Wednesday, February 28, 2018

ரசனையுடன் சந்திப்பு.... (@அமெரிக்கா.... 11)

இப்பெல்லாம் எந்த ஊருக்குப்போனாலும், நம்முடைய 'புது' சொந்தங்களில் ஒரு சிலரையாவது சந்திக்கணுமுன்னு  'எழுதப்படாத விதி' ஒன்னு இருக்குல்லே!  அதன்படியே  மூணே மூணு சொந்தங்களுக்கு மட்டும் வர்ற விவரம் சொல்லி இருந்தேன்.  இன்றைக்கு  வேலை நாள்......  வீக் எண்டுன்னால் அவுங்களுக்கும் கொஞ்சம் நேரம் கிடைக்கும்.
நம்ம ரசனை, தங்கும் இடம் எங்கேன்னு கேட்டுட்டு, அவரே வந்து சந்திக்கறதாச் சொன்னார்.

நாங்க  காலையில் கொஞ்சம் சீக்கிரமாவே எழுந்து ரெடி ஆனோம். ராத்திரி சரியா ஒன்னும் வயித்துக்குள் போடலையேன்னு அதுபாட்டுக்கு கூச்சல் போடுது.  கீழே போய் ரெஸ்ட்டாரண்டுலே  ப்ரேக்ஃபாஸ்ட்  இருக்கான்னு பார்த்தால்....  எல்லாம் இன்னும்  முக்கால்மணி ஆகுமாம்.
சின்னதா ஒரு கடை இங்கேயே இருக்குன்னு அதுலே தயிரும், மஃப்பின்னுமா வாங்கிக்கிட்டோம். நம்ம அறையில் இருந்து எட்டிப்பார்த்தாலே உள்முற்றமும்,  அதுலே இருக்கும் நீச்சல்குளமும், டென்னிஸ் கோர்ட் (எல்லாமே இன்டோர் வகை)  இந்தக் கடை எல்லாம் காட்சி கொடுத்துருது :-)

ரசனை வந்ததும் அவரோடு 'நேரில்' அறிமுகம் ஆச்சு :-) எங்களையெல்லாம் நீல்க்ரீஸ் கூட்டிப்போய் விருந்து வச்சுட்டார்! ஹைய்யோ.... எத்தனை நாளாச்சு சோறு பார்த்து !!!!   பஃபேதான். கொஞ்சம் பூந்து விளையாடுனது உண்மை! மார்கம் ரோடு, ஸ்கார்பரோன்னு  சொன்ன நினைவு. 

இந்த ஏரியா முழுசும் நகைக்கடைகளும்  துணிக்கடைகளுமா  நம்ம தி. நகர் போலத்தான். தமிழ் எழுத்துகளைப் பார்த்து மனம் மகிழ்ந்தது உண்மை.  எதாவது ஒரு கடைக்குள் நுழைஞ்சு பார்க்காமல் போனது இப்போ ஒரு குறையாத் தோணுது எனக்கு....   இந்தக் கொடி எப்படி இருக்குமுன்னு  பார்க்கலை பாருங்க....  :-)


நீல்க்ரீஸுக்கு எதிரில் சிவன் கோவில் இருக்கு!  ப்ரமராம்பா ஸமேத சந்த்ரமௌலீஸ்வர ஷிவாலயம்!   உச்சி பூஜை முடிஞ்சு கோவில் மூடியிருக்கு. பார்த்தாக் கோவில் மாதிரி இல்லையேன்னு நினைக்கப்டாது.... எங்கூரில்கூட  சாதாரண ஹால் போலத்தான் முகப்பில் இருக்கும். உள்ளே போனால் கோவில் :-)

அடுத்து எங்களை அய்யப்பன் கோவிலுக்குக் கூட்டிப்போனார்.  நம்ம பக்க கோபுரத்தோடு அழகாவே இருக்கு இந்தக் கோவில்.

தமிழ் , மலையாளம் மொழிகளில்  உள்ளூர்தகவல்களோடு நம்ம  கம்யூனிடிக்கான செய்தித்தாள்  வந்துக்கிட்டு இருக்கு!   ஹைய்யோ !!!


'நம்மவரின்' நோட்புக்கில்,  யூஎஸ்பி ரிஸீவர் உடைஞ்சுருச்சுன்னு  இன்னொரு ஒயர்லெஸ் மௌஸ் வாங்கும்படியா ஆச்சு.  எனக்கு  எலி இல்லாமல் வேலை ஆகாது, ம்யாவ்.....  நம்ம ரசனைதான் வால்மார்ட் கூட்டிட்டுப்போனார். எனக்கு இதுதான் முதல்முறை  இந்த வால்மார்ட் விஸிட். நியூஸியில்  வந்தாச்சுன்னாலும்.... எங்கூருக்கு இன்னும் வரலை! ரொம்ப மலிவா இருக்குன்னு தோணல்.  ஒரு 64 GB எஸ்டி கார்ட் வாங்கினோம்.
வேலைநாளும் அதுவுமா அவருடைய நேரத்தை நம்மோடு வீணாக்கறாரேன்னு எங்களுக்குள் ஒரு பதைப்பு. அவரும் ரொம்பப் புரிதலோடு நம்மை ஃபிஞ்ச் ஸ்டேஷனாண்டை கொண்டுபோய் விட்டார்.
ஒரு சிலமணி நேரம்தான் அவரோடு இருந்தோம், ஆனாலும் என்னவோ  பலவருசப் பழக்கம்போல் ஆயிருச்சு. எல்லாம் இணையம் தந்த கொடை!என் நண்பர்களைத் திருடும் பழக்கம் 'நம்மவருக்கு' உண்டு என்பதால்  எனக்கும் மகிழ்ச்சியே :-)

நமக்கும்   இங்கே டொரொன்டோவைக் கொஞ்சம் சுத்திப் பார்த்துக்கணும். ஸிட்டி ஸைட் ஸீயிங் டூர் இருக்கு,  அதுலே போனால் நமக்கு வசதி, தனியா அல்லாட வேணாம்.   மொத்தம் 20 இடங்களில் நிறுத்துவாங்களாம்.  நாம் இறங்கிப்போய்ப் பார்த்துட்டு அடுத்துவர்ற வண்டியில் ஏறிக்கலாம்.  ஒரு டிக்கெட், 48 மணி நேரத்துக்குச் செல்லும். ஆனால்  நமக்கு நேரம் இல்லை. நாளைக் காலையில் ஒரு மூணு நாள் பயணம் போறோம்.  கூடியவரை, இப்ப என்ன கிடைக்குதோ  அது.....

யூனியன் ஸ்டேஷனுக்குப் போகணும். நாம் கேக்காமலேயே நம்மைப் 'பார்த்துட்டு' ஸீனியர் ஸிட்டிசன் டிஸ்கவுண்ட் கிடைச்சது :-)   ரொம்பவே மலிவு வேற!  எங்கூர்லே  இதைப்போல நாலு மடங்கு ஆகி இருக்கும். எங்க டாலரும் கனேடியன் டாலரும் ஏறக்கொறைய ஒரே மதிப்பு என்றதால்  எனக்குக் கணக்குப்போடக் கஷ்டப்பட வேணாம் :-)


யூனியன் ஸ்டேஷனில் இறங்கி வேடிக்கை பார்த்துக்கிட்டே  பொடி நடையில் வாட்டர்ஃப்ரன்ட் வரை போனோம். சிஎன் டவர் போகலாமான்னார் 'நம்மவர்'. நான் சொல்லலை.... இவர் போனபிறவியில் கருடன்னு!   எங்கே போனாலும் உசரமா இருக்கும்  இடத்துலே ஏறிப்போய்ப் பார்த்தால்தான் திருப்தி.  ஏற்கெனவே   ஒருமுறை இவர் மட்டும் தனியா இங்கே வந்தப்பப் பார்த்துட்டு வந்துருக்கார். அப்புறம் இப்பவும் வேணுமான்னு தடா போட்டேன். எத்தனை நாடுகளில்தான் பார்ப்பது?

ரிக்‌ஷாக்காரத் தம்பிக்கு ஒரு ஹை!

எனக்குக் கடலும் கப்பலும் பிடிக்கும்.....  நிதானமா உக்கார்ந்து  ரசிச்சேன் :-) வெயில் இருந்தாலும்..... அவ்வளவா உரைக்கலை......


நல்ல கூட்டம்தான் எல்லா இடங்களிலும்.


ஹேய்.... யாராக்கும்..... யாராக்கும் இது,  கத்தரிக்காய் கஷணத்தைப் ப்ளேட்டில்லாமல் தூக்கியெறிஞ்சது.......
பெரிய பெரிய உயரமான கட்டடங்கள், ஓசை இல்லாமல் ஓடும் ட்ராம்கள் இப்படிப் பெரிய நகரங்களுக்கான அம்சங்கள் நிறைஞ்சு இருக்கு !
ஷாப்பிங் ஆர்க்கேடுகளுக்குள் புகுந்து புறப்பட்டோம். காய்கறிகள் கூட விலை மலிவுதான்!

மறுநாளைக்குத் தேவையான சில தீனிகள்,  ராத்ரி சாப்பாட்டுக்காக கொஞ்சம் பாஸ்தா ஸாலட்னு இங்கேயே வாங்கிக்கிட்டோம்.

திரும்பப் பொடிநடையில் யூனியன் ஸ்டேஷனுக்கு வந்து,  யார்க்டேலுக்கு டிக்கெட் எடுத்தோம். இப்பவும் ட்ரெயினில் அவ்வளவாக் கூட்டம் இல்லை. சும்மாச் சொல்லக்கூடாது....  இங்கே ஸப்வே  ட்ரெய்ன் சர்வீஸ் நல்லாவே இருக்கு!
யார்க்டேல் ஸ்டேஷனில் இறங்கி வெளியே வர்றோம்... அந்த வழி ஸ்டேஷனை ஒட்டியே இருக்கும் ஷாப்பிங் சென்டரில் கொண்டுபோய் விட்டுருச்சு :-)  பிரமாண்டமான கட்டடம். நம்  அறை ஜன்னல் வழியாப்  பார்த்துருந்தேன்.  ஆனா அது ஷாப்பிங் சென்டருன்னு அப்போ தெரியாது:-)
மகளுக்கு வேண்டிய  சில ஐட்டங்கள் இருக்கான்னு பார்த்துக்க  'மேக்' கடைக்குள் போனேன். விலைகூட சரிதானோ? எதுக்கும் இருக்கட்டுமுன்னு  மகளுக்கு சேதி அனுப்பிட்டு, பதில் வரும்வரை சுத்திக்கிட்டு இருந்தோம்.  இதைவிட அமெரிக்காவில் மலிவுன்னு பதில் வந்துருச்சு. நெசமாவா?  ஙே....

எங்கூர்க்கடை  ஒன்னு பார்த்துட்டு ரொம்ப மகிழ்ச்சி!  நகைக்கடைதான். ஆனால் இங்கே இன்னும் அருமையான டிஸைன்ஸ் இருக்கே!  அப்ப.... நியூஸிக்காரங்கதான் கஞ்சன்களா.............   வாங்கிட மாட்டோமே............ :-)
பெரிய வளாகம்! பூச்செடிகளுடன் நல்லாவே இருக்கு!  பார்க்கிங் பிரச்சனை இருக்கச் சான்ஸே இல்லை.....   

ஆறு பேக் எல்லாம் இனி கிடையாதாம்!  அப்ப? அதுக்கும் மேலெ.....

பொடிநடையில் வளாகத்தைக்கடந்து  சாலைக்கு அந்தாண்டை இருக்கும் ஹாலிடே இன் போய்ச் சேர்ந்தோம்.   நிறைய நடந்தாச்சு  இன்றைக்கு..... இனி  முடியாது.
நாளைக்கு ஒரு மூணு நாள் டூர் போறோமுன்னு சொன்னேனே.... அதுக்குக் கொஞ்சம் ரெடியாகணும்.  இந்தியப் பயணத்துக்குன்னு கொண்டு போகும் பெரிய பெட்டிகள் இல்லாம மீடியம் சைஸ்தான் இந்த மூணு வார   அமெரிக்கா & கனடா பயணத்துக்குக்  கொண்டு போயிருக்கோம். ஆனாலும் மூணு நாள் பயணத்துக்கு இதைக் கட்டி வலிக்கணுமா?

   நாம்தான் இப்போ அனுபவசாலிகளா ஆகிட்டோமே  :-)  அடுத்த மூணு நாளைக்குண்டான துணிமணிகளையும், டாய்லெட்ரியும்  சின்ன கேபின் பேகில்  எடுத்து வச்சுட்டு,  மற்ற பெட்டிகளை க்ளோக் ரூமில் கொண்டு போய் போட்டோம்.  மூணாம்நாள் மறுபடி இங்கேதான் வந்து தங்கறோம் என்பதால் பிரச்சனை இல்லை.

காலையில் ஆறரைக்குப் பிக்கப் பாய்ண்டில் இருக்கணும்.  சரியா?

தொடரும்..........  :-)


  PIN குறிப்பு :  பயணம் ஒன்னு கிடைச்சுருக்கு.  இன்னும் கொஞ்ச நேரத்துலே  கிளம்பிடணும்.   திரும்பி வரும்வரை.... அங்கங்கே கிடைக்கும்  வைஃபை வசதி  பொறுத்து பதிவுகள் வெளியாகலாம்.  ஆகாமலும் போகலாம்.....

Monday, February 26, 2018

இப்படி ஒரு ஓட்டமா.......... ராமா.... (@அமெரிக்கா.... 10)

நாமொன்று நினைத்தால் ஏர்லைன்காரன் வேறொன்னு நினைப்பான்....... நினைத்தான்...... மறுநாள் காலை எட்டு இருவதுக்குக் கிளம்ப வேண்டிய  விமானம், பத்து இருவதுக்குக் கிளம்புமாம்!   ரெண்டு மணி நேரம் தாமதம்.  இது நாம் ஸிட்னியில் இருந்து இங்கே வந்தமே அதோட கனெக்ட்டிங் ஃப்ளைட்தான்,  நியூயார்க் போகுது.
இதுவரை எல்லாம் ஒழுங்கா இருந்ததுன்னு சொன்ன நிலைமை அப்படியே தலைகீழாச்சு.
நம்ம ஐட்டிநரிப் படி எட்டு இருவதுக்குக் கிளம்பி நாலு நாப்பது நியூயார்க் ஜே எஃப் கே.  அங்கிருந்து பொட்டிகளை எடுத்துக்கிட்டு  லகார்டியா ஏர்ப்போர்டுக்குப் போகணும். இது ஒரு பத்து மைல் தூரத்துலே இருக்கு.  அங்கெயிருந்து  கனெக்ட்டிங்  ஃப்ளைட் எட்டு இருபத்தியஞ்சுக்கு. அதுக்கும் ரெண்டு மணி நேரம் முன்னால் அங்கெ இருக்கணுமுன்னா... ஆறு இருபத்தியஞ்சு  சரியா இருக்கும்.  நமக்கு எப்படியும் ஒன்னரை  மணி நேரம் இருக்கே. பத்து மைல் போயிறமாட்டமா?
இப்ப இந்த ரெண்டு மணி நேரத் தாமதத்தால்....  எல்லாம் தலைகீழ்....
முதல்லே ஏர்கனடாவுக்குப் போன் போட்டு, "இப்படி நாங்க வர்ற ஃப்ளைட் டிலே ஆகுது.....  அதனால்  அந்த  எட்டு இருபத்தியஞ்சைப் பிடிக்கமுடியலைன்னா.... அடுத்த  ஃப்ளைட் இருக்கா? "

"இல்லாம  என்ன? பத்தரைக்கு ஒன்னு இருக்கு. அதுக்குத் தனியா டிக்கெட் வாங்கிக்கணும்.  இப்ப வச்சுருக்கும் டிக்கெட் அந்த எட்டு இருவத்தியஞ்சுக்கு மட்டும்தான்."

அடப்பாவிகளா.... மாத்திக் கொடுக்க மாட்டாங்களாமே....

இன்னும் கொஞ்சம் நம்ம நிலையை விஸ்தரிச்சதும்..... மனம் இரங்கி ஒரு உபாயம் சொன்னாங்க.  'நீங்க ஆன்லைன் செக்கின்  பண்ணிக்கிட்டு,  லக்கேஜை மட்டும்  ஏழரைக்குள்  ட்ராப் பண்ண முடியுமா பாருங்க'
முடியலைன்னா.....    பத்தரையோ, இல்லை நாளைக் காலை முதல் ஃப்ளைட்டோதான், தனி டிக்கெட்டில்.


தங்கறது எங்கே?  கனடா ஹொட்டெலில் அறை நமக்கு ரெடி.  போகமுடியலைன்னா...  ப்ளாட்ஃபாரமா?

பெருமாள் மேலே பாரத்தைப் போட்டுட்டு ஆன்லைனில் செக்கின் பண்ணியாச்சு. பொழுது விடியட்டும்னு  காத்திருக்கணும்.  ரிஸப்ஷனில்  சேதி சொல்லி, ஆறுமணிக்குப் பதிலா  எட்டுமணிக்கு ட்ராப் பண்ணுங்கன்னோம். சரின்னுட்டாங்க.


கொஞ்ச நேரத்துலே நம்மைக் கூப்புட்டு, எட்டுமணிக்கு  வேறொரு புக்கிங் இருக்குன்றதால் ஏழரைக்குக் கொண்டுபோய் விடட்டுமான்னு   ட்ரைவர் கேக்கறாராம்.  சரின்னுட்டுப் படுத்துக் கொஞ்சமாவது தூங்கலாமுன்னா......   அதிர்ச்சியில் தூக்கமே வரலை.....

ஒன்னும்பாதியுமா தூங்கி எழுந்து  ரெடியாகி, கீழே நமக்கான ப்ரேக்ஃபாஸ்டை முடிச்சுக்கிட்டு ஏழரைக்குக் கிளம்பி ஏர்போர்ட் வந்துட்டோம்.  ரெண்டரை மணி நேரம் தேவுடு காக்கணும்.... வேற வழி இல்லை..... வாழ்க்கையில்  காத்திருப்புலேயே நேரம் போயிருதுன்னு தத்துவ விசாரம் வேற....
செக்கின்  செய்யும்போது நம்ம அழுகாச்சிப் புராணத்தைக் கேட்ட க்வான்டாஸ்  லேடி, 'உங்க பொட்டிகள் முதலில்  வெளியில் வர்றதுக்கு டேக் போடறேன். சட்னு கிளம்பிடலாமு'ன்னு அதேபோல் ப்ரையாரிட்டி டேக் போட்டு உள்ளே அனுப்புனாங்க.
டொமஸ்டிக் ஃப்ளைட் என்பதால்  இமிகிரேஷன் தேவையெல்லாம் இல்லை. ஸிட்னியில் இருந்து வந்த ஏ380 பார்த்ததும்  இனி  அவ்வளவா தாமதம் ஆகாதுன்னு ஒரு நம்பிக்கை. ஆனா... இங்கிருந்து நியூயார்க்,  போயிங்லேதான் நாம் போயிங் :-)
லாஸ் ஏஞ்சலீஸ்  ஏர்ப்போர்ட் கட்டடத்துக்குள்ளே சின்ன வேடிக்கை.  கூட்டமே   இல்லாமக் காலியா இருக்கேன்னுபார்த்தால்  புழக்கடையில்தான் நடமாட்டம் அதிகம்:-)

அஞ்சரை மணி நேரப் பயணம்.    ஆனா  மேற்குக்கும் கிழக்குக்கும் மூணு மணி நேர வித்தியாசம் வேற இருக்கே.......      நான் என்னுடைய வழக்கம்போல் ஃப்ளைட்பாத்தில் கண் நட்டுருந்தேன். க்ராண்ட் கேன்யன் வழியாப் போய்க்கிட்டு இருக்கோமாம்.  அப்பதான் நேத்து தோழியுடன் சாப்பிடப் போனப்போப் பேச்சுக்கு நடுவில் 'மார்பிள் கேன்யன் போகலையா'ன்னு கேட்டது நினைவுக்கு வந்துச்சு...  இவ்ளோ கிட்டெதான் இருந்துருக்கு.... மிஸ் பண்ணிட்டோமே..... இன்னொருக்கா வரணுமோ....
க்வான்டாஸ்லே எப்பவுமே சாப்பாடு சரியாவே இருக்காது...  மெனுகார்டைப் பாருங்க......   ஒரு வெஜிடபுள் ஐட்டம் வைக்கப்டாதோ?
சாப்பாடு வந்தப்ப, ஜோஷுவாவின் சாப்பாடு தவறுதலா எனக்கு வந்துருச்சு.  மருமகனை இப்படி நினைக்க வைக்கிறாங்களே...... மாமியார் கேட்ட சாப்பாட்டையே மருமகனும் கேட்டுருக்கார்.  மாத்திக்கொடுக்கச் சொல்லி ஹோஸ்டஸிடம் கேட்டால்,  அவர் பிரிச்சு சாப்பிட ஆரம்பிச்சுட்டாராம்.  அதே சாப்பாடுதான் இதுவும்....போகட்டும்,  பிரச்சனை இல்லை.
நியூயார்க் வந்தும்  சட்னு இறங்காம  ஊரைச் சுத்திக் காமிக்கிறார் பைலட்.  சுதந்திரதேவி  தெரியறாளான்னு  பார்த்தேன்....   ஊஹூம்....ஒருவழியா ஜே எஃப் கேயில்   விமானம் தரையில் இறங்குனப்ப மணி ஆறு. அப்பாடா ....   நேரத்துக்குப் போயிடலாமுன்னு நினைச்சால்..... பார்க்கிங் பே கிடைக்காம  நாப்பது நிமிஷம் தவிக்க விட்டுட்டாங்க.  முள்மேல் இருப்பது எப்படின்னு 'நம்மவரை'ப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன்.

அடிச்சுப்பிடிச்சு வேகமா நடந்து போய்  முதலில் வந்த  நம்ம    ரெண்டு பெட்டிகளை எடுத்துக்கிட்டு வெளியில் பாய்ஞ்சோம். இப்படி ஒரு ஓட்டம் என் வாழ்நாளில் அதுவரை இல்லை..... ஒரு முன்னூறு மீட்டர் ஓடியிருப்பேன்.... அதுவும்  பொட்டியை இழுத்துக்கிட்டு.......    ஒலிம்பிக்ஸ் மட்டும் போயிருந்தால் குறைஞ்சபக்ஷம் வெங்கலம் :-) 

டாக்ஸி பிடிச்சுட்டு, 'சீக்கிரம்  போகணும்' னு      ட்ரைவரிடம் கேட்டுக்கிட்டோம்.   அஞ்சேல் என்ற    பாகிஸ்தானி  ரொம்ப வேகமாக் கிளம்பினார்.  பயங்கர பிஸியான ரோடு வேற.  ஓடிவந்த களைப்பும், கால் வலியும் சேர்ந்து என்னைப் படுத்தி எடுக்குது.

ஏழு இருபத்தியெட்டுக்கு நம்ம பொட்டிகளை,   ஏர்கனடா பேக்கேஜ் செக்கின்லே சேர்த்ததும்தான் உயிரே வந்துச்சு !

இன்ட்டர்நேஷனல் ஃப்ளைட் என்பதால்  சாங்கியம் எல்லாம் முடிச்சு, கேட்டாண்டை போறோம்.  சிறு தீனியா ஆளுக்கொரு மஃப்பின்.
சரியான நேரத்துக்குக் கிளம்பியாச்சு.  ஒன்னேமுக்கால் மணி நேரப் பயணம்தான்.  மெனுகார்ட் பார்த்தால் .....  ப்ச்.....   சுவாரசியப்படலை.  ஏர்லைன்ஸ் காஃபியும் டீயும் நமக்கு வெறுப்பேத்திரும்....  வேணாம்....    பழம் இருக்காமே.....    சரி. பழம் :-)
டொரொன்ட்டோ...........  ஹியர் ஐ கம்!

போய் இறங்கினதும் இமிக்ரேஷன் போய் ஒரு மணி நேரத்துக்கும் மேலே வரிசையில் நிக்க வேண்டியதாப் போயிருச்சு.  என்னம்ம்ம்ம்மா  ஒரு கூட்டம். ஒரு ஆயிரம் பேர் இருப்பாங்க. எல்லாம் சீனத்து மக்கள்ஸ். பெரிய குழுவா வந்துருக்காங்க.  இங்கேயும் அங்கேயுமா வரிசையில் இருந்து கிய்யா...முய்யான்னு பேசிக்கிட்டே இருக்காங்க. நாங்க மெள்ள, எங்களுக்குள்  இன்னும் எவ்ளோ நேரம் காத்திருக்கணுமோன்னு சொன்னது கூட எனக்கே சீனமொழியாட்டமா கேட்டதுன்னா பாருங்க!

ஒருவழியா எல்லாம் சரியாகி வெளியில் வந்ததும் கண்ணில் பட்டது தமிழ்!
டாக்ஸிக்காரர்  பஞ்சாபி. த்தோடா ஸே பாத் ஹுவா....

'ஹாலிடேஇன் யார்க்டேல் போகணும்'. பதினாலு கிமீ தூரமாம்!

செக்கின் செஞ்சப்ப,  ஏறக்கொறைய  நடுராத்திரி.  ட்யூட்டியில் இருந்தவர் தமிழர்.  பெயர் லியாகத். தண்ணி பாட்டில், ஆப்பிள், சிப்ஸ் எல்லாம் கொடுத்து உபசரிச்சு அறைக்கு அனுப்பினார். 'நம்மவர்'  ஐ ஹெச்ஜி ரிவார்ட் க்ளப்  மெம்பர் என்பதால் நல்ல  வசதிகள்  உள்ள அறையாகவே கிடைச்சது :-)

 ஹொட்டெல் உள்ளே அலங்காரம் நல்லாத்தான் இருக்கு.  நாளைக்குப் பார்க்கலாம், சரியா?

தொடரும்......  :-)