Friday, June 30, 2017

மூணாம் தரிசனம்(இந்திய மண்ணில் பயணம் 24)

ஐட்டிநரியில் கூட  இங்கே பத்ரியில் இருந்து  நேரா ருத்ரப்ரயாக் என்றுதான் போட்டுருக்கு.  வெறும் 152 கிமீ தூரம்தான் என்றாலும் மலைப்பாதைப் பயணம் ஆச்சே!  நாலரை மணின்னு  கூகுள் சொன்னால் ..... அது அப்படியே நடக்குமா?  குறைஞ்சது  ஆறுமணி ஆகலாம்.    எப்படி வசதின்னு முகேஷைக் கேட்டதுக்கு பிரச்சனை இல்லைன்னுட்டார்.

காலையில்  சீக்கிரமே எழுந்து  ஆறரைக்கு  ரெடியாகிட்டேன்.  ஜன்னல் திரைச்சீலையைத் திறந்தால்.... மசமசன்னு .... நீலகந்தா  இருக்கார்!
நம்மவரும் தயாரானதும் கீழே போனால் நம்ம முகேஷும்  ரெடி!

 எல்லோருமாக் கோவிலுக்குப்போயிட்டோம்.  மணி ஏழுதான்.  அவ்வளவாக் கூட்டம் இல்லை. சட்னு தரிசனம்  ஆச்சு.   சனிக்கிழமை  கோவில் என்ற  நம்ம வழக்கமும் நிறைவேறுன  திருப்தியுடன் கருவறையையும் பிரகாரத்தையும் வலம் வந்து  அர்ஜுனனிடம் கொஞ்சம் பேசிட்டு, போயிட்டு வரேண்டான்னு  'பைபை ' சொல்லிட்டு அரைமணியில் வெளியே வந்துருந்தோம்.
  மேலே படம் :    நம்ம முகேஷ்

 கட்டாயம் ஜாக்கெட் போட்டுக்கிட்டுத்தான் போகணுமுன்னு நம்மவருக்கு ஒரே பிடிவாதம். அதானே   வேலைமெனக்கெட நியூஸியில் இருந்து கொண்டு போனதுக்கு  ஒரு வேலை  வைக்கவேணாம்?
காலை நேரத்துக் குளிர் இதம்தான்! நியூஸி போல நடுங்கும் குளிர் இப்ப இல்லை. ஆனால்  இந்த மாசக் கடைசியில் பின்னி எடுத்துருமாம்.  இந்தக் குளிரை நம்ம பத்ரி நாராயணன் கூடத் தாங்க மாட்டார்னுதான்  ஆறு மாசத்துக்குக் கோவிலையே மூடி வச்சுடறாங்க.
வாசல் பக்கம் தசாவதாரம் இருப்பதை இப்பதான் பார்த்தேன்!   கருட்ஜியும்  அதே கிழக்கோலத்தில் இருந்தார்.

தீபாவளி முடிஞ்சதும்,  நல்ல நாள் பார்த்து (அநேகமா தீபாவளிக்கு நாலாம் நாள்) உற்சவர் பத்ரி  கிளம்பி கீழே ஜோஷிமட் வந்துருவார்.  மூலவரும் மத்தவங்களும் அங்கேயே கதவை சாத்திக்கிட்டு உள்ளேயே இருக்க,   வெளியே ஒரு ஆர்மிக்கார் காவல் காக்கும் ட்யூட்டியில்!  கதவை அடைக்குமுன் ஒரு நெய் விளக்கு ஏத்தி வச்சுட்டு  வந்துருவாங்களாம். அப்புறம்?
ஆறுமாசத்துக்கு  கோவில் அடைப்புதான்.  அப்படி ஒரு பனிப்பொழிவு காலம். ஊருக்குள்ளே ஆர்மி தவிர வேற ஈ காக்கா கிடையாது.  எல்லாத் தெருவையும் வீடுகளையும் போய் செக் பண்ணி, தப்பித்தவறி அங்கே இருப்பவங்களையும் கீழே ஓட்டி விட்டுருவாங்க. எந்த வியாபாரமும் இல்லை. எல்லா ஹொட்டேல்களும் கூட இங்கே ஆறுமாசம்தான், வியாபாரம்.

இந்த ஊர்லே பள்ளிக்கூடமே  இல்லை.  வியாபாரிகளின் குடும்பங்கள் கூட இங்கே  நிரந்தரமாத் தங்கறது இல்லையாம். குடும்பம், பள்ளிக்கூடம் எல்லாம் கீழே ஜோஷிமத்தில் தான். நேத்து  பை வாங்குன கடையில்  வியாபாரிகளோடு கொஞ்சம் பேசுனதில்  இதெல்லாம் தெரிஞ்சது.

நாட்டின் கடைசி எல்லை மானா என்பதால்  அங்கேயும் யாரும் இருக்கக்கூடாது.  ரோந்து சுத்திக்கிட்டு இருக்கும் ராணுவம்தான் ஆறு மாசத்துக்கு ஊரையே   காப்பாத்திக் காவல் காக்குது!

இது சாமி ஊர். சாமிக்கான ஊர்.   சாமியை வச்சுத்தான் ஊரே!  சாமி இல்லைன்னா ஊரும் இல்லை!  மாதங்களில் நான் மார்கழியா இருக்கேன்னு சொன்னவன், ஊர்களில் நான் பத்ரியாக இருக்கேன்னு  வாய்விட்டுச் சொல்லலையே தவிர,  இது  அவனுக்கான ஊர்  மட்டுமே!  அவந்தான் ஊரே!

பனி காலம் முடிஞ்சு,  பனிக்கட்டிகள் எல்லாம் உருகிக்கரைஞ்சு  போனதும், சாலைகளைச் சரிபார்த்து எல்லாம் ஓக்கேன்னு சொன்னதும்,  ராவல்கள்  நல்லநாள் பார்த்து, பத்ரிநாராயணர் உற்சவரை மீண்டும்  மலையில் இருக்கும் கோவிலுக்குக் கொண்டு வந்து, கோவிலைத் திறப்பாங்க.

உற்சவர் கீழே போறதும், மேலே வர்றதும் எல்லாம் சின்னப் பல்லக்கில்தான்.  ஆட்கள்தான் சுமந்துக்கிட்டுப் போய் வர்றாங்களாம். பழைய கால சம்ப்ரதாயம் எல்லாம்  கொஞ்சம் விட்டுட்டு,  இனி வாகனத்தில் கூட்டிக்கிட்டுப்போய் வந்தால் நல்லதுன்னு எனக்குத் தோணுது!

நம்ம பக்கங்களிலும் பாருங்க.... சாமி திருவீதி உலா போகும்போது  இன்னும் நிறையக் கோவில்களில் ஸ்ரீபாதம் தாங்கிகள்தான் சுமந்துக்கிட்டுப் போறாங்க. சாமி மட்டுமுன்னாக்கூடப் பரவாயில்லை....   கிண் கிண்ணுன்னு இருக்கும்  நாலு பட்டர்களையும் வேற சுமக்கணும்.  சின்னதா ஒரு மோட்டர் வச்சு சாமித் தேரை இழுத்துக்கிட்டுப் போனால் என்ன? சாமி இதுக்கெல்லாமாக் கோச்சுக்கப்போறார்?   நம்ம அடையார் அநந்தபத்மநாபன் கோவிலில் இப்படி இஞ்சின் வச்சு இழுக்கறாங்க.  அந்தக் கோவிலெனக்கு ரொம்பவே பிடிச்சுப்போன காரணங்களில் இதுவும் ஒன்னு!

தீபாவளி முடிஞ்சு கீழே போன உற்சவர்,  நாம் ஜோஷிமத்தில் பார்த்த நரசிம்ஹர் கோவிலில்தான் தங்கி இருப்பார்.  இங்கிருந்து  அவரோடு போகும் ராவல் பண்டிட்கள்தான் தினசரி பூஜையை அங்கே அவருக்குச் செய்றாங்க.  இப்ப அருமையான பெரிய கோவில் ஒன்னு கட்டிக்கிட்டு இருக்காங்கன்னு பார்த்தோமே...  அது முடிஞ்சதும் இன்னும் கொஞ்சம் தாராளமா இவருக்கு இடம் கிடைக்கும். இப்போ அங்கே நல்ல நெருக்கடி, ஒரே கூட்டம் சாமி மேடையில் :-)
எல்லாம் ரெடி.  ஆள் வந்ததும் பூஜை ஆரம்பிக்கணும் :-)

மே மாசம் ஒரு நல்ல நாள்  பார்த்துப் பண்டிட்கள் சொன்னதும் (எல்லாம் க்ளியர்னு ஆர்மி தகவல் அனுப்புன பின்னேதான்) உற்சவர்  ஜம்முன்னு கிளம்பி  மேலே  கோவிலுக்கு வந்து சேருவார்.  கோவிலைத் திறந்து உள்ளே போனால்....  கருவறையில்  விளக்கு (ஆறுமாசம் முன்னாடி ஏத்தி வச்சுட்டுப் போனது) இன்னும் எரிஞ்சுக்கிட்டு இருக்குமாம்!!!

மனிதர்கள் நடமாட்டம் இல்லாத கோவிலுக்குள், தேவர்கள் வந்து இந்த ஆறுமாசமும் தங்கி  பெருமாளைப் பூஜிப்பதாக ஒரு ஐதீகம்.

கீழே ஜோஷிமட்டில் இருக்கும் உற்சவர் , இந்த வருசம் (2017) மே மாசம் 6 ஆம் தேதி இங்கே வந்துட்டார். கோவில் திறந்தாச்சு.

இந்தக் கோவில் மட்டுமில்லை.... சார்தாம்னு சொல்லும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கூட ஆறுமாசம் அடைப்புதான். பயணம் போக விரும்பும் அன்பர்கள்,  கோவில் திறந்துருக்கும் சமயம் எதுன்னு தீர விசாரிச்சுக்கிட்டுத் திட்டம் தீட்டுங்க.

நம்மூர் கோவில்கள் சிலதில், பொம்னாட்டி, பொடவை(தான்) கட்டிண்டு வரணுமுன்னு இல்லாத நக்ரா செய்யும்போது, இந்தக் கோவிலில்  புடவை வேணாம். பேசாம ஸல்வார் கமீஸ் போட்டுக்கிட்டு வான்னு சொல்லுது,   கோவில் மேனேஜ்மென்ட்! Women are advised to avoid sarees and opt for salwar kameez or trousers.  பேன்ட்ஸ் கூட ஓக்கேதானாம்!

இன்னும் கொஞ்ச நேரத்தில் ஊரைவிட்டுக் கிளம்பப்போறோமேன்னு நினைச்சதில் பத்ரி மேலே ஒரே  அன்பா வந்துச்சு. அதிலும் அந்த அர்ஜுனனை விட்டுப் பிரிய மனசே வரலை. இன்னொருக்காச் சட்னு உள்ளே ஓடிப்போய் அவனைப் பார்த்துட்டு வெளியில் வந்து  'சம்ப்ரதாயமான ஃபோட்டோ ஷூட்' முடிச்சுக்கிட்டுப் பாலம் வழியா நடந்து போறோம்.சின்னக்குட்டிங்க சிலர் ஒரு நாக்குட்டியை வச்சுக்கிட்டு ஓரமா வரிசையில் உக்கார்ந்துருந்தாங்க.  சனத்தைப் பார்த்ததும் சட்னு கை நீளுது.
 நாக்குட்டிக்குப் பாலு.....   வா. கடையில் வாங்கிக்கொடுக்கறேன்னதுக்கு  ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டு சிரிக்குதுங்க.  பத்துரூபாயை எடுத்து நீட்டுனார் நம்மவர்.அந்தாண்டை தப்த் குண்டில் புகை பறக்குது.  சுடுதண்ணி  அலக்நந்தாவில் வழியும் போது  நீராவி மண்டுது!  சனம் குளிச்சுக்கிட்டு  இருக்கு. நல்ல நடமாட்டம்.

பாலம் கடந்ததும், 'போயிட்டு வரேன்டா  பத்ரி' ன்னு  கோவிலைப் பார்த்து  கை கூப்பினேன்!
இருவத்திரெண்டரை மணி நேரம் தங்குன ஊரில் மூணு முறை கோவிலுக்குப் போக வாய்ச்சது  ரொம்பவே மகிழ்ச்சி!  இன்னும் ஒரு நாள் தங்கி இருந்து மற்ற இடங்களையும் பார்த்திருக்கலாம்தான். அதுக்கு 'அவன் அனுமதி  இல்லைன்னு நினைச்சுக்கிட்டேன்.

இங்கே  ஒரு ஆறு  விக்கிரஹம் (!!!) வாங்குனதைச் சொன்னேனோ? எல்லாம் குட்டி.  ஒன்னரை , ரெண்டு செமீ சைஸ்தான்:-)  நேபாளில் வாங்குனமே அதைப்போலவே....அந்த அர்ஜுனன்.....   இங்கே :-)
இந்த அர்ஜுனனைத் தேடிக்கிட்டே இருந்தேன். தேடல் தவம் பலிச்சுருச்சு. நாலு வருஷங்களுக்குப்பின் படம் ஒன்னு கிடைச்சது.  அதே அர்ஜுன் இல்லைதான். ஆனால் ஏறக்கொறையன்னு  சொல்லிக்கலாம்.  அந்த அர்ஜுன் இன்னும் அழகு!  உயரமும் கூடுதல்.   வலப்பாதம் இடது முழங்காலோடு ஒட்டியே இருந்தது. அதே வேணுமுன்னு இன்னும் தவம் செய்யலாமா ?  ஊஹூம்... நடக்காத வேலை. அதைப்போலன்னு சொல்லி இங்கே அந்தப் படத்தைச் சேர்த்துட்டேன்.  பார்த்துக்குங்க.  இதை ஒரு மாதிரிப் படமா வச்சுக்கிட்டு, நேரில் பார்க்கும்போது  ஆறு வித்தியாசம் சொல்லணும், ஆமா :-)


தொடரும்........:-)

Wednesday, June 28, 2017

அப்படி என்னவாம் விசேஷம் இந்த பத்ரியில் ? (இந்திய மண்ணில் பயணம் 23)

இந்தக்கோவிலில் அப்படி என்ன ஸ்பெஷல்? எதுக்காக சனம் இவ்ளோ ரிஸ்க் எடுத்து இங்கே வருது?  இதுக்கு நான் பதில் சொல்றதைவிட  வசிஷ்ட மஹரிஷி தன் வாயாலே என்ன சொல்லி இருக்காருன்னு  பார்க்கலாம்.
வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி பத்ரிநாத் தலத்தின் பெருமைகளை கூறுமாறு கேட்க வசிஷ்டர் கூறுகின்றார். " பத்ரிநாத்தை தரிசிப்பவன், அவன் எப்படிப்பட்ட பாவியாயினும், பக்தியினால் புனிதமடைந்து  மோக்ஷமும் அடைகின்றான். பத்ரிநாதரின் தரிசனம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. எவனொருவன் வாழ்நாள் முழுவதும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றானோ, அவனுக்குத்தான் பத்ரிநாதரின் தரிசனம் கிட்டுகின்றது. அவனுடைய பாவங்கள் நீங்கும். உள்ளம் தூய்மை பெறும். எந்த குற்றத்தை செய்தவனும், வேறெந்த க்ஷேத்திரத்திலும் அவனுடைய பாவங்களிலிருந்து விடுபட வழியின்றிப் போனவனும் கூட பத்ரிநாதரின் கருணையினால் சுவர்க்க லோகத்தை  அடைகின்றான்.  எவன் கங்கையில் நீராடி, உடைகளையும், ஆபரணங்களையும் பத்ரிநாதருக்கு சமர்பிக்கின்றானோ அவனுக்கு மோட்ச லோகத்தில் நிச்சயம் இடம் கிட்டும். எவன் அகண்ட தீபம் ஏற்றுகின்றானோ அவன் சிரேஷ்டராகின்றான். எவன் பத்ரிநாதரின் கோயிலை வலம் வருகின்றானோ, அவரது பாதாரவிந்தங்களை பற்றிக் கொண்டு பிரார்த்தனை செய்கின்றானோ அவன் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறுகின்றான்."

  இப்படியெல்லாம்  சிறப்பா, வசிஷ்டரே  சொன்ன   பத்ரிநாத்  கோவிலுக்கு  இன்னும் ஒருக்கா போய் தரிசனம் செஞ்சுக்கிட்டால் என்ன தப்பு?  இங்கெதானே இருக்கோம், இப்ப!  பழைய காலத்துலேதான்  பாதையே இல்லாம ரொம்பவே கஷ்டப்பட்டு, உயிரைப் பணயம் வச்சுப் பயணம் செஞ்சுருப்பாங்க.... இப்ப... ரொம்பவே நோகாமதானே  நோம்பு கும்பிட்டுக்கிட்டு இருக்கோம்?

மானா சாயாவை மறக்கலாமேன்னு  ரூம் சர்வீஸில் ரெண்டு டீ சொல்லிட்டு அது வந்தவுடன் குடிச்சுட்டுக் கிளம்பினோம்.  இப்பவே மணி அஞ்சாகுது.   சாயங்காலம் ஆச்சுன்னா    குளுர் வந்துரும். ஜாக்கெட் எல்லாம் போட்டுக்கிட்டுத்தான் போகணுமுன்னு நம்மவரின்  கண்டிப்பு வேற!    
வழக்கம்போல் (!) கடைவீதி முட்டுலே இறங்கி  சந்துக்குள்ளே நடந்து பாலத்தாண்டை போறோம். தெருவின் ஓரத்தில் மச்சு போல இருந்த இடத்தில் யாசகம் கேட்போர் வரிசையா உக்கார்ந்துருக்காங்க. அவுங்களுக்குப் போட சில்லறையா இல்லையேன்ற கவலையைப் போக்கும் வியாபாரம் ஒருத்தர் செஞ்சுக்கிட்டு இருக்கார் அதே வரிசையில்!

தூரக்கக் கோவில் வாசல்.  என்னா அலங்காரம்!  பளிச்னு  என்னா கலர்!  சேடிகளுக்கு நடுவிலே நிக்கிற ராஜகுமாரி போல ஜொலிப்பு!
படிகளில் கூட்டமில்லை!!   எல்லாரும் எங்கே போயிட்டாங்க?  கோவிலுக்குள்ளே இருக்காங்களோ?
மேலே தெரியும் கோவிலுக்கு முன்னால்  பெரிய வெளி முற்றம் இருக்கு.  அது உண்மையில் கீழே இருக்கும் ஒரு கட்டடத்தின் மேல்தளம்தான். மொட்டை மாடி.  அங்கிருந்தே  ரெண்டு ஓரங்களிலும்  படிகள்!  இடப்பக்கம் உள்ளது நாம் பாலத்தின் வழியாப் போனால் மேலே கோவிலுக்கு ஏறி இறங்கும் வழி.  வலப்பக்கம் உள்ளது  கீழே தப்த் குண்ட் (வெந்நீர் குளம்)  போய்வரும் வழி. படிகள் வரிசையைப் பார்த்தாலே  கோவில் எவ்ளோ உசரத்தில் கட்டி இருக்காங்கன்னு புரிஞ்சு போகுது!
பாலம் கடந்து படிகளேறிக் கோவிலுக்குள் போறோம்.  நினைச்சது சரிதான். எல்லாக் கூட்டமும் இப்போ உள்ளே!
மஹாலக்ஷ்மி சந்நிதிக்கு  முன்னால் இருக்கும்  கருவறைக் கட்டட வாசலையொட்டி  ஒரு வரிசை சனம்! ஆரத்திக்குக் காசு கட்டி இருக்காங்களாம். நாமும் ஒரு ஆரத்தி ஸேவை பார்க்கலாமான்னு  தோணுச்சு.  கவுன்ட்டரில்  கேட்டோம்.  மூணு வித ஆரத்தி ஸேவை.  கற்பூரம், வெள்ளி, தங்கம்!  கற்பூரம் கூடாதுன்னு நம்ம பக்கங்களில் சொல்றதில்லை?  அது வேணாம். சாமி முகத்துலே புகை படிஞ்சுரும். வெள்ளிக்கும் தங்கத்துக்கும் அப்படி ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை. ஐ மீன் கட்டண விவரத்தில் .... தங்கமே இருக்கட்டும்.

 காசைக் கட்டிட்டு, வரிசையில் போய் நின்னோம்.  கோவில் ஆள் ஒருத்தர் அப்பப்பக் கதவைத் திறந்துக்கிட்டு வந்து  கற்பூர ஆரத்தி மக்களைக் கூட்டிக்கிட்டுப்போறார்.  பத்துப் பதினைஞ்சு பேர் ஒரு  முறைக்கு....
மூணு மணியில் இருந்து ஆறு மணி வரை இந்த மாதிரி ஸேவைகள்.  சாமிக்கு இடதுபக்கக் கதவை மூடி வச்சுடறாங்க.  வலது பக்கக் கதவு (இப்ப நாம் நிக்கிறோமே அந்தப் பக்கக் கதவுதான்) அப்பப்பத் திறந்து மூடிக்கிட்டு இருக்கு.

 இந்தக் கோவிலில் பூஜை செய்ய ஒரு குறிப்பிட்ட  மக்களைத்தான் ஆதிசங்கரர் நியமிச்சுட்டுப் போயிருக்கார். கேரள நம்பூதிரிகள். இங்கே அவுங்களை  ராவல் னு சொல்றாங்க.  பாருங்க ....  எங்கே இருந்து எங்கே கொண்டுவந்து விட்டுருக்காருன்னு!  சொந்த மக்கள் அபிமானம் எல்லோருக்கும்தான் இருக்குல்லே? சந்நியாஸி உட்பட!  (சந்த்ர மண்டலத்தில் சேட்டனின் சாய்க் கடைன்னு கேலி  செய்யறது ....  உண்மையில் கேலியே இல்லையாக்கும்! )

நாம் காத்மாண்ட் லெமன்ட்ரீயில் சந்தித்த கோவிந்தன் நம்பூதிரி கூட , அவருடைய  உறவினர்  ஒருத்தர் இங்கே  கோவில் பண்டிட்டா இருக்காருன்னு  பெயர், செல் நம்பர் எல்லாம் கொடுத்துருந்தார்தான். ஆனால்....  வந்தவுடனே தரிசனம் கொடுத்துட்டாரே நம்ம பத்ரிநாராயணர்னு  பண்டிட்டைத் தொந்திரவு செய்யலை.

ஆரத்தி வரிசை குறைஞ்சு போயி, வெள்ளிக்கு வந்தாங்க....  அடுத்து நாம்தான்ன்னு இருந்தப்ப நீங்களும் வாங்கன்னு உள்ளே கூப்புட்டுப் போயிட்டாங்க.  கருவறை நிலைப்படிக்கு முன் இருந்த ஏழெட்டுப்பேர்களுக்குப் பின்னால் உக்கார இடம் இருந்தது.  அதுவும் நான் கொஞ்சம் உயரம் குறைவா இருக்கேனா....   என் கண்ணுக்கு நேரா கல்லாப்பெட்டிதான்  :-(  பாதி வாசலை அடைச்சுக்கிட்டு அது உக்கார்ந்துருக்கே!  நம்மவர், இடுக்கில் கஷ்டப்பட்டு  இன்னும் கொஞ்சம் வலது பக்கமா நகர்ந்து இப்பப் பார். சாமி தெரியுதான்னார். தெரிஞ்சவரைக்கும் ஆகட்டும்னு  தலையாட்டினேன்.

நீளக் கைப்பிடி உள்ள வெள்ளி  வால் விளக்குலே திரி போட்டு தீபம் ஏத்தி  முதலில் ஆரத்தி எடுத்தாங்க. அடுத்தாப்லே  தங்க வால் விளக்கு. தீபக்கரண்டி!  ஆர்த்தி ஆனதும் எல்லோரும் எழுந்து நின்னோம். ஒவ்வொருத்தரா கல்லாப்பொட்டியாண்டை போய்  அந்தாண்டை கை நீட்டி  சாமி ப்ரஸாதம் வாங்கிக்கணும். அதுக்கு முன்னால்  கல்லாப்பொட்டியில்  காசு போடணும். நமக்கு முன்னால் இருந்த  அத்தனை பேரும் போனபின் நாங்க பொட்டியாண்டை போறோம்.
கோபால்  அதுக்குள்ளே நோட்டுகளைப் போட்டார்.  அந்தாண்டை இருந்து ஒரு கை காஞ்சு போன துளசியைக் கொஞ்சம் பிய்ச்சு அவர் கையில் திணிச்சது. அடுத்து நான்.....   உள்ளே இருக்கும் பத்ரிநாராயணனைக் கைகூப்பி வணங்கினேன்...  ஹூம்.... என்றொரு உருமல்....  கல்லாப்பொட்டியைக் காமிச்சு காசு போடுன்னு செய்கை  காமிச்சது  அந்தக் கை. என் கையிலேதான் எப்பவுமே ஒன்னும் இருக்காதே கெமெராவைத் தவிர..... இப்ப அதுகூட இல்லை. கோபாலின் பேண்ட்ஸ் பாக்கெட்டில் இருக்கே அதுவும். நானும் சைகை மொழியில்   முன்னால் போனவர் போட்டுட்டாருன்னு  கையை வீசிக் காமிச்சேன்.  இன்னொரு காய்ஞ்ச துண்டு துளசி,  வீசி எறிஞ்சாப்லெ என் கைக்கு வந்தது. வாங்கி அங்கேயே சாமிக்கு முன்னால் போட்டுட்டு வந்துட்டேன்.

நம்மவர் கூடக் கேட்டார்.... 'ஏன் அங்கேயே  வச்சுட்டு வந்தே?'ன்னு.

'பெருமாளுக்குப் படைச்சுட்டேன்'னேன்.  ஆச்சு தரிசனம்.  கருவறையை வலம் வந்து தாயாரைக்  கும்பிட்டதும் அடுத்த ஸ்டாப் நேரா நம்ம அர்ஜுனன் கிட்டேதான்.

அப்பதான் அபர்ணாவைப் பார்த்தேன்.  ஸேவகி.  தன்னார்வலர்.  ஒடிஞ்சு விழறதுபோல் ஒல்லியான உடல்.  ரெண்டு வருசமா இங்கே இருக்காங்களாம். அர்ஜுனன் அழகை விஸ்தாரமாப் பேசிட்டு, பத்மாசனம் போட்ட பெருமாளுக்கு முன்னால் இருக்கும் சின்னூண்டு  உருவங்கள் யார்னு கேட்டதுக்கு, ஒரு விநாடி யோசிச்சவங்க   ஸ்ரீதேவி பூதேவின்னு சொன்னாங்க. தேவிகளுக்கான அம்ஸம் துளிகூட இல்லை. இவர்கள்   ஆழ்வார்களா இருக்கணும் என்றது என்  எண்ணம்.

இந்தக் கோவில்  108 திவ்யதேசங்களின் பட்டியலில் இருக்கு. ஆழ்வார்கள்    பாசுரங்கள் பாடி  மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்கன்னதும்,  கொஞ்சம் முழிச்சாங்க. நாம்தான் பெருமாள் பெருமாள்னு  திவ்யதேச தரிசனத்துக்காக ஓடுறோமே தவிர, வடக்கீஸ்  பொதுவாக, தென் நாடுன்னா   ராமேஸ்வரம்தான்னு  இருந்துடறாங்க. அதுக்கு வர்ற வழியிலே இருப்பதால்  மீனாக்ஷியும் கொஞ்சம் இதுலே சேர்த்தி.

அபர்ணா , குடும்பவாழ்வில் ஏராளமான மனக்கசப்பை  அனுபவிச்சுட்டு, இங்கே வந்தவங்க. வந்த புதுசுலே கோவிலில் நிறைய பெண் ஸேவகிகள் இருந்துருக்காங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பலரும் கிளம்பிப் போயிருக்காங்க. 'போக்கிடம் இல்லாமப்போச்சு.... அதுதான் பத்ரியே கதின்னு இங்கேயே இருந்துட்டேன்'னு  சொன்னப்ப எனக்கு மனசுக்குப் பேஜாராப் போயிருச்சு.  பல சமயங்களில் குடும்பமே இப்படி கொஞ்சநஞ்சம்   இருப்பதையும் உருவிக்கிட்டு விட்டுருதே....  :-(

இத்தனை பேச்சும் அந்த அர்ஜுனன் முன்னால் நின்னுக்கிட்டுதான். நம்மவர் போய்  பிரகாரத்தின் ஒரு பக்கம்  படிக்கட்டில் உக்கார்ந்துக்கிட்டு இருந்தார்.  அவரிடம் போய் ஒரு தொகை வாங்கிவந்து அபர்ணாவின் கையில் திணிச்சேன். 'எனக்கு வேணாம், மாதாஜி'ன்னு சொல்லும்போது அபர்ணாவின் கண்ணில் மளமளன்னு கண்ணீர்.   இளம்விதவைகள் நிலை, வடநாட்டில் ரொம்பவே  கொடூரம்தான். 'வச்சுக்குங்க  அபர்ணா.  உங்களுக்கு எதாவது செலவுக்கு ஆகும்.  வேணவே வேணாமுன்னு நினைச்சா.... யாராவது ஏழைகளுக்கு  இதுலே சாப்பாடு வாங்கிக் கொடுங்க'ன்னுட்டு  அவுங்களை கட்டிப்பிடிச்சு  தோளில் தட்டிக் கொடுத்துட்டு  வந்தேன். ஆறுதலை இப்படிக்  காமிச்சது  சரிதானே?

 காலையில்  நாலரைக்குக் கோவில் திறந்துருவாங்க,  வருவீங்கதானேன்னு  கேட்டதுக்கு  ஆமாம் இல்லை னு ரெண்டுக்கும் பொதுவா ஒரு தலை ஆட்டி வச்சேன்.  வந்துட்டாலும்.....  மைண்ட் வாய்ஸ்தான்....

அப்பதான் ஞாபகம் வந்துச்சு... இந்த வதரி மரத்தை இன்னும் பார்க்கலையேன்னு.... அபர்ணாவிடம்  கேட்டதுக்கு, தப்த் குண்ட் பக்கம் நிக்குதேன்னாங்க.  ஆமாம்... எதோ மரம் பார்த்த நினைவு. ஆனா அதுதான் இதுன்னு தோணலை பாருங்க.......

 கருவறையைப் படம் எடுக்கக்கூடாதுன்றது கூடச் சரி. ஆனால்      கோவிலுக்குள்ளே பிரகாரம் கூடப் படம் எடுக்கக்கூடாதுன்னு  விதிச்சு இருக்கறதை  நொந்துக்கிட்டேன்.  அந்த அர்ஜுனனை உங்களுக்குக் காட்டமுடியலை பாருங்க  :-(

உங்களுக்கு அதிர்ஷ்டம்தான் போங்க....

இந்த அர்ஜுனனைத் தேடிக்கிட்டே இருந்தேன். தேடல் தவம் பலிச்சுருச்சு. நாலு வருஷங்களுக்குப்பின் படம் ஒன்னு கிடைச்சது.  அதே அர்ஜுன் இல்லைதான். ஆனால் ஏறக்கொறையன்னு  சொல்லிக்கலாம்.  அந்த அர்ஜுன் இன்னும் அழகு!  உயரமும் கூடுதல்.   வலப்பாதம் இடது முழங்காலோடு ஒட்டியே இருந்தது. அதே வேணுமுன்னு இன்னும் தவம் செய்யலாமா ?  ஊஹூம்... நடக்காத வேலை. அதைப்போலன்னு சொல்லி இங்கே அந்தப் படத்தைச் சேர்த்துட்டேன்.  பார்த்துக்குங்க.  இதை ஒரு மாதிரிப் படமா வச்சுக்கிட்டு, நேரில் பார்க்கும்போது  ஆறு வித்தியாசம் சொல்லணும், ஆமா :-)

இப்படி இருக்குமிடத்திலும் கூட யாரோ கருவறையைப் படம் புடிச்சுருக்காங்க. கூகுளாண்டவர் அருளிச்செய்தார்! அதைத்தான் மேலே போட்டுருக்கேன்.
கோவிலைவிட்டு வெளியே வந்து  பத்து நிமிட் போல சிம்ம வாசல்   வெளிப்படிக்கட்டில்  உக்கார்ந்துருந்துட்டு பாலத்துக்கு வரும் வழியில்  வலதுபக்கமாப் போகும் வழியில் என்னதான் இருக்குன்னு பார்க்கப்போனால்...


ரெண்டுபக்கமும் அடை அடையாக் கடைகள். சாமிச்சாமான்கள்தான். போர்டில் பார்த்த சரண்பாதுகா என்ற  இடம் எங்கெருக்குன்னு  விசாரிச்சதில்...  இப்படியே ஒரு அரைக்கிமீ தூரம் நடந்து, அப்புறம் லெஃப்ட்லே போகணுமாம்.  பாமனி காவ் வரும் அதையும் தாண்டி மலைப்பாதையில்  போகணும்.  எல்லாம் அஞ்சாறு கிலோமீட்டர்....   'ஆமாம்... இப்ப இருட்டுனபிறகு எப்படிப் போவீங்க?'
ஐயோ.... அதானே...  இருட்டிப்போச்சே.... இனி போகத்தான் முடியாது :-(

 (மனசுக்குள்ளே ஒரு ஆசுவாசம்.... ஆறு கிமீ? )

அங்கே என்ன விசேஷமாம்?  மஹாவிஷ்ணுவின் பாத அடையாளம் இருக்காம் ஒரு குகைக்குள்ளிலே.....  இருக்கட்டும்.    வலைக்கண்ணில் பார்த்துக்கலாம்....

திருமங்கை கூட மனக்கண்ணில் பார்த்துத்தான் முதலில் பாடி இருப்பார்....   பாரோர் புகழும் வதரின்னு ஆரம்பிச்சு....  நிறுத்தாம  சரசரன்னு  மடலூர்தல் வரை பாடிக்கிட்டே போனால்  என்னன்னு சொல்றது?

பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊராய வெல்லாம் ஒழியாமே நானவனை
 ஓரானை கொம்பொசித் தோரானை கோள்விடுத்த
சீரானைச் செங்கணெடியானைத் தேந்துழாய்த்
தாரானை தாமரைபோல் கண்ணனை யெண்ணருஞ்சீர்ப்
பேராயிரமும் பிதற்றி பெருந்தெருவெ.....

22 பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார். நம்ம பெரியாழ்வாரும் விட்டு வைக்கலை!


பாலம் கடந்து  கடைகளைத் தாண்டினதும் தெருமுக்கிலேயே இருந்த முகேஷ் நம்மைக் கண்டுக்கிட்டு  வண்டியைக் கொண்டு வரேன்னு போனார். இருட்டுலே எங்கே போய் தேடுவாங்கன்னு நினைச்சுருக்கலாம்.  கண்ணுக்கு முன்னால் இருந்த ஒரு கடைக்குள் எட்டிப் பார்த்தேன்.  ஷால், போர்வை, கம்பளின்னு விக்கறாங்க.  ஒரு ஜோல்னாப் பை ஆப்டது. யானை  பார்டர்!  வாங்கியாச். ஆனால் அந்தப் பை எவ்ளோ வசதியா இருக்குன்னு  பாக்கிப் பயணத்தில் தெரிஞ்சுக்கிட்டேன்.  அருமை.
ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். அஞ்சு முகமும் பளிச்ன்னு எரியும் குத்துவிளக்கு ! நாராயணனும் புள்ளையாரும்  அமைதியா இருக்காங்க.
அப்புறம் எட்டரைக்குச் சாப்பிடப்போனோம். பஃபே டின்னர்தான்!

காலையில் சீக்கிரம்  எழுந்தால் .....  கோவிலுக்கு இன்னொருக்காப் போய் வரலாம்.  சரியா?

குட்நைட்.

தொடரும்...........  :-)


Monday, June 26, 2017

மானா....... போனா.... சாயா .... (இந்திய மண்ணில் பயணம் 22)

ஒரு மணிக்கு எழுந்த   நம்மவர், கிளம்பும்மா போய் சாப்பிடலாமுன்னு  தயாராகி, முகேஷுக்கும் சேதியை செல்லில் சொன்னதும் கீழே போனோம்.  கடைத்தெருவில் எதாவது கிடைக்குதான்னு பார்க்கணும். ஒரு கிமீ தூரம் தானே?  BRO Camp ஏரியா தாண்டித்தான் போய் வந்துக்கிட்டு இருக்கோம். யாரும் ஒன்னும் சொல்லலை. ஆர்மி ஆட்கள் நடமாட்டம் இருக்கு.


கடைவீதியில் சர்தேஸ்வரி ரெஸ்ட்டாரண்ட், பார்க்கக் கொஞ்சம் பரவாயில்லை. பூரா தேசத்துக்கும் அவுங்கவுங்க ஸ்டைல் சாப்பாடு போடறாங்களாம். சர்தேஷ் !
மக்கே தி ரோடி, ஸர்சோங் தா ஸாக் ன்னு பஞ்சாபில் ஆரம்பிச்சு குஜராதி, மார்வாடி, மஹாராஷ்ட்ரியன், கத்வாலி, இந்தோரி, தமிழனுக்கான தாலி (மீல்) வரை இருக்கு. அதுவும் ப்ரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர்னு மூணு வேளையும் அவுங்கவுங்க சாப்பாடே போட்டுருவாங்களாம்! சைனீஸைக்கூட விட்டு வைக்கலை :-)நமக்கு  மஸால்தோசா!  பரவாயில்லை. சட்னி கூட ஓக்கே. ஆனால் சாம்பார்.....
சாப்பிட்டதும் மானாவுக்குப் போறோம்.  வெறும் மூணு கிமீ தூரம்தான்.  இந்திய எல்லைக்குள்ளே இருக்கும் கடைசி கிராமம்.  இங்கே  போகலைன்னா பத்ரிநாத் யாத்திரை பூர்த்தி ஆகாது :-)


கிராமத்தின் எல்லை தாண்டி மலைக்கு மேல் ஏறிப்போய்  அப்புறம் மலைக்கு இடையில் இருக்கும் கணவாயைத் தாண்டுனா அடுத்த நாடு  திபெத் வந்துரும். மொத்தமே  இருவத்திநாலு கிமீதான். அதான் BRO  ஆட்கள் ரோந்து சுத்திக்கிட்டே இருக்காங்க.
ஆர்மி ஏரியா, படம் எடுக்கக்கூடாதுன்னு என்னை மிரட்டிக்கிட்டே வந்தார் நம்மவர் :-(   கிராமத்துக்குள்ளே வந்து இறங்கினா எல்லோரும்  செல்ஃபோனில் படம் எடுத்துத் தள்ளிக்கிட்டு இருக்காங்க.


இந்த மானாவின் மொத்த சனத்தொகையே ஒரு அறுநூறுதான். வீடுகள் ஒரு நூத்திஎம்பதுன்னு சொல்றாங்க. முக்கால்வாசி, தகரக்கூரை போட்ட குடிசைகள்தான்.  ஒரு கடைவீதி. இதுதான் இந்தியாவின் கடைசி கிராமம்னு அலங்கார வளைவு வேற!


கடல்மட்டத்தில் இருந்து பத்தாயிரத்து நூத்திமுப்பத்திமூணரை அடி உயரத்துலே  இருக்கும் ஊர்.   ரெண்டு பக்கமும்  சேர்த்தே   ஒரு நாப்பது கடைகளைத் தாண்டினதும்  நமக்கு வலதுபக்கம் மலைச்சரிவை ஒட்டியே சில கடைகள்.  நமக்கிடது பக்கம் பள்ளத்துலே  ஆறு!  தண்ணி  கொஞ்சூண்டுதான்.....  உண்மையில் இது சரஸ்வதி நதியில் இருந்து வரும் தண்ணீர்தானாம்.  பூமிக்குள் இறங்கிய சரஸ்வதி , அலக்நந்தாவுடன்  கலந்துருது.


முதுகுலே கூடையைக் கட்டிக்கிட்டு இருக்கும் இளைஞர்கள்,  ரொம்ப உற்சாகத்தோடு, வா வான்னு வரவேற்கறாங்க.  நம்மை அந்தக் கூடையில் உக்காரவச்சுச் சுமந்துக்கிட்டு  மலைக்குகைகளுக்குக் கொண்டு போய் காமிப்பாங்களாம். எல்லாம்  ஒரு இருவது வயசு இருந்தாலே அதிகம்.  ஐயோ....  இந்தப்புள்ளைங்க முதுகுலேயான்னு  மனசு நடுங்கிப் போச்சு.
அடி சிறுத்து  மேல்பக்கம் அகலமா இருக்கும் கூடையில்  பாதியை வெட்டுனாப்போல பின்னி இருக்காங்க.  அடி வட்டத்துலே நாம் உக்கார்ந்துக்கிட்டால்  அப்படியே  முதுகிலே சாய்ச்சுக்கிட்டு நடப்பாங்க. நாம்  மல்லாக்கப்போட்ட தவளையைப்போல்  வானம் பார்த்துக்கிட்டு போகணும்.... கொஞ்சம் ஒல்லி உடம்புன்னா ரெண்டு பேருக்கும்  நல்லது.  கூடையில் குண்டுன்னா.... அவ்ளோதான்... பாவம்...பையன்.இதுலே 'நீயெல்லாம் ஒரு குண்டே இல்லை. எவ்ளோ  குண்டான  பொம்பிளை யெல்லாம் பத்திரமாக் கொண்டு போய் கொண்டாந்துருக்கேன் தெரியுமா?  ஆமாம் தானே... நீ சொல்லு நீ சொல்லு'ன்னு சகாக்களைச் சப்போர்ட்டுக்குக் கூப்புடறாங்க.

என்னால் நடக்கவும் முடியாது.  சுமக்கவிடவும் மனம் இல்லை. மேலும்  உயரம் அதிகம் என்றதால் ஆஸ்த்மா மெல்ல வேலையைக் காமிக்குது. நம்மவர் மட்டும் மேலே போய் பார்த்துட்டு வரேன்னார்.  என் கண்ணைக் கொடுத்து  அனுப்பினேன்:-)
அவர் திரும்பி வரும் வரை, இளவெயில் காய்ஞ்சுக்கிட்டு வேடிக்கைதான்.  படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் மச்சு  போல ஒரு இடத்தில் உக்கார்ந்துருந்தேன்.   போறவங்க வாரவங்க எல்லாம் என்னைக் கடந்துதான்......


பால்கி பையர்கள் அங்கேயே சுத்திக்கிட்டு இருக்காங்க.  ரொம்ப ஒன்னும் கிடைக்கறது இல்லையாம்.  மிஞ்சி மிஞ்சிப்போனால் ஆறுமாசம் சம்பாரிக்கறதுதான்.  அதுவும் குளிர் காலம் முடிஞ்சாலும் மேலும் ஒரு மாசம்வரை பயணிகள் வரத்து கம்மிதானாம்.
"அப்ப குளிர்காலத்துலே என்ன செய்வீங்க?  "

"இங்கே யாரும் தங்கமாட்டோம். எல்லாத்தையும் அப்படியப்படியே விட்டுட்டு,  கீழே போயிருவோம்.  நாங்க வளர்க்கற கோழி, ஆடுகளையும் கூட்டிக்கிட்டுதான் போவோம்.  தப்பித் தவறியும் கூட தங்க விடமாட்டாங்க மிலிட்டரிக்கார்.   வீடெல்லாம் அப்படியே பனிக்குள்ளே போயிரும். திரும்பி வந்துதான் எல்லாத்தையும் சுத்தம் செஞ்சு திரும்ப வாழ்க்கையை ஆரம்பிப்போம் "

ஆறுமாசத்துக்கு   ஒருமுறை  இப்படியா? நினைக்கவே பேஜாராத்தான் இருக்கு.  அந்த ஆறுமாசத்தையும் விடறதில்லை... வீட்டுக்கு முன்னாலே, பக்கத்துலே இருக்கும் கையகல  இடத்தில் பூச்செடிகளும், காய்கறிகளுமா பயிர் செஞ்சுருக்காங்க.
வாழ்க்கைமேல் எப்படி ஒரு பிடிப்பும் தன்னம்பிக்கையும் இருக்கு பாருங்க!  நமக்கோ ஒரு குறிப்பிட்ட வருமானமும், வசதிகளும் இருக்கும்போதும் எதுக்கெடுத்தாலும் சலிச்சுக்கறோமேன்னு....    ஆனாலும் ரொம்பத்தான் ஆகிக்கிடக்கு நமக்கு....   :-(

குழாயாண்டை ஒரு அம்மா  டெனிம் பேண்ட் ஒன்னைத் துவைச்சுக்கிட்டு இருந்தாங்க. பையனுடையது போல!  கல்லில் ஈரப்பேண்ட்டை விரிச்சுப்போட்டு, சோப்புத்தூள் பாக்கெட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்துத் துணியில் தடவிக்கிட்டு இருந்தாங்க. அப்படியே தேய்ச்சுட்டு, குழாய்த்தண்ணியில் நேரடியாக் காமிக்கிறாங்க. துவையல் ஆச்சு!  ஒரு பக்கெட் வச்சுக்கக்கூடாதோ?  அதுகூட ஒரு ஆடம்பரமா இருக்குமோ என்னவோ....
மேலேறிப் பார்க்கப்போன நம்மவர் ஒரு அம்பது நிமிட்லே திரும்பி வந்தார். தனியா இருக்கேனேன்னு அவசர அவசரமாத் திரும்பிட்டாராம்.  ஒரு குகைக்குள்ளே ஜோன்னு தண்ணீர் பாயுது. சரஸ்வதி நதியாம்.
ஒரு சின்னக்கோவில் சரஸ்வதிக்கு  இருக்கு.  பீமனுக்கு ஒரு குளம் வேற !

இன்னொரு குகையை வியாஸ் குஃபான்னு சொல்றாங்களாம். அங்கேதான்  வேத வியாஸர், மஹாபாரதக் கதையை யோசிச்சுச்  சொல்லச்சொல்ல புள்ளையார் உக்கார்ந்து  எழுதுனது. படங்களைப் பார்த்துக்கிட்டேன்.

குகைக்குள் சரஸ்வதி அப்படியே குபுகுபுன்னு  பொங்கி வர்றதைப் பார்த்ததும்....   அடடா.... கோட்டை விட்டுட்டேனே.... கொஞ்சம் கஷ்டப்பட்டு ஊர்ந்தாவது  போய்ப் பார்த்திருக்கலாமென்னு தோணியது உண்மை.
அடுத்தாப்லெயே  கணேஷ் குஃபா இருக்கு. இங்கிருந்து ஒரு ஆறு கிமீ மேலே  ட்ரெக்கிங் போகணும். போனால்?  பெரிய நீர்வீழ்ச்சி ஒன்னு பார்க்கலாம். வசுதாரா ஃபால்ஸ்.  நானூறு அடி உசரத்துலே இருந்து  கொட்டும் தண்ணீர்....  இதுதான் அலக்நந்தா நதிக்கான ஆரம்பம்.  அங்கெல்லாம் ஏறிப்போக கால் உரம் வேணாமா?    நோகாம இருந்த இடத்தில் இருந்தே  வலையில் பார்த்துக்கலாம். ஹிமாச்சல் க்ளேஸியர் (பனிப்பள்ளத்தாக்கு )  தண்ணீர்தான் நீர்விழ்ச்சியா இறங்குதாம்.  வற்றாத ஜீவநதி கங்கைக்கான ஆதாரம் இது.

இதேமாதிரி மலை உச்சியில் இருந்து இறங்கும் பிரமாண்டமான நீர்வீழ்ச்சி ஒன்னு  இங்கெ நியூஸியின் தெற்குத்தீவில்,  508.53 அடி உசரத்துலே இருந்து கீழே பாய்ஞ்சுக்கிட்டே இருக்கு!  பல வருசங்களுக்கு முன்னால் அங்கே போனப்ப,   ஆகாய கங்கை இதுன்னு நினைச்சு,  ' இனி  நம்மூரு கங்கையைப்  பார்க்கலைன்னாக் கூடப் பரவாயில்லை' ன்னு  சொல்லவும் செஞ்சேன். 
   மேலே  படம்:  நியூஸியின் ஸ்டெர்லிங் ஃபால்ஸ்.

அப்போ நம்ம கண்ணாலே கங்கையைப் பார்ப்போமுன்னு   கனவுலேகூட நினைச்சுப் பார்க்கலை!  ஆனால் இப்போ  கங்கையைப் பல இடங்களில் பார்த்த பிறகு, மறுபடி இதே ஸ்டெர்லிங் ஃபால்ஸ் பார்க்கவும் ஒரு  மூணரை மாசத்துக்கு முந்தி ஒரு ச்சான்ஸ் கிடைச்சது.  கிட்டக் கொண்டு போகும் படகில் நின்னு பார்த்து ஆனந்திக்கலாம், தொப்பலா நனைஞ்சுக்கிட்டே!

நாட்டின் கடைசி கிராமத்தில்  கடைசி  டீக்கடையில் சாயா குடிக்கணும் என்பது இப்போ ஒரு  ரிச்சுவல் ஆகிக்கிடக்கு. அந்தக் காலத்தில் யாரோ ஆரம்பிச்சு வச்சுருக்கலாம். இப்ப அங்கங்கே 'கடைசி டீக் கடை' இருக்கு :-)

ஒரு காஃபி ஷாப் கூட வந்துருக்கு.  நாமும் ஒரு கடையில் டீ சொன்னோம்.  கடுப்பமா ஒன்னு கிடைச்சது. பொட்டிக் கடைகளில்  டீ போட்டுக் கொடுக்கறாங்க.  என்ன பாலோ.... ஒரு வாசனை.....   வாங்கி வாயாண்டை கொண்டு போனதுமே தெரிஞ்சுருச்சு.  நைஸா... அங்கேயே வச்சுட்டேன்.

மணி மூணாகுதேன்னு கிளம்பி அறைக்கு வந்துட்டோம்.   கோவில்  மூணு மணிக்குத் திறக்கறாங்க என்பதால்  கொஞ்ச நேரத்துலே கிளம்பி கோவிலுக்குப் போகலாமா?

தொடரும்......    :-)  

PINகுறிப்பு:  ஆர்வம் உள்ளவர்கள் பார்க்க அன் எடிட்டட்  மானா ஆல்பம் இங்கே :-)