'Haunted House' இப்படி ஒரு விளையாட்டு ரொம்ப நாளைக்கு முன்னால் வந்துக்கிட்டு இருந்ததே நினைவிருக்கா? அதுலே படமாத்தொங்கும் ஒரு ராணுவ அதிகாரி..நாம் அந்த இடத்தைவிட்டுக் கடந்து போகும்போதெல்லாம் நமக்குக் கிடைச்ச அனுபவம் எதுவா இருந்தாலும் சரி, அதுபோல தனக்கும் டேஷ் டேஷ் டேஷ் வருசத்துலே நடந்ததாச் சொல்வார். கிட்டத்தட்ட அந்த நிலைக்குப் போய்க்கிட்டு இருக்கேன் இப்போ!
எந்த நேரத்துலே நம்ம கொத்ஸ், ஊர் போய்ச் சேர்ந்ததும் அதை தொடரா எழுதுங்கன்னு திருவாய் மலர்ந்தருளினாரோ................ ததாஸ்து.................
நம்ம முருகன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை பூஜைக்குப்போய் அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு, நமக்குப் பிரிவுபசார ஸ்பெஷலாக் கோவிலில் ஏற்பாடு செஞ்சுருந்த 'தோசை' விருந்தைக் காத்திருந்து சாப்பிட நேரமில்லாமல், 'நம்ம பெயரைச் சொல்லி நீங்க எல்லாம் ரசித்துக்கொண்டாடுங்க'ன்னு பெரிய மனசோடு(?) சொல்லிட்டுக் கிளம்பி நாலுநாளாத் தங்கி இருக்கும் ஹொட்டேலுக்கு வந்து மீதி இருந்த பொட்டி கட்டும் வேலையை முடிச்சுட்டு மறுநாள் காலை வீட்டுக்குப்போய் அங்கே தயாரா இருந்த மற்ற பெட்டிகளை அள்ளிப்போட்டுக்கிட்டு வீட்டு ஓனர் அம்மாவிடம் சாவிகளைக் கொடுத்துட்டுப் போயிட்டு வாரோமுன்னு சொல்லிட்டு சண்டிகரில் இருந்து கிளம்பும்வரை எல்லாம் சரியாத்தான் இருந்துச்சு, ஓனரம்மா கண்கலங்கி சிந்திய கண்ணீரைத் தவிர!
துளசிதளத்தின் சண்டிகர் வாழ் வாசகர்கள்
போற வழியில் முருகனிடம் சொல்லிட்டே போகலாமுன்னு கோவிலுக்கு வண்டியை விட்டோம். அப்பதான் திருமஞ்சனம் முடிச்சு கடவுளர்கள் அனைவரும் உடை மாற்றிக்கிட்டு இருந்தாங்க. நம்ம நேயுடு மட்டும் சட்னு அலங்காரம் முடிச்சுக் கழுத்தில் துளசியோடு இருந்தார். 'போயிட்டு வரேன் போயிட்டு வரேன்'னு எல்லார்கிட்டேயும் உத்தரவு வாங்கிக்கிட்டு மூலவரிடம் போனோம். சண்டிகர் முருகனுக்கே அழுகை வந்துருச்சுன்னா பாருங்களேன். வானத்தையும் அழவச்சான்.
குருக்ஷேத்ரா வந்து சேரும்வரை மழை நிக்கலை. அப்பதான் பதிவுலக நண்பர் செல்லில் கூப்பிட்டார். கிளம்பியாச்சான்னார். குருக்ஷேத்ரா வாசலில் நிக்கிறேன்னேன். அதான் நம்ம 'பாரதம்' மீண்டும் எழுதப்படுகிறதே! தில்லியின் எல்லைக்கு வரும்வரை சீறிவந்த வண்டி எல்லை தொட்டதும் ஊர்ந்துவர ஆரம்பிச்சு ஹொட்டேல் போய்ச் சேரும்போது மணி அஞ்சு. ஆறுமணிக்குப் பதிவர் சந்திப்பு இருக்கு. ரெண்டு வாசகர்களும்(!!) அஞ்சு பதிவர்களுமா சந்திப்பு ஆரம்பிச்சது.
மூத்த பதிவர்கள் மூவரும் சுவாரஸியமாப் பேசிக்கிட்டே இருந்ததால் இளைய...... ரொம்பவே இளைய பதிவர்களுக்கு டேஷ் அடிச்சு நெளிஞ்சுக்கிட்டே இருந்தாங்க. காஃபி & ஐஸ்க்ரீமோடு இந்த இனிய சந்திப்பு ஏழே முக்காலுக்கு முடிஞ்சது.
பதிவர் 1
பதிவர் 2
பதிவர் 3
பதிவர் 4
இன்னும் அனுமதி வாங்காததால் இவர்களின் படங்களைப் போடலை. மன்னிக்கணும்.
நாங்களும் அறைக்குப்போய் மறுநாள் அதிகாலைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செஞ்சுட்டுச் சாப்பிட்டுத் தூங்கி அதிகாலை அஞ்சறைக்கு தில்லி விமானநிலையம் புது டெர்மினலுக்குப்போய் (பயந்துக்கிட்டே) செக் இன் செஞ்சு பயத்திலிருந்து தப்பிச்சோம். இட மாற்றம் என்பதால் நம்ம பெட்டிகளின் எண்ணிக்கை ஃபோர்மச்:(
சிங்கை போகும்வழியில்தான் கவனிச்சேன் என் ஒரு கால் குட்டையா இருக்குன்னு! சண்டிகர் வெய்யில் என் ஷூவோட ஹீலைப் பதம் பார்த்து வச்சுருக்கு. 26 மாசத்துக்குப் பிறகு அந்த ஷூவை இன்னிக்குக் காலையில்தான் முதல்முறையாப் போட்டுருந்தேன். இந்திய செருப்பு செக்கின் பேகில் போயிட்டதால் அதையும் எடுக்க வழி இல்லை:(
சிங்கையில் இறங்கினதும் மூணு மணிநேர ப்ரேக் இருக்கு நியூஸி விமானம் பிடிக்க.. சிட்டிக்குள்ளே போய் ஒரு ஜோடி வாங்கிக்கலாமான்னா.... என் பாஸ்போர்ட் காலாவதியாக ஒரு மாசமே இருப்பதால் வெளியே காலடி வைக்க அனுமதி இல்லை. அங்கே விமான நிலையத்துலேயே வாங்கிக்கவான்னால்...... எல்லாம் 'சீனத்து அளவில்' அழகழகா இருக்கு!
ஸ்வாரோஸ்க்கியில் கண்ணைப் பறிக்கும் யானைகள். வாங்கலையான்னு கேட்ட கோபாலிடம், ஊருக்குப்போய் வீட்டை வித்துட்டு வந்துதான் வாங்கணுமுன்னு சொன்னேன்.
ட்யூட்டிஃப்ரீயில் மகளுக்கு சில பொருட்களைப் பார்க்க இங்கேயும் அங்கேயுமா சுத்திக்கிட்டு இருந்தால், கோபால் கேக்கறார்...... 'இன்னொரு ஹீலைப் பிய்ச்சுப் போட்டுட்டியா?'ன்னு! எப்போ???? அது(வும்) தானாகவே எங்கியோ கழண்டு போயிருக்கு:-) தொலையட்டும் இப்போ ரெண்டு காலும் சமமா இருக்கேன்னாலும் சிரிப்பை அடக்க முடியலை:-))))
லவுஞ்சில் போய் கொஞ்சம் லைட்டா சாப்பிட்டோம். நான் கொஞ்சம் மெயில்பாக்ஸ் செக் பண்ணிட்டு சில மெயில்களை அனுப்பி வச்சுட்டு நியூஸி விமானத்துக்குள்ளே நேரா(!) நடந்து போனேன்.
தமிழ்ப்படங்களாக 'மைனா, விண்ணைத்தாண்டி வருவாயா, சிக்குபுக்கு' இது மூணும்தான். சிக்குபுக்கு மட்டும் பார்க்கலையேன்னு பார்த்து வச்சேன். பத்துமணி நேரத்தை ஓட்டணுமே! பொதுவா படங்களைவிட ப்ளைட் பாத் சுவாரசியம். படுக்க ஃப்ளாட் பெட்ன்னு பேர். ஆனா. முழங்கால் கீழே நழுவுது. அரைத்தூக்கமும் விழிப்புமா பொழுதுவிடியக் காத்திருந்து 'சதர்ன் ஆல்ப்ஸ் மலைத் தொடர்கள்' கண்ணுலே பட்டதும், இன்னும் கொஞ்சநேரத்துலே நம்மூர்லே தரை இறங்கப் போகுதுன்னு எதிர்பார்ப்புடன் இருந்த நிமிஷம் ஸ்க்ரீன்லே வட்டம் போடுது விமானம்.
'ரன்வேயில் முப்பது செ.மீ பனி விழுந்து மூடிக்கிடக்கு. ஏர்ப்போட்டையே பூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. உங்களை இங்கே இறக்க முடியாது. அதுக்குப் பதிலா ஆக்லாந்துக்குக் கொண்டு போறேன்'னு பைலட் சொல்றார்:(
ஒருமணி இருவது நிமிசம் இன்னும் பறக்கணும்.சிங்கப்பூர் தமிழ்ப்படமுன்னு ஒன்னு இருந்துச்சேன்னு.......மாயாஜால்/மேஜிக்மேன் என்ற தலைப்புன்னு நினைப்பு. மனைவியை இழந்த மிடாக்குடிகாரரும் அவர் மகனுமாக இருக்கும் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்கள். எப்படி அவர் குடியில் இருந்து மீண்டு வர்றார் என்ற கதை. நம்ம மணிரத்தினத்தையும் பிஸி ஸ்ரீராமையும் மிஞ்சிட்டாங்க,. எண்ணிப் பத்தே வரி வசனங்களும் இருட்டிருட்டான லொகேஷன்களும்!
ஆக்லாந்து வந்து சேர்ந்தோம். பயணிகள் எல்லோரையும் வகுப்பு அனுசரிச்சு வெவ்வேற லவுஞ்சுக்கு அனுப்பினாங்க,. நாங்க கோரு க்ளப் போய்ச்சேர்ந்து ஒரு காஃபி குடிச்சுட்டு மடிக்கணினியைத் திறந்து கிறைஸ்ட்சர்ச் நிலவரத்தை ஆராய்ஞ்சுக்கிட்டும் மகளுக்குத் தொலைபேசி உள்ளூர் பனிமழைச் சமாச்சாரத்தையும் தெரிஞ்சுக்கிட்டோம். ஏகத்துக்கும் பனி பெய்யுது. 19 வருசத்துக்கு முன்னாலே 1992 ஆண்டு இதே மாதிரி இருந்துச்சுன்ற புள்ளிவிவரம் கிடைச்சது. ஆஹா...... அப்போ நகரின் வடக்கு & கிழக்குப் பகுதி முழுசும் மின்சாரம் இல்லாமல் போனதும், மேற்கு & தெற்கில் இருந்தவர்களாகிய நாங்கள் எல்லோரும் ஓப்பன் ஹோம் என்று அறிந்த & அறியாதவர்களையெல்லாம் வீட்டில் வரவேற்று உணவு கொடுத்து உதவியதையும் மறந்துதான் போயிட்டோம். அட ராமா.....அப்படியா ஆகி இருக்கு இப்போ?
மகள் வீட்டைச் சுற்றிப் படங்கள் எடுத்து உடனே அனுப்பி வச்சாள். தாய் எட்டடின்னால் குட்டி பதினாறடி இல்லையோ! :-)))))
ஒரு மணிவரை லவுஞ்சில் இருந்து எலுமிச்சம்பழ சாதம் போல ஒரு ரைஸ் ஸாலட் சாப்பிட்ட பிறகு, எங்களுக்காக அஸைன் செஞ்சுருந்த பெண்மணி வந்து, இன்னும் அங்கே நிலமை சரியாகலை. இன்னிக்கு இந்த ஊரில் தங்கணும். உங்க பெட்டிகள் எல்லாம் வெளியே வருது. எடுத்துட்டுப்போய் இங்கேயே இமிக்ரேஷன் கஸ்டம்ஸ் எல்லாம் முடிச்சுருங்கன்னு சொன்னாங்க. 'எங்க கேபின் பேக் எல்லாம் ப்ளேன்லேயே இருக்கே'ன்னோம். அதையும் கொண்டு வர்றோமுன்னு சொல்லிப் போனாங்க.
ஒரு இருவது நிமிசமாச்சு நம்ம பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் செஞ்சு எண்ட்ர்ரி போட்டு வாங்கி, பெட்டிகளையெல்லாம் எடுத்து சிகப்பு விளக்கு கேட்டில், ஏற்கெனவே டிக்ளேர் செஞ்ச சாமான்களையெல்லாம், இது ஏலக்காய், இது குங்குமப்பூ, இது கறிப்பவுடர், இது இண்டியன் ஸ்வீட்ஸ்ன்னு எடுத்துக் காமிச்சாலும் அன்றைக்கு இருந்த குழறுபடியில் ஒன்னையுமே சரியாச் செக் பண்ணாமல் சரி சரி போங்கன்னுட்டாங்க. பெட்டிகளை இறக்கும்போதே, நாட்டுக்குள் வரவேகூடாத சாமான்களை நாய் பிடிச்சுருக்கும் போல! அடடா.... இப்படி ஆகுமுன்னு தெரிஞ்சுருந்தால் இன்னும் கொஞ்சம் கொண்டு வந்துருக்கலாமே! ருத்திராட்சம் தப்பிச்சது வரை பாக்கியம்:-)))))
உங்களுக்கு லீங்கம் ஹொட்டேல் ஒதுக்கி இருக்குன்னு டாக்ஸி சிட் கொடுத்தாங்க. ஆஹா.... ருத்திராட்சமுன்னு சொன்னதும் அந்த லிங்கேஸ்வரனே நமக்கான இடத்தை ஏற்பாடு பண்ணிட்டாரு போல! யார் அந்த மஹாலிங்கம்? நல்லா இருக்கட்டுமுன்னு சாமான்களை அடைச்ச வண்டியில் ஏறிப்போனோம்..............
தொடரும்........................:-)
PIN குறிப்பு: பதிவின் நீளம் கருதி, பாக்கி அப்புறம்!
Sunday, July 31, 2011
Haunted House 1
Posted by துளசி கோபால் at 7/31/2011 10:21:00 PM 7 comments
Labels: அனுபவம் Christchurch NZ
Friday, July 15, 2011
ஒட்டகத்தைக் கட்டிக்கோ........... (ராஜஸ்தான் பயணத்தொடர் 37)
தேவி Kகுண்ட் சாகரில் மீளாத்துயிலில் இருப்பவர்களைத் தொல்லைப்படுத்த வேணாமேன்னு சைலண்டா கொஞ்சம் க்ளிக்கிட்டுக் கிளம்பினோம். இங்கே இருந்து ஒரு நாலைஞ்சு கிலோமீட்டர் தூரத்துலே ஒட்டக ஆராய்ச்சி நிலையம் இருக்கு. மூணு மணிக்குத்தான் பார்வையாளர்களுக்கு அனுமதி என்றதால் நமக்கு குடைகளைப் பார்த்துட்டுப் போக நேரம் இருந்துச்சு. பத்து நிமிசம் முன்னாலேயே போயிட்டோம். நுழைவுச்சீட்டுக்காகக் காத்துருந்த நேரத்தில் மூணு வெள்ளைக்காரப் பயணிகள் வந்து சேர்ந்தாங்க. அதுலே இருந்த பொண்ணுக்கு.....ஜெய்ஸல்மீர்லே ஒட்டக சவாரி கொண்டுபோறோமுன்னு சொல்லி ஆயிரம் ரூபாய்க்கு ஆட்டையைப் போட்ட ஒருத்தர் ஒட்டகத்தைத் தொட்டுப் பார்க்கக்கூட விடலைன்னு புலம்பல்.
கவலைப்படாதே. இங்கே வெறும் இருவது ரூபாய் கட்டுனா ஒட்டக சவாரி செய்யலாம். நாங்களும் அதுக்கு டிக்கெட் வாங்கப் போறோம்னு சேதி சொன்னேன். உள்ளே போக நமக்கு பத்து ரூ. அவுங்களுக்கு இருபது. மற்ற சார்ஜ் எல்லாம் ஒரே மாதிரிதான். கேமெராவுக்கு இருபது கட்டணும்.
உள்ளே போனதும் விஸிட்டர் புத்தகத்துலே கையெழுத்துப் போடணும். அரசு நடத்தும் இடம் பாருங்க. நேஷனல் ரிஸர்ச் செண்டர் ஆன் கேமல், பிகானீர். அங்கே இருந்த ஒருத்தர் கைடு வேணுமா? முப்பது ரூபாய்தான்னார். சரின்னு சொன்னதுக்கு சந்தோஷமாக் கிளம்பி எங்களோடு வர்றார். இவரே கைடு பண்ணுவாராம். வேலை செய்யும் இடத்துலேயே பார்ட் டைம் ஜாப்.
முன்புறம் பெரிய பெரிய கட்டிடங்களா லேப் ஆஃபீஸ். அது இதுன்னு இருக்கு. இதெல்லாம் நமக்கு எதுக்கு? நேரா ஒட்டகம் பார்க்கணும். முதலிலே நம்ம வடிவேலுவை நினைச்சுக்கும்படி ஆச்சு. ஒட்டகப்பால் டீ!
தனித்தனியா நீள நீளமாக் கொட்டகை போட்டு வரிசையா ஒட்டகங்களைக் கட்டி விட்டுருக்காங்க. கொட்டகைக்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரை:( தகிக்கும் வெய்யிலுக்கு இன்னும் கொளுத்தாது? ப்ச் ............பாவம். ஒவ்வொன்னுக்கும் தலை உசரத்துலே தலையை நீட்டி வேடிக்கை பார்க்கும் விதமா ஒரு குட்டி ஜன்னல். ஜன்னலுக்குக் கீழே ஒவ்வொரு தொட்டி.
மாடுகள் போல குணம் இல்லையோன்னு தோணல். சொல்லி வச்சமாதிரி எல்லோரும் தொட்டிக்குள்ளே தலையை வச்சுச் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. லஞ்சு டைமோ?
இங்கே நாலுவகை ஒட்டகங்கள் இருக்கு. பிகானிரி, ஜெய்ஸல்மீரி. கச்சி. மேவாரி ன்னு நாலு பிரதேசத்து வகைகள். 137 ஆண்களும் 228 பெண்களுமா மொத்தம் 365.
புள்ளைத்தாய்ச்சிகளுக்கு! அப்போ தாய்ச்சனுகளுக்கும் இடம் ஒதுக்கியாச்சா:-)))))
பால் பண்ணைக்கு, ஆஸ்பத்திரிக்கு, புள்ளைத்தாய்ச்சிகளுக்கு, பிரசவிச்ச அம்மாக்களுக்குன்னு தனித்தனி ஏரியாவும் கட்டிடங்களும். அம்மாக்கள் இருக்கும் இடத்துக்குப் பக்கமா நர்ஸரி. ஆசையா ஓடிப்போய் பார்த்தால்..... அம்மா அம்மான்னு அழுதுக்கிட்டு இருக்குதுங்க பசங்க. கம்பி அடிச்சுவச்சக் கட்டைசுவருக்கு அந்தப் பக்கமா அம்மாக்கள் எல்லோரும் சொல்லி வச்சமாதிரி தண்ணீர் குடிச்சுக்கிட்டு நிக்கறாங்க. பசங்க எட்டிப் பார்த்துக்கிட்டே இங்கேயும் அங்கேயுமா ஓடுது.. தாயைப் பார்த்தால் பசி வந்துருக்குமே........... அஞ்சு வரை விஸிட்டிங் டைம் என்பதால் அதுக்குப்பிறகு பால் பண்ணைக்குக் கொண்டுபோய் பால் கறந்துக்கிட்டு அப்புறமா குழந்தைகளைப் பசியாற விடுவாங்களாம்.
நாம் போய் நின்னதும் அம்மாவை மறந்துட்டு வேடிக்கை பார்க்க நம்மை நோக்கி வருதுங்க பசங்க. பெரிய பெரிய கண்களை வச்சுக்கிட்டு ஓடிவந்து கேமெராக் கண்ணை முறைச்சுப் பார்த்துச்சு ஒன்னு:-)பிறக்கும்போதே குறைஞ்ச பட்சம் முப்பத்தியஞ்சு கிலோ எடை .உயரம் குறைஞ்சது நாலடி. ரெண்டு ரெண்டரை வருசம் தாய்ப்பால் குடிக்குதுங்க. நம்ம ஆசியாக் கண்டத்து ஒட்டகங்கள் அஞ்சு வயசுலே ஆளாகிருதுங்களாம். மற்ற நாடுகளைவிடக் கொஞ்சம் லேட்.
வளர்ந்த ஒட்டகங்கள் சுமார் 700 கிலோ வரை எடை இருக்குமாம். ஆயுசு? நாப்பது அம்பது வருசம் வரை உயிர்வாழும் வேற எந்த ஆபத்தும் இல்லாம க்வாலிட்டி ஆஃப் லைஃப் நல்லா இருந்தால்! பாலைவனத்துலே ஒரு நாளைக்கு இருபத்தியஞ்சு மைல் தூரம் கூட நடக்குமாம். சாப்பிடவோ குடிக்கவோ ஒன்னும் கிடைக்கலைன்னாலும் ஒரு வாரம் வரை தாக்குப் பிடிக்குமாம்.!!! இந்த 'ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்' எல்லாம் மனுசனுக்குத்தானா? எங்கே அந்த தண்ணி பாட்டில்? கொஞ்சம் இப்படித்தாங்கன்னு கோபால்கிட்டே கேட்டேன்.
குடிக்கும் தாய்களைப் பார்க்கும் பிள்ளைகள்!!
தண்ணியாண்டை கொண்டு விட்டால் ஒரே தடவையில் 100 லிட்டர்கூட குடிச்சுருங்களாம். குவாட்டர் மட்டும் அடிக்காது..... அதெல்லாம் எந்த மூலைக்கு:-)
குச்சிக்குச்சிக் காலை வச்சுக்கிட்டு 450 கிலோ எடை வரை சுமந்துக்கிட்டு என்னமாதிரி சூடுன்னாலும் அசராம நடக்குமுன்னு சொன்னப்ப ஆச்சரியமாத்தான் போச்சு. .
யானைப்படை குதிரைப்படை மாதிரி ஒட்டகப்படை கூட வச்சுருந்தாங்களாம். இப்பவும் ராணுவத்துலே வேலை செய்யும் ஒட்டகங்கள் உண்டு.
ஒட்டகவண்டி ஒன்னு வச்சுருக்காங்க. அதுலே போகவும் அதே இருபது ரூ தான். வண்டியில் உக்கார்ந்து போக நாம் கோழைகளா என்ன? அதான் ஏற்கெனவே ரெண்டு டிக்கெட்டு வாங்கியிருக்கே..... கோபாலுக்கும் நம்ம ட்ரைவர் ப்ரதீபுக்கும்:-)
ஒரு நிமிச வீடியோ ஒன்னு உங்களுக்காக:-)
ஜோத்பூரில் காலை ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனப்ப ஒரு வெள்ளைக்காரரை சந்திச்சோம். ஜெர்மனியில் இருந்து ஹாலிடேக்குத் தனியா வந்துருக்கார். கொடுத்துவச்ச மனுசர்ன்னு கோபால் நினைச்சார். அவர் முகத்துலே ஒரு மில்லி செகண்டுக்கு ஒரு சோகம் எட்டிப் பார்த்துச்சு:-)
ஜெய்ஸல்மீர் போயிட்டு இங்கே வந்துருக்கார். போட்டோக்ராஃபி ஹாபியாம். அட்டகாசமான கேமெரா(பை) வச்சுருந்தார். நல்ல கேமெராவாத்தான் இருக்கணும். ஊர் எப்படி இருந்துச்சு, என்ன பண்ணீங்கன்னு கேட்டதுக்கு ரொம்ப சூடு. பாலைவனத்துலே ஒட்டக சவாரி போனேன்னார். நல்லா இருந்துச்சான்னா..... அப்போ நல்லா இருந்துச்சு. இப்ப பின்பக்கம் பூராவும் ஒரே வலி. தொடையெல்லாம் எரிச்சல். நடக்கவே முடியலைன்னார். அடடா....இந்த அனுபவம் கோபாலுக்குக் கிடைக்கலையேன்னு எனக்கு ஒரே வருத்தமாப் போயிருச்சு. அதான் இங்கே .......
உக்கார்ந்துருக்கும் ஒட்டகத்துலே 'ஏறி உக்கார' ஒட்டகக்காரர் உதவி செஞ்சார். ஒரு 150 மீட்டர் நடந்துபோய் திரும்பி வந்துச்சு ஒட்டகம். போன வருசத்து ஆணழகன் போட்டியிலே ஜெயிச்சவன் இவன்:-) தகவல் கொடுத்த கைடு காதுலே வெள்ளையும் சிகப்புமாக் கல்லுவச்ச அழகான தங்கக்கம்மல் போட்டுருந்தார். நிறைய இடங்களில் இப்படி ஆண்கள் கம்மல் போட்டுருப்பதைப் பார்த்தேன். நல்லாத்தான் இருக்கு. ஐ மீன் கம்மல்:-))))
அங்கிருந்த ஒரு ஷெட் லே மலைபோல் குமிச்சு வச்சுருக்காங்க ஒட்டகத் தீனியை. பொடியா அரிஞ்ச கோதுமை வைக்கோலாம். வழியில் ஒரு இடத்தில் பார்த்த பொதி இந்தத் தீவனமாத்தான் இருக்கணும்.மறுபடி மில்க் பார்லர் வழியா திரும்பினோம். பக்கத்து அறையில் ஒட்டகத்தோல் செருப்புக்கள் ஹேண்ட் பேக் பொம்மைன்னு வித்துக்கிட்டு இருக்காங்க. ச்சும்மா வேடிக்கை மட்டும் நமக்கு.
தொடரும்.......................:-)
Posted by துளசி கோபால் at 7/15/2011 09:52:00 PM 19 comments
Labels: அனுபவம்
இடப்பெயர்ச்சி
நோட்டீஸ் போர்டு அறிவிப்பு:-)
மக்கள்ஸ்,
சண்டி கிளம்பிட்டா....... இனி நேரா நியூஸிதான். அங்கே போய் செட்டில் ஆன சில நாட்களில் மீண்டும் துளசிதளத்தில் பதிவுகள் தொடரும். அதுவரை எல்லோரும் மகிழ்ச்சியா அர்ரியர்ஸ் எல்லாத்தையும் முடிச்சுட்டு நல்ல பிள்ளைகளா வகுப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பீர்கள் என்ற அதீத நம்பிக்கையுடன்.............
இப்படிக்கு,
உங்கள் டீச்சர்:-)
Posted by துளசி கோபால் at 7/15/2011 09:46:00 PM 40 comments
Labels: அனுபவம் நோட்டீஸ் போர்டு
பிகானீரில் வெண்கொற்றக் குடைகள் வரிசை ......... (ராஜஸ்தான் பயணத்தொடர் 36)
எலிக்கோவிலில் இருந்து ஒரு முப்பது கிமீ தூரத்தில் பிகானீர் நகரம். இதை நிர்மாணிச்ச ராஜா ராவ் பிகா, நம்ம ஜோத்பூர் மஹாராஜா ராவ் ஜோதாவின் அஞ்சாவது மகன். பட்டத்துக்கு வாரிசு 'தான்' இல்லை என்பது நல்லாவே தெரிஞ்சு போச்சுன்னா வேற ஊருலே போய் தனியா ஆட்சி அமைச்சுக்கும் டெக்னிக் தமிழ்நாட்டுலே கூட கேட்ட/பார்த்தமாதிரி இருக்கே! ராஜான்னு ஆனபிறகு சம்பிரதாயமான கோட்டை கொத்தளம் எல்லாம் வேண்டித்தானே இருக்கு, இல்லையா? வம்பு எதுக்குன்னு பாலைவனத்துக்குள்ளே(யே) போய் செட்டில் ஆகிட்டார்.
ஊருக்குள் நுழையும்போதே நகரின் பழமை, பார்க்கும் இடங்களில் எல்லாம் கண்ணுலே பட்டுச்சு. பெரிய மதிள் சுவரில் இருக்கும் வாசல் வழியாகப் போறோம். கடைகள் நிறைஞ்ச பகுதியில் குறுகலான தெருக்கள். இப்பவும் வழி தெரியாமல் சுத்திட்டு, போக்குவரத்தைச் சரி பார்க்கும் காவல்துறையாரைக் கேட்டு, சரியான இடத்துக்குப் போனோம். பெரிய சிகப்புக் கல் கட்டிடங்கள், கங்கா தியேட்டர் ( இது மஹாராஜா கங்கா சிங் மஹாலின் ஒரு பகுதி) குழந்தைகள் பூங்கா எல்லாம் கடந்து ஹொட்டேல் ராஜ் விலாஸ் பேலஸ்ஸில் நுழைஞ்சோம். பார்த்தாலே பிடுங்கித்தின்னும் அழகு. லாபியில் கண்ணாடிக்கூண்டு லிஃப்ட்.
இதுவும் சரித்திர சம்பந்தமுள்ள இடம்தான். 1866 வது வருசம் பிரிட்டிஷார் ஆட்சியில் கவர்னர் ஜெனரல் வசிப்பதற்கும் அவர் இல்லாத சமயங்களில் அவருடைய பிரதிநிதி தங்கிக்கவும் கட்டியிருக்காங்க. அப்ப மஹாராஜா டுங்கர் சிங், பிகானீர் அரசர். அவருடைய காலத்துக்குப்பின் பட்டத்துக்கு வந்த மஹாராஜா கங்கா சிங், இந்த மாளிகையை அரசரைக் காணவரும் முக்கிய விருந்தினர்களுக்கான இடமா மாத்திக்கிட்டார். அதுக்குப்பிறகு அரச குடும்பக் கல்யாண விழாக்களில் சம்பந்திகள் வந்து தங்கும் இடமா இருந்துருக்கு.
இப்ப இருக்கும் ராஜா நரேந்திர சிங் ஜியின் ஆட்சியில் இதை(யும்) ஹொட்டேலா மாத்தி இருக்காங்க. மொத்தம் 57 அறைகள். மாடியில் ரெஸ்ட்டாரண்ட், பார் இப்படிப் பார்க்க கிராண்டாத்தான் இருக்கு.
நமக்குக் கொடுத்த அறையில் ஒரு மக்கல் வாசனை. போதாததுக்கு சிகரெட் நாத்தம். யக்.......:( வேறு அறை மாத்திக் கொடுக்கச் சொன்னால்....... வரவேற்பில் இருந்த பெண் (ட்ரெய்னி) எல்லா கேள்விக்கும் ஒரே மாதிரி முழிக்கறாங்க. போட்டுருந்த புதுமாதிரி மூக்குத்தி நல்லா இருந்துச்சு:-) ட்ரெயின் பண்ணும் நபர் அடிக்கடிக் காணாமப் போயிடறார்!
அறை மாத்துனதும் நாங்க ரெஸ்ட்டாரண்டுக்குச் சாப்பிடப்போனோம். அலங்கரிச்ச டைனிங் ஹாலில் ஈ காக்கை இல்லை. காலிக் கவுண்ட்டரில் நாலு தட்டு தட்டுனபிறகு ஒரு தலை எட்டிப் பார்த்துச்சு. சாப்பிடவா வந்துருக்கீங்கன்னு ஒரு (அனாவசியக்) கேள்வி! பின்னே? அலங்காரம் பார்க்கவா?
ரெண்டேகாலுக்குக் கிளம்பி இப்போ சத்ரி பார்க்கப் போய்க்கிட்டு இருக்கோம். ஜெய்ஸல்மீர் போகும் நேஷனல் ஹைவேயில் எட்டு கிலோ மீட்டர் போகனும் தேவி குண்ட் என்ற இடத்துக்கு. அரசகுடும்ப சுடுகாடுதான் இது. நாம் ஜெய்ப்ப்பூரில் பார்த்தமாதிரி அரச குல ஆண்களுக்குத் தனி, பெண்களுக்குத் தனி இடமுன்னு பிரிச்சு வைக்காம எல்லோருக்கும் பொதுவாவே இருக்கு. பயங்கர ப்ளானிங்! ஒழுங்கு கலையாம வரிசைகளில் வச்சு எரிச்சு அப்படியே அந்த இடத்தில் மண்டபங்கள் கட்டி இருக்காங்க. ஒரு கோணத்துலே இருந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தூண்களே தூண்கள்.
மஹாராஜா கல்யாண் சிங் அவர்களின் சத்ரிதான் இங்கே ஏற்றவும் மூத்தது. இவர் பிகானீரின் அஞ்சாவது ராஜா. மற்ற நான்கு ராஜாக்கள்மாரை எங்கே எரிச்சாங்களோ? மண்டபத்துக்கு மேலே குடைபோல் ஒரு அமைப்பு கட்டி இருப்பதால் இதைச் சத்ரின்னு சொல்றாங்க. அரச குடும்பத்து அங்கங்களின் முக்கியத்தை அனுசரிச்சு பெருசும் சிறுசுமா இருக்கு. அலங்காரங்களும் அப்படியே! ஆண்களுக்கு அவர்கள் பெயர் பொறிச்ச ஹெட்ஸ்டோன் மாதிரி ஒரு பலகைக்கல். பெண்களுக்கு அவர்கள் காலடி பதிச்ச பலகைக் கல். குட்டிப்பசங்களுக்குக் குடை இல்லையாம்..... சிம்பிளா கட்டிட்டாங்க.
உடன்கட்டை ஏறின சதிகள் 22 பேருக்கு தனித்தனி மண்டபங்கள். இவுங்க எல்லோரும் மஹாராஜா கஜ் சிங் காலத்துக்கு(1745 - 1787) முற்பட்டவங்க. இந்த சதிகள் கூட்டத்துலே ஒரே ஒரு சதனோட நினைவு மண்டபமும் இருக்கு. நமக்கு கைடு இல்லாததால் தேடிக் கண்டுபிடிக்க நேரம் இல்லை:( மனைவி மேல் எவ்வளோ பிரியம் பாருங்க...... கோபாலுக்குக் கட்டாயமாக் காமிச்சுருக்க வேண்டியது....ஜஸ்ட் மிஸ்டு! (1829 வது வருசம் இப்படி உடன்கட்டை ஏறுவது சட்டத்துக்கு விரோதமான செயல்ன்னு சட்டம் உருவாச்சு)
உள் விதானங்களிலும் அழகான சித்திரவேலைப்பாடுகள். அசல் தங்கத்துலே கூட பெயிண்டிங் செஞ்சது சில !
மண்டபங்கள் பெரும்பாலும் வெள்ளைப் பளிங்குன்னாலும் ஒரு சிலது சிகப்புக்கல்லிலும் இருக்கு! வெள்ளைப்பளிங்கை விட இந்த சிகப்புக்கல் விலை உயர்ந்ததாம்.
என்னதான் ராத்திரி பகலுன்னு இருபத்தினாலு மணி நேரமும் குடை பிடிச்சுக்கிட்டுப் படுத்துக்கிடந்தாலும் சூடு எரியத்தானே செய்யும்? அதுக்காகவே இந்த இடத்தையொட்டி கல்யாண் சாகர் என்ற பெரிய குளம் ஒன்னு இருக்கு
விஸ்ராந்தியா இப்படி ஓய்வு எடுத்தால் நல்லாதான் இருக்கு. குடை இருந்தாத்தான் மதிப்பாம். எனக்கும் ஒரு குடை வைக்கணும். இல்லைன்னா செத்துருவேன்னு கோபாலை மிரட்டி வச்சுருக்கேன்:-)
அஞ்சு ரூபா நுழைவுக் கட்டணம் இதுக்குள்ளே போய்ப் பார்க்க. அடிக்கும் மொட்டை வெய்யில் குடை இல்லாம ரெண்டு பேர் வெளியில் காவலுக்கு இருந்து கட்டணம் வாங்கிக்கிட்டு ரசீது கொடுக்கறாங்க.
தொடரும்....................:-)
Posted by துளசி கோபால் at 7/15/2011 09:45:00 PM 17 comments
Labels: அனுபவம்
எலிக்கோவில் ......... (ராஜஸ்தான் பயணத்தொடர் 35)
கர்னி மாதா கோவிலுன்னு சொல்லாம, எலிக்கோவிலுன்னு சொன்னால் வெள்ளைக்காரப் பயணிகளுக்குச் சட்னு புரிஞ்சுருது. 'அது என்னடா அதிசயம்?'ன்னு இந்தப் பக்கம் வந்து எட்டிப் பார்த்துட்டுத்தான் போறாங்க.
புகழ் பரவப்பரவ, ஜோத்பூர் ராஜா, ராவ் ஜோதாகூட கர்னி மாதாவை ஜோத்பூருக்குக் கூட்டிப்போய் தான் புதுசா கட்ட இருக்கும் கோட்டைக்கான இடத்தை ஆசீர்வதிக்கச் சொல்றார். இந்த மாதாதான் அஸ்திவாரம் போட முதல் கல்லை எடுத்துக் கொடுத்தாங்களாம்.
1454 வது வருசம் கர்னி மாதாவின் கணவர் இறந்துட்டார். தங்கையின் நாலு பிள்ளைகளோடு இவுங்க இருந்தாலும் அடிக்கடி தவம் செய்ய ஒரு குகைக்குப் போயிருவாங்களாம். இப்படி இருக்க, 1463 வது வருசம் பக்கத்தூர் திருவிழாவுக்குப் போன தங்கையின் கடைசிப்பையன் லக்கன் அங்கே ஒரு குளத்தில் குளிக்கும்போது மூழ்கி இறந்துடறான். அவன் சவத்தைக் கொண்டுவந்து அக்கா கர்னிமாதாவின் முன்னால் போட்டுட்டு அவனை எப்படியாவது உயிர்ப்பிச்சுக் கொடுக்கணுமுன்னு தங்கை குலாபி வேண்டிக்கிட்டுக் கதறி அழறாங்க.
கர்னிமாதா யமனிடம் உயிரை மீண்டும் தரும்படிக் கேட்க, யமன் சொல்றான். ' ஐ ஆம் ஸாரி. அந்த உயிர் ஏற்கெனவே பூலோகத்தில் வேற இடத்துலே பிறந்துருச்சு. என்னாலே இனி ஒன்னும் செய்ய முடியாது'ன்னு:(
கர்னிமாதாவுக்கு கோபம் வந்துருச்சு. 'ஓக்கே..... இனி என் வம்சாவளியில் பிறந்த யார் உயிர் போனாலும் அவுங்களை வேறெங்கும் பிறக்க வைக்க உனக்கு ரைட்டு இல்லை. அந்த உயிர் எலிகளா மறுபிறவி எடுத்து இங்கே என்னுடன் கூடவே இருக்கட்டும்' ன்னு சொல்லிவச்சாங்க யமனிடம்.
இப்படிப் பிறந்த எலிகள்தான் இந்தக் கோவில் முழுசும் ஓடிப்பிடிச்சு விளையாடிக்கிட்டு இருக்குதுங்க. உலகத்துலேயே எலிக்கோவிலா இருப்பது இது மட்டுமே! ( மற்றபடி மதுரா வ்ருந்தாவன் கோவில்களில் கருவறையில் எட்டிப்பார்க்கும் எலிகள் கணக்குலே வராது, கேட்டோ!)
இருபதாயிரம் எலிகள் வரை இங்கே இருக்குன்னு ஒரு கணக்கு. அதுகள் ஓடி ஒளியத் தோதா அங்கங்கே சுவர்களில் கொஞ்சம் ஓட்டைகள் வச்சுருக்காங்க.
1538 வது வருசம் தன்னுடைய 151 வது வயசில் கருவறைக்குப் பக்கம் வந்து அப்படியே மறைஞ்சுட்டாங்களாம் மாதா. இறுதிச் சடங்குக்கு உடல் இல்லாமப் போயிருச்சுன்னு சொல்றாங்க.
கிராமங்களில் கதைகளுக்கா பஞ்சம்? அதுவும் இது ஐநூறு வருசப் பழசுன்றதால் ஒவ்வொருவர் வாயிலிருந்தும் புறப்படும்போது கண்ணு மூக்கு வச்சு, கொஞ்சம் மசாலா சேர்த்து........ இப்போ ஏகப்பட்ட வெர்ஷன்ஸ்!!!
கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதானே? கர்ணி மாதாவும் நம்பியவர்களைக் கைவிடுவதில்லை என்பது வந்து போகும் பக்தர்களைப் பார்த்தாலே தெரியுது!
வெள்ளிக்கதவைக் கடந்து விசாலமான வெளி முற்றத்துலே நுழையறோம். கண்ணுக்கு எதிரா இன்னொரு உள் முற்றம் தெரியுது., அதுலே நடுவில் உயரம் குறைவா சின்னதா ஒரு சந்நிதி. இந்த சந்நிதிகூட கர்னிமாதா தானே தனக்குக் கட்டிக்கிட்டதுதானாம். சந்நிதிக்குப் பக்கத்தில் போகவிடாமல் கம்பித்தடுப்பு நீளமா இருக்கு.
நம்மிடம் இருந்த லட்டுகள் இருக்கும் காகிதக் கவரை தடுப்புக்குள் இருக்கும் கோவில் ஊழியர்கள் ( சின்னப்பூசாரிகள்?) கைநீட்டி வாங்கி அதுலே இருந்து சில லட்டுகளை தடுப்புக்குள் இருக்கும் அண்டாக்கள் ஒன்றில் போட்டுட்டு மீதி லட்டுகளை நம்ம கையில் கொடுத்துடறாங்க. தேங்காய் கொண்டு வரும் பக்தர்களிடமிருந்து வாங்கும் தேங்காயை உடைக்காம வாங்கி வச்சுடறாங்க. அது ஒரு குவியலாக் கிடக்கு ஒரு பக்கம். நாம் கருவறையை வலம் வர்றோம். அங்கே சுவரின் ஓரமாத் தரையெங்கும் லட்டுத்தூள் சிதறிக்கிடக்கு. அங்கங்கே எலிகள் சில கொறிச்சுக்கிட்டு இருக்குதுகள். நம் பங்குக்கு நாமும் ஒரு லட்டை உடைச்சு அங்கங்கே போடறோம். அசுவாரசியமா ஒன்னு வந்து வாய் வச்சது. என்னதான் லட்டுன்னாலும் பொழுதன்னிக்கும் இதையே தின்னா அதுகளுக்கும் போரடிக்காதா? பாவம்.........
தரையெல்லாம் கருப்பும் வெள்ளையுமா மார்பிள் டைல்ஸ் போட்டு வச்சுருக்காங்க. கருப்பு எலி இருப்பதே சிலசமயம் கண்ணுக்குத் தெரியலை. எங்கியாவது மிதிச்சுக்கிதிச்சு வச்சுடப்போறோமேன்னு கவனமா காலடி எடுத்து வச்சு நடந்தேன். இந்த எலிகள் நம்மீது பட்டால் நமக்கு அதிர்ஷ்டமாம். அதுக்காக மிதிச்சா வைக்கமுடியும்? ஒருவேளை அதே வந்து நம்மீது படட்டுமுன்னு கையை நீட்டி இருக்கலாமோ?
இந்த எலிகள் கொஞ்சம் நீளமான உடலோடு இருக்குதுகள். எல்லாம் கிட்டத்தட்ட ஒரே அளவு. 17 இல்லை 18 செ,மீ நீளம். கருவரையை வலம் வந்து கம்பித்தடுப்பில் சாய்ஞ்சு மூலவர் முன் நிக்கறோம். அங்கே பெரிய தட்டுகளில் லட்டூஸ் வச்சுருக்காங்க. ஒன்னுரெண்டு எலிகள் அதன்மேல் நடந்து போய்க்கிட்டு இருந்துச்சு. இருபதாயிரம் எலிகள் வரை இருந்ததாம். இப்போ எலிகள் எண்ணிக்கை குறைஞ்சு போயிருக்கு. சீக்கோ என்னவோ...... அப்படி ஆரோக்கியமா இருப்பதுபோல் தெரியலை
கர்ணி மாதா நிஜமாவே கருணை உள்ளவள்தான். அவளுடைய வம்சம் இப்படி எலியா இல்லாம பாம்பா இருந்துருந்தால்...... ஐயோ நினைச்சுப் பார்க்கவே முடியலை! .
மாதா ரெண்டரை அடி உயரச் சிலை. தலையில் சின்னதா ஒரு க்ரீடமும் கையில் திரிசூலமும் ஏந்தி நிக்குது.. இந்த எலிக்கூட்டத்தில் வெள்ளை எலி உங்க கண்ணில் பட்டால் விசேஷமாம். நம்ம கண்ணில் அப்படி ஒன்னும் படலை. அதுக்காக விட்டுற முடியுதா? வெளியே கடையில் ஒரு ஒரிஜினல் மூலவர் படம் வாங்கிவந்தேன். அதுதான் கீழே இருக்கு. தட்டில் ஒரு வெள்ளெலி தெரியுதா? உங்களுக்கு(ம்) குட் லக்.
மூலவர்
பிகானீர் மஹாராஜா கங்காசிங் இந்தக் கோவிலைக் கட்டிக் கொடுத்துருக்கார். முழுக்க பளிங்கு! பதினாறாம் நூற்றாண்டில் மாதா மறைஞ்சதும் கட்டியது இது. கோவில் விதானத்தில் நவகிரகங்களுக்கான அதிபதிகளை அவரவர் வாகனங்களோடு வரைஞ்சு வச்சுருக்காங்க. சனி எருமை வாகனம் வச்சுருக்கார்!
நவகிரக விதானம்
பலவருசங்கள் கழிச்சு இன்னொரு மஹாராஜா கஜ் சிங் கோவிலுக்கான வெள்ளிக் கதவுகளை செஞ்சு கொடுத்தார். ரொம்ப அழகான பெரிய கதவுகள். அதில் உள்ள மாதா உருவங்களோடு மாதாவின் அம்சமான மற்ற தேவிகளும் இருக்காங்க. வீணையுடன் சரஸ்வதி உண்டு. எலிகளும் பார்டர் போட்டுருக்கு.
அங்கங்கே எலிகளுக்குப் பெரிய தாம்பாளத்தட்டுலே பால் தானியங்கள்ன்னு வச்சுருக்காங்க. போற போக்குலே கொஞ்சம் குடிச்சுட்டு, கொறிச்சுட்டுப் போகுதுங்க. வெளி முற்றத்தில் பெரிய வாணலியில் கோவிலுக்கான பிரசாதம் தயாரிக்கிறாங்க. ரவை போட்டு (கேஸரி) அல்வா மாதிரி ஒன்னு. எரியும் அடுப்பைப் பொருட்படுத்தாமல் எல்லா இடங்களிலும் எலிகள் நடமாடுது. இதே பிரசாதம் கோவிலுக்கு வெளியில் பக்தர்களுக்காக விநியோகிக்கறாங்க.
பிசாதம் செஞ்சு தட்டுலே வச்சுருக்காங்க
பிரசாத விநியோகம்
கோவிலுக்குள்ளே இருக்கும் இன்னும் சில சந்நிதிகளுக்கான கட்டிடங்களின் வெராந்தாவில் கலர்ஃபுல்லான உடைகளில் மக்கள் கூட்டம். சுத்துப்பக்கம் அம்பது அறுவது கிலோமீட்டர் தூரம் நடந்துவந்த பக்தர்களா இருக்கணும்.
நாம் உள்ளே நுழையும்போதே கெமெராவுக்கான கட்டணம் கட்டும் விவரம் கேட்டதுக்கு உள்ளே ஆள் இருக்குன்னாங்க. யாரையும் காணலை. வெளிவரும் சமயம் ரசீது புத்தகத்தோடு ஒருத்தர் பறந்து வந்தார். இருபது ரூ.தான்.
புனித எலிகளின் சரித்திரம் தெரியாமல் பருந்து வந்து கொத்திக்கிட்டுப் போயிட்டால்............. கோவில் முழுக்க மேலே வலை போட்டு மூடி இருக்காங்க. நமக்கும் வெய்யிலின் கடுமையில் இருந்து கொஞ்சம் தப்பிக்க முடியுது.
'இந்தக் கோவில் பார்க்கத்தானே இந்த டூரே வந்தே?'ன்னார் கோபால். ஆமாம்ன்னு தலை ஆட்டினேன். நம்ம கோகியும் கப்புவும் இப்போ இருந்தால் இந்த எலிகளைப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டு(??!!)ருப்பாங்க. அதான் அவுங்க சார்பில் இந்த பூனைச்சட்டை:-)))))
தொடரும்............:-)
Posted by துளசி கோபால் at 7/15/2011 09:13:00 PM 27 comments
Labels: அனுபவம்