Wednesday, May 30, 2018

பத்தாயிரத்துக்கு அரை அறை கம்மி ! சீனதேசம் - 18

சரி. வாங்க உள்ளே போய் என்னமாத்தேன் இருக்குன்னு  பார்த்துப்புடலாம் ! ட்யனமன் கேட்டுக்கே ஒரு அகழியைக்கடந்துதான்  வரணும்.  அம்பத்திரெண்டு  மீட்டர்  அகலம். ஆறு மீட்டர் ஆழம். முதலை இருக்கான்னு  எட்டிப் பார்த்தேன். ஊஹூம்.... அகழி இம்மாம் பெருசா ஆறு போலவே இருக்கேன்னு பார்த்தால் இதுக்கு நெசமாவே Tongzi
Riverன்னு ஒரு பெயரும் வச்சுருக்காங்க :-)



 மொதல் வாசலுக்குள் நுழைஞ்சுட்டோமுன்னாலே  சுத்திவர உசரமான மதில் சுவர்!  எட்டு மீட்டர். தப்பித்தவறி எவராச்சும் எட்டிப் பார்த்தாலும்  சுவத்துலேதான் முழிக்கணும்.

இந்த நுழைவு வாசல்கள் எல்லாமே  பெரிய பெரிய கட்டடங்களாத்தான் இருக்கு. எல்லாத்துக்கும் அந்த கேட், இந்த கேட்ன்னு  விதவிதமா பெயர்கள் வேற !  ஒரு கதவைத் திறந்து உள்ளே நுழைஞ்சமான்னு  இல்லாம முதல்  கதவுக்குள்ளே நுழைஞ்சு  ஒரு நூறடி நடந்தால்தான் அந்தப்பக்க வாசலாண்டை போகமுடியும். எல்லாம் கோட்டை வாசல்கள்தான்!

அதிலும் இப்போ நாம் நுழையும் வாசலுக்கு மெரிடியன் கேட்ன்னு பெயர். வாசலின் உயரம்..... நூத்தி இருபத்தியஞ்சு அடி !  ஆறடி மனுசன் நுழையறதுக்கு இம்மாம் பெருசா?
மேலே சொன்ன அஞ்சு வாசல்களில்  நடுவில் இருக்கும் மூணையும் திறந்து வச்சுப் பயன்படுத்தறாங்க.  மன்னர் ஆட்சி முடிஞ்சு, எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்  ஆகிட்டதால்  நடுவாசலில் போறங்க  எல்லாரும்!  கட்டக் கடைசி வாசல்களை இப்போ ரெஸ்ட் ரூமா மாத்தியிருக்காங்க. இந்தக் கோட்டை வாசலுக்கு மேலேயே இன்னும் ரெண்டு மாடிகள்  வேற இருக்கு!!

வாசலைக் கடந்ததும் பிரமாண்டமான பெரிய முற்றம்!  இதுலேயே  நடுவிலே ஒரு ஆறு! கோல்டன் ரிவர்னு பெயர்!  அதைக் கடக்க ஒரு பாலமும்!  கண்ணுக்கு எதிரா ஒரு பிரமாண்டமான கட்டடம்.  பத்திருவது படிகள் வேற ஏறிப்போகணும். சரின்னு அங்கே போனால்.... இதுவும் ஒரு கேட் ன்னு தகவல் பலகை சொல்லுது!
ஒன்னு சொல்லணும்.... 'பயணிகளுக்குக் காமிக்க'ன்னு வச்சுருக்கும் பகுதிகளில் எல்லாம் சீனத்திலும், இங்லிஷிலும் என்ன ஏதுன்ற விவரம் எழுதுன தகவல்பலகைகளை வச்சுருக்காங்க.

கட்டடம், கூரை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கைபிடிச்சுவர், அதுலே இருக்கும் அலங்காரம், படிகள், பாலங்கள்  இப்படி எல்லாமே வெள்ளைப் பளிங்குதான். நல்லா செதுக்கி எடுக்கச் சுலபமான கல்லு போல்!
பளிங்குமேடைகளில் பந்து உருட்டி விளையாடும் சிரிச்ச முகமுள்ள சிங்கங்கள்.  ட்ராகன் செதுக்குன  பளிங்குப் பலகைகள் இப்படி  அதுபாட்டுக்கு ஏராளமா இருக்கு!
சனக்கூட்டம் அதிகம்.  படிகள் மேலே ஏறி  வாசல் கேட்டு, அங்கிருந்து  இந்த  கேட்டுன்னு  க்ளிக்கோ க்ளிக்ஸ்தான் !

சுப்ரீம் ஹார்மெனி என்னும் பகுதிக்குள் போவதற்கான நுழைவு வாசல்.  நடுக்கதவு (ரெட்டைக் கதவு ராஜாக் கதவு !) மூடி இருக்கு.   இதுக்கு ரெண்டுபக்கமும் இருக்கும் கதவுகள் வழியாக நாம் போகலாம்.

அந்தாண்டை போனால் திரும்பவும்  பெரிய முற்றம், சுத்திவரக் கட்டடங்கள்,  எதிரில் பிரமாண்டமான கட்டடம்,  அதுக்கு ஏறிப்போகும் படிகள், ட்ராகன் பலகை எல்லாமும் ஸேம் ஸேம்.

இது எதுக்கு ஏறி இறங்கி நடந்து, ஏறி இறங்கி நடந்துன்னே டிஸைன் பண்ணி வச்சுருக்காங்கன்னு தெரியலை..... சமதரையில் இருக்கும்  கட்டடங்களுக்கு  எதுக்குப் படிகளாம்?  ராஜ குடும்பத்துக்கு  உடற்பயிற்சிக்காக இருக்குமோ?


ஒரு வரைபடம் கிடைச்சது. இங்கே போட்டுருக்கேன் பாருங்க....
நட்ட நடுவிலே கோட்டை வாசலில் ஆரம்பிச்சு அப்படியே முற்றம் முற்றமா பரந்து விரிஞ்சு போய்க்கிட்டே இருக்கு. எல்லாம் நடுசென்டர்லே கோடுபோட்டு ரெண்டு பக்கமும் சமமாக் கட்டுனது!  சுத்திவர மத்த கட்டிடங்கள். ஏராளமான அறைகள்னு சொன்னவங்க....  பத்தாயிரத்துக்கு ஒரு  அரை அறை கம்மின்னாங்க. ஏனாம்?

பத்தாயிரம் அறை சொர்கத்துலே சாமிக்கு மட்டுமே இருக்கணுமாம். ஆனால்....  சீனத்துலே அரசர்களுக்குத்  தாம்  சொர்கச் சாமியின் புத்திரர் என்ற எண்ணம் இருப்பதால்  சாமிக்கு ஈடாக, அதே சமயம் சாமியை விடக் கொஞ்சமே கொஞ்சம் கம்மியாக இருக்கணும் என்று அரை அறையை விட்டு வச்சுட்டாங்களாம்.

எங்கியாவது நாலு தூண்கள் நின்னால் அதுக்கிடையில் இருக்கும் இடமும் அறைக்கணக்கில் சேர்த்தியாமே!  எல்லோரும் பத்தாயிரம் பத்தாயிரமுன்னு உசுப்பேத்தி வச்சுருக்க,  எப்படியாவது உண்மையைக் கண்டறியணுமுன்னு ஒருத்தர் எண்ணவே ஆரம்பிச்சுப் பத்தாயிரத்துக்கு அரை  கம்மி என்றதைப் பொய்யாக்கிட்டார்.  வேலைமெனெக்கெட உக்கார்ந்து எண்ணி இருக்கார் பாருங்க!  எட்டாயிரத்து எழுநூத்தி ஏழு அறைகள் தானாம்!

பெரிய பெரிய  கங்காளங்களை வரிசையா வச்சுருக்காங்க. சிங்க முகமும் கைப்பிடியுமா....  ஆமாம்.... கைப்பிடி இருந்தாலும் தூக்க முடியுமா என்ன?  இதுலே தண்ணி ரொப்பி வைப்பாங்களாம். இந்த வேலைக்கு நியமிச்ச பணியாள் செத்தான் ! கிணறு ஒன்னும் கண்ணில் படலை.... எங்கே இருந்து  தண்ணி கொண்டு வரணுமாம்?


இந்த ஹால் ஆஃப் சுப்ரீம் ஹார்மனிதான்  ராஜ தர்பார்!   இந்தக் கட்டடத்துக்குள்ளே  அரசருக்கான ட்ராகனாசனம்! தங்கம்!

சுவர்களில்கூட வித்தியாசமான வேலைப்பாடு!


மொத்த அரண்மனை வளாகத்திலும்  ரொம்பவே உசரமான இடத்துலே கட்டுனது இந்த ஹால் ஆஃப் சுப்ரீம் கட்டடம்தான். தரை மட்டத்தில் இருந்து முப்பது மீட்டர் உசரம்.
இதைப் பார்த்துட்டுப் பின்பக்கம் போனால் கீழே இறங்கும் படிவரிசைகள் பக்கத்துலே  அஞ்சு நிமிட் உக்கார்ந்தோம்.  ரொம்ப தூரத்துலே  பூஜை மணி உருவில் ஒரு வெள்ளை மணி!  இது ஒயிட் பகோடாவாம்!
பொதுவா முக்கியமான கட்டடங்களில் உள்ளே நாம் போய்ப் பார்க்க முடியாது. கம்பித் தடுப்பும் காவலாளிகளுமா......   ஆனால் படம் எடுக்கவோ, எட்டிப்பார்க்கவோ தடை ஏதும் இல்லை!


சிகப்புச் சுவர்களும் மஞ்சக்கூரைகளும், தங்கத் தூண்களுமா..... கண்ணே பூத்துப்போச்சு.....  ராஜ சமாச்சாரம் பாருங்க......  ராஜாக் கலரு மஞ்சக் கலரு !  
இந்த வளாகத்தில் ஒரு சூரியக் கடிகாரம் இருக்கு!
இன்னொரு  மேடையில் குட்டி அலங்கார மண்டபத்தில் அளக்கும் மரக்கால்!  (விளைச்சல் முக்கியம்!  சோறு இல்லைன்னா.... செத்தோம்!)
ரெண்டு நாரைகளும், ரெண்டு ஆமைகளும் உண்டு.  கதை தெரியலை..... ஆமை.....  சக்தி தேவி வந்துருக்காங்க போல!  அவுங்க வாஹனம்தானே ஆமை, இல்லையோ?

துளசி மாடம் கூட இருக்கே !!!   ஹாஹா...
துளசின்னு சொல்லி வாய்மூடலை.... இன்டுவுக்கு டிமாண்ட்!


தோழிகள் மூவரானோம்! தனித்தனியாவும் வேணுமாம். சேர்ந்தும்  வேணுமாமே!   ஆகட்டும்......

பேலஸ் ஆஃப் ஹெவன்லி ப்யூரிடி....  பெயரே சொல்லிருது.... சாமி சமாச்சாரம்!  அரண்மனை  பூஜை அறை!
இங்கேதான் அடுத்து பட்டத்துக்கு வரவேண்டிய இளவரசர் யாருன்னு  அரசரே தன் கைப்பட எழுதி சாமி சந்நிதிக்குப் பின்னாலே வச்சுருப்பாராம்.  அரசர் சாமிகிட்டே போனதும்,  அரசவையில் மூத்த ப்ரதானி  அதை எடுத்துப் பார்த்துட்டு, அதுலே இருக்கும் பெயருடையவரை அடுத்த அரசர் ஆக்குவார்.  ஹைய்யோ.... என்ன ஒரு நல்ல ஏற்பாடு பாருங்க!  கடைசி வரை யாருக்குப் பட்டமுன்னு தெரியாது! அதனால் எல்லோரும் வம்பு எதுக்குன்னு நல்லவங்களாவே நடந்துக்குவாங்க, இல்லே?

வாரிசு யாருன்னு சொல்லாமப்போனதால் தமிழ்நாடு படும் அவஸ்தை ஞாபகத்துக்கு வருதே.....

ஹால் ஆஃப் ப்ரிஸர்விங் ஹார்மெனிக்குப் பின்பக்கம்  இங்கே இருப்பதிலேயே பெரூசா ஒரு பளிங்குப்பலகை செதுக்கல். 16.57 மீட்டர் நீளம், 3.07 மீட்டர் அகலம். இதுலேயும் ஒன்பது ட்ராகன்கள் பின்னிப் பிணைஞ்சு இருக்குதுகள்.
சீன  அரசர்களுக்கு இந்த ஒன்பது என்பது தெய்வீக எண்ணாம். எங்கெங்கே முடியுமோ  அங்கெல்லாம் ஒன்பது!  கோட்டைக் கதவுகள் மொதக்கொண்டு....  கதவுலே அடிச்சு வச்சுருக்கும் தங்கக்குமிழ்(ஆணி)களும்  ஒன்பதே!
தங்கச் சிங்கம்
எங்கெ பார்த்தாலும் சிங்கமா இருக்கே..... யானை இருக்கப்டாதா? ஹூம்.....

சனம் நடந்து நடந்து பார்த்துக்கிட்டே வருதேன்னு  அரசுக்கே பாவமா இருந்துருக்கும் போல......  கொஞ்ச நேரம் உக்கார்ந்துக்கோன்னு  ஒரு முற்றத்துலே இருக்கை வரிசைகள் போட்டு வச்சுருந்தாங்க.
ஒரு ஜப்பான் பயணியின் நெற்றியில் தாமரை!
பேலஸ் ம்யூஸியமுன்னு சொன்னாங்களேன்னு பார்த்தால்.... மொத்த அரண்மனையே ம்யூஸியம் தான்! இது தவிர  வெவ்வேற ஹால்களில் பெயின்டிங்ஸ், பெரிய பெரிய  சீனச்சாடிகள்,  ஜேடு என்ற பச்சைக்கல்லால் செஞ்ச  சமாச்சாரங்கள் எல்லாம்  வச்சுருக்காங்களாம். நம்ம அஞ்சு மாடு ஒரிஜினல் பெயின்டிங்ஸ் இங்கேதான் எதோ ஒரு ஹாலில் இருக்கு!
நாம் ஒவ்வொரு முற்றமும் கடந்து வரும்போதே ரெண்டு பக்கங்களிலும் இருக்கும் கட்டடங்களுக்குள் புகுந்து வந்துருந்தால் மேலே சொன்ன பெயின்டிங்ஸ் வகைகளைப் பார்த்துருப்போம்.  நாம்தான் குதிரைக்குக் கண்பட்டை போட்டாப்லே  கேட்டுக்குக்கு கேட், ஹாலுக்கு ஹாலுன்னு நேரா வந்துட்டதால் அதெல்லாம் மிஸ் ஆகிப்போச்சு  :-(

  ம்யூஸியம் கிஃப்ட் ஷாப்ன்னு கடைகள்.  கூடவே அரசர் உடுப்புப் போட்டுக்கிட்டுப் படம் எடுத்துக்கலாமாம்!!  ட்ராகனாசனம் ரெடி!  அடடா....  லாஸ்ட் ச்சான்ஸையும் கோட்டை விட்டுட்டேனேன்னு இப்போ தோணுது.
மகளுக்கும் மருமகனுக்குமா சில நினைவுப்பொருட்கள் வாங்கினதோடு சரி.

 அடுத்த முற்றம் போக பக்கவாட்டு வழிதான்.  அங்கேதான் இம்பீரியல் கார்டன் இருக்கு!  அரச குடும்பத்தினருக்கான தனிப்பட்ட தோட்டம்.  முக்கியமா  அரசியருக்கானதாம்!   இங்கேதான்  இவர்களோட விருந்துபசாரங்கள், டீ பார்ட்டி எல்லாம் நடக்குமாம். பனிரெண்டாயிரம் சதுர மீட்டர் பரப்பு.
தோட்டம் நல்ல மணமா இருக்க சாம்ப்ராணி போட ஒரு அமைப்பு!
செயற்கைக்குன்று அதுக்குள்ளே ஒரு குகை, அதுக்கான கதவுன்னு ஒன்னு . அரசர்கள் காலத்துலே இங்கே ஒரு ஹால் இருந்து, அதுலே உக்கார்ந்து பூக்களை  ரசிப்பாங்களாம். என் கண்ணுக்கு ஒரு பூவும் தென்படலை. எல்லாமே எவர்க்ரீன் வகைச் செடிகள்தான்.
வசந்த மண்டபங்கள் போல அங்கங்கே சில!

எடுத்த எல்லாப் படங்களிலும்  தலைகள் தலைகள்...... அவ்ளோ கூட்டம்....வேறென்ன சொல்ல?

அப்பதான் மரத்தடியில் உக்காந்துருக்கும் நம்ம யானை கண்ணுலே பட்டது!   ஹா.....  ஓடு அங்கே!

தோட்டத்துக்குள்ளே இருந்து வெளியேறும் வாசல் அது. ரெண்டு பக்கமும் மரத்தடியில் இருவர்!  பித்தளைச்சிற்பம். தங்கம்  முலாம்அடிச்சு வச்சுத் தடவித்தடவியே இந்த நிலைக்கு வந்துருச்சுப்பா.....  :-(  உக்கார்ந்துருக்கும் ஸ்டைலும் என்னவோ வேறமாதிரின்னா இருக்கு!

அந்தக் கதவின் வழியா நாங்களும் அடுத்த பிரகாரத்துக்குள் போனோம். இடப்பக்கம் கட்டடங்களும், வலப்பக்கம் மதில்சுவருமா நீள நெடுக......   அங்கங்கே  மரங்கள், மரத்தைச் சுற்றி உக்கார்ந்துக்க பெஞ்சு ,  சுவரையொட்டி இருக்கைகள்ன்னு  நல்லாவே இருக்கு.

அப்பதான் தோணுச்சு  உள்ளே மெரிடியன் கேட்டு முதல்,  தோட்டத்துக்கு வர்ற கேட் வரை எங்கேயுமே மருந்துக்குக் கூட ஒரு மரம் இல்லையேன்னு!  கல் பாவின தரைகளும், மஞ்சக்கூரைக் கட்டடங்களுமாத்தானே  .... எல்லாம்!   ஏன்? எதுக்கு?

சிற்பங்கள் விற்கும் கடைகளும் இதே வரிசையில்  இருக்கேன்னு எட்டிப்பார்த்தேன். அருமை! ஆனால் எனக்கானதல்ல!  வாசல் பெஞ்சுலே போய் உக்கார்ந்தால் வம்பில்லைன்னு 'நம்மவர்'  தெளிவாத்தான் இருக்கார். நம்ம யானை கூட இருக்கே....  வந்து பார்த்துட்டாவது போங்கன்னால்....  ஆள் அசரலையே....
இன்னும் கொஞ்சம் நடந்தபிறகு வெளியே போகும் வடக்கு வாசலுக்கு வந்துருந்தோம்.

இந்த ஃபர்பிடன் ஸிட்டி என்னும் பேலஸ் ம்யூஸியத்துக்குள்ளே  வர்றதுக்கு  எல்லாருக்கும்  ஒரே ஒரு வழிதான். (எனக்கொரு வழி சொல்லிட்டுப்போங்கோ.....   எல்லார்க்கும் ஒரே வழிதான் கிட்டியா.....   )  அது அந்த மெரிடியன் கேட்.  உள்ளே வந்த பின் வெளியேற  ரெண்டு மூணு வாசல்கள் இருக்கு. அதுலே இதுவும் ஒன்னு!  இதுக்கு Gate of Divine Prowess என்று பெயர்.  Divine Might Gate என்றும் ஒரு பெயர் இருக்கு. காரணம்....


அரசர்கள் காலத்துலே அந்தப்புரவாசி ஆக விரும்பும் குறிப்பிட்ட இளம்பெண்கள், நேர்காணலுக்கு இந்த வழியாத்தான் வருவாங்களாம்!  ஓ....  டிவைன்!  மூணு வருசத்துக்கு ஒருமுறை செலக்‌ஷன்!

போதும் பார்த்ததுன்னு  வெளியே வந்தால் பெரிய முற்றம். போச்சுடா..... இன்னும் எவ்ளோ தூரமோ?
முற்றம் கடந்தால் பெரிய பாலம்.  அம்பத்திரெண்டு மீட்டர் அகலத்துக்கு அகழி!
பாலம் கடந்தால் பஸ் நிறுத்தம். டூரிஸ்ட் பஸ்களும், லோக்கல் ரூட் பஸ்களுமா கூட்டமான கூட்டம்.  மெயின்ரோடுக்குப் பக்கமாவே அகழியையொட்டி ஒரு பாதை இருக்குன்னு நாங்க அதுலே இறங்கி நடக்க ஆரம்பிச்சோம்.  கூட்டத்தைத் தவிர்க்க வேற வழி இல்லை.  நம்மைப்போலவே பலரும் நினைச்சுருந்தாங்க :-)
போற பாதை சரியானதான்னு தெரியலைன்னாலும்.... நாம் உள்ளே வந்த பாதைக்கு இது நேரெதிரானதால்  ட்யனமென் கேட்கிட்டே போகுமுன்னு  தோணுச்சு.