Wednesday, July 31, 2013

நோ லட்சம் ருப்பையா, இனி ரிங்கெட் ஒன்லி (பாலி பயணத்தொடர் 20 )

பத்துமணிக்கு அறையைக் காலி செஞ்சுக்கிட்டு புத்ராவின் வண்டியில் ஏறினோம். குரங்குக்காட்டு சாலை  ஒருவழிப்பாதை என்பதால் வலது பக்கம் வண்டி திரும்புது.  பத்து விநாடிகளில்  கண்ணில்பட்டது நேத்து மாலை நாம் போன உபுட் அரண்மனை. அடராமா.... இவ்வளோ பக்கத்தில் இருக்குதா என்ன? ஏற்றமா இருக்குன்னு  சோம்பல் படாமல் இருந்திருந்தால்  கைவினைப்பொருட்கள் சந்தையை கோட்டை விட்டுருக்க மாட்டோமே:(

டென்பஸார் நோக்கிய பயணம். விமானநிலையம் அங்கேதான் இருக்கு.  உபுட் கிராமங்களில்  எங்கே பார்த்தாலும் குடிசைத்தொழில் போல கலை சமாச்சாரங்கள் கொட்டிக்கிடக்கு. திண்ணைகள் முழுசும்  சித்திரங்கள் விற்பனைக்கு வச்சுருக்காங்க. எல்லாம் ரொம்பவே பெரிய சைஸ்.நம்மாலே கொண்டு போகமுடியாதுன்னு   மனசை ஆறுதல் படுத்திக்கணும்.

சிற்பங்களுக்கும் சிலைகளுக்கும்   செடிகளுக்கான நர்ஸரிகளுக்கும்  குறைவே இல்லை.



முக்கிய சாலைகளில்  அங்கங்கே மனதைக் கவர்ந்து இழுக்கும் வகையில்  கலை அழகோடு கூடிய  பெரிய சிலைகளை  தீவு முழுசும்  வச்சுருக்காங்க.  கடல் தேவதை, கீதோபதேசம்.  கருடாழ்வார் கையில்  எழுந்தருளும் விஷ்ணு இப்படி. கோவில்களுக்கு உள்ளில்தான்  சாமிச் சிலைகள் இல்லை!


ஒன்னேகால் மணி நேரத்தில்  விமான நிலையம் வந்தாச்சு.  பெட்டிகளை தூக்கி வந்து  ட்ராலியில் வச்சார் புத்ரா. அட!  (ஓ....மழை இல்லையே அதான்....)

வருசத்துக்கு  முப்பது லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் வந்து போகும் விமானநிலையம் பாலி டென்பஸார்.   Departure Tax  US $ 20 வாங்கிடறாங்க. வரும்போது விஸா ஆன் அரைவல் என்று ஒரு 25$  அப்படிஒரு நபருக்கு 45 வீதம்  வருமானம். அப்ப மூணு மில்லியனுக்கு? சுற்றுலாத்துறையை சிறப்பாக நடத்துவதால்  கூட்டம் அம்முது.


இப்போதைக்குச்  சின்ன விமான நிலையம்தான். இப்போதான் அதை விரிவுபடுத்தும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு.
இங்கே உள்ளூர் பண்டிகை, விழாக்கள் சமயத்தில்  பாரம்பரிய நடனம், அலங்காரங்கள் எல்லாம் அட்டகாசமா இருக்கும் என்பதால் அந்த சமயங்களில் கூட்டம் ஏராளம்.  இந்தோனேஷிய மக்கள்  அதிகமா வந்து போவாங்களாம். இந்தோனேஷியாவில்  சின்னதும் பெருசுமாத் தீவுக் கூட்டங்கள் பதினேழாயிரம் இருக்காமே!  (அம்மாடியோவ்!)

Galungan என்ற  பண்டிகை நம்மூர் தீபாவளி மாதிரி பெரிய அளவில் கொண்டாடுறாங்க. பத்து நாள் விழாவாம். இதன் கடைசி நாள்  Kuningan விழா நடக்குமாம். இந்த பத்து நாட்களும் விடுமுறை காலம்.  இவுங்க நாள்காட்டி ,  சந்திரன்  சுற்றும் கணக்கையொட்டி இருப்பதால்  பத்து மாசம்தானாம் ஒரு வருசத்துக்கு. அதைக் கணக்கு வச்சு பண்டிகைகள் திருவிழாக்கள் எல்லாம் நடப்பதால்   வருசம் தோறும் வெவ்வேறு மாசங்களில் வருது.

சரஸ்வதி ன்னு ஒரு பண்டிகை. அஞ்சு நாள் விழா. இது எப்பவும் சனிக்கிழமைதான் வருமாம். முதல் நாள் வெள்ளியன்று வீட்டில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் எடுத்து தூசி தட்டி துடைச்சு அடுக்குவாங்க. மறுநாள்  சரஸ்வதி டே அன்று  சமுத்திர ஸ்நானம் செஞ்சு  வீட்டுலே பூஜை செய்வாங்க. பள்ளிக்கூடங்களிலும், அலுவலகங்களிலும்  கொண்டாட்டம் பூஜை எல்லாம் உண்டு. அன்னிக்கு யாரும் புத்தகங்களைப் படிப்பதோ,நோட்டுப்புத்தகங்களில் எழுதுவதோ கூடாது.  மாலை நேரம் விளக்கு வச்சதும்  எதாவது ராமாயணம், மகாபாரதம் இப்படி புராண இதிகாசங்கள் கொஞ்சம் வாசிக்கணும். கோவில்களில் வாசிக்கும்போது போய் கேட்டும் வரலாம்.  அப்புறம் ஞாயிறு, திங்கள் செவ்வாய்,புதன்னு  மொத்தம் அஞ்சு நாள் வழிபாடு நடத்துவாங்க. அறிவுக் கடவுளுக்கு அஞ்சு நாள். இந்த வருச சரஸ்வதி நாள் வரும் ஆகஸ்டு 10, 2013. சனிக்கிழமை!


புது வருசம் என்று கொண்டாடும் முக்கிய பண்டிகை  Nyepi  டே!  இந்த  நாள்  மொத்த   இந்தோனேசியாவுக்கும் விடுமுறை.  ஒரு கடை கண்ணிக்கூட  திறக்கமாட்டாங்க.   தீவு முழுக்க அமைதியா இருக்கும் நாள். தெருவில் யாரும் நடமாடக்கூடாது. அவரவர்  இருப்பிடத்தில்  இருந்து  அன்று முழுவதும்  வழிபாடும் தியானம் செய்வதும் என்று  சாமி சம்பந்தமுள்ளவைகள் மட்டும் செய்யணும்.   தீவு முழுக்கக் கம்ப்ளீட் சைலன்ஸ். ஏர்ப்போர்ட் கூட மூடிருவாங்களாம்.  அதனால் சுற்றுலாப் போகும் எண்ணம் இருக்கும் நம்மாட்கள்  அந்த சமயத்தில் பயணம் வச்சுக்க வேணாம். 2014 க்கு சைலன்ஸ் டே  மார்ச் 31.

இப்படி ஒரு நாள் இந்தியாவுக்கு  இருந்தால் எப்படி இருக்குமுன்னு  கற்பனை செஞ்சு பார்த்தேன்......  முக்கால் வாசி சனம் அவுட்!  செல்லில் பேசக்கூடாது, டி வி சேனல்கள்  இயங்கக்கூடாதுன்னால்....     இந்தியா  காலி!

செக்கின் செஞ்சுட்டு சும்மாச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம்.

அங்காச புராவில் (அட! ஏர்ப்போர்ட்டுலே தாங்க) எங்கே பார்த்தாலும் கருடவாகனத்தில் விஸ்னு!  ரெண்டு இறக்கைகளையும்   நல்லா  உயரமாத் தூக்கி விரிச்சு வச்சுருக்கார்.



நினைவுப் பொருட்களுக்கான கடைகள் பார்க்கவே அருமை.

பகல் சாப்பாட்டை அங்கேயே ஒரு ரெஸ்ட்டாரண்டில் முடிச்சுக்கிட்டோம். பாஸ்தா & ஃபிங்கர் சிப்ஸ்.  வெறும்முட்டாய்களுக்குன்னே ஒரு கடை. புளி மிட்டாய்  பார்த்தேன்.  அசல் புளியம்பழமாம்.  மகளுக்குப் பிடிக்குமேன்னு  கொஞ்சம் வாங்கிக்  கைவசம் மிஞ்சி இருந்த சில ஆயிரங்களைக் கரைத்தேன். அப்படியும்   சில ஆயிரங்கள்  மிஞ்சியன.  அடுத்த பாலிப் பயணத்துக்கு இருக்கட்டுமுன்னு எடுத்து வைக்க வேண்டியதுதான்.

சொல்ல மறந்துட்டேனே... இங்கே உபுட் நகரத்தில்  உலக எழுத்தாளர்கள் & வாசகர்கள் திருவிழா ஒன்னு செப்டம்பர் மாசத்தில் நடக்குது.  இந்த 2013 வது ஆண்டு இதுக்கு பத்து வயசு.  அதுக்கான  ஸ்பெஷலா அக்டோபர் 11முதல் 15வரை அஞ்சு நாள் விழாவாக் கொண்டாடுறாங்க.  சரஸ்வதி ஃபவுண்டேஷன்  ஏற்பாடு
!

வழக்கம்போல் ஏர் ஏசியா  தாமதமா வந்து நம்மளை ஏத்திக்கிச்சு.  நாலுநாள் லட்ச லட்சமா வாரி விட்டாச்சு. இனி  ருப்பையாவை விட்டுட்டு ரிங்கெட் கணக்கு பார்க்கலாம்.

பை பை பாலி.

PIN குறிப்பு:  வரும் இடுகையில் இருந்து தொடருக்குப் பெயர் மாற்றம் உண்டு:-))))

தொடரும்........:-)




Monday, July 29, 2013

மும்முகமுள்ள நான்முகன் (பாலி பயணத்தொடர் 19 )

தேடிச்சோறு நிதம் தின்று பல... சின்னஞ் சிறுகதைகள் பேசி.....   இந்த நிமிசத்துக்கு பாரதியை மறக்கணும்.  ஒருநாள் உணவை  ஒழி என்றால்.... அவ்வையார் எதிர்ப்பாட்டு பாடிட்டார்....

கடைத்தெருவுக்குள் கால் வைச்சதும்தான் காலையில் பார்த்து வச்ச  எதிர்க் கடை , நினைவுக்கு வந்துச்சு. இப்போ அங்கே வியாபாரம் பார்த்துக்க வேறொரு பெண்.  பிரம்மன் இருக்காரான்னு பார்த்தால் நமக்காகக் காத்திருக்கார்.  விலை  காலையில் சொன்னதேதான்.  நான் என்னுடைய டீலைச் சொல்லி  காலையில் பார்த்த விற்பனைப்பிரிவுப் பெண், முதலாளியிடம் கேட்டு வைக்கிறேன்னு சொல்லி இருந்தாங்க.  கேட்டாங்களான்னு தெரியலைன்னு(ம்) சொன்னேன்.

ஒரு நிமிசம் யோசிச்சதும்,  'காலையில் நீங்க வந்து போன விவரம் என்னிடம் சொல்லிட்டுத்தான் போனாங்க.  நீங்க சொன்ன விலைக்குத் தர்றேன்.ஆனால்  நீங்க வேற யார்கிட்டேயும்  சொல்லிடாதீங்க'ன்னாங்க. அந்த வேற யார் யாருன்னு தெரிஞ்சால் சொல்லாம இருக்கலாமேன்னு நினைச்சேன்.  ரெண்டரை லட்சம் கை மாறுச்சு.


 உண்மையில் இது பிரம்மனான்னே  எனக்கு ஒரு சந்தேகம். அஞ்சு தலையுடன்  இருந்த பிரம்மனின் தலையை பொய் சொன்ன காரணத்தால் கிள்ளி எறிஞ்சார் சிவன் என்று ஒரு புராணக்கதை உண்டு. எல்லாம் அந்த அடி முடி விவகாரம்தான்.  முடி கண்டேன் என்று  தாழம்பூவை (பொய் )சாட்சி  வச்சு விட்ட ரீலுக்கான தண்டனை. இந்த தலை கொய்தல் சம்பவத்தின் பின்னே பல கதைகள் இருக்கு.  சிவன், பைரவரை உருவாக்கி அவர்மூலமாகத் தலையைக் கொய்தார் என்றும், சிவனே கோபம் கொண்டு சூலாயுதத்தால்  கிள்ளி எறிந்தார் என்றும்,  பிரம்மனொரு முறை,  தான்  சிருஷ்டித்த அழகியையே  கண்டு காமவசப்பட்டார்  என்றதால் அதற்கான தண்டனையாக அவர்  தலையைக் கொய்தார் ஈசன் என்றும்  வகை வகையாக நிறைய கதைகள்  உண்டு.  நான்முகன் அதுக்கப்புறம் என்ன தப்பு பண்ணினாரோ.... இப்ப  இன்னொரு தலை அவுட். ஒவ்வொரு தலையுடன் அதற்கான ஜோடிக் கைகளும்   காலி ஆனதால் இப்போ மூணு தலைகளும் ஆறு கைகளுமா இருக்கார்.

இப்போ நியூஸி  வர அவருக்கு லபிச்சுருக்கு.  இங்கே  வந்த பிறகாவது   அசட்டுத்தனமா எதாவது செய்யாம இருக்கணும்.  சட்டம் இங்கே அனைவருக்கும் ஒன்று என்பதால்  குற்றம் செஞ்சுட்டுத் தப்பிக்க முடியாது.

இந்தக் கடையில் இன்னும் ஏராளமான கைவினைப் பொருட்கள் இருக்கு. அனைத்துக்கும் ஆசைப்பட நமக்கு ஐவேஜ் இல்லை:(  பொம்மலாட்டம் பொம்மைகள் கூட இருக்கு!  க்ளிக் க்ளிக்...அம்புட்டுதான்.

பிரம்மனைத் தூக்கிக்கிட்டு  வலப்புறம்  ஒரு பத்து கடை தூரம் போனோம். ஏற்றமான சாலை என்பதால் கால்களுக்குச் சிரமமா இருக்கு.  போகட்டும் போன்னு  திரும்பி இறக்கத்தில் நடந்து போய் வழியில் ஒரு  இருட்டுக்கடையைக் கண்டோம்.  இருட்டு அதிகரிச்சால் அது நல்ல ரெஸ்ட்டாரண்டு என்று பொதுவா ஒரு எண்ணம் நிலவுது.  அதுக்குத் தகுந்த மாதிரி  விலையும் தாளிச்சுருவாங்க.  Kids friendly ன்னு போர்டு சொல்லுது.  அப்ப ஓக்கே எனக்கு:-)

சுப காரியங்களுக்கு சக்கரைக்கூடு  வைப்பாங்க  பாருங்க அது போல  கூம்பு வடிவில் சோறு கிடைச்சது.  புளிப்பே இல்லாத நல்ல தயிரில் ஒரு லஸ்ஸி. தாராளம்!

சாப்பாடு ஆன கையோடு  கொஞ்சம் நடையில்  கரன்ஸி எக்ஸ்சேஞ்ச் கண்ணில் பட்டதும் இன்னும் கொஞ்சம் காசு மாத்திக்கலாமுன்னு  போனார் கோபால். 9400 ரேட்.  எப்படியும் ஊர் விட்டுக் கிளம்பும்வரை தேவைதானே?  அதே கடையின் மறுபுறம்  ஒரு ம்யூஸிக் ஷாப்.  இன்னிக்குக் காலையில்  நம்ம ஸென்டானா ரெஸ்ட்டாரண்டில் கேட்ட குழலிசை மனசுக்குள் ஓடிக்கிட்டே இருக்கு. இதே மெட்டுகளில் சிலபல தமிழ் சினிமாப் பாட்டுகளைக் கேட்டுருக்கேன். என்ன பாட்டுன்னுதான் சட்னு நினைவுக்கு வரலை.

ம்யூஸிக் கடையில்  குழலிசை வேணுமுன்னதும்   அவர் காமிச்ச  சிடியைப்  போட்டுக் கேட்டால்... இதுவும் தமிழ்ப்பாட்டையே நினைவு படுத்துது. நல்லமெலடி.  (மனசுக்குள்ளே ஓட்டிக்கிட்டே இருந்ததில்  பிடிபட்டுப்போச்சு. தொன்னூறுகளில் பிரபல இசை அமைப்பாளரின் பாட்டுகள்.  ஓக்கே ...இன்ஸ்பிரேஷன் யார் மூலம் யாருக்குன்னு தெரியாது என்பதால் தேவையில்லாத  விவாதங்கள் தவிர்க்கப்படணுமுன்னு  முடிவுக்கு வந்துவிட்டேன்) எது எப்படியோ  நமக்குத் தெரிஞ்ச பாட்டாக இருக்கே என்பதில் மகிழ்ச்சியே. ஆசைக்கு ஒன்னு இருக்கட்டுமுன்னு  வாங்கியாச்சு.  விலைதான் அறுபதினாயிரம் ரூபாய்.

அடுத்துப் பார்த்தது ஒரு துணிமணிக் கடை. மகளுக்கு  ஒன்னும் இதுவரை  வாங்கலையேன்னு  பார்த்து  ஒரு  ட்ரெஸ் வாங்கினோம். அப்படியே எனக்கு  ஒரு ஸராங். அரை விலை டெக்னிக்கில் பேரம்  படிஞ்சது. கடையில்வேலை செய்யும்   அழகான குட்டிப்பொண்  அப்பப்பக் கடை முதலாளியிடம்  கேட்டுட்டு  வந்து  வியாபாரம் செய்யறாங்க.  பெயர்  கேட்டேன். புட்டு!  ஆஹா....   தலைச்சன் குழந்தை!  கடைக்காரம்மா மடிக்கணினியில்  பயங்கர பிஸி.  பணம் கொடுக்கும்போது தற்செயலாப் பார்வையில் பட்டது  Zuma Game . அட!  உன் கேம்தான் இவுங்க விளையாடுறாங்கன்னார் கோபால்.


சகவிளையாட்டுக்காரி என்றதும் எங்களுக்குள்  ஒரு நட்பு ஏற்பட்டுப்போச்சு. மூளையை  அலர்ட்ட்டா வச்சுக்க இப்படிப்பட்ட கேம்ஸ் ஒன்னு ரெண்டு அப்பப்ப விளையாடணும் என்ற  என் அறிவுரையை  முற்றிலும்  ஆமோதிச்சாங்க:-)

ஆச்சு ... இன்னிக்கான கடமைகள் என்ற நிம்மதியோடு  அறைக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள்  பொழுது விடிஞ்சதும் எல்லாத்தையும் ஏறக் கட்டிட்டு ப்ரேக்ஃபாஸ்டுக்கு ஸென்டானா  ஸன் ரைஸ் ரெஸ்ட்டாரண்டு போனால் நேற்றைப்போலவே அதே புல்லாங்குழல் இசை !  அடடா..... கேட்க எவ்ளோ இனிமை!


இன்னிக்கு  பழவகைகளில்  ஒரு வித்தியாசமான ஒன்னு இருந்துச்சு. ஸ்நேக் ஸ்கின் ஃப்ரூட்! பெயர்ப் பொருத்தம்  சூப்பர்.  நான் மட்டும் ஒன்னு எடுத்துக்கிட்டு வந்தேன். Salak  என்றுபெயராம்.  உள்ளே மூன்று சுளைகள்.  கொட்டை ரொம்பப்பெருசு. சதைப்பற்று கொஞ்சூண்டுதான்.   நல்ல முதிர்ந்த பலா, ஜஸ்ட்  பழுக்குமுன்  உள்ள சுவை.  (பலா சிப்ஸ்க்கு  இப்படி உள்ள பலாக் காயைத்தான்  வெட்டுவோம். எல்லாம் கேரள வாழ்க்கை அனுபவம்தான்)





அப்புறம்  வாழை இலையில் மடிச்சு வேகவச்ச  ரெண்டு சமாச்சாரங்கள்.  க்ளூட்டோனியஸ் அரிசிமாவு தண்ணீர் சேர்த்துப் பிசைஞ்சு,  அதை  சின்ன வட்டமாகப் பரத்தி நடுவில்  நாட்டுச்சக்கரையும்  உலர்ந்த திராக்ஷையும் வைத்து  மூடி ,  மாவை இலைக்குள் பொதிஞ்சு  ஆவியில் வேக வச்சுருக்காங்க.  இன்னொன்னு தேங்காய் வெல்லம் அரிசி மாவு  குங்குமப்பூ சேர்த்து  செஞ்ச இலைக் கொழுக்கட்டை.

பரிமாறும் பெண்களிடம் என்ன ஏதுன்னு விசாரிச்சேன்.  ஒருத்தர் பெயர் புட்டு இன்னொருத்தர் காடெக். எல்லாமே கொள்ளை அழகு!  ஹெலிகோனியா (heleconia)க்கள்  அட்டகாசம். இந்த வகையில் மட்டும் 200 விதச் செடிகளிருக்காமே! என்ன ஒரு இனிய சூழல்.  விட்டுப் பிரிய மனமே இல்லை:(


போயிட்டு வரேன்டா  குரங்கன்மாரே!

அறைக்கு வந்ததும் கோபால் இன்னொருமுறை  டிக்கெட் சமாச்சாரங்களைச் செக் பண்ணியவர், அடடா..... ஃப்ளைட் 12 மணிக்கு நினைச்சு புத்ராவை  எட்டு மணிக்கு வரச்சொல்லிட்டேன்.  இப்பப் பார்த்தால்  ஃப்ளைட் 2 மணிக்குதான் என்றவர் புத்ராவுக்கு  ஃபோன் செஞ்சு பத்து மணிக்கு வரச் சொல்லிட்டார்.  முன்னமே தெரிஞ்சுருந்தால்  இங்கே பெரிய க்ராஃப்ட் மார்கெட் இருக்காமே போய் வந்திருக்கலாம்:(  எவ்வளவு தூரமோ என்னவோ.....  போகட்டுமுன்னு சொல்லிட்டு இவர் ஒரு தூக்கம் போட ஆரம்பிச்சார்.

நான் ஒருத்தி..... வாயிலே இருக்கு வழி என்பதைச் சுத்தமா மறந்து போயிருந்தேன். ஸென்டானாவைச் சுற்றிப்பார்த்துக் கிட்டும் மைனாக்களோடு பேசிக்கிட்டும்.  செடி கொடி மரங்களை க்ளிக்கிக்கிட்டும்  அவைகளிடம்  போய் வாரேன்னு  சொல்லிக்கிட்டும் திரிஞ்சேன்.

அறைக்குத் திரும்பினால் இவர் தூக்கம் முடிச்சு சாருகஸேரயில்  உக்கார்ந்துருக்கார்.  அதைப் பிரிய மனமில்லை போல!  அங்கே பாருன்னு  கண்ணைக் காமிச்சார்.  பக்கத்து அறையைச் சுத்தம் செய்யப் பணிப்பெண்கள் கைவண்டியைத் தள்ளிக்கிட்டு  வர்றாங்க. யாருன்னு பார்த்தால்..... அட... நேத்து பார்த்தப் பள்ளிக்கூடச் சிறுமிகள்..... ஓஹோ  அதுதான் ஒன்பது மணியாகட்டுமுன்னு காத்திருந்தாங்களோ!

குடும்பத்துலே பெண் குழந்தைகள் தாய் தகப்பனுக்குச் சுமையா இருக்காமல் எதாவது ஒரு வேலை தேடிக்கிட்டு சம்பாரிச்சுப் போடுறாங்களாம்.  கேக்கவே எனக்கு ரொம்பப் பெருமையா இருந்துச்சு. உண்மைதான். இதுவரை  எல்லா இடங்களிலும்  பார்த்த  இளம்பெண்கள்  மனசில் வந்து போனாங்க.

தொடரும்.............:-)





Friday, July 26, 2013

யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கும் ஒரு காலம்!! (பாலி பயணத்தொடர் 18 )

'உங்களை இந்த வாசலில் இறக்கிவிடறேன்.  சுத்திப் பார்த்து முடிச்சதும் செல்லில்  கூப்பிடுங்க.  நான் வந்து  பிக் பண்ணிக்கறேன். பார்க்கிங் ரொம்ப தூரத்துலே இருக்கு' ன்னார் நம்ம புத்ரா. எதோ  நாற்சந்தி இது.  நல்ல கூட்டம். ட்ராஃபிக்கும் தயங்கித் தயங்கித்தான் போகுது. மழை நின்னபாடில்லை இன்னும்:(

உபுட் அரண்மனை வாசலில் இருக்கோம்.  இங்கே மட்டும்தான் உள்ளே போகக் கட்டணம் ஒன்னும் இல்லை.  சுத்துச்சுவருக்குள்ளே  பெரிய திறந்தவெளி!   முற்றமும்  பெரிய பெரிய  திண்ணை மண்டபங்களுமா இருக்கு. இடது பக்க முதல் மண்டபத்துலே  அரண்மனைக் காவலர்கள்.  மழை நனையாமல் உக்கார்ந்து பார்வையாளர்களைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க.

சரியான  வடிகால் இல்லாமல் முற்றத்தில் தண்ணீர் தேங்கி நிக்குது. கண் எதிரே  ஒரு அலங்காரக் கதவு.  மூடி இருக்குன்னாலும்  அதுக்குப்பக்கத்தில் ரெண்டு பக்கமும்  அடுத்த சுற்றுக்குப்போக வாசல்கள்  உண்டு.  இடது பக்க வாசல்  வழியா உள்ளே நுழைஞ்சால்  அங்கேயும்முற்றங்களும் தோட்டங்களும் !  நல்ல பராமரிப்பு.  பிரகாரச் சுவருக்கு மேலே சின்னதாக் கோவில் விமானங்கள் போலுள்ளே தெரிஞ்சாலும் அங்கெல்லாம்  போகமுடியாமல்   ப்ரைவேட் ஏரியா என்ற  போர்டு.



அரசகுடும்பத்தினர்  இன்னும் இங்கே வசிக்கிறாங்க.  எட்டாம் நூற்றாண்டில் இருந்து அரசர்களின் ஆட்சி இங்கே நடந்ததாக  பனையோலைச் சுவடிகளில்  எழுதுன  ஆவணம் இருக்காம். அந்தக் காலங்களில் ஏகப்பட்ட சிற்றரசர்கள் சின்னச்சின்ன கிராமங்களில்  அரசு நடத்தி இருந்து இருக்காங்க.

டச்சு நாட்டுக்காரர்கள்  பிடியிலே இந்தோனேஷியா  ஒரு நானூறு ஆண்டுகளுக்கு மேல் இருந்துருக்கு. அந்த காலக் கட்டங்களில்  உள்ளூர் சிற்றரசர்களுக்கிடையில்  ஏகப்பட்ட சண்டைகள் நடந்துருக்கு. சண்டை மூட்டி விட்டவர்கள்  டச்சுக்காரர்கள்தானாம்.  பிரித்தாளும் கொள்கை  நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்குமே!

இவைகளில் இருந்து  தப்பிப் பிழைச்ச   அரசர்கள்  அதிகமில்லை. அப்படி ஒரு அரச வம்சம் ஆண்டதுதான் இந்த உபுட்.  அவர்களுடைய அரண்மனைதான் இது.  1917 இல்  நிலநடுக்கத்தில்   அழிஞ்சு போனவைகளுக்குப் பதிலா கட்டுனவைகளே  இப்போ நாம் பார்க்கும் கட்டிடங்கள் எல்லாம்!

அரண்மனைக்குள்ளேயும்  போய்ப் பார்க்கலாமுன்னு  எனக்குத் தெரியலை.  அப்புறம் நம்ம  கோவி கண்ணனின் 'காலம்'  சேதி சொல்லுது அம்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் உள்ளேயும் பார்க்கலாமுன்னு. அடடா....தெரியாமப் போச்சே:(



ஆனால் அரண்மனை வாசியா தங்கலாம் நீங்க.   பெட் அண்ட் ப்ரேக்ஃபாஸ்ட்  ஸ்டைலில் ஹொட்டேல் நடத்துது  அரசர் குடும்பம்.    அரச குடும்பத்தின் கிளைகள் பலவும் இப்ப ஹொட்டேல் பிஸினெஸில் இருக்காங்க. கிட்டத்தட்ட 11 இருக்குன்னு பட்டியல் சொல்லுது.( இதையும் இந்தியாவில் இருந்து கத்துக்கிட்டாங்க போல)

அரண்மனைத் தோட்டத்தில் இருக்கும் மா இப்போதான் பிஞ்சு விட்டுருக்கு. தரையெல்லாம் வடுக்கள். பேசாம அரசர் , அரண்மனை  மாவடு ஸ்பெஷல் னுகூட  ஒரு வியாபாரம் ஆரம்பிக்கலாம்.







இந்த அரண்மனை முற்றத்தில்   மாலை நேரத்தில்  ஒரு நாளைக்கு ஒருவிதமுன்னு தினமும் கலை நிகழ்ச்சிகளை நடத்தறாங்க. நாம் போன அன்று  Legong Dance. மஹாபாரதக் கதை.


எனக்கு இந்த  நிழல் பொம்மலாட்டம் பார்க்கணுமுன்னு ரொம்ப ஆசை.   (Wayang Kulit . shadow puppet show)முகுந்தா..... முகுந்தா.......  க்ருஷ்ணா  முகுந்தா முகுந்தா  வரம் தா  வர ம் தா,  ப்ருந்தா வனம்தா.....    வனம் தா  ( என்னமா எழுத்திட்டீர்,  ஐயா வாலி!!!)  எங்கே நடக்குதுன்னு  தெரியலை. ஹொட்டேலுக்குப்போய்  விவரம் கிடைக்குதான்னு பார்க்கணும். அப்பதான் நினைச்சேன்...பேசாம மடிக்கணினியைக் கொண்டு போயிருக்கலாம்...ப்ச்....

அரண்மனை மண்டபத்தில்  ஈரத்தோடு ஈரமா இருந்துட்டுப்போகட்டுமேன்னு  பெரிய மனசு பண்ணும் நாய்!

மழை லேசா விட்டது.  சரி,  பார்த்தது போதுமுன்னு  புத்ராவை செல்லில் கூப்பிட்ட ரெண்டாவது நிமிசம் வந்து பிக் பண்ணிட்டார்.  நாற்சந்தி கடைவீதிபோல ஒரே கலகல.

 எங்கேயும் போகாமல் நேரா ஹொட்டேலுக்கு வந்துட்டோம்.  மறுநாள் எட்டு மணிக்கு புத்ராவை வரச்சொல்லிட்டு  ஹொட்டேல் கார்பார்க்கைக் கடந்தால்   Apa kabar? ( How are you?)  என்று கரகரத்த குரல்.  ஆஹா.... நேத்து வாய் திறக்காமல் இருந்த  மைனா நம்பர் 2 !   'ஐ  அம் ஃபைன்.  ஹௌ ஆர் யூ' ன்னுட்டு  அறைக்குப் போனோம்.  அங்கே உம்மரத்தில் இருந்த கசேரகள் ஒன்னில் ஒரு பூச்ச!  ம்யாவ்!!!

பூனைப்பசங்களுக்குக் கூட ஒவ்வொரு தேசத்தில் ஒரு முகம்!  இது பாலினீஸ் இல்லையோ!.... கொஞ்சம் நீண்ட முகம். யார் வந்தா என்ன யார் போனா என்னன்னு நிம்மதியா உறக்கம்.  ஈர உடுப்பை அலசிப் போட்டுட்டு  சூடா ஒரு ஷவர் எடுத்தபின்தான்  கொஞ்சம் ஆசுவாசமா இருந்துச்சு.  இந்த செருப்புதான் மழையில்  நனைஞ்சே... ஊறிப்போன  ப்ரெட்  மாதிரி.  அது காய்ஞ்சால் தான் நடக்க வசதிப்படும். லக்கேஜ் ரொம்ப வேணாமுன்னு ஒரு ஜோடி செருப்போட தான்  வந்துருந்தேன்:(

அழைப்பு மணி என்ற ஆடம்பரம் கூட இல்லாத அறையில் நல்லவேளையா ஹேர் ட்ரையர் வச்சுருந்தாங்க.   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............

ரெண்டு காஃபி  கொண்டு வரச்சொல்லிட்டு  கோபாலும் குளிச்சுட்டு வந்தார்.  காஃபியும் வந்துச்சு. அதே ரெண்டு பெரிய ஜக்.  இப்படி மொடாக்குடியரா இருக்கமுடியுமோ? காஃபி குடிச்சுக்கிட்டே  பேசறோம். தமிழ் பேச்சு தாலாட்டா இருக்கு போல... ஒரு அனக்கமில்லாமத் தூங்கறான்.

ரொம்ப அலைஞ்சுட்டோம். எங்கேயும் போகாமல் ஓய்வெடுக்கலாமுன்னு  நினைச்சேன்.  நாளைக்கு இங்கிருந்து கிளம்பணும்.  நெல்வயலையும்  கேரளவீட்டையும்  விட்டுப்பிரியணுமேன்னு மனசு சோகம் பாடுது.  அஞ்சரைக்குத் தூக்கம் கலைஞ்சு  எழுந்து கட்டைச்சுவர் மேல் தாவி உக்கார்ந்தான்.


ராத்திரி சாப்பாட்டு?  பிரச்சனை இல்லை/ அதே இந்தியன் கடைக்கு  ஃபோன் போட்டால் ஆச்சு.  மெனு கார்டை எடுத்து வச்சுக்கிட்டு அரைமணி நேரம் அலசி ஆராய்ஞ்சு  ஏழரைக்கு கொண்டு வரச்சொல்லணுமுன்னு  ஃபோன் செஞ்சால்............     சண்டே ஹாலிடே!  போச்சுடா.....

தொடரும்............:-)