Wednesday, February 03, 2021

விண்ணிலிருந்து மண்ணுக்கு.......... இறங்கிய............... எ ரு மை !

ஒன்னுக்கும் உதவாத எருமைன்னு நாம் தள்ளி வச்சுருக்கறது எப்படியெல்லாம்  மக்களுக்கு உதவுதுன்னு பார்த்தால் பிரமிப்புதான் எனக்கு !!   இனி யாரையாவது எருமைன்னு திட்டறதுக்கு முன்னால் கொஞ்சம் யோசிக்கத்தான் வேணும்!   
நம்மூரில்  அடுத்து வந்துக்கிட்டு இருக்கும் சீனப்புத்தாண்டு நிகழ்வையொட்டி, இங்கிருக்கும் புத்தர் கோவில் (ஒரு அஞ்சு நிமிஷ ட்ரைவ்தான் நம்மூட்டில் இருந்து ) ஒன்றில் ஏற்பாடு செஞ்சுருக்கும்  ( மூணு புத்தர் கோவில்கள் இருக்குப்பா....  ஹூம்.... நம்மால்தான் ஒரு புள்ளையார் கோவில் கட்ட முடியலை.....  ப்ச்..... )  கண்காட்சிக்குப் போயிருந்தோம்.

வர்ற ஃபிப்ரவரி பனிரெண்டுக்குப் பொறக்கப்போகும் புதுவருஷம் காளை வருஷம். இவுங்களுக்கு பனிரெண்டு மிருகங்களின் பெயர்கள்தான் வருஷங்களுக்கு. இதுவே சுத்திச் சுத்தி வரும். இந்த  வருஷம் எலி. அடுத்த வருஷம்  மாடுன்னு சொல்லலாம்.
அதனால்  மாடுகளே ப்ரதானமா இருந்துச்சு. நானும் Year of OX என்றதால்  காளைன்னு நினைச்சுக்கிட்டே போனால்.... எல்லாம் எருமை !
ரொம்ப காலத்துக்கு முன்னே  எருமைகள் ஸ்வர்கத்தில் மட்டுமே இருந்தன !  அதுவும் எப்படின்னா...   நக்ஷத்திரங்களாக !  ( இந்த நக்ஷத்திரங்களையும் சினிமா நக்ஷத்திரங்களையும் போட்டுக் குழப்பிக்கக்கூடாது, கேட்டோ !  )  கீழே பூமியில் மனுஷன் பசியும் பட்டினியுமா ரொம்பக் கஷ்டப்படறதைப் பார்த்த  ஸ்வர்கத்தின் தலைவர், 'ஐயோ.... பாவமே..... எதாவது செய்யலாமே'ன்னு,  அங்கே ச்சும்மா வேடிக்கைப் பார்த்துக்கிட்டு நின்னுருந்த ஒரு எருமையை, 'இந்தா... இங்கே வா.  நீ என்னா பண்றே.... கீழே பூமிக்குப் போய்  மனுசங்களிடம்,  நீங்கெல்லாம் நிலத்துலே பாடுபட்டு  நல்லா உழைச்சால்....  குறைஞ்சபக்ஷம்  மூணுநாளைக்கொரு தடவையாவது சாப்புடலாம் னு சேதி சொல்லிட்டு வா' ன்னு அனுப்புனார்.

எருமை பூமிக்கு வந்துச்சு.  சனங்ககிட்டே சேதி சொல்றப்ப, வேற எதோ ஞாபகத்துலே வாய் குழறி  'நீங்க நிலத்துலே நல்லாக் கஷ்டப்பட்டு உழைச்சால் ஒருநாளைக்கு  மூணுதடவை சாப்புடலாம்'னு  சொல்லிருச்சுப்பா.   


'எனக்கு ரொம்பத் தெரிஞ்ச மனுஷர் ஒருத்தர்' கூட இப்படித்தான்  ஏதோ ஞாபகத்துலே  நாம் சொல்றதைச் சரியாக் காதுலே வாங்கிக்காம எதாவது குழறுபடி பண்ணிக்கிட்டே இருப்பார்.  தப்பாச் சொல்றீங்களேன்னா..... ' நான் நினைச்சேன்,  இப்படித்தான் சொல்லியிருப்பேன்னு...     சரியாத்தானே  சொல்றேன் ' ம்பார். 

சரி. இருக்கட்டும், நாம் கதைக்குப் போகலாம்.  திரும்ப ஸ்வர்கத்துக்குப் போன எருமை, தலைவரைப் பார்த்து 'சேதி சொல்லிட்டேன் எசமான்'னுச்சு. தலைவருக்கு ஒரே கடுப்பு.  'அங்கே போய் குழறுபடி பண்ணிட்டு வந்துருக்கே. இப்ப நான் என்ன செய்யறது? அம்மாஞ்சனத்துக்கும் மூணுவேளை சாப்பாடு...   எப்படி? அவுங்கமட்டுமே உழைச்சால்  முடியவே முடியாது. இன்னும் ஏகப்பட்ட  உழைக்கும் கைகள் இருந்தால்தான் சரிப்படும்.  அதுக்காக மனுஷனுக்கு  சாமி போல ஏகப்பட்ட கைகளை வைக்க முடியுமா ?     

நீ பண்ண குழறுபடியை நீதான்  சரிபண்ணனும். நீ என்னா பண்ணறே.... உன் கூட்டத்தையெல்லாம் கூட்டிக்கிட்டு கீழே பூமிக்குப்போய் மனுசனுக்கு உதவியா  இரு.  உங்க உழைப்பாலேதான்  அவனுக்கு மூணு வேளை சோறு கிடைக்கணும்'னு  பூமிக்கு அனுப்பி வச்சார்.

உழவு வேலை, வண்டி இழுக்கறது, பால் சப்ளை,  ஒன்னும் கிடைக்கலைன்னா தன்னையே  சாப்பிடக் கொடுக்கறது, போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு  தன் ஊன் மட்டுமில்லாமத் தோலையும் செருப்பாவும் மத்த பொருளாவும்  உபயோகமா ஆக்கிக்கன்னு தன்னையே மனுசனுக்கு ஒப்புக்கொடுத்தது எல்லாம் இப்படித்தானாம் !  என் தோலைச் செருப்பாத் தைச்சுத் தாரேன்னு (பெயருக்குச்) சொல்றோமே.... நம்ம தோலெல்லாம் வச்சு   என்னத்தை செய்ய ? 
(சீனக்கதையில் கொஞ்சூண்டு இண்டியன் மஸாலா சேர்த்துருக்கேன். ஆனால் கரு அங்கத்துதுதான் !  )

சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டம் ஒரு நாள் சமாச்சாரம் இல்லை கேட்டோ. ஆற அமர பத்து நாள் கொண்டாடறாங்க.  பனிரெண்டு  ஜீவராசிகளை  வருசத்துக்கொன்னுன்னு  வச்சுக்கிட்டு அதுலேயே ஜோசியம், ஆரூடம் எல்லாம் சொல்றாங்கப்பா. அந்தக் கணக்கிலே போன வருசம் எலி. இந்த  வருசம் எருமை!  எனக்கென்ன ஒரே வருத்தமுன்னா எலி, புலி, முயல், பன்றி நாய்,குரங்குன்னு இருக்கும் வரிசைகளில்  பூனையும் இல்லை யானையுமில்லை :-(

இன்னொரு சுவாரஸியம்கூட  இருக்கு. இந்த எலி, நம்ம எருமையை ஏமாத்திருச்சுப்பா !

ஹா......... எப்படி?

ஆதியில் சீனமஹாராஜா, பனிரெண்டு மிருகங்களை வருசப்பொறப்புக்குன்னு தேர்ந்தெடுத்துருக்கார். இந்த பனிரெண்டை ஒன்று இரண்டுன்னு வரிசைப்படுத்தும் வேலை ஒன்னு பாக்கி இருந்துருக்கு. ' சாயங்காலம் ஒரு பார்ட்டி கொடுக்கறேன். நீங்கெல்லாம் வந்துருங்க'ன்னு அழைப்பு அனுப்பியாச். முதலில் யார் வர்றாங்களோ அவுங்களில் இருந்து  வரிசைப்படுத்தலாமுன்னு நினைச்சுருக்கார்.

சாயங்காலம் பார்ட்டிக்கு எல்லோரும் கிளம்பி வர்றாங்க. யாருக்கும்  இந்த வரிசை சமாச்சாரம் தெரியாது போல இருக்கு.  நின்னு நிதானமா வந்துக்கிட்டு இருக்கும்போது, எருமை ஆடி அசைஞ்சு வர்றதைப் பார்த்து  வழியில் நின்னுக்கிட்டு இருந்த எலி, 'த பாரு எருமை.... எனக்குச் சின்னச் சின்னக்காலு. இம்மாந்தூரம் நடந்து வந்துட்டேன். கால் வலி பயங்கரமா இருக்கு. நீ ச்சும்மாத்தானே போறே.... என்னைக் கொஞ்சம் சுமந்துக்கிட்டுப் போறியா'ன்னு  லிஃப்ட் கேட்டுச்சு. எருமைக்குத்தான் பெருந்தன்மை அதிகமாச்சே. 'சரி முதுகில் ஏறிக்கோ'ன்னுச்சு. அரண்மனை வாசலுக்குப் போய்ச் சேர்ந்ததும், எலி, சட்னு முதுகில் இருந்து குதிச்சு, அரசருக்கு முன்னால் போய் நின்னுருச்சு! அதுலே இருந்து ஆரம்பம்னு சொல்லிட்டார் மஹாராஜா.  அந்தக் கணக்கில் பனிரெண்டு மிருகங்கள் வரிசையிலே மொதலில் வர்றது எலி. ரெண்டாவதுதான் நம்ம எருமை ! மூணாவது புலி, நாலாவது முயல்னு போற வரிசையில் கடைசியா  இருக்கு பன்றி !


தாய்வான் நாட்டு ஓவியக்கலைஞர்   Wen-Jung Hsu  வரைந்த ஓவியங்களையும், சிற்பங்களையும்  காட்சிக்கு வச்சுருந்தாங்க.  எல்லாப் படங்களிலும் எருமையோ எருமை !  எருமையைத்தவிர வேறொன்னுமில்லை.....   நமக்குத்தான் அது எருமை. மத்தவங்களுக்கு  மாடு... மாடுவகைகளில் ஒன்னு.....   அதுவுஞ்சரித்தான்.... எருமைமாடுன்னுதானே சொல்றோம் ! 
After a Thousand Miles என்ற தலைப்புக்கேத்த மாதிரியே ஓவியரின் தனிப்பட்டவகையில்  படங்கள்  உலகச்சுற்றுப்பயணத்தில் இருக்கு!  After a Thousand Miles – Artworks by Wen-Jung HSU World Tour Exhibition ! 

தாயும் மகளும் என்ற ஓவியம் எனக்குப்பிடிச்சது. 'நான் என்ன இவ்ளோ அழகாவா இருக்கேன் ?'   ஹாஹா...









சிற்பங்கள்னு சொன்னேனே.......   அவை ஏதோ ஈயத்துலே செஞ்சமாதிரி.....வளவு நெளிவுகளோடு..... அடிபடாமக் கொண்டுபோக    அததுக்குத் தனிப்பெட்டிகள்...... , அந்தப் பெட்டிகளே மேடைகளா டபுள் ஆக்டும்! !  

தலைப்புக்கான சிற்பம்.... அட்டகாசம்.


ஜென் கதைகள்னு நம்மாட்கள் அப்பப்ப எழுதறாங்களே.... அந்த ஒரிஜினல் ஜென் (Zen ) எப்படி இருப்பார்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் :-)

போன நவம்பர் வரை ஆக்லாந்து நகரில் (நியூஸி)நடந்த கண்காட்சி, கடல்கடந்து இங்கே நியூஸியின் தெற்குத்தீவில் எங்கூருக்கு  (கிறைஸ்ட்சர்ச் மாநகர்) வந்ததையே பதிவு செஞ்சு வெளியிட்டு இருக்காங்க.   இந்தச் சுட்டியில் பார்க்கலாம். மொத்தம் நாப்பது ஐட்டம்ஸ்.  படிக்க & பார்க்க சுவாரஸியமா இருக்கு ! 

http://fgs.org.nz/english/news/delivering-40-masterpiece-artworks-of-wen-jung-hsu-to-fgy-art-gallery-chch/

இன்னொரு சேதி தெரியுமோ ?  நம்ம தை அமாவாசைதான்  சீனப்புத்தாண்டுக்கான நாள்.  இந்த   அமாவாசையை அடுத்து வரும் பவுர்ணமிதான் சீனர்களோட விளக்குத் திருவிழா ! 
வரப்போகும் சீனப்புத்தாண்டு ( ஃபிப்ரவரி 12, 2021) உலகமக்களைக் கொரோனாவிடம் இருந்து  முற்றிலுமாகக் காப்பாத்தட்டும்னு  சீனச்சாமிகளை வேண்டிக்கலாம் ! 


பதிவில் இருக்கும் ஓவியங்களின் படங்கள்,  எங்கூர் புத்தர் கோவிலில் நடக்கும் ஓவியக் கண்காட்சியில் எடுத்தவை.  ஓவியக் கலைஞர்   Wen-Jung Hsu  அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றிகள் !       
கோவிலையும் கண்காட்சியையும் நமக்குச் சுத்திக்காட்ட நிறைய இளைய மக்கள் இருந்தாங்க.  நமக்கான வழிகாட்டி Mei  !



14 comments:

said...

விவரங்களும் ஓவியங்களும் அருமை.

அது என்ன சீனச் சாமிகளிடம் மட்டும்தான் வேண்டிக்கணுமா? நம்ம சாமிகள்லாம் வரம் தந்து ஓஞ்சு போயிட்டாங்களா?

said...

மீள் வருகை சிறப்பு. எப்படியோ தை அமாவாசைக்கும் சீன புத்தாண்டுக்கு முடிச்சு போட்டு விட்டீர்கள்.  சீன புத்தாண்டு விளக்கங்கள் புதியவை. ஆமாம் கண் கண்ணாடி எங்கே? காக்கா தூக்கிட்டு போயிடுச்சி?  

Jayakumar

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

சீன வைரஸ் என்பதால் சீனச்சாமி கன்ட்ரோல் செஞ்சுறாதா என்ற நப்பாசைதான் :-)

said...

அருமை அமர்க்களம் அட்டகாசம்
நன்றி

said...

வாங்க ஜயகுமார்.

உண்மையில் கண்ணாடி பொதுவா தேவை இல்லை. ரெண்டு கண்களுக்கும் I O L பொருத்தியாச்சு. படிக்க மட்டும் தான் கண்ணாடி வேணும்.

எப்பவும் கண்ணாடியோடு பார்த்துப் பழகிட்டதால் கண்ணாடி போட்டால்தான் நல்லா இருக்குன்னு கோபால் சொன்னதால் வெளியே போகும்போது போட்டுக்கறது ப்ளெய்ன் கண்ணாடிதான். அதையே கூலிங் க்ளாஸாவும் ஆக்கியாச்.

வழக்கமா இது காரில் இருக்கும்.அன்றைக்குக் கண்ணாடியை வீட்டுலே வச்சுட்டு மறந்துட்டேன்.

said...

ஆக நாலு எருமை வயசாவுதுன்னா 48 ஆச்சுன்னு எடுத்துக்கணுமா?

மெய் கண்ட ரீச்சர் வாழ்க!

said...

வழக்கம் போல படங்கள் அசத்தல்.

தகவல்களும் நன்று. எருமை - என்னை அம்மா அடிக்கடி “டெல்ஹி எருமை” என்று திட்டிக் கொண்டே இருப்பார் - எனது சிறுவயதில்! அது நினைவுக்கு வருகிறது! ஹாஹா...

said...

ஹா ..ஹா ..

அப்போ நாம மூணு வேளை சாப்பிட அவர் தான் காரணமா ...

ஆனாலும் ஐயோ பாவம் எருமையார் ....இப்படி வேலை செய்ய விட்டாச்சு ...எலி ஸ்மார்ட் ..

தகவல்கள் எல்லாம் சுவாரஸ்யம் மா ...படங்கள் சூப்பர்

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கொத்ஸ்,

ஹாஹா.... இந்த வருஷம் இப்படியும் சொல்லிக்கலாம் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

டில்லி எருமை ரொம்பவே விசேஷமானதாச்சே !

said...

வாங்க அனுபிரேம்,

நமக்கு வேலைகளை அதிகரிச்சு வச்சுருக்கு எருமை... ப்ச்... அட்லீஸ்ட் தினம் ஒருவேளைன்னு சொல்லி இருக்கக்கூடாதா ?

டயட்னு இப்போ, மண்டையைப் பிச்சுக்க வேணாம் பாருங்க.

said...

வாங்க நெல்லைத்தமிழன்.

ஆரம்பம் அங்கேதான் என்பதால் அவுங்க சாமி மனசு வச்சால்தான் முடிவுக்கு வருமுன்னு ஒரு நம்பிக்கைதான் ! ஹிஹி

said...

சுவாரசியமாக இருந்தது.