Monday, June 11, 2018

ராமேஸ்வரம் ஹல்வா

காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன?
அதுதான் இது!
ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான்  பேரும் வச்சு எழுதியும் இங்கே போடறேன்.

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய்  அரைக்கிலோ!  ஆர்கானிக் சமாச்சாரமுன்னா ரொம்பவே நல்லது. இங்கே இது நம்ம வீட்டுப் பூசணி.
சக்கரை  கால் கிலோ  இது Raw Sugar. அப்படியே ராவா அடிக்கறதுதான் நம்ம வீட்டுப் பழக்கம் :-)
முந்திரி திராக்ஷை  உங்களுக்கு விருப்பப்பட்ட அளவு. அதுக்காக அஞ்சு முந்திரின்னு  கணக்கு வேணாம்.

ஏலக்காய்த்தூள்  ஒரு அரைத் தேக்கரண்டி.

நெய்  கால் கிலோ !!!!  250 கிராமுன்னு சொன்னால்   நல்லா குறைஞ்ச அளவா இருக்குல்லே!

செய்முறை:

முதலில் பூசணிக்காயை வெட்டித் துண்டுகளா எடுக்கணும்.  தோல் நம்மைவிடக் கெட்டி என்பதால் உதவிக்கரங்கள் கிடைச்சால் கொள்ளாம்.  ஆனால் பக்கத்துலேயே நின்னு,  'ஐயோ.... இப்படி தோலைமட்டும் வெட்டாம பூசணிச்சதையையும்  ரொம்பவே  கழிச்சுக் கட்டறீங்களே'ன்னு  கத்தணும். சின்னத் துண்டுகளா வெட்டினால் நல்லது.

குக்கரில்  ரெண்டு விஸில் அளவு  வேகவச்சு மசிச்சுக்கலாம்.  இல்லைன்னா ஒரு  மூணு டீஸ்பூன் தண்ணீர் விட்டு, நறுக்கிய துண்டுகளை நேரடியாக் குக்கரில் போட்டு  மூணு விஸில். (ஓபிஓஎஸ் குக்கிங் போல!)


அப்புறம்  ஒரு வாணலியில் நெய் ரெண்டு ஸ்பூன் சேர்த்து முந்திரி திராக்ஷையை வறுத்து எடுத்துக்கணும்.
ஹல்வாவைக் கிளறி ஊத்த ஒரு பாத்திரம் எடுத்து அதில் நாலு துளி(!) நெய் விட்டுத் தடவி வச்சுக்கணும். வறுத்த முந்திரி திராக்ஷையை நான் இதுலே எடுத்து வைப்பேன். (சிக்கனமா இருக்கேனாம்!) அந்த நெய்யே பாத்திரத்தில் பரவிட்டால் ஒரு வேலை மிச்சம் பாருங்க.
அதே வாணலியில்  மசிச்ச பூசணி விழுதைப் போட்டுக் கிளறுங்க. கொஞ்சம் கெட்டிப் பட்டதும் சக்கரையைச் சேர்த்து இன்னும் கிளறிக்கிட்டே இருக்கணும்.
ஒருவிதம் கெட்டியாகி வரும்போது, நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாச் சேர்த்துக்கணும்.

கிளறிக்கிளறிக் கை வலி ஆரம்பிக்கும்போது ஹல்வா பதம் வந்துருக்கும்.  இது பாதாம் ஹல்வா மாதிரி ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடும் பதம்தான்.

இப்போ வறுத்து எடுத்து வச்ச முந்திரி திராக்ஷையைச் சேர்த்துக் கிளறிட்டு ஏலக்காய்த் தூளையும் சேர்த்துடலாம்.
ஆச்சு. எடுத்து அப்படியே நெய்தடவிய (!) பாத்திரத்தில்  கொட்டினால் போதும்.

இதுலே  ஒரு சில மாற்றங்கள்  வேணுமுன்னா....  ஹல்வா கெட்டிப்பட்டு வரும்போது  150 கிராம்  பால்பவுடரைச் சேர்க்கலாம்.  கோவா கிடைக்குமுன்னால் அதைச் சேர்த்தால் ஓக்கே. இல்லைன்னா பால்பவுடரில் கூட கோவா செஞ்சுக்கலாம் தெரியுமோ?

பால்பவுடரைக் கொஞ்சம் ரெண்டு ஸ்பூன் பால் தெளிச்சுக் கட்டியா சப்பாத்திமாவு போல பிசைஞ்சு உருட்டி, அஞ்சு நிமிட் ஸ்டீமரில்/ இட்லித் தட்டில் வச்சு ஆவி பிடிச்சால் கோவா !

என்னைப்போல் கடைசி நிமிட் ஐடியா வந்துட்டால், நேரடி பால்பவுடரையே சேர்த்தாலும்  போதும். (சோம்பேறிக்குத் தோலோடு வாழைப்பழம்!)
அப்புறம்.... குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் கொஞ்சம் சேர்த்துக்கலாம். உங்க விருப்பம்.

நான் பொதுவா எல்லா இனிப்புக்கும் (மைஸூர்பா தவிர) சேர்ப்பேன். பச்சைக் கற்பூரம் பெருமாள் வாசனை  :-)
பின்குறிப்பு:  ரெண்டு முறை செஞ்சு பார்த்தப்ப எடுத்த படங்களை  கலந்துகட்டியே இங்கே போட்டுருக்கேன். தேதி பார்த்துக் குழம்ப வேண்டாம் :-)

குறிப்பு # 2.  கொஞ்சம் எடுத்து  ஃப்ரீஸ் செஞ்சு பார்த்தேன்.  ஒரு மாச இடைவெளி விட்டு எடுத்து டீஃப்ரீஸ் செஞ்சதும்  நல்லாவே இருக்கு. தின்னு பார்த்தால் சுவையில் ஒரு மாற்றமும் இல்லை. ஸோ பாக்கியானால் ஃப்ரீஸருக்கு அனுப்பலாம் :-)

குறிப்பு # 3.  இனிப்பை வாசித்த கையோடு இன்னொரு முக்கிய இனிப்பும் இதோ உங்களுக்கு!  பயணம் ஒன்று அமைந்துள்ளது. இந்த முறை வழக்கத்தை விடக் கொஞ்சம்  நீண்டநாட்கள். அங்கங்கே கிடைக்கும் இணைய வசதிகளைப் பொறுத்து  எட்டிப் பார்த்துட்டுப் போவேன்.  ஆனாலும்.... இதை ஒரு லீவு லெட்டராகப் பாவித்துக்கொள்ளுங்கள்.  வடை, யானை, பூனைகளைப் பார்த்தால் என்னை நினைக்க வேண்டாம் :-)

வணக்கம்.

என்றும் அன்புடன்,
 உங்கள் துளசி டீச்சர்.


Friday, June 08, 2018

மன்னரை சந்தித்தேன் !

இவர் நம்மை சந்திக்க நம்ம வீட்டுக்கே வந்தார்னு சொன்னா நம்புங்க !துளசிதளத்தின் நெடுநாள் வாசகர் ஒருவர், ஒரு மாசத்துக்கு முன்னே  நம்ம பதிவு ஒன்னில் பின்னூட்டமா ஒரு சேதி அனுப்பி இருந்தார்.  அவருக்கு நம்ம மெயில் ஐடி தெரியாது.

'உங்க ஊருக்கு இத்தனாம் தேதி வர்றேன். நீங்க ஊரில் இருந்தால்  ச்சும்மா பார்த்துட்டு ஒரு ஹை சொல்லிக்கணும்.  செய்தியைப் பின்னூட்டமாப் போட்டதுக்கு மன்னிக்கணும்'

நமக்குத்தான் மாடரேஷன் இருக்கே. செய்தி தெரிஞ்சுக்கிட்டு, நானும் அதே பதிவில் பின்னூட்டமா 'உங்க மெயில் ஐடியை அனுப்புங்கோ. வெளியிடமாட்டேன்'னு ஒரு பதில் அனுப்பினேன். எனக்கும் அவருடைய மெயில் ஐடி தெரியாதே :-)

அப்புறம்  மெயில் மூலமா பேச்சு தொடர்ந்தது. அப்போதான் நம்ம சீனப்பயணம் நடந்துக்கிட்டு இருந்தது. அவுங்க எங்க  ஊரை விட்டுக் கிளம்பும் முதல்நாள் காலைதான் நாங்க ஊருக்கே திரும்பி வர்றோம்.  வந்ததும்  தகவல் சொல்றேன்னுட்டு, அதன்படியே ஆச்சு.

அன்றைக்கு  ஒரு நேரம் ஒதுக்கியாச்சு. ச்சும்மா ஒரு சந்திப்புதான். சமைக்க எல்லாம் மூட் இல்லையாக்கும். ஊர் திரும்புன பயணக்களைப்பு  இருக்கே! செட்டில் ஆக ரெண்டு மூணு நாள் ஆகும்....

சாயங்காலம் ஒரு ஏழு மணிக்கு நம்ம வீட்டுக்கு   மனைவியுடனும்,  நண்பர் குடும்பத்துடனும்  வந்தார்.
புதுசா ஒருத்தரை சந்திக்கறோம் என்ற எண்ணமெல்லாம் வலைஉலகம் வந்தபிறகு காணாமப் போயிருக்கு, இல்லே?

எல்லோருமாப் பேசிக்கிட்டு இருந்தோம்.  குடிக்க ஜூஸா இல்லை காஃபியான்னு உபசரிக்கிறேன்:-) ஒன்னும் வேணாமாம்!  'கொஞ்சம் சாமி ப்ரஸாதமாவது எடுத்துக்குங்க'ன்னுட்டு,   சீனப் பயணத்தை நல்லபடியா முடிச்சுக் கொடுத்த பெருமாளுக்குக் காலையில்  நைவேத்யமாச் செஞ்சுருந்த அக்காரவடிசல் கொஞ்சம் விளம்பியாச்சு :-)

அவுங்க எங்க தெற்குத்தீவு பயணம் என்று, மறுநாள் காலையில் கிளம்பிப்போறாங்க. ரொம்பவே அழகான இடங்கள் இதெல்லாம்.  ரென்டல் கார் எடுத்துக்கிட்டுக் கிட்டத்தட்ட ரெண்டு வாரம் சுத்திப் பார்த்துட்டு, திரும்ப எங்கூருக்கு வந்து, இரவு தங்கிட்டு  மறுநாள் அதிகாலை கிளம்பி வடக்குத்தீவுக்குப் போயிடறாங்கன்னு தெரிஞ்சது!

'பத்திரமா ட்ரைவ் பண்ணிப் போயிட்டு வாங்க'ன்னு சொல்லி, சாமி நமஸ்காரம் பண்ணிக்க சாமி அறைக்குக் கூட்டிப் போனோம்.  படம் எடுக்கலாமான்னு கேட்டாங்க!  (ஆஹா...  நம்ம இனம்! )  நம்ம பெருமாள், சிங்கைச்சீனு போல!  தாராளமாப் படம் எடுத்துக்கலாம்:-) ஆச்சு !  படம் எடுக்க எடுக்கப் பெருமாளுக்குப் பவர் கூடிக்கூடி வரும்! 

'ஒருவேளையாவது நம்ம வீட்டில் சாப்பிட்டுட்டுப்போனால் எனக்கு திருப்தியா இருக்கும். திரும்பி வந்து ஒரு இரவு  தங்கும்போது, அன்றைக்கு டின்னர் நம்ம வீட்டில்'னு சொல்லியாச்.

இதுக்கிடையில் விருந்தினர் வந்தவுடன், ஓடிவந்து பூனை ஜோஸியம் பார்த்துட்டு, 'பாஸிடிவ் வைப்' இருக்குன்னு சொல்லிட்டான் நம்ம ரஜ்ஜு :-)

அழகான உங்க நாட்டைச் சுத்திப் பார்த்துட்டு ** தேதிக்கு  வர்றோமுன்னு சொல்லிக் கிளம்புமுன் மெள்ளப்  பையிலிருந்து  ஒவ்வொன்னா எடுக்கறாங்க...............  ஹைய்யோ!!!!
அப்புறம்?

பனிரெண்டு நாட்கள், நம்ம நாட்டின் தெற்குத்தீவுக்கு மட்டுமே!  இந்த தினங்களில் அன்றாடம் தங்கின இடங்களையும்,  பார்த்து மகிழ்ந்த  சில முக்கிய சமாச்சாரங்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்பிக்கிட்டே இருந்ததால், நமக்கும் எதெது இன்னும்  பார்க்கணும் என்றெல்லாம்  சொல்ல வசதியாப் போச்சு.

திரும்பி நம்மூருக்கு  வந்த நாள்  மாலை  நம்ம வீட்டில் ஒரு டின்னர் ஆச்சு!
இந்தியா வரும்போது கட்டாயம் சந்திக்கறோமுன்னு வாக்கும் கொடுத்தாச்!

 எப்படியும் அவுங்க ஊருக்குப் போய்க்கிட்டுத்தானே இருக்கோம்!  திருச்சிக்காரர்கள்!

  இந்த வாசக நண்பர்தான் 'மலைக்கோட்டை மன்னன் ' என்ற பெயரில் துளசிதளத்தில் பின்னூட்டம் இடுவார்.  மன்னரின் குடும்பமும்  நண்பர் குடும்பமும்  சேர்ந்து, இப்போ நமக்குக் குடும்பநண்பர்களின் எண்ணிக்கை இன்னும் கூடி இருக்கு!

ரெண்டு குடும்பமும் தனித்தனியா அன்பளிப்புகள் கொண்டு வந்து  அசத்திட்டாங்க!

ஆமாம்....இப்ப எதுக்கு இந்தப் படம்?

ஹாஹா.... நீங்க வர்றப்ப இதைத் தவிர்த்து வேற பரிசுகள்  கொண்டு வரத்தான் ..... :-)
இப்படிப் பதிவர் வாசகர் சந்திப்பு அடிக்கடி நடக்கவேணுமுன்னு பெருமாளை வேண்டிக்கறேன் ! நீங்க வரும்போது, உங்க நண்பர்கள் குடும்பத்தையும் கூட்டிக்கிட்டு வாங்க :-)


Wednesday, June 06, 2018

ஃபார்ட்டிஃபோர் ஃபாலோ அப் :-)

நாப்பத்திநாலாம்  திருமணநாள் நல்லபடியாகவே நடந்துச்சு.

நம்ம பெருமாளுக்கு இன்றைக்கு  அடப்ரதமன் பண்ணி கை காமிச்சாச்சு.  எதுவா இருந்தாலும் வீட்டில் இருந்துதான் தொடங்கவேணும், இல்லையோ!
நான் ஏற்கெனவே சொன்னாப்லெ எங்களுக்கு இங்கே கோவில்கள்  ச்சாய்ஸ்  (மொத்தமே ரெண்டுதான்... ஹிஹி...) இப்ப இருக்குன்னாலும்.....

ரெண்டு இடத்திலும் ஆசிகள் வாங்கிக்கணும் என்பதால் ரெண்டு கோவில்களுக்கும் போய் வந்தோம் !

அங்கே எடுத்த  படங்கள் சில உங்கள் பார்வைக்கு !


முதல் கோவில் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர்.
மேலே படம்: எங்க ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில் பண்டிட் ஜி & அவருடைய தர்மபத்னி ஜி.  பண்டிட்ஜி பெயர்  உங்களுக்கெல்லாம் பரிச்சயமான பெயர்தான். ரஜனிகாந்த் !


 அடுத்து நம்ம  ஹரேக்ருஷ்ணா டெம்பிள் !  இந்தக் கோவிலுடன் நமக்குத் தொடர்பு,  கடந்த முப்பது வருசங்களாக !