எதுக்கு இப்படிப் பறக்கறே ? என்ன ஒரு எட்டு கிமீ தூரம்தான். மிஞ்சிப்போனா அரைமணின்னார். கேட்டுட்டாலும்...........
மேம்பாலத்தின் வழியாகத்தான் நகருக்குள் போய்க்கிட்டு இருக்கோம். காலையில் நந்திக்ராமுன்னு எதிர்வாடையில் போனதால்.... நகருக்குள் கூட்டம் எப்படின்னு நமக்குத் தெரியலைதான். ஐராவில் இருந்து கிளம்பும்போது முற்றத்தில் உக்கார்ந்திருந்த சிலரைப்பார்த்து'தரிசனம் ஆச்சா?'ன்னு கேட்டதுக்கு, நேத்து ஆச்சுன்னாங்க. ரொம்ப நடக்கணுமான்னதுக்கு இல்லை.... கேட் வாசலில் ஆட்டோவை நிறுத்தச் சொல்லுங்க. கூடாதுன்னு சொல்வாங்கதான். இறக்கி விட்டுட்டுப்போயிருவேன்னு ஆட்டோக்காரர் சொன்னால் போதும். அங்கிருந்து ஒரு முன்னூறு மீட்டர்தான்னதும் ஆசுவாசமாச்சு.
நகரில் அங்கங்கே அலங்காரத்துக்காக சிற்பங்களும் தோரணவாசல்களுமா வச்சுருக்காங்க. வளையம் மாதிரி ஒன்னு ட்ராஃபிக் ஐலெண்டில். சிலம்போன்னு திடுக். இல்லை. சீதாவின் கங்கணம்.
மேம்பாலத்துப் பக்கச்சுவர்களில் கூட ராமாயணக்காட்சிகள் வரைஞ்சு வச்சுருக்காங்க. பாலத்தைவிட்டு இறங்கி இடதுபக்கம் போகும் தெருவுக்குள் போறோம். காம்பவுண்டு சுவர்களில் கூட தாமரை, சங்கு, சக்கரம்னு பெருமாள் சம்பந்தப்பட்டவைகளே ! சாலைகளில் ஏகப்பட்ட மக்கள் நடமாட்டம்.
இன்னொரு குறுகலான தெருவுக்குள் ஆட்டோ போகுது. எங்கே இருக்கோமுன்னே தெரியலை. ஒரு அழகான பெரிய கட்டடத்தில் அகில் பாரதிய பஞ்சாயதி குர்மி மந்திர்னு பெயர் பார்த்தேன். அந்த சந்து முடியும் இடத்தில் வண்டியை நிறுத்தினார் சஞ்சய்.
கொஞ்ச தூரத்தில் ரயில்வே ஓவர் ப்ரிட்ஜ் கண்ணில்பட்டது. ஏர்ப்போர்ட் போலவே இங்கே அயோத்யா ஜங்ஷனை அழகாக் கட்டியிருக்காங்கன்னு வாசிச்ச நினைவில்...... முடிஞ்சால் உள்ளே போய்ப் பார்க்கணுமுன்னு நம்மவராண்டை சொன்னேன்.
இதுக்குமேல் நாம் நடந்துதான் போகணுமுன்னு நமக்கு வழிகாட்டிக்கிட்டே சஞ்சய் முன்னால் நடக்கறார். மணி பார்த்தால் ரெண்டரை தாண்டியிருக்கு. கால்வலி காரணம், வேகமா நடக்க முடியலை. நல்ல கூட்டம் வேற .... ஒரு முக்கால் கிமீ தூரத்தில் நாலைஞ்சுபேர் வீல்சேர்களுடன் நிக்கறாங்க. நம்மவர் உடனே போய் விசாரிச்சுட்டு, என்னை உக்கார்த்திட்டார். உங்களுக்கும் ஒன்னு எடுக்கலாமுன்னா..... 'தேவைப்படாது. வாங்க போகலாமு'ன்னதும் நாங்க நாலுபேரும் போய்க்கிட்டு இருக்கோம்.
https://www.facebook.com/share/v/12FcxgZWHdh/
அங்கங்கே ஏத்த இறக்கம், சந்து பொந்துன்னு திரும்பித்திரும்பி ஒரு வழியா கோவில் கேட் முன்னாடி போயிட்டோம். அங்கிருந்த காவலர்கள், கூட்டம் இன்றைக்கு அதிகமா இருப்பதால் நீங்க இந்தப்பக்கம் நேராப்போய், யூ டர்ன் அடிச்சுக்கிட்டு இங்கே வரணும்னு சொல்லிட்டாங்க. மொத்த சனத்துக்கும் இப்படியே கையைக்காட்டி அனுப்பிக்கிட்டு இருக்காங்க.
கூட்டத்தைக் கன்ட்ரோல் பண்ணறாங்களாம். அந்த சாலைக்கு ராம்பாத் னு பெயர். அதுலே நடக்கிறோம். கொஞ்சம் அகலமான சாலைதான். நடுவிலே ரெண்டாப் பிரிச்சுக் கம்பித்தடுப்பு நெடுகப்போட்டு வச்சுருக்காங்க. அங்கங்கே ஆர்மி ஆட்கள் தடுப்புகளையொட்டி நிக்கறாங்க. நம்மவர் விடுவிடுன்னு நடந்து போறார். அவருக்கு முன்னால் சஞ்சய். ராஜேஷ் வீல்சேரை உருட்ட அதில் நான். கூட்டங்கூட்டமா மக்கள் நம்மைக்கடந்து போறாங்க. யூ டர்ன் எங்கே வருதுன்னு பார்த்துக்கிட்டே போறோம். போறோம், போறோம்.



கொஞ்சதூரத்தில் இடதுபக்கம் ஹனுமன்கதி கோவில் ! 72 படிகள் ஏறிப்போகணும். போனபயணத்தில் இங்கே போகலை. இந்த முறை போக முடியாமல் கால்வலி. ப்ச்.... ஹனுமன்கதிக்குள் போக சாலையெல்லாம் நிறைச்சு ஜனம் வரிசையில் நிக்குது.
போனமுறை பார்த்தப்ப ஹனுமன் வாசலில் இப்படி நின்னார். இப்போ ?
உள்ளே போயிட்டாரோ ? பெயர்ப்பலகையில் தமிழிலும் எழுதிவச்சுருக்காங்க !
கொஞ்ச தூரத்தில் மஹாராஜா தசரதரின் மாளிகை. வாசலில் தடுப்பெல்லாம் போட்டு வச்சுக் காவல்துறை உக்கார்ந்துருக்கு ! ப்ச்.... பார்க்காத இடமாச்சே..... மனசு அடிச்சுக்குது. கம்னு கிட மனசே.... முதல்லே குழந்தையைப் பார்க்கணும்.....
நடையா நடந்து மூணு கிமீ போனதும் மெயின் ரோடு வந்துருச்சு. அங்கே ஒரு பெரிய வீணைச் சிற்பம். அதைச் சுத்திக்கிட்டு, திரும்ப நாம் வந்த அதே சாலையில் போய்ச் சேர்ந்துக்கணும். அந்த யூ டர்ன் இதுதான். லதா சௌக். லதாமங்கேஷ்கரின் நினைவுக்காக வச்சுருக்காங்களாம். ஆமாம்.... லதாவுக்கும் வீணைக்கும் என்ன சம்பந்தம்? ராம் பஜன் எல்லாம் பாடியிருக்காங்கதான். அதெல்லாம் தம்பூரா ஸ்ருதியில் தானே ?
(இருக்கற கஷ்டத்தில் இது வேற தலையிடி. எதுவோ வச்சுட்டுப்போகட்டும். வீணைக்கும் தம்பூருக்கும் வித்யாசம் தெரியலை போல.... இப்போ நமக்குக் கொடுத்த நேரத்தில் ராமனைப் பார்ப்போமா இல்லையா....... அட ராமா.......)
திரும்ப அதே மூணு கிமீ நடந்து வர்றோம். நம்மவரைப் பார்த்தால் பாவமா இருக்கு. முன்னால் போன சஞ்சய் சட்னு பக்கவாட்டில் இருந்த சந்துக்குள் நுழைஞ்சுட்டார். திரும்ப அங்கே இங்கேன்னு சுத்திச் சுத்தி , ஒரு கேட்டாண்டை போனோம். . பயங்கரக்கூட்டம் கேட்டாண்டை. இது ஆரம்பத்தில் பார்த்த கேட் இல்லை . வேற ஒன்னு.....
அங்கிருந்த உக்கார்ந்திருந்த ஆர்மியிடம் நம்ம விஐபி பாஸ் காமிச்சதும், ஆதார் கார்ட் கேட்டார். நம்மாண்டை ஏது ? பாஸ்போர்ட்டைக் காட்டினதும் வாங்கிப்பார்த்தவர், வீல்சேரை உள்ளே கொண்டுவந்து விட்டுட்டு, ராஜேஷ் வெளியே போயிறனும் என்றார். நம்மவர்தான் இனி வீல்சேர் தள்ளணுமாம். கேமெரா, செல்ஃபோன் இருக்கான்னார். இருக்குன்னதும், அவராண்டையே கொடுக்கச் சொன்னாரா..... எனக்கு திக் னு ஆச்சு. சஞ்சயைக் கூப்பிட்டு அவரிடம் கொடுத்தோம்.
வீல்ச்சேர் தள்ளிக்கிட்டு வந்த நம்மவரின் முகம் எப்படி இருக்குமோன்னு பார்க்க ஆசையா இருந்தாலும் எப்படி ? சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்னவாகும்......னு பாடிக்கிட்டே தள்ளினால் நல்லா இருக்குமுல்லெ ? ஒரு அம்பது அறுவது மீட்டர் கடந்ததும் வலப்பக்கம் திரும்பும் வழியில் போகணும். அங்கே ஒரு டெண்ட் . வீல்சேரை அங்கே வச்சுட்டுப்போகணும். அங்கே இருந்த ரெண்டு ஆர்மி, விஐபி பாஸ் & பாஸ்போர்ட் பார்த்துட்டு, ஒரு ரெஜிஸ்தரில் குறிச்சுக்கிட்டாங்க. ஒருத்தர் சொன்னார், 'வெளிநாட்டுப் பாஸ்போர்ட் இருந்தாவே போதும். விஐபி பாஸ் கூடத் தேவையில்லை'னு ! ஹா.... அப்படியா !!! தெரியாமப்போச்சே.... எவ்ளோ மெனெக்கெட்டோம் இதை வாங்க !
இனி நடைதான். மெதுவா நடக்கறோம். மணி நாலேகால். நம்ம தரிசன நேரம் முடியக் காமணிதான் பாக்கி. உள்ளே வந்துட்டதால் பிரச்சனை இருக்காது தானே...... அங்கங்கே குடிதண்ணீர் ஏற்பாடுகள் செஞ்சுருக்காங்க. இன்னொரு இடத்தில் டென்ட் , உள்ளே மகளிரைச் செக் பண்ணறதுக்காம். கைப்பையில் செல்ஃபோன் இருக்கான்னு கேட்டுட்டு, இல்லைன்னதும் போகச் சொல்லிட்டாங்க. ஆண்களுக்கு செக்கிங் டென்ட் இருக்கான்னு நான் கவனிக்கலை.
அங்கங்கே தடுப்புச்சுவர் வழி கடந்து போய்க்கிட்டு இருந்தோம். ஒரு இடத்தில் சின்ன முற்றம். அதுவழியே போனால் எதிரில் கோவில் படிக்கட்டு. ஒரு பத்துப்படிகள் இருக்கும். முடியும் இடத்தில் ரெண்டு பக்கங்களிலும் யானை ! மெள்ள ஏறிப்போய் சின்ன மண்டபத்தில் நிக்கறோம். இடப்பக்கம் ஒரு வாசல். அதுலே கயிறு கட்டி ரெண்டாப் பிரிச்சுருக்காங்க. அங்கே உள்ளே போகும் வழியில் ஆர்மி நபர், விஐபி பாஸ் (ப்ரின்ட் அவுட்தான்) பார்த்துட்டு உள்ளே போகச் சொன்னார். கண்ணுக்கு நேரா கம்பித்தடுப்பு. அதுக்குள்ளே ஜனத்திரள் ! ரெண்டு பக்கச் தடுப்புகளுக்கிடையில் அசையும் மனிதவெள்ளம் !
நாம் நிற்குமிடத்தில் யாருமில்லை...... சில ஆர்மி நபர்களைத்தவிர. அதுலே ஒரு பெண் ஆஃபீஸரும் இருந்தாங்க. இந்தப்பக்கம் இருக்கும் தூணையொட்டியே நடந்து முன்னால் போறோம். கருவறையில் நிக்கறான் குழந்தை ! கண்ணில் பட்ட விநாடியில் உடம்பில் ஒரு பதற்றம். ஒரு நிமிட்டுக்கும் குறைவா நின்னு பார்க்க விட்டவுங்க.... இப்படி வாங்கன்னு எதிர்ப்பக்கம் கை காமிச்சுட்டாங்க.
மேலே படம்: வலையில் இருந்து!
கருவறையின் நட்டநடுவில்தான் நிற்கிறான். ஆனால் நாம் நிற்குமிடம் ராமனின் இடதுபக்க மண்டபம் என்பதால் ஓரமாத்தான் தெரிஞ்சது. திரும்பி நடக்கும்போது, கண்ணில் ஜலம் வச்சுண்ட்டேன். சரியாப்பார்க்கலைன்னு மனசுலே தோணியதும், சின்னதா ஒரு ஆறு ! அங்கெ நின்னுக்கிட்டு இருந்த இன்னொரு ஆர்மி, 'மாதாஜி, இதர் ஸே தேக்கியே'ன்னு அவர் நிற்குமிடத்தில் நின்னு பார்க்கச் சொன்னார். ஓரமாத்தான் தெரியறான். ஆனால் தெரிஞ்சான். ஒரு நாலைஞ்சு நிமிட் நின்னுக்கிட்டு இருந்தேன். பார்வை அவனிடமும், கருவறைக்கு நேரா இருக்கும் பெரிய அகலமான பாதையில் நீந்தி அசையும் மனிதக்கூட்டத்தின் மேலும் போய்ப்போய் வருது. நெருக்கியடிச்சு நகரும் மக்கள் பலரின் கையில் செல்போன். தூக்கிப் பிடிச்சபடி படம் எடுத்துக்கிட்டே போறாங்க. சிலர் செல்ஃபோன் லைட் போட்டுக்கிட்டே வீடியோ எடுத்துக்கிட்டு நகர்றாங்க.

மேலே படமும் வலையில் இருந்துதான். பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன். வந்தால் தூக்கிடலாம் !






நம்ம ஆர்மிகிட்டே எப்படி செல்ஃபோன் விட்டாங்கன்னா.... கன்ட்ரோல் பண்ண முடியலைன்னு தலையை ஆட்டினார். என்கூடவே நின்னுக்கிட்டு இருந்த நம்மவர், ஆர்மிக்கு நன்றி சொன்னார். நானும்தான். கைகூப்பிட்டு வெளியே வரும் கயிற்பகுதியில் நுழைஞ்சோம்.
கீழே படம்: இதே அலங்காரத்தில்தான் நாம் அன்று கண்ட பாலராமன். Daily darshan of Ramlallaன்னு ஒரு இடத்துலே இருந்து தினமும் படம் அனுப்புவாங்க'
குழந்தையைப் பார்த்தோம். ஆனால் கோவிலைப்பார்க்கலை. திறப்பு விழா சமயம் டிவியில் லைவா காமிச்சப்பப் பார்த்தேன். ரொம்ப அழகா இருந்தது. ஊனக்கண்ணால் பார்க்கக் கொடுத்துவைக்கலை..... ப்ச்
கோவிலுக்கு இடமும் வலமும் இருக்கும் மண்டபங்களில் , இடது மண்டப வழியா நம்மை உள்ளே அனுப்பியிருக்காங்க. படிக்கட்டாண்டை இருந்த யானை பக்கத்துலே ரெண்டு நிமிட் உக்கார்ந்துட்டு இறங்கினோம். கோவிலுக்கு வந்தா ஒரு நிமிட்டாவது உக்கார்ந்துட்டுப் போகணுமுன்னு எங்க அம்மம்மா சொல்வாங்க.
படியிறங்கிச் சின்னத்தடுப்புகளையெல்லாம் கடந்து வந்தால் அங்கே ஒரு குடும்பம் நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுக்கக் குடும்பத்தலைவர் க்ளிக்கிக்கிட்டு இருக்கார். இவராண்டை செல் எப்படின்னு மனசு கேக்குது.....
அதுக்குள்ளே நம்மவர், அவராண்டை 'எங்களையும் க்ளிக்கிட்டுப் படம் அனுப்பித் தர்றீங்களா' ன்னதும் சரின்னுட்டார். ஆச்சு ரெண்டு க்ளிக். நம்ம செல்ஃபோன் நம்பரை(இந்தியா நம்பர்) கொடுத்தோம். கொஞ்ச நேரத்தில் படங்களை அனுப்பிட்டார். அவருக்கு நம் நன்றிகளை இங்கேயும் குறிப்பிட்டுக்கறேன். (ஆனாலும் அவரால் எப்படி செல்ஃபோன் கொண்டுவரமுடிஞ்சது...... ஙே..... )
போனவழியாவே திரும்பி வர்றோம். அப்பதான் கவனிக்க்றேன். லேடீஸ் டென்ட்டுக்குப் பின்புறமிருக்கும் தடுப்பைத் தாண்டிய பெரிய வெளியில் மக்களான மக்கள். குழந்தையும் குட்டியும், பெரிய பெரிய மூட்டைகளாப் பைகளுமா நிறைஞ்சு நிக்கறாங்க. முக்காவாசிப்பேர் கையில் செல்ஃபோன் ! செல்ஃபி எடுக்கறதும், குடும்பத்தைக் க்ளிக்கறதுமாக் கொண்டாட்டம். என் பையைச் செக் பண்ணவங்க டென்ட் வாசலில் ச்சும்மா நின்னுக்கிட்டு இருந்தாங்க. அங்கே பாருங்கன்னு கை காமிச்சேன். 'ஒன்னும் செய்ய முடியாது. ஆர்மிதான் கன்ட்ரோல் பண்ணனும். நாங்க போலிஸ்'னு சொன்னாங்க.
நம்மவர் வீல்சேரை எடுத்து வந்ததும் உக்கார்ந்தேன். மெதுவா நடந்து வர்றேன்னா கேட்டால்தானே ? விஐபி பாஸ் தரிசனம் வர்றவங்களுக்கு இன்னின்ன வசதிகள் செஞ்சு தர்றோமுன்னு சொன்னாங்களேன்னா அதையெல்லாம் இன்னிக்கு ரத்து பண்ணிட்டாங்களாம். இவ்ளோ கூட்டத்தைச் சமாளிக்கும் அளவுக்கு லாக்கர் வசதிகள் இல்லையாம் ! கோவில் வசம் வீல்சேர்களும் இல்லையாம். தனியார்களுக்கு வீல்சேர் ஓட்டி வரும் தொழில் ஒன்னு புதுசா உருவாகி இருக்கு. அப்புறம் மறுநாள் செய்தியில் தெரிஞ்சது, நாம் தரிசனம் போன நாள், பதினைஞ்சு லக்ஷம் பேர் கோவிலுக்கு வந்து போயிருக்காங்கன்னு. ஆஹா..... நாம் ஒன் பாய்ன்ட் ஃபைவ் மில்லியனில் இருவர் !!!!
கேட்டாண்டை இருந்த ராஜேஷ், நாலடி உள்ளே வந்து வீல்சேர் பொறுப்பை ஏத்துக்கிட்டார். சஞ்சய் கையில்/ பையில் இருந்த செல்ஃபோன்கள் நம்மாண்டை வந்தாச். ராஜேஷ் காட்டிய வழியில் நடந்து போறோம். ரெண்டுபக்கங்களிலும் கடைகள் நிறைந்திருக்கும் வீதி.

எனக்கு ராமன் வாங்கிக்கணுமுன்னதும் ஏதோ ஒரு கடைமுன்னால் வீல்சேர் ஸ்டாப். அப்பதான் நம் கையில் செல்ஃபோன் இருப்பதே ஞாபகம் வந்தது. வரிசைவரிசையா அழகழகாக பாலராமன்கள். ஒரே நோட்டத்தில் நமக்கானது எதுன்னு மனசில் பட்டது. ரொம்ப உயரத்தில் இருந்தான். விலை பேரம் படிஞ்சதில் சட்னு எடுத்துப் பேக் பண்ணஆரம்பிச்சாங்க. நான் கையில் தொட்டுக்கூடப் பார்க்கலை. என்னம்மா பெருசா வாங்கிட்டெயேன்னாரா..... அடராமான்னுட்டு, சின்னதா இன்னும் ரெண்டைக் காமிச்சு எடுத்துப் பையில் போடச் சொன்னேன். ராஜேஷ், சஞ்சய் கூட ஒரு சில க்ளிக்ஸ் ஆச்சு. பொதியை வாங்கின சஞ்சய் முன்னால் நடந்து போறார்.
https://www.facebook.com/share/v/15Rj1vxY9m/
ஒரு வழியா ஆட்டோ நிறுத்தின இடத்துக்கு வந்து சேர்ந்தோம். ஆட்டோவாண்டை நம்ம செங்கல்படிகள். வீல்சேர் ராஜேஷுக்கு ஒரு நல்ல தொகையாகவே கொடுத்தோம். பாவம். நல்ல மனிதர்..... எத்தனை தூரம் சுத்தவேண்டியதாப் போச்சு பாருங்க. கிளம்பிட்டோம். கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் ஒரு ஒன்பது கிமீ நடை வரும் !





அந்தக்குறுகலான சந்து ரோடில் வரும்போது ரெயில்வே லெவல் க்ராஸிங் கேட் மூடிக்கிடக்கு. ஏகப்பட்ட வண்டிகள் இடைவெளியில்லாமல். இதோ திறந்துருவான்னு நிக்கறோம், நிக்கறோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாச்சு.... திரும்பி வேற வழியில் போகலாமுன்னா நகரவே இடமில்லை. அக்கம்பக்கத்து ஆட்டோக்களில் எல்லாம் சுமார் 20 பேர் ஒவ்வொன்னிலும். முன்பக்கம் ட்ரைவரையே மூடி உக்கார்ந்துருக்காங்க.
நம்ம வண்டியில் நாங்க மூணே பேர் என்றதும், நடந்து வரும் சிலர் நாங்க ஏறிக்கவான்னு கேக்கறாங்க. ட்ரைவர்கிட்டே கேளுங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். பாவமாத்தான் இருக்கு. இந்த நிலையில் ரயில் வரும் அறிகுறி தெரிஞ்சதும் சனம் சுறுசுறுப்பாச்சு. வந்தது ஒரு ஆளில்லா ரயில். ரொம்ப நீளம் ! இப்படி மெதுவாப்போகும் ரயிலை வாழ்நாளில் முதல்முறையாப் பார்த்தேன். ரயில் போறதை வீடியோ எடுக்கலாமுன்னா.... அது பாட்டுக்கு...... இருபத்தியேழு நொடிகளில் போதுமுன்னு ஆகிருச்சு.....
https://www.facebook.com/share/v/1FdpQJnBid/
ஆறரை மணிக்குக் கேட் திறந்ததும்..... விட்டாப்போதுமுன்னு சீறிப்பாய்ஞ்சது வண்டிகள். நாம் ஐராவுக்கு ஏழுமணிக்கு வந்து சேர்ந்தோம்.
அறைக்குப் போனதும்...... நம்மவர் ஓரமா வச்ச ராமன் பொதியைத் தூக்கிப்பார்த்தேன்............ ஒரு எட்டுகிலோ இருக்கும் போல .... அடராமா............
தொடரும்........... :-)