Monday, February 26, 2018

இப்படி ஒரு ஓட்டமா.......... ராமா.... (@அமெரிக்கா.... 10)

நாமொன்று நினைத்தால் ஏர்லைன்காரன் வேறொன்னு நினைப்பான்....... நினைத்தான்...... மறுநாள் காலை எட்டு இருவதுக்குக் கிளம்ப வேண்டிய  விமானம், பத்து இருவதுக்குக் கிளம்புமாம்!   ரெண்டு மணி நேரம் தாமதம்.  இது நாம் ஸிட்னியில் இருந்து இங்கே வந்தமே அதோட கனெக்ட்டிங் ஃப்ளைட்தான்,  நியூயார்க் போகுது.
இதுவரை எல்லாம் ஒழுங்கா இருந்ததுன்னு சொன்ன நிலைமை அப்படியே தலைகீழாச்சு.
நம்ம ஐட்டிநரிப் படி எட்டு இருவதுக்குக் கிளம்பி நாலு நாப்பது நியூயார்க் ஜே எஃப் கே.  அங்கிருந்து பொட்டிகளை எடுத்துக்கிட்டு  லகார்டியா ஏர்ப்போர்டுக்குப் போகணும். இது ஒரு பத்து மைல் தூரத்துலே இருக்கு.  அங்கெயிருந்து  கனெக்ட்டிங்  ஃப்ளைட் எட்டு இருபத்தியஞ்சுக்கு. அதுக்கும் ரெண்டு மணி நேரம் முன்னால் அங்கெ இருக்கணுமுன்னா... ஆறு இருபத்தியஞ்சு  சரியா இருக்கும்.  நமக்கு எப்படியும் ஒன்னரை  மணி நேரம் இருக்கே. பத்து மைல் போயிறமாட்டமா?
இப்ப இந்த ரெண்டு மணி நேரத் தாமதத்தால்....  எல்லாம் தலைகீழ்....
முதல்லே ஏர்கனடாவுக்குப் போன் போட்டு, "இப்படி நாங்க வர்ற ஃப்ளைட் டிலே ஆகுது.....  அதனால்  அந்த  எட்டு இருபத்தியஞ்சைப் பிடிக்கமுடியலைன்னா.... அடுத்த  ஃப்ளைட் இருக்கா? "

"இல்லாம  என்ன? பத்தரைக்கு ஒன்னு இருக்கு. அதுக்குத் தனியா டிக்கெட் வாங்கிக்கணும்.  இப்ப வச்சுருக்கும் டிக்கெட் அந்த எட்டு இருவத்தியஞ்சுக்கு மட்டும்தான்."

அடப்பாவிகளா.... மாத்திக் கொடுக்க மாட்டாங்களாமே....

இன்னும் கொஞ்சம் நம்ம நிலையை விஸ்தரிச்சதும்..... மனம் இரங்கி ஒரு உபாயம் சொன்னாங்க.  'நீங்க ஆன்லைன் செக்கின்  பண்ணிக்கிட்டு,  லக்கேஜை மட்டும்  ஏழரைக்குள்  ட்ராப் பண்ண முடியுமா பாருங்க'
முடியலைன்னா.....    பத்தரையோ, இல்லை நாளைக் காலை முதல் ஃப்ளைட்டோதான், தனி டிக்கெட்டில்.


தங்கறது எங்கே?  கனடா ஹொட்டெலில் அறை நமக்கு ரெடி.  போகமுடியலைன்னா...  ப்ளாட்ஃபாரமா?

பெருமாள் மேலே பாரத்தைப் போட்டுட்டு ஆன்லைனில் செக்கின் பண்ணியாச்சு. பொழுது விடியட்டும்னு  காத்திருக்கணும்.  ரிஸப்ஷனில்  சேதி சொல்லி, ஆறுமணிக்குப் பதிலா  எட்டுமணிக்கு ட்ராப் பண்ணுங்கன்னோம். சரின்னுட்டாங்க.


கொஞ்ச நேரத்துலே நம்மைக் கூப்புட்டு, எட்டுமணிக்கு  வேறொரு புக்கிங் இருக்குன்றதால் ஏழரைக்குக் கொண்டுபோய் விடட்டுமான்னு   ட்ரைவர் கேக்கறாராம்.  சரின்னுட்டுப் படுத்துக் கொஞ்சமாவது தூங்கலாமுன்னா......   அதிர்ச்சியில் தூக்கமே வரலை.....

ஒன்னும்பாதியுமா தூங்கி எழுந்து  ரெடியாகி, கீழே நமக்கான ப்ரேக்ஃபாஸ்டை முடிச்சுக்கிட்டு ஏழரைக்குக் கிளம்பி ஏர்போர்ட் வந்துட்டோம்.  ரெண்டரை மணி நேரம் தேவுடு காக்கணும்.... வேற வழி இல்லை..... வாழ்க்கையில்  காத்திருப்புலேயே நேரம் போயிருதுன்னு தத்துவ விசாரம் வேற....
செக்கின்  செய்யும்போது நம்ம அழுகாச்சிப் புராணத்தைக் கேட்ட க்வான்டாஸ்  லேடி, 'உங்க பொட்டிகள் முதலில்  வெளியில் வர்றதுக்கு டேக் போடறேன். சட்னு கிளம்பிடலாமு'ன்னு அதேபோல் ப்ரையாரிட்டி டேக் போட்டு உள்ளே அனுப்புனாங்க.
டொமஸ்டிக் ஃப்ளைட் என்பதால்  இமிகிரேஷன் தேவையெல்லாம் இல்லை. ஸிட்னியில் இருந்து வந்த ஏ380 பார்த்ததும்  இனி  அவ்வளவா தாமதம் ஆகாதுன்னு ஒரு நம்பிக்கை. ஆனா... இங்கிருந்து நியூயார்க்,  போயிங்லேதான் நாம் போயிங் :-)
லாஸ் ஏஞ்சலீஸ்  ஏர்ப்போர்ட் கட்டடத்துக்குள்ளே சின்ன வேடிக்கை.  கூட்டமே   இல்லாமக் காலியா இருக்கேன்னுபார்த்தால்  புழக்கடையில்தான் நடமாட்டம் அதிகம்:-)

அஞ்சரை மணி நேரப் பயணம்.    ஆனா  மேற்குக்கும் கிழக்குக்கும் மூணு மணி நேர வித்தியாசம் வேற இருக்கே.......      நான் என்னுடைய வழக்கம்போல் ஃப்ளைட்பாத்தில் கண் நட்டுருந்தேன். க்ராண்ட் கேன்யன் வழியாப் போய்க்கிட்டு இருக்கோமாம்.  அப்பதான் நேத்து தோழியுடன் சாப்பிடப் போனப்போப் பேச்சுக்கு நடுவில் 'மார்பிள் கேன்யன் போகலையா'ன்னு கேட்டது நினைவுக்கு வந்துச்சு...  இவ்ளோ கிட்டெதான் இருந்துருக்கு.... மிஸ் பண்ணிட்டோமே..... இன்னொருக்கா வரணுமோ....
க்வான்டாஸ்லே எப்பவுமே சாப்பாடு சரியாவே இருக்காது...  மெனுகார்டைப் பாருங்க......   ஒரு வெஜிடபுள் ஐட்டம் வைக்கப்டாதோ?
சாப்பாடு வந்தப்ப, ஜோஷுவாவின் சாப்பாடு தவறுதலா எனக்கு வந்துருச்சு.  மருமகனை இப்படி நினைக்க வைக்கிறாங்களே...... மாமியார் கேட்ட சாப்பாட்டையே மருமகனும் கேட்டுருக்கார்.  மாத்திக்கொடுக்கச் சொல்லி ஹோஸ்டஸிடம் கேட்டால்,  அவர் பிரிச்சு சாப்பிட ஆரம்பிச்சுட்டாராம்.  அதே சாப்பாடுதான் இதுவும்....போகட்டும்,  பிரச்சனை இல்லை.
நியூயார்க் வந்தும்  சட்னு இறங்காம  ஊரைச் சுத்திக் காமிக்கிறார் பைலட்.  சுதந்திரதேவி  தெரியறாளான்னு  பார்த்தேன்....   ஊஹூம்....ஒருவழியா ஜே எஃப் கேயில்   விமானம் தரையில் இறங்குனப்ப மணி ஆறு. அப்பாடா ....   நேரத்துக்குப் போயிடலாமுன்னு நினைச்சால்..... பார்க்கிங் பே கிடைக்காம  நாப்பது நிமிஷம் தவிக்க விட்டுட்டாங்க.  முள்மேல் இருப்பது எப்படின்னு 'நம்மவரை'ப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன்.

அடிச்சுப்பிடிச்சு வேகமா நடந்து போய்  முதலில் வந்த  நம்ம    ரெண்டு பெட்டிகளை எடுத்துக்கிட்டு வெளியில் பாய்ஞ்சோம். இப்படி ஒரு ஓட்டம் என் வாழ்நாளில் அதுவரை இல்லை..... ஒரு முன்னூறு மீட்டர் ஓடியிருப்பேன்.... அதுவும்  பொட்டியை இழுத்துக்கிட்டு.......    ஒலிம்பிக்ஸ் மட்டும் போயிருந்தால் குறைஞ்சபக்ஷம் வெங்கலம் :-) 

டாக்ஸி பிடிச்சுட்டு, 'சீக்கிரம்  போகணும்' னு      ட்ரைவரிடம் கேட்டுக்கிட்டோம்.   அஞ்சேல் என்ற    பாகிஸ்தானி  ரொம்ப வேகமாக் கிளம்பினார்.  பயங்கர பிஸியான ரோடு வேற.  ஓடிவந்த களைப்பும், கால் வலியும் சேர்ந்து என்னைப் படுத்தி எடுக்குது.

ஏழு இருபத்தியெட்டுக்கு நம்ம பொட்டிகளை,   ஏர்கனடா பேக்கேஜ் செக்கின்லே சேர்த்ததும்தான் உயிரே வந்துச்சு !

இன்ட்டர்நேஷனல் ஃப்ளைட் என்பதால்  சாங்கியம் எல்லாம் முடிச்சு, கேட்டாண்டை போறோம்.  சிறு தீனியா ஆளுக்கொரு மஃப்பின்.
சரியான நேரத்துக்குக் கிளம்பியாச்சு.  ஒன்னேமுக்கால் மணி நேரப் பயணம்தான்.  மெனுகார்ட் பார்த்தால் .....  ப்ச்.....   சுவாரசியப்படலை.  ஏர்லைன்ஸ் காஃபியும் டீயும் நமக்கு வெறுப்பேத்திரும்....  வேணாம்....    பழம் இருக்காமே.....    சரி. பழம் :-)
டொரொன்ட்டோ...........  ஹியர் ஐ கம்!

போய் இறங்கினதும் இமிக்ரேஷன் போய் ஒரு மணி நேரத்துக்கும் மேலே வரிசையில் நிக்க வேண்டியதாப் போயிருச்சு.  என்னம்ம்ம்ம்மா  ஒரு கூட்டம். ஒரு ஆயிரம் பேர் இருப்பாங்க. எல்லாம் சீனத்து மக்கள்ஸ். பெரிய குழுவா வந்துருக்காங்க.  இங்கேயும் அங்கேயுமா வரிசையில் இருந்து கிய்யா...முய்யான்னு பேசிக்கிட்டே இருக்காங்க. நாங்க மெள்ள, எங்களுக்குள்  இன்னும் எவ்ளோ நேரம் காத்திருக்கணுமோன்னு சொன்னது கூட எனக்கே சீனமொழியாட்டமா கேட்டதுன்னா பாருங்க!

ஒருவழியா எல்லாம் சரியாகி வெளியில் வந்ததும் கண்ணில் பட்டது தமிழ்!
டாக்ஸிக்காரர்  பஞ்சாபி. த்தோடா ஸே பாத் ஹுவா....

'ஹாலிடேஇன் யார்க்டேல் போகணும்'. பதினாலு கிமீ தூரமாம்!

செக்கின் செஞ்சப்ப,  ஏறக்கொறைய  நடுராத்திரி.  ட்யூட்டியில் இருந்தவர் தமிழர்.  பெயர் லியாகத். தண்ணி பாட்டில், ஆப்பிள், சிப்ஸ் எல்லாம் கொடுத்து உபசரிச்சு அறைக்கு அனுப்பினார். 'நம்மவர்'  ஐ ஹெச்ஜி ரிவார்ட் க்ளப்  மெம்பர் என்பதால் நல்ல  வசதிகள்  உள்ள அறையாகவே கிடைச்சது :-)

 ஹொட்டெல் உள்ளே அலங்காரம் நல்லாத்தான் இருக்கு.  நாளைக்குப் பார்க்கலாம், சரியா?

தொடரும்......  :-)


10 comments:

said...

சோதனை மேல் சோதனை!!

said...

அருமை.
//போயிங்லேதான் நாம் போயிங் :-// கவிதை கவிதை.

said...

கனெக்டிங் விமானப் பயண டென்ஷனைப் புரிந்துகொள்ளமுடிகிறது. எனக்கும் சில தடவைகள் இப்படி நடந்திருக்கிறது. ஒரு டெர்மினல்லேர்ந்து இன்னொண்ணுக்கு ஓடவேண்டிய நிலையும் வந்திருக்கிறது. ரொம்ப டென்ஷன், பிரஷர் வந்துடும்.

தொடர்கிறேன்.

said...

நல்லதாகவே முடிந்தது.... இப்படி கனெக்டிங் ஃபளைட் பிடிப்பது, காத்திருப்பது எல்லாம் கொஞ்சம் பேஜார் தான். சமயங்களில் திருச்சியிலிருந்து சென்னை வரை பேருந்து/ரயில் பிறகு விமானம் என பயணிக்கும் போது ரொம்பவே பேஜார் தான் - காத்திருப்பது! சில சமயங்களில் நான்கு-ஐந்து மணி நேரம் கூட காத்திருந்திருக்கிறேன்.

தொடர்கிறேன்.

said...

இந்த மாதிரியான பயணங்கள்ள... ஒரு பிளைட் தாமதமாயிட்டா அடுத்தடுத்த பிளைட்டுகளைப் பிடிக்கிறது கொஞ்சம் கடினந்தான். எடுத்திருந்த டிக்கெட் மொத்தமா (தொடக்கம் முதல் முடிவு வரை) எடுத்திருந்தா மாத்திக் கொடுப்பாங்கன்னு நெனைக்கிறேன். தனித்தனியா எடுத்திருந்தா மாத்தமாட்டாங்க.

எப்படியோ... ஓடியோடி பிளைட்டை பிடிச்சிட்டீங்க.

சாப்பிடுறதுக்கு ரெண்டு மூனும் குடிக்கிறதுக்கு இத்தனை வகையுமா இருக்கே.

said...

வாங்க ஸ்ரீராம்.

உண்மை... அன்றைக்குப் 'போதுமடா சாமி'ன்னு ஆச்சு :-(

said...

வாங்க விஸ்வநாத்.

கவனிச்சுட்டீங்களா :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

இப்படி டிலே ஆனால் ஒரு டெர்மினலில் இருந்து இன்னொன்னு போறதே அவஸ்தை. இதுலே இரு ஏர்ப்போர்ட்லெ இருந்து பத்துமைல் தூரத்துலே இருக்கும் இன்னொரு ஏர்ப்போர்ட்ன்னா எவ்ளோ கஷ்டம் பாருங்க....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்க பயணம் , குறிப்பா வீட்டு வர்றது எல்லாம் சாகஸப்பயணம் ஆச்சே !!!

தில்லி ஏர்ப்போர்ட்லே தேவுடு காத்துருக்கேன் பலமுறை :-)

said...

வாங்க ஜிரா.

மெயின் டிக்கெட் க்வான்டாஸ். மத்ததெல்லாம் வெவ்வேற ஏர்லைன்ஸ்.

குடிச்சுட்டா திங்கறது பிரச்சனை இல்லை. எது கொடுத்தாலும் தின்னுருவாங்கன்னு ஒரு கண்டுபிடிப்புதான் :-)