Friday, July 31, 2015

ட்ரெய்லர்!

எட்டுநாள், எட்டே நாள்....  போனதும் தெரியலை, வந்ததும் தெரியலை!

தினம் 6 கிமீ நடை. காலையில் 3 மாலையில் 3.  அநேகமா ஒரு 20 கிராம் இளைச்சு இருக்கலாம்!

வாரம்தோறும்  திங்கள்  ஸ்பெஷல்






























Tuesday, July 21, 2015

சூரியனைத் தேடி.............

பள்ளிக்கூடத்துக்குப் பத்துநாள் லீவு விட்டாச்சு.  சூரியனை வேற காணோம். அதான் அவனைத்தேடி  அண்டை நாட்டுக்கு ஒரு சின்னப் பயணம்.

அர்ரியர்ஸ் வச்சுருக்கும் மாணவக் கண்மணிகள்  இந்தப் பத்து நாட்களில்  படிச்சு முடிச்சுருவீங்கதானே?

முதல் வேலை முதலில் என்று நம்ம ரஜ்ஜுவை அவனுக்கான ஹொட்டேலில் கொண்டு போய் விட்டாச்சு.  அழுதுகிட்டே வந்தவன், லீஸாவைப் பார்த்ததும்  சட்னு அழுகையை நிறுத்திட்டான்.  பழகுன இடம் என்பதால்  முகத்தில் சின்ன சிரிப்புகூட வந்துருச்சு:-)






Monday, July 20, 2015

நியூஸியின் முதல் புள்ளையார் (தலைநகரத்தில் ! பகுதி 12)

இந்த  நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் எதாவது பட்டப்பெயர்  அமைஞ்சு போகுது.  எங்க ஊர் க்றைஸ்ட்சர்ச் நகருக்கு   நியூஸியின் கார்டன் சிட்டின்னு பெயர்.  வடக்குத்தீவில் உள்ள ஆக்லாந்து நகருக்கு சிட்டி ஆஃப் ஸெய்ல்ஸ்.  இந்த வெலிங்டன் நகருக்கு   பேசாம  சிட்டி ஆஃப்  ம்யூஸியமுன்னு  வச்சுருக்கணும். ஆனா  கேப்பிடல் சிட்டின்னு  தலைநகரமா ஆகிப்போச்சு.



இப்ப நாம் போகும் இடமும் ஒரு ம்யூஸியம்தான். ம்யூஸியம் ஆஃப் வெலிங்டன்  சிட்டி அண்ட் ஸீ.  அனுமதி இலவசம்தான்.  என்றாலும்  இங்கெல்லாம் இலவச அனுமதி இருக்கும் இடங்களில் ஒரு உண்டியல் வச்சுருப்பாங்க.    விரும்பினால்  எதாவது  காசு போடலாம்.  அதுபாட்டுக்கு அங்கே இருக்கும்.  யாரும்  காசைப் போடுன்னு சொல்றதில்லையாக்கும்.

'அஞ்சு மணிக்கு மூடிருவாங்க.  நீ போய் பார்த்துக்கிட்டே இரு. நான் வண்டியை பார்க்கிங் போட்டுட்டு வரேன்'னு இவர் போயிருந்தார். நல்ல உயரமான வாசல்தான்.  ஆனால் தலை பத்திரமுன்னு போட்டுருக்கு.  யாராவது எட்டடி மனுஷர் இடிச்சுக்கிட்டார் போல!

ஹார்பரையொட்டி நிற்கும் இந்தக் கட்டடம் ஒரு காலத்தில்  சுங்கம் செலுத்தும்வரை  பொருட்களை பாதுகாத்து வைக்கும் இடமாம்.  உள்ளே அந்தக் காலத்துலே எப்படி பொருட்களை அடுக்கி வச்சுருந்தாங்கன்னு  நமக்குக் காமிக்கும் விதமா ..... அப்படிக்கப்படியே.  வரலாறு வருங்காலத்தவர்க்கு  மிக முக்கியம் அமைச்சரே!


விலைமிகுந்த  பொருட்களை (நகைநட்டோ?) வைக்கும்  ஆபரணப்பொட்டி!  என்னவொரு வேலைப்பாடு பாருங்க.


வருசக்கிரமப்படி இங்கே அடுக்கி வச்ச சமாச்சாரங்கள்  சுவாரஸியமா இருந்தாலும்   முக்காமணி நேரம்தானே இருக்குன்ற பதைப்பில் ஓடியோடிப் பார்த்துக்கிட்டே  க்ளிக்கினேன்.

முதலாம் உலகப்போர் நடந்து முடிஞ்ச சமயம்   குஜராத் இந்தியர்கள்  இங்கே வந்தாங்கன்னு முன்னே ஒரு சமயம் குறிப்பிட்டு இருந்தேன்.  இங்கே வெலிங்டன் நகரில் அப்போ  இந்தியர்கள் எண்ணிக்கை  64.   முக்காலே மூணுவீசம் குஜராத் மக்கள்ஸ்தான்.  எல்லோரும்  குடும்பத்தை குஜராத்தில் விட்டுட்டுத் தனியாக் கிளம்பிவந்தவங்கதான். 1925 லே  வெலிங்டன் இண்டியன் அசோஸியேஷன் ஒன்னு ஆரம்பிச்சாங்க அவுங்க.  எதுக்குப்போற இடத்துலே  தனியாக்கூடி கட்சி கட்டிக்கிட்டு  நிக்கணும்?

தம் மக்களின் நலத்துக்காகவும்,  சமூகத்தில் நம்ம மக்களுக்கு  சம அந்தஸ்த்து  கிடைக்கணும். சமூக அநீதிகள்  ஏற்பட்டுட   இடம் கொடுக்கக்கூடாது, நம்ம கலாச்சாரத்தையும்  மதத்தையும்  காப்பாத்திக்கணும் என்பதற்காகத்தான்.  கொஞ்சநாளில்   வீட்டம்மணிகள் குழந்தைகுட்டிகளுடன்  இங்கே  வர ஆரம்பிச்சதும்,   பிள்ளைகள் வேற்று நாட்டில் வளரும்படி ஆனாலும் தம்முடைய கலாச்சாரத்தையும், முக்கியமா மொழியையும் விட்டுறக்கூடாது என்பதில் பெண்கள் கவனம் செலுத்தினாங்க.   அப்ப வந்தவர்தான்  இந்தப் புள்ளையார்!  அப்பப்ப  பெண்கள் ஒன்று கூடிப்பேசி, குஜராத்தி வகுப்புகள்,  இந்துமத சம்பந்தமுள்ள பண்டிகை கொண்டாட்டங்கள் எல்லாம்  ஒழுங்கு செஞ்சு நடத்த ஆரம்பிச்சாங்க.   கூடவே  சமூகத்துக்கு ஒரு கஷ்டநஷ்டம் வந்துட்டால்  ஓடிப்போய் உதவி செய்வதும்,  தர்மகாரியங்களுக்கு  உதவி செய்வதிலும்  முதல் ஆளா வந்து நின்னது  இந்த  இந்தியன்  சங்கம்தான்.


1958 லே சங்கத்துக்குன்னு  புதுசா ஒரு கட்டடம் எழுப்பி அது இப்போ இன்னும் விஸ்தரிக்கப்பட்டு ரொம்ப நல்லா நடந்துக்கிட்டு இருக்கு. அதுக்குள்ளே அட்டகாசமான ஒரு கோவில்கூட வச்சுருக்காங்க. நாம்தான் அங்கே போகலை.

இதே போலத்தான் ஒவ்வொரு  பெரிய நகரங்களிலும்   சங்கம் ஆரம்பிச்சாங்க.  இவுங்க செஞ்ச ஒரு தப்புன்னு என் சொந்த மனசுக்குப் படும் சமாச்சாரம் என்னன்னா.... சங்கத்துக்குப் பெயர் வச்சது.  இண்டியன் அசோஸியேஷன் என்ற பெயர் வச்சதுக்குப் பதிலா  குஜராத்தி அசோஸியேஷன் என்று வச்சுருந்தால் நிம்மதி. எப்போ இண்டியன்னு வச்சாங்களோ அப்ப மற்ற இந்தியர்களையும்  சங்கத்துக்குள்ளே  அங்கமாக  அனுமதிக்கணும்.  ஆனால் அப்படி   இல்லை.  நட்புரிமையோடு பழகுனாலும், அவுங்க கொண்டாட்டங்களுக்கு  (முக்கியமா நவராத்ரி கர்பா  கோலாட்ட  நடனம்) அழைப்பு வச்சு கூப்பிட்டு உபசரிச்சாலும்,   'நீ விருந்தாளி.  பார்த்து  அனுபவிச்சுட்டு அப்படியே போயிரு. உள்ளே வந்து உக்காந்துடலாம் என்று நினைக்கப்டாது'  என்ற ஒன்னு அங்கே இருக்கு.

நாங்க இங்கே  வந்த  புதுசுலே (1988) ஃபோன்புக்லே க்றைஸ்ட்சர்ச் இண்டியன் அசோஸியேஷன் என்ற பெயரைப்  பார்த்து மகிழ்ந்து போய்  அங்கே  ஒரு  விழாவுக்குப் போயிருந்தோம். நிறைய நம்மாட்களைப்பார்த்ததும் மனசுக்கு மகிழ்ச்சியா இருந்துச்சுதான்.  இங்கே வருமுன் நாங்க ஃபிஜியில் ஆறு வருசம் இருந்தோம். அப்ப முழுக்க முழுக்க குஜராத்தியர்களுடன் தான்  எங்க வாழ்க்கை. அதனால் இங்கேயும் குஜராத்தியர்கள் என்ற வேறுபாடு சட்னு மனசுக்குள் வரலை.  

அப்புறம்  அங்கத்தினராகலாமேன்னு  விசாரிச்சால்....   குஜராத்தியர்களுக்கு மட்டுமே  அங்கமாகும் உரிமைன்னு சொன்னாங்க.  எங்க  மனம் கசந்து போச்சுன்னாலும்,   'போயிட்டுப்போகுது போ'ன்னு  விழாக்களுக்குப்  போய்க்கிட்டுதான் இருந்தோம்.  என்னம்மா இப்படிப் பண்றீங்களேமா.....  இப்படிப் பெயரையும் வச்சுக்கிட்டு.......


ஒருவழியில் அவுங்களைக் குற்றம் சொல்லியும் பயன் இல்லைதான்.  இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும், ஃபிஜி, மலேசியா, சிங்கப்பூரில் இருந்தும்  இந்தியர்கள் இங்கே வரப்போறாங்கன்னு  அப்போ ஜோசியமா தெரியும்?   


 பிரிட்டன்  அரசபரம்பரையின்   16 முக்கிய  அரசவைப்பொருட்கள்  ரிப்ளிக்கா ஒரு கண்ணாடிப்பொட்டிக்குள் எதெது என்னென்ன என்ற விவரங்களோடு. அந்தக் காலத்திலேயே (40 வருசத்துக்கு முன்னால்) இதன் மதிப்பு  60,000 பவுண்டுகளாம்.  லண்டன் பயணத்தின்போது,   ரெண்டு க்ரீடமும் செங்கோலும் இருக்கும் குட்டிப்பெட்டியை நினைவுப் பரிசா(தமக்குத்தாமே திட்டத்தின்படி ) வாங்கினது நினைவுக்கு வந்துச்சு:-)

துறைமுகத் தொழிலாளர்கள் பிரச்சனை அதிகமாகிவந்த சமயம் (1951)  நடந்த தேர்தலில் லேபர் கட்சி தோல்வி. நேஷனல் கட்சி  ஆட்சிக்கு வந்துருக்கு.
 நாம் அடிக்கடி கேள்விப்படும் சமாச்சாரமான  அரசு ஆவணங்கள் தீக்கிரை ஆயின என்பது  இங்கேயும் நடந்துருக்கு 1952லே.  இது உண்மையான தீ விபத்து என்பதே வித்தியாசம்.   ரோஸ்ட்டட் ரெக்கார்ட் இப்படி இருந்துருக்கு.


1955லே வெலிங்டனின்  மக்கள்தொகை  அதிகரிப்பால் போதுமான வீடுகள்  இல்லையாம்.  பிரச்சனை இன்று வரை நியூஸி முழுசுக்குமே  இருக்குதான்.   அரசு வீடு கட்டிக்கொடுக்கணும் என்ற எதிர்பார்ப்புதான்  மக்களுக்கு.  சும்மா ஒன்னும் இல்லை. அதுக்கும் வாடகை கட்டவேணும்தான். அரசுக் குடியிருப்புன்னா  கொஞ்சம் மலிவா  இருக்குமேன்னு......

 எனக்குத் தெரிஞ்சு எங்க ஊரிலும் இந்தப் பிரச்சினை இருக்கு. அரசு, வாடகைக்குக் கொடுக்கும் வீடுகளை, என்னவோ தங்கள் சொந்த வீடா நினைச்சுக்கிட்டு அதை  அதிகக் காசுக்கு வாடகைக்கு விட்டுட்டு,  சொந்தக்காரர்களுடன் போய்  வசிக்கும்  மக்கள் ( யாருன்னு சொல்லமாட்டேன்)  இருக்காங்க. மக்கள் உண்மையா இருப்பாங்கன்னு இன்னமும் நம்பிக்கிட்டு இருக்கும்  ஏமாளி அரசு  இது:-( 

உள்நாட்டு பூமிபுத்திரர்களின் கலாச்சாரத்தின்படியும் கூடவே  நவீனகாலக் கலையின் கட்டுமானமும் சேர்ந்து  கட்டிப் பார்த்தது இது.


அந்தக்காலத்து  நீச்சலுடை!   1963 இல்  சுடுதண்ணி ரொப்பின நீச்சல்குளம் கட்டி விட்டுருக்காங்க.  இதுலே காலை 9 முதல் பகல் 2 வரை பெண்களுக்கு மட்டும்.  இதுக்கு முன்னாலும் பின்னாலும் ஆண்களுக்கு அனுமதி. பெண்கள்  நீந்தும்  சமயங்களில்  வெளியே நீலக்கொடி பறக்கும்.  ஆண்கள் நேரத்தில்  சிகப்புக்கொடி.  தப்பித்தவறி நேரங்கெட்ட நேரத்தில் நுழைஞ்சு  பேஜாராகாம இருக்க இப்படி ஒரு ஏற்பாடு!


1960 இல்  டச்சு நாட்டில் இருந்து இங்கே குடியேறவந்த  சூஸி சொல்றதைப் பாருங்க.  அவுங்க வந்து இறங்கினதும் இமிக்ரேஷனில்  வந்த காரணம் கேட்டப்ப, மக்களுக்கு சேவை செய்யன்னு  சூஸி  சொன்னதும், தெற்குத்தீவின்  தென்கோடியில் இருக்கும்  ஊருக்கு  வெயிட்ரெஸ் வேலைக்கு அனுப்பிட்டாங்களாம்.  உலகமே வெறுத்துப்போயிருக்கு சூஸிக்கு.  அப்புறம்  வெலிங்டனுக்கு  வந்துட்டாங்க.  இங்கே என்னன்னா  சாயங்காலம் ஆச்சுன்னா    கடைகண்ணி ஒன்னுமே திறந்துருக்காது.


1988 இல் நாங்க வந்தப்பவும் அநேகமா இப்படித்தான். திங்கள் முதல் வெள்ளிவரை  கடைகள்  9-5, சனிக்கிழமை 9-1.  சனி ஒருமணியில் இருந்து  ஞாயிறு  முடிஞ்சு திங்கள் காலை 9 வரை  ஊரே பந்த் நடக்கற இடம்போலத்தான். ஒவ்வொரு பேட்டைக்கும் வாரத்துலே ஒருநாள் லேட்நைட் ஷாப்பிங்ன்னு இரவு 9வரை கடைகள். எங்க பேட்டைக்கு வியாழன் என்பதால்  எப்படான்னு காத்திருப்பேன். தினசரி இவர் வேலை முடிஞ்சு வீடுவர அஞ்சரை ஆயிரும். அப்புறம் கடை ஏது?  அதெல்லாம் ஒரு  வரலாறு. 

 இப்ப என்னன்னா....  வாரம் ஏழுநாளும்  திறந்து கிடக்கு.  இதுலே சில கடைகள்  ராத்திரி 12 வரைக்கும். நம்ம வூட்டாண்டை  சூப்பர்மார்கெட்  ஒன்னு  24 மணி நேரம் திறந்து வைக்கிறோமுன்னு ஆரம்பிச்சு, ராத்திரியில்  தனியே கொட்டக்கொட்ட உக்கார்ந்துருக்க வேண்டி இருக்கேன்னு  காலை 6 முதல் இரவு 11 வரைன்னு  இப்ப மாத்திட்டாங்க:-)


பாருங்க சூஸியை அம்போன்னு விட்டுட்டேன்....  வெலிங்டனுக்குடைடம் மாறிய சூஸி,இரவு நேரத்தில் திறந்துருக்கும் காஃபி ஷாப்  ஒன்னு ஆரம்பிச்சு நடத்துனாங்களாம்.  அப்போ இங்கே டச்சு நாட்டவர்கள் குறைவு.   ரெண்டாம் உலகப்போருக்குப்பின்  நிறையப்பேர் வரத்தொடங்கி இப்போ  27000  டச்சு மக்கள் இருக்காங்க. இதுலே 3300 பேர் வெலிங்டன் நகரத்துலேன்னு கணக்கு சொல்றாங்க.


1968 லே  புது மோட்டர்வே போட ஆரம்பிச்சப்ப   அங்கங்கே இருந்த  கல்லறைத் தோட்டத்தினூடே  பாதை  போடவேண்டியதாப்போச்சு.  ஆனால் மக்கள் கொடுத்த ஒத்துழைப்பால்  எல்லாக் கல்லறைகளையும் தோண்டி எடுத்து வேறொரு இடத்தில்  வைக்கும்வரை  சாலை போடும் வேலை  25 வருசத்துக்கு  ஒத்திவைக்கப்பட்டதாம்.  வாவ்!


 1969இல் புதுப் பார்லிமென்ட்   Beehive கட்ட ஆரம்பிச்சதும் வட்டக்கட்டிடம்   வேலைக்காகாதுன்னு  கூச்சல் கிளம்பி இருக்கு.


என்னா நக்கல் பாருங்க:-)


1971   ஜூன் மாசம் 19 : பத்தாயிரம் பேர்கூடி ஒரு நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துருக்காங்க.  அப்படி என்ன ஆடுச்சாம்?   முதல் கண்டெய்னர் கப்பல் நாட்டுக்கு வந்து சேர்ந்து அதுலே இருந்து கண்டெய்னர்களை  கீழே இறக்கிக்கிட்டு  இருந்தாங்களாம்.   இப்போ.....  யாரும் சட்டையே செய்யாத அளவுக்கு  கண்டெய்னர் இல்லைன்னா வியாபாரமே இல்லைன்னு  ஆகி இருக்கு.


எங்க ஊர் நிலநடுக்கப் பாதிப்புகளிலிருந்து  நிறைய  உதவி  இந்தக் கண்டெய்னர்களால்தான் கிடைச்சது.  ஊர் முழுக்க இவைதான்.  குன்றுச்சரிவுகளில் இருந்து விழும் பாறைகள் சாலையில் வந்து விழாம நெடுக கண்டெய்னர்களைக் கொண்டு வந்து வச்சுட்டாங்க.  ஆச்சு  நாலரை வருசம்.  ஆனாலும் சில பலசாலைகளில்  இன்னும்  கண்டெய்னர்கள் வரிசை அப்படிக்கப்படியே!   இப்ப  இதுலே சித்திரம் வரைஞ்சு வைக்கும் புதுக்கலை உருவாகிவருது.  கண்டெய்னர் ஆர்ட்.  ஏற்கெனவே கண்டெய்னர் மால்கூடக்  கட்டிட்டோம்லெ!

அப்புறம், நியூஸியிலே 'இந்த ஒரு குற்றம்'  இல்லவே இல்லைன்னு  நினைச்சுறாதீங்க.  இருந்துருக்குதான்.  அப்பவும்   நீ போட்டுக்கற  உடுப்பு  சரரி இல்லை. உன் நடத்தை சரி இல்லை. அதான் இப்படி நடந்துருக்குன்னு  பொண்ணுங்க மேலேயே பழியைத் தூக்கிப் போட்டுக்கிட்டு இருந்தாங்க.  பொறுத்துப்பொறுத்துப் பார்த்தபெண்கள், தற்காப்புக்   கலைகள் வகுப்புக்கு ஏற்பாடுகள்  செஞ்சுக்கிட்டாங்க.    1979 இல்  பெண்கள் எல்லாம் இணைஞ்சு போராடி   இரவு ஊர்வலம்  போனதும்தான்  சமூகம் கொஞ்சம் முழிச்சுக்கிட்டது.  புது சட்டங்கள் உருவாச்சு.  


இங்கே   இந்தக் குற்றம் மட்டும் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கடுமைதான்.   அதுவுமில்லாமல்   பல வருசங்களுக்கு முன் நடந்துச்சுன்னு சொன்னாலும் அதை பதிவு செஞ்சுக்கிட்டு  விசாரணை நடக்கும். உண்மைன்னு  நிரூபிச்சால்   அது யாராக இருந்தாலும்  தண்டனைதான்.   சட்டம் இங்கே  எல்லோருக்கும் சமம்.  பணக்காரன், கட்சிக்காரன், அரசியல் வியாதிகளுக்குச் சொந்தக்காரன் இப்படி எதுவும் செல்லாது.


வருசாவருசம்  இந்த ஊர்வலம் நடந்துக்கிட்டுதான் இருக்கு.  பாதிக்கப்பட்டவர்கள்  தங்களையே குற்றப்படுத்திக்கக் கூடாதுன்னு நினைவில் வச்சுக்கணுமுன்னு சொல்லும் சமாச்சாரமாம்  இந்த ஊர்வலங்கள்.

1982 லே   இந்த நகரை  நியூக்ளியர் ஃப்ரீ யா  வச்சுக்கணுமுன்னு  தீர்மானம் கொண்டுவந்து  எதிர்ப்புகள் எல்லாம்  எழுந்து அடங்கி இப்ப மொத்த நாடும்  அணு சம்பந்தமான   எந்த  சமாச்சாரமுமில்லாமல்தான்  இருக்கு.   இதுலே மட்டும்  ஆளும்கட்சி,எதிர்க்கட்சின்னு எந்த வேறுபாடும் இல்லாமல்  எல்லோரும் ஒரே தீர்மானம் எடுத்துருக்காங்க.


இது  அவுங்க நகருக்குன்னு போட்டு வச்சுருக்காங்க போல!   இருந்துட்டுப் போகட்டும்:-)  நமக்கென்ன நஷ்டம்?


அவசர அவசரமாப் பார்த்துக்கிட்டேபோகும் சமயம்  இப்படி ஒன்னு.  என்னவா இருக்குமுன்னு  முதலில் தெரியலை.  அப்புறம் பார்த்தால்...... இது கமலா இருந்த  நாட்களில்  பயன்பாட்டுக்கு இருந்த ஒரு விஷயம்.

 சின்னப்பசங்களை  உக்காரவச்சுக்க செஞ்ச  அம்பாரி!



இது கமலாவின் முன்னங்கால் எலும்பு.

ஃப்ளோட்டிங்  டாக் இருந்துச்சாமே!  அட!


இந்தப் புறா நம் சொந்தப் புறா!   நகரை விட்டுப்போன பறவைகளை  மீண்டும் நகருக்குள் கொண்டுவர 1995 லே ஏற்படுத்தின   ட்ரஸ்ட்.   ஒரு 250 ஹெக்டர்    (617 ஏக்கர்) நிலத்தை  இதுக்காக  வாங்கி இருக்கு!

1996 லேயே  ஃபைபர் ஆப்டிக் கேபிள்  போட்டு, நியூஸியின் முதல்  ஸைபர்சிட்டி ஆனதுகூட  இங்கே தான்.. என்ன இருந்தாலும்   தலைநகருக்குள்ள  வசதிகள் தனிதான், இல்லே!   2012 லே  நாடு முழுசுக்கும்   ஃபைபர் லைன்  போடணுமுன்னு  தீர்மானம் செஞ்சது அரசு. எங்களுக்கு  இப்பதான்   போனவருசம்  கிடைச்சது. அடுத்த வருசக்கடைசிக்குள் பட்டி தொட்டி எல்லாம்  ஃபைபர் ப்ராட்பேண்ட்தான்.,

1997 இல் உள்ளூர் சினிமா தயாரிப்பு தொடங்குச்சு.  ஸர் பீட்டர் ஜாக்ஸன்ஸ் ஏற்கெனவே  சில படங்களை இங்கே  எடுத்துருந்தாலும்  முழுக்க முழுக்க உள்ளூர்  ஸ்டூடியோவைப் பயன்படுத்த ஆரம்பிச்சது  அப்போதான்.  நாலு வருசம் கழிச்சு லார்ட் ஆஃப் த ரிங்ஸ்  வெளியாச்சு.  அப்படியே நியூஸி  பட உலகம் வளர்ந்து , இப்போ வெலிங்டன்  ஏர்ப்போர்ட்டுக்கே  மிடில் எர்த் என்ற பெயர்  வச்சுட்டாங்க:-)

1903 இல்  வந்திறங்கிய  Peugeot Type 54 'Bebe' .இந்தவகையில் இதுதான் முதல்  வண்டி.  ஆனால், இதுக்குமுன்னே  12 வண்டிகள்  ( வெவ்வேற  வகைகள் ) வந்திறங்கி இருக்காமே!

மாடிக்குப்போனால் அங்கே ஆரம்பகால பாய்மரக் கப்பல்களின் மாடல்கள்.  ஒரு கப்பலின்  கேப்டனின் அறை, ஸ்டீம் எஞ்சினின் மாடல்கள்  எல்லாம் இருந்தும்  கப்பல் பூனை தூங்கறதுதான் எனக்கு ரொம்பவே பிடிச்சது.
கடல்கன்னிமாதிரி  ஒரு   மரசிற்பம்தான்   bowsprit ஆக இருக்கு!  இன்னொரு இடத்துலே ஒரு தேவதை  (சாமி?)கஷ்டத்திலிருந்து காப்பாத்த சாமி துணை வேணுமோல்லியா? இப்படி விதவிதமா இந்த  bowsprit!

Paddy என்ற  நாய் சிற்பம்  வரலாறு  சொல்லுது.   அதன் தலையைத் தொட்டால் சின்னதா ஒரு குரைப்பு.  நமக்கு  அதிர்ஷ்டம் கொண்டு வருதாம்.  பாவம்... குழந்தை.  ஹார்பருக்குச்  செல்லமா ஆகி இருந்துருக்கு  ஒருசமயம்.


வெலிங்டன் ஹார்பர் போர்டின் போர்ட் ரூம் வச்சுருக்காங்க.  அரைவட்ட வடிவம்!  மிஸ்டர் சேர்மன் அதுலே இருந்தார்:-))))


ம்யூஸியம் மூடும் நேரமாகிருச்சுன்னு அரக்கப்பரக்க  வெளியில் வந்தோம்.   வேறெப்பவாவது வந்தால் இன்னொரு சுத்து சுத்தணும். நிறைய சுவையான சமாச்சாரம் இருக்கு ! ஒரு அஞ்சு நிமிசம் அக்கம்பக்கத்துலே வேடிக்கை பார்த்துட்டு, வண்டியை எடுக்கப்போனால்.....  55 நிமிசத்துக்கு  12 டாலர் கட்டுன்னு மெஷீன் சொல்லுது.  ரொம்ப அநியாயம்:(

மௌண்ட் விக்டோரியா  டன்னலைக் கடந்து  ஏர்ப்போர்ட்டுக்கு  வந்து சேர்ந்தோம். வரும்வழியிலேயே  வண்டிக்கு பெட்ரோலை நிரப்பியாச்சு.  த்ரிஃப்டி கார் பார்க்கில் வண்டியை விட்டுட்டு,  அவுங்க உண்டியலில் சாவியைப் போட்டுட்டு  செல்ஃப் செக்கின் செஞ்சுட்டு   கோரு க்ளப்  லௌஞ்சுக்குப்போய்  ராச் சாப்பாட்டை  முடிச்சுக்கிட்டோம்.




ஒரு  ப்ளேன் கிளம்புமுன்  பரபரன்னு எவ்ளோ வேலைகள்  நடக்குதுன்னு பார்த்தால் வியப்புதான்.

விமானநிலைய விரிவாக்க வேலை நடந்துக்கிட்டு இருக்கு. 2016 இல் முடிஞ்சுருமாம். விமானத்தில் நல்லகூட்டம்:-).  பாஸ்கெட்பால்  விளையாடும் எங்கூர் டீம் ஒன்னு இங்கே போட்டியில் கலந்துக்கிட்டு திரும்பி வருது.  ஒவ்வொருத்தர் தலையும் விமானக்கூரையைத் தொடுது. லேசா தலையைத் தாழ்த்திக்கிட்டே நடக்கறாங்க. எனெக்கென்ன பயம்.... நேரா நடந்து என் ஸீட்டுக்குப் போனேன்:-)

மகள்  எங்களைக் கூட்டிப்போக வந்துருந்தாள்.  ஆட்டக்காரர்களைப் பார்த்தும் கண்ணில் வியப்பு.  இவளும் ஒரு ஆட்டக்காரிதான்.  நெட்பால்  .

தலைநகரப் பயணம் இனிதே முடிந்தது.   இதுவரை கூடவே வந்த நட்புகளுக்கு என் நன்றி.

பயணம் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வு தரும்.  ஆதலால் பயணம் செய்வீர்!