Monday, February 27, 2023

சாலாட்சியின் அன்பளிப்பு ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 19

சந்துகளில் நுழைஞ்சு போனப்ப.... சட்னு  நின்னது இன்னொரு முக்கிய கோவில் வாசலில்.  போன பயணத்தில் தரிசிச்ச கோவில்தான். இந்த முறை என் கணக்குப்படி மறுநாள் வரணும். ஆனால் முதல்நாளே இங்கே வந்து நிக்கவச்சுட்டாள் சாலாட்சி !  என்ன ஒன்னு  படம் எடுக்க அனுமதி இல்லை :-( 

வாசலில் நின்ன  சின்னக் கூட்டம் சட்னு உள்ளே போச்சு. கூடவே நாங்களும்.  அலங்கார பூஷிதையா இருக்காள் அம்மன். ரொம்பக் கிட்டக்கவேற இருக்கோம்.  பூக்குவியலுக்கிடையில் முகம் தெரிஞ்சது.   முன்னால் இருந்த  ஸ்ரீசக்கரத்தில் அபிஷேகம் செய்த  குங்குமம்,   நீட்டிய நம்  கையில் கிடைச்சது. நெற்றியில்  வச்சபடி நகர்ந்து போறோம். 
சின்னக்கோவில்தான். உள்ளே வரும் நுழைவு வாசலே.... ஏதோ சாதாரண வீட்டுவாசல் மாதிரிதான். நிலைவாசலுக்குமேல் இருக்கும்  கஜலக்ஷ்மி அலங்காரமும் ரெண்டு பக்கச் சுவர்களிலும் இருக்கும் சிங்கங்களும்தான் இது கோவில் என்கிற அடையாளம் !
நடுவில் இருக்கும் அம்மனைச் சுற்றிவர இடம் விட்டுருக்காங்க.   வலம் வந்து முடிக்குமிடத்தில் இன்னுமொரு வாசல் இருக்கேன்னு அங்கே எட்டிப் பார்த்தேன்.  குறிப்பிட்டுச் சொல்லும்படியா ஒன்னுமில்லை. கொஞ்சம் இருட்டா வேற இருக்கு.  சின்னதா சில சந்நிதிகள் சுவரோரமா....  திரும்ப மூலவரை நோக்கி வந்தால் ஒரு மூலையில்  சின்னக்குன்று போல புடவைக்குவியல் !  சில பெண்கள், புடவைகளைக் கையில் எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க.

 நானும் கீழே குனிஞ்சு  மேலாக இருந்த ஒரு புடவையை எடுத்துப் பார்த்தேன். புடவைக் குவியலுக்கந்தாண்டை நின்னுக்கிட்டு இருந்த ஒருவர்,  கைநீட்டி அதை வாங்கியவர், பக்கத்துலே உக்கார்ந்திருந்த ஒருவரிடம் கொடுத்தார்.   அடுத்த விநாடி, ஒரு பை என் கைக்கு வந்துருச்சு.  திகைச்சு நின்னவளிடம்    மூணுன்னு கை காட்டினார்.  அந்தாண்டை நின்னு மூலவரைப் பார்த்துக்கிட்டு இருந்த  நம்மவர், என்னைத் திரும்பிப் பார்த்தாரா... நானும் மூணுன்னு  கைகாட்டினேன்.  ஐநூறு என் கைக்கு வந்தது.  நான் இப்பக் காசோடு  கைநீட்டறேன்.  அதை வாங்கின கை இருநூறை என் கையில் வச்சது.  இதை எழுத  ஆன நேரம்கூட ஆகலை..... அப்போ! எல்லாம் ஒரு அரை நிமிட் சமாச்சாரம் ! 
இந்தக் கோவில் முழுக்கமுழுக்க  நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பராமரிப்பில்தான் ஆரம்பம் முதல் !

இதைக் கட்டுன வருஷம்தான்  சரியாகத்தெரியலை.  விவரம் தேடும்போது விக்கிப்பீடியாகூட  கணக்குத்தப்பிருச்சோன்னு தோணுது. பிலவ ஆண்டுன்னு சொல்றாங்க. கோவில் சுவரில் பிலவங்க ஆண்டுன்னு இருக்கு. பிலவக்கும் பிலவங்கத்துக்குமே 6 ஆண்டு இடைவெளி இருக்கே... 

காசி விஸ்வநாதர் கோயில் அருகே புதிய இடம் வாங்கி தமிழக கட்டிடகலையில் கி.பி1893 இல் விசாலாட்சி கோயில் கட்டப்பட்டது.[4] இக்கோயிலுக்கு பிலவ ஆண்டு தை மாதம் 25ஆம் நாள்(கி.பி1908இல்) நாட்டுக்கோட்டை நகரத்தாரால் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது[4]. இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகத்தில் உள்ளது.[4]
 
நானும் போன பயணத்தில் எழுதிய பதிவில்  1847 இல் கட்டுனதா இருக்கணும் என்று குறிப்பிட்டுள்ளேன். அதுவும் கூட தவறுதான்.  இப்பத்திய  என் ஆராய்ச்சியின் படி  இந்தக் கோவில் 1835 இல் (மன்மத வருசம் ) கட்டியிருப்பாங்க.  குடமுழுக்கு 12 வருசங்களுக்கொருமுறை என்பதால் பிலவங்க வருசம் திருப்பணி செஞ்சு கும்பாபிஷேகம் நடத்தியிருக்காங்க.  
மேலே படம்: போனபயணத்தில் கோவில் சுவரில் பார்த்து க்ளிக்கியது.

நாட்கோட்டை சத்திரக் கோவிலில் கூட  ஸ்தாபிதம் 1813, அன்னதான மடம் கிரஹப்ரவேசம்  1863 ன்னு தானே  எழுதிவச்சுருக்காங்க.

இந்த காசி விசாலாக்ஷி கோவில் சக்திபீடக் கோவில்களில் ஒன்னு. இங்கேதான்  காதுக்கம்மல்  விழுந்ததுன்னு சொன்னாலும்.... இதிலும் சில குழப்பங்கள் எனக்கிருக்கு.  மணிகர்ணிகா காட் இருக்கு பாருங்க.....  அங்கேதான்  சதியின் கர்ணகுண்டலம் விழுந்ததாகச் சொல்லி அந்த இடத்துக்கான பெயர்க்காரணம் சொல்றாங்க. 

இன்னொரு வகையில்   காசி விஸ்வநாதர் கோவிலில் இருக்கும் ஞானவாபியில்  கம்மல் விழுந்ததால், விஸ்வநாதர் அதை எடுக்க அதுக்குள்ளே போனார் என்று..............  அந்நியர்களிடமிருந்து காசி விஸ்வநாதர் ஜ்யோதிர்லிங்கத்தைக்  காப்பாற்றுவதற்காக,  அப்போ பூஜை செஞ்சுக்கிட்டு இருந்த பண்டிட்,  விஸ்வநாதரைக் கையில் தூக்கிக்கிட்டு அந்தக் கிணற்றில் குதிச்சுட்டார்னும் ஒரு கதை போய்க்கிட்டு இருக்கு. 

இப்பவும் விஸ்வநாதர் அதுக்குள்ளேதான் இருக்காருன்னு ஒரு சாரார் சாதிக்கிறாங்க.  ஸ்கேன் செஞ்சு பார்த்ததாகக்கூட ஒரு சேதி வந்தது.  ஆனால் ...   ஸ்கேன் ரிஸல்ட் வெளியிடவே  இல்லை.  காரணம்....  இந்தக்கிணறு, மசூதிப்பகுதிக்குள் இருப்பதால்.  பழைய கோவிலின் தூண்கள் மேலேதான் மசூதி கட்டி இருக்காங்கன்றது ஏற்கெனவே தெரிஞ்ச சமாச்சாரம்தான். சுப்ரீம் கோர்ட் வசம் தகவல்கள் இருப்பதால்   நமக்குத் தெரிஞ்சுக்க வாய்ப்பும் இல்லை, வாயையும் தொறக்கப்டாது. என்னவோ போங்க....

உண்மை  என்ன என்பது அந்த 'விஸ்வநாதருக்குத்தான் ' வெளிச்சம் !  

சரித்திர டீச்சர் என்பதால் வருஷம் சரிவரப்பொருந்தலைன்னா அதுவே எனக்கு மண்டையிடி!

போன பயணத்தில் 17/4/2013 இல்  கும்பாபிஷேகம்  நடத்தினதா நவீனக் கல்வெட்டில் இருந்தது. அதன்பின்  எட்டுமாசம் கழிச்சு நாம்  (ஜனவரி 2014) முதல்முறையாக காசி வந்திருந்தோம்.

இந்தக்குழப்பம் எல்லாம் இப்போ  இந்தப் பதிவு எழுதும்போதுதான்....
சம்பவம் நடந்தப்போ... ?   

 தரிசனமும் தந்து தீபாவளிப்பரிசும் கொடுத்த விசாலாக்ஷியின் கருணையை நினைச்சுக்கிட்டே  வெளியே சந்துக்குள் கால் வச்சேன்.  26 அக்டோபர் மாசம் காலை 5 முதல் இரவு 11.30 வரை  வருடாந்திர அன்னக்கூட் மஹோத்ஸவம் , லட்டு அலங்காரம் நடக்கப்போகுதுன்னு பேனர் கட்டிவச்சுருக்காங்க. இதுதான் எல்லோரும் சொல்லும் லட்டுத்தேரோ ?  இங்கே விசாலாக்ஷி கோவிலிலா இல்லை அன்னபூரணி கோவிலிலான்னு  தெரியலையே.... விசாரிக்கணும்.

சந்துகளில் நுழைஞ்சு நடந்து நடந்து  தஸ் அஸ்வமேத காட் ரோடுக்கு வந்தாச்சு.    கண்ணெதிரில்  கோபால் மகன்கள்  கடை வச்சுருக்காங்க.   ஏற்கெனவே துல்ஸி புடவைக்கடை ஒன்னு பார்த்தேன். இப்ப இவர் மகன்கள்  வேறயா ? ஆமாம்.... இவருக்குத்தான் மகனே கிடையாதே.... அப்ப எப்படி கள்?   நாளைக்கு முடிஞ்சால் எட்டிப்பார்க்கணும். அதான் இடம் தெரிஞ்சுபோச்சே....
பேங்க் ஆஃப் பரோடாவையொட்டி இருக்கும் சந்துக்குள் நுழைஞ்சாச்சு.  நேரா  ஹொட்டேல் சீதா தான்.  போகும் வழியிலே ஒரு  சின்ன கதவாண்டை, திண்ணையில் கொஞ்சம் பட்டாஸ் கடை போட்டுருக்காங்க ஒரு பாட்டி.  நாளைக்கு தீபாவளி!  நாமும் கொஞ்சம் பட்டாஸ் வாங்கினால் ஆகாதா ? ச்சும்மா பெயருக்கு ஒன்னு.....  கம்பி மத்தாப்பு பச்சைக்கலர் ஒன்னு போதும். பக்கத்துலே பாம்பு  முட்டை இருந்துச்சா... ஆசையோடு  அதுலே ஒன்னு .
மணி எட்டுதான் ஆச்சுன்னாலும்  நடந்த நடையில்  வேறெங்கேயும் ராச்சாப்பாட்டுக்குப் போகத் தோணலை.  வழியில் இருந்த கடையில்  ப்ரெட், ஜாம்,  ஃபேன்ட்டா வாங்கிக்கிட்டோம்.  எனக்கு கோக் பிடிக்காது.   இந்த ஃபேன்ட்டாக்குப் பின்னால் ஒரு சின்னக்கதை இருக்கு. அப்புறம் ஒருநாள் பார்க்கலாம்  !  குரங்கு குடிக்கும் ஃபேன்ட்டான்னு  ஞாபகம் வச்சுக்குங்க :-)

சீதாவுக்கு  வந்ததும், வரவேற்பில் இருந்த மேனேஜர் பாண்டே.... 'நாளைக்குக் காலையில் படகுக்குச் சொல்லிறவா' ன்னார்.  'சொல்லிருங்க'ன்னோம். 'நாலரைக்குக் கீழே வந்துருங்க' ன்னார். 'ஒரு  மார்னிங் அலார்ம் கால் பண்ணுங்க' ன்னால்....  அதெல்லாம்  இல்லையாம் !  நம்ம செல்லில் வச்சுக்கலாமுன்னார் நம்மவர். 

அறைக்கதவைத் திறந்தால் வெளிச்சமா இருக்கேன்னு பார்த்தால் பால்கனி கண்ணாடிக்கதவு பளிச்ன்னு இருக்கு. தீபாவளிக்காக சீதாவை அலங்கரிச்சுருக்காங்க.

விசாலாக்ஷி கொடுத்த பையைத் திறந்து பார்த்தால்  ஒரு புடவை, அதுக்கான ப்ளவுஸ் பிட், நாலு வளையல்கள், ஒரு சின்னப்பொட்டலம் குங்குமம், ஒரு  விசாலாக்ஷி படம் இருந்தது. தீபாவளிக்கு அம்மனே புடவை கொடுத்துட்டாளேன்னு மனசு சந்தோஷப்பட்டது.  
நாம் கொஞ்சம் சந்தோஷமா இருந்தால் விதிக்குப் பொறுக்காதே........

 நாமும் கொஞ்சம் 'பட்டாஸ்' கொளுத்தலாமேன்னு  பால்கனிக்குப் போய் பத்தவச்சேன். பச்சை ஜோரா எரிஞ்சது. ஒரு பக்கம்  பாம்பு முட்டையிலிருந்து பாம்பு வெளியே வருது.  நம்மவருக்கும் ரெண்டு கம்பிமத்தாப்பைக் கொடுத்து பத்தவச்சுக்குங்கன்னால்....  என்னோட எரியும் மத்தாப்புலே பத்த வச்சுக்கறேன்னு என் கைக்கு நேரா மத்தாப்பைக் காமிச்சுருக்கார். பத்திக்கிட்டதும்  என் கை போச்சு..... .   எரிச்சல் தாங்க முடியாமல்  இடும்பிக்கு வந்ததே கோபம்....  பட்டாசும் வேணாம் ஒன்னும் வேணாமுன்னு எல்லாத்தையும்  பால்கனி வழியாகத் தூக்கிப்போட்டாள் !  பாத்ரூமுக்குள் போய் பச்சைத்தண்ணீரில் ஒரு அரைமணி நேரம் கையைக் காமிச்சுக்கிட்டு நின்னதும்தான் எரிச்சல் மட்டுப்பட்டது.  நல்ல வேளை.... உடனே சிகிச்சை செய்ததால் கொப்புளம் வரலை. ஆனால்  எரிச்சல்  முழுசும்  அடங்கலை...  பாவம் இடும்பி.....

 
ரெண்டு ஸ்லைஸ் ப்ரெட்டை முழுங்கிட்டு, கைநிறைய  மாய்ஸரைஸர் பூசிக்கிட்டுப் படுத்தாள் இடும்பி. காலையில் நாலரைக்குன்னா.... ஒரு நாலு மணிக்காச்சும் எழுந்தால் தான்  நல்லது. 

பொழுது விடிஞ்சால் தீபாவளி !  குட் நைட்!


Friday, February 24, 2023

ஹைய்யோ !!!!! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 18

அடடா......    நான்  தப்பு  பண்ணிட்டேன்..... பகல் வெளிச்சத்தில் வந்து அனுபவிக்க வேண்டிய இடம் இது.  இப்ப மணி  ஆறு. நல்லா இருட்டிப்போச்சு....   
இருட்டுக்குள் நுழைஞ்ச நாங்கள்  அந்தாண்டை போனால்.....  கண் விரியும் அளவுக்குப் பெரிய இடமா இருக்கு.  இங்கே அமைதியான சூழலுக்கான வெளிச்சம் வேண்டி  விளக்குகள் பொருத்தியிருந்தாலும்...  பகலில் இன்னும் வேறுவிதமாத் தெரியும்தானே ! 
இன்னும் கொஞ்சம் யோசிச்சால்....  படங்கள் பளிச்னு வராது என்ற மனக்குமுறல்தான் போல. பகல் நேரத்தில்  பயங்கரச் சூடா இருக்குமே....  என்னதான் காலணிகளுக்குத் தடை இல்லைன்னாலுமே.....  போகட்டும்... இவ்வளவாவது பார்த்து அனுபவிக்கக் கிடைச்சதே....  ஏதோ முன் ஜன்மத்தில் செஞ்ச புண்ணியமாகத்தான் இருக்கவேணும் !
நமக்கிடது பக்கம் காசி விஸ்வநாதர் கோவில் கோபுரம் மின்னுது .  அங்கே போக ஒரு அலங்கார வாசல் வச்சுருக்காங்க.  ஆனால்  காலணி, கைப்பை, கேமெரா, செல்ஃபோன் இப்படி ஏதும் கொண்டு போக முடியாதே...  
வலது பக்கம் பரந்து விரிஞ்சு போகும் இடத்தின் கடைசியில் இன்னொரு பெரிய அலங்கார வாசல் ! அழகோ அழகு !  அதைக் கடந்து அந்தாண்டை போனால்   படிகள் வரிசை கீழே ஓடும் கங்கை வரை போகுது !  லலிதா காட்.  கிட்டத்தட்ட  நாற்பது படிகள்!
நானூறு மீட்டர்  நீளமும் எழுபத்தியஞ்சு மீட்டர் அகலமாகவும் இருக்கும் இந்த இடம்தான் இப்போ புதுசாகக் கட்டியிருக்கும் காரிடோர்.  கோவிலைக் கண்ணுக்குத் தெரியவிடாமல் மறைச்சுக்கிடந்த  குடியிருப்புகளையெல்லாம் அகற்றியிருக்காங்க.  கிட்டத்தட்ட முன்னூறு குடியிருப்புகள் இந்த இடத்தில் இருந்துருக்கு. இந்த குடியிருப்புகள் எல்லாம் கோவில் இங்கே வர்றதுக்கு முன்னாலேயேவா இருந்துருக்கும் ?  ச்சான்ஸே இல்லைதானே ?  வேற்றுமதத்தினர் வசிக்கும் இடம் என்பதால்....  குய்யோ முறையோ கூச்சல்கள் எழுந்ததில்  அரசியல் புகுந்து விளையாடாம இருந்தால்தான் அதிசயம், இல்லையோ !  

தற்போதைய அரசு இதையெல்லாம் ஆராயாமலா இதை அகற்ற நினைச்சுருக்கும் ?  அங்கிருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை (வேறு இடங்களும், நஷ்ட ஈடும் தருவதாக ? ) நடத்தி,  அவர்களின்  இடங்களை  அரசுக்கு விற்கச் சொல்லிக் கேட்டு, அவர்களும் நியாயத்தை உணர்ந்து,   அனுமதி கொடுத்து,  வித்துருக்காங்க. சுமார் ஆயிரத்து நானூறு கடைகளும்  இதில் சேர்த்தி.  சந்துபொந்தெல்லாம்  கடைகளோ கடைகள் தானே !


 சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி குறுக்கே நிக்கறதுபோலன்னு ஒரு பழமொழி இருக்கு பாருங்க.... அதேதான். மீடியாவின் பேயாட்டத்தைத் தனியாகச் சொல்லணுமா ?  ஜனநாயக நாட்டின் நாலாவது தூண் மீடியா என்றிருந்த காலமெல்லாம் போயே போயிந்தி......  உங்களுக்கே தெரிஞ்சுருக்கும்தானே ? 
கிட்டத்தட்ட நாற்பது படிகள் இறங்கித்தான் இங்கே போகவேண்டி இருக்கு.  நல்ல நீளமான சின்னப்படிகள் !   இரண்டுபக்கச் சுவர்களிலும் லேஸர் லைட் டிஸைன் போல இருக்கு.   காரிடோர் முழுக்க  வட்டவட்ட மேடைகள் நடுவில் சின்ன மரங்களுடன் இருப்பதும் ஒரு வசதிதான். மக்களுக்கு  உக்காரவும்  இடம் வேணுமில்லையா ? 

இடது வலது ஓரங்களில் இருபத்திமூணு புதுக்கட்டடங்களும் கட்டி இருக்காங்க.  த்ரியம்பகேஸ்வரர் பவன் என்ற கான்ஃபரன்ஸ் ரூம்ஸ், லைப்ரரி,  ம்யூஸியம்,  வேதம் பயிலும் வசதி, பயணிகளுக்கான தகவல்,  யாத்ரிகர்கள் தங்குமிடம் போன்ற வசதிகள் இருக்குமாம்.  
மானஸரோவர் பவன்,  மஹாகாலேஸ்வர் பவன் வ்யாஸ் பவன், ராமேஷ்வர் பவன்னு  கட்டடத்துக்கான பெயர்கள்   !  ஆஹா....   ஒருவேளை பனிரெண்டு ஜ்யோதிர்லிங்கங்களின் பெயர்களை இந்தக் கட்டடங்களுக்குச் சூட்டிடயிருக்கலாமோ !    அதான் 23 இருக்கே ! பவன் என்றால் மாளிகை. (ஆனா நம்ம பக்கங்களில் பவன் என்ற சொல்லை ரெஸ்ட்டாரண்டுகளுக்குப் பயன்படுத்திக்கிட்டு  இருக்கோம். என்ன கொடுமை சரவணன் ? )

2019 மார்ச் எட்டாம் தேதி அடிக்கல் நாட்டி, 2021 டிசம்பர் பதிமூணாம்தேதி திறப்புவிழா ! ரெண்டேமுக்கால் வருஷத்தில் இந்த பிரமாண்டமான வேலையை நிறைவு செஞ்சதேகூட ஒரு அதிசயம்தான்! 


ஆதிசங்கரரின் சிலை, பாரத் மாதா சிலைன்னு இருந்தாலும்   ராணி அஹில்யாபாய் ஹோல்கர் சிலை வச்சுருப்பது  'நன்றி மறவாமை'க்காகன்னு  நான் நினைக்கிறேன்.  அன்னியர்களால் இடிக்கப்பட்ட  பல ஹிந்துக்கோவில்களை மீண்டும் கட்டிப் புனர்ஜன்மம் கொடுத்தவர் இவர்.  கோவில்களில் இருக்கும் தங்கத்தைக் கொள்ளையடிப்பதே அந்த அன்னியர்களின் நோக்கம். நமக்கோ.... நல்லதெல்லாம் சாமிக்குக் கொடுக்கணும் என்ற எண்ணம் இருப்பதால் சின்னச் சின்னக் கோவில்களில்கூட குந்துமணியளவுத் தங்கமாவது இருக்கும்!  

லலிதா காட் பக்கம் இருக்கும் அலங்கார வாசலுக்கு அந்தப் பக்கம்  மொட்டைமாடி போல் இருக்குமிடத்தில்  நிறைய   திண்ணை இருக்கைகள் போட்டுவச்சுருக்காங்க. ஆனால் உள்ளே போகத் தடைக்கயிறு.  லக்ஷமணரேகா :-)   கிட்டப்போய் அந்த மாடிக் கைப்பிடிச்சுவர் அருகே நின்னுபார்த்தால் கங்கை தெரிவாளேன்னு அங்கிருந்த  செக்யூரிட்டியிடம் கேட்டதும் கயிறுக்கடியில் நுழைஞ்சு போங்கன்னார். எதுக்கு அடியில் ? கொஞ்சம் மேலே கயிறைத் தூக்கினால் ஆச்சு :-) 

லலிதாகாட் படிகள். இங்கே ஆரத்தி நடக்குது என்பதால் அதுக்கான விளக்குத்தூண்கள் எல்லாம் கங்கையில் நட்டு வச்சுருக்காங்க.  வெள்ளம் காரணம் ஆர்த்தி பந்த். 


அப்பதான் கவனிக்கிறேன், பத்தியெரிஞ்சுக்கிட்டு இருக்கும், என்னோட ஃபேவரைட் இடத்தை.  ஆ.......  இது மணிகர்ணிகா காட் இல்லையோ !  போன பயணத்திலும் கிட்டேப்போய்ப் பார்க்க முடியலைன்ற ஆதங்கம்தான். 

சின்ன சின்ன   அழகான மண்டபங்கள்  இங்கே.  நான் 'எரியறதைக் கிட்டே கொண்டுவந்து பார்த்துக்கிட்டு இருக்கும்போது  ஒரு சின்னக்கூட்டம் நம்மைக் கடந்து  அந்தக் கோடிவரை போய் பார்த்துக்கிட்டு நின்னாங்க. கூட்டம் எப்பவாவது மௌனமாப்போகுமோ ?  யாராவது ஏதாவது பேசிக்கிட்டேதானே போவாங்க. காதில் விழுந்தது தமிழ் !

பரபரப்பாத் திரும்பிப் பார்க்கும்போது  போனகூட்டம் திரும்பி  நம்மைக் கடந்து போச்சு. ஒருத்தர் மட்டும் கடைக்கோடியில் நின்னு கீழே பார்த்துக்கிட்டு இருந்தார்.  நம்மவர் போய் பேச்சுக்கொடுத்தார்.  கரூரில் இருந்து வந்துருக்காங்களாம், கரூர் மடத்தின் சங்கராச்சாரியாருடன் !

அட! கரூரில் சங்கர மடம் இருக்குன்ற விவரமே எனக்குத் தெரியாது. ஒருவேளை நெரூர் மடமாக இருக்குமோ ? 
கரூர் என்ற பெயரைக்கேட்டதும்,  உங்க  இடும்பியின் அவதாரஸ்தலமல்லவா என்றொரு சந்தோஷம். வாய் சும்மா இருக்கோ ?  அவரிடம் 'அதுதான் என் அவதாரஸ்தலம்'னு சொன்னேன்.  அவ்ளோதான்... முன்னால் போய்க்கிட்டு இருந்த சின்னக்கூட்டத்தைக் கூப்பிட்டுக்கிட்டே ஓடறார் இந்த மனிதர். விளிக்கும் குரல் கேட்டு அவுங்களும் நின்னுட்டாங்க.  நாங்களும் கொஞ்சம் காலை வீசிப்போட்டு நடந்து போனோம். அறிமுகம் ஆச்சு.  எப்படி ? 'இவா பிறந்தது கரூராம்'னு  என்னைக் காட்டி !!!

கூட்டத்தில்  முகத்தில் நல்ல தேஜஸுடன் கையில் தண்டம் வச்சுருந்தவர், புன்னகையோடு நம்மைப் பார்த்தார்.  இளவயதுதான். ஒரு நாற்பது ?  நம்மவர் சட்னு கைகூப்பி வணங்கினார். கூடவே நானும்.  கை உயர்த்தி நம்மை ஆசிர்வாதம் செய்தார் 'சங்கராச்சாரியார்' . ஒரு ரெண்டுமூணு நிமிஷம் நம்மை பத்தி விசாரிச்சார். சொன்னோம்.  மீண்டும் கை உயர்த்தி ஆசி வழங்கினார். கூட்டத்தில் மூணு பெண்களும் இருந்தாங்க. நான் மெல்ல ஒரு தயக்கத்தோடு ஒரு படம் எடுக்கலாமான்னு கேட்டேன்.  வேணாமுன்னார் ஆச்சாரியார்.   சரின்னு சொல்லிட்டு விடை வாங்கிக்கிட்டோம்.  
இங்கே ஒரு வியூவிங் கேலரி. தனியறையில்  ஒரு டிக்கட் கவுண்ட்டர். விஸ்வநாதரை தரிசிக்கணுமுன்னா.... டிக்கெட்டுகள்  வாங்கிக்கலாம்.  லாக்கர் வசதிகள் இருக்கு. என்ன ஒன்னு....    செல்ஃபோன்கள் மட்டுமே வைக்கும் அளவிலுள்ள  சின்ன லாக்கர்கள். 

 மடத்து நபர் கூடப் பேசிக்கிட்டே அந்தாண்டை என்ன இருக்குன்னு சரியாப் பார்க்கலையேன்னு திரும்பப்போனால்.... ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் !   கங்கையிலிருந்துக் கரையேறிப் போகலாம்!  எனக்குப்போக ஆசைதான். ஆனால்  வழி ?  கங்கைக்கரை வழியாகச் சுத்திக்கிட்டுப் போகணுமே !

நேராத் திரும்பாம   இடதுபக்கம் பார்த்தால்  கார்த்திகேய் சௌக்.  அங்கே போனால் நம்ம முருகன் மயில் வாகனத்திலே (தனியாக )தேமேன்னு உக்கார்ந்துருக்கார்.  பொதுவா வடக்கீஸ்களுக்கு  கார்த்திகேயன் (நம்ம முருகன்தான்) ப்ரம்மச்சாரி !  

பூனாவாழ்க்கையில்  ஒரு சின்ன மலைமேல் (பர்வத் மந்திர்னு நினைவு )இருக்கும் கோவிலுக்குக் கஷ்டப்பட்டுப் படியேறிப்போனால்,  கார்த்திக் ஸ்வாமி கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லைன்னு என்னத் தடுத்துட்டாங்க. ஏனாம் ? அவர் ப்ரம்மச்சாரியாம் !  'அட! அப்படியா சமாச்சாரம். எங்க பக்கங்களில் வந்து பாரு.... ரெவ்வெண்டு பெண்டாட்டி'ன்னு சொல்லிட்டு வந்தது நினைவிருக்கு:-)

அப்ப அங்கே என்னைத்தேடி பைரவர் ஒருவர் வந்தார்.  ஏதாவது கொடுக்க இருக்கான்னு கைப்பையைத் துழாவினால்..... நியூஸி ம்யூஸ்லிபார் தான் இருக்கு. அதைத் தின்னுவானோன்னு தெரியாததால் கொஞ்சமா உடைச்சுப் போட்டேன்., நல்லா இருக்காம் ! ஓ... அப்ப இது உனக்குன்னு நியூஸியில் இருந்து வந்துருக்கு. ' Dதானா Dதானே  Pபே  லிக்கா ஹை Kகானாவாலா Kகா நாம்'  दाने दाने पे लिखा है खाने वाले का नाम  ரொம்பச் சரி ! 
'போயிட்டு வரேண்டா முருகா'ன்னு  வணங்கிட்டு,  நம்ம பைரூவுக்கும் டாட்டா சொல்லிட்டுக் கிளம்பினால் கூடவே வர்றாள் ! பாவம்..... 
பாரதமாதா சிலை!  பின்னால்  இந்தியா !   மொழிவாரியான மாநிலமுன்னு எல்லைகள் பிரிக்காத (இப்போதிருக்கும்) 'அகண்டபாரதம்' மட்டும்! 
பாரதமாதா சிலைக்குப்பின்னால் ஒரு கோவில்.  மாந்தாதா மஹேஷ்வர்! திறந்திருந்த வாசல் வழியாக தூரத்தில் தெரிஞ்சது சிவலிங்கம்.  காவலர் ஒருவர்,   கொரிடார் மூடும் நேரம் என்று சொல்லிட்டுப் போனார்.  இங்கிருந்தே ஒரு கும்பிடுதான்.  நாம் சரியாக ஒரு மணி நேரம் இங்கே இருந்துருக்கோம்.  ஏழு மணிக்கு மூடறாங்க போல ! 
பகலில்  வந்து பார்த்து அனுபவிக்க வேண்டிய இடத்தை இப்படி ராத்ரி தரிசனம் ஆக்கிட்டோமேன்னு மனசு தவிச்சது உண்மை. 
நாற்பது படிகள் வரிசைக்கு  வந்தாச்சு.  இங்கே ஒரு எஸ்கலேட்டர் கூட  சுவத்துக்கு அந்தாண்டை வச்சுருக்காங்க.  ஆனால் நகராமல் நிக்குது. சின்னதா ஒரு சங்கிலித்தடை அதுக்கு முன்னால்.  காவலரிடம்  கேட்டுட்டு, அங்கே ரெண்டு க்ளிக்ஸ்.  விசேஷநாட்களில் (! )நகரும் போல ! ஸீனியர் சிட்டிஸன்களுக்கு உதவக்கூடாதோ ? 



போனவழியே சந்துக்கு வந்திருந்தோம். வெளியே நம்மாட்கள்  அரைவெளிச்சத்தில்  அஞ்சாறுபேர் இருந்தாங்க. சத்யநாராயணர் கோவில்!  ப்ராச்சீன் !   



 இந்த காசி மாநகரே ப்ராச்சீன்தான். உலகின் பத்துப் புராதனநகர் பட்டியலில்  காசியும் உண்டு.  ஆனால்  அவுங்க பட்டியலின்படி அஞ்சாயிரம்  ஆண்டுகள் !  அதுக்கும் முன்னாலே இருந்துருக்கணும்னு என் தோணல்.  க்ருதயுகமாக இருக்கவேணும்!

பாரதத்தின் ஏழு மோக்ஷபுரிகளில் காசிதான் நம்பர் ஒன்னு, இல்லையோ !

தொடரும்........... :-)