Showing posts with label Sterling Resort. Show all posts
Showing posts with label Sterling Resort. Show all posts

Tuesday, March 24, 2009

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.....(2009 பயணம்: பகுதி 2)

"தலையைக் குனிஞ்சுக் கொஞ்சம் அடக்கத்தோடு உள்ளே போகணும்". இல்லேன்னா? மண்டை இடிதான். இந்தப் பூட்டைப் பாரேன், லைட் ஸ்விட்ச் பாருங்க. குறிப்பெழுத சிலேட்டுப் பலகையும் சிலேட்டுக் குச்சியும். குடி தண்ணி வச்சுக்க செம்புச் சொம்பும், லோட்டாவும். கொசுவலை மாட்டிக்கத் தோதா நாலு பக்கமும் உசரமாக் கடைஞ்ச கம்பம். கட்டில் கால் & தலை மாட்டுலே படங்களும் கண்ணாடியும்! ( இதுலே சரோஜாதேவி படம் வேற! இந்திய மக்கள் தொகை, அளவுக்கு மேலே பெருகிவழியும் காரணங்களில் இதுவும் ஒன்னோ?) அலமாரி, மேசை, நாற்காலி, தொலைபேசின்னு எல்லாமே 'அந்தக் காலத்து' வகை. பாத்ரூமில் கூடப் பித்தளை வாளி, தண்ணி மொண்டு ஊத்திக்க பித்தளை ஜோடுதவலை / ஜோடுதாலை(பெயர் சரியான்னு யாராவது சொல்லுங்கப்பா. மறந்துபோச்சு எனக்கு) மொத்தத்தில் நவீன சாதனங்கள்னு சொன்னால் சூழ்நிலைக்குப் பொருந்தாமல் அங்கே இருக்கும் டிவியும், சின்ன ஃப்ரிட்ஜும், ஏர்க்கண்டிஷனரும். பாத்ரூமில் இருக்கும் கீஸரும், வெஸ்ட்டர்ன் டாய்லெட்டும் இதில் சேர்த்தி (ஆனா இருந்துப்போகட்டும். அப்பாடா!!! வாட் அ ரிலீஃப்:-)

( இதுலே நடுவே இருக்கும் சுழலும் பேனலுக்கு ஒரு புறம் கண்ணாடி, ஒரு புறம் இயற்கைக் காட்சி)

காலையில் எழுந்து கிராமத்தை'' ஒரு சுற்று சுத்தினேன். கூரைமேல் சேவல். மான் குட்டிகள் உறக்கம் நீங்கி முழிச்சுப் பார்க்குதுகள். கோழி அடைக்கும் கூட்டினுள்ளே ஏகப்பட்ட இரைச்சல். வெள்ளைநிற கூஸ் வாத்து வெளியில் வரத் துடிக்குது. பசுக்கொட்டிலில் மாடுகள் தங்கள் மக்களுடன். அய்யனார் சிலைகள், ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் சூரியன், புள்ளையாரை மனமுருக வணங்கும் மூஞ்சூறு, வீட்டு எண்களைத் தன்மீது வரைந்துகொண்டு நிற்கும் மைல்கற்கள், வரவேற்பறை வாசலையே கண்காணித்துக்கொண்டு நிற்கும் ஆண்டி முருகன், கொட்டகையில் நிற்கும் மாட்டுவண்டி, தகப்பனின் மடியில் இருந்து உபதேசம் செய்துகொண்டிருப்பவர் முன்னே திறந்தவெளி அரங்கம், அதுக்குண்டான மேடை, கற்றூண்கள் வரிசையாக நிற்கும் மண்டபம், மரத்தடிப் பிள்ளையார், கம்பீரமாக நிற்கும் யானை. ஹைய்யோ......


சின்னதா ஒரு அல்லிக்குளம். ஆஹா....ராத்திரி முழுசும் கேட்டுக்கிட்டு இருந்த தவளைச் சத்தம் இங்கே இருந்துதான் வந்துச்சா? நம்ம 'வீடு'வேற, தெருவின் ஆரம்பத்தில் இருக்கு. கார்னர் சைட்:-) ஜன்னல் வழியாப் பார்த்தால் திறந்தவெளி அரங்கம். கும்மோணத்துக் கொசுக்களுக்குப் பயந்து வலை அடிச்சு வச்சுருக்கு அங்கே. ரெண்டு வீடுதள்ளி ஒரு அருங்காட்சியகம்.
நேத்து ராத்திரி(?) வந்து இறங்குனதுமே தலைவலின்னு ஒரு காஃபி குடிக்க ரெஸ்டாரண்டுக்குப் போனோம். அங்கே நம்மைக் கவனிச்சுக்கிட்டவருக்கு நம்ம பாபுவின்( பூனா, சாரி மாமா மகன்)சாயல். மாமாவும் கும்மோணம்தான். ஒருவேளை ஊருக்கே ஒரு சாயலுன்னு இருக்கோ என்னவோ! இவர் பெயர் குமார். பலமான உபசரிப்பு. கும்மோணம் டிகிரிக் காப்பியின் சுவையே சுவை.ஆஹா..... இன்னும் நாலைஞ்சு வெள்ளைக்காரர்கள் வந்து தங்கி இருக்காங்க போல. அமைதியாத் தோசையைப் பிச்சுக்கிட்டு இருந்தாங்க.

டைனிங் ஹாலின் முகப்பில் வரவேற்க நிற்கும் தம்பதியரைக் கடந்து உள்ளே காலடி எடுத்துவச்சால்.....ரயில்கூஜா, வெந்நீர் பாய்லர், சேவை நாழி, கொழுக்கட்டை அச்சு. சின்னதா மரத்தேர். இந்தக் கூட்டத்தினிடையில் ஒரு அச்சு யந்திரம். இப்பப் புரிஞ்சுபோச்சு....... நம்ம திண்ணையில் இருக்கும் செய்தித்தாள் இதுலெதான் அச்சடிக்கப்பட்டிருக்குமோ? டைனிங் ஹாலை ஒட்டிய வெராந்தாவில் மூடு பல்லக்கு. இதில் 'நந்தினி' போவது மனதில் வந்துச்சு. கை ரிக்ஷா, ரெட்டை மாட்டு வில்வண்டி இத்யாதிகள். இதுகளுக்கிடையில் ஆளுயர அர்த்தநாரீஸ்வரர். ரெண்டுவகையான உலோகத்தில். நம்ம குமார்தான் நம்மைக்கூட்டிக்கிட்டுப்போய் ஒவ்வொன்னாகக் காமிச்சு விளக்கிக்கிட்டிருந்தார். அடுத்த ஒரு அறைக்கதவைத் திறந்தால் 'ஃபார்மலா பெரிய டைனிங் ஹால். கான்ஃப்ரன்ஸ் நடக்கும்போது பயன்படுத்துவாங்களாம். உள்நாட்டுலே இருக்கும் பெரிய நிறுவனங்கள் இந்தச் சாக்குலே ரெண்டு மூணு நாள் இங்கே வந்து தங்கிக் கூடிப்பேசுவாங்களாம். ஸர்.சி.வி.ராமனின் பெரிய படம் ஒன்னு வச்சுருந்தாங்க அங்கே.

அருங்காட்சியகம் பார்த்தீங்களான்னு கேட்டதும் ஆவலா எங்கே எங்கேன்னு பறந்தேன். உங்க வீட்டுக்கிட்டேதான்ன்னு சொல்லிக் கூட்டிப்போனார். 24 மணி நேரமும் திறந்துதான் இருக்குமாம். எந்தெந்த சினிமா இந்தக் கிராமத்தில் எடுத்தாங்க, அதுக்கு செட் எப்படி போட்டாங்கன்னு விவரிச்சுக்கிட்டே வந்தார்.

மூன்று பக்கமும் பெரிய கூடங்கள். நடுவில் முற்றம். எதிர்ச்சுவரில் சடைவிரிகுழலுடன் சிவன். ( அட! ஆமாம்....சினிமாக்களில் பார்த்திருக்கும் நினைவு. அர்ஜுன் நடிச்ச படம்?) நடுக்கூடத்தில் கலையழகோடு, வேலைப்பாடுகளுடன் மரச்சாமான்கள். படமெடுக்கும் பாம்பின் இருபக்கமும் கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு ஊஞ்சலாடும் குழந்தையைக் கற்பனை செஞ்சுக்க முடியுமா? முடியும்:-))))

அட! நம்ம பாரதியும் செல்லம்மாவும். இன்னொரு படத்தில் தீப்பெட்டி விளம்பரத்தில் யாருன்னு பாருங்க? நடிகைகள் விளம்பரத்தில் வருவது அப்பவே ஆரம்பிச்சுருச்சு!!

பாக்கியை நாளைப் பொழுது விடிஞ்சதும் பார்க்கலாமுன்னு 'வீட்டுக்கு' வந்துட்டோம். வந்த வேலையை முதல்லே பார்க்கலாம்.
வந்த வேலை என்னன்னா.... இங்கே கும்மோணத்தைச் சுற்றி இருக்கும் நவகிரகக் கோயில்களுக்கு போறதுதான். நேரா 'வரவேற்பு வீட்டுக்கு'ப்போய், கோயில் உலாவுக்கு என்ன மாதிரி வசதிகள் இருக்குன்னு விசாரிச்சோம். 'கார்த்திக்'ன்னு ஒரு இளைஞர். ஊட்டியாம் சொந்த ஊர். மூணுமாசமா இங்கே வேலை செய்யறாராம். கார் அவுங்களே ஏற்பாடு செஞ்சுருவாங்களாம்.

"என்ன வண்டி? இப்போ எங்களைக் கூப்பிட்டுவர கும்பகோணத்துக்கு அனுப்புன அம்பாஸிடரா?"

" ஆமாங்க. நல்லா வசதியான வண்டி அது"

" போச்சுரா. தேர் மேலே ஏறி உக்கார்ந்தாப்போல இருந்துச்சு. ஏ சி வேற இல்லை. ஏற்கெனவே அடிபட்ட முதுகு. லொங்குலொங்குன்னு இதுலே குதிச்சுக்கிட்டுப் பயணம் பண்ணாமாதிரிதான்..... ஊஹூம் இது சரிப்படாது. ஆமாம். இப்போ கூப்ட்டுவந்ததுக்கு எவ்வளோ காசு? "

கேட்டதும் மயக்கம் வராத குறை! 1200 ரூபாய். ஆறாரும் பன்னெண்டு கிலோ மீட்டருக்கு!!


தோழி ஒருத்தர் கொடுத்த தகவலின் படி 'செல்வி'க்குத் தொலைபேசினோம். நாங்க வருவோமுன்னு தோழி சொல்லிவச்சுருந்தாங்களாம். 'பரிகாரம்' எதாவது செய்யணுமான்னு கேட்டாங்க. 'அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. ச்சும்மாக் கோயில் போகணும் அவ்ளோதான்'. 'காலையில் ஏழரைக்கு வண்டி அனுப்பிடறேன். வினோத்னு ஒருத்தர் வருவார்'ன்னு சொல்லி நம்ம செல் நம்பரை வாங்கிக்கிட்டாங்க. கொஞ்ச நேரத்துலே அந்த வினோத், நம்மைக் கூப்பிட்டு உறுதிப்படுத்திக்கிட்டார். காலை 'ஏழரை.' நமக்கோ!!!


பொழுது எப்படா விடியுமுன்னு பார்த்துக்கிட்டே இருந்து, கிராமத்தைச் சுத்துனதுதான் இப்போ, இந்தக் காலை உலா. மூணாவது வீட்டுக்குப் போனேன்.
இன்னொரு முற்றத்தில் கிணறும், கூடத்து ஊஞ்சலும் இன்னபிற எளிய அலங்கார அமைப்புகளும், வீடுகளும்.......ஹூம்......... காலம் ரொம்பத்தான் மாறிப்போச்சு. நாகரிகம் என்ற பெயரில் எத்தனையோ அருமைகளை இழந்து நிக்கிறோம்(-:

சுற்றிலும் வாழை, தென்னை மரங்கள் அடர்ந்த தோப்புகள். மொத்தம் எட்டு ஏக்கராம். டெர்ரகோட்டாக் குதிரைகளும், காளைகளும், தீபஸ்தம்பமும், சிலைகளும் கொள்ளை அழகு. ராமாயணக் காட்சிகளுடன் இருந்த தூணில் பத்துத் தலை ராவணன், ஹனுமான், சீதையுடன் ராமலக்ஷ்மணர்கள்.

'வீடு' திரும்புனப்ப நம்ம வாசலில் தினமும் தண்ணீர் தெளித்துக் கோலமிடும் வசந்தா. நம்ம வீட்டுவாசலில் ஒரு நாகலிங்க மரம்கூட இருக்கு. அதுலே ப்ரவுண் நிறப் பந்துகளாத் தொங்குவது இதன் காய்களோ?



சும்மாச் சொல்லக்கூடாது...... எல்லாம் பார்த்துப் பார்த்துதான் செஞ்சுருக்காங்க. ஆனா ஒரே 'ஒரு' ( சரி... சிலன்னு வச்சுகாலம்) விசயத்துல்லே கோட்டை விட்டுட்டாங்கப்பா.... இந்த சாவிக் கொத்தைப் பாருங்க. பிரிவினைக்குப் பின்னே இருக்கும் இந்தியா. இங்கே தீம் எல்லாம் சுதந்திரத்துக்கு முன்னாலே ஆச்சே!!!! அச்சச்சோ......

காலை உணவை முடிச்சுக்கிடலாமுன்னு போனால்..... அப்பத்தான் மாடு கறக்க ஆள் போயிருக்கு. இட்டிலி தோசைக்கு இப்பத்தான் அடுப்புப் பத்த வச்சுருக்காங்க. வெண்பொங்கல் தயாரா இருக்கு. அதை நீங்க சாப்பிட்டுக்கிட்டே இருங்க. பாலைக் காய்ச்சிடறோம். டிகாக்ஷன் இறங்கியாச்சு. காபி கலந்து தரேன்னு சொன்னார் சமையலறை நிர்வாகி.
வெண்பொங்கலில் மினுமினுக்கும் மிளகுக் கண்கள். பத்து மிளகு இருந்தால் பகைவனின் வீட்டிலும் சாப்புடலாம் என்ற பழமொழி தேவையில்லாமல் மனசுக்குள்ளே வந்துச்சு. விடறதில்லைன்னு நறுக் நறுக்குன்னு அந்த மிளகுகளை (வழக்கத்துக்கு மாறா) கடிச்சுத் தின்னேன். பிடிச்சது ஏழரை. வயித்துலே லேசா ஒரு எரிச்சல். 'அபகடம் சம்பவிக்குமோன்னு சம்சயம்'. வம்பே வேணாமுன்னுட்டு 'டயாஸ்டாப்' மாத்திரைகள் ரெண்டை முழுங்கிட்டு, வயித்துக்குப் பூட்டுப்போட்டேன்.

தொடரும்:-)))))