Wednesday, May 31, 2006

நியூஸிலாந்து பகுதி 40


நிலத்தை வளைச்சுப்ப்போட்டு விவசாயம் பண்ண ஆரம்பிச்சவங்க, விளைஞ்சதையும், வளர்த்த மிருகங்களையும்(அட, இந்த ஆடு, மாடு, கோழி இதுகளைச் சொல்றேன்) வித்து வியாபாரம் செஞ்சு நாலு காசு பார்க்கணுமா இல்லையா?எல்லாத்தையும் அவுங்களே சாப்புட முடியுமா?


இங்கே இருந்து இங்கிலாந்துக்கு, அதான் அவங்க சொந்த நாட்டுக்கே பொருட்களையெல்லாம் கப்பல்லே ஏத்தி அனுப்பியிருக்காங்க. 1880களிலே ஆட்டு ரோமத்துக்கு இருந்த விலை மதிப்பு ரொம்பக் குறைவாப் போச்சு. கொஞ்சக்காசுக்கு ஏற்றுமதி பண்ணறதும், நிறையக்காசு கொடுத்து அங்கே இருந்து மத்த சாமான்களும் வாங்குனா கஷ்டம்வராம என்ன செய்யும்?


சின்ன ஊர்களிலே இருந்தவங்க எல்லாருக்கும் வேலை வாய்ப்பில்லாமப் போச்சு. நிறையப்பேருக்கு அவுங்க செஞ்சுக்கிட்டு இருந்த வேலையே போச்சு. வசதியே இல்லாத வீடுகள், சரியான சாப்பாடு இல்லாத குறைன்னு குழந்தையும் குட்டியுமாக் குடும்பத்தோட கஷ்டம். அரசாங்கமும் இவுங்களுக்கு ஒண்ணும் உதவி செய்யலை.


தொழிற்சாலைகளோட நிலையோ இன்னும் மோசம். ஆட்கள் ரொம்ப நேரம் வேலை செய்யணுமாம். எட்டுமணி நேரம்னு கணக்கெல்லாம் இல்லை. 'இஷ்டம் இல்லையா போ. உன் வேலையைச் செய்ய ஆள் இங்கே க்யூலே நிக்குது'ன்னுஇருந்துச்சாம். சரியான வெளிச்சம் கிடையாது. மெஷீன்லே வேலை செய்யறப்ப பாதுகாப்பு நடவடிக்கைன்னு ஒண்ணும் இல்லை.ச்சின்னவயசுப் பசங்களும் பொண்ணுங்களும் வேலைக்கு சேர்ந்துட்டாங்க. எல்லாம் அப்பா,அம்மாவுக்கு உதவியா இருக்கணுமேன்னுதான்.


1882லே முதல்முறையா, ஃப்ரீஸ் செஞ்ச இறைச்சியை ஒரு கப்பல்லே ஏத்தி பிரிட்டனுக்கு அனுப்புனாங்க.அந்தக்கப்பலுக்குப் பேரு 'டனேடின்'. ( இந்தப் பேருலே இங்கே ஒரு ஊர் இருக்கு. டச்சு நாட்டைச் சேர்ந்தவங்க நிறையப்பேர் அங்கே செட்டில் ஆயிருந்தாங்களாம்) இந்தக் கப்பலின் உடல்பகுதி (hull) இரும்புலே செஞ்சிருந்தாங்களாம். ஃப்ரீஸிங் மெஷினரி ஒண்ணும் உள்ளெ வச்சிருந்தாங்களாம். இந்த இறைச்சி கெட்டுப் போகாம நல்லபடியாப் போய்ச் சேர்ந்திருக்கு.நல்ல காசும் கிடைச்சதாம். கிலோவுக்கு ஒரு ஷில்லிங்கும், ஆறு பென்ஸும். அப்ப இது பெரிய லாபமாம்.


இதுக்கிடையிலே இங்கே ரெயில்பாதை போடறது, தபால்தந்தி ஆஃபீஸுங்க, டெலிஃபோன் நெட்வொர்க் போடறதுன்னுவேலைங்க கொஞ்சம் கொஞ்சமா நடந்துக்கிட்டுத்தான் இருந்துச்சு. ஆனாலும் ஜீவனம் கஷ்டமாத்தான் இருந்துச்சாம்.


இந்த நிலமை கொஞ்சம் அடங்குனவுடனே மளமளன்னு மத்த முன்னேற்றங்கள் ஆரம்பிச்சுச்சு. வெள்ளைக்காரங்க வந்த புதுசுலே இந்த பென்னிஃபார்திங்னு சொல்ற சைக்கிள்களை அவுங்க நாட்டுலே இருந்தே கொண்டு வந்திருந்தாங்க. அதாங்க ஒரு ச்சின்னசக்கரமும், ஒரு பெரிய ஜெயிண்ட் சக்கரமும் வச்சது. அதுலே எப்படித்தான் ஏறிப் போனாங்களோ?
இந்தக் காலக்கட்டங்களிலே பொம்பளைங்களுக்குன்னு இருந்த உடைகள் எங்கியாவது ம்யூஸியத்துலே இருந்தாப் பாருங்க. அப்படியே பிரமிச்சு நின்னு போவீங்க. ச்சின்ன இடுப்பா இருக்கணும். ஆனா பாவாடைஅடிப்பாகம் பெரிய வட்டம். நம்மூர்லே கோழிக்குஞ்சுங்களை அடைச்சு வைக்கிற பஞ்சாரம் பார்த்திருக்கீங்களா?அதுக்குள்ளே நுழைஞ்சுக்கிட்டு அதோட மேல்பாகத்தை இடுப்புலே கட்டிக்கிட்டு நிக்கிற மாதிரி. அடுக்கடுக்கா துணிங்க. இது வெளியே போட்டுக்கிட்டுப் போறதுக்கு மட்டும். வீட்டுலே இருக்கப்ப பாதம்வரை நீளமா இருக்கற லாங் ட்ரெஸ்.


இப்ப 1888 லே டயமண்ட் ஃப்ரேம் வச்ச காத்து அடிச்சு ஏத்தற ட்யூப்,டயர்னு மாடர்னா சைக்கிள்ங்க வந்துருச்சு. ஏறி உக்காந்து மிதிச்சா அப்படியே 'ஸல்'ன்னு போகுது. கஷ்டப்படாம சுலபமா ஒரு நாளைக்கு80 லே இருந்து 120 கிலோ மீட்டர் ஈஸியாப் போயிட்டு வந்துரலாம். முக்கியமா செலவு கம்மி.
குதிரையிலே ஏறிக்கிட்டு, இம்மாந்தூரம் போறது ஒரு கஷ்டமுன்னா, அதுக்கும் சாப்பாடு, தீவனம் எடுத்துக்கிட்டுப் போகணும். அங்கங்கே அதுக்கும் ரெஸ்ட் கொடுக்கணும். தண்ணி காமிக்கணும். இந்த வேலையெல்லாம் சைக்கிளுக்கு இல்லை பாருங்க.


அப்பப்பார்த்து இங்கே எலக்ஷனும் வந்துச்சு. ஜெயிச்சது லிபரல் கட்சி. எல்லா ஜனங்களுக்கும் நல்ல வாழ்க்கைஅமைச்சுக் கொடுக்கறோமுன்னு வாக்குறுதி கொடுத்து ஜெயிச்சாங்க.


இங்கே மொதமொதல்லே கவர்மெண்ட் ஆஃபீஸ்னு ஆரம்பிச்சு வேலை நடந்துக்கிட்டு இருந்தப்ப (அதான் அந்த'வைட்டாங்கி ஒப்பந்த்தம் 1840 லே நடந்துச்சே, அதுக்கு அப்புறமா) அரசியல் கட்சிங்கன்னு ஒண்ணும் ஆரம்பிச்சிருக்கலை. 1853 லே இங்கிலாந்துலே இருந்து நியூஸிக்கு வந்த Henry Sewell ன்ற 46 வயசுக்காரர், இங்கே வந்து சேர்ந்ததும்கிறைஸ்ட்சர்ச் டவுனுக்கு M.P.யா ஆனார். ஏன்னா இங்கே வர்றதுக்கு முன்னாலேயே அவர் லண்டன்லே இருந்தப்பவே நியூஸிலாந்து கம்பெனின்னு அங்கே ஒண்ணு இருந்துச்சு பாருங்க, அதுலே உதவி சேர்மனா இருந்திருக்கார். இவர் வக்கீலுக்குப் படிச்சவர்.


இப்படியே ஒரு மூணு வருசம் இங்கே இருந்த பிரிட்டிஷ் காலனிக்கு எக்ஸிக்யூடிவ் மெம்பரா இருந்தார்.மேலிடம் இவரைக் கூப்புட்டு பிரதமரா இருக்கச் சொல்லிருச்சு. இவர்தான் இந்த நாட்டின் முதல் பிரதமர்.1856வது வருஷம்.


இவரோட பதவிகாலம் ரெண்டே வாரம்தான்! இவருக்கப்புறம், அடுத்து வந்த 34 வருசங்களிலே 11 பேர் பிரதமர்களா இருந்துருக்காங்க. ரெண்டு மாசம், ஒரு வருசம் இப்படி பல விதமா.


இந்த லிபரல் கட்சிதான் மொதல் அரசியல் கட்சியா உருவானது.


புது அரசாங்கம் என்ன செஞ்சது?


இதை அடுத்த வகுப்புலே பார்க்கலாம்.

பிகு: தாணு கேட்டுக்கொண்டபடி பழைய காலத்து போஸ்ட்டீயோட படம்.
கிடைச்சது. போட்டுருக்கேன்.

Monday, May 29, 2006

நியூஸிலாந்து பகுதி 39


இப்பக் கையிலே கொஞ்சம் காசு பொரள ஆரம்பிச்சிருச்சு. நாமே எப்பவும் வீட்டுவேலை செஞ்சுக்கிட்டு இருக்க முடியுமா?அங்கெ இங்கிலாந்துலே பணம் படைச்சவங்க வீட்டுலே வேலைக்காரர்கள் இருக்கறதையெல்லாம் பார்த்த ஞாபகம்இன்னும் இருக்கே. அதனாலெ வீட்டு வேலைக்கு ஆள் வேணுமுன்னு அங்கே இங்கிலாந்துலேயே விளம்பரம் கொடுத்துப் பார்க்கலாமுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. சிலர் அதையும் செஞ்சாங்க.


ஆனா, எல்லாருக்கும் இந்த சொகுசு வாழ்க்கை கிடைக்குமா? ஆம்புளைப் பசங்க எல்லாம் பண்ணை வேலைக்கும்,ச்சின்னச்சின்ன பேக்டரி வேலைக்கும்,பொட்டைப் புள்ளைங்க எல்லாம் வீட்டு வேலைக்கும் போய்க்கிட்டு இருந்துச்சுங்க.வயசு என்னன்றீங்க? பதினொண்ணு, பன்னெண்டுதான். பாவம் பசங்க.


ஜோஸஃப் வார்டு( Joseph Ward) ன்ற பொடியன், வயசு 12தான் இருக்கும். 1869லே ஒரு போஸ்ட் ஆபீஸுலே வேலை செஞ்சுக்கிட்டு இருந்தான். நாலு வருசம் போச்சு. ஒரு நாள் போஸ்ட் மாஸ்ட்டரை என்னமோ கிண்டல் செஞ்சுட்டான்னு, வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க. பையன் நல்ல ஸ்மார்ட்டு. அப்படி இப்படின்னு ச்சின்னச் சின்னவேலை செஞ்சு, அப்பப்பக் கொஞ்சம் படிச்சுக்கிட்டுப் பெரியவனா ஆனப்புறம், நல்ல பதவியிலே வந்து உக்கார்ந்துட்டார்.என்ன அப்பேர்ப்பட்டப் பதவி? ஒண்ணுமில்லை.... பிரதம மந்திரிப் பதவிதான்.அதுவும் ரெண்டு தடவை!


தபால் ஆபீசுன்னு சொன்னதும் இன்னொண்ணுக்கூட ஞாபகம் வருது. அப்பெல்லாம் தபால்பெட்டின்னு தெருக்களிலேஎங்கேயும் வைக்கலை. வாரம் ரெண்டு தடவை பசங்க குதிரை மேலே ஏறிக்கிட்டு அக்கம்பக்கம் போய் பண்ணைகளிலேஇருக்கற தபால்களையெல்லாம் சேகரிச்சுக்கிட்டு வருமாம். ஒருக்காப் போய் வர்றதுக்கு 30 கிலோ மீட்டர் ஆயிருமாம்.கிறிஸ்ட்டீனா மெக்ல்ரைட் ( Christina Mcllvride) ன்ற பொண்ணு 12 வயசுலெயே இந்த வேலைப் பார்த்துக்கிட்டு இருந்துச்சாம்.


புள்ளைங்களைக் கட்டாயமா ஆரம்பப்பள்ளிக்கு அனுப்பணுமுன்னு அரசாங்கம் சொல்லிருச்சு. இது 1877லே. ஆனா அவ்வளவாப் பள்ளிக்கூடங்கள் வரலையே. கொஞ்சம் தூரமா இருந்தாக் குதிரைமேலெ ஏறிக்கிட்டு ஸ்கூலுக்குப் போறாங்க, கொஞ்சம் பெரிய பசங்க.அங்கே இவுங்க வகுப்பு முடியறவரைக்கும் குதிரைகளைக் கட்டிப் போட்டுத் தீனி எல்லாம் கொடுக்கணும். கிட்டத்தட்டகுதிரைலாயம் போல ஆயிருச்சுங்க இந்தப் பள்ளிக்கூடங்கள் எல்லாம். கஷ்டம்தான். வேற வழி?


வீட்டுவேலை, வெளிவேலை எல்லாம் செஞ்சாலும் புள்ளைங்க புள்ளைங்கதானேங்க? விளையாட்டு சுபாவம்இல்லாம இருக்குமா? பம்பரம், வளையம், பொம்மை, பொம்மை வீடு, ப்ராம்னு வச்சுக்கிட்டு விளையாடி இருக்குங்க.ஓடிப்பிடிச்சு விளையாடறது, நொண்டி, கோலிக்குண்டு இதெல்லாம் கூட விளையாடறது உண்டாம். இதெல்லாம் அகில உலகவிளையாட்டாத்தான் இருந்திருக்கு. நாமும் ச்சின்னப்புள்ளைகளா இருந்தப்ப இதெல்லாம் விளையாடி இருக்கோம்தானே?


இன்னொண்ணுங்க, அப்ப இங்கே இந்த கிரிக்கெட்டு இல்லையாம். ஆனா 'டிப் கேட்'ன்னு ஒண்ணு விளையாடுவாங்களாம்.இருங்க, அது என்னன்னு சொல்றேன். உங்களுக்கு இதுகூட ஆச்சரியமாத்தான் இருக்கும். இந்த Tip Cat லே ஒருஆறு இஞ்ச்( 12 செ.மீ) குச்சிதான் இந்த Cat . ரெண்டு பக்கமும் பென்சில் மாதிரி சீவி கூரா இருக்குமாம். இதைஎவ்வளவு தூரம் யார் வீசிப் போடறாங்களோ அவுங்கதான் ஜெயிச்சவங்க. இது நம்மூர் கிட்டிப்புள் தானே?


இப்ப லோகம் பூரா 'ரக்பி'ன்னு சொல்லிக்கிட்டு விளையாடுறாங்களே, அதுகூட 1870களிலே தான் ஆரம்பிச்சதாம். ஒவ்வொரு டிமுக்கும் எத்தனை ஆளுங்க? 20, 30 சிலசமயம் 40. மைதானம் பூராவுமே ஆடறவங்க இருப்பாங்க.ஒன்னரை மணிநேரத்துலே இப்ப விளையாடுற இந்த விளையாட்டுக்கு அப்ப நேரங்காலம் ஒண்ணும் இல்லையாம்.வேடிக்கை பாக்கற ஜனங்க எவ்வளவு நேரம் பார்க்கறாங்களோ அவ்வளோ நேரம். சில சமயம் ஒரு கேம் ஒரு நாள் பூராவும் நடக்குமாம்.


சரி, என்னமோ சொல்ல வந்து எங்கியோ போயிட்டேன். இங்கே வெள்ளைக்காரங்க வந்த பிறகு மொதல் முறையா ஒரு எரிமலை வெடிச்சது 1886 வருசம் ஜூன் மாசம் 10 தேதிக்கு. சரியா 120 வருசத்துக்கு முன்னாலே! இங்கேநிறைய எரிமலைகள் இருக்கு. புகைஞ்சுக்கிட்டு இருக்குமே தவிர வெடிச்சதில்லை. ரொடோருஆ ( Rotorua)ன்னு சொல்ற( இங்கே கந்தக வென்னீர் ஊத்துக்களும், மண்குழம்பு கொதிக்கிற குளங்களும் நிறைஞ்ச இடம்) ஊருக்குப்பக்கத்துலே இருக்கற டாரவீரா எரிமலை(Mount Tarawera) வெடிச்ச சத்தம் இங்கே கிறைஸ்ட்சர்ச் ( இது தென் தீவுலே இருக்கு.ரொம்ப புண்ணிய பூமி. ஏன்னா நான் இங்கேதான் இருக்கேன் !)வரைக்கும் கேட்டுச்சாங்க. இங்கேயே இப்படின்னா,ஆக்லாந்துலே இருக்கறவங்க எப்படி இருந்துருக்கும். யுத்தபூமியிலே பீரங்கி வெடிச்சுருச்சுன்னு நினைச்சாங்களாம். இந்த எரிமலை அடிவாரத்துலேஒரு ஊர் இருந்திருக்கு. அதும் பேர் 'டெ வெய்ரோ ஆ( Te Wairoa)' அங்கே மொத்தம் 70 வீடுங்க இருந்துச்சாம்.எரிமலைக்குழம்பு பொங்கி வந்ததுலே 65 வீடுங்க அப்படியே அழிஞ்சு போச்சாம். ஜனங்க ஓடித் தப்பிச்சாங்கன்னாலும்,11 பேர் செத்துட்டாங்களாம். அக்கம்பக்கத்துலே இன்னும் 6 கிராமங்களும் அடியோடு நிர்மூலமாச்சு. இதுலே 100மவோரிகளும், 7 பாகெஹா( வெள்ளைக்காரங்க)ங்களும் போய்ச் சேர்ந்துட்டாங்க.


இந்த எரிமலை வெடிப்புலே முக்கியமான ஒரு சுற்றுலாத் தலம் அழிஞ்சு போச்சு. அதான் பிங்க் & ஒயிட் டெர்ரஸ். இந்த எரிமலை அடிவாரத்துலே ரோடோமஹானான்னு ஒரு பெரிய ஏரி இருக்கு. அங்கே இருக்கற தண்ணியிலே நிறைய சிலிகா இருக்காம். அதெல்லாம் காலப்போக்குலே அப்படியே சேர்ந்து மினுமினுக்கும் டெர்ரஸ்ஸாக மாறிடுச்சாம்.இதுலே இந்த ஒயிட் பாகம் ரொம்பப் பெருசு. 7 ஏக்கர் விஸ்தீரணம், 30 அடி உயரத்துலே இருந்துஅப்படியே இறங்கிவந்து முன்னாலே விசிறி மாதிரி பரந்து 240 மீட்டருக்கு இருந்துச்சாம். பிங்க் கலர்லே இருந்தது, இதைவிடச் சின்ன அளவுலே.


தண்ணி இப்படி வந்து சேர்ந்த இடத்துலே அடுக்கு அடுக்காக் குளியல் தொட்டிகள் கட்டி வச்சதுபோல இயற்கையாவே மூணு மீட்டர் ஆழத்துக்குநீலக்கலர் தண்ணி, நல்லா வெதுவெதுன்னு குளிருக்கு இதமா 50 டிகிரி ஃபாரன்ஹைட்லே நிரம்பி இருக்குமாம். அந்தக்காலத்துலேஇங்கே வந்த பலர் இங்கே குளிச்சதையேகூட நல்ல அனுபவமா எழுதி வச்சிருக்காங்க. உலகத்தோட எட்டாவது அதிசயம் இதுன்னு எல்லோரும் நினைச்சாங்களாம். எரிமலையிலே இருந்து வந்த சாம்பல் இந்த டெர்ரஸ்களை அப்படியே மூடிருச்சாம்.


இதுலே பாருங்க,சம்பவம் நடக்கறதுக்கு 9 நாளைக்கு முன்னாலே நடந்த ஒரு விசித்திரத்தைச் சொல்லணும். ஜூன்முதல் தேதியிலே, சில மவோரிகளும், சில வெள்ளைக்கார டூரிஸ்ட்டுகளும் இந்த ஏரியைச் சுத்திப் பார்க்கப் போயிருக்காங்க.அப்ப தூரத்துலே பெரிய படகு, வாகான்னு சொல்ற நீளமான படகு ஒண்ணு, இந்த எரிமலையை நோக்கி ஏரியிலே போய்க்கிட்டு இருந்துச்சாம். மவோரிகளும், டூரிஸ்ட்டுகளும் கையை ஆட்டிக் கூப்பாடு போட்டாங்களாம்.ஏன்னா இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு படகை அங்கே யாருமே பார்த்ததில்லையாம். இவுங்க போட்டக் கூச்சலைச் சட்டை செய்யாம அந்தப் படகு நேராப் போய்க்கிட்டே இருந்துச்சாம். அதுலே இருந்து துடுப்புப் போட்டவுங்க, சிலைமாதிரி அனக்கம் இல்லாம இருந்தாங்களாம். இவுங்க பக்கம் திரும்பகூட இல்லையாம். பார்க்கறப்பவே படகு பார்வையிலேஇருந்து மறைஞ்சிருச்சாம்.


அப்புறம், சம்பவம் நடந்தபிறகு இதை நினைச்சுப் பார்த்தவங்க, இது ஒரு பேய்ப் படகு. நமக்கெல்லாம் எச்சரிக்கை கொடுக்கத்தான் வந்துபோச்சு'ன்னு பேசிகிட்டாங்களாம். இந்த மாதிரி நம்பிக்கைகள் உலகம் பூராவுக்கும் சொந்தம்தான்.ஜனங்க கதைகதையா இதைச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க ரொம்ப நாளைக்கு.

Sunday, May 28, 2006

கடப்பாரை

மக்கள்ஸ்,


நம்ம ஊர் 'கடப்பாரை' ஞாபகம் இருக்குங்களா? இதுக்கு இங்கிலீசுலே என்னான்னுங்க சொல்றது?


'க்ரோ பார்'ன்னு சொல்லிக்கலாமுன்னாலும், இதுக்கு ஒரு சரியான பேர் இருக்கு. அதுவும் அந்தப் பேர்' நெஞ்சாங்கூட்டில் கடப்பாரையா நிக்குது'. வெளியே வந்து விழுந்தாத்தானே?

தெரிஞ்சவுங்க கொஞ்சம் சொல்லுங்கப்பா, சொல்லுங்கம்மா.

கடப்பாரை படுத்தும் பாடு!

இதுவரை நான் எழுதுன பதிவுகளிலே மிகச் சிறியது என்ற வகையில் இது ஒரு ரெக்கார்ட்.

Saturday, May 27, 2006

எவ்ரிடே மனிதர்கள் -4

ஓ.... மை ஸ்வீட்டி.....
---------------

"காலி காலி மைனா..........வ், டொங்கருச்சே மைனா......வ்"

கத்திக்கொண்டே போய்க்கிட்டு இருக்கார் தள்ளுவண்டி வியாபாரி.

" ஓ பாபா... ருக்கோ. காலி மைனா... ருக்கோ"

தடதடன்னு மாடிப்படி அதிர ஓடற ஸ்வீட்டிக்கு வயசு நாலு. ஒல்லியான தேகம். தலையில் அடர்த்தியானபாப் செஞ்ச முடி. பெரும்பாலும் போட்டுக்கற உடுப்பு ஒரு ஷிம்மீஸ் மட்டும்.

நம்ம ஊருலே களாக்காய், இலந்தப்பழம் மாதிரி இங்கே இது ஒரு பழம். கறுப்பாச் சின்னதா இருக்கும். பத்துபைசா கொடுத்து அதை வாங்கிட்டு வந்து படியிலேயே உக்கார்ந்து அதைத் தீர்த்துட்டுத்தான் மேலே ஏறி வர்றாள்.காலா மைனா....ன்னா கறுப்புப் பழம். டோங்கர்ன்னா மலை, குன்று. டோங்கர் ச்சே. மலையிலிருந்து....ஆகக்கூடி, மலையிலிருந்து வந்த கறுப்புப்பழம் தான் இந்தக் காலி மைனா. வியாபாரி கூவும்போது நெடில் குறிலாகிருது.இலக்கணம் தெரிஞ்சவுங்கதானுங்க சொல்லணும். எப்படியோ வாங்கியாச்சு, தின்னாச்சு. மேலே வந்து ஒரு பத்துப் பதினைஞ்சு நிமிஷத்துலே 'பேரு... பேரு... மீட்டாப் பேரு.....' அடுத்த வியாபாரி. தள்ளுவண்டி நிறைய கொய்யாப்பழம்.


"ஓ பாபா...... பேருவாலா... ருக்கோ"


வீட்டில் உக்காந்த இடத்துலே இருந்தே தினமும் ரெண்டு ரூபாய்க்கு வாங்கிரணும் ஸ்வீட்டிக்கு. அவளோட அம்மாவும் காலையிலே பத்துப் பைசாவா மாத்துன ரெண்டு ரூபாயை ஒருச் சின்ன வாட்டி( கிண்ணம்)யிலே போட்டு வச்சுருவாங்க.


ஸ்வீட்டிக்கு ரெண்டு அண்ணன்கள். எட்டும், ஆறும் வயசு. அவுங்க ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துக்குப் போனபிறகு, இந்தத் தள்ளுவண்டிங்கதான் முக்கிய பொழுது போக்கு. அதான் நாலு வயசாச்சே, நர்ஸரிப் பள்ளிக்குப் போகலாம்தானே? ம்ஹூம்.... முடியாதாம். அஞ்சு வயசு ஆனதும் ஒரேடியா ஒண்ணாங்கிளாஸ் சேர்த்துடப் போறாங்களாம்.


ரெண்டு வண்டிங்களுக்கு நடுவிலே வர்ற இடைவேளை நேரம் நம்ம வீட்டுலே வந்து இருந்துக்கிட்டு, நம்ம நாய்க்குட்டியோடு விளையாட்டு. எனக்கு அப்ப ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. ஆன்னா ஊன்னா காஃபி குடிக்கணும். நாளைக்கு இத்தனைன்ற கணக்கு வழக்கெல்லாம் இல்லை. ச்சும்மா ஒரு அரைக் கப் போதும். காலையிலேயே பெரிய ஃபில்டர்லே டிகாக்ஷன்போட்டு வச்சுக்குவேன். அப்புறம் இதே கதிதான். ஸ்வீட்டிக்கும் எப்பவாவதுக் கொஞ்சம், ஒரே ஒரு வாய் குடிக்கக் கொடுப்பேன்.


நான் சமையல் செஞ்சுக்கிட்டு இருந்தா, சமையல்லே உப்பு பாக்கறது எல்லாம் ஸ்வீட்டிதான். நாலு வயசுக்குப் போடு போடுன்னுபேசும். நான் குளிக்கப்போனா, நம்ம நாய்க்குட்டிக்குக் கம்பெனி கொடுக்கறதும் ஸ்வீட்டிதான். எங்களுக்குள்ளெ அப்படி ஒரு அண்டர்ஸ்டேண்டிங்!


ஸ்வீட்டி அவுங்க அப்பா, ஒரு கம்பெனியில் வேலை செய்யறார். ஷிஃப்ட் வேலை. பார்க்க ரொம்ப சுமாரா இருப்பார். இதுலே ஸ்வீட்டியோட அம்மாவுக்குக் கொஞ்சம் மனவருத்தம். அவுங்களும் சுமாராத்தான் இருப்பாங்க.ஆனா...தான் பேரழகின்னு ஒரு நினைப்பு அவுங்க மனசுக்குள்ளெ இருந்துச்சு. குட்டை முடியை ரெட்டைச் சடை போட்டுருப்பாங்க.முகத்தைச் சுத்தி அங்கங்கே முடிக்கற்றைகளைச் சுருட்டி ஸ்ப்ரிங்கு போல தொங்கவிட்டிருப்பாங்க. அவுங்க கைவிரல் எப்போதும் அந்த ஸ்ப்ரிங்குகளைச் சுத்தி விட்டுக்கிட்டே இருக்கும்.நம்ம வீட்டுக்கு வந்தாங்கன்னா, நேராப் போய் கண்ணாடி முன்னாலேதான் நிப்பாங்க. அந்த் வீட்டுலே பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகள் இருந்துச்சு. அது வந்துங்க, வீட்டு ஓனர் ஒரு காலத்துலே ஹோட்டல் வச்சு நடத்துனாராம்.அப்ப நல்ல பெல்ஜியம் கண்ணாடிங்களை வாங்கி இருக்கார். எல்லாம் அட்டகாசமான வேலைப்பாடுள்ள ப்ரேம்கள்.தங்க நிறத்துலே ஜொலிக்கும். கொஞ்சம் பழசாப்போச்சுன்னாலும் ஜொலிப்புக்குக் குறைவில்லே. இங்கிலாந்துக்குபோற டூரிஸ்ட்டுங்க, அரண்மனை பார்க்கவும் போறாங்கல்லே. அங்கெல்லாம் இப்படி அலங்காரமான நிலைக்கண்ணாடிங்க அங்கங்கே வச்சுருக்காங்களாம்.


அது இருக்கட்டும். இப்ப நம்ம வீட்டுக் கண்ணாடிகளைப் பார்க்கலாம். ஹோட்டலுக்கு வாங்கி வச்சுருந்ததெல்லாம், ஹோட்டல் பிஸினஸ் மூடுன பிறகு, வீட்டுலே கொண்டு வந்து மாட்டிட்டாராம். அப்படி இப்படின்னு ஓனர் வேற வீட்டுக்குப் போயிட்டாலும், கண்ணாடிங்க என்னமோ இங்கேயே நின்னு போச்சு. கழட்டி எடுத்துக் கொண்டு போகறப்பஎதுவாச்சும் ஆயிருச்சுன்னா?ன்ற பயம்தான். நான் கூட பயந்துக்கிட்டு அதைத் துடைக்கக்கூட மாட்டேன்:-)))


எப்பவுமே என்னைச் சுத்திக் கண்ணாடிங்க இருந்ததாலே அதுலே பாத்துக்கறது ஒண்ணும் விசேஷமா எனக்குத்தெரியலை. கூடவே இருந்தா அருமை தெரியாதுங்கறது இதான் போல.


கண்ணாடிங்க முன்னாலே, இப்படி அப்படின்னு திரும்பி நின்னு முன்னாலே பின்னாலெ எல்லாம் பார்த்து மறுபடிப் புடவையை உதறிக்கட்டி, ப்ளீட்ஸ் எல்லாம் சரியா வச்சு, இன்னும் நூறுதரம் குழல்கற்றைகளைச் சுருட்டின்னு நேரம் போறதேதெரியாம நிப்பாங்க. எப்பவும் ச்சின்னதா ப்ளவுஸ் போடுவாங்க. அவுங்க செய்யற சேஷ்டைகளையெல்லாம் திறந்தவாய்மூடாம பார்த்துக்கிட்டு நிக்கும் நம்ம ஸ்வீட்டி.


ஒருநாள் என்னவோ கொஞ்சம் வாக்குவாதம் அதிகமாப் போனதுமாதிரி ஒரு சத்தம் அவுங்க வீட்டுலே இருந்து.அடுத்த வீட்டு விஷயத்துலே மூக்கை நுழைக்க முடியாது,இல்லீங்களா? நாள் போகப்போக என்னவோ சரியில்லை அங்கே.


கண்ணாடி முன்னாலேவந்து நிக்கறதும் கொஞ்சம் குறைஞ்சுதான் போச்சு. திடீர்னு ஒரு நாள் எல்லோருமாக் கிளம்பிபோனாங்க.ரெண்டு நாளிலே அவரும், ஆம்புளைப் பசங்களும் வந்துட்டாங்க. ம்ம்......ஸ்வீட்டியும் அம்மாவும் காணொம்.


நானும், கீழே வீட்டு அம்மாவும் ஒருநாள் மாடிப்படியில் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். நாளைக்கு ஆயிரம் தடவை தடதடன்னு படியிலே ஓடி இறங்கும் சப்தம் இப்பெல்லாம் இல்லை. அப்ப ஸ்வீட்டியின் அப்பா கீழே இறங்கிவந்தார். நைட் ஷ்ஃப்ட் போல. கீழேவீட்டு அம்மா எல்லாருக்கும் அம்மாவைப் போலன்றதாலே, மரியாதைக்காக ரெண்டு வார்த்தை பேச நின்னார். பேச்சு, ஸ்வீட்டி இல்லாதவெறுமையைப் பத்தி நகர்ந்தப்ப, நாங்க யாருமே எதிர்பார்க்காத விதத்தில் 'மனுஷர்' கண்ணுலே இருந்து கரகரன்னு கண்ணீர். எங்களுக்கெல்லாம் ஒரே அதிர்ச்சி.


மெதுவாச் சொன்னார், "ஸ்வீட்டியாலேதான் விஷயமே எனக்குத் தெரியவந்துச்சு. ச்சின்ன ப்பொண்ணு.அது சொல்லுச்சு, 'தூஸ்றா மர்தோங்க்கே ஸாத், இத்னா ஹஸ்ஹஸ்கி பாத் கரேங்காத் தோ, அச்சா லக்தா ஹை க்யா?டாடி '( வேற ஒரு ஆணோடு இப்படிச் சிரிச்சுச்சிரிச்சுப் பேசறது நல்லாவா இருக்கு?)"


"ச்சீச்சீ, குழந்தை ஏதோ சொல்லுச்சுன்னா நீங்க இப்படி சந்தேகப் பட்டுச் சண்டை போட்டீங்க?"


"இல்லேம்மா. மொதல்லே நான் நம்பலை. அப்புறம் அவுங்களே உண்மையை ஒத்துக்கிட்டாங்க. என்கூடவாழப் பிரியம் இல்லைன்னு சொன்னவங்களை என்ன செய்யறது? அதான் அவுங்க வீட்டுலே கொண்டுபோய்விட்டுட்டேன்."
இறுக்கமான முகத்தோடு வாசலைக் கடந்து போனார். என்ன செய்யறது, என்ன சொல்றதுன்னு தெரியாம நாங்கமுழிச்சோம்.


இதோ 'ஜாமூன், ஜாமூன்,மீட்டா ஜாமூன்' னு கூவிக்கிட்டே வண்டியைத் தள்ளிக்கிட்டுக்கூவுறார்.வண்டி நிறையமினுமினுன்னு கறுப்பா நாகப்பழம் குவிஞ்சு கிடக்கு.


அந்தப் பக்கம் போற ஒவ்வொரு வண்டிக்காரரும், நம்ம வீட்டு வாசலிலே நின்னு ஒரு குரல் எக்ஸ்ட்ராவாக் கொடுத்துக்கிட்டே பால்கனிப் பக்கம் அண்ணாந்து பார்க்கறாங்க.


அவுங்க கண்ணு தேடறது நம்ம 'ஸ்வீட்டி'யை!


---------
அடுத்தவாரம்: கிருஷ்ணமூர்த்தி.


நன்றி: தமிழோவியம்

Friday, May 26, 2006

நியூஸிலாந்து பகுதி 38

'வடக்கு வாழுது தெற்கு தேயுது' ன்னு ஒரு கோஷம் எங்கியோ கேட்டமாதிரி இருக்கா? எனக்கும்தான் அது ஞாபகம் இருக்கு. இங்கே, 'அப்ப' கதை வேற மாதிரி. இந்த நாடு ரெண்டு பெரிய தீவா இருக்குன்னுதான் உங்களுக்குத் தெரியுமே. இதுலே வடக்குத் தீவுலேதான் எப்பப் பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமாக் கிடந்துச்சு.அப்ப தெக்கே? அமைதிப் பூங்காதான். நிலத்துலே எல்லாம் விவசாயப் பண்ணைகள்! செழிப்போ செழிப்பு.


ஆனாலும் வருங்காலத்தைப் பத்தின ஒரு கவலை. புள்ளைகுட்டிங்க இருக்கறவங்களுக்கு இந்தக் கவலை இல்லாட்டாத்தானே அதிசயம்? பூலோகம் பூராவும் மனுஷ மனசு ஒண்ணுதான். சிலர் அண்டை நாடான ஆஸ்தராலியாவுக்குப் போனாங்க. இன்னும் சிலர் வேற எங்கியாவது போகலாமுன்னு நினைச்சு, கலிஃபோர்னியா( எம்மாந்தூரம்?)போனாங்களாம்.


செய்திகளை முந்தித்தருவது.... .......(இந்த) பத்திரிக்கைன்னு வருது பார்த்தீங்களா. மனுஷனுக்கு எப்பவும் செய்திகள்மேலே தீராத ஆசை. வெளியே வாசலிலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலேன்னா தூக்கம் புடிக்காது. நாலுபேரு கூடுனாவும் 'அங்கே இப்படி, போனவாரம் போய்வந்த ஊர்லே இப்படி'ன்னு பேச்சை ஆரம்பிச்சுருவாங்க. இந்த ஆர்வம்தான் செய்திப் பத்திரிக்கையா உருவாச்சு. 1861லே நியூஸிலாந்தின் முதல் செய்தித்தாள் ஆரம்பிச்சது. 'ஒடாகோ டெய்லி டைம்ஸ்' ஆரம்பிச்சவர் ஜூலியஸ் வோகல்( Otago Daily Times- Julius Vogel)


இவர் பத்திரிக்கையாளர் கிடையாது. தங்கம் சம்பந்தப்பட்டவர். தங்கச் சுரங்கத்துலே இருந்து எடுக்கற மண்ணுலே எவ்வளவு தங்கம் இருக்கலாமுன்னு மதிப்பிட்டுச் சொல்றவர்.(Gold Assayer)இவர் ஆஸ்தராலியாவுலே இருக்கற தங்கவயல்களில் இந்த வேலையைச் செஞ்சுக்கிட்டு இருந்தார்.


ஒடாகோன்ற இடத்துலே இருக்கற தங்கச்சுரங்கத்தைப் பார்க்க இங்கே நியூஸிக்கு வந்தப்ப, அதைப் பத்தின செய்திகளை சொல்லப்போய் செய்தியாளரா ஆகிட்டார். இப்பப் பதிவுகள் எழுதப்போய் பலபேர் எழுத்தாளரா மாறிப்போனமே அதே கதைதான்:-))))எப்படி இந்த நாட்டையும், இங்கே இருக்கற மக்களுடைய வாழ்க்கையையும் முன்னேத்தலாமுன்னு நிறைய ஐடியாக்கள் வச்சிருந்தார். இதையெல்லாம் பத்திரிக்கையிலே எழுதிக்கிட்டும் இருந்தார். ரெண்டே வருசத்துலே நம்ம ஜனங்க இவரை பார்லிமெண்டுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பி வச்சுட்டாங்க.( சமீபத்துலே நடந்த தமிழ்நாடுதேர்தல் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பாளி இல்லை,சொல்லிட்டேன்) 1863 முதல் 1869 வரை, ஆறு வருஷத்துக்கு, நிதி மந்திரியா இருந்தார்(Colonial Treasurer)


இருந்த இடத்துலேயே இருக்கறதுக்கு மனுஷன் என்ன மரமா? இன்னும் சொல்லப்போனா, பூமிக்கடியிலே மரம் கூட வேரை இப்படியே பல திசையிலும் பரத்திக்கிட்டேதானே இருக்கு? ஜனங்க குதிரை சவாரியிலேயே ஊர் ஊராப் போய்ப் பாக்கறாங்க. சிலபேர் சின்னப் படகுகளிலே ஏறி, கரையோரமாவெ போய் நல்ல இடம்இருக்கா? இன்னும் எப்படியெல்லாம் இருக்கு இந்த நாடுன்னு சுத்திப் பார்த்துக்கிட்டு வராங்க. அப்பெல்லாம்ஆக்லாந்து நகர் லே இருந்து, வெலிங்க்டன்( தலைநகரம்)க்கு போகவர ரோடே இல்லேன்னா பாருங்க.முதல் ஐடியா நல்ல ரோடு போடறது.


ஐடியா மட்டும் இருந்தாப் போதுமா?அதையெல்லாம் நிறைவேத்தக் காசுக்கு எங்கே போறது? ஏன் கடன் வாங்குனா என்ன?இது நடந்தது 1870லே. நம்ம வோகல் சொன்னார்,' அரசாங்கம் ஒரு ஆறு மில்லியன் பவுண்டு கடன் வாங்கணும்.'எங்கெ இருந்து? மாட்சிமை தாங்கிய மகாராணிகிட்டே இருந்துதான். சரி. வாங்கியாச்சு. ம்ம்ம்.... அப்புறம்?' இந்தக் காசை வச்சு நல்ல ரோடு, ரெயில் பாதை, கப்பல் வந்து போக பக்காவா துறைமுகம்னு உண்டாக்கலாம்.அங்கங்கே இருக்கற ஊர்களை இந்த ரோடும் ரயில் பாதைகளும் இணைச்சுரும். வசதி வந்துருச்சுன்னு தெரிஞ்சாஇன்னும் நிறையாட்கள் இங்கே வந்து செட்டில் ஆயிருவாங்க. இதையெல்லாம் ஒரே நிமிசத்துலே செஞ்சுற முடியுமா?எல்லாம் ஒரு பத்து வருசத்துக்குள்ளே முடிச்சிறலாம்'னு.இதுக்கு முன்னாலே இங்கெவந்து குடியேறுனவுங்க பெரும்பாலும் தனியாத்தான் வந்தாங்க. திமிங்கிலம், கடல்சிங்கம் இதுகளை வேட்டையாட வர்றவங்க, கப்பலோட்டும் மாலுமிங்க, சுரங்கத் தொழிலாளிங்க இப்படி ஒரு கூட்டம்.


நாடு முன்னேறப்போகுதுன்ற விவரம் தெரிஞ்சபிறகு, 1870களிலே கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆளுங்க புதுசாக் குடியேறுனாங்க. இதுலே முக்காவாசிப்பேர் புள்ளையும் குட்டியுமாக் குடும்பத்தோட வந்தவங்க.

இவுங்கதான் வடக்குத்தீவுலே காட்டு மரங்களையெல்லாம் வெட்டி ரோடு, ரெயில் பாதைன்னு போட்டவங்க.


இங்கெருந்த மரங்கள், காடுகள் எல்லாம் எத்தனையோ நூற்றாண்டு காலப் பழசு. ரிமு, டோடரான்னு சொல்றமரங்கள் காடா வளர்ந்து இருந்துச்சு. ஒவ்வொரு மரமும் நல்லா வைரம் பாய்ஞ்சு இருந்துச்சாம். பல மரங்கள்25 மீட்டர் உயரமாம். ஹய்யோடா .... கிட்டத்தட்ட 81 அடி உயரம். பருமன் 2 மீட்டராம். ஒரு மனுஷனாலேகட்டிப் பிடிக்க முடியாது. திருமலை நாயகர் மஹால் தூண்கள் போல இருந்திருக்கும்,இல்லே?


'ஸ்காண்டிநேவியா'லே இருந்து வந்தவங்கதான் இந்த காடு வெட்டிகளாம். எல்லாம் இளவயசுக்காரங்க. ரொம்ப ஏழை ஜனங்க. போதாக்குறைக்கு இங்கிலீசு பேசத் தெரியாதவங்க. எதோ ஒண்ணுரெண்டு வார்த்தைதான் தெரியுமாம்.இது போதாதா? அவுங்களை வேலை வாங்க. ஆனா பாவம், இந்த ஸ்காண்டிநேவியர்ங்க. இந்த மாதிரி ஒரு அடர்த்தியானகாடுகளை இதுவரை பார்த்ததே இல்லையாம்.


ஆமாம், இவுங்கதான் ஏழைங்களாச்சே, இங்கே வர்றதுக்கு கப்பல் டிக்கெட் வாங்கக் காசு? ஆ......ங். "இதோ பாருங்க,நீங்க டிக்கெட் வாங்க வேணாம். உங்க டிக்கெட்டுக்கு உண்டான காசை நாங்களே செலவு செய்யறோம். அங்கே புதுஊருக்குப் போனபிறகு, உங்க வேலைக்கு நாங்க கேரண்ட்டி. தினச் சம்பளமா 5 ஷில்லிங் உங்க குடும்பத்துக்குத் தரப்போறோம். அதுலே இருந்து கொஞ்சம் கொஞ்சமா இந்த டிக்கெட்டுக்கு உண்டான காசைக் கழிச்சுரலாம்,என்ன?"


பிரிட்டிஷ்காரன் பேசுன இங்கிலீசு பாஷையைப் புரிஞ்சும் புரியாமலும் தலையை ஆட்டிக் கேட்டுக்கிட்டு வந்துச்சு இந்தக்கூட்டம்.


மொதல்லே இவுங்களுக்கு, ஒரு குடும்பத்துக்கு 40 ஏக்கர் நிலம் ச்சும்மாக் கொடுத்தாங்களாம். ஆனா ஒரு கண்டிஷன்.சொந்த நிலத்தை சீர் செய்யறதுக்கு முன்னே, ரோடு வரப்போது பாருங்க, அந்த இடங்களையும், ரெயில்பாதை வரப்போறஇடத்தையும் மரமெல்லாம் வெட்டி, சுத்தப் படுத்திக் கொடுத்துரணும். 'தனக்கு மிஞ்சி......'ன்ற கதையெல்லாம் கிடையாது,ஆமாம்.


சரின்னுட்டு, அவுங்க வேலைகளை ஆரம்பிச்சுட்டாங்க. மரங்களுக்குத் தீ வச்சு விட்டுடணும். இலைகள் எல்லாம்எரிஞ்சு மொட்டையானபிறகு, கோடாலி, ரம்பம் எல்லாம் வச்சு வெட்டிச் சாய்க்கணும். பெரியபெரிய மரத்தைச் சாய்ச்சு உறுதியான பாகத்தையெல்லாம் 'வீடு கட்டிக்க, கப்பல் கட்ட'ன்னு எடுத்துக்குவாங்க.மீதி இருக்கற அடிமரத்து வேரையெல்லாம் வெட்டிவிட்டுட்டு, ஒரு மூணு நாலு மாசத்துக்கு அப்படியே காயப் போட்டுரணும். நல்லாக் காய்ஞ்சபிறகு தீ வச்சு விட்டுருவாங்க. எரிஞ்சு சாம்பலானபிறகு, அந்த சாம்பலை வாரிக்கிட்டுப்போய் இவுங்க நிலத்துக்கு எருவாப் போட்டுருவாங்க.


அவுங்கவுங்க நிலத்துலே வீடு கட்டிக்கிட்டாங்க. ரெண்டு ரூமுங்க. படுக்கை அறை ஒண்ணு. அடுக்களை ஒண்ணு.மரங்களை அப்படிஅப்படியே வச்சுக் கட்டுனதாலே ஜன்னல்னு ஒண்ணும் வைக்கலை. தரைகூட மண் தரைதான். நல்லாமிதிச்சு மிதிச்சு திம்ஸ் போட்டு கெட்டிப் படுத்திக்கிட்டது.


ஆம்புளைங்கெல்லாம் மரம் வெட்டிக்கிட்டு இருக்கறப்ப, பொம்பளைங்களும், புள்ளைங்களும் சாப்பாடு தேடிக்கிட்டுப்போறதுதான். காட்டுலே 'வேகா' ன்னு கோழி மாதிரி ஒரு பறவை புதருலெயே முட்டை வைக்குமாம், அந்த முட்டைகளைத்தேடி எடுக்கறது, புறாங்களைப் புடிக்கறது, தேன் கூடுகளைக் கண்டுபிடிச்சுத் தேன் எடுக்கறதுன்னு பல ஜோலிகள்.ஆங்... மறந்துட்டேனே, இதுலே ஆத்துலே போய் மீன் புடிக்கறதையும் சேர்த்துக்குங்க.அதான் பள்ளிக்கூடமுன்னு ஒண்ணும் இல்லையே(-:


ஆனா வோகல் சொன்னமாதிரி பத்து வருசத்துலெ இதெல்லாம் முடிக்க முடியலை.


1874லே, மொதநாலு வருசத்துலே 417 கிலோ மீட்டர் ரெயில்பாதைதான் போட முடிஞ்சதுன்னா பாருங்க. ஆனா காடுவெட்டிங்க வந்து பத்து வருசத்துலே நிறைய முன்னேற்றம் ஏற்பட்டதென்னவோ உண்மை. 1881 வருசம்கணக்குப் பார்த்தப்போ, இங்கே இருந்த மொத்த ஜனத்தொகையிலே 42 சதமானம் சின்ன வயசுக்காரங்கதான்.எல்லாம் 15 வயசுக்குக் கீழே!


அப்பெல்லாம் ஐரோப்பாவுலே பஞ்சம் இருந்துச்சாம். இங்கே சாப்பாடு பிரச்சனையே இல்லை. பாலும் தேனுமாஓடுது. புள்ளைங்களை வளர்க்கறதுக்கு இதைவிடத் தோதான இடம் வேற என்ன இருக்கு? ன்ற நினைப்புலேதான் பலரும் வந்து சேர்ந்தாங்களாம்.


ரோடு வேலையை முடிச்சுட்டு, அவுங்கவுங்க இடத்தையும் சீர் செஞ்சு கோதுமை விதைச்சாங்களாம். கூடவே காய்கறிகள், ஆடு, மாடு, குதிரைன்னு பண்ணை வீடுகள் உருவாக ஆரம்பிச்சது அப்பத்தான்.


ஆனா அதுக்குள்ளே பள்ளிக்கூடங்கள் இங்கெ ஒண்ணு, அங்கே ஒண்ணுன்னு ஆரம்பிச்சிருந்தது. 1879லே மொத்தம்57 பள்ளிக்கூடங்கள். மவோரிகளும் அவுங்க புள்ளைங்களைப் படிக்கறதுக்கு அனுப்புனாங்க. பள்ளிக்கூடம் கட்டறதுக்கு நிலமும் இலவசமாக் கொடுத்தாங்க. டீச்சருங்களுக்கு சம்பளம் கொடுக்கவும் உதவி செஞ்சாங்க. டீச்சருங்க பள்ளிக்கூடத்துலே இங்கிலீசு சொல்லிக் கொடுத்தாங்க. எல்லா டீச்சருங்களும் வெள்ளைக்காரங்கதான்.


தினம் ஸ்கூல் முடிச்சு வந்ததும், பெரிய புள்ளைங்களுக்கு ஒரு வீட்டு வேலை காத்திருக்கும். மாவு அரைக்கற வேலை.ரெண்டு மணிநேரம் இதுக்கே போயிருமாம். தினம் ரொட்டி செய்யறதுக்கு மாவு வேணுமுல்லே?


வருசம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. பியானோ வாசிக்கப் படிக்கறதுன்றது ரொம்பவே முக்கியமா இருந்துச்சு. ஏன், இப்பவும்பியானோ கத்துக்கறது பரவலாத்தான் இருக்கு. வீட்டு வீட்டுக்குப் பியானோ வர ஆரம்பிச்சது அப்பத்தான்.


1900களிலே பல் வைத்தியருங்க, தையல்காரங்க, கடிகாரம் ரிப்பேர் பண்ணறவங்க, போட்டோ புடிக்கறவங்க,பியானோவை ட்யூன் செஞ்சு கொடுக்கறவங்கன்னு தொழில் தெரிஞ்சவங்க, பண்ணை வீடுகளுக்குப் போய்தேவையானதைச் செஞ்சு கொடுத்து பிழைப்பு உண்டாக்கிக்கிட்டாங்க.


'எல்லாரும் இப்படி லைனா வந்து நில்லுங்க.தையக்காரர் அளவெடுக்க வந்துருக்கார்'னு அம்மாங்க கூப்புடறசத்தம் கேக்குதா?

இது ஒரு மீள் பதிவு.

பழசை எடுத்துப் போட்டா இப்படித்தானேங்க சொல்லணும்?

வலைப்பதிவாளர்கள் டைரக்டரிக்காக, என் முதல் பதிவு போட்ட தேதியை ஆராயப்போக இது கண்ணுலே பட்டுச்சு.

'அப்ப' இருந்ததை விட 'இப்ப' பதிவாளர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 'டபுள்''
ஆகிப் போச்சுங்களா, அதனாலே திருப்பி எடுத்து விட்டா, புது நண்பர்கள் பார்க்க ஒரு ச்சான்ஸ் கிடைக்குமேன்னுதான்....... இது................

--------


1, 2, 3 என்று வரிசைப் படுத்திப்.....ஒரு நாளு ச்சும்மா அப்படியே வல மேய்ஞ்சுகிட்டு இருந்தப்ப 'கிரியேட் யுவர் ஓன் ப்ளாக்' ன்னுமேலே ஓடிகிட்டு இருந்தது. அதைப் பார்த்தேனே தவிர, வேற ஒண்ணூம் மனசுலே தோணலை.


இதுக்கு ரொம்ப நாள் கழிச்சு, வேற ஒரு சமயத்துலே இதே ஓட்டத்தைப் பாத்தேன்.


ரொம்ப பழைய சினிமா ஒண்ணு, பேரு 'ரத்னகுமார்' அதுலே கதாநாயகன் ரொம்ப ஏழை. சாப்பாடு இல்லாமஒரு பாழுஞ்சத்திரத்திலே தூங்கிகிட்டு இருப்பார். அப்ப 'திடீர்'னு ஒரு பயங்கரமான சத்தம் வரும். பூமி
எல்லாம் நடுங்கும். பாத்தா ஒரு எலும்புக்கூடு, பெரிய பாறாங்கல்லைத் தலைக்கு மேலத் தூக்கிகிட்டு நிக்கும்!


'போடட்டுமா போடட்டுமா'ன்னு கேக்கும். நம்ம நாயகன் பயந்து ஓடுவாரு. எங்கே? எல்லாம் அந்தக் கட்டிடத்துக்குள்ளேய தான்!
எலும்புக்கூடும் விடாம அவரு போற இடத்துலே எல்லாம் 'டாண்'னு ஆஜராகும். நாயகன் சலிச்சுப் போய் 'போட்டுதான்
தொலையேன்' அப்படிம்ம்பாரு. அது கல்லை 'டமார்'னு கீழே போடும்.

இன்னொரு பூகம்ப, புகை .

அடுத்த நொடியிலே ..! அட!

அதே பாழடைஞ்ச இடம் ஒரு அரண்மனையாக மாறி இருக்கும். நாயகனும் 'ராஜா'உடுப்பு போட்டுகிட்டு இருப்பார்.எலும்புக்கூடு சாப விமோசமன்ம் கிடைத்து ஒரு தேவனா இருக்கும். ஒரு மோதிரத்தை நம்ம கதாநாயகனுக்குக் கொடுக்கும்! இப்படிப் போகும் கதை!


இப்ப இதை எதுக்குச் சொல்லறேன்னா, நானும், அடிக்கடி இந்த 'வலப்பதிவு ஆரம்பிங்க'ன்னு ஓடறதைப் பார்த்துட்டு, என்னதான் சொல்லுதுன்னு உள்ள்போனா, 'திருவிளையாடல் படத்துலே அவ்வையே, எமை 1 2 3 என்று வரிசைப் படுத்திப் பாடுக'ன்னு வரமாதிரி வருது!


க்ளிக்,க்ளிக்,க்ளிக். வந்துருச்சு. எல்லாம் உங்க போதாத காலம்! 'என்ன பேரு வைக்கலாம், எப்படி வைக்கலாம்'னு முடிவு செய்யததாலேமனசுலே வந்த பேரையும் போட்டாச்சு.


முதல் பதிவு போட்டுப் பாக்கிறேன். ஐய்யோடா? எழுத்து என்னவோ போல வருதெ!


நம்ம 'காசி' இருக்கற தைரியத்துலே, அவருக்கு மடலுக்கு மேலே மடலா அனுப்பி, அவருக்குப் பைத்தியம் பிடிக்கற லெவலுக்குக்கொண்டுபோனேன். நம்ம காசிக்கு,'பொறுமையின் பூஷணம்' என்ற பட்டத்தை நியூஸிலாந்து வட்டம் சார்பாக அளிக்கின்றோம்!


அப்புறம் அவரோட'தமிழிலில் வலை பதிக்க வாரீங்களா?'வை (இப்பத்தான நிதானமா)படிச்சு, குழப்பம் எல்லாம் நாம வச்சிருக்கற ஒண்ணா நம்பர் கலப்பையாலெதான். ரெண்டு நம்பர் கலப்பை இருக்கணும்னு தெரிஞ்சிகிட்டு,அதை இறக்கினப்புறம் எல்லாம் சரியாச்சு!இன்னும் சிலது சரியா இல்லெ, ஆனா அதையெல்லாம் மெதுமெதுவா சரி செஞ்சுரலாம். உதவறதுக்கு நீங்கெல்லாம் இருக்கறீங்கதானே?


இதை இப்ப எழுதறது எதுக்குன்னா, என்னைபோல சில பேரு எங்கேயாவது இருக்கலாம். கணினி கைநாட்டான எனக்கே புரியறமாதிரி, நம்ம காசி எழுதியிருக்கிறாரு. அவுங்க இந்த சேவையைப் பயன்படுத்திகிட்டு, வலைப் பதிவு செய்யுங்க. 'வந்து இந்த ஜோதியிலே கலந்துருங்க'்னு அன்போடு அழைக்கிறேன்!


இன்னொரு முக்கியமான விஷயம்.

இந்த வலைப்பதிவுகளிலே நான் இடம் பிடிச்சு உக்கார்ந்து இருக்கறதுக்கிப் பின்னாலே பலபேருடைய உழைப்பு அடங்கியிருக்கு!அவுங்களுக்கெல்லாம் என் நன்றியைத் தெரிவிக்காம இருந்தா நான் ஒரு 'நன்றி கொன்ற பாவி'யாக இருப்பேன்.


முதலிலே என்னையும் ஒரு படைப்பாளியா ஏத்துகிட்ட நம்ம 'மரத்தடி'க்கு, ( எனக்கு ஏதாவது எழுத வருமான்னே எனக்குத்தெரியாது)அதன் மட்டுறுத்தினர்களுக்கு, அப்புறம் மதி, காசி, ரவியா,சுபமூகா, ஷக்தி, உஷா,குமார்,கேவிஆர்,பரி,பத்ரி,அருள்குமரன்,யூனா,ஜெயந்தி சங்கர்,சங்கமம் விஜயகுமார், இன்னும் தனி மடல்களிலே அன்போடு வாழ்த்துக்கள் தெரிவிச்சவங்க, ஐய்யய்யோ பட்டியல்ரொம்ப நீளமாப் போகும்போல இருக்கே, ஐந்நூறு பேருக்குமேல ( இப்ப மரத்தடிலே எவ்வளவு உறுப்பினர் ? )அனைவருக்கும் என்நன்றியை ( நன்றிக்கு வேற வார்த்தைத் தமிழிலலே இருக்கான்னு சொல்லுங்க ப்ளீஸ்) தெரிவித்துக் கொண்டு இந்த சிற்றுரையை(!) முடிக்கிறேன்.

வணக்கம்.


ஏம்ப்பா, யாராவது ஒரு சோடாவை உடைச்சுத் தாங்க!

Wednesday, May 24, 2006

யாருக்காக? இது மதுவுக்காக!

வலைப்பதிவர் பெயர்: துளசி கோபால்

வலைப்பூ பெயர் : துளசி தளம்

உர்ல் : http://thulasidhalam.blogspot.com/

ஊர்: கிறைஸ்ட்சர்ச்

நாடு: நியூஸிலாந்து

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: குறிப்பிட்டுச் சொல்லணுமுன்னாயாரும் இல்லை. அப்படியே வலை மேய்ஞ்சப்பக் 'கண்டுகொண்டேன்.'

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 24 செப்டம்பர் மாதம் 2004

இது எத்தனையாவது பதிவு: 354

இப்பதிவின் உர்ல்: http://thulasidhalam.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ப்ளொக்ஸ்பாட் வா வா ன்னு கூப்பிட்டது.

சந்தித்த அனுபவங்கள்: ஏராளம். எதைச் சொல்ல எதை விட!

பெற்ற நண்பர்கள்: எக்கச்சக்கம். உலகம் பூராவும் நண்பர்களே

கற்றவை: என்ன செய்யகூடாது என்று


எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: ஏராளம். அதை விடமுடியாது.ஆனா சுயத்தணிக்கை இருக்கணும்.

இனி செய்ய நினைப்பவை: நல்ல பதிவுகளாப் போடணும்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: பெருசாச் சொல்லிக்க ஒண்ணும் இல்லை.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: வலைப்பதிவுகள் உலகின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது. அதனால் நாம் எழுதும் பதிவுகள் ஓரளவுக்காவது பொருள் பொதிஞ்சதாக இருக்கணும்.

நியூஸிலாந்து பகுதி 37

சண்டை, போர், வார்னு சொல்லிக்கிட்டு இருக்கோமே, நமக்குத் தெரிஞ்ச சண்டைங்க எது? எல்லாம், (அட சினிமாவுலேபார்த்ததையெல்லாம் வச்சு )இப்படித்தான் இருக்கும்னு ஒரு எண்ணம் வந்துருக்குதானே?


கோட்டையைக் கட்டிக்கிட்டு ராஜா உள்ளெ இருப்பார். எதிரி வந்து முற்றுகை போடுவார். ரெண்டு தரப்புலேயும்உயிர்ச்சேதம் இத்யாதி...... இல்லையா, ரத கஜ துரக பதாதிகள்னு நால்வகைப் படையோடு வந்து ஒரு பெரிய மைதானத்துலே எதிரும் புதிருமா நின்னு, சரிக்குச் சரியாப் போடற சண்டைகள். அதுவும் இல்லையா, மந்திரஅஸ்த்திரங்கள் எல்லாம் 'சர்சர்'னு வில்லுலே இருந்து புறப்பட்டு எதிரிகளைக் கொல்ற ராமாயணப்போர்.......


இதெல்லாம் ரொம்பப் பழைய முறைகள். எல்லாம் இப்ப ரொம்ப மாடர்னா வந்துருச்சுன்னு சொன்னாலும், ஒரு 130 வருசத்துக்கு முன்னாலே இங்கே நடந்த சண்டைகள் எல்லாம் கொஞ்சம் வேற மாதிரிதான் இருந்தது.


ஒரு தோப்புக்குள்ளே ரெவி மனியாபோடோ( Rewi Maniapoto)ன்றவர் வெவ்வேற மவோரி குழு ஆட்கள் 300 பேரை வச்சு ஒரு 'பா ( pa)' ன்ற போர்க்குழுவை உண்டாக்குனாரு. அவுங்களை எதிர்க்க, ச்சின்ன பீரங்கியெல்லாம் எடுத்துக்கிட்டு 2000 பிரிடிஷ் படைவீரர்கள் வந்துட்டாங்களாம். மூணு நாள் தாக்கு பிடிச்சிருக்காங்க. 'பேசாம சரணடைஞ்சுருங்க'ன்னு ஜெனெரல் கேமரோன் சொன்னதுக்கு, நம்ம ரெவி 'முடியவே முடியாது'ன்னு சொல்லிட்டாராம்.திடீர்னு 'பா'லே இருந்தவங்க எல்லாம் வெளியே ஓடித்தப்பி இருக்காங்க. எதிரிங்க பார்த்துக்கிட்டு சும்மா இருப்பாங்களா?பாய்ஞ்ச்சாங்க. 150 பேருக்கு ஆயுள் முடிஞ்சது. பேர் பாதி தப்பிச்சுருச்சு.


இப்படியே வேற இடங்களிலும் நடந்துக்கிட்டு இருந்துச்சு. எட்டு வருசம் இதே கதி. வைக்காட்டோ, டாவ்ராங்கா,டாரனாகின்னு பல இடங்களிலே இந்த நிலங்களையெல்லாம் வெள்ளைக்காரங்க பிடிச்சுக்கிட்டாங்க. இந்த 'டாரனாகி'ன்னு சொல்ற இடத்துலேதான் மொத மொதல்லே மவோரிங்க ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுத்தது. அந்த இடத்தை இப்பவும்'கிங் கண்ட்ரி'ன்னு தான் குறிப்பிட்டுப் பேசறாங்க.


நம்ம வில்லியம் தாம்ப்ஸன், கிறிஸ்த்துவ மதத்துலே தீவிர நம்பிக்கை வச்சுட்டார். இங்கே இருந்த வெவ்வேற குழுக்களுக்கும்,வெள்ளை இனத்துக்கும், சமாதானம் உண்டாகறதுக்காக பாடுபட்டார். ஆனாலும் ரெண்டு பிரிவுக்கும் சண்டைநடந்துக்கிட்டுத்தான் இருந்துச்சு. சிப்பாய்க்கலகம், பானிப்பட்டு யுத்தம்னு சண்டைகளுக்கு நம்ம பக்கம் பேர் இருந்தமாதிரி, இங்கேயும் பேர் இருந்துச்சு.

மவோரிங்க இதை டெரிரி பாகிஹா, வெள்ளையரின் கோபம்(teriri pakeha, the white man's anger)சொன்னாங்க.
வெள்ளைக்காரங்க ( pakeha) என்னத்துக்கு நீட்டி முழக்கறதுன்னு, ரொம்ப சிம்பிளா 'மவோரி வார்'னு சொல்லிட்டாங்க.


டெ ஆவாமுட்டு( Te Awamutu)ன்ற இடத்துலெ இருக்கற ஒரு தேவாலயத்துலே , இந்த சண்டைகளிலே இறந்துபோன மவோரிகளுக்கு ஒரு நடுகல் வச்சாங்க, 'எதிரிகளை நேசி' ( I say unto you, love your enemies)ன்னு.இது உண்மைதானாம், பிரிட்டிஷ் படைகள் மவோரி எதிரிகளை ரொம்ப மரியாதையோடுதான் நடத்துனாங்களாம்.


இந்த கலாட்டாங்களுக்கு நடுவிலே புதுசா ஒரு மதம் உருவாச்சு. இதுக்குப் பேரு ஹவ் ஹவ்( Hau-Hau) இதுலேசேர்ந்துக்கிட்டவங்க எல்லாம் சண்டை போடறப்ப 'Pai marire hau-hau'ன்னு கத்தினாப் போதும். வெள்ளைக்காரங்க துப்பாக்கி குண்டு இவுங்க மேலே பாயாது, ஆபத்து இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இதெல்லாம் நம்பறமாதிரியா இருக்கு? குண்டடி பட்டு இவுங்களும் செத்துக்கிட்டுத்தான் இருந்தாங்க. மனுஷனுக்கு மதங்களை சிருஷ்டிக்கறதுக்குப் பிடிச்சிருக்கு.இல்லீங்களா?


Pai marireன்னு சொன்னா Good & Peaceful னு அர்த்தமாம். இங்கே டாரனாகி ( Taranaki)லே இருக்குற Te Uaடெ உவா ன்றவர்தான் இந்த மதத்தை உண்டாக்குனார். இவர்கிட்டே இருந்தவங்களிலே டிடொகொவாரு(Titokowaru) ன்னு ஒரு குழுத்தலைவர் இருந்தார். பயங்கரமான ஆள். இவர் வெள்ளைக்காரங்களைப் பயமுறுத்தி சில இடங்களையெல்லாம் மீட்டார்.


அதெப்படி இவருக்கு மட்டும் வெள்ளைக்காரன் பயந்துட்டான்? ரொம்பவே சிம்பிள். 'மவோரிங்க நரமாமிசம் சாப்புடறவங்களா மாறப்போறோம்'னு அறிவிச்சார். கத்தியாலே சாதிக்க முடியாததை புத்தியாலே சாதிக்கறது இப்படித்தான் போல!


பிரிட்டிஷ்காரர்களுக்கு நண்பனா டெ கூடி( Te Kooti)ன்னு ஒரு மவோரி, கிழக்குக் கடற்கரைப் பக்கம் இருந்தார்.வெள்ளைக்காரங்ககூட சேர்ந்துக்கிட்டு தன் இனத்து எதிரா சண்டையும் போட்டார். ஆனா, வெள்ளைக்காரங்க இவரைநம்பலை. ஹவ்-ஹவ் மதத்துக்கு இவர் ரகசியமா உதவறார்னு நினைச்சுக்கிட்டு, இங்கே இருக்கற இன்னொரு தீவான சாத்தம் தீவு( Chatham Islands)க்கு இவரை கடத்திட்டாங்க. அங்கெ போன டெ கூடி, பைபிளை நல்லாக் கரைச்சுக் குடிச்சுட்டு,ரிங்காட்டு(Ringatu- the Upraised Hand)ன்னு இன்னுமொரு புது மதத்தை உண்டாக்கிட்டார். அவருக்கும் ஒருகூட்டம் சேர்ந்துச்சு. 1868லே சாத்தம் தீவுலே இருந்து படகுலே இங்கே நியூஸிலாந்துக்கு வந்து இங்கே செட்டில்ஆகி இருந்த 'வெள்ளைக்கார செட்டிலர்கள், அவுங்களுக்கு நண்பர்களா இருந்த மவொரிகள்' னு பலரையும் கொன்று குவித்தார்.

ச்சீச்சீ, ரொம்ப ரத்தக் களறியாப் போச்சுங்களே.......... மதம் என்ற பெருலே மக்களைக் கொல்றது நல்லவா இருக்கு?


தீர்க்கதரிசிங்க அப்பப்ப உதிக்கறாங்களாமே. அதுபோல உதிச்சவர்தான் டெ விடி( Te Whiti). அமைதியான முறையிலே எதிர்ப்பைக் காமிக்கணுமுன்னு சொன்னார். டாரனாகியிலே இருக்கற 'பாரிஹக'ன்ற கிராமத்தைச்சேர்ந்தவர். 'மதுவைக் குடிக்கக்கூடாது. நீண்ட நேரம் சாமி கும்புடணும்'னு சொல்லிக்கிட்டு இருந்தார். இவருக்கும் ஒரு கூட்டம் சேர்ந்துச்சு. சர்வேயர்கள் அளந்து குச்சி நட்டு வச்சிருந்த நிலத்தையெல்லாம் இவுங்க திருப்பி எடுத்துக்கிட்டு, அங்கே உழவு செஞ்சு பயிர் போட ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.


வெள்ளை அரசாங்கம் இதைக் கேள்விப்பட்டு, தடுத்து நிறுத்தறதுக்காக, 1600 படைவீரர்களை அனுப்புச்சு. இங்கே வந்து பார்த்தா, நிலம் முழுசும் நூத்துக்கணக்கான ச்சின்னப் புள்ளைங்க! ஆடிக்கிட்டும், பாடிக்கிட்டும் இருக்குதுங்க.எல்லாம் இந்த டெ விடியோட வேலை. இந்த ஆள் ஒரு புதுத் தலைவலின்னு, பிடிச்சு 'உள்ளே' போட்டுட்டாங்கஒரு வருசத்துக்கு.


இந்த நியூஸிலாந்து போர்களிலே ரெண்டு பக்கத்துலேயும் சரிசமமா ஆயிரம், ஆயிரம்னு ஆட்கள் செத்துப் போனாங்க.


வீரர் டிடொகொவாரு, அதாங்க ஹவ்ஹவ் க்ரூப் ஆளு, அவரை யாராலேயும் ஜெயிக்க முடியலை. ஆனா திடீர்னு1869லே அவரோட ஆட்கள் எதோ மர்மமான முறையிலே அவரை விட்டுப் பிரிஞ்சு போயிட்டாங்க. இவர் மட்டும் அம்போன்னு நின்னுட்டார். அதுக்கப்புறம் தனியா இவராலே தாக்குப் பிடிக்க முடியலை. இவரோட கதை கந்தலாயிருச்சு. பாவம்.


1880வரை, 'கிங் கண்ட்ரி'யிலே வெள்ளைக்காரங்களை நுழையவெ விடாம மவோரி ராஜாவும் அவரோட குழுவும் சாமர்த்தியமாப் பார்த்துக்கிட்டாங்க தான். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அங்கெயும் தொய்வு. படைகள் பலவீனப்பட்டுப் போச்சு.நிலத்தைக் காப்பாத்தணுமுன்னு இனியும் சண்டை போட்டுச் சாவறதுலெ அர்த்தமே இல்லை.பேசாம இருக்கறதைவித்துட்டுக் காசாவது பார்க்கலாமுன்னு அவுங்களும் நிலத்தை விக்க ஆரம்பிச்சுட்டாங்க.


ஒரு வருசம், ஜெயிலுக்குள்ளே இருந்த டெ விடி பல விஷயங்களைக் கத்துக்கிட்டு வெளியே வந்தார். அவரோட கிராமத்துக்குப் (பாரிஹக-Parihaka) போய், நாகரீகமான முறையிலே குழாய்த்தண்ணி, மின்சாரவசதியோடு கூடிய ஒரு மாடல் கிராமம் உருவாக்குனார். வெள்ளையர்களோட உலகத்துலே ஜெயிச்சு வரணுமுன்னா, நம்ம ஆட்களும் நாகரீக வாழ்க்கைமுறையோடு இருக்கணும். பட்டிக்காடா இருந்து பிரயோஜனமில்லைன்னு சொன்னாராம்.


ரெண்டு பக்கத்து ஜனத்தொகையும் கொஞ்சம் கொஞ்சமாப் பெருகி வந்துச்சு. வெள்ளைக்காரங்களோட ஜனத்தொகைதான் கூடிக்கிட்டே போய் இங்கே இருக்கற மவோரிகளைவிட அதிகமாப் போச்சு. அதான் இங்கே ஏற்கெனவே வந்து சேர்ந்தாங்களே,அவுங்களோட சொந்தக்காரங்களும், நண்பர்களும் நல்ல வாழ்க்கைதேடி அலுக்காமப் பயணம் பண்ணி வரத் துணிஞ்சிட்டாங்களே!


நடந்த சம்பவங்கள் எல்லாம் அப்படி ஒரு ஆச்சரியமானது இல்லேன்னாலும், இந்த மவோரி ஜனங்களொட பேர்களும், அவுங்க ஊருங்களோட பேர்களும் சொல்றதுக்கும், ஞாபகம் வச்சுக்கறதுக்கும் நமக்குக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்குல்லே. இதுவே கொஞ்சம் அலுப்பாவும் ஆயாசமாவும் போயிருது. அதுக்காக, பேர்களை மாத்திவச்சுக்க முடியுதா? ஆனா இதே கஷ்டம் அவுங்க பக்கத்துலேயும் இருக்குமுல்லெ?

மொத்தத்துலே பரிச்சயம் இல்லாததாலேதான் சரித்திரம் போரடிச்சுப் போயிருதோ?

இன்னிக்கு வகுப்புலே நிறைய ரத்தம் பார்த்துட்டோம். மனசுக்கு நல்லாவே இல்லை.....

Monday, May 22, 2006

நியூஸிலாந்து பகுதி 36

சரியாச் சொன்னா, லீவுன்ற பேருலே அஞ்சுமாசத்துக்குக் கூடி கும்மியடிச்சிருக்கோம். இந்தத் தொடரோட 35வதுபதிவு போனவருசம் டிசம்பர் 16க்கு வந்திருக்கு. திஸ் ஈஸ் ஃபோர் மச்!!!!!மாணவ, மாணவிகள் எல்லாம் அமைதியா வகுப்புக்கு திரும்ப 'வரும்படி'க் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.புதியவர்கள் தாராளமாக வரலாம். அர்ரியர்ஸ் எழுதிக்கலாம்.என்ன சொல்றீங்க?


யாருங்க அங்கே முதல் பகுதி எப்ப வந்துச்சுன்னு கேக்கறது? ரொம்ப நாள் இல்லீங்க. போனவருசம் செப்டம்பர்20 தேதிக்கு (20/09/2005)க்கு வந்துச்சுங்க. மூணே மாசம் வந்துட்டு அப்படியே நின்னு போச்சு. சரி சரி. வந்து சேருங்க,என்ன?


நியூஸிலாந்து பகுதி 36
------------------------

ஆன்னா ஊன்னா 'மாட்சிமை தாங்கிய மகாராணி'ன்னு ஆரம்பிச்சு முழங்கிக்கிட்டு இருந்த வெள்ளைக்கார 'அரசாங்கத்தை'க் கவனிச்சுக்கிட்டே இருந்த மவோரிங்களும், நாம இப்படித் தனித்தனியா குழுவாப் பிரிஞ்சுக்கிறதுனாலேதான் நம்ம 'வாய்ஸ்' எடுபடலைப்பா. பதிலுக்கு நம்ம பக்கத்துலே இருந்து எங்க மகாராஜா/மகாராணி இப்படிச் சொல்றாங்க, அப்படிச் சொல்றாங்கன்னு ஒரு போடு போட்டா இவுங்க வழிக்கு வந்துருவாங்கன்னு யோசிச்சாங்க. முக்கிய காரணம் என்னன்னா,வெள்ளைக்காரர் கூட்டம் பெருகிக்கிட்டே போகுது. அவுங்க குறிக்கோளே நிலம் வாங்கி, பண்ணை விவசாயம் செஞ்சு பணம் சம்பாரிச்சுறணுமுன்றது. மவோரிங்களுக்கோ நிலம்ன்றது பெரிய சொத்து. நிலம்தான் அவுங்க ஊர், நாடு எல்லாம்.


இதைக் கொஞ்சமும் புரிஞ்சுக்காதவங்களா இருந்தாங்க இந்த வெள்ளைக்காரங்க. காசு தரோம், இடத்தைக்கொடு!
தனித்தனியா நிலப்பட்டா எதுவும் கிடையாது மவோரிங்களுக்கு. அவுங்க நிலமுன்னு சொல்றது அங்கே இருக்கற குழுவுக்குத்தான். சிற்றரசர்கள் காலம் ஞாபகம் வருதா? அந்தக் குழு அங்கத்தினர் எல்லாரும் மொத்தமாச் சம்மதிச்சால்தான் அந்த நிலத்தை விற்க முடியும்.


எல்லா இடத்துலேயும், முடியாட்சி போய் மக்களாட்சின்னு வந்தா, இங்கே மக்களே, முடியாட்சியைக் கொண்டு வந்துட்டாங்க!யாரை ராஜாவா ஆக்கறது? இங்கே என்ன யானையா இருக்கு? அது கையிலே மாலையைக் கொடுத்து விடறதுக்கு?கூப்புடு நம்ம ஆளுங்களைன்னு ஒரு கூட்டத்தைக் கூட்டுனாரு வில்லியன் தாம்ப்ஸன். ஹங்.... வில்லியன் தாம்ப்ஸன் என்னாத்துக்கு மவோரிங்களைக் கூப்புடணும்? இவரென்னா மவோரியா?

ஆமாம். இவரு மவோரியேதான். இவுங்கபேரை வெள்ளைக்காரங்களாலே சரியாச் சொல்ல முடியலைன்னுட்டு இப்ப மவோரிங்க அவுங்க பேருக்குக் கொஞ்சம் கொஞ்சம் ஒத்துப்போறமாதிரி வெள்ளைக்காரப் பேருங்களை வச்சுக்க ஆரம்பிச்சிருந்தாங்க. விரெமு டாமிஹனா தான் நம்ம வில்லியம் தாம்ப்ஸன்! இவர் Ngatihaua tribe தலைவர். நாலாபக்கமிருந்தும் ஆளுங்க வந்து சேர்ந்துட்டாங்க. கூடுன தலைவர்களிலே ஒரு பேர் பெற்ற தலைவரும் இருந்தாரு. ஆனா வயசானவரு.( அவுங்களுக்கு அப்ப ஆயுசே 40க்கு மேலே போகாதுன்னு இருந்தப்ப, இந்த 'வயசானவர்' என்னத்தை வயசானாவரா இருந்திருக்கப் போறாரு?)


ஃபெரோஃபெரோ, மவோரிகளின் முதல் அரசனாக்கப்பட்டார். Te Wherowhero. Te இதுக்கு 'The' ன்னு அர்த்தம்.பட்டாபிஷேகம் முடிஞ்சது. அவருக்கு ஒரு புதுப்பேர் கிடைச்சது. அரியணை ஏறும்போது ஒரு பேர் சூடிக்கற வழக்கம் அநேகமா எல்லா நாட்டு அரசர்களுக்கும் இருந்தது, இவுங்களுக்கும் எப்படியோ தெரிஞ்சு போச்சு பாருங்க!அந்தப்பேரு என்னன்னா பொடடாவ் Potatau.தனிக்கொடி, அரசவை அதிகாரிகள், படைவீரர்கள், காவல்காரர்கள்ன்னு ஒரு பந்தாவாத்தான் இருந்தார். மன்னராட்சி ஆரம்பிச்சது 1858.
அடுத்தவருசமே டெய்ரான்னு ஒரு மவோரி 'தன்' இடத்தை விக்கப்போறென்னு சொன்னார். அவரோட தலைவர் அவரைக் கூப்புட்டனுப்பி, 'ஏம்ப்பா, இதுலே எது 'உன்னது?' காமி பாப்போம்'ன்னா அவராலே சரியாக் குறிப்பிட்டுக் காமிக்கத்தெரியலை.'பேசாம இரு. அழிம்பு பண்ணாதே. இது எல்லோருக்கும் உரிமையான இடம். விக்கக் கிக்க முடியாது. போய் வேலையைப்பார்'ன்னு சொல்லியனுப்புனார்.


அப்ப வெள்ளையர் அரசாங்க சார்பா கவர்னரோட ஒரு ஆள், இந்த டெய்ரா கிட்டே( இவரும் சொல்றதுக்கு சுலபமா 'டெய்லர்' (Taylor) ஒரு பேர் வச்சுகிட்டார் )வந்து, 'உனக்கும் உங்க குடும்பத்துக்கும் இந்த நிலத்துலே கட்டாயம் பங்கு இருக்குமில்லே. அதைமட்டும் எங்களுக்கு வித்துரு'ன்னு சொல்லி 'புதுக் கலகத்தை' ஆரம்பிச்சுவச்சார். நிலம் அளக்க வந்த ஆளுங்களுக்கும், மவோரிங்களுக்கும் சண்டை தொடங்குச்சு.கலகம் ஆரம்பிக்கறதே இவுங்க தொழிலாப் போச்சுங்க. இப்படித்தானே இந்தியாவுலேயும் சிற்றரசர்களுக்குள்ளே கலகமூட்டி விட்டுட்டு இவுங்க ஜாலியா இருந்துருக்காங்க.


இங்கே வந்து நிலம் வாங்குனவுங்களை 'செட்டிலர்ஸ்'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அந்த 'செட்டிலர்ஸ்' ங்க குடியிருப்புக்குத் தீ வச்சாங்க. கொளுத்திவிடற சமாச்சாரம் காலங்காலமா இருக்கு! இழப்பு ரெண்டு தரப்புலேயும்.வெற்றியும் மாறி மாறி ரெண்டு பக்கமும். இதுக்கு நடுவுலே சில மவோரிக் குழுங்க வெள்ளைக்காரங்க பக்கம் சேர்ந்துக்கிட்டு சிநேகிதம் பாராட்டிக்கிட்டு இருந்தாங்க, நம்ம மக்களையே கொல்றாங்கன்ற எண்ணமே இல்லாம. எல்லாம் எட்டப்பனுங்க.வெள்ளைக்காரங்க ஜனத்தொகை மவோரிங்களைவிட அதிகமாயிருச்சு.


அப்ப புது கவர்னர் வந்தார். அவர் பேர் 'கோர் ப்ரவுண்'. வந்து உக்காந்ததுமே முதல் வேலையாச் செஞ்சது 'மவோரிராஜா'வை எதிர்க்கத் திட்டம் தீட்டுனது. ஏனாம்? இன்னும் நிலம் வாங்கிப் போடணுமாம். அவர்கிட்டே 12000 வெள்ளைப்படையும்,1000 சிநேகித மவோரி வீரர்களும் இருந்தாங்க. மவோரி ராஜா கிட்டே வெறும் 4000 படை வீரர்கள்தான். அவுங்களும் 'பார்ட் டைம்'வீரர்கள்தான். சண்டை போட்டுக்கிட்டே இருந்தாக் குடும்பம், குழந்தைகுட்டிகளைக் கவனிக்கறது யாரு? அப்பப்ப வூட்டாண்டை போய் பார்த்து குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செஞ்சுக்கிட்டு, பயிரிட நேரமானா நிலத்துலே பயிர் பச்சை விதைச்சிட்டுத் திரும்ப சண்டையிலே வந்து சேர்ந்துக்குவாங்க.


மவோரிங்க அவுங்க நிலம் நீச்சைக் காப்பாத்திக்கறாங்கன்னு இல்லாம, இந்த வந்தேறி வெள்ளைக்காரங்க வேற மாதிரி பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சாங்க. 'மகாராணி விக்டோரியாவை பயமுறுத்தத்தான் இந்த மவோரி ராஜா வெள்ளைக்காரங்களுக்கு எதிரா இருக்கார்'னு வதந்தியைப் பரப்புனாங்க. பாவம், இந்த மவோரி ராஜா. அவர் இந்த மகாராணியம்மாவைப் பார்த்ததுகூட இல்லை.


பழமொழின்னு சொல்றமே அது எல்லா ஊருக்கும் பொதுவான சமாச்சாரம் போல இருக்கு. saying ன்னு சொல்லிக்கிறாங்கல்லே, அதை!
'நிலமும், பொண்ணும்தான் காரணம் ஆம்புளைங்க சாவறதுக்கு' இப்படி ஒரு மவோரிப் பழமொழி.


ஆஹா.... நம்மூரு மண்ணாசை, பெண்ணாசை கதைதான் போல இல்லீங்களா? நம்மூர் மகாபாரதம், ராமாயணம் எல்லாம் இதைத்தானுங்களே சொல்லுது!
இன்னும் சில மவோரிங்க வேற மாதிரி சொல்லிக்கிட்டு இருந்தாங்க. 'உண்மையைச் சொல்லணுமுன்னா, இந்த நிலங்களுக்கு சொந்தம் கொண்டாடறதுக்கும், பாதுகாவலனா இருக்கறதுக்கும் மனுஷனுக்கு உரிமையே கிடையாது.இதெல்லாம் காட்டுக் கொடிகளுக்கும், நெட்டில்னு சொல்ற ஒரு புதர்களுக்கும், பெரணி மரத்துக்கும், வேடான்னு சொல்ற ஒருவித வெட்டுக்கிளிகளுக்கும், சிலந்திகளுக்கும், பெரிய பல்லி( tuatara) இனங்களுக்கும், ஊர்வன வகையைச்சேர்ந்த பிராணிகளுக்கும், எல்லாத்துக்கும் மேலா டானிஃபா (taniwha)ன்னு சொல்ற கடல்லே வசிக்கற, நீர்நிலைகளுக்குச்சொந்தமான தேவதைக்கும்( ஒரு வேளை நாம் 'வருண பகவான்' னு சொல்றவரோ?)மட்டுமே சொந்தம்'னு.


அப்பாடா......எத்தனை வகைக்குச் சொந்தம் பார்த்தீங்களா? ஆனா யோசிச்சுப் பார்த்தா இது சரியாத்தான் இருக்குங்க.இந்த பூமி, இதுலே இருக்கற, வாழற எல்லா உயிருக்கும் சொந்தம் இல்லீங்களா? அதை எப்படி மனுஷன் சுயநலமா தனதாக்கிக்கிட்டான்? மனுஷனும் இந்த பூமியிலே வாழறான்றதைத் தவிர, மனுஷனாங்க இந்த பூமியை உண்டாக்குனான்?இல்லைதானே?

Saturday, May 20, 2006

எவ்ரி டே மனிதர்கள் -3

தாடி மாமா
----------

"ஒரு ஆயிரம் விளம்பழம் நல்லாப் பழுத்ததாப் பார்த்து வாங்கிக்கணும். அதை ஒரு யானைக்குத் தின்னக் கொடுக்கணும்.யானை எப்படி விளாம்பழம் தின்னும் தெரியுமா?"


"தெரியாதே"


" அப்படியே முழூசா முழுங்கிரும். அதெல்லாம் வயித்துக்குள்ளே போய் அப்படியே உள்ளே இருக்கற பழத்தை மட்டும் செரிச்சுட்டு, மறுநாள் எல்லா ஓடுங்களையும் சாணியா வெளியேத்திரும்."


"அய்யய்ய...."


" என்ன அய்யய்ய? விளாம்பழம் எல்லாமே முழூசா வெளியே வரும்"


" நிஜம்மாவா?"


'' ஆமாம். அப்ப ஒண்ணொண்ணா எடுத்து அந்த ஓட்டை உடைச்சுப் பாக்கணும்"


"ச்சீய்...."


" அதுலேதான் இருக்கு சூட்சமம்"


" அப்படியா? உடைச்சுப் பார்த்தா என்ன இருக்கும்?"


" ஹாஹாஹா... ஒண்ணும் இருக்காது."


" அப்ப ஏன் உடைச்சுப் பாக்கணும்?"


" சொல்றேன் சொல்றேன். அநேகமா எல்லா ஓட்டுலேயும் ஒண்ணும் இருக்காது. ஆனாத் தப்பித்தவறிஎதாவது ஓட்டுக்குள்ளே ஒரு விளம்பழ விதை மட்டும் நின்னுரும். அது அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.அப்படி ஒரு விதை உனக்குக் கிடைச்சிருச்சுன்னு வச்சுக்க. நீ சீக்கிரம் ஃபேமஸ் ஆயிருவே"

" என்ன ஆகும்? எப்படி ஃபேமஸ் ஆவேன்?"


" பந்தயம் கட்டிக்கிட்டுச் சாப்புடறாங்கல்லே, அதுலே போய் நீ சாப்புட உக்கார்ந்தா, யாரும் உன்னை ஜெயிக்க முடியாது.இந்த விளாம்பழ விதை இருக்குல்லே, அதை உன் தொப்புள்லே வச்சு, அது கீழே விழுந்துராம ஒரு துணியைக் கட்டிக்கணும். அவ்வளோதான். ஜெயிப்பு எப்பவும் உனக்கே"


கற்பனையிலே விளாம்பழவிதையை வயித்துலே கட்டிக்கிட்டு உலகம் பூராப் போய் ஜெயிக்கறேன். என்னை வெல்ல இனி யாருமே இல்லை


தினமும் இப்படி எதாவது சொல்லி எங்களைக் கற்பனை லோகத்துலே சஞ்சரிக்க விடறதுதான் தாடிமாமாவோட வேலை!


தங்கச்சி வீட்டுலே தங்கி இருக்கார் மாமா. அவுங்களுக்கும், எல்லோரும் வேலைக்குப் போறதாலே வீட்டைப் பொறுப்பாப்பார்த்துக்க ஒரு ஆளு வேணுமே!


இவருக்குக் குடும்பம்? எல்லாம் இருக்குதான். மாமி 'போயி' நிறைய வருஷம் ஆச்சு. அப்பவும் சரி இப்பவும் சரி தன்னோட பிள்ளைகளைப் பத்துன கவலையே இல்லாத ஜீவன். அதுங்க எல்லாம் பாட்டி வீட்டுலே வளர்ந்து, இப்பக் கல்யாணம் ஆகிக் கண்காணாத இடத்துலே இருக்குதுங்க. தன்னோட தேவை, குடும்பத்துக்கு இருக்குமுன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலையாம்.

இளமையிலே மிலிட்டரியில் சேர்ந்து வேலை. சண்டையெல்லாம் போட்டுருக்க மாட்டார். அவர் அங்கே ஸ்டோர் கீப்பராத்தான் இருந்தாராம். ஊர் ஊராச் சுத்தியிருக்கார். ராணுவத்துலே இருந்து ரிட்டயர் ஆன பிறகும் திடீர்திடீர்னு எங்கெயாவது கிளம்பிப் போய்க்கிட்டே இருப்பாராம். போனா அவ்வளொதான்.


அனுபவங்களைச் சுமந்துக்கிட்டு ஊர்வந்து சேர்ந்தப்ப வயசு 60க்கு மேலே ஆயிருச்சு. கழுத்துவரை தொங்கற கொஞ்சம்முடியைத் தூக்கிமுறுக்கி ச்சின்ன எலுமிச்சை அளவு கொண்டையா முடிஞ்சிருப்பார். குனிஞ்சு இருக்கறப்பப் பார்த்தா,தலைமுடிக்கு இடையிலே மண்டை பளபளன்னு டாலடிக்கும்! நெஞ்சுவரை தொங்கும் நரைச்ச தாடி.


சாயந்திரம் அஞ்சு மணி ஆச்சுன்னா, உடையெல்லாம் மாத்திக்கிட்டுத் தயாரா இருப்பாராம். தங்கை வேலை முடிஞ்சு வந்து,வெராண்டாவுலே செருப்பை விடும்போது, இவர் தன்னோட செருப்புக்குள்ளே காலை நுழைச்சுக்கிட்டு இருப்பாராம்.அப்படி ஒரு டைமிங். மிலிட்டரிக்காரர் ஆச்சே!


வேகுவேகுன்னு நடந்து போவார். அந்த ஊரை ரயில் தண்டவாளம் ரெண்டாப் பிரிச்சு இருந்தது. ஒரு பக்கம் தங்கைவீடு. மறுபக்கம் அவரோட சித்தி வீடு. சித்தின்னதும் தள்ளாடும் பாட்டின்னு நினைச்சுறாதீங்க. சித்திக்கும் இவருக்கும் மூணே மூணுவயசுதான் வித்தியாசம். அதனாலெ அவுங்களை அக்கான்னெ கூப்புட்டுப் பழக்கம்! சித்தி கதை பெரிய கதை.அதை இன்னோருநாள் சொல்லிக்கலாம், என்ன?


வர்ற வழியிலேயே அங்கங்கே சில நண்பர்களைச் சந்திச்சுப் பேசிட்டுப், பெட்டிக் கடையிலே பத்து பைசாவுக்கு மூக்குப் பொடி வாங்கிக்கிட்டு ஏறக்குறைய இருட்டும் நேரத்துக்கு வந்துருவார். அவருக்காக இங்கே ஒரு டம்ப்ளர் காஃபி காத்துக்கிட்டு இருக்கும். நல்ல சூடா இருக்கும் காஃபியை மெதுவா அனுபவிச்சுக் குடிக்கும்போதே சபைகூடிரும். பெருசுலே இருந்து சிறுசு வரை ஜமா சேர்ந்தாச்சு.


தாடியை ஒரு கையாலே நீவிக்கிட்டே மெதுவா ஆரம்பிக்கற பேச்சு, ஒரு வளைவுலே திரும்பி இலக்கு நோக்கிப் போயிரும். அவன் சொன்னான், இவன் சொன்னான்னு இல்லாம ஆதாரபூர்வம் பேர், அட்ரஸ் எல்லாம் சொல்லித்தான் சம்பவங்களை விவரிப்பார். ... தெருவிலே ஆறுமுகம்னு ஒருத்தருன்னு ஆரம்பிச்சாருன்னா, நமக்கு அந்த ஆறுமுகம்கூட ஒரு நெருக்கம் தோணிப்போகும்.அதாலேயே கேக்குறவங்களுக்கு ஒரு ஈடுபாடும் வந்துரும்.


டிவிக்கள் எல்லாம் இல்லாத அந்தக் காலத்துலேயே, 'சீரியல்'களுக்கு எங்களைப் பழக்கப்படுத்தி வச்சிருந்தார் மாமா.எட்டு எட்டேகால்வரை நடக்கும் பேச்சு 'டக்'ன்னு நிக்கும். அங்கிருந்து கிளம்புனாருன்னா வந்த வழியாவே நேராத்தங்கை வீடுதான். கிட்டத்தட்ட நாலு கிலோ மீட்டர் இருக்கும். போய்ச் சேர ஒம்போதரை ஆயிருமாம்.


அங்கே அதுக்குள்ளே எல்லாரும் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு, இவருக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு படுத்துருவாங்களாம். இவருக்கு அந்தத் தங்கை புருஷனைப் பிடிக்கவே பிடிக்காது. ஹூம்...... யாருக்குத்தான் பிடிக்கும்?அப்பேர்ப்பட்ட ஆள். அதனாலேயே அவுங்களைத் தவிர்க்கறதுக்காகத்தான் இவ்வளவு லேட்டா வீடு திரும்பறாருன்னுகேள்வி.


பிள்ளைகளுக்கெல்லாம் இவர் தாடி மாமா. சாயங்காலம் ஆச்சுன்னா மாமா வந்தே ஆகணும். இவரில்லாத நாளைக்கற்பனை செஞ்சும் பார்க்க முடியாது. இதோ வந்துட்டாரே.....


" செம்பு, பித்தளையை எல்லாம் தங்கமா மாத்திரலாம், தெரியுமா? நம்ம ராமநாதன் இல்லே ராயப்புரத்துலே இருக்கானேஅவன் இப்படி செஞ்சிருக்கான். நானும் அவனுமாச் சேர்ந்துதான் முந்தி ஒரு சாமியாரைப் பாக்கப் போயிருந்தோம்..."ஆரம்பம் ஆச்சு இன்னிக்குக் கதை!


பெரிய பெரிய தங்கக்கட்டிகளை வச்சு, ஏகப்பட்ட நகைகளைச் செஞ்சு மாட்டிக்கிட்டு வளைய வந்துக்கிட்டு இருக்கோம்.அன்னிக்கு எல்லாவிதமும் செஞ்சாச்சு. இன்னும் இவ்வளோ தங்கம் மிச்சம் இருக்கே! இனிமே வீட்டுலே பாத்திரங்கள் எல்லாமே தங்கம்தான் !!

------------
அடுத்த வாரம்: ஸ்வீட்டி
--------

நன்றி: தமிழோவியம்

Friday, May 19, 2006

கனவு பலித்ததம்மா!!!!

'...................... போல் கனவு கண்டால் உங்களது தேவையற்ற முயற்சிகள் யாவும் தோல்வி அடையும்.உங்களதுஇன்றியமையாத தேவைகள் யாவும் உங்களுடைய முயற்சியை எதிர்பாராமலே நிறைவேறிக் கொண்டு வரும்.உங்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி, உங்களுடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்டு வருவதை நீங்களே உணர்வீரகள்.'


ஒரே கனவு அடிக்கடி வர்றதாலே அதுக்கு அர்த்தம் என்னன்னு தமிழ்வாணனின் 'கனவுகளுக்குப் பலன்' பார்த்தே மனப்பாடமாகிக் கிடக்கு. இந்தப் புத்தகத்தை தலைமாட்டுக்குப் பக்கத்துலே வச்சுக்கணுமாம்.அப்பத்தானே மறக்காமப் பலன் பாக்க முடியும்.


புத்தகம் என்னவோ 20 வருசப் பழசு. அப்ப 21 ரூபாய்க்கு வாங்குனேன். நம்ம கூட்டாளிங்களுக்கெல்லாம் கனவுப்பலன் சொல்றது நாந்தான். அவுங்க கேக்கறப்பப் புத்தகம் பார்த்துட்டு, நல்ல பலனா இருந்தா அப்படியே சொல்றதும்,கெட்ட பலன்னா அதை அப்படியே மாத்தி நல்ல கனவுன்னு என் வழிப்படி இட்டுக்கட்டி ரீல் விடுறதும்தான் பழக்கம்.( ஷ்ரேயா, உங்களுக்கு இதுவரை சொன்னதெல்லாம் ரீல் கிடையாது)


கனவு எல்லாம் நாம ப்ளான் பண்ணியாங்க வருது? அது, தானே அப்படியே வர்றதுதானே? அதுக்குப் பலன் கெட்டதாப் போட்டுருந்து, அதை அப்படியே நாம் சொல்லப்போக,அதை நினைச்சு மனசுக் கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தா, ஒருவேளைஅப்படியே நடந்து போச்சுன்னா?


நான் ச்சின்னப்புள்ளையா இருந்த காலத்துலேயும் தினமும் ஒரே கனவுதான் வரும். அது பறக்கரது. எனக்கு ரெக்கை எல்லாம் இருக்காது. ஆனா... என்னைத் துரத்திக்கிட்டு வர்ற (தீயசக்தியோ?) ஏதோ ஒண்ணுகிட்டே இருந்து தப்பி ஓடுவேன். ஓடமுடியாதஇடம், இல்லேன்னா அது(!) கிட்டே நெருங்கி வர்ற சமயமுன்னா,அப்படியே ஆகாயத்துலே எழும்பி போய்கிட்டே இருப்பேன்.ஒரு நாளும் அதன் கையிலெ அகப்பட்டதே இல்லை. என்ன, ராத்திரியெல்லாம் ஓடோ ஓடுன்னு ஓடி, காலையிலே எழுந்திரிக்கறப்பக் காலெல்லாம் ஒரே வலியாவும் களைப்பாவும் இருக்கும். இந்தக் கனவு ஏறக்குறைய என்னோட22 வயசு வரை வந்துக்கிட்டே இருந்தது.


அதென்ன, கரெக்ட்டா 22 வயசுன்றேனா? அதுக்கப்புறம்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே! அப்ப இருந்து கனவுகள் வேறமாதிரி ஆனது. இப்ப அடிக்கடி வர்றது என்னன்னா , கோபாலோட கழுத்தைத் திருப்பாச்சியாலே ஒரே வெட்டு. அதுக்கப்புறம் 'ஐய்யோ இப்படிக் கொன்னுட்டேனே' ன்னு அழுகை. கனவுன்னு இல்லாம நிஜமாவெ சத்தமா அழுவேனாம். இவர் வேற ' ராத்திரியெல்லாம் தேம்பித் தேம்பி என்ன அழுகை? மனுசன் தூங்க வேணாமா?'ன்னு திட்டிக்கிட்டே எழுப்புவார். 'உங்களை வெட்டிட்டேன்'ன்னு சொல்லிக்கிட்டே இன்னும் அழுதுகிட்டே இருப்பேன். சிலநாட்களிலேஅழுது அழுது முகமெல்லாம் வீங்கி , கண்ணீராலே தலகாணி எல்லாம் நனைஞ்சிரும்.


இப்பெல்லாம் கனவோட 'ஸீன்' மாறிப்போச்சு. வீச்சரிவாள் வெட்டறது எல்லாம் எப்பவாவதுதான்:-)))ஒரு பத்து வருசகாலமா வேற ஒண்ணு, 'கோவிலுக்குப் போய் ஒரு தெய்வத்தைக் கும்பிடுறது.'இதுக்குத்தான் நான் முதல் பத்தியிலே சொன்ன பலன்.


சரி, நம்ம நியாயமான ஆசைகள் நிறைவேறட்டுமுன்னு ச்சும்மா இருந்துடறதுதான். போனமாசம்,எங்க இவர் ஆஃபீஸ் வேலையா ச்சீனாவுக்குப் போயிட்டு வந்தார். முந்தியெல்லாம் இவர் திரும்ப வர்றநாளுக்கு, ஏர்ப்போர்ட் போய்க் கூட்டிக்கிட்டு வர்றதுதான். எப்பவாவதுன்னா சரி. போலாம், வரலாம். இதுமாசம் மூணுதடவைன்னு ஆனபிறகு 'நீங்களே டாக்ஸி'யிலே வந்துருங்க'ன்னு சொல்லிட்டேன். இப்ப ஏழெட்டு வருசமா போறதும் கூட டாக்ஸின்னெ ஆயிருச்சு.


அன்னிக்கு, இவர் வர்ற நாள். ஃப்ளைட் சரியான நேரத்துக்கு வருதான்னு, ஏர்ப்போட்டுக்குப் ஃபோன் செஞ்சு கேட்டுக்கிட்டுச் சமையலை செஞ்சுக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நேரத்துலெயே, இவர் கூப்புட்டு, வீட்டுக்குவந்துக்கிட்டு இருக்கேன்'னு சொன்னார். அதே போல மூணு நிமிஷத்துலே வந்து இறங்கிட்டார். உள்ளேநுழைஞ்சதும், முதல்லே இதைப் பாரு'ன்னு சொல்லி ஒரு ச்சின்னப் பொதியை கேபின் பேக்லே இருந்துஎடுத்துக் கொடுத்தார்.


பிரிக்கறப்பவே வாசனை தூக்குது. உள்ளே....... ஹை! மசால்வடை!!!!!

ஐய்யய்யோ, மசால்வடை! எப்படிக் கொண்டுவந்தீங்க? நாய் பிடிக்கலையா?ன்னு கூவறேன்.


"பிடிச்சுருச்சே"

சிங்கை வழியாத்தானே இங்கெ வரணும். அதனாலே ட்ரான்சிட்லே இருந்தாலும், சிட்டி வரை (என்ன பொல்லாதசிட்டி, லிட்டில் இண்டியா வரை) ஒரு ரெண்டு மணிநேரமாவது வந்து சுத்திட்டுப் போறதுதான் வழக்கம். அப்படி வந்துட்டுப் போறப்ப கோமளவிலாஸ் ( பழசு. இதுதான் நமக்கு ஆகிவந்த இடம்) போய் சாப்புட்டப்ப, சர்விங் கவுண்ட்டருக்கு வடையைக் கொண்டுவந்து நிறைச்சாங்களாம். என்ன வடை? ன்னு கேட்டப்ப, அது நம்ம வடை!!!!


ஆனது ஆகட்டுமுன்னு துணிஞ்சு ஒரு நாலுவடையைப் பேக் செய்யச் சொல்லி வாங்கிட்டு வந்துட்டார். இங்கே பெரிய பெட்டியை எடுக்க 'பெல்ட்'கிட்டே நிக்கறப்ப, நாய் (வழக்கம்போல அப்படியே வாசனை புடிச்சுக்கிட்டு வர்றது,) இவர் கிட்டே வந்து 'டக்'னு நின்னுருச்சாம். நாயோட இருந்த அம்மா என்ன வச்சுருக்கீங்கன்னு கேட்டதுக்கு இவர் ம. பொதியைக் காமிச்சாராம். வெங்காயவாசனை தூக்கலா இருந்துருக்கு. இங்கே நம்ம ஊர்ஏர்ப்போர்ட் மோப்ப நாய்கள், பழ வாசனை இருந்தாவே புடிச்சுரும். ஒருதடவை, பைக்குள்ளெ 'முந்தி வச்சிருந்த' ஆப்பிள் வாசனையவே புடிச்சதாச்சே இதுங்க.


அப்புறம் சமைச்ச பதார்த்தமுன்னு சொன்னதும்( அதான் ஏற்கெனவே டிக்ளேர் செஞ்சு எழுதிட்டாருல்லே) சரின்னுவுட்டுட்டாங்களாம்.


வாங்கி 13 மணிநேரம்தானே ஆயிருக்கு. அதுக்குள்ளே கொஞ்சம்(???!!!!) ஆறிப்போச்சு. இதுக்கெல்லாம் அசர முடியுமா? சூடான எண்ணெயிலே ஒரு நிமிசம் போட்டு எடுத்தேன்.


ஆஹா........... மணக்க மணக்க கரம் கரம் ம .....ம.....ம..... மசால் வடை!!


........உங்களது இன்றியமையாத தேவைகள் யாவும் உங்களுடைய முயற்சியை எதிர்பாராமலே நிறைவேறிக் கொண்டு வரும்...................


கனவு பலித்ததம்மா!!!

Wednesday, May 17, 2006

சிங்கையில் ஒரு கங்கை

பயண விவரம் பகுதி 27

காலையிலே சிங்கை வந்து சேர்ந்துட்டு 'த க்ளேற்மாண்ட்' க்குப் போய்க்கிட்டு இருக்கேன். முஸ்தாஃபாவுக்கு எதிர்லேதான் இருக்காம். ரெண்டுதடவை செராங்கூன் ரோடை வலம் வந்தாச்சு. இன்னும் கண்ணுலே படலை. அப்புறம்டாக்ஸியை மெதுவாப் போகச்சொல்லி ஒவ்வொண்ணாப் பார்த்துக்கிட்டு ஊர்ந்து போனா ஒரு வாசல் தெரியுது,
ச்சின்னதா. கேஃபேக்கு இடையிலே.


அதுக்குள்ளே அந்த டாக்ஸிக்காரர் சொல்றாரு, 'அப்படி ஒரு ஹோட்டலே நான் கேள்விப்படலே'ன்னு! சாயந்திரம் அவரே வந்து திரும்ப என்னை ஏர்ப்போர்ட் கொண்டுபோறேன்னு சொன்னார். 'நம்பலாமா'ன்னு கேட்டதுக்கு 'நம்பிக்கோ'ன்னார்.ஏழரைக்கு வரச் சொல்லிட்டு உள்ளெ போனா, வரவேற்புலே ஒரு இந்தியன் பொண்ணு இருக்கு. விவரம் சொல்லி,ரூம் எதுன்னு கேட்டா, இன்னும் ஒரு மணி நேரம் வெயிட் செய்யணும். இன்னும் ரூமை எல்லாம் ஒழுங்கு பண்ணலை.வேலைக்கு ஆளு வர்றதுக்கு நேரமாகுமுன்னு சொல்றாங்க. ச்சின்னதாச் சாமியாடுனேன்.


"காலையிலே 6 மணிக்கு ரூம் வேணுமுன்னுத்தான் மொதல்லேயே சொல்லி ஏற்பாடு செஞ்சிருக்கு. இப்ப மணி ஆறரை. இன்னும் ரெடியா இல்லேன்னா என்ன அர்த்தம்?"


"அப்ப எத்தனை மணிக்குக் காலி செய்வீங்க?"


" மாலை ஏழரைக்குக்குத்தான் காலி செய்வேன். அதுக்குத்தான் ஒரு நாள் வாடகை வாங்கறீங்கெல்லே?"


"ம்ம்ம்ம்ம்ம் சரி. ஒரு நாள் வாடகையும், 20 $ காசும் தாங்க"


" 20 $ எதுக்கு? அதையும் அந்த கார்டுலேயே போடுங்க. என் கிட்டே இருந்த காசை டாக்ஸிக்குக் கொடுத்தாச்சு."


" இல்லே. அந்த 20 $ டெபாஸிட். காலி செய்யறப்பக் கொடுத்துருவோம்"


"10$ தான் இருக்கு. வேணுமா?"

"சரி. வேணாம். இந்தாங்க ரூம் சாவி."

இப்ப மட்டும் ரூம் எங்கிருந்து வந்துச்சு? ஒண்ணும் சொல்லாம மேலே போனேன். டபுள் ரூமாம். கரெக்ட்.ரெண்டு கட்டில் இருந்துச்சு.


குளிச்சுட்டுக் கோயிலுக்குப் போயிட்டு வந்து, ஒரு தூக்கம் போட்டாத்தான் நல்லது.


பாத்ரூம் ரொம்பக் கீக்கிடமா இருக்கு. மடிச்சுப் போட்டிருந்த டவலைப் பிரிச்சா................


ஒரே கிழிசல். என்னடா நமக்கு வந்த கதின்னு இருந்தப்பத்தான், கதவுலே உள்பக்கம் ஒட்டியிருந்த நோட்டீஸ் கண்ணுலே பட்டது. பொதுவா, எமர்ஜென்ஸியிலே என்னென்ன செய்யணுமுன்னுத்தானே ஒட்டிவச்சிருப்பாங்க.ஆனா இங்கே வேற மாதிரி. அந்த ரூம்லே இருந்த ஒவ்வொரு பொருளுக்கும் விலைப் பட்டியல் இருந்துச்சு. இந்த டவலுக்கு எவ்வளோன்னு பார்த்தா அதுக்கு 15$. ம்ஹூம்....ஒருவேளை இந்தப் பொருட்களை எடுத்துக்கிட்டுப் போறவங்களுக்கு ஹோட்டல்காரங்க கொடுக்கற தொகையோ?


'சீனு'வைப் பார்த்துட்டு, அப்படியே மெதுவா கோமள விலாஸ்( பழசு)வரை நடந்து போனேன். செராங்கூன் ரோடுலே காலையிலே நடக்கறது (அதாவது 9 மணிக்கு முன்னாலே ) ரொம்ப சுலபம். டிஃபனை முடிச்சுக்கிட்டு, காளியம்மாவையும் கும்பிட்டுக்கிட்டு திரும்ப வந்து நம்ம ஜெயந்திக்கு ஃபோன் போட்டு ரூம் நம்பரைச் சொல்லிட்டுத் தூங்கிட்டேன்.


இங்கே ஹோட்டல் புக்கிங் இல்லாமத் தடுமாறுனப்ப நம்ம வலை நண்பர்கள் எல்லாம் எங்ககூட வந்து இருங்கன்னு உபசரிச்சாங்கதான். ஆனா இந்தச் சீனுவைப் பாக்கறதுக்காகவே செராங்கூன்ரோடு நம்ம ச்சாய்ஸா ஆயிருச்சு.


ஒரு பதினொண்ணரைக்கு நம்ம ஜெயந்தி வந்துட்டாங்க. நாட்டு நடப்பையெல்லாம் அலசினோம். அவுங்களோட 3 புத்தகம்(சமீபத்துலே வெளிவந்தவை)'நாலேகால் டாலர், ஏழாம்சுவை, முடிவிலும் ஒன்று தொடரலாம் ' குடுத்தாங்க. அப்படியே கொடுத்தா? கையெழுத்துப் போடவேணாமா?'மூணுலேயுமா? 'ன்னு கேட்டாங்க. பின்னே? எழுத்தாளர்கிட்டேயே கையெழுத்துப் போடச்சொல்லி வாங்கி வச்சுக்கிட்டேன்.அருமையா வந்திருக்கு புத்தகங்கள். வாழ்த்து(க்)கள் ஜெயந்தி.


அங்கே இருந்து கிளம்பி 'கங்கை'க்குப் போனோம். நம்ம சிங்கை வலைஞர்களை அங்கே சந்திக்கறதா ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. உள்ளே போனா நம்ம குமார்( அதாங்க ஃபில்டர் காஃபி) 'சாப்பாட்டுலே உப்பு சரியா இருக்கா'ன்னு பரிசோதிச்சுக்கிட்டு இருந்தார்:-))) நம்ம சித்ரா ரமேஷ் வந்து சேர்ந்தாங்க. ரூமுக்குப் போய்ப் பார்த்துட்டு வந்தாங்களாம். அஞ்சு நிமிஷத்துலே 'மிஸ்' செஞ்சிருக்கோம். சிங். செயகுமார், அன்பு வந்து சேர்ந்தாங்க. சிங். செயகுமார் தான் எனக்கு அங்கே புது முகம்.நாங்கெல்லாம் சேர்ந்தா கேக்கணுமா? பேச்சும் சிரிப்புமா சாப்பாடு நடந்துச்சு. இவுங்களையெல்லாம் பார்த்த சந்தோஷத்துலே எனக்கு மனசு ரொம்பிருச்சு. பசியே இல்லைங்க.


" இந்தியாவின் முதல் பிரதமர் யார்? விடை ரெண்டு எழுத்து. முதல் எழுத்து நே, கடைசி எழுத்து ரு. என்னன்னு சொல்லுங்க"


சபையிலே கூடியிருக்கும் ஜனங்கள் ஆரவரத்தோடு அலை மோதுது.


" எனக்குத்தெரியும், நான் சொல்றேன்."


" தெரியுங்களா? அப்பச் சொல்லுங்க"

"நென்று"

தமிழ் தொலைக்காட்சி க்விஸ் நிகழ்ச்சிகள் நடக்கற அழகை, நம்மச் சித்ரா சொன்னதும் நாங்க சிரிச்ச சத்தத்துலே கங்கையே தளும்பிருச்சுன்னா பார்த்துக்குங்க.


பேச்சும் சிரிப்புமா எங்க 'இலக்கியக்கூட்டம்' நடந்துக்கிட்டு இருந்துச்சு.

குமாரோட மனைவிகிட்டே ஃபோன்லே ரெண்டு வார்த்தை பேசுனேன். அவுங்களும் வந்திருக்கலாம். ஆனா முக்கியமானவேலை இருக்கறதாலெ ஆஃபீஸ்லே லீவு எடுக்க முடியலையாம்.அதுக்குள்ளே அன்பு தன்னோட 'செல்'லை என் பக்கம் அனுப்பறார். என் நிலவரத்தைத் தெரிஞ்சுக்க, கோபால்தான் கூப்புட்டு இருக்கார்.

இன்னும் அஞ்சு நிமிஷம் இருந்திருந்தா எங்களையெல்லாம் அள்ளி வெளியே போட்டுருப்பாங்க 'கங்கை'காரங்க.மணி மூணாகப்போகுது. ஆனா அதுக்கெல்லாம் அசந்துருவமா என்ன? கீழே வந்து இன்னும் ஒருமணி நேரம் அமர்க்களப்படுத்திட்டுத்தான் பிரிஞ்சோம்.


நானும், ஜெயந்தியும், சித்ராவும் திரும்ப ரூமுக்கு வந்தோம். இன்னும் கொஞ்சம் பேச்சு பாக்கி இருந்துச்சே:-))சிங்கப்பூர்லேதான் எப்பவும் திடீர் திடீர்னு மழை வருமே, ஆனா இன்னிக்கு என் காட்டுலே 'மட்டும்' பெரு மழை.
அழகான புடவை பரிசாக் கிடைச்சது சித்ராகிட்டே இருந்து.


'த க்ளேற்மாண்ட்' பெருமையைச் சொன்னப்ப, நம்ம ஆட்கள் ஹோட்டல்களிலே இருந்து இப்படிப் பொருட்களைஎடுத்துக்கிட்டுப் போறதுன்னு அங்கே சிங்கையில் ஒரு பிரச்சனை இருக்குன்னு சொன்னாங்க. என்னாலே நம்பவே முடியலை. ப்ரிட்ஜ்ஜை எப்படிக் கொண்டு போவாங்க?இப்ப எதுக்கு இந்தக் குறிப்பிட்ட ஹோட்டலைப் பத்தி இவ்வளோ சொல்றேன்னா, நம்ம வலைஞர்கள் யாரும் தப்பித்தவறி இங்கே ரூம் போட்டுறக்கூடாதேன்னுதான். எச்சரிக்கை மணி.


அஞ்சுமணி போலஆச்சு. சித்ராவும், ஜெயந்தியும் கிளம்பிட்டாங்க. எனக்கும் எதாவது வாங்கணுமா, வேணாமான்னு முடிவு எடுக்கச் சிரமமா இருந்துச்சு. அவுங்களை டாக்ஸியிலே ஏத்திட்டு அப்படியே 'முஸ்தஃபா வின் நகைப் பிரிவு'மட்டும் பார்க்கலாமுன்னு போனேன்.


முதல்முறையா அந்தக் கட்டிடத்துக்குள்ளே நுழையறேன். ஜொலிப்பு, ஜொலிப்பு. ஜொலிப்பு மட்டுமே!


9, 14, 18 ன்னு வெவ்வேற காரட் தங்கங்கள், வெவ்வேற நாட்டு டிஸைன்கள்னு ஒரு மார்க்கமாதான் இருக்கு கடை! பேஸ்மெண்ட் போனா, நமக்கு, இந்தியருக்குன்னே 22 தகதகன்னு! நின்னு நிதானமாச் சுத்தி வந்தேன். என்னோடநெஞ்சுரம் எப்படி இருக்கும்ன்றதுக்கு இது ஒரு டெஸ்ட்!


'ஜெயிச்சுட்டேன், நான் ஜெயிச்சுட்டேன்' என்னையே என்னாலே நம்ப முடியலை!


இந்த முறைக்குக் கடைசியா இருக்கட்டுமுன்னு கோமளாலே ( பழசு) ஒரு காஃபி வாங்கி இஞ்சினுக்கு ஊத்திக்கிட்டு, மகளுக்குக் கொஞ்சம் ஜாங்கிரி வாங்கிக்கிட்டு வந்துட்டேன்.


இதென்னங்க, கடிகாரம் இப்படி வேகமா ஓடுது? மணி ஏழுக்கு மேலே ஆயிருச்சே. எல்லாத்தையும்கேபின் பையிலே அடைச்சுக்கிட்டுக் கீழே வந்து பில்லை செட்டில் செய்யச் சொன்னேன். 11 சதம்தரச் சொன்னாங்க, போன் செஞ்சதுக்கு. பஞ்சாபி ஓனர் போல. தாராள மனசா பரவாயில்லை, 10 சதம் கொடுங்கபோதும்னு சொன்னார்.


வெளியே வந்து டாக்ஸியை நிறுத்தலாமா, இல்லே காலையிலே சொன்னமாதிரி அதே டாக்ஸிக்காரர் வறாரான்னு பார்த்தா, சிரிச்ச முகத்தோட வரார் அந்த டாக்ஸிக்காரர். 'பார்த்தீங்களா, சொன்ன டயத்துக்கு 'டாண்'னு வந்துட்டேன்.அஞ்சு நிமிஷம் முன்னாலேயே வந்துட்டேன் போங்க'ன்றார்.


மூணு பசங்களாம். பெரிய பொண்ணு அக்கவுண்டண்ட் ஆகணுமுன்னு முழுமூச்சாப் படிச்சு, இப்பத்தான் முடிச்சதாம்.மத்த பையனும், பொண்ணும் இன்னும் 'ஓ'லெவல் லே இருக்காங்களாம். கஷ்டப்பட்டுப் பசங்களை முன்னுக்குக் கொண்டு வந்துட்டாராம். டாக்ஸி பிஸினெஸ் ஒண்ணும் அவ்வளவா லாபம் இல்லையாம். இப்படி நாட்டு,வீட்டு நடப்புங்களையெல்லாம் பேசிக்கிட்டு ஏர்ப்போர்ட் வந்து சேர்ந்தோம்.


கணினி கைநாட்டுன்னாலும், அங்கங்கே ஓஸி உபயோகத்துக்கு வச்சிருக்கற கணினியப் பார்த்ததும் காலுதானாஅங்கே நின்னுருதுங்க. 'வந்துக்கிட்டே இருக்கேன்'னு ஒரு மெயில் வீட்டுக்கு அனுப்புனேன்( அது இன்னும் இங்கே வந்துசேரலைன்றது வேற விஷயம், இப்பத்தானே ரெண்டரை மாசம் ஆகி இருக்கு)

அப்புறம்?

வேற என்ன மரியாதையா ஃப்ளைட்லே ஏறி, மறுநாள் 12 மணிக்கு நியூஸிவந்து சேர்ந்தேன். மகள் வந்து வீட்டுக்குக்கொண்டு போனாள். கைக்கு க்ளவுஸ், நல்ல ஜாக்கெட், கழுத்துக்கு ஸ்கார்ஃப் எல்லாம் கொண்டு வந்திருந்தாள்.இதெல்லாம் எதுக்குன்னு கேட்டதுக்கு, முதல்லே போடுங்க. அப்புறம் பேசலாமுன்னு சொன்னதும், ஒண்ணும் வாய் திறக்காமப் போட்டுக்கிட்டு வெளியே வந்தா........... மகளே, உனக்குக் கோடி நன்றி.


பயங்கர மழை, ஆலங்கட்டி மழை. ரெண்டு டிகிரி. 30லே இருந்து ரெண்டு. உறைஞ்சுருவேன்போல இருக்கு.'அடிமைப்பெண் எம்ஜிஆர் ஆக்ட்' கொடுத்துக்கிட்டே ஓடிவந்து வண்டியிலே ஏறிக்கிட்டேன்.


ப்ளொக்கர் சொதப்பியதால் சில படங்களை இங்கே போட்டுருக்கேன். பாருங்க.
-------
முன்னுரை எழுதாட்டியும் முடிவுரை எழுதணுமுன்னு ஒரு சம்பிரதாயம் இருக்காம்.

பயணத்தின் முடிவில்:


புள்ளையார், யானை கலெக்ஷனுக்கு ஒரு முப்பத்தியஞ்சு சேர்ந்துருச்சு. நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும்எனக்கும்( நானும் சிலது வாங்கினேனே) நன்றி.


நல்ல நட்பு, நண்பர்கள் கிடைத்தார்கள். அவுங்களுக்கும் ஸ்பெஷல் நன்றி.


தமிழ்மணம் பார்க்காமல் அஞ்சு வாரம் ஓட்ட முடிஞ்சதுதான். ஆனா மனசுலே ஒரு வெற்றிடம் இருந்துச்சுன்றதைஒளிக்க முடியாது. தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாவே மாறிப்போச்சு. பார்க்கலைன்னு வச்சுக்குங்க,'கை ஒடிஞ்சாப்போல'


அஞ்சுவாரத்தை இப்படி 27 பதிவா நீட்டிட்டயேன்னு கேட்ட மனசாட்சியை, 'அடங்கு'ன்னு சொல்லி வச்சேன். இது 50வரைபோகச் சான்ஸ் இருந்துச்சுன்னு சொன்னதும் அதுவே அடங்கிருச்சு. அதுக்கும் ஒரு நன்றி.


ஒரு ரெண்டு வருசத்துக்கு பயணம் அநேகமா இருக்காது. அதனாலே நீங்க நிம்மதியா இருக்கலாம்:-)))


-------


டீச்சரைக்காணொமுன்னு குஷியாச் சுத்திக்கிட்டு இருந்தவங்க எல்லாம் சரித்திர நோட்டுப்புத்தகத்தைத் தேடி எடுத்துக்கிட்டு வகுப்புக்கு ஒழுங்கா வந்து சேருங்க.


நன்றி ,வணக்கம்.

Tuesday, May 16, 2006

பை பை ச்சென்னை!!!

பயண விவரம் பகுதி 26

மனசும் உடலும் தளர்ந்து போய் 'டிபார்ச்சர் லவுஞ்'லே உக்காந்துருக்கேன். ஒவ்வொருமுறையும் ஊரைவிட்டுக் கிளம்புறப்ப இதேதான். இனி எப்ப இங்கே வரப்போறோமுன்னு மனசுக்குள்ளே ஒரு துடிப்பு. நேத்தும், இன்னிக்கும் ஓட்டம் கூடுதலா இருந்துச்சு.


நேத்துத், தாம்பரத்துலே அண்ணியோட அம்மா வீட்டுக்குப் போனோம். அங்கே ஒரு ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் படம் இருக்கு. அதுலே ஹனுமான் முகம் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாது.அவ்வளோ விநயமும், பவ்யமுமா இருக்கும். அதை அடுத்த பதிவுலே போட்டுரலாம். இதேபோல ஹரே கிருஷ்ணாவுலே வாங்குன கிருஷ்ணன், யசோதா படமும். அதுலே பால கிருஷ்ணன் முகபாவனை ரொம்ப அற்புதம். படங்களைப் பத்திச் சொல்ல இன்னும் நிறைய இருக்கு. அது அப்புறம் ஒரு நாள்.அத்தை எனக்கு இன்னொரு அம்மாதான். அருமையான விருந்து சமைச்சு வச்சிருந்தாங்க. இனி எப்ப வரப்போறொமுன்னு அங்கேயும் ஒரு பிடி பிடிச்சாச்சு. அப்புறம் கொஞ்சம் வீட்டு விஷயங்கள் பேசுனோம். எனக்குப் பிடிக்குமேன்னு சாயந்திரம் பிட்டு அவிச்சு வச்சுட்டாங்க. மத்தியானம் பிடிச்சதே இன்னும் செரிக்கலை. அதுக்குள்ளே..... ..... அதுக்காக? அப்படியே விட்டுற முடியுதுங்களா?


பார்ஸல் வாங்கிக்கிட்டா பசிக்கும்போது தின்னலாமே! சரி, நேரமாச்சேன்னு கிளம்பிட்டோம். எனக்கு இன்னும்பேக்கிங் வேலை அப்படியே கிடக்குன்னு கெஸ்ட் ஹவுஸுக்கே வந்துட்டோம். மறுநாள் சாயங்காலம் அண்ணன் வந்ததும் ஏர்ப்போர்ட்க்குப் போலாமுன்னு சொல்லிட்டார்.


துவைக்கிற துணிகளை மெஷினுலே போட்டுட்டு கடைசிநாளாச்சேன்னு டிவி சீரியல் பார்த்துக்கிட்டு இருந்தேன்.எனக்குச் சென்னையிலே பிடிச்ச ஒரு விஷயம் இந்த துணி துவைக்கறதுதாங்க. எந்த நேரமுன்னு பார்க்கவே வேணாம். ஒரு, ஒருமணி நேரத்துலே காஞ்சுருது.


காலையிலே வழக்கமாப் போறமாதிரி கோயிலுக்குப் போய், பெருமாள்கிட்டே 'போயிட்டு வர்றேன்'னு சொல்லிக்கிட்டுகடைசி நிமிஷ ஷாப்பிங் ( இது, இதோட முடியற வேலையா?) செஞ்சுக்கிட்டு, மதுவோட வீட்டுக்குப் போய் சொல்லிக்கிட்டு, அப்படியே பேங்க் போய் கொஞ்சம் காசை எடுத்து வச்சுக்கிட்டேன்.


பொட்டியைத் தூக்கிப் பார்க்கலாமுன்னா, ஊஹூம்.... முடியலை. ஓவர் வெயிட்டுத்தான். தீட்டப்போறாங்கன்னு தெரிஞ்சுபோச்சு. போனமுறை எக்கச்சக்கமா ஆயி, அதை கார்டுலே போட்டேன். இந்தமுறை கேஷாக் கட்டிரலாமுன்னுதான்காசு எடுத்தது.


மகளுக்காக கொஞ்சம்(!) இனிப்பு வாங்கிக்கலாமுன்னு நம்ம சரவணபவன், ஸ்ரீகிருஷ்ணாவெல்லாம் போய்வந்தாச்சு.துவைச்சத் துணிகளையெல்லாம் பெட்டிபோட்டு வாங்கி அடுக்கியாச்சு. இடைக்கு இடையிலே டிவி பாக்கறது, பக்கத்து வீட்டம்மாகிட்டே சொல்லிக்கறதுன்னு நேரம் போயிருச்சு. பக்கத்து வீட்டம்மா போனமுறை பார்த்ததுக்குப் பாதியாப் போயிருந்தாங்க. கேன்ஸராம். 'அடுத்தமுறை நீங்க வர்றப்போ இருக்கேனோ என்னமோ?'ன்னு சொன்னதும் மனசுக்குப் 'பக்'னு ஆயிருச்சு. 'இதெல்லாம்நம்ம கையிலேயாங்க இருக்கு? எல்லாம் கடவுள் விட்ட வழின்னு இருந்துக்கிட்டு உடம்பைப் பார்த்துக்கணுமு'ன்னு சொன்னேன். நல்லா இருக்கோம்னு நினைக்கற நாமே, நாளைக்கு இருப்போமான்றது தெரியாதுல்லையா? நம்பிக்கைதானேங்க வாழ்க்கை.


அப்பல்லோ ஆசுபத்திரியிலே இருந்தாங்களாம். அங்கே பணத்தைக் கறந்துட்டாங்களாம். இப்படியே போனா, ரிட்டயர்மெண்டுக்குச்சேர்த்த காசெல்லாம் 'கோவிந்தா'ன்னு போயிருமாம். இப்ப என்னவோ சித்தா மருந்து எடுத்துக்கறாங்களாம். அவுங்க சொல்லச்சொல்ல, கேக்கறதுக்கே கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சுங்க. அப்ப தான் நான் எப்பவும் பண்ணற பிரார்த்தனைக்குமுழு அர்த்தமும் தோணுச்சு. 'கடவுளே, கைகால் நல்லா இருக்கப்பவே 'பட்'ன்னு கொண்டு போயிரு'


என்னமோ தோணுச்சேன்னு 'ஒலிக்கும் கணங்கள் 'நிர்மலாவுக்குப் ஃபோன் போட்டேன். அவுங்க நேத்து ராத்திரிதான் கல்கத்தாலே இருந்துச் சென்னைக்கு வந்துட்டாங்களாம். அடுத்தமுறைக் கட்டாயம் சந்திக்கணுமுன்னு அப்பவே முடிவு செஞ்சாச்சு. பாருங்க, எவ்வளோ நம்பிக்கைன்னு!


ஏழுமணிக்கு அண்ணன் வந்துட்டார். கொஞ்ச நேரத்துலே கிளம்பிப்போய் நல்ல ட்ராஃபிக்லே மாட்டிக்கிட்டு, ச்சென்னையை உண்மைக்குமே 'இஞ்ச் பை இஞ்சா' அனுபவிக்கிறேன். கத்திப்பாரா வர்றதுக்குள்ளே என்னா கூட்டம் என்னா கூட்டம்!அடுத்தமுறை அங்கே ஃப்ளை ஓவர் வந்துருமாம். ஏர்ப்போர்ட் வந்து பார்க்கிங் கிடைச்சு, அண்ணன் அண்ணிகிட்டேப் பிரியாவிடை வாங்கி உள்ளே போயாச்சு. அதுக்கு முன்னாலே நாங்க அங்கே ஒரு வடை & காஃபியை உள்ளே தள்ளியாச்சு. அங்கேயும் மசால்வடை நஹீ...(-:


பெட்டியை wrap செய்யறதுன்னு புதுசா ஒண்ணு இருக்கே. அதுக்கு 200 ரூபாயாம். சரி, இருக்கட்டுமுன்னு அதையும்செஞ்சுக்கிட்டேன். இந்த முறை சிங்கையிலே தங்கறதுக்கு ஹோட்டல் கிடைக்காததால் ச்சும்மா ஒரே பகல் மட்டும் அங்கே இருந்துட்டு டைரக்ட்டா நியூஸி போறேன்.


பெட்டியை எடை போட்டா 33 கிலோ காமிக்குது. ஆனா கவுண்ட்டர்காரர் ஒண்ணும் சொல்லலை! எனக்கு ஸீட் அலொகேட் செய்யறப்ப, 'இண்ட்டர்நெட்'லே புக் பண்ணிட்டீங்க போல இருக்கே. ஏன் முதல்லே சொல்லலை?'னுகேட்டார். நானும் முகத்தைப் பாவமா(!) வச்சுக்கிட்டு, எங்க ட்ராவல் ஏஜண்ட் பண்ணி இருக்கலாமுன்னு சொன்னேன்.போர்டிங் பாஸ் ரெண்டு ஃப்ளைட்டுக்கும் கொடுத்ததும் வாங்கிக்கிட்டுப் போய் லவுஞ்சுலே உக்கார்த்தாச்சு.


ஃப்ளைட் ரெடியாம். நம்ம நம்பரைக் கூப்புடறாங்க.


இன்னிக்கு ராத்திரி 'புஷ்' வர்றாராம். ரெண்டு பெரிய மனுஷங்களை இந்தியா ஒரே சமயத்துலே தாங்காதுன்னு இதோ நான் கிளம்பியாச்சுங்க. அவர் டெல்லியிலே கால் வைக்கறப்ப நான் ப்ளேன்லே!

பை பை ச்சென்னை!!!

Sunday, May 14, 2006

தாயுள்ளம்

இன்னிக்கு அன்னையர் தினமாம். ஒரு அன்னையா ஆகறதுக்கு முடியாம எத்தனையோ பெண்கள் கண்ணுலே வெள்ளம் வச்சுக்கிட்டும், சிலர் வெளியே காமிக்காம மனசுக்குள்ளேயும் மறுகிக்கிட்டும் இருக்கறாங்கதானே?


அதிலும், நம்ம சமுதாயம் இருக்கே, எப்பவும் எல்லாத்துக்கும் பெண்களைக் குறை சொல்லியேபழக்கப்பட்டுப் போனதாச்சேங்க. குழந்தை இல்லேன்னா அதுவும் பெண்ணோட தப்பு மட்டுமேன்னுதானே முந்தியெல்லாம் ஆண்களுக்கு ரெண்டாம்( சிலப்ப மூணாம்) கல்யாணம்னு பண்ணி வச்சுக்கிட்டு இருந்தாங்க.


இதையெல்லாம் விலாவரியா எழுதப்போனா 'பதிவு அடுத்த அன்னையர்தினம் வரை நீண்டு போகும் அபாயம் உண்டு' என்றதாலே இத்தோடு நிறுத்திக்கிறேன்(இந்த வாக்கியத்தை!)


பெற்றால்தான் பிள்ளையா? பிள்ளைகளைத் தத்து எடுத்துக்கிட்டு, தான் பெறாத பிள்ளைகளைத் தன் பிள்ளைபோல வளர்க்கும் எத்தனையோ தாய்கள் உலகில் எல்லா இடங்களிலேயும் இருக்காங்க.அவுங்களோட அன்புக்கு எதை ஈடாகத் தரமுடியும்?


இயற்கையின் தடுமாற்றத்தால் சில/பல பெண்களுக்குத் தாய் ஆகறதுக்கு வேண்டிய முக்கிய பகுதியான கருப்பை இல்லாமலேயே போய்விடுதாம். அந்தப் பெண்களுக்கு இது எவ்வளோ துக்கம் தரும்?


இதைக் கருத்தில் வச்சு, நம் வலைஞர்களிலே ஒரு இளைஞர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு மும்முரமாக முனைஞ்சிருக்கறார். அவரோட ஆராய்ச்சி வெற்றி பெறணுமுன்னு மனசார வாழ்த்துகின்றோம்.


தாய்மை உணர்வு பெண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன?


இந்தப் பதிவு நம் சிவசங்கர் அவர்களுக்குச் சமர்ப்பணம்.


அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.

Saturday, May 13, 2006

எவ்ரி டே மனிதர்கள் - 2

பானு, இரவல் பானு.


பொழுது விடியக்கூடாதே. கொஞ்சநேரம் நிம்மதியாத் தூங்க முடியுதா?காலையிலே அஞ்சரை ஆறு மணிக்கே நடமாட்டம் ஆரம்பிச்சுரும்.


கடன் கேக்கவே காத்திருக்காங்கப்பா. ஆமாம். கடன். பொல்லாத கடன். எல்லாம் திரும்ப வராத கடந்தான்.அதுக்காக நாளுக்கு அரை இஞ்சுன்னு கணக்குப் போட்டு இதுவரை நாலரை இஞ்சு ஆயிருச்சு. எப்பத் திருப்பித்தரப்போறேன்னு கேக்க முடியுமா?

இல்லே நேத்து ரெண்டு,முந்தாநேத்து ரெண்டு, அதுக்குமுதல்லெ....ன்னு மொத்தம் 10 ஸ்லைஸ்ன்னுச்சொல்ல முடியுமா?

தொலையட்டுமுன்னு விட்டுறதுதான்.

என்னன்னு கேக்கறீங்களா?

நம்ம ஹாஸ்டல்லே நடக்கற கூத்துங்கதான். எல்லாம் வேலைக்குப் போற மக்கள்தான். ஆனா ச்சின்னச் சின்ன அல்ப சமாச்சாரத்துக்குன்னே மறதியைக் 'கவனமா' வச்சுக்கிட்டு இருக்கறவங்க. மறதி(!)ன்றது மக்களுக்குப் பழகிப்போன ஒண்ணுன்னு அங்கேதான் தெரியவந்தது. காலையிலே, பொழுது விடிஞ்சவுடனே டூத் பேஸ்ட்லே ஆரம்பிக்கற இரவல், கடன் இதெல்லாம் ராத்திரி ப்ரெட்டோட முடிஞ்சிரும்.

அதென்ன ப்ரெட்?


சாரதா டீச்சருக்கு, ராத்திரி தூங்கறதுக்கு முன்னாலெ கொஞ்சம் சாப்புடணும். இல்லேன்னா தூக்கம் வராத கேஸ்.அது எதாவது பழமா இருக்கலாமா? ஊஹூம்....கூடவே கூடாது. ப்ரெட் தான் வேணும். ரெண்டே ரெண்டு ஸ்லைஸ்.ஒரு ஒம்பதே முக்காலுக்குப் பக்கம் அப்படியே ரூம் ரூமா வருவாங்க.அப்பெல்லாம் பத்துமணிக்கு லைட் ஆஃப் ரூல்ஸ்.

'யாரிட்டேயாவது ப்ரெட் இருக்கா?' இல்லைன்னு எப்பவும் சொல்ற 'புண்ணியவதி' இல்லேன்னே சொல்லிருவா.இருக்குன்னு சொல்ற அப்'பாவி'தான் மறக்காம வாங்கிவந்து வைக்கணும். ஆனா வச்சுக்கிட்டே இல்லேன்னு சொல்ல வாய் வருதா?

இதோ அடுத்த கேள்வி. 'எங்கே வாங்குனது?'

இன்னும் நேரம் இருக்கு, தப்பிக்க! வேற எந்தக் கடைப் பேரைச் சொல்லலாமுன்னு யோசிக்கறதுக்குள்ளே,

"சி.வி.கே பேக்கரிதானே?"

அதட்டுற குரலைக் கேட்டதும், ஆமாம்னு தலை ஆட்டறேன். சாரதா டீச்சருக்கு எப்பவும் ஒரு கம்பீரமான குரலும்,அலட்டான நடையும் இருக்கும். இருக்காதா பின்னே?அப்ப சினிமாவுலே நடிச்சுக்கிட்டுருந்த ஜெயசுதாவோட க்ளாஸ் டீச்சராச்சே . அதைச் சொல்லிச் சொல்லியே எங்க எல்லோருடைய மரியாதையையும் ஏகப்பட்ட அளவுலேசேர்த்து வச்சுருந்தாங்க.

"ரெண்டு ஸ்லைஸ் கொடும்மா, நாளைக்குத் திருப்பிக் கொடுக்கறேன். "

'ஆமாம். ப்ரெட் மட்டும் வாங்கிட்டுப்போறாங்களே, தொட்டுக்க என்ன செய்வாங்க? ஜாம் வாங்கி வச்சிக்கிட்டு இருப்பாங்க போல'ன்னு ஓடும் மனசுக்குள்ளே.

தினப்படி வேணுங்கறது எப்படி மறக்கும்? பஸ்ஸைவிட்டு இறங்குற உடனே ஏழெட்டுக்கடைங்க இருக்குதானே. ம்ம்ம்.........

சரி போட்டும், இதெல்லாம் பெருசா? இனி இருக்கு பாருங்க.

எல்லாரும் அரக்கப்பரக்க ஆஃபீஸ்க்குக் கிளம்பற மும்முரம். ஒரு ச்சின்னக் கவலை ரேகை எல்லார் முகத்துலேயும் ஓடுது. கையிலே எடுத்த ' நம்ம' புடவையை இன்னிக்கு 'நாமே' கட்டிக்கக் கொடுத்துவச்சிருக்கா?

இதோ வராங்க பானு . கையிலே ஒரு ப்ளவுஸ்.

ப்ளவுஸைப் பார்த்தவுடனே பலருக்கு நிம்மதி. அப்பாடா இன்னிக்குத் தப்பிச்சோம்.

"இந்தக் கலர்லே புடவை இருக்கா?"

ரூம்ரூமாப் போறதெல்லாம் ச்சும்மா. அவுங்களுக்குத் தெரியும் யார்கிட்டே இருக்குன்னு! அதான் மக்கள்ஸ்கட்டறப்ப பார்த்து வச்சுருப்பாங்கல்லே! 'டக்'னு ஆளைப் புடிச்சுருவாங்க.


புடவை கிடைச்சதும் அதுக்குத் தோதான ஆக்ஸெஸரீஸ் வேட்டை தொடரும். வளையல், செருப்பு, ஹேண்ட் பேக்னு.வெவ்வேற ரூம்லே இருந்து சம்பாரிச்சுருவாங்க. செண்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்துலே 'மூர் மார்கெட்டு'ன்னு ஒண்ணு இருந்துச்சுங்க. அங்கே எல்லா கலருலேயும் செருப்புங்க ரொம்ப மலிவாக் கிடைக்கும்.சொன்னா நம்ம மாட்டீங்க, ஜோடி அஞ்சு ரூவாதான் அப்ப!


ஃபிட்டிங் சரியா இருக்கணுமேன்னுதான் நம்ம பானு ப்ளவுஸ்ஸை மட்டும் தைச்சுக்கறது! அன்னிக்கு ராத்திரியே வாங்கிட்டுப் போனதெல்லாம் 'டாண் டாண்'னு உடமஸ்த்தர்களுக்கு வந்துரும்.கொடுக்கல் வாங்கல்லே கரெக்ட்டா இருந்தாத்தானே நாளை மத்தநாளுக்கு நல்லதுபாருங்க.

ஒருநாளைப்போல தினமும் எப்படி இவுங்களாலெ இந்த 'ஒழுங்கைக் கடைப்பிடிக்க முடியுது?


ஆனா ஒரு விஷயத்தைப் பாராட்டியே ஆகணும். 'விடா முயற்சி வெற்றி தரும்' ன்ற கொள்கைப்பிடிப்பு பானுவுக்கு இருந்துச்சுங்க. எக்ஸாக்ட் மேட்சிங் கண்டு பிடிச்சுருவாங்க. ஷீ வில் நெவர் செட்டில் ஃபார் லெஸ்!!!!


புடவை மட்டுமே புழங்குன காலம் என்றபடியாலே சரியாப்போச்சு. இப்ப பானு என்ன செய்வாங்க? துப்பட்டா மட்டும் வாங்கிக்கிட்டுச் சுரிதார் தேடுவாங்களோ?


---------

அடுத்தவாரம்: தாடி மாமா


நன்றி: தமிழோவியம்

Thursday, May 11, 2006

லாபமும் நஷ்டமும்

ச்சும்மா ஒரு லிஸ்ட் போட்டுப் பார்த்தேன். எது கிடைக்குது எது கிடைக்காமப் போயிருச்சுன்னு.எதுலேயும் கணக்கு சரியா இருந்தாத்தானே நல்லது. அதான்.........


நஷ்டம்:


அரைப்பவுன் தங்கம்

மாசாமாசம் பத்து கிலோ அரிசி

கம்ப்யூட்டர்

மாணவமாணவிகளுக்கு இலவசப் பாடப் புத்தகம், சைக்கிள்

கந்து வட்டி ஒழிப்பு

வேலைவாய்ப்பு இல்லாத குடும்பத்துலே ஒருத்தருக்கு வேலை வாய்ப்பு

32 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்

விவசாயிகளின் கூட்டுறவு வேளான் கடன் வட்டி முழுவதும் ரத்து

அய்யோ சொல்லி மாளலை, இன்னும் ரொம்ப இருக்கு.

500 ரூபாய்க்கு பலசரக்கு சாமான்கள்

பசுமாடு


லாபம்:


கலர் டிவி

கேபிள் கனெக்ஷன்

ரெண்டு ஏக்கர் நிலம்

ரெண்டு ரூபாய்க்குக் கிலோ அரிசி

இன்னும் என்னென்னப்பா?

யாராவது சொல்லுங்களேன்.

கட் பல்லு & புல் பாடி வொர்க்

பயண விவரம் பகுதி 25


"எதிர்லே இருக்கே அது ஜிம் . கொஞ்சம் தள்ளி இந்தப் பக்கம் பாருங்க அது குழந்தைகள் காப்பகம், கூடவேநர்சரி ஸ்கூல்"


" அட. அப்படீங்களா?"


" இது ஹெல்த் கேர் செண்ட்டர்"" சந்தோஷமா இருக்கே. இன்னும் விவரமாச் சொல்லுங்க"

"அதாங்க, நல்ல தார் ரோடு, நிறைய மரங்கள் , மரத்தை யாரும் ஒடைச்சிடாம இருக்க அதைச் சுத்தி பாதுகாப்பு வேலி, தெரு விளக்குங்க, அருமையான தொலைத்தொடர்புக்கு கம்யூனிகேஷன் சிஸ்டம்,இண்டர்நெட், கேபிள் டிவி."


"அடடே. ம். சொல்லுங்க"


"நல்ல ஷாப்பிங் செண்ட்டர், ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர், அதுலே ATMவசதி, நீச்சல் குளம், ரெஸ்டாரண்ட், ஓய்வா நடக்கறதுக்கும், ஜாகிங் பண்ணறவங்களுக்கும் தனியா ஒரு இடம், குழந்தைகள் விளையாடத் தனிப் பகுதி, அங்கங்கேச் சின்னதா அழகான மரங்களோடு பார்க், விருந்து நிகழ்ச்சிக்கு ஒரு பெரிய ஹால். 24 மணி நேரமும் செக்யூரிட்டி.பக்கத்துலே இருக்கற பஸ் ஸ்டாப்புவரை கொண்டு விடறதுக்கும், கூட்டிவர்றதுக்கும் மினிவேன் ......."

" என்னங்க, நிஜமாவா இவ்வளவும்?"

" ஆமாங்க. க்ளப் வேற வருது. அதுலே ஸ்பா, ஜிம், sauna, டென்னிஸ் கோர்ட், பேட்மிண்ட்டன் கோர்ட், ஸ்நூக்கர் டேபிள்எல்லாம் உலகத்தரத்துலே இருக்கு."


திறந்தவாய் மூடாம அந்தப் 'பொட்டல் காட்டுலே' அவர் கை காட்டுன பக்கமெல்லாம் திரும்பித்திரும்பிப் பார்த்து ஒரேகழுத்து வலி.


"வீடுங்க எல்லாமே 100% வாஸ்து பிரகாரம்தான் கட்டித்தருவோம். நிறையப்பேர் புக் பண்ணிட்டாங்க. இன்னும் கொஞ்சம்தான்இடம் இருக்கு. நாங்களே பேங்கு லோனுக்கும் ஏற்பாடு செஞ்சு தரோம்."


" தண்ணி வசதி....."


" வீட்டுவீட்டுக்குத் தனி போர்வெல் போடறோம். தண்ணிக் கஷ்டமே இருக்காது. மொத்தம் 1400. எல்லாமே தனித்தனி பங்களா. இண்ட்டர் நேஷனல் ஏர்ப்போர்ட் இங்கே வருது. ரொம்பப் பக்கம்"


மனசுக்குள்ளே 'திருமதி ஒரு வெகுமதி' படம் வந்து போகுது.


ரெண்டு மாடல் வீடுங்க மட்டும்தான் அங்கே இருக்கு. உள்ளே போய்ப் பார்த்தா நல்லாவே இருக்கு, குட்டிக்குட்டியா சிட்டிங் ரூம், டைனிங், கிச்சன், பெட்ரூமுன்னு!ச்சும்மாச் சொல்லக்கூடாது அழகா ஃபர்னிஷிங் பண்ணி வச்சிருக்காங்க. டைல்ஸ், பெயிண்ட் எல்லாம் நல்ல அருமையானகலர் காம்பினேஷன். பேசாம ஒண்ணு வாங்கி போட்டுரலாமான்னு ஆசையாத்தான் இருக்கு.


போரூர் பக்கத்துலே 'இவிபி மெகா டவுன்' வருதாமே, அங்கேதான் நிக்கறோம். அந்த சைட்டுலே நின்னு பார்த்தா,தொலை தூரத்துலே வீராணம் தண்ணி வர்றதுக்குப் போட்ட குழாய்கள் தெரியுது. கூடவே ஒரு பை பாஸ் ரோடு கண்ணுலே பட்டது. போனவருசம் பெய்ஞ்ச மாதிரி மழை வந்தா அங்கெல்லாம் வெள்ளக் காடாயிரும் போல.நாமளே அங்கே போய் இருக்கறதுன்னா பரவாயில்லை. வாடகைக்குப் போகட்டும்னு வாங்கிவிட முடியாதுன்னு நினைக்கிறேன். அம்மாந்தூரத்துலே யாரு வாடகைக்கு வீடு எடுப்பாங்க? வாங்குற கடனுக்கு வட்டியாவது தேறுமான்னுபார்க்கணும். இப்படியெல்லாம் மனசுக்குள்ளே கணக்குப் போட்டுக்கிட்டு நாங்க( நானும், அண்ணனும் & அண்ணியும்)திரும்பி தி.நகர் வரை வந்தோம். அங்கே ஒரு வேலையை முடிச்சுக்கிட்டு சாப்புடலாமுன்னு செட்டிநாட்டுக்குப் போனோம்.உள்ளே அலங்காரம் எல்லாம் அட்டகாசமா இருந்துச்சு. செட்டிநாடுன்னு சொல்லிக்கிட்டு பரிமாறுனவங்க எல்லாம் பஞ்சகச்சம் மாதிரி ஒரு வேஷ்டி/வேட்டி கட்டி இருந்தாங்க. நார்த் இண்டியன் ஸ்டைலிலே ஒரு ஜிப்பா டாப்!எனக்கென்னமோ அங்கே சாப்பாடு ரொம்ப சுமார்னு பட்டது. இதைவிட அருமையா நானே சமைக்கிறதாலெ அப்படித்தோணியிருக்கும்:-))) சாப்பாடு நல்லா இல்லைன்றதாலே மெனுவைச் சொல்லலை. அண்ணி அருமையா சமைப்பாங்க.சமையல் மட்டுமில்லை, ரொம்ப அருமையா துணிகளை டிஸைன் செய்வாங்க. எனக்குத் தைக்கறதுக்கு 'ஆர்வம்'வந்ததே அவுங்களாலேதான். என்னைவிட வயசுலே ச்சின்னவங்கதான். படு ஸ்மார்ட். சட்னு கோபம் வரவே வராது.எல்லாத்தையும் எளிமையா எடுத்துப்பாங்க. பெரியமனசு. அதனாலே எங்களுக்கெல்லாம் ஒரு 'ரோல் மாடல்'னு வச்சுக்கலாம்.


இவ்வளவு தூரம் வந்துட்டு ச்சும்மாப் போயிரமுடியுமா? பாண்டி பஜார்லே ஒரு சுத்து. இங்கே எங்கியோ நரசுஸ் காஃபிகிடைக்குதாமே அங்கே போகலாம்னு அண்ணி சொன்னாங்க. தேடிக்கிட்டே நடந்தோம். கடைசியிலே கடையைக் கண்டுபிடிச்சது நாந்தான். காஃபி வாசனை வருதான்னு 'மோப்பம்' புடிச்சுக்கிட்டே போயிட்டேன். கடைக்காரர்கிட்டே இதைச்சொன்னதும் அவருக்குப் பரம சந்தோஷம். கொஞ்சம் காஃபி வகைகளைப் பத்தி அளந்துட்டு இந்த 'சிக்கரி' யைப்பத்தி விசாரிச்சேன். பத்து பெர்ஸண்ட் சிக்கரி சேர்த்தா காஃபி நல்லா திக்காவும் மணமாவும் இருக்குமாம். அதையும்ஒரு கை பார்த்துரலாமுன்னு ஒரு 50 கிராம் பாக்கெட்( ரெண்டே ரூபாய்தான்) வாங்கி வந்தேன். காஃபி பவுடர் கலர்லெயே இருக்கு. இங்கே 'நாய்' பிடிச்சாச் சொல்லிக்கலாமுன்னு இருந்தேன்.


'ஹை ஸ்டைல்' போகலாமுன்னு அண்ணா நகர் போனோம். கடை அருமையாத்தான் இருக்கு. பார்க்கிங்தான் கஷ்டம்.ரொம்பச் சின்ன இடத்துக்குள்ளே, வண்டியை கொண்டு நிறுத்த பயமா இருக்கு. ஏற்கெனவே புத்தம் புது வண்டியிலே ரெண்டு கீறல் விழுந்துருச்சு. ஆனா அங்கே இருக்கற கடையின் காவற்காரர், 'முன்னே வா வா'ன்னு கையைக் காமிக்கிறார். டைட்டாப் பார்க் செஞ்சுட்டாக் கதவைத் திறக்க முடியாது. அப்புறம் எப்படி இறங்கறதாம்?


கீழே பேஸ்மெண்ட்லே புடவைகள், சுடிதார் எல்லாம் வச்சிருக்காங்க. அருமையான வேலைப்பாடுகள். 'தங்க வேட்டை' புடவைகளாம். கட் பல்லு டிஸைன். ' ஃபுல் பாடி வொர்க். நல்லா இருக்கே' ன்னு சொன்னது யாருன்னா அண்ணன்! எனக்கோ ஒரே ஆச்சரியம், இதெல்லாம்கூட இவருக்குத் தெரியுமான்னு. அப்ப மெதுவாச் சொல்றார், 'சில டெர்ம்ஸ் கத்து வச்சுக்கிட்டு இருக்கேன். அப்பப்ப எடுத்து விடணும். இல்லேன்னா உங்க அண்ணி நம்மளை ஓரங்கட்டிருவாங்க'ன்னு.கட் பல்லு டிஸைன். தகதகன்னு சம்கி எல்லாம் வச்சுத் தைச்சு நல்லாதான் இருக்கு. முந்தானை தோளிலே கொசுவ வேணாம். அப்படியே தோளிலே 'சக்'னு நிக்குது! விலையும் மோசமில்லை.ஆனா ரொம்பச் சின்னப் பசங்களுக்குத்தான் நல்லா இருக்கும். 22ன்னா தேவலை. ஆனா ஒல்லியா இருக்கணும். இந்த ரெண்டுவகையிலும் சேர முடியாததாலே இது அவுட்.இப்படி ஊர் சுத்தறதுக்கு நடுவிலேயும், அண்ணன் வீட்டை ( தற்போதைய)விக்கறதுக்கு விளம்பரம் கொடுத்துருந்ததாலே, வீட்டைப்பார்க்கவும் ஆட்கள் வர்றதாலெ வீட்டுக்கும், கடைக்குமா ஓடிக்கிட்டு இருந்தோம். பன்னெண்டு வருஷப் பேச்சு வேறதொடர்ந்துக்கிட்டு இருந்தது. வீடு பார்க்க வந்தவங்களோடவும் பேரமுன்னு நாள் பறந்துதான் போச்சு.


'நம்பிக்கை துரோகம் மகா பாவம்' என்ற கருத்து இருக்கறதாலே, 'நம்மை நம்பி' வாங்கிவச்ச அநேகத் தீனிகளையும்,போதாதுன்னு வீட்டுலே சமைச்சுப் போட்ட விருந்தையும் பழங்கதைகளைத் 'தொட்டுக்கிட்டே' ஒரு பிடி பிடிச்சுட்டு,குமரன் நகரை இருட்டுலே வலம்வந்த புண்ணியத்தையும் தேடிக்கிட்டேன். கூடவே ப்ரவுஸிங் செண்ட்டர்லே பசியாலேதுடிச்சுக்கிட்டு இருந்த கொசுக்களுக்கும் ரத்ததானம் செஞ்சுட்டு வீட்டுக்கு வந்தோம்.


ஏங்க, இந்தக் கொசுங்க எல்லாம் பத்தடிக்கு மேலே பறக்காதாமே? அதுனாலே மாடி வீட்டுலே இருந்தா கொசு வராதாமே! இப்படியெல்லாம் மக்கள்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கறதை மட்டும் நம்பிராதீங்க. ஏங்க கொசுவுக்கு மட்டும் மூளை, புத்தி எல்லாம் இல்லையா? ஒரு மாடிக்கு, அதான் பத்தடி பறந்து வந்துருது. அங்கிருந்து பத்தடி தானேங்க அடுத்த மாடி?இப்படியே எத்தனை மாடி இருந்தாலும் வருமுங்க. இல்லேன்னா இருக்கவே இருக்கு படிக்கட்டு. அதுலேயும் உக்கார்ந்து உக்கார்ந்து வந்துருதுங்க.


எப்படியோ, நாளைக்கு இதுங்க என்னைக் காணாமத் தவிக்கப் போதுங்க, பாவம்.

Tuesday, May 09, 2006

சிவராத்திரி
பயண விவரம் பகுதி 24


இப்படி அண்ணனோட நம்பிக்கைப் பொய்த்துப் போகுமுன்னு நான் கனவுலேகூட நினைக்கலை. 'அன்புடன்' ன்னு ஒருகுழு, 'சித்தம்' னு ஒரு குழு, 'நம்பிக்கை' னு ஒரு குழு இப்படிச் சில கூகுள் குழுவுங்க இருக்குல்லே. இதுலேயும் பாருங்க சிலர் இங்கே அங்கேன்னு எல்லாக் குழுவிலேயும் அங்கத்தினராக இருக்கறாங்க. இந்தக் கணக்குலே நம்மமது 'அன்புடன்' லேயும் நான் 'சித்தம்'லேயும் வர்றோம்.


அங்கே போனபிறகுதான் தெரிஞ்சது இந்த விவரமெல்லாம்னு வச்சுகுங்க. வேந்தன் அரசுன்னு ஒருத்தர் அமெரிக்காவிலே இருந்து வந்திருந்தார். அவர் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸில்தான் இந்த சந்திப்பு நடந்துச்சுங்க. இதைப் பத்திநம்ம +ராமா அப்பவே ஒரு பதிவு போட்டுருந்தார்.


அது அவரோட கருத்து. இனி நம்ம வெர்ஷனையும் பாக்கணுமா இல்லையா? நம்ம இரவா, வேந்தன் அரசு, மது அப்புறம் சுரேஷ்னு ஒருத்தர் இருந்தார். கவிஞர் சுரேஷ். கவிதைக்கும் எனக்கும் காத தூரம்தான், ஆனா இவர் எனக்கு அடுத்தஇருக்கையிலே இருந்தார். தூரம் குறைஞ்சு போச்சு! நல்ல இனிமையான புன்னகையோடு இருக்கார். இதுவரை மூணு கவிதைப் புத்தகம் வெளிவந்திருக்காம். அருமையாகப் பேசுனார். தாய்மொழி மலையாளமாம். போச்சுரா..... அங்கே கூடிஇருந்த பலருக்கும் தாய்மொழி தமிழ் இல்லைன்றதும், ஆனா தமிழிலேதான் 'எழுதராங்க'ன்னதும் சுவாரசியமா இருந்துச்சுங்க.


ஜனங்களுக்கு,அவுங்க எதிர்காலம் எப்படி இருக்கும்? என்றதைத் தெரிஞ்சுக்க தீராத ஆவல் இருக்குங்க. நீங்கயாருகிட்டேயாவது 'கை ரேகை' பார்க்கத் தெரியுமுன்னு சொல்லிப் பாருங்களேன். உடனே உங்ககிட்டே கையைக் காமிக்க ஒரு கூட்டம்( அதிகப்படியோ? ) சரி, குறைஞ்சது ஒருத்தராவது கை நீட்டலைன்னா .... பாருங்க.


நம்ம கவிஞர் சுரேஷ், பேசிக்கிட்டு இருக்கப்பவே, உங்க நட்சத்திரம் என்னன்னு கேட்டார். அட! நாம் தமிழ்மண நட்சத்திரமா ஜொலிச்சது(!) இவருக்கும் தெரிஞ்சிருச்சோன்னு கிளம்புன பூரிப்பை அனுபவிக்க விடாம மனுஷர், பிறந்த நட்சத்திரம் னு சொல்லிட்டார். ....... ன்னு சொன்னதும் அந்த நட்சத்திரத்துக்குரிய குணாதிசயங்களைச் சொன்னார். ஏறக்குறையசரியா இருக்கு. நமக்கு மட்டும் சொன்னாப் போதுங்களா? குடும்பத்தோடதையும் தெரிஞ்சுக்கணும் இல்லையா? கோபாலோட நட்சத்திரத்தையும் , மகளோடதையும் சொன்னேன். பாருங்க 32 வருசம் ஒருத்தர்கூடவே இருந்தும்அவர் குணத்தைத் தெரிஞ்சுக்க மனசு பறக்குது. எல்லாம் மனுஷ சுபாவம்தான். அவர் சொன்ன பலன்கள், விவரங்கள்எல்லாம் அஞ்சுக்கு மூணு பழுதில்லாமல் இருந்துச்சுங்க.


இதுக்கு நடுவிலே சித்தார்த் என்ற இளைஞர் வந்து நம்ம கூட்டத்துலே கலந்துகிட்டார். அவர்தான் இன்னும் ரெண்டுவாரத்துலே தமிழ்மணம் நட்சத்திரமாகப் போறாருன்னு அப்பத் தெரியலை. தங்கையோட கல்யாண அழைப்பிதழைக் கொடுத்தார். அட்டகாசமான பத்திரிக்கை. அருமையான டிஸைன். என்ன... நான்தான் கலந்துக்க முடியாது. இன்னும்3 நாளுலே நான் கிளம்பறேனே(-: ஒரு கல்யாண விருந்து மிஸ்ஸாகிப்போச்சு. ஹூம்.....


சித்தம் பிரார்த்தனைக் கிளப்லே 'மயில்' மூலமே இதுவரைப் பரிச்சயப்பட்ட காந்தி ஜெகன்னாதன் வந்து சேர்ந்தாங்க.மூணு லேடீஸ்! பேச்சுக்குக் கம்மியான்னு கேட்டுறாதீங்க? எங்கே பேச விட்டாரு இந்த வேந்தன் அரசு? வகைவகையானதீனிகளைக் கொண்டுவந்து கல்யாணத்துக்கு வரிசை வைக்கிறமாதிரித் தட்டுத்தட்டா நிரப்பிட்டார். கல்யாணம்னு சொன்னவுடனே ஞாபகம் வருது. அவரும் ( 'உம்'மைக் கவனிச்சீங்களா?) இங்கே ஒரு கல்யாண வைபவத்துலேக் கலந்துக்கத்தான்இந்தியா வந்திருந்தார். அதனாலே வரிசைவச்ச தட்டுகளிலே கல்யாணப் பலகாரங்கள் வேற இருந்துச்சு. அப்புறமாச் சாப்புட்டுக்கலாமுன்னு கொஞ்சம் போட்டோக்கள் எடுத்து வச்சுக்கிட்டேன். காஃபி வந்தது. அதைக் குடிச்சுட்டேன்.


டாக்டர் இர.வா கிட்டே ரொம்பப் பேசலை. அவர்கிட்டே என் 'தமிழறிவை'க் காமிச்சுக்கக் கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு.அதெல்லாம் இடம் பொருள் ஏவல்னு இருந்துருவமில்லெ! வெளிநாடுகளிலே திருமணங்கள் எங்கே,எப்படி நிச்சயிக்கப்படுதுன்னு ஒரு விவாதம் போய்க்கிட்டு இருந்தது.


அதுக்குள்ளே நேரம் ஆறுமணி ஆயிருச்சேன்னு அண்ணனுக்குப் போன் போட்டதும் அவரும் அண்ணியும் வந்துட்டாங்க. காந்தியுடையகுடும்பம் ஒரு அஞ்சு நிமிஷத்துலே அங்கே வர இருக்காங்கன்னு சொன்னதாலே இருந்து அவுங்களையும் பார்த்துட்டுப் போகலாமுன்னு இருந்தோம். குழந்தைப் பையன் சிபு, அப்பாவோடும்,பாட்டியோடும் வந்தார். காந்தியோட மாமியார்ரொம்ப சிநேகமான சுபாவமுன்னு பார்த்ததும் புரிஞ்சு போச்சு.


அருமையான சந்திப்பா அமைஞ்சது.


அங்கே பக்கத்துலேயே இருக்கும் உறவினர் வீட்டுக்குப் போயிட்டுப் போயிரலாமுன்னு அங்கே போனோம்.அன்னிக்குசிவராத்திரி. பெரிய சைஸ் டிவியிலே ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ( எத்தனைஸ்ரீ ன்னு தெரியலைங்க. அதான் ஒண்ணுரெண்டு கூடப்போட்டுட்டேன்) ரவிசங்கர் பெரிய திண்டு சிம்மாசனத்துலே உக்கார்ந்து சிவராத்திரி விழாவை நடத்திக்கிட்டு இருக்கார். வெள்ளைக்கார அம்மணிகள் 'ஓம் நமஷிவாயா'ன்னு பாட்டுக் கட்டிப் படிக்கிட்டு இருக்காங்க. உறவினர் பக்திசிரத்தையா அதைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. 'சிவ பூஜைக் கரடி'ன்றது இதுதான் போல. கரடியா நாங்க போனோம்.


அவுங்க பசங்களுக்குப் பரீட்சை சமயம். ஆனாலும் அவுங்க பொண்ணு 'கிடார்'லே 'ரண்டக்க ரண்டக்க' வாசிச்சு என்னைக் குஷிப் படுத்துச்சு. 'சுட்டும் விழிச் சுடரே'வும் வாசிச்சதுதான். ஆனா முன்னதுதான் சூப்பர்.அதுலே பாருங்க இங்கத்துப் பசங்கள் பள்ளிக்கூடத்துலே ஆரம்பிச்சு அருமையா ம்யூஸிக் கான்செர்ட்டெல்லாம் நடத்துவாங்க. என் மகளும் ஃப்ளூட், பியானோ, கீ போர்டு, கிடார் வாசிப்பாதான். ஆனா கண்ணு முன்னாலே 'ம்யூஸிக் நோட்' வேணும்.அது இல்லேன்னா யாருக்கும் வேலை நடக்காது.சமையல் புத்தகம் பார்த்து அப்படியே வரிக்குவரி பிறளாமச் சமைக்கிறதுதான் இங்கெ.


நம்ம இசைக்கலைஞர்கள்லே பார்த்தீங்கன்னா, நோட்டா பாழா? எல்லாம் நினைவுலே இருந்து அப்படியே தடதடன்னுமழை மாதிரி கொட்டுது. எல்லாம் அப்படியே கறபனையிலே உருவாகி வர்றதுதான்,இல்லே?அதுதாங்க இங்கத்துக்கும் அங்கத்துக்கும் வித்தியாசம்.


இலக்கியக் கூட்டத்துலே என்னை விட்டுட்டு அண்ணனும் அண்ணியும் அண்ணாநகர் கிராண்ட் ஸ்வீட்ஸ்க்குப் போய் என் ஃபேவரைட் சமாச்சாரங்கள் எல்லாம் வாரிப் போட்டுக்கிட்டு வந்திருந்தாங்க. இதுபோல சந்தர்ப்பம் இனி வருமா?பூந்து வெள்ளாடவேண்டியதுதான்:-))))


உள்மனசு எச்சரிக்குது, 'அளவுக்கு மேலே போறே நீ'ன்னு. செரிக்கணுமுன்னா அஞ்சு நிமிசம் நடந்துட்டு வந்தாப் போச்சு.எல்லாரும் கிளம்புங்க.


கற்பக விநாயகர் கோவில் ச்சின்னதுன்னாலும் நல்லா அம்சமா இருக்கு. சிவராத்திரியை முன்னிட்டு விசேஷ பூஜை.வெவ்வேற பஜனை கோஷ்டிகள் வந்து ஒரொரு டைம் ஸ்லாட்லே பாடிக்கிட்டு இருக்காங்க. பயபக்தியாப் போய் சாமியைக்கும்பிட்டுக்கிட்டு பாட்டையும் கேட்டுட்டு வந்தோம்.


அன்னிக்கு ராத்திரி கொசுக்களுக்குக் கொண்டாட்டம். இனிப்பா இருக்கேன்லே:-)

Saturday, May 06, 2006

எவ்ரி டே மனிதர்கள் -1

"சாந்த மோளுக்கு டாக்ட்டராவான் எளுப்பமா."

பேசிக்கிட்டே ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார் சாந்தாவின் அப்பா.

'அப்படியா ' இல்லே 'ஆமாம்'னு கூட தலை ஆட்டமுடியாத நிலை. சரியாக் கழுத்துலேக் கத்தியைவச்சுக்கிட்டு இப்படி சொன்னா?

லேசாப் புருவத்தை மட்டும் உயர்த்தி அதை ஆமோதிச்சாராம் எங்க இவர்.
ஜோஸ்குட்டி கத்தியை ஒருத் தீட்டுத் தீட்டிக்கிறார்.

"மோளு மிடுக்கியா. பின்னே மெடிக்கல் கோளேஜ்லே ஸ்தலம் கிட்டான் அத்தர ப்ரயாசம் வேண்டிவரில்லா"


வாயைத்திறந்து பதில் சொல்றதுக்குள்ளே கத்தி மறுபடி முகத்துக்கருகில் வந்தாச்சு.

"ஓஓஓஓஓஓஓ"

"பின்னே மற்றொரு செளகர்யம் கூடி உண்டல்லோ. அம்ம எல்லாம் பரஞ்ஞு தரும்.படிக்கான் எளுப்பம் தன்னே"

'ஓஓஓஓ அம்ம மெடிகல் கோளேஜ்லே புரொஃப்ஸராணோ ?' தொண்டை வரைக்கும்வந்த வார்த்தைங்களை அப்படியே அமுக்கிப் பிடிச்சு முழுங்கறதுக்கும், 'தே வேகம் வா. காப்பிகுடி கழிஞ்ஞிட்டாணு எனிக்குப் பள்ளீ போணும்'னு சொல்லிக்கிட்டே சாந்தயுட அம்மெ அவிடெவந்து சொன்னதுக்கும் சரியா இருந்துச்சு.


கொரட்டி பஸ் ஸ்டாப்புலே இறங்கி அப்படியே தேவமாதா ஹாஸ்ப்பிட்டல் போற வழியிலே வந்தீங்கன்னா வலது பக்கம் அஞ்சாவது கடை நம்ம ஜோஸ்குட்டியோடது. என்னது கடையைக் காணொமா?என்னங்க நீங்க! பாப்புலர் ஸ்டோருக்கு ரெண்டாவது இருக்கே அதாங்க. கடை மாதிரி இல்லேல்ல?


என்னங்க செய்யறது, இவ்வளோ ச்சின்ன ஊர்லே 'மென்ஸ் ப்யூட்டி பார்லர்'ரா இருக்கும்? நாட்டு ஓடுவேய்ஞ்ச, வீட்டுத் தாழ்வாரத்தை ஒட்டி இருக்கற இடம்தான் சலூன். அந்த ஏரியாவுக்கே இது ஒண்ணுதான்.


எப்படியும் மாசம் ஒருக்கா அங்கே போய்த்தானே வரணும். பெரிய சிட்டின்னா, வெய்யில், மழைன்னு எதாவதுச்சின்னப்பேச்சு( ஸ்மால் டாக்) இருக்கும். 'இவ்விடம் அரசியல் பேசாதீர்'னு போர்டு வேற சில இடங்களிலே வச்சிருப்பாங்களாம். ஆனாப் பாருங்க, எல்லா முடிவெட்டுற கடைகளிலும் ஒரு தினசரிப் பேப்பரை வாங்கிப்போட்டுதான் இருப்பாங்க, வாடிக்கையாளர் காத்திருக்கும் நேரத்துக்கு வாயாடாம எதையாவது படிக்கட்டுமுன்னு.பேப்பரைத் திறந்தா அதுலே அரசியல்தான் முக்காவாசி இடத்தைப் பிடிச்சுக்கிட்டு இருக்கு. மீதிக் காவாசி என்னவா?சினிமா. இதுலே, அப்பப் படிச்ச விஷயத்தைப் பேசக்கூடாதுன்னு கண்டீஷன்!


இதே, ஊர் ச்சின்னதுன்னா,அநேகமா எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும். அதாலே அப்பப்பக் கொஞ்சம் குடும்பக்காரியங்களையும் பேசறது உண்டுதான். ஜோஸ்குட்டிக்கு நாலு பசங்க. மூத்ததுதான் சாந்தா. இப்ப ப்ரீ டிகிரி படிக்குது.அடுத்த ரெண்டு பசங்க ஆம்புளைப் புள்ளைங்க. பக்கத்துப் பள்ளிக்கூடத்துலே ஆறாவது, ஏழாவதும் படிக்குதுங்க.கடைசிப் பொண்ணு மூணாப்பு.


அவுங்க குடும்ப சொத்தா ஒரு பரம்பும், கொஞ்சம் பாடமும் இருக்கு. நான்வேற அப்படியே சொல்லிட்டேன்,இல்லே.அதாங்க கொஞ்சம் வீட்டை ஒட்டின ஒரு இடமும், கொஞ்சம் வயலும் இருக்கு. கமுகு, தெங்கு, பலான்னு நிறையமரங்கள். அதுலெ வர்றதை வித்தும், கடையிலே கிடைக்கற காசுமா நாள் ஓடிக்கிட்டு இருக்கு.


பொன்னம்மா சேச்சிக்கு இன்னொரு வேலையும் தெரியும். அக்கம்பக்கத்துலே போய் மருத்துவம் பாக்கறது. எப்படிக்கத்துக்கிட்டாங்கன்ற விவரம் எனக்குத் தெரியலை. கிராமத்துப் பக்கம் எப்பவும் ஓடியாடி உழைக்கிற கர்ப்பிணிங்களுக்குப் பல சமயத்துலேச் சிக்கல் இல்லாத சுகப்பிரவசம் ஆயிருது. அதுக்குச் சிலசமயம் நம்ம பொன்னாம்மாச் சேச்சியைக்கூப்புட்டுப் போவாங்க.


ஆனா, ச்சும்மா சொல்லக்கூடாதுங்க. பார்த்தவுடனே தெரிஞ்சுருமாம் சேச்சிக்கு, இது சரி ஆகுமா ஆகாதான்னு.நேரம் கடத்தாம உடனே 'தேவமாதா'க்குக் கொண்டுபோகச் சொல்லிரும். இதுவரை அது கைபட்டு உயிர் நஷ்டம் ஒண்ணும் வரலை. அதுக்காகவே ஆன்னா ஊன்னா பள்ளிக்குப் போயி ஜெபிக்கும். கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி.


அதான் அப்பா சொல்லிட்டாரு, 'மகளுக்கு, அம்மா எல்லாம் சொல்லிக் கொடுக்கும். டாக்டர் ஆவறது மகளுக்கு சுலபம்'னு.


எல்லாப் பெற்றோர்களுக்கும் உள்ள கனவுதானே, புள்ளைங்க பெரிய படிப்புப் படிச்சு பெரிய ஆளா வரணுமுன்னு.இவர் வந்து சொன்னவுடனே எனக்கே ஆச்சரியமா இருந்தது. ரொம்ப சுமாராப் படிக்கிற பொண்ணுதான். ஒருசினிமா விடாது. நல்லாப் பாட்டுப் பாடும். எப்பவாவது வீட்டுப் பக்கம் வந்து போகும். 'என்ன மெடிக்கல் போகப் போறீயா?'னு கேட்டப்ப ஒருமாதிரி முழிச்சது.நாளும் ஓடுச்சு. நாங்களும் பக்கத்து ஊர்லே வேற இடத்துக்கு வீடு மாத்திப் போயிட்டொம்.


ஒரு நாளு தற்செயலா டவுன்லே சாந்தாவைப் பார்த்தேன். படிச்சுக்கிட்டு இருக்காம். வீட்டுக்குப் போக பஸ்ஸுக்குக் காத்திருந்துச்சு. இந்த ஊர்லே ஏதுரா மெடிக்கல் காலேஜுன்னு சந்தேகம். மெல்ல விசாரிச்சேன், எங்கே படிக்குதுன்னு?கோளேஜ்தானாம், ஆனா டுட்டோரியல் கோளேஜ்.


----

அருஞ்சொற் பொருள்:
பள்ளி- சர்ச்
பரம்பு- இடம்,
பாடம்- நிலம்
கோளேஜ்- கல்லூரி
ப்ரீ டிகிரி- பி.யு.சின்னு முந்தி இருந்தது. இப்ப ப்ளஸ் 1 & 2 ஆயிருச்சு.

-------
அடுத்தவாரம் : பானு


நன்றி: தமிழோவியம்