Friday, August 29, 2014

கொடுமையில் இருந்து தப்பிப்பிழைச்ச பிள்ளையார்.

காலையில் கண் முழிச்சதும் வழக்கம்போல் சாமி அறைக்குப்போய் விளக்கு  போட்டுட்டு, கடவுளர்களுக்கு  குட்மார்னிங் சொன்னேன்.  அப்படியே புள்ளையாருக்கு' ஹேப்பி பர்த்டே கணேசா'ன்னதும்,  ஒரு மாதிரி பம்முனார். 'கொடுமுலு ச்சேயால'ன்னு  சொன்னதும்  புள்ளையார் முகம் போன போக்கைப் பார்க்கணுமே....  கண்ணுலே பயம் வேற!   அச்சச்சோ.....  கொடுமைகளை (வழக்கம்போல்) செய்யப்போறேன்னு  நினைச்சுக்கிட்டாரோ?  அச்சச்சோ....ஸாரிடா. வாயிலே தெலுகு வந்துருச்சு:(


கடந்த நாப்பது வருசங்களில் முப்பத்தியொன்பது புள்ளையார் சதுர்த்திகளில்  அவர்பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா? (நடுவில் ஒரு வருசம் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அந்தக் கொடுமையைச் செஞ்சுருச்சு, நம் சென்னை வாழ்க்கையில்!)

எப்படியும் அவர் பொறந்த நாளுக்கான மொதக் கொழுக்கட்டை நம்ம வீட்டிலிருந்துதான்  ஆரம்பிக்கும். நாங்க டேட் லைனில்  உக்கார்ந்துருக்கோம் பாருங்க.  நாளின் ஆரம்பமே நாங்க ஆரம்பிச்சு வைப்பதுதானாக்கும்,கேட்டோ!

சாஸ்த்திரத்துக்குக் கொஞ்சம் இனிப்புப் பூரணம் வச்ச கொழக்கட்டைகளும்,  காய்கறிகள் சேர்த்த ஹெல்த் கொழக்கட்டைகளும் செஞ்சுடலாமுன்னு  ஆரம்பிச்சேன்.

முதல் வேலை, இந்த லேப்டாப்பை  மூடி,  கண்ணுக்குப் புலப்படாமல் ஒரு அறையில் வச்சுடணும். வச்சேன்.

துருவிய  தேங்காய் கொஞ்சம், மூணு கட்டி பனை வெல்லம், ஏலக்காய்த்தூள், அரை டீஸ்பூன் நெய் சேர்த்துப் பதமா கிளறி இனிப்புப் பூரணம் செஞ்சேன்.  அடுப்புக்குப் பக்கத்தில் நின்னு கவனிச்சுக் கிளறியதால்  கமர்கட் ஆகாமல் தப்பிச்சது.

அடுத்து  ஒரு கப் அரிசி மாவில் ஒன்னேகால் கப் தண்ணீரை ஊற்றிக் கரைச்சு வச்சேன். ஒரு நான் ஸ்டிக் வாணலியில்  ஒரு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொதிக்க  ஆரம்பிச்சதும், கரைத்து வச்ச மாவை ஊத்திக் கிளறி, அது சுருண்டு வரும் சமயம் ஒரு டீஸ்பூன் இதயம் நல்லெண்ணெய் சேர்த்து எடுத்து வச்சேன்.  இனிப்புக் கொழுக்கட்டைக்கு மேல்மாவும் பூரணமும் ரெடியாச்சு. கொஞ்சம் ஆறட்டும்.

அடுத்து புட்டுக் கொழுக்கட்டை.

நம்மூரில் மயில் ப்ராண்ட் புட்டுப்பொடி கிடைக்குது. அதில் ச்சுவந்ந சம்பா அரி (சிகப்பரிசி) புட்டுப்பொடி வாங்கியாந்து வச்சுருந்தேன். பாவம் புள்ளையார், ஒருநாள் கலர் பார்க்கட்டும். அதுலே ஒரு கப்  எடுத்து, அரைக் கப் துருவியதேங்காய்,  அரை டீஸ்பூன் உப்பு  சேர்த்து  இளம்சூடான வெந்நீர்  சேர்த்துப் பிசைஞ்சு வச்சேன்.  அஞ்சு நிமிட் ஆனதும்,   மைக்ரோவேவில்  ஒன்னரை நிமிட் வேகவைத்த அரைக் கப் பச்சைப் பட்டாணி, அரைக் கப் மக்காசோளம்  சேர்த்து மாவில் கலந்து  மோதகம்  அச்சில் மாவை அமுக்கி அழகா எமரால்ட் & டோபாஸ் கற்கள் பதிச்ச , ஹெல்த்தியான புட்டுக்கொழுக்கட்டை  செஞ்சு நீராவியில் வேகவச்சு எடுத்தேன்.

இன்னொரு  வகை அச்சு எடுத்து, (இதுவும் மோதக டிஸைன்தான். ஆனால் கொஞ்சம் அளவில் பெரியது) ஆறிய மேல்மாவை சின்ன எலுமிச்சங்காய் அளவு  எடுத்து, இதயம் நல்லெண்ணெய் தொட்டு, உள்ளங்கையில்  சின்ன பூரி அளவுக்குத்தட்டி அதில் ஒரு கமர்கட் அளவு  தேங்காய் பூரணம் வச்சு , மாவின் ஓரங்களைக் கும்மாச்சியாச் சேர்த்து  அந்த மோதக அச்சுக்குள்ளே  வச்சு  ஒரு அமுக். டடா....   பிரிச்சவுடன் அழகான வெள்ளைப்பளிங்கு மோதகம்.  ஆவியில் வச்ச அஞ்சாம் நிமிஷம் ரெடி!

இதுக்கிடையில் சுண்டலுக்குக் கொண்டைக்கடலை  ஒரு பக்கம் வெந்து பதமானதும் போனாப்போகுதுன்னு அதையும் ரெண்டு காய்ஞ்சமிளகாய், கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை போட்டுத் தாளிச்சு  ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவலைச் சேர்த்தேன்.

இந்த முறை, நம் தங்கப் பிள்ளையாருக்குத் துணையாக புதுசா ஒரு வெள்ளிப் பிள்ளையாரும் வந்துருந்தார்.  ரெண்டு பேருக்குப் பதிலா மூவராக இருக்கட்டுமேன்னு  ஜேடு பிள்ளையார் ஒருவரையும் சேர்த்து வச்சுப் பிரசாதங்களுடன் ஷோடஸநாமாச் சொல்லி  பொறந்தநாளைக் கொண்டாடியாச்சு.

இத்தனை வருசங்களில் முதல்முறையா  நல்லா அமைஞ்சு போன கொழுக்கட்டைகளைப் பார்த்த அதிர்ச்சியில்  வாயடைச்சுப்போன நம்ம புள்ளையார் 'கொடுமுலு கொடுமை'களில் இருந்து  தப்பிச்சேன், பிழைச்சேன்னு  கிளம்பி உங்க சைடு  வந்துக்கிட்டு இருக்கார்.  பார்த்துக்குங்க!

நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் புள்ளையார் பொறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.



Tuesday, August 26, 2014

ஆத்தோடு போன தங்க்ஸ்க்கு டாடா காட்டிய ரங்க்ஸ்! (மினித்தொடர்: பகுதி 2 )

வெள்ளைக்காரர் வீடுகளில் பூரிக்கட்டை இருக்குமா? எதுக்கு சந்தேகம்? இருக்கு இருக்கு.  பெயர்தான் வேற !  ரோலிங் பின்.  நம்மைப்போல பூரி, அப்பளம் போடலைன்னாலும், பேஸ்ட்ரி செய்ய மாவைத் திரட்டி எடுக்க இது அவுங்களுக்கும் வேண்டித்தானிருக்கு.   சமீபகாலமாக, மார்பிள் பளிங்குக்கல்லில் வருதுன்னு  மக்கள்ஸ்க்குச் சொல்லிக்கறேன். பயங்கர கனம்,கேட்டோ!

எதோரு வேலையா சின்னப்படகில் ஏறி போறாங்க வீட்டம்மணி. அவுங்க பெயர் எல்லன்.  திடீர்னு காட்டாற்று வெள்ளம் வந்து படகை அடிச்சுக்கிட்டுப் போகுது! கத்திக் கதறிக்கூச்சல் போட்டுக்கிட்டே  போறாங்க. கரையில் நின்ன  வீட்டய்யா .....  'குட் பை எல்லன். குட் பை. ஐ வில் மீட் யூ இன் ஹெவன்' ன்னு  கவிதை பாடறார்,  கலைஞர்.    இந்த  ஊர் ஜெரால்டின் இருக்கு பாருங்க, இது  ஆதிநாட்களில் இருந்தே கலைஞர்களால் நிரம்பிய கிராமம்.  ப்ராச்சீன்! கவிதை, ஓவியம், அபூர்வ ரோமங்களைக்கொண்டு அலங்காரப்பின்னல், நெசவு போன்ற  அருங்கலையைப் போற்றி வளர்க்கும் மக்கள் நிறைஞ்ச ஊர்தான் இப்பவும்.

சமீபத்திய கணக்கின்படி ஊரின் மக்கள் தொகை அதிகபட்சமா ரெண்டாயிரத்து முன்னூறு! குட்டியான டவுன்.  இதுக்கு ஒரு டவுன் கவுன்ஸில்.  இங்கே ரெண்டு   ம்யூஸியம், (வின்டேஜ் கார்கள்,மெஷினரிகளுக்கானது இதில் ஒன்னு) ஒரு சில சர்ச்சுகள், ஷாப்பிங் செண்ட்டர், சூப்பர் மார்கெட்,  லைப்ரரி, பொட்டிக்கடைகளா  ஒரு சில டெய்ரி,  பெட்ரோல் ஸ்டேஷன், மார்கெட் ஏரியா,  டவுன்வரை வந்து போகும் பொதுமக்கள் வசதிக்கான பொதுக்கழிப்பறை,  ஊரைப்பற்றிய  இன்ஃபோ தரும்  தகவல் நிலையம்   இப்படி எல்லாம் பரிபூரணம்.  ஊரைக்கடந்து பயணிக்கும் மக்கள்ஸ்க்கு ஒரு சின்ன ப்ரேக்  எடுத்துக்கும் இடம்.



ஆற்றுப் பாலம் கடந்து ஊருக்குள்ளே  நுழைஞ்ச நாமும்  அஞ்சு மினிட் காலார நடக்கலாமுன்னு இறங்குனோம். ம்யூஸியத்தை நம்ம  ஜெரால்டீன் ஹிஸ்ட்டாரிகல் சொஸைட்டி டவுன் கவுன்ஸில் போர்டு கட்டிடத்தில்  நடத்துது.  இலவசம்தான்.  வந்து பாருங்க. நீங்களாப் பார்த்து எதேனும் கொடுத்தீங்கன்னா ....... பாராட்டி வாங்கிக்குவோம்  என்று போர்டு வச்சுருந்தாங்க.


 முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களால்  நடத்தப்படும் வகை. தினமும் ஒரு சிலமணி நேரம்  சமூகசேவையா இதைச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க ஊர் மக்கள்.


பழைய காலத்து டெலிஃபோன் ஸ்விட்ச் போர்டு இருக்கு.  1903 ஆண்டு முதல் 1987 வரைக்கும் இது பயன்பட்டுருக்கு. அப்புறம்தான்  ஆட்டோ எக்ஸ்சேஞ்ச்  ஆகி இருக்கு!  கொஞ்சம் பழைய காலத்து மரச்சாமான்கள், குழந்தைகளுக்கான உடுப்பு, ப்ராம் இப்படி கொஞ்சூண்டு பார்க்கலாம்.

 மேலே: வெண்ணை கடைஞ்செடுக்கும்  பெட்டி !!


 அப்பதான், ஆத்துலே அடிச்சுக்கிட்டுப்போன தங்ஸ்  விவரம் பார்த்தேன்.

தண்ணீரில் அடிச்சுக்கிட்டுப் போனதைவிட, எனக்கு பயமா இருந்த  ஒரு சமாச்சாரமுன்னா.... காட்டுப் பன்றிகள்  கரையோரமா ஏராளமா மேய்ஞ்சுக்கிட்டு இருந்ததுதான். மூணு பெரிய சுழிகளைத் தாண்டி நாலு மைல் தூரம் வரை  படகு வேகம்பிடிச்சு தண்ணீரில் அடிச்சுக்கிட்டு வந்துருந்துச்சு அதுக்குள்ளே! முழுகிருவோமோன்னு  கூடவே ஒரு பயமும்.  தண்ணிக்கு மேலே நீண்டுருந்த மரக்கிளை ஒன்னை கபால்னு பிடிச்சுக்கிட்டு மரத்தில் தொத்தி ஏறிக்கிட்டேன்.   நல்லவேளையா வெய்யில் காய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு. முழுசும் தொப்பலா நனைஞ்சு கிடந்த ஈர உடுப்பை மெள்ளக் கழட்டி மரத்துலேயே லேசா  காயப்போட்டு மீண்டும் உடுத்திகிட்டு ............


ஒருவழியா மெல்ல நடந்து வீட்டுக்குள் வந்து சேர்ந்தேன்.  பூரிக் கட்டை எங்கேன்னு தேடி எடுத்தது அப்போதான்:-)

எல்லன் எழுதிவச்ச குறிப்பும் அங்கே இருந்துச்சு!

மலைச்சரிவு நிலத்தில் இருக்கும் பண்ணைகளில் மேயும் ஆடுகள், மாடுகள் எல்லாம் பார்த்துக்கிட்டே ஏரி நோக்கிப்போகும் சாலையில் போறோம். 89 கி மீ  போகணும், இந்த ஜெரால்டீனில் இருந்து.  செல்லம் போல்  அழகான முகத்தை வச்சுக்கிட்டு  மேயும்  அல்பாகாக்கள்   ஒரு இடத்தில்.   எல்லாம்  சின்ன உருவமா இருக்கும் பெருசுகள்!  ஃபிஃப்டி கேஜி தாஜ்மஹால்கள்!  சராசரியா  50  -55 கிலோ எடைகள்தானாம்!

பெருநாட்டு சமாச்சாரம். Andes  மலைச்சரிவுகளில் வாழும் இனம்.   சட்னு பார்க்க   Llama போலவே இருந்தாலும்,  லாமாவை விட சின்ன சைஸ் & அழகு முகம். உடம்பில் இருக்கும் ரோமம், பட்டு போல் அவ்ளோ  மிருது!  ரோமங்களோடு உள்ள   கால்கள், சட்னு பார்த்தால் குட்டித்தூண்களா இருக்கு:-)   ரோமத்துக்குச் சாயம் ஏற்றும் வேலை நமக்கு மிச்சம். இயற்கையாகவே 52 நிறங்கள் அமைஞ்சவைகள்.  குளிர்கால உடைகள் செஞ்சுக்கலாம்.  இங்கே  ஸ்பெஷாலிட்டிக் கடைகளில் விக்கறாங்க. ஆனால் விலை அதிகம்.  நியூஸி ஆட்டு ரோம உடைகளைப்போல் மூணு மடங்கு விலை கொடுக்கணும். சும்மாச் சொல்லக்கூடாது....  தொட்டுப் பார்க்கும்போது  ஸில்க்கா இருக்கு!






மலைப்பாதையில் போய்  அடுத்த பக்கம் இறங்கும்போதே  ஏரி   பளிச்ன்னு காட்சி கொடுக்குது. ஊருக்கு நுழைஞ்சு  தங்குமிடம் போய்ச் சேர்ந்தோம். அறைச் சாவியுடன், ஒரு பால் பாட்டிலும் எடுத்துக் கையில் கொடுத்தாங்க.  நாம் தங்கப்போகும் இடம்  கொஞ்சம் உயரமான  பகுதி. லேக் வ்யூ வேணுமுன்னா மேலே போகணும்தானே?

ரெண்டு பெட் ரூம், ஹால் , கிச்சன்  அண்ட் பாத்ரூம்னு அருமையா இருக்கு!  சரிவான பாதையில்  வண்டிகளை,  அறைக்குப் பக்கம் கொண்டு வந்துடலாம்.
அடுக்களையிலும் நமக்கு ஆக்கித்தின்ன பாத்திரங்கள், கரண்டிகள், சாப்பிடும் தட்டுகள், க்ளாஸ் டம்ப்ளர்கள்,  காஃபி குடிக்க  கப்ஸ்,  கெட்டில்  வசதிகள் எல்லாமும் இருக்கும்தான்.  சட்னு காஃபி, டீ போட்டுக்கும் வகையில்  அதுக்குண்டான பொருட்களையும்  தயாரா வச்சுருப்பாங்க, இங்கெல்லாம்.
அதுக்காக போய் இறங்குனவுடன்  சமைக்க போரடிக்காதா?


 அடுத்த வேளைக்கான கட்டுசோறு,  சிறு தீனிகள், காஃபி , சக்கரை &  நாம் வீட்டில் வழக்கமா காஃபி குடிக்கும் மக், நம்ம சாப்பாட்டுத் தட்டுகள் இப்படி  பழகுன சமாச்சாரங்கள்  எல்லாம் ரொம்ப சிஸ்டமேட்டிக்காக் கொண்டு போயிருவேன். எல்லாத்தையும்  ஒரு கார்ட்ட்டனில் வச்சால் கார் சுமந்துக்கிட்டு வந்துரும்.  மைக்ரோவேவில் பால் காய்ச்ச ஒரு  பாத்திரம் மட்டும் கட்டாயம் வேணும். பச்சைப்பால் காஃபி.... யக்:(

தொடரும் .........:-)



Friday, August 22, 2014

சுத்தித் திரிஞ்ச கால், சும்மா இருக்குமா? (மினித்தொடர்: பகுதி 1)

சம்பவம் நடந்து ஒரு ஒன்னரை வருசம்  ஆகிப்போச்சு.  ஈஸ்ட்டர் விடுமுறை நாட்கள்  வரப்போகுதே...  எங்கியாவது அக்கம் பக்கம் போய் வரலாமான்னு  எண்ணம்.  அதென்னவோ....  பயணம் போகலைன்னா கோல்ட்  டர்க்கி வர்றாப்ல இருக்கு பலசமயங்களில்.  மகளையும்  கூட்டிப்போகலாமுன்னு  கேட்டால், சரின்னுட்டாள். எங்கே போகலாமுன்னு  உக்காந்து யோசிச்சு,  'பதிவரானபின்பு' போகாத  &  எனக்கு ரொம்பப் பிடித்தமான  இடம்   தெக்கப்போ ஏரின்னு கண்டுபிடிச்சேன்:-)

எங்க பக்கங்களில் ஈஸ்ட்டர்  விடுமுறைன்னா  குட் ஃப்ரைடேயில் ஆரம்பிச்சு ஈஸ்ட்டர் மண்டே வரையும்( சில  நிறுவனங்களில், பள்ளிக்கூடங்களில்  ஈஸ்ட்டர்  ட்யூஸ்டே வரையும் கூட)  நாலு இல்லை அஞ்சு நாட்கள்ன்னு   லீவு உண்டு.

அங்கே போய் ச்சும்மா ரெண்டு  மூணு நாட்கள் ஓய்வெடுக்கலாமே(!)ன்னு  தங்குமிடம் தேட ஆரம்பிச்சால்......  வரப்போகும் ஈஸ்டர் ஹாலிடேஸ் முழுக்க  நோ வேக்கன்ஸிதானாம்.  இதென்னடா, தெக்கப்போவுக்கு வந்த வாழ்வுன்னு ஆகிப்போச்சு.  இதுவரை இந்த ஊரை(?) வேற  தென்மாவட்டப் பகுதிகளுக்குப்போகும் வழியில்  அதிகப்பட்சமா ரெண்டு மணி நேரம் சுத்திப் பார்த்ததுதான்.  அதுவுமே ஆச்சு  பதினைஞ்சு வருசங்களுக்கு முன்!


போகட்டும், ஈஸ்ட்டர் முடிஞ்சபிறகு ஒருவீக் எண்ட் போகலாமுன்னு சொன்னார் கோபால்.  அதெப்படி?  குளிர் ஆரம்பிச்சுருமே:(  நம்மூரில் மஹாசிவராத்ரிக்குப்பின் குளிர் காலம் சிவ சிவான்னு  விட்டுப்போயிரும்னு சொல்வாங்க பாருங்க.  அதேபோல் இங்கெல்லாம் ஈஸ்டர் வந்துபோனதும் குளிர் ஆரம்பிச்சுருமுன்னு சொல்வாய்ங்க.  வீக் எண்ட்ன்னு தீர்மானிச்சா,   இந்த வீக் எண்டே போனால் ஆச்சு, இல்லை?


இங்கே நியூஸியில் பொதுவா டூரிஸ்ட்டுகள் போகும் இடங்களில் எல்லாம் ஹாலிடே பார்க் என்ற பெயரில்  தங்கும் வசதிகள் செஞ்சுருப்பாங்க.  இதுலே  நாமே கூடாரம் போட்டுத் தங்கிக்கும்  கேம்ப்பிங் க்ரவுண்டுகளும் அடங்கும்.  நம்மிடம் கேரவான் இருக்குன்னால்  அதைக்கொண்டு போய் நிறுத்தி வச்சுக்கலாம்.  பவர் சைட்டுன்னு  சொல்வாங்க. கேரவானுக்குத் தேவையான பவர் சப்ளை, கேரவான் உள்ளே இருக்கும்  கழிவறை, குளியலறையைச் சுத்தம் செஞ்சுக்கும்  வசதி எல்லாம் இருக்கும். இதில்லாமல்  தனித்தனியா    பாத்ரூம் வசதிகளோடு உள்ள  கேபின்கள்,  இந்த வசதி இல்லாத  வெறும் கேபின்கள் ( பொதுக்கழிப்பறைகளும், குளியலறைகளும்  சமையல் கூடமும் பயன்படுத்திக்கணும். எல்லாம் ரொம்ப நீட்டா இருக்கும்! பொதுவான  ஃப்ரிட்ஜ் வசதிகளும் உண்டு. உணவுப்பொதிகள், பால், ஜூஸ்  பாட்டில்களில் நம்ம பெயரை எழுதி வச்சுட்டால் வேற யாரும்  எடுக்கமாட்டாங்க. )  இதுலேயே மோட்டல்கள், டூரிஸ்ட் ஃப்ளாட்டுகள்  இப்படி வகைவகையான  வசதிகள்  உண்டு.

லேக் வ்யூ  இருக்கும்படியான  கொஞ்சம் உயரமான இடத்தில் கட்டி இருக்கும் மோட்டல் யூனிட் (ரெண்டு படுக்கை அறைகள்)  ஒன்னு  பதிஞ்சு வச்சோம்.  ஜஸ்ட் ஒரு நாள் தங்கல்.  சனிக்கிழமை கிளம்பிப்போய் அங்கே இரவு தங்கிட்டு மறுநாள்  ஞாயிறு மாலை வீடு வந்துடலாம்.  திங்களுக்கு வேலைக்குப் போகணுமில்லெ?  போட்டும், ஒருநாளுன்னா ஒரு நாளு.
நம்மூட்டில் இருந்து 235 கிலோ மீட்டர் தூரம். எங்கேயும் நிக்காமப்போனால்  மூணே மணி நேர ட்ரைவ்.  குதிரைக்குப்போட்டாப்லெ கண்பட்டையா  கட்டிக்கிட்டு இருக்கோம்? போற வழியில் அங்கங்கே வேடிக்கை பார்த்துக்கிட்டே போனால் ஆச்சு.


சனிக்கிழமை  காலை ஒன்பதரைக்குக் கிளம்பியாச்சு. ஒருமணி நேரத்தில் ஆஷ்பர்ட்டன் என்ற  டவுனுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  கொஞ்சம் பெரிய ஊர்தான்.  ஒரு இருபத்தி எட்டாயிரம் மக்கள்ஸ் வசிக்கிறாங்க.  நியூஸியின் பெரிய நகரங்களில் உள்ள எல்லா  முக்கிய கடைகளும் (செயின் ஸ்டோர்ஸ்)  இங்கேயும்  இருக்கு.  மெயின் ரோடிலேயே  நகரசபை அமைச்சுருக்கும் பூங்காவும் மணிக்கூண்டும்  அருமை!  பூங்காவில் ஒரு சிலை!


ஜான் க்ரிக்  (John Grigg) . 19 ஆம் நூற்றாண்டில்  பார்லிமெண்ட் அங்கமா இருந்தவர். இங்கிலாந்தில் இருந்து  தன்னுடைய 26 வது வயசில் நியூஸிக்கு  குடிபெயர்ந்தவர்.  லாங்பீச்  (Longbeach)  என்ற இடத்தில்  வீட்டைக் கட்டிக்கிட்டு ,  அக்கம்பக்கம்  சுற்றி இருந்த சதுப்பு நிலப்பகுதியை  சீராக்கி, அந்த    இடத்தை  ஒரு ஊராக  மாற்றி அமைத்தவர். அப்ப மொத்தம் 32000 ஏக்கர் நிலம். கழிவு நீர்  குழாய்கள், சாக்கடை அமைப்புகள் எல்லாம் இவர் ஏற்படுத்தியதுதானாம். 150  மைல்தூரத்துக்குக் கல்பாவிய  கழிவுநீர் வாய்க்கால்,  70 மைல் தூர  திறந்த  சாக்கடைகள் எல்லாம்  இவர்  ஏற்பாடு.


பெரிய பண்ணையை உருவாக்கி இருக்கார்.   முப்பதாயிரம் (30000) ஆடுகள்,  3000 பன்றிகள், 1000 மாடுகள்,  பண்ணையில் வேலை செய்ய 150 குதிரைகள், 200 வேலையாட்கள் இப்படி எல்லாம் பெரிய அளவில்!  5000 ஏக்கரில் கோதுமை,  3000 ஏக்கரில் ஓட்ஸ் தானியம் இப்படி விளைச்சலும் உண்டு.  இங்கிலாந்து நாட்டுக்கு முதல்முதலா  உறையவச்ச இறைச்சியை அனுப்புனது இவர்தான்.  வியாபாரம் கொடிகட்டிப்பறந்துருக்கு.


சொந்தமா   சர்ச், போஸ்ட் ஆஃபீஸ், பள்ளிக்கூடம், மாவு மில், செங்கல் சூளை, பேக்கரி, இரும்புப் பட்டறைகள்,  வுல் ஷெட்கள்,  பண்ணை மிருகங்கள்,  இப்படி  எல்லா தன்னிறைவுகளுமா  இவருடைய பண்ணை ஒரு அரசாங்கம் மாதிரி செயல்பட்டு இருக்கு.   சுருக்கமா, இப்ப நம்ம மக்களுக்குப் புரியும்படிச் சொன்னால்...... இவர் ஒரு அம்பானி!   ஆனால்........  (நாட்டு) மக்களுக்கு நல்லதே செஞ்சுருக்கார்.  எந்தக் கட்சியிலும் சேராம,  தனிப்பட்ட வகையில்  தேர்தலுக்கு நின்னு ஜெயிச்சு  நாட்டுக்கு நல்லது செஞ்சுட்டு, தன் 73 வது வயசுலே சாமிகிட்டே போயிட்டார்.


இப்பவும்  இவருடைய  பண்ணை  இல்லம், 16 ஏக்கர்  தோட்டத்துக்கு நடுவில்  The Longbeach Cookshop என்ற பெயரில்  ஃபங்ஷன் செண்ட்டராப் பயன்படுது. அட்டகாசமான இடம்! பண்ணையே இப்ப சரித்திரச் சான்றாக ஆகி போற்றப்படுதே!  நாட்டுக்கு நல்லது செஞ்ச தனிமனித வரலாறும் போற்றப்படணும்தான்.


இவருடைய சேவையைப் பாராட்டி, இவருடைய மரணத்துக்குப்பின் நாலு வருசம் கழிச்சு, ஆஷ்பர்ட்டன் நகரசபை,  நகரப்பூங்காவில்  சிலை வச்சுருக்கு. பூங்காவில் கொஞ்சநேரம் உலாப்போனோம். எல்லாம் ஒரு காமணிதான்.  பூங்காவின் நடுவில் இருக்கும் மணிக்கூண்டு ஒரு  ஃப்ரேமில் அடங்காத பிடாரி:-)

 பூங்காவுக்குப் பின்பக்கத்தெருவில்  ஒரு ம்யூஸியம் கூட இருக்கு.   ஒரு நாள் போய் வரணும்.   அப்புறம் கிளம்பி நேஷனல் ஹைவே  எண் ஒன்றில் போய்க்கிட்டே இருந்து   வலது பக்கம் பிரியும் ஸ்டேட் ஹைவே 79க்கு மாறிக்கணும்.  அப்படியெல்லாம் வழியைத் தவறவிட ச்சான்ஸே  இல்லை. தகவல்கள்  பக்காவா இருக்கும். யாரும்  அதன்மேல்  விளம்பர நோட்டீஸ் , மினி போஸ்ட்டர் எல்லாம் ஒட்டி வைக்க மாட்டாங்க.



  51 கிமீ தூரத்தில் இருக்கும் ஜெரால்டின் என்ற சிற்றூர்.  முக்கால் மணியாச்சுப் போய்ச்சேர.



PINகுறிப்பு:  அஞ்சேல்!!!!!

இது ஒரு மினித் தொடர்.


தொடரும்.....:-)



Wednesday, August 20, 2014

கொம்பு வச்ச மஞ்சப்பழம்!


கண்ணைப்பறிக்கும்  மஞ்சள் நிறத்தில் கொம்பு வச்ச சமாச்சாரமா இருக்கேன்னு ஒன்னு வாங்கியாந்தேன்.   உண்மையில் இது வெள்ளரிக்காய் குடும்பமாம்.  Cucumis metuliferus, horned melon.  இதுக்கு  இங்கத்துப்பெயர் kiwano.   ஓ....  கிவிக்களுக்கு  உள்ளதோன்னு  நினைச்சேன்:-)


நறுக்கிப் பார்த்தால் உள்ளே அழகான பச்சை. அதில் வெள்ளரி விதைகள் போல  ஏராளமா இருக்கு.  அந்தப் பச்சை ஒரே கொழகொழ.  ஸ்பூனால்தான்  எடுத்து வாயில் போட்டுக்கணும்.  ருசி? சுத்தம்.  ஒன்னும் இல்லை!  பழத்துக்குள்ளே  89% தண்ணீர்தானாம். சரியான பச்சைத்தண்ணி.

கொஞ்சம் அதிக விலைதான்.  ஆனால் வாங்கிட்டோமேன்னு  தூக்கிப்போடாமல்  கொஞ்சூண்டு சக்கரை சேர்த்து  'ஃப்ரூட் பல்ப், டேஸ்ட் பாருங்க' ன்னு  மகளுக்கும், கோபாலுக்கும்  கொஞ்சம் தள்ளிவிட்டதால்  ரெண்டு ஸ்பூன்  அளவோடு  நான் தப்பிச்சேன்.

ஆமாம்....  இப்படி ரொம்ப சாதாரணமா இருக்கும்  இதுக்கு ஏன் இவ்ளோ  அழகும் நிறமும்?  என்னமோ எதிரிகளிடம் இருந்து இதைப் பாதுகாக்கணுமேன்னு  பழத்துக்கு மேல் கொம்புகள் வேற!

இயற்கையைப் புரிஞ்சுக்கவே முடியலையேப்பா:(



Monday, August 18, 2014

பளிங்குக் காலில் தங்கக் கொலுசு!

பாதங்கள் தொழ கண்களை அனுப்பினேன். ஹைய்யோ!!!!  மூச்சு நின்னு போகும் ஒரு அழகு!  அந்தப் பளிங்குப் பாதங்களில் வண்ண நட்சத்திரச் சிதறல்களுடன், ஜொலிக்கும் கொலுசு !

நம்மூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கான  ஏற்பாடுகள் கோவிலில் நடந்துகிட்டு இருக்கு.  ஆக மொத்தம்  இந்த கிறைஸ்ட்சர்ச் மாநகரத்துக்கு, இருப்பதே ஒரே ஒரு இந்துக்கோவில்தான்(இப்போதைக்கு) என்பதால்  எந்தப் பண்டிகையா இருந்தாலும் நாங்கள் ரொம்ப மெனெக்கெடாம கோவிலிலேயே கொண்டாடிருவோம்.

ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர்.  முழுக்க முழுக்க குஜராத் மாநில மக்கள்தான்  கோவில் நிர்வாகம் என்றாலும்,  உள்ளூர் மக்களையும் அந்தக் கூட்டத்தில் சேர்த்துக்கிட்டாங்க.  என்ன ஒன்னு,  மொழிதான் குஜராத்தியா இருக்கும்.  ஹிந்தியும் பலர் பேசுவதால் நமக்கு பிரச்சனை இல்லை. கூடுதலா ஒரு  மொழியைக் கத்துக்கிட்டால்  நல்லதுதானே?


இந்தமுறை கண்ணன், இந்தியாவில் பிறக்கும் நாளே, இங்கே நியூஸியிலும் பிறந்துட்டான்:-)  விசேஷங்களை, வீக் எண்டுக்கு நேர்ந்துவிடும் மக்கள்ஸ் நாங்க.  இன்று  அதுவும் வீக் எண்டாக  அமையவே  ரொம்பத் திருப்திதான். ஞாயிறு!

வழக்கம்  போல் சனிக்கிழமை மாலை கோவிலுக்குப் போனால், முந்தினநாளான இந்திய சுதந்திர தினத்தை ராதை கொண்டாடிக்கிட்டு இருக்காள்!

மறுநாளைக்கான அலங்காரங்கள், உறிகள் கட்டித் தூக்குவது  எல்லாம்  எங்கூர் சம்ப்ரதாயப்படி!

க்ருஷ்ணகனையா லாலுக்கி ஜே  என்ற  கோஷத்துடன்  மறுநாள்  ஞாயிறு மாலை கொண்டாட்டங்கள், சின்னக்கண்ணன்களுடைய நாட்டியம்,

கோலாட்டாத்துடன்  அமர்க்களம்.  புதுக்கோயில் வந்த இந்த மூணு வருசத்தில் க்ருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு இவ்ளோ கூட்டம்  முதல்முறையா வந்திருந்தது. 350 பேர்! வாவ்!!!  குஜராத் மக்கள்  ஒரு  20% இருந்தால் அதிகம். அப்ப மற்றவர்கள்?  நேபால்  துடங்கி ஆந்திரா வரைன்னு சொல்லிக்கலாம்:-)  ஒருசில வெள்ளையரும் உண்டு.

இத்தனை கூட்டத்தைக் கோவில் எதிர்பார்க்கலையாக்கும்,கேட்டோ! செஞ்சு வச்சுருந்த பிரசாதங்களை  எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் கிள்ளிக்கொடுக்க வேண்டியதாச்சு:-)  பரவாயில்லை.  வழக்கமான  டின்னர், இன்றைக்கு ப்ரசாத விளம்பல் ஆனால் என்ன? சகலரும் பகிர்ந்துண்ண வேணுமா இல்லையா?  மகிழ்வோடு வீடு வந்தோம்.


இன்றைக்குக் காலையில் நம்ம வீட்டில் பண்டிகையை வழக்கத்தை விட ரொம்ப சிம்பிளாக் கொண்டாடினோம்.  குசேலர் ஸ்டைல்!   அவனுக்கு அவல்தான் பிடிக்கும்!  பாலில் ஊறவச்ச அவல்  இனிப்புப் பலகாரம்,   உப்புப் பலகாரமாக  ஆலு பொஹே!  கூடவே கொஞ்சம் பழங்கள்.


எதுக்குக் கவலைப்படறே? இதுவே அதிகம் என்று சொன்னான், என் மாயக்கண்ணன்:-)


அனைவருக்கும்  க்ரிஷ்பாப்பா பொறந்த நாளுக்கான  இனிய வாழ்த்து(க்)கள்.




Wednesday, August 13, 2014

நூறைக் கொண்டாடும் சிறை!

ஆச்சு,  இன்னும்  நாலைஞ்சு மாசம்தான். செஞ்சுரி அடிக்கப் போறேன். உள்ளே வந்து எட்டிப் பாருங்களேன்.  வருந்திக் கூப்பிட்டாப் போகாமல் இருக்க முடியுதா?

எங்க ஊரில்(கிறைஸ்ட்சர்ச்) இருந்து  ஒரு நாப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு  டார்ஃபீல்ட் (Darfield) என்னும் ஊர்.  எங்கூரில் பாதியை அழித்த நிலநடுக்கம், மையம் கொண்ட ஊர் இதுதான்.  சின்ன  ஊர் என்பதால் பாதிப்பு அவ்வளவா இல்லை.  வெற்றிடம் எக்கசக்கமா இருந்ததுலே, ஆள் இல்லாத அத்துவானத்துலே  பெரிய குழி வெட்டிக்கிச்சுன்னு சொன்னாங்க.  என்னவோ பழமொழி சொல்வாங்களே....  தென்னை மரத்துலே தேள் கொட்டினால்,  பனைமரத்துலே நெறி கட்டுச்சாம்ன்னு. அதுபோல பாதிப்பு  எங்களுக்குத்தான்  அதிகம்! 185 உயிர்கள் நஷ்டப்பட்டதும் அப்போதான்:(

ஒரு ஞாயித்துக்கிழமை, புள்ளையாரைப் பார்த்துட்டு வரலாமேன்னு கிளம்பி கிர்வி (Kirwee) என்னும்  சிற்றூருக்குப் போனோம்.  இதுவும் ஸ்டேட்  ஹைவேயில் அங்கங்கே இருக்கும் சிற்றூர்களில் ஒன்னுதான். நம்மூட்டில் இருந்து  ஒரு முப்பது கி.மீ தூரத்தில் இருக்கு.

வெள்ளையர்கள்  இங்கே காலூன்றி  காடுகளாகப்பரவி இருந்த  நாட்டுக்கு சாலைகள், ரயில்பாதைகள் போட்டுக்கிட்டு இருந்த காலக்கட்டம். கேண்டர்பரி எனச் சொல்லப்படும் மெயின்லேண்ட்க்கு  தண்ணீர் சப்ளைக்காக,   Kowai நதியில் இருந்து  (இது சதர்ன் ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தில் இருந்து கிளம்பும் ஒரு நதி) ஒரு கால்வாய் வெட்டியது 1877- 1880 ஆண்டுகளில்.  கால்வாய் ஒன்னும் ரொம்பப்பெருசு இல்லை.  ஏழெட்டடி அகலம்தான்.  ஆனால் தண்ணீர் இடைவிடாம இன்னும்  இதில் வந்துக்கிட்டேதான் இருக்கு. கால்வாய், ஊருக்குள் வரும் இடத்தில் (இது மெயின்ரோடை ஒட்டியே ஓடிவரும் கால்வாய்) கால்வாயின் சரித்திரத்தைச் சொல்லும் நினைவுச்சின்னமா சின்னதா ஒரு குட்டியூண்டு மண்டபம்  கட்டி இருக்காங்க.

 அங்கே, அதுக்குள்ளேதான் தண்ணீருக்கு மேலாக ஒரு  சிமெண்ட், இல்லை கருங்கல் பாளம் ஒன்னு போட்டு அதன்மேல் புள்ளையாரை வச்சுப்புட்டால் எவ்ளோ நல்லா அம்சமா  இருக்கும் என்ற  தோணல் காரணம் , நான் அங்கே புள்ளையாரை பிரதிஷ்டை செஞ்சுருக்கேன் மானசீகமாக.  அதுதான்  என்னுடைய சொந்தம் கிர்வீ புள்ளையார் கோவில்!  (என்  கண்ணுக்கு மட்டுமே அவர் காட்சி கொடுப்பார், கேட்டோ!!!)

சலசல என்னும்  சின்ன ஓசையோடு சீராக ஓடிவரும் தண்ணீர் பார்க்கவே ஒரு அழகு.  பக்கத்துப்புல் தரையில் கொஞ்சநேரம்  உக்கார்ந்து  ரசிக்கலாம்.  மனநிம்மதி கிடைக்கும் என்பதுக்கு நான் கியாரண்டீ!  ரொம்ப சிம்பிளா  ஒரு  ஒன்னேகால் நிமிச  க்ளிப் ஒன்னு  இது.  சின்ன ஓசைன்னு சொல்றேன்.... ஆனா.... இது படத்துலே பேரோசையா இருக்கே!!!



சரி இவ்ளோ தூரம் வந்தமே...இன்னும்  ஒரு எட்டு கிலோமீட்டர் தூரத்தில் டார்ஃபீல்ட் இருக்கே அதுவரை போயிட்டு வரலாமுன்னு  கிர்வீயில் இருந்து  கிளம்பினோம். கூடிவந்தால் பத்து நிமிச ட்ரைவ்.

இங்கேயும் ஊருக்குள்ளே   நுழைஞ்சதும் அந்த மெயின் ரோடுலேதான் கடை,கண்ணி, வியாபாரம் இப்படி எல்லாமே!  மற்றபடி வீடுகள் எல்லாம்  இடமும் வலமும்கொஞ்சம் உள்ளே தள்ளித்தான் பரவி இருக்கு.
பார்வைக்குத் தப்பாமல் சட்னு கண்ணுலே பட்டது இந்த  ஜெயில்.  புதுசா இருக்கேன்னு  நினைக்கறதுக்குள்ளே வண்டி போய் நின்னது  டவுன் இன்ஃபோ சென்டரில்.  இங்கே சின்ன ஊர்களிலும் கூட, ஊர் நிலவரம், விளக்கம், பார்க்க வேண்டிய இடங்கள் , ஊருக்கான சரித்திரம் எல்லாம்  மக்களுக்குச் சொல்லியே ஆகணும்  என்று  நினைப்போடுதான்  இருப்போம். வரலாறு முக்கியம் அமைச்சரே!


ஒரு காலத்தில்  மான் கூட்டங்கள்  ஏராளமா வளர்ந்த  இடம் இது! Deer field   என்பதே  காலப்போக்கில்  பேச்சு வழக்கில்   Darfield  என்றாகி இருக்கு.  ஊரின் மக்கள் தொகை வெறும் 1400 தான்.  ஸோ , எல்லாருக்கும் எல்லோரையும் தெரியுமுன்னு நினைக்கிறேன்.  (ஃபிஜியில்  நாங்க இருந்த டவுனில் அஞ்சாயிரம் மக்கள் தொகை. அங்கேயே எல்லோருக்கும் எல்லோரையும் தெரிஞ்சுருந்துச்சு.  ஆனால் ....  அங்கே  இந்தியர்கள்தான்  அதிகம் என்பதால்....  அது வேற மாதிரியோ என்னவோ!)



 ஊர் சரித்திரம் ஒட்டுமொத்தமா அங்கேயே இருப்பதால் எழுதும் வேலை மிச்சமுன்னு க்ளிக்கிக்கிட்டேன்:-)

சதர்ன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இருக்கும்  ஸ்கீஃபீல்ட்களுக்கு இந்த ஊர்வழியாத்தான் போகணும் என்பதால்  குளிர்காலத்துலே  பயங்கர பிஸியாகிப்போகும் ஊர் இது.  பனிச்சறுக்கு விளையாட உலகெங்கிலும் இருந்து மக்கள்ஸ் வர்றாங்க.

இப்போ  பால்பவுடர் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையால் ஊரின் மவுசு கூடிப்போயிருக்கு.  டார்ஃபீல்டில் இருந்து  மூணரை கிலோமீட்டர் தொலைவில், 650 ஹெக்டர் (1606 ஏக்கர்) நிலத்தை வளைச்சுப்போட்டு   கட்டிக்கிட்டு இருக்காங்க. 500 மில்லியன் செலவாச்சாம்.  மணிக்கு 30 டன் பாலை, காயவச்சுப் பவுடர் ஆக்கப்போகுதாம்!  நாட்டுக்கு  வருசாவருசம் 780 மில்லியன் டாலர் வருமானம் வரப்போகுதுன்னு பெருங்கணக்கு போட்டுக்கிட்டு இருக்காங்க.  ஒரு 170 பேருக்கு  வேலை இருக்கு.  இப்போதைய உலகின், மிகப் பெரிய பால்பவுடர் தொழிற்சாலை இதுதான்னு  சொல்லிக்கறாங்க.

ஊர்வழியாப் பயணம் போறவங்களுக்கும், ஊர்மக்களுக்கும் பயன்பட ஏதுவா, ஒன்னு ரெண்டு கேஃபே, பூச்செடிகள், மரங்கள் விற்க சின்னதா ஒரு கார்டன் செண்ட்டர், ஒரு சூப்பர் மார்கெட்,  டெய்ரி ஷாப் (முக்கியமா இங்கே ஐஸ்க்ரீம்தான்  பயங்கர  விற்பனை!) சின்னதா ஒரு கிஃப்ட் ஷாப்,  பழைய பொருட்களை விற்கும் ஒரு ஆண்ட்டீக் கடை இப்படி குறைவில்லாம  சாலைக்கு ரெண்டு பக்கங்களிலும்  இருப்பது நல்ல வசதி.   கார்ப்பயணங்களில் ,  ஒரு பத்து நிமிஷ ப்ரேக் எடுத்து, கைகால்களை நீட்டி சோம்பல் முறிச்சுக்கும்  சமயம்,  மெதுநடையில்   போய்  வேடிக்கையும் பார்த்துக்கலாம்.

ஆன்ட்டீக் கடைக்காரர் என்னென்ன  கண்டிஷன் போட்டுருக்கார், பாருங்க:-)


நாமும்,  ஐஸ்க்ரீமா, இல்லே காஃபியான்னு  ஒரு மினிட் யோசனை செஞ்சுட்டு, எதுவுமே வேணாமுன்னு  முடிவு செஞ்சோம். இதோ அரைமணியில் வீடு. எதுக்காக  அனாவசியச் செலவு? (சரியான கருமி நான்!)


ஜெயிலுப் போய்ச் சேர்ந்தோம்.  1915 வருசக் கட்டிடம். சரியா இப்போ  99 வயசு.  ஊரைவிட்டு ஒதுக்குப்புறத்தில் இருந்த இதை  ஒரு நாலு வருசத்துக்கு முந்திதான்   இடம் மாத்தி அப்படியே தூக்கியாந்து  இங்கே வச்சுருக்காங்க. சரியாச் சொன்னா... நவம்பர் மாசம் 2010.

இதுக்கு  ரெண்டு மாசம் முந்திதான் ஒரு நிலநடுக்கம் (செப்டம்பர்  4, 2010) வந்துருந்துச்சு. ரிக்டெர் அளவு 7.1 .  அப்போ ஒருவேளை  ஜெயில் இருந்த இடத்துக்கு பழுது வந்து  இருந்துருக்கலாம். சரியான விவரம் கிடைக்கலை எனக்கு:(



மரக்கட்டிடம்தான்.   சுற்றிவர அருமையான  சின்னத் தோட்டம்  அமைச்சுருக்காங்க.  உள்ளே போனால் , இடப்பக்கத்தில்  ப்ரிஸன் ஆஃபீஸர்ஸ் ரெண்டு பேர்!     குளிருக்கான  கரியடுப்பு, பழங்கால தொலைபேசி, கைவிலங்கை தயாரா வச்சுருக்கும் அதிகாரி, எந்தப்பிரிவில் குற்றச்சாட்டுன்னு பார்த்து  அவைகளை தட்டச்சி கோர்ட்டுக்கும், ஜெயில் ரெக்கார்ட்ஸுக்கும்  தயாரிக்கும்  போலீஸ் லேடி டைப்பிஸ்ட்  இப்படி பார்க்க நல்லாத்தான் இருக்கு.



வலப்பகுதியில்  குற்றவாளி செல்லில் இருக்கார். ஸ்ப்ரிங் வச்ச ஒற்றைக்கட்டில், போர்வைகள், தலையணை,  ஒரு நாற்காலி,  குடிக்கத் தண்ணி வச்சுருக்கும்  கெட்டில்,  'அவசரத் தேவைக்கான  பீங்கான் பாத்திரம்' இப்படி சௌகரியமாத்தான் இருக்கு.

ஜெயில் கதவுக்குக்கூட சிம்பிளான ஒரு பூட்டு!!!!

அலுவலகத்துக்குப் பயன்பட்ட ரப்பர் ஸ்டாம்புகள், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் பயன்படுத்திய  (நான் சொல்வதெல்லாம் உண்மை என்று  சத்தியம் செஞ்சுக்க) ஒரிஜினல் பைபிள் எல்லாம் கண்ணாடிப்பெட்டிக்குள் டிஸ்ப்ளே செஞ்சுருக்காங்க. வருசம் 1870 யில் இருந்து 2007 வரை பணியில் இருந்த முக்கிய ஆஃபீஸர்கள் பட்டியல் கூட வச்சுருக்காங்க!

இப்ப ஊர் மக்கள் தொகையே 1400 ன்னா  ஒரு நூறு வருசத்துக்கு முந்தி  எத்தனைபேர் இருந்துருப்பாங்க?  அதுலே என்னமாதிரி குற்றம் செஞ்சுருப்பாங்கன்னு  தோணுச்சு.  அதிகபட்சமா, ஆட்டுக்கு , ஆட்டைப் போட்டுருப்பாரோ?

சிறைச்சாலை பார்த்த திருப்தியில் வீட்டுக்குக் கிளம்பினோம். கொஞ்ச தூரத்தில் வால்நட்ஸ் விற்பனைக்கு வச்சுருந்தாங்க.  நாமே காசை உண்டியலில் போட்டுட்டு நட்ஸை எடுத்துக்கணும்.  அதெல்லாம் கடையில் உக்கார்ந்து விற்க முடியாது. மனுசனுக்கு வேற வேலை இல்லையா?

 கோபாலுக்கும் வீகெண்ட் வேலை ஒன்னு வேணுமேன்னு ஒரு  பை வால்நட்ஸ் வாங்கியாந்தோம்.  உக்காந்து  உடைச்சு, பருப்புகளைப் பிரிச்செடுத்தால் (அப்பப்ப தின்னது போக) அரைக்கிலோ தேறுச்சு.  அஞ்சு டாலருக்கு அரைக்கிலோ என்பது ரொம்பவே மலிவுதான் இல்லை!!!!  அங்கே பைன் நட்ஸ் கூட வச்சுருந்தாங்க. அதை இதுவரை வாங்குன அனுபவம் இல்லாததால் வாங்கிக்கலை :(  அடுத்த வாட்டி முயற்சிக்கணும்.


PINகுறிப்பு: இப்போ க்ரைம் ரேட் கூடித்தான் போச்சு.  ஜஸ்ட் எங்க ஊரின் எல்லைக்கு அப்பால் ஒரு பெரிய  சிறைச்சாலை கட்டி இருக்காங்க.  நியூஸியில் இருக்கும் பெரிய சிறைச்சாலைகளில் ஒன்னு இது. சுமார்  420 காவல்துறை மக்கள்  பணியிலிருக்காங்க.  954 கைதிகள் வசதியாக(!!) தங்கும் வசதி இருக்கு.  உள்ளே இருப்பது (ம்) சுகம்தானோ!!!