லவுஞ்சுக்குள்ளே போயிருக்கார்.

யாருமே இல்லாத இடத்தில் காட்டுக்கத்தலா ஒரு வெஸ்டர்ன் ம்யூஸிக் முழங்கிக்கிட்டு இருக்காம். காலங்கார்த்தாலே இனிமையா ஒரு தமிழ்ப்பாட்டோ, இல்லை ஏதாவது, வீணை, புல்லாங்குழல், வயலின் இப்படி வாத்திய சங்கீதமோ போடக்கூடாதா? இவர் போய் கேட்டதுக்கு அங்கிருந்த பொண்ணு திருதிருன்னு முழிக்குதாம். வச்சிருக்கும் குறுந்தட்டெல்லாம் மேல்நாட்டு இசைமட்டும்தானாம்.

தொலையட்டும், ஒன்னும் இல்லைன்னா அதை ஆஃப் பண்ணி வச்சாலும் போதுமுன்னு நிறுத்தச் சொல்லி, கொஞ்ச நேரம் அமைதியாவாச்சும் இருக்கலாமுன்னு ஆச்சாம். எதாவது காலை உணவு எடுத்துக்கலாமுன்னு போனால் அங்கேயும் சாண்ட்விச், மஃப்பின், ம்யூஸ்லி, க்ரஸாண்ட் மட்டுமே. வயித்துக்கு ஆபத்தில்லாத ஒரு இட்லியோ தோசையோ வைக்கக்கூடாதான்னா அதுக்கும் மிரண்டுபோய் முழிக்குதாம்ப்பா அந்தப் பொண்ணு.

இங்கே வரும் ஆட்களெல்லாம் இதைத்தான் சார் விரும்பித் தின்னுறாங்கன்னு கூடவே ஒரு கொசுறுத் தகவல். தமிழ்நாட்டுலே உள்ளூர் சாப்பாடு, இசைன்னு இருந்தா..... விலைபோகாதா? மற்ற நாடுகளில் இருக்கும் லவுஞ்சுகளில் எல்லாம் அந்தந்த ஊர் மணம்தானே எல்லாத்திலும்..... அதென்ன இந்தியாமட்டும் அமெரிக்காவா ஆகிருச்சு?

எல்லாத்துலேயும் ஆங்கில மோகம் இருக்குன்னா என்னத்துக்குத்தான் சுதந்திரம் வாங்குனாங்களாம்? என்னமோ போங்க.

விமானநிலையத்துப் புத்தகக்கடையில் மட்டும் ஒரு சில தமிழ்ப்புத்தகங்கள் இருக்குன்னு பார்த்துட்டு, எனக்கொரு எஸ்.ரா வாங்கி வந்தார். நெடுங்குருதி.
பகல்கொள்ளையா விலை. பதிப்பகம் வச்ச விலையை மறைச்சு அங்கே 580 ரூபாய்ன்னு ஒட்டிவச்சுருக்கு. இந்த அதிகப்படி வரும்படி எழுத்தாளருக்குப் போகாதில்லையா?

படிக்க ஆரம்பிச்சேன்...... வெய்யில் அப்படியே கசிந்து ஊர்ந்து, கூடவே வந்துக்கிட்டு இருக்கு...... கதையின் நாயகனே இந்த வெய்யில்தானோன்னு ஒரு பிரமை.ஓமானின் யானை

மசாலா இல்லாத வாழ்க்கையா? நெவர்..... (ஓமானில் ஒரு கடை)

திரும்பி வரும்போதும் மூணே மணிநேரம்தான் கிடைச்சது. கொஞ்சமாவது தமிழ்நாட்டு உணர்வு வேணுமுன்னு குட்டி இந்தியாவுக்குப் போயிட்டு வந்தாராம். தீவுளிக்கான அலங்காரம் தெருவெங்கும் ஜொலிக்குதாம். பெருமாள் கூப்பிட்டுத் தன்னைத் தூக்கிட்டுப்போகச் சொன்னாராம். தோள் கொடுத்துட்டு, இறக்கிவச்சு ரெண்டு படமும் புடிச்சுக்கிட்டு வந்தார்.சிராங்கூன் ரோடு தீபாவளிக்குத் தயார்.

தாயார்களுடன் தகப்பன்


வந்துசேர்ந்த ஒன்னரை மணி நேரத்தில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம். நகரத்தந்தையும், தாயுமா வந்துட்டுப்போனாங்க. தாலப்பொலியுடன் வரவேற்றோம். வழக்கம்போல பதினெட்டுவகையுடன் ஓண சத்யை.பூக்களம்.தாலப்பொலி
சேச்சிமாரின் நடனம்நான் தமிழ்நாட்டைப்பற்றிப் புலம்பியது கூடிப்போச்சோன்னு நினைக்கும்விதமா, ஓணக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட கொச்சியில் இருந்நு வந்ந 'அச்சன்' , மாவேலி வந்ந சமயம் கேரளாவே இல்லைன்னு போடு போட்டார். பரசுராமர் உண்டாக்கிய நாடுதான் கேரளம். வாமன அவதாரம் பரசுராமருக்கு முந்திய அவதாரம். அப்ப எப்படி கேரளம் இருந்திருக்கும் என்பது அவரோட வாதம். கேரளமுன்னு பெயர் இல்லாத ஒரு நாடா அப்ப அது பூமியில் இருந்திருக்காதா........ அப்புறம் அச்சனோடு ஒன்னு விஸ்தரிச்சு ஒன்னு விவாதிக்கணும். சோதிச்சு அறிஞ்ஞால் வல்ல தெற்று உண்டோ? இப்பப் பற்றிய சமயமில்லே.......ஆட்டே பின்னொருக்கில்.

இவர் ஊரில் இல்லாத சமயமா நானும் ஓசைப்படாமல் ஒரு ஊர்த் திருவிழாவில் கலந்துக்க வேண்டியதாப் போச்சு. தவுல் இசைதான் ஒரு பத்து நாளா........ இருமலும் காய்ச்சலுமா ஃப்ளூ கொண்டாட்டம்.

காணோமென்னு கேட்டுத் தனிமடலில் விசாரிச்ச நண்பர்களுக்கு நன்றி.


பதிவு எழுதுவதனால் பயன் என் கொள் வாலறிவன்....