Friday, August 31, 2018

ஜின்னா ஒரு நகைப் பைத்தியம் ! ... (பயணத்தொடர், பகுதி 3 )

பயணங்களில் குறிப்பா சென்னையில் இருக்கும் நாட்களுக்கு  மட்டும் சிலபல சம்ப்ரதாயச் சடங்குகள் இருக்குன்றதால் தொடர்ந்து வந்த சில நாட்களில்  உறவினர் வீடு,  தோழிகள் வீடு, எடுத்த துணிகளைத் தைச்சு வாங்க தையற்கடைக்குப் போய் வர்றது, இடைக்கிடையே ஒன்னு ரெண்டு ஷாப்பிங் இப்படியே போய்க்கிட்டு இருந்துச்சு. கோவில்களையும் விடமுடியாதுன்னு  அங்கேயும்தான்....

மறுநாள் வண்டி கொண்டு வந்தவர் ஜின்னா. இவரும் ஓனர் ட்ரைவர்தான்.  இவுங்களே நாலைஞ்சு பேர் சேர்ந்து தனி பிஸினெஸ்ஸா ஆரம்பிச்சுருக்காங்க போல. நம்ம சீனிவாசன், இப்போ ஒரு தொழிலதிபரிடம் முழுநேர ட்ரைவரா வேலைக்குச் சேர்ந்துட்டார்.   ஆனாலும் நாம்  தென்தமிழ்நாடு போகும்போது, அவர் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வர்றதாகவும், அதுவரை உள்ளூருக்கு சதீஷிடம் சொன்னாப் போதுமுன்னார்.  கார் சார்ஜும் கொஞ்சம் அதிகமாக இருந்ததா எங்களுக்குத் தோணல். எல்லாத்துக்கும் ஜிஎஸ்டியைக் காரணம் காமிச்சுடறாங்க... இப்பெல்லாம்.

 'நாம் நிறைய நாள் இருக்கப்போறோம். அதனால் இங்கே போகணும், அங்கே போகணுமுன்னு ஓடிக்கிட்டே இருக்காதே. நிதானமா எல்லா இடத்துக்கும் போகலாம், எல்லோரையும் பார்க்கலாம்' ன்னு  எனக்குக் காதில் உபதேசக் கச்சேரி வச்சுக்கிட்டே இருக்கார் 'நம்மவர்'.

அதுக்காக, நாம் போற இடத்துக்குப் பக்கத்துலே, போகவேண்டிய வீடு இருந்தாப் போகாம வரமுடியுதா?  அதுக்குன்னு தனியாக் கிளம்பிப் போகணுமா?  ஙே..............

அடையார் அநந்தபதுமன் கோவிலுக்குப் போறோம். 'இடம் தெரியுமா'ன்னு கேட்டதுக்கு நல்லாவே தெரியுமுன்னு  கொண்டுபோய் விட்டார் ஜின்னா! என்னுடைய இஷ்டக்கோவில் இது.  ஒரு தள்ளுமுள்ளோ, ஒரு ஜருகோ, ஒரு நகருங்கன்ற சத்தமோ இல்லாம எவ்ளோ நேரமானாலும்' கிடந்தவனை' தரிசிக்கலாம். கால் வலிகூட பிரச்சனை இல்லை. சந்நிதிக்கு எதிரே  போட்டுருக்கும்  கொலுப்படி மேடை அமைப்பில் உக்கார்ந்துக்கிட்டு, மூணு வாசல் வழியாவும் முகம், இடை, பாத தரிசனங்கள்!  மனசு போதுமுன்னு சொல்லும்வரை.....
கோவில் ரொம்ப நேர்த்தியா இருக்கும்.  பெருமாளுக்கு இங்கே குறைவொன்றுமில்லை!  கோவில் வருமானம் கோவிலுக்கே! (அறநிலையத்துறை கொள்ளையடித்தது போக!)  சாமிக் காசை தின்னும் பேராசை இல்லாத நிர்வாகம் கிடைச்சது பெருமாள் செஞ்ச புண்ணியம்.

பக்கத்துப் பேட்டையில் இருக்கும் தோழி வீட்டுக்குப் போயிட்டுப்போகலாமுன்னு இவரே சொன்னார்! ம்ம்ம்ம்  ஆகட்டும் :-)

'நம்மவரின் செல்ஃபோன் உடைஞ்சு போனதால்... தோழிக்கு  நம் வரவைச் சொல்ல முடியாமல் போச்சு.  ஆனாலும் எப்போதும் போல முகமும் மனமும் மலர அன்பான வரவேற்பு! எங்க  ரெண்டுபேர் வழியிலேயும் இவுங்க சொந்தம்!

ஆர்கானிக் மாம்பழம் ஆளுக்கொன்னு கிடைச்சது அங்கே!  இன்னும் கொஞ்சம் பழுக்கணுமாம்.  அறைக்குத் திரும்பும் வழியில் லோட்டஸாண்டை இருக்கும் பழமுதிர்ச்சோலைக்கு ஒரு விஸிட். மாம்பழமா வரிசை வச்சுருக்கு!   எதை விட? எதை வாங்க?  எல்லாத்துலெயும் ஒவ்வொன்னு!  சரியா?


காய்கறி வகைகளைப் பார்த்ததும் அடுப்பில்லையேன்னு  இருந்தது உண்மை:-) ஒத்தைக் கண்ணால் ஒரே க்ளிக்ஸ்தான்! எல்லாம் நாட்டுக் காய்கள்ப்பா !

பயணத்துக்கு மூட்டைமுடிச்சுக் கட்டும்போது  ஒரு கத்தியும் நாலைஞ்சு  ப்ளாஸ்டிக் தட்டுகளையும் கவனமா எடுத்து வச்சுக்குவார் 'நம்மவர்'.  எதுக்கு  இந்தத் தட்டெல்லாமுன்னு  கத்தினாலும், கடைசியில்  அதெல்லாம் நல்லாவே பயனாச்சுன்னு சொல்லத்தான் வேணும்.  பயணத்துக்குன்னே ஒரு மூடி போட்ட கத்தி வாங்கி வச்சுருக்கேன். பழம் நறுக்கணுமா இல்லையா?   ஆனால் பயணத்தின் போது  கத்தியை மறக்காம செக்கின் பேகில் வச்சுடணும்.  நினைவிருக்கட்டும்!

பகல் லஞ்சாகப் பழங்களை முடிச்சுக்கிட்டு,  இன்னொரு நண்பர் வீட்டுக்கு முதல்முறையாகப் போறோம். ஏற்கெனவே சில பயணங்களில் போகணுமுன்னு நினைச்சு விடுபட்டுப் போயிருந்தது.  மச்சினர் வீடு இதே ஏரியாதான். டு இன் ஒன் :-)
குழந்தை வெண்பாவுக்கு வேத்துமுகமே இல்லை!  செல்லம், பட்டு!  கிளம்பும்போதுதான் முகத்தில் சின்னதா ஒரு அழுகை, வரலாமா வேணாமான்னு எட்டிப் பார்க்குது.... ஆச்சி, ஆச்சின்னு  ஒரே அன்பு! நொடிக்கு நொடி மாறும் முகபாவனைகள்!  நவரச நாயகிப்பா !!  குழந்தைக்குச் சுத்திப்போடணும். கண் திருஷ்டி பொல்லாதது !


மச்சினர் வீட்டுக்குப் போனால்..... அங்கேயும் ஒரு ஜின்னா ! பையன்னு நினைச்சு வாங்குனது பொண்ணாப் போயிருக்கு :-) சரியான நகைப் பைத்தியம். காதுக்கம்மலில் இருக்கும் கல்லை எப்படியாவது  எடுத்துறணுமாம்!
துணிக்கடை விவரம் சொல்லி, மறுநாள்  மகளை (மச்சினர் மகளை) அவள் வேலை செய்யும் ஆஃபீஸில் வந்து கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொன்னேன்.
மறுநாள்  காலையில் ஒன்பதரைக்கு ஆரம்பிச்ச சுத்தல் ராத்ரி பத்துக்கு முடிஞ்சது.  ஜி என் செட்டி சாலையில்  இருக்கும் ஷாந்திநாத் மந்திர்லே ஆரம்பிச்சோம்.  எனக்குக் கண்ணாடி வாங்கறது, ஸ்ரீராகவேந்திரா கோவில், டெய்லர் கடை, நம்மவருக்குப் புது செல்ஃபோன், அதுக்கு கவர் வாங்கிக்கத் தனியா இன்னொரு கடை,  நேரு நகர் தோழி வீடு ன்னு.....
தோழியின் கணவருக்குக் கண்ணில் ஒரு பிரச்சனை....  'நம்மவர்' கண் கோளாறில் ரொம்பவே அடிபட்டுப் போயிட்டதால்... யாருக்காவது கண்ணில் குழப்பமுன்னா பதறிடுவார்!  அதிலும் நண்பருக்குன்னா?  போய்ப் பார்த்து விசாரிக்கணுமுன்னு போனால், சாயங்காலம்  காஃபி வரை அங்கேயே!
மகளைப் பிக்கப் பண்ணப்போனால் பக்கத்துலேயே  ஐயப்பன் கோவில் இருக்கு. இதுவரை பார்க்கலையேன்னு  அங்கே எட்டிப் பார்த்தோம். மொட்டை மாடியில் கோவில்!  கேரள ஸ்டைலில் சின்னதாக் கட்டி இருக்காங்க. கீழே இருந்துவர  சந்நிதிக்கு முன்னால்  ஒரு படிக்கட்டு வரிசை. பதினெட்டு படிகள்.  கீழே இதுக்கு ஒரு கேட்  போட்டு மூடி வச்சுருந்தாங்க. விசேஷகாலத்துலே திறப்பாங்க போல!
Pic. from google. Thanks.

 பொதுவா சனம் ஏறிவர பக்கவாட்டுலே படிகள் இருக்கு.  படம் எடுக்கக்கூடாதுன்னு  போர்டு இருந்ததால்  வண்டிக்குத் திரும்பிப்போனப்ப, அங்கிருந்து கட்டடத்தை மட்டும் எடுத்தேன்.
மகளைப் பிக்கப் பண்ணிட்டுப் பாண்டிபஸார் வந்தால் ரெண்டுநாளைக்கு முன்னால் பார்த்து வச்ச ஜிமிக்கிகம்மலைக் காணோம்.  வந்த அஞ்சாறு செட்டும் வித்துப்போச்சாம்.  பாவம் பொண்ணு.... ஆசைப்பட்டாளேன்னு பார்த்தால்....  ப்ச்.................

வேறொரு செட் பிடிச்சுருக்குன்னு வாங்கியாச்.  ஆகிவந்த கீதா கஃபேயில்  தோசை வகையறாக்களை முடிச்சுட்டு வீட்டுலே கொண்டுபோய் விட்டுட்டு வந்தோம்.  அவுங்க  பேட்டையில் இப்போ  எல்லாவிதமான கடைகளும் வந்து அதுவே ஒரு குட்டிச் சென்னையா ஆனதால் இங்கெல்லாம் வர்றதே இல்லையாம்.  போதாததுக்கு ஒரு பெரிய மால் வேற!   வேளச்சேரி த க்ரேட்  !
சிவபூஷணம் அம்மா,  நாகலாபுரத்து நாவல்ஸ் விக்கறாங்க !
 இளநியை ஆட்டோக்காரர்  பாலசுப்ரமணியம், வெட்டித் தர்றாரேன்னு நினைச்சால்.... கடைமுதலாளி சாவித்தியம்மாவின்  மகனாம் இவர்!
அடுத்து வந்த ரெண்டுநாட்களும்.... இளநீர் குடிக்கறதென்ன,  நாவல்பழங்கள் வாங்கித் தின்னுறதென்ன,  விதவிதமான மாம்பழங்களைக் கெமெராக் கண்ணால் தின்னுறதென்னன்னெ ஓடிப்போயிருச்சு. இதுலே ஒருநாள் சாயங்காலம்  மட்டும் சாலிக்ராமம் போய் வந்தோம். எப்பவும் நம்ம சாரி மாமா (பூனா மாமா) வீட்டுக்கு வழக்கமாப் போறதுதான். அப்படியே நம்ம காவேரி விநாயகருக்கு ஒரு கும்பிடு. இந்த ரெண்டும் இல்லாம இன்னொரு வீடும் அங்கே எனக்கு ஆப்ட்ருக்கு!  ஒரு தம்பி கிடைச்சுருக்கார்.  தம்பி பையன் மூலமாகவே தம்பி கிடைச்சுருக்கார்னு சொல்லலாம்.
நம்ம ஸ்ரீதர்( விஷ்ணு சகஸ்ரநாமம் முழுசும்  மனப்பாடமாச் சொல்வார்! ) இங்கே எங்கூருக்குப் படிக்க வந்தது முதல் அவர் குடும்பம், நம்ம குடும்பமாத்தான்  இருக்கு :-) படிப்பு முடிஞ்சு, போன வருசம் நடந்த மகள் கல்யாணத்துக்கு  வந்த கையோடு, துபாய்லே வேலை கிடைச்சுப் போயிட்டார்.

இப்ப  ஒருவாரம் லீவுலே  சென்னைக்கு வந்துருக்கேன்னு சேதி அனுப்பினார். ரெண்டுநாளில் கிளம்பணுமாம். அதுக்குள்ளே போய் பார்த்துட்டு வரணுமுன்னுதான் போனது.
திருப்பதி மொட்டை, இறைவனிடம் கையேந்தும் ஸ்டைல் பாருங்க.  தேசத்துக்கேத்த வேசம் :-)

மாமா பேரனுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கு. செப்டம்பர் கல்யாணம். நாம் இருக்க மாட்டோம். அதுக்காக, நமக்கு  வச்சுக் கொடுக்கவேண்டியதைக் கொடுக்காமல் இருக்க முடியுமோ?  எனக்கொரு புடவை, இவருக்கொரு ராம்ராஜ் வேஷ்டி. மாமா,மாமி இருந்த காலத்திலும் சரி,  வீட்டு விசேஷங்களிலும், கோவில் விசேஷங்களிலும் நமக்குச் சேர வேண்டியதை எடுத்து வச்சு, எத்தனை வருசம் கழிச்சுப் போனாலும் கொடுக்கும் பழக்கம் இன்னும் குடும்பத்தில் பாக்கி இருக்கு பாருங்க !
நம்ம காவேரி விநாயகர், மாமா சென்னையில் வீடு கட்டிப் போனது முதல் கூடவே இருக்கார்.  மாமாதான் கோவில் ட்ரஸ்டி அப்போ! இப்ப பிள்ளையும் ஒரு அங்கம்.   குட்டியூண்டு புள்ளையார் கோவிலா இருந்தது மெல்ல மெல்ல வளர்ந்து ஏகப்பட்ட சந்நிதிகளோட இருக்கு.   தற்சமயம் கோவிலில் சந்நிதிகளையும், ராஜ கோபுரத்தையும் விட்டுட்டு, மத்த இடங்களை முழுசுமா இடிச்சுட்டுத் திரும்பக் கட்டி எழுப்பும் வேலை நடக்குது.  மழைகாலத்தில் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து பாழாக்கிடுதுன்னு, இப்பத் தரையை அஞ்சடிக்கு  உசத்திக் கட்டறாங்க.


அடுத்தமுறை போகும்போது  புள்ளையார்அட்டகாசமா இருப்பார்! இருக்கணும்!
கோவிலை எட்டிப் பார்த்துட்டு, ஸ்ரீதர் வீட்டுக்குப் போய் திரும்பறதுக்குள்ளே  ரேணு (மாமாவின் மருமகள்)என் ஃபேவரிட்டான  அரிசி உப்புமா பண்ணி வச்சுட்டாங்க!   நமக்கு ஸ்ரீதர் வீட்டுலேயெ ராத்ரி டிஃபன் ஆச்சு.  அசோகா ஹல்வா, தேங்காய் ஸேவை,  வெஜிடபுள் போண்டா, தச்சு மம்மு! (விஸ்வநாத் கவனிக்க!)

அதுக்காக அ. உ வை விடமுடியுமோ? பார்ஸல் ப்ளீஸ்!  தொட்டுக்க ஆவக்காய் ஊறுகாய். மாமி காலத்துலே அ.உ. வுடன்  மாங்காய் இனிப்பு ஊறுகாய்தான் எப்பவும்.
நல்லவேளை, லோட்டஸில் நம்ம அறையில் ஃப்ரிட்ஜ் இருக்கு :-) மறுநாள் டின்னர் சூப்பர்!  உடனே பாபுவுக்கு சேதி அனுப்பினேன்....

UN 21ST, 5:06AM
Babu,  that அரிசி உப்புமா  &  ஆவக்காய்  superb !!!   It was our dinner  today!!!
ரேணுவுக்கு  மாமியோட கைப் பக்குவம் 95% வந்தாச்சு😊😊😊😊

தொடரும்..... :-)


Wednesday, August 29, 2018

நைராவின் அம்மம்மா நம் தோழி என்று கூறிக்கொண்டு... (பயணத்தொடர், பகுதி 2 )

ரொம்ப லேட்டாத் தூங்கப்போனதால் காலை எட்டேகாலுக்குத்தான் விழிப்பு.  நிதானமாக் குளிச்சு முடிச்சுக் கீழே ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனப்ப மணி ஒன்பதேகால்.  லோட்டஸில் சௌத், நார்த் இந்திய வகைகள்னும், கூடவே வெள்ளைக்காரர் வகைன்னு  ப்ரெட், ம்யூஸ்லி வகைகளும், கூடவே பழங்களும், வேகவைச்ச முட்டைகளும் இருக்கும். இதெல்லாம் போதாதுன்னு ஒரு இனிப்பும் உண்டு.

தோசையோ, ஆம்லெட்டோ வேணுமுன்னால் சொன்னவுடன் செஞ்சு தருவாங்க. இத்தனை இருந்தாலும் எனக்கென்னவோ ரெண்டு வடையும் ஒரு இட்லியும்தான்.  சில சமயம் ரெண்டு இட்லி ஒரு வடையாவும் இருக்கும்:-) இதுக்கு ஒரு மூணு வகைச் சட்னிகளும்!  அப்புறம் இட்லி மொளகாய்ப்பொடியும், நெய்யும் வைக்க ஆரம்பிச்சாங்க :-)
ஒரு துரும்பையும் நகர்த்தாம இப்படி சாப்பிடக் கசக்குதா?  முதல் நாளை இனிப்போடு ஆரம்பிக்கலாமேன்னு  கொஞ்சம் கேஸரியும் எடுத்துக்கிட்டேன். சாப்பிட்டு முடிச்சதும்,  நானும் இவரும் ஒன்னுபோல நினைச்சோம்.....  வண்டி பதினொன்னரைக்குச் சொல்லி இருக்கு. இப்ப மணி பத்துதான்.  கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாமா? சனிக்கிழமை வேற!

ஆட்டோ பிடிச்சு வெங்கடநாராயணா ரோடு, திருப்பதி தேவஸ்தான வாசலில் இறங்கி, உள்ளே போய் பெருமாளை ஸேவிச்சுக்கிட்டோம். அவ்வளவாக் கூட்டமில்லை.  சின்னதா ஒரு சரம் துளசிமாலை, எதோ போனாப் போகட்டும்றதுபோல் பெருமாளுக்குச் சார்த்தி இருக்கு.  சில வருசங்களுக்கு முன்னேயே 'துளசியைக் கொண்டுவர வேண்டாம்'னு அறிவிப்பு பார்த்துருக்கேன். ப்ச்.....

முந்திமாதிரி தீபாராத்தி முடிஞ்சதும்,  பட்டர் தீபத்தை நம்ம முன்னால் நீட்டறது கூட இல்லை.... ஓரமா வச்சுடறார். நகர்ந்து போகும் வரிசை,   அப்படியே போகும்போது தீபத்தைக் கையால் தொட்டு(!!!) கண்ணில் ஒற்றிக்கலாம். ஆச்சு. பின்வாசலில் வெளியேறினால், கண் முன் ரெங்கன். தேவியரும், ஆண்டாளும், ஆஞ்சியும் இன்னும் சில உற்சவமூர்த்திகளோடு  கிடப்பான்.  ஒரு கும்பிடு போட்டுட்டு நம் வலப்பக்கம் போனால் தட்டுலே கொஞ்சம் துளசி, ஒரு பெரிய தூக்குலே டயமண்ட் கல்கண்டுன்னு இருக்கும்.  எப்பவாவது இங்கே துளசித் தீர்த்தமும் கிடைக்கும்.  இதுக்கு அடுத்துள்ள கவுன்ட்டரில் லட்டு விற்பனை.

முந்தியெல்லாம் மாசத்தின் முதல் சனிக்கிழமைகளில் மட்டுமேன்னு இருந்தது இப்ப எல்லா சனிகளிலுமாம்!  விற்பனை பயங்கர சூடு பிடிச்சுருக்கு போல!  பணம் பண்ணப் பெருமாளுக்குச் சொல்லியா கொடுக்கணும்?  வெள்ளிக்கிழமையே ஒரு பெரிய  ட்ரக்கில்  திருமலையில் இருந்து  லட்டுகள் வந்து இறங்கிடுதாமே!  சொந்த பந்ததுக்குக் கொடுக்கலாமேன்னு  நாலு லட்டு வாங்கினோம்.
வெளியே போனதும்  கோவில் வாசலாண்டைக் கொஞ்சம் தள்ளி இருக்கும் பூக்கடைகளுக்குப் போனா, ' யம்மா, எப்பம்மா வந்தே?' பூக்காரம்மா சாமுண்டியின்  விசாரிப்பு.  ஒரு பதினாறு வருசப் பழக்கம். சின்னப்பொண்ணா ஒரு கைக்குழந்தையோடு இருந்தாங்க, அப்போ. பையன் இப்போ காலேஜ் சேர்ந்துருக்கானாம்.  'அடுத்ததடவை வரும்போது ஒரு வாட்ச் வாங்கியாந்து கொடும்மா'  சரின்னேன்.  முரளி எங்கேன்னதுக்கு,  கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டு இருந்தவர் ஓடி வந்தார்.  ஆள் இளைப்புதான்.  சாமுண்டி நல்ல உயரம், அதுக்கேத்த உடம்பும். சின்ன சொர்ணாக்கா!  ஆனா  முகத்துலே நல்ல களை.  அதென்னவோ வருசாவருசம் திருப்பதிக்குப்போய் மொட்டை போட்டுக்கிட்டு வந்துருவாங்க. இங்கே படியளக்கும் பெருமாளுக்கு அங்கே போய் நன்றிக் கடன் !  இப்ப முடி வளர்ந்துருக்கேன்னால்.... புரட்டாசிக்கு திருப்பதி பயணம் இருக்காம்!
சாமிக்கு என்ன பூன்னு கேட்டு ரோஜாச் சரத்தை எடுக்கும்போது, 'சாமிக்கு  வேணாம். மல்லி போதும், அது எனக்கு'ன்னேன். சட்னு மல்லிச்சரத்தை நறுக்கிக் கொடுத்து, பூவச்சுக்கப் 'பின்'  வேணுமான்னு  கேட்டாங்க. அதெல்லாம் ரெடியாத்தான் வந்துருக்கேன்னேன் :-) இந்தியப் பயணம் அதுவும் சென்னைன்னா.... பூ இல்லாமல் இருக்க முடியுமோ? அங்கே வச்சுக்கிட்டால்தான் உண்டு! நியூஸியில் பூச்சரத்துக்கு எங்கே போவேன்?  காசு கொடுத்தால் வாங்கிக்கலை.  "ஐய்ய....  ச்சும்மாப் போம்மா...."

குளிரில் இருந்து வெயிலுக்குப் போனதும் பாதம் இளைக்குது போல....  சிங்கை ஏர்ப்போர்ட்டில் நடக்கும்போதே  வலக்கால் செருப்பு காலில் தங்காம சட்னு நகர்ந்து காலைவிட்டு முன்னால் போனது, இப்பக் கழண்டே போகுது. அப்பப்ப நின்னு காலை நல்லாத் திணிச்சுக்க வேண்டி இருக்கு. என்ன ஒரு சல்யம்? ஏன் இடது பாதம் இளைக்கலை?  ஙே....

லோட்டஸ் போகும் வழியில்  பாண்டி பஸாரில் செருப்புக் கடைக்குப் போயிட்டுப் போகலாம். இன்னைக்கு  ரம்ஸானுக்குக் கடைகள் திறந்துருக்குமான்னு தெரியலையே.....

போன நேரம், பாடா திறக்கலை. மோச்சின்னு ஒரு கடை திறந்துருந்துச்சு. அங்கே  செருப்பொன்னு 'போட்டுப் பார்த்து வாங்கிக்கிட்டு' லோட்டஸ் போனோம்.

பதினொன்னரைக்கு  வண்டி வரும்.  புதுசா ஒரு குழப்பம் என்னன்னா....  நம்ம டிரைவர் சீனிவாசன், இப்போ  ஸ்ரீராம் ட்ராவல்ஸ்லே இல்லையாம். நேத்து நம்மை இங்கே கொண்டுவந்து விடும்போது சொல்லி, 'இன்னொரு  வண்டிக்கு ஏற்பாடு செஞ்சாச்சு, இந்த நம்பருக்குப் ஃபோன் பண்ணி நேரம் சொல்லிருங்க'ன்னார்.

சொன்ன நேரத்துக்கு  'சதீஷ்' வந்தார். ஓனர் ட்ரைவர்.  தோழி வீட்டுக்குப் போறோம். என்ன வழின்னு கூகுள் மேப் பார்த்துச் சொல்லிக்கிட்டே வந்தார் 'நம்மவர்'!  இதிலும் நம்ம சீனிவாசன்  இல்லாதது கொஞ்சம் கஷ்டமாத்தான் போயிருக்கு.  அவருக்கு  எந்த இடமுன்னு பெயரைச் சொன்னால் போதும். 'டான்' னு கொண்டுபோய் சேர்த்துருவார். நம்ம  ஸர்க்யூட் எல்லாம் அவருக்கு அத்துப்படி!  மாமா வீடு, மச்சினர் வீடு, நாத்தனார் வீடு,  நேருநகர் தோழி, கோயம்பேடு  தோழி  இப்படியே சொல்லிச்  சொல்லி எனக்கு  அவுங்களோட  ஃபிஸிக்கல் அட்ரஸே மறந்தும் போச்சு!

தோழி சந்திப்புக்கு ஒதுக்கின நேரத்துக்கு முன்னாலேயே அங்கே போயிட்டோம். ஆனால் சின்னக் குழந்தை இருக்கும் வீடு. அவுங்க சௌகரியத்துக்குத் தடங்கலா,  முன்னாலே மூக்கை நீட்டவேண்டாமேன்னு  தோணுச்சு எனக்கு. அதனால் அந்த ஏரியாவில் ஒரு சின்ன ரவுண்டுன்னு போயிட்டு வரலாமுன்னு எங்கியோ சின்னத் தெருக்களில் போனதுக்கு ஒரு   துணிக் கடையை வேடிக்கை பார்க்கன்னு போய் ஒரு ஸல்வார் கமீஸ்  துணி வாங்கிக்கிட்டு, வாசலில் இளநீர் வாங்கி  மூணுபேருமாக் குடிச்சுட்டுத் தோழி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

பிறந்து  ஒரு மாசமே ஆன புத்தம் புது பூ!  இதுக்குள்ளே மற்ற தோழியரும் ஒவ்வொருத்தரா வந்து சேர்ந்தாங்க.  எல்லோரும் நம்ம மரத்தடி கால நட்பூக்கள்.  இத்தனை வருசங்களில் தோழியர் மட்டுமில்லாம குடும்ப நண்பர்களாவே ஆகிப்போனதால் யாரும் எந்த  வித்தியாசமும் இல்லாமப் பேச்சும் சிரிப்புமா போய்க்கிட்டு இருக்கு!
புதுக்குழந்தைதான் சத்தம் கேட்டு மிரண்டுபோயிட்டாளோன்னு.....   ஹிஹி....
தோழியின் மகளின் குழந்தை நைரா !  கொள்ளை அழகு!  மகளும் மருமகனும் வந்து எல்லோருக்கும் 'ஹை' சொன்னாங்க.  மருமகனை நானும் கோபாலும் இப்பத்தான் முதல்முறையாப் பார்க்கிறோம். கல்யாணத்துக்கு வரலை பாருங்க...  மகளும் மகனும் நமக்கு ஏற்கெனவே பழக்கமானவங்கதான் :-)
திருப்பதி லட்டு எடுத்து பிரஸாதமாத் தரும்போது முதலில் நீண்ட கை எதுன்னு சொல்லுங்க பார்ப்போம்!  நம்ம நாத்திகப்பேரொளி, பெரியார் சீடின்னு சொன்னா நம்புங்க :-)
 சுவையான சாப்பாடும், பேச்சும் சிரிப்புமா நேரம் போனதே தெரியலை.  நாலரைமணி சுமாருக்குக் கிளம்பலாமுன்னு ஒவ்வொருத்தரா 'ஓலா, ஊபர்'னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. இதுலே அமெரிக்காவில் இருந்து வந்துருந்த தோழி, அன்றைக்கு இரவு நாடு திரும்பறாங்க. பேக்கிங் இன்னும் முழுசுமா முடியலைன்னு ....  அடப்பாவமே..... சட்னு கிளம்புங்கன்னோம்.

கிளம்பறதுக்கு முன்னே  க்ளிக்ஸ் ஆச்சு :-)
கனிச்செல்லம் எங்களையெல்லாம் கண்டுக்கவே இல்லை. அவர் பாட்டுக்கு விளையாடிக்கிட்டு இருந்தார்.
நாங்களும் கிளம்பினோம்.  நேரா அறைக்கு வந்து கொஞ்சநேரம் ஓய்வெடுத்துக்கிட்டு வெளியே  போகலாமுன்னு நினைப்பு.  அறைக்கு வந்ததும்  பயணக் களைப்பு இருக்கறதா நம்மவர் சொன்னாரேன்னு....   திட்டத்தை மாத்தியாச்சு.

 நாளைக்கு  எத்தனை மணிக்கு  வண்டி வேணுங்கறதை அப்புறமாச் சொல்றோமுன்னு , சதீஷை அனுப்பிட்டு இவர் வந்து படுத்தவர், தூங்கிட்டார்.

லோட்டஸில் வைஃபை நல்லாவே வேலை செய்யுது :-)

ஏழரை மணி போல ராச்சாப்பாட்டுக்குன்னு  ஒரு ஆட்டோ புடிச்சு, நம்ம பாண்டிபஸார் கீதா கஃபேக்குப் போய்  ஒரு செட் பூரியும், ஒரு தோசையுமா  முடிச்சதும்,  ரெண்டு கடை தள்ளிப்போய்  டிஸ்ப்ளேயில் இருந்த  ஸல்வார் கமீஸ் செட்டைப் பார்த்துட்டு உள்ளே போனேன்.
போனமுறை இங்கே வாங்கி இருப்பதால்  துணிகளின் தரம் பற்றி பிரச்சனை இல்லை.  நல்லி, குமரன், போத்தீஸ் வகையறாக்களுக்கு இந்தப் பயணத்திலும்  போகப்போறதில்லை என்ற எண்ணம் இருந்தது.
இது வட இந்தியாவில் இருந்து  வரவழைச்சு விற்கும் வட இந்தியர் நடத்தும் கடைதான். (சென்னையில் முக்கால்வாசி வியாபாரம் நார்த்தீஸ்தானே? ) ஒன்னுக்கு மூணா  இப்போ அண்ணந்தம்பிகள் மூணு பேர் அடுத்தடுத்துக் கடை வச்சுருக்காங்களாமே! ரெண்டு கடைகளில் பார்த்து நாலுசெட் துணிகள் வாங்கினதோடு அறைக்குத் திரும்பியாச்சு.

இன்றையப் பொழுது இப்படிப்போச்சு!

தொடரும்.......:-)

Monday, August 27, 2018

வந்துட்டேன்........

வந்துட்டேன்........

அறுபத்தியேழு நாட்கள்!  பயணத்துக்குள் பயணமாய் நாலு  சின்னப் பயணங்கள். நாலு மாநிலங்கள் கூடவே ஒரு வெளிநாடு :-)
சுத்தி சுத்தி எனக்கே களைப்பா இருக்கு!  இங்கே வந்தபின்னும் கூட தினம் காலையில் விழிப்பு வந்ததும் கண்ணைத் திறக்குமுன் எந்த ஊரில் இருக்கேன் னு குழப்பம்தான். கனவிலும்கூட என்ன எங்கேன்னு தெரியாத கோவில்களுக்குப் போய்க்கிட்டே இருக்கேன்.....  அடராமா..... இது என்ன...  எனக்கு வந்த சோதனை!

வழக்கம்போல் விஸ்தரிச்சு எழுத வேணாமுன்னு தோணுது....    இப்படிச் சொல்லிட்டு எழுத ஆரம்பிக்கும்போது  தானே விஸ்தாரமா வரும் வாய்ப்பும் உண்டு கேட்டோ :-)

இதுவரை போகாத சில இடங்களுக்குப் போய் வரும் வாய்ப்பு கிடைச்சது. அவைகளைப் பற்றிக் கொஞ்சம் அதிகமாயும், உள்ளூர் சமாச்சாரங்களைக் கொஞ்சம் குறைவாகவும் எழுதணும்!

சென்னையில் தங்கிய நாட்களில் பெரும்பாலும் குடும்பத்துடன்தான் நேரம் போனது என்றாலும்  சிலபல நண்பர்களையும்  சந்தித்தோம். உண்மையில் அவர்கள் வந்து நம்மை சந்திச்சாங்கதான்.  மனதுக்கு  மிக நெருக்கமாய் உணர்ந்த நட்புகளை சந்திச்சது  மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!   அதுக்கே என் மனம் நிறைந்த நன்றிகளை இங்கே சொல்லிக்கறேன்.

எதிர்பாராத விதமா, ஒரு கல்யாணத்தில் கலந்துக்க முடியாமல் பயணம் அமைஞ்சு போச்சு. அதுக்காக விடமுடியுமா?  கல்யாணப் பொண்ணுக்கு நலுங்கு வைக்கும் சடங்கில் கலந்து கொண்டோம்.  மனநிறைவு !

பொறந்து முப்பதே நாளான ஒரு குட்டிப் பாப்பாவைப் பார்த்துட்டுப் பாப்பாவின் பாட்டி வீட்டில் விருந்து சாப்பிட்டு வந்தது கூடுதல் மகிழ்ச்சி!

அதிக நாட்கள் நம்ம ரஜ்ஜுவைக் கேட்டரியில் விடவேண்டி வந்தது ஒரு கவலைன்னா....  கேட்டரி ஓனர் லிஸா,  பிஸினஸை இன்னொருத்தருக்கு  வித்துட்டாங்கன்னது  கூடுதல் கவலை.  ஆகஸ்ட் மாசம் முதல் வாரம் வரை ( புது ஓனருக்கு  ஒரு மாசம் பயிற்சி தரும்வரை) அவுங்க இருப்பங்களாம்.  அதுக்குப்பிறகு  ரெண்டு வாரம்தான். ரஜ்ஜு சமாளிச்சுக்குவான்னு  தைரியம் கொடுத்தாங்க.

மொதநாள் ராத்திரி இவர் பொட்டிகளை அடுக்கிக்கிட்டு இருந்ததைப் பார்த்து, இவனுக்கு சமாச்சாரம் தெரிஞ்சு போச்சு. பொழுது விடிஞ்சால் புடிச்சுக்கிட்டுப் போயிருவாங்க, இப்பவே 'எஸ்' ஆகணுமுன்னு ராத்ரியெல்லாம் ஜன்னல் கட்டையில் உக்கார்ந்துருந்தான்.  எப்படியும் ஜன்னல் திறக்கும்போது வெளியே குதிச்சுடணும்....  பாவம்.... புள்ளெ....
'ரெண்டுவாரத்துக்கு ஒரு முறை ரஜ்ஜுவைப்போய் விஸிட் பண்ணிட்டு, அவனுக்கு  வேண்டிய சாப்பாட்டுப் பொதிகளைக் கொடுத்துட்டு வரேன்.  கூடவே வீட்டுச்செடிகளையும் அப்பப்ப வந்து  கவனிச்சுக்கறேன்'னு  மகள்  சொன்னதால்,  க்ருஷ்ணார்ப்பணமுன்னு  கிளம்பிட்டோம்!
அன்றைக்கு ரம்ஸான் பெருநாள் என்பதால்  குக்கீஸ் கொடுத்தாங்க, சிங்கை  விமான நிலையத்தில்.  பழையகால  மூங்கில் வீடு ஒன்னு  'கட்டி' வச்சுருந்தாங்க.


வழக்கம்போல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சிங்கையில் இறங்கினதும் ரெண்டரை மணி நேர இடைவெளியில் சென்னை விமானம். வழக்கமா  போய்ச்சேரும் பத்துமணிக்குப் போய்ச் சேர்ந்ததோ?

இல்லையே.....  இன்னும் பத்து நிமிட்டில் சென்னையில் தரை இறங்கப்போறோமுன்னு  இருக்கும் நிலையில், அது பாட்டுக்கு வட்டம் போட்டுக்கிட்டே இருட்டில் சென்னையைச் சுத்திக் காமிச்சுட்டு இருந்துச்சா.....   லேசாக் கண்ணயர்ந்துட்டோம்.....

தடக்னு  தரையைத் தொட்ட சத்தம் கேட்டுக் கண்ணைத் திறந்தா.....   கும்மிருட்டு.....  இருட்டுலே எங்கெயோ போய்க்கிட்டு இருக்கோம்.....  விமானத்தில் லைட்ஸ் போட்டாங்க..... 
இதுபோய் நிக்குது ஒரு கார்கோ டெர்மினலில்.....   நம்மையெல்லாம் சரக்குன்னு நினைச்சுத் தள்ளிவிடப் போறாங்களோ?
'பெட்ரோல் தீர்ந்து போச்சு. கொஞ்சம் போட்டுக்கிட்டுக் கிளம்பிடலாம் இன்னும் அரைமணி நேரத்தில்'னு  விமானப்பணியாளர் வந்து  சொல்லிக்கிட்டு முழிக்கிறார்!

ஆமாம் .... அம்மாநேரம்  சுத்துனா பெட்ரோல் தீர்ந்துறாதா?  சென்னையில் பெட்ரோல் இல்லையா என்ன?  ஒருவேளை.....   தரமாட்டேன்னுட்டாங்களோ?

சென்னைக்கு என்ன ஆச்சு? அங்கே விமானநிலையத்தில் எதாவது  கலாட்டாவோ? குண்டு கிண்டு வச்சுட்டாங்களா என்ன?

எல்லோரும் செஞ்சதையே நாமும்......   செல்ஃபோனில்  வேண்டப்பட்டவர்களுக்குச் சேதி அனுப்புதல்.....  ஒரே சத்தம்..... ஒரே...பேச்சு....

நமக்காக   வண்டியுடன் வந்து காத்துக்கிட்டு இருக்கும் சீனிவாசனுக்குச் சேதியைச் சொன்னோம்.
அந்த 'அரைமணி'  ஒரு ஒன்னரை மணியாச்சு என்பது  உண்மை.  ஒரு வழியா சென்னையில் இறங்கி, பொட்டிகளை எடுத்துக்கிட்டு வெளியில் வரும்போது  நடு ராத்திரி ஒன்னரை மணி.
முதலில் கண்ணில் பட்ட மெட்ராஸ் காஃபி ஹவுஸாண்டை நம்ம சீனிவாசனை வரச் சொல்லி, ஆளுக்கொரு காஃபி ஆச்சு.  சின்ன பேப்பர் கப் காஃபி,  நூத்தியம்பது  ரூபாய்!

 இப்படியா விலைவாசி ஏறிக்கிடக்கு? அம்மாடியோவ்.....
லோடஸ் வந்து  சேர்ந்து செக்கின் செஞ்சு  தலையணையில் தலை வைக்கும்போது மணி  ரெண்டரை.

குட்நைட்............

தொடரும்............ :-)