Friday, January 31, 2025

கல்யாணக்கொண்டாட்டங்கள் !

நம்ம கோவிலில் கந்தசஷ்டி முடிஞ்சு , திருக் கல்யாணம்.   வருஷாவருஷம் வெட்டிங் அனிவர்ஸரின்னு சிம்பிளா வச்சுக்காமத் தாலிகட்டியே கல்யாணம் பண்ணிக்கறதுதான்  இவர் ஸ்டைல்.....  அறுபதாங்கல்யாணம், சதாபிஷேகம், கனகாபிஷேகம் எல்லாம்  மனுசருக்குத்தானாம்.   ஞாயித்துக்கிழமையா இருந்ததால் விழா பகலில்.  





கல்யாணத்துக்குப் போய், பூஜை ஆனதும்  அங்கிருந்து நம்ம ஸ்வாமிநாராயண் கோவிலில் தீபாவளி அன்னக்கூட் தரிசனமும் ஆச்சு.  மதியம் ரெண்டு மணிமுதல்  தரிசனமும் பஜனும்!  சாயங்காலம் ஆறரைக்கு ஆரத்தி.  . ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில்களில் ஆண்களுக்கே முன்னுரிமை.  ஸ்வாமி சந்யாசிகள் விஜயம் செய்யும்போதும், பெண்கள்  அவரை அணுகி ஆசி பெற முடியாது.  ஆனால் பெண்கள்தான் கோவில்களில் மாய்ஞ்சு மாய்ஞ்சு விருந்து தயாரிப்பார்கள். 
இந்த முறை ஒரு கூடுதல் விசேஷம், என்னென்னா... பெண்களுக்குன்னு மட்டும்  ஒரு மணி நேரம் ஒதுக்கித் தந்து பஜனை செஞ்சுக்க அனுமதி கொடுத்தார்கள். இதெல்லாம் தெரியாமலேயே  சரியா நாம் அந்த நேரத்துக்குப் போயிருந்தோம்!  நம்மவரும் மற்ற ஆண்களுடன் சேர்ந்து  கோவில் தோட்டத்துலே போட்டுருக்கும் கூடாரத்துக்குப் போயிட்டார். 
கால்வலியில் ரொம்ப நேரம் உக்காரமுடியாது என்பதால்  ..... வீட்டுக்குக் கிளம்பியாச்சு. இங்கே  விழா முடிய எப்படியும்  ராத்ரி எட்டரை ஆகிரும்.

அன்றைக்கே இண்டியன் தமிழ்ஸ் (CITA)நடத்தும் தீபாவளி விழா, நேத்து நாம் போன பக்கத்தூரு  ஈவண்ட் சென்டரில். நாமும் சீட்டாவின் அங்கம் தான்.  அப்பாவும், மகளும், பேரனுமாக் கிளம்பிப்போனாங்க. 

அடுத்த வாரத்தில் ஒருநாள் தோழி ஒருவர்,  ஊரிலிருந்து வந்த உறவினரை நம்ம வீட்டுக்கு அழைச்சு வந்தார்.  அவர் கோட்டக்கல் ஆர்யவைத்திய சாலையுடன் சம்பந்தமுள்ளவர் என்பதால், நமக்கு வந்திருக்கும் மருந்துகள் பற்றிய விவரங்களையும், எடுத்துக்கொள்ள வேண்டிய முறைகளையும் விளக்கிச் சொன்னார்.  
அப்பதான் பேச்சோடு பேச்சாக,' இந்த ஊரில் முருங்கை மரம் இல்லையா'ன்னார்.  நாலைஞ்சுமுறை விதை வாங்கி நட்டுவச்சு,  செடி முளைச்சு வந்து, குளிர் ஆரம்பிச்சதும் மண்டையைப் போட்டுருதுன்னு சொல்லிட்டுப் போன வருஷம் வந்த செடி , காய்ஞ்சுபோய் வெறும் குச்சி இப்போ. தூக்கிப்போட மனசு வராமல் அப்படியே வச்சுருக்கேன்னு சொன்னேன்.  அது முளைச்சு வந்தாலும் வரும்னு சொன்னார். எங்கே? ன்னு கூட்டிப்போய்ப் காய்ஞ்சு நிக்கும் குச்சியைக் காமிச்சால்.........  அட !  உண்மையிலேயே குட்டியா இலைகள் முளைச்சுவருது !   ஹைய்யோ!!!!

இருபத்தியாறு அங்கத்தினர் இருக்கும் நம்ம யோகா குழுவில்,  பிறந்தநாள். மணநாள் கொண்டாட்டங்களுக்கெல்லாம் குறைவேது..... எப்படியும் ஒரு மாசத்தில் ஒன்னுரெண்டு விசேஷம் வரத்தானே செய்யும் ? சின்ன அளவிலும் பெரிய அளவிலுமாக் கொண்டாடி, நம்ம ' எடை குறையாமல்'                            பார்த்துக்கிட்டோம் !!!!
யோகா குழுவில் இருக்கும் தன் தாய்  தகப்பனின்  திருமணநாள் பொன்விழாவை, சர்ப்பரைஸ் பார்ட்டியாக் கொண்டாட விருப்பப்பட்ட  மகனும் மருமகளும்  நம்மை அணுகியதால்..... ஜாம் ஜாமுன்னு நடத்தியாச்!  முதலில் வகுப்பு நேரத்தில் அரைமணி போதுமுன்னு சொல்லிக் கடைசியில் ஏகப்பட்ட உள்ளூர் உறவினர்களையும்  அழைச்சுட்டாங்க..... அப்புறம் ?  முழுநேரக் கொண்டாட்டம்தான் !  பரவாயில்லை.... இதுக்குன்னே அமெரிக்காவில் இருந்து வந்த மகனின் குடும்பத்து அன்பு, பாராட்டத் தக்கது, இல்லையோ !

 இதுலே இன்னொரு வேடிக்கை என்னன்னா.... யோகா குழுவின் ஆரம்ப  காலத்தில் எங்களைப் பயிற்றுவிச்ச பயிற்சியாளர்,  எப்பவாவது திடீர்னு யோகா வகுப்பு நடக்கும்போது வந்து எங்க லக்ஷணத்தைப் பார்ப்பாங்க.  நாங்களும்  ரொம்ப ஒழுங்கா அவுங்க சொல்லிக்கொடுத்ததையெல்லாம் செஞ்சு காமிச்சு ரொம்பவே நல்ல பெயர் வாங்கிப்போம்.  இன்றைக்குத் திடீர்னு அவுங்க வந்துட்டாங்க.  அப்புறம் ? பொன்விழான்னு விளக்கி அவுங்களையும் பார்ட்டி கேம்ஸில் இழுத்துவிட்டாச் :-)
நவம்பர் மாசம், நமக்கு வசந்தகாலத்தின் கடைசி. இந்தமாசம் முடிஞ்சதும் கோடைகாலம் ஆரம்பம் என்பதால்...... தோட்டத்துப்பூக்களுக்குக் கொண்டாட்டம். நமக்குக் கூடுதல் வேலைகளால் திண்டாட்டம். இந்த முறை நம்மவருக்குத்தான் வீட்டுவேலைகள் கூடிப்போயிருக்கு. ப்ச்.... பாவம்.      

Wednesday, January 29, 2025

நம்ம மேலே எவ்ளோ பரிவு பாருங்க சீனருக்கு !!!!!!

உள்ளூர் கடையொன்னில் தீபாவளி அலங்காரங்கள்  விற்பனைக்கு வந்துருக்குன்னு,  ஹாலோவீன் சமாச்சாரம் வாங்கப்போனபோது தெரிஞ்சது. நமக்கும் வீட்டுக்குக் கொஞ்சம் ஆச்சு. சின்னதா வீட்டை அலங்கரிச்சோம். 
நமக்கு என்ன வேணுமுன்னு சீனனுக்குத் தெரிஞ்சுருக்கு.  சீன மஹாலக்ஷ்மிக்குத்தான்  மூக்கும் முழியும் சரியில்லை.... சீனப்புள்ளையாரும் சளைச்சவரில்லை, கேட்டோ!

போன  சனிக்கிழமை  நம்ம யோகா குழுவின்  திவாலிக் கொண்டாட்டமும் ஆச்சு.வகுப்பு நடக்கும் அதே ஹாலையே தனிப்பட்டவகையில் வாடகைக்கு எடுத்தோம். வகுப்பு நடக்கும் ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாப் பண்டிகையைக் கொண்டாட வேண்டாமெனத் தீர்மானம்.  குழு அங்கத்தினரின் குடும்பமும் சேர்ந்துக்குவாங்க.   விளக்கேத்தி அலங்கரிச்சு, இனிப்பும்  இரவு விருந்துமா நடத்தினோம்.  நம்ம குழுவில் வட இந்தியரே அதிகம் என்பதால் அவுங்க புத்தாண்டும் தீபாவளிக்கு அடுத்தநாள்தான் !



ஒரு ரெண்டு மூணு வருஷங்களுக்கு முன்னே.... இப்படி விருந்துகள், ஒன்றுகூடலின்போதுசேரும் குப்பைகளைக் குறைக்க  ஒரு சின்ன வழி சொன்னேன். அவரவர், தங்களுக்கான தட்டு, ஸ்பூன், டம்ப்ளர் கொண்டு வந்துட்டால் நல்லதுன்னு ! இப்ப முக்கியமான விருந்துகளில் அப்படித்தான் செய்யறோம். விழா முடிஞ்சபின்  சேரும் குப்பைகள் ரொம்பவே    குறைஞ்சுருச்சு.  கை துடைக்கும் பேப்பர் நாப்கின்தானிருக்கும்.  சின்னக்குழு என்பதால் சமாளிக்க முடியுது.  கால்வலிக்காரி என்பதால்  எனக்கு எந்த சமையல் ஐட்டமும் ஒதுக்கலை.  அதுக்காக வெறுங்கையாப்போறதா என்ன , பண்டிகையும் அதுவுமா .....? லட்டு கொண்டு போனேன். நம்ம செந்தில்தான் செஞ்சு கொடுத்தார் !  
இப்படி யோகா வகுப்பில் ஃபுட்யோகா Food Yoga நடந்துக்கிட்டு இருந்தால் எங்கே இளைக்கிறதாம் ?  போகட்டும்.... நாம் என்ன இளைக்கறதுக்கா யோகா செய்யறோம் ? ஃபிட்னஸ் & பேலன்ஸ் இதுதானே முக்கியம். சீனியர் ஸிட்டிஸன்களுக்கு எதிரியே பேலன்ஸ் இல்லாம கீழே விழுந்து வைக்கறதுதான், இல்லையோ ?

அசல் தீபாவளி தினம், இங்கே வேலைநாள் என்பதால் சாயந்திரமாத்தான்  மகள் குடும்பம் வர்றாங்க. நாங்க காலையில் 'கங்காஸ்நானம்' செஞ்சு  முதல் வேலையா பாலைக் காய்ச்சி நைவேத்யமாக் கொண்டுவச்சு பெருமாளுக்கு ஹேப்பி தீபாவளி சொன்னேன்.

இன்றைக்குத் தோட்டத்துப்பூக்கள் எல்லாம் புதுப்பொலிவோடு இருந்ததாக எனக்கொரு தோணல்.  லஞ்சுக்குப்பிறகு அடுத்த தெருவில் வசிக்கும் ஃபிஜித் தோழி வீட்டுக்கு ஒரு விஸிட். பொதுவா ஃபிஜி இந்தியர்கள் ஏகப்பட்ட  பலகாரங்களுடன் ரொம்பவே விமரிசையா திவாலி கொண்டாடுவாங்க. ஒரு அரைமணி போல அங்கே இருந்துட்டு, வீடு திரும்பி சக்கப்ரதமன் செய்தேன். கேரளாக் கடையில் பலாப்பழம் கிடைச்சது. 



ஆறுமணி போல மகள் குடும்பம் வந்தாங்க. பேரனுக்கு இங்கே உள்ளுர் இண்டியன்  துணிக்கடையில் (ஒரே ஒரு  கடைதான் இங்கே ! ) போனவாரமே ரெண்டு செட் உடைகள் வாங்கியாச்சு. முதலில் ஒன்னும் அப்புறம் இன்னொன்னுமா தீபாவளியன்னிக்குப் போட்டும் விட்டாச்சு ! 



ஊரில்  இருந்து வந்த புடவைகளை ஒவ்வொன்னா ரிலீஸ் செஞ்சுக்கிட்டு இருந்தேன்னு தனியாச் சொல்லவேணாம்தானே.....  ஹிஹி....  

வடை பாயஸத்தோடு சின்ன அளவில் டின்னர் ஆச்சு.  மருமகன், மாமியாரைப்போல  வடைப்ரேமி !  கொஞ்சம் இருட்டியதும்  கொஞ்சமா பட்டாஸ் கொளுத்தினோம். போனவருஷம் சின்னதா 'டப்'ன்ற சத்தம் கேட்டதும் குழந்தை பயந்து அழுதான் என்பதால்  மீதி இருந்த பட்டாஸ்களை எடுத்து வச்சுட்டோம். அதுவே ரெண்டு வருஷத்துப்பழசு.  இப்பவும் அதையேதான்  கொளுத்தப்போறோம். கொஞ்சம் வளர்ந்துட்டானே.... பயப்படமாட்டான்னு  .....   பழைய பட்டாஸ்களையெல்லாம் தீர்த்துக்கட்டினாங்க மாமனாரும் மருமகனுமா..... நாங்கள் வேடிக்கை பார்த்தோம்.  அவ்ளோதான் ஆச்சு  நம்ம தீபாவளி. 
நம்ம கோவிலிலும் இன்றைக்கு தீபாவளி விழா இருக்கு. நமக்குத்தான் போக முடியலை. நாளைக்கு மண்டலபூஜை நிறைவுநாள். அதுலே கலந்துக்கணும். அதுவும் ஆச்சு ! அபிஷேகமும் அலங்காரமுமா அட்டகாசம் போங்க !!!!


நம்ம கைவசம் இருந்த கொஞ்சம் பட்டாஸ்களும் தீர்ந்து போயிட்டதால்  இனி எப்போ கிடைக்குமோன்ற தேடலில் இருந்தோம். முந்தியெல்லாம் Guy Fawkes Day ன்னு  நவம்பர் அஞ்சாம்தேதி நம்ம சிட்டிக்கவுன்ஸில் ஏற்பாடு செய்யும் வாணவேடிக்கை நடக்கும். அப்படி என்ன விசேஷமுன்னா...   இந்த Guy Fawkes என்றவன், வெள்ளைக்காரரின் நரகாசுரன். ப்ரிட்டிஷ் பார்லிமென்டுக்கு வெடி வைக்க வந்து கடைசி நிமிட்லே மாட்டிக்கிட்டவன். அவனை உடனே பிடிச்சு 'மேலே' அனுப்பிட்டாங்க.  அந்த நினைவாத்தான் வெள்ளையர் இருக்கும் நாடுகளில் அவனை நினைச்சுப் பட்டாஸ் கொளுத்தறதெல்லாம். அதுக்காக இங்கே நியூஸியில் நவம்பர் 2 முதல் நாலு நாளைக்குப் பட்டாஸ் விற்பனை உண்டு. இதுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் வேற !   பதினாறு வயசுக்குக் கீழே இருப்பவர்களுக்கு விற்க மாட்டாங்க. கடையில் பட்டாஸ் வச்சுருக்கும் இடத்தில் வாங்கினதும் நாம் வெளியே போயிறணும். கையில் வச்சுக்கிட்டு வேற எதாவது பொருளை வாங்க மத்த ஏரியாவுக்குள் நுழையப்டாது.... இப்படி..... நம்மூர் டென்தௌஸண்ட் வாலா வகையெல்லாம் இங்கே... கிடையாது.  சின்ன சப்தத்தோடு விண்வெளிக்குப்போய் வண்ணஜாலம் காட்டுவதோடு சரி. 

நம்ம தீபாவளிப் பண்டிகை , திதியைப் பொறுத்து அக்டோபர் 16 முதல் நவம்பர் 14 வரை எப்போ வேணுமுன்னாலும் வரும் என்பதால்..... 'அந்த நாலு நாட்களுக்குள்' ஒரு நாள் போய் வாங்கி வச்சுக்குவோம். கடந்த மூணு வருஷமா.... சிட்டிக்கவுன்ஸில்  வாணவேடிக்கை நடத்தறதை நிறுத்திருச்சு. காசு இல்லையாம்ப்பா !!!! அதனால் பட்டாஸ் விற்பனையும் இல்லை. 

தனிப்பட்டவர்கள் யாரோ பட்டாஸ் விற்கறதா ஒரு சேதி கிடைச்சது.  தனிப்பட்ட இறக்குமதி. எல்லாம் சீனசமாச்சாரம்தான்.  மூணுநாள் விற்பனைன்னு  தெரிஞ்சு, முதல்நாளே தேடிக்கிட்டுப் போனோம்.  திறந்த வெளியில் ஒரு நாப்பதடி கண்டெய்னரில் வச்சு வித்துக்கிட்டு இருந்தாங்க. வெவ்வேற விலையில் வெவ்வேற விதங்களைக் கலந்து வச்சுருக்கும் பொட்டிகள். 


அதிகப்பட்ச விலை 470 டாலர். (ரூபாயில் சொல்லணுமுன்னா அம்பதால் பெருக்கிக்குங்க )112254    பொட்டியெல்லாம்  வேணாம். நமக்குக் கொஞ்சம் கம்பி மத்தாப்பு இருந்தால் போதாதா ?  உதிரியா ஏதேனும் இருக்கான்னு பார்த்தால் கம்பி மத்தாப்பு  இருந்தது.  சின்னதும், கொஞ்சம் பெருசுமா ரெண்டு வகையும், ஒரு ஃப்ளவர்பாட் பொதியும் வாங்கினோம்.  ஆச்சு இனி ஒரு ரெண்டு மூணு வருஷ தீபாவளிக்குக் கவலை இல்லை :-)    


அப்படியே சண்டே மார்கெட் பக்கம் போய்  ரெண்டு மிளகாய்ச் செடிகளும், ஒரு பீர்க்கங்காய் செடியும்  வாங்கினார் நம்மவர். பீர்க்கங்காய் வர்றது கஷ்டமுன்னு சொன்னா...... யாரு கேக்கறா ? பத்துவாரத்தில் இப்போ மிளகாய்ச் செடிகள் காய்ச்சு நிக்குது. பீர்க்காங்காய் ரெண்டு பிஞ்சு,  ஒரு பால்பாய்ன்ட் பென் ரீஃபிள் சைஸ் வரை வளந்து, அப்படியே  காய்ஞ்சு போயிருக்கு.  போயே போயிந்தி.........  இந்தச் செடிகள் விற்பனை எல்லாம் செய்யறது யாராம் ?  தனியாச் சொல்லணுமா என்ன ? சீனரே சீனர்...
 
நம்ம மலேசியத் தோழி,  தீபாவளிக்கு எப்பவும் வர்றவங்க, இந்த முறை ஊரில் இல்லை. ஊர் திரும்பியதும் வந்தாங்க. கூடவே அஞ்சு வயசுப்பேரனும். இந்திய சாப்பாடெல்லாம்  அவுங்க வீட்டில் பிரச்சனையே இல்லை. தோழி மலேசியத்தமிழர்தான்.  பொடியன் முறுக்குப்ரேமி !    



நாஞ்சொல்லலை....  திவாலியை அப்படிச் சட்னு முடிச்சுடமாட்டோமுன்னு....  பக்கத்தூர்லே கொண்டாட்டம்.  ஒரு பதினாறு கிமீ தூரம்தான். ஆனால் அது வேற ஜில்லா ! நம்ம நெடுநாள் தோழியும் கணவருமா, சிலபல வருஷங்களா இந்த   விழாவை ஏற்பாடு செஞ்சு நடத்தறாங்க. வட இந்தியாவின் மேளா ஸ்டைல்.   மூணு மாசம் இருக்கும்போதே கணவரும் மனைவியுமா  அழைப்பு அனுப்பிக்கிட்டே இருப்பாங்க. போய்த் தலையைக் காமிச்சுட்டாவது வரணும். கார்பார்க்கையொட்டியே மைதானம் என்பதால்  கொஞ்சம் நடந்தால் போதும். நம்ம செந்தில் வேற அங்கே ஸ்டால் போடறார்.     
சாயந்திரம் நாலு முதல் ஒன்பது வரை மேளா.  கலை நிகழ்ச்சிகள் ஆறுமணிக்கு ஆரம்பிக்கும். நாங்க ஒரு அஞ்சே முக்காலுக்குப் போய்ச் சேர்ந்தோம். நல்ல கூட்டம்தான். நம்மவருடன் வேலை செய்த நண்பரை வருஷாவருஷம் இங்கேதான் சந்திப்போம். சந்தித்தோம்.  இந்த விழாவின் முக்கிய ஸ்பான்ஸார் இவர்தான்.  வீடுகள் கட்டித்தரும் பில்டிங் கம்பெனி  நடத்தறார்.  இந்தியர்கள்தான் இவருடைய மெஜாரிட்டி கஸ்டமர்கள்.  அந்த நன்றியை இப்படி தெரிவிச்சுக்கறார்போல!


மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பிச்சக் கொஞ்ச நேரத்தில் கொடுங்காற்றும் மழையும்.....  மைதானத்தையொட்டிய ஈவண்ட் சென்ட்டர் கட்டடத்தில் எல்லோரும் மழைக்கு ஒதுங்கினோம்.
வெளியே ஒரு மணிநேரம் அடிச்சுப்பேய்ஞ்ச மழையில், உள்ளே  நண்பர்களுடன் அரட்டையில் நேரம் போனது.  திரும்ப நிகழ்ச்சிகள் ஆரம்பிச்சது. சரியான குளிர்வேற.... இனி தாங்காதுன்னு  செந்தில் ஸ்டாலில் வடைகளை வாங்கிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.