Friday, November 29, 2019

எழுத்தோவியருடன் ஒரு சந்திப்பு ... (பயணத்தொடர், பகுதி 179 )

பனிரெண்டரைக்குத் தோழி சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வர்றாங்க. ஒரு மணிக்குச் செக்கவுட்.  பொட்டிகளைக் கீழே  கொடுத்துட்டு, மூணுபேருமாக் கிளம்பி  சாப்பிடப் போனோம்.  பேச்சு சுவாரஸியத்துலே எங்கெ போய் சாப்ட்டோமுன்னு நினைவுக்கு வரலை.

மசாலா மரவள்ளியும்,  மூணு வகை தோசைகளும்... ஆச்சு....
சாப்பாடானதும்,  நாங்க ஒரு பக்கமும், நம்மவர் ஒருபக்கமும் கிளம்பியாச்சு. மூணரைக்கு லாபியில் சந்திக்கலாமுன்னு முடிவு.  என்னுடைய ஸாம்சங் நோட்புக் சரியா சார்ஜ் ஆகாம, இந்தப் பயணம் முழுசும் படுத்தல். அதான் அதை எடுத்துக்கிட்டு, சிம்லிம் டவர் வரை போயிட்டு வரேன்னார்.  எலக்ட்ரானிக் கடைகள் கொட்டிக்கிடக்கே அங்கே!
காலணிகளைப் பார்த்ததும் மகள் ஞாபகம். மொத்தக் கடையையும் சூறையாடிருவாள் :-)

நானும் ஜெயந்தியும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கப்போனோம்.  அவுங்க எப்பவும் எழுத்துவேலையில் பயங்கர பிஸி. இப்ப ஓவியம் வரைவதிலும்  புகுந்தாச்சு.  அதென்னமோ.... பிரபல ஓவியக் கலைஞரின் ஆவி (உங்களுக்கு யார் மனசில் வர்றாங்களோ அவுங்க பெயரை நினைச்சுக்கலாம். எனக்கு என்னவோ ரவி வர்மாதான் வந்தார் )  அவுங்களைப் பிடிச்சுக்கிட்டு இருக்குன்னு தோணுது.  அப்படி வரைஞ்சு தள்ளறாங்க. சிங்கை நூலகத்தில் ஒரு  பெயின்டிங் எக்ஸ்பிஷன் கூட நடத்துனாங்க.

சிலபல  புத்தகங்களுக்கும் அட்டைப்படம் வரைஞ்சு கொடுத்துருக்காங்க. இவ்வளவு ஏன்....  போன வருஷம் (டிசம்பர்) இங்கே நியூஸிக்கு வந்தப்ப எனக்கு வரைஞ்சு வந்த படங்கள் இவை. நீங்களே பாருங்க...... எப்படி தூள் கிளப்பறாங்கன்னு !

இதுக்கு நடுவிலே  இலக்கியப் பயணங்கள் வேற......   இப்பக்கூட இன்றைக்குக் காலையில்தான் சிங்கை திரும்பி இருக்காங்க.   அலுப்பையும் பொருட்படுத்தாம நம்மைப் பார்க்க வந்த நட்புக்கு நன்றின்னு ஒரு சொல் போதுமா என்ன ?  போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு  எனக்கொரு   மல்லிகைப் பந்து வேற!  பூப்பிசாசுக்கு ரொம்பப் பொருத்தம் :-)
முகத்தில் களைப்புத் தெரிஞ்சது.... அதான் ரொம்பச் சுத்தாம சீக்கிரமாவே ஹொட்டேலுக்கு வந்துட்டோம்.   கொஞ்ச நேரத்துலே 'நம்மவரும்' வந்துட்டார். நோட்புக்குக்குப் புது பேட்டரி போட்டாச்சாம்.  எல்லோருமாக் கொஞ்ச நேரம் பேசிட்டு, மூணே முக்காலுக்கு அவுங்க கிளம்பிப் போனாங்க. நாங்களும் பொட்டிகளை எடுத்துக்கிட்டு டாக்ஸி பிடிச்சு ஏர்ப்போர்ட்டுக்கு வந்துட்டோம். டாக்ஸி ட்ரைவர்  ரொம்ப நல்லமாதிரி !
அங்கே இருக்கும் எடை பார்க்கும் ஸ்கேலில்  ஒவ்வொன்னா வச்சுப் பார்த்துத் திருப்தி ஆனதும் போய்ப் பொட்டிகளைச் செக்கின் செஞ்சதும்தான்  'நம்மவர்'  முகத்தில் களையே வருதுப்பா :-) உண்மையில் இன்னும் ஒன்னு ரெண்டு கிலோ வரை வச்சுருக்கலாம்.  எங்கே வாங்க விட்டார்?  செராங்கூன் ரோடு முழுக்க எவ்ளோ பார்த்தேன்...  :-)
செல்ஃப் செக்கின்தான் இப்பெல்லாம்....
பை நிறைய இருக்கும் பூவை எடுத்துத் தலைநிறைய வச்சுக்கிட்டேன். இப்பவே வச்சு அனுபவிச்சால்தான் உண்டு. நாளைக்கு நியூஸியில் இறங்கும்போது   தலையில் பூவின் சுவடு கூட இருக்கப்டாது.  ஃபைன் கட்டி முடியாதுப்பா.....    கனம் இழுக்குது.   பூச்சரத்தைப் பேசாம ப்ளேனுக்கு முன்னால் கட்டி விட்டுருக்கலாம், இல்லே :-)


நமக்கு இன்னும் மூணு மணி நேரம் இருக்கேன்னு  ரெண்டாம் டெர்மினல் வரை போய் மகளுக்கு  வேணுங்கறதை வாங்கிக்கிட்டு, அப்படியே கைவசம் இருக்கும் நாப்பது சாங்கி டாலருக்கு  என்ன வருதோ அதுன்னு பார்த்து ஒரு சேவல் வாங்கினேன். நம்மூட்டுலே ஒரு பழனி முருகன் வந்துருக்கார்.

சரியா ஏழு அம்பதுக்கு வண்டி கிளம்பிருச்சு. எல்லாம் வழக்கம்போல்....  பத்து இல்லை பத்தரை மணி நேரம்  இப்படி அடைஞ்சு கிடக்கவேணும்.  வால்காத்து அதிகமா இருந்தால் கொஞ்சம் சீக்கிரம் போய்ச் சேர்ந்துடலாம்.

நம்ம அஃபிஸியல் விண்ட்டர் முடிய இன்னும் பத்துநாள் கிடக்கு....
தூக்கமும் விழிப்புமா மாறிமாறி அனுபவிச்சுக் காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் என்ற பெயரில்  வட இந்திய குல்ச்சாவைக் கொண்டு வந்து நீட்டுனதை வாங்கி ஒரு பக்கம் அப்படியே வச்சுட்டு   பத்துமணிக்கு  நியூஸி வந்திறங்கி, திக் திக்குன்னு சிகப்புச்சேனல் வழி போய், நல்லவேளை.... சுண்டைக்காய் வத்தல் தப்பிச்சதுன்னு பெருமூச்சு விட்டு, டாக்ஸி பிடிச்சு வீடு போய்ச் சேரும்போது  மறுநாள்  காலை  மணி பத்தரை.
சாமி நமஸ்காரம் பண்ணிட்டுக் குளிச்சு விளக்கேத்தி அரக்கப்பரக்க ஆக்கித்தின்னுட்டு மூணு மணிக்கு  டாக்டரைப் போய்ப் பார்த்தோம்.  நம்மவர், போனவாரமே அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி வச்சுருந்தார்.  அதுக்கப்புறம் ஸ்பெஷலிஸ்ட், இன்வெஸ்டிகேஷன்ன்னு அதெல்லாம் ஒரு தனிக்கதை போங்க....
நாலு மணி ஆனதும்  நேராக் கேட்டரிக்குப்போய் நம்ம ரஜ்ஜூவை வீட்டுக்குக் கூட்டி வந்தாச்சு. இப்பதான்  நம்ம பயணம் பூர்த்தி ஆனதாக் கணக்கு !
இதுவரை கூடவே வந்த வாசக நண்பர்களுக்கு என் அன்பும் நன்றியும்!

பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.

ஆதலினால் பயணம் செய்வீர்!

PIN குறிப்பு:  அடுத்த பயணத்தில் இருக்கிறேன்.  நாடு திரும்பும்வரை லீவு வேணும்......


Thursday, November 28, 2019

இனி எப்போ காண்பேனோ..... (பயணத்தொடர், பகுதி 178 )

அல்ட்டிமேட்டம் கொடுத்தால் எல்லாம் சரியா நடக்குதே!  காலையில்  நாலு மணிக்கே 'புள்ளி' எழுந்தாச்.  அஞ்சு மணிக்குக் கிளம்பிக் கோவிலுக்குப் போறோம்.  போறவழியில் நம்ம முஸ்தாஃபா கடைக்குள் நுழையறார். இவுங்க இருபத்திநாலு மணி நேரமும் கடையைத் திறந்து வைக்கிறாங்க. நமக்கும் நல்லதாப் போச்சு. 'கடை மூடி இருப்பான். நாளைக்குப் போகலாம்' னு சால்ஜாப் சொல்ல முடியாது :-)
ஆனால்.... எனக்கு இங்கே அப்படியொன்னும் வாங்கிக்கத் தோணறதில்லை இப்பெல்லாம்.  தொன்னூறு சதமானம் சீனச்சாமான்கள்தான். அதெல்லாம் இப்ப நம்மூர் சீனக்கடைகளில் கிடைக்குதே... ஒன்னே ஒன்னு மட்டும்தான்  இங்கே  வாங்கிப்பேன். அது குங்குமப்பூ.

இப்ப ஷாப்பிங் 'நம்மவருக்குத்தான்'. ஷர்ட்ஸ் செக்‌ஷனுக்குப் போறார்.  ஒரே டிஸைன் ஒரே கலரில்தான் எப்பவும் வாங்கிக்கிறார்.  அதென்ன  அப்படின்னா.... 'இதைப்பாரு... இந்தக் கோடு சின்னதா இருக்கு.  அதுவேற இது வேறம்மா....'   க்க்கும்......  செலக்‌ஷன் சரி இல்லைப்பா .....  அதுக்கு  நானே சாட்சி :-)

இப்பவும் மூணு ஷர்ட் ஆச்சு. அப்பதான் நினைவுக்கு வருது.... நாம்  இங்கே வந்தது  அன்டாஸிட் மாத்திரை வாங்கிக்க இல்லையோ?
சட்னு காலை வீசி நடந்து, கோவிலுக்குப் போனப்ப  மணி ஆறடிக்க எட்டு நிமிட்.  பெருமாள் நல்ல தூக்கத்தில் இருப்பார்.  அதிகாலைத் தூக்கம்தான் இனிமை, இல்லே?

ஆஞ்சி சந்நிதி திறந்துருக்கு. குட்மார்னிங் ஆஞ்சிச் செல்லம்!
கோவிலில் அனக்கம் இல்லை.  பெரிய திருவடியை வணங்கிட்டு 'நம்மவர்' அவருடைய தூணாண்டை போய் உக்கார்ந்துட்டார். நான் தாயாரை எட்டிப் பார்த்துட்டு வந்தேன். அம்மாவும்  திரைக்குப்பின் தான்.


சரியா ஆறு ஆனதும் பட்டர் பெருமாளை எழுப்பத் தொடங்கினார். நாங்கள்  சந்நிதியைப் பார்த்தபடி.... (தாழ் திறவாய்......)நம்ம வீடுகளில் செய்யறதைப்போல  ப்ரிண்ட் அவுட் எடுத்து வச்சுருக்காங்க ஒரு கூடையில்.  அதுலே ஒன்னு எடுத்து நாமும் அவரை ஃபாலோ பண்ணிக்கலாம். கூடிவந்தால் இருவது நிமிட்!  தீபாராதனை ஆச்சு. கோவில் வாத்யக்காரர்கள் வாசிச்சாங்க.
அப்புறம் தாயாருக்கும் தீபாராதனை. கூட்டம் அப்படியே பட்டரைத் தொடர்ந்து நகர்ந்துக்குது.  அதுக்கப்புறம்  என்னன்னு இதுக்குள்ளே உங்களுக்குத் தெரிஞ்சுருக்குமே!
கரெக்ட்.  வெண்பொங்கலும் பால்பாயஸமும். எல்லாம் உபயதாரர்கள் ஏற்பாட்டின் படி.

ஆண்டாள் சந்நிதி, தூமணி மாடம், துளசிமாடமுன்னு மீதி வலம் முடிச்சு ஆஞ்சியாண்டை போனால்..... திருமஞ்சனத்துக்குத் தயார் ஆறார்.
சீனு முன்னால் போய் உக்கார்ந்தேன். இப்பப் பெருமாளைப் பார்ப்பதுதான் இங்கே கடைசி முறை என்பதால்... மனசு குழைஞ்சு போக, 'இனி எப்போடா? எப்போ'ன்னு மனசுக்குள் கரைஞ்சு..... (எதுக்குப்பக் கரையறாய்? பொம்மநாட்டிகள் அழுதால் நேக்குத் தாங்காது கேட்டோ!   சொன்னானோ? சொல்லியிருப்பன்)
ஏழுமணி கூட ஆகலை.... கோவிலில் ஆளரவம்  கேட்டில்லை! நானும் அவனும்........  மனதோடு மனமாக மௌனமொழி. பேச்சரவம் கூட இல்லையாக்கும் !

கிளம்பிப் பொடிநடையில் திரும்பறோம்.  முஸ்தாஃபா எதிரில் இருக்கும் மசூதியை இடிச்சுட்டு (நான் இல்லை! ) புதுசு கட்டும் வேலை நடக்குது. மசூதிக்கான அடையாளம் மட்டும் அங்கே.

அறைக்குப் போனதும்  தூங்கிட்டார்.  காலையில் ரொம்ப சீக்கிரம் எழுந்துட்டார்தானே ! போகட்டும்,  இன்றைக்கு இரவுத் தூக்கமும் சரியாக அமையாது....  பயணம் இருக்கே....

எனக்கு, இன்றோடு இப்படம் கடைசி என்பதால்.....  தூக்கமே வரலை.  வெளியே போய்ச் சுத்தலாமுன்னா.... கடைகள் எல்லாம் திறக்கப் பத்தாகாதா?

சீனு கோவில் சுப்ரபாதம் படங்களை ஃபேஸ்புக்கில் போடும் கடமையைச் செஞ்சு முடிச்சுட்டுப் பத்து மணி ஆன கையோடு நான் மட்டும் கிளம்பிக் கீழே போனேன்.  ஸ்ரீவீரமாகாளியிடமும் விடை வாங்கிக்கணும்.
மூலவரைக் கும்பிட்டு, சந்நிதிகளை வலம் வந்தபின்  ஒரு இருவது நிமிட் போல கோவிலில் உக்கார்ந்துருந்தேன், நம்ம லக்ஷ்மி துர்கையின் முன்னால்.  என்ன ஒரு திருத்தமான முகம்!


மெள்ள இன்னொரு சுத்து ஸ்ரீராமர் சந்நிதிவரை போய், ஆஞ்சிக்கும் சொல்லியாச். போயிட்டு வரேன்டா....
நால்வர், காசி விச்சு, விசாலாட்சி, நவக்ரஹம், முக்கியமா இடும்பர்னு எல்லோருக்கும் சொல்லிட்டுத்தான் கிளம்பினேனாக்கும்!


தலைவலி வேற ஙொய் ஙொய்ன்னு...... காலையில் 'குடி' இல்லையே....  எதிரில் இருக்கும் கோமளவிலாஸ் போகலாமுன்னு சாலையைக் கடக்கும்போது  ' துளசி கோபால் மேடம்' ஒரு குரல்!

காளி கூப்புடறாளோ.... ஏன் ஆண் குரலில்? திகைச்சுத் திரும்பினால்....
நான் உங்க ஃபேஸ் புக் ஃப்ரெண்டுன்னு அறிமுகப் படுத்திக்கிட்டார் நண்பர் சந்தானம் நாகராஜன். பெயரே அவர் சொன்ன பிறகுதான் தெரிஞ்சது.

அவருடைய தங்ஸ் சொல்றாங்க , இப்பதான் உங்களைப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தோம் னு :-)  ஹௌ ஸ்வீட்!!


பயங்கர ஃபாலோயர்ஸ்ப்பா... காலையில் போய்வந்த பெருமாள் விஸிட் உட்பட எல்லாமே அத்துப்படி !!!
ஒரு எழுத்துக்காரிக்கு இதைவிடப் பெரும் பேறு வேறென்ன!!!!
அதைவிட, இப்படிப்பட்ட அபூர்வ சம்பவங்கள் நடக்கையில் , இதையெல்லாம் பார்த்து மனைவியின் பெருமையைத் தெரிஞ்சுக்காமல்  தூங்கிக்கிட்டு இருப்பவரை  என்ன சொல்றது?
சாலை ஓரமா நடைபாதையில் நின்னு கொஞ்சநேரம் பேசினோம்.  அப்புறம் அவுங்கள் வேற பக்கமாத் திரும்பிப்போனதும்,  நான் எதோ யோசனையில் கோமளவிலாஸைக் கோட்டை விட்டுட்டு வேற பக்கம் போயிருக்கேன். அப்பதான் தோணுது..... அடடா.... அவுங்களையும் கூப்பிட்டுப்போய் ஒரு காஃபி குடிச்சுருக்கலாம்தானேன்னு...ப்ச்...

திரும்பக் கோமளவிலாஸ்வரை போக சோம்பலா இருக்கேன்னு  கண்ணில் பட்ட ஒரு சாப்பாட்டுக்கடையில் காஃபி ஒன்னு வாங்கிக் குடிச்சேன். ஃபில்டர் காஃபியான்னு கேட்டதுக்கு ஆமாம்னு சொல்லி, டவரா டம்ப்ளரில் கொண்டு வந்து கொடுத்தார். அவுங்க கணக்கில்  இப்படிக் கொடுத்தால் அது ஃபில்டர் காஃபி.  (வேணும்.... எனக்கு... அப்படி என்ன சோம்பல்.... )

தலைவலி குறையட்டுமுன்னு கொஞ்சம் நகைநட்டுகளை வேடிக்கை பார்த்துக்கிட்டே  அறைக்கு வந்து சேர்ந்தேன். வரவர டிஸைன்கள் ஒன்னும் சொல்லிக்கிறமாதிரி இல்லை....   ச்சீச்சீ ரொம்பப் புளிப்பு.....
சென்னை நகைக்கடைகள் எல்லாம் இங்கே(யும்) கிளைகள் திறந்துட்டாங்க.  ஆனால் சென்னையில் செய்யும் வியாபாரத் தில்லுமுல்லுகளை இங்கே செய்யமாட்டாங்கன்னு நம்பலாமா?  (தெரியலையே....)

நம்மவர் தூங்கி எழுந்து பொட்டிகளை அடுக்கிக்கிட்டு இருந்தார். இது இவருடைய ஃபேவரிட் பாஸ் டைம் :-)

தொடரும்...... :-)