Friday, February 03, 2023

காசியின் 'கொத்வால்' பாபா கால்பைரவ் ! (கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 9

எதிர்பாராத விதமா சட்னு நம்ம  காசி விஸ்வநாதர் தரிசனம்  கிடைச்சதும் பார்த்தால் மணி  பதினொன்னுதான். பொடிநடையாக நாற்சந்தி நந்தித்தூண்  நோக்கி நடக்கறோம்.  இன்னும் வேறெந்தக் கோவிலுக்குப் போகலாமுன்னு கேட்ட நம்மவரிடம் ,  போனமுறை வந்தப்பப் போகாத கோவில்களுக்கே இப்ப முன்னுரிமை என்பதால்   'காலபைரவர்' என்றேன். 
இங்கே காசியில்  கோவில்கள் விஸிட் போக என்னவோ  வரிசைக்கிரமம் இருக்காம்.  இடும்பிக்குத் தனிவழி இல்லையோ !  அவளுக்கு இதெல்லாம் சரிப்படாது.  எது கிடைக்குதோ அதுன்னுதானே கிளம்பிவந்தது !  ஆட்டோ ஒன்னு கிடைச்சது.  கால்பைரவ் மந்திர்னு சொன்னதும்,  திரும்பி வர்றதுக்கும் சேர்த்து நூறு ரூ சொன்னார்.  (அட ! ) இதுவே நம்ம சிங்காரச்சென்னையா இருந்தால் தாளிச்சுருப்பாங்க இல்லை ? 


ரொம்ப தூரமில்லை. ஒன்னரை கிமீ இருக்கும். கோவில் வாசலில் கொண்டு விட்டார்.  நல்ல கூட்டமா இருக்கு !  கேமெராவுக்கு அனுமதி இல்லை என்றதால்  மனக்குறையோடு உள்ளே போனேன்.  தீபாவளி வருதுல்லே....  பாதை முழுக்க  மலர்  அலங்கார வேலை நடக்குது.

காலபைரவர்தான் காசி நகரக்காவலர்னு , நம்ம சிவன்  அவருக்கொரு வேலை கொடுத்துருக்கார். கொத்வால். தாணாக்காரர்!  இவரும்,   தான் ஒருத்தர் மட்டுமே எல்லா இடத்தையும் கவனமாப் பார்த்துக்க முடியுமான்னு, தன்னையே எட்டாகப் பிரிச்சு எட்டுத்திசைகளுக்கும் ட்யூட்டி போட்டுக் கொடுத்துருக்கார்.  ஹெட் ஆஃபீஸ் இந்தக் கோவில்தான்!  

பொதுவா பைரவர்னதும் நாய் வாஹனம்தான் நினைவுக்கு வருதில்லையா ? ஆனால் இந்த எட்டுப்பேருக்கும் வெவ்வேற வாஹனங்களும், வெவ்வேற பெயர்களும் இருக்காம்.
யானை, சிங்கம், காளை, குதிரை, நாய்,  மயில், அன்னம், கருடன் இப்படி வாஹனங்கள் !  கபால, பீஷண,ருரு, உன்மத்த, சம்ஹார, சண்ட, அசிதாங்க, க்ரோத  என்கிற பெயர்களில் பைரவர்கள்!  ஹெட் ஆஃபீஸ் கோவிலில் இருப்பவர் சம்ஹார பைரவர்.   நம்ம எதிரிகளை (! )அழிப்பதோடு, நம்ம பாவங்களையும்  அழிச்சுருவார்.

மூலவர்  சந்நிதி வாசலில் ஏகப்படக்கூட்டம். நிக்க இடமில்லை.  முன்னால் பெரிய முற்றத்தில் இருக்கும் பெரிய ஆலமரத்துக்குப் பக்கம் ப்ரமாண்டமான மேடை அமைப்பு.  இதுலே கிணறு போல ஒன்னு. நல்லவேளை....  இதுக்குக் கம்பிக்கூண்டு போட்டு வச்சுருக்காங்க.  மேடையிலும் நல்ல கூட்டம். நாமும் ஜோதியில் கலந்தோம்.  மூலவர் சந்நிதி நோக்கிக் கண் நட்டுருந்தோம். பனிரெண்டுமணிக்கு உச்சிகாலப் பூஜை. கணகணன்னு மணிகள் ஒலிக்க ஆரவாரமா ஆரத்தி !   மேடையில் ஏறி நின்னுருந்தாலும் மொய்க்கும் கூட்டத்தில் சரியாத் தெரியலை.  ஆரத்தி முடிஞ்சு, இந்தக் கூட்டம் கொஞ்சம் கலைஞ்சதும் இண்டு இடுக்கில் தரிசிச்சுக்கிட்டேன்.

அங்கிருந்த கூட்டமெல்லாம்  இப்ப மூலவருக்கு எதிர்ப்புறம் இருந்த கட்டடத்தின் வாசலை நோக்கி வந்தது.   மேடை சனம் முழுசும்  அப்படியே அபௌட் டர்ன் ஆச்சு!  பெரிய கேட் போட்டு மூடி இருந்த வாசலைத் திறந்ததும்....  பூஜாரிகள் உள்ளே போனாங்க.  திரை விலகியதும் பார்த்தால் ஸ்ரீராமர் சந்நிதி !  இங்கேயும் ஆரத்தி ஆச்சு !
பொதுவா காலை அஞ்சு மணிக்குக் கோவில் திறக்கறாங்க. பகல் ஒன்னரைக்கு மூடிட்டு, பிறகு மாலை நாலரை முதல் ஒன்பதரை வரை தரிசனம். இப்ப தீபாவளி சமயம் என்பதால் கூடுதல் நேரம் திறந்திருப்பாங்களாம்.

நாம் நின்னுருந்த மேடையின் பக்கத்தில் இருந்த ஆலமரத்துக்கு  வயது அதிகமாத்தான் இருக்கணும். தடித்தடியான விழுதுகள் பூமியில் நன்றாக ஊன்றிப் பெரிய அகலமான  மரமா நிக்குது.

இந்தக் கோவில்.... காசியில் இருக்கும் கோவில்களில் மூத்ததுன்னு சொல்றாங்க. அந்நியர்களால்   பலமுறை இடிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கட்டியெழுப்பின கோவில்களில்  இதுவும் ஒன்னு.

என்ன  கொத்வாலோ இவர்........  இடிக்க வந்தவங்களை அப்பவே போட்டுத் தள்ளியிருந்தால்    எவ்ளோ நல்லா இருந்துருக்கும், இல்லே ? 

இங்கே மட்டுமில்லாமல்  எல்லா ஊர்களிலும்  காவல் தெய்வங்கள் உண்டு இல்லையோ ?  பெயர்கள்தான் வெவ்வேறாக இருக்கும்.  ட்யூட்டி என்னவோ  ஒன்னுதான் !

நம்ம நேபாள் பயணத்தில் காத்மாண்டு தர்பார் சதுக்கத்தில்  பனிரெண்டடி உயரக் காலபைரவரைப் பார்த்த  நினைவு வந்தது.

அப்போ பார்க்காதவர்கள் இப்போ இந்தச் சுட்டியில் பார்க்கலாம் :-)

http://thulasidhalam.blogspot.com/2017/05/37.html


ஆரத்தி முடிஞ்ச கையோடு வெளியில் இருக்கும் கடைகளில் ரெண்டு காலபைரவர் முகங்களை வாங்கினேன்.  கோவிலுக்குள்ளே படம் எடுக்க  முடியலை என்பதால் வெளியில்  வந்தவுடன்  சில க்ளிக்ஸ் !  இங்கே எல்லாக் கோவில்களிலும் சங்குபுஷ்ப மாலைகளே  முன்னணியில் ! 



திரும்பி வரும் வழியில்   மேள தாளத்தோடு மஹாராஜா நடந்து வர்றார்.  பின்னால் ஒரு பத்தடியில் இளவரசரும் !  பிரார்த்தனையில் இது ஒரு வகை !.

 ( ஒரு முறை  கர்நாடகா  நஞ்சன்கூடு,  நஞ்சுண்டஸ்வாமி கோவிலில் பஞ்சபாண்டவர்களைப் பார்த்தது நினைவுக்கு வந்தது ! )



நம்ம ஆட்டோக்காரர், 'எங்கே இறக்கிவிட? 'ன்னு கேட்டார்.  

                   ரெண்டே  சொற்கள். நாட்கோட் !

தொடரும்.......... :-)   

(பதிவில்   ஆண்டவர் அளித்த படங்களையும்  சேர்த்திருக்கின்றேன்.  நன்றி ! )

10 comments:

said...

காலபைரவர் பற்றி படிக்கும்போது பின்னணியில் பாலமுரளி குரலில் காலபைரவாஷ்டகம் மனதில் ஒலிக்கிறது! காசி விஸ்வநாதர் கோவிலுக்குதானே கங்கையிலிருந்தே நேராய்ச செல்லும்படி இப்போது பாதை அமைக்கப்பட்டுள்ளது?  பார்த்தீர்களா?

said...

அருமை சிறப்பு நன்றி

said...

அட! திருவனந்தபுரம் அனந்து கோயில்ல ராஜா மாதி இங்கயுமா ஆனால் தெருவுல?!!
நிஜமாகவே ராஜா குடும்பத்தாரா?

திருப்பத்தூர் - பிள்ளையார்ப்பட்டி பக்கத்துல நிறைய பைரவர் கோயில்கள் இருக்கே...ஆதிபைரவர், காலபைரவர் அங்க இருக்காங்களே பரிகாரத்தலங்கள்னு செம பிஸினஸ்...

கீதா

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

காசி பயணம் விடு பட்டவை தொடர்கிறோம்.

said...

காலபைரவர் ..தரிசனம் மீண்டும் ஒரு முறை ..

said...

வாங்க ஸ்ரீராம்,

பாலமுரளி.....அருமை!

கங்கைக்கரையில் இருந்து படிகளில் வரலாம். விவரம் நம்ம பதிவுகளில் வரும்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கீதா,

நிஜமான ராஜாவா ? ஹாஹா... பிரார்த்தனையில் இது ஒரு வகை. இன்னும் கொஞ்சம் நகைநட்டு க்ரீடம், ஒட்டியாணம் எல்லாம் தங்கத்தில் கோபால் வாங்கிக்கொடுத்தார்ன்னா.... நானும் மஹாராணி வேஷத்தில் கோவிலுக்கு வரேன்னு வேண்டிக்கப்போறேன் !

வைரவர் தான் நம்ம பைரவர். நாடு முழுக்க பைரவர் கோவில்கள் உள்ளன. நேபாளத்தில் கூட !

சாமியே இப்பெல்லாம் நல்ல பிஸினஸ்தான்ப்பா !

said...

வாங்க மாதேவி,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

தொடர்வருகைக்கு மீண்டும் நன்றி.

said...

வாங்க அனுப்ரேம்,

நல்லதுப்பா. சோழியம்மன் கோவில் போயிருப்பீங்கன்னு நினைக்கிறேன். நாம் போகலை. அடுத்த பயணத்துக்காக விட்டு வச்சுருக்கேன் :-)