Monday, January 30, 2023

நாட் கோட், காசி (கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 7

கவலைப்படக் கொஞ்ச நேரம் கொடுக்காம எண்ணி நாலாவது நிமிட்லே  வலப்பக்கம் திரும்பி வண்டியை நிறுத்தினார் ரிக்‌ஷாக்காரர். அட, ராமா....     ரிக்‌ஷாவில் ஏற மல்லுக்கட்டுன நேரத்துக்குப் பொடிநடையாவே வந்துருக்கலாம் !  கண்ணுக்கு எதிரா இருக்கும் கடையின் பெயர்ப்பலகை.... ஆஹா... இறங்கி  வலப்பக்கமா நடந்து போகணுமாம். இதுவும் சந்துன்னு தனியாச் சொல்ல வேண்டியதில்லைதானே? ஆனால் கொஞ்சம் அகலமான சந்து.
எப்படி இறங்குனேன் ? இறக்கப்பட்டேன் ! இந்தாண்டை கீழே குதிச்ச கோபாலும். ரிக்‌ஷாக்காரருமா இறக்கியே விட்டுட்டாங்க.  காசிக்கு வந்தா எதையாவது விடணுமாமே.........  நான் சைக்கிள் ரிக்‌ஷாவை விட்டேன் !

பராக்குப் பார்த்துக்கிட்டே நடந்ததுலே ஒன்னரை நிமிட்டில்  பெயரைப் பார்த்துட்டேன். சின்ன முகப்பு வாசல். செக்யூரிட்டி, நம்மை லிஃப்டுக்குள் போகச் சொல்லி முதல் மாடிக்கு அனுப்பினார்.  சின்ன வராந்தா முழுசும் காலணிக்கடல்.......  அதுலே நீந்திப்போகணும் போல....  கடலிலே நம்மதையும் சேர்த்துட்டுபோனால்.... வலப்பக்கம் ஒரு பெரிய  கூடத்திலே  டைனிங் ஹால்.....   'வாங்க.... அங்கெ உக்காருங்க'ன்னு இடத்தைக் காமிக்கிறார் ஒருவர். 
 'இல்லைங்க. நாங்க சாப்ட்டாச்சு. இங்கே ஆஃபீஸ் எங்கெ ? ' ன்னதும், வலப்பக்கம் கையைக் காண்பித்தார்.. அங்கே நடுவில் உள்ள கதவு வழியாக உள்ளே போறோம். ஹம்ம்மா....... வெளியில் இருந்து பார்க்கத்தான் சின்னதாக இருக்கே தவிர  பெரிய பெரிய கூடங்களாகப் பரந்து விரிஞ்சு, அதுபாட்டுக்குப் போய்க்கிட்டே  இருக்கு !

வலப்பக்கக்கூடத்தில் அலுவலகம். ஏராளமான சனம் ! நடுவில் போட்டுருக்கும் பெரிய மேஜையைச் சுத்தி மக்கள் கூட்டம் ! பின்புறச் சுவர்மாடங்களில்  நம்ம ஸ்வாமிகள் ! நம்ம முழியைப் பார்த்தே புது ஆட்கள்னு ஒருவர் நமக்கு வணக்கம் சொல்லி 'வாங்க'ன்னார். குசலபிரசனம் ஆரம்பிச்சது.  நம்மவர் சொந்த ஊர் போடின்னதும் அவர் முகத்தில் ஒரு பளிச்! பக்கத்தூர்க்காரராம்!

 'வாங்க. முதல்லே கோயிலைப் பார்த்துட்டு வரலாம்'னு நம்மைக் கீழ்தளத்துக்குக் கூட்டிப்போனார். திறந்த வெளி முற்றத்துக்கு இங்கிருந்தே படி இறங்குது. பாதாளஈஸ்வரர் சந்நிதி முதலில் ஒரு தனியறையில் ! தரையிலேயே பிரதிஷ்டை ஆகி இருக்கு. பஞ்சலிங்கங்கள்  என்றேன். கோவில் விளக்கம் சொல்லிக்கிட்டே வந்தவர் 'உலகில் வேறெங்கும் இல்லாத பஞ்சநந்திகள்  இங்கே இருக்காங்க'ன்னார்.

அடுத்தாப்லே இருக்கும் இடைவெளியைக் கடந்து  இன்னொரு வாசல் வழியா உள்ளே போனால் கோவில்! முழுசா ஒரு கோவிலே இருக்கு, ஒரு ப்ரகாரத்துடன்!

பஞ்சநந்தி.... ன்னதும் ஓடிப்போய் மூலவர்  நகரேஸ்வரர்  முன் உக்கார்ந்துருக்கும் நந்தியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷ, பூ மாலைகளை நகர்த்திக் காமிச்சாரா... அட! ஆமாம்........  கழுத்துக்குக்கீழே நாலு நந்திகள் !

மூலவர் சந்நிதியை வலம் வந்தோம்.  கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி!
 நமக்கிடதுபக்கம் சிறு மேடைபோல சுவர் முழுக்கக்கட்டி அதில் சிவலிங்கங்கள், ஒரு மூலையில் நம்ம முருகர் மனைவிகளுடன் ! 






அம்மன் சந்நிதி!   அம்பாள் பெயர் நகரேஸ்வரியாம் ! கீழ்தளத்தில் இப்படி ஒரு முழுக்கோயில் பார்த்துட்டுப் பிரமிச்சு நின்னது உண்மை. நிலைவாசப்படியின் மேல் சின்னதா ஒரு சரித்திரம்!  




கோவிலைக் கூட்டிப்பெருக்கும்  சோனாலி. ஆறுவருஷமா இங்கே வேலை செய்யறாங்களாம்.
ரெண்டு பக்கங்களிலும் இருக்கும் விஸ்தாரமான பெரிய திண்ணைகளில்  சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் ! 
கோவிலைச் சுத்திக்காட்டிய ராஜேந்திரனுடன்  திரும்ப மாடிக்கு வந்தோம். நம்மவர் ஒரு தொகையை  நன்கொடையாகக் கொடுத்தார்.  காசி விஸ்வநாதர் தரிசனம் ஆச்சான்னு கேட்ட ராஜேந்திரனிடம், இன்னும் இல்லை. நேத்து ராத்ரிதான் வந்தோம்.  இப்போ போய் விசாரிக்கணும் என்றதும்,  இதே ரோடில் நேரா கேட் நாலுக்குப் போயிருங்க. அங்கே உங்களுக்கு எல்லா விவரமும் கிடைக்குமுன்னார்.  பகல் சாப்பாட்டுக்கு மறக்காம வந்துருங்கன்னார். 


ராஜேந்திரன், தீபாவளி சமயத்தில் வந்து ஒரு வாரம் தங்கி, இங்கே உதவி செஞ்சுட்டுப் போவாறாம்.  இது இல்லாமல், 'எப்பத் தோணுதோ அப்போ வந்துட்டுப் போவேன்'னார்!  என்ன ஒரு கொடுப்பினை !

கண்ணில் பட்டதை யெல்லாம் க்ளிக்கினப்ப, ஒரு இடத்தில் பகல் சமையலுக்குக் காய்கறிகளை  நறுக்கிக்கிட்டு இருந்தாங்க.
இங்கேயே தங்கறதுக்கு அறைவசதிகள் இருக்குன்னேன்.  அப்ப  உன் கங்கைக்கரை ? ன்னார் நம்மவர் !

அதானே....... ?

தொடரும்............. :-)

Friday, January 27, 2023

செங்கல்லே வழியாம் !!!! (கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 6

அஞ்சு மணிக்கே முழிப்பு வந்துருச்சு.  உடனே பால்கனிக்குப் பாய்ஞ்சேன். அதே காட்சிதான். ஆனால் நிலா  காயுது (! ) நேத்துதானே ஏகாதசி....
படித்துறையில் சிலர் உட்கார்ந்திருக்க ஒருவர் கங்கையில்  குளிக்கிறார். சூரியன் வருவதைப் பார்க்கணுமே...... அதுக்கு இன்னும் நேரமிருக்கே.....  பயணத்தில் அவசரத்தேவைக்கு த்ரீ இன் ஒன் (ஒல்ட் டௌன். மலேசியன்) காஃபி கொண்டு போறதுண்டு. வெந்நீர் போதும்.  ஒரு காஃபி போட்டுக்குவோம். அதான் கெட்டில் இருக்கே!

பால்கனியில் உக்கார்ந்து காஃபி குடிக்கும்போதே.... வானம் சிவக்கத்தொடங்குச்சு. அஞ்சே நிமிட்டில் விடிஞ்சே போச்சு. ஆனால் சூரியன் ?  பனிப்புகையால்லெ இருக்கு. மொட்டை மாடிக்குப்போய் பார்க்கலாமுன்னு  ரெஸ்ட்டாரண்ட் போனால் ஆளரவமில்லை.  மொட்டைமாடிக் கதவைத்தள்ளிப் பார்த்தால் திறக்கலை. பூட்டி வச்சுருக்காங்க போல ! 

லிஃப்ட் வேணாம், மாடிப்படியில் இறங்கலாமுன்னு போனால்  படி வரிசையில் ஜன்னல்!  கண்ணாடிக் கதவைத் திறக்க முடிஞ்சது ...........  வாவ்........... வளைஞ்சு போகும் நதியின் படித்துறைகள் வரிசைகட்டி நிக்குது !!! அடுத்தடுத்த கூரைகள் மேலே 'நம்மாட்கள் 'குழந்தைகுட்டிகளோடு  தாவித்தாவிப் போறாங்க ! 
அடுத்த கட்டடத்தில்  கூடம் போல இருக்குமிடத்தில்  மரப்பலகைக் கட்டில்கள். சாது சந்நியாசிகள் தங்கி இருக்காங்கன்னு  பார்த்தவுடன் தெரிஞ்சது. பனித்திரை விலகினதும் .... சூரியன் முழ உயரத்தில் இருக்கான். சரியா மணி 6. 
நாம் இருப்பது 64 வது படித்துறை ! (இப்ப கங்கையில்  இருக்கும் படித்துறைகள், மொத்தம் 88 )  கீழே மக்கள் நடமாட்டம்.... தண்ணீர் தெளிவா இல்லை. மழைவெள்ளமாம் !  ஒவ்வொரு படித்துறைக்கும்  கார்பார்க்கிங் போலப் படகுப் பார்க்கிங்.

கொஞ்சநேரம் சூரியனைப் பார்த்துட்டுக் குளிச்சு முடிச்சு ரெடியானோம்.  இந்தப் பயணத்தில்  எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லை.  எது கிடைக்குதோ அது. மனசில் எது  தோணுதோ அது.  ப்ரேக்ஃபாஸ்ட் சாப்ட்டுட்டு வெளியே கிளம்பலாம்னார் 'நம்மவர்'. ஐயோ.... அந்தப் படிகளில் ஏறணுமா....  வேறெதாவது வழி இருக்கணும்... தேடலாம்.....
சீதாவில் அஞ்சு மாடிவரை, அறைகளின் அமைப்பின்  நடுவே இருக்கும் திறந்த முற்றம்/  சின்னக்கூடத்தின் தரை இரும்புக் கம்பிகளால் ஆனது. நேத்து நம்ம GOlu அதன் மேலேயே பெட்டிகளைச் சுமந்துக்கிட்டு நடந்தது போல நம்மால் முடியாது. நாங்க அதைச் சுத்தி நடந்து வர்றோம்.  
இந்த சீதா... மூணு நக்ஷத்திரமாம்.  அந்த மூணும் எங்கே இருக்குன்னு தேடணும். ரொம்பவே பேஸிக். ஆனால் கண்முன்னே கங்கை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய்  துல்ஸி ?  அனுபவிச்சுக்கோ.  சுடுதண்ணி வரலை. கூப்பிடு  கோலுவை ! ஏர்கண்டிஷனர் ரிமோட் வேலை செய்யலை... கூப்பிடு கோலுவை.....




கங்கைக்கரை காக்கா !  (இங்கே நம்மூரில் இல்லாத பறவை !!)


ஆறாவது மாடியில் ரெஸ்ட்டாரண்ட்.  எட்டுமணிக்குத் திறப்பாங்களாம்.  அறை வாடகையில்  காலை உணவு சேர்த்தி.  பராத்தா, ஆலு கறி வகைகள்  செஞ்சு தருவாங்களாம்.  நமக்கு ப்ரெட் டோஸ்ட் & டீ போதும்.  ஆளுக்கு ரெண்டு ஸ்லைஸ் தாராளம். மொட்டைமாடிக் கதவு திறந்துருந்தது. பூட்டி வைப்பீங்களான்னு கேட்டால் இல்லையேன்னு பதில்.கிட்டே போய் பார்த்தேன்...  ஸ்லைடிங் டோர் ! ஹாஹா.... காசியில் வாங்குன முதல் பல்ப் :-)


ஹொட்டேல் வாசலைவிட்டு வெளியே வந்தால்.... வலப்பக்கம் கங்கையை நோக்கிப்போகும் படிக்கட்டுகள்.  சனம் போறதும் வாரதுமா இருக்கு.  இடப்பக்கம் படிகளில் ஏறிப்போகணும் நாம்.  நேத்து கார் வந்து  நின்ன இடம் நோக்கி.......   கேசவா, நாராயணான்னு துவாதஸ நாமங்கள்  சொல்லியபடி   படிகளில் ஏறும்போதே அங்கங்கே சிவலிங்கங்கள் !  தடுக்கி விழுந்தா கோவில்னு சொல்வோமே.... அப்படிக் காலடிக்குக்காலடி  தக்குனூண்டு இடம் கிடைச்சால் போதும்  லிங்கப்ரதிஷ்டை ஆகிருது !
வலப்பக்கம் ஒரு கட்டடத்துக்குள் கோவில்............ கம்பிக்கதவு மூடியிருக்கு.  வரும்போது பார்த்துக்கலாம். இப்போ இந்த Maze இல் இருந்து வெளியேறுவது எப்படின்னு பார்க்கணும்....

சந்துகளில் நடக்கும்போதே நமக்கிரண்டு பக்கங்களிலும்  இன்னும் சந்துகள் கிளைகிளையா பிரிஞ்சுக்கிட்டே போகுது.... நேத்து இருட்டில் தெரியாத.... *ழுக்கும் *ழுக்கும்....   கடைகள் ஒன்னும் திறக்கலை.  சந்தின் ஒரு மூலையில் கடையைத் திறந்துக்கிட்டு இருந்த கடைக்காரரிடம், 'மெயின் ரோடு'க்கு எப்படிப் போவதுன்னு கேட்டதும் தரையைச் சுட்டிக் காட்டினார். 

ஙே..........
கீழே பதிச்சுருக்கும் பேவிங் ப்ரிக்ஸ்தான் அடையாளமாம். அதையே தொடர்ந்து போனால் ரோடு வந்துருமாம். அட !  காசி மாநகராட்சி போட்டு வச்சுருக்கும் நடைபாதைச் செங்கல்தான் வழிகாட்டியா !!!


சந்து முழுக்க ஏராளமான பைரவர்கள். யாரையும் உபத்ரவிக்கறதே இல்லை. தானுண்டு தன் தூக்கமுண்டு ! குனிஞ்சதலை நிமிராமல் செங்கல்லைப் பார்த்துக்கிட்டே நடக்கறோம். ஒரு வீட்டில் ஆட்டுக்கு பேஸினில் சாப்பாடு வச்சுருக்காங்க. அடுத்தடுத்த வீடுகளிலும் ஆடுகள். பாதை வளைவில் திரும்புது, கூடவே நாமும் !
அடிக்கிற பம்பு பார்த்ததும் போய் அடிச்சுப் பார்த்தார்....... இதுக்குப் பக்கத்தில்  சின்னதா ஒரு அறை!  என்னவாம் ? ஹாஹா....    சிவலிங்கங்கள் !  பம்புலே தண்ணீர் அடிச்சு அபிஷேகம் பண்ண வசதி ! 
 புராணா துர்கா Bபா(ட்)டி. 1767. ஏதோ சரித்திரம் போல ! பக்கத்து கேட்டில் பார்த்தால் தூரக்க என்னவோ  கம்பிக்கதவுக்குப் பின்னால். கெமெரா  எதுக்கு இருக்கு ? கிட்டக்கக் கொண்டுவந்து பார்த்தால் துர்கா.


சின்ன கம்பிகேட்டைத் திறந்து  குட்டிச் சந்தின் வழியாக உள்ளே போனால்   கல்கத்தா ஸ்டைலில் துர்கை சந்நிதி ! அட!  இதே ஸ்டைலில் தானே நியூஸியில் பெங்காலிகள் நடத்திய துர்கா பூஜையில் சாமி அலங்காரம் இருந்தது!  அங்கே இருந்த குட்டிப் பட்டரை (வயசு ஒரு எட்டு இருக்கலாம் ) படம் எடுத்துக்கவான்னு கேட்டால் சரின்னு தலையாட்டினார்.
கீழே படம்: நம்மூர் துர்கா பூஜை.
துர்கைக்குப் பக்கத்தில் தனிச் சந்நிதியில் பெருமாள் ! துர்கைக்கு அந்தாண்டை இன்னொரு தனிச் சந்நிதியில் புள்ளையாரும், இன்னொரு சாமியும் !


வராந்தாவின் இடதுபக்கம் ஒரு அறையில் ஏராளமான சிவலிங்களும், நந்தி பகவானும் ! குட்டி பட்டரிடம், கோவிலைப்பற்றிச் சொல்ல முடியுமான்னு கேட்டதும்  வலப்பக்கச் சுவரைக் காமிச்சார். 
சங்கதி முழுசும்  அங்கே !

கோவிலை விட்டு வெளியே வந்து செங்கலைத் தொடர்ந்தோம்.  நடநது  நடந்து ஒரு வழியாக் கற்கள் முடியும் இடத்தில் சாலை வந்துருது! 
 இங்கே பக்கத்துலேதான் நம்ம நகரத்தார் சத்திரம் இருக்குன்னு கூகுளில் தெரிஞ்சுக்கிட்டதால்....   அங்கிருந்த சில ஆட்களிடம்  'நாட் கோட்'  போக வழி எதுன்னு கேட்டோம். கொஞ்சம் தூரம்னதும் ஆட்டோ ஏதும் கிடைக்குமான்னு பார்த்தால், அந்த ஆட்களில் ஒருவர் ஓடிப்போய் எதிரில் நின்னுக்கிட்டு இருந்த சைக்கிள் ரிக்‌ஷாக்காரரைக் கூட்டி வந்துட்டார். 

இவ்ளோ உயரமான்னு யோசிக்குமுன், நம்மவர் டக் னு ஏறி உக்கார்ந்துட்டு, என்னையும் வா வான்னு மலையேறக் கூப்புடறார். எனக்கு அரை அடிக்கு மேல் கால் தூக்க முடியாது. மூணடி எப்படி ஏற ?  'என்னால் முடியாது. நான் வரலை'ன்னு சொன்னால் கேட்டால்தானே ? 

எதிர்வாடையில்  கொஞ்சம் உயரமான கடைவாசலண்டை நிறுத்தறேன். அதில் ஏறி, இந்தப் படியில் கால் வச்சு ஏறிடலாம்னு ரிக்‌ஷாக்காரர் தூபம் போடறார். ரிக்‌ஷாவைக் கூட்டி வந்த நபர், நான் உதவி செய்யறேன். ஏறிக்கோங்கன்னு....... சொல்ல இன்னும் ரெண்டுமூணு ஆட்கள் கூட்டம் சேர்ந்துருச்சு. ஏத்திட்டுத்தான்  மறுவேலை ! இதென்னடா வம்பாப்போச்சுன்னு  கடைவாசல் மேடையில் ஏறி எப்படியோ திக்கிமுக்கித் தாவிக் குதிச்சுன்னு மலை மேல் ஏறிட்டேன்.  உடனே அடுத்த கவலை.... எப்படி இறங்கப்போறோம் ? 

என்னடா பெருமாளே இப்படிப் பண்ணிட்டே....வியூகத்தில் இருந்து வெளியே வரணும், மலையும் ஏறணும்....   பாவம் துல்ஸி........ 


தொடரும்..........:-)