Wednesday, March 30, 2022

மழையைக் கும்பிடாதே.... மலையைக் கும்பிடு......

இந்த மாட்டுக்காரப்பயல் இருக்கானே.....   ரொம்பக் குருத்தக்கேடு காமிப்பான்.  ஆயர்பாடியில் வளர்ந்து வரும் காலம்.....    எல்லோரும் மாடுங்கன்னும், பாலும் நெய்யுமா மகிழ்ச்சியோட இருக்காங்க.  மழைக்கடவுளான இந்திரனுக்கு, வருஷமொருக்காப் படையல் போட்டுக் கும்பிடுறது வழக்கம்.  மழை இருந்தாத்தானே புல்பூண்டு செழிப்பா வளரும்?   மாட்டுக்கூட்டத்துக்கு  சாப்பாடு வேணாமா  ? 
நம்ம பயல் பார்த்தான்.....  இதை இப்படியே விடக்கூடாதுன்னு.....   உக்கார்ந்து யோசிச்சவன் சொல்றான்.....  'இதப்பாருங்க....  இந்த மலை இருப்பதால்தான்  நம்ம மாடுகள் எல்லாம்  அங்கே போய்  காலாற மேய்ஞ்சும், வயிறாரத் தின்னும்  சந்தோஷமாத் திரிஞ்சுட்டு வந்து நம்ம வீடுகளில் குடங்குடங்குமாப் பாலைப் பொழியுதுங்க.  இந்த மலை மட்டும் இல்லேன்னா.... நம்ம கதி என்னாகும் ?  அதனால் இந்த மலைக்கே  நாம் படையல் போட்டு விழா எடுக்கணும்' னு. 
 தலைவர்  மகன். கிராமத்துக்கேச் செல்லப்பிள்ளை.  இவன் சொல்லி நாம எப்படிக் கேக்காமல் இருக்க முடியும் ? எதுத்துப்பேசலாமுன்னா..... இவன் முகத்தைப் பார்த்ததும் வாயடைஞ்சு போயிருது..... சரி போ.... அப்படியே செஞ்சுறலாமுன்னு  விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிச்சாங்க. விழா எப்பன்னா.... தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் !  

தேவலோகத்துலே இந்திரன் ரொம்பக் குஷியா இருக்கான்.  மழைக்கு அதிபதி வருணன் என்றாலும், தாந்தானே தேவர்களுக்கே தலைவன். . நம்ம சொற்படிதான் கேபினட் கேட்கணும். அதனால் நாம்தான் ஒசத்தி.  கீழே வேற படையல் தயாராகுது.  நம்ம ஃபேவரிட் சாப்பாட்டு வகைகள் எல்லாம்  தயாரிக்கிறாங்க. பாலுக்கும் நெய்யுக்கும் அங்கே குறைவா என்ன ?   இஷ்டத்துக்கு ஊத்தித் தாளிக்கிறதுதானே !  எல்லாம் அட்டகாசமான ருசிதான் ! வருஷத்துக்கு ஒருநாள்னு இதுக்காகவே வருஷம் முழுக்கக் காத்துக்கிட்டு இருக்க வேண்டியதாப் போச்சு.....  
படையல் போட்டுட்டாங்க.  இதோ கிளம்பிப்போறேன்னு அவசரமா  வர்றான்.  இங்கே பார்த்தால், பூஜைக்குரிய சாமியா தான் இல்லாமல். மலையைக் கும்பிட்டிக்கிட்டு இருக்கு சனம். என்ன அக்ரமம் ?  இந்திரனுக்கு ஒரே கடுப்பு. இதுகளுக்கு ஒரு பாடம் கற்பிக்கணும். இப்படியே போனாப்போகுதுன்னு விட்டால் நம்ம மானம் மரியாதையெல்லாம் என்னாவது ? நம்ம அருமை தெரியவேணாம் ? வருணனுக்கு உத்திரவாச்சு.  "வித் இம்மீடியட் எஃபெக்ட்.... மழையைத் திறந்து விடு ! நாஞ்சொல்றதுவரை நிப்பாட்டக்கூடாது... ஆமாம்....."

மழையாக் கொட்டித் தள்ளுறான். ஒரே வெள்ளக்காடு.... கோகுலத்துப் பெருசுங்க... 'அடடா... தப்பு பண்ணிட்டோம். இந்தப்பொடியன் பேச்சைக் கேட்டுருக்கக்கூடாது. காலங்காலமா இருக்கற வழக்கத்தை மாத்துனது நம்ம தப்புதான். இப்பக் கஷ்டப்படறது நாமா இல்லை, இவனா ? நமக்காச்சும் வீட்டுக்குளே போய் முடங்கலாம். இந்த மாடு கன்னுங்க கதி என்னாறது ? இவ்ளோதூரத்துக்கு நம்மைக் கொண்டுவந்துட்டானே... அவனைச் சும்மா விடக்கூடாதுன்னு தலைவர் வீட்டுக்கு ஓடறாங்க. அங்கே போனால் யாருக்கு வந்த விருந்தோன்னு  எதையும் கண்டுக்காம நடுக்கூடத்துலே உக்கார்ந்து  விழாவுக்குச் சமைச்சுப் படையல் போட்டதையெல்லாம் ஒரு கை பார்த்துக்கிட்டு உக்கார்ந்துருக்கான் பயல்.
  
சனம் கூப்பாடு போடுது.  'என்னாச்சு?'ன்னு நிதானமாக் கேக்கறான்!  என்ன நடக்குதுன்னு உமக்குத் தெரியாதா ? வெளியே வந்து பாரும்..... 

"அச்சச்சோ.... மழையாப் பெய்யுது ?"  சனத்துக்கு BP எகுறுது. 

கவலைப்படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கறேன்.....

 உயிரினங்கள் எல்லாம் கடும் மழையில் மாட்டிச் செய்வதறியாது மயங்கும் நேரம், ஏழே வயதுப் பாலகன் அறுபது மைல் நீளம், நாற்பது மைல் அகலம், அறுபது மைல் உயரம் உள்ள கோவர்தன மலையை அப்படியே அலாக்காத் தூக்கி( தன் இடது கை சுண்டு விரலால்) நிறுத்தினதும் சகல உயிர்களும் மலைக்கடியில் தஞ்சம் அடைஞ்சது. ( நல்ல காலம். கை மட்டும் கொஞ்சம் தவறி இருந்தால் கூண்டோடு காலி.  மழை விட்டப்பாட்டைக் காணொம். ஏழு பகலும் ஏழு இரவும் விடாத மழை. கடைசியில் இந்திரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு மழையை வாபஸ் வாங்கிட்டான்.

(கீழே படம் நம்ம மதுரா பயணத்தில் வ்ருந்தாவனில் எடுத்தது )

நம்ம ஹரேக்ருஷ்ணா கோவிலில் கோவர்தன பூஜை வருஷாவருஷம் தவறாமல் நடக்கும்.  முந்தியெல்லாம்  கேக் செஞ்சு மலையையே உருவாக்கிருவாங்க.  அங்கே இருக்கும் சின்னச் சின்ன குளம் எல்லாம்  ஜெல்லியால் மின்னும் தண்ணீராக  இருக்கும்.  குட்டிக்குட்டிப் பொம்மைகளா மாடு, கன்னு, மனுஷன், மரம் னு அலங்காரம்.   இங்கெல்லாம் நகருக்குள்ளே  நாய் பூனையைத் தவிர்த்து மற்ற மிருகங்கள் இருக்கத் தடை என்பதால்..... பக்கத்து கிராமப் பண்ணையில் இருந்து கன்னுக்குட்டிகளைக்  கொண்டுவந்து  கொஞ்சநேரம் தோட்டத்தில் கட்டி வைப்பாங்க.  இந்தப் பண்ணையும்  கோவிலோட பண்ணைதான். 

அந்த  கோவர்தனகிரி பூஜை விவரங்கள் கீழே இருக்கும் சுட்டியில்....    

http://thulasidhalam.blogspot.com/2008/10/blog-post_27.html

சில வருஷங்களுக்கு முன் யாரோ புண்ணியவான்  மரமலையைச் செஞ்சு கொடுத்துருந்தார்.  அதுலே மண்டபம், மரம் குளம் மாடு கன்னு  எல்லாமே  அங்கங்கே வைக்கும் விதம் தனித்தனி  பொம்மைகள்.  அலங்கரிக்கும்  வேலை எளிதுன்னாலும் பழைய அழகு இல்லை. காலமாற்றமுன்னு இருக்க வேண்டியதுதான்.  இருக்கோம்.
கோவிலில் இருந்து கோவர்தன பூஜை அழைப்பிதழ் வந்தது.  விழாவுக்குப் போனோம்.  மழை வரும் அறிகுறியாக இருந்ததால்  டைனிங் ஹாலில் மலையை வச்சாச்.  வழக்கம் போல் இல்லாமல்  மூணே இளம் பக்தர்கள்  மலைகளைப் பலகாரங்களினால்  அலங்கரிக்கிறாங்க.  கோவிட் காரணம்  மலையில் இனிப்புகள் வைக்கும் மற்ற பக்தர்கள் கைகளுக்குத் தடா. ஒருவரோடொருவர் இடிச்சுத் தள்ளிப்போவதும்  வேண்டாம். ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிச்ச மாதிரியும் ஆச்சு.       

மலையைச்  சுத்திவரக் கொஞ்சம் தள்ளி  நின்னு பஜனைகளைப் பாடினோம். ஆரத்தி எடுத்தவுடன்,  மூலவர்களுக்கும்  கருவறை ஹாலில் ஆரத்தி எடுத்து முடிச்சு, விருந்தும் சாப்பிட்டு வீடு வந்தோம்.

இதே கோவர்தன பூஜை மாதிரிதான்  நம்ம ஸ்ரீ ஸ்வாமி நாராயண் கோவிலிலும் தீபாவளி முடிஞ்சதும் அன்னக்கூட் வைபவம் நடக்கும். இதுக்கு பக்தர்கள் எல்லோரும்  எதாவது பலகாரம் செஞ்சு கொண்டு போவோம். ஒருமுறை நானூற்றி எம்பது தட்டுகளில்  படையல். அப்போ நம்ம வகையில்  தேன்குழல் செஞ்சு கொண்டு போயிருந்தோம். இந்த வருஷம்  அன்னக்கூட் கோவிடின் உபயத்தால்  ரொம்பவே அடக்கி வாசிக்கப்பட்டது.  
இந்தக் கோவிட்டால்  இன்னும் எத்தனை கஷ்டங்கள் வரப்போகுதோ..... ப்ச்....


Friday, March 25, 2022

உள்ளூர் கோவில் சமாச்சாரம்............

பண்டிகைகள், விழாக்கள் எல்லாம்  அதுபாட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தாலும், நாட்டின் கோவிட் நிலை அனுசரிச்சு  அரசு என்ன லெவல்னு சொல்லுதோ அதுக்கேத்தமாதிரி ஆடிக்கிட்டு இருந்தோம்.  அதனால் சில சமயம் கோவில் விஸிட் கூட இல்லாமப்போயிருது.  இத்தனைக்கும் எங்க தெற்குத்தீவில் கோவிட்  நோய் இல்லவே இல்லை.  நாட்டின் ஒருமைப்பாடு என்ற நிலையில்  நாங்களுமே பத்தியம் சாப்பிடவேண்டியிருக்கு. பலசமயங்களில் நம்ம நல்லதுக்குத்தானேன்னு நினைச்சாலும், சிலசமயம் எரிச்சல் வருவதைத் தடுக்க முடியலை.  ஊரில் இருக்கும் ரெண்டு கோவில்களில்,  ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோவில் ஒன்னு.  அங்கே இருந்த பண்டிட் ஸ்வாமிகளுக்கு, விஸா நீட்டிக்க அரசு மறுத்ததால்...... அவர் கிளம்பி குஜராத்துக்கே போயிட்டார்.  இங்கே பூஜை செய்ய ஆளில்லாததாலும்,  கோவிட் காரணமாகவும் (! ) கோவிலை மூடி வச்சுட்டாங்க. 
அப்புறம் விசாரிச்சதில் பூஜை முடங்காமல் இருக்க, அவுங்க ஆட்களிலேயே  யாராவது வாலண்டியர்கள்  தினசரி ஆரத்தி எடுக்கறாங்கன்னு  தெரிஞ்சது. பொதுமக்கள்தான் தரிசனம் செஞ்சுக்க முடியாமல் போயிருச்சு.  இந்தக்கோவில் முழுக்க முழுக்க குஜராத் மக்களின் நிர்வாகத்தில் இயங்குது. 

இன்னொரு கோவில்தான் நம்ம ஹரே க்ருஷ்ணா. ஊரின் மூத்த கோவில். ஆரம்பிச்சு  முப்பத்தியொன்பது வருஷங்களாச்சு.    நாம் இங்குவந்த  ஆரம்பகாலங்களில் இருந்து இங்கேதான் போய்க்கிட்டு இருக்கோம்.  நிலநடுக்கத்தில்  கோவில் இடிஞ்சுட்டதால்....  ஆறு வருஷமாக் காத்திருந்து  புதுக்கோவில் அதே இடத்தில் கட்டிட்டாங்க.  அதுவரை உற்சவமூர்த்திகளை வச்சே...   வாரம் ஒரு முறைன்னு  சமூகக்கூடத்தில் கும்பிட்டுக்கிட்டு இருந்தோம்.  புதுக்கோவில் வந்ததுமுதல் எல்லாம் வழக்கம்போல மீண்டாச்சு. 
 கோவிட் ரூல்ஸ்க்கு ஏத்தாப்போல  இங்கேயும் தான்..... ஆனால் உள்ளேயே  பண்டிட்கள்  தங்கி இருப்பதால்  நித்யப் பூஜைகள் முடங்கலை.  ஸ்ரீ வைஷ்ணவக் கேலண்டர்படிதான் எல்லாமும்.  

நம்ம யுகாதியில் சைத்ர மாசம் ஆரம்பிச்சு ஃபல்குண மாசம் ( சித்தரை - பங்குனி )வரை இருக்கும் பனிரெண்டு மாசங்களுக்கு   வைஷ்ணப்பெயர்கள்  இருக்கு. எல்லாம் மஹாவிஷ்ணுவின் நாமங்களே !  விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ஹ்ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா,  கேசவா, நாராயணா, மாதவா,  கோவிந்தா!
இன்னொரு வகை த்வாதஸ நாமம், இல்லே !

இப்போ தாமோதர மாசம் நடக்குது.  கோவிலில் பக்தர்கள் நெய்விளக்கு  ஏற்றிக் கும்பிடலாம்.  நாம் விளக்கெல்லாம் கொண்டுபோக வேணாம்.  கோவில் வகையிலேயே குட்டியூண்டு நெய்ப்பந்தங்கள்(Ear bud size )  வச்சுருப்பாங்க. ஒன்னு எடுத்துக் கொளுத்திக் கும்பிடவேண்டியதுதான். தாமோதராஷ்டகம்  சொல்வாங்க. தெரியலைன்னா போர்டுலே இருப்பதைப் பார்த்துப் படிக்கலாம்.  இதுலே ஒரே ஒரு கஷ்டம்தான் நமக்கு....




அந்தக் காலத்துலே  சமஸ்க்ரதம், பெங்காலி மொழிகளில் இருந்த  ஸ்லோகங்களையும், பாடல்களையும் ,  ஹரேக்ருஷ்ணா இயக்கம் ஆரம்பிச்சப்ப, வெளிநாட்டவருக்காக இங்லிஷில்  எழுதி வச்சுருக்கும் வகை இது. எந்தப் புண்ணியவான் கைங்கரியமோ.....   அதைப்பார்த்துப் படிக்கும்போது உச்சரிப்பெல்லாம் நமக்குச் சட்னு புரிஞ்சுக்கும்படி  இல்லை. ஆனால் இயக்கத்தில் இருக்கும் பக்தர்கள் இதுக்கான வகுப்புகளுக்குப்போய் கத்துக்கிட்டதால்  அவுங்களுக்குச் சுலபமா வருது. இங்லிஷில் இல்லாமல் ஹிந்தியில் இருந்தால் நமக்குச் சுலபமா இருக்கும்.  நல்ல வேளை.... மற்ற  பக்தர்கள் இப்படியெல்லாம் கஷ்டப்படவேணாமுன்னு யார் வேணுமுன்னாலும் சுலபமாச் சொல்லும்படி மஹாமந்த்ரம் உருவாக்கிய  ஸ்ரீ ல ஸ்ரீ பிரபுபாதா அவர்களுக்குக் கோடி நமஸ்காரம் ! 

ஹரே க்ருஷ்ணா ஹரே க்ருஷ்ணா  க்ருஷ்ண  க்ருஷ்ண  ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே !

மகளின் தோழி  வாலண்டியர் வேலை செய்யும் இடத்தில்  செடிகள் விற்பனை இருக்குன்னாதால்  ஏதாவது தேறுமான்னு பார்க்கப் போனோம்.  மூணு நாட்களா நடக்குது. தீபாவளி சமயத்து வேலைகள் காரணம்  போக முடியலை.  இன்றைக்குத்தான் கடைசி.  எட்டிப்பார்த்துட்டு வரணும். ரொம்பச் செடிகள் இல்லை. ஒன்னே ஒன்னு நம்மிடம் இல்லாதது கிடைச்சது. ஆனால்  மரத்தில் செஞ்ச ஒரு ப்ளான்டர் நல்லா இருக்குன்னு வாங்கினோம்.   







வீட்டுக்கு வரும் வழியில் கார்டன் சென்டர் போய்க் கொஞ்சம் பூச்செடிகள் வாங்கினோம்.  ஏற்கெனவே விதைபோட்டு வளர்த்துப் பூக்கள் வரும் சமயம்  இப்படி வாங்கி வச்சால் நோகாமல் தோட்ட வேலை செய்யலாம் இல்லை? 
நம்ம வீட்டு வழக்கப்படி இப்படி எது வாங்கினாலும் நம்ம பெருமாளுக்குக் காமிச்சுட்டு,  'க்ருஷ்ணார்ப்பணம்....   நீரே பார்த்து வளர்க்கணுமு'ன்னு பொறுப்பைக் கொடுத்துட்டால் ஆச்சு. அவர் பார்த்துப்பார் !
நம்ம ரஜ்ஜுவுக்கு இந்த ப்ளான்டர் ரொம்பப்பிடிச்சுப் போச்சாம்!  
ஆஹா.....









Wednesday, March 23, 2022

தீபாவளியும் புதுப்புடவையும் !

இதோ அதோன்னு தீபாவளிப்பண்டிகை வந்தே வந்துருச்சு.  'நம்மவர்' சித்தாள் வேலை செஞ்சுக்கிட்டு வெளியே தோட்டத்தில் இருந்த சமயம், நானும் நம்ம கைவரிசையைக் காட்ட நினைச்சேன்.  பண்டிகைக்கு ஏதும் பலகாரம் செய்யணுமா இல்லையா ?  இப்பெல்லாம்  புதுசா ஒரு கைவலி வந்துருக்கு.  இடதுகைப் பெருவிரல் கீழே ஒரு கொழுக்கட்டை.  அந்தக் கையில் ஏதும் கனமானதைத் தூக்கவோ,  அழுத்தம் கொடுக்கும் வேலைகளைச் செய்யவோ முடியறதில்லை.  முறுக்கெல்லாம் பிழியவே முடியாது...  கெட்டதில் நல்லதுன்னா..... வலி இடது கையில்.  வலது கையில் மட்டும் வந்திருந்தால்.... ஐயோ.... நினைக்கவே முடியாது. பாகப்பிரிவினைதான்...  நான் சினிமாவைச் சொல்றேன் :-)
நம்மவரும்... 'இனி ஒன்னும் செய்ய வேணாம். எதாவது இனிப்புகளைக் கடையில் வாங்கினால் ஆச்சு'ன்றார்.  மனசு கேக்குதா ?   கைகளுக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் என்னன்னு நானே சிந்திச்சு (!) பாதுஷா பண்ணிக்கலாமுன்னு நினைச்சேன்.  இது நம்மவருக்குப் பிடிக்கும் இனிப்பு வகை. ஓரளவு சுமாரா நல்லாவே வந்துருச்சு!
இதன் கூடவே கொஞ்சம் அச்சு முறுக்கும் செஞ்சால்  போதும்.  நம்ம மலேசியத்தோழி  ஒருவர் இந்த அச்சைப் பரிசாகக் கொடுத்தே ஆச்சு ஒரு இருபது  வருஷம். மாவில் அச்சை முக்கி எடுத்து சூடான எண்ணெயில் வச்சால் ஆச்சு. இல்லையோ ?  நினைப்புத்தான்... பொழைப்பைக் கெடுக்குது இல்லே....
யூ ட்யூபில் பார்த்துட்டு மாவெல்லாம் ரெடி பண்ணிட்டு எண்ணெய் சூடானதும்  அச்சை  அதிலேயே கொஞ்ச நேரம் வச்சுருந்தபின், மாவிலே முக்கி எடுத்துத் திரும்ப எண்ணெயில் வச்சாச்.  படத்துலெ காமிச்சதைப்போல அது தானாகக் கழண்டு வரவே இல்லை.....  கரிஞ்சுபோய் ஒட்டிப்பிடிச்சே கிடக்கு.  அதைச் சுத்தம் செய்ய ரொம்பவே கஷ்டப்படவேண்டியதாப் போச்சு... ப்ச்.
இப்ப கலக்கின மாவை என்ன செய்யறது ? இன்னும் கொஞ்சம்  அரிசி, உளுத்தம்மாவு, எல்லாம் கலந்து கொஞ்சம் லூஸாவேப் பிசைஞ்சு  முறுக்குப் பிழிஞ்சு எடுத்துட்டேன். கைவலியோ உயிர் போகுது. ஆள் உள்ளே வர்றதுக்குள்ளே அவசர அவசரமா வேலையை முடிச்சுறணும்.  நம்மவருக்குத் தெரிஞ்சால் அவ்ளோதான்....  சண்டை ஆரம்பிச்சுரும்.... 'உன்னை யாரு இதெல்லாம் செய்யச் சொன்னா?' ன்னு. என்னவோ இவர் சொல்றதை மட்டுமே  நான் இத்தனை வருஷமாக் கேட்டு நடந்த மாதிரி :-) 
எப்படியோ இனிப்பு முறுக்கு பண்ணிட்டேன்னு வையுங்க !  புது ஐட்டம் !





சாமி அறையைச் சுத்தம் செஞ்சு, மூலவர்களுக்கெல்லாம் புது  வஸ்திரம் போட்டுவிட்டு, நம்ம ஜன்னு க்ருஷுக்கும் புது உடுப்பு  போட்டுன்னு கொஞ்சம் வேலைகளை முடிச்ச  கையோடு, வீட்டு ஃபோயரில் கொஞ்சம்  அலங்காரமும் செஞ்சேன். துணைக்கு இருந்தது நம்ம ரஜ்ஜுதான் !




மறுநாளைக்கு  வேணுமேன்னு பட்டாஸ் பொட்டியை எடுத்துப் பார்த்தால் ஓரளவு இருக்கு. எல்லாம் இது போதும்.  காலையில் இந்தியன் கடையில் பட்டாஸ் விற்பனைன்னு தகவல் தெரிஞ்சதும் போனோம்தான். எல்லாம் பத்து யானை விலை.  சின்னதா ஒரு பெட்டி இருநூறு டாலராம்.  தண்டம் பண்ண வேணாம். வீட்டுலே போன வருஷ பாக்கி இருக்குன்னுட்டேன். ஒரு சாஸ்திரத்துக்கு ரெண்டு கொளுத்தினால் ஆகாதா ?  வழக்கமா இந்த  கைஃபாக்ஸ் சீஸனில் (நவம்பர் மூணு முதல் அஞ்சு வரை)பட்டாஸ் விற்கும் கடையில், இந்த வருஷம் கோவிட்டை  முன்னிட்டு  இறக்குமதி செய்யலை.  எல்லாம் எங்கிருந்து வருதுன்றீங்க ? கோவிட்  உற்பத்தி எங்கேயோ.... அதே இடத்தில் இருந்துதான்.  

வீட்டுக்கு வரும்வழியில்  வேறொரு  இந்தியன் கடையில் கொஞ்சம் இனிப்பு  & உப்பு  வகைகளை வாங்கி வந்தோம்.



தீபாவளியன்று காலையில்  கங்கா  ஸ்நானம் ஆனதும் , பிரஸாதம் செஞ்சேன். மாம்பழ பாதாம் கேஸரி. புதுப்புடவை, வேஷ்டி, பட்டாஸ் எல்லாமும் படைச்சாச். மஹாலக்‌ஷ்மியும் வந்து உக்கார்ந்தாள்.  ரஜ்ஜு வந்து நமஸ்காரம் பண்ணினான். செல்லம்.  அப்பதான் அந்த ஜேம்ஸும் வந்து ஃபென்ஸ் வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருந்தார். 
நாங்களும் பூஜையை முடிச்சுட்டு,  நம்ம சநாதன் ஹாலுக்குக் கிளம்பிப்போகும் வழியில் நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்கும் போனோம்.  சந்நிதி திறந்திருக்குமோ இல்லையோன்னு போனால்  நல்ல தரிசனம் கிடைச்சது.  





அடுத்த இருபதாவது நிமிட், சநாதன் ஹாலுக்குப் போயாச்சு. அப்பதான் நம்ம ஆஞ்சிக்கு அபிஷேகம் முடிச்சுப் புது வஸ்த்ரம் அணிவிக்கிறார் நம்ம பண்டிட். 
புதுக்கொடி ஏத்தியதும், நாமும் கும்பிட்டுக்கிட்டு ஹாலுக்குள்ளே போனோம். தீபாவளிப் பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்குது. மேடையில் பஜனை கோஷ்டி.  இன்னும்  மக்கள்ஸ் யாரும் வரலை. பக்தர்களா நாங்க ஒரு நாலைஞ்சுபேர். லேடீஸ் மூவர்.  மக்கள் அவுங்க வீட்டுப்பூஜைகளை முடிச்சுக்கிட்டு வருவாங்க.  சாயங்காலம் நல்ல கூட்டம் இருக்கும்.




நாம் போகப்போறதில்லை.  மகளும் மருமகனும் வர்றாங்க தீபாவளி விஸிட்.   விருந்து ? இருக்கு..... எல்லாம் மருமகனுக்குப் பிடிச்ச ஐட்டங்கள். தஹிபுச்கா, பேல் பூரி, எலுமிச்சை சாதம்.  எல்லாம் தயாராக்கி  வச்சுருந்தேன். தீபாவளிப்பரிசாக மகள் ஒரு க்றிஸ்டல் கேண்டிலும்,  மருமகன் ஒரு விளக்குச் சரமும் கொடுத்தாங்க.  எல்லாம் ஒளி மயம் ! 



விருந்து முடிஞ்சதும் தோட்டத்தில் போய் பட்டாஸ் கொளுத்தினோம். மாமனாரும் மருமகனும்தான் இதுலே மும்முரம்.  ரஜ்ஜுவை அறையில்  வச்சுட்டுக் கதவை சாத்திட்டுதான்.  பயந்தாங்குளி. இருட்டில் ஓடிப்போயிட்டால்  நமக்குக் கஷ்டம். இத்தனைக்கும் இங்கே வெடிக்கும் சமாச்சாரமெல்லாம்  பட்டாஸ் வகைகளில் வராது.  வெறும் ஒளி மட்டுமே. சிலது மட்டும் மேலே போகும்போது 'உய்...'.னு ஒரு சத்தம் போடும். அதுக்கே பயந்துருவான்.  இங்கத்து RSPCA  இந்தப் பட்டாசுகளைத் தடைசெய்யணுமுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.  அநேகமா  நடக்கும். அதனால்  நம்ம ஸ்டாக்கில் இருப்பதில் பாதியைக் கொளுத்திட்டு  மீதியை அடுத்த வருஷத்துக்கு வச்சுக்கணும்.  வச்சாச். 

https://www.facebook.com/1309695969/videos/433630228126674/

அப்புறம்  வீட்டுக்குள்ளே வந்து  மகள் & மருமகனுக்கு ஆரத்தி எடுத்து, தீபாவளி சீர்  கொடுத்தாச்.   
அவுங்க கிளம்பிப் போனதும்  நாமும் படுக்கைக்குப் போகலாமுன்னு  விளக்குகளை எல்லாம் அணைக்குமுன், சாமி நமஸ்காரம் பண்ணப்போனால்....  தட்டில் புடவையும் வேஷ்டியும் தேமேன்னு உக்கார்ந்துருக்கு.  வழக்கம்போல் இந்த தீபாவளிக்கும் புதுசு கட்டிக்கலை.