Friday, January 29, 2010

கோபியர் கொஞ்சிய கோபால கிருஷ்ணா (குஜராத் பயணத்தொடர் 11)

இதென்ன வாழைத்தண்டை இப்படி அடுக்கி வச்சுருக்காங்க? ஓடிப்போய் பார்த்தேன். ஆஹா.... இது கல்வாழைத்தண்டு! பக்கத்துலே ஒரு தட்டு நிறைய கல்ரவா லட்டு. அப்புறம் ஓடோடு இருக்கும் புளியம்பழம், நிலக்கடலைன்னு வியாபாரம். வைணவர்கள் நெற்றியில் இட்டுக்கும் கோபிச்சந்தனம்ன்னு சொல்லும் வெள்ளை நிற மண் இங்கேதான் கிடைக்குதாம். திரு மண்!! நம்ம பக்கம் விக்கும் நாமக்கட்டி பளிச்சுன்னு வெள்ளையா இருக்குல்லே? இங்கே இது ஆஃப் ஒயிட்டா இருக்கு. ஊருக்குப் பெயரே கோபி! கோபி தாலாப் (இங்கே வ எல்லாம் ப)

கதை? இருக்கு:-))))

மதுராவிலிருந்து கண்ணன் புறப்பட்டு த்வாரகா நகரை புனர்நிர்மாணித்து (இது அவருடைய முன்னோர்கள் ஆண்ட நாடாம்) அரசாட்சி செய்ய வந்துட்டார். கோகுலத்தில் கண்ணன் பிரிவைத் தாங்காத ஜீவன்கள் கூடவே வந்துட்டாங்க. ஜீவன்னு சொன்னது இந்த மாடுகளையும் சேர்த்துத்தான். அதான் இங்கே இந்தப்பகுதி முழுசும் ஊரே எனக்குத்தான்னு ரைட் ராயலா இடம்புடிச்சு அங்கங்கே ஒய்யாரமாப் படுத்துக்கிட்டு இருக்குதுங்க. அன்னநடை நடக்கறதும் ஆள் வர்றாங்களே ஒதுங்கிப்போகலாமுன்னு இல்லாம உரசிக்கிட்டு வர்றதும் அதிகம். பயணத்தில் வந்த கோபிகைகள் அங்கே ஒரு குளம் இருப்பதைப் பார்த்து அதில் குளிக்க இறங்கிட்டாங்க. ஜலக்ரீடைதான் போங்க. அந்த இடம் கோபி gகாட்ன்னு பெயரோடு இருக்கு. எதிரெதிரா பெரிசும் சின்னதுமாப் படித்துறைகள்.

ரொம்பச் சின்ன ஊர்தான். இன்னும் சொன்னால் ரெண்டு மூணு தெருக்கள்தான் இருக்கும். ஆனால் எங்கே பார்த்தாலும் கோபிகாஜி மந்திர், திருப்பதி பாலாஜி மந்திர், ஸ்ரீ கோபி-க்ருஷ்ணா மந்திர்ன்னு ஏகப்பட்ட பெயர்களில் வீட்டுவீட்டுக்கு கோவில்களா இருக்கு! பெண்கள் ச்சும்மா அங்கே ஒரு தட்டு வச்சுக்கிட்டு உக்காந்துருக்காங்க. அன்னாடம் கைசெலவுக்காச்சு!

கோபிகைகள் கட்டிவச்ச 'ஒரிஜனல்' கோயிலுன்னு வேற ஒரு வீட்டிலே(?) எழுதிவச்சுருக்கு. 'இதுதான் இங்கே இருப்பதிலேயே பழைய கோவில். 5000 வருசப் பழசு. இங்கே அசல் கோபிச்சந்தன், கோபி தாலாப் தலப்புராணம் எல்லாம் கிடைக்கும். கோபிகைகளுக்கு காணும் பொருள் எல்லாம் கண்ணனேன்னு இருந்துருக்கும்!

இது இப்படி இருக்க ஊர் மக்களுக்குக் காணும் பொருள் யாவும் கோபியரேன்னு இருப்பதை நிரூபிக்கும் விதமா அங்கங்கே மைல்கற்களாப் பதிச்சுவச்சு அதுக்கெல்லாம் புடவை கட்டி வச்சுருக்காங்க!

பூமியின் இந்தப் பகுதியில் மட்டுமே கிடைக்கும் மண் என்பதற்குச் சான்றா அங்கங்கே சாலை ஓரத்தில் மண்ணைத்தோண்டி வெளியே எடுத்துப்போட்டு வச்சுருக்கு. இன்னும் பலர் தோண்டும் தொழில் பிஸியா இருந்தாங்க. ஒரேதாத் தோண்டிட்டு, தார் ரோடு பிடிமானம் இல்லாம விழப்போகுதோன்னு எனக்கு காப்ரா!

பள்ளிக்கூடப் பிள்ளைகளை சுற்றுலாவுக்குக் கொண்டு போறோமுன்னு த்வாரகாவிலும் சரி, இங்கேயும் சரி ஏகப்பட்ட கூட்டம். எல்லாப் பிள்ளைகளும் இந்துக்கள் என்றால் ஒருவிதத்தில் சரி. ஒருவேளை வேற்று மதப்பிள்ளைகள் படிக்கிறாங்கன்னா அவுங்களையும் கூட்டிவருவாங்களா? அவுங்க பெற்றோர் இப்படிக் கோவில் பார்க்க அனுப்புவாங்களா? அவுங்க இந்த சுற்றுலாவில் பங்கேற்காம இருந்தால் ..... வகுப்புத் தோழர்களுடன் ஜாலியாப் போகும் பயண வாய்ப்பு இழந்துருவாங்கதானே? பள்ளிச்சுற்றுலான்னா கோவில்களை விட்டுட்டுப் பொதுவான இடங்களுக்குக் கொண்டு போகக்கூடாதா? இப்படி ஆயிரம் கேள்வி எனக்கு. சுற்றுலாவுக்கு வந்துருந்த ஒரு பள்ளிக்கூட டீச்சரைப் பார்த்தேன். கேடா மாவட்டப் பள்ளிக்கூடமாம். அவர் பெயர் கிரி ப்ரஜாபதி. ஆங்கிலத்தில் எந்தப்பள்ளி, என்ன பெயர்ன்னு கேட்டதுக்கே கொஞ்சம் பயந்துட்டார். திருதிருன்னு முழிச்சதும் போகட்டுமுன்னு விட்டுட்டேன்.
கோபிகைகள் குளத்தின் படித்துறையில் கோபியரும் கோபன்களும்.

'ஓஹா' துறைமுகத்தை நோக்கிப் போகும் சாலையில் போறோம். வழியெங்கும் டாடாக்காரர்களின் ரசாயனத் தொழிற்சாலைகள். துறைமுகத்தை அடுத்து இந்தியக் கடற்படையின் பிரிவு ஒன்னு. பாகிஸ்தான் பக்கத்துலே இருக்குன்னு ரொம்பவே அலர்ட்டா இயங்குமாம். இந்தப் பக்கம் நீண்ட பாலத்தைக் கடந்தால் கழிமுகமா இருக்கும் பகுதியில் ஒரு மீனவர் குப்பம்(??) மீன்பிடிப் படகுகள் ஏராளமா நிக்குது.
பேட் த்வார்காவுக்குப் போகும் படகுத்துறைக்குப் போகும்போதே பதினொன்னே முக்கால். டிக்கெட்டு எங்கே வாங்கறதுன்னும் தெரியலை. அதுக்கான விவரமும் இல்லை. அடிச்சுப்பிடிச்சு ஓடி அங்கே தயாரா இருந்த படகில் ஏறி உக்கார்ந்தாச்சு. ஆனால் அது கிளம்பும் வழியைத்தான் காணோம். கொஞ்சம் கொஞ்சமாக் கூட்டம் சேர்ந்துக்கிட்டு இருக்கு. கீதா சொன்னதுபோல பாலோ தயிரோ மோரோ ஒன்னுமே இதுவரை கண்ணுலேயே தெம்படலை:( ஆபத்துக் கால உதவிக்கான லைஃப் ஜாக்கெட்டைப் பத்திரமாப் பைகளில் நிரப்பி வாயை இறுக்கக் கட்டி வச்சுருந்தாங்க. நேரம் ஆகஆக படகில், உக்காரும் இடமாவும் அந்தப் பொதி மாறிப்போச்சு.

நம்ம படகை ஒட்டி வேறொரு படகு வந்து நின்னு, '200 ரூ. கொடு. கோவில் மூடறதுக்குள்ளேக் கொண்டுபோய் விடுறேன்'னு வலைவீசிப் பார்த்தாங்க. நம்ம படகுலே இருந்து யாருமே நகரலை. நகராதது நம்ம படகும்தான். இதுக்குள்ளே இளைஞர்கூட்டம் ஒன்னு வந்து அடைஞ்சது. அதோ பாகிஸ்தான் இதோ பாகிஸ்தான்னு இருட்டுவீட்டில் அம்புவிடுவதும், எங்கே நிஜமாவே பாகிஸ்தான் தெரியுதோன்னு கழுத்துவலிக்க நம்மவர் திரும்பிப் பார்ப்பதுமாக் கொஞ்சம் நேரம் போச்சு. இப்பத் தெரிஞ்சு என்ன ஆகப்போகுது. நாம் போகப்போகுமிடம் இதோ இந்தப் பக்கம் கண்ணுக்கு நேராத் தெரியுது பாருங்க. வெறும் அஞ்சே கிலோமீட்டர்தான்! அங்கிருந்து திரும்பிவரும் யாத்ரீகர்களின் படகைக் குடையாய்ச் சூழ்ந்திருக்கும் ஸீகல்ஸ். அவுங்களைக் கொண்டுவந்து இங்கே இந்தப் பக்கம் விட்டுட்டு இங்கே இருந்து அங்கே போகும் படகுக்குக் குடைபிடிச்சுக் கூடவே துணையாகப் போகுதுகள். நல்லதொரு சேவை!

படகுக்குள் இறங்கி கலர்க்கலரா பொரி வித்துக்கிட்டு இருக்காங்க சிலபேர். இதுக்குமா கவர்ச்சி வேணும்? தேவையில்லாத வர்ணம் கடைசியில் பார்த்தால் அதெல்லாம் கடல்பறவைகளுக்காம்! அதுங்க வயிறு கெட்டால் பரவாயில்லை:(
ஒருவழியா நம்ம படகு புறப்பட்டதும், ஏற்கெனவே பழக்கிவச்சதுமாதிரி பறவைக்கூட்டம் குடை பிடிப்பதும், மக்கள்ஸ் பொரியை வீசுவதும், அதுகள் சிலவற்றை அப்படியே ஆகாயத்தில் தாவிப்பிடிப்பதும், படகின் தரையிலும் தண்ணிரிலுமாக பொரிகள் சிதறி விழுந்து வீணாவதுமாக அஞ்சுகிலோ மீட்டர் பயணம், இருவது நிமிஷம்.
அக்கரை சேர்ந்து ஏழெட்டு நிமிசம் நடந்து, கோவில்கடைகளை எல்லாம் கடந்து கோவில் வாசலருகில் போனால் கோவிலை மூடிக்கிட்டு இருக்காங்க. இனி மாலை நாலுமணிக்குத்தான் திறப்பாங்களாம்.

மூணரைமணி நேரம் கையில் இருக்கு. தீவைச் சுத்திப்பார்க்கலாமா? ஆட்டோ கிடைக்குமா? தேடியதும் கண்ணில் பட்டது நாலைஞ்சு சக்கடா நிற்கும் ஸ்டேண்ட். ஆஹா.... சக்கடாப் பயண ஆசை இப்படி வாய்க்குதா!!!வாடகைக்கு வருமான்னால் இன்னும் எட்டுப்பேரைக் கொண்டுவரணுமாம். நான் எங்கே போவேன்? முழிச்சு நிக்கும்போது கடைசியில் நின்ன ஒன்னு கிளம்புது. நாலைஞ்சுபேர் அதுலே ஏறி உக்காந்துக்கிட்டு இருக்காங்க. கோபால் ஓடிப்போய் விசாரிச்சார். வாங்கன்னாங்களாம். .
மேலே இருக்கும் கம்பியைக் கெட்டியாப் பிடிச்சுக்கலைன்னா, நொடிக்கு நொடி ஏறி இறங்கும் பள்ளத்தினால் தூக்கி வீசப்படவேண்டியதுதான்! அப்படியும் வண்டி பள்ளத்தில் விழுந்து எந்திரிக்கும்போதும் வளைவின் போதும் நாம் கம்பியைப் பிடிச்சுக்கிட்டே அந்தரத்தில் ஊசலாடுகிறோம். உக்காரும் இடத்தை ஏதோ உணர்வினால் தேடவேண்டி இருக்கு. தொங்கல்தான் போங்க! கண்ணுக்கெட்டிய தூரம் முழுசும் ஒரே பொட்டல் காடு.

என்ன ஏது எங்கேன்னெல்லாம் தெரிஞ்சுக்காம நாங்களும் அதுலே ஏறிப்போய்க்கிட்டே இருக்கோம்.

பயணம் தொடரும்.........:-)

Thursday, January 28, 2010

தாருகாவனத்து சிவன் ......... (குஜராத் பயணத்தொடர் 10)

'இடம் வசதியா இல்லைன்னா வந்ததுக்கு ஒரே நாள் தங்கிட்டுக் கிளம்பிறனுமாம். அதெப்படி? இதுக்காகத்தான் வந்திருக்கேன். கொஞ்சம் அப்டி இப்டி இருந்தாலும் பொறுத்துக்கிட்டு ரெண்டு நாள் தங்கிட்டுத்தான் வருவேன்.'

குடும்பத்துலே குழப்பம் விளைவிக்கவேணாமுன்னு சாமி நினைச்சுட்டார் போல! நல்லதாவே இடம் கிடைச்சுருச்சு.

காலையில் கண் திறந்ததும் , என்ன கொடின்னு பார்த்தேன். நேத்து மாலை மாற்றிய அதேதான். குளிச்சுமுடிச்சுக் கோவிலுக்குப் போனோம். காலை பூஜை முடிஞ்சு திரை போட்டுருக்கு. நிதானமா ஒரு சுத்து எல்லா சந்நிதிக்கும் போய்வந்தோம். பலராமர் சந்நிதியில் கொஞ்சம் பருமனான அம்மா ஒருத்தர் ஸ்டூல் போட்டு உக்கார்ந்துருந்தாங்க. நல்ல சம்கி வச்ச பளபள சேலையும் ரவிக்குமா. கழுத்து நிறையத் தங்கச்சங்கிலிகளும் விரல் நிறைய மோதிரங்களும், கை நிறைய வளைகளுமா கண்ணைக் கவர்ந்துச்சு. வயது ஒரு எழுபது இருக்கலாம்.. அவுங்க முன்னாலே காலடியில் ஒரு தட்டு. அதுலே குவியலா பத்து ரூபாய் நோட்டுகள். ஜனங்கள் என்ன ஏதுன்னு கேக்காம ரூபாயைப் போடுவதும், அந்தம்மா கைகளைச் சிரமத்துடன் தூக்கி ஆசி வழங்குவதுபோல் ஆட்டுவதுமா இருக்காங்க. நேத்து மாலை இந்த இடம் காலியாத்தான் இருந்துச்சு. ஒருவேளை காலை ட்யூட்டியோ என்னவோ?

எப்படியும் ரிட்டயர்மெண்ட் கிடைச்சதும் உபதொழிலுக்கு ஐடியா கிடைச்சதுன்னு எனக்குள்ளே சின்னதா ஒரு மகிழ்ச்சி. ஏறக்கொறைய எல்லா அம்சமும் பொருந்தி இருக்குன்னு கோபாலும் சொன்னார். 'இன்னொரு பக்கம் சும்மாத்தான் கிடக்கு. உங்களுக்கு(ம்) ஒரு ஸ்டூல் போட்டுறலாம்ன்னேன். ஆனா ஒன்னு, சாய்ஞ்சு உக்கார்ந்துக்குவேன், பேப்பர் படிச்சுக்கிட்டே ஆசி வழங்குவேன்னு பிடிவாதம் பிடிக்ககூடாது'ன்னு கண்டிஷன் போட்டேன்.

இன்னொரு முறை மூலவர் சந்நிதிக்குப் போனால் திரை விலகி இருந்துச்சு. பர்ப்பிள் நிற உடுப்பில் கரும்பளிங்குச் சிலையாகக் காட்சி அளித்தார்.சின்னவனா, சட்னு இடுப்பிலே தூக்கிவச்சுக்கலாம் போல இருந்துச்சு. தேவகிக்கு முன்னால் இருந்த கொலுவைக் காணோம். அப்போ ஒரு 'பண்டிட்' வந்து கோவிலைச் சுத்திக் காட்டவான்னு கேட்டார். கூடவே அவர் சொன்ன இன்னொண்ணுதான் பிரமாதம்! ரெண்டு வைஷ்ணவர்கள் வருவாங்க. போய்க் கோவிலைச் சுத்திக்காமின்னு சொன்னாங்களாம்? யாரு? அந்த க்ருஷ்ணனே
சொல்லி அனுப்புனானா? பரவாயில்லையே! 9 மணிக்கு அருணை வரச்சொல்லி இருக்கோம். அப்போப் பார்த்துக்கலாமுன்னு சொல்லி அனுப்புனோம்.

ஹொட்டேலுக்கு முன்னால் இருந்த சாய் வண்டியில் ஒரு டீ வாங்கிக் குடிச்சுட்டு, முதல்நாள் வாங்கிவச்சுருந்த பிஸ்கெட், ஜூஸோடு ப்ரேக்ஃபாஸ்ட்டை முடிச்சுக்கிட்டுக் கிளம்பினோம். கடைவீதியில் வண்டியை நிறுத்தி, இறங்கி ஓடுன கையோடு திரும்பி வந்து 'டைம்ஸ் ஆஃப் இண்டியா' கிடைக்கலைன்னு சொன்ன பப்பனை விநோதமாப் பார்த்தேன். பேப்பர் வேணுமுன்னு நாங்க யாருமே கேக்கலைன்னாலும், எங்களுக்குப் பேப்பர் அதுவும் டைம்ஸ் ஆஃப் இண்டியாதான் வாங்கித்தரணுமுன்னு மூணுநாளா படாதபாடு படறார். ஆமதாபாத், ராஜ்கோட்டில் எல்லாம் ஹொட்டேலே தினசரியை அறைக்கு அனுப்பிருச்சு. போனாப்போகட்டும் வேற எங்கெயாவது பார்க்கலாமுன்னு அப்போதைக்கு ஒரு சமாதானம் சொல்லி வச்சோம்!

துவாரகைக்கு வந்தால் 'பஞ்ச் த்வார்க்கா'ன்னு ஒரு ஐந்து இடங்களைப் போய்ப் பார்த்துவருவது ரொம்பவே முக்கியமாம். அதெல்லாம் என்னென்னன்னு ஒரு கார்டுலே அச்சடிச்சு அந்தந்த ஹொட்டேல்களில் வச்சுருக்காங்க . நாம் தங்கியிருந்த இடத்திலும் மேற்படி விவரம், இங்கே த்வார்க்கா கோவில் தரிசன நேரம் எல்லாம் கிடைச்சது. அஞ்சுலே ஒன்னு போச்சு, மிச்சம் நாலுன்னுதான் இப்போப் போய்க்கிட்டு இருக்கோம்.

நகரைவிட்டு வெளியே போய் வெறும் கள்ளிச்செடிகள் நிறைஞ்ச காட்டுப்பாதையில் பயணிக்கிறோம். இங்கே இந்த உவர் மண்ணில் கள்ளியைத்தவிர வேறெதுவும் வளராது. பொட்டல்காடு. ஒரு வளைவு திரும்பும்போது பாழடைஞ்ச சிதைஞ்ச கோபுரம் ஒன்னு. சைந்தவர்கள் கலையில் கட்டியது. காளி கோவில். உள்ளே மூணாக உடைஞ்ச மூலவர். கீழே விழுந்து கிடந்த பாகங்களை எடுத்து அடுக்கி வச்சுருக்காங்க. ஒரு காலத்தில் இங்கே ஊர் ஒன்னு இருந்திருக்கலாம்! இப்போ தொல்பொருள் இலாகாவால் பாதுகாக்கப்பட்ட இடமா இருக்கு. கோவில் 8 இல்லை 9 ஆம் நூற்றாண்டுலே கட்டப்பட்டதாம். இதுக்கு எதுத்தாப்போலெ ஸ்ரீஷங்கர் கைலாஷ் ஆஷ்ரம்ன்னு ஒன்னு இருக்கு. கோவில் கோபுரமும் கொடியும் தெரிஞ்சதுன்னாலும் உள்ளே போகலை.
காளிகா மாதா

ஒரு பத்துநிமிஷப் பயணத்துலே, ரொம்ப தூரத்தில் சிவன் சிலை ஒன்னு பிரமாண்டமாய் கண்ணுலே பட்டது. நாகேஷ்வர் என்ற இடத்துக்குப் போறோம். தாருகாவனம் என்று வேதகாலத்தில் சொல்லப்பட்ட இடம்.

தாருகா என்ற அசுரனும் தாருகி என்ற அவன் மனைவியும் வாழ்ந்திருந்த காட்டுப்பிரதேசம் இந்த தாருகாவனம். இவன் நிறைய ஆட்களைப்பிடிச்சு சிறை வைத்திருந்தானாம். இவனுடைய போதாதகாலம், சுப்ரியா என்ற சிவபக்தரையும் பிடிச்சுச் சிறையில் அடைச்சுருக்கான். இங்கே இருந்து தப்ப வைக்கும்படி சிவனை நினைச்சு ஓம் நமசிவாயா ன்னு சொல்லிக்கிட்டே இருந்துருக்கார். சிறைப்பட்ட மற்ற ஆட்களும் பஞ்சாட்ஷர மந்திரத்தை ஓத ஆரம்பிச்சுருக்காங்க. இந்த ஓம்கார ஓசை பெரிய அளவில் விரிஞ்சுக்கிட்டே போனதும் தாருகனுக்குக் கோபம் வந்துருச்சு. இவ்வளவு நாள் சும்மாத்தானே கிடந்தாங்க. இப்ப எப்படி இப்படின்னு பார்த்தால் மூலகாரணம் இந்த சுப்ரியான்னு புரிஞ்சது. இதுக்கெல்லாம் முடிவு கட்டணுமுன்னு சுப்ரியாவைக் கொல்லப்போறான். சாக்ஷாத் அந்த சிவனே தோன்றி தன்னுடைய பாசுபத அஸ்திரத்தைச் செலுத்தி தாருகனை அழிச்சுட்டார். அப்போலே இருந்து சிவலிங்க உருவில் இங்கே அருள்பாலிக்கிறார். அதுக்குப் பிறகு நிறைய ரிஷி முனிவர்கள் இந்த இடத்தில் வந்து வசிச்சு சிவனை ஆராதிச்சு வழிபட்டாங்க.
சைவர்களுக்கு மிகவும் முக்கியமான பனிரெண்டு ஜோதிர்லிங்க உருவக் கோயில்களில் இது ஒன்னு. இங்கே வழிபட்டால் விஷக்கடியில் இருந்து காப்பாற்றப்படுவாங்க என்பது ஐதீகம். சிவலிங்கத்தைச் சுற்றி ஒரு பாம்பு வளைஞ்சு இருந்து தன் படத்தால் குடைபிடிப்பது மாதிரி உருவ அமைப்பு. இங்கே மட்டுமில்லை, இந்த சௌராஷ்ட்ராவில் நாம் பார்த்த சிவன்கோவில்கள் எல்லாமே இப்படிப் பாம்புக்குடையுடந்தான் இருக்கு. இன்னும் ஒன்னு கவனிச்சது என்னன்னா, சிவனுக்கு எதிரில் இருக்கும் நந்திக்கு முன்னால் ஒரு ஆமை வடிவம். அதுக்கும் பூ, குங்குமம் எல்லாம் போட்டு வழிபடறாங்க. சிவலிங்கத்தின் பின்புறச் சுவரில் பார்வதியின் சிலையும் வச்சுருக்காங்க.

சமீபகாலமா ஒரு பிரமாண்டமான சிவனுருவம் செஞ்சு வச்சுருக்காங்க இந்த வளாகத்தில். . பக்கத்துப் பதினெட்டுப்பட்டிக்கும் தெரியுமோ என்னவோ? கோவிலுமே கொஞ்சம் புதுசாத்தான் இருக்கு. நல்ல பராமரிப்பு. படு சுத்தமாவும் இருக்கு. சிலையின் முகமும் அதிலுள்ள சாந்தி உணர்வும் அற்புதம் கை கால் இடுப்பு எல்லாம் பாம்பணிகள். புலித்தோல் மீது இருக்காராம். புலியின் தலைகூட இருக்கு! வளாகத்துக்குள்ளே இருக்கும் ஆலமரமேடையில் தானியங்கள் இறைபட்டுருக்கு. எக்கச்சக்கப் புறாக்கள். இந்தப் பக்கத்துக் கோபுர அமைப்புகளில், புறா உக்கார இடம்செஞ்சுவிட்டாப்பொலே படிப்படியா ஒரு டிஸைன். இதுகளும் காலரியில் வரிசையா அடுக்கடுக்கா உக்கார்ந்துக்குதுகள். அங்கே விற்கும் தானியத்தை நாம் வாங்கித் தூவுனதும் அப்படியே படையெடுத்துப் பறந்து வந்து கொத்திட்டுப்போறதுதான் முக்கியப் பொழுதுபோக்கு!
நாம் தானியப் பொதியைப் பிரிச்சவுடன் ஒரு பையன் வந்து காலிப் பேக்கட்டை வாங்கிக்கிட்டான். குப்பைக்கூடையைத் தேடவேணாம். நல்ல ஏற்பாடுன்னு இருந்தேன். கடைசியிலே பார்த்தால் இது ஒரு ரீசைக்கிளிங் சமாச்சாரம். ஏகப்பட்ட தானியம் மேடையில் சும்மாக் கிடக்குது திங்க நாதியில்லாமல். அதையெல்லாம் கூட்டிப்பெருக்கி இதே பையில் அடைச்சால் வியாபாரத்துக்குச் சரக்கு கிடைச்சுருதுல்லே!! சூப்பர் ஐடியா.
கோவிலுக்குள்ளே நுழைஞ்சால் பெரிய ஹால். நேரெதிரா கருவறை, வழக்கமா தென்னிந்தியக்கோவில்களில் இருப்பதைப்போல் இல்லாமல் சின்ன ஹால் அளவுக்கு இருக்கு. சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் நடந்துக்கிட்டே இருக்கு. லிங்கத்தின் தலைக்குமேல் உள்ள பாத்திரத்தில் இருந்து சொட்டுச்சொட்டாக பால் விழும்படியான அமைப்பு. சிவன் கோவில்களில் வழக்கமா நம்ம விண்ணப்பங்கள் எல்லாத்தையும் நந்தியின் காதில் ஓதிட்டுப்போகும் வழக்கம் இங்கேயும் இருக்கு. வலதுகைப் பெருவிரலும் சுண்டுவிரலும் ரெண்டு கொம்பிலும் படுமாறு வச்சுக்கிட்டுக் குனிஞ்சு காதுலே சொல்லும் ஜனங்கள். நாமும் நம் பங்குக்கு! தமிழில் சொன்னது அதுக்குப் புரிஞ்சுருக்கும்தானே?
முன் மண்டப ஹாலில் நினைவுப்பொருட்கள், சிவலிங்கங்கள், ஜெபமாலைகள் இப்படி விற்பனை ஜரூரா நடக்குது. எட்டிப் பார்த்தவள் பலவித நிற மணிகளால் செஞ்ச மாலை இன்னு முப்பது ரூபாய்க்கு வாங்கினேன். அதைக் கழுத்தில் போட்டுக்கிட்ட நொடிமுதல் தலைவிதியே மாறிப்போச்சு!


பயணம் தொடரும்.........:-)

அரசனைப் பார்த்தக் கண்ணுக்கு.............. (குஜராத் பயணத்தொடர் 9)

நாம் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து இடப்பக்கம் ரெண்டு கட்டிடம் தாண்டி, அதுக்கு நேரா இருக்கும் குறுக்குத் தெருவில் நடையைக் கட்டுனால் ஒரு ரெண்டு நிமிசத்துலே வலப்பக்கம் கோவில். திரும்பாம நேராப்போனால் கோமதி ஆற்றங்கரை. என்னென்னவோ இடிபாடுகள், மாடுகள், மனிதர்கள் ஜேஜே.. போகும் வழியில் அரைநிமிச நடையில் டாக்டர் வினூ பாய்!. வீட்டுவாசலில் க்ளினிக். வண்டியில் கடுவா கர்கோடா, ஜங்லி சுரன், டூடியா, இம்கன், சட்டாவர், ரகத் ராய்டான்னு உலர்ந்த வேர்கள் கிழங்குகள்ன்னு வச்சுருக்கார். இதையே பொடிச்சும் தனித்தனி டப்பாக்களில் இருக்கு. சகலவியாதிகளையும் போக்கும் நாட்டு/காட்டு மருந்து. முக்கியமா நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, பலஹீனம் இதுக்கெல்லாம் கை கண்டது. முன்னோர்கள் சொல்லித்தந்த மருத்துவம்.
திண்ணைகள் வச்ச பழைய காலத்து வீடுகள், ரொம்ப சுவாதீனமா நம்மை உரசிப்போகும் மாடுகள். லேசா ஏற்றம் உள்ள தெரு. கோவில் முன்னால் புதுசா தரைபோட வெட்டிவச்சுருக்காங்க. சங்கரமடம், சாரதாபீடம்னு அலங்கார தோரணவாசல். அடுத்து வருவது துவாரகை அரசனின் வாசல்.

கேமெரா, செல்போன் உள்ளே கொண்டுபோக அனுமதி இல்லை. ரெண்டு ரூபாய் ஒரு ஐட்டத்துக்குன்னு கட்டினால் பாதுகாப்பா வச்சுக்கிட்டு டோக்கன் தர்றாங்க. கீதாவின் பதிவில் இதைப்பற்றி ஏற்கெனவே படிச்சுவச்சுக்கிட்டதால் தைரியமாக் கொடுத்துட்டு வாசலுக்குப் போனோம்.
காலணிகளை விட்டுவைக்கன்னு எந்த ஏற்பாடும் இல்லை. அப்படியே வெளியே விட்டுட்டுப்போகணும். காணாமப்போச்சுன்னா? கோவில் வாசலில் செருப்புத் தொலைஞ்சால் ரொம்பவே நல்லதாம் (கோயிலைச் சுத்திச் செருப்புக்கடைகள் இருப்பதின் மர்மம் இதுதானோ?)

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி வரிசை. தொட்டுத் தடவி தழுவல் எல்லாம் ஆச்சு. கைப்பையைத் திறந்து காமிக்கணுமாம். வாசல்கதவைக்கடந்து உள்ளே காலடி வச்சதும்.....மனசுக்குள்ளே இனம்புரியாம ஒரு சிலிர்ப்பு. வந்தே வந்துட்டோம் கடைசியிலே!
இடதுபக்கமும் வலது பக்கமும் சின்னதா சில சந்நிதிகள். சிவன், சத்தியநாராயணன், கொல்வாபகத், சிவன். பக்கத்துக்கு ரெண்டு. ஒரு 'பண்டிட்' வந்து கோவிலைச் சுத்திக்காமிக்கிறேன்னு சொன்னார். ஏற்கெனவே நம்மை ஹோட்டேலில் வந்து கண்டுக்கிட்ட பையர் வருவாருன்னு சொன்னோம். யாரு, என்ன பேருன்னு கேட்டதுக்கு, நாம் 'அருண்'. அது நம்ம தம்பிதான். வந்துருவான்னு சொல்லிப்போனார்.

கோவில் உள் முற்றம் கண் எதிரில். அதே முற்றத்தில் நமக்கு இடதுபுறம் காயத்ரி, ப்ரத்யும்னன் & அநிருத்தன் (கிருஷ்ணனின் மகன் & பேரன்) ரெண்டும் வலது புறம் அம்பிகா, புருஷோத்தமன், குரு தத்தாத்ரி ன்னு மூணுமா அஞ்சு சந்நிதிகள்.

தரிசனம் பண்ண ஓடிவாங்கன்னு குரல் கேட்டதும் மூலவரை நோக்கி ஒரு பாய்ச்சல். ஆண் பெண் வரிசைகள் தடுப்புடன் பக்கம்பக்கம். விசிறித் தலைப்பாகையுடன், ரோஜா வண்ண உடுப்பில் சின்னவனா நிக்கிறான். ரெண்டரை அடி இருந்தாலே அதிகம். (உண்மை உசரம் வெறும் ரெண்டேகால் அடிதானாம்!)நல்லவேளையா இடுப்புயர மேடையில் நிற்பதால் எட்டிக்குதித்தாவது சேவிக்க முடிகிறது, இப்போ கூட்டம் அவ்வளவாக இல்லை. ஆரத்தி சமயம் மீண்டும் வந்து சேவிக்கலாமுன்னு கோவிலை இடம்வந்தோம். கிருஷ்ணனுக்கு நேர் எதிரா தேவகிக்கு சந்நிதி. கருவறையில் ஒரு அஞ்சடுக்கு கொலு வச்சுருக்காங்க. மாடுகள், பால் கேன்கள் , மரம், பழம்ன்னு சில பொம்மைகள். ஜிலுஜிலுன்னு சம்க்கிகள் மின்னும் வட இந்தியப்புடவையில் தேவகி. பக்கத்துலே ஒரு சின்னக் கட்டில்.

அடுத்து தனிச்சு நிக்கும் சந்நிதியில் ராதையும் கண்ணனும். கோரி ஔர் காலா. வளாகம் முழுசும் தனித்தனியாச் சநிதிகள். மாதவனுக்கு ஒன்னு, பலராமனுக்கு ஒன்னு. இதுமட்டும் நாலு படி ஏறிப்போகணும். இங்கே கருடாழ்வாருக்கும் புள்ளையாருக்கும் தனித்தனிச் சந்நிதிகள். கூடவே லக்ஷ்மி. கருடனுக்கு நிலக்கடலை நைவேத்தியம் போல. அவரே உரிச்சுத் தின்னுக்கணும். அங்கே இருந்த கண்ணாடி ஷெல்ஃபுலே சின்னக் கட்டில்கள், குதிரை , யானைன்னு இருக்கு. கொஞ்சம் அடுக்கி அழகா டிஸ்ப்ளே செஞ்சுருக்கக்கூடாதோ?

வளாகத்தில் நடக்கும்போது அங்கங்கே பண்டிட்கள் வந்து வளைக்கப் பார்க்கிறாங்க. ஒரு ஆள் வந்து கேட்கிறார், 'ஆப் ப்ராமின் ஹை யா சண்டாள்? ' அடச் சண்டாளா? சாமி முன்னாலே சாதியா கேக்கறே? 'முதல்லே நீ யாருன்னு சொல்லு'ன்னேன். 'நான் உ.பி.ப்ராமின்'. 'ஓ அப்ப நான் தமிழ்நாடு.
.அது என்ன கொஞ்சம்கூட கூச்சநாச்சமில்லாம ஜாதி கேக்கறது?

கிருஷ்ணனின் சந்நிதிக்கு நேராப் பின்பக்கம் துர்வாச முனிவருக்கு. அங்கே ஒரு பள்ளத்தில் சிவலிங்கம். இதையும் கடந்தால் சாராதாபீட சங்கர மண்டபம். இடதுபக்கம் வீடுபோல ஒரு அமைப்பு. நாலைஞ்சு படிஏறி உள்ளே போனால் நடுவில் முற்றம் வச்சு சுத்திவர வெராண்டா. வெராண்டாவில் நடக்கும்போது நமக்கு இடப்புறமாக குட்டியா அறைகள். ஒவ்வொன்னிலும் ஒரு சாமி. ஏதோ அந்தப்புரத்துக்குள்ளே வந்துட்டோமா என்ன? ஒரு பக்கம் ஜாம்பூவதி, ராதா,(பாவம், இந்த ராதா. குஜராத்தியில் எழுதிவச்சுருந்ததை, பத்ரகாளின்னு படிச்சார் கோபால்) லக்ஷ்மிநாராயண் இப்படி மூணு. நேர்ச்சுவரில் குட்டி மாடத்தில் சஞ்சீவிமலையுடன் ஹனுமன். இன்னொரு பக்கம் கோபாலகிருஷ்ணன், லக்ஷ்மி, சத்யபாமா, சரஸ்வதி. எல்லா அறைகளிலும் சிலைகளுக்கு அருகில் சின்னதா கட்டில். டால்ஸ் ஹவுஸில் இருக்கும் உணர்வுதான் வருது. திறந்த முற்றத்தின் நடுவில் யாருக்கும் எட்டாத உயரத்தில் ஆளுயர மாடத்தில் தளதளன்னு துளசி. அப்டிப்போடு!!! வெராந்தாவின் ஒரு மூலையில் பண்டிட் தீர்த்தம் தர்றார். வெளியிடங்களில் கிடைக்கும் தீர்த்தங்களை வாங்கித் தலையில் மட்டும் தடவிக்கொள்ளூம் வழக்கத்தின்படிச் செஞ்சால்..... அச்சச்சோ..... சக்கரையும் பாலும் கலந்த பிசுபிசு. இங்கே இருக்கும் ஒருவாசல் மூலம் சங்கரமட ஹாலுக்கு வந்துறலாம். சுவரில் நரசிம்ம அவதாரம், சங்கரர் இமயமலையில் தவம் செய்தது, புலி அடிக்க வந்ததுன்னு சில சுவர் ஓவியங்கள்..

சங்கரமடம் ஹாலில் பெரிய அளவில் ஆதிசங்கரர் , மற்றுமுள்ள பீடாதிபதிகளின் படங்கள். மேற்கூரையில் சிவனின் வெவ்வேறு திருக்கோலங்களின் பதினாறு செதுக்குச் சிற்பங்கள். ஒரு மூலையில் மகாபாரத உபந்நியாசம். நாலைஞ்சு பேர் உக்கார்ந்து கேக்கறாங்க. மச்சு மாதிரி ஒரு அமைப்பு. படி ஏறிப்போனால் கொலுவச்சுருப்பதைப்போல் படிக்கட்டுகளில் அடுக்கி வச்சுருக்கும் சிவலிங்க வகையறாக்கள். எல்லா இடத்திலும் தட்சிணை வாங்கும் தட்டோடு ஒரு பண்டிட். ஜனங்களும் பத்து ரூபாய் போட்டுப் பாவத்தைக் கழிச்சுக்கிட்டே போறாங்க. சந்திரமௌலீஸ்வரர் கொலு.

அப்படியே துர்வாஸரைக் கடந்து இடம்வந்து ப்ரத்யும்னன் சந்நிதிக்கு வந்தால் ஜனம் அண்ணாந்து பார்த்துக்கிட்டு இருக்கு. கூடவே நாமும். ஆஹா..... கொடி மாத்துறாங்க. வெள்ளைக்கொடியில் நடுவில் சிகப்பு நிற சந்திரனும் சூரியனும். கொடியின் ஓரங்களில் சுத்திவரச் சிகப்புலே முக்கோண வடிவில் ஒரு டிசைன். ( அட! சாமி இப்படிக் குறிப்பால் உணர்த்தியும்கூட மக்கள்ஸ் கேக்கலையேப்பா!)
கொடியை ஏற்ற கோபுரத்தின் உச்சியிலே ரெண்டு பேர் போயிருக்காங்க. எட்டுமீட்டர் உயரக் கொடிக்கம்பம். அதுலே ஏறி நிக்க பலகை போல ஒரு அமைப்பு. அதுலே ஏறிநிற்கும் நபரின் கனத்தை அனுசரிச்சுப் பலகை இப்படியும் அப்படியுமா ஆடுது. இந்தக் கோபுரத்தின் உயரம் 170 அடி. அஞ்சடுக்கு மாளிகையா முழுக்கோவிலும் இருந்தாலும் கோபுரப்பகுதிமட்டும் இன்னும் ரெண்டடுக்கு மாடிகள் சேர்த்து ஏழும் அஞ்சுமாப் பரந்து, உயர்ந்து கிடக்கு. ஒவ்வொருமுறை பலகை ஆடும்போதும் 'குபுக் குபுக்'ன்னு நெஞ்சு அடைக்குது எனக்கு. என்ன ஒரு பாதுகாப்பு இல்லாத அமைப்பு!

இந்தக் கொடியின் நீளம் 52 கஜம். இதுக்கும் ஏதாவது கணக்கு இருக்குமே! இருக்கா? இருக்கு:-) யாதவர்கள் மொத்தம் 56 பிரிவுகளா இருந்தாங்களாம். இதுலே நாலு பிரிவு அரசர்கள். கிருஷ்ணன், பலராமன், ப்ரத்யும்னன், அநிருத்தன், இப்படி சதுர்வ்யூகம். இவுங்களுக்குட்பட்ட ஆட்சியில் (இந்த நால்வரைத்தவித்து) மீதி உள்ள 52 குழுக்களை நினைவுபடுத்த (ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு கஜம் என்ற கணக்கில்) 52 கஜம் நீளமுள்ள கொடியாம். கொடியின் அகலம் 6.5 மீட்டர். செவ்வகமா இல்லாம குறுக்குவெட்டிய முக்கோணம் போல ஒரு கொடி. என்ன அளவோ? கஜம், மீட்டருன்னு குழப்பிவச்சுருக்கு கோவில் பற்றிய விவரம் அடங்குன புத்தகத்தில்.
(ஏழேகால் கஜம் அகலம், 52 கஜம் நீளம்ன்னு வச்சுக்குங்க) கொடியை ஏத்திட்டால் அது 20 யோஜனை தூரத்துக்குத் தெரியுமாம்! (யாராவது ஒரு யோஜனை எவ்வளவு தூரமுன்னு யோசனை செய்யுங்கப்பா)

வெள்ளை, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, சிகப்பு, கருநீலம், ரோஜா வண்ணம், வண்ணங்களில் தனித்தனியா பல கொடிகள் வச்சுருக்காங்களாம். இது இல்லாம மஞ்சள், காப்பிநிறம் ஆரஞ்சுன்னு மூணு நிறங்களை அஞ்சு பட்டையாச் சேர்த்துவச்சும் ஒரு கொடி இருக்கு. நாம் கொடி ஏத்தறோமுன்னு வேண்டிக்கிட்டு அதுக்குண்டான காசை கோவிலில் இருக்கும் கூக்ளி அந்தணர்கள் சங்கத்தில் அடைச்சால் கொடி ஏற்றி நம்ம பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பாங்களாம். மொத்தக் கோவிலுமே இந்த கூக்ளி அந்தணர்கள் கைப்பிடியில் கிடக்கு. நிர்வாகம் முழுக்க இவுங்கதான். அந்தக் காலத்துலே இப்ப்டி நேர்ந்துக்கிட்டவங்க கொடி ஏற்றி முடிச்சதும் அந்த அந்தணர்கள் சமூகம் மொத்ததுக்கும் விருந்து வைக்கணுமாம். காலப்போக்கில் இது காசா மாறி இப்போ ஆளுக்கு 2 ரூ என்ற கணக்காம். அங்கே எத்தனை ஆயிரம் அந்தணர்கள் இருக்காங்கன்றது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

கோவில் சார்பில் ஒரு நாளைக்கு காலை, நண்பகல் மாலைன்னு மூணுமுறை கொடிகளை நிறம் மாற்றிமாற்றி ஏத்தறாங்க. இதுலே ஒன்னுதான் நாம் இங்கே பார்த்தது. இளமஞ்சள் கொடியை மாற்றி இப்போ வெண்ணிறமா இருக்கு. நடுவில் இருக்கும் சந்திர சூரியர்கள் வம்சாவழியைச் சொல்லுதாம்.

கொடியை ஏற்றி உச்சிக்குக் கொண்டுபோய் சுருளைப் பிரித்ததும் காற்றில் அது படபடத்து வீசிப் பறக்குது. கற்பூர ஆரத்தி காமிச்சுட்டு, கீழே குனிஞ்சு பார்த்து எல்லோரும் விலகி நில்லுங்கன்னு கூப்பாடு போட்டுட்டு, அங்கே இருந்து ஒரு தேங்காயைக் கீழே போட்டாங்க. 170 அடி பாய்ஞ்சு வந்த தேங்காய் கல்தரையைத் தொட்டதும் சுக்கு நூறாச்சு. மக்கள் பாய்ஞ்சுபோய் பிரசாதமுன்னு எடுத்தாங்க.

இந்த நிகழ்ச்சி முடிஞ்சதும் பெண்கள், மனமகிழ்ச்சியாக இருக்கோமுன்னு ஒருத்தரை ஒருத்தர் கைபிடிச்சுத் தட்டாமாலை சுத்துனாங்க. வயசு வித்தியாசம் ஒன்னும் இல்லை. எல்லோரும் மனத்தளவில் குழந்தைகளா மாறிப்போனாங்கன்னுதான் சொல்லணும்.

இத்தனையையும் கண் இமைக்காமல் பார்த்து என் கண்ணுலே தண்ணீர்!

வெளிநாட்டில் இருந்து வந்த குஜராத்திகள் குடும்பம் ஒன்னு கூட்டமா தலையில் ஒரு பெரிய மூங்கில் தட்டைச் சுமந்தபடி வந்தாங்க. அதுலே பூஜைக்கான பொருட்களும் கலசம் மாதிரி ஒன்னும் இருந்துச்சு. அந்தணர்களின் (வேத) கோஷம் முழங்க கோவிலை மூணு முறை சுற்றிவந்துக்கிட்டு இருந்தாங்க. பாட்டும் கூத்தும், கிருஷ்ணா, நாராயணா, ராதே ஷ்யாம்ன்னு கோலாகலமும், கோஷங்களுமா அந்தச் சூழலே ஒரு மார்க்கமாத்தான் இருக்கு!


ஆரத்திக்கு நேரம் இருக்கு. அதுவரை இன்னொரு சுத்துப் போய்ப் பார்க்கலாமுன்னு போனோம். எண்ணிப்பார்த்தால் சரியா 22 சந்நிதிகள் இருக்கு. இதைத்தான் காமிச்சு விளக்குவோமுன்னு அருணின் அண்ணாத்தைச் சொல்லிக்கிட்டு இருந்தாரோ என்னவோ!


திரும்பவும் சங்கரமடப் படிகளில் வந்து உக்கார்ந்தோம். கோவில் வளாகம் முழுசும் அங்கங்கே சின்ன துணியை விரிச்சு அதுலே கொஞ்சம் உதிரிப்பூவும், பஞ்சபாத்ர உத்தரணியுடன் ஜலமுமா உக்கார்ந்துக்கிட்டு இருக்காங்க ஆணும் பெண்ணுமா வயசானவர்கள் பலர். கொஞ்சம் காசைக் கொடுத்துட்டு தீர்த்தம் வாங்கி, பாவத்தைக் கழிச்சுறலாம். சின்னப் பசங்கள் யாத்ரீகர்களைச் சுற்றிச்சுற்றி வர்றாங்க.

"தட்சணை கொடு'"

"ஏன்?"

"நான் ப்ராமின்."

(ஆஹா.... அடிச்சக்கை. தமிழ்நாட்டுலே போய்ச் சொல்லிப்பாரு!)

"நானும் ப்ராமின் தான். எனக்குக் கொடேன். எவ்வளவு தூரத்தில் இருந்து யாத்திரை வந்துருக்கேன்"

விதவிதமான மக்கள், அடுக்கடுக்கான ப்ரார்த்தனைகள். கண்களில் கலந்து கட்டுன உணர்வுகளோடு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். இருட்டு மசமசன்னு சூழும் நேரம். தற்செயலா கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தால் வெள்ளைக்கொடியை இறக்கிட்டு வெவ்வேற மூணு நிறமுள்ளதை ஏற்றிக்கிட்டு இருக்காங்க.(பஞ்சபூதங்களுக்கானதாம்) ஒரு முறை இந்தக் கொடியைப் பார்த்தாலே இந்த ஜென்மத்தில் செய்தபாவம் அகன்று போயிருமாம். இன்னிக்கு இது மூணாவது! க்ருஷ்ணா க்ருஷ்ணா........

ஆரத்திக்கான மணியோசை கணகண கணகண....... எழுந்து சந்நிதிக்குப் போனால்.... மூச்சுமுட்டும்விதம் கூட்டம். அடிச்சுப்பிடிச்சு தேவகிக்கருகில் இடம் கிடைச்சது. திரைக்குப் பின்னே த்வார்க்கா நாத். கோபாலா, கோவிந்தா, மாதவா, ராதேஷ்யாம்ன்னு இறைவனை பலவிதமாக் கூவி விளிக்கும் கூட்டம். கொஞ்சம் கொஞ்சமா இந்தக் கூவல்கள் கதறல்களா மாறிக்கிட்டே வருது. எல்லோரும் ஏதோ......அந்நிய உலகில் புகுந்து போவதுபோல ட்ரான்ஸ் நிலைக்குப் போய்க்கிட்டு இருக்காங்க.

திரை திறந்ததும் கூட்டம் அப்படியே நெருக்கித் தள்ளுது. நமக்காகாதுன்னு சட்னு அதில் இருந்து நீந்தி வெளியே வந்தோம். அங்கேயே நின்னுருந்தாலும் ஏதும் தெரியாதுன்றது வேற விஷயம். ஒரு பத்து நிமிசத்தில் திரை போட்டுருவாங்களாம். ஆண்கள் தரிசனம் முடிந்து வெளிவருமிடத்தில் கொஞ்சம் இடைவெளி. கோபால் ஊடாகப் பாய்ஞ்சு பார்த்துட்டு வந்தார். சின்ன விளக்கால் ஆரத்தி எடுக்கறாங்களாம். ஷோடச உபசாரம் நடக்குதான்னு கேட்டேன். இல்லையாமே! (இவர் கவனிச்சு இருக்க மாட்டார்) நம்ம கோவிலில் நடக்கும் ஆரத்தியின் அழகே இங்கே இல்லைன்னார். போகட்டும். இவர், ஆரத்தி பார்த்த புண்ணியத்தில் பாதி எனக்காச்சு!

பரவசமும் ஏமாற்றமும் கலந்த நிலையில் அதான் இன்னும் ஒரு நாள் இருக்கே பார்த்துக்கலாமுன்னு வெளியில் வந்தேன். கோவிலுக்குள் பார்த்ததைப்போல பத்து மடங்குக் கூட்டம் அங்கே!

அங்கேயும் பண்டிட்களின் கூட்டம். பேண்டிட்ன்னுதான் சொல்லணும். கொள்ளையடிக்க ரெடியா இருக்காங்க.. கேமெரா செல்ஃபோனைக் கொடுத்துட்டு வான்னு சொல்லிக்கிட்டே, கிட்டே வந்து என்ன ஜாதின்னு ஆரம்பிச்சார் ஒருத்தர். ஜாதி விசாரம் எதுக்கு? சொல்லலைன்னா என்ன பண்ணுவேள்?
அச்சச்சோ.... அப்படி இல்லைம்மா. அந்தந்த சாதிக்கேற்றமாதிரி விளக்கம் சொல்லி தரிசனம் பண்ணி வைக்க இங்கே நாங்க இருக்கோம்.

திரிசமனா இருக்கே! தரிசனம் ஆச்சுன்னு சொல்லி நடையை கட்டினேன்.

ஏண்டா யாதவ க்ருஷ்ணா.... இப்படி எல்லோரையும் வளர்த்து வச்சுருக்கியே..உன்னாலும் ஜாதியை அழிக்க முடியலையா? இந்தச் சாதிச் சனியன் தொலைஞ்சால்...... கொடி ஏத்தி வைக்கிறேன்னு சொல்லி வச்சேன்.


பயணம் தொடரும்.........:-)

Tuesday, January 26, 2010

அம்பானியின் ஆட்சியிலே......... (குஜராத் பயணத்தொடர் 8)

அந்தக் காலத்தில் **** அரசரின் ஆட்சி பொற்காலம் என்று கூறப்படுவது ஏன்?

**** அரசர் சாலைகள் அமைத்தார். குளம் வெட்டினார். சத்திரங்கள் கட்டினார்.......

இந்தக் காலத்திலும் இதேதான். தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட இடத்தில் (மட்டும்) சாலைகள் அமைத்தார், ஷாப்பிங் மால்கள் கட்டினார். தொழிற்சாலைகளைப் பெருக்கி சிலபல மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கினார்.

அழகான சாலையின் ரெண்டு பக்கங்களிலுமே அழகு ஆட்சி செய்யுது. ஒரு பக்கம் தொழிற்சாலையின் தோரணவாயில். நேரா எதிர்ப்புறம் ரிலையன்ஸ் மார்ட். பெரிய ஷாப்பிங் ஏரியா, இங்கே இந்த அத்துவானக் காட்டிலே!

முப்பது என்றது ரொம்ப ஆகிவந்த எண் போல இருக்கு. வெறும் முப்பதாயிரம் பேர் வேலை செய்யறாங்களாம். குடியிருப்பெல்லாம் கட்டிக்கொடுத்தால் ஆச்சா? அவுங்களுக்கு Bபூவா? அரிசிபருப்பு உப்புப் புளியெல்லாம் வாங்க ரெண்டு மணிநேரம் பயணம் செஞ்சு பக்கத்தூருக்குப் போகமுடியுமா? கட்டு, ஒரு ஷாப்பிங் மால்!

என்னைமட்டும் கண்ணைக்கட்டி அங்கே கொண்டுபோய் இறக்கிக் கண்கட்டை அவுத்துருந்தால் இது ப்ரிஸ்பேன்லே இருக்கும் ஷாப்பிங் மால்தான்னு துண்டை.... வேணாம்...துப்பட்டாவைப் போட்டுத் தாண்டி சத்தியமே செஞ்சுருப்பேன். ரெண்டே ரெண்டு விஷயம் மட்டுமே இது இந்தியான்னு சொல்லுச்சு.

அதுலே ஒன்னு, ஷாப்பிங் மாலுக்குள்ளே நுழையுமுன் ஹேண்ட் பேகைத் திறந்து காமிக்கணும்(-:. கெமெராவைக் கொடுத்துட்டுப் போகணுமாம். லிப்ஸ்டிக்கையும்.... ஏனாம்? உள்ளே இதெல்லாம் விக்கறாங்களாம். அதுனாலே ? குழப்படி ஆகிருமாம்! அதெல்லாம் ஆகாது. இதெல்லாம் வேற பிராண்டு. உள்ளூர் சரக்கு (இப்பெல்லாம் சீனச்சரக்கும் உள்ளூர் ஆகிப்போச்சுதே) இல்லைன்னு அடிச்சுவிட்டதும், வெளிவரும் வாசலில் நிற்கும் பெண்ணிடம் சொல்லிட்டுப் போங்கன்னு சொன்னாங்க அங்கே 'கடமை ஆற்றிய' பொண்ணு. (இங்கெல்லாம் ஹிந்தியை விட இங்கிலீஷு பேசறது பெட்டர்)
சும்மாச் சொல்லக்கூடாது. நியூஸிக்குத் திரும்பிப்போன மாதிரி இருந்துச்சு கடையின் செட் அப் ஒரே ஒரு பகுதியைத்தவிர. அது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் பகுதி. எனக்கோ....எவர்சில்வர் மேலே அப்படி ஒரு சொல்லவொண்ணாப் பிரியம். (இன்னும் இதுலே புடவை வரலையோன்னு கூடத் தேடுனதா ஆரம்பகாலப்பதிவுகள் ஒன்னில் குறிப்பிட்டு இருப்பேன்.) எட்டுப்பேருக்கான டின்னர் செட் விலை 399 தான்! ஸோ சீப் ஸோ சீப்ன்னு மனசு பரபரக்குது. அருவாளோடு கோபால் எதிரில் நிக்கிறார்! எல்லாம் அந்த ஆசையை முளையிலேயே வெட்டி எறிய(-:

விட்டுறமுடியுமா? அது இல்லேன்னா இதுவாவது வாங்கியே ஆகணுமுன்னு தாளிக்கும் கரண்டி ஒன்னு (ரூ 255) எடுத்துக் கையில் வச்சுக்கிட்டேன். (இதைமட்டும் இன்னிக்கு வாங்கலைன்னா , ஜென்மத்துக்கும் இனி தாளிப்பு இல்லை துளசியின் சமையலில். சூளுரை!)

"எதுக்கு இங்கே இருந்து 'சுமந்துக்கிட்டு'ப் போகணும்? சென்னையில் வாங்கிக்கோ"

சென்னையில் ரிலையன்ஸ் கடைகளில் வெறும் காய்கறி அரிசிபருப்புன்னுதான் இருக்கு(ன்னு நினைக்கிறேன்) இந்த மாதிரி மாலைக் கண்ணுலே காட்ட நீங்க ரெடியா?

(ஜெயிச்சேன்னு வையுங்க)

துணிமணிப் பகுதிக்குப் போனால்... குஜராத்தின் இந்தப் பகுதியின் (ஜாம்நகர் ஸ்பெஷல்ஸ்) விசேஷமான டை அண்ட் டை (tie & dye) துணிவகைகள் இருக்கு. 200 முதல் 2000 வரை உள்ள சல்வார்கமீஸ் செட்கள். சும்மா ஒரு நினைவுக்குன்னு 400 ரூ.வில் ஒன்னு வாங்கினேன். இதுக்குள்ளே இவர் மற்ற ரெடிமேடு பகுதிக்குள்ளே போய் ஒரு சால்வார் & துப்பட்டா செட்ன்னு ஒன்னு எடுத்துக்கிட்டு வர்றார். இதுக்கு கமீஸ் கிடையாது. நம்மிடம் இருப்பதில் காண்ட்ராஸ்ட்டா ஒன்னு எடுத்துப் போட்டுக்கலாம். என்ன திடீன்னு இப்படியெல்லாம் கொண்டுவந்து நீட்டுறாரேன்னு பார்த்தால் சுயநலம்தான். ஏற்கெனவே துப்பட்டா தேடிக்கிட்டு இருக்கேன்னு சொல்லி ஷாப்பிங் செஞ்சுக்கிட்டு இருந்தேன் பாருங்க. அந்தத் தேடலின் நிறம். அச்சச்சோ...... இனி நோ ஷாப்பிங்? வடை போச்சே..... ஆனாலும்.......... 'இந்தக் கலர் அந்தக் கலர் இல்லைன்னு தோணுது. எதுக்கும் இருக்கட்டும்'னேன்.
(கடைசியில் சென்னை திரும்பிவந்தபிறகு பார்த்தால்..... தேடுன அதே மூலிகைதான்)

பயணத்துக்கு இருக்கட்டுமுன்னு கொஞ்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும் மூணு மாம்பழ ஜூஸ் பாட்டில்களும் வாங்கிக்கிட்டோம், இது எவ்வளோ பயனா இருக்கப்போகுதுன்னு அப்போ உணராமலேயே! தனியா ஒரு பேக்கரி, இந்திய இனிப்புவகைகள் பகுதின்னு என்னென்னவோ இருக்கு. அப்போ கவனிச்சது இட்லி தோசை மாவும் விற்பனைக்கு இருக்கு. நாப்பது ரூ. கூடவே தேங்காய்ச் சட்டினிப் பாக்கெட் 50 ரூ. தமிழ்க்காரனைப் பிடிக்குதோ இல்லையோ இட்டிலிதோசையை இந்த வடக்கர்களுக்கு ரொம்பவே பிடிச்சுப்போயிருக்கு!

மாலின் ரெஸ்ட் ரூமைத் தேடிப்போனால்..... அப்பழுக்கு இல்லாம நவீனவடிவில் அமைச்சுப் படுசுத்தமா இருக்கு. இது கட்டாயம் இந்தியாவாக இருக்கச் சான்ஸே இல்லை! என் கையைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்ததும்தான் நம்ப வேண்டியதாப் போச்சு.
அடுத்தவாசலில் நுழைஞ்சால் ஃபுட் கோர்ட். பளபளன்னு ஜொலிக்குது. டிஸ்னி லேண்டில் நுழைஞ்சுட்டேனா என்ன? கூட்டமே இல்லை! பகல் ஒன்னே முக்கால் ஆகப்போகுதே..இங்கேயே எதாவது சாப்பிட்டுக்கலாமுன்னு ஒரு எண்ணம்.
அஞ்சாறு கடைகள் இருக்குன்னாலும் கண்ணில் பளிச்சுன்னு பட்டது தோஸா கிங்டம். அரைமனசோட தோசைக்கு ஆர்டர் கொடுத்தோம். எப்படி இருக்குமோ என்னவோ? பப்பன் தனக்கு ஒரு ஃப்ரைட் ரைஸ் வாங்கிக்கிட்டார். கண்முன்னாலேயே செஞ்சு கொடுத்தாங்க. கொஞ்சம்கூட எதிர்பாராதவிதமா பேப்பர் ரோஸ்ட், உருளை மசாலா, சாம்பார் & சட்னியுடன் அட்டகாசமா வந்துச்சு. விலையும் ரொம்பவே மலிவு! அங்கே ஹைபர்மார்கெட்டில் விக்காத நேத்து மாவை இன்னிக்கு இங்கே தோசையாப் போட்டால் ஆச்சு! சட்னிக்கும் அதே அதே:-)
குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகள் ஏராளம். பெரியவர்களுக்கு ஆர்க்கெட் கேம்ஸ்ன்னு கம்ப்யூட்டர் விளையாட்டு வகைகள் இப்படிக் கொட்டிக்கிடக்கு. மல்ட்டிப்ளெக்ஸ் உள்பட வளாகம் மூணு லட்சம் சதுர அடி பரப்பளவு. ஒரே கூரையின் கீழ் என்று ஹைபர்மார்கெட் ஏரியாவில் தங்க வைர நகைகள், தோசைமாவு உள்பட 35,000 வகைப் பொருட்கள். (ஏம்ப்பா...இந்த ஆளுக்கு எதையும் சின்னதாச் செய்யத் தெரியாதா!!!!!!)
கொஞ்சம் யோசனை பண்ணிப் பாரு. இது எப்பேர்ப்பட்ட சூப்பர் ஐடியா! இங்கே வாங்கும் சம்பளம் மொத்தத்தையும் இங்கேயே செலவளிக்க வைக்கும் திட்டம். மேலே மேலே வருமானம் பெருகாமல் என்ன செய்யும்? இந்தக் காட்டுலே சாமான்செட்டு வாங்க எங்கே போவாங்க இந்த முப்பதினாயிரம் குடும்பங்கள்? அதுக்காக விலையை ஏத்திக் கொள்ளை அடிக்கவும் இல்லை. வெளிமார்கெட் விலையைவிட இங்கே விலை கம்மியாத்தான் இருக்கு. வெளிநாடுகள் போல சேல் ஸ்பெஷல்ஸ் என்ற வகையில் தாற்காலிக விலை குறைப்பா நிறைய பொருட்கள் வச்சுருக்காங்க. கோபால் மேனேஜ்மெண்ட் ஐடியாக்களையும் மார்க்கெட்டிங் உத்திகளையும் என் மூளைக்கு அனுப்பப் படாத பாடு பட்டுக்கிட்டு இருக்கார்.

ஆமாமாம். ஆயிரம் ரூ இருக்கும் வாணலி ஒன்னு 500க்கு போட்டுருக்குன்றதைக் கவனிச்சேன். நம்ம வீக்னெஸைத்தான் இவர் கண்டுக்கவே இல்லை(-:

ராஜ்கோட், ஜூனாகட், ஜாம்நகர் பகுதிகளில் இருந்துக்கூட ஷாப்பிங் செஞ்சுக்கிட்டுப்போக மக்கள் வர்றாங்களாம். பிக்னிக், அவுட்டிங் வகையில் சேர்த்துருக்காங்க போல! போதாக்குறைக்கு அக்கம்பக்கம் இருக்கும் எஸ்ஸார் ரிஃபைனரி ஜனங்கள் வேற! கூடுதல் மக்கள் வரவர கூடுதல் விலை குறைப்பு. முதலாளிக்குக் கூடுதல் பணவரவு.
மனசுக்குள்ளே வியாபாரத் தந்திரத்தைப் பாராட்டிக்கிட்டே கிளம்பினோம். சரியா அவுங்க அரசின் எல்லையைக் கடந்ததும் மந்திரக்கோலைத் திருப்பி அசைச்சாப்போல இந்தியாவில் இருக்கோமுன்னு உணரவைக்கும் சாலையும் டீக்கடையும் தெருநாயும். கொஞ்சதூரப் பயணத்தில் வரிசைவரிசையா நிற்கும் மூன்று கரத்தான்கள். எருமைகள் கூட்டம்.
இதுக்குள்ளே நம்ம பப்பனுக்கு, நம் காரியங்கள் எல்லாம் அத்துபடி ஆகி இருக்கு. கெமெராவை 'ஆன்' செஞ்சவுடன் வரும் மெல்லிய க்ரிங்' சத்தத்துக்குக் காதை ட்யூன் பண்ணி வச்சுருந்தார். சத்தம் கேட்டதும் வண்டியின் ப்ரேக்கைக் கால் தானா அமுக்குது. ஒன்னே முக்கால் நேரப் பயணத்துலே பலமுறை இப்படி. 'இல்லை. நீங்க போய்க்கிட்டே இருங்க'ன்னு அப்பப்பச் சொல்லிக்கிட்டே இருந்தோம்.
கண்ணுக்கெட்டிய ஒரு இடத்துலே தூரமா, கோபுர உச்சியில் வெள்ளையும் மஞ்சளுமா கொடி பறக்குது!! க்ளிக் க்ளிக் க்ளிக். பதினைஞ்சு நிமிசத்தில் துவாரகையை அடைந்தோம்.

ஏற்கெனவே வலையில் பார்த்து ஒரு ஹொட்டேலை புக் பண்ணிவச்சுருந்தாலும். முதல்முறையா ரெண்டாவது கருத்தை பப்பனிடம் கேட்டால், அதைவிட நல்ல இடங்கள் இப்போ வந்துருச்சாம். அந்த நல்ல இடங்களில் ரெண்டு மூணைப் போய்ப் பார்த்து '**** நாற்றம் சகிக்க முடியாமல் பின் வாங்கினோம். இப்பெல்லாம் முன் ஜாக்கிரதையா 'அறையைக் காமிங்க. பார்த்துட்டுச் சொல்றோம்' என்பது நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது.

கடைசியில் ஹொட்டேல் ஸ்ரீ தர்ஷன். ராயல் ஸ்யூட் ஓக்கே ஆச்சு. படுக்கை அறை, ஒரு ஹால், பெரிய பால்கனியோடு அந்த ஊர் நிலைக்கு ரொம்பத்தரம்தான். கோவிலுக்கு அடுத்த தெரு. ஒரு மூணு நிமிச நடை. கோபுரதரிசனத்துக்குக் குறைவே இல்லை. அரைமணி ஓய்வுக்குப்பின் அரசனைப் பார்க்கப்போனோம்.
நம்ம பால்கனியில் இருந்து

பயணம் தொடரும்.........:-)

Sunday, January 24, 2010

நாம் படிச்ச பள்ளிக்கு நம்ம பெயரையே வச்சால் எப்படி இருக்கும்! (குஜராத் பயணத்தொடர் 7)

இன்னும் 222 கிலோ மீட்டர். அடுத்த இலக்கு நோக்கிப்போகிறோம். எப்படியும் இருட்டுக்கு முன்னே போய்ச் சேந்துரலாமுன்னு காரை விரட்டலாம். ஆனா மாடுகளை விரட்ட முடியுதா? வழியெல்லாம் கூட்டங்கூட்டமா ஹைவேயில் ஜாலியா நடக்குதுங்க. ரொம்ப உறுதியான தடிமனான அழகான கொம்புகள். கோணமாணல்,வளைவு நெளிவில்லாம எதோ மெஷீன்லே வார்த்தெடுத்து தலையில் மாட்டிவிட்டாப்போல அப்படி ஒரு பர்ஃபெக்ஷன்!


வேகாத வெயிலில் தார்ச்சாலையில் எதுக்கு இம்மாநடை? குடிக்கப்போகுதுகள். அந்த அத்துவானத்தில் தண்ணீர்த்தொட்டி கட்டி வச்சுருக்காங்க. அக்கம்பக்கம் பதினெட்டுப் பட்டிகளுக்கும் இப்படி ஒரு ஏற்பாடு.

'நாங்களும் குடிப்போம்லெ'ன்னு பின்னாலேயே வரும் ஒட்டகங்கள்.


நாலுபேர் குடிப்பதைப் பார்த்தால் நமக்கும் ஆசை வந்துருதே. கொஞ்ச தூரத்தில் வந்துச்சு 'ஸ்வாத் ரெஸ்ட்டாரண்ட்'. வாசலில் வரவேற்கும் கயிற்றுக் கட்டில்கள். என்ன இப்படி மின்னுதேன்னு பார்த்தால் சாமான்கள் பொதிஞ்சு வரும் பாலித்லீன் பைகளை கத்தரிச்சு இந்த கயிறுகளோடு சேர்த்து இணைச்சு முறுக்கிவச்சுருக்காங்க. அட! ப்ளாஸ்டிக் பைகளுக்கு இப்படியும் ஒரு பயனா!!! காத்துலே பறக்கவிடாமல் கட்டிப்போட்டு வச்சதுக்கு ஒரு 'சபாஷ்' சொல்லணும். உட்காரும்போது கயிறு உறுத்தாமல் கொஞ்சம் வழவழன்னு இருக்கு (வல்லி கவனிக்கவும்) நேர்த்தியா அழகுணர்ச்சியோடு ஒவ்வொன்னுக்கும் ஒரு டிசைனில் பின்னல் வேற!

ரெஸ்டாரண்டின் முன்பகுதிக் கொட்டகையில் சில மேஜைநாற்காலிகள் போட்டுவச்சுருக்காங்க. பச்சைக் கடலை உரிப்பு நடக்குது. இரவு சமையலுக்காம். நெடுஞ்சாலைப் பயணிகளுக்கான உணவு தயாரிப்பு. கடுப்பா தேநீர் கிடைச்சது!

ஒரு சின்ன குன்றை வெட்டி நடுவில் போகும் சாலை. மலைவாயில் விழப்போகும் சூரியன்.

கிடைச்ச வாகனக்களில் ஏறிப் பொழுது சாயுமுன் கூடடையும் கிராமத்து மக்கள்.

ஆஜி நதியின் பாலத்தை கடந்து சரித்திரசம்பவங்களில் இடம் பெற்ற ஊருக்குள்ளே நுழைஞ்சோம். கிழக்கிந்தியா கம்பெனி, சௌராஷ்ட்ராப் பகுதிக்கான கிளை அலுவலகம் வச்சுருந்த ஊர். இங்கே அரசருக்கு திவானா இருந்தவரின் நாலாவது மனைவியின் நான்கு குழந்தைகளில் ஒருத்தர் உங்களுக்கெல்லாம் (ஊர் உலகத்துக்கும்தான்) நல்லாத் தெரிஞ்சவர் படிச்ச பள்ளிக்கூடத்தைத் தாண்டிப்போனோம். இருட்டு. காலையில் படமெடுக்கணும்.

ஹொட்டேலைத் தேடிப்பிடிச்சு அறைக்குள் போனால் அதிர்ச்சி!!

எடைபார்க்கும் மெஷின் வச்சுருக்குப்பா(-:

மறுநாள் காலையில் ஜன்னலின் திரைச்சீலையை விலக்கிப்பார்த்தால்..... லட்சக்கணக்கான கூட்டம். நம்மை வரவேற்க இப்படி ஒரு ஏற்பாடான்னு மாய்ஞ்சு போயிட்டேன்!

எதிர்வரிசைக் கட்டிடத்தில் கிளி(கள்) கொஞ்சுது. ஜகன்னாத் மந்திர் ஒன்னு இங்கே இருக்காம். வேறென்ன இடம் இங்கே விசேஷமுன்னு வலையிலே தேடிட்டு காலைஉணவை முடிச்சுக்கிட்டு, அறையைக் காலிசெஞ்சுட்டுக் கிளம்பினோம். நல்ல வசதியான அறைதான். வரவேற்பில், ஜன்னலைத் திறந்தால் உள்ள ஆபத்தைச் சொன்னால், ஹொட்டேலின் அடுத்த பகுதியில் இதுக்கு மேட்சா ஒன்னு இருக்காம். தேனெடுக்காம விடமாட்டாங்க போல!

சின்னதா ஒரு சதுக்கத்தில் ஜெகன்னாத் மாஹாதேவ் மந்திர். அந்தச் சதுக்கமே கலகலப்பா இருக்கு. புத்தம்புதுக் காய்கறிகள் வியாபாரம். கோவில் முகப்புலே நுழைவாசல் மேலே நம்ம நடராசர்! உள்ளே நுழைஞ்சவுடன் வலது பக்கம் ரெண்டு மனைவிகளுடன் பிள்ளையார். அவரெதிரே பெரிய சைஸ் எலி. மூணுபேரைச் சுமக்கணுமே... ஃபேமிலி கார்! தலவிருட்சம். கடந்தால் பெரிய முற்றம்போல் வளாகம். இடதுபக்கம் பெரிய ஹால். வலதுபக்கம் வரிசையாச் சந்நிதிகள். கட்டிலைவிடக் கொஞ்சம் உயரமான ஒரு அமைப்பில் பனிக்குல்லாவுடன் பெரியவர் ஒருவர் சந்நிதிகளைப் பார்த்து உக்கார்ந்துருக்கார்.

பெயர் வைஷ்ணதாஸ். பரம்பரையாகக் கோவில் நிர்வாகம். இந்தப் பக்கமெல்லாம் கொஞ்சம்கூடத் தயக்கமில்லாம 'சாதி என்ன?' கேள்வி.
எங்க பக்கம் அதெல்லாம் சொல்றதில்லைன்னு சொன்னேன். என்ன மார்க்கமுன்னதுக்குமட்டும், வைஷ்ணவம், ராமானுஜர் வழி. படம் எடுக்க அனுமதி கிடைச்சது

சிவன், காயத்ரி, லக்ஷ்மிநாராயணன், ஸ்ரீராம் அண்ட் கோ, ஸ்ரீஅம்பா, ஹனுமான், ராதையும் க்ருஷ்ணருமா எல்லாச் சிலைகளுமே வெண்பளிங்கில் அருமை. அழகாகவும் அலங்கரிச்சு வச்சுருக்காங்க. ஹனுமன் மட்டும் சுயம்பு என்று தோணும்விதம் ஆரஞ்சடிச்சு இருந்தார்.


நம்ம டாக்கூர்நாத்ஜி மட்டும் கருப்புப் பளிங்கில் ஜொலிக்கிறார். "என்னடா...உன்னைப் பார்க்க அங்கே வந்துக்கிட்டு இருக்கேன், நீ என்னடான்னா இங்கே கண்ணை விரிச்சுவச்சுக் காத்துக்கிட்டு இருக்கியே!"

'பள்ளிக்கூடம்' நோக்கிப்போகும் வழியில் ராமக்ருஷ்ணா மடத்தின் கோவில். சென்னை மயிலையில் இருப்பதுபோலவே கட்டிட அமைப்பு அலங்காரம், தோட்டம் எல்லாம் அப்படிக்கு அப்படியே, 7 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வரக்கூடாது என்ற அறிவிப்பு உள்பட!

'த ஆல்ஃப்ரெட் ஹைஸ்கூல்' எடின்பரோ கோமகன் வருகை தந்ததை நினைவுகூறும் விதமாக, ஜுனா gகட் நவாப் கட்டிய பள்ளி. வருசம் 1875. அப்போதைய பம்பாய் கவர்னர் ஸர். ஃபிலிப் வுட்ஹௌஸ் திறந்து வச்சுருக்கார். இப்போ இந்தப் பள்ளியின் பெயரை மாற்றிட்டாங்க. அங்கே படிச்ச ஒரு பழைய மாணவரின் பெயரை வச்சுருக்காங்க. மோஹன்தாஸ் காந்தி வித்யாலய், ராஜ்கோட்.

நகரைவிட்டு வெளியேறும் சமயம் சட்னு கண்ணில் பட்டது ஒரு புதுமாதிரியான வண்டி. மோட்டார்சைக்கிளுக்குப் bபாடி கட்டுன்னது!!
என்னடான்னு ஒரே வியப்பு! இதுக்குப்பெயர் ச்சக்கடா. இங்கே ராஜ்கோட்டில் மட்டுமே இதைத் தயாரிச்சு விக்கறாங்க. என்ன ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு! நல்ல உயரமான இருக்கையில் 'ராஜா' மாதிரி உக்கார்ந்து ஓட்டிக்கிட்டு வர்றார் ஓட்டுனர்! நம்ம தையல் மெஷீன்கள் தயாரிப்புக்கும் பெயர்போனது இதே ராஜ்கோட்தானாம்!


இவர்களுக்குன்னு சங்கம் இருக்கோ என்னவோ! ஆனால் ஒன்னு, இவுங்கமட்டும் வேலை நிறுத்தம் செஞ்சாங்கன்னு வைய்யுங்க. சௌராஷ்ட்ரா முழுசும் அப்படியே ஸ்தம்பிச்சுப்போயிரும். அதிலும் கிராமப்புறங்களில் இவுங்க 'சேவை' ரொம்பவே மெச்சத்தக்கது. எதைத்தான் ஏத்திக்கிட்டுப்போவது என்ற கணக்கே இல்லை. வீட்டுச்சாமான், பால் கேன்கள், இரும்பு , வைக்கோல், தேங்காய், லொட்டு லொசுக்கு இப்படி சகலமும். இவ்வளவு ஏன்? கலியாணத்துக்கு மாப்பிள்ளை வீட்டார் ஊர்வலம்கூட இதுலே நடக்குது. மாப்பிள்ளையின் செல்வம், புகழ் அனுசரிச்சு எண்ணிக்கை, 21 ச்சக்கடாக்கள் பொண்ணுவீட்டுக்குப் போய் நின்னா, அலறி அடிச்சுக்கிட்டு வரவேற்பு கிடைக்கும்!

சக்கடா ஓட்டுனர் ஒருவரிடம் சின்னதா ஒரு பேட்டி. வண்டி விலை ஒன்னரை லட்சமாம். ரெண்டரை டன் கனம் ஏத்தலாமாம். எப்பேர்ப்பட்ட சாலையிலும் ஓட்டிக்கிட்டுப் போகலாம். கிராமப்புறங்களில் இதுதான் ஷேர் ஆட்டோ! டீஸல் எஞ்சின். லிட்டருக்கு 12 கி.மீ கொடுக்குதாம்.உடனே சினிமாவுக்கு ஒரு கதை மனசுக்குள் எழுதினேன். கதாநாயகன் ச்சக்கடா ஓட்டுனர். இனியமுகத்தோடு பாட்டுப்பாடிக்கிட்டே ஏழைஎளியவர்களுக்குச் சேவை செஞ்சுக்கிட்டு இருக்கார். தினமும் அவர் வண்டியில் ஏறிப்போகும் ஒரு கிராமத்துப்பெண்ணுடன் நட்பு ஆரம்பிச்சுக் காதல் மலருது. சக்கடாவிலேயே ஊர் ஒலகமெல்லாம் (?!) சுத்தி , கலர்க்கலாரான புதுமாதிரி உடைகளில் டூயட் பாடறாங்க. இன்னொரு ச்சக்கடா ஓட்டிக்கு இந்தப் பொண்ணுமேல் கண்ணு. (ஐய்யோ..... கதை என்னமா டெவலப் ஆகுது பாருங்க. இதை அப்புறமா ரூம் போட்டு இன்னும் நல்லா யோசிக்கலாம். இதுவரை ச்சக்கடா ஓட்டியா நடிச்சதே இல்லை. இதை ஓட்டக் கத்துக்கிட்டது எவ்வளோ அருமையான அனுபவம்ன்னு நாயகனும், திரை உலகில் இதுவரை வந்தே இராத புதுமைன்னு இயக்குனரும் மாய்ஞ்சு மாய்ஞ்சு பேட்டி தரலாம். க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் ஆயிரக்கணக்கானச் சக்கடாக்கள் அப்படியே வடிவேலு இல்லை விவேக் தலைமையில் வந்து சேருது. ஆஹா..பயங்கர ஸ்கோப் இருக்கே! படம் ஹிட்! நம்ம கேபிளுக்கு இயக்குனர் சான்ஸ். , நம்ம ஆடுமாடுக்கு பாட்டு எழுத சான்ஸ் கொடுக்கலாம். ஜிகுஜிகு ச்சக்கடா பளபள சக்கடான்னு அமர்க்களப்படுத்திருவார் )

ஜாம்நகரைக் கடந்து போகும் பைபாஸ் ரோடில் போய்க்கிட்டு இருக்கோம். .பைபாஸின் தொடக்கத்தைத் தவறவிட்டுட்டு ரெண்டு நிமிஷம் போயிட்டு, மறுபடி திரும்பி அங்கே வந்து சேர்ந்தோம். நாலைஞ்சு போலீஸ் நிக்குது. கையில் சின்னதா மாடு ஓட்டும் குச்சி. ஒரு நாலைஞ்சு கிலோமீட்டர் உள்ளே போனதும் கூட்டம், ஜனமும் போலீஸுமா நிக்குது. கடந்து போக முடியாதாம். வலதுபக்கம் கை காமிச்சு ஜாம்நகர் வழியாத்தான் போகணுமுன்னு சொல்றாங்க. ஏனாம்? மோடி வர்றார், ஒரு கிராமப்புற நிகழ்ச்சிக்கு! ஸோ? பாதுகாப்பு! நாடெங்கும் (அரசியல்) வியாதிகளின் போக்கு இப்படி! வேண்டாமுன்னு நினைச்ச ஊருக்குள்ளே போகும்படி ஆச்சு. அந்தப் பாதையில் தண்ணி, கேஸ் எல்லாத்துக்கும் பைப்லைன் போடும் வேலைவேற நடக்குது. எல்லா வண்டிகளையும் இப்படித்திசை திருப்பிவிட்டதால் ஊர்ந்துபோனோம். ஆமாம்..... ஆரம்பத்துலேயே பார்த்த குச்சிப்போலீஸார் சொல்லி இருக்கலாமுல்லே, பைபாஸில் இன்னிக்குப் போக முடியாதுன்னு? ச்சும்மா நின்னு வேடிக்கை பார்க்கும் ட்யூட்டி போல!


என் சிந்தனை(?) ஓட்டத்தைச் சட்னு தடை செய்யும் விதம் திடீர்ன்னு ஓசைகள் அடங்கி, வழுவழுப்பான சாலையில் அனக்கம் இல்லாம வண்டி போகுது. கண்ணை அகலத்திறந்து பார்த்தால் வெளிநாட்டில் இருக்கோமோன்னு ஒரு ஐயம். பூக்களும் செடிகளும் பசுமையும், பராமரிப்புமா..... இது என்ன இடம்? முப்பது கிலோமீட்டருக்கு இப்படி இருக்குமாம்! ஆஹா........ அம்பானியின் சாம்ராஜ்யத்தில் நுழைஞ்சுருக்கோம்.


பயணம் தொடரும்.........:-)

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்!


அதுக்காக இப்படியா?

Saturday, January 23, 2010

என் செல்ல செல்வங்கள் , புத்தக வடிவில்


Friday, January 22, 2010

சூரியனையேத் தூக்கிட்டுப் போயிட்டாங்கப்பா!!! (குஜராத் பயணத்தொடர் 6)

மேடம் இதர் தேக்கியே..... இஸ்கா நாம் சூர்ய kகுண்ட் ஹை. இஸ்மே தீனோ பக்வான் கா மூர்த்தி ஹை.... இதர் தேக்கியே மேடம்.... தலையை ஒரு பக்கமாச் சாய்ச்சுக்கிட்டே பூபேந்த்ரா விளக்கிக்கிட்டுப் போறார். அரசாங்கம் அங்கீகாரம் செஞ்சிருக்கும் வழிகாட்டி. முதலில் கைடு வேணுமான்னு கோபாலுக்கு கொஞ்சம் யோசனை. எல்லாம் ஒருவேளை எனக்கே(!) தெரிஞ்சுருந்தா!!!! அதெல்லாம் லேசுப்பட்ட காரியம் இல்லை.போன ஜென்மத்தில் நான் இங்கே வரலை. அதனால் விளக்கம் சொல்ல ஒரு ஆள் இருக்கட்டுமே. (பெரியமனசு செஞ்சேன்)

மொதேரா என்ற ஊருக்கு வந்துருக்கோம். சூரியனுக்கான கோவில் இருக்குமிடம். இப்போது தொல்பொருள் இலாகாவின் பொறுப்பில். நம்ம நாட்டில் இந்திய தொல்பொருள் சம்பந்தமான இடங்களைப் பார்க்க நுழைவுச்சீட்டு வெறும் அஞ்சே ரூபாய்கள்தான். இடம் குறிப்பிடாமல் பொதுவா ஒன்னு அச்சடிச்சு வச்சுருக்காங்க. ஆக்ராவுக்கு மட்டும் கொஞ்சம் கூடுதலாம்.

ஸோலாங்கி அரசர்கள் ஆட்சியில் ராஜா முதலாம் பீமதேவ் கட்டி இருக்கார். 1022 வது ஆண்டு. கிட்டத்தட்ட ஆயிரம் வருசப் புதுசு! இன்னும் சரியாச் சொன்னால் 988 வருசம். கட்டி முடிக்க 36 வருசம் ஆச்சாம்! அருமையாப் பராமரிச்ச தோட்டத்தில் புகுந்து நடக்கறோம். ஒரு அழகான நாய் தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஜாலியா ஒரு கூட்டமா ஓடிவிளையாடுது. எல்லாப் பசங்களும் நல்ல ஆரோக்கியமா இருக்குதுங்க.

சூர்யக் குளத்தில் அழகான படிக்கட்டுகள். இதுலே 'ஆண், பெண்'ன்னு இருக்காம். ஒரு படி நல்ல உயரமாகவும். ஒன்னு அதைவிடக் கொஞ்சம் உயரம் கம்மியாவும் இருக்கு. கம்மியா இருப்பது ஆண். உயரப்படி பெண். அதுலே தம்பதியர் நிற்கும்போது தலை உயரம் சமமா இருக்குமாம்! அட! ஆமாம்!! இந்தக் குளத்தை ராமர் குளமுன்னும் சொல்றாங்களாம். ராவணனுடன் போர் முடிஞ்சு அவுங்க அயோத்திக்குத் திரும்பும் சமயம், ராமனுக்கு ஏற்பட்ட ப்ரம்மஹத்தி தோஷத்தை நீக்க, வேள்வி நடத்த வேண்டி இருந்தது. குலகுருவான வசிஷ்டர், தர்ம ஆரண்யம் என்ற காட்டுப்பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கே போய் யாகம் செய்யச் சொன்னாராம். அதுதான் இப்போது கோவில் உள்ள இடமுன்னு ஒரு 'கதை' இருக்கு.
பச்சைப்பசேலுன்னு தண்ணி. பார்க்க இதுவும் ஒரு அழகுதான். முன்பொரு காலத்துலே அருமையான நீர் ஊற்றுக்கள் இதுக்கடியில் இருந்து சுத்தமான நீராக இருக்குமாம். இப்போ வெறும் மழைநீர் தேங்கிப் பாசிபிடிச்சுக் கிடக்கு. இந்தக் குளத்தின் அடுக்குப்படிகட்டுகளில் சின்னதும் பெருசுமா 108 சந்நிதிகள். அதுலே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரும் மூன்று பக்கங்களில் இருக்காங்க. அதிலும் விஷ்ணு, (நமக்கு வலப்பக்கம்) தெற்குப் பக்கம் தலைவச்சுப் படுத்துருக்கார். கைகால் அமுக்கும் ஸ்ரீதேவியைக் காணோம்! பெருமாளுக்கு ஒரு காலே இல்லை. ஆனா பக்கத்துலே ஒரு யானை இருக்கு:-)

புள்ளையார் தன் மனைவியை அணைச்சுப்பிடிச்சபடி உக்கார்ந்துருக்கார் ஒரு சந்நிதியில்.

அந்தக் காலத்துலே யாத்திரை செஞ்சு வரும் ஆட்கள் பத்துப்பதினைஞ்சுநாள் நடந்தே வருவாங்களாம். குளத்தில் மூழ்கிக் குளிச்சு அந்த 108 சந்நிதிகளையும் வணங்கி கோவிலுக்குள் போவாங்களாம். அதுவும் அந்தக் கடைசிப் படிக்கட்டில் இருந்து கோவில் முன்வாசலுக்கு உயரம் 52 அடிகளாம். மொத்தம் மூணுபகுதிகளா இருக்கு கோவில். குளம், சபை மண்டபம், சூரியன் கோவில்.(இது முன்மண்டபமும் கருவறையும்)

சபை மண்டபத்தில் ஏறிப்போகுமுன் வடக்கே ரெண்டு அலங்காரத்தூண்கள் இருக்கும் மேடைக்குக் கூட்டிப்போனார். இதே மாதிரி ரெண்டு தூண்கள் சபா மண்டபத்தின் எதிரிலும் (குளத்துக்கும் மண்டப வாசலுக்கும் இடையில்) இருக்கு. வடக்குப் பகுதி மேடைக்கு ஆறுபடிகள் ஏறி அந்த ரெண்டு தூண்களுக்கிடையில் கோவிலுக்குள் நுழையணுமாம். அப்போ இடது பக்கம் சபா மண்டபமும் நமக்கு வலது பக்கம் சூரியன் சந்நிதியுமா இருக்கும்.
முழுக்க முழுக்க மணல் கற்கள் கொண்டு கட்டியிருக்காங்க. சிமெண்டு இல்லாத அந்தக் காலக்கட்டங்களில் தனித்தனியாச் செஞ்ச பாகங்களை எப்படி இணைச்சுருப்பாங்கன்னு எப்பவும் எனக்குத் தோணும் சந்தேகத்துக்கு இங்கே விளக்கம் கிடைச்சது.

ஒவ்வொரு பகுதியா வேலைப்பாடுகளைச் செதுக்கிய பிறகு சேஷம் என்ற மரத்தின் துண்டுகளை வச்சு இணைச்சிருக்காங்க. dowel reinforced butt joint. இந்த முறை பல ஆயிரக்கணக்கான வருஷங்களா இணைப்பு வேலைகளில் பயன்பட்டு வருது. சில பெரிய தூண்களில் இதே முறையில் கற்களையே செதுக்கியும் வச்சுருக்காங்களாம்.மாதிரிக்கு ஒரு தூணையும் காட்டினார் பூபேந்த்ரா.

வெகுதூரத்துலே இருந்து யானைகள் மூலமா பெரிய பெரிய மணல் கற்களைக் கொண்டு வந்துக்காங்க. அந்த நன்றியை மறக்காமல் கோவிலில் 1200 யானைச்சிற்பங்களைச் செதுக்கி வச்சுருக்காங்களாம். எங்கே பார்த்தாலும் யானையோ யானைதான்.

அந்த சபா மண்டபத்தில் 52 அலங்காரத்தூண்கள். ஒவ்வொரு தூண்களிலும் கண்ணைவச்சா எடுக்க முடியலை. ஹைய்யோ.... என்ன ஒரு நுணுக்கமான வேலைப்பாடு! நீங்க எதைப்பார்த்தாலும் பார்க்காட்டாலும் இந்த சபா மண்டபத்துச் சிற்பங்களைக் கட்டாயம் பார்க்கத்தான் வேணும். அத்தனையும் அழகு. ராமாயண மகாபாரதக் காட்சிகள் ஏராளம். சீதையைக் கவர்ந்துகொண்டு புஷ்பக விமானத்தில் பறக்கும் ராவணன், வாலி சுக்ரீவன் சண்டை, ராவணனுடன் நடந்த போரில் அடிபட்டு மயக்கமான லக்ஷ்மணனை தன் மடிமீது தாங்கிக்கொண்டு அனுமன் கொண்டுவரப்போகும் சஞ்சீவி மலைக்காகக் காத்திருக்கும் ராமன், குற்றவாளிகளை யானையைக்கொண்டு தலையை இடறச்செய்யும் சிற்பம், உறங்கும் கும்பகர்ணனின் மீதேறி விளையாடும் வானர வீரர்கள், சிறுவர்களாக இருந்தபோது மரத்தில் ஏறி விளையாடிக்கொண்டிருக்கும் கௌரவச் சகோதரர்களை தன் அசாத்திய உடல்பலத்தால் மரத்தை உலுக்கிக் கீழே விழச்செய்த பீமனின் செய்கை (பாண்டவர்கள் மீது துரியோதனனின் வெறுப்புக்கு முதல்காரணமாகச் சொல்லப்படும் சம்பவம் இது), த்ரௌபதி சுயம்வரத்தில் அர்ச்சுனன் மீன்வடிவ யந்திரத்தை வீழ்த்தியது, பீமனும் துரியோதனனும் செய்த கதாயுதச்சண்டை, குழலூதும் கண்ணன், வெண்ணை கடைந்தெடுக்கும் பெண்கள், கோவர்தனகிரியைக் குடையாய் பிடித்த கண்ணன் இப்படி....ஏராளம்.

மண்டபத்தின் கிண்ணக்கூரைகளுக்குள்ளில்.... எப்படித்தான் செதுக்குனாங்களோ!!!! வளைவுகளும் தோரணங்களுமாக் கல்லில் ஒரு அட்டகாசம்!
அடுத்து கருவறை இருக்கும் முன்மண்டபத்துக்குள் போனால் பளிங்குத் தூண்களில் இன்னும் பலவித சிற்பங்கள். பாலியல் சிற்பங்களும் நிறைய இருக்கு. மேடம்...இதர் தேக்கியே oh zamaana mein lesbian pyaar bhi thaa. வழிகாட்டியின் குரல் பலமாக ஒலிச்சதும் அங்கே இருந்த சில இளைஞர்களின் கவனம் அந்தத் தூண்கள் மேல் திரும்புச்சு.

கிழக்குப் பார்த்தக் கருவறைக்குள்ளே எட்டிப்பார்த்தால் ஒன்னுமே இல்லை. ஒரு ஆழமான பள்ளம். ஏழு அடி உயர சூரியனின் தங்கச்சிலை இருந்ததாம். அதன் நெற்றியில் ஒரு பெரிய வைரக்கல்லைப் பதிச்சு வச்சுருந்தாங்களாம். வருசத்தின் ரெண்டு நாட்கள் காலையில் உதிக்கும் சூரியனின் முதல் கிரணங்கள் அந்த வைரக்கல்லில் பட்டு அந்த இடமே ஜொலிக்குமாம். அது 21 மார்ச், 22 டிசம்பர் தேதிகளில் (ஆஹா ஷார்ட்டஸ்ட் டே, லாங்கஸ்ட் டே சமயம்!!)

எல்லாம் சரி. சிலை இப்போ எங்கே? அந்த கிடுகிடுப்பள்ளம் ஏதுக்காக?

கஜனி முகமது வந்து கொள்ளையடித்த கோவில்களில் இதுவும் ஒன்னு. சிலைகளைப் பிரதிஷ்டை செய்யுமுன் ஏராளமான தங்கமும், நவரத்தினக்களும் சிலையின் பீடத்துக்கடியில் புதைக்கும் வழக்கம் இருந்ததை அறிந்து கொண்ட கஜனியின் ஆட்கள் எதையும் விட்டுவைக்காமல் கொண்டுபோய்விட்டார்கள். போகும்போதே தங்கள் வெற்றியைக் கொண்டாட அங்கங்கே பலசிலைகளை உடைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அதிலிருந்தும் தப்பிப் பிழைத்தவற்றைத்தான் நாம் இப்போ பார்க்கிறோம். காலம் செய்த கோலத்தால் இந்தச் சிற்பங்களின் மூக்குமுழியெல்லாம் கரைஞ்சுபோய் இருக்கு(-:

கருவறையை வலம்வர விஸ்தாரமான வழி இருக்கு. கருவறையைச் சுத்தி சூரியனின் 12 சிற்பங்கள் சுவரில் அங்கங்கே.. மாவிலை தோரணங்கள் போல சுத்திவர ஒரு செதுக்கல். இந்த 12 உருவங்கள் 12 மாசங்களைக் குறிக்குதாம். அப்போ அந்த 52 தூண்கள்? வேறென்ன... வாரம்தான்!!
கோவிலின் வெளிப்புறத்தில் மனிதவாழ்க்கையின் ஆரம்பம் முதல் கடைசிவரையுள்ள சிற்பங்கள். பிறப்பிலிருந்து இறப்பு வரை. இறந்தபின் வீட்டார் துக்கம் அனுஷ்டிக்க உக்காந்து அழுவதுகூட இருக்கு!
அங்கங்கே ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன், பிள்ளையார், அர்த்தநாரீஸ்வரர், கலைமகள் இப்படிச் செதுக்கித்தள்ளி இருக்காங்க. ஒரு இடத்தில் அண்ணாந்து பார்த்தப்போ உயிரோடு ரெண்டு ஆந்தைகள். "மேடம், நான் சொல்றேன். பகலில் ஆந்தைகளைப் பார்ப்பது கடினம். இப்படிப் பார்த்த முப்பதே நாளில் பணவரவு உண்டு.நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவங்க"
'அச்சச்சோ.... இது என்னவோ நெஜம்தான். இப்போ இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்குப் (வழிகாட்டிக்குப்) பணம் கிடைக்கப்போகுதே!"

அரைமணி நேரத்தில் சுற்றிப்பார்க்கலாம் என்று சொன்னவர் நம்ம ஆர்வத்தைப் பார்த்து ஒருமணி நேரம் விவரிச்சுக்கிட்டு இருந்தார். இந்தக் கோவிலில் பூஜை ஒன்னும் இல்லாததால் கோவிலை மூடும் வழக்கம் எல்லாம் இல்லை. அதான் கதவுன்னே ஒன்னும் இல்லையே! ஆனா ஒன்னு இந்த மாதிரி இடங்களுக்குப் போகும்போது , கொஞ்சம் யோசனை பண்ணிக்கிட்டு நிக்காமல் ஒரு வழிகாட்டியை ஏற்பாடு செஞ்சுக்கறது நல்லது. இல்லேன்னா இவ்வளவு விவரங்கள் கிடைச்சிருக்காது.

நம்ம மாமல்லபுரத்தில் நடக்கும் நாட்டிய விழாவைப்போல இங்கேயும் வருடம் ஒருமுறை நாட்டிய விழா நடக்குதாம்.

தொல்பொருள் இலாக்கா கோவிலை ஏற்றெடுத்த சமயம் அங்கங்கே உடைஞ்சு விழுந்திருந்த பாகங்களையெல்லாம் சேகரிச்சு ஒரு மரத்தடியில் வச்சுருக்காங்க. ம்யூஸியம் கட்டப்போறாங்களாம். அப்போ இவையெல்லாம் அங்கே காட்சிக்கு வைக்கப்படுமாம்.

நாங்க வெளிவந்த சமயம் ஒரு பேருந்து நிறையச் சுற்றுலாப் பயணிகள் வந்து இறங்குனாங்க. பக்கத்துக் கட்டிடத்தில் சுற்றுலாத்துறையினர் இயக்கும் ஒரு உணவு விடுதி இருக்கு. எல்லோரும் அங்கே படையெடுத்ததால் நாங்க வேற இடத்துலே சாப்பிடலாமுன்னு 'எஸ்'ஆகிட்டோம். ஒரு அரைமணி நேரப்பயணத்தில் இன்னொரு இடத்தில் டைனிங் ஹால் ஒன்னு இருக்காம். அங்கே போனோம். இடம் சுத்தமா இருக்கான்னு பார்த்துக்கிட்டு டோக்கன் வாங்கினோம். வெறும் 22 ரூபாய்கள்தான். சாப்பாடு பரவாயில்லை.

கொஞ்சம் படங்களை இங்கே ஆல்பத்தில் போட்டுருக்கேன்.


பயணம் தொடரும்.........:-)