Tuesday, March 31, 2009

விடுறதா இல்லை, கும்பகோணத்தை:-)......(2009 பயணம்: பகுதி 5)

நம்ம 'வீட்டு ஜன்னலுக்கு' எதிரில் தகப்பனுக்கு உபதேசம் செய்யும் மகனை, மலைமேலேயும் போய்ப் பார்க்கணும். இன்னிக்கு முதல் வேலையே இதுதான். ச்சலோ, ஸ்வாமி மலைக் கோயில். படிகள் ஏறிப்போனதும் கண்ணுக்கு எதிரா புள்ளையார் சந்நிதி. 'வா வா'ன்னு கூப்புட்டதும் கோபால் அங்கே போய் நின்னார். தீபாராதனை. தட்டுலே 'சில்லரை' போடச் சட்டைப் பையிலேக் கைவிட்டதும், புள்ளையார் தன்னோடக் குசும்பைக் காமிச்சுட்டார். கையோட வந்துச்சு அஞ்சு மடங்கு 'சில்லரை' நோட்டு. இடது பக்கம் இருக்கும் உள்ளே இருக்கும் முருகன் சிரிச்சுக்கிட்டேப் பார்த்துக்கிட்டு நிக்கிறார். கோயிலின் வெளி மாடியில் அருமையான வண்ணச் சிலைகள். நாரதரும் அகத்தியரும், பிள்ளையாரும், நந்தியும் மயிலும்கூட இருக்காங்க. ஆனால் சீனில் நம்ம பார்வதி பாய் மட்டும் மிஸ்ஸிங்(-: மதிள் பூராவும் யானைகள்.
ராமர் கோயிலுக்குப் போயிருங்கன்னு சொன்னதும் கோபுரத்தை அடையாளமா வச்சு நம்ம வினோத் எங்களை இறக்கி விட்ட இடம் ஆதி கும்பேஸ்வரர் கோயில். திருவுளம் அப்படியோ? இங்கே யானையை நல்லாவே பராமரிப்போமுன்னு உறுதி சொல்லிக்கிட்டு ஒரு அறிவிப்புப் பலகை. (இப்படி ஒன்னும் இல்லாமலேயே கோபால் ஏறக்குறைய முப்பத்தியஞ்சு வருசமா சேவை செய்ஞ்சுக்கிட்டுத்தான் இருக்கார்,இல்லை?)

கும்பகோணத்துலே 'பீச்' இல்லாத குறையைக் கோயில்கள்தான் தீர்க்குது.
கும்பேஸ்வரர் வெளிப்பிரகாரத்தில் கடலை வகைகள். நந்திகளே, நீரே சாட்சி.

'ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்'னு பாடிக்கிட்டே ராம(ர்)சாமி கோயிலுக்குள் நுழைந்தேன். வயதான பட்டர், ராமலக்ஷ்மண சீதை திருமேனிகளைக் காமிச்சு விளக்கிக்கிட்டு இருந்தாலும் என் மனசென்னவோ வீணை வாசிக்கும் ஹனுமானைப் பார்க்கப் பரபரத்துக்கிட்டே இருந்துச்சு. இரா.முவின் பத்திகளில் படிச்சேனே...... மலர்வனம் லக்ஷ்மியும் மடலில் நினைவுபடுத்திட்டுப் போயிருந்தாங்களே......உள்பிரகாரத்தை ரெண்டு முறை வலம்வந்தேன். கண்ணில் அனுமனைக் காணோம்....
"இன்னும் எத்தனை முறை சுத்தறதா இருக்கே? காணோம் காணோமுன்னா ..... யாராவது எடுத்து ஒளிச்சுவச்சுட்டாங்களா என்ன? பேசாம யாரையாவது கேளேன்" ( 'பேசாம' எப்படிக் 'கேக்கறதாம்'?)

யாருமே கண்ணுலே படலையே.....'பேசாம ' அந்தப் பட்டரையே 'கேக்கலாமு'ன்னு மூலவர் சந்நிதிக்குள் பாய்ஞ்சேன். பாவம் ரொம்பவே வயசானவர். கண்ணும் மங்கலா இருக்கு போல. ரெண்டு நிமிசத்துக்கு முன் என்னைக் 'கண்ட' பாவம் அடியோடு இல்லை. ஆள் நடமாட்டம் பார்த்ததும் 'டகால்'னு எண்ணெய் தீபத்தின் பிடியைப் பிடிச்சுத் தூக்கியபடி ஸ்ரீ ராமர், லக்ஷ்மணன், சீதாப் பிராட்டின்னு டேப் ரிக்காடர்போல ஆட்டோமாடிக்காச் சொல்ல ஆரம்பிச்சுட்டார். வீணை வாசிக்கும் ஹனுமார் எங்கே இருக்கார்ன்னு தவிப்போட கேட்டேன். அதே தீபத்தால் இங்கேன்னு வலதுபக்கம் கையைக் காமிச்சார். அட! கர்ப்பகிரகத்துக்குள்ளேயே ஓசைப்படாம உக்கார்ந்துருக்கார், காலை மடிச்சு அரைமண்டி போட்டவிதமா. வெயிஸ்ட் கோட்டா போட்டுருக்கார்? தங்க(???)க்கவசம் போல இருக்கே!!!!
சைடு போஸ் மட்டும்தான் தெரியுது. ராமனுக்கு மட்டுமே முகம் காட்டும்விதமா.......... நான் ஒருத்தி...முதலில் இங்கே சந்நிதிக்கு வந்தப்பயே கண்ணைச் சுழற்றி இருந்தால்..... பட்டுருப்பார். நான்தான் ஒரு மனசா, ஒரு முகமா ராமன் மேல் கண்ணு நட்டுவச்சுட்டேனே...

பிரகாரம் முழுசும் ஸீன் பை ஸீனா ராமாயணம்தான். அழகானச் சித்திரங்கள். சுவர்களில் காமிக்ஸ் புத்தகம். கும்பகர்ணனை எழுப்பும் யானைகள். ஹைய்யோ..........
இப்படிச் செடி முளைச்சுக் கிடந்தா கோயிலின் கதி?
தலைகளற்றக் குதிரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அடுத்த திருவிழாவரை ஓய்வு! தலைமட்டுமே புல்மேயப் போயாச்சு!
வெளியே வந்ததும், கோவிலையொட்டியே அரிசிக்கடை ஒன்னு. சதுரமான ஆளுயர ஸ்டீல் ட்ரம்களில் வகைவகையா அரிசி. (இங்கே நியூஸியில் அரிசித் தட்டுப்பாடு. இந்திய அரசு ஏற்றுமதியைத் தடை செஞ்சுருக்காம். தாய்லாந்து அரிசியைத்தான் தின்னாறது பலவருசங்களா. இதுவாவது கிடைக்குதேன்னு இருக்கும்போது 'வகை'க்கு எங்கே போவோம்?) ச்சின்னச் சின்ன அரிசிகள்.(ஐயோ....எவ்வளோ நாளாச்சு இப்படிப்பார்த்து. எனக்குக் கிடைப்பதெல்லாம் எமலோகத்து அரிசிதான். அங்கேதான் பெரிய பெரிய அரிசிச்சோறு போடுவாங்களாம் போன உடனே) இட்லி அரிசின்னு ரெண்டுவகை தடிமனா இருக்கு. எந்த அரிசிம்மா வேணும்னு கேட்டக் கடைக்காரரிடம், ச்சும்மாப் பார்க்கணும். வாங்கலைன்னேன். சட்னு அவர் முகத்தில் ஒரு பரிதாபம். பாருங்க நல்லாப் பார்த்துக்குங்கன்னார். சாப்பாட்டு அரிசி 25 ரூபாய். இட்டிலி அரிசி விலை 80 ரூபாயாம். அட! எப்படிக் கட்டுப்படியாகும்? அதான் ஹோட்டல் இட்லி இந்த அழகில் இருக்கா?

சாரங்கா..... தோ...வந்துட்டேன். கோபுரத்திலேயே ஸ்ரீசார்ங்கா, ஸ்ரீசார்ங்கா ஸ்ரீசார்ங்கா எழுதிவச்சுருக்கு. சாரங்கபாணி கோயில்.
தேரின் மேல் ஸ்வாமி. மண்டபமே இப்படித்தான் அமைஞ்சுருக்கு. கடவுள் 'கிடக்கிறார்'. பனிரெண்டாம் நூற்றாண்டில் சோழர்கள் கட்டுனதாம். அவுங்களுக்குப் பெரியமனசு. எல்லாமே பிரமாண்டம்தான். மனசு நிறைவான தரிசனம். இது நூற்றியெட்டில் ஒன்னு!
தாயார் கோமளவல்லி. மாமி நினைவு வந்தது. 'கோமளா'ன்னு குண்டக்க மண்டக்கப் போடும் கையெழுத்து. கையோடு ஒப்பில்லாத அந்த உப்பிலியப்பனையும் சேவிச்சுட்டே போகலாமேன்னு போனோம்.
தென் திருப்பதி. ஸ்ரீநிவாசனாக இருக்கார். கழுத்தில் எப்போதும் ஒரு துளசிமாலை உண்டாம். திருப்பதிக்கு நேர்ந்துக்கிட்டுப் போகமுடியலைன்னா இங்கேயே செலுத்திறலாமாம். வசூல் ராஜா தான்!

திருவிண்ணகர். இதுவும் நூற்றியெட்டில் ஒன்னுதான். ஒப்புவமை இல்லாத ஒப்பிலியப்பன், உப்பிலியப்பனா மாறி அதுக்கும் ஒரு கதையை வச்சுருக்கார். மனைவியா வந்த இளம்பெண்ணுக்கு, சாப்பாட்டுக்குத் தேவையான உப்புப்போட்டுச் சமைக்கத் தெரியலை. குழந்தை அவள். மன்னிக்கணுமுன்னு பொண்ணின் தோப்பனார் கேட்டுண்டதுக்கு இணங்கி உப்பில்லாமச் சாப்பிடறாராம் எ(ன்)ம்பெருமாள். (இந்தக் கணக்கில் கோபாலும் ஒரு உப்பிலியப்பந்தான். டாக்குட்டர் சொன்னபடி உப்பைச் சேர்க்காமல் இருக்கார் துளசித்தாயார்).

(ஆமாம். இந்த உப்பு என்ற சமாச்சாரத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டாத் தேவலைன்னு இருக்கேன். எப்போ முதல் இது சமையலுக்கு வந்துச்சு? எப்படி மனுசன் இதைப் பயன்படுத்தத் தெரிஞ்சுக்கிட்டான்? எப்படி முதல்முதல் உப்பு கிடைச்சது? வெள்ளைக்காரன், சம்பளத்தின் ஒரு பகுதியா உப்பைக் கொடுத்தான்னா..... அவனுக்கு உப்போட 'மகிமை' எப்படித் தெரிஞ்சதுன்னு ஏகப்பட்ட சுவையான தகவல்கள் இருக்குமே...... ஆராயத்தான் வேணும். உப்பில்லாப் பதிவு குப்பையிலேன்னு புதுமொழி வந்துறப்போகுது!!!)

திருப்பாற்கடலைக் கடைஞ்சப்ப லக்ஷ்மியுடன் துளசி தேவியும் தோன்றினாளாம். ஆனால் லக்ஷ்மிக்கு விஷ்ணுவின் மார்பில் இடம் கிடைச்சது. துளசிக்கு இடமில்லை. 'இதுக்காக வருத்தப்படாமல் இந்த இடத்தில் போய் துளசிச் செடியா வளர்ந்துக்கோ. அர்ச்சனை என்ற பெயரிலும் மாலை என்ற பெயரிலும் உன்னை(யும்) மார்பில் தாங்கிப்பேன்'னு பெருமாள் சொன்னதை நம்பி இங்கே துளசி 'துளசி'யாக அவதரித்ததாக ஸ்தலபுராணம்..............(அவதாரமுன்னு சொன்னதும், இந்தப் பயணத்தில் பார்த்த ஒன்னு ஞாபகத்துக்கு வருது. 'அம்மா'வின் பிறந்தநாளுக்கு அடிப்பொடிகள் வச்ச ஒரு பேனரில் 'அஞ்சாமை அவதரித்த நாள்' னு எழுதி விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் நிற்கும் அளவில் அம்மாவின் படம்!)

கோயில் குளம் அட்டகாசமா நடுவில் சின்ன நீராழி மண்டபத்துடன் இருக்கு. பொதுவாக் கோயில் குளங்களில் விளக்கு வச்சபின்னே இரவுநேரத்தில் தீர்த்தாடனம் (இது வேறவகை)செய்யக்கூடாதுன்னு ஒரு விதி இருக்குல்லே. அது இங்கே மட்டும் கிடையாது. பகலோ இரவோ எப்பவேணுமுன்னாலும் நீராடலாம். இதுக்குத் தோதா, குளமும், கோயிலுக்கு வெளியே இருக்கு!

சொல்லமறந்துட்டேனே..... இந்தக் கோயிலின் ஸ்தலவிருட்சம் என்னன்னு தெரியுமா? வேற யார்? சாக்ஷாத் 'துளசி'தான்:-)

பகலுணவு நேரமாகிருச்சே.... டவுனில் போய்ச் சாப்பிடலாமுன்னு வண்டியை விரட்டுனப்ப... ஐய்யோ..... அய்யாவாடி. 'அம்மா'வால் பிரபலமடைஞ்ச ப்ரத்தியங்கரா தேவியின் கோயில். தெருவில் இருந்து பிரியும் சந்துலே, கொஞ்சம் உள்ள தள்ளி இருக்கு. நாங்கள் கோவிலில் நுழையவும், நடையைச் சாத்திக்கிட்டுப் பூஜாரி நடையைக் கட்டவும் சரியா இருந்துச்சு. இனி மாலை நாலு மணிக்குமேல்தானாம். யாகசாலையைப் பார்க்கணுமுன்னா பின்பக்கமாப் போய்ப் பாருங்கன்னார். கோவிலையொட்டி மூணுபுறமும் கம்பிச் சுவர்கள் போட்டுவச்சுருக்கும் பிரமாண்டமான ஹால். நடுவிலே ஹோமகுண்டம். இந்தக் கோயில் எட்டு மயான பூமிக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ளதாம். தேவி ரொம்பவே உக்கிரமா இருப்பாங்களாம்.

அமாவாசை சமயம் ரெண்டு கிலோமீட்டருக்கு 'க்யூ வரிசை' நிக்குமாம். முந்தி ஒரு காலத்துலே இங்கே ஈ, காக்கை இல்லாம வெறிச்சோடிக்கிடக்குமாம். அம்மா யாகம் செஞ்ச மறுநாள் திருவிழாபோலக் கூட்டம் கூடிருச்சாம். என்னமோ இருக்கு இந்தக் கோவிலில்....அம்மாவே வந்துருந்தாங்கன்னா........ மக்கள் முண்டியடிச்சுக்கிட்டுக் கூடி, இப்போ கோயில் நல்லா செழிப்பா 'ஜெஜெ'ன்னு இருக்கு:-)

( எத்தனையோ கோயில்கள் இப்பவும் ரொம்ப ஏழ்மை நிலையிலே பாழடைஞ்சுக்கிட்டு இருக்கே. அம்மா மனசில் இரக்கம் வச்சு அங்கெல்லாம் ஒருமுறை போயிட்டு வந்தாங்கன்னா..... நல்ல காலம் (கோயிலுக்குங்க) பொறக்காதா? அம்மாகிட்டே இந்த விண்ணப்பம் போடலாமுன்னு யோசனையா இருக்கேன்)

அம்மா, 'யாரையோ' அழிக்க இங்கே யாகம் செஞ்சாங்கன்னு கேள்வி. எனக்குப் புரியாத ஒன்னு என்னன்னா..... ஒருத்தரை ( அவர் பெயரை 'ஏ'ன்னு வச்சுக்கலாம்) அழிக்கணுமுன்னு சாமிகிட்டே போய்க் கேப்பாங்களா? எனக்கு நல்லவாழ்க்கையைக் கொடுன்னு கடவுள்கிட்டே கேட்டு மன்றாடுவது உலகில் உண்டு. ஆனால் ஒருத்தர் அழியணுமுன்னு சாமிகிட்டே கேக்கலாமா? அதே சாமியை அந்த 'ஏ' கும்பிட்டு இன்னொருத்தரை ( இவுங்களை 'பி'ன்னு வச்சுக்கலாமா?) அதாவது அந்த 'பி'யை அழிக்கணுமுன்னு யாகம் செஞ்சா சாமி யார் பேச்சைக் கேப்பாரு? நியாய அநியாயம் பார்த்தா? இல்லே ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் செர்வ்டு மாதிரியா? இல்லே இந்த ஏ & பி ரெண்டையும் போட்டுத் தள்ளுவாரா?

இதேபோலத்தான் நாங்க ஃபிஜியில் இருக்கும்போது இந்தியர்களுக்குள்ளே அதுவும் தென்னிந்தியர், குறிப்பாத் தமிழ்க்காரர்களிடம் இப்படி பரவலான ஒரு எண்ணம் இருந்துச்சு. (இப்ப அதெல்லாம் நியூஸி, ஆசின்னு பரவி இருக்கணும். ராணுவப்புரட்சிக்குப் பின் இவர்களில் பலரும் வேற நாடுகளுக்குப் போயிட்டாங்களே). செய்வினை வச்சுட்டாங்கன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. இதுலே நம்ம அக்காவேற 'ஆமாம்ம்மா.... பூஜாரி ஐயா வந்து நம்ம தோட்டத்துலே செடிகிட்டே தோண்டி ரெண்டு ஏலக்காய், கிராம்பு எடுத்தாரும்மா. மந்திரிச்சுப் புதைச்சுட்டாங்க யாரோ'ன்னு சொல்வாங்க. மசாலா அரைக்காம மந்திரிச்சு வச்சுட்டாங்களா? ஒரு குழம்புக்குள்ளது வீணாப்போச்சே:-))))

சாமிகிட்டேயோ இல்லை ஆசாமிகிட்டேயோ இப்படி ஒருத்தரை அழிக்கணுமுன்னு சொல்றதே அசிங்கமா இருக்காதா? மனசுலே அவ்வளவு ஆங்காரமும் அழுக்கும் இருந்தா சாமி நம்மையே கோச்சுக்காதா? என்னவோ போங்க.......

கோயிலில் வச்சுருந்த அறிவிப்பைப் பார்த்ததும் நான் நினைச்சது சரின்றமாதிரி இருந்துச்சு. மனித வாழ்க்கையை நிர்ணயம் செய்வது கடவுள் மட்டுமே. அதுக்கெதிரா யாரும் யாரையுமே ஒன்னும் செய்ய முடியாது.

தொடரும்......:-)

Monday, March 30, 2009

பிற்பகல் அஞ்சும் கூடவே ஒரு போனஸும் (2009 பயணம்: பகுதி 4)

மொட்டை வெயிலில்! இன்னும் ரெண்டரை மணி நேரத்தைப் போக்கணுமே. ரொம்ப மெதுவாவே அந்த வெறுஞ்சோத்தைத் தின்னாலும் முப்பது நிமிசத்துக்கு மேலே தாக்குப்பிடிக்க முடியலை(-: இடைப்பட்ட நேரத்துக்குப் பூம்புகார் போயிட்டுவரலாமுன்னு வினோத் சொல்படிக் கிளம்பியாச்சு. வேகாத வெய்யில்வேற மண்டையைப் பிளக்குது. அங்கே போய் இறங்குனா...... 'முந்தி இது ஆரம்பிச்சக் காலக்கட்டங்களில்' பார்த்த மாதிரி இல்லாமல் என்னவோ வித்தியாசமா இருந்துச்சு. (1972 வது வருசம் போயிருக்கேன்) அப்போ எல்லாம் பிரமாண்டமா இருந்ததா நினைப்பு. இப்ப என்னடான்னா.....

சுவரில் புடைப்புச் சிற்பங்களா பலகைபலகையாப் பதிச்சு வச்சுருக்காங்க. அதுக்குக் கீழே ஆங்கில விளக்கங்கள். கண்ணகி சிலையைத் தனியாக ஒரு இடத்திலும் மாதவியைத் தனியாக ஒரு இடத்திலும் அப்பப் பார்த்த நினைவு. இப்போ? ரெண்டு பொண்டாட்டியை நியாயப்படுத்தும் விதமா..... தோட்டத்தில் ரெண்டு சிலைகளும் ஒரே மட்டத்தில். நடுவில் ஒரு சிலம்பு. நாமும் இவர்களை ஒன்னாப் படமெடுக்க முடியாதபடி உள் முற்றவாசல் அடைச்சு வச்சுருக்காங்க. அதுலே இருந்த துளைகளின் வழியா தனித்தனிப் படமா எடுத்தார் கோபால்.(மாதவிக்குத் தலைக்கோல் பட்டம் கிடைச்சதாம்)
வெளியே படிகளில் நல்லா ஜில்லுன்னு காத்து வருதேன்னு கொஞ்ச நேரம் உக்கார்ந்துருந்தோம். (இதே மாதிரிதான் எல்லாக் கோயில்களிலும் கோபுரவாசலில் நல்லாக் காத்து வருது. வாசல் உயரம் கூடுதலா இருப்பதாலேன்னு நினைக்கிறேன்) நம்மைப்போலவே அங்கே இருந்த இரு இளைஞர்களிடம் ஊர் உளவாரம் பத்தித் தெரிஞ்சுக்கப் பேச்சுக் கொடுத்தால்..... அரசியல் வியாதிகளைக் கிழிகிழின்னு கிழிச்சாங்க. அரசாங்கத்துலே இருக்கும் லஞ்ச லாவண்யங்களைச் சொல்லிப் புலம்புனாங்க. ரோடு சீரமைக்க காண்ட்ராக்ட் எடுத்த கதையைச் சொல்லி அழுதாங்க. இவரோட ரோட் ரோலர் அங்கே வேலை செய்யுதாம். கூட இருக்கும் நண்பர் அதன் ஓட்டுனராம். ஒரு கட்சியும் சரி இல்லை. வேற வழியும் தெரியலை. இதுதான் பல இளைஞர்கள் மனசுலே இருக்கு.
பூம்புகார்லே இருக்கோமுன்னு வீட்டுக்குச் செல்பேசினால்...... அங்கே கடற்கரையில் மீன் வறுத்து விக்கறாங்கன்னு தகவல் வருது!! வம்பே வேணாம். ச்சும்மாக் கடற்கரையைப் பார்க்கலாமுன்னு போனால் சில கடைகள் இருந்துச்சு. சங்கு, சோழிகள் அதுலே செஞ்ச கைவினைப்பொருட்கள் இப்படி விற்பனை. அதுக்கு எதிர்ப்பக்கம் சில கைவண்டிகளில் மீன் வறுத்து வித்துக்கிட்டு இருக்காங்க. கிடைச்ச தகவல் மெய்:-)

மூணரை ஆனதும் கிளம்பினோம். நேராக் கீழப்பெரும்பள்ளம். கேதுவின் ஸ்தலம். ரெண்டு பஸ் நிறைய கர்னாடகாவில் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகள். கோவிலுக்கு வெளியே மண்டபத்தினருகில் அடுப்புப் பத்தவச்சு பெரிய பெரிய பாத்திரங்களில் சமையல் நடக்குது. சிலர் காய்கறிகள் வெட்டிச் சிறுமலையாக் குவிச்சுக்கிட்டு இருந்தாங்க. கோவிலுக்குப் பின்னாலே ஓடும் வாய்க்காலில் குளிச்சுத் துவைச்சுன்னு சிலர். கோவிலைச் சுற்றி இருக்கும் வீடுகளின் வேலியில் புடவைகளும் உள்ப்பாவாடைகளுமாக் காய்ஞ்சுக்கிட்டு இருக்கு! கோயில் குருக்களின் வீடு ( பெயர்ப்பலகை இருந்துச்சே) வசதியான முறையில். முன்பக்கம் ஓய்வெடுக்கும் மக்கள் கூட்டம்.

வேண்டுதல்களுக்கு முடிவே கிடையாதா? ஒவ்வொருத்தருக்கும் ஒரு வகையும், அதுக்கடையாளமாக இடுப்பு முழுசும் சரடு கட்டி நிற்கும் மரமும்
கோயில் திறந்ததும் முதல்ஆளாப்போய்க் கும்பிட்டுக்கிட்டு நேரா திருவெண்காடு.

திருவிழா முடிஞ்ச இடம் போல இருக்குன்னு உவமை சொல்வாங்க பாருங்க.அதேதான். முதல்நாள் உண்மைக்குமே திருவிழா நடந்து முடிஞ்சதாம். கோயில் வெளிப்பிரகாரம் முழுசும் பந்தலுக்கு நட்ட மூங்கில்களும் குப்பைகளுமா களேபரம். கோயில் உள்ளே போக முடியாதபடி பெருங்கதவு அடைபட்டு இருக்கு. திட்டிவாசல் கதவையும் திறக்க முடியலை. உள்ப்பக்கமா அதுக்குப் போட்ட தாழ்ப்பாள் எக்குத்தப்பா மாட்டிக்கிட்டு இருக்காம்.
'தாழ் திறவாய் மணிக்கதவே தாழ் திறவாய்.
மறை நாயகன் முகம் காணத் தாழ் திறவாய்
ஆலய மணிக்கதவே தாழ் திறவாய்'

ஏ.பி.நாகராஜன் புண்ணியம் கட்டிக்கிட்டார் மகாராஜன் குரலில்

மனசுக்குள் என்னையே நான் பாராட்டிக்கிட்டு முணுமுணுத்துக்கிட்டு இருந்தேன் பாட்டை. (சீனுக்கு ஏத்தது சட்னு நினைவுக்கு வந்துருச்சே)
அங்கிருந்த சப்பரம் ஒன்னை உருட்டிக்கிட்டுப்போய் அதுமேலே ஏறி மதில்வழியா கோயில் ஊழியர் ஒருத்தர் உள்ளே இறங்கிக் கதவைத் திறந்தார். இந்தக் கோயில் பற்றி வால்மீகி ராமாயணத்துலேயே குறிப்புகள் இருக்காம். சுமார் மூவாயிரம் ஆண்டுகள் ஆச்சு இதை கட்டின்னு சொல்ராங்க. அங்கிருந்த பெரிய குளத்தில் தெப்போற்சவம் முடிஞ்ச அடையாளமா ட்ரம் மிதவைகளைக் கழட்டி எடுத்துக்கிட்டு இருந்தாங்க,. கோலாகலமா இருந்துருக்கும்போல. மிச்ச எச்சங்களைப் பார்த்தே மனசு கணக்கு போட்டுருச்சு.

செல்லம்போல அட்டகாசமான நந்தி ஒன்னு. பளபளன்னு ஜொலிச்சுக்கிட்டுக் கம்பிக்கூண்டில் உக்கார்ந்துருக்கு. சாப்பாடு ரொம்ப பலமோ என்னவோ..... அருமையா நாக்கை நீட்டி மேலுதட்டைத் துழாவியடி ...அடடா நகையும் நட்டுமா என்ன ஒய்யாரம். பக்தர்களுடைய புலம்பல்களைக் கேட்டுக்கேட்டுக் காதுகூட விடைச்சு ,நிமிர்ந்துருக்கு:-) இது புதனுக்குரிய ஸ்தலம். ஆச்சு சாமி கும்பிட்டாச்சு.

அடிச்சுத் தள்ளிக்கிட்டு அடுத்த ஸ்டாப் வைத்தீஸ்வரன் கோயில், செவ்வாய் கிரகநாயகன். சட்ன்னு கிளம்பிக் கஞ்சனூர் சுக்கிரனையும் சேவிச்சுக்கிட்டுச் சூரியனார் கோயிலில் நுழைந்தோம். சூரியனுடைய சந்நிதி நடுநாயகமா இருக்க மற்ற எண்மர்களின் தனித்தனிச் சந்நிதிகள் அவர்கள் இயல்பாய்ப் பார்க்கும் திசைகள் பார்த்தபடியே அமைஞ்சுருந்துச்சு. குட்டிச் சந்நிதிகள் எல்லாத்துக்கும் ஒரு வகை வெள்ளிநிற பெயிண்ட் அடிச்சுவச்சுருந்தாங்க.
ஓட்டமா ஓடுனமாதிரி இன்னிக்கே எட்டு இடங்களுக்குப் போய்வந்துருக்கோம். காலையில் வந்ததும், திங்களூர் சந்திரனில் இருந்து ஆரம்பிக்கலாமுன்னு வினோத் சொன்னார்தான். ஆனா.... தஞ்சைக்குப் போகும் எண்ணம் இருந்ததால் (கார்க்கார ரஷ்யா மருத்துவரையும் சந்திக்கலாமுன்னுதான்) அப்போ பார்த்துக்கலாமுன்னு சொல்லிவச்சோம். ஒவ்வொரு கோவில் வாசலிலும் இறங்கும்போது முதலில் கோபுரத்தை ஒரு க்ளிக் செஞ்சுக்கணுமுன்னு மனசுக்குள்ளே போட்ட தீர்மானங்கள் எல்லாம் மாயமாய் மறைஞ்சுருச்சு. கோபுரவாசலைப் பார்த்ததும் கை (கெமெரா)பைக்குள் போகாமல், கால்கள் ஏதோ பசுவை நோக்கி ஓடும் கன்றுபோல கோவிலுக்குள் பாய்ஞ்சுருது. இறைவனின் திரு உளம் அதுவானால்........அதுவானால்........('சக்குபாய் நீயும் சாவுடி'ன்னு சமயசந்தர்ப்பம் இல்லாமல் சினிமா வசனம். நான் எங்கே உருப்படப்போறேன்)

எல்லாக் கோயில்களிலும் மூலவரைத் தரிசித்தாலும்..... என்னவோ அங்கெல்லாம் அவ்வளவா அலங்காரம், ஆரவாரம் இல்லாமல்தான் விரிச்சோன்னு இருக்கு. இருட்டுக் கர்ப்பகிரகத்துள் 'முணுக் முணுக்'குன்னு ஒரே ஒரு திரியின் முத்துச் சுடர் மட்டும் இருளோடு இருளாக லேசாத் தெரிய, சிவலிங்க வடிவில் உக்கார்ந்துருக்கார். (புதிய)ஆகம விதிகளின்படி 'ஓம் நமசிவாயா'ன்னு ஒலிக்கும் ஒலிப்பேழை இடைவிடாமல் அவருக்குத் துணையா இருக்கு. சிவலிங்கத்தில் ரசிச்சுப் பார்க்க ஒன்னுமில்லாததால் 'போனேன், கும்பிட்டேன்,வந்தேன்'தான்.

நவகிரகங்களின் சந்நிதிகள்தான் கோலாகலமா இருக்கு. ஒரு பதினைஞ்சு வருசமாத்தான் இப்படிக் கிரகக்கோளாறுன்னு மக்கள்ஸ் படையெடுத்து வந்துக்கிட்டு இருக்காங்களாம். இங்கேயுள்ள குருக்களுக்கும் கிரகநிலை ஓஹோன்னு இருக்கு. சில்லரை வேணுமுன்னு சொன்னப்பக் கோபால், 'இதோ வாங்கிக்கலா'முன்னு போய்க் கேட்ட இடம்? ஒரு குருக்களைத்தான். அவரும் ஆயிரம் ரூபாய்க்குச் சில்லரைகளா எடுத்துக் கொடுத்தார். இப்பெல்லாம் தட்டில் போடும் சில்லரையே 'பத்து ரூபாய் நோட்டு'களாம்.

'என்னம்மா இது எல்லாமே சிவன் கோயில்களாப் போயிருக்கோம்? உன் பெருமாளை இதுவரை பார்க்கலையே'ன்னு கோபால் திருவாய் மலர்ந்தருளினார். (ஆஹா.... பத்தவச்சுட்டேயே பரட்டை....)'நீங்க தான் எப்பப் பார்த்தாலும் 'முருகா முருகா'ன்றதால் உங்களுக்காகவே சிவன் கோயில்களாப் போயிருச்சு'ன்னேன்.

மறுநாள் எட்டுமணிக்கு வினோத்தை வரச்சொல்லிட்டு, நடந்துநடந்து வீங்கிப்போன காலுக்கு ஓய்வு கொடுத்தேன்.
தொடரும்:-)

Saturday, March 28, 2009

எங்களுக்கு ஆச்சு. உங்களுக்கு?
எல்லாத்துக்கும் முந்திக்கொள்ளும் வழக்கப்படி இந்த பூமி நேரத்துக்கும் முந்திக்கிட்டோம். மேலும் எங்களுக்கு இப்போ 'டே லைட் சேவிங்ஸ்' இருப்பதால் இன்னும் ஒரு மணி நேரம் முன்பே பூமி நேரத்தைக் கடைப்பிடிச்சு எங்க பங்குக்குப் புவியைக் காப்பாத்தியாச்சு.

நம்ம கோகிதான் இருட்டுலே என்னமோ ஏதோன்னு பயந்துக்கிட்டு அப்பா மடிமேல் ஏறிப் படுத்துக் குறட்டைவிட்டு அப்படி ஒரு தூக்கம்.

ஏதோ நம்மால் ஆனது...இல்லீங்களா??

எங்க கடமையை ஆத்தியாச்சு. நீங்களும் ஆத்துங்க.

Thursday, March 26, 2009

முற்பகல் மூன்று ......(2009 பயணம்: பகுதி 3)

முதல்லே போய் இறங்குன இடத்தில், எங்கே பார்த்தாலும் மஞ்சத் துண்டு!
கோவிலில் பராமரிப்பு வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. சாரங்கட்டின கோபுரத்துலே ஏறி வேலைபார்க்கும் பணியாளர்களும், கொட்டி வச்சுருக்கும் சரளைக்கல் குவியல்களின் மேல் ஒய்யாரமாய்ப் படுத்துத் தூங்கும் வெள்ளாடுகளுமா ஒரு பக்கம். தென்ன ஓலைகளுக்குள்ளே ஒளிஞ்சு கண்ணாமூச்சி காட்டும் குட்டிக்கோபுரங்கள். குருபகவான் அனுக்கிரகம் தேடி வந்த பக்தர்களின் கூட்டம் சந்நிதியில். அநேகமாக எல்லார் கைகளிலும் மஞ்சள் துணித் துண்டுகள். குருக்கள் அசராமல் எல்லாத்தையும் வாங்கிப் பூஜையில் வச்சுட்டு கற்பூர ஆரத்தி காமிச்சுக்கிட்டு இருக்கார். பரிகாரம் செஞ்சுக்கன்னு வந்தவங்க எல்லாரும் கம்பித் தடுப்புக்கு உட்பக்கம்.

நாங்கள் சாமி கும்பிட்டுட்டு, வெளிப்புறம் பிரகாரத்தைச் சுற்றிட்டு வெளியே போனோம். கோவில் குளம் ரெண்டு பகுதியாக இருக்கு. ராஜகோபுரம் பக்கம் இருக்கும் குளம் முழுக்க அழுக்கும் பாசியும் பாலித்லீன் பைகளுமா நிரம்பி வழியுது. ஆனாலும் அங்கங்கே அல்லிப்பூக்களும் கொஞ்சம் உண்டு. கிழக்கு கோபுரத்தைப் பார்த்து இருக்கும் குளத்தில் அவ்வளா அழுக்கு இல்லை. பூக்களும்(உண்மையானது) நிறைய.
இந்தப் பயணத்தில், கோயிலுக்குள்ளே தேங்காய்பழங்கள் எல்லாம் வாங்கிட்டுப் போகப்போறதில்லைன்னு முதல்லேயே முடிவு செஞ்சுக்கிட்டேன். சாமி பிரஸாதமுன்னு அவைகளை வெளியே போடவும் மனசாகலை, அதே சமயம் ஊரூராப் போகும்போது எங்கேன்னு தூக்கிட்டுப் போறது? அங்கங்கே கோயில் உண்டியலில் கொஞ்சம் காசு போட்டுக்கலாமுன்னு தீர்மானம் எடுத்துருந்தோம்.

முதல்முறையா இந்தப் பக்கங்களில் பயணம். எல்லாம் வினோத் கையில்ன்னு விட்டாச்சு. அடுத்த ஸ்டாப் திருநாகேஸ்வரம். ராகு பகவானுக்கு உள்ள ஸ்தலமாம். கோயிலுக்கு நுழையுமுன்னே வலப்பக்கமா ஒரு சுற்றுமதில் எல்லாம் கட்டுன பெரிய குளம். அப்பாடா..... அட்டகாசமா இருக்கு. ஒரு மூலையில் இருந்து படிகள் வழியாக இறங்கும் தண்ணீர் சலசலத்துப் பாய்ஞ்சுக்கிட்டு இருக்கு. ஏழெட்டுப்படிகள். பளிச்சுன்னு சுத்தமா இருப்பதைப் பார்ப்பதே பரவசம். குளத்தின் நடுப்பகுதிவரை யாரையும் போகவிடாமல் ஒரு கம்பித்தடுப்பு போட்டுருக்காங்க. ரொம்ப நல்லது.


கோவில் வாசலில் 55 வயசான அம்பிகா. குலுங்கும் மணி மாலையோடு! கோயிலின் உள்ளே நுழைஞ்சதும் ஒரு பெரிய படம் வச்சுருந்தாங்க. சாமிக்கு அபிஷேகம் செஞ்ச பால் 'பாம்பு தரையில் வளைஞ்சு வளைஞ்சு போகுமே' அதேபோல வழிஞ்சு ஓடுனதை. இது உண்மையாகவே அப்படி நடந்தப்ப எடுத்ததாம். ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும் பால் நீலநிறமா மாறுமுன்னும் ஒரு தகவல் இருந்துச்சு. அங்கே இருந்த டிக்கெட் கவுண்ட்டரில் இருந்தவர், ஒம்போதரை மணி அபிஷேகம் நடக்கப்போகுதுன்னார். இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு. சரி, கலந்துக்கலாமுன்னு டிக்கெட் வாங்கிட்டுப் போனோம். 65 ரூபாய் ஒரு ஆளுக்கு. இதில் பத்து ரூபாய் கோவில் பராமரிப்பு, அஞ்சு ரூபாய் அன்னதானத் திட்டத்துக்கு. நாம் எதுவும் வாங்கிட்டுப் போகவேண்டாம். அர்ச்சனைப்பொருட்கள் அதுலே அடக்கமுன்னு சொன்னாங்க. நாந்தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமப்போனேன்னு சொன்னேன்லெ. வருவதை அப்படியே எடுத்துக்கணும்னு தீர்மானிச்சதும் ஒரு காரணம். இதுக்கும் நூறு ரூபாய் ஸ்பெஷல் டிக்கெட் இருக்கு. நமக்கு இந்த அறுபத்தியஞ்சே யதேஷ்டம் இல்லீங்களா?

ராகு பகவான் சந்நிதிக்கு முன்னாலே ஒரு கம்பித்தடுப்பு. அதுக்கு இந்தப்பக்கம் கொஞ்சம்பேர் உக்கார்ந்துருந்தாங்க. ஒரு பத்துப்பதினைஞ்சு பேர். நாங்கள் பின்னாலே போய் கொஞ்சம் அரையடி உசரமா இருந்த இடத்துலே உக்கார்ந்தோம். முழங்கால், முதுகுன்னு வலிகள் வேற இருக்கே எனக்கு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் போல. கொஞ்சம் செல்வந்தர்கள் போல் இருந்த இருவரைக் கூட்டிவந்து எல்லாருக்கும் முன்னாலே அந்தக் கம்பித் தடுப்புக்கும் முன்னாலே உக்காரவச்சார் ஒருத்தர். நூறா இருக்கும். போகட்டும்.

அபிஷேகம் ஆரம்பிச்சது. தண்ணீர், பன்னீர் னு ஆரம்பிச்சுப் பால் வந்தவுடன், நீலமா மாறுதான்னு உத்துப் பார்த்துக்கிட்டு இருந்தேன். என் ஓட்டைக் கண்ணுக்கு ஒன்னும் தெரியலை. அதுக்குப்பிறகு சந்தனக்காப்பு போட்டுத் திரையை மூடிட்டு அஞ்சே நிமிசத்தில் திரையைத் திறந்தாங்க. ஜிலு ஜிலு அலங்காரமுடன் ஆயிரம்விளக்குன்னு நான் சொல்லும் அடுக்கு விளக்குகளோடு தீபாராதனை ஆச்சு. அஞ்சு தீபம், குட ஆரத்தி, ஒற்றை தீபம்ன்னு வகைவகையா ஆரத்திகள். அது முடிஞ்சு வெளியே வந்ததும் ரெண்டு குருக்கள் ஒரு மண்டபத்தில் நின்னு எங்களை வரிசையில் வரச் சொல்லி பூ மாலைகள்,(ஆண்களுக்கு அவுங்களே போட்டுவிட்டு, பெண்களுக்குக் கையில் கொடுத்தாங்க) உடைச்ச தேங்காய் 2 மூடி, பழங்கள், விபூதி, குங்குமப் பிரசாதங்கள் உள்ள பை ஒன்னும் கொடுத்தாங்க. இன்னொருத்தர் இள நீலமா இருந்த அபிஷேகப்பாலை ஒவ்வொருவருக்கும் கையில் ஊத்துனார்!!!!
அம்பிகாவுக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டோம். அவளுக்கும் சந்தோஷம். 'கை' நீட்டி உடனே வாங்கிக்கிட்டாள். செல்லமா ஒரு பார்வையும் பார்த்தாள்:-)

வெளியே ஆடு ஒன்னு ஃப்ரீ ரைடுக்கு நிக்குது:-)


இந்தத் தலத்தில்தான், இறைவனில் பாதி வேணுமுன்னு பார்வதி கடுமையா தவம் புரிஞ்சாங்களாம். எதுக்கு? எல்லாம் இந்த ப்ருங்கி முனிவரின் அட்டகாசத்தால். அவர் சரியான ஆணாதிக்கம் புடிச்சவர் போல. இறைவனும் இறைவியும் ஒன்னா உக்கார்ந்திருக்கும்போதும் இறைவனை மட்டுமே வணங்கணுமுன்னு வண்டு உருவம் எடுத்துச் சிவபெருமானைச் சுத்திப் பறந்து வந்து வணங்குனாராம். அம்மாவுக்குக் கோவம் வந்துருச்சு. ரெண்டு உடல் இல்லாம ஒரே உடலா இருந்தா என்ன செய்வீர்ன்னு அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டுனாங்களாம். இங்கே சண்பக மரத்தடியில் கடுந்தவம். பெண்கள் போராடித்தான் உரிமையை வாங்கிக்கணுமுன்னு அப்பவே எடுத்துக்காட்டி இருக்காங்க. இன்னமும் 33 சதமானம் இட ஒதுக்கீடு கனவாவே இருக்கு. இத்தனைக்கும் நம்ம ஜனாதிபதியே ஒரு அம்மணிதான்.
திருநள்ளார் போயிறலாமுன்னு புறப்பட்டோம். பன்னெண்டு மணிக்குள்ளே போயிட்டோமுன்னா அதை முடிச்சுக்கிட்டு மாலை 4 மணிக்கு மற்ற கோயில்களைப் பார்த்துக்கலாமுன்னு வினோத் சொன்னார். கோயில்கள் இருக்கும் வரைபடத்தைப் பார்த்தால் கும்பகோணத்தைச் சுத்தியே எல்லாம் இருக்கு. பேசாம ஒரு ரிங் ரோடு போட்டுட்டால் சுலபமா ஒரே ரவுண்டில் எல்லாத்தையும் பார்க்கலாமுன்னு கோபால் சொன்னார். ஞாயமாத்தான் இருந்துச்சு. நடக்குற காரியமா? (நடந்தா நல்லாத்தான் இருக்கும்) அன்னிக்கு முழுக்கத் திரும்பத்திரும்ப ஒரே இடம்வழியாப் பயணப்பட்டமாதிரியே இருந்துச்சு. ஒரு சர்ச்சையும், ஒரு மசூதியின் மினாராவையும் திரும்பத் திரும்பப் பார்த்துக்கிட்டே இருந்தோம். அதுதான் எனக்கு அடையாளமாப் போச்சு.
சனீஸ்வரனைக் கும்பிட்டுக்கிட்டுக் காரைக்கால் போயிட்டோம். மூணுமணி நேரம் நடுவிலே இருக்கு. அங்கே போகும்வழியில் சாலை ரொம்ப நல்லா இருக்கு. பாண்டிச்சேரி மாவட்டமாம். பொதுப்பணித்துறை கொடுக்கும் காசை கொஞ்சம்(?) நல்லபடியாவே செலவழிச்சுருக்காங்க. யூனியன் பிரதேசமாச்சே. வீடுகளும், கடைத்தெருவும் நம்ம தமிழ்நாட்டைவிட நல்லாவே இருக்கு. பணநடமாட்டம் தெரியுது. நல்ல ஓட்டலுன்னு சொல்லி ஒரு இடத்துக்குக் கொண்டுபோனார் வினோத்.
'இட்லி' இருக்கான்னு கேட்டதும் சப்ளையர் அப்படியே நடுங்கிட்டார்.
காலையில் மட்டும் கிடைக்குமாம். மெனு கார்டு பூராவும் வட இந்திய உணவு வகைகளும், பத்தாக்குறைக்கு சீனச் சமையலும். நாம் எங்கியோ போய்க்கிட்டு இருக்கோம்(-: கோபாலுக்கும் வினோதுக்கும் தென் இந்திய சாப்பாடுத் தட்டு கிடைச்சது. எனக்குத்தான்...... எண்ணெய் இல்லாத 'நான் ரொட்டி' தரேன்னார். அப்புறம் பரோட்டாதான் செய்ய முடியுமுன்னு சொன்னார். கடைசியில் இது எல்லாமே இன்னும் அரைமணி கழிச்சுத்தான் கிடைக்குமுன்னு சொன்னார். இது என்ன வம்பாப் போச்சேன்னுட்டு வெறும் சாதம் மட்டும் வாங்கிக்கிட்டேன். தயிர் சாப்பிடவும் பயமா இருக்கு. சூடா இருக்கும் வெந்த சோத்தை மட்டும் நாலு டீஸ்பூன் தின்னு பகலுணவை முடிச்சுக்கிட்டேன்.

தொடரும்:-)

பி.கு: அநேகமா எல்லாக் கோயில்களிலும் புகைப்படம் எடுக்கத் தடை போட்டுருக்கு. வெளியே இருந்து எடுத்த படங்களும் கோபாலின் கைவண்ணத்தால் பலது நல்லா அமையலை.(அவரோட கேமெரா சரியில்லைப்பா) ஒரு தொகை வாங்கிக்கிட்டுப் படம் எடுக்க விட்டால் என்ன? கோயிலுக்கும் வருமானம்தானே? கூட்டம்கூட்டமாச் சினிமாக்காரர்கள் க்ரூப் டான்ஸ் எடுக்கும்போது போகாத புனிதம், கலைகளை ஆராதிக்கும் மக்கள் புகைப்படம் எடுத்தால் போயிருமா? என்னவோ போங்க(-:

Tuesday, March 24, 2009

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.....(2009 பயணம்: பகுதி 2)

"தலையைக் குனிஞ்சுக் கொஞ்சம் அடக்கத்தோடு உள்ளே போகணும்". இல்லேன்னா? மண்டை இடிதான். இந்தப் பூட்டைப் பாரேன், லைட் ஸ்விட்ச் பாருங்க. குறிப்பெழுத சிலேட்டுப் பலகையும் சிலேட்டுக் குச்சியும். குடி தண்ணி வச்சுக்க செம்புச் சொம்பும், லோட்டாவும். கொசுவலை மாட்டிக்கத் தோதா நாலு பக்கமும் உசரமாக் கடைஞ்ச கம்பம். கட்டில் கால் & தலை மாட்டுலே படங்களும் கண்ணாடியும்! ( இதுலே சரோஜாதேவி படம் வேற! இந்திய மக்கள் தொகை, அளவுக்கு மேலே பெருகிவழியும் காரணங்களில் இதுவும் ஒன்னோ?) அலமாரி, மேசை, நாற்காலி, தொலைபேசின்னு எல்லாமே 'அந்தக் காலத்து' வகை. பாத்ரூமில் கூடப் பித்தளை வாளி, தண்ணி மொண்டு ஊத்திக்க பித்தளை ஜோடுதவலை / ஜோடுதாலை(பெயர் சரியான்னு யாராவது சொல்லுங்கப்பா. மறந்துபோச்சு எனக்கு) மொத்தத்தில் நவீன சாதனங்கள்னு சொன்னால் சூழ்நிலைக்குப் பொருந்தாமல் அங்கே இருக்கும் டிவியும், சின்ன ஃப்ரிட்ஜும், ஏர்க்கண்டிஷனரும். பாத்ரூமில் இருக்கும் கீஸரும், வெஸ்ட்டர்ன் டாய்லெட்டும் இதில் சேர்த்தி (ஆனா இருந்துப்போகட்டும். அப்பாடா!!! வாட் அ ரிலீஃப்:-)

( இதுலே நடுவே இருக்கும் சுழலும் பேனலுக்கு ஒரு புறம் கண்ணாடி, ஒரு புறம் இயற்கைக் காட்சி)

காலையில் எழுந்து கிராமத்தை'' ஒரு சுற்று சுத்தினேன். கூரைமேல் சேவல். மான் குட்டிகள் உறக்கம் நீங்கி முழிச்சுப் பார்க்குதுகள். கோழி அடைக்கும் கூட்டினுள்ளே ஏகப்பட்ட இரைச்சல். வெள்ளைநிற கூஸ் வாத்து வெளியில் வரத் துடிக்குது. பசுக்கொட்டிலில் மாடுகள் தங்கள் மக்களுடன். அய்யனார் சிலைகள், ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் சூரியன், புள்ளையாரை மனமுருக வணங்கும் மூஞ்சூறு, வீட்டு எண்களைத் தன்மீது வரைந்துகொண்டு நிற்கும் மைல்கற்கள், வரவேற்பறை வாசலையே கண்காணித்துக்கொண்டு நிற்கும் ஆண்டி முருகன், கொட்டகையில் நிற்கும் மாட்டுவண்டி, தகப்பனின் மடியில் இருந்து உபதேசம் செய்துகொண்டிருப்பவர் முன்னே திறந்தவெளி அரங்கம், அதுக்குண்டான மேடை, கற்றூண்கள் வரிசையாக நிற்கும் மண்டபம், மரத்தடிப் பிள்ளையார், கம்பீரமாக நிற்கும் யானை. ஹைய்யோ......


சின்னதா ஒரு அல்லிக்குளம். ஆஹா....ராத்திரி முழுசும் கேட்டுக்கிட்டு இருந்த தவளைச் சத்தம் இங்கே இருந்துதான் வந்துச்சா? நம்ம 'வீடு'வேற, தெருவின் ஆரம்பத்தில் இருக்கு. கார்னர் சைட்:-) ஜன்னல் வழியாப் பார்த்தால் திறந்தவெளி அரங்கம். கும்மோணத்துக் கொசுக்களுக்குப் பயந்து வலை அடிச்சு வச்சுருக்கு அங்கே. ரெண்டு வீடுதள்ளி ஒரு அருங்காட்சியகம்.
நேத்து ராத்திரி(?) வந்து இறங்குனதுமே தலைவலின்னு ஒரு காஃபி குடிக்க ரெஸ்டாரண்டுக்குப் போனோம். அங்கே நம்மைக் கவனிச்சுக்கிட்டவருக்கு நம்ம பாபுவின்( பூனா, சாரி மாமா மகன்)சாயல். மாமாவும் கும்மோணம்தான். ஒருவேளை ஊருக்கே ஒரு சாயலுன்னு இருக்கோ என்னவோ! இவர் பெயர் குமார். பலமான உபசரிப்பு. கும்மோணம் டிகிரிக் காப்பியின் சுவையே சுவை.ஆஹா..... இன்னும் நாலைஞ்சு வெள்ளைக்காரர்கள் வந்து தங்கி இருக்காங்க போல. அமைதியாத் தோசையைப் பிச்சுக்கிட்டு இருந்தாங்க.

டைனிங் ஹாலின் முகப்பில் வரவேற்க நிற்கும் தம்பதியரைக் கடந்து உள்ளே காலடி எடுத்துவச்சால்.....ரயில்கூஜா, வெந்நீர் பாய்லர், சேவை நாழி, கொழுக்கட்டை அச்சு. சின்னதா மரத்தேர். இந்தக் கூட்டத்தினிடையில் ஒரு அச்சு யந்திரம். இப்பப் புரிஞ்சுபோச்சு....... நம்ம திண்ணையில் இருக்கும் செய்தித்தாள் இதுலெதான் அச்சடிக்கப்பட்டிருக்குமோ? டைனிங் ஹாலை ஒட்டிய வெராந்தாவில் மூடு பல்லக்கு. இதில் 'நந்தினி' போவது மனதில் வந்துச்சு. கை ரிக்ஷா, ரெட்டை மாட்டு வில்வண்டி இத்யாதிகள். இதுகளுக்கிடையில் ஆளுயர அர்த்தநாரீஸ்வரர். ரெண்டுவகையான உலோகத்தில். நம்ம குமார்தான் நம்மைக்கூட்டிக்கிட்டுப்போய் ஒவ்வொன்னாகக் காமிச்சு விளக்கிக்கிட்டிருந்தார். அடுத்த ஒரு அறைக்கதவைத் திறந்தால் 'ஃபார்மலா பெரிய டைனிங் ஹால். கான்ஃப்ரன்ஸ் நடக்கும்போது பயன்படுத்துவாங்களாம். உள்நாட்டுலே இருக்கும் பெரிய நிறுவனங்கள் இந்தச் சாக்குலே ரெண்டு மூணு நாள் இங்கே வந்து தங்கிக் கூடிப்பேசுவாங்களாம். ஸர்.சி.வி.ராமனின் பெரிய படம் ஒன்னு வச்சுருந்தாங்க அங்கே.

அருங்காட்சியகம் பார்த்தீங்களான்னு கேட்டதும் ஆவலா எங்கே எங்கேன்னு பறந்தேன். உங்க வீட்டுக்கிட்டேதான்ன்னு சொல்லிக் கூட்டிப்போனார். 24 மணி நேரமும் திறந்துதான் இருக்குமாம். எந்தெந்த சினிமா இந்தக் கிராமத்தில் எடுத்தாங்க, அதுக்கு செட் எப்படி போட்டாங்கன்னு விவரிச்சுக்கிட்டே வந்தார்.

மூன்று பக்கமும் பெரிய கூடங்கள். நடுவில் முற்றம். எதிர்ச்சுவரில் சடைவிரிகுழலுடன் சிவன். ( அட! ஆமாம்....சினிமாக்களில் பார்த்திருக்கும் நினைவு. அர்ஜுன் நடிச்ச படம்?) நடுக்கூடத்தில் கலையழகோடு, வேலைப்பாடுகளுடன் மரச்சாமான்கள். படமெடுக்கும் பாம்பின் இருபக்கமும் கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு ஊஞ்சலாடும் குழந்தையைக் கற்பனை செஞ்சுக்க முடியுமா? முடியும்:-))))

அட! நம்ம பாரதியும் செல்லம்மாவும். இன்னொரு படத்தில் தீப்பெட்டி விளம்பரத்தில் யாருன்னு பாருங்க? நடிகைகள் விளம்பரத்தில் வருவது அப்பவே ஆரம்பிச்சுருச்சு!!

பாக்கியை நாளைப் பொழுது விடிஞ்சதும் பார்க்கலாமுன்னு 'வீட்டுக்கு' வந்துட்டோம். வந்த வேலையை முதல்லே பார்க்கலாம்.
வந்த வேலை என்னன்னா.... இங்கே கும்மோணத்தைச் சுற்றி இருக்கும் நவகிரகக் கோயில்களுக்கு போறதுதான். நேரா 'வரவேற்பு வீட்டுக்கு'ப்போய், கோயில் உலாவுக்கு என்ன மாதிரி வசதிகள் இருக்குன்னு விசாரிச்சோம். 'கார்த்திக்'ன்னு ஒரு இளைஞர். ஊட்டியாம் சொந்த ஊர். மூணுமாசமா இங்கே வேலை செய்யறாராம். கார் அவுங்களே ஏற்பாடு செஞ்சுருவாங்களாம்.

"என்ன வண்டி? இப்போ எங்களைக் கூப்பிட்டுவர கும்பகோணத்துக்கு அனுப்புன அம்பாஸிடரா?"

" ஆமாங்க. நல்லா வசதியான வண்டி அது"

" போச்சுரா. தேர் மேலே ஏறி உக்கார்ந்தாப்போல இருந்துச்சு. ஏ சி வேற இல்லை. ஏற்கெனவே அடிபட்ட முதுகு. லொங்குலொங்குன்னு இதுலே குதிச்சுக்கிட்டுப் பயணம் பண்ணாமாதிரிதான்..... ஊஹூம் இது சரிப்படாது. ஆமாம். இப்போ கூப்ட்டுவந்ததுக்கு எவ்வளோ காசு? "

கேட்டதும் மயக்கம் வராத குறை! 1200 ரூபாய். ஆறாரும் பன்னெண்டு கிலோ மீட்டருக்கு!!


தோழி ஒருத்தர் கொடுத்த தகவலின் படி 'செல்வி'க்குத் தொலைபேசினோம். நாங்க வருவோமுன்னு தோழி சொல்லிவச்சுருந்தாங்களாம். 'பரிகாரம்' எதாவது செய்யணுமான்னு கேட்டாங்க. 'அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. ச்சும்மாக் கோயில் போகணும் அவ்ளோதான்'. 'காலையில் ஏழரைக்கு வண்டி அனுப்பிடறேன். வினோத்னு ஒருத்தர் வருவார்'ன்னு சொல்லி நம்ம செல் நம்பரை வாங்கிக்கிட்டாங்க. கொஞ்ச நேரத்துலே அந்த வினோத், நம்மைக் கூப்பிட்டு உறுதிப்படுத்திக்கிட்டார். காலை 'ஏழரை.' நமக்கோ!!!


பொழுது எப்படா விடியுமுன்னு பார்த்துக்கிட்டே இருந்து, கிராமத்தைச் சுத்துனதுதான் இப்போ, இந்தக் காலை உலா. மூணாவது வீட்டுக்குப் போனேன்.
இன்னொரு முற்றத்தில் கிணறும், கூடத்து ஊஞ்சலும் இன்னபிற எளிய அலங்கார அமைப்புகளும், வீடுகளும்.......ஹூம்......... காலம் ரொம்பத்தான் மாறிப்போச்சு. நாகரிகம் என்ற பெயரில் எத்தனையோ அருமைகளை இழந்து நிக்கிறோம்(-:

சுற்றிலும் வாழை, தென்னை மரங்கள் அடர்ந்த தோப்புகள். மொத்தம் எட்டு ஏக்கராம். டெர்ரகோட்டாக் குதிரைகளும், காளைகளும், தீபஸ்தம்பமும், சிலைகளும் கொள்ளை அழகு. ராமாயணக் காட்சிகளுடன் இருந்த தூணில் பத்துத் தலை ராவணன், ஹனுமான், சீதையுடன் ராமலக்ஷ்மணர்கள்.

'வீடு' திரும்புனப்ப நம்ம வாசலில் தினமும் தண்ணீர் தெளித்துக் கோலமிடும் வசந்தா. நம்ம வீட்டுவாசலில் ஒரு நாகலிங்க மரம்கூட இருக்கு. அதுலே ப்ரவுண் நிறப் பந்துகளாத் தொங்குவது இதன் காய்களோ?சும்மாச் சொல்லக்கூடாது...... எல்லாம் பார்த்துப் பார்த்துதான் செஞ்சுருக்காங்க. ஆனா ஒரே 'ஒரு' ( சரி... சிலன்னு வச்சுகாலம்) விசயத்துல்லே கோட்டை விட்டுட்டாங்கப்பா.... இந்த சாவிக் கொத்தைப் பாருங்க. பிரிவினைக்குப் பின்னே இருக்கும் இந்தியா. இங்கே தீம் எல்லாம் சுதந்திரத்துக்கு முன்னாலே ஆச்சே!!!! அச்சச்சோ......

காலை உணவை முடிச்சுக்கிடலாமுன்னு போனால்..... அப்பத்தான் மாடு கறக்க ஆள் போயிருக்கு. இட்டிலி தோசைக்கு இப்பத்தான் அடுப்புப் பத்த வச்சுருக்காங்க. வெண்பொங்கல் தயாரா இருக்கு. அதை நீங்க சாப்பிட்டுக்கிட்டே இருங்க. பாலைக் காய்ச்சிடறோம். டிகாக்ஷன் இறங்கியாச்சு. காபி கலந்து தரேன்னு சொன்னார் சமையலறை நிர்வாகி.
வெண்பொங்கலில் மினுமினுக்கும் மிளகுக் கண்கள். பத்து மிளகு இருந்தால் பகைவனின் வீட்டிலும் சாப்புடலாம் என்ற பழமொழி தேவையில்லாமல் மனசுக்குள்ளே வந்துச்சு. விடறதில்லைன்னு நறுக் நறுக்குன்னு அந்த மிளகுகளை (வழக்கத்துக்கு மாறா) கடிச்சுத் தின்னேன். பிடிச்சது ஏழரை. வயித்துலே லேசா ஒரு எரிச்சல். 'அபகடம் சம்பவிக்குமோன்னு சம்சயம்'. வம்பே வேணாமுன்னுட்டு 'டயாஸ்டாப்' மாத்திரைகள் ரெண்டை முழுங்கிட்டு, வயித்துக்குப் பூட்டுப்போட்டேன்.

தொடரும்:-)))))