Saturday, March 27, 2010

குடும்பச் சண்டையில் மனைவி தீக்குளிப்பு:(

புருஷன் மனைவி சண்டையில் மனைவி தீக்குளிப்பு. இறந்த உடலுடன் கணவனின் வெறியாட்டம். பத்திரிகை செய்திக்குன்னு பரபரப்பான தலைப்பு. ஆனால் சம்பவம் நடந்த சமயம் இருந்த மீடியா(?!) ....வெறும் செவிவழிச்செய்தி மட்டும்தான் சொல்லிக்கிட்டு இருந்திருக்கணும். காலம் அப்படி ! வெறும் சன் & மூன் தான்.

பொதுவா புருசன் பெண்டாட்டி சண்டைன்னாவே அது ரெண்டுபேரில் யாராவது அடுத்தவுங்க குடும்பத்தைக் குறை சொன்னதுலேதான் ஆரம்பிக்கும். அதான் உப்புப்போட்டுச் சோறு திங்கறமே...ரோசம் இருக்காதா?

பொண்ணோட பொறந்த வீட்டுலே ஒருவிசேஷம். பொண்ணு மாப்பிளைக்கு அழைப்பு இல்லே. மருமகனுக்கு எரிச்சல். சேதி கேள்விப்பட்ட பொண்ணு, புருசனை மதிச்சுக் கூப்புடலைன்றது ஒரு பக்கம் இருந்தாலும், அது நம்ம பொறந்தவீடாச்சே, அங்கே நமக்கில்லாத உரிமையான்னு எண்ணம். 'நீங்க சும்மா இருங்க. அதெப்படி எங்க வீட்டாம்பளையை மருவாதையில்லா நடத்தறேன்னு நாக்கைப் புடுங்கிக்கிறமாதிரி எங்கப்பனை நாலு வார்த்தைக் கேட்டுட்டு வாரேன்'ன்னு கிளம்புனா. 'அடிப்போடி....பைத்தியகாரச்சி. மதியாத வீட்டு வாசலை மிதிக்கலாமா'ங்கறான் புருசன். 'மரியாதை தெரியாத குடும்பம் உங்களுது. நல்ல வம்சத்துலே போய் பொண் எடுத்தேன். என்னைச் சொல்லணும். உங்கப்பனுக்கு நேரம் சரியில்லை. பொட்டுன்னு போகப்போறான் பாரு'ன்னான். 'அட நீங்க வேற. என்னாத்துக்கு எங்கப்பனுக்குச் சாபம் கொடுக்குறீர்? எங்க வம்சத்துக்கு என்னா கொறச்சல்? நான் போய் அங்கே என்னதான் நடக்குதுன்னு பாத்துட்டு வரேன். எங்கூடு தானே? கூப்புடாமப்போனா என்ன'ன்னா இவ.

"அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ தா தைன்னு குதிக்காம உள்ளாற போய் வீட்டு வேலையைப் பாரு."

"இல்லே போகத்தான் போறேன். போனா என்ன செய்வே?"

"போவே? உன் காலை ஒடிச்சு அடுப்புலே வச்சுருவேன்."

"வப்பே வப்பே. நான் அங்கே விருந்து தின்னவா போறேன்? நீ என் அப்பனே இல்லைன்னு சொல்லிட்டு வரப்போறேன். இன்னியோட உன் சங்காத்தமே இல்லேன்னு காறி மூஞ்சுட்டு வரத்தான் போறேன்."

"போ போ. என் பேச்சை மீறிப்போனா...அப்படியே போயிறனும். திரும்பி இங்கே வர்ற வேலை வச்சுக்காதே."

பேசாம இருந்துருக்கலாம். ஆனால் இவளுக்கு இப்போ நேரம் சரியில்லை. வீம்பு புடிச்சுக்கிட்டுக் கிளம்பிப்போனா அப்பன் வீட்டுக்கு. 'எங்கே வந்தே' ன்னு கேட்டான் அப்பன். இவளுக்கு வந்துச்சே ஒரு கோவம்! 'அதெப்படி நீ மருமகனைக் கூப்புடாம விசேஷம் நடத்தப் போச்சு'ன்னு குதிக்கிறாள்.

"அவன் என் மருமகனே இல்லை. என்னோட எதிரி நம்பர் ஒன்."

"நல்லா இல்லே உம் பேச்சு. நீதானே, அவரு உன் மருமகனா வரணுமுன்னு தவமான தவமிருந்தே? அவர் சரின்னதும் என்னைப் பெத்து வளத்து ஆளாக்கி அவருக்குக் கட்டிவச்சே. இப்போ எதிரி கிதிரின்னா என்னா அர்த்தம்?"

"ஆமாம். இல்லேங்கலை. உலகத்துக்கே ராஜாவை, மகளுக்குக் கட்டிவச்சு
மருமகனாக்குனா என் பேச்சு கேட்டு நடப்பான்னு இருந்தேன். ஆனா....இவன் சொல்பேச்சும் கேக்கறதில்லை. மதிச்சும் நடந்துக்கலை. சுடுகாட்டுலே திரியற சொறிப்பயலை உனக்குக் கட்டிவச்சதுதான் இப்போ தப்பாப் போயிருச்சு."

விசேஷத்துக்கு வந்துருந்த எல்லாப் பெருந்தலைகளுக்கும் முன்னாலே, தன் புருசனை அவமானப்படுத்திப் பேசுனதைக் கேட்டவுடன் இவ சாமியாடறாள். போன இடத்துலே இவளுக்கு என்ன ஆகுமோன்னு அதுக்குள்ளே அவ புருசன், ஒரு அடியாளைப் பின்னாடியே அனுப்பி வச்சான். அவன் வந்து எல்லாததையும் அடிச்சு நொறுக்கி அப்பன்காரனையும் கொன்னுபோட்டான்.

இந்த கலாட்டாலே அந்த இடமே பத்தி எரியுது. இவ பார்த்தா..... போவாதே போவாதேன்னு சொல்லச்சொல்ல அதைக் கேக்காமப் போயிட்டேனே.... இப்ப எந்த மூஞ்சை வச்சுக்கிட்டு அங்கே திரும்பப்போறதுன்னு அழுதுகிட்டே ஆங்காரத்தோடு அந்த தீயிலே விழுந்து உயிரை மாய்ச்சுக்கிட்டாள்.

விஷயம் தெரிஞ்சு புருசன்காரன் மார்லே அடிச்சுக்கிட்டு ஓடியாந்தான். வந்தா, இவ பொணமாக் கிடக்கா. 'ஐயோ பாதகத்தீ, என் பேச்சைக் கேக்காம இப்படி வந்து உசுரை விட்டயே'ன்னு அலறிக்கிட்டே, அவ பொணத்தை எடுத்துத் தோளில் போட்டுக்கிட்டு வெறிபிடிச்சு ஆடிக்கிட்டே உலகமெல்லாம் சுத்தறான். சரி....... கொஞ்ச நேரத்துலே துக்கம் அடங்கிருமுன்னு பார்த்தா .............எங்கே? இவன் ஆடுற ஆட்டத்துலே அகில உலகமே நடுங்குது.

மச்சினன்காரன் பார்த்தான். இதென்னடா கோராமைன்னு..... செத்த நேரத்துலே அடங்குவான்னு பார்த்தா............ வெறி கூடிக்கிட்டே போகுது. இது நல்லதில்லை. போனவளை நல்லடக்கம் செய்யாம பொணத்தை வச்சுக்கிட்டே இதென்ன போராட்டம்? நாமாச்சும் போய் அதை வாங்கி செய்யவேண்டியதைச் செஞ்சுறலாமுன்னாலும் அவன் முன்னே போகவே பயமா இருக்கு. பேசாம ஒரு காரியம் நாமே செய்யவேண்டியதுதான்னு தீர்மானிச்சு, கையிலே சுத்திக்கிட்டு இருந்த சக்கரத்தை ஏவுனான். சர்ன்னு அது போய் பொணத்தைத் துண்டுதுண்டா அறுத்து வீசிறிச்சு. மிக்ஸியிலே அடிச்சமாதிரி ஆகிருச்சு. மொத்தம் 51 துண்டு:(

மூக்கொரு பக்கம்,. கண்ணொரு பக்கம், காது ஒரு பக்கம், கையொரு பக்கம், காலொரு பக்கம்ன்னு ஊர் உலகமெல்லாம்(ஒரு பேருக்குத்தான் உலகமுன்னு சொன்னது. இங்கே பாரத தேசத்துலேதான் (பிரிவினைக்கு முன்னால் இருந்த பாரதம்) போய் விழுந்துச்சு. இந்த 51 இடங்களைத்தான் சக்தி பீடமுன்னு சொல்றாங்க. அதுலே வலது கால் வந்து விழுந்த இடம்தான் இப்போ நாம் நிக்குமிடம்.

பத்ரகாளி கோவில்ன்னு பெயர் போட்டு வச்சுருக்காங்க. கோவிலில் பராமரிப்பு, பழுது பார்த்துப் பெயிண்ட் அடிக்கும் வேலை ஒரு பக்கம் நடந்துக்கிட்டு இருக்கு. திருவிழா வருதாம். அவ்வளவாக் கூட்டமில்லை.


அலங்கார தோரணவாசலில் ரெண்டு பக்கமும் சிங்கம் உறுமுது. ஒரு பக்கம் ஹனுமன் நிக்கிறார். அடுத்த பக்கம் கவனிக்க விட்டுப்போச்சு:(
அளவான சின்ன கோபுரம். உள்ளே நுழைஞ்சவுடனே ஒரு பெரிய தாமரை மலர் பீடம். அதுலே நடுவாந்தரமா கணுக்கால் வரையில் ஒரு பளிங்குக்கால். கொலுசு அணிஞ்ச அழகான பாதம்.
அதைக் கடந்தால் சின்னதா கருவறை. பளிங்குலே தேவி உருவம், கால் எல்லாம் இருக்கு. அழகா ஒரு க்ரீடம் போல காலுக்குச் சார்த்தி இருக்காங்க. நவராத்ரி காலங்களில் கூட்டம் நெரியுமாம். பஞ்ச பாண்டவர்கள் பாரதப்போரில் வெற்றி கிடைக்கணுமுன்னு இங்கே வந்து தேவியிடம் பிரார்த்தனை செஞ்சாங்களாம். இவுங்க கூடவே ஸ்ரீ கிருஷ்ணனும் வந்தாராம். கேட்ட வரம் கிடைக்குமாம். அதுதான் இன்னும் சிறப்புன்னு ஹரியானா டூரிஸம் வச்ச தகவல் பலகை சொல்லுது.
எங்க பாட்டி எப்பவும் சொல்றது, 'யத்தனம், ப்ரயத்தனம், தெய்வத்தனம்'ன்னு. அதாவது ஒரு காரியம் நிறைவேறணுமுன்னா கடவுள் அனுக்கிரஹம் வேணும். அது எப்போ கிடைக்குமுன்னா, நாம் தீவிரமா அதைப்பற்றி ஆலோசிக்கணும். அப்புறம் அதை அடையத் தேவையான எல்லா முயற்சியையும் எடுக்கணும். அதைப் பார்த்துட்டுத்தான் கடவுள் ,உண்மையான முயற்சி வெற்றி அடையட்டுமுன்னு நிறைவேற்றிக் கொடுப்பார். (கடவுளே பார்த்து நடத்தித் தரட்டும்னுன்னு ச்சும்மா உக்கார்ந்திருந்தா ஒன்னும் நடக்காது!)

பஞ்சபாண்டவர்கள் ஒரு பக்கம் போருக்குத் தேவையான எல்லா முயற்சிகளும் எடுத்துக்கிட்டே, ஒரு கோவில் விடாமப்போய் கடவுளை வேண்டிக்கிட்டு இருந்துருக்காங்க.
கோவிலை விட்டு வெளியே வரும்போது மணி பனிரெண்டரை. என்னோட அரைநாள் முடிஞ்சு போச்சு. ஆனால் இன்னிக்குத்தான் ஞாயித்துக்கிழமை லீவாச்சே!
நாலு தெரு சந்திக்கும் இடங்களில் எல்லாம் அழகான சிலைகளை வச்சுருக்காங்க. ரெண்டு பக்கமும் வெவ்வேற சிலைகள். கதைதான் தெரியலை:(

ஜ்யோதிசர் சரோவர்ன்னு பெயர் பார்த்தமே. அங்கே போகலாமுன்னு சொன்னால்................. அங்கே ஒன்னும் இல்லையாம் வெறும் குளமாம். முக்கிய கோவில்களை நீங்க விட்டுறக்கூடாதுன்னுதான் இங்கெல்லாம் கொண்டு வந்தேன்னு ரோஹித் சொன்னதும், ஆமாமாம். நேரமாகுது. லஞ்ச் டைம் வேற 'எங்கியாவது போய் சாப்டுட்டு டெல்லி போற வழியைப் பார்க்கலாம் 'என்றார் கோபால்.

"இல்லையே...அங்கே முக்கியமா என்னவோ இருக்குன்னு எங்கியோ படிச்சேனே"

"அதையெல்லாம் அடுத்தமுறை (?) பார்த்துக்கலாம். பாவம் இந்த ரோஹித். காலையில் 7 மணிக்கு வந்த ஆள். பசிக்காதா? ம்ம்ம்ம்...சலோ...கிதர் பி அச்சா ஜாகா மே கானா காயே(ங்)கா "
கடைசியில் 'குருக்ஷேத்ரத்தில் அரை க்ஷேத்ரம்' பார்த்துட்டு வந்துருக்கேன். அடுத்து எப்பவாவது போனால் கீதை உபதேசம் நடந்த இடத்தைப் பற்றி எழுதுனால் ஆச்சு.

நல்ல இடத்தைத் தேடித்தேடி ஒரு மணி நேரம் கழிச்சு வரும் வழியில் கர்னால் என்ற ஊரைக் கடந்ததும் நெடுஞ்சாலையில் பகலுணவு ஆச்சு. நடுக்காட்டிலே முளைச்ச அற்புதமான கட்டிடம். கலைப்பொருட்கள் விற்கும் கடையுடன் சேர்ந்த 'வசதியான ' நியூ வொர்ல்ட் ஃபாஸ்ட் ஃபுட். படு சுத்தம். சாப்பாடும் நல்லாவே இருந்துச்சு. என் கவலை எல்லாம் இவ்வளவு அழகான கலைப்பொருட்களை யார் இங்கே வந்து வாங்குவாங்க? ன்றது. கடையின் உரிமையாளர் சொல்றார் இந்தியாவில் எந்த இடத்துக்கும் அனுப்பி வைப்பாராம். எல்லாமே வெளியூருகளுக்குத்தான் போகுதாம்!

ஒன்னரை மணி நேரம் பயணம் செஞ்சு டெல்லியின் எல்லைக்கு வந்து, அங்கிருந்து ஊர்ந்து ஊர்ந்து ஹொட்டேல் போக ஒன்னரை மணி நேரம்(தான்) ஆச்சு. ஏன்னா....ஞாயித்துக்கிழமை பாருங்க. அதான் ட்ராஃபிக் அவ்வளவா இல்லையாம்:-)

மறுநாள் நடக்கவிருந்த பதிவர் சந்திப்பை ( ஜஸ்ட் ஒன் டு ஒன்) கேன்ஸல் செய்யும்படியா ஆயிருச்சு, அங்கே போக வர நாலு மணிநேரம் ஆகும் என்பதால்:( ஒரு முக்கால் மணி நேரம் தொலைபேசி வழியா பதிவர் சந்திப்பு நடந்துச்சு.

போகட்டும். பொழைச்சுக்கிடந்தா அடுத்த முறை பார்க்கலாம். வரட்டா.......

Friday, March 26, 2010

சேர்க்கை ஒன்னும் சரியில்லை போல ........

அட ராமா! இது என்ன? சகவாச தோஷமா? அன்னிக்கு 'அவன்'தான் குளிக்கும் பெண்களை வேடிக்கை பார்த்தான்னா..... இன்னிக்கு இவனுமா?
அவனாவது ஒளிஞ்சுருந்து பார்த்தானாம். இவன்? டைரக்டா பப்ளிக்கா மேடை மேலே ஏறி உக்காந்து குளத்தையே கண்கொட்டாமலா பார்ப்பது? அரைக் கண் மூடி இருக்கேன்னு யாரும் சொல்லப்பிடாது:-)

தானேஸர் என்ற ஊர்! அதென்ன குருக்ஷேத்ரத்தைப் பத்தியில்லே இப்பச் சொல்லிக்கிட்டு இருந்தேன்னு கேக்காதீங்க. ரெண்டுமூணு கிலோமீட்டர் தூரம்தான் அதுக்கும் இதுக்கும். பக்தர்கள் தேடித்தேடிப் போவதால் இப்ப எல்லாம் ஒரே ஊராகிப் போச்சோ? பத்தே நிமிஷ ட்ரைவ். ஸ்தானேசர் கோவில் வாசலில் நிக்கிறோம். சாமி பெயர்தான் ஊருக்கு வச்சு அப்புறம் மருவி இருக்கலாம். ஸ்தானேஸ்வர்......தானேஸ்வர்.... தானேசர். (எனக்கு நம்ம சுசீந்த்ரம் (ஸ்)தாணுமால்யன் கோவில் நினைவுக்கு வருது)


குப்தர்கள் காலத்துக்குப்பின்னே (வட இந்தியாவில்) துண்டுதுண்டா சில ராஜ்ஜியங்கள் வந்துச்சு. புஷ்பபூதி குடும்பத்தினர் அரசர்களானார்கள். காலம் 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. ப்ரபாகர் வர்தன் அப்போ ஆட்சி செஞ்சார். வர்தனர்களின் சாம்ராஜ்யத்தில் இந்த தானேசர்தான் தலைநகரமா இருந்துருக்கு. இவருக்கு ரெண்டு பிள்ளைகளும் ஒரு பொண்ணும். ராஜ்ய வர்தன், ஹர்ஷ வர்தன், & ராஜ்யஸ்ரீ. பொண்ணை மௌகாரி அரசர் க்ரஹவர்மனுக்குக் கட்டிக்கொடுத்தாங்க. அடுத்த கொஞ்ச காலங்களில் மால்வா நாட்டு அரசன் தேவகுப்தன், போருக்கு வந்து க்ரஹவர்மனைக் கொன்னுட்டு, அவர் மனைவி ராஜ்யஸ்ரீயை ஜெயிலில் போட்டுட்டார்.

இதுக்குள்ளே இங்கே ராஜ்யவர்தன் பட்டத்துக்கு வந்துருந்தார். உடன்பிறந்தாளைக் காப்பாத்த அண்ணன், தேவகுப்தனுடன் போருக்கு போனார். சண்டையில் ஜெயிச்சார். உதவிக்குன்னு அவருடைய நண்பனும், கிழக்கு வங்காளத்துலே இருந்த கௌடா நாட்டு அரசனுமான சஸாங்கன் வந்தான். இந்த சஸாங்கன், ரகசியமா எதிரி தேவகுப்தனோடு கூட்டு வச்சுக்கிட்டு, நண்பனைத் தந்திரமாக் கொன்னுட்டான்.

சேதி அறிஞ்ச தம்பி ஹர்ஷன், ஆவேசமாப் புறப்பட்டுப்போய் சண்டை போட்டு தேவகுப்தனையும், சஸாங்கனையும் கொன்னுட்டு, அரசனில்லாத தன் நாட்டுக்கு வந்து இங்கே மன்னராப் பட்டம் கட்டிக்கிட்டார். அப்போ அவருக்கு வயசு வெறும் 16 தானாம். இளங்கன்று பயமறியாது என்றது உண்மைதான்!

ராஜாக் கதைகளை எடுத்தாலே ஏகப்பட்ட துரோகமும் ரத்தமுமா இருக்கு.ப்ச்.....


இங்கே வரும்வழியில் இருக்கும் தத்தாத்ரேயா கோவிலுக்குப் போகலாமுன்னா அது பூட்டி இருந்துச்சு. இங்கேயும் வெங்காயக் கூம்பைத் தவறவிட்டுருந்தோமுன்னா (இது வெங்காயம் இல்லையாம் நெல்லிக்காயாம். தமிழ்நாட்டுக்காரி என்பதால் வெங்காயம்தான் மனசுலே நிக்குது) இங்கே ஸ்தானேசர் கோவில் இருப்பதே வெளியில் தெரியாது. ஒளிஞ்சு நிக்குது! கோவிலுக்கு எதிரே நந்தி. நல்ல பெரிசு. பளிங்குச் சிலை.

அவருக்குப்பின்னால் கொஞ்சம் பெரிய அளவிலான குளம். நடுவிலே உசரமா 'ஹை ஸ்டூலில்' சப்பளம் போட்டு உக்காந்துருக்கார் சிவன். குளத்துலே ஜனம் குளிக்குது. அதுவும் நேரெதிர்மூலை பெண்களுக்கானது போல! சில பெண்கள் நீராடிக்கொண்டு இருந்தனர். நல்லவேளை. குளம் படுசுத்தம். எங்கிருந்தோ சலசலன்னு தண்ணீர் வந்து குளத்துலே விழுந்துக்கிட்டே இருக்கு. ரொம்ப புனிதமான நீராம். இதை தற்செயலாத் தன் மேல் தெளிச்சுக்கிட்ட பானு என்ற மன்னன், தொழுநோயில் இருந்து குணமாயிட்டாராம்! (அதானே வியாதியோடு குளத்துலே இறங்குனா நல்லாவா இருக்கும்?)
இந்தக் குளத்தையொட்டி அக்கரையில் ஹரிஹரனுக்கு ஒரு கோவில். வலப்பக்கம் ஹரியும் இடப்பக்கம் ஹரனுமா அழகா படம் வரைஞ்சு வச்ச மண்டபம். அதையொட்டி ஒரு குருத்வாரா இருக்கு. சீக்கியர்களின் 9 வது குரு தேக் பஹதூர் இங்கே வந்து தங்கி இருந்தாராம். பக்தர்கள் கூட்டத்துக்குக் குறைவில்லை இங்கே!

பாரதப்போரில் வெற்றி கிட்டணுமுன்னு பஞ்சபாண்டவர்கள் வந்து பூஜித்த சிவன் இவர். . முதல்முதலில் லிங்க ரூபத்தில் சிவனை வழிபடத்தொடங்கியது இங்கேதானாம். (ப்ராச்சீன்? ). கோவில் முகப்புலே புதுவித த்வாரபாலகர்கள். உள்ளே முற்றத்தில், ஹனுமான் & ஹனுமான் சிலைகள் சின்ன மாடங்களில். ஒருத்தர் 'ஹரே ராம் ஹரே ராம்'னு சொல்ல, மற்றவர் 'சீதாராம் சீதாராம்'னு உருப்போடறார். அப்புறம் நேரே கருவறைதான். தரையோடு பதிச்சமாதிரி சங்குபோல டிஸைனில் பளிங்கு ஆவுடையார். நடுவில் சின்னதா லிங்கம். எல்லா வட இந்தியக் கோவில்களைப்போல நாம் 'கடவுளை'த் தொட்டுக் கும்பிடலாம். கருவறையில் ரெண்டு வாசல். நுழைஞ்சு போக ஒன்னு, வலம்வந்து வெளியேற நமக்கு வலப்புறம் ஒன்னு.
நாங்க போனப்ப ரெண்டு பேர் சிவனுக்குப் பால் அபிஷேகம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அவுங்க கையில் கைப்பிடியோடுள்ள ஒரு ஐஸ்க்ரீம் கோன் போல ஒன்னு.(பித்தளை/வெங்கலம்) அதுலே கீழ்ப்பாகத்துலே சின்னதா ஒரு மாட்டுத் தலை. மாட்டு வாயில் ஒரு ஊசிமுனை அளவுள்ள துளை. இந்த ஆட்கள் ரெண்டுபேரும் சிவனுக்குரிய மந்திரங்களைச் சொல்லிக்கிட்டு அந்தக் கோனை உயர்த்தி லிங்கத்து நேராப் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. ஷவர்லே வர்றது போல ஒரே ஒரு தாரையா பீச்சியடிக்கும் பால் லிங்கத்துக்கு மேலே பொழியுது. பெரிய பித்தளை வாளியில் பால் நிறைய வச்சுக்கிட்டு ஒரு பெண் சொம்புலே பாலை முகர்ந்து கோன்களில் ரொப்பிக்கிட்டே இருந்தாங்க. என்ன ஒரு சூப்பர் ஐடியா பாருங்களேன்! தண்ணீரைக்கூட இப்படி அபிஷேகம் செய்யலாம் இல்லே!!!!

(பொதுவா இப்படிப் பாலை வீணாக்குவது எனக்கு விருப்பமில்லை. அதை ஒரு குழந்தைக்கு உணவாக் கொடுக்கலாமேன்னுதான் எப்பவும் தோணும். இது என் சொந்தக்கருத்து)
(நெல்லிக்காய் என்பது ரொம்பச் சரி. கீத்துகீத்தா இருக்கே. இந்தப் பகுதிகளின் கட்டடக்கலையாம் இது. நான் மொகல் ஸ்டைலோன்னு நினைச்சுருந்தேன். முகலாயர்கள் கட்டிடங்களில் இந்தக் கீத்து வராது,இல்லே? சும்மா மொட்டையாத்தான் இருக்கும்)

கோவிலுக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் தோளோடு சேர்த்து நிக்குறாப்போல இன்னும் ரெண்டு கட்டிடங்கள். வலப்பக்கம் பெரிய ஹாலில் மடங்களில் சில தேவிகள். இடப்பக்கம் சாக்ஷி கோபால் வேத பாடசாலை. சைவ வைஷ்ணவ பேதமே இல்லாம ஒன்னுக்கொன்னு தாயாபிள்ளையா இருக்காங்க இங்கே. அதான் 'இவரும் அவரைப்போல பார்த்துக்கிட்டு' இருக்கார்!

Thursday, March 25, 2010

க்ருஷ்ணா க்ருஷ்ணா............

சரோவர் வாசலைத் தாண்டி வெளியே வந்தால் நமக்கு இடப்புறம் பளிச் என்று வர்ணமடித்த அழகான ஒரு கோவில் இருக்கு. ஸ்ரீ தக்ஷின்முகி ப்ராச்சீன் ஹனுமான் மந்திர் சித்த பீடம் நுழைவு வாசல் அலங்காரத்தின் மேலே ரெண்டு பக்கமும் குரங்காரே இருக்கார். சிலைதான். ஆனால் சாமியாக இல்லை. வெறும் குரங்குகள். உள்ளே படம் எடுக்கத் தடை. பூஜாரியிடம் பேச்சுக் கொடுத்தேன். 'இது(வும்) ஆதிகாலத்தில் இருந்தே இருக்காம். அஞ்சாயிரம் வருசமாக்கூட இருக்கலாமாம். சின்ன சந்நிதிதான். ஆனால் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியதாம். பளிங்குச் சிலை. இங்கே வேண்டிக்கிட்டால் நம் மனசில் இருக்கும் விருப்பங்கள் (நியாயமானதாக இருந்தால்) கண்டிப்பாக நிறைவேறுமாம். நம் சித்தத்தின் படி எல்லாம் நடக்குமாம்.' அதானா சித்த பீடம்? மனம் போல் வாழ்வு!
கோவில் படு சுத்தமா இருக்கு. நல்ல நிர்வாகம் போல் இருக்கு. எதிர்வரிசையில் கடைகண்ணிகளுக்கு நடுவே இன்னொரு கோவில். ஸ்ரீ குரு கோரேஷ் நாத் மந்திர். உள்ளே எட்டிப் பார்த்தால் 'பண்டாரா' நடந்துக்கிட்டு இருக்கு. எல்லோருக்கும் சாப்பாடு போட்டுக்கிட்டு இருக்காங்க. பிர்லா மந்திர் ஒன்னு இருக்கேன்னு விசாரிச்சுக்கிட்டுப் பக்கவாட்டில் இருந்த தெருவுக்குள்ளே போனோம்.

பிர்லா குடும்பத்தினர் கட்டி வச்சுருக்கும் 'தேவா மந்திர்.' இங்கே சாதிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் வரலாம். தொற்று நோய் உள்ளவர்களுக்கும் பிச்சைக்காரகளுக்கும் அனுமதி இல்லை. வழக்கமான லக்ஷ்மி நாராயணன் சிலை. மிகப்பெரிய ஹால் எல்லாம் பளிங்கு. பளிச்ன்னு சுத்தமா இருக்கு. இந்தக் கோவிலுக்கு நேர் எதிரில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கு. முகப்பில் தும்பிக்கையில் மாலையுடன் யானைகள்.
சரோவர் இருக்கும் சாலையில் ஏராளமான மடங்களும் அதைச் சேர்ந்த கோவில்களுமா இருக்கு வியாஸ் கௌடிய மடத்தின் ராதா கிருஷ்ணா மந்திர், பஞ்சமுக மஹாதேவ் மந்திர், கீதா மந்திர், மாதா பத்ரகாளி மந்திர், ஸ்ரீ ஸ்ரீ 1008 பாபா காலி கமலிவாலா பஞ்சாயத க்ஷேத்ரம்ன்னு ........... வெளியே பெயர்களை மட்டும் பார்த்துக்கிட்டே வந்தோம். ஒரு சின்ன ரவுண்டபௌட்டில் அர்ஜுன் சிலை இருக்கு.
கிருஷ்ணா ம்யூசியம் ஒன்னு இருக்கேன்னு நுழைஞ்சோம். குருக்ஷேத்ரா டெவலப்மெண்ட் போர்டு நிர்வகிக்குது. மூணடுக்குக் கட்டிடம். ஆறு கேலரிகள். குல்ஸாரிலால் நந்தா(இவர் நாட்டின் ரெண்டாவது & நாலாவது பிரதமர். ரெவ்வெண்டு வாரம் பதவியில் இருந்தார்) அவர்கள் தலைமையில் 1987 இல் திட்டம் போட்டு ஒரு ஹாலில் துவக்கியது (இப்ப அந்த ஹாலை லெக்ச்சர் ஹாலா பயன்படுத்தறாங்க) 1991 இல் புதுக் கட்டிடம் கட்டி ஆரம்பிச்சது. அப்புறம் நாலு வருசத்தில் பக்கத்துலேயே இன்னொரு கட்டிடம் கட்டி ரெண்டையும் இணைச்சு விஸ்தாரமா ஆக்கி வச்சுருக்காங்க.

இந்தியா முழுசும் போய் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட அபூர்வமான கலைப் பொருட்களை சேகரம் பண்ணி இருக்காங்க. பெயிண்டிங்ஸ் பகுதியில் ராஜஸ்தானி, பஹாரி, தஞ்சாவூர், ஆந்திரா, ஒரிஸ்ஸா, பீஹார் ன்னு அப்படியே ஆளை மயக்கும் ஓவியங்கள். இப்ப இருப்பதுபோல் கம்யூனிகேஷன் இல்லாத காலத்துலே எப்படி இமயம் முதல் குமரிவரை ஒரே மாதிரி சாமியைப்பற்றிய எண்ணங்களும் சாமிக் கதைகளும் பரவுச்சுன்றது மஹா ஆச்சரியம்தான்.
பாரதப் போரில் அர்ஜுனனுக்கும் பீஷ்மருக்கும் சண்டை நடக்கும்போது, பீஷ்மரின் மேல் அம்பெய்து கொல்லத் தயங்கி நிற்கும் அர்ஜுனனிடம் கோச்சுக்கிட்டு , நானே பீஷ்மரைக் கொல்றேன்னு போகும்(ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று கொடுத்த வாக்கை மறந்த) ஜனார்த்தனன். 'ப்ரதிக்ஞை பங்கம்'

இவர் வேற குருக்ஷேத்ராவில் இடங்களைப் பார்க்கும்போதெல்லாம், மகாபாரதம் வெறும் கதை இல்லையா?! உண்மையா நடந்துருக்கும்போல இருக்கேன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். நடந்திருக்கும்தான். பங்காளிச்சண்டை. கொஞ்சம் சின்ன அளவில் நடந்துருக்கும். அதை எழுத்தாளனுக்குரிய கற்பனை வளம் சேர்த்து இன்னும் பெருசா உருவகப்படுத்தி இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் சுமார் 200 கதாபாத்திரங்களை அமைச்சு எங்கேயும் சிக்கல் சிடுங்கல் இல்லாமக் கதையைக் கொண்டு போனது அற்புதமே! இதுலே கடவுளின் அவதாரங்களையும், கிளைக்கதைகளையும், அங்கே நடந்த முன்வினைக்குத் தொடர்பா இங்கே நடந்ததையும் கோர்த்து வாங்கி...............அப்பப்பா..................... நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை!
சிலைகள் பலதும் கல், உலோகம், மரம், தந்தம் இப்படி வகைவகையா நிக்குது. கிருஷ்ணனை இடுப்பில் வச்சுக்கிட்டு இடக்கையால் அணைச்சுப் பிடிச்சுக்கிட்டு, வலக்கையால் சிறுவன் பலராமனின் கையைப்பிடிச்சு நிற்கும் யசோதையின் சிற்பம்.............. தூள்!
சென்னை ம்யூஸியத்துலேயும் ஏராளமான சிற்பங்கள் சேர்த்து வச்சுருக்காங்க. ஆனால்..... பராமரிப்பு ஒன்னும் சொல்றதுக்கில்லை. இந்த அழகிலே பழுது பார்க்கும் வேலை நடக்குதுன்னு மூணு கட்டிடங்களை அடைச்சு வச்சுருந்தாங்க. வெண்கலசிலைகள் இருக்கும் பகுதி மட்டும் பரவாயில்லை. வெளிநாட்டுக்காரர்கள் வருகை அதிகமா இருக்கும் பகுதின்னு அங்கே மட்டும் ஏஸி பண்ணி இருக்கு. இந்த இடத்தை முன்பு 'செத்தகாலேஜு'ன்னு சொல்வாங்க. அது அப்படியே உண்மையாகிப்போச்சே!:(

ஒரு இடத்துலே கோபால் காமிச்ச யானையின் அழகையும் அந்தக் கற்பனை வளத்தையும் என்னன்னு சொல்றது! பெண்களால் உருவான யானை. பெண் பொம்மைகள். துணிப் பொம்மைபோலத்தான் இருக்கு. நல்ல ஒல்லியான, உயரமான வாளிப்பான அம்சமான அழகான பெண்கள் அலங்கார உடைகளும் நகைநட்டுமா ஜொலிக்கிறாங்க.

யானையின் நாலு கால்களுக்கும் நாலு பெண்கள் நிக்கறாங்க. பின்புறக் கால்களுகிடையில் இன்னொரு பெண் முதுகைக் காமிச்சபடி இந்த இரண்டு கால்களையும் பிடிச்சு ஹைஜம்ப் பண்ணது போல் மேலெழும்பி ரெண்டு கைகளையும் விரிச்சு கால்ப் பெண்களின் தோளில் வச்சுருக்காள், இவள் கால் உட்புறமா இருக்கு. அழகான நீண்ட சடை(வரிசையா சடை வில்லை அலங்காரம் வேற!) யானையின் வால். முன்பக்கக் கால்களின் நடுவில் ஒரு பெண் திரும்பி நின்னு முதுகுப் பக்கம் வெளியில் காமிச்சபடி நிற்க, அவள் தலையில் இருந்து சரிகை வேலைப்பாடுடன் ஒரு நீண்ட துணி தும்பிக்கை டிஸைனில் தரைவரை தொங்குது. தலையில் மத்தகத்திக்கு முதுகை வளைச்சு ஒரு பெண் . உடல் பாகத்திலே ஏழெட்டுப் பெண்கள் குறுக்கிலே கால்மாடா தலைமாடாப் படுத்துருக்காங்க. தூரத்துலே இருந்து பார்க்கும்போது கண்ணாடிப்பெட்டிக்குள் நிற்கும் கம்பீரமான யானை. கிட்டப்போனால்தான்............எப்படி இப்படி........ ஒரு கற்பனை!

(எனக்குத்தான் சரியா விவரிச்சுச் சொல்லத் தெரியலை. ஒருமாதிரி கற்பனை பண்ணிப் பார்த்துக்குங்க, சரி வருதான்னு)

உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்றதால் நான் அப்படியே நொந்து, நொறுங்கி நூலானது இந்த யானைக்கு மட்டுமே. அடாடா............. செஞ்சவனுக்கு என்ன கொடுத்தாலும் தகும்!

ஒரு மாடியில் வஸுதேவர் குழந்தையைத் தலையில் தூக்கிக்கொண்டு நதியைக் கடந்து வர்றது, கண்ணனின் சிறுவயது விளையாட்டுக்கள், வெண்ணை திருடியது, கோவர்தனகிரியைக் குடையாகப் பிடிச்சது, காளிங்கன் தலையில் நர்த்தனம் செஞ்சது, கோபியருடன் கூடிக் கோலாட்டம் ஆடியது, கம்சனை வதம் செஞ்சதுன்னு பெரிய பெரிய கண்ணாடி மாடத்துக்குள்ளே லைஃப் சைஸ் சிலைகள். நாம் நடக்க நடக்க அங்கங்கே இருக்கும் சென்ஸார் லைட் 'டக்'னு மாடத்துக்குள்ளே வெளிச்சம் போட்டுக் காமிக்குது.

இன்னொரு இடத்துலே இதே போல இன்னும் பெரிய மாடங்களில் பாரதப்போர் காட்சிகள். அபிமன்யூ சக்கரவியூகத்துலே பெரிய தலைகளுக்கு நடுவில் மாட்டிக்கிட்டு நிற்கும் காட்சியில் 'ஐயோ'ன்னு மனசு கரைஞ்சு போகுது.
இன்னொரு பெரிய காட்சி பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கிறார். ராஜ தர்மத்தைப் பற்றிச் சொல்றார். முக்கிய பாத்திரங்கள் எல்லோரும் காந்தாரி, குந்தி உள்படச் சுத்தி நிக்கறாங்க. தலையில் க்ரீடத்தோடு த்ருதராஷ்ட்ரன் கண் மூடி(அதான் பார்வை இல்லையே) நிக்கிறார். சூப்பர் ஸீன்!
ஏனோதானோன்னு இல்லாமல் ரொம்ப கவனத்தோடு இந்த இடத்தை ஒழுங்காப் பராமரிப்பவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கத்தான் வேணும். படங்களுக்காகவும், 'அந்த யானை'க்காகவும் ஒரு புத்தகம் வாங்கினேன். உங்க அதிர்ஷ்டம் 'யானை' யைக் காணோம்!

போனாப்போகுது. இதைப் பாருங்க. சினிமாக்காரர் பேச்சைக் கேட்டால்தான் என்ன?

Wednesday, March 24, 2010

ப்ரம்ம ஸரோவர் ஆஃப் குருக்ஷேத்ரா

பிரம்மன் படைச்ச இந்த பிரமாண்டத்தின் முன்னே நின்னப்போ மூச்சே அடைச்சுப்போச்சு. 360 x 150 மீட்டர்கள். 'பூ உலகை'யே படைச்சவனுக்கு இந்த சைஸ், ஜூஜுபிதான். ஆனா.... நமக்கு? ரொம்பப் பக்கம்தான். ரவுண்டாச் சொன்னா, ஒரு 100 கிலோமீட்டர்தான். போறவழியிலே பார்த்துக்கிட்டுப் போகலாமேன்னு.....................

என்னமோ குதிரைக்குக் கடிவாளம் போட்டாப்புலேதான் சண்டிகர் டெல்லின்னு எங்கேயும் திரும்பாம நேராப் போய்வந்துக்கிட்டு இருக்கார் இவர். இனிமேலும் அப்படித்தானாம். இப்போ நான் வந்துருக்கேனேன்னு.....

குதிரைன்னதும்.....
அடடா......... என்ன ஒரு கம்பீரம்! எதோ அச்சுலே வார்த்துப்போட்டாப்போல அந்த நாலும் கழுத்தைச் சிலுப்பி, கடிவாளத்தைப் பொருட்படுத்தாம, பார்வையில் ஒரு அலட்சியத்தோடு திமிறி அப்படியே ஒரு எட்டு முன்னே வைக்குது. உடம்பில் தசைகள் எல்லாம் முறுக்கேறி..... சரியான பாடி லேங்குவேஜ்:-) கடிவாளம் பிடிச்சுருக்கும் 'தேரோட்டி' முகத்தைப் பின்னால் திருப்பி 'ஏமானோடு' பேசுறார். கொஞ்சம் அசந்தால் கனைச்சுக்கிட்டே இது நாலும் நம்மமேலே பாய்ஞ்சுரும். அப்படி ஒரு வேகம்.
அங்கே நின்ன நேரத்துலே முக்கால்வாசி இந்தக் குதிரைகளைத்தான் பார்த்துக்கிட்டு நின்னேன். அடடா...... என்னமாத்தான் செஞ்சுருக்கான் பாருங்களேன். உயிரோட்டமா இருக்குல்லே!!!!! (பாவம். காது புளிச்சுருக்கும் நம்மாளுக்கு)

சீக்கிரம் கிளம்பினோமுன்னா 'ஆராமா' பார்த்துக்கிட்டுப் போகலாமுன்னு ரோஹித் சொன்னதை நம்புனேன். இந்த ஊரைவிட்டுக் கிளம்புற கடைசிநாள்ன்னு ஹொட்டேல் ப்ரேக்ஃபாஸ்டில் பிரியா'வடை' ஸ்பெஷல் கொடுத்தாங்க. நம்ம விஷயம் இவுங்க காதுவரை எட்டிப்போயிருக்கு! சண்டிகரில் நம்ம பதிவர்கள் யாராவது இருப்பாங்களோ?

ஞாயித்துக்கிழமை, ட்ராஃபிக் கம்மின்னுக்கிட்டே சீறிப்பாய்ஞ்சு ஓடுது நம்ம வண்டி. நகர எல்லையைக் கடந்து 'டேரா பஸ்ஸி'ன்ற ஊரைக் கடந்து தேசீய நெடுஞ்சாலை 22 இல் போறோம். நேத்து வந்த அதே சாலைதான். அப்போ வடக்காலே மேலே போனது இப்போ கீழ்நோக்கித் தெக்காலே.

டோல் ரோடு ஆரம்பிக்குது 'அம்பாலா சண்டிகார் எக்ஸ்ப்ரெஸ் வே.' அருமையாப் போட்டுருக்காங்க. இங்கே இருந்து ஆரம்பிச்சு டில்லிவரை வழியில் எக்கச்சக்க டோல் கேட்டுகள். ஒருவழியாக் காசு வாங்கினா பயந்துருவோமுன்னு துண்டுதுண்டா ரோடு போட்டுவச்சுருக்காங்களோன்னு சம்சயம்.

'kகுரு' ன்னு ஒரு மகாராஜா முந்திக் காலத்துலே இருந்தார். இவர் நம்ம கௌரவர் & பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருத்தர். ரொம்ப நல்ல மனுஷரா இருந்து அஷ்ட தர்மங்களையும் கடைப்பிடிச்சு 'நல்லபடி நாட்டை ஆட்சி செய்தார்.' இந்த நாட்டுக்கே தர்மக்ஷேத்ரமுன்னு பெயர் வந்துருச்சு. நம்ம மகாவிஷ்ணுவுக்கு இவரை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. 'இந்தா பிடிச்சுக்கோ'ன்னு ரெண்டு வரம் கொடுத்தார். ஒன்னு இந்த நாட்டை இனி குருக்ஷேத்ரமுன்னு பெயர் மாத்திக்கலாம். ரெண்டு, இங்கே இறப்பவர்கள் யாரா இருந்தாலும், மகா பாவியாகவே இருந்தாலும்கூட அவுங்களுக்கு டைரக்ட்டா சொர்க்கவாசம்தான். அதுசரி. தர்மம் தவறாத நாட்டுலே பாவி எங்கே இருக்கப்போறான்னு....நல்ல விவரமான சாமிதான் விஷ்ணு:-)

ஒருவேளை, பாரதப்போருக்கு இடம் தேடிப்பார்த்து இதைத் தெரிஞ்செடுத்ததுகூட இந்த சொர்க்கலோக வாசத்துக்குத்தானோ என்னவோ!

இந்த இடத்துக்கு இன்னும் ரெண்டு பெருமைகள் வாய்ச்சுருக்கு. ஒன்னு கிருஷ்ணன் செஞ்ச கீதை உபதேசம் ரெண்டாவது, போரில் அடிபட்டு அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தப்ப, சோகமா அவரைச்சுத்தி நின்ன குடும்ப அங்கத்தினர்களில் தருமர், 'எந்தச் சாமி, பெரிய சாமி'ன்னு கேட்க அவர் மகாவிஷ்ணுதான்னு சொல்லி விஷ்ணுவை ஆயிரம் பெயர்களால் (சகஸ்ரநாமம்) போற்றினார்.

நெடுஞ்சாலையில் இருந்து வலது பக்கம் பிரியும் ஊருக்குள் போகும் வழியில் நுழைவுவாயில் அலங்காரத்திலேயே இடத்தோட முக்கியத்வம் தெரிஞ்சுருது.

ஊருக்குள்ளே தடுக்கிக் கீழே விழுந்தா............ அது ஒரு கோவில் வாசலாத்தான் இருக்கும். பிரம்ம சரோவர் இருக்கும் பகுதியில் எக்கச்சக்க யாத்ரீகர் கூட்டம். வெளியே இருந்து பார்த்தால் சாதாரணமா இருக்கும் நுழைவு வாசலில் போனதும் கண்கள் விரிய அப்படியே நின்னுட்டேன், குளத்தின் சைஸைப் பார்த்து. சரோவர், ரொம்பச் சரியான பெயர்தான். கடல்! இந்தப் பகுதியில் மட்டும் 48 புண்ணிய தீர்த்தங்கள் இருக்குன்னு ஹரியானா மாநில சுற்றுலாத்துறை தகவல் பலகை வச்சுருக்கு. கூடவே அவை அமைஞ்சுருக்கும் இடங்களும்.
குளத்தின் முன்னே திருப்பிப்போட்ட 'ட' போல அகலமான மேற்கூரையுடன் வெராந்தா நீளமா ஓடுது. இதை அடுத்து அகலமான நடைபாதை. குளத்தோட அளவுக்குப் பொருத்தமா இப்படித்தான் அமைக்கணும். கட்டில்கள் போல வரிசையா போட்டுவச்சுக்கிட்டு
பூஜை சாமான்களும், குழைச்சுவச்ச கோதுமைமாவு உருண்டைகளுமா 'பண்டிட்'கள் காத்துருக்காங்க பக்தர்கள் வரவை நோக்கி. முன்னோர்களுக்கான காரியங்களும் தர்ப்பணங்களும் செஞ்சு வைக்கும் ஸ்பெஷலிஸ்ட்டுகள். பித்ருக்களுக்குப் பிண்டம் போட நம்ம பக்கம் சோற்றுருண்டை. வடகத்திக்காரங்களுக்கு சப்பாத்தி மாவு உருண்டை! அவுங்கவுங்க சாப்பாடு அவுங்கவுங்களுக்கு. மேலே போனாலும்கூட உணவுப் பழக்கம் மட்டும் மாறாது போல!



இவ்வளவு ஜனக்கூட்டம் இருந்தும் குளத்துத் தண்ணீர் படு சுத்தமா இருக்கு. தண்ணீரின் நடுவே அழகா ஒரு கோவில். அங்கே போக வர ஒரு பாலம். குளத்துக்கு அந்தாண்டை வலப்பக்கம் ப்ரமாண்ட அளவிலே இந்தியக்கொடி ஒன்னு பட்டொளி வீசிப் பறக்குது. குளத்துக்குப் பின்பக்கம் சில கோபுரங்களும் தெரியுது. கூடவே அந்தக் குதிரைகளும் தேரும்.

கோவிலுக்குள்ளே போனோம். சிவன் இருக்கார். ரெண்டாங்கட்டத்துலே மகாவிஷ்ணு. பிள்ளையார், ஹனுமன் இப்படி. தரிசனம் முடிச்சு வெளியே வந்து கோபுரத்தைப் பார்த்தால், கண்ணைமூடித் தவம் செய்யும் யோகாஞ்சநேயர்!
குளத்துக்குப் பின்பக்கம் இருக்கும் கோவில்களுக்குப்போக பெரிய அகலமான பாலம் ஒன்னு போட்டுவச்சுருக்காங்க. காத்யாயினி தேவி கோவில். சிவன் கோவில் எல்லாம் இருக்கு. எல்லாமே ப்ராச்சீன் மந்திர்கள்தானாம். புதுசா இப்போ வரலைன்னு அடிச்சுச்சொல்றாங்க!
மரத்தடியில் டெர்ரகோட்டாவில் செஞ்ச காத்யாயினி கையில் அரக்கனின் தலையோடு கருப்புப்புடவையில் அட்டகாசம். இத்தனை அழகை எப்படி மண்ணில் சுட்டாங்க!!!!!
ஒரு பெரிய மேடையில் கிருஷ்ணர் கீதை உபதேசம் செய்யும் சிற்பம். இதுதான் ஆசியாவிலேயே மிகப்பெரிய வெண்கலச் சிற்பமாம்! (அச்சச்சோ....அதுக்கு ஏன் இப்படி ஸ்டீல் க்ரே பெயிண்ட் அடிச்சு வச்சுருக்காங்க?) 50 அடி நீளம், 35 அடி அகலம், 25 அடி உயரச்சிலை. கனம் 45 டன்.. ரெண்டு கோடி ரூபாய் செலவாச்சு. (ஆனால், இது தோட்டா தரணி போட்ட செட் இல்லை!) ஸ்ரீ ராம் ஸுதார் & அனில் ஸுதார் என்ற சிற்பிகளால் உருவாக்கப்பட்டது. (ஹிந்தியில் உள்ள தகவல் பலகையிலும், ஆங்கிலத்தில் உள்ள தகவல் பலகையிலும் அளவெல்லாம் வெவ்வேறா எழுதி இருக்காங்க. தாய்மொழித்தகவல் உண்மை என்று நம்புவோமாக:-) ( மொழிபெயர்ப்புலே சொதப்பி இருக்கலாம். யே அங்ரேஜி மே லிகா, வோ டீக் நஹி ஹை)
பார்த்தனுக்குப் பெரிய மீசை இருக்கு. ஆனால் 'பார்த்த(னின்)சாரதி'க்கு மீசை மிஸ்ஸிங்! தில்லக்கேணியில் விட்டுட்டுப்போயிட்டாரோ? பார்த்தனுக்கு வயசான முகம். சாரதிக்கு இளமை முகம். எல்லாம் இந்த மீசைதான் காரணமா இருக்கணும்:-) ஆசாமி பார்த்தனுக்குக் கவலைப்பட்டே வயசு கூடி இருக்கும். ஆனா சாமிக்குக் கவலை இல்லாத வாழ்க்கை.ன்னு நினைச்சேன். தேர்க்குடையில் நம்ம 'நேயுடு' ஸ்மார்ட்டா gகதையைத் தூக்கித் தோளில் வச்சுக்கிட்டு ஓசைப்படாமல் கீதையைக் கேக்கறார். விட்னெஸ்.
அங்கங்கே காவிகள் உக்கார்ந்துருக்காங்க. டைம்பாஸ் & வரும்படின்னு நேரம் போகுது!
த்ரௌபதிக்கு ஒரு கோவில் இருக்கு. (ப்ராச்சீன்னு தனித்தனியாச் சொல்லவேணாம். எல்லாமே ஆதி முதலே இருக்காம்) சந்திர வம்சத்து பாண்டவர்களின் த்ரௌபதி க்ருபா. கோவிலின் உள்ளே மகாவிஷ்ணு, கண்ணன் சிலைகள். ஷ்யாம் தர்பார். குறுகலா ஒரு வாசலில் சின்ன படிகள் கீழே இறங்கிப்போகுது. கீழே பெரிய முற்றத்தின் நடுவில் ஒரு கிணறு. அடிப்பம்பு போட்டு தீர்த்தம் எடுத்துக் குடிச்சுத் தலையில் தெளிச்சுக்கறாங்க. கஷ்டமில்லாம நாம் கோவிலுக்கு வெளியில் நின்னே பார்த்துக்கலாம். இங்கேதான் கிணத்துக்குப் பக்கத்துலே அந்த ப்ரமாண்டமான கொடிக்கான கம்பம் நிக்குது. இந்திய ஒருமைப்பாட்டை கண்குளிரப் பார்க்கும்விதமா நாடு முழுவதிலும் இருந்து வந்து கூடி நிற்கும் மக்கள். (சென்னை ரெப்ஸ், கோபால் & துளசி) பெண்களுக்காகன்னு சத்யபாமா காட், கௌசல்யா காட்ன்னு அங்கங்கே நீராட அமைத்த படித்துறைகள் எல்லாம் அமர்க்களமாக இருக்கு போங்க!

இன்னும் கொஞ்சம் படங்கள் இங்கே ஆல்பத்தில்


பி.கு: பதிவின் நீளம் கருதி இங்கே நிப்பாட்டிக்கிறேன். தமிழ்மண நட்சத்திரத்துக்கு போட்டியா இருக்கக்கூடாது பாருங்க. மற்றவைகளை அடுத்த இடுகையில் தொடர்ந்தால் ஆச்சு.

Tuesday, March 23, 2010

தேடித் தேடி ஞான் அலைஞ்ஞு.................

எப்படியும் போய்ப் பார்த்தே தீரணும் என்ற வெறி எனக்கு. காலையில் 9 மணிக்கு வந்த ட்ரைவர் ரோஹித்,'எங்கே போகணும்'னு கேட்டார் . நமக்குத்தான் அரைநாள் இருக்கே. "சலோ அதே சண்டி கோவில்.!" ஊரைவிட்டு வெளியில் வந்து ஷிம்லா போகும் பாதையில் வண்டி போகுது. இங்கிருந்து ஷிம்லா ரொம்பப் பக்கமாம். வெறும் 120 கிலோ மீட்டர்கள். ஆனால் நாலரைமணி நேரம் ஆகுமாம். மலைப்பாதையாச்சே. புதுசா ஒரு சாலை போட்டுக்கிட்டு இருக்காங்க. அநேகமாப் பயணம் ஒரு மணிநேரம் குறையலாமாம். (கூகுளிச்சப்ப வெறும் ரெண்டேகால் மணின்னு சொல்லுச்சேன்னு........ போகட்டும் அது மனோவேகமா இருக்கணும்!)
இந்த நாலைஞ்சு நாளிலேயே எந்த ரவுண்ட்டாணாலே திரும்புனா எங்கே பஞ்ச்குலா ரோடு வருதுன்னு புரிஞ்சுபோச்சு. மனஸா கோவிலுக்குத் திரும்பும் பாதையை விட்டு முன்னால் போய் வலது பக்கம் திரும்பிட்டோம். சரியான கிராமங்களும் சிற்றூர்களுமாக வந்துபோகுது. நெருக்கமான போக்குவரத்து. ஒழுங்கா வரிசையில் இல்லாத தெருவோரக்கடைகள், அழுக்கு, நடு ரோடில் ஒய்யாரமா நடக்கும் மாடுகள், தார்பாலின் போர்வையோடு லாரிகள், நடுநடுவிலே அட்டகாசமான கார்கள், திடீர் திடீர்னு கண்ணில் படும் தெருவோரப் பழக்கடைகள்(ஆரஞ்சு சீஸன் இப்போ) எல்லாத்தையும் பார்வையால் மட்டும் அளந்துக்கிட்டு இருக்கேன். வண்டியின் வேகத்தில் எடுக்கும் படங்களும் ஆட்டம்தான். ரொம்ப தூரத்துலே ஷிவாலிக் மலைத்தொடர்கள் மசமசன்னு தெரியுது.

இப்படி பிஸியான சாலையில் ஓரமா ஒரு நாற்காலியும், கண்ணாடியும் வச்சுக்கிட்டு முடி திருத்தும் தொழிலாளி கஸ்டமருக்கு சவரம் செஞ்சுக்கிட்டு இருக்கார். ஆமாம், வெறும் 10 கிலோமீட்டர் தூரம்தான் கோவிலுக்குன்னு கைடு புக் சொல்லுது. ஆனால் இம்மாந்தூரம் வந்துட்டோமே! 'இங்கே பக்கத்துலேதான் கோவில்.தோ..... வந்துருச்சு'ன்றார் ரோஹித்.
ஒரு கோட்டை மதில் கண்ணில் பட்டது. இதை யாதவிந்த்ரா கார்டன்ஸ்ன்னு இப்போ சொல்றாங்க. ஆனா பதினேழாம் நூற்றாண்டு சமாச்சாரம். நம்ம முகலாயமன்னர் ஔரங்கசீப் (அதென்ன சீப்போ?) டிஸைன் செஞ்ச தோட்டமாம். மாம்பழத் திருவிழான்னு சொன்னேன் பாருங்க அது இங்கேதான் நடக்குமாம். அழகான தோட்டமுன்னு கேள்வி. எனக்கு ரேஷனில் அரைநாள்தான் கிடைக்குது என்பதால் அப்புறம் ஆகட்டுமுன்னு போகவேண்டியதாப் போயிருச்சு.
பிஞ்சோர் என்ற ஊரைக் கடந்தோம். வெள்ளை மாளிகை இங்கே இருப்பதை இப்போதான் கண்டுபிடிச்சேன். அமெரிக்கமுறையில் கல்வி அளிக்கும் மாண்டிஸோரி, பாலர் பள்ளி வேற இருக்கு இந்த ஊரில்.


மரவேலைகள் ஜரூரா நடக்கும் ஊர். கடைவீதிகளில்(?) நாற்காலி, கட்டில் , சோஃபா, அலமாரி என்று கடைவாசல்களில் விற்பனைக்கு அடுக்கி வச்சுருக்காங்க. டெர்ரகோட்டாவில் மண் பூச்சட்டிகள், அலங்காரச் சாமான்கள், காற்றில் ஒலி எழுப்பும் விண்ட் ச்சைம்கள் ஏராளமா ஒரு பக்கம். வெங்காயக் கூம்புடனும் கொள்ளை அழகுடனும் குருத்வாரா ஓங்கி உயர்ந்து நிற்குது.
ஷிம்லாவுக்கு இன்னும் 90 கி.மீ போகணுமுன்னு தேசிய நெடுஞ்சாலை 22 சொல்லுது. கால்கா எல்லையைத் தொட்டதும் கான்வெண்ட் ஸ்கூல் 'தும் ஸபி மேரே பாஸ் ஆவோ. மே துமே விஷ்ராம் தூங்கா'ன்னு ஜீஸஸ் ஹிந்தியில் கூப்புடறார்.
கால்கா ரொம்ப பழைய ஊர். பழைய கட்டிடங்கள் ஒவ்வொன்னா போகப்போக அந்த இடத்தைப் புதுக்கட்டிடங்கள் எடுத்துக்கிட்டு இருக்குன்னாலும் பழைய அழகோடு அங்கங்கே ஒன்னொன்னு சின்னச்சின்ன ஜன்னல்களோடு சூப்பரா நிக்குது.
கோவிலை நெசமாவே சமீபிச்சுட்டோமுன்னு கட்டியம் கூறும் வகையில் பூஜைப்பொருட்களுக்கான கடைகளும் சிகப்பும் சரிகையுமா நேர்த்திக்'கடனுக்கான' துணித்துண்டுகளும். ஒரு சாலையின் வளைவில் சட்னு கண்ணுக்குப் புலப்படாத வகையில் ப்ராச்சீன் காளிமாதா மந்திர் கால்கா. அலங்கார வாசலின் மேல் மாடத்தில் ரெண்டு பக்கமும் யானைகள் மாலைகளை நீட்ட நடுவில் புள்ளையார் 'வா வா'ன்னு கூப்பிடறார்.
இந்தச் சாலை ரொம்பக்குறுகலா ஒரு பாலம், கடந்தவுடன் லேசான ஏத்தத்தோடு இருக்கு. ஷிம்லா போகும் மலைப்பாதை இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது. இடதுபக்கம் அண்ணாந்து பார்த்தால் மண் மூடிய மலைச்சரிவுகள். அங்கங்கே கூரைகளுடன் சில வீடுகள்(?), ஊர்ந்து போகும் வண்டிகள்ன்னு கொஞ்சம் பயமா இருக்கு. இந்த ஊரில் இருந்துதான் ஷிம்லா போகும் மலைப்பாதை ரயிலுக்கான மீட்டர் கேஜ் ஆரம்பிக்குதாம். (இந்தப் பாதை இப்போ உலகின் பாரம்பரிய ரயில்போக்குவரத்து (ஹெரிடேஜ்) சைட்டுலே ஒன்னு) ப்ரிட்டிஷ் கால ஆட்சியில் ஷிம்லாவை அவுங்க கோடை வாசஸ்தலமா, பாட்டியாலா மகராஜாகிட்டே இருந்து வாங்குனப்ப (1843) இந்த கல்காவையும் சேர்த்தே வாங்குனாங்களாம். அப்பவே பாதையை சரியாப் போட்டுருக்கக்கூடாதோ? இடம் வாங்கி அம்பது வருசம் கழிச்சுத்தான் ரயில்வே லைனைப் போட்டுருக்காங்க. அஞ்சு வருச உழைப்பு. 1903வது வருசம் ரயில் போக்குவரத்து தொடங்கியிருக்கு. அப்போ ரயில்வே ஒர்க்ஷாப் வேலை, உள்ளுர் மக்கள்ன்னு ஏழாயிரம் மக்கள் இந்த ஊரில் இருந்தாங்கன்னு 1901 புள்ளிவிவரம் சொல்லுது.
மஞ்சள் இஞ்சி வியாபாரத்துக்கு இதுதான் தலைமை மார்கெட்டாம்.
ரொம்பவே புராதனக் கோவிலாம். ப்ராச்சீன் காளி மாதா கோவில். காலக்கணக்குத் தெரியாத எல்லாமே 'ஆதியில் இருந்தது' என்ற விவரத்தின் படி இந்தப் பக்கங்களில் 'ப்ராச்சீன்கள்' நிறைய இருக்கு. ஒரிஜனல் கட்டிடம் பலமுறை மாத்திக் கட்டுனதால் காணாமப்போயிருக்கு. தெருவிலிருந்து ஏழெட்டுப்படி இறங்கிப்போகணும். நிழலுக்காக நீலக்கூரை போட்டுவச்சுருக்காங்க. இடதுபுறம் காலணிகள் பாதுகாக்குமிடம். இலவசச்சேவை. கூரையின் கீழே நடந்து போனால் அடுத்த வாசல் இடதுபக்கமே வருது. பெரிய நீளமான கம்பியில் ரெண்டு வரிசையா மணிகளைத் தொங்கவிட்டுருக்காங்க. உள்ளே போகும் சனம், நான் ஆஜர்'ன்னு சொல்லும் வகையில் கம்பியைப்பிடிச்சு ஒரு குலுக்கு குலுக்கு. ஜலஜல ஜல்ஜல்.
ஸ்ரீ மாதா சாமுண்டின்னு எழுதிவச்சுருக்கும் கருவறை. காளிமாதா முகம். சுவர் ஓரமாக் காளியின் இன்னும் சிலபல முகங்கள். குனிஞ்சு உள்ளே பார்க்கும் விதமா கருவறை வாசல் ரொம்பச் சின்னது. கருவறையை வலம் வந்தால் அங்கங்கே மாடங்களில் தேவிகள், ஹனுமன், பிள்ளையார்ன்னு வர்ணச்சிலைகள். ஒரு கறுப்பு ஆட்டுக்குட்டியை கழுத்தில் கயிறுகட்டிப் பிடிச்சிருந்தார் ஒரு ஆள். இன்னொரு பூசாரி(?) அதன்மேல் தீர்த்தம் தெளிச்சார். அடக் காட்டு மிராண்டிகளான்னு பதறிப்போய் வெளியே ஓடிவந்துட்டேன்.(கோயிலுக்கு நேர்ந்து விடறாரோன்னு ஒரு நப்பாசை)

தெருவுக்கு நேரா இருந்த கண்ணாடி போட்ட (?)பெரிய மண்டபத்தில் கீழே விழுந்துகிடக்கும் சிவனின் நெஞ்சில் ஒரு காலை வச்சு, கையில் உள்ள சூலாயுதத்தை ஓங்கிக் குத்தும் போஸில் காளி ஆக்ரோஷமாக நிற்கும் வர்ணச்சிலை.
அடடா.... அம்மாவுக்கு இந்தக் கோவம் வரும்படி என்ன செஞ்சுட்டேப்பா?
மண்டப உள்புறச் சுவர்களில் சாமிக் கதை'' சொல்லும் சித்திரங்கள் தீட்டிவச்சுருக்காங்க. உத்துப் பார்க்க முடியாமல் வெயிலில் க்ளேர் அடிப்பதால் படங்களும் சரியா வரலை. பக்கவாட்டுக் கட்டிடத்தின் மேல் மாடி பால்கனிகளில் ஹனுமன், ஹிரண்யனின் வயிற்றைக்கிழிக்கும் நரசிம்ஹர் சிலைகள் . கண்ணாடிப் பாதுகாப்பில் இருக்காங்க எல்லோரும்.

அதே கட்டிடத்தில் பண்டாரா இருக்கு. கோவில் சாப்பாடு போடுது. இவ்வளவு இருந்தும் தெருவிலிருந்து கீழே இறங்கும் படிகளின் ரெண்டு பக்கமும் ஏராளமான பிச்சைக்காரர்கள்.

ஒவ்வொரு தூணா நின்னு நிதானமாப் பார்க்கும் அளவுக்குக் கோவில் விஸ்தாரம் கிடையாது. ஒரு பதினைஞ்சு நிமிசத்துக்குள்ளே வெளியே வந்துட்டோம். ஆனால் நவராத்ரி காலங்களில் எள்ளு போட்டா (இதயம்) நல்லெண்ணெய்தான் வருமாம். நாம் முன்னே பார்த்த குருத்வாரா இந்தக் கோவிலின் பின்பக்கம் தலை உயர்த்திப் பாக்குது.
கோவிலுக்குப் பக்கத்தில் க்ளேஸ்டு ஜாடிகள், திருகைக்கல்லு, கல்பத்தா என்னும் சின்ன உரல், சப்பாத்திக்கல், அலங்காரப் பொம்மைகள் இப்படிப் பொருட்கள் நிறைஞ்ச கடைகள். ஒரு ஹனுமன் ராமலக்ஷ்மணர்களைத் தோளில் சுமந்துருக்கும் பொம்மை சூப்பர். விலை என்னன்னுகூடக் கேக்கவிடலை ஒருத்தர். என் காலக்கெடு முடிஞ்சு போச்சு. "வெறும் 10 கிலோ மீட்டர்ன்னு சொல்லி இம்மாந்தூரம் கொண்டுவந்துட்டே....( யாரு? நானா?) திரும்ப உன்னைக் கொண்டுபோய் ஹொட்டேலில் விட்டுட்டு நான் ஆஃபீஸ் போகணும்"

இத்தனைக்கும் வெறும் 35 கி.மீதான் வந்துருக்கோம்.

"வேணாம். சிரமம் எதுக்கு?. வர்றவழியில் ஒரு ரோடு பிரியுது .வெறும் 18 கி.மீதான். ஒரு சேஞ்சுக்கு உங்களை ஆஃபீஸில் விட்டுட்டு நான் ஹொட்டேலுக்குப் போறேன். (முகத்தில் கோடி சூர்யப்பிரகாசம்)

இன்னும் ஷார்ட் கட் இருக்கு. அதுலே போனால் இருவது நிமிஷத்துலே போயிறலாமுன்னு ரொம்ப உற்சாகமா வண்டியை எடுத்த ரோஹித், சந்து பொந்துக்குள்ளேயெல்லாம் போய் வழிதவறி அங்கங்கே குறுகலான பாதைகளில் வண்டியைத் திருப்பிக்க இடமில்லாமல் முழிச்சு ஒரு வழியா 'சீக்கிரமா' ஒரு ஒன்னேகால் மணி நேரத்துலே ஹிமாச்சல் பிரதேசத்துலே இருக்கும் ஃபேக்டரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். இவரை விட்டுட்டுத் திரும்பிவரும்போது 50 நிமிசத்துலே சண்டிகர் செண்ட்ரலுக்கே வந்துட்டோம். புது ரோடு அப்படி ஜோரா இருக்கு. இன்னும் வேலை முடியலை. டார் சீல் செஞ்சபிறகு 40 நிமிஷத்துலே போகலாமாம்.

முதல் அரைமணி நேரத்துக்குப்பிறகு நம்பிக்கை இழந்த கோபால், 'தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜானென்ன முழமென்ன....' எருமைகளையும் எருமுட்டைகளையும் வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்தார். எல்லாம் வேலை செய்யும் எருமைகள். மாட்டு வண்டிகளை இழுத்துக்கிட்டுப் போகுதுகள். வழியெல்லாம் செங்கல் சூளைகள் எக்கச்சக்கம். டெர்ரகோட்டா பொருட்கள் ஏராளமாக் கிடைக்கும் ரகசியம் புரிஞ்சது.

கடைசிவரை இந்தச் சண்டி கண்ணில் படாமல் ஒளிஞ்சுக்கிட்டாளேன்னு எனக்கு ஏக்கம். இன்னொரு சண்டியை நேர்கொள்ள திடமில்லாதவள். அன்னிக்கு மாலை சந்திச்ச ஒரு மிலிட்டரிக்காரரிடம் ( ரிட்டயர்டு ஆர்மி கர்னல்) பத்து கிலோ மீட்டரில் இருக்கும் உங்கூரு சண்டி எங்கேன்னதும் அவர் சொன்ன பதில் ஆச்சரியமாப் போச்சு! சரியான நபரிடம்தான் விசாரிச்சு இருக்கேன்!!!

"வெஸ்டர்ன் கமாண்ட் ஹெட்க்வாட்டர்ஸ் பார்த்தீங்களா? வெளியே சின்ன பீரங்கிகள் எல்லாம் இருக்குமே. அதே இடம்தான். அதுக்குள்ளே போகணும். ஆஃபீஸ் ரூம் இருக்கும் வளாகத்தில் நேர் எதிரா இருக்கும். வாசலில் இருக்கும் செண்ட்ரிகிட்டே கோவிலுக்குப் போகணுமுன்னு சொன்னால் போதும். வழி விடுவாங்க"


அடப் பாவமே!! சண்டி, இப்போ ஆர்மி அரெஸ்ட்டா?