Friday, September 24, 2021

பதினேழு முடிஞ்சு பதினெட்டு ஆரம்பம்......

நம்ம துளசிதளம், கோமாவில்  இருக்கு ! எப்பவாவதுதான்  விழிப்பு வருது. உடனே மீண்டும் கோமா  நிலை.....     இந்த வருஷத்தில் இதுவரை வெறும் ஒன்பதே பதிவுகள்தான்.  இதுதான் பத்து...........  போதுமடா சாமி.....  இப்படி ஒரு நிலை....

என்னதான் கோவிட் முடக்கிப்போட்டுருச்சுன்னாலும் பொழுது விடியறதும் பொழுது முடியறதும் நிக்குதா ? அதுபாட்டுக்கு அது......

அந்தக் கணக்கில்  பதினேழு முடிஞ்சு பதினெட்டாவது  வயசில் அடி எடுத்து வச்சுருக்கு நம்ம துளசிதளம் !

இனியாவது  எழுந்து உக்கார்ந்து  எழுதறதுதான் நல்லது....

பார்க்கலாம், எப்படி போகப்போகுதுன்னு.....

ம்ம்ம்ம்ம்  சொல்ல விட்டுப்போச்சே.... இன்றைக்குத்தான் நம்ம கோபாலுக்கும் பொறந்தநாள் !

கோவிட் காரணம் மூடி வச்சுருக்கும் கோவிலில்  தரிசனம் கிடைச்சதும் பாக்கியம்!   ஒரு லெவல் படியிறங்கி இருக்கோம்.

பெருமாளே.... காப்பாத்து....



Monday, June 07, 2021

47

சண்டை போடுவதற்கும் கோபித்துக்கொள்வதற்கும் புதுசுபுதுசாக் காரணங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கே.....  இந்த நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் ! 

ஆனால் ஒன்னு... சண்டைக்கு 'மூலவர்' நம்மவரேதான் ! ஆரம்பிச்சு வச்சுட்டு சாதுவா இருந்துப்பார்.....  ஏறின சாமி  இறங்கும்வரை நான் ஒரே சாமி ஆட்டம்தான்....   A small WAR Zone ஆகிரும் வீடு :-)

இப்பெல்லாம் சொந்தவிழா ஒரு நாள் கொண்டாட்டமா அடங்கறதில்லை.... போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு எங்க மாட்சிமைதாங்கிய மஹாராணியம்மாவின் பொறந்தநாள் அந்த வாரம் வந்துடறதால்....  Queen's Birthday Long Weekend  என்று மூணுநாட்கள் லீவு.  அந்த மூன்று நாட்களும் நமக்கானதே !
காலையில் வீட்டுப்பெருமாளுக்குப் பழப்படையல் ! 

இந்த முறை உண்மையான கொண்டாட்டத் தேதிக்கு ரெண்டு நிகழ்ச்சி. மதியம் சாப்பாடு கேரளா விருந்து.  நார்த் மீட்ஸ் சௌத் என்று  உள்ளூர் பிகானிர்வாலா ரெஸ்ட்டாரண்டில் கேரளாதாலி ஸ்பெஷல்.
 
காளன், ஓலன், எரிசேரி, தோரன், சாம்பார், ரஸம், குருமா ( அவியலுக்கு பதிலாக !) தயிர்பச்சடி, மொளகோஷ்யம், பப்படம், இஞ்சிப்புளி, அச்சார், மட்டரிச்சோறு, பாயஸம் கூடாதே  கேரளாப் பரோட்டா, ஆப்பம்  ...........  தட்டைப்பார்த்தவுடன்  மனசும் வயிறும் நிறைஞ்சே போச்சு!
ரெஸ்ட்டாரண்ட் ஓனர், நம்ம நண்பர் என்பதால் கூடுதல் கவனிப்பும் !
சாயங்காலம், கோவிலுக்குப் போய் வந்தோம். வழக்கமாப்போகும் சனிக்கிழமையாகவும் அமைஞ்சு போச்சு. பெருமாளும், கோவில் பண்டிட்டும், பக்தர்களுமா வாழ்த்தினாங்க. கோவில்வகையில் மாலைகளும் பூக்களுமாக ப்ரஸாதம் !






மறுநாள் ஞாயிறு மாலை பூஜைக்குப்பிறகு வழங்கும் கோவில் மஹாப்ரஸாதத்திற்கு நம்ம வகையில் ஏற்பாடு செஞ்சுருந்தோம். மகளும் மருமகனும் வந்து கலந்துக்கிட்டாங்க. கோவில் நிர்வாகி, நம்ம விசேஷத்தை அறிவிச்சதில், குழுமி இருந்த மக்களின் வாழ்த்துகளும் கிடைச்சது!








இன்று மூன்றாவது நாள், ரெண்டு வாரங்களுக்கு முன்னே இங்கே புதுசாகத் திறந்திருக்கும் பஞ்சாபி பஃபே ரெஸ்ட்டாரண்டுக்குக் குடும்பத்துடன்  போறோம்.
நம்ம ரஜ்ஜுதான், நம்மகூட எங்குமே வெளியில் வர்றதில்லை.... பாவம் பிள்ள ! கொரோனா காலத்தில் வீடடங்கி இருப்பது உத்தமம்னு தெரியுது பாருங்களேன் !

அன்பளிப்பாகக் கிடைத்தவை, 'நம்மவரிடமிருந்து'  ஐராவதம் ! 
 மகளின் சார்பில்  2022க்கான ஒரு காலண்டர் !  அலாஸ்காவிலிருந்து நமக்காக வடிவமைச்சுத் தபாலில்  வந்தது !  சிறப்பான படங்கள். எல்லாம் நம்ம ரஜ்ஜுவும், அவனைப்போலவே உள்ள  ஏழுபேரும் (!)  சிலபல நண்பர்களும் !













ரொம்பவும் மகிழ்ச்சியான மணநாள் விழாவாக அமைஞ்சதில் பரம திருப்தி ! 
ஃபேஸ்புக்கில் விழாவைப்பற்றிச் சொன்னதால்....  நண்பர்களின் வாழ்த்துகள் மலைபோலக் குவிந்தன !

இந்த மூன்று நாட்களும்,  வழக்கத்திற்கு மாறாக இருந்தேன், பல்லைக் கடிச்சுக்கிட்டு !!!!

நாளை முதல் ஆரம்பிக்கலாம்... நம்ம நாளுக்கு மூணு  சண்டையை !


Wednesday, May 19, 2021

மெய்யா இது பொய்யா......

எந்த வேளையில்  விமானத்தில் இருந்து வெளியே  கால் வைத்தேனோ......  துக்கிரி.....

ஆச்சு ஒரு வருஷமும் அஞ்சு மாசமும்.......  ஹூம்...... இந்தக் கொரோனாச் சனியன் எப்போ ஒழிவது, நாம் எப்போ பயணமுன்னு கிளம்புவது......
இதுவரை பைத்தியம் பிடிச்சுப் பாயைச் சுரண்டாம இருப்பதன் காரணங்களில் ஒன்னுதான்.....  உள்ளூர் சமாச்சாரங்களுக்குப் போய் வர்றதெல்லாம்.....
எங்கேயும் பயணப்படமுடியாமல் கோவிட் கட்டிப்போட்டுருக்கு.  நம்மை மட்டுமா.... உலகத்தையேதான்னு ஒரு அல்ப நிம்மதி......

 கண்ணுக்குத் தெரியாத குட்டியூண்டு சைஸில் இருக்கும் கிருமி. இதுக்கு இருக்கும் பவர், ஆறறிவு மனுசனுக்கில்லையே.... பயந்து நடுங்கி செத்துக்கிட்டுல்லே இருக்கோம்.... ப்ச்.....

நம்மூரில் இருக்கும் மூணு புத்தர் கோவில்களில், ஒரு கோவில் நம்ம பேட்டையிலேயே இருக்கு. நாலே கிமீ தூரம்தான். வழக்கமாப் போகும் மெயின் ரோடிலேயே இருக்குன்றதால் போகும்போதும் வரும்போதும் கன்னத்துலே போட்டுக்கறது வழக்கமாப் போச்சு.

கோவிலுக்கான அடையாளம் ஏதும் இல்லாத ஒரு கட்டடம்.  இங்கே தரைத்தளத்துலே  ஒரு  ஹாலைக் கண்காட்சிக்காகவே நேர்ந்துவிட்டுருக்காங்க.  போனமுறை  சீனப் புதுவருஷக் கொண்டாட்டத்துக்குப் போய், அப்படியே அங்கே நடந்த ஓவியக் கண்காட்சியைப் பார்த்துட்டு வந்தோம். 

அப்பப் பார்க்காதவங்க, இப்பப் பார்க்கலாம் இங்கே :-)

http://thulasidhalam.blogspot.com/2021/02/blog-post.html


கோவிலின் மெயிலிங் லிஸ்ட்டில் நம்ம பெயர் இருப்பதால்  முக்கிய நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழும் விவரங்களும்  அனுப்பிக்கிட்டே இருக்காங்க. நேரங்காலம் அனுசரிச்சு  எல்லா நிகழ்ச்சிக்கும் போக முடியறதில்லை. ஆனால் முக்கியமானதுகளை விடமாட்டேன்.  ஊர்ப் பொதுவழக்கத்தின்படி எல்லா நிகழ்ச்சிகளையும் சனிக்கிழமைகளில் நேர்ந்து விடறோம் இல்லையா? 

இருக்கற ஒரு உடம்பை வச்சுக்கிட்டு எத்தனை நிகழ்ச்சிக்குத்தான் போகமுடியும் ? வெவ்வேற நேரம்  அமைஞ்சால் பாக்கியம்.  அன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு  நாள்.
ஒரு மாசத்துக்கு முந்தியே அழைப்பிதழ் வந்துருச்சு. புதுக்கண்காட்சி ஆரம்பம்.  சுமார் மூணரை மாசம் நடக்கப்போகுது ! 

ஒரு மணிக்கு திறப்பு விழா.  வெயில் வந்துருக்கேன்னு வீட்டுவேலைகளில் கவனம் செலுத்துனதால்  மத்த வேலைகளில் சுணக்கம். ரெண்டு மணி போலப் போய்ச் சேர்ந்தோம்.  அப்பதான் திறப்புவிழா நிகழ்ச்சிகள் முடிஞ்சுருக்கு. சைனீஸ் கொடியோடு இருந்த  வண்டியில் எம்பஸி ஆட்கள்  கிளம்பி வெளியில் வந்துக்கிட்டு  இருந்தாங்க.  அடுத்து இந்தியப் பிரதிநிதிகளாக நாம் :-)
ஹாலின்  முகப்பில் கண்காட்சியின் விவரம் ! 




நமக்கு ஏற்கெனவே பரிச்சமாயிருந்த Mei  சந்தோஷமா வரவேற்றாங்க.  அடுத்து ஒரு இளைஞரிடம் நம்மை ஒப்படைச்சாங்க.  சுத்திக்காமிக்கப்போகும் வழிகாட்டி !  அவர் செஞ்ச முதல் வேலை, ஒரு பூதக்கண்ணாடியை நம்மாண்டை கொடுத்ததுதான் :-) 
'ஙே' ன்னு ஒரு விநாடி முழிச்சநான் சுதாரிச்சுக்கிட்டேன்.  ஒரு அழகான பெயின்டிங் !  மலையும் நதியும், மரமுமாய்.......    அதை பூதக்கண்ணாடி வச்சுப் பார்க்கச் சொன்னார் வழிகாட்டி.  ஹைய்யோ....... 
இது பெயின்டிங் இல்லைப்பா...........   எம்ப்ராய்டெரி !  பூத் தையல் !  இதுலே விசேஷம் என்னன்னா.....   பின்னணியில் இருக்கும் வானம் உட்படத் தைய்யலோ தையல்தான்! அதுவும் மிஷின் ஏதும் இல்லாமல் வெறுங்கையால் போட்டது ! இவ்வளோ நுணுக்கமாப் போடும் ஊசி எவ்வளோ மெல்லிஸா இருக்கணும்? சட்னு கைவிரலுக்குள் நுழைஞ்சுறாது ? 

விரிஞ்சுபோய் அப்படியே நின்ன கண்களை நகர்த்திக்கிட்டே ஒவ்வொரு  படமா (!) ஹாஹா.....    படம் மாதிரிதான்  ஃப்ரேம் போட்டு வச்சுருக்காங்க.  Needle Painting ! 
ரோஜாக்கூட்டம்..... இப்பதான் நமக்கு டெக்னிக் புரிஞ்சுருச்சே.....  பூக்களும் பின்னணியுமா இண்டு இடுக்கு விடாமப் பட்டு நூல் இழைஞ்சுருக்கு! 
மன்னிக்கணும், விரிவாக விவரிக்கத் தெரியலை.....   நேரில் 'ஸீயிங் இஸ் பிலீவிங் ' வகை.   



கலைஞர் Hong Ying Yao அவர்களுக்கு இப்போ வயசு 51. ஆனால் அவுங்க பூத்தையல் போட ஆரம்பிச்சது எட்டாவது வயசில் !  அப்போ 43 வருஷ அனுபவம்.   அவுங்க கடந்து வந்த பாதையையும், திறமைகளை வளர்த்துக்கக் கற்ற விவரமும், கைவேலையில் சாதிச்சவைகளையும்,  கிடைத்த அங்கீகாரங்களும், பட்டங்களும்....  படிக்கப்படிக்க மூச்சு நின்னுடும் போல இருந்துச்சு எனக்கு! 
நீங்களும்  மூச்சடைச்சு நிக்கணுமுன்னா இங்கே :-)

http://www.suembroidery.com/embroidery_blog/article/12-09/suzhou_hand_embroidery_artist_yao_hongying.html










சுமார் 30  பூத்தையல் ஓவியங்கள் காட்சிக்கு வச்சுருக்காங்க. எல்லாமே  நம்ம Hong Ying Yao  போட்டவைகள்தான் பூக்களும், அருவியுமா அட்டகாசம்.   எனக்கு அந்த 'மயில் ' ரொம்பவே பிடிச்சுருந்தது. அப்ப அந்த மீன்களோ ?  ஹைய்யோ.... அது ரொம்பரொம்பப் பிடிச்சுருந்தது.  ஓக்கே.... அந்த சாமி ? ஓ..... அந்த சாமியா..... அதுவும் அருமை !   







போங்க...... ஏறக்குறைய எல்லாமே பிடிச்சுருந்ததே !
ம்ம்ம்ம் சொல்ல மறந்துட்டேனே.....  டபுள் சைட் எம்ப்ராய்டரி என்னும் அற்புதம்  வேற இருக்கு ! கண்ணாடித்தாள் மாதிரி இருக்கும் ஸில்க் துணியில் வேலைப்பாடு.  இந்த மயில் பாருங்க.....  எந்தப் பக்கம் திருப்பிப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கே! பின்பக்கத்துலே  நூலில் வரும் முடிச்சுகளையேக் காணோம்.  ராங்ஸைடு, ரைட்ஸைடால்லே இருக்கு !









இந்த வகைப் பூத்தையல் என்னும் கலை சுமார் 2500 வருஷங்களுக்கு முற்பட்டதாம்.  நிறைய ஸ்டூடியோக்கள் ஆரம்பிச்சு இதை ஒரு நல்ல, பெரிய வியாபாரமாகவும் ஆக்கி இருக்காங்க. நமக்கு  வேணுமுன்னா.......  ஒரு படத்தை அனுப்பி வச்சாலும் அதை நீடில் ஓவியமா வரைஞ்சு (!) அனுப்பிருவாங்க.
பெரிய குழுவாக இருந்து பிரமாண்டமான அளவில்  செய்யறாங்க. நல்ல டீம் ஒர்க் ! ஏற்கெனவே அவுங்க தயாரிச்சு வச்சவைகளை விற்பனைக்கும் வச்சுருக்காங்க.  என்ன ஒன்னு..........   கையைக் கடிக்கும் விலைதான். கலை ஆர்வம் மட்டுமிருந்தால் போதாதே......    காசும்  வேணும்தானே ?
ஆசையா இருந்தால் இங்கே எட்டிப் பாருங்களேன் ! இந்த சிறுத்தை எப்படி இருக்கு ? வெறும் 5367 $ தானாம் !
ஆமாம்....  கீழே... இது படமா இல்லை..... பூத்தையலா ?
இன்னொருக்காப்போய் ஆற அமர பார்க்கணுமுன்னு... மூளையில் முடிச்சு !
இப்பதான் நினைவுக்கு வருது......   ஃபிஜித் தீவுகளுக்கு இடமாற்றமா  இந்தியாவில் இருந்து கிளம்பி ஹாங்காங் வந்தப்ப , ஊர் சுத்திப்பார்க்கும்போது ஒரு பூத்தையல் ஓவியத்தை வாங்கினேன்.  என்னவோ சீனத்தில் எழுதி இருந்தது.  என்னன்னு விற்பனையாளரைக் கேட்டப்ப,  குட்லக் னு  எழுதி இருக்குன்னு சொன்னாங்க.  முன்பின் தெரியாத கண்காணாத் தேசத்துக்குத் தைரியமாக் கிளம்பி வந்துருக்கோம். லக் தேவைப்படும்தானே ?  
அதை ஒரு ஃப்ரேம் போட்டு மாட்டி இருந்தோம். நியூஸியில் பழைய வீட்டை விட்டுப் புது வீட்டுக்கு மாறி வந்தப்ப  ஒரு அறையில் மாட்டி வச்சுருந்தோம்.  அப்புறம்  இந்தியாவில் ரெண்டரை வருஷம் குப்பை கொட்டிட்டு  இங்கே திரும்பி வந்தப்பறம் பார்த்த நினைவு இல்லை.....  எங்கே போய் ஒளிஞ்சுக்கிச்சு தெரியலையே. 

தினம் தேடலுக்கு ஒதுக்கும் ஒருமணி நேரத்தில் இனி அதை(யும்) தேடணும் :-)

முடுக்கி விட்டுருக்கேன், தேடலை.....





குறிப்பு :  சில படங்களை, Su Embroidery Studio    

  வலைப்பக்கத்தில் இருந்து எடுத்துப்போட்டுருக்கேன். அவர்களுக்கு  என் மனம் நிறைந்த நன்றி !