Thursday, October 16, 2014

தீபஒளி என்னும் தீபாவளித் திருநாள்!

பதிவுலக நண்பர்கள்  அனைவருக்கும்  தீபாவளித் திருநாளுக்கான  இனிய வாழ்த்து(க்)கள்.


பட்டாசு   வெடிக்கும் நண்பர்களும்,  பலகாரம் செய்ய எண்ணெய்ச் சட்டி அருகில்  இருக்கும்  நண்பர்களும் கவனமாக இருங்கள்.


பயணம் வாய்த்துள்ளது.  பள்ளிக்கூடத்துக்கு   ஒரு மண்டல காலம்  விடுமுறை:-)


என்றும் அன்புடன்,
துளசி.


Monday, October 13, 2014

கள்ளி மலருக்குக் கொண்டாட்டம்.....

இது கள்ளி பூக்கும் காலம்! நல்ல வெய்யில் இல்லை என்றால் கள்ளி பூக்கவே பூக்காது. ஆனால் நம்ம வீட்டில் பூத்துருக்கு. அப்படி என்ன வெயில் காயுதான்னு பார்த்தால் ஊஹூம்..............  பின்னே?

க்ரீன் ஹௌஸ்(பச்சை வீடு) போட்டதன் பலன் இது!  வெளியே பதினெட்டு, பதினாலுன்னு இருந்தாலும் அந்த வூட்டுக்குள்ளே முப்பது, முப்பத்தியஞ்சு, சிலநாள் நாப்பதுன்னு    கனகனன்னு கிடக்கு.    நாலைஞ்சு வகைகள் பூத்து நிக்குது.

அதுலே  ஒன்னு பகலில் மலர்ந்து, வெயில் தாழ மூடிரும்.  இன்னொன்னு  ஜஸ்ட் ஒரே ஒருநாள் மட்டும் பூ த்து, அன்றைக்கு மாலையோடு கதை முடிஞ்சது.  இன்னொன்னு ஏராளமா மொட்டுகள் விட்டு  தினம் நாலைஞ்சா பூக்குது. சிலநாட்கள் அப்படியே இருந்துட்டு,  பின்னே ஒவ்வொன்னா  காய்ஞ்சு போறதுதான்.

ஒரே ஒரு  கள்ளியைத் தவிர மற்றவையெல்லாம் என்னமோ சொல்லி வச்சாப்லெ பிங்க் நிறப் பூக்களே!
பச்சை வீட்டுக்குள்  ரொம்ப சூடா இருக்கேன்னு சில பல செடிகளை எடுத்து வெளியில் வச்சுட்டு, இடம் பாழாப்போகுதேன்னு  ஒரு கட்டில் போட்டு வச்சோம்.  என்னமோ தனக்குத்தான் போட்டுருக்காங்கன்னு  ரஜ்ஜுவுக்கு நினைப்பு:-)

முந்தி இப்படித்தான் மொட்டு விட்டு மலரும் நாளுக்கு முன்  திடீர்னு  பனிமழை. மொட்டு அப்படியே  கருகிப்போச்சு:( இத்தனைக்கும் அது ஏப்ரல் மாசம்தான்.  எங்கூர் இலை உதிர்காலம்.


இந்த வருசம் என்னமோ   அக்டோபர் முதல் வாரம்வரை  ஃப்ராஸ்ட், குளிர் என்று இருந்தாலும்  கடந்த ஒரு வாரமா பரவாயில்லாம  இருக்கு. இந்தக் காலநிலை இன்னும் சில மாசங்களுக்காவது 'நிலைச்சு' நின்னால்  கள்ளிகளுக்குக் கொண்டாட்டம்!


சரியான கள்ளிச் செல்லம்மா:-)))))Friday, October 10, 2014

இறை மறுப்பாளி வீட்டின் இரு கடவுளர்கள்!

ஒருவர்  ஜூபிடர் (Jupiter )என்னும் ரோமானியக் கடவுள். மற்றவர்  ட்ஸூஸ் (Zeus) என்னும் க்ரேக்கக் கடவுள். ரெண்டு பேருடைய குணாம்சங்களும்  கிட்டத்தட்ட ஒன்னுதான். சுருக்கமாச் சொன்னால் நம்மூர் வருணன்.  ஆனால் கடவுளர்களுடைய கடவுள் என்றெல்லாம்  அந்தந்த நாட்டுக்கார் புகழ்த்திச் சொல்றாங்க.

இதுலே   முதல்முதலா  மகள் வீட்டுக்குள் வந்தவர் ஜூபிடர்தான். அவர் வந்தபோது நான் இந்தியாவில் இருக்கேன். அப்பவே அவருக்கு ஒரு வயசு.  உள்ளூர் எஸ் பி ஸி.ஏ வில் இருந்து  வாங்கி இருக்காள்.  வீட்டுக்குக் கொண்டு வந்தபிறகுதான் தகவலே  எனக்கு வருது. ஒரு பக்கம் மகிழ்ச்சின்னாலும் கூட , இது லைஃப்டைம் கமிட்மெண்ட் ஆச்சேன்னு சின்னதா உள்ளூற ஒரு பதற்றம்.


என்ன பெயர் வச்சேன்னு கேட்டப்ப, ' ஜூபிடர் ' என்றாள்.  ஏற்கெனவே ஷெல்ட்டரில் இந்தப்பெயரை வச்சுக் கூப்பிட்டுப்,  பழக்கம் ஆகி இருப்பதால் பெயரை மாத்தலைன்னும் சொன்னாள். ( இதே நானாக  இருந்தால்  பெயரை உடனே மாத்தி,  கேசவன் என்று வச்சுருப்பேன். செல்லமா கேஷவ்ன்னு கூப்பிடலாம்!) அப்பப்பப் படங்களும் அனுப்புவாள்.
 நான்  திரும்ப நியூஸி வந்து நேரில் பார்த்தப்ப  ரெண்டேகால் வயசு ஆகி இருந்துச்சு.  நல்ல வாளிப்பான  உடலோடு  கொஞ்சம் உயரமா இருக்காரேன்னு நினைச்சேன்.  செல்லமா 'ஜூபி'ன்னு நான் மட்டும் கூப்பிட்டுக்கிட்டு இருந்தேன்.


எப்பவாவதுதான் நம்மிடம் வரும் வழக்கம். நான் மகள் வீட்டுக்குப்போகும்போதெல்லாம்  அநேகமா தூரக்க இருந்து பார்ப்பதோடு சரி. அவள் ஊரில் இல்லாத சமயம் ஜூபிக்கு சாப்பாடு கொடுக்கப் போவோம். கொஞ்சம் யோசனையோடு நம்மை ஏறிட்டுப் பார்த்துட்டு  'பூனை வாசல் ' வழியா வெளியே போறதும் உண்டு.திடீர்னு ஜூபிக்கு  நாலு வயசாகும்போது  இன்னொரு பூனை வச்சுக்கலாமான்னு  யோசனை என்றதும்,  நம்ம 'ராஜலக்ஷ்மி' யை வேணுமுன்னால் கொண்டு போ என்றேன். 'அதெப்படி?  உனக்கு யாரும் வேணாமா?  உன்னால்   தனியா வாழமுடியாது' ன்னு  பதில் வருது! 'அதான் அப்பா இருக்காரேடா............'    'அவர் பொழுதன்னிக்கும் டூர்லேதானே?' கூடவே வந்த அடுத்த வரி.......  ஒரு ஆறுவாரக்குட்டியை வாங்கி வந்தாச்சு.

"அடராமா...... எங்கே இருந்து?"

  "ஷெல்டரில்  இருந்துதான். "

போகட்டும்........  ஒரு ஜீவனுக்கு  வாழ்வு கிடைச்சதே!

ஷெல்ட்டரில் வாங்கும்போது, கொஞ்சம் விலை கூடுதல் என்றாலும்  நல்ல ஆரோக்கியமானவைகள் கிடைக்கும். தேவையான 'அனைத்தையும்'  ஃபிக்ஸ் செஞ்சு, மைக்ரோசிப் கூட  வச்சுருவாங்க.  அதுலே நம்ம  ஜாதகம் அடங்கி இருக்கும்! 

"பெயர் வச்சுட்டாங்களா அவுங்க?"

 இல்லையாம். இவள்தான்  Zeus என்று நாமகரணம் செஞ்சாளாம்.

ஙே.........

"பெரியவன் ரோமானியக் கடவுள் என்றதால் இவனுக்கு க்ரேக்கக் கடவுளின் பெயர் பொருத்தமா இருக்குமுன்னு நினைச்சேன்."

"எப்படிக் கூப்புடணும்?  ஸீயஸ்ன்னா?"

"ஹாஹா..... (ட்)ஸூஸ்ன்னு  சொல்லணும்."

அட ராமா..... அவன் ஜூபின்னா இவன் ஜூஸா!

"ஜூஸ் இல்லைம்மா.  Zeus."

  (அதானே..... விஜயகாந்தா என்ன! )

முதல் மூணு வாரங்களுக்கு வீட்டுக்குள்ளேயே வச்சுப் பழக்கணும். மேலும்  பெரியவனும் சின்னவனுமா இணக்கமா இருக்காங்களான்னு கவனிச்சுக்கணும். எல்லாம் வீட்டில் முதல் குழந்தை  பிறந்து  ரெண்டு மூணு வருசமானதும்  ரெண்டாவது பிறந்துச்சுன்னா எப்படி  கவனிச்சுக்குவோமோ அதேபோலத்தான்.

மனுசக் குழந்தைகளுக்கான அறை அலங்கரிப்பதுபோல்  இந்தப் பூனைக்குழந்தைகளுக்கும் விளையாட்டுச் சாமான்களுடன் அறை ஒன்னு வேணும்தான்.

வீடு பழகுனதும் நம்ம வீட்டுக்கு ஒருநாள்  கூட்டிட்டு வான்னேன்.  வந்தாங்க ரெண்டுபேரும். (ஐ மீன் மகளும் சின்னதுமா)
நம்ம ரஜ்ஜூவுக்கு  குழந்தையைக் காமிச்சேன்.  பதறிக்கிட்டு ஓடினான் வெளியே:-)

அஞ்சு நிமிசம் கழிச்சு மெதுவா அடி எடுத்து உள்ளே வந்தவனைப் பார்த்துட்டு, சின்னது  ஓடிப்போய் அவன் முன்னே நிக்குது:-) முறைச்சுப் பார்த்துட்டு  அப்பா மடியில் தாவி உக்கார்ந்தது ரஜ்ஜூ. சின்னவனோ......  புது இடத்தில்  இருக்கும் சாமான்களை ஒன்னுவிடாமல்  மோந்துபார்த்து ஆராயறான். ட்ரெட்மில்லைக்கூட விட்டு வைக்கலை.எட்டு வாரத்துக்கு  நல்ல உயரமாவும் பெருசாவும் இருக்கு இந்த ஜூஸு. பச்சைக் கண்ணு வேற! ரொம்ப ஃப்ரெண்ட்லியான சுபாவம்.

ஜூபியும் (ட்)ஸூஸும் மெள்ள மெள்ள பழகிட்டாங்க.   இப்பெல்லாம் ஒன்னில்லாமல் ஒன்னில்லை என்ற அளவில்.மகள்  வேற வீடு மாறவேண்டிய  சமயம் ,   மத்த எல்லா வேலைகளையும் விட முன்னுரிமை அங்கே இந்தப் பசங்களுக்கான எல்லா ஏற்பாடுகள்தான்.  கேட் டோர்ஸ் ரெண்டு  வேண்டி இருந்துச்சு. பெருசுக்கு ஒன்னு, சின்னதுக்கு ஒன்னா?  ஹாஹா.... கராஜ்  வழியா வெளியே போக ஒன்னு,  கராஜில் இருந்து வீட்டுக்குள் போக ஒன்னுன்னு  இருவழி.


இடம் மாறுனதும் ரெண்டு வாரம் வீட்டுக்குள்ளேயே வச்சுப் பழக்கி அப்புறம்தான்  வெளியே விடணும்.  அந்த நாட்களில்  ரெண்டுபேரும் தங்களுக்கு வாகான இடத்தைத் தேடி வச்சுக்கிட்டானுங்க.  ஜூபி பயந்தாங்குள்ளி, கட்டிலுக்கு அடியில்.  ஜூஸு, வார்ட்ரோப்   தட்டு அடுக்குகளில் ஒரு  இடம்.

"என்னடா ஸூஸப்பா... எப்படி இருக்கே? "


இங்கே நம்மூரில்  Furry Friday  (Stuff.co.nz)  என்று  வாராவாரம் வாசகர்களின்   பூனைகள் படங்களை வெளியிடுவாங்க. சின்னவன் அதுலே பலமுறை வந்துருக்கான்.

ஒருமுறை கவர் ஃபோட்டோவில்!

அதிருக்கட்டும்.......  ராமா ,  க்ருஷ்ணான்னு  வாய் நிறையக் கூப்பிடும்போது புண்ணியம் சேருதுன்னு பெரியவங்க சொல்வாங்க.  எந்தக் கடவுளா இருந்தால் என்ன? கடவுள் ஈஸ் கடவுள்தானே!  ஜூபிடர், ட்ஸூஸுன்னு கூப்பிடும்போதும் மகளுக்குப் புண்ணியம் சேருமுன்னு சொல்லி வச்சேன்.

'கடவுள் இருக்கா, இல்லையான்னு  சரியாத் தெரியலை. அப்படியே இருந்தாலும்  'அது'  உனக்கு மட்டுமே  நல்லது செய்யுது' மகளின் அருள்வாக்கு!

ஆகக்கூடி ரெண்டு சாமிகள் இருக்கும் வீட்டுலே சாமி நம்பிக்கை இல்லாத ஒரு Atheist. இப்படிச் சொல்லிக்கிறது இப்போதைய இளைய தலைமுறைகளுக்கு  ஒரு ஃபேஷனாப் போய் இருக்கு.கடவுளே.....காப்பாத்து!..